Jeyamohan's Blog, page 138

March 31, 2025

நம் வாழ்க்கை பெரிதா சிறிதா?

இந்தக் காணொளியில் ஒரு நல்ல மதியப்பொழுதில் என் மொட்டைமாடி வேப்பமரத்தடியில் அமர்ந்திருக்கிறேன். சாப்பிடுவதற்காக அருண்மொழி இன்னும் கூப்பிடவில்லை. காலை 7 மணிக்கு தொடங்கிய தீவிரமான எழுத்துப்பணி 12 மணிக்கு முடிந்து ஓர் இளைப்பாறல். பெரியவாழ்க்கை என்பது பல்லாயிரம் சிறிய வாழ்க்கைகளின் பெருந்தொகுப்பு என உணரும் ஒரு தருணம்

2 likes ·   •  0 comments  •  flag
Share on Twitter
Published on March 31, 2025 11:36

கழுதை மேய்த்தல்

என் மாமனார் சற்குணம் பிள்ளை அவர்கள் அஜிதன் படிக்காமலிருக்கையில் “இப்டிப் படிச்சா கழுதைமேய்க்கத்தான் போகணும்” என்பார். கழுதையை எவரும் மேய்த்து நான் பார்த்ததில்லை. எங்களூரில் “ரெண்டு எருமைய வாங்கிவிட்டு ஒரு பெண்ணையும் கட்டிவைச்சுட்டா என் வேலை முடிஞ்சுது பாத்துக்கோ…” என படிக்காத பிள்ளைகளிடம் சொல்வார்கள். அதில் நியாயம் உண்டு. எருமை ஒரு குடும்பத்தையே கவனித்துக்கொள்ளும். இரண்டு எருமை இருந்தால் வாழ்க்கை சுபிட்சம்தான். எருமைக்கு தீனி எல்லாம் தனியாக மெனக்கெடவேண்டுமென்பதில்லை. ’எதுவும் இங்கே தின்றுகொடுக்கப்படும்’ என்பதுதான் எருமையின் நிலையான முகபாவனை.

பழையபாடல்களைப் பார்த்துக்கொண்டிருந்தபோது கழுதைமேய்க்கும் சிறுவன் ஒருவனின் பாடல் அகப்பட்டது. ”மனுஷனைப் பாத்துட்டு உன்னையும் பாத்தா மாற்றமென்னடா ராஜா? என் மனசில பட்டதை வெளியிலே சொல்றேன் வந்தது வரட்டும் போடா” பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் 1959ல் வெளிவந்தகண் திறந்தது என்ற சினிமாவுக்காக எழுதி ஜமுனாராணி பாடிய பாடல். அந்த சிறுவன் உற்சாகமாக நடித்திருக்கிறான். அன்றைய கிராமத்தின் ஒரு குறுக்குவெட்டுத்தோற்றம் பாட்டில் உள்ளது. “பள்ளிக்கூடம் இல்லாத ஊருக்கு பயணம் போறேன் போடா” என்று பாடும்போது ஒரு சிறுவன் “நானும் வாறேன்” என்று பாய்வதும் இன்னொருவன் பிடித்து இழுப்பதும் வேடிக்கையாக இருந்தது. அக்காலத்தில் ஓடாத படம் என நினைக்கிறேன். ஃபிலிம் கெட்டுப்போகாமல் காட்சி அழகாகவே எஞ்சியிருக்கிறது.

இன்னொரு பாடல் நினைவில் எழுந்தது, தேடி கண்டுபிடித்தேன். எருமை கண்ணுக்குட்டி என் எருமை கண்ணுக்குட்டி” 1950-ல் வெளிவந்த, மந்திரி குமாரி படத்தில் இடம்பெற்ற இப்பாடலை எழுதியவர் கா.மூ.ஷெரீப் என்கிறார்கள். மருதகாசி என்றும் சொல்கிறர்கள். இசையமைப்பாளர் ஜி.ராமனாதன். பாடியவர் பி.எஸ்.சுப்பையா என்ற சிறுவன். பலரும் பார்த்திருக்கும் பாடல். முந்தைய பாடலின் அதே கருதான். விலங்கிடம் மனிதவாழ்க்கையின் வேடிக்கை, மோசம் ஆகியவற்றைச் சொல்வது. “நல்லதுக்குக் காலமில்லைஈஈஈ” என ஓர் இழுப்பு.

விலங்குகளுடன் மனிதர்களை இணைத்துக் காட்டுவது அக்கால சினிமாக்களில் வழக்கமாகவே இருந்தது. குதிரை, பசுமாடு, கழுதை, எருமை எல்லாம் மக்களின் வாழ்க்கையுடன் அணுக்கமாக இருந்த காலம். இப்போது மிகச்சில வீடுகளில் வளர்ப்பு நாய் இருக்கிறது, மற்றபடி விலங்குலகுடன் மக்களுக்கு எந்த தொடர்பும் இல்லை. குறிப்பாக நகர்சார் குழந்தைகளுக்கு எந்த விலங்குமே அறிமுகமில்லை. வெள்ளாட்டை பார்த்து வீரிட்டுக் கத்தும் குழந்தைகளைப் பார்த்திருக்கிறேன்.

ஒரு காலகட்டத்தில் சினிமா காட்சிக்கலைகள் அனைத்தையும் கலந்ததாக இருந்தது. ஆகவே எல்லாருக்குமான எல்லாமும் அதில் இருந்தாகவேண்டும் என்ற நிலை. வயதானவர்கள், குடும்பத்தலைவர்கள், மனைவிகள், இளைஞர்கள், இளம்பெண்கள் முதல் குழந்தைகள் வரை சினிமா பார்க்கச் செல்வார்கள். ஒரே படத்திற்கு கூட்டமாகச் செல்வார்கள். அனைவருக்கும் அதில் ஏதேனும் ஒன்று இருக்கவேண்டும். ஆகவே பெரும்பாலான படங்களில் குழந்தைகளுக்கான பாடல்கள் இருக்கும். குழந்தைகளே நடிப்பார்கள். குழந்தைகளின் நினைவில் அப்பாடல் நீடிக்கவும் செய்யும்.

அண்மையில் நான் குட்டி பத்மினியைச் சந்தித்தேன். அவர்களுக்கு என்னைவிட வயது. பையன்களெல்லாம் வெளிநாடுகளில். திரைப்படங்களை ஒருங்கிணைப்பவராக இப்போதும் சுறுசுறுப்பாக இருக்கிறார். ஆனால் அவரிடம் பேசிக்கொண்டிருந்தபோதெல்லாம் அவர் சிறுமியாக நடித்த படங்களே என் நினைவில் ஓடிக்கொண்டிருந்தன. அவர் பேசிச்சிரிக்கும்போது அந்த சிறுமி தோன்றி மறைவதே சுவாரசியமாக இருந்தது.

விலங்குப்பாடல்களில் விந்தையானது ஒன்று உண்டு. இங்கே பாடுவது விலங்கு, மனிதனைப்பார்த்து. “எஜமான் பெற்ற செல்வமே என் சின்ன எஜமானே” என்று கைக்குழந்தைக்கு தொட்டிலாட்டிக்கொண்டே குதிரை பாடுகிறது. பாடியவர் இசையமைப்பாளர் ஜி.ராமநாதனேதான். ஆனால் பாட்டுக்கு இசையமைத்தவர் கே.வி.மகாதேவன். 1959ல் வெளிவந்த அல்லி பெற்ற பிள்ளை என்ற படத்துக்காக.

1 like ·   •  0 comments  •  flag
Share on Twitter
Published on March 31, 2025 11:35

ஏக்நாத்

[image error]ஏக்நாத் (செ. ஏக்நாத் ராஜ்)  தமிழ்க் கவிஞர், எழுத்தாளர், திரைப்படப் பாடலாசிரியர். கவிதை, சிறுகதை, நாவல், கட்டுரைகள் எழுதியுள்ளார். ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறார்.

ஏக்நாத் ஏக்நாத் ஏக்நாத் – தமிழ் விக்கி
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on March 31, 2025 11:34

சுரபி, நான்காம் இதழ்

சுரபியின் நான்காவது இதழ் வெளியாகியுள்ளது.இந்த இதழில் சுசித்ராவின் குறுநாவல் ஒன்று வெளியாகியுள்ளது. பண்பாடை அதன் மதிப்பீடுகளின் அடிப்படையில் ஆராய்ந்து மறு ஆக்கம் செய்வது என்றுமே இலக்கியத்தின் முக்கியமான பங்களிப்புகளில் ஒன்று. அத்தகைய ஒரு முயற்சி.

சுரபி

 

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on March 31, 2025 11:31

அருகமர்தல், கடிதம்

அனேகமாக ஓராண்டுக்கு முன்பு நான் அருகமர்ந்து கற்றல் ஏன் முக்கியம் என்று நீங்கள் பேசிய குறிப்பைப் பற்றி ஒரு நையாண்டியுடன் முகநூலில் எழுதினேன். நண்பர்களிடம் பேசவும் செய்தேன். இன்றைய நவீனத்தொழில்நுட்ப யுகத்தில் நடைமுறை தெரியாதவராகப்பேசுகிறீர்கள் என்று சொன்னேன்.

அருகமர்ந்தல் , அனுபவம்

I recently saw your not very popular video about the relevance of Indian philosophy and the proper way to learn it. I had some classes on Indian philosophy and was disillusioned and rejected it

Ways of Indian philosophy- A Letter
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on March 31, 2025 11:30

March 30, 2025

பொன்னப்ப சங்கீதம்

உதிர்ந்த மலரின் கவி

குமாரன் ஆசானின் உதிர்ந்த மலர் பற்றி எழுதிக்கொண்டிருந்தபோது ஞாபகம் வந்தது, இதேபோல ஒரு தமிழ்ப்பாட்டு உண்டே. எங்கே? மண்டை நொய் நொய் என்றது. இரவில் நினைவு வரவில்லை. ஆனால் காலைநடையில் பளிச்சிட்டது. ஹொன்னப்ப பாகவதர் பாடிய அழகுடன் மணமிகு மலரே. 

1944 ல் வெளிவந்த ராஜராஜேஸ்வரி என்னும் படத்துக்காக ஹொன்னப்ப பாகவதர் பாடியது. அது இத்தனை காலம் நினைவில் நின்றிருப்பது ஆச்சரியம்தான். அது குமாரன் ஆசானின் பாடலுக்கு அணுக்கமானது என்பதுதான் நினைவில் நிற்பதற்கான காரணமாக இருக்கலாம்.

ஹொன்னப்ப பாகவதர் என ஒருவர் தமிழில் இருந்தார் என்பதையே எவரும் நினைவில் கொண்டிருக்க மாட்டார்கள் என நினைக்கிறேன். எம்.கே.தியாகராஜ பாகவதரின் அம்பிகாபதி படம் வழியாக தமிழுக்கு அறிமுகமானவர். தியாகராஜ பாகவதர் சிறைசென்றதனால் அவர் நடிக்கவிருந்த படங்களில் நடித்து திடீர் புகழ்பெற்றார்.

ஆனால் விரைவிலேயே சினிமா மாறியது. வசனங்களைச் சார்ந்ததாகவும், சமூகக்கதைக்கருக்களைக் கொண்டதாகவும் பரிணாமம் அடைந்தது. நடிகர்கள் பாடவேண்டாம் என்னும் நிலை வந்தது. ஹொன்னப்ப பாகவதர் பின்னடைந்தார். ஹொன்னப்ப பாகவதர் நடித்துக்கொண்டிருக்கையில், அவருடைய படத்திலேயே துணைநடிகராக நுழைந்த எம்.ஜி.ராமச்சந்திரன் புகழ்பெற்ற நடிகராக எழுச்சிகொண்டார்.

ஹொன்னப்ப பாகவதர் கன்னடத்தில் நடிகராகவும் இசைப்பாடகராகவும் சிறிதுகாலம் நீடித்தார். நாடகங்கள் நடத்தினார். பின்னர் மேடைப்பாடகராக இறுதிவரை திகழ்ந்தார். கர்நாடகத்தின் உயரிய விருதுகளைப் பெற்றார்.

சதாசிவ சங்கரா சாம்ப புரஹரா

அண்மையில் ஹொன்னாவர் சென்றபோது ஹொன்னப்ப பாகவதரை நினைவுகூர்ந்தேன். ஹொன்னாவரம் என்றால் பொன்னகரம் என்று பொருள். ஹொன்னப்பா என்றால் பொன்னப்பா. அல்லது தங்கப்பா. அங்கே நடனக்கலைஞர் ஹெக்டேகூட ஹொன்னப்ப பாகதவரின் சாயலில்தான் இருந்தார். அந்தக்கால சினிமாக்களும் நேரடியாக யட்சகானத்தில் இருந்து நாடகமேடைக்குச் சென்று அங்கிருந்து திரைக்கு வந்தவை.

பாடும் முறையும் விந்தைதான். மேடையில் கச்சேரி செய்யப்படும் பாணி. சதாசிவ சங்கரா என்னும் பாடலை சாதா சிவா என்று சாதாரணமாக பாடுகிறார் ஹொன்னர். இசை எந்த மகாதேவனையும், அவன் திரிபுரம் எரித்தவனாகவே இருந்தாலும் சாதாரண சிவமாக ஆக்கிவிடுகிறது. அவனும் போனால் போகட்டும் என்று விட்டுவிடுவான் போலும்.

இந்த பாடல்கள் எல்லாமே கர்நாடக இசையை அடிப்படையாகக்கொண்டவை. அக்காலத்தில் ஹொன்னப்பா போன்றவர்கள் சாதாரணமாக மேடைகளில் பாடப்படாத அரிதான ராகங்களை எல்லாம் பாடினார்கள் என முக்கியமான இசைவிமர்சகர்கள் எழுதியிருக்கிறார்கள். மக்களுக்கு பிடிக்கும்விதமாகவும் பாடியிருக்கிறார்கள்.

பிரம்மாதி ஆனாலும் தானென்ற அகங்காரம்

அன்றைய திரைப்பாடகர்களில் எம்.கே. தியாகராஜ பாகவதர் போன்றவர்களின் பங்களிப்பை சமூகவியல்கோணத்திலும் அணுகவேண்டும். ஹொன்னப்பர் நெசவாளர் சாதியைச் சேர்ந்தவர். எம்.கே.டி. ஆசாரி சாதியைச் சேர்ந்தவர். அன்று இசையுலகம் பிராமணர்களால் ஆளப்பட்டது. இசைவேளாளர்களுக்குக் கூட இடமில்லாத அளவுக்கு ஆதிக்கம் இருந்தது. திரையில் அவர்களின் ஆதிக்கம் முறியடிக்கப்பட்டது. காரணம், பிராமணர்கள் நாடக உலகை ஒரு படி கீழாக நினைத்தார்கள். தொடக்ககால சினிமாப்பாடகநடிகர்கள் நாடகங்களில் இருந்து வந்தனர். அவர்கள் தங்களுக்கேயான பாட்டுமுறையால் பெரும்புகழ்பெற்றனர்.

மரபிசை உலகம் எம்.கே.டி போன்றவர்களை இழிவாகவே சொல்லிக்கொண்டது. அவருடைய இசை கேலியுடன் குறிப்பிடப்பட்டது. பெரிய பாடகர்களின் பட்டியலில் அவர் இடம்பெறவே இல்லை. ஆனால் எம்.கே.டி பாகவதர் மேடைகளில் தொடர்ச்சியாக தமிழிசைப்பாடல்களைப் பாடினார். தமிழிசை இயக்கத்துக்கு பெருங்கொடைகள் அளித்தார். இறுதிவரை புரவலாகவே நீடித்தார்.

(பிற்காலத்தில் ஒரு தொன்மம் உருவாக்கப்பட்டது, எம்.கே.தியாகராஜ பாகவதர் கடும் வறுமையில் இருந்தார் என்றும் அவருடைய உடலை ஊருக்குக் கொண்டுசெல்ல எம்.ஜி.ஆர் பண உதவி செய்தார் என்றும். அது பொய். அன்று எம்.ஜி.ஆர் பெரிய நடிகர் அல்ல. எம்.கே.டி இறப்பதற்குச் சில மாதம் முன்புகூட தமிழிசைச் சங்கம் கட்ட பல ஆயிரம் ரூபாய், இன்றைய மதிப்பில் அரைக்கோடிக்கு சமம், நன்கொடையாக அளித்திருந்தார். மறைந்தபோது அவருக்கு நான்கு கார்கள் இருந்தன. சென்னை, திருச்சியில் மாளிகைகள் இருந்தன. அவரது வாரிசுகளும் வளமாகவே பின்னரும் வாழ்ந்தனர்)

எம்.கே.டி. பாகவதர் வழக்கில் சிக்கவைக்கப்பட்டது, தண்டிக்கப்பட்டது ஆகியவற்றின் பின்னணியாக உள்ள சமூகக்காரணம் அவர் தன் சாதிக்கு அன்றைய சமூகம் அளித்த இடத்தை கடந்து தன்னை ஏழிசைமன்னர் என அறிவித்துக்கொண்டது, வைரங்கள் அணிந்துகொண்டு அரசரைப்போலவே வாழ்ந்தது. அது அளித்த பொறாமை அல்லது சாதிக்காழ்ப்பே அவர்மேல் வழக்கில் ஜூரிகள் எதிர்த்தீர்ப்பு எழுதுவதற்கு காரணம் என நான் நினைக்கிறேன். (இதில் ஒரு திரைக்கதைக்காக விரிவாக ஆய்வு செய்திருக்கிறேன்).

அதேசமயம் கல்கியின் ஆதரவும், கல்கியின் தலைவரான ராஜாஜியின் ஆதரவும் இருந்தமையால்தான் எம்.கே.டி வழக்குகளில் இருந்து தப்பினார் என்பதும் உண்மை. கல்கி தொடங்கி முன்னெடுத்த தமிழிசை இயக்கத்தின் முதன்மை ஆதரவாளர்களாகவும் புரவலர்களாகவும் விளங்கிய இருவர் அண்ணாமலை அரசரும் எம்.கே.டி. பாகவதரும்தான்.

அதேபோன்ற ஒதுக்குதலை ஹொன்னப்பா கன்னடத்தில் அடைந்தார். அவருக்கு இசையறிஞர் என்னும் இடம் நீண்டகாலம் அளிக்கப்படவில்லை. அவர் 300க்கும் மேற்பட்ட இசைப்பாடல்களை இயற்றியவர். இசைப்பயிற்சியகம் நடத்தியவர். ஆனால் அவரை இசைக்களத்தில் விமர்சகர்கள் பொருட்படுத்தியதில்லை. சினிமாவுக்கான விருதுகளைப் பெற்றிருந்தாலும் இன்றும் இசைய்கலைஞராக அவர் எங்கும் குறிப்பிடப்படுவதில்லை.

முந்தைய கட்டுரை விசும்பின் பாடல்
1 like ·   •  0 comments  •  flag
Share on Twitter
Published on March 30, 2025 11:35

ஆஷ்லி ஜார்ஜ் ஓல்ட்

[image error]ஆஷ்லி ஜார்ஜ் ஓல்ட் ஆங்கிலேய ஓவியர். சயாம் மரணரயில்பாதையின் கொடுமைகளை பதிவுசெய்தவர். அவை போர்க்குற்ற விசாரணையில் சான்றுகளாக இருந்தன.

ஆஷ்லி ஜார்ஜ் ஓல்ட் ஆஷ்லி ஜார்ஜ் ஓல்ட் ஆஷ்லி ஜார்ஜ் ஓல்ட் – தமிழ் விக்கி
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on March 30, 2025 11:34

ஜெயபைரவியும் செவ்வியலும்.

அன்பின் ஜெ,

வணக்கம்!.   பத்தாம் மாதத்தை நெருங்கிக் கொண்டு இருக்கிறாள் ஜெயபைரவி.  மனைவியோ அல்லது நானோ, மகளை மடியில் அமர்த்தி, வெண்முரசில் இருந்து இரு பக்கங்களை படிப்பது சமீபத்திய தினசரி வழக்கம்.

இன்று கைக்கொண்டது, வெய்யோன். எப்போதும் போல புத்தகத்தை பிரித்து, ஏழு பக்கங்கள் தாண்டி, ஏழாவது வரியில் இருந்து படிக்க ஆரம்பித்தேன்.

2017ம் வருடம் ஜூன் மாதத்தில் மாமலரை படித்து முடித்த நிறைவைகொண்டாடும் பொருட்டு நானும், சகோதரியின் மகன் சஞ்சயனும் ”வெம்முரசு புல்லெட்”டில் (வீட்டில் இரு புல்லட் வண்டிகள் பயன்பாட்டில் இருப்பதால், வெண்முரசு புல்லெட்டென நாமகரணம் பெற்றுவிட்டது) தரங்கம்பாடி கடற்கரைக்கு சென்று, வெண்முரசை ஈரமணலில் எழுதி, அலை அதனை அழித்து செல்வதை பார்த்து ரசித்துக்கொண்டிருந்தோம்.

வெண்முரசு விவாதங்கள்: வெண்முரசு வாசிப்பனுபவம் : யோகேஸ்வரன் ராமநாதன்.

பொடியன்  இன்று  சேலம் கல்லூரி ஒன்றில் இரண்டாம் ஆண்டு மருத்துவம் பயிலும் மாணவர். சேலத்தில் பிப்ரவரியில் நிகழ்ந்த  கட்டண உரைக்கு வந்திருந்து உங்களிடம் ஆசிபெற்று சென்றான்.

அதே 2017 வருட இறுதியில், மாமலர் மீள்வாசிப்பு செய்துகொண்டு இருக்கையில், வீட்டு வாசலுக்கு வருகை தந்த மந்தன் குறித்து எழுதிய வெண்முரசு விவாதங்கள்: மந்தனும் மாமலரும். கடிதத்தில் கூறியிருக்கும் தற்செயல் நிகழ்வு – ஒன்று.

2019ல் அலுவலகத்தில் உணவு இடைவேளையின் போது குருதிச்சாரல் செம்பதிப்பை  பிரித்து கண்ணில் தென்பட்ட பக்கத்தை படிக்கையில் நிகழ்ந்த தற்செயல் நிகழ்வு – இரண்டு. (வெண்முரசு விவாதங்கள்: ஊழ்)

2025 மார்ச் மாதம் – மடியில் மகவு அமர்ந்திருக்க, வாசிக்க எடுத்த வரிகள் குறித்த தற்செயல் நிகழ்வு–மூன்று.

திருதிராஷ்டர் குழந்தையை ஒற்றைக்கையால் பற்றி மேலே தூக்கி தன் தோள்மேல் வைத்து திரும்பி லஷ்மணா என்றார் .

லஷ்மணன் எழுந்து தாதையே என்றான் . ‘ எப்படி இருக்கிறான் சிறுவன் ? நடக்கிறானா என்றார் . ‘ நாங்கள் நேற்று இவனை நடக்க வைக்க முயற்சி செய்தோம் . அவன் எறும்புபோல கையூன்றித்தான் நடக்கிறான் என்றான் . ‘ இன்னும் ஒரு மாதத்தில் நடந்துவிடுவான் என்ற திருதராஷ்டர் அவனை   தன் கழுத்தெலும்பு மேல் அமர வைத்தார் .

ஜெயபைரவி இன்னும் ஒரு மாதத்தில் நடக்க ஆரம்பித்து விடுவாள். பேத்தியை கொஞ்சுகையில் சிரிப்பினூடாக அப்பா நேற்று சொல்லியது.

அனைத்திலும் மேலோங்கிய செவ்வியல் படைப்பை முதல் முறை வாசிக்கையிலும், மீள்வாசிப்பு செய்கையிலும் நடக்கும் தற்செயல் நிகழ்வுகளை, அவ்வாறே என்று எண்ணிவிட முடிவதில்லை…

நட்புடன்,

யோகேஸ்வரன் ராமநாதன்.

அன்புள்ள யோகா

வெண்முரசு பற்றி எனக்குக் கிடைக்கும் கடிதங்களில் நான் மகிழ்ச்சியாக உணர்பவை பலருடைய வாழ்க்கையின் ஒரு பகுதியாகவே அந்நூல்வரிசை மாறியிருப்பதைச் சுட்டிக்காடி எழுதப்படுபவை. அத்தகைய படைப்புகளையே நாம் செவ்வியல் நூல்கள் என்கிறோம். அவற்றை சாமானிய வாசகர்கள் சாதாரணமாக வாசிக்க கையில் எடுக்க மாட்டார்கள். இவற்றை எவரேனும் வாசிப்பார்களா என்ற ஐயமே சாமானியனிடம் இருக்கும். அவனுக்கு ஒரு மலைப்புதான் அவற்றைப்பற்றி இருக்கும். ஆனால் நையாண்டியும் கசப்புமாகப் பேசிக்கொள்வான், ஏனென்றால் அவனுடைய எளிய வாசிப்பை அவை மேலும் சிறியதாக்குகின்றன. அவற்றை வாசிப்பவர்கள் பிற சாதாரணப் படைப்புகள் வழியாக ஏறி அங்கே வந்தவர்கள். அவர்கள் பிறபடைப்புகளை நிராகரிக்க மாட்டார்கள், அவற்றின் இடத்தை அளிப்பார்கள். ஆனால் செவ்வியல் மட்டுமே அவர்களை நிறைவுகொள்ளச் செய்யும், அவற்றிலேயே அவர்கள் வாழ்வதற்கு இடவிரிவு இருக்கும்.

செவ்வியல் நூல்கள் வாழ்க்கைமுழுக்க உடன்வருபவை. ஏனென்றால் அவை குறிப்பிட்ட இடம், காலம், பண்பாடு சார்ந்தவை அல்ல. என்றுமுள்ள மானுட நிலைகளைப் பற்றி, என்றுமுள்ள ஒரு புனைவுக்களத்தில் வைத்து பேசுபவை அவை. அங்கே மானுடவாழ்க்கையின் இன்னொரு செறிவான வடிவத்தைப் பார்க்கும் நுண்ணுணர்வுகொண்டவரே செவ்வியலின் வாசகன். அவனுக்கு செவ்வியல் என்பது வாழ்வின் ஒரு பகுதி. இன்னும் விரிவான அழகான வாழ்க்கை. உங்கள் கடிதமும் அதையே காட்டுகிறது. நன்றி. ஜெயபைரவிக்கு என் முத்தம்.

ஜெ

(விஷ்ணுபுரம் பதிப்பக வெளியீடாக வெண்முரசு 26 தொகுதிகளும் வெளிவந்துள்ளன. முழுத்தொகுப்பாக வாங்கக் கிடைக்கும். தனித்தனி நூல்களும் வாங்கக்கிடைக்கும்.

தொடர்புக்கு : contact@vishnupurampublications.com 

Phone : 9080283887)

மாமனிதர்களின் உருக்கு உலை மழை தொடக்கம் இருநதிகளின் இணைவில்- இந்துமதி நழுவும் தருணம் – கலைச்செல்வி
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on March 30, 2025 11:33

தனிமையின் பெருங்கூட்டம்- கடிதம்

அசலம்

என் பெருமதிப்பிற்குரிய ஆசிரியருக்கு,

வணக்கம்!

தளத்தில் ‘அசலம்’ கட்டுரை வாசித்தேன். மலையின் அருகாமையில் வாழ்விடம் அமைவது என்பது ஒரு பெருங் கொடுப்பினை என்றே சொல்லத் தோன்றுகிறது. 

ஆதியின் முதற்பொழுதை, அந்தியின் மடியில் மலை முகடை அனுதினமும் காண்பது என்பது பெரும் ஆசி. 

மலைகளை கண்டு அடங்காது உள்ளம். காண காண விரிந்து எழுந்து வருவது அது. அது மனதில் தரும் உணர்வென்பது, விடுதலையா? தஞ்சமா? ஏகாந்தமா? ஆனந்தமா? பணிவா? துணையா? அறியேன். ஆனால் அது அருகிலிருக்கும் நினைப்பே போதும் என்று தோன்றுகிறது. 

இரண்டு நாட்களுக்கு முன்புதான் என் வாழ்க்கையின் வெவ்வேறு கட்டங்களில் நான் கண்ட மலைகளை பற்றிய அனுபவங்களை கட்டுரையாய் எழுதியிருந்தேன். (தனிமையின் பெருங்கூட்டம்) எழுதிய இரண்டு நாட்களில் இந்த ‘அசலம்’ கண்டதும் மீண்டும் ஒரு அகத்தூண்டுதலுக்கு ஆளானேன். 

மலைகளின் முடிவற்ற வெளியில், என் மனம் பறவையாய் பறந்திட காண்கிறேன்!

நன்றி

ரம்யா மனோகரன்

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on March 30, 2025 11:32

Emburan and Philosophy.

The movie Emburan is now in theatres. What is the core element of superhero movies? Why are people so fascinated by superhero movies? We call them “superhero” movies. The actors who play these kinds of roles become our idols, and we are extending their image beyond the movies. We admire Mohan Lal personally as a superhero. Why?

Emburan and Philosophy.

 

உங்கள் கானொளிகளில் தத்துவம், உளவியல், இலக்கியம் என பல விஷயங்களைப் பேசிக்கொண்டிருக்கிறீர்கள். எல்லாமே ஆழமனாவை, அழகானவை. ஆனால் எனக்கு தனிப்பட்டமுறையில் நிறைவளிப்பவை நீங்கள் அன்றாட வாழ்க்கையைப் பற்றி பேசும் காணொளிகள்தான்.

அன்றாடங்களின் அழகு
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on March 30, 2025 11:30

Jeyamohan's Blog

Jeyamohan
Jeyamohan isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow Jeyamohan's blog with rss.