பொன்னப்ப சங்கீதம்
குமாரன் ஆசானின் உதிர்ந்த மலர் பற்றி எழுதிக்கொண்டிருந்தபோது ஞாபகம் வந்தது, இதேபோல ஒரு தமிழ்ப்பாட்டு உண்டே. எங்கே? மண்டை நொய் நொய் என்றது. இரவில் நினைவு வரவில்லை. ஆனால் காலைநடையில் பளிச்சிட்டது. ஹொன்னப்ப பாகவதர் பாடிய அழகுடன் மணமிகு மலரே.
1944 ல் வெளிவந்த ராஜராஜேஸ்வரி என்னும் படத்துக்காக ஹொன்னப்ப பாகவதர் பாடியது. அது இத்தனை காலம் நினைவில் நின்றிருப்பது ஆச்சரியம்தான். அது குமாரன் ஆசானின் பாடலுக்கு அணுக்கமானது என்பதுதான் நினைவில் நிற்பதற்கான காரணமாக இருக்கலாம்.
ஹொன்னப்ப பாகவதர் என ஒருவர் தமிழில் இருந்தார் என்பதையே எவரும் நினைவில் கொண்டிருக்க மாட்டார்கள் என நினைக்கிறேன். எம்.கே.தியாகராஜ பாகவதரின் அம்பிகாபதி படம் வழியாக தமிழுக்கு அறிமுகமானவர். தியாகராஜ பாகவதர் சிறைசென்றதனால் அவர் நடிக்கவிருந்த படங்களில் நடித்து திடீர் புகழ்பெற்றார்.
ஆனால் விரைவிலேயே சினிமா மாறியது. வசனங்களைச் சார்ந்ததாகவும், சமூகக்கதைக்கருக்களைக் கொண்டதாகவும் பரிணாமம் அடைந்தது. நடிகர்கள் பாடவேண்டாம் என்னும் நிலை வந்தது. ஹொன்னப்ப பாகவதர் பின்னடைந்தார். ஹொன்னப்ப பாகவதர் நடித்துக்கொண்டிருக்கையில், அவருடைய படத்திலேயே துணைநடிகராக நுழைந்த எம்.ஜி.ராமச்சந்திரன் புகழ்பெற்ற நடிகராக எழுச்சிகொண்டார்.
ஹொன்னப்ப பாகவதர் கன்னடத்தில் நடிகராகவும் இசைப்பாடகராகவும் சிறிதுகாலம் நீடித்தார். நாடகங்கள் நடத்தினார். பின்னர் மேடைப்பாடகராக இறுதிவரை திகழ்ந்தார். கர்நாடகத்தின் உயரிய விருதுகளைப் பெற்றார்.
அண்மையில் ஹொன்னாவர் சென்றபோது ஹொன்னப்ப பாகவதரை நினைவுகூர்ந்தேன். ஹொன்னாவரம் என்றால் பொன்னகரம் என்று பொருள். ஹொன்னப்பா என்றால் பொன்னப்பா. அல்லது தங்கப்பா. அங்கே நடனக்கலைஞர் ஹெக்டேகூட ஹொன்னப்ப பாகதவரின் சாயலில்தான் இருந்தார். அந்தக்கால சினிமாக்களும் நேரடியாக யட்சகானத்தில் இருந்து நாடகமேடைக்குச் சென்று அங்கிருந்து திரைக்கு வந்தவை.
பாடும் முறையும் விந்தைதான். மேடையில் கச்சேரி செய்யப்படும் பாணி. சதாசிவ சங்கரா என்னும் பாடலை சாதா சிவா என்று சாதாரணமாக பாடுகிறார் ஹொன்னர். இசை எந்த மகாதேவனையும், அவன் திரிபுரம் எரித்தவனாகவே இருந்தாலும் சாதாரண சிவமாக ஆக்கிவிடுகிறது. அவனும் போனால் போகட்டும் என்று விட்டுவிடுவான் போலும்.
இந்த பாடல்கள் எல்லாமே கர்நாடக இசையை அடிப்படையாகக்கொண்டவை. அக்காலத்தில் ஹொன்னப்பா போன்றவர்கள் சாதாரணமாக மேடைகளில் பாடப்படாத அரிதான ராகங்களை எல்லாம் பாடினார்கள் என முக்கியமான இசைவிமர்சகர்கள் எழுதியிருக்கிறார்கள். மக்களுக்கு பிடிக்கும்விதமாகவும் பாடியிருக்கிறார்கள்.
பிரம்மாதி ஆனாலும் தானென்ற அகங்காரம்
அன்றைய திரைப்பாடகர்களில் எம்.கே. தியாகராஜ பாகவதர் போன்றவர்களின் பங்களிப்பை சமூகவியல்கோணத்திலும் அணுகவேண்டும். ஹொன்னப்பர் நெசவாளர் சாதியைச் சேர்ந்தவர். எம்.கே.டி. ஆசாரி சாதியைச் சேர்ந்தவர். அன்று இசையுலகம் பிராமணர்களால் ஆளப்பட்டது. இசைவேளாளர்களுக்குக் கூட இடமில்லாத அளவுக்கு ஆதிக்கம் இருந்தது. திரையில் அவர்களின் ஆதிக்கம் முறியடிக்கப்பட்டது. காரணம், பிராமணர்கள் நாடக உலகை ஒரு படி கீழாக நினைத்தார்கள். தொடக்ககால சினிமாப்பாடகநடிகர்கள் நாடகங்களில் இருந்து வந்தனர். அவர்கள் தங்களுக்கேயான பாட்டுமுறையால் பெரும்புகழ்பெற்றனர்.
மரபிசை உலகம் எம்.கே.டி போன்றவர்களை இழிவாகவே சொல்லிக்கொண்டது. அவருடைய இசை கேலியுடன் குறிப்பிடப்பட்டது. பெரிய பாடகர்களின் பட்டியலில் அவர் இடம்பெறவே இல்லை. ஆனால் எம்.கே.டி பாகவதர் மேடைகளில் தொடர்ச்சியாக தமிழிசைப்பாடல்களைப் பாடினார். தமிழிசை இயக்கத்துக்கு பெருங்கொடைகள் அளித்தார். இறுதிவரை புரவலாகவே நீடித்தார்.
(பிற்காலத்தில் ஒரு தொன்மம் உருவாக்கப்பட்டது, எம்.கே.தியாகராஜ பாகவதர் கடும் வறுமையில் இருந்தார் என்றும் அவருடைய உடலை ஊருக்குக் கொண்டுசெல்ல எம்.ஜி.ஆர் பண உதவி செய்தார் என்றும். அது பொய். அன்று எம்.ஜி.ஆர் பெரிய நடிகர் அல்ல. எம்.கே.டி இறப்பதற்குச் சில மாதம் முன்புகூட தமிழிசைச் சங்கம் கட்ட பல ஆயிரம் ரூபாய், இன்றைய மதிப்பில் அரைக்கோடிக்கு சமம், நன்கொடையாக அளித்திருந்தார். மறைந்தபோது அவருக்கு நான்கு கார்கள் இருந்தன. சென்னை, திருச்சியில் மாளிகைகள் இருந்தன. அவரது வாரிசுகளும் வளமாகவே பின்னரும் வாழ்ந்தனர்)
எம்.கே.டி. பாகவதர் வழக்கில் சிக்கவைக்கப்பட்டது, தண்டிக்கப்பட்டது ஆகியவற்றின் பின்னணியாக உள்ள சமூகக்காரணம் அவர் தன் சாதிக்கு அன்றைய சமூகம் அளித்த இடத்தை கடந்து தன்னை ஏழிசைமன்னர் என அறிவித்துக்கொண்டது, வைரங்கள் அணிந்துகொண்டு அரசரைப்போலவே வாழ்ந்தது. அது அளித்த பொறாமை அல்லது சாதிக்காழ்ப்பே அவர்மேல் வழக்கில் ஜூரிகள் எதிர்த்தீர்ப்பு எழுதுவதற்கு காரணம் என நான் நினைக்கிறேன். (இதில் ஒரு திரைக்கதைக்காக விரிவாக ஆய்வு செய்திருக்கிறேன்).
அதேசமயம் கல்கியின் ஆதரவும், கல்கியின் தலைவரான ராஜாஜியின் ஆதரவும் இருந்தமையால்தான் எம்.கே.டி வழக்குகளில் இருந்து தப்பினார் என்பதும் உண்மை. கல்கி தொடங்கி முன்னெடுத்த தமிழிசை இயக்கத்தின் முதன்மை ஆதரவாளர்களாகவும் புரவலர்களாகவும் விளங்கிய இருவர் அண்ணாமலை அரசரும் எம்.கே.டி. பாகவதரும்தான்.
அதேபோன்ற ஒதுக்குதலை ஹொன்னப்பா கன்னடத்தில் அடைந்தார். அவருக்கு இசையறிஞர் என்னும் இடம் நீண்டகாலம் அளிக்கப்படவில்லை. அவர் 300க்கும் மேற்பட்ட இசைப்பாடல்களை இயற்றியவர். இசைப்பயிற்சியகம் நடத்தியவர். ஆனால் அவரை இசைக்களத்தில் விமர்சகர்கள் பொருட்படுத்தியதில்லை. சினிமாவுக்கான விருதுகளைப் பெற்றிருந்தாலும் இன்றும் இசைய்கலைஞராக அவர் எங்கும் குறிப்பிடப்படுவதில்லை.
முந்தைய கட்டுரை விசும்பின் பாடல்Jeyamohan's Blog
- Jeyamohan's profile
- 842 followers

