காலமில்லாத கிராமம்

ஒரு வாரம் இங்கிலாந்தின் வடக்கே அமைந்த லேக் டிஸ்ட்ரிக்ட் பகுதியில் விண்டர்மியர் ஏரிக்கரையில் தங்கியிருந்தோம். பொதுவாகவே மழையும் குளிரும் கொண்ட இப்பகுதியில் இது வசந்தகாலம். ஆனாலும் மழை இருக்கும் என்று சொன்னார்கள். ஆனால் நல்லவேளையாக ஒரே ஒருநாள்தான் மழை. மற்றநாட்களில் சுடர்விடும் இளவெயிலும் குளிரும். மிகச்சிறிய ஒரு பகுதிக்குள் நுணுக்கமாகச் சுற்றி வருவதே சரியான பயணம் என எனக்கு இப்போது தோன்ற ஆரம்பித்துவிட்டிருக்கிறது. முக்கியமான இடங்களை அதிகமாக பார்த்துவிட வேண்டும் என்னும் பரபரப்புடன் வெவ்வேறு ஊர்களை கண்களால் தொட்டு தொட்டுச் செல்வது அங்கே நம் அகம் திகழ வாய்ப்பமைப்பதில்லை.

ஐரோப்பாவுக்குப் பொதுவாக உள்ள சில பண்புகள் இங்கிலாந்துக்கும் உண்டு. ஐரோப்பா இன்று தன்னை முழுக்க முழுக்க சுற்றுலாத் தலமாக மாற்றிக்கொண்டுவிட்டது. சுற்றுலாப்பயணிகள் வராத, சுற்றுலாப் பயணிகளை ஈர்க்க முயலாத  எந்த இடமும் இருப்பதுபோலத் தெரியவில்லை. மொத்த ஐரோப்பாவே அமெரிக்கா, சீனா என்னும் இரு நாடுகளின் சுற்றுலாத்தலம்தானோ என்று தோன்றும். ஐரோப்பாவையே அப்படியே ஒரு பெரிய அருங்காட்சியகத்தில் தூக்கி வைத்திருப்பதுபோல எண்ணிக்கொள்வேன்.

அந்த பண்புகளை இவ்வாறு வரையறை செய்வேன்.

பழமையான ஊர்கள் கூடுமானவரை அந்தப் பழமையுடனேயே பேணப்படுதல்; பழைய கட்டிடங்களும் சாலைகளும் நூற்றாண்டுகளின் தொன்மையுடன் அமைந்திருத்தல். ஆனால் இடிபாடுகள் ஏதுமில்லாமல் எல்லா கட்டிடங்களும் முழுமையாகப் பழுதுபார்க்கப்பட்டு, தூய்மையாக , அப்போது உருவானவை போலவும் தோன்றுதல்.ஊரின் சிறிய வரலாற்றுச் சின்னங்கள் கூட முழுமையாக ஆவணப்படுத்தப்பட்டு, நன்றாகப் பேணப்படுதல். அவற்றை அந்த ஊர் மக்கள்சபைகள் பராமரித்தல். ஒவ்வொன்றைப்பற்றியும் அந்த ஊர்க்காரர்களுக்கும் தெரிந்திருத்தல்.சிறு ஊராக இருந்தாலும் சுற்றுலாப்பயணிகள் வந்து தங்குவதற்கான வசதிகள் இருத்தல். உணவகங்கள், தங்கும் விடுதிகள், வீட்டில் தங்கும் வசதிகள். ஊரில் பல வீடுகள் முழுக்கவே சுற்றுலாப் பயணிகளுக்குரியவையாக இருக்கும்.இணையத்தில் அந்த ஊர் மிக விரிவாக ஆவணப்படுத்தபட்டிருத்தல். இணையத்தை வைத்துப் பார்த்தால் அந்த ஊர் தவறவிடவே கூடாத ஓர் அரிய வரலாற்று மையம் என்றே நாம் எண்ணிவிட வாய்ப்புண்டு.

விண்டர்மீர் ஏரிக்கரையில் இருந்து கிளம்பி அருகே இருந்த சிறு ஊர்களுக்கும் காரில் சென்று வந்தோம்.  ஏரா ஃபோர்ஸ் என்னும் அருவியைப் பார்ப்பதற்காகச் சென்ற வழியில் கார்ட்மெல் (Cartmel ) என்னும்சிற்றூரை அடைந்து சிலமணி நேரம் செலவிட்டோம். இந்த ஊர்களினூடாகச் செல்லும் பயணமே முக்கியமானது. வளைந்து செல்லும் சாலையின் இருபக்கமும் பசுமை செறிந்த புல்வெளி அலைகள். தொலைவில் மலைகள். முகில்கள் இறங்கிப்பரந்திருக்கும் பசுமைமேல் பொழியும் வெயில். இதற்கிணையான காட்சியை இந்தியாவில் ஊட்டியின் வெஸ்டர்ன் கேட்ச்மெண்ட், அவலாஞ்சி போன்ற மிகமிக ஒதுக்குபுறமான மலைப்பகுதிளிலேயே காணமுடியும், அங்கே குப்பைகளை கொட்டுகிறார்கள் என்பதனால் சுற்றுலாப் பயணிகளை அனுமதிப்பதே இல்லை. அனுமதி பெற்றே செல்லவேண்டும்.

கார்ட்மெல் ஊரின Sticky Toffee Pudding. என்னும் இனிப்புவகை மிகச்சிறப்பானது என இணையம் சொன்னதுதான் அங்கே நாங்கள் இறங்குவதற்கான காரணம். பழைய நார்ஸ் மொழியில் அமைந்த இந்த ஊரின் பெயர் ‘பாறைகளின் நடுவே மணற கரை’ என்பதாம். நார்மன்களின் காலகட்டத்தில் உருவான ஊர். கார்ட்மெல் ஊரைப்பற்ற் தகவல்களைச் சொல்லவேண்டியதில்லை- மிக விரிவாக எல்லாம் இணையத்திலேயே ஆவணப்படுத்தப்பட்டுள்ளன. (கார்ட்மெல் கிராமம்) . அது இங்கிலாந்தின் வழக்கமான சிறிய ஊர், அதற்கு அப்பால் ஒன்றுமில்லை. ஆனால் மிகச்சரியான பிரதிநிதித்துவம் கொண்ட ஊர். சீரான, அழகான ,பழமையான கல்வீடுகள். சதுக்கம், தேவாலயம், பழைய கிறிஸ்தவ காலகட்டத்தின் சில நினைவுச்சின்னங்கள், அமைதியான உணவகங்கள்.

சுற்றுலா மையம் என்றதும் அங்கே நம்மூர் போல பயணிகள் முட்டிமோதி நெரிசலிட்டு, கூச்சலிடுவார்கள் என்றோ; சாலைவணிகர்களும் வழிகாட்டிகளும் மொய்த்துக்கொண்டு உயிரைவாங்குவார்கள் என்றோ, தெருக்களெல்லாம் குப்பைமலைகளும் ஓட்டை உடைசல்களுமாக நாற்றமடிக்கும் என்றோ எண்ண வேண்டியதில்லை. ஏரி மாவட்டம் என்பது இங்கிலாந்தின் வடக்குப் பகுதி. தென்பகுதியை விட குளிர், மழை,  பசுமை கூடுதல். மக்கள் தொகை மிகக்குறைவு. நவீன காலகட்டத்தில்தான் இங்கே மக்கள் இந்த அளவுக்காவது வாழத்தொடங்கியிருக்கிறார்கள். செம்மரியாடு வளர்ப்பு தான் முதன்மையான தொழிலாக இன்றும் உள்ளது. இவையெல்லாம் பழைய இடையர் கிராமங்கள். மிகச்சிலரே இங்கே வாழ்ந்திருக்கிறார்கள். இரண்டாம் உலகப்போரின்போதுதான் லண்டனில் இருந்து குண்டுவீச்சுக்குத் தப்பி மேலும் சில குடும்பங்கள் வந்துள்ளன.

இன்று இந்த அமைதிக்காகவும் குளிருக்காகவும்தான் சுற்றுலாப்பயணிகள் வருகிறார்கள். ஏரிகளில் நீர்விளையாட்டுக்கள்தான் இப்பகுதியின் முதன்மை ஈர்ப்பு. அது ஆண்டில் நான்கே மாதங்கள்தான். எஞ்சிய காலம் முழுக்க இந்த ஊர்கள் மழைப்போர்வைக்குள், குளிரில் ஒண்டி கிடப்பவை. கோடைகாலத்தில்கூட திங்கள் முதல் வியாழன் வரை மக்கள் போக்குவரத்து குறைவுதான். வார இறுதிகள், குறிப்பாக நல்ல வானிலை என அறிவிப்பும் இருந்தால் திரள் இருக்கும். அப்போதுகூட அவை நெரிசலாக ஆவதில்லை.

கார்ட்மெல் ஊரில் நாங்கள் இறங்கியபோது என் கண்ணுக்கு அது ஆளே இல்லாத ஊராகத்தான் தோன்றியது. இத்தகைய தெருக்களை குளிர்நாடுகளில் சாதாரணமாகவே பார்க்கலாம். அமெரிக்காவில் பல கிராமங்கள் முழுமையாகவே மானுட நடமாட்டமே இல்லாமலிருக்கும். இங்கே இந்த வசந்தகாலத்தில் இரவு இருட்டுவதற்கு மிகப்பிந்தும், ஒன்பது ஒன்பதரை வரை நம் ஊரில் ஐந்து மணி அளவுக்கு வெளிச்சம் இருக்கும். ஆனால் ஏரி மாவட்டத்தில் அரிதாகவே பகலிலும் வெயில் வந்தது. எப்போதுமே மங்கலான ஓர் ஒளிதான் வானில் இருந்து இறங்கியது.

இங்குள்ள கட்டிடங்கள் எல்லாமே கரிய கற்களை சீராக அடுக்கிக் கட்டப்பட்டவை, அல்லது சுட்டசெங்கற்களை அடுக்கிக் கட்டப்பட்டவை. சுவர்களை பூசி, வண்ணம் தேய்க்கும் வழக்கம் இல்லை.பெரும்பாலும் எல்லா வீடுகளுமே நுறாண்டுக்குமேல் தொன்மையானவை, எஞ்சியவை அந்த பழைய கட்டிடங்களின் அதே பாணியில் கட்டப்பட்டவை. மண்ணாலான ஓடு போட்ட சாய்வான கூரைகள். தூண்கள் இல்லாத வீடுகள் சாலையை ஒட்டியே வரிசையாக அமைந்திருந்தன. பெரும்பாலானவை பூட்டியிருந்தன, உள்ளே ஆளிருப்பது விளக்கொளிகளால் தெரிந்தது. வசந்த மலர்கள் முகப்புகளில் வைக்கப்பட்டிருந்தன.

இந்தச் சிற்றூரில் இன்று நூறாண்டுக்கு முன் செத்துப்போன ஒரு விண்டர்மியர் ஏரிக்கரை வெள்ளைக்கார தாத்தா திரும்ப வந்தார் என்றால் கார்கள் மட்டும் புதியதாக இருப்பதைக் கண்டு கொஞ்சம் ஆச்சரியப்படுவார். கண்ணில்பட்ட பெரும்பாலானவர்கள் முதியவர்கள். இப்பகுதிக்குச் சுற்றுலா வருபவர்கள் இரண்டு வகையினர். ஒன்று வளராத குழந்தைகளுடன் குடும்பங்கள். இரண்டு , முதிய தம்பதியினர். இளைஞர்கள் கண்ணுக்குப் படுவது அரிது. அவர்கள் வேறொரு ‘பப் கலாச்சார’த்தில் வாழ்கிறார்கள். முதியவர்கள் ‘அமைதியாக ஒரு பீருடன் அமர்ந்திருப்பது’ என்னும் கற்பனைகொண்டவர்கள். அப்படியே அமர்ந்து முணுமுணுப்பாகப் பேசிக்கொண்டும், மிகமெல்லச் சிரித்துக்கொண்டும் இருந்தார்கள்.

புட்டிங் ‘ஒரிஜினல்’ கிடைக்குமா என்று முத்துக்கிருஷ்ணனும் டாக்டர் பார்கவியும் அங்கே அலைந்தனர். தயார்நிலை புட்டிங்தான் உண்டு, சூடுபண்ணி தருவோம் என்றார்கள். சரி, அதில் எந்த இடம் நல்லது என்று விசாரித்து அந்தக் கடைநோக்கிச் சென்றோம். அதற்குள் இரண்டு மூன்று கடைகளுக்குள் நுழைந்து விசாரித்தோம். எந்த கடையில் நல்ல புட்டிங் கிடைக்கும் என்று வேறு கடைக்காரர்களே சொன்னார்கள். எவருக்கும் விற்பனையில் எல்லாம் பெரிய ஆர்வம் இருப்பதாகத் தெரியவில்லை.

அந்த தெருவில் ஓய்வாக நடந்தேன். காலமில்லாத ஒரு சிற்றூரில் சென்றுகொண்டிருப்பதுபோல் உணர்ந்தேன். ஒரு பழைய பிரிட்டிஷ் நாவலுக்குள் நுழைந்துவிட்டதுபோலவும் இருந்தது. நேர் எதிரில் வேர்ட்ஸ்வெர்த்தும் கூலிரிட்ஜும் பேசிக்கொண்டு வந்தால் ஆச்சரியப்பட்டிருக்க  மாட்டேன்.

சாலையில் கொஞ்சம் கார்கள். அவ்வப்போது சிலர் சிரித்து வாழ்த்து சொன்னபடி நடந்து சென்றனர். ஆழ்ந்த அமைதியில் காற்றுவீசும் ஒலி. மழைத்துளிகள் கூரையிலிருந்து சொட்டும் ஒலி. இந்த கட்டிடங்களின் கருங்கல் சில்லுகளால் ஆன வெளிப்பக்கம் இவை ஏதோ தொன்மையான செதிலடர்ந்த முதலைகள் அல்லது டினோஸர்கள் என எண்ணச் செய்கிறது. மழைக்கு உகந்தவை இந்த கற்சுவர்கள். மழை பெய்து ஓய்ந்ததுமே உலர்ந்துவிடுகின்றன. பூசணம் பூப்பதில்லை. ஆனால் எப்போதுமே ஈரமாக இருப்பவை போலத் தோன்றச் செய்கின்றன.

சிற்றூர்தான். ஆனால் நுகர்பொருட்கள் விற்கும் கடைகள் பல இருந்தன. நல்ல புத்தகக் கடை இருந்தது. அந்த புத்தகக் கடையை வெளியே நின்று பார்த்தேன். வழக்கம்போல பழையபுத்தகங்கள் நிறைய இருந்தன. படித்த  புத்தகங்களை திரும்பக் கொடுத்து புதிய புத்தகங்கள் வாங்கிக்கொள்ளும் வசதியும் இருந்தது. முந்தைய தலைமுறையினரும் இளைய தலைமுறையினரும் நிறையவே வாசிக்கிறார்கள். வாசிப்பில்லாதவர்கள் இளைஞர்கள்தான்.

பழமையான ஒவ்வொரு கட்டிடமும் துல்லியமான வரலாற்றுக்குறிப்புடன் இருந்தது. நகர்ச்சதுக்கம் மிகச்சிறியது, ஐநூறுபேர் இருக்க முடியும். அதன் நடுவே பழைய கல்பீடமும் ஒரு நடுகல்லும். மிகச்சிறியவை, சாதாரணமானவை. ஆனால் அவை வரலாற்றுச் சின்னங்களாக முறையான குறிப்புகளுடனும், மறுசீரமைப்புச் செய்திகளுடனும் இருந்தன. செங்கல் தளமிட்ட சாலையோரம் மழையில் நனைந்து ஈரமாக இருந்தது. சாலையோரங்களிலேயே பெரிய பூந்தொட்டிகள் வைக்கப்பட்டிருந்தன. அவற்றில் பூக்கள் செறிந்த செடிகள்.

புட்டிங் மிக நன்றாக இருப்பதாக அருண்மொழியும், டாக்டர் பார்கவியும், அவர் அம்மாவும், முத்துக்கிருஷ்ணனும் ஒருங்கிணைந்து கருத்து சொன்னார்கள். நான் இனிப்பு சாப்பிடுவதை முற்றாக விட்டிருப்பதனால் சுவை பார்க்கவில்லை. அந்தக் கடையை பார்த்துக்கொண்டிருந்தேன். உள்ளூரில் தேவைப்படும் பொருட்கள் நிறைந்திருந்தன. காய்கறிகள், பழங்கள், ரொட்டிகள், பொம்மைகள் என என்னென்னவோ. ஆனால் மிகப்பெரும்பான்மை இனிப்பு வகைகள்தான். எல்லாமே சீனியால் செய்யப்பட்டவை. அவ்வளவு இனிப்புகளை ஒரே இடத்தில் பார்ப்பதே திகட்டியது.

அமெரிக்கர்களைப் போலவே பிரிட்டிஷ்காரர்களும் இனிப்புகளை தின்றுகொண்டே இருக்கிறார்கள். மது உண்டு என்றாலும் அது அடிமைப்படுத்துவதில்லை. அடிமைப்படுத்தியிருப்பது சீனிதான். இந்த அளவுக்கு இனிப்பு தேவைப்படுவது ஏன்? உள்ளே இருக்கும் கொண்டாட்டமே இனிப்பை நாடச் செய்கிறது. லண்டன் உட்பட்ட சில நகர்களைத் தவிர்த்தால் பிரிட்டன் இன்று பெரும்பாலும் ஓய்வுக்கான ஊர் போல தெரிகிறது. தேவையான பணம் வைத்திருக்கிறார்கள். உலகைப் பற்றி அதிகம் அலட்டிக்கொள்வதில்லை. வாழ்க்கையை ‘அமைதியாக ரசிப்பது’தான் எஞ்சிய நாட்களில் செய்யவேண்டியது என எண்ணிக்கொண்டிருக்கிறார்கள். அந்த கொண்டாட்டத்தின் புறவடிவமாக இருக்கிறது சீனி என நினைக்கிறேன்.

 

1 like ·   •  0 comments  •  flag
Share on Twitter
Published on June 01, 2025 11:35
No comments have been added yet.


Jeyamohan's Blog

Jeyamohan
Jeyamohan isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow Jeyamohan's blog with rss.