பழைய பாடல் கேட்பவர்கள்
அண்மையில் நண்பர்களுடன் ஓர் உரையாடல். நான் ‘சிங்காரவேலா விளையாட வா ஒரு நல்ல பாட்டு” என்றேன். நண்பர் பரிவுடன் “ஆமா சார். ஆனா சிங்காரவேலனே தேவான்னு லைன்” என்றார்.
நான் “அந்தப்பாட்டு எனக்கு தெரியும், இது வேறபாட்டு” என்றேன். செல்பேசி இல்லா இடம். ஆகவே பாட்டை ஒலிக்கவிட முடியவில்லை. என்னால் பாடி எந்தப் பாட்டையும் நினைவுறுத்த முடியாது. நண்பர் அப்பாட்டை கேட்டதில்லை. அங்கிருந்த எவருமே கேட்டதில்லை. ஆச்சரியமென்னவென்றால் அங்கிருந்த இளம்நண்பர் இருவர் ’சிங்காரவேலனே தேவா’ கூட கேட்டதில்லை.
என்னால் புரிந்துகொள்ள முடிகிறது, அதுதான் உலகத்தியல்பு. அன்றாடம் மிகமிக ஆற்றல்கொண்ட ஒன்று. அது நம்மை முழுமையாகச் சூழ்ந்துகொள்கிறது. இன்றே இங்கில் நிலைநிறுத்துகிறது. அதிலும் இன்றைய ஊடகப்பேரலை நம்மை தூசுபோல அடித்துச் செல்கிறது.நம்மை வெறுமொரு வணிகநுகர்வோர் என வரையறை செய்கிறது இன்றைய முதலீட்டியச் சூழல்.
ஆனால் கொஞ்சம் நுண்ணுணர்வுடையோர் தங்களை விரித்துக்கொண்டே இருப்பார்கள் என நினைக்கிறேன். விரித்தல் பலவகை. இன்றில் மட்டும் நிலைகொள்ளாமை அதில் முதல் படி. நம் பிரக்ஞை எத்தனை பெரிய வெளியில் திகழ்கிறது என்பதே நாம் எவர் என்பதைக் காட்டுகிறது. நூறாண்டில் வாழ்வது பெரிய வாழ்க்கை. ஈராயிரமாண்டில் வாழ்வது மேலும் பெரியவாழ்க்கை.
நான் ஒரு நாளில் வாழும் காலங்களை எண்ணிப்பார்க்கிறேன். மூவாயிரத்தைநூறாண்டு தொன்மையான பிரம்மசூத்திரம். தமிழ் விக்கியின் நூறாண்டு தொன்மையான ஆளுமைகள். தொல்நூல்கள், தொல்சிந்தனைகள். கூடவே இன்றைய அதிநவீன பின்பின்நவீனத்துவச் சிந்தனைகள். பிரெஞ்சு புதுத்தாராளவாதம், நாளைய அறிவியல் பற்றிய சிந்தனைகள்… என் உலகம் எனக்கு நிறைவூட்டும்படிப் பெரிது.
ராஜசேகரா என் மேல் மோடி செய்யலாகுமா
நான் இசைகேட்கும் நண்பர்களிடம் கேட்பேன், என்னென்ன இசை கேட்கிறீர்கள் என. பல ‘இளையராஜா பாட்டு கேப்பேன்’ என்பார்கள். திரும்பத் திரும்ப ஐம்பது அல்லது நூறு பாட்டுக்குள்தான் கேட்டுக்கொண்டே இருப்பார்கள். “எத்தனை வாட்டி வேணும்னாலும் கேக்கலாம்” என்று அதற்கொரு விளக்கமும் சொல்வார்கள். அது ரசனை அல்ல, வெறுமே நினைவை மீட்டுதல்தான். அந்த ஓசை வழியாக பழகிப்போன ஒரு மனநிலையை அடைதல் மட்டுமே.
நல்ல இசைரசிகர்கள் இசையை தேடிக்கொண்டே இருப்பார்கள். யூடியூப் ஒரு இசைக்களஞ்சியம். தேடித்தேடிச் சென்றுகொண்டே இருக்கலாம். உலகம் முழுக்க உள்ள இசைகளைக் கேட்கலாம். புதிய இசைக்காகத் தேடாதவர் இசை கேட்பவர் அல்ல, வெறும் பழக்கத்துக்கு அடிமையானவர் மட்டுமே. ஒருநாளில் அன்றைய பொழுதுக்கென ஒரு புதிய பாடலை கொத்திக்கொள்பவரே நல்ல இசைரசிகர். நான் என்னை இசைரசிகன் என சொல்ல மாட்டேன். ஆனால் தணியாத தாகம் கொண்டவனாக, தொடர்ந்து கண்டுபிடிப்பவனாக இருக்கிறேன்.
தமிழிலேயே பாட்டு கேட்பவர்கள் ஏராளமான பழைய பாடல்களைக் கேட்பதே இல்லை. நான் சுட்டிகொடுக்கும் பாடல்களை பலர் கேட்டிருப்பதில்லை. நடுவயதானவர்கள் “எப்பவோ சிலோன் ரேடியோலே கேட்ட ஞாபகம்” என்பார்கள். ஆனால் அவர்கள்கூட மீண்டும் அப்பாடல்களைக் கேட்பதில்லை. உலகம் முழுக்கவே இவ்வாறுதான் பொதுமனநிலை. ஓடிடி தளங்களில் பத்தாண்டுக்கு முந்தைய படங்களை, செவ்வியல் படங்களைக்கூட, பார்ப்பவர்களின் எண்ணிக்கை ஐந்து சதவீதமே என்று அத்துறை நிபுணர் என்னிடம் சொன்னார்.
பழையபாடல்கள் கேட்க ஒரு மனநிலை தேவை. ஒன்று கொஞ்சமேனும் கர்நாடக இசை செவிக்குப் பழகியிருக்கவேண்டும். ஏனென்றால் கணிசமான பாடல்கள் ராக அமைப்பு- அல்லது ராகபாவம் கொண்டவை. இன்றைய பாடகர்களின் குரல் பழையகாலப் பாடகர்களிடம் இருக்காது. இன்றைய ரசிகர்களுக்கு அவை முதியோர் பாடுவதுபோலத் தோன்றலாம், அன்றைய பாடல்முறை அது. அத்துடன் பழையபாடல்களில் ஒலிப்பதிவு துல்லியமற்றதாக இருக்கும். சூழலிசை திரும்பத் திரும்ப ஆர்மோனியமும் வயலினுமாக இருக்கும். அத்துடன் அவற்றை வெறும் இசையாகவே காணவேண்டும், காட்சிகள் மிகப்பழையவையாக இருக்கும்.
ஆனால் எந்தக்கலையும் கற்பனையில்தான் விரியவேண்டும். இந்த குறைபாடுகளுக்கு அப்பால் பழையபாடல்களில் இரண்டு அரிய அனுபவச்சாத்தியங்கள் உண்டு. ஒன்று, நல்ல பாடல்கள் மிகமிக உள்ளார்ந்து உணர்வுநிலைகொண்டு பாடப்பட்டிருக்கும். மண்மறைந்துபோன ஒரு மேதையின் உள்ளத்தை நம்மால் அந்தக்குரல் வழியாகச் சென்று தொடமுடியும், அது ஓர் அரிய அனுபவம். இரண்டு, இன்று நம்மால் ஊகிக்க மட்டுமே முடியும் ஒரு பழைய பண்பாட்டுச்சூழலை அப்பாடல்கள் வழியாக அடையமுடியும். அது ஒரு காலப்பயணம், ஒரு கனவுப்பயணமும்கூட.
ஆனால் இந்த அனுபவம் அனைவருக்குமானது அல்ல. நுண்ணுணர்வு கொண்டவர்களுக்கு சமகால இசைமேல் பெரும்சலிப்பு சீக்கிரமே உருவாகிவிடுகிறது. காரணம் அது எங்குபார்த்தாலும் ஒலிக்கிறது. சராசரி ரசனைக்காக கட்டமைக்கப்பட்டது அது. ஆகவே அவர்கள் அரிது தேடிச்செல்கிறார்கள். அவர்களுக்கென ஒன்றை கண்டடைய விரும்புகிறார்கள். அத்தகையவர்களே இத்தகைய இசைப்பயணங்களைச் செய்யமுடியும்.
ஆச்சரியம் என்னவென்றால் இந்த நுண்ணுணர்வுக்கு வயது அடையாளம் என ஏதுமில்லை. மிக இளையவர்கள் மிகப் பழைய பாடல்களைத் தேடிச்செல்வதையும், மிக முதியவர்கள் சமகாலத்தில் மூழ்கிக்கிடப்பதையும் தொடர்ச்சியாகக் காணமுடிகிறது.
Jeyamohan's Blog
- Jeyamohan's profile
- 842 followers

