சென்றகால ஆண்களும் பெண்களும்
சென்ற 23 ஆகஸ்ட் 2024 அன்று பி.எம்.கண்ணன் எழுதிய நாவல்கள் ஒட்டுமொத்தமாக அல்லையன்ஸ் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டன. அவ்விழாவில் சிவசங்கரி , திருப்பூர் கிருஷ்ணன் போன்றவர்கள் கலந்துகொண்டனர். அதற்கு முன் நான் பி.எம்.கண்ணனை வாசித்த ஒருவரைக்கூடச் சந்தித்ததில்லை என எழுதியிருந்தேன். (பி.எம்.கண்ணன் பதிவு) பி.எம்.கண்ணனின் கதைகள் 1950 -60களில் தொடர்ச்சியாக குமுதம், கல்கி இதழ்களில் வெளிவந்தன. அக்காலகட்டத்துப் பெண்களுக்கு மிகப்பிடித்தமானவை அவை.
கணவனால் பெண்கள் ஒதுக்கிவைக்கப்படுதல், கைவிடப்படுதல், கொடுமைக்காளாதல் ஆகியவை ஓங்கி நின்றிருந்த காலகட்டம் அது. பெண்கள் தங்கள் பொறுமையால், பண்புகளால், போராட்டகுணத்தால் அந்தக் காலகட்டத்தை வென்று மீண்டனர். அந்த காலகட்டத்தின் சித்திரங்களை பி.எம். கண்ணன் எழுதினார். பெரும்பாலும் பெண்களின் தரப்பில் இருந்து. அவருடைய பல நாவல்கள் அக்காலகட்டத்தில் பெரும்புகழ்பெற்றிருந்தன.
பி.எம்.கண்ணன் ஓர் ஆசிரியராக மறைந்துவிட்டதைப் பற்றி வியக்க அல்லது வருந்த ஒன்றுமில்லை. அவருடைய கதைகள் பொதுவாசிப்புக்குரியவை, வணிக இதழ்களில் வெளியானவை. அத்தகைய ஆக்கங்களுக்கு சமகாலத்தன்மை உண்டு, காலம்கடந்த தன்மை இல்லை. அவை வாசகர்களை உத்தேசித்தே எழுதப்படுபவை, பின்னூட்டங்கள் வழியாகவே அவற்றின் உணர்ச்சிகளும், கதையோட்டமும் எல்லாம் முடிவாகின்றன. அதாவது வாசகர்கள் தங்களுக்காக உருவாக்கிக்கொள்ளும் படைப்புகள் அவை, கதையாசிரியன் அவர்களின் தேவைக்கேற்ப அவற்றை எழுதிக்கொடுப்பவன் மட்டுமே.
அந்த வகையான எழுத்தின் பின் ஓர் ‘ஆசிரிய ஆளுமை’ இல்லை. ஆகவே வாசகர்கள் அந்தப் பெயரை ஒரு ‘பிராண்ட்’ என்ற அளவிலேயே பார்க்கிறார்கள். அந்த எழுத்தாளரின் தனிச்சிந்தனை என்ன, அதை நோக்கி வந்த அவரது வாழ்க்கை என்ன, அவருடைய உணர்வுகளும் கனவுகளும் என்ன என்றெல்லாம் அவர்கள் நோக்குவதில்லை. புதுமைப்பித்தன் படைப்புகள் வழியாக நாம் செல்வது அந்த எழுத்தாளுமை நோக்கி, ஆகவே அவரது வாழ்க்கை நமக்கு முக்கியம். பி.எம்.கண்ணனின் எழுத்துக்கள் வழியாக நாம் அவரை நோக்கிச் செல்வதில்லை. ஆகவே அவருடைய ஆளுமை மறக்கப்படுகிறது.
பி.எம்.கண்ணன் 1969 வாக்கில் எழுத்தை நிறுத்திவிட்டார். அரைநூற்றாண்டாக அவர் படைப்புகள் வெளியாகவுமில்லை. அடுத்தடுத்த காலகட்டங்கள் வந்தன, அவற்றை எழுதும் எழுத்தாளர்கள் வந்தனர், அவர்களுக்கான வாசகர்கள் உருவாயினர்.என்னைப்போல 1960 களில் பிறந்தவர்களுக்கே கூட பி.எம்.கண்ணனின் கதைமாந்தரின் பிரச்சினைகள் அபத்தமாகத் தெரியும்.
உதாரணமாக ஒரு கதையில் ஒரு பெண் திருமணமானதுமே ஒரு சாமியாரை ஆற்றங்கரையில் சந்திக்கிறாள். அவர் அவள் கழுத்திலுள்ள தாலியை ஒரு பாம்பு ஆக காண்கிறார். அவள் கணவனுடன் உறவுகொண்டால் அவன் இறந்துவிடுவான் என்கிறார். ஆனால் அதை அவனிடமும் வேறு எவரிடமும் சொல்லக்கூடாது என எச்சரிக்கிறார். அவள் அதை உறுதியாகக் கடைப்பிடிக்க கணவன் அவள்மேல் சந்தேகம்கொண்டு தள்ளிவைக்கிறான். அவள் செத்துவிடுகிறாள்.
பி.எம்.கண்ணனின் இன்பப்புதையல் என் அம்மாவுக்கு பிடித்த தொடர்கதை. கணவனின் மூர்க்கத்தால் கொடுமைப்படுத்தப்படும் மனைவியின் கதை அது. அம்மா அதில் தன் வாழ்க்கையின் சில அம்சங்களைக் கண்டிருக்கலாம். இன்று பார்க்கையில் கணவனின் கொடுமைகளை பொறுமையுடன் தாங்கிக்கொள்ளும் மனைவியை கண்ணன் புகழ்ந்து, அவளை முன்னுதாரணமாக ஆக்கியிருப்பதாக தோன்றலாம். அவர் ஆசாரவாத, பிற்போக்கு நோக்கை முன்வைப்பதாகத் தோன்றலாம். ஆனால் அவர் எழுதியவை வணிக எழுத்துக்கள். அந்த வாசகர்கள் (அதாவது பெரும்பாலும் வாசகிகள்) ஏற்றுக்கொள்ளும்வகையில்தான் அவர் எழுத முடியும். அன்றைய வாசகமனநிலை அப்படி இருந்தது என்பதே அக்கதைகள் வழியாக நாம் ஊகிக்கவேண்டியது.
தமிழ் சினிமாவை எடுத்துக்கொண்டால் எண்பதுகளின் இறுதிவரை அத்தகைய பெண்கதாபாத்திரங்களே ஏற்பு பெற்றன என்பதை காணலாம். அதற்கு முன்னரே மீறலை எதிர்ப்பாக முன்வைத்த சிவசங்கரி- வாசந்தி- இந்துமதி தலைமுறை பொதுரசனை வாசிப்பில் நிலைகொண்டுவிட்டது. படித்த பெண்களின் மனநிலை அந்த ‘பொறுமையான கதைநாயகி’ என்னும் அடையாளத்தை தூக்கிவீசிவிட்டது. அந்தக் கதைநாயகி காட்சியூடகத்திற்கு மேலும் இருபதாண்டுகள் கழித்து தொலைக்காட்சித் தொடர்கள் வழியாகவே உருவாகி வந்தாள்.
பி.எம். கண்ணனின் ஒரு கதை இணையவாசிப்புக்கு கிடைக்கிறது. மறுஜன்மம் என் அம்மாவுக்கு ஏன் பி.எம்.கண்ணன் பிடித்தமானவராக இருந்தார் என்பதை அக்கதையைக்கொண்டு இன்னும் கூர்மையாகப் புரிந்துகொள்கிறேன். என் அம்மா தமிழ் ,ஆங்கிலம், மலையாளம் என மூன்றுமொழிகளிலும் இலக்கிய வாசிப்பு உடையவர். திருமணத்திற்கு முன்பு கதைகள் எழுதியவர். ஆனால் மணமான பின் ஒரு வரிகூட எழுதவில்லை. அதே கதைதான் மறுஜன்மம். இசையிலும் இலக்கியத்திலும் தேர்ச்சிகொண்ட பெண். கணவனுக்கும் அது பிடித்திருக்கிறது. ஆனால் மாமியாருக்குப் பிடிக்கவில்லை. ஊராருக்கு இளக்காரம். அவள் மணவாழ்க்கையே முடியும் நிலையில் மறுபிறப்பு எடுக்கிறாள்.
அது அடங்கிப்போதலா அல்லது ஒருவகை மௌனமான எதிர்ப்பா? அந்த இடத்தில்தான் அக்கதை நுணுக்கமான ஒன்றாகிறது. ஒரு காலகட்டத்தின் மனநிலையையே பிரதிநிதித்துவம் செய்வதாக ஆகிறது.
பி. எம். கண்ணன் – தமிழ் விக்கிJeyamohan's Blog
- Jeyamohan's profile
- 842 followers

