கழுதை மேய்த்தல்
என் மாமனார் சற்குணம் பிள்ளை அவர்கள் அஜிதன் படிக்காமலிருக்கையில் “இப்டிப் படிச்சா கழுதைமேய்க்கத்தான் போகணும்” என்பார். கழுதையை எவரும் மேய்த்து நான் பார்த்ததில்லை. எங்களூரில் “ரெண்டு எருமைய வாங்கிவிட்டு ஒரு பெண்ணையும் கட்டிவைச்சுட்டா என் வேலை முடிஞ்சுது பாத்துக்கோ…” என படிக்காத பிள்ளைகளிடம் சொல்வார்கள். அதில் நியாயம் உண்டு. எருமை ஒரு குடும்பத்தையே கவனித்துக்கொள்ளும். இரண்டு எருமை இருந்தால் வாழ்க்கை சுபிட்சம்தான். எருமைக்கு தீனி எல்லாம் தனியாக மெனக்கெடவேண்டுமென்பதில்லை. ’எதுவும் இங்கே தின்றுகொடுக்கப்படும்’ என்பதுதான் எருமையின் நிலையான முகபாவனை.
பழையபாடல்களைப் பார்த்துக்கொண்டிருந்தபோது கழுதைமேய்க்கும் சிறுவன் ஒருவனின் பாடல் அகப்பட்டது. ”மனுஷனைப் பாத்துட்டு உன்னையும் பாத்தா மாற்றமென்னடா ராஜா? என் மனசில பட்டதை வெளியிலே சொல்றேன் வந்தது வரட்டும் போடா” பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் 1959ல் வெளிவந்தகண் திறந்தது என்ற சினிமாவுக்காக எழுதி ஜமுனாராணி பாடிய பாடல். அந்த சிறுவன் உற்சாகமாக நடித்திருக்கிறான். அன்றைய கிராமத்தின் ஒரு குறுக்குவெட்டுத்தோற்றம் பாட்டில் உள்ளது. “பள்ளிக்கூடம் இல்லாத ஊருக்கு பயணம் போறேன் போடா” என்று பாடும்போது ஒரு சிறுவன் “நானும் வாறேன்” என்று பாய்வதும் இன்னொருவன் பிடித்து இழுப்பதும் வேடிக்கையாக இருந்தது. அக்காலத்தில் ஓடாத படம் என நினைக்கிறேன். ஃபிலிம் கெட்டுப்போகாமல் காட்சி அழகாகவே எஞ்சியிருக்கிறது.
இன்னொரு பாடல் நினைவில் எழுந்தது, தேடி கண்டுபிடித்தேன். எருமை கண்ணுக்குட்டி என் எருமை கண்ணுக்குட்டி” 1950-ல் வெளிவந்த, மந்திரி குமாரி படத்தில் இடம்பெற்ற இப்பாடலை எழுதியவர் கா.மூ.ஷெரீப் என்கிறார்கள். மருதகாசி என்றும் சொல்கிறர்கள். இசையமைப்பாளர் ஜி.ராமனாதன். பாடியவர் பி.எஸ்.சுப்பையா என்ற சிறுவன். பலரும் பார்த்திருக்கும் பாடல். முந்தைய பாடலின் அதே கருதான். விலங்கிடம் மனிதவாழ்க்கையின் வேடிக்கை, மோசம் ஆகியவற்றைச் சொல்வது. “நல்லதுக்குக் காலமில்லைஈஈஈ” என ஓர் இழுப்பு.
விலங்குகளுடன் மனிதர்களை இணைத்துக் காட்டுவது அக்கால சினிமாக்களில் வழக்கமாகவே இருந்தது. குதிரை, பசுமாடு, கழுதை, எருமை எல்லாம் மக்களின் வாழ்க்கையுடன் அணுக்கமாக இருந்த காலம். இப்போது மிகச்சில வீடுகளில் வளர்ப்பு நாய் இருக்கிறது, மற்றபடி விலங்குலகுடன் மக்களுக்கு எந்த தொடர்பும் இல்லை. குறிப்பாக நகர்சார் குழந்தைகளுக்கு எந்த விலங்குமே அறிமுகமில்லை. வெள்ளாட்டை பார்த்து வீரிட்டுக் கத்தும் குழந்தைகளைப் பார்த்திருக்கிறேன்.
ஒரு காலகட்டத்தில் சினிமா காட்சிக்கலைகள் அனைத்தையும் கலந்ததாக இருந்தது. ஆகவே எல்லாருக்குமான எல்லாமும் அதில் இருந்தாகவேண்டும் என்ற நிலை. வயதானவர்கள், குடும்பத்தலைவர்கள், மனைவிகள், இளைஞர்கள், இளம்பெண்கள் முதல் குழந்தைகள் வரை சினிமா பார்க்கச் செல்வார்கள். ஒரே படத்திற்கு கூட்டமாகச் செல்வார்கள். அனைவருக்கும் அதில் ஏதேனும் ஒன்று இருக்கவேண்டும். ஆகவே பெரும்பாலான படங்களில் குழந்தைகளுக்கான பாடல்கள் இருக்கும். குழந்தைகளே நடிப்பார்கள். குழந்தைகளின் நினைவில் அப்பாடல் நீடிக்கவும் செய்யும்.
அண்மையில் நான் குட்டி பத்மினியைச் சந்தித்தேன். அவர்களுக்கு என்னைவிட வயது. பையன்களெல்லாம் வெளிநாடுகளில். திரைப்படங்களை ஒருங்கிணைப்பவராக இப்போதும் சுறுசுறுப்பாக இருக்கிறார். ஆனால் அவரிடம் பேசிக்கொண்டிருந்தபோதெல்லாம் அவர் சிறுமியாக நடித்த படங்களே என் நினைவில் ஓடிக்கொண்டிருந்தன. அவர் பேசிச்சிரிக்கும்போது அந்த சிறுமி தோன்றி மறைவதே சுவாரசியமாக இருந்தது.
விலங்குப்பாடல்களில் விந்தையானது ஒன்று உண்டு. இங்கே பாடுவது விலங்கு, மனிதனைப்பார்த்து. “எஜமான் பெற்ற செல்வமே என் சின்ன எஜமானே” என்று கைக்குழந்தைக்கு தொட்டிலாட்டிக்கொண்டே குதிரை பாடுகிறது. பாடியவர் இசையமைப்பாளர் ஜி.ராமநாதனேதான். ஆனால் பாட்டுக்கு இசையமைத்தவர் கே.வி.மகாதேவன். 1959ல் வெளிவந்த அல்லி பெற்ற பிள்ளை என்ற படத்துக்காக.
Jeyamohan's Blog
- Jeyamohan's profile
- 842 followers

