அ. மார்க்ஸின் குரல்

சென்ற மார்ச் 23 அன்று காலை 10 மணிக்கு தொலைபேசியில் ஓர் அழைப்பு. “நான் மார்க்ஸ் பேசுகிறேன்’

எனக்கு எவர் என தெரியவில்லை. எழுத்தாளர் கார்ல் மார்ஸா? அவர் குரல் அல்ல அது. அது மென்மையானது. என்னுடன் பணியாற்றிய நண்பர் மார்க்ஸா? ஆனால் அவர் தொடர்பிலேயே இல்லை.

“யார்? யார்?” என்று பலமுறை கேட்டேன்.

“நீங்க ஜெயமோகன் தானே?”

“ஆமா”ம

“நான் மார்க்ஸ், அ.மார்க்ஸ்”

“சார்!” என எழுந்து நின்றுவிட்டேன். அப்படி ஓர் அழைப்பை நான் எதிர்பார்க்கவில்லை. நான் அ.மார்க்ஸ் அவர்களிடம் மிகக்குறைவாகவே பேசியிருக்கிறேன். அவ்வப்போது நிகழும் இலக்கிய விழாக்களில் வழக்கமான மரியாதை வார்த்தைகள் மட்டும்.

“நீங்க என்னைப்பற்றி எழுதியிருப்பதை வாசிச்சேன்… மகிழ்ச்சியா இருந்தது. அதான் சும்மா கூப்பிட்டேன்”

“நல்லா இருக்கீங்களா சார்?”

“அவ்ளவு நல்லா இல்லை. உடம்புப் பிரச்சினைகள் இருக்கு. அதிகமா வெளியே போறதில்லை. திடீர்னு இந்த குறிப்பைப் பாத்தேன். அதான் கூப்பிட்டேன்”

மேலும் சில பொதுவான உரையாடல். நான் ஃபோனை அணைத்ததுமே கீழே சென்று அருண்மொழியிடம் “அருணா, இப்ப அ.மார்க்ஸ் என்னை கூப்பிட்டார்” என்றேன்.

“அப்டியா?” என்றாள். “எதுக்கு?”

நான் சொன்னதும் முகம் மலர்ந்து “அவரு எங்கூர்க்காரர்” என்றாள். அருண்மொழிக்கு விரிந்த தஞ்சை சொந்த நிலம். அங்குள்ள எல்லா அறிவுஜீவிகளும் தமிழகத்தை தாங்கும் தூண்கள்.

“எங்க அப்பாவுக்குக் கூட அவரைத் தெரியும். அவரோட அப்பா ஒரு ரெவலூஷனரி” என்றாள்.

அருண்மொழியின் அப்பாவுக்கு அ.மார்க்ஸை பிடிக்கும். அருண்மொழியின் அப்பா திராவிட இயக்க ஆதரவாளர், பெரியார் பிறந்தநாளை சுண்டல் வினியோகம் செய்து கொண்டாடுபவர். பரமகஞ்சர், ஆனால் அண்மைக்காலமாக அவரது மகன் மறைந்தபின் தன் சொத்துக்களை வெவ்வேறு கல்விப்பணிகளுக்கு பெரியார் பெயரால் அன்பளிப்பாக அளித்துக்கொண்டிருக்கிறார். பல லட்சம் அளித்துவிட்டார்.  “நாம என்ன கோயிலுக்கா குடுக்கமுடியும்?” என்றார்.  சென்ற சில ஆண்டுகளாக அவருக்கு கண்பார்வை முழுமையாகவே போய்விட்டது. முதுமையின் சிக்கல்கள்.

என் நாளே ஒளிகொண்டதாக ஆகிவிட்டது. நண்பர்களிடம் அ.மார்க்ஸ் என்னிடம் பேசியதைச் சொன்னேன்.

ஒருவர் ஐயத்துடன் “அவரு உங்களை கடுமையா கண்டிச்சிருக்காரு சார்”

“ஆமா, அவருக்கு ஒரு பலமான ஐடியாலஜி இருக்கு” என்றேன்.

“ரொம்ப கடுமையா…” என்றார்

“பொதுவா ஐடியாலஜியிலே நம்பிக்கை கொண்டவங்க அப்டித்தான். அவரு நாற்பதாண்டுகள் தமிழ்நாட்டோட மனசாட்சியா இருந்திருக்கார். எங்க எந்த பிரச்சினைன்னாலும் போயி நின்னிருக்கார். பலமான நம்பிக்கைகள் இல்லாமல் அப்டி செய்யமுடியாது” என்றேன்.

“அப்ப அவர் சொன்ன கருத்துக்கள் சரீன்னு நினைக்கிறீங்களா?”

“அப்டி இருக்கணும்னு இல்லை. நான் வேதாந்தி. நாராயணகுருவும் நடராஜகுருவும் நித்ய சைதன்ய யதியும் முன்வைச்ச தூய அத்வைதம் என்னோட வழி. அது ஐடியாலஜி இல்லை, பிலாசபி கூட இல்லை. ஒருவகையான காஸ்மிக் விஷன் மட்டும்தான். அதன்படி ஒரு அப்சல்யூட் இருக்கு, அதை எங்கும் எப்பவும் உணரமுடியும். அந்த அப்சல்யூட் தவிர வேற எல்லாமே ரிலேட்டிவ்தான். அது அப்சல்யூட்டா இருக்கிறதனாலேயே காலம், வெளி எல்லாமே ரிலேட்டிவ்தான். இருக்கு, இல்லேன்னா இல்லை…. அப்ப சாதாரண கொள்கைகள், நம்பிக்கைகள், நிலைபாடுகள் எல்லாம் எப்படி மாறாத உண்மைகளா இருக்க முடியும்? நம்ம அனுபவ மண்டலத்திலே, நம்ம அறிவு எல்லைக்குள்ளே சிலது நம்மளோட உண்மை. அதை நாம் நம்பி முன்னாலே போகிறோம்… அந்த எல்லைக்கு அப்பால், நம்ம அறிவுக்கு அப்பால் இன்னும் எத்தனையோ உண்மைகள் இருக்கலாம். அதை மத்தவங்க சொல்லலாம். ஒரு அத்வைதிக்கு ராமானுஜர், மத்வர், நிம்பார்க்கர் சொல்றதெல்லாம் மாற்றுத்தரப்பு மட்டும்தான், பொய்யோ பிழையோ இல்லை.  அவங்க அத்வைதத்தை ரொம்பக் கடுமையா மறுத்துச் சொல்றாங்க. சங்கரை வசைபாடுறதும் உண்டு. அது அவங்களோட உண்மை, அவ்ளவுதான்”

அரைமணிநேரம் பேசியும் நண்பரை சமாதானம் செய்ய முடியவில்லை. அவர் சமூகவலைத்தள அறிவுஜீவிகளில் ஒருவர். தீவிரமான காங்கிரஸ்கார். அதைவிட முக்கியமாக அதிபயங்கர பெரியார் எதிர்ப்பாளர்.

அ.மார்க்ஸுக்கு நான் ஒரு நூலை சமர்ப்பணம் செய்திருக்கிறேன், காந்தி பற்றிய நூல். அப்போதே பலர் அந்தச் செயலை கண்டு ‘அதிர்ச்சி’ அடைந்து எழுதியுள்ளனர். அப்போதே நான் விளக்கியிருக்கிறேன். எனக்கு அ.மார்க்ஸுடன் கருத்துவேறுபாடுகள் இருப்பதெல்லாம் முதன்மையாக இலக்கிய அழகியல் சார்ந்துதான். அவருடையது நடைமுறை அரசியல் சார்ந்த அணுகுமுறை, இரும்பாலான சல்லடை போன்றது அது. என் அழகியல் அதற்கு ஒவ்வாதது. நான் இலக்கியத்தை அணுகும் முறைவேறு.

அ. மார்க்ஸை நான் கேள்விப்படுவது 1986 ல், சுந்தர ராமசாமி வழியாக என்றால் பலருக்கு வியப்பாக இருக்கலாம். சுட்டி என்னும் கையளவுப் பத்திரிகை ஒன்று அப்போது வெளிவந்துகொண்டிருந்தது. மிகச்சிறிய இதழ். அதில் அ. மார்க்ஸ் கேள்விபதில்கள் எழுதிக்கொண்டிருந்தார். தஞ்சையில் பணியாற்றிய அவரை 1986 வாக்கில் அரசு இடமாற்றம் செய்தது. அதைப்பற்றிய செய்தியை வாசித்து இவர் யார் என்று நான் சுந்தர ராமசாமியிடம் கேட்டேன்.

“மார்க்ஸிசத்திலே மையப்பாதையிலே இருந்து விலகிப்போறவங்க ஐரோப்பாவிலே நெறையபேர் இருக்காங்க… நியோமார்க்ஸிசம்னு சொல்லலாம். நமக்கு அப்டி சிலபேருதான். ஏற்கனவே எஸ்.என்.நாகராசன், ஞானி, எஸ்.வி.ராஜதுரைன்னு ஒரு பட்டியல் இருக்கு. இப்ப ராஜேந்திரசோழன், இவருன்னு புதிய ஒரு அலை. ஆனால் இவங்க ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு வழியிலே போறாங்க. இவங்களுக்குள்ள பொதுவா ஒண்ணுமில்லை. இவரு அனார்க்கிஸம் நோக்கி போறார்னு நினைக்கிறேன்” என்றார் சு.ரா. (இது என் டைரியில் நான் எழுதி வைத்திருக்கும் வரி)

சு.ராவை அ.மார்க்ஸ் கடுமையாக விமர்சனம் செய்துவந்த காலத்தில்கூட சு.ரா. அவர் மேல் மதிப்பு கொண்டிருந்தார். குறிப்பாக அவருடைய உரைநடை சிறப்பானது என்று எண்ணினார். அது நவீனத்துவ அழகியல்வாதிகளின் மனநிலை. ‘கச்சிதமான சொற்றொடர்கள்’ என்பதுதான் அவர்களின் அறுதி இலக்கு.அவர்களை வசைபாடி எழுதினாலும்கூட நல்ல உரைநடை என்பது கொண்டாடப்படவேண்டிய சாதனை!

எனக்கும் அ.மார்க்ஸின் உரைநடை மேல் என்றும் பெரும்பற்று உண்டு. அவர் தமிழகத்தின் மாபெரும் களச்செயல்பாட்டாளர், சுதந்திர இடதுசாரிக்குரல், மனித உரிமைக்கான தரப்பு என்பதில் எனக்கு பெரும் மதிப்புதான். அதில் அவர் ஒரு வரலாற்று ஆளுமையெ. ஆனால் கூடவே அவர் புனைவெழுத்தை முயன்றிருக்கலாம் என்றே இப்போதும் எண்ணுகிறேன். அவருடைய அனுபவச் சித்தரிப்புகள் எல்லாமே பெரிய புனைவெழுத்தாளர்களின் நுண்மொழித்திறன் கொண்டவை. அவருக்கு புனைவெழுத்துமேல் பெரிய மதிப்பு இல்லாமல் போனது இழப்புதான்.

நேற்று, 31 -3-2025அன்று ஒரு நண்பரைச் சந்தித்தேன். அவர் அ.மார்க்ஸின் எழுத்துக்களை தொகுக்கும் பணி ஒன்றை தொடங்குவதாக இருக்கிறார். அ.மார்க்ஸின் கொள்கைத்தரப்பைச் சேர்ந்தவர் அல்ல. அவருடைய வழிசென்றவரே அல்ல. இடதுசாரிப் பார்வை கொண்டவர் என்று மட்டும் சொல்லலாம். ஆனால் அ.மார்க்ஸின் கருத்தியல் பங்களிப்பு, களப்பங்களிப்பு மேல் பெரும் மதிப்பு கொண்டவர்.

உண்மையில் ஒரு சிந்தனையாளன் அவனுடைய எதிர்த்தரப்பால் எப்படி மதிப்பிடப்படுகிறான் என்பதே அவனுடைய மெய்யான இடம் என நான் நினைக்கிறேன். ஆதரவுத்தரப்பால் அல்ல எதிர்த்தரப்பால்தான் அவன் வரலாற்றில் நிலைநிறுத்தப்படுகிறான். தொடர் விவாதங்கள் வழியாக. உலகமெங்கும் அவ்வாறுதான் நிகழ்ந்தது.

சிந்தனையாளர்களில் கணிசமானவர்கள் களச்செயல்பாட்டாளர்கள். அவர்களின் எழுத்துக்களில் பெரும்பகுதி அதைச் சார்ந்தே இருக்கும். எல்லா சிந்தனையாளர்களும்; ஹெகல் மார்க்ஸ், நீட்சே என நாமறிந்த ஐரோப்பிய தத்துவமேதைகள் உட்பட அனைவருமே; கணிசமான பக்கங்கள் கருத்துப்பூசல் (polemics) சார்ந்து மிகுதியாக எழுதியிருப்பார்கள். அத்துடன் சிந்தனையாளர்களுக்கு அவர்களுக்கே உரிய தனிப்பட்ட ‘கிறுக்கு’ பகுதியும் ஒன்று இருக்கும். சம்பந்தமே இல்லாத ஒரு களத்திலும் நிறைய எழுதி வைத்திருப்பார்கள். காந்தி உணவு, மருத்துவம் பற்றி எழுதி குவித்திருப்பது போல.

அந்த மொத்த எழுத்துக்குவியலில் இருந்து காலம் தேர்ந்தெடுக்கும் ஒரு பகுதியே சிந்தனை வரலாற்றில் நீடிக்கிறது. செறிவான, தர்க்கபூர்வமான ஒரு பகுதி. கனவும் இலட்சியவாதமும் கொண்ட இன்னொரு பகுதி. அத்துடன் அழகான சொற்றொடர்கள் மட்டுமேயான ஒரு பகுதியும் வெறும் அழகியலுக்காகவே நீடிக்கிறது. அந்த ‘தேர்வை’ பெரும்பாலும் அச்சிந்தனையாளரின் எதிரிகளே தீர்மானிக்கிறார்கள். அவர்களால்கூட மறுக்கமுடியாத பகுதிகளாக இருப்பவை அவை.

ஆதரவாளர்களுக்கு அந்தச் சிந்தனையாளரின் ஏதேனும் ஒரு பகுதியே போதுமானதாக இருக்கும். சாரம் தேவைப்படாது. ஆனால் எதிர்த்தரப்பும், அடுத்த தலைமுறையும் அவரைச் சாராம்சப்படுத்தியாகவேண்டும். அன்றி அவர்கள் பேசமுடியாது. சென்ற பல ஆண்டுகளில் நான் மார்க்ஸ் பற்றி எழுதியவை எல்லாமே அவரை சாராம்சமாக தொகுத்துக்கொள்வதற்கான முயற்சிகளே.

அ.மார்க்ஸ் விரிந்து பரந்துசெல்லும் ஒரு கருத்துக்களத்தை உருவாக்கியவர். அதில் உள்ள அரசியல்கள், பூசல்கள் ஆகியவற்றைக் கடந்து அவரை தொகுத்துக் கொள்ள வேண்டிய காலம். அதற்கு அடுத்த தலைமுறை இளைஞர்கள் முன்வருவது நிறைவளிக்கிறது. இன்னும் பலகாலம் அவர் விவாதமையமாகவே இருப்பார்.

அ.மார்க்ஸிடம் ஒரு விண்ணப்பம்

குறைத்துரைத்தலின் அழகியல்

அ.மார்க்ஸ்- வாழ்த்துக்கள் அ.மார்க்ஸ் பற்றி… அ.மார்க்ஸ்,காந்தி அ.மார்க்ஸ்,சாரு நிவேதிதா, அழகியல் அ.மார்க்ஸ் பற்றி… அ.மார்க்ஸ்,காந்தி அ.மார்க்ஸ்:கடிதங்கள் அ.மார்க்ஸும் ஜெகேவும் அ.மார்க்ஸின் ஆசி

தேர்தல் கண்காணிப்பு

 

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on April 03, 2025 11:35
No comments have been added yet.


Jeyamohan's Blog

Jeyamohan
Jeyamohan isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow Jeyamohan's blog with rss.