மகத்தான வழி- கடிதம்
அண்மையில் ஒரு நண்பருடன் உரையாடல். ‘விஷ்ணுபுரம், கொற்றவை, வெண்முரசு எல்லாம் படிக்கவே முடியல்லை.” என்றார்
“ஏன்?” என்றேன்.
“நெறைய தகவல்கள். ஏகப்பட்ட உணர்ச்சிகள். உச்சநிலைகள் வந்திட்டே இருக்கு. கவித்துவமான வரிகளாகவே இருக்கு. டூமச்னு படுது….சுத்தமா படிக்க முடியலை. பத்து பக்கத்துக்குமேலே ஓடலை”
“இருக்கலாம். நினைச்சா அத கொஞ்சம் கொஞ்சமா இம்ப்ரூவ் பண்ணிக்கலாம்… நீங்க கிளாஸிக் லிட்டரேச்சர் கொஞ்சம் படிச்சா போதும்”
”நான் அந்த புக்ஸ் மேலே என்னோட விமர்சனத்தைச் சொல்றேன்”
”என்னங்க இது? உங்க லிமிட்டேஷன்ஸ் எப்டி அந்த புக்கோட குறைபாடா ஆகும்? உங்களுக்கு உள்ள போக முடியலேன்னா அது உங்க பிரச்சினை. அது எப்டி விமர்சனமா சொல்லமுடியும்?”
“வாசகனை தடுக்குதுல்ல?”
“வாசகனை எல்லா படைப்பும் தடுக்கும். தடைய தாண்டுறதுதான் வாசிப்பே”
“இல்ல, எல்லாமே உச்சமா இருக்கு. எல்லா கேரக்டருமே தீவிரமா இருக்கு… விஷ்ணுபுரத்திலே பாதிப்பேரு ’மகா’ங்கிற அடைமொழியோட இருக்காங்க… வெண்முரசிலே எல்லாருமே சூப்பர்மேன் மாதிரி இருக்காங்க”
”ஏன் இருக்கக்கூடாது? மனுஷனோட பிரச்சினைகளை தீவிரமா பேசணுமானா அந்தப்பிரச்சினைகளை தீவிரமா அடைஞ்ச மனுஷங்களைத்தானே எடுத்துக்கிட முடியும்? அகிம்சையைப் பத்திப் பேசணுமானா ஒருபக்கம் காந்தி இன்னொரு பக்கம் ஹிட்லர் வேணும்ல?” என்றேன். “அவரோட வாசகர் ஒருவாட்டி எழுதியிருந்தார். ஒரு நாவலிலே காந்தி, நேரு, ஜின்னா, அம்பேத்கர்,மௌண்ட்பேட்டன், ஐஸனோவர், ஹிட்லர், ஸ்டாலின் எல்லாரும் கதாபாத்திரமா வந்தா அதான் மகாபாரதம்னு… அப்டித்தான் இருக்கும்”
“ஆனால் அது டூமச்சா இருக்கு”
“யாருக்கு? உங்களுக்கு….எனக்கு அப்டி இல்லை. அதைவிடவும் ஹிஸ்டரி பெரிசுன்னு நினைக்கிறேன்”
“ஆனா படிக்கவே முடியலையே”
அதன்பிறகு என்னால் பேச முடியவில்லை. இதுதான் உங்கள் நூல்களை வாசிப்பவர்களில் ஒரு சாராருக்கான பிரச்சினை. அவர்கள் நவீன இலக்கியமாக வாசித்தவை எல்லாமே ‘சாதாரண’ மனிதர்களின் ‘அன்றாட’ பிரச்சினைகள். ‘நம்மைப்போன்ற சாமானியர்களின் கதை’ என்றுதான் பலநாவல்கள் சொல்லப்படுகின்றன. அந்தக் கதாபாத்திரங்களுடன் அவர்கள் தங்களையும் தங்களுக்குத் தெரிந்தவர்களையும் அடையாளம் காணமுடிகிறது. அந்தக் கதைச் சூழலை தாங்கள் அறிந்த கதைச்சூழலுடன் இணைத்துக்கொள்ளவும் முடிகிறது. அந்த நாவல்களையே தாங்கள் அறிந்தவற்றைக்கொண்டு புரிந்துகொள்கிறார்கள்.
இந்த வகையாக நவீன எழுத்துக்குப் பழகிய சாமானிய வாசகர்கள் விஷ்ணுபுரம், வெண்முரசு உள்ளிட்ட படைப்புகளுக்குள் செல்லமுடியவில்லை. அவற்றின் தீவிரமும் விரிவும் அவர்களுக்குப் பயத்தை அளிக்கின்றன. அவற்றுடன் தங்களை பிணைத்துக்கொள்ள முடியவில்லை. வாசித்தாலும்கூட அதையெல்லாம் trivialize செய்துகொள்கிறார்கள்.
இங்கே உள்ள விமர்சகர்களுக்கும்கூட இந்த மாபெரும் படைப்புகளை உள்வாங்கவோ விளக்கவோ முடியவில்லை. அதற்கான சிந்தனைக்கருவிகள் அவர்களிடம் இல்லை. அவர்கள் அறிந்ததெல்லாம் வெறும் அரசியலை நோண்டி எடுப்பதுதான். தமிழுக்கு இந்த படைப்புகள் ‘டூ மச்’ என்பதுதான் என் எண்ணமாகவும் இருந்தது.
ஆனால் அடுத்த தலைமுறை மிக எளிதாக இவற்றை உள்வாங்கும், அதற்கான சிந்தனைகளும் உருவாகும் என எண்ணினேன். அதை மாணவர்களிடம் சொல்லியும் வந்தேன். அஜிதனின் இந்தப்பேட்டியைப் பார்த்தேன். அதில் Macht – might- mahath பற்றி அவர் சொல்லும் இடம், வாக்னரின் உலகுடன் உங்கள் புனைவுலகை ஒப்பிடும் இடம் அத்தனை தெளிவுடன் இருந்தது.
உங்கள் படைப்புகளிலுள்ள greatness அல்லது width ஏன் என்பதற்கான அழகிய விளக்கம். உங்களை அணுகுவதற்கான மிகச்சரியான வழியாக இருந்தது. உங்களை மட்டுமல்ல டால்ஸ்டாய் அல்லது டாஸ்டாயெவ்ஸ்கியை அணுகுவதற்கும் அதுவே சிறந்த வழி. பிறர் திகைப்பது ஏன் என்பதையும் விளக்குவதாக இருந்தது. மிகச்சிறந்த பேட்டி அது. அடுத்த தலைமுறை விரிவான உண்மையான வாசிப்பும், கூட்மையான புரிதலும் கொண்டு வந்துவிட்டது.
வாழ்த்துக்கள்
மணி
Jeyamohan's Blog
- Jeyamohan's profile
- 842 followers


