அரதி, இளங்கோ கிருஷ்ணன், சில எண்ணங்கள்
சில நாட்களுக்கு முன் நண்பர் லக்ஷ்மி சரவணக்குமார் குடி பற்றி எழுதியிருந்த ஒரு பதிவைப் பகிர்ந்து என் இணைக்கருத்தைச் சொல்லியிருந்தேன். (குடி, லக்ஷ்மி சரவணக்குமார்) அதைப்போன்ற ஒரு கட்டுரை நண்பர் இளங்கோ கிருஷ்ணன் எழுதியது. என் கவனத்துக்கு வந்த இக்கட்டுரையை அவர் 2019 வாக்கில் எழுதியிருக்கிறார். இப்போதும் நிலைமை மாறவில்லை என்று அண்மையில் மீள்பதிவு செய்திருக்கிறார்.
அரதி என்னும் புகழ்பெற்ற கட்டுரையை நான் 2009 ல் இந்த தளத்தில் எழுதினேன். தொடர்ச்சியாக வாசகர் கடிதங்களும் அதற்கு வந்தன. (அரதி கடிதங்கள்) அந்தக் கட்டுரை பலமுறை பல இடங்களில் பிரசுரமாகியுமுள்ளது. அன்று சமூகவலைத்தளங்கள் இத்தனை வீச்சுடன் இல்லை. யூடியூப் இப்படி ரீல்ஸ் வரை வந்து நம்மை ஆட்கொண்டிருக்கவில்லை. இன்று அக்கட்டுரையின் பொருள் வீச்சு கொண்டிருக்கிறது. அன்று மாற்றங்களுக்கு எதிராக புலம்பும் ஒரு பழமைவாத, ஒழுக்கவாத நோக்கு என அதைச் சொன்னவர்கள் இன்று அப்படிச் சொல்ல வாய்ப்பில்லை.
இளங்கோ கிருஷ்ணனின் கட்டுரை இரு படிகள் கொண்டது. படைப்பூக்கத்துக்கும் அரதிக்குமான தொடர்பை அவர் சொல்கிறார். அந்த இக்கட்டை நேருக்குநேர் எதிர்கொள்ளமுடியாமல் செய்யும் சமூகவலைத்தளச் சூழல் என்னும் புறநெருக்கடியை, அதில் சிக்கியபின் வெளிவரமுடியாத கையறுநிலையை விவரிக்கிறார். அனுபவவிவரணை என்பதனாலேயே மிகுந்த மதிப்புகொண்ட வாக்குமூலம் இது.
இக்கட்டுரையை ஒட்டி என் எண்ணங்களை மீண்டும் சொல்லத் தோன்றுகிறது. அரதி என்பது படைப்பு மனநிலையின் ஒரு பகுதி. அதற்கான காரணம் இதுவே. நாம் எழுதவிருக்கும் ஒரு படைப்பு, நம்முள் கரு என முகிழ்த்துவிட்ட ஒன்று, அசலானது என்றால் அதற்கு நாம் இதுவரை எழுதிய எந்த வடிவமும் பொருந்தி வராது. புதியதாகத்தான் கண்டடையவேண்டும்.
அந்த வடிவத்தை கண்டடைவது எளிது அல்ல. ஏனென்றால் அதை எழுதினால்தான் கண்டுபிடிக்கமுடியும். ஆனால் அந்த வடிவத்தின் ஒரு சிறு தொடக்கமாவது நம்முள் இல்லை என்றால் நம்மால் அதை எழுத ஆரம்பிக்கவும் முடியாது. இது எழுத்தின் அவஸ்தைகளில் ஒன்று. எழுத ஆரம்பிப்போம், சரியாக வரவில்லை என்று வீசிவிடுவோம். மீண்டும் மீண்டும் முயன்று ஒரு கட்டத்தில் சலிப்பும் கசப்பும் அடைவோம்.
இச்சூழலில்தான் எழுத்திலிருந்து விலகிக்கொள்கிறோம். சிறிய விஷயங்களில் திளைக்கிறோம். அந்தச் சிறிய விஷயங்களில் திளைக்கையில் நம் ஆழ்மனம் துழாவிக்கொண்டே இருக்கிறது, அந்த வடிவம்தான் என்ன? எப்போதோ பிடி கிடைத்துவிடுகிறது. ஆரம்பித்துவிடுகிறோம். சிலசமயம் கடைசிவரை பிடிகிடைக்காமல் அந்தப்படைப்பு எழுதப்படாமலேகூட போகலாம். ஒன்றும் செய்யமுடியாது, அதன் விதி அவ்வளவுதான்.
இந்தக் காலகட்டத்தில்தான் trivia எனப்படும் விஷயங்களில் கலைஞனின் ஆர்வம் செல்கிறது. அந்த சிறிய விஷயங்கள் அவனை அப்படியே பிடித்து நீண்டதூரம், நீண்ட காலம் கொண்டுசெல்லும் என்றால் அந்தப்படைப்பை உருவாக்கும் மனநிலையை விட்டு அவன் மிகமிக விலகிவிடுவான். திரும்பிப் பார்த்தால் அந்தப் படைப்பு எங்கோ பின்னால் கிடக்கும். மீண்டும் அங்கே சென்று சேரவே முடியாமலாகிவிடும். அப்படியே தொலைந்துபோய்விட நேரிடும்.
இதைத்தான் சமூகவலைத்தளங்கள் செய்கின்றன. ஏன்? ஏனென்றால் அங்கே கலைஞன் அவனுடைய ‘சிறிய விஷயங்களுக்காக’ நுழையும்போது அங்கு குவிந்துகிடக்கும் சிறிய மனிதர்களின் உலகில் நுழைகிறான். அவர்களுக்குப் பிரச்சினையே இல்லை. அவர்கள் எந்த பெரிய செயலையும் செய்துகொண்டிருக்கவில்லை. அவர்களுக்கு எந்தக் கனவுகளும், திட்டங்களும் இல்லை. அவர்களின் உலகியல் இந்த சிறியவிஷயங்களின் சின்ன சுவாரசியம்கூட இல்லாத அன்றாடம். ஆகவேதான் இங்கே வந்திருக்கிறார்கள்.
அவர்கள் தனிநபர்களாகச் சாதாரணமானவர்கள். ஆனால் ஒற்றைப்பெருந்திரளாக பேராற்றல் கொண்டவர்கள். அவர்களுக்கு இன்றைய தொழில்நுட்பமும் சாதகமாக உள்ளது. அவர்களுக்காகவே இன்றைய தகவல்தொழில்நுட்பம் கட்டமைக்கப்பட்டுள்ளது. அதனுடன் ஏற்கனவே மோதிக்கொண்டுதான் இருக்கிறான் கலைஞன், அதை கடந்தே அவன் தன் உலகை அமைக்கவேண்டியிருக்கிறது. சிறியவிஷயம் என நம்பி அவன் அதற்குத் தன்னை அளிக்கையில் பல்லாயிரம் கைகளால் இழுத்துச்செல்லப்படுகிறான்.
இன்றைய தகவல்தொழில்நுட்பம் உருவாக்கும் சமூகவெளி என்பது கலைஞனுக்கும் அருஞ்செயல்களுக்கும் முற்றிலும் எதிரானது. எதிலும் நீண்டநாள், நீண்டநேரம் ஈடுபடாதே என்றும்; தனிப்பட்ட சாதனைகளில் ஈடுபடாதே என்றும்; முப்பது நொடிகளுக்குள் இடம்மாறும் கவனம் உனக்குப் போதும் என்றும்; அதுவே உன்னை வெறும் நுகர்வோர் மட்டுமாக நிலைநிறுத்தும் என்றும் அது ஒவ்வொருவரிடமும் சொல்லிக்கொண்டே இருக்கிறது.
ஆகவே சமூகஊடக வெளி அவனுக்கு வெளியேவர முடியாத பொறியாக உள்ளது. இரண்டுவகையில் அவனை அது கட்டிப்போடுகிறது. ஒன்று, அது அவனைச் சீண்டுகிறது. அங்குள்ள சிறுமைகளும், எதிர்மறையம்சங்களும் அவனை எரிச்சலூட்டி எதையாவது எழுதச்செய்கின்றன. அதற்கு எதிர்வினைகள் எழுகின்றன. அந்த எதிர்வினைக்கு அவன் மீண்டும் எதிர்வினை ஆற்றுகிறான். அது அவனை உள்ளிழுத்துக்கொண்டே இருக்கிறது
இரண்டாவதாக, கலைஞன் தனிமையில் இருக்கையில் அவனுக்கு ஒரு சிறு சுற்றத்தை சமூக ஊடகவெளி உருவாக்கி அளிக்கிறது. அவர்கள் தன் கலையுலக சகாக்கள் என நினைத்துக்கொள்கிறான். அது மாயை. கலைஞனுக்கு அவன் கலையை உணர்வோர் மட்டுமே தோழர்கள். எழுத்தாளனுக்கு வாசகர்கள் மட்டுமே இணைப்பயணிகள். அவர்கள் மிகச்சிலரே இருக்கலாம். ஆனால் அவர்களையே நம்பவேண்டும். வெட்டி அரட்டைக்கான கூட்டம் அதற்கு ஈடு செய்யாது.
தமிழ்ச்சூழலில் எழுத்தாளன் அந்தத் தனிமையை தவிர்க்கவே முடியாது. அதை எதிர்கொண்டே ஆகவேண்டும். தன் வாசகர்களைச் சந்திப்பதற்குரிய வழிகளை அவன் உருவாக்கிக்கொள்ளலாம். அவர்களுடன் இருக்கலாம். சகபடைப்பாளிகளில் இணக்கமானவர்களுடன் இருக்கலாம்.
நான் என்ன செய்கிறேன்? எனக்கு அந்த அரதி நிலை உண்டா? உண்டு. ஒவ்வொரு படைப்புக்கும் இடைவெளிகளில் அதை தீவிரமாக அடைகிறேன். நான் செய்வன இவை.
அ. நான் என் வாசகர்களுடனேயே இருக்கிறேன். அவர்களுடன் பயணங்கள் செய்கிறேன். அவர்களுடன் கலைநிகழ்ச்சிகளுக்குச் செல்கிறேன். அவர்கள் என் தனிமையை இல்லாமலாக்குகிறார்கள். எனக்கு சுற்றம் இருக்கிறது என்னும் நம்பிக்கையை அளிக்கிறார்கள்
ஆ. பயணங்கள் செய்கிறேன். பயணம் என் புறவுள்ளத்தை ஆட்கொள்கையில் உள்ளே ஆழுள்ளம் என் படைப்பையே எண்ணிக்கொண்டிருக்கும்.
இ. படைப்பு இடைவெளிகளில் தீவிரமான அறிவுச்செயல்பாடுகளில் இருப்பேன். தமிழ்விக்கி பதிவுபோடுவேன். தத்துவநூல்களை கூர்ந்து படிப்பேன், புரியும் பொருட்டு மொழியாக்கம் செய்வேன். மூளை இன்னொரு பக்கம் முழுமையாக ஆட்கொள்ளப்படுகையில் நனவிலி படைப்பிலேயே இருக்கும்
ஈ. எந்நிலையிலும் என் படைப்பைப் பற்றிய அகத்தொடர்பை விட்டுவிடலாகாது என்பதில் கவனமாக இருப்பேன். அன்றாடத்தின் அலை என்னை அதிலிருந்து நகர்த்திச்செல்கிறதா என்று பார்த்துக்கொள்வேன்.
எழுத்தாளர்களுக்கு மட்டும் அல்ல, வாசகர்களுக்கும் இந்த அரதி நிலை உண்டு. எச்செயல்களில் ஈடுபடுபவர்களுக்கும் உண்டு. ஆகவேதான் அதற்குரிய சுற்றத்தை உருவாக்கி அளிக்கும்பொருட்டு முழுமையறிவு போன்ற நிகழ்வுகளை நடத்துகிறோம். அதற்கான இனிய இடங்களை உருவாக்கியிருக்கிறோம்.
ஜெ
அரதி- இளங்கோ கிருஷ்ணன்
கடந்த பத்து வருடங்களாக முகநூலில் என்ன செய்திருக்கிறேன் என்று புரட்டிப் பார்த்துக்கொண்டிருந்தேன். அவ்வப்போது உருப்படியான விஷயங்கள் நிறைய எழுதியிருக்கிறேன். இலக்கியம், தத்துவம், வரலாறு தொடர்பான பதிவுகள். சிலது எல்லாம் விரிவான கட்டுரைகள் ஆக்கியிருக்க வேண்டிய அவதானங்கள். சில உயர்தள உரையாடலின் எளிய, மேலோட்டமான வெளிப்பாடுகள். இப்படியான விஷயங்கள் என் விருப்பத்திற்குரியன. இவற்றை எழுதியதற்காக மகிழ்ச்சியடைகிறேன். கிட்டதட்ட திருவோட்டுத் தட்டில் தங்க காசு வீசுவதைப் போன்ற காரியமிது. ஆனால் அதை மனமுவந்தே செய்திருக்கிறேன்.
இதற்கடுத்தபடியாக அவ்வப்போதைய சூழலின் அரசியல், சமூக விஷயங்களுக்கான எதிர்வினைகள். ஒரு சிவில் பொறுப்புமிக்க கலைஞனாக இதை செய்ய வேண்டும். சமூக விஷயங்களில் பங்கேற்க வேண்டும் என்பது என் இளவயது நிலைப்பாடுகளில் ஒன்று. இன்றும் அந்தக் கருத்தில் மாற்றமில்லை என்பதால் அப்படியான பதிவுகள் மேல் ஒருவகை திருப்தியே உள்ளது. எதிர்காலத்திலும் இவற்றைத் தொடரவே செய்வேன்.
மூன்றாவதாக விளையாட்டுத்தனமான பதிவுகள், பகடிகள், நகைச்சுவைகள், மேலோட்டமான கருத்துகள், மன அழுத்தம் மிக்க தருணங்களின் எரிச்சலான வெளிப்பாடுகள், சராசரி முகநூல் குப்பைகள். இவற்றை நிறைய எழுதியிருக்கிறேன். சொல்லப்போனால் முன்னிரண்டை விடவும் இவை எண்ணிக்கையில் அதிகமாகவும் இருக்கக்கூடும். நிஜமாகவே இவற்றை எழுதியதற்காக வருந்துகிறேன். ஓர் உண்மையை வெட்கமின்றி ஒப்புக்கொள்வதென்றால் நேரத்தை வீணடித்திருக்கிறேன். என் ஆற்றல்களை, நேரத்தை, செல்வத்தை இந்த பொருளின்மையில் கரைத்திருக்கிறேன்.
இது ஏன் நிகழ்ந்தது என்று யோசிக்கிறேன். அரதி. அதுதான் காரணம். கலைஞர்களுக்கு ஏற்படும் மனச்சோர்வு. இது ரைட்டர்ஸ் ப்ளாக் அல்ல. எழுத்தின் நுட்பம் நுடங்கும்போது அதை எப்படி சரியாக்குவதென தெரியாத அறியாமையின் சோர்வு. அறிவு உருவாக்கும் திகைப்பின் மனத்தடங்கல். அறிவு உருவாக்கும் சோம்பல் என்று ஒன்று உண்டு. அது ஈகோவின் சலிப்பில் வருவது. அங்கிருந்துதான் எரிச்சல் பிறக்கிறது. அங்கிருந்துதான் எள்ளல் பிறக்கிறது. அங்கிருந்துதான் எகத்தாளம் பிறக்கிறது. அங்கிருந்துதான் மற்றமை மீதான பொருட்டுடின்மை பிறக்கிறது. இது சிக்கலானது மட்டுமில்லை. கீழ்மையானது. ஆபத்தானது. எதிர் மானுடமானது. ஒரு கலைஞன் இதை கடந்து வராவிடில் பெரும் அபத்த களஞ்சியமாகிவிடுவான். கண் முன்னே நிறைய உதாரணங்கள் தோன்றுகின்றன. ஆனால் இதை வாசிக்கும் உங்கள் யூகத்துக்கே விட்டு முன் நகர்கிறேன்.
அரதியை கதிரைவேல் பிள்ளை அகரமுதலி வெறுப்பு என்கிறது. அது வெறுப்பும்தான். ஆனால் அந்த வெறுப்பு ஆர்வமின்மையிலும், சலிப்பிலும் இருந்து வருகிறது. ஆர்வமின்மையும் சலிப்பும் சராசரிதனங்களில் சுவாரஸ்யமின்மைகளில் படைப்பூக்கம் இல்லாத நிலைகளில் இருந்து உருவாகிறது. எதில் படைப்பூக்கம் இல்லையோ, எது வழமையோ, எது க்ளிஷேவோ, எது வியப்புகளற்றதோ, எது அன்றாடமானதோ, எது புதிதற்றதோ அது ஆர்வமூட்டாதாது. அது சலிப்பைத் தருவது, அந்த சலிப்பிலிருந்தே வெறுப்பு உருவாகிறது. இந்த மனநிலையே அரதி.
ஆயுர்வேதம் அரதியை மனச் சிக்கல் என்கிறது. மனதில் தோன்றி உடலை முடக்கும் ஒரு கோளாறு. ரதி என்பதன் எதிர் சொல் அரதி. ரதி என்பது அழகு, காமம், இளமை, படைப்பூக்கம், வாழ்வதற்கான பெருவேட்கை. இவ்வுலகின் ஒவ்வொரு உயிரிலும் ரதியுள்ளது. வாழ்வின் மீதான ஆர்வமே ரதி. வாழ்வின் மீதான சோர்வு அரதி.
அரதி படைப்பூக்கம் உறையும் கணத்தில் தொடங்குகிறது. இனி என்ன புதிதாய் செய்ய என்ற திகைப்பில் பிறக்கிறது. அறிவு அல்லது கலையின் மீதான அப்பியாசம் புதிதாய் ஒன்றை சிருஷ்டிப்பதில் இருக்கும் சவாலை உணர்த்தும்போது அச்சம் உருவாகிறது. தொடர்ந்து கிளிஷேக்களையே உருவாக்கும்போது சோர்வு உருவாகிறது. அரதி உருவாகிறது. இதே கிளிஷேக்களை மற்ற படைப்புகளில், செயல்களில் காணும் கலைஞன் சலிப்பும் எரிச்சலும் கொள்கிறான்.
அதை விஷமாய் அவன் சூழலில் இறைக்கிறான். ரதியை இழக்கும் கலைஞன் ஒரு விஷ ஜந்து. பால் திரிந்து விஷமாவதைப் போன்ற மனநிலை அது. முகநூல் போன்ற வெளிகள் அந்த ஆலகாலத்தை கொட்டுவதற்கான சரியான ஏற்பாடு. தன் இறந்த கால அற்புதங்களின் நிழலில் அமர்ந்துகொண்டு ஒரு கலைஞன் இங்கு அதை விண்டு விண்டு கொடுக்கலாம். இங்கு அப்படியான விஷங்களின் பாற்கடல்களே இருப்பதால் யாருக்கும் அது தெரியப்போவதில்லை.
அரதியின் இன்னொரு பண்பு மனதை வெறுமனே வைத்துக்கொண்டிருத்தல். அதாவது எந்த காரியமும் தீவிரமாய் செய்யாமல் அப்படியே பட்டும் படாமல் சூழலில் பங்கெடுத்தல். அங்கு இருக்கும் லெளகீகத்தின் இயல்பில் அதே லெளகீகமாய் புழங்குதல். இது கொஞ்சம் தீங்கற்றது என்றாலும் ஒரு கலைஞனை மிக சராசரியாய் மாற்றிவிடுவது. சிலர் இந்த நிலை தாங்காமல் ஓடிப்போய் குடியில் விழுகிறார்கள்.
ஒரு கலைஞனாக நான் அரதிக்கு அஞ்சுகிறேன். முகநூல் போன்ற வெளிகளை தன் கலைச் செயல்பாட்டுக்கு வெளியே இப்படியான கீழ்மைகளுக்குப் பயன்படுத்துவதைப் பற்றி நான் மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று நினைக்கிறேன்.
உயர்வான, உருப்படியான விஷயங்களை மட்டுமே முகநூலில் எழுத வேண்டும் என்பது என் தொடக்க நாள் தொட்டு விருப்பம். ஆனால், வெட்கத்தைவிட்டு ஒப்புக்கொள்வதென்றால் நான் அதில் மிக மோசமாக சறுக்கியிருக்கிறேன். முகநூலுக்குள் நுழைந்தபோதே இசை உள்ளிட்ட பல நண்பர்கள் என் படைப்பில் அது நிகழ்த்த சாத்தியமான பாதிப்பை பற்றி பேசியிருக்கிறார்கள். நான் அப்போதெல்லாம் மிகுந்த மன தைரியத்துடன் அவர்களை பகடி செய்திருக்கிறேன். என் இயல்பு, சுபாவம் எதிலும் மாறாது என்றே நம்பினேன். நீட்ஷேவின் ஜரதுஸ்ட்ரா தன் தனிமையில் போதுமான அளவு நிரம்பி மீண்டும் மலையிலிருந்து கீழே தன் மக்களைக் காண வருவதைப் போலே என்னை போலிக் கற்பிதம் செய்திருக்கிறேன். ஆனால், அதில் எதுவும் உண்மையில்லை. இந்த வெளி மெல்ல உங்களை தன் சுபாவதற்கேற்ப மாற்றக்கூடியது. ஒரு படைப்பாளி இதற்கு அஞ்சத்தான் வேண்டும். ஏனெனில், அஞ்சுவது அஞ்சாமை பேதைமை
(இளங்கோ கிருஷ்ணன்- முகநூல்)
Jeyamohan's Blog
- Jeyamohan's profile
- 842 followers


