குற்றம், தண்டனை – கடிதம்
அன்புள்ள ஜெ,
நாவல் சுக்கிரி குழுமத்தில் குற்றமும் தண்டனையும் வாசித்து முடித்தோம்.
முரட்டு மனிதர்களால் நடு ரோட்டில் அடித்துக் கொல்லப்பட்ட கிழட்டு குதிரையை அணைத்துக் கொண்டு அழுவது போல் கனவு காணும் ராஸ்கோல்நிகோவ் என்ற இளைஞன், இரண்டு பெண்களை கோடாரியால் அடித்துக் கொலை செய்துவிடுகிறான். கதையின் முதல் பாகத்தில் நடைபெறும் இந்த நிகழ்வுகளும் அதைத் தொடர்ந்து அவன் படும் மனக்குழப்பங்களும், உணர்வுச் சிக்கல்களும், இந்த இரு மனநிலைகளின் உச்சங்களுக்கு இடையிலாக பைத்தியம் போன்று அவன் படும் பாடுகளும் நாவலாக விரிகின்றன. காவலர்கள் விசாரணை நடைபெறுகிறது. அவர்களுடைய சந்தேக வலையில் ராஸ்கோல்நிகோவும் இருக்கிறான்.
ராஸ்கோல்நிகோவ் மனிதர்களை இரண்டு பிரிவுகளாக பிரித்து வைத்து ஒரு கட்டுரை எழுதியிருக்கிறான்.
“சாதாரணமானவர்கள் எல்லாவற்றையும் பொறுத்துக்க கொண்டும், ஏற்றுக் கொண்டும், சகித்துக் கொண்டும் அன்றாடம் உள்ள தங்களது கடமைகளை செய்துகொண்டு, இனவிருத்தி செய்துவிட்டு, வாழ்க்கையை நடத்திவிட்டு போகிறார்கள். சட்டங்களை மீறிப் போவதற்கு அவர்களுக்கு உரிமை இல்லை, அசாதாரணமான மனிதனுக்கு தாங்கள் சார்ந்திருக்கிற துறையைப் பற்றி புதிதாக எதோ ஒன்றைச் சொல்லக்கூடிய திறன் இயல்பாக இருக்கிறது”
“பண்டைக் காலத்திலிருந்து தொடக்கி லிகர்ஸ், ஸோலான், முகம்மது, நெப்போலியன் என்று இவர்கள் எல்லோருமே விதிகள் மீறியவர்கள்தான் … அப்படி செய்யும் பொது இரத்தக் களரி உண்டாக்குவதற்கு, இரத்தம் சொரிவதற்கும்கூட அவர்கள் தயங்குவதில்லை என்பது உண்மைதான். இப்படிப்பட்ட மனிதர்கள் காலங்காலமாக எவையெல்லாம் புனிதமானவை, உயர்ந்தவை, சிறந்தவை என்று சொல்லப்படுகிறது அவற்றை தகர்ப்பதுதான் அவர்களுடைய நோக்கமாக இருக்கிறது”
“சமூகத்தின் வழக்கமான பாதையிலிருந்து யாரெல்லாம் விலகிப் போகிறார்களோ, சமுதாயத்திற்காக, சமூக நலன்களுக்காக ஏதேனும் ஒரு சிறிய விஷயத்தையாவது புதிதாக சொல்ல வேண்டுமென்று யாரெல்லாம் இயல்பாக முற்படுகிறார்களோ, அவர்கள் எல்லோருமே நிச்சயமாக சிறிய அளவிலோ, பெரிய அளவிலோ, இயற்கையாகவே குற்றவாளிகளாகத்தான் இருப்பார்கள். அப்படி இல்லாவிட்டால் குட்டையில் உரிய மட்டைகளைப்போல வழக்கமான சுவட்டிலிருந்து விலகிப் போக முடியாமல், அதை ஏற்றுக் கொண்டிருப்பார்கள். இதற்கும் அவர்களுடைய தனிப்பட்ட மனப் போக்கும் இயல்பும்தான் காரணம்”
என்பதுபோன்ற வித்தியாசமான கருத்துக்களை கொண்டிருந்த அந்த கட்டுரையின் வழியாக காவல் அதிகாரி, போர்ஃபிரி பெத்ரோவிச் உளவியல் ரீதியான விசாரணையில் அவனை கிட்டத்தட்ட நெருங்கிவிடுகிறார். ராஸ்கோல்நிகோவும் மனதால் தயாராகிவிட்ட நேரம் “மிகோலாய்” தானே அந்த கொலைகளை செய்ததாக வழிய சென்று போர்ஃபிரி பெத்ரோவிச்சிடம் ஒத்துக்கொள்கிறான்.
ராஸ்கோல்நிகோவ் கொலை செய்ததை அறிந்துகொண்ட மற்றொருவனான ஸ்விட்ரி கைலோவ், தற்கொலை செய்துகொள்கிறான். இந்த சூழலில் தப்பித்துவிட வாய்ப்பிருந்தும், ராஸ்கோல்நிகோவ் குற்றத்தை ஒத்துக்கொண்டு தண்டனையை ஏற்றுக்கொள்கிறான்.
***
ராஸ்கோல்நிகோவின் கட்டுரை சில பொதுவான கேள்விகளை கேட்டுக்கொள்ள வைக்கிறது.
குற்றம் என்பது சார்பியல் தன்மை கொண்டதா?. நாடு பிடிக்கும் ஆசையிலோ, சமூகத்திற்கு நன்மை தரும் என்று நம்பும் கருத்தியலை நிலைநாட்டுவதற்காகவோ ஆயிரக்கணக்கான மனிதர்களை கொன்றழிக்கும் மனிதருக்கு, அல்லது, அரசருக்கு அல்லது அரசுக்கு இருக்கும் உரிமை, சமூகத்தை ஒட்டுண்ணியாக உறிஞ்சி கொண்டிருக்கும் ஒரு கிழவியை கொல்ல இதே போன்ற எண்ணம் கொண்ட ஒரு இளைஞனுக்கு இல்லையா?.
குற்றம் என்பதை யார் தீர்மானிப்பது. அப்படி தீர்மானிக்கும் இடத்தில் இருப்பவருக்கு அந்தத் தகுதி இருக்கிறதா?.
தண்டனை என்பது என்ன, அது திருந்தி வருவதற்காக கொடுக்கப்படுகிறதா, அல்லது சட்டங்களை மீறிச்செல்ல முடியாதா சாராசரிகளிலிருந்து விலக்கி வைப்பதற்காக கொடுக்கப்படுகிறதா.
ராஸ்கோல்நிகோவ் என்ற இளைஞன் கொலை செய்தான் என்பதையும் தாண்டி, அவன் காவலர்களால், கண்டுபிடிக்கக்படக் கூடாது என்று வாசிக்கும் எங்களுக்கு தோன்றியது (நாவல் வாசிக்கும் நாங்களும் எதோ ஒரு தருணத்தில் ராஸ்கோல்நிகோவ் போலவே மண்டைக்குழப்பங்களும், அதீத உணர்வு நிலைகளுக்கும் ஆட்பட்டவர்களாக இருந்தோம்).
***
ராஸ்கோல்நிகோவ் எழுதிய கட்டுரை காட்டும் இரண்டு விதமான மனிதர்களில் அவன் எந்த வகையில் இருக்கிறான்?.
ஒரு அதீத மனநிலையில் இரண்டு கொலைகளை செய்துவிட்டு அவன் படும் துன்பங்களும், கிட்டத்தட்ட பைத்தியம் போல அவன் படும் பாடுகளும் அவன் (கட்டுரை சொல்லும்) ஒன்றும் அசாதாரண மனிதன் கிடையாது என்பதை சொல்கின்றன. அவன் ஒரு அசாதாரண மனிதனாக இருந்தால் அவன் மனதில் குற்ற உணர்வு வருவதற்கான சாத்தியங்கள் இல்லை. சமூகத்திற்கு தேவையில்லை என்று ஒரு பெண்ணையும், அந்த சூழலில் தற்செயலாக மாட்டிக்கொண்ட மற்றொரு பெண்ணையும் கொன்றுவிட்டு குற்ற உணர்வுக்கு ஆட்பட வேண்டிய அவசியம் இல்லை. ஒரு நெப்போலியன் சாதாரண மனிதர்களை கொன்றுவிட்டு அதற்காக வருந்தியவன் கிடையாது. அப்படி நினைத்துக் கொண்டிருப்பவன் நெப்போலியனாக இருக்க முடியாது.
கனவில் கண்டதுபோல, இறந்த குதிரையை மடியில் தூக்கிவைத்து பாவப்படும் மனநிலை கொண்டவன். எதோ ஒரு தருணத்தில் அடைந்துவிட்ட மன உச்சத்தில் நிகழ்ந்துவிடும் அந்த கொலைகள், அவனுடைய இயல்பிற்கு உகந்ததாக இல்லை. அதனால்தான் அந்தப்பாடு படுகிறான்.
***
ராஸ்கோல்நிகோவ், ஸ்விட்ரி கைலோவ், லூசின் ஆகிய மூவரும் ஒரு வகையில் ஒற்றுமை கொண்டவர்கள்தான்.
இந்த உலக வாழ்க்கையில், ஓர் அரசனாக, ஒரு திருடராக, மருத்துவராக, ஏமாற்றுக்காரராக, அரசியல் வாதியாக, யாராக இருந்தாலும், அவர்களுடைய செயல்களுக்கும், அவர்களுடைய நடைமுறை வாழ்க்கைக்கும் ஒரு தர்க்க நியாயம் (Justification) தேவைப்படுகிறது. அந்த தர்க்க நியாயத்தை வலுவாக கொண்டவர்கள், தங்களது நிலையிலிருந்து என்ன வேண்டுமானாலும் செய்துவிட தயாராக இருக்கிறார்கள். அப்போது எதிர்தரப்பின் தர்க்க நியாயங்கள் ஒரு பொருட்டாக அவர்களுக்கு தோன்றுவதே இல்லை.
லூசின், தான் நம்பும் புதிய தலைமுறையில் பணம் பிரதானமாக இருப்பதாக நம்புபவன். அதற்காக என்ன வேண்டுமானாலும் செய்ய தயாராக இருப்பவன். ஸ்விட்ரி கைலோவ் பெண் பித்தன். தான் அடைய விரும்பும் பெண்களுக்காக எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம், என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என்ற மனநிலை கொண்டவன். ராஸ்கோல்நிகோவ் ஒரு கருத்தை சிந்தித்து, அதன் மேல் நம்பிக்கை கொண்டு அதற்காக கொலை கூட செய்ய தயாராக இருப்பவன்.
பெண் பித்தனான ஸ்விட்ரி கைலோவிடம் அந்த “தர்க்க நியாயம்” உறுதியாக இருக்கும்வரை, எந்த குற்ற உணர்வும் கொள்ளாமல், பெண்களை வளைத்துக் கொண்டே இருக்கிறான். இறுதியாக ஒரு கணத்தில் அந்த “தர்க்க நியாயம்” உடைந்துவிடுகிறது. அப்போது அவன் தன்னுடைய வாழ்க்கையை இழந்தவனாகிறான். தற்கொலை செய்துகொள்கிறான்.
லூசினுக்கு அந்த கணம் இன்னும் வரவில்லை. அவனுடைய “வாழ்நிலை – தர்க்க நியாயம்” இன்னும் அப்படியே இருக்கிறது. அதனால்தான் எதிர்தரப்பின் நியாயங்கள் அவன் எண்ணத்தில் வரவில்லை. முன்பு போலவே இருக்கிறான்.
ராஸ்கோல்நிகோவுக்கு தான் செய்வது தவறா, சரியா என்ற குழப்பம் இருக்கிறது. அவனுடைய செயலின் “தர்க்க நியாயம்” உறுதியாக இல்லை. அதுவே அவன் படும் மண்டைக் குழப்பங்களுக்கும், பைத்தியக்காரனைப் போன்ற அவனுடைய செயல்களுக்கும் காரணமாக இருக்கிறது.
நாவல் முடிந்ததும், விவாதங்களுக்காக சில கேள்விகளை எழுப்பிக் கொண்டோம்.
ஸ்விட்ரி கைலோவ் ஏன் தற்கொலை செய்துகொள்கிறான். அதன் பின்புலம் என்னவாக இருக்கும்.இரண்டுமுறை ராஸ்கோல்நிக்கோவ் சோனியாவின் கால்களில் விழுகிறான். வேறு வேறு காரணங்கள் சொல்லப்படுகிறது. என்ன வேறுபாடு.ஸ்விட்ரி கைலோவ் இறந்தது தெரிந்தவுடன் சரணடையாமல் திரும்பி சென்ற ராஸ்கோல்நிகோவ் சோனியாவை பார்த்ததும் மறுபடியும் வந்து சரணடைகிறான். ஏன்.இறுதிவரை தான் கொலை செய்தது தவறு இல்லை என்று நினைப்பவன், சோனியாவைப் பார்த்தபோதெல்லாம் தவறுதான் என்று நினைக்கிறான். இதற்கு காரணம் என்ன. (அவளை பார்க்கும் போது லிசவேத்தா நினைவு வருவதினாலா அல்லது வேறு ஏதேனும் காரணம் இருக்கிறதா.)அவனுடைய கட்டுரையின் படி நாவல் முடிவில் அவன் தன்னை சாதாரண மனிதனாக நினைத்து விடுகிறானா, அதனால் சோனியாவிற்கு எப்போதும் அவனைப்பார்த்ததும் இருக்கும் பயம் இல்லாமல் ஆகிவிட்டதா.இந்த விவாதத்தின் ஒரு புள்ளியில் சோனியா தோன்றி வளர்ந்து பேருருவம் பெற்று எழுந்துவந்தாள்.
ராஸ்கோல்நிகோவ், ஸ்விட்ரி கைலோவ், லூசின் ஆகிய இவர்கள் மூவருக்கும் எதிர்ப்பக்கத்தில் சோனியா இருக்கிறாள்.
ராஸ்கோல்நிகோவ் கொலை செய்ததை சொன்னவுடன் அவனிடம் சோனியா சொல்கிறாள்.
“நான்கு வீதிகளும் சந்திக்கும் அந்தச் சதுக்கத்துக்கு உடனே செல்லுங்கள். நாற்சந்தியில் சதுக்கத்தின் மத்தியில் சென்று நில்லுங்கள். மாந்தர்களுக்கு முன்னால் மண்டியிடுங்கள். மண்ணைக் காலங்கப்படுத்திவிட்ட நீங்கள் அதை முத்தமிடுங்கள். இந்த உலகம் முழுக்க கேட்கும் படி “நான் ஒரு கொலைகாரன், நான் ஒரு கொலைகாரன் என்று உரக்கச் சொல்லுங்கள்” என்று சொல்கிறாள்.
காவலர்கள் விசாரணையின்போது தான் செய்ததை மறைக்க முயலும் ராஸ்கோல்நிகோவால் சோனியாவின் வார்த்தைகளை தவிர்க்க முடியவில்லை. அதை அப்படியே செய்ய முயற்சிக்கிறான். ஏனென்றால், சோனியாவின் சரி தவறுகள், எந்த தர்க்கத்தை சார்ந்ததும் இல்லை. அவள் சொன்னவை அவளுடைய தர்க்க புத்தியிலிருந்து வரவில்லை, அது அவளுடைய மனதிலிருந்து வருகிறது. அவளுடைய கருணையிலிருந்து வருகிறது.
அவள் பலி சுமப்பவரின் வடிவமாக இருப்பவள். அவள் துன்பங்களை சுமப்பவள். அவள் குடும்பத்துக்காக, மற்ற மனிதர்களுக்காக மிகப்பெரிய துன்பங்களை சுமப்பவள். அவள் சுமந்துகொண்டிருப்பது சிலுவையை. அத்தகைய சிலுவையை சுமப்பவர்களுக்கு முன்பாக தன்னிலை சார்ந்த எந்த தர்க்க நியாயங்களும் பொருளற்று போய் விடுகின்றன. அவளுடன் தர்க்கத்தினால் அல்ல, ஆன்மாவினால் மட்டுமே எவரும் பேச முடியும்.
காலமெல்லாம் சிலர் அத்தகைய சிலுவைகளை சுமந்துகொண்டிருக்கிறார்கள். காந்தியும் இத்தகைய சிலுவையை சுமந்துகொண்டிருந்தார். அவர் சுமந்துகொண்டிருந்தது இந்த உலகத்தின் சிலுவையை. இந்த மனிதகுலம் முழுமைக்குமான சிலுவையை. அத்தகையோர் தர்க்கத்துக்கு அப்பால் அவர்களுடைய ஆன்மாவின் வழியாக பேச முடிகிறது. அதனால்தான் காந்தியை பார்த்த சாதாரண மனிதர்கள் மற்றொரு காந்தியாக மாறினார்கள். சோனியாவும் அப்படித்தான்.
ராஸ்கோல்நிகோவ் இரண்டுமுறை சோனியாவின் கால்களில் விழுகிறான். முதல்முறை அவள் படும் துன்பங்களை பார்த்து, இந்த உலகத்தில் எத்தனை துன்பங்களை சுமந்துகொண்டிருக்கிறாய் என்று அவள் கால்களில் விழுகிறான். அடுத்த முறை விழும்போது அவன் மனம் திருந்தி அவள் கால்களில் விழுகிறான். முதல் முறை அவள் கொடுத்த சிலுவையை வாங்க மறுத்த ராஸ்கோல்நிகோவ் இரண்டாவது முறை அவளுடைய காலில் விழுந்த போது அவளிடம் கேட்டு வாங்கி பெற்றுக் கொள்கிறான். அப்போது அவனுக்கு சோனியாவிடம் இருந்த விலக்கமும் இல்லாமல் ஆகிவிட்டது. அவன் ஒரு சோனியாவாக சோனியாவின் சிலுவையை சுமக்க தயாராக்கிவிட்டான்.
****
இதுவரை வாசித்த மொழிபெயர்ப்பு நாவல்களில் இதுவே, மிகச்சிறந்த வாசிப்பு அனுபவத்தை கொடுத்தது. நாவலின் பாத்திரங்கள் கொண்ட உணர்வுகளை அப்படியே உணர்ந்து கொள்ள முடிந்தது. இதற்கு காரணம் மொழிபெயர்ப்பாளர், எம், ஏ சுசிலா அவர்கள். அவர்களுக்கு குழுவின் சார்பாக நன்றி.
***
நாவல் முடியும்போது, அன்றாடத்தின் cruality என்ற வார்த்தை மனதுக்குள் சுற்றிக் கொண்டிருந்தது.
30ஆண்டுகளுக்கு முன்பு எனது கிராமத்தில் குடிக்கும் தண்ணீரை தொட்டுவிட்டதால் குஷ்ட ரோகம் கொண்ட ஒருவர் அடித்தே கொல்லப்பட்டார். வேண்டாத காதல் கொண்ட ஒரு பெண்ணுக்கு phosphine மாத்திரை புகட்டப்பட்டது. இன்றும் அந்த கிராமத்தில் இவை போல நடக்க சாத்தியம் இருக்கிறது என்றாலும் அன்றாடத்தில் இல்லாமல் மிக அரிதாக ஆகிவிட்டது. இது இந்த முப்பது வருடங்களில் வந்த மாற்றம்.
குஷ்ட ரோகம் கொண்டவரை அடித்துக் கொன்றவருக்கும் ஒரு தர்க்க நியாயம் இருக்கிறது. வேண்டாத காதல் கொண்ட பெண்ணை கொல்வதற்கும் அவர்களுக்கொரு தர்க்க நியாயம் இருக்கிறது என்றால், மேற்கண்ட மாற்றத்துக்கான விதைகள் எங்கிருந்து போடப்படுகிறது.
காரணம் எதுவாக இருந்தாலும் ஒரு மனித உயிரை கொல்வது தவறு என்று எப்படி அந்த சமூகத்தில் தோன்றியிருக்கும்?. யார் அதை அறமற்ற செயல் என்று நினைத்திருப்பார்?. எப்படி அது தவறு என்று காலத்தில் அங்கிருந்தவர்களின் மனதில் தோன்றச் செய்திருக்கும் என்பது போன்ற கேள்விகள் ஏராளமாக மனதில் தோன்றிக்கொண்டிருக்கின்றன.
போன வாரம் எங்களது தோட்டத்தில் நன்றாக முதிர்ந்து விளைந்துவிட்ட வாழைக்குலையை வெட்டினேன். குலை வெட்டிய வெற்று மரத்தை வெட்டும் நேரத்தில் “வாழை மரத்தை வெட்டாதே, இன்று வெள்ளிக்கிழமை”, என்று தொண்ணூறு வயதைத் தொடும் என் அம்மா சொன்னார்.
குலைவெட்டிய பின்னரும் வெறும் மரம் இலைகளோடு ஒரு வாரமாக நின்றுகொண்டிருக்கிறது!!.
அன்புடன்,
சி. பழனிவேல் ராஜா.
Jeyamohan's Blog
- Jeyamohan's profile
- 842 followers

