வேம்பார் மணிவண்ணனின் சேகரிப்புகள்.
ஒருமுறை கமல்ஹாசனிடம் பேசிக்கொண்டிருக்கையில் அவர் சொன்னார். “எப்பவோ ரெண்டாயிரம் வருசம் முன்னாடி சங்கப்பாட்டுல பலதும் அழிஞ்சுபோச்சுன்னு சொல்லி வருத்தப்படுறாங்க. நம்ம கண் முன்னாலே எத்தனையோ சினிமாக்கள் அழிஞ்சுபோச்சு. அதைப்பத்தின பிரக்ஞையே நம்ம கிட்ட இல்லை. நான் நடிச்ச படங்களே பல படங்களை இனிமே திரும்ப பாக்க முடியாது… பல பெரிய டைரக்டர்ஸ் எடுத்த படங்களுக்கு எந்த ரெக்கார்டும் இல்லை. ஃபிலிம்நியூஸ் ஆனந்தன் அப்டீன்னு ஒருத்தர் இருந்ததனாலே படங்களோட பெயராவது மிஞ்சியிருக்கு”
நான் உண்மையில் ஆச்சரியப்பட்டேன். அப்படி படங்கள் முழுமையாக மறைந்துவிடும் என நான் எண்ணியதில்லை. “சர்க்கார் டாக்குமெண்ட்ஸ்கூட இல்லியா” என்று அசட்டுத்தனமாகக் கேட்டேன்.
“சர்க்கார்லே அவங்க டாக்குமெண்டே ஒழுங்கா இருக்காது. அப்றமில்ல சினிமா டாக்குமெண்ட்…” என்றார். ”பூனா ஃபிலிம் ஆர்கைவ்ஸ்லே பி.கே.நாயர் அவரோட தனி முயற்சியாலே ஊமைப்படங்களை எல்லாம் சேகரிச்சு வைச்சார். ஆனா அவருக்குக்கூட ஒரு செலக்ஷன் இருந்தது. அவருக்கு ஆர்ட் ஃபிலிம் அழிஞ்சிரக்கூடாதுன்னுதான் அக்கறை. அதைக்கூட இப்ப இருக்கிற முட்டாள்கள் அழியவிட்டுட்டாங்க…நான் என்ன சொல்றேன்னா, எல்லா ஃபிலிமுமே முக்கியம். ஒரு ரிசர்ச் பண்றவனுக்கு எல்லாமே டாக்குமெண்ட்ஸ்தான்..சோஷியல் டாகுமென்ட்ஸ், ஆர்ட் டாக்குமெண்ட்ஸ் அதெல்லாம்…ஒரு காலகட்டத்தையே காட்டுறதிலே சினிமா மாதிரி இன்னொரு நேரடிப் பதிவு இல்லை”
பின்னர் நான் அறிந்தேன். பி.கே.நாயர் சேர்த்துவைத்த சினிமா சேகரிப்புகள் அழியவிடப்பட்டன. அவற்றை டிஜிட்டலைஸ் செய்ய பணம் ஒதுக்கப்படவில்லை, அவற்றை அழியாமல் காப்பதற்குரிய பணிகளைச் செய்யும் ஊழியர்களும் இடமாற்றம் செய்யப்பட்டனர். பாரதீய ஜனதா அரசு அந்நிறுவனத்திற்குத் தலைவராக நியமித்தவர் கஜேந்திர சௌகான் என்ற ஆசாமி. ஒரு நாலாந்தர டிவி நடிகர், மகாபாரதம் தொடரில் யுதிஷ்டிஷரனாக நடித்தவர். பாரதிய ஜனதாவுக்காக தேர்தல் பிரச்சாரம் செய்தமைக்காக அளிக்கப்பட்ட பரிசு அது. பாரதிய ஜனதா பார்வையில் அது ஒரு வருமானமற்ற ’சோட்டா’ பதவி.
பின்னர் தன் All We Imagine As Light சினிமாவுக்காக கேன்ஸ் விருது பெற்ற பாயல் கபாடியா உட்பட மாணவர்கள் ஆவணக்காப்பகத்தை அழியவிடலாகாது என்று போராடினர். பாயல் கல்லூரியில் இருந்து நீக்கப்பட்டார். அவர் ஒரு கிரிமினல் என்றார் கஜேந்திர சௌகான். அவர் கேன்ஸ் படவிழாவில் விருதுபெற்றபோது அதே கஜேந்திர சௌகான் சொன்னார், “அவரை உருவாக்கியது நான் தலைமையேற்ற நிறுவனம்” என்று.
கஜேந்திர சௌகான் பி.கே.நாயர் வாழ்நாள் முழுக்க அலைந்து சேகரித்த கலைச்செல்வங்கள் அழியவிடப்பட்டது பற்றிய கேள்விக்குச் சொன்ன பதில் ‘கிளாஸிக்’ ரகம். “அரே ஃபையா, அதெல்லாம் பழைய சினிமா…இப்ப யார் அதெல்லாம் பாக்கிறாங்க? எவ்ளவு நல்ல புதிய படங்கள் பாலிவுட்லே வந்துட்டு இருக்கு?” (ஆனால் இதை கொஞ்சம் முன்னால் வடிவேலு “நல்லவேளை, புதிசோன்னு நினைச்சேன்” என்று சொல்லி வழிகாட்டியிருந்தார்)
வேம்பார் மணிவண்ணனை பலர் அறிந்திருக்கலாம், மேலும் பலருக்கு தெரியாமலும் இருக்கலாம். யூ.டியூபில் பழையபாடல் கேட்பவர்கள் அறியாமலிருப்பது அரிது. அவருடைய பழையபாடல் தொகுப்புகள் அபாரமானவை. 1940 முதல் வெளிவந்த பாடல்கள் அவருடைய யூடியூப் தொகுப்பில் உள்ளன. அவை ஒரு பெரிய காலப்பெட்டகம்போல.
யூடியூப் சானல் என்பது இன்றைக்கு ஒரு மாபெரும் வெட்டிச்சுரங்கம். நின்றது தின்றது எல்லாவற்றையும் காணொளியாக எடுத்துப் போட்டுக்கொண்டிருக்கிறார்கள். ஒரு காணொளி எந்த அளவுக்கு எந்த மூளையுழைப்பையும் கோராத அளவுக்கு வெட்டியானதாக இருக்கிறதோ அந்த அளவுக்கு அது புகழ்பெறுகிறது. சினிமாவம்புகள், வசைபாடல்கள், அற்பச்செயல்கள் ஆகியவற்றுக்கே பெருந்திரளாக மக்கள் செல்கிறார்கள்.
நடுவே ஏதேனும் ஒரு களத்தில் தனக்கான தேடலுடனும் பங்களிப்புடனும் செயல்பட்டுக்கொண்டே இருப்பவர்களும் உண்டு. அவர்களில் ஒருவர் வேம்பார் மணிவண்ணன். என்னைப்பொறுத்தவரை அவருடைய இந்தச் சேகரிப்பு ஒருவகையான இணைய ஆவணப்படுத்தல்தான்.
வேம்பார் மணிவண்ணன் யூடியூப்Jeyamohan's Blog
- Jeyamohan's profile
- 842 followers

