நாயகி: பெண் எழுத்தாளர்கள்.
அண்மையில் நிகழ்ந்த முக்கியமான இலக்கிய நிகழ்வு நாயகி என்ற தலைப்பில் முந்தைய தலைமுறைப் பெண் எழுத்தாளர்களைப் பற்றி சென்னையில் நிகழ்த்தப்பட்ட கருத்தரங்கு. இன்று உலகம் முழுக்கவே இது ஒரு ‘டிரெண்ட்’ ஆகியுள்ளது. சென்ற தலைமுறைப் பெண் எழுத்தாளர்கள் புதிய கவனத்துடன் மீட்டு எடுக்கப்பட்டு வருகிறார்கள். அன்றைய விமர்சன – வாசிப்பு உலகம் அவர்களுக்கு நீதிசெய்ததா என்னும் வினா எழுந்து வருகிறது.
இந்த வினாவுடன் ஐரோப்பிய பெண் இலக்கியமேதைகளைப் பற்றி சைதன்யா நீலி இணைய இதழில் எழுதிய தொடர்கட்டுரைகள் செறிவானவை, நூலாக வரவுள்ளன. சைதன்யா இந்த கோணத்தில் மிக விரிவான வாசிப்பு கொண்டவள்.(நீலி சைதன்யா கட்டுரைகள் ) சைதன்யா இந்நோக்கத்துடன் மானஸா பதிப்பகம் என்னும் ஆங்கிலப் பதிப்பகத்தையும் தொடங்கவிருக்கிறாள். (மானஸா பதிப்பகம் )
நாயகி என்னும் இந்த முயற்சி அடுத்த தலைமுறை வாசகர்களிடம் இந்தப் பெண் எழுத்தாளர்களைக் கொண்டுசென்று சேர்க்கும் என நினைக்கிறேன். அவ்வகையில் இந்த அரங்கு மிக முக்கியமான ஒரு முன்னெடுப்பு. இத்தகைய ஓர் அரங்கை உருவாக்குவது இன்றைய சூழலில் எளிதல்ல. படித்துவிட்டு பேசுவதற்கு ஆள் அமைவதில்லை. பொறுமை, விடாமுயற்சி, நம்பிக்கையுடன் மட்டுமே இதை நிகழ்த்தமுடியும். எதிர்காலத்தில் இந்த அரங்கு முக்கியமான ஒரு தொடக்கமாகக் குறிப்பிடப்படும். அமைப்பாளர்களுக்கு வாழ்த்துகள்.
முந்தைய தலைமுறைப் பெண் எழுத்தாளர்களை இன்று வாசிப்பதில் பல இடர்கள் உள்ளன. அவர்கள் எழுதிய காலகட்டத்தின் பல பிரச்சினைகள் இன்று பொருளிழந்துவிட்டன. உதாரணமாக, படிக்கும் உரிமை, வெளியே செல்லும் உரிமைக்காகவே பெண்கள் போராடியிருக்கிறார்கள். ஆனால் இன்றைய இலக்கியவாசகர் அந்த பேசுபொருளுக்காக அவற்றை வாசிக்கக்கூடாது. அந்த சூழலில் கதைமாந்தரின் அகம் வெளிப்படும் விதத்தை அவர்கள் எப்படி எழுதியிருக்கிறார்கள் என்ற கோணத்தில் நோக்கினால் அவர்களின் இலக்கியத் தகைமை வெளிப்படும்.
இது சார்ந்து நான் விரிவாக சில கட்டுரைகள் எழுதியிருக்கிறேன். உதாரணமாக, சென்ற காலப் பெண் எழுத்தாளர்களில் பலர் ஒழுக்கப்பிரச்சாரம் போல் எழுதியுள்ளனர். ஆனால் அவர்கள்தான் களப்பணி ஆற்றியவர்கள். அரசியல், சமூகவியல்களங்களில். அதைப் புரிந்துகொள்ளும் கூர்மை நமக்கு வேண்டும் (பெண் எழுத்தாளர்களும் ஒழுக்கவாதமும் )
தமிழில் நவீன இலக்கியம் தோன்றியதுமே பெண் எழுத்தாளர்கள் வீறுடன் எழுத ஆரம்பித்துவிட்டனர். அவர்களில் பலர் தீவிரமான களச்செயல்பாட்டாளர்கள். உதாரணமாக, குமுதினி சமூகப்போராளி. வை.மு.கோதைநாயகி அம்மாள் தமிழ் இதழியலின் முன்னோடி. அவர்களின் ஒட்டுமொத்தப் பங்களிப்பின் ஒரு பகுதியாகவே இலக்கியத்தை அணுகவேண்டும். அத்தகைய மதிப்பீடுகள் உருவாகி வரவேண்டும்.
இந்தக் கருத்தரங்கம் கீழ்க்கண்ட பெண் ஆளுமைகளைப் பற்றியது
ஆர். சூடாமணி சித்தி ஜுனைதா பேகம் வை.மு.கோதைநாயகி அம்மாள் கி.சாவித்ரி அம்மாள் அழகிய நாயகி அம்மாள் சரஸ்வதி ராம்நாத் குமுதினி ஹெப்ஸிபா ஜேசுதாசன் அநுத்தமா கமலா விருத்தாசலம் ராஜம் கிருஷ்ணன் கிருத்திகாகூடுதல் வாசிப்புக்காக
நீலாம்பிகை அம்மையார் எம்.எஸ்.கமலா அம்மணி அம்மாள் ஆர்.எஸ்.ராஜலட்சுமி அம்மாள் ஆர்.பொன்னம்மாள் எஸ். விசாலாட்சி எஸ். அம்புஜம்மாள் கமலா சடகோபன் கமலா பத்மநாபன் கிருபா சத்தியநாதன் கி.சரஸ்வதி அம்மாள் கி.சு.வி.இலட்சுமி அம்மாள் குகப்பிரியை கெளரி அம்மாள் சகுந்தலா ராஜன் சரோஜா ராமமூர்த்தி செய்யிது ஆசியா உம்மா செய்யூர் சாரநாயகி அம்மாள் ஜெயலட்சுமி ஸ்ரீனிவாசன் டி.பி.ராஜலட்சுமி மூவாலூர் ராமாமிர்தத்தம்மையார் மீனாட்சிசுந்தரம்மாள் வி. விசாலாட்சி அம்மாள் வி.சரஸ்வதி அம்மாள் விசாலாட்சி அம்மாள் எம்.எஸ்.கமலாஇந்த உரைகளில் நூல்களை ஓரளவேனும் வாசித்துவிட்டு வந்து பேசிய உரைகள் உள்ளன. போகிறபோக்கில் பேசப்பட்டவையும் உள்ளன.
ஒரு குறிப்பிட்ட விஷயம் கவனித்தேன். இந்தப் பெண் எழுத்தாளர்கள் அனைவரைப் பற்றியும் மிக விரிவான பதிவுகளும் ,நூல் தொடுப்புகளும் தமிழ்விக்கி தளத்தில் உள்ளன. இதேபோன்று அத்தனை பெண்படைப்பாளிகள் பற்றியும். இவர்களைப் பற்றிய பதிவுகளை விரிவாக உருவாக்கியதில் நீலி பெண்ணிய இணைய இதழ் ஆசிரியர் ரம்யாமற்றும் அரவிந்த் சுவாமிநாதன் ஆகியோரின் பங்களிப்பு முக்கியமானது. அம்பை முதல் அ.வெண்ணிலா வரை பலர் பெண் எழுத்தாளர்களை ஆவணப்படுத்தியுள்ளனர். அரவிந்த் சுவாமிநாதனின் நூல் அவற்றில் மிக முக்கியமானது.
ஆனால் இந்த உரைகளில் தமிழ்விக்கி சுட்டிக்காட்டப்படவே இல்லை, பலர் அதைச் சார்ந்தே உரையாற்றினார்கள் எனினும். அதிலும் ஜெயஸ்ரீ என்பவர் குமுதினி பற்றி பேசுகிறார். குமுதினி என இணையத்தில் அடித்து தேடினாராம். குமுதினி என்ற பெயர் மட்டுமே வந்ததாம். திரும்பத் திரும்பத் தேடினாராம். ஒரு வரிகூட கிடைக்கவில்லையாம். அரங்கில் சிரிப்பு.
குமுதினி என கூகிளில் தேடினால் வரும் இரண்டாவது பதிவு தமிழ்விக்கி அளிப்பது. மிக விரிவான அப்பதிவில் மேலதிக வாசிப்புக்காக குமுதினியின் வாழ்க்கை வரலாறு (பிரேமா நந்தகுமார் எழுதியது) இணையத்தில் இலவசமாக இருப்பதன் சுட்டியும் உள்ளது. அதை எழுதப்படிக்கத் தெரிந்த எவரும் தவறவிட முடியாது. குமுதினி பற்றி என் தளத்தில் நிகழ்ந்த விவாதங்களை கூகிள் மூன்றாவதாகக் காட்டும்.
ராஜம் கிருஷ்ணன், கிருத்திகா, ஹெப்ஸிபா போன்ற பலருக்கு அவர்களின் முக்கியமான படைப்புகள் பற்றிக்கூட தனியான பதிவுகள் உள்ளன. ஒவ்வொரு பதிவுக்குக் கீழேயும் மிகவிரிவான மேலதிகவாசிப்புக்கான சுட்டிகள் உள்ளன. இணையநூலக இணைப்புகள் உள்ளன.
இதேபோல மேலும் நூறுக்கும் மேற்பட்ட முந்தைய தலைமுறை பெண் எழுத்தாளர்கள் பற்றிய பதிவுகள் தமிழ்விக்கி தளத்தில் உள்ளன. ஒவ்வொரு பதிவுக்கும் ஒரு முழு ஆய்வு செய்யப்பட்டுள்ளது. தமிழ்ச்சூழலில் எந்த எதிர்பார்ப்பும் இன்றி நிகழும் ஓர் அர்ப்பணிப்புள்ள இலட்சியச் செயல்பாடு இது.
என்னதான் பிரச்சினை? ஒன்று, தமிழ்விக்கி பெயர் சொன்னால் எவராவது எங்காவது எதிரியாகிவிடுவார்களோ என்னும் பயம். தமிழ்விக்கி ஒரு திறந்த கலைக்களஞ்சியம். ஆகவே எவரும் அதை சுட்டிகொடுத்துச் சொல்லவேண்டியதில்லைதான்.இவர்கள் எவர் பெயர் சொன்னாலும் சொல்லாவிட்டாலும் தமிழ்விக்கி ஒரு பெரிய மலைபோல வந்து நின்றிருக்கும், அதை எவரும் ஏதும் செய்யமுடியாது.
ஆனால் இத்தகைய ஒரு பெரும்பணி நம் சூழலில் நிகழும்போது அதை ஏதேதோ காரணங்களுக்காக கண்மூடிக் கடந்துசெல்வது சிறுமை. அறிவியக்கத்தில் ஒருபோதும் அத்தகைய சிறு கணக்குகள் இருக்கலாகாது. இக்கருத்தரங்கை நிகழ்த்தியவர்கள் உத்தேசிப்பது ஒரு பெருஞ்செயல், இது அதற்கான தொடக்கம். அதில் இதைப்போன்ற எளிய உணர்வு நிலைகளைக் கடந்து பெரிய கனவுகளுடன் செயல்படுவதே அச்செயல்களுக்கு உண்மையான மதிப்பை அளிக்கும்.
இந்தக் குறிப்பை எழுதுவதேகூட இத்தகைய பெரிய முயற்சி நம் சூழலில் கவனிக்கப்படாமல் ஆகக் கூடாது என்பதற்காகத்தான். இத்தகைய ஒரு முக்கியமான முயற்சி எவரால் செய்யப்பட்டாலும் உடன் நிற்கவேண்டும் என்பதற்காகத்தான்.
நாயகி நிகழ்வு உரைகள்
Jeyamohan's Blog
- Jeyamohan's profile
- 842 followers

