Jeyamohan's Blog, page 83

June 6, 2025

ஐந்து பைசா வரதட்சிணை – வசுதேந்திரா

விஷ்ணுபுரம் குமரகுருபரன் விழா விருந்தினர், வசுதேந்திரா

(1)

சின்னவயதில் நடந்த நிகழ்ச்சியொன்று நினைவிற்கு வருகிறது. விடுமுறையின்போது தொலைவில் இருந்த  ஊரிலிருந்து  எங்கள் வீட்டிற்கு இரண்டு சின்னப் பிள்ளைகள் வந்திருந்தார்கள். அப்பாவிற்கு தூரத்து சொந்தமாகயிருந்த இந்தப் பிள்ளைகளின் வீட்டுச் சூழல் அவ்வளவொன்றும் செழுமையாய் இருக்கவில்லை. பெரியவன் பெயர் பிராணேசா. சுமார் பத்து வயது. அவனுடைய தங்கை சுதா. அவளுக்கு ஏழு வயது. என்னுடைய அக்காவும் நானும் ஏறக்குறைய அதே வயதுடையவர்களாதலால் எங்களுடன் விளையாடிக்கொண்டு விடுமுறையைக்  கழிக்கட்டும் என்று சொல்லி அப்பாவே அந்தப் பிள்ளைகளை அழைத்து வந்திருந்தார்.

இரண்டு  பிள்ளைகளும் மிகவும் சமத்தாக இருந்தார்கள். எங்கள் ஊரில் தண்ணீர் கஷ்டம் இருந்தது. அவர்கள் ஊரிலும் அதே கஷ்டம்தான் என்றும், தங்கள் இருவராலும் தண்ணீர் கொண்டுவர முடியும் என்றும் சொல்லி சிறிய குடங்களை எடுத்துக் கொண்டு எங்களுடன் குழாயில் தண்ணீர்ப் பிடிக்க வந்துகொண்டிருந்தார்கள். சின்னவளாகிய சுதா அம்மாவின் பக்கத்தில் உட்கார்ந்துகொண்டு வெந்தியக் கீரையை ஆய்ந்து கொடுத்தாள். எதற்கும் அடம் பிடிக்கவில்லை. அவர்களுடைய அப்பா அம்மாவை நினைத்துக்கொண்டு ஏங்கவில்லை. கால்களில்  கொலுசு போட்டுக் கொண்டு, சிவப்புப் பாவாடை மஞ்சள் நிற சட்டை அணிந்துகொண்டு குடுகுடு என்று போய்வந்து கொண்டிருக்கும் சுதா; காலையில் குளித்துமுடித்தவுடன் சின்ன அங்கவஸ்திரத்தை முறைப்படி சுற்றிக் கட்டிக்கொண்டு கோபிச்சந்தனத்தை பளபளவென்று அணிந்துகொண்டு கூடத்தில் உட்கார்ந்து சந்தியாவந்தனம் செய்துகொண்டிருந்த பிராணேசா ஆகியோரின் உருவங்கள்  இப்போதும் என் கண் முன் நிழலாடுகின்றன.

 

 (2)

 

அது அக்டோபர் மாத காலம்.எங்கள் ஊர் சுற்றுமுற்றும் எங்கும் பச்சை பசேல் என்று இருக்கும் காலம். பொதுவாக இந்தக் காலத்தில் வீதியிலிருக்கும் எல்லா வயது பிள்ளைகளும் ஒன்றுசேர்ந்து கண்டி நரசிம்மசுவாமி கோயிலுக்குப் போய்வருவது வழக்கம். அந்தக் கோயில் ஊரிலிருந்து சுமார் நான்கு மைல் தொலைவில் இருக்கிறது. எங்கள் தாய்மாமா அப்போதுதான் ஊருக்கு வந்திருந்தார். அவர் எங்கள் ஒட்டுமொத்த பிள்ளைப் பட்டாளத்தையே கட்டிக்கொண்டு கோயிலுக்கு அழைத்துக்கொண்டு போனார். வீட்டிலிருந்தே பிசிபேளே சாதத்தையும் தயிர் சாதத்தையும் கட்டிக்கொண்டு போயிருந்தோம். நதிக்கரையில் உட்கார்ந்து கொண்டு, வயிறு நிறைய சாப்பிட்டு, ஊற்றுகளைத் தோண்டி தாகத்தைத் தணித்துக் கொண்டு, குரங்குகளுடன் விளையாடிக் கொண்டிருந்துவிட்டு மிகுந்த சந்தோஷத்துடன் வீடு நோக்கிப் புரப்பட்டோம். ஊருக்கு வரும் பாதையில் புதியதாய்  ஒரு ஹோட்டல் திறக்கப்பட்டிருந்தது. மாமா எல்லோரையும் ஹோட்டலுக்குக் கூட்டிக்கொண்டு போனார். எங்கள் எவருக்கும் எங்களுடைய ஊரிலிருக்கும் ஹோட்டலுக்குப் போய் வழக்கமில்லை. பள்ளாரிக்கோ, ஹொசபேட்டைக்கோ போகும்போது மட்டும் அப்பா எப்போதாவது மசால்தோசை வாங்கிக்கொடுப்பார். ஆதலால் ஊரிலிருக்கும் அந்த ஹோட்டலுக்குப் போகும்போது தெரிந்தவர்கள் எவராவது பார்த்துவிட்டால் என்ன கதி என்று பயம் ஏற்பட்டது. ஆனால் நகர வாழ்க்கையை அறிந்திருந்த தாய்மாமா அனைவருக்கும் தைரியம் சொல்லி உள்ளே அழைத்துக்கொண்டு போனார். எல்லோறுக்கும் காப்பி வாங்கிக் கொடுத்தார். எங்களுக்கெல்லாம் ஒருமாதிரி சந்தோஷம்தான்.

ஆனால் இருட்டுவதற்குள் வீட்டிற்குத் திரும்பி வந்துவிட வேண்டும் என்று அம்மா உத்தரவிட்டு அனுப்பி வைத்திருந்தாள். அதனால் மாமா எல்லோறையும் அவசரப்படுத்தி எழுப்பி வீட்டிற்கு அழைத்துக் கொண்டு போனார். சிறிது தொலைவு சென்றோமோ இல்லையோ சுதா மிகுந்த பதைப்புடன் பிராணண்ணா பிராணண்ணா என்று திரும்பத் திரும்ப அவள் அண்ணனைக் கூப்பிட்டாள். அவன் அலட்சியமாக என்னடி என்று கேட்டான். காப்பி மிகவும் சூடாக இருந்தது. என்னால் முழுவதும் குடிக்க முடியவில்லை. அரைவாசி குடித்துமுடித்து அப்படியே வைத்து வந்துவிட்டேன்….! என்று பயத்துடன் சொன்னாள். அந்த சொற்களுக்கே சின்னஞ்சிறிய பிராணேசா மிகவும் கலங்கிப்போய்விட்டான்.! ஐயோ பாவி, அம்மாவிற்குத் தெரிந்தால் திட்டுவாள்…! என்றபடி ஓடிச்சென்று ஹோட்டலுக்குள் நுழைந்து, தன்னுடைய தங்கை மிச்சம் வைத்திருந்த அரை கப் காப்பியையும் கடகடவென்று குடித்துவிட்டு, திரும்ப ஓடிவந்து எங்களுடன் சேர்ந்து கொண்டான். தன்னுடைய தங்கையிடம் பயப்படாதே! நான் குடித்து முடித்து வந்துவிட்டேன்! அம்மா திட்டமாட்டாள்! என்று சமாதானப் படுத்தினான்.

இப்போது இந்த நிகழ்ச்சியை நினைத்துக் கொண்டால் சிரிப்பு பொங்கிக் கொண்டு வருகிறது. ஆனால் அந்த வயதில் உணவு எதையாவது கொட்டிவிட்டால் அப்பாவோ அம்மாவோ திட்டுவார்கள் என்ற வினோதமான பயமொன்று எங்களிடம் இருந்தது. அதற்கு சமயக் கட்டுப்பாடுகளை விதித்து நாங்கள் எதையும் வீணாக்காதபடி பெரியவர்கள் எங்களைப் பார்த்துக் கொண்டார்கள். உதாரணமாக இரவுப் பொழுதில் எதையாவது சாப்பிடாமல் தட்டில் மிச்சம் வைத்துவிட்டால் அந்த வீட்டிலிருந்து லட்சுமிதேவி புறப்பட்டுப் போய்விடுவாள் என்னும் முக்கியமான பயம் எல்லோரிடமும் இருந்து வந்தது. சொந்தபந்தங்கள் எல்லோருடையதும் ஏறக்குறைய வறிய வாழ்க்கைதான் என்றாலும் லட்சுமிதேவி குறித்த அச்சம் மட்டும் எவரிடமும் குறைவாய் இருக்கவில்லை. பெரியவர்கள் அதை நேர்மையாக நம்பிக் கொண்டிருந்தார்கள். சில சமயம் வெள்ளரிக்காய் கறியோ, பீர்க்கங்காய் கறியோ சமைக்கும்போது அம்மாவும் அறியாதவாறு கசப்பான காய்களும் சேர்ந்து கொண்டுவிடும். அப்பா மட்டும் அதை வீணாக்காமல் சாப்பிட்டுக் கொண்டிருந்ததை இப்போது நினைத்துக் கொண்டால் உயர்வாகத் தோன்றுகிறது.  அவர் எப்படி அவ்வளவு தூய்மையாக சாப்பிட்டுக் கொண்டிருந்தார் என்றால், அதன் பிறகு அவர் சாப்பிட்ட தட்டிலேயே அம்மா சாப்பிட்டுக்கொண்டிருந்தது எங்களுக்கு எப்போதும் அருவருப்பாகவே தோன்றவில்லை.

 

          (3)

 

பண்டிகை நாட்களில் பலவகை சமயல்களும் போதுமான அளவு நடைபெறும் இல்லையா? அந்த நாட்களில் பிள்ளைகள் ஆசையினால் அதிகமாகப் போட்டுக்கொண்டுவிட்டு, அதன் பிறகு சாப்பிட முடியாமல் வீணாக்குவது அதிகம். அதைத் தவிர்ப்பதற்கு அப்பா ஒரு வழிமுறையை அறிந்து வைத்திருந்தார். யாரெல்லாம் வாழை இலையில் எதையும் வீணாக்காமல் சாப்பிடுகிறார்களோ அவர்களுக்கு ஐந்து பைசா கொடுக்கிறேன்! என்று சாப்பிட உட்காருவதற்கு முன்பே முழங்கிக் கொண்டிருப்பார். அந்த ஐந்துபைசா எங்களுக்கு மிகப் பெரிய தொகையாகத் தோன்றிக் கொண்டிருந்தது. எங்களுக்கு எவ்வளவு வேண்டுமோ அவ்வளவு மட்டும் போட்டுக்கொண்டு ஒரு துளியும் வீணாக்காமல், கடைசியில் இலை நுனியில் இருக்கும் உப்பையும் கூட கையில்  தேய்த்துக்கொண்டு தூய்மைப் படுத்திக்கொள்ளும் பழக்கத்தை வைத்துக் கொண்டிருந்தோம். சாப்பாடெல்லாம்  முடிந்த பிறகு, சாப்பிட்ட இடத்தை தூய்மைப் படுத்தும் அம்மா நாங்கள் பிள்ளைகள் இலைக்குக் கீழ் எதையும் ஒளித்து வைக்கவில்லை என்பதை உறுதிப்படுத்திய பிறகு, சொன்ன சொல்லிற்கு ஏற்ப அப்பா ஐந்து பைசா கொடுத்துக் கொண்டிருந்தார். பெரிய அளவிற்கு பணத்தையே ஈட்டிவிட்ட மகிழ்ச்சி எங்களுக்குள்  ஏற்பட்டு வந்தது. அதனைக் கொண்டு என்ன வாங்கிக் கொள்ளவேண்டும் என்று மிகப் பெரிய விவாதத்தை நடத்திக் கொண்டிருப்போம். அப்பாவின் இந்த பரந்த மனப்பான்மையைப் பார்த்து அம்மா எப்போதும் முனகிக் கொண்டிருப்பார். இப்போதிலிருந்தே பிள்ளைகளுக்கு பணத்தாசை காட்டினால் என்ன நடக்குமோ? என்று அப்பாவை கடிந்து கொண்டிருப்பாள்.

பொதுவாக அப்பா எப்போதும் காட்டு விலங்குகளின் உதாரணங்களையே கொடுத்துக் கொண்டிருந்தார். ஏதாவது காட்டுவிலங்கிற்கு பேராசை இருப்பதை பார்த்திருக்கிறீர்களா? என்று கேள்வி கேட்டுக்கொண்டிருந்தார். பணக் கொழுப்பின்  பிரச்சனை யாதெனும் இருப்பது மணிதர்களுக்கு அல்லது மனிதர்கள் வளர்க்கும் விலங்குகளுக்கு மட்டும்தான் என்று உறுதியாக எப்படியோ.. கொண்டிருந்தார். வயிறு நிரம்பிய புலியின் முன்பு ஆடி அசைந்து கொண்டிருந்தாலும் அது நம்மைத் தீண்டுவதில்லை தெரியுமா? ஒரு மானைப் பிடித்துவிட்டால் அதை வைத்துக்கொண்டு மூன்று நாட்கள் வாழ்க்கை நடத்துகிறது.         ஆண்டு முழுவதற்கும் போதுமான அளவு அரிசி, பருப்பு, சோளம் இவற்றைச் சேமித்துவைப்பது மனிதர்கள் மட்டுமே என்று சொல்லிக் கொண்டிருந்தார். காட்டு விலங்குகளுக்கு இருக்கும் விவேகம்கூட மனிதர்களுக்கு இல்லை என்றால் எப்படி? என்று வாதிட்டுக் கொண்டிருந்தார்.

அப்பா கொடுத்துக்கொண்டிருந்த அந்த ஐந்து பைசா இப்போதும் என்னை பல்வேறு சூழல்களில் பாதித்துக்கொண்டே இருக்கிறது. தேவையை விடவும் மிகுதியானதை வாழ்வில் அடைய முயலும் போதெல்லாம் அப்பாவின் அந்த ஐந்து பைசாவை இழந்துவிட்ட உணர்வு என்னுள் ஓசை இல்லாமல் தோன்றி கலக்கத்தை ஏற்படுத்துகிறது. அணிந்து கொள்ள போதுமான அளவு ஆடைகள் இருக்கும்போது, காரணமே இல்லாமல் புதிய ஆடைகளை வாங்கத் திரும்பவும் செல்லும்போது இந்த ஐந்து பைசா என்னுடைய கண் முன் வருகிறது. ஒழுங்காக இருக்கும் தொலைக்காட்சிப் பெட்டியைக் கொடுத்துவிட்டு புதியதை வாங்கிக்கொள்ளும் வாய்ப்பிருக்கிறது என்றவுடன் மாற்றிக்கொண்டு புதிய

தொலைக்காட்சிப் பெட்டியைக் கொண்டுவரும்போது இந்த ஐந்து பைசாவை தொலைத்துவிட்டதுபோல சிலநொடிகள் உறுதியிழக்கிறேன். ஏதோ ஒரு ஊருக்கு சென்றுத் திரும்பி வந்து, எடுத்துக்கொண்டு சென்ற பயணப்பெட்டியை காலி செய்யும்போது, அவ்வளவு தொலைவு சென்றும் பயன்படுத்தாமல் அப்படியே திரும்பக் கொண்டுவந்த பொருட்கள் மீண்டும் அதே ஐந்துபைசாவைக் கண்முன் அசைக்கின்றன. அப்பாவின் அந்த ஐந்து பைசாவின் மகத்துவத்தை அறிந்துகொண்டால் ஒட்டுமொத்த சமூகமே மாற்றமடையும் வாய்ப்புள்ளது  என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. மொத்தத்தில் இந்த ஐந்துபைசா என்னுடைய எல்லா பேராசைகளுக்கும் தடை போடும்அளவிற்கு ஆற்றலுடையதாய் இருக்கிறது.

 

(4)

 

இப்படிப்பட்ட அப்பாவும் சிறிதளவு சாதத்தை வீணாக்க வேண்டியிருந்த ஒரு வேடிக்கை நிகழ்ச்சியும் என் நினைவிற்கு வருகிறது. நாய், பூனை போன்ற வளர்ப்பு விலங்குகள்மீது அம்மாவிற்கு அவ்வளவொன்றும் விருப்பமிருக்கவில்லை.  அளவிற்கு அதிகமாக மடி விழுப்பு பார்க்கும் மாத்வ குடும்பமாக இருந்த காரணத்தினால் அங்கு வளர்ப்பு விலங்குகள் மீது பிரியம் குறைவாகவே இருக்கிறது. அது எப்படியோ எங்கள் வீட்டு கொல்லைப் புறத்தில் நோயுற்ற நாயொன்று வந்து ஒண்டிக்கொண்டுவிட்டது. எவ்வளவுதான் துரத்திவிட்டாலும் திரும்பத் திரும்ப வந்து ஒதுங்கிக் கொண்டிருந்தது. சாப்பிட்ட இடத்தை தூய்மைப் படுத்தி கொண்டு சென்று கொட்டுவதை உண்பதற்காக ஆசையுடன் காத்துக்கொண்டு உட்கார்ந்திருந்தது. ஆனால் ஒரு பருக்கையையும் வீணாக்காமல் சாப்பிடும் பழக்கத்தை வளர்த்துக் கொண்டிருந்த எங்கள் வீட்டில் அதற்கு என்ன கிடைக்கப்போகிறது? ஏமாந்த முகத்துடன் திரும்பிப் போய்க் கொண்டிருந்தது. ஓர் இரு முறை இதைப் பார்த்து அப்பா வருத்தப்பட்டார். மறு நாளிலிருந்து ஒரு வேடிக்கையான முறைமையை ஏற்படுத்திக்கொண்டார்.  சாப்பிடுவதற்கு முன்பு சித்திராவதி வைக்கவேண்டும் இல்லையா?அதற்கு இவ்வளவு பெரிய பெரிய கவளங்களை உருட்டி,நான்கு கவளம் சித்திராவதி வைக்க ஆரம்பித்தார். அப்பா ஏன் இப்படி செய்துகொண்டிருக்கிறார் என்று எங்களுக்கெல்லாம் முதலில் புரியவே இல்லை.கேட்டதற்கு ‘அவ்வாறு செய்வது சிறந்தது என்று ஆச்சாரியார் சொல்லியிருக்கிறார்’ என்று காரணம் சொன்னார். ஆனால் இரண்டே நாட்களில் அதன் ரகசியம் அம்மாவிற்கு புரிந்துவிட்டது. ‘இதோ அந்த பாழாய் போன நாய்க்காக உங்கள் அப்பா அடிக்கும் லூட்டியைப்  பாருங்களடா’ என்று எங்கள் முன்னர் முனகிக் கொண்டிருந்தாள்.

ஏதாவது விருந்திற்கு இப்போது போகும்போதும், மக்கள் எப்படி சாப்பிட்டிருக்கிறார்கள் என்பதை கவனிப்பது என் பொழுதுபோக்கு. பஃபே,விருந்து இருந்தாலும் சாப்பிட்டு முடித்த தட்டுகளிலிருந்து வீசிய பாத்திரத்தின் அருகே சென்று ஒரு முறை பரிசீலிப்பதை நான் தவறவிடுவதே இல்லை. இந்தத் தேசத்தில் அதிகமான அளவிற்கு உணவுப் பற்றாக்குறை இருக்கிறது. நிறையபேர் சாப்பாடு இல்லாமல் பட்டினி கிடக்கிறார்கள். அதனால்  நாம் வீணாக்கக் கூடாது என்ற எளிய விஷயமாக இது என்னுள் அமையவில்லை. அந்த விஷயம் உண்மை என்று ஒப்புக் கொண்டாலும், அதையும் கடந்த அறம்சார் நிகழ்வாக இது என்னை பாதிக்கிறது. உலகிலுள்ள அனைவரும் அப்பாவின் ஐந்து பைசாவை அடைந்துவிட வேண்டும் என்று எனக்கு ஆசையாய் இருக்கிறது.

“சுவையற்றதை எதற்காக சாப்பிடவேண்டும்?” என்ற வாதம் ஒன்றை அவ்வப்போது கேட்டிருக்கிறேன். இத்தகைய சொற்களை நான் ஒப்புக்கொள்வதில்லை. சாப்பாட்டு விஷயம் ஒருபுறம் இருக்கட்டும், வாழ்விலும் சுவையற்ற எவ்வளவோ விஷயங்களை நாம் ஏற்றுக்கொள்ள வேண்டிய கட்டாயம் இருக்கத்தான் செய்கிறது. அப்படியிருக்க சாப்பாட்டு வேளையில் ஏன் அந்த ஏற்றத்தாழ்வு? அவ்வப்போது சுவையற்றதை சாப்பிட்டால் அப்படியொன்றும் பெரியதாய் நடந்துவிடப் போவதில்லை. நமக்கு சமையல் செய்து பரிமாறுபவர்களுக்குக் காட்டும் மரியாதையாகவும் அது இருக்கும். வேண்டுமென்றால் நலத்திற்கு தீங்கு செய்யும் உணவை உட்கொள்ளலாகாது என்பதை ஒப்புக்கொள்ளலாம்.            

முந்தாநாள் அக்காவின் மகளுக்குத் திருமணம் நடந்தது. மாப்பிள்ளை எப்படிப்பட்ட பையனோ என்ற குழப்பம் அக்காவிடம் இருக்கவே செய்தது. யாரோ சம்மந்தத்தை சுட்டிக்காட்டினார்கள் என்று ஜாதகப் பொருத்தம் பார்த்துச்செய்யும் திருமணங்களில் பையனின் குணம் எப்படிப்பட்டது என்று எந்த அளவிற்கு தெரிந்துகொள்ள வாய்ப்பு? கல்யாண நாளன்றே நான் அதற்கு பதிலைக் கண்டுபிடித்துவிட்டேன். பையன் ஒரு துளியும் சிந்தாமல் சுத்தமாய் சாப்பிட்டுமுடித்திருந்தான். அவனுடைய அப்பாவும் அம்மாவும்கூட அவ்வாறே சாப்பிட்டிருந்தார்கள். அக்காவை கூப்பிட்டு அந்த இலைகளை காண்பித்து  பயப்படாதே அக்கா. பையன் நல்லவன். அகங்காரம் இல்லை. அவர்களின் குடும்பமும் நல்லது என்றே தோன்றுகிறது என்று சொன்னேன். அக்காவிற்கு அந்த வார்த்தைகளால் திருப்தி ஏற்பட்டது.                  

  “மாப்பிள்ளைக்கு ஐந்து பைசா வரதட்சிணை கொடுத்துவிடலாம் இல்லையா”?என்ற என் வார்த்தைகளுக்கு பால்யத்தை நினைத்துக்கொண்ட அக்கா புன்னகைத்தாள்.

கன்னடத்திலிருந்து தமிழில் கு. பத்மநாபன்.

 

நன்றி:

திசையெட்டும்

மொழிபெயர்ப்புக் காலாண்டிதழ்

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on June 06, 2025 11:31

இஸ்லாம், சமப்பார்வையை உருவாக்கிவிட முடியுமா?

நம் சமூகத்தை ஆட்கொண்டிருக்கும் முன்முடிவுகள் மிக ஆழமானவை. கசப்புகள் அதைவிட ஆழமானவை. நாம் எதற்கு எதிராகப் பேசுகிறோம் என தெரிந்திருந்தால் பேசும் சூழல் இருப்பதே ஒரு பெரிய விஷயம் என எண்ணத்தோன்றும். 

இஸ்லாம், சமப்பார்வையை உருவாக்கிவிட முடியுமா?

I have dreams to write, but while thinking about it, I understand that writing can’t promise me a career. It is neither respected nor encouraged in India. I have all kinds of questions and hesitations about writing Writing- A letter
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on June 06, 2025 11:30

June 5, 2025

மணி ரத்னம், ஓர் உரையாடல்

மணி ரத்னத்துடன் ஓர் உரையாடல். குறிப்பாக எந்தத் திட்டமிடலும் இல்லை. கொடைக்கானலில் அவருடைய இல்லத்தில் சாதாரணமான செல்போன் காமிராவில், இயற்கையான வெளிச்சத்தில் எடுக்கப்பட்டது. என் OF MEN WOMEN AND WITCHES அப்போதுதான் வெளிவந்திருந்தது. அதை முன்வைத்து தன்வரலாற்றுக்கும் புனைவுக்குமான ஊடாட்டம் பற்றி பேசிக்கொண்டோம். சரியான ஒலிப்பதிவும் இல்லை. ஆனால் cc அடித்தால் subtitle வருகிறது.

 

OF MEN WOMEN AND WITCHES 

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on June 05, 2025 11:36

பாலியலை எதுவரை எழுதுவது?

 

பாலுணர்வை அறிதலும் எழுதுதலும்

அன்புள்ள ஜெ,

ஒரு சங்கடமான கேள்வி, தவறாக நினைக்கமாட்டீர்கள் என நினைக்கிறேன். உங்கள் படைப்புலகில் நேரடியான காமச்சித்தரிப்புக்கள் இல்லை, அல்லது குறைவாகவும் மென்மையாகவும் உள்ளன. அல்லது நான் சொல்வதை இப்படி மாற்றிச் சொல்கிறேன். நீங்கள் காமத்தை எழுதும்போது அதை உடல்சார்ந்து வர்ணிப்பதில்லை. அந்நிகழ்ச்சிகளை நீடிக்கவிடுவதில்லை.

நான் சரியாகச் சொல்கிறேனா என்று தெரியவில்லை. பல இடங்களில் ஒரு ஜாக்ரதையுடன நின்றுவிடுகிறீர்கள். அல்லது கவித்துவமான மொழியைக்கொண்டு போர்த்திவிடுகிறீர்கள். இதை நாங்கள் நண்பர்கள் பேசிக்கொண்டோம். பாலியலை எழுதுவதை தவறு என நினைக்கிறீர்களா? அல்லது பாலியல் எழுத்து இலக்கியம் அல்ல என்று எண்ணுகிறீர்களா? அல்லது இப்படி கேட்கிறேன், பாலியலை எழுதுபவர் எங்கே நிறுத்திக்கொள்ளவேண்டும் என்று நினைக்கிறீர்கள்

ஆர்.பிரதீப் பாஸ்கரன்

அன்புள்ள பிரதீப்,

இது சங்கடமான கேள்வி எல்லாம் ஒன்றும் இல்லை. நானே ஓரிருமுறை பதில் சொல்லிவிட்ட ஒன்றுதான்.

பாலியலை மட்டும் அல்ல வன்முறையை, உளப்பிறழ்வுகளை, அருவருப்பை, துயரை எதை வேண்டுமென்றாலும் எவ்வளவு வேண்டுமென்றாலும் எழுத்தாளன் எழுதலாம். எழுத்தின் தரமோ தரமின்மையோ அதனால் முடிவாவதில்லை. எழுத்தாளன் எதை எவ்வளவு எப்படி எழுதவேண்டும் என்பதை அவனுடைய தேடலும், அவனுடைய இலக்கும் மட்டுமே முடிவுசெய்யவேண்டும்.

இலக்கியத்தில் பாலியல் என்று பேசும்போது இரு புலங்களை நாம் கருத்தில்கொள்ளவேண்டும். ஒன்று ஐரோப்பிய சமூகச்சூழல். இன்னொன்று கலையின் கட்டமைப்பு

ஐரோப்பா நெடுநாட்களாக கடுமையான பாலியல் ஒறுப்பை மதநெறியாக கொண்டிருந்த நாடு. ஐரோப்பிய மறுமலர்ச்சி என்பது ஒட்டுமொத்தமாக ஐரோப்பாவின் கிறித்தவ மதநெறிகளுக்கு எதிரான ஒரு சிந்தனைப்போக்குதான்.

கலை இலக்கியம் தத்துவம் மட்டும் அல்ல தொழிற்புரட்சி, நுகர்வுப்பண்பாடு, ஜனநாயகம் எல்லாமே கிறித்தவத்திற்கு எதிரான சிந்தனைகளாக உருவாகி வந்தவை. தனிமனிதன் என்னும் கருதுகோளே கிறித்தவ சிந்தனைக்கு எதிராக எழுந்ததுதான். தனிமனித உரிமை, தனிமனிதனின் தேடல், தனிமனிதனின் அதிகாரம் என்னும் கருத்துக்களே ஜனநாயகம் என்னும் அமைப்பு வரை வந்துசேர்ந்தன.

மேலுலகுக்காக இக உலகை நிராகரிப்பது, அதன்பொருட்டான கடுமையான விரதங்கள் கிறித்தவத்தின் அடிப்படைகள். சதை என்பது சாத்தானின் ஊர்தி என்பது அதன் நம்பிக்கை. இன்றும், இங்கும்கூட தீவிரமான கிறித்தவத்தின் வழி அதுவே.கத்தோலிக்கர்கள் சீர்திருத்தக் கிறித்தவர்கள் இருவருமே பாலியல் ஒறுப்பை ஒர் அடிப்படை சமூக ஒழுங்காக முன்வைத்தனர்

ஆகவே ஐரோப்பிய மறுமலர்ச்சியுடன் இணைந்து எழுந்த இலக்கியங்களில் தனிமனிதனின் பாலியல் விழைவை அங்கீகரிப்பது, அதை முழுக்கமுழுக்க சமூகக் கட்டுப்பாட்டுக்கு விட்டுக்கொடுக்காமலிருப்பது ஆகியவை முதற்பொருளாகப் பேசப்பட்டன.

நவீன ஐரோப்பிய இலக்கியத்தில் பாலியல் மையப்பேசுபொருளானது இவ்வண்ணம்தான். சில எல்லைகளை தொட்டுக்காட்டி இதை விளக்கலாம். அன்னா கரீனினா [தல்ஸ்தோய்] , எம்மா [ஜேன் ஆஸ்டின்] மேடம் பவாரி [ஃப்ளாபர்ட்] போன்ற ஆரம்பகால நாவல்கள் பாலியல்கட்டுப்பாட்டுக்கும் மானுடவிழைவுக்கு இடையிலான மோதலை, மானுட உள்ளத்தின் சுதந்திர நாட்டத்தை காட்டுபவை. அந்த மோதல் இட்டுச்செல்லும் இறுதி வீழ்ச்சியை முன்வைப்பவை.

அவ்வரிசையை அப்படியே நீட்டிக்கொண்டுவந்தால் லேடி சாட்டர்லிஸ் லவர் [டி.எச். லாரன்ஸ்] ஐ அடைகிறோம். அது அப்பாலியல் விடுதலையை கொண்டாடி, அதை ஒரு மாற்றுவாழ்க்கையாக மட்டுமல்ல மாற்றுமெய்யியலாகவும் முன்வைக்கிறது.

இன்னொரு உதாரணம் என்றால் ஹென்ரிக் இப்சனின் எ டால்ஸ் ஹௌஸ் என்னும் நாடகம் பெண்ணின் விடுதலை குடும்பத்திற்கு வெளியே என்று அறைகூவுகிறது. பியரி லாக்லோஸின் டேஞ்சரஸ் லயசன்ஸ் கட்டற்ற பாலியல்- அதிலிருக்கும் குற்றம் அளிக்கும் கொண்டாட்டத்தை முன்வைக்கிறது

இது ஐரோப்பியப் பார்வையில் நிகழ்ந்த ஒரு கருத்துப்பரிணாமம். ஐரோப்பிய – அமெரிக்க எழுத்தில் பாலியல்சுதந்திரம் முதன்மைப்பேசுபொருள் ஆனது இவ்வண்ணம்தான். அந்த பரிணாமத்தின் கடைசிக்கட்டம் என ஹென்றி மில்லரின் நாவல்களைச் சொல்லலாம்.

ஆனால் அந்தப்புள்ளியிலேயே அந்த கருத்தியல் பரிணாமம் முடிவுற்றுவிட்டது. அதன்பின் எவருக்கும் எதுவும் புதிதாகச் சொல்வதற்கில்லை. அதன்பின் எழுதியவர்கள் ஏற்கனவே எழுதப்பட்டவற்றைத்தான் திரும்பத்திரும்ப எழுதினார்கள். எழுதிக்கொண்டிருக்கிறார்கள்

ஏன்? ஒன்று, ஏற்கனவே நான்கு தலைமுறைகளாக பேசப்பட்ட பாலியல்சுதந்திரம் பெருமளவுக்கு அங்கே சாத்தியமாகிவிட்டிருக்கிறது. ஒரு வாழ்க்கைமுறையாக அது ஆகிவிட்டது. அவ்வாழ்க்கைமுறையில் இருப்பவர்கள் அதை இலக்கியத்தில் வாசிக்க விரும்புகிறார்கள். முன்பு பாலியல் சித்தரிப்பு அளித்த எந்த அதிர்ச்சியும் இன்று உருவாவதில்லை. அது தெரிந்த, பழகிய ஒரு கதையம்சம். ஆகவே எளிதாக வாசிக்க ஏற்றது, அவ்வளவுதான்.

இன்னொன்று, பொதுவாக புனைவுகளை அதிகமாக வாசிப்பவர்கள் இளைஞர்கள். மூளை ஒரு பாலியலுறுப்பாக இருக்கும் வயது அது. அப்பருவத்தில் பாலியல் சித்தரிப்புகளே அவர்களை ஈர்த்து உள்ளே கொண்டுவருகிறது. ஆகவே அது வாசிப்புவணிகத்தின் முக்கியமான ஒரு கூறாக மாறிவிட்டது

இன்று பாலியலில் எந்த புதிய தத்துவச் சிக்கலும் இல்லை, எந்த ஆழ்ந்த அதிர்வையும் அது அளிப்பதில்லை. நடைமுறையில் இன்னமும்கூட பலர் இலக்கியம் சென்றடைந்த பாலியல்சார்ந்த புரிதல்களைச் சென்றடையாமலிருக்கலாம். ஆனால் இலக்கியம் அதைக் கடந்துவிட்டது. உதாரணமாக இன்னமும்கூட தமிழ்ச்சமூகத்திற்கு விதவைத்திருமணத்திற்கு உளத்தடைகள் உள்ளன. ஆனால் இலக்கியம் அதை குபரா காலத்திலேயே பேசித் தெளிந்து கடந்துவிட்டது.

இன்னொன்றும் உண்டு, சென்ற ஐம்பதாண்டுகளுக்குள் பாலுறவியல் [ ] என்னும் துறை உருவாகி ஓர் மருத்துவமுறையாகவே நிலைகொண்டுவிட்டது. ஹாவ்லக் எல்லிஸ், கின்ஸி போன்ற மேதைகளால் உருவாக்கப்பட்ட அத்துறை அதற்குமுன் இலக்கியங்கள் பேசிய பல தளங்களை வெகுவாக விளக்கி முன்சென்றுவிட்டது

நான் முன்னரும் எழுதியிருக்கிறேன், ஹாவ்லக் எல்லிஸ் போன்ற பாலுறவியலாளர்களை ஓரளவேனும் வாசித்த ஒருவர் இன்றைய புகழ்பெற்ற பாலியலெழுத்தாளர்களின் படைப்புக்களை வாசித்தால் அவை எவ்வளவு மேலோட்டமானவை, எவ்வளவு பிழையான புரிதல்கள் கொண்டவை என உணர்வார். அவற்றுக்கு ஒருவகை பகற்கனவு என்னும் இடம் மட்டுமே உள்ளது

ஆகவே பாலியலை எழுதுவதொன்றும் அதிர்ச்சியோ புரட்சியோ மீறலோ அல்ல. செல்பேசியில் எட்டாம் வகுப்பு மாணவன் பார்க்கும் பாலுறவுக்காட்சிகளுக்கு, பாலுறவுசார்ந்த மீறல்களுக்கு சமானமாக எவரும் எழுதிவிடவுமில்லை. ஒரு மெல்லிய கிளுகிளுப்புக்காக இலக்கியத்திலும் பாலியலையே வாசிக்க விரும்புவது ஒரு தனிமனித விருப்பம். ஆனால் இலக்கியம் என்பது இத்தகைய எளிமையான சொறிதல்சுகம் அல்ல.

இன்று ஒருவர் பாலியலெழுத்தை எழுதினால் உடனே ‘சரோஜாதேவிபுத்தகம்’ என்ற விமர்சனம் வருகிறது. அது வசை அல்ல, ஒரு பொத்தாம்பொதுவான ஆனால் உண்மையான விமர்சனம்தான். அதைத்தான் நாங்கள் பாலியல்நூல்களி வாசிக்கிறோமே, மலையாகக் குவிந்துகிடக்கிறதே, மேலதிகமாக நீ என்ன சொல்கிறாய் என்பதுதான் அந்த விமர்சனமாக ஆகிறது.

இந்தியச்சூழலில் இந்த ஐரோப்பியபாணி பாலியல்விடுதலையை பேசுவதன் சிக்கல் என்ன? ஒன்று தமிழ்ச்சூழலிலேயே பொதுவான, அனைவருக்கும் உரிய இறுக்கமான பாலியல்நெறிகள் இல்லை. இங்கே பாலியல் ஒடுக்குமுறை பற்றியெல்லாம் பேசுபவர்கள் பெரும்பாலும் உயர்சாதியினரின் பாலியல்சூழலை மட்டுமே அறிந்திருக்கிறார்கள். பெரும்பாலான அடித்தள – உழைக்கும் மக்கள் தங்களுக்குரிய பாலியல் சுதந்திரத்தை கொண்டிருக்கிறார்கள்.

இரண்டு, இங்கே பாலியல் நெறிகள் என்பவை குடும்பநெறிகள், குலநெறிகள்தானே ஒழிய ஒவ்வொரு தனிமனிதரும் உணரும் அகச்சிக்கல்களாக அவை இல்லை. ஏனென்றால் இங்கே மதம் அப்படி எந்த ஆழ்ந்த கட்டுப்பாட்டையும் விதிக்கவில்லை. இந்துமதம் போன்ற நெகிழ்வான மதம் அப்படி எதையும் விதிக்கவும் முடியாது. ஆகவே குலநெறிகள், குடும்பநெறிகள் மாறும்போது எந்த சிக்கலுமில்லாமல் இன்னொரு ஒழுக்கமுறைக்குள் மக்கள் வந்துசேர்வதைக் காணலாம். சென்ற பத்தாண்டுகளில் விவாகரத்து- மறுமணம் ஆகியவை எத்தனை இயல்பாக ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளன என்பதை பார்த்தால் இது தெரியும்

ஆகவே எங்கோ உள்ள சிக்கலை இங்கே கொண்டுவந்து கடைபரப்பிக் கொண்டிருக்கிறார்கள் என்பதே இதைப்பற்றிய என் புரிதல். சிக்கல்கள் இருப்பது இதை எழுதுபவர்களின் உள்ளத்தில்தான். சமீபத்தில் பேசிக்கொண்டிருக்கையில் ஒரு நண்பர் சொன்னார். ஓர் இளம் எழுத்தாளர், பாலியலை நிறையவே எழுதுபவர், ஆலயச் சிற்பங்களை பார்த்துக்கொண்டிருந்தார். பாலியல்சிற்பங்களைப் பார்க்கையில் எல்லாம் வெடித்துச் சிரித்தார், ஆபாசமான கருத்துக்களைச் சொன்னார். அப்படியென்றால் சிக்கல் இருப்பது எவரிடம்? அவர் எழுதுவது தேடலை அல்ல, அவருடைய நோய்க்கூறை

அமெரிக்காவின் அருங்காட்சியகம் ஒன்றில் பான் என்னும் கிரேக்க தெய்வம் [பாதி ஆட்டு உடல்கொண்டது] தேவதை ஒன்றை வல்லுறவுகொள்ளும் சலவைக்கல் சிலை இருந்தது. ஆனால் தட்டிவைத்து மறைக்கப்பட்ட ஒரு வளைப்புக்குள் அதை மட்டும் தனியாக வைத்திருந்தார்கள். அதைப்பற்றி பேசியபோது நண்பர் சொன்னார். அமெரிக்க அருங்காட்சியகம் ஒன்றின் முகப்பில் ஒரு இந்திய மோகினி சிலை இருந்தது. அது ஆபாசமாக உள்ளது, தனியாக பிரித்துவைக்கவேண்டும் என்று மக்களிடமிருந்து கோரிக்கை வந்தது என்று

அச்சூழலை நோக்கிப் பேசும் இலக்கியங்களின் இலக்கு வேறு, அவை உருவாக்கும் விளைவும் வேறு. இந்தியச்சூழலில் அவை எந்த ஆழ்ந்த தத்துவ அடித்தளத்தையும் சென்று தொடுவதில்லை. ஒரு மெல்லிய கிளர்ச்சியை அளித்து, வாசிக்க ஆரம்பித்திருக்கும் பையன்களுக்கு கிளுகிளுப்பூட்டி நின்றுவிடுகின்றன.

ஒர் எழுத்தாளனுக்கு மெய்யாகவே மேலதிகமாக கேள்விகள் இருந்து, கண்டடைதல்கள் இருந்தால் அவன் பாலியலை எந்த எல்லைக்கு வேண்டுமென்றாலும் எழுதலாம். கடைசியில் நீ கொண்டுவந்ததுதான் என்ன என்பதுதான் இலக்கியத்தில் என்றுமுள்ள கேள்வி

இரண்டாவது புலம், கலையொருமை. ஓவியம் பார்ப்பவர்களுக்கு தெரியும், சிவப்பு நீலம் கருமை ஆகிய மூன்று வண்ணங்களும் கடுமையானவை. ஓவியர்கள் மிகுந்த கவனத்துடன் மட்டுமே அவற்றை கையாள்வார்கள். அவை திரைச்சீலையிலிருந்து எழுந்து நிற்பவை. பிறவண்ணங்களை மறைப்பவை

காமச்சித்தரிப்பு, அருவருப்புச் சித்தரிப்பு, வன்முறைச் சித்தரிப்பு ஆகியவை கடும்வண்ணங்கள். காமம் உடல்சார்ந்ததாக ஆகும்போது அது மிக எளிதில் அருவருப்பு சார்ந்ததாக மாறக்கூடும். கலைஞர்கள் இம்மூன்றையும் சார்ந்து கட்டுப்பாட்டுடன் செயல்படுவது இதனால்தான்.

இவை வாழ்க்கையின் கூறுகள். இவை இல்லாமல் கலை இல்லை. ஆனால் இவை அந்த ஆசிரியனின் கலைசார்ந்த நோக்கங்களை மறைக்கக் கூடும். ஆகவே அவன் அவற்றின் அளவையும் தீவிரத்தையும் கட்டுப்படுத்துகிறான்

ஓர் எழுத்தாளனின் தேடலும் கண்டடைதலும் காமம் சார்ந்தவை மட்டும் என்றால் அவன் அதை தன் தேடலின் எல்லைவரை கொண்டுசெல்லலாம். அருவருப்பு வன்முறை என்றாலும் அவ்வாறே. உதாரணமாக, ஏழாம்உலகம் அருவருப்பு ஓங்கிய நாவல். ஒருவேளை தமிழிலேயே அவ்வுணர்ச்சி மிகுந்துள்ள ஆக்கம் அதுதான். ஏனென்றால் அந்நாவலின் தேடல் இருப்பதே அந்த தளத்தில்தான்.

அந்த அருவருப்பு விஷ்ணுபுரத்திலும் வெண்முரசிலும் உண்டு. ஆனால் அவற்றின் தேடலும் கண்டடைதலும் வேறு தளத்தில் நிகழ்கின்றன. அவற்றை மறைக்காதபடி, திசைதிருப்பாதபடி, அந்த புனைவுப்பரப்பில் எவ்வளவு தேவையோ அவ்வளவு மட்டுமே அது பயன்படுத்தப்பட்டுள்ளது.

என் எழுத்தைப் படிப்பவர்களுக்குத் தெரியும், என் கேள்விகளும் கண்டடைதல்களும் காமம் சார்ந்தவை அல்ல. என் வாழ்க்கை அவ்வாறு அமைந்தது. இளமையிலேயே சந்திக்கநேர்ந்த சாவுகள் வழியாக மானுட இருப்பின் அடிப்படைகளை நோக்கி சென்றவன். அதற்காக வீடுவிட்டு கிளம்பியவன். நான் எழுதுவது அதையே

அந்த உசாவலை என்னுள் மட்டும் நிகழ்த்திக்கொள்ளாமல் என்னுள் இருந்து வெளியே விரிந்திருக்கும் வரலாற்றை, பண்பாட்டை, மதத்தை, மானுடவாழ்க்கைப்பெருக்கை நோக்கி விரித்துக்கொள்கிறேன். அதுதான் என் இலக்கு. அதில் ஆர்வமில்லாத வாசகர்கள் என் எழுத்துக்களை வாசிக்கக்கூடாது என்பதே என் கோரிக்கை. அது உங்களுக்கானது அல்ல.

என்றும் காமமோ வன்முறையோ என்னை திடுக்கிடச் செய்ததில்லை. இங்கே எந்தத் தமிழ் எழுத்தாளரும் காணாத அளவுக்கு கட்டற்ற காமத்தை, வன்முறையை நான் என் அலைதல்களில் கண்டிருக்கிறேன். அவற்றை இங்கே விரிந்திருக்கும் மானுடவாழ்க்கையின் இயல்பான பக்கங்களாக மட்டுமே நான் பார்க்கிறேன்.

இன்று நினைவுகூர்கிறேன். திருவண்ணாமலையில் ஒருமுறை அறுபதுவயதான ஒரு விபச்சாரிப்பெண்ணை பத்து பையன்கள், அனைவருக்குமே பதினெட்டுக்குள்தான் வயது, மாறிமாறி பாலுறவுகொள்வதை ஒரு பழைய மண்டபத்தின் படிக்கட்டின்மேல் இருந்து பார்த்துக்கொண்டிருந்தேன். நிலவு நேரம். பாலுறவுமீறல்களின் எல்லா நிலைகளும் நிகழ்ந்தன. எனக்கு ஒரு துளிகூட அதிர்ச்சி எழவில்லை. என் வயது இருபத்திரண்டுதான் அப்போது. அதை இப்போது எழுதும்போது மட்டுமே நினைவுகூர்கிறேன்.  ‘ஆமாம், அவ்வளவுதான், அதற்கென்ன?’ என்பதே அன்றும் இன்றும் என் எண்ணம்.

ஆனால் அன்றும் இன்றும் சாமியார்கள் என்னை திகைப்படையச் செய்கிறார்கள். ஒருவகை உறவும் இன்றி, அடுத்தவேளை உணவுக்கான எண்ணமே இன்றி வாழ்பவர்கள் அவர்கள். இமைய மலைக்குகைகளில் தன்னந்தனியாக கடுங்குளிரில் வாழ்பவர்கள், துணியில்லாமல் பல்லாயிரம் மானுடர் நடுவே இயல்பாக உலவும் அகோரிகள், நாளையும் நேற்றுமில்லாதவர்களே என்னை ஈர்க்கிறார்கள்

ஹண்டர் சமவெளியில் இமையமலையை நடந்தே கடக்கும் அமெரிக்க தம்பதிகளைப் பார்த்தேன். தோளில் பையுடன் கிளம்பி இந்தியாவழியாக உலகைச் சுற்றும் ஹிப்பி ஒருவரை பலிதானாவில் கண்டேன். அவர்களே நான் அறியவிரும்புபவர்கள். மானுடனுக்கு இங்குள்ள உறவுகளுடன் உள்ள தொடர்பு என்ன, இந்த ஒட்டுமொத்த மானுடப்பண்பாட்டில் ஒரு தனிமனிதன் பெறுவதும் அளிப்பதும் என்ன, எங்கே அவன் அதன் பகுதியாக இருக்கிறான், எங்கே உதிர்கிறான்?

நான் எழுதுவது, என் வாசகர்களைக் கொண்டுசெல்ல விரும்புவது அந்த வினாக்களை, விடைகளை நோக்கித்தான். அல்லது சிலசமயம் நானே சென்றடையும் விடைகளில்லாத திகைப்பை. அதன்பொருட்டு நான் உருவாக்கும் புனைவுப்பரப்பில் சித்தரிக்கப்படும் வாழ்க்கைக்குள் எந்த அளவுக்கு வேண்டுமோ அந்த அளவுக்கு காமமும் வன்முறையும் அருவருப்பும் இருக்கும் . அவை மையத்தை ஒருபோதும் மறைக்க அனுமதிக்க மாட்டேன்

என் படைப்புகளில் காமம் உண்டு, ஆனால் அதன்பொருட்டு எவரும் என்னை வாசிக்க வருவதில்லை. அப்படி எவராவது வந்தால்கூட என் வாசகர்களே ‘தம்பி உங்க ஏரியா இது  இல்லை” என்று சொல்லிவிடுவார்கள். தமிழினி புத்தகக் கடையில் கொற்றவை நாவலை எடுத்து பில்போடக் கொண்டுவந்த ஒருவரிடமிருந்து அதை வாங்கி அப்பால் வைத்துவிட்டு “நீங்க எதுக்கு தம்பி இதெல்லாம் படிக்கிறீங்க? நீங்க வாசிக்கவேண்டிய புக்கு வேறல்ல” என்று சொன்ன வசந்தகுமாரை நான் கண்டிருக்கிறேன்.

நான் காமத்தில் எழுதவிரும்புவது மனித உடல் அதில் என்னவாகிறது என்று அல்ல. பலர் சொல்லிக்கொண்டிருப்பதுபோல மனிதக் காமம் உடல்சார்ண்டதும் அல்ல. மனிதன் அதை கடந்துவந்து பல நூற்றாண்டுகள் ஆகின்றன. மனித உடல் ஒரு குறியீடு, மண்ணிலுள்ள அனைத்துமே மானுட உடலின் குறியீடுகளும்கூட. பலநூற்றாண்டுக்கால கலை, இலக்கியம், தொன்மங்கள் கலந்து மானுட உடல் அவன் உள்ளத்தின் வடிவை அடைந்துவிட்டிருக்கிறது. மானுடக் காமம் என்பது அவன் அகத்தில் நிகழ்வதுதான். உடலில் நிகழ்வது மிகமிகமிகக் குறைவே. உள்ளம் செல்லும் தொலைவே எழுத்தாளனின் அறைகூவல். உடலை வர்ணித்துக்கொண்டிருப்பவனுக்கு இன்னமும் இலக்கியம் வசப்படவில்லை.

உள்ளத்தின் வீச்சைச் சொல்ல உடலை குறியீடாக ஆக்கலாம். மேலும் மேலும் நுட்பமாக ஆக்கலாம். அவ்வளவுதான் உடலின் எல்லை. அதற்கு அப்பால் எவர் உடலை எழுதினாலும் அது ஒன்றுபோலத்தான் இருக்கும். ஏனென்றால் ஒரு மானுட உடலுக்கும் இன்னொன்றுக்கும் வேறுபாடு ஏதுமில்லை. வேறுபாட்டை உருவாக்குவது உள்ளம். உடலை எழுதுவதன் மிகப்பெரிய சிக்கல் அது உள்ளத்தை எழுதுவதற்கான மிகப்பெரிய தடையாக ஆகிவிடும் என்பதே. இதை ஹென்றிமில்லர் போன்ற பெரிய படைப்பாளிகளிடமே காணமுடியும்.

அதற்கு அப்பாலும் ஒரு புதியமேதை வந்து எல்லைகளை கடந்துசெல்லக்கூடும் என நான் அறிவேன். ஆனால் என் தேடலும் இலக்கும் மானுடன் தான் என உணரும் ஒன்றைச்சார்ந்து மட்டுமே. ஆகவே எனக்கு உடற்சித்தரிப்புகளால் பெரிய பயன் ஏதுமில்லை

 

ஜெ

மறுபிரசுரம். முதற்பிரசுரம் Nov 23, 2019

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on June 05, 2025 11:35

மனுஷ்ய புத்திரன்

மனுஷ்யபுத்திரன் தமிழிலக்கியச் சூழலில் மூன்று வகைகளில் முதன்மையான பங்கலிப்பை ஆற்றியவர். கவிஞர், இலக்கியச் செயல்பாட்டாளர், அரசியல் செயல்பாட்டாளர் என்னும் வகைகளில் அவருடைய பங்களிப்பை வரையறை செய்யலாம்.

மனுஷ்ய புத்திரன் மனுஷ்ய புத்திரன் மனுஷ்ய புத்திரன் – தமிழ் விக்கி
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on June 05, 2025 11:33

காவியம் – 46

அரசி. சுடுமண் சிற்பம். சாதவாகனர் காலம், பொயு 2, மதுரா அருங்காட்சியகம்.

மண்ணில் பதிந்திருந்த தன் கைகளை நோக்கி அமர்ந்திருந்த குணாட்யரிடம் கானபூதி சொன்னது. “நான் சொன்ன முந்தைய கதையின் இன்னொரு பகுதியைச் சொல்கிறேன். எல்லா கதைகளும் இன்னொரு கதையின் ஒரு பகுதிதான். கதைகள் ஒன்றோடொன்று இணைவதிலுள்ள பிழையற்ற பொருத்தம்தான் உண்மையில் கதை என்பது அளிக்கும் மகிழ்ச்சி.”

குணாட்யர் அதன் முன் அமர்ந்து இமைக்காமல் கேட்டுக்கொண்டிருந்தார். அவர்களைச் சுற்றி நிழல்கள் கதை கேட்பதற்காக மெல்ல அமர்ந்தன.

“எண்ணிப்பார், ஒரு கதையை கேட்பவன் எதனால் உத்வேகம் அடைகிறான்? கதை முடியும்போது ஏன் நிறைவை அடைகிறான்?” என்று கானபூதி தொடர்ந்தது ”ஏனென்றால் அவன் அக்கதையின் முந்தைய தொடர்ச்சியை ஏற்கனவே அறிந்திருக்கிறான். அந்தக்கதையில் புதிய கதை சென்று பொருந்திக்கொள்ளும் விந்தையைத்தான் மீண்டும் மீண்டும் அவன் ரசித்துக்கொண்டிருக்கிறான். கதைகள் ஒன்றே ஒன்றைத்தான் ஆமோதித்துக் கொண்டே இருக்கின்றன. பலநூறு பல்லாயிரம் பலகோடி நிகழ்வுகளாக, காலத்தின் அடுக்குகளினூடாக, பல்லாயிரம் இடங்களிலாக இங்கே திகழும் வாழ்க்கை என்பது உண்மையில் ஒன்றே என்பதை”

“பெருங்கதை!” என்றது சக்ரவாஹி.

“கதைக்கடல்!” என்றது ஆபிசாரன்.

கானபூதி தொடர்ந்தது. ஹரீந்திரநாத் தேஷ்பாண்டேயின் மனைவி ருக்மிணி திருமணமாகி தன் கணவரின் இல்லத்திற்கு வந்தபோது ஆழ்ந்த நடுக்கம் கொண்டவளாக இருந்தாள். அவளுடைய குடும்பத்தில் இருந்து முற்றிலும் மாறுபட்டதாக இருந்தது கணவரின் இல்லம். அப்போது ஃபணீந்திரநாத் தேஷ்பாண்டே குடும்பத்தின் தலைவராக இருந்தார். அவர் மனைவி பிரபாவதியின் ஆட்சியில் அந்த இல்லம் இருந்தது. அப்போது அங்கே ஐம்பதுக்கும் மேற்பட்ட பெண்கள் வேலைக்காரிகளாகவும், ஆதரவற்ற உறவினர்களாகவும் நிரந்தரமாகத் தங்கியிருந்தார்கள். அண்மையில் இருந்த சிற்றூர்களில் இருந்து வந்து தங்கிச் செல்பவர்கள் ஒருநாளுக்கு பத்து பேராவது வந்தனர். அந்த வீட்டில் அவர்களில் ஒருவராக மட்டுமே அவள் தன்னை எண்ணிக்கொண்டாள்.

ருக்மிணியின் நாட்கள் முழுக்க தன் மாமியாருக்கு பணிவிடை செய்வதிலேயே முற்றிலும் செலவாயின. விழித்திருக்கும் நேரமெல்லாம் அவள் தன் மாமியாரின் அருகே, ஆனால் சற்றுத் தள்ளி நின்றுகொண்டிருக்க வேண்டும். மாமியாரின் மெல்லிய முணுமுணுப்புகூட அவள் காதில் விழுந்தாக வேண்டும். ஆனால் மாமியார் மேல் அவள் நிழல் விழக்கூடாது, “என் மேல் உன் நிழல் விழவேண்டுமா? நிழல் விழுந்தால் நான் செத்துப்போவேன், நீ இங்கே உட்காரலாம் இல்லையா?” என்பாள்.

ருக்மிணி நகைகளும் பட்டாடைகளும் அணிந்து, எப்போதும் மாறாத சொற்றொடர்களையும் புன்னகையையும் அளிக்க வேண்டியிருந்தது. அந்த ஆடைகள் அவளுக்கு எந்த மகிழ்ச்சியையும் அளிக்கவில்லை. ஏனென்றால் அவை அவள் அணிந்துகொள்ளும் வேடங்கள் என்றும், அந்த வேடத்தை அணிந்தபின் அவள்  எரிச்சலூட்டுவதும் சிறுமையளிப்பதுமான ஒரு நடிப்பை வழங்கவேண்டும் என்றும் அவளுக்குத் தோன்றியது. ஆகவே இறுதிவரை அவளுக்கு ஆடையணிகளில் எந்த ஈடுபாடும் வந்ததே இல்லை. அவள் தனக்கு சுதந்திரம் அமைந்தபின் கெட்டியான கரை வைத்த வங்காளபாணி வெண்ணிறமான பருத்திச் சேலைகளையே எப்போதும் அணிந்தாள்.

பிரபாவதிக்கு ஆலோசனை சொல்வதற்காக இரண்டு பணிப்பெண்கள் அந்த வீட்டில் முன்னரே இருந்தனர். வயது முதிர்ந்தவளும் பிரபாவதியின் அகன்ற சொந்தத்தில் ஒருத்தியுமான பூர்ணா இளவயதிலேயே விதவையாகி வெவ்வேறு வீடுகளில் வேலைக்காரியாகவும் செவிலியாகவும் பணியாற்றியவள். இந்துஸ்தானியும் வங்காளியும் உருதுவும் மட்டுமல்ல, ஆங்கிலமும் ஓரளவு பேசத்தெரிந்தவள். பிரபாவதியின் பொருட்டு வெளியுலகுடன் அவள்தான் உரையாடினாள். சமையற்காரர்கள், வேலைக்காரர்கள், குதிரைகளைப் பராமரிப்பவர்கள் முதல்; வீட்டுக்கு வந்துகொண்டே இருக்கும் துணி வியாபாரிகள், நகைசெய்பவர்கள், நறுமணம் விற்கும் பார்ஸிகள் அனைவரிடமும் அவளால் பேசமுடிந்தது.

இன்னொரு தாதியான லக்ஷ்மி  இளமையிலேயே ஒரு மடத்தில் துறவியாகச் சேர்ந்து ,அங்கே பல காலம் இருந்து, அங்கே எவரிடமிருந்தோ கருவுற்றதனால் துரத்தப்பட்டு, வேறு பல மடங்களிலும் பணியாற்றிவிட்டு துறவியாகவே அந்த வீட்டில் வந்து சேர்ந்தவள். தன்னை  அவள் மா லக்ஷ்மி என்றும் யோகினி லக்ஷ்மி என்றும் சொல்லிக்கொள்வாள். தோளில் போடப்பட்ட நீண்ட சடைக்கற்றை ஒன்று அவளுக்குண்டு. அது மெய்யான சடை அல்ல, காலையில் அவள் எடுத்து கட்டிக்கொள்வது என்று நீண்டநாட்களுக்குப்பிறகுதான் ருக்மிணி கண்டுபிடித்தாள். கைகளில் நீளமான நகங்களை வளர்த்து வைத்திருந்தாள். ஒவ்வொரு நாளும் விடிவதற்குள்ளாகவே கண்களுக்கு கெட்டியாக மை எழுதி, நீண்ட குங்குமத் திலகமும் அணிந்துகொள்வாள்.  அத்தனை பேரும் அவளை ஜோகினி என்றுதான் அழைத்தார்கள். அவர்கள் இருவரும் தான் பிரபாவதிக்கு எல்லாவிதமான ஆலோசனைகளையும் சொல்லிவந்தார்கள்.

பிரபாவதி அந்த இல்லத்தை இருந்த இடத்திலிருந்தே முழுக்கட்டுப்பாட்டில் வைத்திருக்க விரும்பி ,அவ்வாறு வைத்திருப்பதாக நம்பவும் செய்தாள். அவளுடைய செவிகளுக்கு வந்து சேரும் ஒவ்வொன்றைப் பற்றியும் அவள் ஒரு கருத்து சொல்லி, ஓர் ஆணையைப் பிறப்பித்தாள். ஆனால் தன் செவிகளுக்கு என்னென்ன வந்து சேர்கிறது என்பதன் மேல் அவளுக்கு எந்தக் கட்டுப்பாடும் இருக்கவில்லை. தன்னுடைய ஆணைகள் நிறைவேற்றப்படுகின்றனவா என்று பார்ப்பதற்கும் அவளுக்கு எந்த வழியும் இல்லை. ஆகவே அனைத்தும் தன் கட்டுப்பாட்டில் இருப்பதாக அவள் எண்ணிக்கொள்ளும் நிலையை  அவள் அடைந்தாள். அந்த தன்னம்பிக்கையும் நிறைவும் தெரியும் முகமும், குரலும் அவளுக்கு அமைந்தன.

அந்தப்பெரிய இல்லம் அதன் போக்கில் தானாக நிகழ்ந்துகொண்டிருந்தது. அங்கே இருந்த ஒவ்வொருவரும் அங்கிருந்து எதையேனும் வெளியே கொண்டுசெல்வதிலேயே குறியாக இருந்தார்கள். பூர்ணாவும் ஜோகினியும்கூட திருடினார்கள். அந்த இல்லம் அனைவருக்கும் சிறை என்றுதான் இருந்தது. என்றோ ஒருநாள் அங்கிருந்து கிளம்பி சுதந்திரமாக ஆகிவிடவேண்டும் என்ற கனவுதான் அவர்களைத் திருடச் செய்தது. ஆனால் இரு அமைச்சர்களாலும் ஆலோசனை சொல்லப்பட்டு பேரரசொன்றை நடத்திக் கொண்டிருக்கும் அரசியைப்போல பிரபாவதி தன்னை உணர்ந்தாள். தன்மீது மதிப்பும் பக்தியும் கொண்ட ஒரு மருமகள் தனக்கு அமைந்திருப்பதாகவும் அவள் எண்ணினாள்.

ஒவ்வொரு நாளும் அவள் காலையில் முதல் விடியலிலேயே எழுந்து, இருகைகளையும் விரித்து உள்ளங்கைகளைப் பார்த்தபின் படுக்கையிலேயே அமர்ந்து மனப்பாடமாக இருந்த ஸ்லோகங்களை முணுமுணுப்பாள். பல சம்ஸ்கிருத, இந்தி, வங்காளப் பாடல்கள் ஒன்றுடன் ஒன்று கலந்து உருவான வெற்றுச் சொற்பெருக்கு அது. அதை அவள் வேதசூக்தங்கள் என நம்பினாள். அதன்பின்னர் எழுந்து வீட்டின் வெளியே அப்பால் இருந்த கழிப்பறைக்கு சென்று வருவாள். அங்கேயே அவளை ஜோகினி எதிர்கொண்டு அழைத்துச் சென்று நீராடவைப்பாள். அப்போது ஜோகினி மந்திரங்களை உரக்கச் சொன்னபடி வெந்நீரை அவள் தலைமேல் ஊற்றுவாள். சந்தனம், மஞ்சள், பயறுப்பொடி சேர்த்து அரைத்த குழம்பை அவள் உடலெங்கும் பூசிவிடுவாள்.

பிரபாவதி  நீராடி ஈர ஆடை அணிந்து வரும்போது, ஜோகினி அவளுக்கு புராணக் கதைகளையும் பல்வேறு சம்ஸ்கிருத சுலோகங்களின் கருத்துகளையும் எடுத்துச் சொல்வாள். அவையெல்லாம் ஜோகினி ஆங்காங்கே கேட்டு அவளுக்கு உகந்த முறையில் கலந்துகொண்டவை. பிரபாவதி அதன்பின் தன் பூஜையறைக்குள் நுழைந்து துர்க்கை பூஜையைத் தொடங்குவாள். அப்போது பூஜைக்குரிய மலர்களும், கனிகளும், படையலுக்கான பிரசாதமும் எல்லாமே அங்கு தயாராக இருக்கவேண்டும். தன் மருமகள் அதற்குள்ளேயே குளித்து, பட்டாடையும் நகைகளும் அணிந்து, பூஜையறையின் வாசலில் நின்றிருக்க வேண்டுமென்று பிரபாவதி எதிர்பார்த்தாள்.

ஜோகினி உரத்த கணீரென்ற குரலில் மந்திரங்களை சொல்ல, பிரபாவதி அவள் வழிகாட்டலில் அந்த பூஜையை செய்து முடிப்பாள். அதன்பின் அவள் வெளிவந்து நெற்றியிலும் வகிடிலும் அணிந்த குங்குமத்துடன், செவிகளில் மலர்களுடன், லக்னோவில் ஏதோ பழையகால நவாபின் நொடித்துப்போன அரண்மனையில் இருந்து வாங்கிக்கொண்டுவரப்பட்ட பெரிய வெண்கல நாற்காலி ஒன்றில் அமர்ந்து கொள்வாள். கிழவியான பூர்ணா வந்து  அவள் அருகே காலடியில் வலப்பக்கமாக அமர்ந்து கொண்டு அந்த வீட்டில் நேற்றும் அன்றும் நிகழ்ந்தவற்றைப் பற்றிய செய்திகளை  அவளிடம் மெல்ல எடுத்துரைக்கத் தொடங்குவாள். மிகுந்தை தீவிரத்துடனும் பணிவுடனும் அதைச் சொல்ல, அதேபோன்ற தீவிரத்துடனும் பதற்றமில்லாத உறுதியான பாவனைகளுடனும் பிரபாவதி அவற்றைக் கேட்பாள்.

ஜோகினி பகலில் அங்கிருந்து கிளம்பி கங்கைக்கரைக்கு தன்னுடைய பூஜைகளைச் செய்வதற்காக சென்றுவிடுவாள். கங்கைக்கரையில் அவளுக்காக ஒரு சிறிய குடில் ஒன்றை பிரபாவதி கட்டிக் கொடுத்திருந்தாள். அங்கே சென்று அமர்ந்து கங்கைக்கரைக்கு வரும் பெண்களுக்கு அருளுரைகள் அளிப்பதும், வாழ்த்து வழங்குவதும் அவளுடைய வழக்கம். அவளுக்கு அங்கே காணிக்கைகள் சேர்ந்துகொண்டிருந்தன. அவள் அவற்றை ஏழைகளுக்கு உடனடியாகக் கொடுத்துவிடுவதாகச் சொல்லிக்கொண்டாள். அவளுக்கு அங்கே பல தொடர்புகள் உண்டு என்றும், பெரிய மீசை வைத்த சந்திரா யாதவ் என்பவன் அவளுக்கு நெருக்கமானவன் என்றும், அவர்களிடம் நிறைய பணம் இருப்பதாகவும் வேலைக்காரிகள் சொல்லி ருக்மிணி அறிந்திருந்தாள்.

பூர்ணாவின் ஆலோசனைகளைக் கேட்டு, கண்டிக்க வேண்டிய வேலைக்காரர்களைக் கண்டித்து, ஆணையிட வேண்டியவற்றை அந்தந்த வேலைக்காரர்களிடம் ஆணையிட்டுவிட்டு ,பிரபாவதி மதிய உணவுக்குச் செல்வாள். நெடுங்காலமாக அவள் காலையில் குங்குமப்பூ போட்டு சுண்டக்காய்ச்சிய பால் தவிர எதுவும் அருந்துவதில்லை. மதிய உணவை தரையில் அமர்ந்து, மடியளவு உயரமான அகன்ற மேஜையில் தட்டுகளை வைத்து சாப்பிட்டாள். அன்னத்தை அன்னமயமான நிலத்தில் அமர்ந்தே சாப்பிடவேண்டும் என்பது ஜோகினியின் ஆணை. ஆகவே பலகையோ பாயோ கூட போட்டுக்கொள்வதில்லை. சாப்பிடும்போது தனக்கு மருமகளே பரிமாறவேண்டும் என்றும், எதையும் தன்னிடம் கேட்காமலேயே தன் விருப்பம் அறிந்து அவள் உணவை எடுத்து வைக்கவேண்டும் என்றும் பிரபாவதி எதிர்பார்த்தாள்.

மருமகள் தன்னுடன் இருந்து தன் சொற்களைக்கேட்டு, எதிர்காலத்தில் அந்தப் பெரும் குடும்பத்தை எப்படி ஆள்வது என்று கற்றுக்கொள்ளவேண்டும் என்று பிரபாவதி நினைத்தாள். ஆகவே தன் செயல்கள் ஒவ்வொன்றுக்குப் பிறகும் அவள் மருமகளுக்கு அதை ஒரு கொள்கையாக வகுத்துச் சொன்னாள். ‘எப்போதுமே நல்ல வேலைக்காரர்கள் திருத்தமாக உடை அணிந்திருப்பார்கள். பொய் சொல்பவர்களின் உடைகளைப் பார்த்தே கண்டுபிடித்துவிடலாம்’ என்பதைபோல. பிரபாவதி தன் இல்லத்திற்கு வரும் விருந்தினர்களிடம் “இவளுக்குத் திரும்பத் திரும்ப ஒவ்வொன்றாக சொல்லிக்கொடுக்க வேண்டியிருக்கிறது, தானாக எதுவும் தெரிவதில்லை. குடும்பம் மிகச்சிறியது. அவர்கள் வீட்டில் நான்கு பேருக்குச் சாப்பிட வேண்டுமென்றால் மூன்று பேருக்கு தான் சமைப்பது வழக்கமாம்” என்றாள்.

அந்தச் சொற்றொடரை அவளே மிக விரும்பி அடிக்கடி சொல்வதுண்டு. பிரபாவதிக்கு தன்னுடைய அழகான சொற்றொடர்கள் மேல் பெரிய பிரியம் இருந்தது. ’அவ்வப்போது செல்வம் பறவைகளைப் போல தனக்கான மரங்களை தேர்ந்தெடுக்கிறது.’ என்று சொல்வாள். ‘பாவங்களை நீரும் தானமும்தான் கரைத்து அழிக்கின்றன. தானம் செய்ய பணம் வேண்டும்.’ என்பாள். ‘பெண்கள்தான் குடும்பத்தின் வேர். பிடிமானமும் ஈரமும் எல்லாம் பெண்கள்தான். மரம் போனாலும் வேர் முளைக்க முடியும்’ .அந்தச் சொற்றொடர்கள் பெரும்பாலும் ஜோகினி எங்கோ எப்போதோ சொன்னவற்றின் வேறு வடிவங்கள் என்பதை அவள் அறிந்திருப்பதில்லை. அறிந்திருந்தாலும் அதை அவள் பலமுறை சொல்லிச் சொல்லி தானே மறந்துவிட்டிருந்தாள்.

அஸ்வத் ருக்மிணியின் வயிற்றில் உருவானபோது அவளைக் கவனித்துக்கொள்ள இரண்டு வேலைக்காரிகளை பிரபாவதி அமர்த்தினாள். அந்த இரு வேலைக்காரிகளும் மாறி மாறி எந்நேரமும் அவளுடன் இருக்க வேண்டுமென்றும், அவளுடைய ஒவ்வொரு நடத்தையும் தன்னிடம் வந்து சொல்ல வேண்டும் என்றும் பிரபாவதி எதிர்பார்த்தாள். வீட்டுக்கு ஜோதிடர்கள் வந்து கொண்டிருந்தார்கள். அவர்கள் ஒவ்வொரு நாளும் அன்றன்றைய லக்கினங்களின்படி ருக்மிணியின் உடல்நிலையையும், மனநிலையையும் கணித்து அளித்தார்கள். அவர்கள் கணித்து அளித்தபடியே நடக்கின்றனவா என்று பிரபாவதி ஒவ்வொரு நாளும்  பரிசோதித்தாள். இல்லையென்று முதலில் தோன்றும். ஆனால் ஆம் என்று ஜோகினி விளக்கிச் சொல்லும்போது அவள் அதே கருத்தையே தான் முன்னர் கொண்டிருந்ததாக உடனே நம்பினாள். மாமியார் விரும்பியதை உணர்ந்து அதன்படி ருக்மிணி தன் உடல்நிலை, மனநிலை இரண்டையும் வகுத்துக்கொண்டாள்.

குழந்தை அரசனுக்குரிய இயல்புகளுடன் பிறக்கும் என்றும், அவன் வளர்ந்து பெரிதாகும்போது பாட்னா நகரே அவன் கையில் இருக்கும் என்றும் ஜோதிடர்கள் அனைவருமே சொன்னார்கள். சந்திரகுப்த  மௌரியன் ஆண்ட மண்ணில் அந்தப் பேரரசனின் அம்சமாக இந்தக் குழந்தை பிறக்கப்போகிறது என்று  பாட்டியாலா விஸ்வநாத ஷர்மா என்னும் புகழ்பெற்ற ஜோதிடர் அவள் இல்லத்திற்கு வந்து பத்து நாட்கள் தங்கி, அவள் குடும்பத்தின் அத்தனை பேருடைய ஜாதகங்களையும் ஆராய்ந்து, அவற்றுடன் ருக்மிணியின் ஜாதகத்தையும் இணைத்து ஆராய்ந்து கூறினார். அந்த ஆரூடம் சொல்லப்பட்ட அன்று அந்த மாளிகையில் அனைவருக்கும் இனிப்பும் பரிசுகளும் வழங்கப்பட்டன.

ருக்மிணி அதனால் எந்த மகிழ்ச்சியையும் அடையவில்லை. அவளுக்கு எது மகிழ்ச்சி, எது துயரம் என்பதில் வேறுபாடே இல்லாமல் ஆகியிருந்தது. தனது மாமியார் சொல்வதை அப்படியே செய்யவேண்டும், தவறு எதுவும் வந்துவிடக்கூடாது என்ற மாறாத பதற்றம் மட்டுமே  ருக்மிணியிடம் எப்போதும் இருந்து வந்தது. அவள் காலை எழுந்தது முதல், இரவு தன் மாமியாரிடம் விடைபெற்று கணவனின் அறைக்கு செல்லும் வரை, மாமியார் தாழ்ந்த குரலில் முணுமுணுப்பாக தனக்குத்தானே என்றபடி பேசிக்கொண்டிருக்கும் சொற்களைக் கேட்பதற்காகவே முழுக்கவனத்தையும் செவிகளில் வைத்து நின்றிருந்தாள்.

நாள் முழுக்க நின்றிருக்கவேண்டும் என்ற கட்டாயம் அவளுக்கு இருந்தது. அவளுடைய வெண்ணிறமான கால்களில் அப்போதே நீல நரம்புகள் புடைத்து  மெல்லிய வலைப்பின்னல் போல தெரியத் தொடங்கியிருந்தன. இரவில் கணவனிடம் சென்று படுக்கும்போது அவள் கால்கள் சுண்டி தெறித்துக்கொண்டிருக்கும். அவன் அவளிடம் பேசும்போதெல்லாம் அவள் தன் கால்களைப் பற்றியே எண்ணிக்கொண்டிருப்பாள்.  ஃபணீந்திரநாத் காலத்திலிருந்தே பெண்கள் ஆண்களுடனான போகத்திற்காக மட்டுமே ஆண்களின் படுக்கைக்கு செல்லவேண்டும் என்னும் மரபு இருந்தது. போகம் முடிந்ததும் கீழே இறங்கி தரையில் விரிக்கப்பட்டிருந்த மெத்தையில்தான் படுக்க வேண்டும்.

ஹரீந்திரநாத் அவளை விரும்பித்தான் திருமணம் செய்துகொண்டார். ஃபணீந்திரநாத் அவருக்காக நீண்டநாட்கள் பெண் பார்த்தார். பெண் அழகாக இருக்கவேண்டும் என அவர் எண்ணினார். அழகு என்றால் பால்வெண்ணிறம், வட்ட முகம், பருமனான  உடல் என அவருக்கு ஓர் இலக்கணம் இருந்தது. அதில் அவர் எந்தச் சமரசமும் செய்துகொள்ளவில்லை. செல்வந்தக் குடும்பங்களில் இருந்தும், வைதிகக்குடும்பங்களில் இருந்தும் அவருடைய இல்லத்துக்குப் பெண் தர மறுத்துவிட்டனர். வங்காளத்தில் இருந்து வந்த மீன் தின்னும் பிராமணர்கள் அவர்கள் என்ற பேச்சு சுற்றிவந்தது. ஃபணீந்திரநாத் இறுதியாக ருக்மிணியைப் பார்த்து முடித்தார். அவளுடைய அப்பா கயாவில் பயணிகளுக்குச் சிரார்த்த கர்மங்கள் செய்துவைக்கும் பாண்டாவாக இருந்தார். அவருக்கு அவளைத் தவிர மூன்று மகள்கள் வேறு இருந்தனர்.

ஹரீந்திரநாத் ருக்மிணியிடம் திருமண நாளிலிருந்து பேசிய எதையுமே அவள் செவிகளில் வாங்கிக்கொள்ளவில்லை என்று அவர் எண்ணினார். எப்போதுமே அவளிடம் அவர் தன்னுடைய வியாபாரம் குறித்த திட்டங்களையும் ,அதில் தான் செய்து கொண்டிருக்கும் தொடக்ககால முயற்சிகளையும் பற்றித்தான் பேசினார். அவருடைய கனவுகள் முழுக்க தந்தையின் வட்டித்தொழிலிலிருந்து வெளியேறி வியாபாரத்திற்குள் நுழைவதைப் பற்றியதாக இருந்தன. ஆனால் ஃபணீந்திரநாத் பணம் அத்தனை எளிதாகப் பெருகும்போது அதை ஏன் வெளியே விடவேண்டும் என்று சொன்னார். “பணத்தை நட்டு பணத்தை அறுவடைசெய்யமுடியும் என்று தெரிந்தவன் பணத்தைக் கொடுத்து விதைகளை வாங்கி நட்டு கனிகளை அறுவடை செய்து விற்பதைப் பற்றி யோசிப்பானா?” என்றார்.

ஹரீந்திரநாத் தன் தந்தையை எதிர்த்துப் பேசமுடியாது. ஆகவே வட்டித்தொழில் ஆண்மையற்றது என்று அவர் தன் மனைவியிடம் சொன்னார். வட்டித்தொழில் செய்பவர் பதுங்கியிருக்கும் பாம்புகளைப்போல வெளியே தலை  வைத்து உடலை உள்ளே சுருட்டி அசையாது அமர்ந்திருக்கவேண்டும். அந்தப்பகுதியில் விழுங்கத்தக்க அளவுள்ள ஏதேனும் சிறிய உயிர் வந்தால் சட்டென்று பாய்ந்து கடிக்க வேண்டும். கடித்த நஞ்சைக்கூட அந்த கடிபட்ட உயிர் அறிவதில்லை. அது விலகிச்செல்லும். செல்லச்செல்ல உடலில் நஞ்சு ஏறிக்கொண்டே இருக்கும். எங்கோ ஓரிடத்தில் அது மயங்கி விழும்போது மெல்ல அது போன தடத்தை முகர்ந்து சென்று கவ்வி விழுங்க வேண்டும்.

“எனக்கு வேட்டை தேவைப்படுகிறது. நான் புலி போல. என்னுடைய இரை என்ன என்று நாம் முதலில் தேடவேண்டும். அதை கண்டுபிடித்த பிறகு மிக மெதுவாக அதை அணுக வேண்டும். ஆனால் அது தயங்கி நிற்கும்போது பிடிக்கக்கூடாது. கர்ஜனைச் சத்தத்தை எழுப்பி அதை ஓடவிட்டு துரத்திச் சென்று பிடித்து கவ்வி வீழ்த்தி கொன்று சாப்பிடவேண்டும் அதில்தான் காட்டின் நியாயமிருக்கிறது” என்று அவர் சொன்னார். “அப்படி ஒரு வேட்டையை முடித்து தின்றுவிட்டு எழும்போது புலியிடம் இருக்கும் கம்பீரமும் நிறைவும் இருக்கிறதே அதுதான் ஆண்மை… உன் மாமனாருடையது லோபஹஸ்தம், என்னுடையது வியாஹ்ரஹஸ்தம்.”

அவர் பேசும்போது ருக்மிணியின் கண்கள் தூக்கத்தில் இமைதழைந்து வரும். எப்போதாவது அவர் திரும்பிப் பார்க்கும்போது அவள் கண்கள் மூடியிருப்பதையும் மெல்லிய குறட்டை வருவதையும் கேட்பார். ஓங்கி அவள் கன்னத்தில் அறைவார். ”பிணம்போல் கிடப்பதற்கா இங்கு வந்தாய் சனியனே?” என்று திட்டுவார். ”இறங்கிப்போ” என்று காலால் உதைத்து அவளை உருட்டி கீழே தள்ளுவார்.

அவள் கீழே விழுந்து விழித்துக்கொண்டு எழுந்து வாயைத் துடைத்தபின் கைகளைக் கூப்பிக்கொண்டு, கண்ணீர் விட்டபடி நிற்பாள். அப்போது அவள் மேல் அவருக்கும் காமம் ஏற்படும். அவள் உடல் மேல் இளமையில் அவருக்கு பெரிய மோகம் இருந்தது. வெண்பளிங்காலானவை போன்று பெரிய மார்புகள் அவளுக்கு. அத்துடன் கண்ணீர் விட்டு கைகூப்பியபடி அவள் நிற்கும் அந்தக் காட்சி அவரில் எப்போதுமே காமத்தை எழுப்பியது அவள் கைகளைப்பிடித்து அருகே அமரவைத்து கண்ணீரைத்துடைத்து சமாதானம் செய்து உறவு கொண்டார்.

உறவின்போது உடலை இறுக்கி கண்களையும் மூடிக்கொண்டு படுத்திருக்க வேண்டும் என்று தான் அவளுக்கு சொல்லப்பட்டிருந்தது. கணவன் செய்யும் எல்லா செயல்களையும் முழுமையாக அனுமதிக்க வேண்டும் என்றும், அவன் கேட்ட எதையும் உடனே செய்துவிடவேண்டும் என்றும், எந்நிலையிலும் எதையும் மறுத்துச் சொல்லிவிடக்கூடாது என்றும் அவள் அம்மா அவளிடம் பலமுறை சொல்லி அனுப்பியிருந்தாள். ஒருமுறை ஹரீந்திரநாத் அவளுடன் அவர் உடலுறவு கொண்டு கொண்டிருக்கும்போதே அவளுடைய  உதடுகள் அசைந்து கொண்டிருப்பதைப் பார்த்தார்.

”என்ன சொல்கிறாய்?” என்று திகைப்புடன் கேட்டார்.

”புத்ரகாமேஷ்டி மந்திரம்” என்று அவள் சொன்னாள். ”ஜோகினி எனக்கு இந்த மந்திரத்தை சொன்னார்கள். இதை சொன்னால் நல்ல குழந்தைகள் எனக்கு பிறக்கும்” என்றாள்.

அவர் சலிப்புடன் புரண்டு அப்பால் படுத்து பெருமூச்சுவிட்டார். அவர் முடித்துவிட்டார் என்று எண்ணி அவள் எழுந்து சென்று கழிப்பறை சென்று சுத்தம் செய்துவிட்டு தன் பாயில் படுத்து அப்போதே தூங்கிவிட்டாள். தூங்கும் அவளை பார்த்தபடி அவர் சலிப்புடன் அமர்ந்திருந்தார்.

திருமணம் ஆவதற்கு முன்னரே அவருக்கு பாட்னாவின் தாசிகளிடம் நல்ல தொடர்பிருந்தது. அஸ்வத் பிறந்து அவள் பால் கொடுக்கும் தாயானபோது அவர் முற்றிலும் அவளை விட்டு விலகி வெவ்வேறு தாசிகளிடம் மிக நெருக்கமாக ஆனார். அதன்பின் அவளிடம் கடுகடுப்பாகவே பேசினார். அணுகினால் அவள் தன்னைப்பற்றி ஏதேனும் கேட்டுவிடுவாள் என்று அஞ்சியவர் போல. ஆனால் அவள் அதைப்பற்றி கவலைப்படவில்லை. அவளிடம் வேலைக்காரர்கள் ஹரீந்திரநாத் இரவுகளில் தாசி வீட்டில் தங்குவதைப்பற்றி சொன்னபோது அவள் அதை செவிகொள்ளவும் இல்லை.

உண்மையில் ஹரீந்திரநாத் என்றெல்லாம் வீட்டுக்கு திரும்பாமல் இருக்கிறாரோ அன்றெல்லாம் அவள் மிக விடுதலையாக உணர்ந்தாள். அவள் மாமியார் தூங்கச் சென்ற உடனே அவளும் தன்னுடைய சிறிய அறைக்கு செல்ல முடிந்தது. மெத்தையில் படுத்து கைகளை மார்போடு சேர்த்துக்கொண்டு இரவு தூங்குவதற்கு முன் சொல்லவேண்டியவை என்று யோகினி சொல்லிக்கொடுத்த மந்திரங்களை உச்சரித்தபடியே அவை ஓரிரு வரிகள் நீள்வதற்குள்ளேயே ஆழ்ந்து தூங்க முடிந்தது.

காலையில் அவளை வேலைக்கார பெண் வந்து தட்டி எழுப்பும்போது தூங்கினாளா என்ற சந்தேகமே ஏற்படும். ஓரிரு நொடிகள் கூட தூங்கவில்லை என்று தோன்றும். அதற்குள் முழு இரவும் தாண்டிவிட்டிருப்பதை அவள் உணர்வாள். அவள் வாழ்க்கையில் இன்பம் என்று அவள் அறிந்தது அந்த இரவின் தூக்கம் மட்டும் தான் என்பதை நீண்ட காலத்துக்கு அவள் சொல்லிக்கொண்டிருந்தாள். தூக்கத்தில் அவள் கனவுகள் என்று கண்டதெல்லாம்  தூங்கும் தன்னை தன் மாமியார் வந்து எழுப்புவதுபோல உணர்வதை மட்டும்தான்.

ஆனால் ஒரே ஒருமுறை ஹரீந்திரநாத் அவள்மேல் படுத்திருப்பதைப்போல கனவுகண்டு மூச்சுத்திணறி விழித்துக்கொண்டாள். ஆனால் ஹரீந்திரநாத் உடலில் முடி இல்லை, அவள் கனவில் வந்த உடலில் நிறைய முடி இருந்தது. அதன்பின் யோசித்தபோது அந்த உடல் நல்ல எடையும் தசைவலுவும் கொண்டதாக இருந்தது என்று உணர்ந்தாள். அந்தக் கனவை அவள் ஜோகினியிடம் சொன்னாள். “கனவில் வந்தவன் உங்கள் கணவனாக சென்ற பிறவியில் திகழ்ந்தவன். அவன் இப்போது ஒரு காளைமாடாக பிறந்து காசியில் வாழ்கிறான்” என்று ஜோகினி சொன்னாள்.

குழந்தை வயிற்றில் வளரும்போது அவள் அதைப்பற்றிய எந்தப் பதற்றத்தையும் பயத்தையும் அறியவில்லை. தன் வயிற்றில் ராஜகுமாரன் ஒருவன் கருக்கொண்டிருக்கிறான் என்று அந்தப் பெரிய வீட்டில் உள்ள எல்லாப் பெண்களுமே சொல்வதை அவள் அன்றாடம் கேட்டுக்கொண்டிருந்தாள். ஆனால் ராஜகுமாரனை அவளால் கற்பனை செய்யவே முடியவில்லை. தன் வயிற்றுக்குள் ஒரு குழந்தை இருக்கிறது என்பதையே அவள் உருவகித்துக் கொள்ள முடியவில்லை. ஆகவே தன் வயிறு பெருத்து வந்ததைக்கூட அறியவில்லை. கருவுற்ற பெண்களுக்கான எந்த ஆசைகளும் அவளுக்கு உருவாகவில்லை. கர்ப்பிணிகள் உணரும் சோர்வும் புரியாத துக்கமும் கூட அவளுக்கு ஏற்படவில்லை. மாறாக  ஒவ்வொரு நாளும் பிரபாவதி அவளுக்கு அளித்த ஒவ்வொரு வேலையையும் ஒழுங்காகச் செய்வதைப்பற்றி மட்டும் தான் அவள் பதற்றம் கொண்டிருந்தாள்.

விடியற்காலை எழுவது முதல் இரவு படுப்பது வரை கர்ப்பிணிப்பெண்கள் செய்தாக வேண்டிய நோன்புகளும் பூசைகளும் அவளுக்கு இருந்தன. ஒவ்வொரு நாளும் அவள் காரில் கிளம்பி கங்கைக்கரையில் இருந்த வெவ்வேறு சிறு தெய்வங்களை வழிபட்டுத் திரும்ப வேண்டியிருந்தது. ஒவ்வொரு நாளும் வெவ்வேறு ஊர்களில் இருந்து வந்த ஜோதிடர்கள் அவளை அமரவைத்து அவள் ஜாதகத்தையும் முகக்குறியையும் கைரேகைகளையும் சோதனையிட்டார்கள். ஒவ்வொரு நாளும் வெவ்வேறு மகாசயர்கள் வந்து அவளுடைய உடலை நாடி பார்த்தும், நாக்கு, கண்களை சோதனை செய்தும் அவள் உடல் நலத்தைப்பற்றி பிரபாவதியிடம் விளக்கினார்கள். அவ்வப்போது ஆங்கில மருத்துவர்களும் வந்தார்கள்.

உள்ளூரின் ஆங்கில இந்திய மருத்துவர் ஒருவர் பச்சைக்கண்களுடன் வந்து அவள் உடலை வெவ்வேறு இடங்களில் தொட்டுப் பார்த்தபோது முதல் முறையாக அவள் தன் உடலில் காமம் சார்ந்த கிளர்ச்சி ஒன்றை அடைந்தாள். பெரிய குரல்வளையும், ஒடுங்கிய நீளமுகமும், செம்பட்டை கலந்த மென்மையான மீசையும் கொண்டிருந்த அவருடைய கைகள் மிக மென்மையாக இருந்தன. அவர் சுண்ணாம்புக்கல் போல தவிட்டுநிறப் புள்ளிகள் பரவிய வெண்ணிறச் சருமம் கொண்டிருந்தார். அவருடைய உச்சரிப்பு குழறலாக, ஆனால் குழந்தைத்தன்மையுடன் இருந்தது. அவர் முகம் அத்தனை சிவப்பாக இருந்ததும், அவர் கண்களில் பக்கவாட்டில் தெரிந்து மறைந்த நீலமும்தான் அவளை முதலில் கவர்ந்தன. அவள் அவரையே பார்த்துக்கொண்டிருந்தாள்.

அவர் இந்துஸ்தானியில் அவளிடம் ”உங்களுக்கு மூச்சுவிடுவதில் ஏதேனும் சிரமம் இருக்கிறதா?” என்று கேட்டபடி தோளில் கைவைத்து மெல்ல குனியச் சொன்னபோது தற்செயலாக அவருடைய முழங்கையில் அவளுடைய முலைகள் அழுந்தின. அப்போது அவள் உடல் முழுக்க சிலிர்ப்பும், ஓர் உலுக்கமும் ஏற்பட்டது. அவள் மூச்சிரைத்து ,வியர்த்து, கண்களில் பனிபடர ,மெல்லத் தளர்ந்தாள்.

அப்போது என்ன நிகழ்ந்தது என்று அவளுக்குத் தெரிந்திருக்கவில்லை. என்ன நிகழ்ந்தது என்று அவள் பதினைந்து ஆண்டுகளுக்குப்பிறகு தன் கணவனுடன் இயல்பாக ஒருமுறை உறவு கொண்டபோது தான் அறிந்தாள்.

(மேலும்)

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on June 05, 2025 11:33

விஷ்ணுபுரம் குமரகுருபரன் விழா விருந்தினர், வசுதேந்திரா

2025 ஆம் ஆண்டுக்கான விஷ்ணுபுரம் குமரகுருபரன் கவிஞர் விருது வரும் 8 மே 2025 அன்று மாலை சென்னை கவிக்கோ அரங்கில் நிகழவிருக்கிறது. காலை முதலே இலக்கிய அரங்கம் தொடங்கும். கவிஞர் அரங்கில் றாம் சந்தோஷ், சசி இனியன் ஆகியோரும், கதை அரங்கில் விஜயராவணன், ரம்யா ஆகியோரும் கலந்துகொள்கிறார்கள். போகன் சங்கர், வெயில், மனுஷ்யபுத்திரன் ஆகியோர் விவாத அரங்கில் பங்கேற்கிறார்கள்.

விழா அரங்கில் கன்னட எழுத்தாளர் வசுதேந்திரா கலந்துகொள்கிறார். கன்னடத்தில் அண்மையில் தீவிரமான கவனத்தைப் பெற்றுவரும் வசுதேந்திராவின் மூன்று நூல்கள் தமிழில் மொழியாக்கம் செய்யப்பட்டுள்ளன.

மோகனசாமி – தமிழில் கே.நல்லதம்பி  அம்மாவை எனக்கு மிகவும் பிடிக்கும். கே.நல்லதம்பி சிவப்புக் கிளி- யூமா வாசுகி 

வசுதேந்திராவின் தேஜோ துங்கபத்ரா என்னும் நாவல் கன்னட சாகித்ய அக்காதமி விருது பெற்றது.

வசுதேந்திரா – விக்கி பக்கம்

வசுதேந்திரா இணையப்பக்கம்  

வசுதேந்திராவின் சிவப்புக் கிளி- துரை அறிவழகன் 

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on June 05, 2025 11:30

‘Hindutva’

Why do my friends label as ‘Hindutva’ anything about Hindu traditions. Like references in Vishnupuram.  What exactly do these people call as ‘Hindutva’?

‘Hindutva’

கார்ல் பாப்பரின் நவீன அறிவியல் இலக்கணத்தை சிந்தனை செய்பவர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.தர்க்கத்தின் நான்கு படிநிலைகள் நம்முடைய சிந்தனையை சரியா ,தவறா என நிரூபிக்க, மறுக்க உதவும்

புரிதல், கடிதம்
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on June 05, 2025 11:30

June 4, 2025

விமர்சனங்களில் கடுமை

என்னிடம் எப்போதும் கேட்கப்படும் இன்னொரு கேள்வி, விமர்சனங்களில் இவ்வளவு கடுமை ஏன்? மென்மையாகக் கருத்துக்களைச் சொல்லலாமே? பிறரை ஊக்குவிப்பது அல்லவா முக்கியம்? நம் சூழலில் உள்ள ஒரு பொதுவான மனநிலை இது.

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on June 04, 2025 11:36

பாலுணர்வை அறிதலும் எழுதுதலும்

ஹாவ்லக் எல்லிஸ் ஹாவ்லக் எல்லிஸ்

 

சமீபத்தில் ஓர் இளம் எழுத்தாளர் எழுதிய நாவலை வாசித்தேன். பாலியல் நிகழ்ச்சிகளை விரிவாக எழுதியிருந்தார்.  ‘துணிந்து’ எழுதியிருப்பதாக அவர் எண்ணிக்கொண்டிருந்திருக்கலாம். இதற்குமுன் இல்லாதவகையில் எழுதியிருப்பதாக பெருமிதம் கொண்டிருக்கவும்கூடும். இளம்வாசகர்கள் சிலர் அதை வாசித்து  “ஆகா!” போட்டிருக்கலாம். அப்படி ஒருவர் கவனம் பெற்றுவிட்டால் பலர் உருவாகி வருகிறார்கள்.

தமிழ்நாட்டில் பாலியல்வரட்சி மிகுதி. ஆகவே என்றுமே பாலியலெழுத்துக்கு வாசகர்கள் அதிகம். அத்துடன் பெரும்பாலான வாசகர்கள் பாலுறவு மட்டுமே வாழ்க்கை என எண்ணிக்கொண்டிருக்கும் முதிரா இளமையில் வாசிக்க வருகிறார்கள். அவர்கள் இவ்வகை எழுத்துக்களையே தெரிவுசெய்கிறார்கள். அவர்களில் சிலரே அடுத்தகட்ட வாசிப்புக்கு வருகிறார்கள். ஆகவே உலகமெங்கும் பாலியல் எழுத்தே அதிகம் வாசிக்கப்படுகிறது

பாலியல் தளங்கள் பெருகி, எதுவும் கைச்சொடுக்குத் தொலைவில் என்று ஆனபின்னரும்கூட இங்கே பாலியல் எழுத்து அதிகம் வாசிக்கப்படுகிறது. ஏனென்றால் வாசிப்பு கற்பனையை தூண்டுகிறது. கற்பனை நிஜத்தைவிட வீச்சு கொண்டது. வாசிப்பவர்களுக்கு பாலியல் கதை அளிக்கும் கிளர்ச்சியை பாலியல் காட்சி அளிப்பதில்லை. ஆகவே பாலியல் எழுத்து என்பது உலகமெங்கும் ஒரு பெரிய நுகர்வுப்பொருளாக உற்பத்தி செய்யப்படுகிறது.

இன்று எழுதுபவர்கள் தாங்கள் துணிச்சலாக எழுதுபவர்களாக எண்ணிக்கொண்டிருக்கிறார்கள். ஆனால் எல்லா காலகட்டத்திலும் எழுத்தாளர்கள் அவ்வாறு அந்தக் கால அளவுகோலுக்கு ‘துணிந்து’ எழுதுவது நடந்துகொண்டேதான் இருக்கிறது. அந்த துணிவான எழுத்து இருபதாண்டுகளுக்குள் சாதாரணமாக ஆகிவிடுகிறது, அடுத்த தலைமுறை வந்து மேலும் துணியவேண்டியிருக்கிறது.

உண்மையில் இதில் துணிவென்று ஏதும் இல்லை. ஒவ்வொரு காலகட்டத்தில் சமூகவெளியில் பாலியல் வெளிப்பாட்டுக்கு ஒர் எல்லை ஒருவகையான பொதுப்புரிதலாக உருவாகி நிலைகொள்கிறது.. அந்த எல்லையை எந்த அளவுக்கு மீறவேண்டும் என்பதை அந்தப்படைப்பின் ஆசிரியன் முடிவெடுக்கிறான். அதற்கு அளவீடாக இருப்பது அந்தப் படைப்பு எந்த அளவுக்கு பாதிப்பை உருவாக்கவேண்டும், எப்படிப்பட்ட பாதிப்பை உருவாக்கவேண்டும் என்ற கணிப்புதான்.

உதாரணமாக, மென்மையான உள்ளமோதல்களைச் சொல்லும் ஒரு காதல்கதையில் அப்பட்டமான உடலுறவுக் காட்சி விரிவாக விவரிக்கப்பட்டிருந்தால் அதன் அழகியல் ஒருமை சிதையும். வாசகனிடம் உருவாக்கும் அதிர்வு அந்த படைப்பை அந்த பாலுறவுக் காட்சியை அடிப்படையாகக் கொண்டு யோசிக்க வைக்கும். அவனுக்கு அதிர்ச்சியை அல்லது பரபரப்பை அளித்து, அதிலுள்ள நுண்மையான காட்சிகள் அவனுடன் தொடர்புறுத்தமுடியாமல் செய்யும். மென்மையான வண்ணங்கள் நடுவே அடர்வண்ணங்களைச் சேர்ப்பதுபோலத்தான் அது. எந்த வண்ணத்தையும் ஓவியத்தில் பயன்படுத்தலாம். எவ்வாறு கலக்கிறோம் என்பதே கேள்வி.

இந்த அளவீடு மாறிக்கொண்டே இருக்கும் விதம் வியப்பூட்டுவது. ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்புள்ள கவிதைகளில் உடல்வர்ணனைகளும், உடலுறவு வர்ணனைகளும் ஏராளமாக உள்ளன. தமிழிலும் சரி, சம்ஸ்கிருதத்திலும் சரி ,பெண்ணுடலின் வர்ணனைகள் கட்டற்று சென்றிருக்கின்றன. மானின் குளம்புபோல என பெண்குறியை வர்ணிக்கும் இடம்வரை. ஆனால் எங்கும் ஆண்குறி வர்ணனை இல்லை. ஏனென்றால் அது அன்றைய சமூகத்திற்கு அதிர்ச்சி அளித்திருக்கலாம். சுவைத்திரிபு உருவாகியிருக்கலாம்.

நவீன இலக்கியம் உருவானபோது பாலியலெழுத்து கடுமையான தணிக்கைக்கு உள்ளானது – வாசகனாலும் எழுத்தாளனாலும். ஆகவே இடக்கரடக்கல்கள் உருவாயின. அன்றைய விக்டோரிய ஒழுக்கவியல் ஒரு காரணம் என்றாலும்; அதைவிட முக்கியமான காரணம் நவீன இலக்கியம் அச்சு வழியாக மேலும் பரவலாகச் சென்றது, இன்னும் பெரிய மேடையை அடைந்தது என்பதுதான். பழங்காலக் கவிதைகள் சிறிய அரங்குகளுக்கும், அவைகளுக்கும் உரியவை. அங்கே கவிச்சுவை நுகரவந்த அறிஞர்களே இருந்தனர். நவீன இலக்கியத்தில் பொதுமக்கள் வாசகர்களாக அமைந்தனர். இலக்கியம் ஒரு பொதுவெளி ஆக மாறியது. ஆகவே ‘தெருவில்நின்று’ பேசக்கூடிய விஷயங்களே இலக்கியத்திலும் அமையவேண்டும் என்ற உளநிலை அமைந்தது.

ஆனால் ஒவ்வொரு படைப்பும் அந்த எல்லையை முட்டி விரிவாக்கிக் கொண்டே இருந்தது. தமிழிலக்கியத்தில் புதுமைப்பித்தன் பாலுறவை எப்படி எழுதியிருக்கிறார் [விபரீத ஆசை] தி.ஜானகிராமன் எப்படி எழுதியிருக்கிறார் [அம்மா வந்தாள், தண்டபாணி- அலங்காரம் உறவு] ஜி.நாகராஜன் எப்படி எழுதியிருக்கிறார் [நாளை மற்றுமொருநாளே கந்தன்- வள்ளி உறவு] என்று கூர்ந்து வாசிப்பவர்களால் அந்த எல்லை தள்ளித்தள்ளி வைக்கப்படுவதைக் காணமுடியும்.

ஏன் தள்ளிவைக்கப்படுகிறது என்றால் ஒரு காட்சி சற்று அழுத்தமான பாதிப்பை உருவாக்கவேண்டும் என்று விரும்பும் எழுத்தாளன் முன்பு எழுதப்பட்டு பொதுவாக ஏற்றுக்கொள்ளப்பட்ட அளவை விட சற்றே முன்னகர்ந்து அதைச் சித்தரிப்பான். ஆனால் மிகவும் முன்னகர்ந்துவிட்டால் அது சுவைத்திரிபு ஆகிவிடுமென்றும் அறிந்திருப்பான். நம் சமூகத்தின் அளவுகோல் மேலைநாடுகளை விட இன்னும் இறுக்கமானது. ஆகவே நாம் பாலியலை எழுதும்போது மேலைநாடுகள்போல எழுதுவதில்லை. எழுதினால் அது அதை மட்டுமே பேசும் கதையாக ஆகிவிடும். ஒரு ஓவியத்திரைச்சீலையில் நீலமோ. கருமையோ கையாளப்பட்டால் அந்த ஓவியத்தின் மையநிறமே அதுவாக இருக்கவேண்டும் என்பதுபோல. ஆகவே பாலியல் எழுத்தைத் துணிச்சலாக எழுதுவது என்பதொன்றும் சிறப்பல்ல. எல்லா எழுத்தாளர்களும் தேவையான துணிச்சலுடன்தான் எழுதுகிறார்கள்.

ஆனால் அவ்வாறு எழுதுபவர்களில் எத்தனைபேர் அதை நுட்பமாக, மெய்யாக எழுதுகிறார்கள்? கணிசமான தமிழ் எழுத்தாளர்கள் பாலியல் வரட்சியால் அவதிப்படுபவர்கள். பூஞ்சையான உள்ளமும், அதற்கேற்ற சம்பிரதாயமான வாழ்க்கையும் கொண்டவர்கள். ஆகவே அனுபவத்திலிருந்து எவரும் எழுதுவதில்லை. பெரும்பாலும் அவை பகற்கனவின் சித்தரிப்புகள். தஞ்சைப் பிரகாஷ் எழுதியதைப்போல. ஆகவே பகற்கனவுகளை நாடுபவர்களால் வாசிக்கத்தக்கவை.

உதாரணமாக ஒன்றைச் சொல்கிறேன். ஜி.நாகராஜனின் நாளை மற்றுமொருநாளே நாவலில் கந்தன் மீனாவுடன் உறவுகொண்டு முடிந்ததும் மீனா சுருண்டு கிடந்து அழுகிறாள். உளஅழுத்தம் கொண்ட பெண்களின் இயல்பு அது. அந்த அழுகைக்குப்பின் அவள் அதற்கான காரணமாக காணாமல்போன தன் மகனைப்பற்றி நினைத்துக் கொள்கிறாள். இது ஆசிரியரின் நுண்ணிய அனுபவ அவதானிப்பின் வெளிப்பாடு. பாலியல் எழுத்தில் தேவையானது இந்த நுட்பமே. இத்தகைய இடங்கள் தமிழிலக்கியத்தில் மிகக்குறைவே.

ஆனால் பாலியல் அறியாமையின் வெளிப்பாடுகள் நிறைய. சமீபத்தில்  கர்நாடகத்தில் அருவிப் பயணத்தின்போது காரில் இதைப்பற்றிப் பேசிக்கொண்டு சென்றோம். நான் ஜெயகாந்தனிடம் பேசிக்கொண்டிருந்தபோது  அவர் சொன்னதைச் சொன்னேன். ‘பெண்களுக்கு காமத்தில் உடலின்பம் கிடையாது, உள்ளத்தால்தான் இன்பம் அனுபவிக்கிறார்கள்’ என்றார் ஜெயகாந்தன். அவரை நேரில் மறுக்கமுடியாது. நான் வியப்புடன் கேட்டுக்கொண்டிருந்தேன். பாலகுமாரனின் மெர்க்குரிப்பூக்களில் ஓர் இடம் வரும். பெண்களுக்குப் பாலியல் இன்பம் என்பது உடலில் அல்ல ‘அய்யோ இந்த ஆம்புளைக்கு என்னாலே எவ்ளவு சந்தோஷம்’ என்று நினைப்பதில்தான் என்கிறார் ஆசிரியர்.

இது தமிழகத்தில் மட்டுமல்ல இந்தியாவிலேயே எண்பதுகள் வரை பரவலாக இருந்த எண்ணம். எழுபதுகளில் டாக்டர் பிரமிளா கபூர் என்ற ஆய்வாளர் தன் மாணவிகளைக்கொண்டு ஒரு பாலியல் கணக்கெடுப்பை நிகழ்த்தினார். இந்தியப் பெண்களில் மிகப்பெரும்பான்மையின பாலுறவுச்சம் குறித்து ஏதும் அறியாதவர்கள் என்றது அந்த ஆய்வு. பலர் வாழ்நாள் முழுக்க ஒருமுறைகூட அதை அடையாதவர்கள். ஆண்களில் அனேகமாக எவருக்கும் அப்படி ஒன்று பெண்களுக்கு உண்டு என்றே தெரியாது.அன்று மிக அதிகமாகப் பேசப்பட்ட ஓர் ஆய்வுமுடிவு அது.

Alfred_Kinsey_1955 கின்ஸி

பெரும்பாலும் எளிமையான பாலியல் புனைகதைகளில் இருந்தே தமிழ் இளைஞன் பாலியலறிவை அடைகிறான். அவை ஆண்களின் பகற்கனவை சீண்டும் பொருட்டு எழுதப்படுபவை.  எழுத்தாளன் என்பவன் சற்றேனும் முறையாக பாலியலைக் கற்றிருக்கவேண்டும். எண்பதுகளில் நான் வாசிக்கவந்தபோது மலையாளத்தில் இ.எம்.கோவூரின் உரைகள் வழியாக பாலுறவியல் [sexology] வாசகர்களிடையே புகழ்பெற்றிருந்தது. அவர் வழியாகவே ஹாவ்லக் எல்லிஸ், ஆல்ஃப்ரட் சார்ல்ஸ் கின்ஸி இருவரைப்பற்றியும் அறிந்தேன். என் உலகப்புரிதலில் மிகப்பெரிய திறப்பை அளித்தன அந்த வாசிப்புகள். அவர்கள் இருவரையும், அறியாதபோதுதான் நமக்கு தஞ்சைப் பிரகாஷ் பரபரப்பை அளிக்கிறார்.

அந்த இருபெயர்களையுமே இளம் தலைமுறையினர் அறிந்திருக்கவில்லை என்று தெரிந்தமையால்தான் இந்தக்குறிப்பு. அவர்களைப்பற்றி எவரும் தமிழில் எழுதியும் நான் வாசித்ததில்லை. எண்பதுகளின் இறுதியில்நான் ஒரு கட்டுரை எழுதியிருக்கிறேன். இணையத்திலேயே அவர்களின் நூல்களை தரவிறக்கம் செய்யலாம் என நினைக்கிறேன் 

ஹென்றி ஹாவ்லக் எல்லிஸ் [Henry Havelock Ellis .1859 – 1939] உளவியலுக்கு ஃப்ராய்ட் எப்படியோ அப்படி பாலுறவியலுக்கு முன்னோடியான அறிஞர். லண்டனில் பிறந்தவர். லண்டன் கிங்ஸ் கல்லூரியில் மருத்துவப் படிப்பு முடித்தவர். பொதுவாக இடதுசாரி எண்ணங்கள் கொண்டிருந்தார்.கார்ல். மாக்ர்ஸின் மகள் எலியனேர் மார்க்ஸ் எல்லிஸின் அறிவுலகத் தோழமைகளில் ஒருவர். பெர்னாட் ஷாவுடனும் தொடர்பிருந்தது. ஒருபாலுறவைப் பற்றிய தன் முதல் நூலை இன்னொருவருடன் சேர்ந்து ஜெர்மன் மொழியில் எழுதினார். பின்னர் அது ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்யப்பட்டது

பாலுறவு குறித்து அன்றுவரை இருந்த பெரும்பாலான நம்பிக்கைகளும் புரிதல்களும் மதத்தலைவர்களால் உருவாக்கப்பட்டவை. ஒழுக்கவியலை அடிப்படையாகக் கொண்டவை. அது ஓர் உயிரியல் சார்ந்த  செயல்பாடு என்றவகையில், தரவுகளின் அடிப்படையில் புறவயமாக அதை அணுகவேண்டும் என்ற கண்ணோட்டமே எல்லிசை ஒரு மாபெரும் முன்னோடியாக ஆக்கியது. தரவுகளைச் சேர்த்து அறிவியல் முறைமைப்படி ஆராய்ந்தபோது ஏராளமான பழைய நம்பிக்கைகள் சிதைந்தன. குறிப்பாக பெண்களின் பாலுணர்வு, பாலுறவுச்சம் குறித்த புதிய கொள்கைகள் வெளியாயின.

உதாரணமாக கந்து [ clitoris] பெண்களின் பாலுறவுவிருப்பத்தின் மையம் என்ற நம்பிக்கை அன்று இருந்தது. அது ஓர் நரம்பு முடிச்சே ஒழிய மையமல்ல என்று எல்லிஸின் ஆய்வுகள் காட்டின. பெண்களின் பாலுணர்வில் அவர்களின் பெண்ணுறுப்பின் உட்பகுதிகள் எவ்வகையிலும் பங்கெடுக்கவில்லை என்று நிறுவின. ஒருபாலுறவு போன்றவை உளப்பிறழ்வுகளோ தீயபழக்கங்களோ அல்ல, இருபாலுறவுபோலவே இயல்பான மூளைசார்ந்த தனிவிருப்பங்கள்தான் என்றும், புறத்தே தெரிவதைவிட ஒருபாலுறவு நம் சூழலில் அதிகம் என்றும் அவருடைய ஆய்வுகள் காட்டின. அக்காலத்தில் எல்லிஸின் நூல்கள் தடைசெய்யப்பட்டன. ஆபாச இலக்கியம் படைத்தமைக்காக அவர் சட்டநடவடிக்கைக்கும் உள்ளானார்.

எல்லிஸின் ஆய்வுகளை நிறுவன உதவியுடன் மிகவிரிவான முறையில் ஆய்வுசெய்து அறிக்கைகளை உருவாக்கியவர் ஆல்ஃப்ரட் கின்ஸி. Alfred Charles Kinsey  [ 1894 –  1956] . அமெரிக்க உயிரியலாளர்.  1947 இவர் இண்டியானா பல்கலையில் நிறுவிய பாலுறவியல் ஆய்வு நிறுவனம் மானுடரின் பாலியல்பழக்கவழக்கங்களைப் பற்றி மிக விரிவான ஆய்வுகளை தொடர்ந்து வெளியிட்டது. இது  Kinsey Institute for Research in Sex, Gender, and Reproduction என அழைக்கப்பட்டது. தன் மாணவர்களையும் தொழில்முறை தகவல்சேகரிப்பாளர்களையும் கொண்டு பெருமளவில் தரவுகளைச் சேகரித்து ஒருங்கிணைத்து தன் கொள்கைகளை உருவாக்கி முன்வைத்து  நிறுவினார் கின்ஸி.

Sexual Behavior in the Human Male (1948) மற்றும்  Sexual Behavior in the Human Female (1953) ஆகிய இரு நூல்களும் கின்ஸி அறிக்கைகள் என்றபேரில் பொதுவாக சமூக, மானுடவியல் அறிஞர்கள் நடுவில்கூட பெரிதாக வாசிக்கப்பட்டன. அன்று திருவனந்தபுரம் தெருக்களிலேயே போலிப்பதிப்பாக இவை வாங்கக்கிடைத்தன. உலக அளவில் மானுடப் பாலியல் பழக்கங்களைப் புரிந்துகொள்வதற்கான முன்னோடி வழிகாட்டிகளாக இவை கருதப்படுகின்றன. சட்டம், ஒழுக்கவியல், இலக்கியம், சமூகவியல், மானுடவியல் ஆகியவற்றில் ஆழ்ந்த செல்வாக்கைச் செலுத்தின.

கின்ஸியின் கணக்கெடுப்புகளைப் பற்றி பலவகையான ஐயங்களும் மறுப்புகளும் பின்னர் உருவாயின. அவர் நோயாளிகளையும் குற்றவாளிகளையும் தனியாகப் பிரித்து கணக்கிடவில்லை. பெரும்பாலும் வித்தியாசமான பாலுணர்வும் பழக்கங்களும் கொண்டவர்களை நேர்காணல் செய்தார். பாலுறவு குறித்த செய்திகளை அளிப்பவர்கள் நேர்மையாக சொல்லவேண்டுமென்பதில்லை, பலசமயம் அவர்கள் மிகையாக்கவோ நியாயப்படுத்தவோதான் பேசுவார்கள் – இவ்வாறெல்லாம் சுட்டிக்காட்டப்பட்டாலும் இன்றுவரை மானுடப்பாலுணர்வு குறித்து அறிவியல்நோக்கில் உருவாகியிருக்கும் பெரும்பாலான புரிதல்களுக்கான தொடக்கம் கின்ஸிதான்.

இன்று இவ்வறிதல்கள் வெகுவாக முன்னேறிவிட்டன. உடற்கூறியலில் பல்வேறு நவீன கருவிகள் வந்துவிட்டன. நரம்பியல் மிகப்பெரிய பாய்ச்சல்களை நிகழ்த்திக்கொண்டிருக்கிறது. பாலியல்கல்வியின் தேவை உலகளாவ உணரப்பட்டிருக்கிறது. பாலியல் நிபுணர்கள் ஊடகங்களில் தோன்றி விளக்குகிறார்கள். பாலியல் அறிதல் பரவலாகியிருக்கிறது. ஆனால் மறுபக்கம் பாலியல்தளங்கள் பெருகிவிட்டிருக்கின்றன. இவை பாலுறவியலுக்கு நேர் எதிரான பகற்கனவு சார்ந்த புரிதலை உருவாக்குகின்றன. அவற்றைத்தான் இளைஞர்கள் மிகுதியாக பார்க்கிறார்கள். வருத்தமென்னவென்றால் எழுத்தாளர்களும் அவற்றையே பார்த்துக் கற்றுக்கொண்டு எழுதுகிறார்கள்.

இன்றைய பாலியல் எழுத்து என்பது உடலை எழுதுவதாக இருக்கமுடியாது என்று நான் நினைக்கிறேன். எட்டாம் வகுப்புப் பையனின் கையில் செல்போன் வழியாக பாலியல் தளங்கள் கிடைக்கும்போது, உடலின் சாத்தியங்களின் எல்லை வரை காட்சிகள் கொட்டிக்கிடக்கும்போது, ஓர் எழுத்தாளன் உட்கார்ந்து வெறுமே பாலியல் காட்சியைச் சித்தரித்துக்கொண்டிருந்தான் என்றால் அவனுக்கு என்னதான் பொருள்? இன்றைய பாலியல் எழுத்து என்பது பாலியல் சார்ந்து நாம் கொண்டுள்ள பாவனைகளை, வழங்கிக்கொள்ளும் நடிப்புகளை நுட்பமாக திரைவிலக்குவதாகவே இருக்கமுடியும். அது எளிய அளவில் இலக்கியத் தகுதி பெறும். அதை ஓர் அடிப்படை உயிர்விளையாட்டாக எடுத்துக் கொண்டு, பிரபஞ்ச உண்மைகளை நோக்கிச் செல்லமுடியும் என்றால் அது அடுத்த கட்டம், அதுவே இலக்கியத்தின் சாதனையாக திகழும்.

முதல்பிரசுரம்  Sep 29, 2008

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on June 04, 2025 11:35

Jeyamohan's Blog

Jeyamohan
Jeyamohan isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow Jeyamohan's blog with rss.