நித்யாவின் காதல்பாடல்கள்.
குரு நித்ய சைதன்ய யதி இசைப்பாடல்கள் எழுதியிருக்கிறார். அது ஒரு தற்செயலாக நிகழ்ந்தது. அவருடைய மாணவரான இசைவாணர் ஒருவர் அவர் எழுதிய கட்டுரைகளில் இருந்து அழகிய வரிகளை எடுத்து இசையமைத்து அவர் முன் பாடினார். அவருக்காக நித்யா எழுதியபாடல்கள் அவை. பின்னர் அவை வெவ்வேறு இசைநிபுணர்களால் இசையமைக்கப்பட்டு பாடப்பட்டன. கேரளத்தில் புகழ்பெற்ற பாடல்களாகவும் உள்ளன.
நித்ய சைதன்ய யதி அத்வைதி. அவருடையது தூய அறிவின் வழி. வாழ்நாள் முழுக்க எந்த ஆலயத்திலும் வழிபட்டவரோ, எந்த தெய்வத்தையும் வணங்கியவரோ அல்ல. அவருடைய முன்னோடியான நாராயண குரு அத்வைதியானாலும் ஆறுமதங்களுக்குரிய துதிகளும் பாடல்களும் எழுதியவர். சங்கரரே அவ்வாறு ஆறு மதங்களுக்கும் துதிகள் எழுதியதாகச் சொல்லப்படுகிறது. ஆனால் நடராஜகுரு ஆலயவழிபாடு, பக்தி ஆகியவற்றுக்கு அப்பாற்பட்டவராக இருந்தார்.
நித்யாவின் பாடல்கள் பெரும்பாலும் பிரம்ம அனுபவம் சார்ந்தவை. அவ்வனுபவத்தை இசை என்றும் இயற்கையென்றும் விரித்துக்கொள்பவை. தெய்வங்கள் மிக அரிதாகவே வருகின்றன. அவரை எவரென்றே தெரியாத ஒருவர் இப்பாடல்களைக் கேட்டால் அவையெல்லாம் காதல்பாடல்கள் என்று எண்ணிக்கொள்ள எல்லா வாய்ப்பும் உண்டு. பெரும்பாலான பாடல்களில் ‘நீ’ ‘நான்’ என்னும் இரண்டு நிலைகள் உள்ளன. ஒன்றையொன்று அறியத்துடிப்பவை, ஒன்று இன்னொன்றில் கரைய விழைபவை.
இசைப்பாடல் என்பது கற்பனாவாதத்திற்குரியது. அத்வைதம் தூய அறிவின்பாற்பட்ட தர்க்கம் என்றே அறிந்திருக்கிறோம். கற்பாறையில் மலர் விரியுமா? விரியும். அந்த விந்தையைத்தான் நாம் அத்வைத இலக்கியங்களில் திரும்பத் திரும்பக் காண்கிறோம். சங்கரர் இந்தியா கண்ட மிகச்சிறந்த கவிஞர்களில் ஒருவர் என்று எப்போதுமே தோன்றிவந்திருக்கிறது. இன்று எண்ணும்போது குமாரனாசான் பாரதி வரை இந்தியாவின் மிகச்சிறந்த கற்பனாவாதக் கவிஞர்கள் அத்வைதிகள் என்பதும் வியப்பாக இருக்கிறது.
அத்வைதத்தில் ஒரு பெருந்தரிசனம் உள்ளது. இப்பிரபஞ்சத்தை எண்ணி அளக்கமுடியாத முடிவிலியாக, பெருந்திகைப்பாக மட்டும் பார்க்கும் ஓர் உச்சநிலை. இன்னொரு பக்கம் புல்நுனிப் பனித்துளியாக அதை ஒவ்வொன்றிலும் காணும் பெருநிலை. இரண்டையும் உணர்வுத்தளத்தில் கற்பனாவாதமாக ஆக்கிக்கொள்ளலாம் என்று தோன்றுகிறது.
நித்யாவின் பாடல்கள் அந்த நெகிழ்வையும் களிப்பையும் இயல்பாக வெளிப்படுத்துபவை. ‘நித்ய சைதன்ய கீதங்கள்’ என்ற பேரில் நூலாக வந்த அப்பாடல்கள் மீண்டும் மீண்டும் வெவ்வேறு வகையில் இசையாக்கப்பட்டுக்கொண்டே இருக்கின்றன.
ஒரு பிந்துவாய் ஞான் ஒழுகி வந்நூ
ஒரு சிந்துவாய் நீ புல்கி என்னை
விரியும் என் ஆத்மாவின் பூர்ணிம நீ
அலியுந்நூ நின்னில் ஞான் நித்யமாயி
எத்ரயோ ஜென்மங்கள் ஸ்வப்னமாய்
நின்னே அணயுவான் மோகமாயி
ஞான் கண்ட ஸ்வப்னங்கள் எத்ர துச்சம்
நின் ஆனந்த சாகர பிரம்ம தத்வம்
*
( ஒரு துளியாய் நான் ஓடிவந்தேன்
ஒரு சிந்துவாய் நீ என்னை தழுவினாய்
விரியும் என் ஆத்மாவின் முழுநிலவு நீ
கரைகிறேன் நான் உன்னில் நித்யமாய்
எத்தனையோ ஜென்மங்கள் கனவாக
உன்னை அடைய விரும்பினேன்
நான் கண்ட கனவுகள் எத்தனை அற்பம்
உன் ஆனந்த சாகர பிரம்ம தத்துவம்)
Jeyamohan's Blog
- Jeyamohan's profile
- 842 followers

