அசலம், கடிதம்
ஆசிரியருக்கு,
“அசலம்” அசலாக நான் உணர்ந்த மாதிரியே இருக்கிறது. என்னுடைய தகப்பனார் ஊர் ஆனைப்பாறையின் மேற்காக அமைந்திருக்கும் வில்லுக்குறி கீழப்பள்ளம். வீட்டு வாசலின் நேர் கிழக்கே இந்த ஆனைப்பாறை.அசலம்.காலம் காலமாக நிற்கிறது சாட்சியாக; தந்தையார் மறைவு, பல திருமணங்கள்,பல மரணங்கள் பல வருத்தங்கள் சோகங்கள் என, ஆனைப்பாறை சாட்சியாக நின்று கொண்டிருக்கிறது. நான் தற்போது வசிப்பது என்னுடைய தாய் வீட்டில் தோவாளையில் எனினும் வாசலின் மேற்கே ஆனைப்பாறை .தினமும் தொழுவேன்.க.நா.சுப்பிரமணியத்தின் காஞ்சன்ஜங்கா கவிதை போல கண்தான் மங்கிவிட்டது.தந்தையார் ஊருக்கு அடிக்கடி தற்போதும் செல்வேன்.பழைய தோட்டியோடு தாமரைகுளத்தில் தாமரைகள் இல்லை டைல்ஸ் கடைகள்.நாலுவழிச்சாலை.
நாகர்கோவிலிலிருந்து திருவனந்தபுரம் செல்லும் சாலையின் அருகே வில்லுக்குறியிலிருந்து வேளிமலைக்கு வயல்வழியாக நடந்து குமாரகோவில் கடைசி வெள்ளி அன்று ஒரு சிறுவர் பட்டாளம் சித்தப்பாமார்களுடன் செல்வோம்.வழியில் வள்ளியாறு தெளிந்த நீரோடை.கால்களை நனைத்து கொண்டாடுவோம்.சிவராத்திரியில் சிவாலய ஓட்டம் ஓடும் பக்தர்கள் மேலாங்கோட்டிலிருந்து இதே வயல்வழியில் வந்து திருவிடைக்கோடு சிவனை தொழுவார்கள்.வழியில் எங்கள் குடும்ப வலியவீட்டின் முன்பு நீராகாரம் மற்றும் சிற்றுண்டிஅன்னதானம் கொடுப்போம். நூறு வருடங்களுக்கு மேலாக நடக்கிறது.தற்போது வலியவீட்டின் இளைய தலைமுறை சிறப்பாக இப்பணியை செய்து வருகிறது. எங்கள் குடும்பமும் குடும்பக்கோவிலும் ஆனைப்பாறையின் அடிவாரத்தில் மருவத்தூர் என்ற கிராமத்தில் வாழ்ந்ததாக சரித்திரம். அண்மையில் சகோதரர்களுடன் குழந்தைகளுடன் சென்று இயற்கையை வணங்கி திரும்பினோம். பல நினைவுகள் அசலமாக ஆனைப்பாறையைச்சுற்றி வருகிறது.சில வேளை நினைப்பதுண்டு. நாம் வாழும் வாழ்க்கைக்கு இத்தகைய அசலம்தான் மெளனமாக சாட்சியாக இருக்கிறது. நம் உறவினர்களோ சொந்தங்களோ அல்ல.மீண்டும் கட்டன் சாயாவுடன் ஆனைப்பாறையை பார்த்து ரசித்து தொழுது கொண்டே எழுதுகிறேன்.உங்கள் அசலம் அசல். நன்றி.
தா.சிதம்பரம்.
Jeyamohan's Blog
- Jeyamohan's profile
- 842 followers

