அக்ரஹாரத்தில் கொன்றை!

பார்வதிபுரம் அக்ரஹாரம் இன்று ஏறத்தாழ அக்ரஹாரம் என்றுதான் சொல்லவேண்டும். கணிசமான வீடுகளை இடித்து கான்கிரீட்டில் விந்தையான வடிவங்களில் கட்டிவிட்டார்கள். அக்ரஹாரம் என்பதனால் விசாலமாக கட்ட இடமில்லை, ஆகவே எல்லா வீடுகளும் ரேஷன்கடை வரிசையில் முண்டியடிப்பவைபோல நின்றிருக்கின்றன. சில வீடுகளின் பக்கவாட்டில் ஜிப்பாவில் பை போல சின்னச்சின்ன ‘போர்ஷன்’களை கட்டி வாடகைக்கு விட்டிருக்கிறார்கள்.

காரணம் பார்வதிபுரம் அக்ரஹாரம் இன்று இருப்பது பார்வதிபுரம் ஜங்ஷன் அருகே. நான் கல்லூரி படிக்கும் காலத்தில் அங்கே உருண்டை ஐயர் என்பவரின் ஒரே ஒரு ஓட்டல்தான். அங்கே ரவாலாடு எனப்படும் வெண்ணிறமான ஓர் உருண்டை வஸ்து பிசுக்கிபிடித்த கண்ணாடிப்பெட்டிக்குள் நுகர்வோரைக் காத்து அமர்ந்திருக்கும். அக்காலத்தில் வேலையில்லாத் திண்டாட்டம் உச்சத்தில் இருந்தது. இண்டர்வியூ போவதென்பது இளைஞர்களின் பத்தாண்டுகால வாழ்க்கை. அப்பின்னணியில் “அதுக்கு அப்பாயின்மெண்ட் வரல்லை கேட்டியா?” என்று அந்தோணி சொன்னதை புரிந்துகொள்ளவேண்டும்.

அப்போது அக்ரஹாரமும் ஆழ்ந்த அமைதியில் இருந்தது. காலேஜ் செல்லும் வழியில் அப்பகுதிக்குள் நுழைந்து அப்பால் வந்தால் சிலசமயம் ஐயப்பா கல்லூரியில் படிக்கும் இளம் அழகிகளைப் பார்க்கலாம். காலேஜ் செல்லும் வழியில் நம்மைப் பார்த்தால் கெத்தாகச் செல்பவர்கள் அக்ரஹாரத்தில் அவர்களின் வீட்டருகே பார்த்தால் புன்னகைப்பார்கள். பின்னாளில் இந்துமுன்னணி உட்பட அமைப்புகளின் தலைவராக இருந்த (மறைந்த) நாராயணன் என் சீனியர். தைரியமாக ஒரு வீட்டில் நுழைந்து “சாமி இருக்காரா? சமையலுக்கு பேசணும்” என்றார். “அது அடுத்த வீடாக்கும்… காபி சாப்பிடறேளா?” என்றாள் மாமி. ஆனால் அந்த வீட்டு அழகிக்கு எங்கள் உத்தி புரிந்து கண்களால் சிரித்தாள்.

அன்றைய அக்ரஹாரம் மிக அமைதியானது. அன்று அக்ரஹாரத்திலுள்ளவர்களின் வாழ்க்கை என்பது பெரும்பாலும் தெருவிலும் திண்ணையிலும்தான். உள்ளே சிறிய அறைகளில் வாழமுடியாது. பகல் முழுக்க திண்ணைகளில் அமர்ந்து பேசிக்கொண்டிருப்பார்கள். கடந்துசெல்லும்போதே தெரியும் மிகச்சாவகாசமான பேச்சு .”அந்தா அவன் இருக்கானே, அதாண்டி மத்தவன், எதுக்குச் சொல்றேன்னா…”

தெரு என்பது அன்றைய டிவி. அதில்தான் நிகழ்ச்சிகள். அதைப்பற்றித்தான் விவாதங்களும். தெருவிலும் விந்தையான கதைமாந்தர் நடமாட்டம் இருக்கும். அங்கேதான் ஒருவன் மூக்கில் வளையமிட்ட இரண்டு கரிய கரடிகளுடன் செல்வதைப் பார்த்தேன். சின்னப்பிள்ளைகள் படுக்கையில் மூச்சா பெய்தால் அந்தக் கரடியின் அனுக்ரகத்தால் சரியாகப்போய்விடுமாம். கரடியே நடுத்தெருவில் பச்சையாகவும் நெடியாகவும் மூச்சா பெய்ததைக் கண்டேன்.

“நம்ம ஊருக்கெல்லாம் இவனுக வாறதில்லைடே” என்று அந்தோணி சொன்னான். “நம்ம ஊரிலே நம்ம பாகுலேயன்பிள்ளை இருக்காருல்லா?” என்று செல்வராஜ் சொல்ல நான் சிரித்தேன். எனக்கு என் அப்பாவை எப்படி கேலிசெய்தாலும் பிடிக்கும். கழைக்கூத்தாடிகள், குறவஞ்சிகள் என எல்லாருக்குமே அக்ரஹாரம் மிக வசதியானது. அரைகிலோமீட்டர் நடையில் நூறுபேரை பார்த்துவிடலாமே. எங்களூருக்கு அந்தவகையானவர்கள் அதிகம் வருவதில்லை. ஒவ்வொரு ஊரும் சுயமான பெரிய தோட்டத்திற்குள் அமைந்திருக்கும். நாயர் அம்மச்சிகள் ஓய்வாக அமர்ந்திருப்பதனால் விரிவாக பேரமும் பேசுவார்கள்.

அக்ரஹாரத்தில் எல்லாரையும் மாமிகளுக்கு தெரியும் என்று தோன்றும். “ஏய் முத்துமாரி, வாழைப்பூ என்னடீ வெலே?” என்று கேட்டபின் ஒரு மாமி நாலைந்து நாட்களுக்கு அப்பக்கமாக நடமாடிய  என்னிடம் “நீ எந்தூருப்பா? பயனோனியர்லே படிக்கிறியா? நம்ம லக்ஷ்மிய தெரியுமோ?” என்று கேட்டுவிட்டாள். நான் பொய்களை யோசித்துப் பதறுவதற்குள் “இவா அப்பா கல்யாண சமையல் பண்றார். சின்ன அளவிலே கூட பண்ணுவார். உனக்கு பார்ட்டி ஏதாவது தெரிஞ்சா சொல்றையா?” என்றுகேட்டு உள்ளே சென்றாள். நான் புன்னகைசெய்தேன்.

இன்று அக்ரஹாரத்தில் சிமிண்ட் சாலை போட்டுவிட்டார்கள். ஓரிரு வீடுகள் மட்டும் பழைய ஓட்டுக்கூரையுடன், அக்ரஹார வீடுகளுக்கே உரிய சுரங்கப்பாதை போன்ற கட்டுமான விசித்திரத்துடன், வாசலில் பொடிக்கோலத்துடன் , மறு எல்லையில் ஆடும் வாழையிலைகளுடன், நின்றிருக்கின்றன. அனேகமாக தினம் இருமுறை அக்ரஹாரம் வழியாகத்தான் நடை செல்கிறேன். எனக்குத்தெரிந்த எந்த முகமும் அங்கே இப்போது இல்லை- ஒரே ஒரு ஆத்மா தவிர. என் அக்காவின் கணவர் மறைந்த கோபாலகிருஷ்ணன் அவர்களின் நண்பரின் அப்பா. நாற்பதாண்டுகளுக்கு முன்னரே கிழவர். அதே இல்லத்தில் அதே திண்ணையில் அதே வேட்டியுடன் அதே முறைப்புடன் அமர்ந்திருக்கிறார். காலம் மாறியது அவருக்கு ‘துண்டாக’ பிடிக்கவில்லை. இப்போதும் என்னை முறைத்தார். நாற்பதாண்டுகளுக்கு முன்பு லட்சுமியை வேடிக்கை பார்க்க வந்தபோதும் அப்படித்தான் முறைத்தார்.

அந்த மாதிரி ஆத்மாக்கள் எந்த பழைய இடத்திலும் இருக்கும். சென்றகாலத்தில் இருந்து இந்தக் காலகட்டத்திற்கு வந்து நீடிக்கும். காலம் உறைகுத்துவது என்று தோன்றுகிறது. இல்லையேல் எப்படி சமகாலத்தை இறந்த காலத்துடன் தொடர்புகொள்ளச் செய்ய முடியும்? என் நண்பரும் மறைந்த கேரள வரலாற்றறிஞருமான எச்.சிவசங்கரன் நாயர் ஒருமுறை சொன்னார். அவர் ஒரு கட்டு மிகப்பழைய நூல்களை வைத்திருக்கிறார். அதைப்படிக்கும் மனமகிழ்ச்சி புதிய நூல்களால் வருவதில்லை. ஆகவே புதிய நூல்களை அந்த பழைய நூல்களின் அருகே வைத்துவிடுவார். ராமபாணப்பூச்சி அங்கிருந்து இங்கே வந்து ஓட்டைபோட்டுவிடும். அதன்பின் புதியபுத்தகத்தையும் மனநிறைவாக வாசிக்கலாம்.

அக்ரஹார வாழ்க்கை என்பது தனித்தனி வீடுகளில் ஒரே குடும்பமாக வாழ்வது. சொல்லப்போனால் தனித்தனி வீடு கூட இல்லை, ஒரே நீளமான வீடுகளின் அல்வாப் பகுப்புகள்தான். இன்று வீடுகள் ஒன்றாக இருந்தாலும் அவரவர் அறைகளுக்குள் அவரவர் ஒண்டிக்கொண்டு வாழ்கிறார்கள். டிவி வந்ததுமே தெரு முக்கியத்துவம் இழந்துவிட்டது. தெருவம்புகள் அனேகமாக இல்லை. டிவி வம்புகளுக்கே நேரம்போதவில்லை. இருபதாண்டுகளுக்கு முன்புகூட அக்ரஹாரத்தின் நடுவிலிருந்த பெரிய வீடு ஒரு சமூகக்கூடமாக இருந்தது. ‘பூணல்’ ‘வரலட்சுமி பூஜை’ உட்பட ஏதேனும் நிகழும். ராமநவமி, சீதா கல்யாணம், பாண்டுரங்க பஜனை என கூட்டான அபஸ்வரம் காதில் விழும்…. மாதம் இரண்டுநாள் ‘சத்யை’ உண்டு. இப்போது அது பாழடைந்து பூட்டப்பட்டுள்ளது. அதற்கு முன் கொஞ்சநாள் கணியாகுளம் பஞ்சாயத்து அலுவலகமாக இருந்தது.

அக்ரஹாரத்தின் பின்பக்கம் ஒரு நல்ல குளம் இருந்தது. மேற்கு எல்லையிலுள்ள வேணுகோபாலசாமி கோயிலுக்குச் சொந்தமான குளம். நாற்பதாண்டுகளுக்கு முன் நான் அங்கே நிறையவே குளித்திருக்கிறேன். இப்போது பார்வதிபுரம்’ஜங்ஷனின்’ எல்லா சாக்கடையையும் அங்கே திறந்துவிடுகிறார்கள். குப்பைகளை கொட்டுகிறார்கள். ஐயர்கள் வேலிகட்டி, சுவர் கட்டி எல்லாம் பார்த்தபின் கைவிட்டுவிட்டனர். ஆனாலும் பிடிவாதமாக சிலர் குளிக்கிறார்கள். ஜானகிராமன் ஒரு கதையில் நூறாண்டுகளுக்குமுன்னரே கும்பகோணம் குளம் அப்படி சாக்கடைக்கரைசலாக இருந்ததை சொல்லியிருப்பதை அண்மையில் வாசித்தேன். (கும்பகோணம் கதைகள். தொகுப்பு ராணி திலக்)

இன்னமும் அக்ரஹாரத்தில் வசிப்போர் பெரும்பாலானவர்கள் பிராமணர்கள்தான். இப்போதும் அங்கே மீன்விற்பனையாளர் செல்வதில்லை. இப்போதும் தெருவில் அங்கே மட்டும் விந்தையான விற்பனையாளர்கள் தென்படுகிறார்கள். நேற்று ஒருவன் “தாமரைத்தண்டேய்” என்று கூவிக்கொண்டிருந்தான். விசாரித்தேன். தாமரைத்தண்டேதான். முருங்கைக்காய் போல சாம்பாரில் போடலாம், இளமூங்கில்போல சுவையானது. பக்கவாட்டில் கோணலாக வெட்டி உலரவைத்து எண்ணையில் பொரிக்கலாம்.ஐயர்களுக்கு சுவை பிடிக்கும், கூடவே குற்றவுணர்ச்சியும் உண்டு. புலனுணர்வுகளை கடந்தாகவேண்டுமே. “வாயுகோபத்துக்கு நல்லதாக்கும்” என்று ஒருவர் சொன்னார். அந்தக்காலத்தில் நான் என் நண்பர் ஹரிஹரன் வீட்டுக்குச் சென்றால் அவன் அப்பா நாராயணையர் இப்படித்தான் தின்ன வாழைப்பழம் தருவார். அதை உரிக்கையில் “காலம்பற சுகமாட்டு பேதி போகும், கேட்டையா?” என்று சொல்லி வைப்பார்.

பார்வதிபுரம் அக்ரஹாரம் பலபெருமைகள் கொண்டது. அதில் முக்கியமானதாக எனக்குப்படுவது டி.ஏ.கோபிநாத ராவ் பத்தாண்டுகளுக்கு மேல் இங்கே தங்கியிருந்தார் என்பது. அவர் திருவிதாங்கூர் அரசின் தொல்லியல்துறை இயக்குநர். அரசர் அவருக்கு ஓர் உதவியாளரையும், ஒரு ஜீப்பையும் அளித்தார். அவர் தமிழகம், கேரளம் முழுக்கச் சுற்றி இந்திய சிற்பவியல் பற்றிய தொடக்ககால நூல் ஒன்றை எழுதினார். இன்றும் அது ஒரு ‘கிளாஸிக்’ ஆகக் கருதப்படுகிறது. (Elements Of Hindu Iconography )

பார்வதிபுரம் அக்ரஹாரம் வழியாக இன்று வந்துகொண்டிருக்கும்போது கொன்றை பூத்திருப்பதைக் கண்டேன். சரக்கொன்றை இப்போது கன்யாகுமரி மாவட்டத்தில் பல இடங்களில் பூக்க ஆரம்பித்துவிட்டிருக்கிறது. கோடை இந்த ஆண்டு கடுமையாக இருக்கும் என்பதற்கும், ஜூனில் மழை கனமாக இருக்கலாம் என்பதற்குமான சான்று அது என்று வழக்கம்போல கருப்பட்டிக் காபிக்கடையில் ஒருவர் சொன்னார்.  கோடை ஏற்கனவே வந்துவிட்டது. எங்குபார்த்தாலும் மாம்பூ வாசனை. காலையில் குயில்களின் குரல்கள் (எல்லாம் ஒட்டுமொத்தமாகச் சேர்ந்தால் எல்கேஜி குழந்தைகளின் இசைக்கூச்சல்). சந்தையடிகளில் பலா, மாங்காய் ஆகியவற்றுடன் அயனிப்பழமும் காணக்கிடைக்கிறது.

நூறு பவுன் நகைபோட்ட கேரளத்து மணப்பெண் போல கொன்றை சரம் சரமாகத் தொங்கவிட்டுக்கொண்டு நின்றிருந்தது. கூடவே ‘தந்தைப்படி’ போல தென்னைமரமும். மிகையலங்காரம் பற்றி நவீனத்துவ ஆத்மாக்களுக்கு எப்போதுமே ‘பராதி’ உண்டு. அவர்கள் இயற்கையை திருத்தியமைக்க நினைப்பவர்கள். விட்டால் அவர்கள் வேளிமலையையே செதுக்கி சதுரமோ செவ்வகமோ ஆக்கி ‘வடிவ ஒழுங்குக்கு’ கொண்டுவந்துவிடுவார்கள்.

கொன்றையை பார்த்தபடி நின்றிருந்தேன். ஒரு பருவத்திற்காக இத்தனை அலங்காரம் செய்துகொண்டு காத்திருப்பதென்பது ஓர் அரிய விஷயம்தான். கொன்றைக்குள் இருந்து பொன் வெளியே வருகிறது. அதன் வேர்களில் கனவென உறைந்திருந்த ஒளி. நான் கோவிட் தொற்றுக் காலத்தை எண்ணிக்கொண்டேன். அன்றைய சூழலில் சட்டென்று பொன்பொலிந்த கொன்றை எனக்களித்த நம்பிக்கையை, கனவை.

கணிக்கொன்றை பொற்கொன்றை
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on April 13, 2025 11:35
No comments have been added yet.


Jeyamohan's Blog

Jeyamohan
Jeyamohan isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow Jeyamohan's blog with rss.