Jeyamohan's Blog, page 85
June 3, 2025
ஆறு தாரகைகள்
யுவன் சொல்வது போல் இப்பின்னுரை இந்நாவலின் நீண்ட ஆலாபனை அல்லது வலுவான அடித்தளம் தான். இந்நாவலின் மத்யமும், துரிதமும் எங்கிருந்து முளைத்தெழுந்தன என்று உணர்ந்து கொள்ள முடிகிறது.
சிந்தனையின் எதிரிகள்
நான் புதியதாக படிக்க ஆரம்பித்திருக்கும் வாசகன். கல்லூரி மாணவனாக இருக்கிறேன். உங்களுடைய ஆனந்தவிகடன் பேட்டியை வாசித்தேன். மிகச்சிறந்த பேட்டியாக இருந்தது. அதில் நீங்கள் சொன்ன விஷயங்கள் எல்லாமே யோசிக்கவேண்டியவை. ஆனால் அதைப்பற்றிய கருத்துக்கள் எல்லாமே கடுமையான வசைகளாக இருந்தன. கீழ்த்தரமான நிலையிலே அமைந்திருந்தன. இந்த மாதிரியான வசைகள் ஏன் வருகின்றன? ஒரு கருத்து ஏன் இப்படி இவர்களால் வசைபாடப்படுகிறது.
சிந்தனையின் எதிரிகள்Once I was an avid reader; I used to read 200 pages daily. Now I am struggling to read for my essential qualification. I think the majority of the people in our age are actually in this condition.
About readingசிந்தனையின் எதிரிகள்
நான் புதியதாக படிக்க ஆரம்பித்திருக்கும் வாசகன். கல்லூரி மாணவனாக இருக்கிறேன். உங்களுடைய ஆனந்தவிகடன் பேட்டியை வாசித்தேன். மிகச்சிறந்த பேட்டியாக இருந்தது. அதில் நீங்கள் சொன்ன விஷயங்கள் எல்லாமே யோசிக்கவேண்டியவை. ஆனால் அதைப்பற்றிய கருத்துக்கள் எல்லாமே கடுமையான வசைகளாக இருந்தன. கீழ்த்தரமான நிலையிலே அமைந்திருந்தன. இந்த மாதிரியான வசைகள் ஏன் வருகின்றன? ஒரு கருத்து ஏன் இப்படி இவர்களால் வசைபாடப்படுகிறது.
சிந்தனையின் எதிரிகள்Once I was an avid reader; I used to read 200 pages daily. Now I am struggling to read for my essential qualification. I think the majority of the people in our age are actually in this condition.
About readingJune 2, 2025
தீமையே அடிப்படை மனித இயல்பா?
‘மானுடத்தின் இருண்ட ஆழங்களுக்குள் செல்லும் படைப்பு இது’ என்றுதான் பெரும்பாலான நவீன இலக்கியங்களின் பின்னட்டைக்குறிப்புகள் சொல்கின்றன. உண்மையில் மனிதனின் ஆதாரமான இயல்பு தீமையா? அதுதான் நம் வாழ்க்கையை தீர்மானிக்கிறதா?
விருதுகள், ஏற்பதும் மறுப்பதும்
அன்புள்ள ஜெ.,
பிரபல பின்னணிப் பாடகர் எஸ்.ஜானகி 2013 ஆம் ஆண்டு தனக்கு பத்மபூஷன் விருது வழங்கப்பட்ட போது தாமதமாக அளிக்கப்பட்ட சிறிய விருது என்று ஏற்க மறுத்துவிட்டார். அது அப்போது பெரிதும் விமர்சிக்கப்பட்டது. விருதுகள் வெவ்வேறு காரணங்களுக்காக மறுக்கப்பட்டிருக்கின்றன. நீங்களே விருதுகளை ஏற்க மறுத்திருக்கிறீர்கள்.
விஷ்ணுபுரம் இலக்கிய வட்டம் வழங்கும் விருதுகள் அவ்வாறு ஏற்க மறுக்கப்பட்டிருக்கின்றதா? அது போன்ற சந்தர்ப்பங்களில் உங்கள் நிலைப்பாடு என்ன?
அன்புடன்,
கிருஷ்ணன் சங்கரன்
*
அன்புள்ள கிருஷ்ணன் சங்கரன்,
விருதுகளை ஏற்பதுபோலவே மறுப்பதும் இயல்பான ஒன்றுதான். விருது மறுப்பை பரபரப்பான வம்பாக ஆக்கிக்கொள்ள வேண்டியதில்லை. அது விருது அளிக்கும் நிறுவனம் மீதான விமர்சனமாக இருந்தாகவேண்டும் என்பதுமில்லை. இதை தொடர்ச்சியாக சொல்லி வருகிறேன்.
விருதுகள் ஒருவருக்கு ஓர் அமைப்பால் அளிக்கப்படுகின்றன. அந்த அமைப்பின் இலக்கிய அளவுகோல், அதன் செயல்பாடுகள் ஆகியவற்றில் நமக்கு மதிப்பு இருந்தால் அந்த விருதை நாம் ஏற்கிறோம். அதுவே முதன்மையான அடிப்படை.
எனக்கு முப்பது வயதிருக்கையிலேயே ஓர் அமைப்பு எனக்கு விருதை அறிவித்தபோது மறுத்துள்ளேன். ஒரு விருதுப் பட்டியலில் கோவி. மணிசேகரனும் நானும் இருந்தோம். அந்த அமைப்பின் இலக்கிய அளவுகோலை நான் ஏற்கமுடியாது என வெளிப்படையாகவே அறிவித்து மறுத்துவிட்டேன். .அந்த மறுப்பறிக்கை சுபமங்களாவில் வெளிவந்தது. அப்போது அது விவாதமாக ஆகியது.
அந்த பட்டியலில் இன்குலாப் இருந்தார். அவரை ஓர் இலக்கியவாதியாகவே நான் என்றும் கருதியதில்லை, அவர் எளிய அரசியல்கோஷங்களை எழுதிய அரசியல்வாதி மட்டுமே. ஆனால் அந்த அரசியல் நேர்மையானது என்பதனால் அவருடன் விருதை ஏற்பது எனக்கு கௌரவம், கோவி மணிசேகரன் அப்படி அல்ல என்று அப்போது குறிப்பிட்டேன்.
அவ்விருதை நான் ஏற்றுக்கொண்டால் அந்த அமைப்பின் அளவுகோலை நான் ஏற்றுக்கொள்கிறேன் என்று பொருள். கோவி.மணிசேகரன் வணிக எழுத்தாளர். வணிக எழுத்திலேயே அடிப்படைத் தரம் இல்லாத கீழ்நிலைக் கேளிக்கையாளர் என்பது என் மதிப்பீடு. இப்படி விருது வழங்கும் அமைப்பின் அணுகுமுறையில் உடன்பாடு இல்லையேல் மறுக்கலாம்.
இன்னொன்று, அவ்விருது அளிக்கும் அமைப்பின் அடையாளத்துடன் தனிப்பட்ட காரணங்களால் உடன்பாடில்லை என்றால் மறுக்கலாம். 1998 வாக்கில் எனக்கு இந்திய அளவில் அளிக்கப்படும் ஓர் உயர்விருது அறிவிக்கப்படுவதாக சொன்னார்கள். ஆனால் அது மதஅரசியல் சார்ந்த பின்புலம் கொண்ட விருது. நான் மதத்தையும் மெய்யியலையும் தெளிவாக வேறுபடுத்திக்கொண்ட காலம் அது. ஆகவே மறுத்துவிட்டேன்.
அதைப் பற்றி எழுதியிருக்கிறேன். அருண்மொழியின் நகைகள் எல்லாம் அடகில் இருந்த காலம் அது. அது பெரிய தொகை. அதை மறுப்பதை அவளிடம் சொன்னால் என்ன சொல்வாள் என நான்குநாட்கள் குழம்பி கடைசியில் கருத்து கேட்டேன். ’உனக்கு வேணாம்னா விட்டிரு’ என்று ஒரே வரியில் சொல்லிவிட்டு மறுகணம் பக்கத்துவீட்டுச் சிறுவனைப் பற்றிப் பேச ஆரம்பித்துவிட்டாள். இன்னொரு முறை யோசிக்கவோ பேசவோ இல்லை. ஆனால் நான் மேலும் பத்துநாட்கள் அந்த பெருந்தொகை பற்றி யோசித்துக்கொண்டே இருந்தேன்.
விஷ்ணுபுரம் – குமரகுருபரன் விருது இரு கவிஞர்களுக்கு அளிப்பதாகச் சொன்னபோது அவர்கள் இருவருக்கும் தனிப்பட்ட முறையில் மறைந்த குமரகுருபரனுடன் கடுமையான மோதல் இருந்தது என்றும், அவரைப்பற்றி கடுமையாக எதிர்வினை ஆற்றியதும் உண்டு என்றும், ஆகவே விருதை ஏற்பது சரியாக இருக்காது என்றும் சொன்னார்கள். என்னையே குமரகுருபரன் இரவில் பக்கார்டி துணையுடன் வசைபாடியதுண்டு, காலையில் மன்னிப்பு கோரியதும் உண்டு, அதைப் பெரிதுபடுத்தவேண்டாம் என்று சொன்னேன். அவர்கள் உறுதியாக இருந்தனர். அது இயல்பான முடிவு என எடுத்துக்கொண்டேன்.
விருது சார்ந்த கொள்கைகள் ஒருவருக்கு இருக்கலாம். உதாரணமாக, அரசு சார்ந்த விருதுகளை ஏற்பதில்லை என்பது என் கொள்கை. அந்த கொள்கையை நான் கொஞ்சம் கொஞ்சமாகவே வந்தடைந்தேன். ஏனென்றால் அவ்விருதுகளை, அரசை விமர்சிக்கும் உரிமையை இழக்கிறேன் என்று பட்டது. அந்த முடிவை வந்தடைந்தபின் அதை வெளிப்படையாக அறிவித்தும் உள்ளேன். பத்மஸ்ரீ உட்பட அரசு விருதுகள் பெற முடியுமா என்று கேட்ட்கப்பட்டபோது மறுத்தேன். அது சரியான முடிவே என உறுதியாக உள்ளேன்.
அப்படி ஒரு மறுப்பு விஷ்ணுபுரம் விருதுக்கும் வந்தது. ராஜேந்திர சோழனுக்கு விருது அளிப்பதாக சொன்னபோது அவர் மறுத்தார். என் மேல் பெருமதிப்புண்டு என்றும், ஆகவேதான் என் நூல் வெளியீட்டில் கலந்துகொண்டதாகவும், விஷ்ணுபுரம் அமைப்பின் இலக்கியச் செயல்பாடுகள் மீதும் மதிப்புண்டு என்றும், ஆனால் விருதை ஏற்கமுடியாது என்றும் சொன்னார்.அவர் தமிழ்த்தேசப் பொதுவுடைமைக் கட்சி என்னும் அமைப்பை நடத்திவந்தார். விஷ்ணுபுரம் போன்ற விருதுகளை ஏற்பதென்பது கட்சிக்கொள்கைகளுக்கு எதிரானது என்றார். தமிழ்த்தேசிய பொதுவுடைமை என்னும் கருத்தை வெளிப்படையாக ஏற்றுக்கொள்ளாத எந்த அமைப்புடனும் இணைந்து எவ்வகையிலும் செயல்படமுடியாது என்றார். அத்துடன் தன்னுடைய தனிப்பட்ட முடிவு என ஏதுமில்லை, கட்சியுடன் கலந்தே முடிவெடுக்கமுடியும் என்றார்.
அதை நான் ஏற்றுக்கொண்டேன். விஷ்ணுபுரம் நிகழ்வில் அவர் உரையாற்ற வேண்டும், மேடையிலேயே விருதை மறுப்பதென்றாலும் செய்யலாம் என்று கோரினேன். விருதை வீணாக்கவேண்டாம், வேறு ஒருவருக்கு அளிக்கலாம் என்றார். அவர் மேடையில் பேச வருவதாகச் சொன்னார், வந்தால் நேரடி அரசியல் பேசக்கூடாது என்று நான் சொன்னதை ஏற்றுக்கொண்டார். ஆனால் தன் இலக்கியப் பார்வை தமிழ்த்தேசியம் சார்ந்தது, அதைச் சொல்வேன் என்றார். ஏனென்றால் எந்த மேடையையும் பிரச்சாரத்துக்காகப் பயன்படுத்திக்கொள்ளலாம் என்பது அவர் கட்சியின் கொள்கை. அவருடைய உரை தனிப்பட்ட எவரையும் தாக்குவதாக இல்லை என்றால் சரிதான் என்று நான் ஒப்புக்கொண்டேன். ஆனால் அவருடைய உடல்நிலை காரணமாக அவரால் கலந்துகொள்ள முடியவில்லை.
(ஆனால் வந்திருந்தால் பிரச்சினை ஆகியிருக்கும் என பின்னர் தோன்றியது. அவர் உட்பட தமிழ்த்தேசியர்கள் தீவிரமான தெலுங்கு எதிர்ப்பு, பெரியார் எதிர்ப்பு அரசியலுக்குள் சென்றுகொண்டிருந்த காலம் அது. எங்கள் மேடைகள் அத்தகைய விவாதங்கள் நோக்கிச் செல்லவேண்டியதில்லை என்பதே என் தரப்பு. அந்த அரங்கு அந்த பரிசுபெறும் படைப்பாளியை நோக்கிக் குவிவதாக, இலக்கியம் மட்டுமே பேசப்படுவதாக அமையவேண்டும் என நினைக்கிறேன். இது நான் இப்போது உறுதியாக உள்ள கருத்து)
விருது என்பது ‘பரிசு’ அல்ல. அது ஓர் ஏற்பு மட்டுமே. ஒரு குழு அல்லது அமைப்பு தன்னுடைய பொதுவான இலக்கிய ரசனையின் அடிப்படையில் விருதை வழங்குகிறது. அது ஒரு சமூக ஏற்புதான். எந்த சமூகச் செயல்பாட்டுக்கும் சமூகத்தின் தரப்பில் இருந்து ஓர் ஏற்பு அவசியம்.
விருதுகளின் நோக்கங்கள் இரண்டு. முதலில் ஓர் இலக்கியவாதியை வாசகர்களுக்கு அடையாளம் காட்டுதல். ஆகவேதான் விஷ்ணுபுரம் அமைப்பின் விருதுகளுடன் விரிவான விமர்சனங்களும், நூல்வெளியீடும், ஆவணப்படமும் நிகழ்கின்றன. பெரிய விழா எடுக்கப்படுகிறது, மற்ற மொழிகளில் இருந்து படைப்பாளிகள் அழைக்கப்படுகிறார்கள், செய்திகள் வெளிவரச் செய்யப்படுகின்றன. புதிய எழுத்தாளர்களை அடையாளம் காட்டுவதும், முந்தைய தலைமுறை எழுத்தாளர்களை புதியவாசகர்களுக்கு சுட்டிக்காட்டுவதும் எங்கள் நோக்கம்.
இரண்டாவது நோக்கம், ஓர் எழுத்தாளரிடம் வாசகர்களாக நின்று உங்களை வாசிக்கிறோம், உங்களை அணுகி வருகிறோம் என அறிவிப்பது. மூத்த படைப்பாளிகளுக்கு அத்தகைய ஓர் அறிவிப்பு எத்தனை நம்பிக்கையை, ஊக்கத்தை அளிக்கிறது என்பதை கண்கூடாகக் கண்டுகொண்டிருக்கிறோம். இளம்படைப்பாளிகளுக்கு அந்த வாசகக்குரல் நம்பிக்கையூட்டுகிறது, அதிலுள்ள எதிர்பார்ப்பு ஓர் அறைகூவலாகவும் அமைகிறது. இங்கே எழுத்தாளர்கள் மூத்தவர்களானாலும் இளையோரானாலும் பொருட்படுத்தப்படாமலேயே உள்ள சூழலில் இந்த ஏற்பு அவர்களுக்கு ஊக்கம் அளிக்கிறது.
இதையொட்டி நாங்கள் அமைக்கும் இலக்கிய அரங்கமும் இந்த நோக்கம் கொண்டதுதான். படைப்பாளிகளை வாசகர் முன் நிறுத்துவதே அதன் நோக்கம். இத்தனை பேர் ஆர்வமாகவும் தீவிரமாகவும் வாசிக்கிறார்கள் என்று அந்தப் படைப்பாளிகளுக்குத் தெரியவேண்டும், அது எழுத்துக்கு அளிக்கும் ஊக்கம் அளப்பரியது. விருதை ஒட்டி நிகழும் எங்கள் அரங்கு இலக்கிய விவாதங்களுக்குரியது அல்ல, சக இலக்கியவாதிகள் பேசுவதற்கானது அல்ல. அது வாசகர்களுக்குரியது. இலக்கிய விவாதங்களுக்கான அரங்குகளை தனியாக நிகழ்த்துகிறோம். குரு நித்யா ஆய்வரங்கம்போல. அவை ஓர் ஆண்டில் ஐம்பதுக்குமேல் நிகழ்கின்றன, இப்போது உலகமெங்கும்.
தமிழ் எழுத்தாளனுக்கு ஒரு புள்ளியில் எவரேனும் படிக்கிறார்களா, இல்லை சும்மா நாமே நமக்காகப் பேசிக்கொண்டிருக்கிறோமா என்ற ஐயம் எழும். ஏனென்றால் எங்குமே வாசகர்களை அவன் சந்திக்க முடியாது. இந்த அரங்குகளில் அவை நிறைந்து அமர்ந்திருக்கும் வாசகர்களை அந்த எழுத்தாளர்களுக்கு காட்டுகிறோம், அவர்களிடம் நேரட்சியாக உரையாடச் செய்கிறோம். அதுவும் ஒரு வகை விருதுதான்.
ஜெ
காவியம் – 43

குணாட்யர் தன் பதினேழாவது வயதில் சாதவாகன அரசில், அக்னிபுத்ர சதகர்ணியின் காவியப்பிரதிஷ்டான் என்னும் பேரவையின் தலைமைப் புலவராக அமர்ந்தார். நிகரற்ற பேரறிஞர் என்றும், சந்தேகத்திற்கு இடமற்ற தெய்வஅருள் கொண்டவர் என்றும் அவரை பிரதிஷ்டானபுரியின் அறிஞர்களும் கவிஞர்களும் புகழ்ந்தார்கள். மெல்ல மெல்ல அந்தப் புகழ் தெற்கே விஜயபுரி முதல் வடக்கே உஜ்ஜயினி வரை பரவியது. சூரியபுத்ர சதகர்ணியின் புகழுக்கு நிகராக அவர் புகழ் விளங்கியது. அரண்மனைக்கு அருகிலேயே அவருக்கும் ஓர் அரண்மனை அளிக்கப்பட்டது. அங்கே அவர் தன் இரண்டு மனைவியருடன் குடியேறினார். அவருக்கு எட்டு பிள்ளைகள் பிறந்தன. தங்கப்பூணிட்ட பல்லக்கில் வெள்ளி மிதியடிகள் அணிந்து அவர் காவிய அரங்குக்குச் சென்றார். முதல்முறையாக பிரதிஷ்டானபுரியின் காவிய அரங்கில் அரசருக்கு இணையான ஓர் இருக்கை அவைத்தலைவராகிய அவருக்கும் அமைக்கப்பட்டது.
அவரிடம் நூறு மாணவர்கள் கல்வி கற்றனர். ஒவ்வொருவருக்கும் ஒரு பொழுதை அவர் அளித்திருந்தார். புலர்காலையில் விடிவெள்ளிக்கு கீழே, கோதாவரியின் கரையில் அமர்ந்து அவர் அவர்களுக்குப் பாடம் சொன்னார். அதன்பின் இரவில் குளிர் ஏறும்வரை தொடர்ச்சியாக வகுப்புகளை நடத்தினார். எந்த நூலையும் அவர் நினைவிலிருந்தே எடுத்தார். ஒருபோதும் ஒருமுறை சொன்னதை பிறிதொரு முறை சொன்னதில்லை. கற்பதில் பின்தங்கிய மாணவனை சிறு தயக்கம் கூட இல்லாமல் தன்னிடமிருந்து அகற்றினார். அவரிடம் மாணவராகச் சேர்வதற்காக தொலைதூரத்தில் காந்தாரத்தில் இருந்தும், காமரூபத்தில் இருந்தும் கூட மாணவர்கள் தேடி வந்தனர். அவருடைய பார்வையை அடைவதற்காக அவர் செல்லும் வழியெங்கும் காத்திருந்தார்கள். அவர் காலடி பட்ட மண்ணை அள்ளிக் கொண்டுசென்று பள்ளிகளில் தூவினால் கல்வி சிறக்கும் என்ற நம்பிக்கை உருவாகியது.
குணாட்யருக்கு குணதேவன், நந்திதேவன் என்னும் இரு மாணவர்கள் அமைந்தார்கள். அவர் அந்த இரு கால்களின் வழியாக நடமாடுகிறார் என்று பிரதிஷ்டானபுரியில் சொல்லப்பட்டது. தொடக்கநிலை மாணவர்களுக்கு குணதேவன் வியாகரணமும், நந்திதேவன் காவியமும் பாடம் நடத்தினார்கள். அவர்களில் சிறந்தவர்கள் மட்டுமே குணாட்யரை அணுக ஒப்புதல் அளிக்கப்பட்டது. குணாட்யரின் ஒரு வாழ்த்தை பெறுவதென்பது பிரதிஷ்டானபுரியின் வணிகர்களுக்கும், படைத்தலைவர்களுக்கும் தலைமுறைப் புகழை அளிப்பது என்று நம்பினார்கள். பொன்னும் பொருளும் அளித்து அவரிடமிருந்து நான்கு வரிச் செய்யுட்களை பெற்றுக்கொண்டனர். அந்நம்பிக்கை பரவி நெடுந்தொலைவுகளில் இருந்து செய்யுளுக்கான மன்றாட்டு ஓலையுடனும் பொருளுடனும் தூதர்கள் பிரதிஷ்டானபுரிக்கு குணாட்யரைத் தேடிவந்தார்கள்.
குணாட்யரை எதிர்க்கவோ, அவருடன் சமானமாக நின்று உரையாடவோ அந்த சபையில் எவருக்குமே துணிவிருக்கவில்லை. முதல்நாளிலேயே அவர் தன்னை யார் என காட்டிய பின்னர் அவருடைய ஆற்றல் மேல் சந்தேகம் எழவேயில்லை. ஆனால் அந்த அவையில் ஒவ்வொருவரும் ஒருநாள் அவரை வெல்வதைப் பற்றியே ரகசியமாகக் கனவு கண்டார்கள். பெரும்புலவர்கள் குணாட்யரை வென்று, அவர் அவையில் சிறுமை எய்தி கண்ணீருடன் நின்றிருக்கும் காட்சியை அகக்கண்ணில் கற்பனை செய்து மெய்சிலிர்ப்படைந்தனர். இளைஞர்கள் என்றோ ஒருநாள் அந்த அவையில் அவர்கள் குணாட்யரை வெல்லமுடியும் என்ற பகற்கனவு காமம் சார்ந்த பகற்கனவுகளை விடவும் கிளர்ச்சியூட்டுவதாக இருப்பதை அறிந்தனர். ஒவ்வொருவரும் அதற்கான தருணங்களை கற்பனை செய்தாலும் அப்படியொன்று அமையும் என்று எண்ணியிருக்கவே இல்லை.
குணாட்யரை அரசர் தன் சபையின் அரிய ரத்தினங்களில் ஒன்று என நினைத்தார். அவரைப் பற்றிய எல்லா பெருமையும் தன் பெருமையே என எண்ணினார். குணாட்யருக்கு தனக்கு சமானமான ஆடையும் நகைகளும் அளித்து அணியச் செய்தார். ஒரு முறை தொலைநாடான சீனாவில் இருந்து வந்த தூதன் ஒருவன் முதலில் குணாட்யரை அரசர் என்று எண்ணி வணங்கி அவரிடம் பேசத் தொடங்கியபோது சபையினர் திடுக்கிட்டனர். ஆனால் அரசர் சிரித்தபடி “அவரும் இந்த நாட்டின் சக்ரவர்த்திகளில் ஒருவர்தான்” என்று சொன்னார். அந்தச் சொற்றொடர் நாடெங்கும் பரவி குணாட்யரின் புகழை மேலும் உச்சத்திற்குக் கொண்டுசென்றது.
குணாட்யர் எந்த அரசவையிலும் எந்தக் கவிஞரும் எப்போதுமே பெற்றிராத பெரும்புகழையும் இடத்தையும் பெற்று வாழ்ந்திருந்த காலகட்டத்தில் நிகழ்ந்தது இது. அரசர் அக்னிபுத்ர சதகர்ணி, பிரதிஷ்டானபுரியின் எந்த அரசரையும் போலவே எழுதவும் படிக்கவும் அறிந்தவர் அல்ல. சொல் பயில்வதற்கு முன்னரே வில் பயில்பவர்கள் அவர்கள் என்று குறிப்பிடப்படுவது வழக்கம். அவர்களுக்கு மொழியால் செய்யப்படவேண்டிய அனைத்தையும் செய்வதற்கு புலவர்களும் அமைச்சர்களும், கற்றுச்சொல்லிகளும், தூதர்களும் ஏராளமான பேர் இருந்தார்கள். மொழிகளைக் கற்பதும், நூல்களை பயில்வதும் அரசரை மென்மையானவராக ஆக்கிவிடும் என்று நம்பப்பட்டது. ஈட்டியின் மிகக்கூரிய முனை போல் ஒரு நாட்டிற்கே அரசன் அமைந்தாகவேண்டும் என்ற பழமொழி புழக்கத்தில் இருந்தது.
நூல்கள் கற்களால் ஆன உண்மைக்குச் சமானமாக சொற்களாலான ஓர் உண்மையை உருவாக்கிக் காட்டுகின்றன. சொற்களாலான உண்மையை சொல்லறிந்தவர்கள் தங்கள் விருப்பப்படி மாற்றிக்கொள்ள முடியும். அந்த இயல்பால் சொற்களை அறிந்தவர்கள் அந்த உலகிலேயே திளைக்கவும், பிறவற்றை பொய் என மறுக்கவும் முனைகிறார்கள். கற்களாலான உண்மை எந்த வகையிலும் அவற்றை அறிபவர்களால் மாற்றிக்கொள்ளக் கூடியது அல்ல. பார்ப்பவர் மறைந்து, சொற்களும் அழிந்தாலும் கற்கள் அவ்வாறே நிலைகொள்ளும். அரசன் அறியவேண்டியவை சொற்களாலானான உண்மைகளையே என்று தொன்மையான சாங்கிய நூலான சாமுத்ரிகரின் அர்த்தவின்யாஸம் குறிப்பிட்டது.
சதகர்ணிகள் எப்போதும் சாங்கிய மெய்ஞானத்தையே தங்கள் முதன்மையறிவாகக் கொண்டிருந்தனர். த்வஷ்டமனுவின் குடிவந்தவரும், அசுரர்களுக்கும் நாகர்களுக்கும் முதல்குருவுமாகிய கபில மாமுனிவர் பாதாளத்தில் இருந்து எழுதி அளித்த சாங்கிய சூத்ரங்கள் என்னும் நூலே அவர்களின் முதல்நூல். அந்நகரை நிறுவிய பரமேஷ்டி என்னும் முனிவர் ’தொட்டறியப்படாதவை எல்லாம் உற்றறியவும் முடியாதவையே’ என்று தன்னுடைய சாங்கிய யோகப் பிரபாவம் என்னும் நூலில் குறிப்பிட்டிருந்ததை அவைகளில் சதகர்ணிகள் அடிக்கடிச் சொல்வதுண்டு. ‘அஸ்பர்ஸ்யமஃபாவ!:’ என்னும் அந்த வரியை தங்களுக்குத் தாங்களே அடிக்கடிச் சொல்லிக் கொள்ளவேண்டும் என்றும் அவர்களுக்கு ஆசிரியர்கள் அறிவுறுத்தியிருந்தனர்.
அக்னிபுத்ர சதகர்ணியின் பட்டத்தரசி அவரால் வடக்கே காம்போஜத்தில் இருந்து மணம் செய்துகொள்ளப்பட்டவள். காம்போஜத்திடம் சதகர்ணிகள் பலகாலமாக பெண் கேட்டுக்கொண்டிருந்தாலும் சதகர்ணிகள் பிறப்பால் குறைவுபட்டவர்கள் என்று காம்போஜத்தினர் எண்ணினார்கள். அக்னிவர்ணிகள் என அழைக்கப்பட்டிருந்த காம்போஜத்தினர் சிவந்த நெடிய உடலும், கூர்மையான மூக்கும், நீலக்கண்களும் கொண்டவர்கள். அக்னியின் பிறப்பான விபாவசு அவர்களின் முதல் குரு. பிராசீனபர்ஹிஸ் என்னும் தர்ப்பையில் வாழும் அனல் அவர்களின் தெய்வம். அனல் மண்ணிலுள்ளவற்றை எரிப்பது, விண்ணுக்குச் செல்லத் துடித்துக்கொண்டே இருப்பது. ஆகவே மண்ணிலுள்ள தெய்வங்களை வழிபடுபவர்களும், இறந்தால் மண்ணுக்கே திரும்புபவர்களும் ஆன எவரையும் அவர்கள் இழிவானவர்களாகவே எண்ணினார்கள்.
அதிலும் சதகர்ணிகள் நிஷாதர்களிடமிருந்து தோன்றியவர்கள் என்பது அனைவரும் அறிந்ததாக இருந்தது. பெண் மறுக்கப்பட்டதும் அக்னிபுத்ர சதகர்ணி தன் படையுடன் கிளம்பிச் சென்று காம்போஜத்தை தோற்கடித்தார். மூன்று நாட்களுக்குள் முறையாக முதல் இளவரசியை மணம் செய்து தராவிட்டால் நகரைச் சூறையாடுவதாக அறிவித்தார். அந்த அச்சுறுத்தல் நிலைகொள்வதற்காக ஒவ்வொரு கால் நாழிகைக்கு ஒருமுறையும் முரசை ஒலிக்கவிட்டு நேரம் குறைந்துகொண்டே இருப்பதை அறிவித்துக் கொண்டிருந்தார். இறுதியில் காம்போஜம் பணிந்தது. மூத்த இளவரசி வித்யுத் த்வனியை அவருக்கு முறையாக மணம் புரிந்து கொடுத்தனர். அந்த மண விழா காம்போஜத்தில் மூன்றுநாட்கள் நடைபெற்றது. நகரிலுள்ள அனைவருக்கும் சதகர்ணி விருந்தளித்துப் பரிசுகளும் கொடுத்தார். அரசியுடன் பிரதிஷ்டானபுரிக்குத் திரும்பி வந்தார்.
அந்த வெற்றியை பிரதிஷ்டானபுரி ஏழுநாட்கள் கொண்டாடியது. பன்னிரு சிறு காவியங்கள் அந்த வெற்றியைப் பற்றி காவ்யபிரதிஷ்டானத்தின் கவிஞர்களால் இயற்றப்பட்டன. ‘காம்போஜ விஜயம்,’ ’அக்னி பரிணயம்,’ ‘ஆக்னேயோத்ஸ்வம்,’ ஆகிய மூன்று காவியங்களும் அவற்றில் சிறந்தவை என அறியப்பட்டன. ஏறகனவே சதகர்ணிக்கு ஏழு அரசியர் இருந்தாலும் காம்போஜத்தின் இளவரசி பட்டத்தரசியாக பட்டம் சூட்டப்பட்டாள். அவள் தங்குவதற்கு காம்போஜவிலாசம் என்னும் பெரிய அரண்மனை கோதாவரியின் கரையில் கட்டப்பட்டது. அதற்குத் தனியாகக் காவல்படையும், அரணும் உருவாக்கப்பட்டது. அவை முழுக்க அரசியின் ஆணையில் இருந்தன. அரசர் சதகர்ணியே அரசியிடம் ஒப்புதல் பெற்றுத்தான் அவளைப் பார்க்கமுடியும் என்னும் நிலை இருந்தது.
ஒரு நிலவுநாளில் அரசர் அக்னிபுத்ர சதகர்ணி தன் அரசியுடன் உப்பரிகையில் இளங்காற்றில் அமர்ந்து சரசமாடிக் கொண்டிருந்தார். அரசியின் நான்கு அந்தரங்கமான சேடிகளும் உடனிருந்தார்கள். அரசி காவியங்களிலும் அலங்கார சாஸ்திரத்திலும் பயிற்சி பெற்றவள். ஓவியம் வரைவதிலும் வீணை வாசிப்பதிலும் தேர்ச்சி கொண்டிருந்தாள். அரசி ‘தோளைத் தொட்டுச் செல்லும் கோதாவரியின் காற்றா கூந்தலில் விளையாடும் நிலவொளியா எது குளிர்ந்த மென்மையான பட்டு?’ என்று அப்போது அவள் உருவாக்கிய ஒரு கவிதை வரியை சொன்னாள். அவளுடைய தோழிகள் அதைப் பாராட்டி ’ஆகா!’ என்ற ஒலி எழுப்பினார்கள்.
அரசர் ஏதேனும் சொல்லவேண்டும் என விரும்பினார். எனக்கு கற்பனைகளைவிட உண்மையே முக்கியமானது என்ற பொருளில் ஏதேனும் சொல்லவேண்டும் என்று உத்தேசித்தார். நிலவும் காற்றும் அருவமானவை, நீ தொட்டறியத்தக்கவளாக என் அருகே இருக்கிறாய் என்று கூறவேண்டும் என்று முயன்றார். ஆனால் அதற்குரிய சொற்கள் நினைவுக்கு வரவில்லை. ஆசிரியர்கள் அடிக்கடிச் சொன்ன சொல்லாட்சி நாவில் எழுந்தது. ஆனால் அதை ’அஸ்பர்ஸ்யம் அஃபாவம்’ என்று சொல்வதற்குப் பதிலாக நாக்கு தடுமாறி ‘அஸ்பர்ஸ்யம் அனுஃபாவம்’ என்று சொன்னார். அரசி “ஃபவது; அஸ்பர்ஸ்யம் ஃபவான்” என்றாள். அவள் தோழிகள் உரக்கச் சிரித்தபடி விலகி ஓடினார்கள்.
ஏதோ பிழையாகச் சொல்லிவிட்டோம் என்று அரசருக்குப் புரிந்தது. என்ன சொல்லிவிட்டோம் என்று புரியவில்லை. பொதுவாகச் சிரித்துக்கொண்டு அந்தத் தருணத்தைக் கடந்தார். அதன்பின்னரும் அவளுடன் பேசி இரவைக் கழித்தபிறகுதான் திரும்பினார். ஆனால் அவள் கண்களிலும் தோழிகளின் கண்களிலும் சிரிப்பு எஞ்சியிருப்பது தெரிந்தது. அதை எண்ணியபடியே திரும்பி வந்தார். தன் அறையிலும் பிறகு அரசவையிலும் துயருற்றவராகவும் எண்ணங்களில் உழல்பவராகவும் இருந்தார். நாலைந்து நாட்கள் ஆகியும் அந்த தனிமையும் துயரும் நீடிப்பதைக் கண்டு அமைச்சர்கள் விசாரித்தாலும் ஒன்றுமில்லை என்று மறுத்துவிட்டார்.
எட்டு நாட்களுக்குப் பிறகு தன் அவையிலேயே மிக வயதில் இளையவனாகிய ஒரு பிராமணப் பண்டிதனை அழைத்து அவனிடம் சாதாரணமாக விசாரிப்பதுபோல அதன் பொருளைக் கேட்டார். “இது ஒரு நாடகத்தில் வரும் காட்சி. ஓர் ஆணும் பெண்ணும் இப்படிப் பேசிக்கொள்கிறார்கள்” என்றார்.
அவன் “கல்வி கற்றவளாகிய ஒரு பெண் கல்வியில்லாத காட்டுமிராண்டியான ஒருவனை இவ்வாறு ஏளனம் செய்கிறாள்” என்றான். “அவள் சொன்ன கவிதைவரியை புரிந்துகொள்ளாமல் அவன் தீண்டத்தகாதவற்றின் மேல் கருணை காட்டவேண்டும் என்கிறான். அவள் ஆம், தீண்டத்தகாதவர் தாங்களே என்கிறாள்” என்றான்.
அதன்பிறகு பேசமுடியாமல் சதகர்ணி நடுங்கத் தொடங்கினார். அவனை அனுப்பிவிட்டு அப்படியே தன் படுக்கையறைக்குச் சென்று படுத்துவிட்டார். எட்டு நாட்கள் அவர் உடலில் காய்ச்சல் இருந்தது. தூக்கத்திற்கு விழிப்புக்கும் நடுவே அவர் அலைக்கழிந்தார். ஏதேதோ உளறிக்கொண்டே இருந்தார். அஸ்பர்ஸ்யம் என்னும் சொல் அடிக்கடி வந்ததை வைத்து ஏதோ பிசாசை அவர் கண்டு அஞ்சிவிட்டதாக அரசவை மருத்துவன் சொன்னான்.
அவன் அளித்த மருந்துகளால் தொடர்ச்சியாக இரவும் பகலும் தூங்கி, எட்டு நாட்களுக்குப் பின் தேறிவந்தார். அரசவைக்குச் செல்வதை தவிர்த்து தன் படுக்கையறையிலேயே இருந்த அவர் தலைமைப் புலவர் குணாட்யரை அங்கே வரவழைத்தார். அவரிடம் நிகழ்ந்ததைச் சொன்னார். “நான் வரும் மூன்று மாத காலம் என் நாட்டை பார்ப்பதற்காக படைகளுடன் செல்லப்போகிறேன். திரும்பி வரும்போது நான் சம்ஸ்கிருத மொழியை பிழையில்லாமல் எழுதவும் படிக்கவும் செய்யுள் இயற்றவும் கற்றிருக்கவேண்டும். அரசியை மீண்டும் சந்திக்கும்போது நான் சம்ஸ்கிருதம் அறிந்தவனாக இருக்கவேண்டும்” என்றார்.
குணாட்யர் மென்மையாக புன்னகைத்து “தேசபரியடனம் என்னும் அந்நிகழ்வை மூன்றாண்டுகளுக்கு நீட்டிக்கலாம். தெற்கே நம் எல்லையில் அமராவதி வரைக்கும் சென்று வரலாம். அதற்குள் சம்ஸ்கிருதம் எழுதவும் படிக்கவும் செய்யுட்களை புரிந்துகொள்ளவும் பயில முடியும்… பிழையற்ற செய்யுள் எழுதவேண்டும் என்றால் மீண்டும் ஒரு மூன்றாண்டுக்காலம் தேவை” என்றார்.
அரசர் மனம் சோர்ந்து “அவ்வளவு கடினமா?” என்றபின் தேவையில்லை என தலையசைத்தார்.
குணாட்யர் திரும்பிச் செல்லும்போது தன் மாணவர்களிடம் அரசர் கேட்டதைப் பற்றிச் சொல்லிச் சிரித்தார். “மூன்று மாதங்களில் கற்கத்தகுந்த அறிவை வைத்துக் கொண்டுதான் கவிஞர்களும் புலவர்களும் இங்கே வைரங்கள் அணிந்து தங்கப்பூணிட்ட பல்லக்கில் அலைகிறார்கள் என்று எண்ணியிருக்கிறார், பாவம்” என்றார்.
“நாம் அவரிடம் ஒரு மாதத்தில் போர்க்கலைகள் அனைத்தையும் கற்கமுடியுமா என்று கேட்கலாம்” என்றார் குணதேவர்.
“பதினைந்து நாட்களில் கருவுற்று குழந்தைபெற வழியுண்டா என்று கேட்பது இன்னும் சிறந்தது” என்றார் நந்திதேவர்.
அவர்களின் மாணவர்கள் நடுவே அரசரின் அந்த அறியாமை ரகசியக் கேலியாக உலவியது. குணாட்யர் அதை மறந்துவிட்டார். ஆனால் நகரமே அதைப்பற்றிப் பேசத் தொடங்கிவிட்டிருந்தது. ஒற்றர்கள் வழியாக அது அரசரின் செவிகளுக்கும் வந்தது. அரசர் அதை வெளியே சொல்லமுடியாமல் உள்ளம் புழுங்கினார்.
ஒரு வாரம் கழித்து அவையில் எழுந்த ரத்னாகரர் “அரசே, இந்த அவையில் என் தோழரான சர்வ வர்மன் என்னும் அறிஞனை அறிமுகம் செய்ய என்னை அனுமதிக்கவேண்டும்… இவர் அடிப்படை மொழியறிவு இல்லாத ஒருவருக்கு மூன்று மாதங்களில் சொல், எழுத்து, பொருள், அணி, யாப்பு ஆகியவற்றைக் கற்பித்து அவரை மொழியறிஞராக ஆக்கும் ஆற்றல் கொண்டவர்” என்றார்.
தலைமைப் புலவர் ஆனபின் குணாட்யரால் எந்தவகையிலும் பொருட்படுத்தப்படாத மனத்தாங்கல் குணாட்யர் மேல் ரத்னாகரருக்கு இருந்தது. தன் அலங்காரசாஸ்திர நூலை அரங்கேற்றம் செய்ய குணாட்யர் உதவவேண்டும் என்று அவர் வந்து கோரியபோது அந்நூலில் நூற்றிப்பதினெட்டு பிழைகள் உள்ளன என்று சொல்லி குணாட்யர் தவிர்த்துவிட்டார்.
ரத்னாகரர் சொல்வதென்ன என்று சபையில் அனைவருக்கும் தெரிந்திருந்தது. அரசர் சீற்றம் அடைந்து “இது விளையாடுவதற்குரிய சபை அல்ல” என்றர்.
ரத்னாகரர் “அவ்வாறு தன்னால் கற்பிக்க முடியாமல் போனால் தன்னை அரசர் தலைவெட்டிக் கொல்ல ஆணையிடலாம் என்கிறார். அவர் க்ஷத்ரியர் ஆனதனால் அவ்வாறு செய்ய நூல் ஒப்புதலும் உண்டு” என்றார்.
“அவர் அரசவைக்கு வரட்டும்” என்று அரசர் சொன்னார்.
குணாட்யர் அதுவரை அதைக் கவனிக்காதது போல அமர்ந்திருந்தார். அரசர் அனுமதித்ததும் அவர் எரிச்சலுடன் எழுந்து “சபையை ஏமாற்ற நினைப்பவர் அந்த மனிதர் என்பதில் சந்தேகமே இல்லை… இந்த மண்ணில் எவராலும் எவருக்கும் மூன்றுமாதங்களில் சம்ஸ்கிருதத்தை முழுமையாகக் கற்பிக்க முடியாது” என்றார்.
அரசர் “அவர் சபைக்கு வரட்டும். ஏமாற்ற எண்ணினால் அவர் தன் தலையை இழப்பார்…” என்றார். “இந்த உலகம் மிகப்பெரியது. இங்கே முடிவில்லாமல் விந்தைகள் உள்ளன. முடிவில்லாமல் சாத்தியங்களும் உள்ளன.”
ரத்னாகர் சர்வவர்மனை அவைக்குக் கூட்டிவந்தார். கட்டான உடலுடன் போர்வீரர் போலிருந்த சர்வ வர்மன் க்ஷத்ரியர்களுக்குரிய ஆடையும் இரும்புநகைகளும் அணிந்திருந்தான்.
அரசர் அவனிடம் “இங்கே ரத்னாகரர் சொன்னது உண்மையா? மூன்று மாதங்களில் ஒருவருக்கு உங்களால் சம்ஸ்கிருதமொழியின் இலக்கணத்தையும் இலக்கியத்தையும் கற்பிக்க முடியுமா?” என்றார்.
“மூன்றுமாதம்கூட தேவையில்லை, ஓரிரு நாட்கள் குறையலாம்” என்றான் சர்வ வர்மன்.
அந்த அலட்சியத்தைக் கண்ட குணாட்யர் கடும் சீற்றத்துடன் “எந்த மனிதனாலும் அது இயலாது… என் சொற்கள் மேல் ஆணை” என்றார்.
“என்னால் முடியும். என் சொற்கள் மேல் ஆணை” என்று சர்வவர்மன் சொன்னான்.
“நீ தோற்றால் நீ சாகவேண்டியதில்லை. ஆனால் எஞ்சிய வாழ்நாள் முழுக்க நீ என் மிதியடிகளை உன் தலையில் கிரீடம்போல அணிந்திருக்கவேண்டும். சம்மதமா?” என்று குணாட்யர் கேட்டார்.
“சம்மதம். நீங்கள் தோற்றால் என்ன செய்வீர்கள்?”என்று அவன் கேட்டான்.
“நான் தோற்றால் நான் அறிந்த எல்லா மொழிகளையும் முழுக்கவே மறப்பேன் என்று உறுதி சொல்கிறேன்.” என்றார் குணாட்யர்.
“நீங்கள் மொழிகளை மறப்பதற்கு யார் சாட்சி?” என்று சர்வ வர்மன் கேட்டான்.
குணாட்யர் அத்தருணத்தில் தோன்றிய வெறியுடன் முன்னால் வந்து “நான் தோற்றால் பழுக்கக் காய்ச்சிய எழுத்தாணியால் என் இரு கண்களையும் காதுகளையும் குத்திக்கொள்வேன். கத்தியால் என் நாக்கை அரிந்து வீசுவேன். எந்த மொழியும் எனக்குள் வராது, எந்த மொழியும் என்னைவிட்டு வெளியே ஒலிக்காது” என்றார். தன் ஏட்டுப்பெட்டி மேல் கையை வைத்து “ஆணை! ஆணை! ஆணை!” என்று கூவினார்.
சபை திகைத்துவிட்டது. எவராலும் எதுவும் பேசமுடியவில்லை. முதன்மைக் கவிஞரான புஷ்பவாசர் மட்டும் அருகில் இருந்தவருடன் “நல்லது, உயிர்தப்பினான். குணாட்யரின் மிதியடிகளை எப்படி அவனுக்கான தலையணியாகச் செய்வது என்றுதான் இனிமேல் யோசிக்கவேண்டும்” என்றார்.
அவையில் இருந்து தன் இல்லத்துக்கு செல்லும்போது குணாட்யர் தன் மாணவர்கள் சர்வவர்மன் பற்றி கேலியும் கிண்டலுமாகப் பேசிக்கொண்டிருப்பதைக் கேட்டு புன்னகைத்துக் கொண்டிருந்தார். ஆனால் அவர் உள்ளம் அமைதியிழந்திருந்தது. ஏதோ ஒன்று விரும்பத் தகாததாக நிகழவிருப்பதை அவர் உணர்ந்திருந்தார். அந்த அமைதியின்மை அதன்பின் ஒவ்வொரு நாளும் கூடிக்கூடி வந்தது.
மறுநாளே சர்வசர்மன் அரசருடன் நகருக்கு வெளியே இருந்த குடிலில் குடியேறினான். அங்கே அவன் அரசருக்குக் மொழிப்பாடங்களைக் கற்பிக்கிறான் என்று ஏவலர்கள் சொன்னார்கள். ஆனால் அவன் கற்பிக்கும் முறை விசித்திரமானதாக இருந்தது. அவன் இரவும் பகலும் எந்நேரமும் அரசரின் அருகிலேயே இருந்தான். ஆட்சிப்பணிகளை நிறுத்திவிட்டு அரசர் பகல் முழுக்க கல்விக்காக அளித்தார். சர்வவர்மன் அரசரின் அருகே இருந்து அவர் செவியில் பாடங்களைச் சொல்லிக் கொண்டே இருந்தான். அரசர் அவற்றை கவனிக்கவோ, பதில் சொல்லவோ வேண்டியதில்லை. ஆனால் வேறு எவரும் எக்காரணம் கொண்டும் அரசரிடம் பேசக்கூடாது என்று ஆணையிடப்பட்டிருந்தது.
நீராடும் போதும், உணவு அருந்தும்போதும், பெண்களுடன் கூடும்போதும்கூட அவன் அவர் காதில் பாடங்களைச் சொல்லிக் கொண்டிருந்தான். அவர் இரவில் தூங்கும்போதும் அவன் அருகே அமர்ந்து பாடங்களைச் சொன்னான். பின்னிரவில் சர்வசர்மன் தூங்க வேண்டியிருந்தபோது ரத்னாகரர் அந்தப் பாடங்களை அரசரின் அருகே அமர்ந்து திரும்பத் திரும்பச் சொல்லிக் கொண்டிருந்தார். பாடங்கள் காதில் விழாத நேரமே இருக்கவில்லை. ஓரிரு நாட்களிலேயே அரசரின் உதடுகள் எப்போதும் தானாகவே அசைந்து எதையோ சொல்லிக்கொண்டிருக்கத் தொடங்கின.
என்ன நிகழ்கிறது என்றே குணாட்யரால் உள்வாங்கிக் கொள்ளவே முடியவில்லை. ஆனால் மூன்று மாதத்திற்கு ஆறுநாட்களுக்கு முன் அரச சபைக்கு வந்த அரசர் தனக்கு சம்ஸ்கிருத மொழி நன்கு தெரியும் என்றும், செய்யுள் இயற்றமுடியும் என்றும், அவையில் யார் வேண்டுமென்றாலும் தன்னை சோதனைசெய்து பார்க்கலாம் என்றும் சொன்னார். சபையில் இருந்த எவரும் எழுந்து எதையும் கேட்க துணியவில்லை. அனைவரும் குணாட்யரைப் பார்த்தனர்.
குணாட்யர் எழுந்து “செந்நிற இதழ்கொண்ட மலரின் புல்லிவட்டம் கருமைகொண்டிருப்பது எவரிட்ட சாபம்?” என்று ஒரு கவிதையின் முதல் இரண்டு வரிகளைச் சொன்னார்.
அரசன் புன்னகைத்து “தம்பமும் கேசரங்களும் கருமையென வெளிப்படுவதனால் அல்லிகள் மகிழ்ந்து சிவக்கின்றன என்பதாலா?” என்று ஈரடியைச் சொல்லி அக்கவிதையை முடித்தான்.
குணாட்யர் அதன் பின் எந்தக் கேள்வியையும் கேட்கவில்லை. பின்னர் சட்டென்று எழுந்து கைகளைக் கூப்பி அவையை வணங்கிவிட்டு வெளியே நடந்தார்.
அரசன் பதறி எழுந்து தூய சம்ஸ்கிருதத்தில் “அவைக்கவிஞர் குணாட்யர் என் மேல் பெரும்பழியை ஏற்றி வைக்கலாகாது… இங்கே நீங்கள் சொன்ன வஞ்சினத்தை நான் நிராகரிக்கிறேன்… இந்த அவையே உங்களிடம் மன்றாடுகிறது” என்று கெஞ்சியபடி பின்னால் சென்றான். “உங்கள் மொழி தெய்வங்களால் அருளப்பட்டது… அதை அழிக்க உங்களுக்கு உரிமை இல்லை. இந்த நாட்டின்மேல் பெரும் சாபத்தை விட்டுச்செல்கிறீர்கள் புலவரே” என்று கைகூப்பி அழுதான்.
ஆனால் அந்தச் சபையில் ஒருவர் கூட எழுந்து ஒரு வார்த்தைகூடச் சொல்லவில்லை. அவர் செல்வதை கண்களால் தொடர்ந்தபடி பொம்மைகள் போல அவர்கள் அமர்ந்திருந்தார்கள்.
(மேலும்)
The world of plants- A Letter
வாசிக்கும் வழிகளை பற்றிய காணொளியை பார்த்தேன்.வாசிப்பும் தியானம்தான். வாசிப்புதான் உலகிலுள்ள கலாச்சாரத்தை, பண்பாட்டை அடையாளப்படுத்தியது. நவீன உலகில் எப்படி வாசிக்க வேண்டும் என்று கூறியதற்கு நன்றி.
வாசிப்பு- கடிதம்This is Kaavyan from Chennai, studying in 9th grade. A few days back, I had travelled to Vellimalai to attend the Botany(தாவரவியல்) course taught by Logamadevi mam. It was a truly enriching experience learning about plants. The course opened my eyes in many different ways and completely changed my perspective about Botany.
The world of plants- A LetterJune 1, 2025
யோகம்- தியானப் பயிற்சி

பிகார் சத்யானந்த குருமரபின் முதன்மை ஆசிரியர் (குரு) ஆக 26 ஏப்ரல் 2025 அன்று அறிவிக்கப்பட்ட நால்வரில் ஒருவர் குரு. சௌந்தர். இருபதாண்டுகளுக்கும் மேலாக சௌந்தரின் யோகப்பயிற்சிகள் இந்தியாவிலும், இலங்கை மலேசியா சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகளிலும் நடந்து வருகிறன. ஆயிரக்கணக்கானவர்கள் தங்கள் வாழ்க்கையின் திருப்புமுனை என்று கருதும் பயிற்சிகள் அவை.
அன்றாடவாழ்க்கையில் கவனக்குறைவு, பொறுமையின்மை, பதற்றம் போன்ற அகப்பிரச்ச்னைகளுக்கும்; முதுகுவலி, கழுத்துவலி, உடல்சோர்வு போன்ற பலவகையான புறப்பிரச்சினைகளுக்கும் ஒருங்கிணைந்த தீர்வாக அமைவது முறையான யோகப்பயிற்சி. யோக ஆசிரியர் யோகமுறைகளைப் பயிற்றுநர் என்பதுடன் வாழ்க்கை முழுக்க துணைவராக நம்மைக் கண்காணித்து, உடன் வருபவராகவும் அமையவேண்டும். சௌந்தர் அத்தகைய ஆசிரியர்.
நான்காண்டுகளாக நிகழும் இந்த வகுப்புகளில் ஏற்கனவே ஐநூறு பேருக்குமேல் முழுமையறிவு வகுப்புகள் வழியாக சௌந்தரிடம் பயின்றுள்ளனர்.
நாள் ஜூலை 11, 12, 13
ஜூலை 10 ஆம் தேதி குருபூர்ணிமா (வியாசபூர்ணிமா) நித்யவனத்தில் கொண்டாடப்படுகிறது. வெண்முரசு – மகாபாரத நாளாக இந்நாள் கொண்டாடப்படுகிறது. சௌந்தர் முன்னின்று நடத்துவார். யோகப்பயிற்சிக்கு வருபவர்கள் ஒருநாள் முன்னதாக வந்தால் அந்நிகழ்விலும் கலந்துகொள்ளலாம்
குருபூர்ணிமா நிகழ்வில் மட்டும் கலந்துகொள்ள விரும்புபவர்கள் தனியாக எழுதலாம்)
சமப்பார்வையை உருவாக்கிவிட முடியுமா? இஸ்லாம் ஒரு கடிதம் சூஃபி தரிசனம்- கடிதம் இஸ்லாம் கடிதம் இஸ்லாம் கடிதம் வரவிருக்கும் நிகழ்ச்சிகள்- இடமிருப்பவைநிஷா மன்ஸூர் நடத்தும் இஸ்லாமிய தத்துவம் – சூபி மரபு பற்றிய வகுப்புகள் மீண்டும் நிகழ்கின்றன. ஏற்கனவே நிகழ்ந்த இவ்வகுப்புகள் முற்றிலும் புதிய ஓர் ஆன்மிக உலகைத் திறந்தன என்று பங்கேற்றவர்கள் கூறினார்கள்.
இரண்டு வகைகளில் இந்த வகுப்புகள் முக்கியமானவை. இவை இந்தியப்பண்பாட்டை முழுமையாக உணர்வதற்கு இன்றியமையாதவை. கலை இலக்கியம் ஆகியவற்றில் ஆர்வம் உடையவர்கள் கற்றே ஆகவேண்டிய வரலாற்று- ஞானப் பரப்பு இது. இஸ்லாமின் மெய்யியல், சூஃபிகள் இந்தியாவில் அதை நிலைநிறுத்திய வரலாறு, சூபி மரபின் உள்ளடக்கம் ஆகியவற்றை அறியாமல் ஒருவர் இந்திய இலக்கியம், இந்தியக் கலை, இந்திய இசை ஆகியவற்றை அறிந்தார் என்று சொல்ல முடியாது.
சென்ற ஆயிரமாண்டுகளாக இஸ்லாமின் ஆன்மிகமரபும் சூஃபி மெய்யியலும் இந்தியாவின் எல்லா மெய்ஞான மரபுகளிலும் செல்வாக்கு செலுத்தியுள்ளன. ராமகிருஷ்ண பரமஹம்சர் முதல் நாராயண குரு வரை பிற மரபுகளைச் சேர்ந்த ஞானிகள் கூட அதன் ஒளியை பெற்றுக்கொண்டவர்கள். இந்திய மெய்ஞான மரபின் சாரத்தை அகத்தே உணரவிரும்புபவர்களுக்கு அவசியமான வகுப்புகள் இவை.
நாள் ஜூலை4,5 மற்றும் 6
பௌத்தம்- தியானம்- அறிமுக வகுப்பு
வி.அமலன் ஸ்டேன்லி கவிஞர், நாவலாசிரியர். தொழில்முறையில் அறிவியல் ஆய்வாளர். பௌத்த தியானம் மற்றும் மெய்யியலில் முறையான பயிற்சி கொண்டவர். அவர் நடத்திய பௌத்த மெய்யியல் – விபாசனா வகுப்பு பங்கேற்பாளர்களுக்கு மிகப்பெரிய தொடக்கமாக அமைந்தது என்று குறிப்பிட்டிருக்கின்றனர். முதல் வகுப்பு சென்ற ஜூலை முதல் வாரம் நிகழ்ந்தது, விரைவிலேயே அதன் இடங்கள் நிறைவுற்றமையால் மீண்டும் அடுத்த வகுப்புகள் அறிவிக்கப்படுகின்றன.
2005-ல் கோயங்கா தியானப் பயிற்சியோடு பௌத்த ஆய்வுப்பயணத்தை தொடங்கிய வி.அமலன் ஸ்டேன்லி போதி ஜென்டோவில் ஜென் பயிற்சி பெற்றார். 2008-ல் ஜென் துறவி திக் நாட் ஹஞ் அவர்களிடம் நேரடிப் பயிற்சியை வியட்நாமில் பெற்றுக் கொண்டார்.2010-ல் மூன்று வருடங்கள் ஆஸ்திரேலியாவிலிருந்து பாட்ரிக் கீர்னி எனும் விபசனா ஆசிரியரை கொடைக்கானலில் உள்ள போதி ஜென்டோ மையத்திற்குத் தொடர்ந்து அழைத்து வந்து கற்றுக்கொண்டார். அவரிடம் தொடர்ந்து தவ முகாம் நடத்தவும் கற்றுக்கொண்டார். 2013-ல் சோகிஈமா ரின்போசே மூலம் திபெத்திய மகாமுத்ரா, ட்சோக்சென் பயிற்சி பெற்றார்.
இரண்டரை ஆண்டு அகவிழிப்புத் தியானப்பயிற்சி ஆசிரியராக The Awareness Training Institute and the Greater Good Science Center at the University of California மையத்தால் பயிற்சியும் சான்றும் (MMTCP) பெற்றுக் கொண்டார்
யோகமரபின் தொடக்கம் எது என நமக்குத் தெரியாது. சாங்கிய தரிசனத்தின் ஒரு கிளையாக அது பதஞ்சலியால் வரையறை செய்யப்பட்டது. பின்னர் சமண மதத்தில் வளர்ச்சி அடைந்தது. அதை முழுவிரிவை அடையச்செய்தவர்கள் பௌத்தர்கள். பௌத்த யோகாசார மரபே தியானம் என்பதற்கான இன்றைய அர்த்ததை உருவாக்கியது. அசங்கர், வசுபந்து, திக்நாகர், நாகார்ஜுனர், தர்மகீர்த்தி, தர்மசேனர், தர்மபாலர் என அதன் ஆசிரியர் மரபு மிக விரிவானது. போதிதர்மர் வழியாக சீனாவுக்குச் சென்று அங்கிருந்து ஜப்பான் சென்று ஜென் பௌத்தம் ஆகியது. பத்மசம்பவர் வழியாக திபெத் சென்று திபெத்திய பௌத்தமாக ஆகியது. திபெத்திய பௌத்தம் வஜ்ராயனம் எனப்படுகிறது.
பௌத்தம் வளர்த்தெடுத்த யோகாசார மரபு இந்தியாவில் பெரும்பாலும் மறைந்துவிட்டது, அதன் அடிப்படைகள் சில வேறுவகையில் நீடிக்கின்றன. பௌத்த தியான – மெய்யியல் மரபை அது இங்கிருந்து சென்று வளர்ந்து பேருருவம் கொண்டிருக்கும் திபெத், ஜப்பான், தாய்லாந்து பௌத்த மரபுகளிடமிருந்தே நாம் கற்கமுடிகிறது. இப்பயிற்சி அதற்கான முயற்சி.
செப்டெம்பர்
ஜூன்27, 28 மற்றும் 29 (வெள்ளி சனி ஞாயிறு)
தொடர்புக்கு programsvishnupuram@gmail.com அறிவிக்கப்பட்ட பயிற்சிகள்- இடமிருப்பவை
தியானம்- உளக்குவிப்புப் பயிற்சி, இரண்டாம்நிலை
தில்லை செந்தில் பிரபு நடத்தும் தியானம் – உளக்குவிப்புப் பயிற்சிகள் இன்றைய தலைமுறையில் தங்கள் அன்றாட வாழ்க்கையிலும் தொழிலிலும் கவனம்குவிக்கமுடியாத அகச்சிதறல் கொண்டவர்களுக்கும், மெய்யியல் நோக்கில் வாழ்க்கையை அமைத்துக்கொள்ள விழைபவர்களுக்குமாக குறிப்பாக வடிவமைக்கப்பட்டவை. நவீன முறையைச் சேர்ந்தவை. தில்லை இந்த தியானப்பயிற்சியை வெவ்வேறு புகழ்பெற்ற அமைப்புகளைச் சார்ந்து சென்ற 20 ஆண்டுகளாக அளித்து வருபவர். பல்லாயிரம் மாணவர்கள் அவருக்கு உள்ளனர். இந்த பயிற்சி அவர்களின் வாழ்க்கைக்கு வழிகாட்டியுள்ளது.
இது மதம்சார்ந்த பயிற்சி அல்ல, இந்து பௌத்த மரபுகளில் இருந்து உருவானது எனினும். ஒருவர் தன் அகத்தை திரும்பி நோக்கவும், அதன் கட்டற்ற பாய்ச்சலை புரிந்துகொள்ளவும், அதை தனக்கேற்றவகையில் பழக்கிக்கொள்ளவும் உதவும் முறைமைகள் இவை. தொன்மையானவை, நவீனப்படுத்தப்பட்டவை.
முந்தைய தியான வகுப்புகளில் கலந்துகொண்டவர்களுக்கான இரண்டாவது நிலை தியான வகுப்பு இது. தில்லை செந்தில் பிரபு பிற இடங்களில் நடத்திய தியான வகுப்புகளில் கலந்துகொண்டவர்களும் இதில் கலந்துகொள்ளலாம்.
முந்தைய வகுப்பு உளக்குவிப்பு – கவனக்கூர்மைக்கான முதல்நிலை பயிற்சிகள் அடங்கியது. இப்பயிற்சி அதன் இரண்டாம் நிலை. அகத்தை கட்டுப்படுத்தி செயலில் ஈடுபடுத்துவதற்கான கூடுதல் செயல்முறைகள் கொண்டது. வெவ்வேறு செயற்களங்களில் ஈடுபட்டிருப்பவர்களுக்கு இது மிக உதவியானது.நாள் ஜூன் 6 7 மற்றும் 8
காலமில்லாத கிராமம்
ஒரு வாரம் இங்கிலாந்தின் வடக்கே அமைந்த லேக் டிஸ்ட்ரிக்ட் பகுதியில் விண்டர்மியர் ஏரிக்கரையில் தங்கியிருந்தோம். பொதுவாகவே மழையும் குளிரும் கொண்ட இப்பகுதியில் இது வசந்தகாலம். ஆனாலும் மழை இருக்கும் என்று சொன்னார்கள். ஆனால் நல்லவேளையாக ஒரே ஒருநாள்தான் மழை. மற்றநாட்களில் சுடர்விடும் இளவெயிலும் குளிரும். மிகச்சிறிய ஒரு பகுதிக்குள் நுணுக்கமாகச் சுற்றி வருவதே சரியான பயணம் என எனக்கு இப்போது தோன்ற ஆரம்பித்துவிட்டிருக்கிறது. முக்கியமான இடங்களை அதிகமாக பார்த்துவிட வேண்டும் என்னும் பரபரப்புடன் வெவ்வேறு ஊர்களை கண்களால் தொட்டு தொட்டுச் செல்வது அங்கே நம் அகம் திகழ வாய்ப்பமைப்பதில்லை.
ஐரோப்பாவுக்குப் பொதுவாக உள்ள சில பண்புகள் இங்கிலாந்துக்கும் உண்டு. ஐரோப்பா இன்று தன்னை முழுக்க முழுக்க சுற்றுலாத் தலமாக மாற்றிக்கொண்டுவிட்டது. சுற்றுலாப்பயணிகள் வராத, சுற்றுலாப் பயணிகளை ஈர்க்க முயலாத எந்த இடமும் இருப்பதுபோலத் தெரியவில்லை. மொத்த ஐரோப்பாவே அமெரிக்கா, சீனா என்னும் இரு நாடுகளின் சுற்றுலாத்தலம்தானோ என்று தோன்றும். ஐரோப்பாவையே அப்படியே ஒரு பெரிய அருங்காட்சியகத்தில் தூக்கி வைத்திருப்பதுபோல எண்ணிக்கொள்வேன்.
அந்த பண்புகளை இவ்வாறு வரையறை செய்வேன்.
பழமையான ஊர்கள் கூடுமானவரை அந்தப் பழமையுடனேயே பேணப்படுதல்; பழைய கட்டிடங்களும் சாலைகளும் நூற்றாண்டுகளின் தொன்மையுடன் அமைந்திருத்தல். ஆனால் இடிபாடுகள் ஏதுமில்லாமல் எல்லா கட்டிடங்களும் முழுமையாகப் பழுதுபார்க்கப்பட்டு, தூய்மையாக , அப்போது உருவானவை போலவும் தோன்றுதல்.ஊரின் சிறிய வரலாற்றுச் சின்னங்கள் கூட முழுமையாக ஆவணப்படுத்தப்பட்டு, நன்றாகப் பேணப்படுதல். அவற்றை அந்த ஊர் மக்கள்சபைகள் பராமரித்தல். ஒவ்வொன்றைப்பற்றியும் அந்த ஊர்க்காரர்களுக்கும் தெரிந்திருத்தல்.சிறு ஊராக இருந்தாலும் சுற்றுலாப்பயணிகள் வந்து தங்குவதற்கான வசதிகள் இருத்தல். உணவகங்கள், தங்கும் விடுதிகள், வீட்டில் தங்கும் வசதிகள். ஊரில் பல வீடுகள் முழுக்கவே சுற்றுலாப் பயணிகளுக்குரியவையாக இருக்கும்.இணையத்தில் அந்த ஊர் மிக விரிவாக ஆவணப்படுத்தபட்டிருத்தல். இணையத்தை வைத்துப் பார்த்தால் அந்த ஊர் தவறவிடவே கூடாத ஓர் அரிய வரலாற்று மையம் என்றே நாம் எண்ணிவிட வாய்ப்புண்டு.விண்டர்மீர் ஏரிக்கரையில் இருந்து கிளம்பி அருகே இருந்த சிறு ஊர்களுக்கும் காரில் சென்று வந்தோம். ஏரா ஃபோர்ஸ் என்னும் அருவியைப் பார்ப்பதற்காகச் சென்ற வழியில் கார்ட்மெல் (Cartmel ) என்னும்சிற்றூரை அடைந்து சிலமணி நேரம் செலவிட்டோம். இந்த ஊர்களினூடாகச் செல்லும் பயணமே முக்கியமானது. வளைந்து செல்லும் சாலையின் இருபக்கமும் பசுமை செறிந்த புல்வெளி அலைகள். தொலைவில் மலைகள். முகில்கள் இறங்கிப்பரந்திருக்கும் பசுமைமேல் பொழியும் வெயில். இதற்கிணையான காட்சியை இந்தியாவில் ஊட்டியின் வெஸ்டர்ன் கேட்ச்மெண்ட், அவலாஞ்சி போன்ற மிகமிக ஒதுக்குபுறமான மலைப்பகுதிளிலேயே காணமுடியும், அங்கே குப்பைகளை கொட்டுகிறார்கள் என்பதனால் சுற்றுலாப் பயணிகளை அனுமதிப்பதே இல்லை. அனுமதி பெற்றே செல்லவேண்டும்.
கார்ட்மெல் ஊரின Sticky Toffee Pudding. என்னும் இனிப்புவகை மிகச்சிறப்பானது என இணையம் சொன்னதுதான் அங்கே நாங்கள் இறங்குவதற்கான காரணம். பழைய நார்ஸ் மொழியில் அமைந்த இந்த ஊரின் பெயர் ‘பாறைகளின் நடுவே மணற கரை’ என்பதாம். நார்மன்களின் காலகட்டத்தில் உருவான ஊர். கார்ட்மெல் ஊரைப்பற்ற் தகவல்களைச் சொல்லவேண்டியதில்லை- மிக விரிவாக எல்லாம் இணையத்திலேயே ஆவணப்படுத்தப்பட்டுள்ளன. (கார்ட்மெல் கிராமம்) . அது இங்கிலாந்தின் வழக்கமான சிறிய ஊர், அதற்கு அப்பால் ஒன்றுமில்லை. ஆனால் மிகச்சரியான பிரதிநிதித்துவம் கொண்ட ஊர். சீரான, அழகான ,பழமையான கல்வீடுகள். சதுக்கம், தேவாலயம், பழைய கிறிஸ்தவ காலகட்டத்தின் சில நினைவுச்சின்னங்கள், அமைதியான உணவகங்கள்.
சுற்றுலா மையம் என்றதும் அங்கே நம்மூர் போல பயணிகள் முட்டிமோதி நெரிசலிட்டு, கூச்சலிடுவார்கள் என்றோ; சாலைவணிகர்களும் வழிகாட்டிகளும் மொய்த்துக்கொண்டு உயிரைவாங்குவார்கள் என்றோ, தெருக்களெல்லாம் குப்பைமலைகளும் ஓட்டை உடைசல்களுமாக நாற்றமடிக்கும் என்றோ எண்ண வேண்டியதில்லை. ஏரி மாவட்டம் என்பது இங்கிலாந்தின் வடக்குப் பகுதி. தென்பகுதியை விட குளிர், மழை, பசுமை கூடுதல். மக்கள் தொகை மிகக்குறைவு. நவீன காலகட்டத்தில்தான் இங்கே மக்கள் இந்த அளவுக்காவது வாழத்தொடங்கியிருக்கிறார்கள். செம்மரியாடு வளர்ப்பு தான் முதன்மையான தொழிலாக இன்றும் உள்ளது. இவையெல்லாம் பழைய இடையர் கிராமங்கள். மிகச்சிலரே இங்கே வாழ்ந்திருக்கிறார்கள். இரண்டாம் உலகப்போரின்போதுதான் லண்டனில் இருந்து குண்டுவீச்சுக்குத் தப்பி மேலும் சில குடும்பங்கள் வந்துள்ளன.
இன்று இந்த அமைதிக்காகவும் குளிருக்காகவும்தான் சுற்றுலாப்பயணிகள் வருகிறார்கள். ஏரிகளில் நீர்விளையாட்டுக்கள்தான் இப்பகுதியின் முதன்மை ஈர்ப்பு. அது ஆண்டில் நான்கே மாதங்கள்தான். எஞ்சிய காலம் முழுக்க இந்த ஊர்கள் மழைப்போர்வைக்குள், குளிரில் ஒண்டி கிடப்பவை. கோடைகாலத்தில்கூட திங்கள் முதல் வியாழன் வரை மக்கள் போக்குவரத்து குறைவுதான். வார இறுதிகள், குறிப்பாக நல்ல வானிலை என அறிவிப்பும் இருந்தால் திரள் இருக்கும். அப்போதுகூட அவை நெரிசலாக ஆவதில்லை.
கார்ட்மெல் ஊரில் நாங்கள் இறங்கியபோது என் கண்ணுக்கு அது ஆளே இல்லாத ஊராகத்தான் தோன்றியது. இத்தகைய தெருக்களை குளிர்நாடுகளில் சாதாரணமாகவே பார்க்கலாம். அமெரிக்காவில் பல கிராமங்கள் முழுமையாகவே மானுட நடமாட்டமே இல்லாமலிருக்கும். இங்கே இந்த வசந்தகாலத்தில் இரவு இருட்டுவதற்கு மிகப்பிந்தும், ஒன்பது ஒன்பதரை வரை நம் ஊரில் ஐந்து மணி அளவுக்கு வெளிச்சம் இருக்கும். ஆனால் ஏரி மாவட்டத்தில் அரிதாகவே பகலிலும் வெயில் வந்தது. எப்போதுமே மங்கலான ஓர் ஒளிதான் வானில் இருந்து இறங்கியது.
இங்குள்ள கட்டிடங்கள் எல்லாமே கரிய கற்களை சீராக அடுக்கிக் கட்டப்பட்டவை, அல்லது சுட்டசெங்கற்களை அடுக்கிக் கட்டப்பட்டவை. சுவர்களை பூசி, வண்ணம் தேய்க்கும் வழக்கம் இல்லை.பெரும்பாலும் எல்லா வீடுகளுமே நுறாண்டுக்குமேல் தொன்மையானவை, எஞ்சியவை அந்த பழைய கட்டிடங்களின் அதே பாணியில் கட்டப்பட்டவை. மண்ணாலான ஓடு போட்ட சாய்வான கூரைகள். தூண்கள் இல்லாத வீடுகள் சாலையை ஒட்டியே வரிசையாக அமைந்திருந்தன. பெரும்பாலானவை பூட்டியிருந்தன, உள்ளே ஆளிருப்பது விளக்கொளிகளால் தெரிந்தது. வசந்த மலர்கள் முகப்புகளில் வைக்கப்பட்டிருந்தன.
இந்தச் சிற்றூரில் இன்று நூறாண்டுக்கு முன் செத்துப்போன ஒரு விண்டர்மியர் ஏரிக்கரை வெள்ளைக்கார தாத்தா திரும்ப வந்தார் என்றால் கார்கள் மட்டும் புதியதாக இருப்பதைக் கண்டு கொஞ்சம் ஆச்சரியப்படுவார். கண்ணில்பட்ட பெரும்பாலானவர்கள் முதியவர்கள். இப்பகுதிக்குச் சுற்றுலா வருபவர்கள் இரண்டு வகையினர். ஒன்று வளராத குழந்தைகளுடன் குடும்பங்கள். இரண்டு , முதிய தம்பதியினர். இளைஞர்கள் கண்ணுக்குப் படுவது அரிது. அவர்கள் வேறொரு ‘பப் கலாச்சார’த்தில் வாழ்கிறார்கள். முதியவர்கள் ‘அமைதியாக ஒரு பீருடன் அமர்ந்திருப்பது’ என்னும் கற்பனைகொண்டவர்கள். அப்படியே அமர்ந்து முணுமுணுப்பாகப் பேசிக்கொண்டும், மிகமெல்லச் சிரித்துக்கொண்டும் இருந்தார்கள்.
புட்டிங் ‘ஒரிஜினல்’ கிடைக்குமா என்று முத்துக்கிருஷ்ணனும் டாக்டர் பார்கவியும் அங்கே அலைந்தனர். தயார்நிலை புட்டிங்தான் உண்டு, சூடுபண்ணி தருவோம் என்றார்கள். சரி, அதில் எந்த இடம் நல்லது என்று விசாரித்து அந்தக் கடைநோக்கிச் சென்றோம். அதற்குள் இரண்டு மூன்று கடைகளுக்குள் நுழைந்து விசாரித்தோம். எந்த கடையில் நல்ல புட்டிங் கிடைக்கும் என்று வேறு கடைக்காரர்களே சொன்னார்கள். எவருக்கும் விற்பனையில் எல்லாம் பெரிய ஆர்வம் இருப்பதாகத் தெரியவில்லை.
அந்த தெருவில் ஓய்வாக நடந்தேன். காலமில்லாத ஒரு சிற்றூரில் சென்றுகொண்டிருப்பதுபோல் உணர்ந்தேன். ஒரு பழைய பிரிட்டிஷ் நாவலுக்குள் நுழைந்துவிட்டதுபோலவும் இருந்தது. நேர் எதிரில் வேர்ட்ஸ்வெர்த்தும் கூலிரிட்ஜும் பேசிக்கொண்டு வந்தால் ஆச்சரியப்பட்டிருக்க மாட்டேன்.
சாலையில் கொஞ்சம் கார்கள். அவ்வப்போது சிலர் சிரித்து வாழ்த்து சொன்னபடி நடந்து சென்றனர். ஆழ்ந்த அமைதியில் காற்றுவீசும் ஒலி. மழைத்துளிகள் கூரையிலிருந்து சொட்டும் ஒலி. இந்த கட்டிடங்களின் கருங்கல் சில்லுகளால் ஆன வெளிப்பக்கம் இவை ஏதோ தொன்மையான செதிலடர்ந்த முதலைகள் அல்லது டினோஸர்கள் என எண்ணச் செய்கிறது. மழைக்கு உகந்தவை இந்த கற்சுவர்கள். மழை பெய்து ஓய்ந்ததுமே உலர்ந்துவிடுகின்றன. பூசணம் பூப்பதில்லை. ஆனால் எப்போதுமே ஈரமாக இருப்பவை போலத் தோன்றச் செய்கின்றன.
சிற்றூர்தான். ஆனால் நுகர்பொருட்கள் விற்கும் கடைகள் பல இருந்தன. நல்ல புத்தகக் கடை இருந்தது. அந்த புத்தகக் கடையை வெளியே நின்று பார்த்தேன். வழக்கம்போல பழையபுத்தகங்கள் நிறைய இருந்தன. படித்த புத்தகங்களை திரும்பக் கொடுத்து புதிய புத்தகங்கள் வாங்கிக்கொள்ளும் வசதியும் இருந்தது. முந்தைய தலைமுறையினரும் இளைய தலைமுறையினரும் நிறையவே வாசிக்கிறார்கள். வாசிப்பில்லாதவர்கள் இளைஞர்கள்தான்.
பழமையான ஒவ்வொரு கட்டிடமும் துல்லியமான வரலாற்றுக்குறிப்புடன் இருந்தது. நகர்ச்சதுக்கம் மிகச்சிறியது, ஐநூறுபேர் இருக்க முடியும். அதன் நடுவே பழைய கல்பீடமும் ஒரு நடுகல்லும். மிகச்சிறியவை, சாதாரணமானவை. ஆனால் அவை வரலாற்றுச் சின்னங்களாக முறையான குறிப்புகளுடனும், மறுசீரமைப்புச் செய்திகளுடனும் இருந்தன. செங்கல் தளமிட்ட சாலையோரம் மழையில் நனைந்து ஈரமாக இருந்தது. சாலையோரங்களிலேயே பெரிய பூந்தொட்டிகள் வைக்கப்பட்டிருந்தன. அவற்றில் பூக்கள் செறிந்த செடிகள்.
புட்டிங் மிக நன்றாக இருப்பதாக அருண்மொழியும், டாக்டர் பார்கவியும், அவர் அம்மாவும், முத்துக்கிருஷ்ணனும் ஒருங்கிணைந்து கருத்து சொன்னார்கள். நான் இனிப்பு சாப்பிடுவதை முற்றாக விட்டிருப்பதனால் சுவை பார்க்கவில்லை. அந்தக் கடையை பார்த்துக்கொண்டிருந்தேன். உள்ளூரில் தேவைப்படும் பொருட்கள் நிறைந்திருந்தன. காய்கறிகள், பழங்கள், ரொட்டிகள், பொம்மைகள் என என்னென்னவோ. ஆனால் மிகப்பெரும்பான்மை இனிப்பு வகைகள்தான். எல்லாமே சீனியால் செய்யப்பட்டவை. அவ்வளவு இனிப்புகளை ஒரே இடத்தில் பார்ப்பதே திகட்டியது.
அமெரிக்கர்களைப் போலவே பிரிட்டிஷ்காரர்களும் இனிப்புகளை தின்றுகொண்டே இருக்கிறார்கள். மது உண்டு என்றாலும் அது அடிமைப்படுத்துவதில்லை. அடிமைப்படுத்தியிருப்பது சீனிதான். இந்த அளவுக்கு இனிப்பு தேவைப்படுவது ஏன்? உள்ளே இருக்கும் கொண்டாட்டமே இனிப்பை நாடச் செய்கிறது. லண்டன் உட்பட்ட சில நகர்களைத் தவிர்த்தால் பிரிட்டன் இன்று பெரும்பாலும் ஓய்வுக்கான ஊர் போல தெரிகிறது. தேவையான பணம் வைத்திருக்கிறார்கள். உலகைப் பற்றி அதிகம் அலட்டிக்கொள்வதில்லை. வாழ்க்கையை ‘அமைதியாக ரசிப்பது’தான் எஞ்சிய நாட்களில் செய்யவேண்டியது என எண்ணிக்கொண்டிருக்கிறார்கள். அந்த கொண்டாட்டத்தின் புறவடிவமாக இருக்கிறது சீனி என நினைக்கிறேன்.
Jeyamohan's Blog
- Jeyamohan's profile
- 835 followers
