மானஸா, கடிதம்
அன்புள்ள ஜெ
உங்கள் மகள் சைதன்யா தொடங்கவிருக்கும் மானஸா பதிப்பகம் பற்றியச் செய்தியைக் கண்டேன். (கூடவே மானஸாவையும். குட்டி துருதுருவென்று இருக்கிறது. கருவிலெயே இலக்கியத்திற்குள் புகுந்துவிட்டது). ஒரு தொழிலாக இலக்கியப் பதிப்பகம் என்பது அதிகம் வளர்வதாக இல்லை. உலகம் முழுக்கவே பதிப்புத்தொழிலில் எதிர்காலம் பற்றிய சந்தேகம் உள்ளது. அந்த சூழல் பற்றிய புரிதலுடன் இதில் ஈடுபடுகிறார்கள் என்று நினைக்கிறேன்.
ஆனால் இதையே content creation என்று எடுத்துக்கொண்டால் இது எதிர்காலம். எல்லா ஊடகங்களுக்கும் விஷயங்களைக் கொண்டுசென்று சேர்ப்பது. இப்போது எல்லாமே காணொளியாகவே உள்ளது. ஆனால் அது பெரிய களம். எப்போதுமே தீவிரமான கண்டெண்டுகளுக்கான இடம் உண்டு. அதை நிரப்பும் செயல்கள் சிறிய அளவில் நடந்தால்கூட அதற்கான வணிகமும் உருவாகி வரும். அதை உணர்ந்தால் இந்தத்துறையிலேயே நிறைய சாதிக்கமுடியும். சைதன்யாவுக்கு வாழ்த்துக்கள்.
அருண் மகாதேவன்
அன்புள்ள அருண்
இதை ஒரு girls venture என்று சொல்லலாம். இது சைதன்யா, அவள் தோழி கிருபா இருவரின் கனவு. மிகப்பெரிய முதலீடு எல்லாம் இல்லை. (சென்னை அலுவலகம் ஒரு நியூசிலாந்து நண்பரால் இலவசமாக அளிக்கப்பட்ட அபார்ட்மெண்டில்) ஆகவே குறைந்த பட்ச ‘ரிஸ்க்’கில்தான் இதைத் தொடங்குகிறார்கள்.
இதை ஒரு தொழில் என்பதைவிட ஓர் அறிவியக்கச் செயல்பாடு என்றே எண்ணுகிறார்கள். பெண்களுக்கான வெளியை உருவாக்குதல், பெண்கள் எழுதும் எழுத்துக்களையும் பெண்சார்ந்த எழுத்துக்களையும் முன்வைத்தல் ஆகியவையே இலக்கு. அதன் பின் அந்த களம் பெரிதாகலாம். இப்போதைக்கு நீங்கள் சொல்வதுபோல வாசிப்புப்பொருளை உருவாக்கும்பணியே நிகழ்கிறது. Manasa Publications Websiteஇணையதளமே கூட நூல்களுக்கானதாக இல்லாமல் வாசிப்புக்குரிய பக்கங்களையும் கொண்டிருக்கிறது.
நான் வழக்கம்போல சுத்தமாக விலகி நின்று வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறேன். நான் ஒதுங்கிக்கொண்ட எல்லா நிகழ்வுகளும் வெற்றிகரமாகவே நிகழ்கின்றன என்பதே என் சாதனை.
ஜெ
இன்னொரு கனவு – ஓர் ஆங்கிலப் பதிப்பகம் மானசா பதிப்பகம், கடிதங்கள் மானஸா, கடிதங்கள்Jeyamohan's Blog
- Jeyamohan's profile
- 845 followers

