ஜெயபைரவியும் செவ்வியலும்.
வணக்கம்!. பத்தாம் மாதத்தை நெருங்கிக் கொண்டு இருக்கிறாள் ஜெயபைரவி. மனைவியோ அல்லது நானோ, மகளை மடியில் அமர்த்தி, வெண்முரசில் இருந்து இரு பக்கங்களை படிப்பது சமீபத்திய தினசரி வழக்கம்.
இன்று கைக்கொண்டது, வெய்யோன். எப்போதும் போல புத்தகத்தை பிரித்து, ஏழு பக்கங்கள் தாண்டி, ஏழாவது வரியில் இருந்து படிக்க ஆரம்பித்தேன்.
2017ம் வருடம் ஜூன் மாதத்தில் மாமலரை படித்து முடித்த நிறைவைகொண்டாடும் பொருட்டு நானும், சகோதரியின் மகன் சஞ்சயனும் ”வெம்முரசு புல்லெட்”டில் (வீட்டில் இரு புல்லட் வண்டிகள் பயன்பாட்டில் இருப்பதால், வெண்முரசு புல்லெட்டென நாமகரணம் பெற்றுவிட்டது) தரங்கம்பாடி கடற்கரைக்கு சென்று, வெண்முரசை ஈரமணலில் எழுதி, அலை அதனை அழித்து செல்வதை பார்த்து ரசித்துக்கொண்டிருந்தோம்.
வெண்முரசு விவாதங்கள்: வெண்முரசு வாசிப்பனுபவம் : யோகேஸ்வரன் ராமநாதன்.
பொடியன் இன்று சேலம் கல்லூரி ஒன்றில் இரண்டாம் ஆண்டு மருத்துவம் பயிலும் மாணவர். சேலத்தில் பிப்ரவரியில் நிகழ்ந்த கட்டண உரைக்கு வந்திருந்து உங்களிடம் ஆசிபெற்று சென்றான்.
அதே 2017 வருட இறுதியில், மாமலர் மீள்வாசிப்பு செய்துகொண்டு இருக்கையில், வீட்டு வாசலுக்கு வருகை தந்த மந்தன் குறித்து எழுதிய வெண்முரசு விவாதங்கள்: மந்தனும் மாமலரும். கடிதத்தில் கூறியிருக்கும் தற்செயல் நிகழ்வு – ஒன்று.
2019ல் அலுவலகத்தில் உணவு இடைவேளையின் போது குருதிச்சாரல் செம்பதிப்பை பிரித்து கண்ணில் தென்பட்ட பக்கத்தை படிக்கையில் நிகழ்ந்த தற்செயல் நிகழ்வு – இரண்டு. (வெண்முரசு விவாதங்கள்: ஊழ்)
2025 மார்ச் மாதம் – மடியில் மகவு அமர்ந்திருக்க, வாசிக்க எடுத்த வரிகள் குறித்த தற்செயல் நிகழ்வு–மூன்று.
” திருதிராஷ்டர் குழந்தையை ஒற்றைக்கையால் பற்றி மேலே தூக்கி தன் தோள்மேல் வைத்து திரும்பி ‘ லஷ்மணா ’ என்றார் .
லஷ்மணன் எழுந்து ‘ தாதையே ’ என்றான் . ‘ எப்படி இருக்கிறான் சிறுவன் ? நடக்கிறானா ” என்றார் . ‘ நாங்கள் நேற்று இவனை நடக்க வைக்க முயற்சி செய்தோம் . அவன் எறும்புபோல கையூன்றித்தான் நடக்கிறான் ” என்றான் . ‘ இன்னும் ஒரு மாதத்தில் நடந்துவிடுவான் ” என்ற திருதராஷ்டர் அவனை தன் கழுத்தெலும்பு மேல் அமர வைத்தார் .
ஜெயபைரவி இன்னும் ஒரு மாதத்தில் நடக்க ஆரம்பித்து விடுவாள். பேத்தியை கொஞ்சுகையில் சிரிப்பினூடாக அப்பா நேற்று சொல்லியது.
அனைத்திலும் மேலோங்கிய செவ்வியல் படைப்பை முதல் முறை வாசிக்கையிலும், மீள்வாசிப்பு செய்கையிலும் நடக்கும் தற்செயல் நிகழ்வுகளை, அவ்வாறே என்று எண்ணிவிட முடிவதில்லை…
நட்புடன்,
யோகேஸ்வரன் ராமநாதன்.
அன்புள்ள யோகா
வெண்முரசு பற்றி எனக்குக் கிடைக்கும் கடிதங்களில் நான் மகிழ்ச்சியாக உணர்பவை பலருடைய வாழ்க்கையின் ஒரு பகுதியாகவே அந்நூல்வரிசை மாறியிருப்பதைச் சுட்டிக்காடி எழுதப்படுபவை. அத்தகைய படைப்புகளையே நாம் செவ்வியல் நூல்கள் என்கிறோம். அவற்றை சாமானிய வாசகர்கள் சாதாரணமாக வாசிக்க கையில் எடுக்க மாட்டார்கள். இவற்றை எவரேனும் வாசிப்பார்களா என்ற ஐயமே சாமானியனிடம் இருக்கும். அவனுக்கு ஒரு மலைப்புதான் அவற்றைப்பற்றி இருக்கும். ஆனால் நையாண்டியும் கசப்புமாகப் பேசிக்கொள்வான், ஏனென்றால் அவனுடைய எளிய வாசிப்பை அவை மேலும் சிறியதாக்குகின்றன. அவற்றை வாசிப்பவர்கள் பிற சாதாரணப் படைப்புகள் வழியாக ஏறி அங்கே வந்தவர்கள். அவர்கள் பிறபடைப்புகளை நிராகரிக்க மாட்டார்கள், அவற்றின் இடத்தை அளிப்பார்கள். ஆனால் செவ்வியல் மட்டுமே அவர்களை நிறைவுகொள்ளச் செய்யும், அவற்றிலேயே அவர்கள் வாழ்வதற்கு இடவிரிவு இருக்கும்.
செவ்வியல் நூல்கள் வாழ்க்கைமுழுக்க உடன்வருபவை. ஏனென்றால் அவை குறிப்பிட்ட இடம், காலம், பண்பாடு சார்ந்தவை அல்ல. என்றுமுள்ள மானுட நிலைகளைப் பற்றி, என்றுமுள்ள ஒரு புனைவுக்களத்தில் வைத்து பேசுபவை அவை. அங்கே மானுடவாழ்க்கையின் இன்னொரு செறிவான வடிவத்தைப் பார்க்கும் நுண்ணுணர்வுகொண்டவரே செவ்வியலின் வாசகன். அவனுக்கு செவ்வியல் என்பது வாழ்வின் ஒரு பகுதி. இன்னும் விரிவான அழகான வாழ்க்கை. உங்கள் கடிதமும் அதையே காட்டுகிறது. நன்றி. ஜெயபைரவிக்கு என் முத்தம்.
ஜெ
(விஷ்ணுபுரம் பதிப்பக வெளியீடாக வெண்முரசு 26 தொகுதிகளும் வெளிவந்துள்ளன. முழுத்தொகுப்பாக வாங்கக் கிடைக்கும். தனித்தனி நூல்களும் வாங்கக்கிடைக்கும்.
தொடர்புக்கு : contact@vishnupurampublications.comPhone : 9080283887)
மாமனிதர்களின் உருக்கு உலை மழை தொடக்கம் இருநதிகளின் இணைவில்- இந்துமதி நழுவும் தருணம் – கலைச்செல்விJeyamohan's Blog
- Jeyamohan's profile
- 842 followers


