Jeyamohan's Blog, page 144
March 21, 2025
தத்துவம் எனும் விருட்சம்
இப்போது இமையமலையில் அல்மோரா அருமே, நந்ததேவி மலைமுடியை பார்த்தபடி, கஸார்தேவி என்னுமிடத்திலுள்ள மோக்ஷா என்னும் விடுதியில் 30 பேர் கூடி பிரம்மசூத்திரத்தைப் பயின்றுகொண்டிருக்கிறோம். ஏன் தத்துவம் பயில்வதற்கு அதற்குரிய இடம் தேவை? ஏன் காடு? ஏன் மலையடிவாரம்? ஏன் பனிமூடிய இமையமலை?
மூளை மேலாண்மை சாத்தியமா?
அன்பிற்கும் மதிப்பிற்கும் உரிய ஜெ.
வணக்கம்!
சமீப காலமாக நினைவாற்றல் குறைவு என்பதையும் கவனக்குறைவு என்பதையும் குறித்து பேச்சுகள் வருகின்றன. நீங்களும் ஒரு விசயத்தில் தொடர்ந்து கவனம் செலுத்தி செயலாற்றுவது குறித்து மிகுந்த மதிப்புள்ள கருத்துகளையும் அறிவுரையையும் கொடுத்துள்ளீர்கள். இது குறித்து சிந்திக்கும்பொழுது எனக்குத் தோன்றிய கேள்வி ‘மூளையை மேலாண்மை செய்ய முடியுமா? நிர்வகிக்க முடியுமா?’
மருத்துவர்கள், அறிவியல் ஆய்வாளர்கள் உள்ளிட்டோர் நினைவாற்றலை அதிகரிக்கவும் மூளைக்கான பயிற்சிகளாகவும் பலவற்றை கூறுகின்றனர். சிறிய இன்பங்களை அடையும்போது மூளை ரசாயன மாற்றம் மட்டும் அடைகிறது. அது தற்காலிகமானது. ஒரு புதிய பழக்கத்தை – செயலை தினம் தினம் பயிலும்போது மூளை functional change அடைகிறது. அப்போதுதான் நீச்சல், சைக்கிள் என எதையும் நாம் கற்றுக்கொள்ள முடியும்‘ – இது போல பல தகவல்கள் கிடைக்கின்றன. அவர்கள் கூறுவது உயிரியல் ரீதியான நமது உடலமைப்பு சார்ந்த சாத்தியங்கள்‘. நடைமுறை வாழ்வில் இதை செய்ய முடியுமா என்பதை உங்களிடம் தெரிந்துகொள்ள விரும்புகிறேன்.
உதாரணத்திற்கு… எந்த விசயம் முக்கியமோ அதற்கு இடம் கொடுத்து, தேவையற்ற விசயங்களை மறப்பது, பழைய நினைவுகளை – தகவல்களை ஏதோ ஒரு முறையில் நினைவின் முன் அடுக்குக்குக் கொண்டு வருவது. புதிதாக ஒரு விசயத்தைக் கற்றுக்கொள்ளப் போகிறோம் என்றால் அதற்கு மூளையை தயார் செய்வது என… நமது மூளையை நாம் நிர்வகிக்க முடியுமா? வயதேற ஏற மூளையின் ‘நினைவுகளை சேமிக்கும் இடம்‘ குறைகிறதா? நீங்கள் இத்தகைய தேவைகளை எப்படி சாதிக்கிறீர்கள்?
நன்றி
வசந்த் பாலகிருஷ்ணன்
அன்புள்ள வசந்த்,
இந்த வினாவுக்கான பதிலைத் தேடும்போது முதல் தெளிவு தேவையாக இருப்பது ஒன்றுண்டு. மூளையை எதை வைத்து மேலாண்மை செய்வது? அதாவது மூளைமேலாண்மை என்னும் அச்செயலை செய்யும் உறுப்பு அல்லது அமைப்பு எது?
மூளையை மூளையால்தான் கண்காணிக்க முடியும். மூளையை மூளையால்தான் கட்டுப்படுத்தவும் முடியும். அப்படியென்றால் மூளையின் ஒரு பகுதியேனும் நலமாக, சீராக இருந்தாகவேண்டும். மூளையின் அந்த கண்காணிப்பு- கட்டுப்பாடு பகுதி பலவீனமடைவதையே மிகப்பொதுவாக உளச்சிக்கல் என்று இன்று சொல்கிறார்கள். தன்னைத்தானே பார்ப்பதற்கும், மதிப்பிடுவதற்கும், தனக்குத்தானே ஆணைகளை இடுவதற்கும் முடியாமலாகும் நிலை அது. அதற்கு உரிய மருத்துவ உதவி மட்டுமே தேவை. நிபுணர்கள் மட்டுமே உதவ முடியும். அதற்கு தியானம், யோகம் உட்பட எவையுமே பயனுள்ளவை அல்ல.
இயல்பான நிலையில் நம் மூளையை நாம் எப்படி மேலாண்மை செய்யலாம் என்பதை மட்டுமே பொதுவாக நாம் பேச முடியும். அதில் என் அனுபவத்தை ஒட்டி நான் சில கருத்துக்களைச் சொல்கிறேன். அவை எந்தவகையில் பயனுள்ளவை என்பதை தங்கள் அனுபவத்தினூடாக ஒவ்வொருவரும் பரிசீலிக்கலாம்.
மூளையென ஒன்று இருப்பதை நாம் அறிவது ஓயாமல் ஓடிக்கொண்டே இருக்கும் அகமொழிப்பெருக்கு வழியாகத்தான். அதையே நாம் உள்ளம் என்கிறோம். அந்த அகமொழிப்பெருக்கு மிகமிக சிக்கலானது. அது ஒற்றைப்பெருக்கென தோன்றும், ஆனால் மிக எளிதாக பலவாக பிரிந்து பிரிந்து ஒழுகுவது அது. அந்த அகமொழிப்பெருக்கை ‘கண்காணிக்க’ ‘கட்டுப்படுத்த’ நீங்கள் முயன்றால் அந்த முயற்சி அகமொழிப்பெருக்கின் இன்னொரு சரடாக மாறி கூடவே ஓட ஆரம்பிப்பதையே காண்பீர்கள்.
அதாவது உள்ளத்தை உள்ளத்தால் ஆள்வதென்பது இயல்வதே அல்ல. அப்படி ஆளலாம் என முயல்பவர்கள் உளமொழிப்பெருக்கை மேலும் விசைகொண்டதாகவும், மேலும் கட்டுப்பாடற்றதாகவுமே ஆக்கிக்கொள்வார்கள். இதை தியானம் அல்லது ஏதேனும் படைப்புச்செயல்பாடு சார்ந்து நீண்டநாட்கள் செயல்பட்ட எவரும் சொல்வார்கள். உள்ளம் என்பது உள்ளுவதன் தொகுப்பு. அதை ஆள எண்ணுவதும் ஓர் உள்ளுதல்தான், அது இன்னொரு உள்ளநிகழ்வு மட்டுமே.
அப்படியென்றால் எப்படி உள்ளத்தை ஆள்வது? உள்ளம் என்பது அருவமானது, கட்டற்றது. ஆனால் உள்ளம் புறவுலகின் பருப்பொருட்களுடனும் , நிகழ்வுகளுடனும் இணைந்து அதன் நீட்சியாகவே இயங்கிக்கொண்டிருக்கிறது. புறவுலகுடன் தொடர்பே இல்லாமல் அதனால் செயல்பட முடியாது. சொல்லப்போனால் உள்ளம் என்பது புறவுலகின் பிரதிபலிப்பேதான். ஆனால் நேரடியான உடனடியான பிரதிபலிப்பு அல்ல. அதில் நினைவுகள், கற்பனைகள் என இறந்தகாலமும் எதிர்காலமும் கலந்துள்ளது. ஆகவே உட்சிக்கல்கள் கொண்ட ஒரு பிரதிபலிப்பு அது. ஆனால் எப்படியும் பிரதிபலிப்புதான்.
உள்ளத்தை பற்றுதற்கான திட்டவட்டமான ’கைப்பிடி’ என்பது புறவுலகமே. புறவுலகம் பருவடிவமானது, தெளிவானது, அதை நாம் கட்டுப்படுத்த முடியும், நாம் மாற்றியமைக்க முடியும். புறவுலகை கையாள்வதனூடாக நம் உள்ளத்தின் அடிப்படைகளை நம்மால் மாற்றிக்கொள்ள முடியும், உள்ளத்தை திசைதிருப்ப முடியும், உள்ளத்தை விரும்பியவற்றில் குவிக்கவும் முடியும்.
புறவுலகை விரும்பியபடி வகுத்துக்கொள்வதன் வழியாக அகத்தை ஆள்வதைத்தான் நீண்டகாலமாக பலவகையான நெறிகள், ஆசாரங்கள் வழியாக மானுடர் உலகமெங்கும் செய்துவருகின்றனர். ஒரு குறிப்பிட்ட பொழுதில் ஒன்றைச் செய்தால் அந்தப்பொழுதில் நம் உள்ளம், அதாவது மூளை அச்செயலுக்குச் சித்தமாக இருப்பதை எவரும் காணமுடியும். அது மூளைமேல் நம் கட்டுப்பாடுதானே?
நாம் நம் நேரத்தையும், செயல்களையும், சூழலையும் மேலாண்மை செய்ய முடியும். அதன் வழியாக நம் மூளையைத்தான் மேலாண்மை செய்கிறோம். நம் மூளைமேல் நாம் கொள்ளத்தக்க ஒரே கட்டுப்பாடு இப்படி புறவுலகை கட்டுப்படுத்துவதன் வழியாக அடைவது மட்டும்தான்.
அதற்கு அப்பால் நம் மூளைமேல் நம்முடைய கட்டுப்பாடு எதுவும் இயல்வது அல்ல. நோய்கள் நம் மூளையை களைப்படையச் செய்யலாம். பலவகையான அலோபதி நோய்முறி மருந்துகள், வலிநீக்க மருந்துகள் மூளையை மழுங்கடிக்கின்றன. மூப்பு எப்படியானாலும் மூளையை ஆற்றலிழக்கச் செய்யும். மூளையின் நியுரான்கள் புதுப்பிக்கப்படாமலிருப்பதும், மூளையை இயங்கவைக்கும் ரசாயனங்கள் குறைவதும் நம் கட்டுப்பாட்டுக்கு அப்பாலுள்ளவை.
இவையெல்லாமே உடலுக்கும் பொருந்துபவை. உடல் நோய், மூப்பு என தனக்கான சிதைவுகளை கொண்டுள்ளது. ஆனால் தொடர் பயிற்சிகள் மூலம், நல்லுணவு மூலம் நாம் அதை முடிந்தவரை நலமாக வைத்திருக்க முடியும். அதைப்போலவேதான் மூளையும். நெறிகள், பயிற்சிகள் வழியாக அதை நம்மால் எவ்வளவு முடியுமோ அவ்வளவு நலமாக வைத்திருக்க முடியும்.
மூளைக்கான நெறிகள் என்பவை நம் அன்றாட வாழ்க்கைக்கான நெறிகளே. நேரம், சூழல் ஆகியவற்றை நெறிப்படுத்திக்கொள்வதன் வழியாக நாம் மூளையை நெறிப்படுத்திக்கொள்ள முடியும். மூளைக்கு ஒவ்வாதனவற்றை முடிந்தவரை தவிர்க்கமுடியும். உதாரணமாக, மிதமிஞ்சிய வலிநிவாரணிகள், தேவையற்ற நோயுயுர்முறி மாத்திரைகள், போதைப்பொருட்கள். மூளைக்கு நல்ல ஓய்வு மிக அவசியம். நான் நல்லதுயில் பற்றித் தொடர்ச்சியாக எழுதி வருவது அதனால்தான்.
அத்துடன் ஒன்றுமுண்டு, எப்படி உடலுக்கு நல்லுணவும் பயிற்சியும் அவசியமோ அதேபோலத்தான் மூளைக்கும். மூளைக்கான பயிற்சியே அளிக்காதவர்கள் மிக எளிதாக மூளைத்திறன் குறைந்தவர்களாக ஆகிவிடுவதை நான் கண்டிருக்கிறேன். நம்மைச்சூழ்ந்து அத்தகையோரை தொடர்ச்சியாகக் காணலாம். நன்குபடித்து சூட்டிகையாக இருக்கும் பெண்கள் குடும்பத்துக்குள் ஒடுங்கி மெல்ல மக்காகிவிடுகிறார்கள். தேர்வில் வென்று வேலைக்குச் சேரும் அரசூழியர்கள் அப்படியே மழுங்கிவிடுகிறார்கள்.
அந்த தேக்கத்தை வெல்லும் வழி மூளைக்குப் பயிற்சி அளிப்பதே. மூளைக்கொழுப்பை கரைப்பது என்றே சொல்லலாம். மூளை விழிப்புடன், கூர்மையுடன் செய்யும் பணியை அளிப்பதுதான் அப்பயிற்சி. மூளையை சோர்வடையச்செய்யும் செயலைச் செய்வது அல்ல. இதைப்பற்றி மூளையைச் சாட்டையாலடியுங்கள் என்று ஒரு கட்டுரை எழுதியுள்ளேன்.
உடலுக்கு நல்ல உணவு போலவே மூளைக்கும் தேவை என்பதே என் கண்டடைதல். என்னைப் பொறுத்தவரை நல்ல இலக்கியம், நல்ல கலைகள், பயணம் ஆகியவையே மூளைக்கான உணவு. அவை மூளையை வளர்ப்பதை நான் உணர்ந்திருக்கிறேன். மூளையின் நினைவுத்தொகுப்பில் ஏராளமான மகிழ்வூட்டும் விஷயங்கள், செயலூக்கமளிக்கும் விஷயங்கள், ஆக்கபூர்வமான விஷயங்கள் நிறைந்திருப்பது மூளையை புத்துணர்வுகொண்டதாக ஆக்குகிறது.
மூளைக்குக் குளியலும் தேவை என்றும் சொல்வேன். என் வரையில் காலையிலும் மாலையிலும் இயற்கையுடனிருத்தல் அக்குளியலை அளிக்கிறது. தியானமும் யோகமும் மூளைக்குளியல்களே. இரவில் இசை எனக்கு ஒரு குளியல்.
என் மூளையை நான் பேணி, புரந்து, முடிந்தவரை தீவிரமாகவும் செயலூக்கத்துடனும் வைத்திருக்கிறேன். என் மூளையை எவ்வளவு முடியுமோ அவ்வளவு நானே நிர்வாகமும் செய்கிறேன். ஆம், மூப்பை ஒன்றும் செய்யமுடியாது. ஆனால் நூறுவயதுக்கு அணுக்கமானபின்னரும் தளராத செயலூக்கத்துடன், நகைச்சுவையுணர்ச்சியுடன், நம்பிக்கையுடன் வாழ்ந்தார் கி.ராஜநாராயணன். இந்திரா பார்த்தசாரதியும் கிருஷ்ணம்மாள் ஜெகன்னாதனும் அப்படித்தான் வாழ்கிறார்கள். சென்ற மாதம்கூட இந்திரா பார்த்தசாரதி உயிர்மையில் ஒரு நல்ல கதை எழுதியிருந்தார்.
ஜெ
சைவம்
சென்னை சிவனடியார் திருக்கூட்டத்தின் சார்பில் ‘சைவம்’ மாத இதழோடு கூடவே பள்ளி, தேவாரப் பாடசாலை போன்றவையும் தொடங்கி நடத்தப்பட்டன. சென்னைச் சிவனடியார்த் திருக்கூட்டத்தினர் நூல்களும் பல வெளியிட்டுள்ளனர். ஆண்டுதோறும் கூட்டத்தினரின் வரவு செலவுக் கணக்குகளை விரிவாக விளக்கி ஆவணப்படுத்தியுள்ளனர்.
சைவம் – தமிழ் விக்கி
மானஸா, கடிதம்
அன்புள்ள ஜெ
உங்கள் மகள் சைதன்யா தொடங்கவிருக்கும் மானஸா பதிப்பகம் பற்றியச் செய்தியைக் கண்டேன். (கூடவே மானஸாவையும். குட்டி துருதுருவென்று இருக்கிறது. கருவிலெயே இலக்கியத்திற்குள் புகுந்துவிட்டது). ஒரு தொழிலாக இலக்கியப் பதிப்பகம் என்பது அதிகம் வளர்வதாக இல்லை. உலகம் முழுக்கவே பதிப்புத்தொழிலில் எதிர்காலம் பற்றிய சந்தேகம் உள்ளது. அந்த சூழல் பற்றிய புரிதலுடன் இதில் ஈடுபடுகிறார்கள் என்று நினைக்கிறேன்.
ஆனால் இதையே content creation என்று எடுத்துக்கொண்டால் இது எதிர்காலம். எல்லா ஊடகங்களுக்கும் விஷயங்களைக் கொண்டுசென்று சேர்ப்பது. இப்போது எல்லாமே காணொளியாகவே உள்ளது. ஆனால் அது பெரிய களம். எப்போதுமே தீவிரமான கண்டெண்டுகளுக்கான இடம் உண்டு. அதை நிரப்பும் செயல்கள் சிறிய அளவில் நடந்தால்கூட அதற்கான வணிகமும் உருவாகி வரும். அதை உணர்ந்தால் இந்தத்துறையிலேயே நிறைய சாதிக்கமுடியும். சைதன்யாவுக்கு வாழ்த்துக்கள்.
அருண் மகாதேவன்
அன்புள்ள அருண்
இதை ஒரு girls venture என்று சொல்லலாம். இது சைதன்யா, அவள் தோழி கிருபா இருவரின் கனவு. மிகப்பெரிய முதலீடு எல்லாம் இல்லை. (சென்னை அலுவலகம் ஒரு நியூசிலாந்து நண்பரால் இலவசமாக அளிக்கப்பட்ட அபார்ட்மெண்டில்) ஆகவே குறைந்த பட்ச ‘ரிஸ்க்’கில்தான் இதைத் தொடங்குகிறார்கள்.
இதை ஒரு தொழில் என்பதைவிட ஓர் அறிவியக்கச் செயல்பாடு என்றே எண்ணுகிறார்கள். பெண்களுக்கான வெளியை உருவாக்குதல், பெண்கள் எழுதும் எழுத்துக்களையும் பெண்சார்ந்த எழுத்துக்களையும் முன்வைத்தல் ஆகியவையே இலக்கு. அதன் பின் அந்த களம் பெரிதாகலாம். இப்போதைக்கு நீங்கள் சொல்வதுபோல வாசிப்புப்பொருளை உருவாக்கும்பணியே நிகழ்கிறது. Manasa Publications Websiteஇணையதளமே கூட நூல்களுக்கானதாக இல்லாமல் வாசிப்புக்குரிய பக்கங்களையும் கொண்டிருக்கிறது.
நான் வழக்கம்போல சுத்தமாக விலகி நின்று வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறேன். நான் ஒதுங்கிக்கொண்ட எல்லா நிகழ்வுகளும் வெற்றிகரமாகவே நிகழ்கின்றன என்பதே என் சாதனை.
ஜெ
இன்னொரு கனவு – ஓர் ஆங்கிலப் பதிப்பகம் மானசா பதிப்பகம், கடிதங்கள் மானஸா, கடிதங்கள்நம்முள் எழும் புரவி
நான் சமீபகாலமாக என்னை கவனிக்கிறேன். நான் எதிலும் தீவிரமாக இருக்கிறேன். எனக்கு ஒன்று திணிக்கப்பட்டாலோ நானே அதை தேடிக் கொண்டாலோ அதை நோக்கி நான் தீவிரமாக செயல்படுகிறேன். இன்பமோ துன்பமோ அதை தீவிரமாக உள்வாங்குகிறேன். எந்த அளவு தீவிரமாக என்றால் வெய்யோன் சூரிய வெப்பம் என்னை சுடும் போது அது கொஞ்சநேரத்தில் சுகமாகிறது வெய்யோன் ஒலி என்னை இன்னும் தீவிரமாக எரிக்க வேண்டும் என்று தோன்றுகிறது. இரவின் கருமையை இன்னும் ஆழமாக உள்வாங்க நினைக்கிறேன்.
நம்முள் எழும் புரவி
Today, our environment and society are filled with numerous questions about religion. We also hear all of them from the mouths of politicians and repeat them exactly as they are. Today, the situation of respect exists only when even those who have religious faith speak in public, disparaging and slandering religion.
About Religion
March 20, 2025
திஸ்ரநடை!
ரானு பம்பாய்க்கு ரானு என்னும் பாட்டை இந்த பதினைந்து நாளில் சராசரியாக ஒருநாளுக்கு பத்து தடவை வீதம் நூற்றைம்பது தடவை கேட்டிருப்பேன். முதற்காரணம் என்னுடைய பிரம்மசூத்திர வாசிப்புதான். அது மண்டையை ஒரு பக்கமாக பின்னிக்கொண்டு செல்ல இந்தப்பக்கமாக அதை இழுத்துவந்து ரானு பம்பாய்க்கு ரானு என்று மனதுக்குள் நடனமிட்டுக்கொண்டே இருந்தேன்.
அந்தப்பாடல் எனக்கு நிறைய நினைவுகளை, நிறைய ஏக்கங்களை உருவாக்கிய ஒன்று. நான் இளமையில் சில மாதகாலம் ஹைதராபாத் பக்கம் அலைந்ததுண்டு. அங்கே உள்ள செழிப்பான நாட்டுப்புறப் பாடல் மரபு எனக்கு பிடித்தமானது. நம் தெம்மாங்கை நினைவுபடுத்தும் பல மெட்டுகள் அங்கு உண்டு. பெரும்பாலானவை தொழிலுடன் இணைந்த பாடல்கள்.
2010 -ல் நாங்கள் நண்பர்கள் சிலர் கூடி ஒரு கோதாவரிப் பயணம் மேற்கொண்டோம். நான் அதற்கு முன்னரும் பயணிதான். ஆனால் நண்பர்கள் கூடி பயணம் செய்ய ஆரம்பித்தது 2006 வாக்கில்தான். மதுரை நண்பர் சண்முகசுந்தரம் ஒரு கார் (மாருதி வேகனர்) வாங்கினார். அவர் ஓட்ட அதில் நாங்கள் இந்தியாவுக்கு குறுக்கும் நெடுக்குமாகப் பயணங்கள் செய்தோம்.
பெரும்பாலும் எல்லா பயணங்களிலும் தமிழினி வசந்தகுமார் உண்டு. அ.கா.பெருமாள், நாஞ்சில்நாடன், யுவன் சந்திரசேகர் என பலர் கலந்துகொண்டிருக்கிறார்கள். சிவாஜியின் கோட்டைகளைப் பார்க்க ஒரு பயணம் செய்திருக்கிறோம். ஆந்திராவை சுற்றிவந்திருக்கிறோம். ஓர் ஒரிசா பயணம். ஒரு கேரளப்பயணம். ஒருமுறை காசிவரை.அப்படித்தான் ஜமா சேர்ந்தது.
இந்த இணையதளம் 2007ல் ஆனந்தவிகடன் அளித்த சர்ச்சை விளம்பரம் வழியாகப் புகழ்பெற்றது. எனக்கேயான ஊடகமாக ஆகியது. எனக்கென வாசகர் வட்டம் உருவாகியது. புதியவாசகர்கள் உருவானார்கள். அவர்களில் ஒருவரான ராமச்சந்திர ஷர்மா கோதாவரிப் பயணம் ஒன்றை ஏற்பாடு செய்தார். நண்பர்கள் கே.பி.வினோத்,
ராஜகோபாலன், வசந்தகுமார், சிறில் அலெக்ஸ், கிருஷ்ணன், விஜயராகவன், க.மோகனரங்கன், கார்த்தி, தனசேகர், யுவன் சந்திரசேகர், இளங்கோ கல்லானை, ரவி மதுரை, அரங்கசாமி ,சந்திரகுமார், வேணு வெட்ராயன், ராமச்சந்திர ஷர்மா ஆகியோருடன் கோதாவரிமேல் ஒரு படகில் மூன்றுநாட்கள் பயணம் செய்தோம்.
அன்று சமதானி எங்களுக்குப் பாட்டு வேண்டுமா என்றார். ஆமாம் என்றோம். ஒரு ஆணும் ஒரு பெண்ணும் வந்தனர். எங்களுக்காக பாடினர். எல்லாமே நாட்டுப்புறப்பாடல்கள். அதற்குரிய சற்றே உலோகம்கலந்தது போன்ற மணிக்குரல். அந்த ஆண் பார்க்க ஒரு பாமரத்தன்மையுடன் இருந்தாலும் அவர் கையில் தாளம் துடித்தது. வாத்தியம் நம்மூர் பறை போன்ற ஒன்று. அகலமானது, சிறு கழியால் இயக்கப்படுவது.
யுவன் ’மணப்பாறை மாடுகட்டி’ பாட்டை பாடினான். அந்தப்பாட்டை வாத்தியக்காரர் கேட்டதே இல்லை, ஆனால் மிகக்கச்சிதமாகத் தாளம் போட்டார். எப்படி என்று நான் கேட்டேன். ‘இதெல்லாமே திஸ்ரநடை’ என்றார். நடைலு! ஆச்சரியமாக இருந்தது. அதைவிட ஆச்சரியம் அதில் பலபாடல்கள் புகழ்பெற்ற சினிமா மெட்டுகள் என்பது. தேவிஸ்ரீபிரசாத், தேவா எல்லாம் போட்டவை. அதைப்பற்றிக் கேட்டோம். ‘சாமி, இதெல்லாம் ஐம்பது அறுபது ஆண்டு பழைய மெட்டுகள். அவர்கள் எங்களை பாடவைத்து பதிவுசெய்கிறார்கள். அடுத்தமாதம் சினிமாவாக வந்துவிடுகிறது’ என்றார்
இது நீண்டநாளாக தெலுங்கில் நடந்து வருவது. புகழ்பெற்ற ராவோயி சந்தமாமா கூட அவர்களின் பாட்டுதான் என்றார். அண்மைக்காலமாகத்தான் அவர்களே ஆல்பங்களாகப் போடுகிறார்கள். யூடியூப் அளிக்கும் வாய்ப்பு. அவர்களே உலகப்புகழ்பெறுகிறார்கள். ராமு ரத்தோட் அவரே எழுதி, பாடி, ஆடிய இந்தப்பாட்டில் உள்ளது அன்று அந்த படகுக்கு வந்தவர் வாசித்த அதே தாளம்தான். ஏறத்தாழ அதே குரல். எத்தனை எத்தனை நினைவுகளை ஒரு பாடல் கொண்டுவந்துவிடுகிறது!
கோதையின் மடியில் 1 கோதையின் மடியில் 2 கோதையின் மடியில் 3 கோதையின் மடியில் 4 பொன்னியின் செல்வனும் கோதாவரியும் கோதாவரி பயணம் – படங்கள்,வீடியோக்கள் கோதையின் தொட்டிலில் ஓர் இடம்
இராஜம் புஷ்பவனம்
[image error]ஈழத்துப் பெண் எழுத்தாளர், திரைக்கதையாசிரியர், பாடலாசிரியர், வில்லிசைக்கலைஞர். நாடக நடிகர், நாடகங்கள் அரங்காற்றுகை செய்த ஆசிரியர்.
இராஜம் புஷ்பவனம்
இராஜம் புஷ்பவனம் – தமிழ் விக்கி
நேர்மையாளர்கள், கடிதம்
இலட்சியவாதிகள் இன்று எங்கே?
அன்புள்ள ஜெ
இன்று இலட்சியவாதிகள் எங்குள்ளனர் என்ற கேள்வியை அடிக்கடி எவராவது சொல்லிக்கொண்டே இருப்பார்கள். அதைச் சொல்பவர் மிக யோக்கியன்போலவும் தோற்றம் அளிப்பார். உண்மையில் நேர்மையை மறுத்து அயோக்கியத்தனத்தை முன்வைப்பதற்கான ஒரு பாவலாதான் அந்த பேச்சு. அதை அப்பட்டமாக மண்டையை உடைப்பதுபோல சொல்லிவைத்த கட்டுரை. மிகச்சிறப்பு. இன்றும் இலட்சியவாதிகள் இருக்கிறார்கள். நம் கண்ணெதிரேதான் இருக்கிறார்கள். ஆனால் எவருமே கண்டுகொள்வதில்லை. தெரிந்தாலும் அவர்களும் சுயநலவாதிகள் என்றும், நேர்மையற்றவர்கள் என்றும் நம்பமுயல்கிறார்கள். ‘அப்படியெல்லாம் சொல்லிட முடியாது, உள்ளுக்குள்ள ஆயிரம் இருக்கும், நமக்கு என்ன தெரியும்?’ என்று எந்த நேர்மையான மனிதரைப்பற்றியும் அற்பமாகச் சொல்லிவிடுவார்கள். நம் மனநிலை எந்த அளவுக்கு ‘கரப்ட்’ ஆகியிருக்கிறது என்பதைத்தான் இந்தவகையான பேச்சுக்கள் காட்டுகின்றன. நீங்கள் சொன்னதுபோல மாமனிதர்களின் தியாகத்தால் விளைந்த நன்மைகளுக்குக் கூட நம் சாதி, நம் கட்சி சார்ந்த அயோக்கிய அரசியல்வாதிகள்தான் காரணம் என்று நிறுவுவதற்கு படாதபாடு பட்டுக்கொண்டிருக்கிறார்கள் இன்றைய மனிதர்கள். இதுதான் யதார்த்தம்.
செந்தில்ராஜ்
பணிச்சுமை, கடிதம்
பணிச்சுமையின்போது என்ன செய்தேன்?
தங்கள் கட்டுரை “பணிச்சுமையின் போது என்ன செய்தேன்?” எழுதியதை படிக்க நேர்ந்தது.சில சமயங்களில் பணிச்சுமை (Work pressure) நமக்கு மேலும் நல்ல உந்துதல் தரும் என்பதற்கு சாட்சி.வேலைப்பழுவின் போது நம்முடைய தனிப்பட்ட வாழ்க்கையை ரசிக்க முடியாது என்பதும் ஆனால் நம் வாழ்க்கையின் நிதர்ச்சனங்களை ஆழ்ந்து கவனிக்க நிறைய சம்பவங்கள் நடப்பதை அவதானிப்பதையும் புரிந்து கொண்டேன்.Utility of Time என்பார்கள். கிடைக்கிற நேரத்தில் பயனுள்ளதாக மாற்றுவது என்பது ஒரு கலை.
வாழ் நாட்களை வெறுமனே தொலைத்து விட்டவர்களை விட ஒருநாள் ஒருமணி நேரம் உபயோகமாக வாழ்வது சிறந்தது.பணிச்சுமையுடன் யார் என்ன செய்தார்கள் என்பது அவர்களது ஓய்வின் போது அசைபோடும் போது தெரியவரும்.ஆனால் அது குற்ற உணர்வை தருமானல் மன உளச்சலை தரும்.தங்கள் பணி காலத்தில் தங்களுக்கு ஏற்பட்ட பணிச்சுமை ஒரு நல்ல வடிகாலாக திருப்பபட்டு அதிலிருந்து நீங்கள் எழுதிய எழுத்துக்கள் இன்றைய தலைமுறைக்கு ஒரு வழிகாட்டுதலாகதிகழ்கிறது.. பாழ் உலகில் விழுந்து விடாமல் நல்வழியில் திருப்பும் செயல்.இதில் குடும்பத்தலைவியின் ஒத்துழைப்பும் அவசியம்.பணிச்சுமையால் நாம் நிறைய இழந்திருக்கலாம்.ஆனால் உங்கள் நேர்முகச்சிந்தனை இலக்கிய உலகில் மட்டுமல்லாது முழுமையறிவு போன்ற அமைப்பை தோற்றுவிக்கவும்,தமிழ் விக்கி போன்ற இணையதள தகவல் அமைப்பையும், உருவாக்க காரணமாக இருந்திருக்கிறது.ஏறக்குறைய உங்கள் “பணிச்சுமையில் என்ன செய்தேன்?” ஒரு சிறிய சுயவாழ்க்கை வரலாறு (Autobiography of a writer)போன்று இருந்தது.
வளரட்டும் தங்கள் எழுத்துப்பணி.
தா.சிதம்பரம்.
அஜிதன், தத்துவம்- கடிதம்
மதம் பற்றி…தத்துவத்தை அறிந்து கொள்வது என்பது ஒரு அறிவுத் துறையை அறிந்து கொள்வது என்பதை தாண்டி, பல்லாயிரமாண்டு சிந்தனை தொடர்ச்சியை அறிந்து கொள்வது என்றே சொல்வேன். அந்த எண்ணமே ஒரு மனக் கிளர்ச்சியை உருவாக்குகிறது. அந்த கிளர்ச்சி, வகுப்பில், ஒவ்வொரு காலக்கட்டத்தின் சிந்தனைகளை நான் அறியுந்தோறும், என்னுள் உச்சம் பெற்றது. (குறிப்பாக, ஹெடகர் மற்றும் நீட்சேவின் தத்துவங்களில்).
அஜிதன், தத்துவம்- கடிதம்
What relevance can 3000-year-old thoughts have in today’s world? We can assert that their evolution has shaped today’s thinking. But can it be learned as it is today? Why go back and learn? What’s the point of learning those ideas without learning about the old way of life?
Why do We need Old Philosophy?Jeyamohan's Blog
- Jeyamohan's profile
- 842 followers

