கம்பராமாயணம், வாசிப்பு முடிவு
அன்புள்ள ஜெ,
2021 இல் தொடங்கிய எங்கள் கம்பராமாயண கூட்டு வாசிப்பு இன்று நானும் ஶ்ரீநிவாஸனும் மட்டுமாக நிறைவடைந்தது.
ஒவ்வொரு முறையும் ஊட்டி காவிய முகாம் முடிந்து ஊர் திரும்பியவுடன் தினமும் 10 பாடல்களாவது படிக்கவேண்டும் என்று ஆரம்பிப்போம். சில நாட்களோடு நின்றுவிடும்.
கொரோனா காலத்தில் நீங்கள் ஒருங்கிணைத்த ஜூம் நிகழ்வுகளில் நண்பர்கள் சிலர் சேர்ந்து ராவணன் மந்திராலோசனை முதல் விபீஷணன் அடைக்கலம் வரையான பகுதிகளை நாடகமாக்கினோம். அந்த ஒத்திகைகள் எங்களை பித்துகொள்ள வைத்தன. சுஷில் குமார், ஆனந்த்குமார், ரம்யா, நிக்கிதா, சிங்கப்பூர் கணேஷ், அனங்கன் ஆகியோருடன் சேர்ந்து ஜூமிலேயே தினமும் கம்பனை படிக்கத் தொடங்கினோம். இதுவன்றி கம்பனை முழுதும் படிப்பதுதான் தங்கள் லட்சியம் என்று கூறி இதில் இணைந்தவர்களும் ஒரே அமர்வுடன் தலைமறைவானவர்களும் பலர் உண்டு
நிக்கிதா விடாமல் எல்லா பாடல்களையும் வாசித்து தன் உச்சரிப்பை சீர்செய்வார். ஆனந்த்குமாரின் உள்ளிருக்கும் கவிஞர் அவ்வப்போது வெளிவருவார். சுஷில் குமார் கம்பன் நாஞ்சில் நாட்டான்தான் என்று நிறுவ முயல்வார். ரம்யா ராமனை பிரிந்த சீதையின் மூச்சுபோல வருவதும் போவதுமாக இருப்பார். கணேஷ் கம்பனுக்கு சிரக்கம்பம் கரக்கம்பம் செய்துகொண்டிருப்பார். அனங்கன் ‘அது அப்படித்தானே இருக்கமுடியும்‘ என்று கம்பனுக்கு அங்கீகாரம் அளிப்பார்.
வாசிப்புடன் role play வும் இருக்கும். பரதனாக, குகனாக, தசரதனாக, கைகேயியாக, ஏன் தாடகையாக கூட மாறுவோம். சூர்ப்பனகைக்கு ரசிகர் மன்றம் அமைக்கவும் ராவணனை உதாசீனம் செய்யும் சீதைக்கு எதிராக கண்டன ஊர்வலம் நடத்தவும் கூட ஏற்பாடுகள் நடந்தன.
தினமும் பங்கேற்க இயலாத நிலையில் ஒவ்வொருவராக குறைந்து சுந்தர காண்டம் தொடங்கியபோது ஜூம் சந்திப்பு இல்லாமலே ஆகியது. நாங்கள் இருவர் மட்டுமே எஞ்சிய நிலையில் இனி நிறுத்துவதில்லை என்று நாங்கள் மட்டுமாக தொடர்ந்து இன்று இனிதே நிறைவு செய்தோம்.
இந்த செயலுக்கு என்றும்போல காரணமாக இருந்த உங்களுக்கும், பாதி வரை உடன் பயணித்து முடித்தே ஆகவேண்டும் என்ற இலக்கு நோக்கி எங்களை செலுத்திய நண்பர்கள் அனைவருக்கும் நன்றிகள் பல.
அன்புடன்,
சுதா
*
அன்புள்ள சுதா
தனித்தோ சேர்ந்தோ கம்பராமாயணத்தை முழுமையாக வாசித்து முடிப்பதென்பது ஒரு அருந்தவம்தான். ஒரு தலைமுறையில் ஒரு சிலரே அவ்வாறு வாசிக்கிறார்கள். ஆனால் அவ்வாறு வாசிப்பவர் சிலராவது இருந்துகொண்டே இருக்கவேண்டும். இல்லையேல் செவ்வியல் வாழாது. வாழ்த்துக்கள்
ஜெ
Jeyamohan's Blog
- Jeyamohan's profile
- 842 followers

