ஐந்து பைசா வரதட்சிணை – வசுதேந்திரா
(1)
சின்னவயதில் நடந்த நிகழ்ச்சியொன்று நினைவிற்கு வருகிறது. விடுமுறையின்போது தொலைவில் இருந்த ஊரிலிருந்து எங்கள் வீட்டிற்கு இரண்டு சின்னப் பிள்ளைகள் வந்திருந்தார்கள். அப்பாவிற்கு தூரத்து சொந்தமாகயிருந்த இந்தப் பிள்ளைகளின் வீட்டுச் சூழல் அவ்வளவொன்றும் செழுமையாய் இருக்கவில்லை. பெரியவன் பெயர் பிராணேசா. சுமார் பத்து வயது. அவனுடைய தங்கை சுதா. அவளுக்கு ஏழு வயது. என்னுடைய அக்காவும் நானும் ஏறக்குறைய அதே வயதுடையவர்களாதலால் எங்களுடன் விளையாடிக்கொண்டு விடுமுறையைக் கழிக்கட்டும் என்று சொல்லி அப்பாவே அந்தப் பிள்ளைகளை அழைத்து வந்திருந்தார்.
இரண்டு பிள்ளைகளும் மிகவும் சமத்தாக இருந்தார்கள். எங்கள் ஊரில் தண்ணீர் கஷ்டம் இருந்தது. அவர்கள் ஊரிலும் அதே கஷ்டம்தான் என்றும், தங்கள் இருவராலும் தண்ணீர் கொண்டுவர முடியும் என்றும் சொல்லி சிறிய குடங்களை எடுத்துக் கொண்டு எங்களுடன் குழாயில் தண்ணீர்ப் பிடிக்க வந்துகொண்டிருந்தார்கள். சின்னவளாகிய சுதா அம்மாவின் பக்கத்தில் உட்கார்ந்துகொண்டு வெந்தியக் கீரையை ஆய்ந்து கொடுத்தாள். எதற்கும் அடம் பிடிக்கவில்லை. அவர்களுடைய அப்பா அம்மாவை நினைத்துக்கொண்டு ஏங்கவில்லை. கால்களில் கொலுசு போட்டுக் கொண்டு, சிவப்புப் பாவாடை மஞ்சள் நிற சட்டை அணிந்துகொண்டு குடுகுடு என்று போய்வந்து கொண்டிருக்கும் சுதா; காலையில் குளித்துமுடித்தவுடன் சின்ன அங்கவஸ்திரத்தை முறைப்படி சுற்றிக் கட்டிக்கொண்டு கோபிச்சந்தனத்தை பளபளவென்று அணிந்துகொண்டு கூடத்தில் உட்கார்ந்து சந்தியாவந்தனம் செய்துகொண்டிருந்த பிராணேசா ஆகியோரின் உருவங்கள் இப்போதும் என் கண் முன் நிழலாடுகின்றன.
(2)
அது அக்டோபர் மாத காலம்.எங்கள் ஊர் சுற்றுமுற்றும் எங்கும் பச்சை பசேல் என்று இருக்கும் காலம். பொதுவாக இந்தக் காலத்தில் வீதியிலிருக்கும் எல்லா வயது பிள்ளைகளும் ஒன்றுசேர்ந்து கண்டி நரசிம்மசுவாமி கோயிலுக்குப் போய்வருவது வழக்கம். அந்தக் கோயில் ஊரிலிருந்து சுமார் நான்கு மைல் தொலைவில் இருக்கிறது. எங்கள் தாய்மாமா அப்போதுதான் ஊருக்கு வந்திருந்தார். அவர் எங்கள் ஒட்டுமொத்த பிள்ளைப் பட்டாளத்தையே கட்டிக்கொண்டு கோயிலுக்கு அழைத்துக்கொண்டு போனார். வீட்டிலிருந்தே பிசிபேளே சாதத்தையும் தயிர் சாதத்தையும் கட்டிக்கொண்டு போயிருந்தோம். நதிக்கரையில் உட்கார்ந்து கொண்டு, வயிறு நிறைய சாப்பிட்டு, ஊற்றுகளைத் தோண்டி தாகத்தைத் தணித்துக் கொண்டு, குரங்குகளுடன் விளையாடிக் கொண்டிருந்துவிட்டு மிகுந்த சந்தோஷத்துடன் வீடு நோக்கிப் புரப்பட்டோம். ஊருக்கு வரும் பாதையில் புதியதாய் ஒரு ஹோட்டல் திறக்கப்பட்டிருந்தது. மாமா எல்லோரையும் ஹோட்டலுக்குக் கூட்டிக்கொண்டு போனார். எங்கள் எவருக்கும் எங்களுடைய ஊரிலிருக்கும் ஹோட்டலுக்குப் போய் வழக்கமில்லை. பள்ளாரிக்கோ, ஹொசபேட்டைக்கோ போகும்போது மட்டும் அப்பா எப்போதாவது மசால்தோசை வாங்கிக்கொடுப்பார். ஆதலால் ஊரிலிருக்கும் அந்த ஹோட்டலுக்குப் போகும்போது தெரிந்தவர்கள் எவராவது பார்த்துவிட்டால் என்ன கதி என்று பயம் ஏற்பட்டது. ஆனால் நகர வாழ்க்கையை அறிந்திருந்த தாய்மாமா அனைவருக்கும் தைரியம் சொல்லி உள்ளே அழைத்துக்கொண்டு போனார். எல்லோறுக்கும் காப்பி வாங்கிக் கொடுத்தார். எங்களுக்கெல்லாம் ஒருமாதிரி சந்தோஷம்தான்.
ஆனால் இருட்டுவதற்குள் வீட்டிற்குத் திரும்பி வந்துவிட வேண்டும் என்று அம்மா உத்தரவிட்டு அனுப்பி வைத்திருந்தாள். அதனால் மாமா எல்லோறையும் அவசரப்படுத்தி எழுப்பி வீட்டிற்கு அழைத்துக் கொண்டு போனார். சிறிது தொலைவு சென்றோமோ இல்லையோ சுதா மிகுந்த பதைப்புடன் பிராணண்ணா பிராணண்ணா என்று திரும்பத் திரும்ப அவள் அண்ணனைக் கூப்பிட்டாள். அவன் அலட்சியமாக என்னடி என்று கேட்டான். காப்பி மிகவும் சூடாக இருந்தது. என்னால் முழுவதும் குடிக்க முடியவில்லை. அரைவாசி குடித்துமுடித்து அப்படியே வைத்து வந்துவிட்டேன்….! என்று பயத்துடன் சொன்னாள். அந்த சொற்களுக்கே சின்னஞ்சிறிய பிராணேசா மிகவும் கலங்கிப்போய்விட்டான்.! ஐயோ பாவி, அம்மாவிற்குத் தெரிந்தால் திட்டுவாள்…! என்றபடி ஓடிச்சென்று ஹோட்டலுக்குள் நுழைந்து, தன்னுடைய தங்கை மிச்சம் வைத்திருந்த அரை கப் காப்பியையும் கடகடவென்று குடித்துவிட்டு, திரும்ப ஓடிவந்து எங்களுடன் சேர்ந்து கொண்டான். தன்னுடைய தங்கையிடம் பயப்படாதே! நான் குடித்து முடித்து வந்துவிட்டேன்! அம்மா திட்டமாட்டாள்! என்று சமாதானப் படுத்தினான்.
இப்போது இந்த நிகழ்ச்சியை நினைத்துக் கொண்டால் சிரிப்பு பொங்கிக் கொண்டு வருகிறது. ஆனால் அந்த வயதில் உணவு எதையாவது கொட்டிவிட்டால் அப்பாவோ அம்மாவோ திட்டுவார்கள் என்ற வினோதமான பயமொன்று எங்களிடம் இருந்தது. அதற்கு சமயக் கட்டுப்பாடுகளை விதித்து நாங்கள் எதையும் வீணாக்காதபடி பெரியவர்கள் எங்களைப் பார்த்துக் கொண்டார்கள். உதாரணமாக இரவுப் பொழுதில் எதையாவது சாப்பிடாமல் தட்டில் மிச்சம் வைத்துவிட்டால் அந்த வீட்டிலிருந்து லட்சுமிதேவி புறப்பட்டுப் போய்விடுவாள் என்னும் முக்கியமான பயம் எல்லோரிடமும் இருந்து வந்தது. சொந்தபந்தங்கள் எல்லோருடையதும் ஏறக்குறைய வறிய வாழ்க்கைதான் என்றாலும் லட்சுமிதேவி குறித்த அச்சம் மட்டும் எவரிடமும் குறைவாய் இருக்கவில்லை. பெரியவர்கள் அதை நேர்மையாக நம்பிக் கொண்டிருந்தார்கள். சில சமயம் வெள்ளரிக்காய் கறியோ, பீர்க்கங்காய் கறியோ சமைக்கும்போது அம்மாவும் அறியாதவாறு கசப்பான காய்களும் சேர்ந்து கொண்டுவிடும். அப்பா மட்டும் அதை வீணாக்காமல் சாப்பிட்டுக் கொண்டிருந்ததை இப்போது நினைத்துக் கொண்டால் உயர்வாகத் தோன்றுகிறது. அவர் எப்படி அவ்வளவு தூய்மையாக சாப்பிட்டுக் கொண்டிருந்தார் என்றால், அதன் பிறகு அவர் சாப்பிட்ட தட்டிலேயே அம்மா சாப்பிட்டுக்கொண்டிருந்தது எங்களுக்கு எப்போதும் அருவருப்பாகவே தோன்றவில்லை.
(3)
பண்டிகை நாட்களில் பலவகை சமயல்களும் போதுமான அளவு நடைபெறும் இல்லையா? அந்த நாட்களில் பிள்ளைகள் ஆசையினால் அதிகமாகப் போட்டுக்கொண்டுவிட்டு, அதன் பிறகு சாப்பிட முடியாமல் வீணாக்குவது அதிகம். அதைத் தவிர்ப்பதற்கு அப்பா ஒரு வழிமுறையை அறிந்து வைத்திருந்தார். யாரெல்லாம் வாழை இலையில் எதையும் வீணாக்காமல் சாப்பிடுகிறார்களோ அவர்களுக்கு ஐந்து பைசா கொடுக்கிறேன்! என்று சாப்பிட உட்காருவதற்கு முன்பே முழங்கிக் கொண்டிருப்பார். அந்த ஐந்துபைசா எங்களுக்கு மிகப் பெரிய தொகையாகத் தோன்றிக் கொண்டிருந்தது. எங்களுக்கு எவ்வளவு வேண்டுமோ அவ்வளவு மட்டும் போட்டுக்கொண்டு ஒரு துளியும் வீணாக்காமல், கடைசியில் இலை நுனியில் இருக்கும் உப்பையும் கூட கையில் தேய்த்துக்கொண்டு தூய்மைப் படுத்திக்கொள்ளும் பழக்கத்தை வைத்துக் கொண்டிருந்தோம். சாப்பாடெல்லாம் முடிந்த பிறகு, சாப்பிட்ட இடத்தை தூய்மைப் படுத்தும் அம்மா நாங்கள் பிள்ளைகள் இலைக்குக் கீழ் எதையும் ஒளித்து வைக்கவில்லை என்பதை உறுதிப்படுத்திய பிறகு, சொன்ன சொல்லிற்கு ஏற்ப அப்பா ஐந்து பைசா கொடுத்துக் கொண்டிருந்தார். பெரிய அளவிற்கு பணத்தையே ஈட்டிவிட்ட மகிழ்ச்சி எங்களுக்குள் ஏற்பட்டு வந்தது. அதனைக் கொண்டு என்ன வாங்கிக் கொள்ளவேண்டும் என்று மிகப் பெரிய விவாதத்தை நடத்திக் கொண்டிருப்போம். அப்பாவின் இந்த பரந்த மனப்பான்மையைப் பார்த்து அம்மா எப்போதும் முனகிக் கொண்டிருப்பார். இப்போதிலிருந்தே பிள்ளைகளுக்கு பணத்தாசை காட்டினால் என்ன நடக்குமோ? என்று அப்பாவை கடிந்து கொண்டிருப்பாள்.
பொதுவாக அப்பா எப்போதும் காட்டு விலங்குகளின் உதாரணங்களையே கொடுத்துக் கொண்டிருந்தார். ஏதாவது காட்டுவிலங்கிற்கு பேராசை இருப்பதை பார்த்திருக்கிறீர்களா? என்று கேள்வி கேட்டுக்கொண்டிருந்தார். பணக் கொழுப்பின் பிரச்சனை யாதெனும் இருப்பது மணிதர்களுக்கு அல்லது மனிதர்கள் வளர்க்கும் விலங்குகளுக்கு மட்டும்தான் என்று உறுதியாக எப்படியோ.. கொண்டிருந்தார். வயிறு நிரம்பிய புலியின் முன்பு ஆடி அசைந்து கொண்டிருந்தாலும் அது நம்மைத் தீண்டுவதில்லை தெரியுமா? ஒரு மானைப் பிடித்துவிட்டால் அதை வைத்துக்கொண்டு மூன்று நாட்கள் வாழ்க்கை நடத்துகிறது. ஆண்டு முழுவதற்கும் போதுமான அளவு அரிசி, பருப்பு, சோளம் இவற்றைச் சேமித்துவைப்பது மனிதர்கள் மட்டுமே என்று சொல்லிக் கொண்டிருந்தார். காட்டு விலங்குகளுக்கு இருக்கும் விவேகம்கூட மனிதர்களுக்கு இல்லை என்றால் எப்படி? என்று வாதிட்டுக் கொண்டிருந்தார்.
அப்பா கொடுத்துக்கொண்டிருந்த அந்த ஐந்து பைசா இப்போதும் என்னை பல்வேறு சூழல்களில் பாதித்துக்கொண்டே இருக்கிறது. தேவையை விடவும் மிகுதியானதை வாழ்வில் அடைய முயலும் போதெல்லாம் அப்பாவின் அந்த ஐந்து பைசாவை இழந்துவிட்ட உணர்வு என்னுள் ஓசை இல்லாமல் தோன்றி கலக்கத்தை ஏற்படுத்துகிறது. அணிந்து கொள்ள போதுமான அளவு ஆடைகள் இருக்கும்போது, காரணமே இல்லாமல் புதிய ஆடைகளை வாங்கத் திரும்பவும் செல்லும்போது இந்த ஐந்து பைசா என்னுடைய கண் முன் வருகிறது. ஒழுங்காக இருக்கும் தொலைக்காட்சிப் பெட்டியைக் கொடுத்துவிட்டு புதியதை வாங்கிக்கொள்ளும் வாய்ப்பிருக்கிறது என்றவுடன் மாற்றிக்கொண்டு புதிய
தொலைக்காட்சிப் பெட்டியைக் கொண்டுவரும்போது இந்த ஐந்து பைசாவை தொலைத்துவிட்டதுபோல சிலநொடிகள் உறுதியிழக்கிறேன். ஏதோ ஒரு ஊருக்கு சென்றுத் திரும்பி வந்து, எடுத்துக்கொண்டு சென்ற பயணப்பெட்டியை காலி செய்யும்போது, அவ்வளவு தொலைவு சென்றும் பயன்படுத்தாமல் அப்படியே திரும்பக் கொண்டுவந்த பொருட்கள் மீண்டும் அதே ஐந்துபைசாவைக் கண்முன் அசைக்கின்றன. அப்பாவின் அந்த ஐந்து பைசாவின் மகத்துவத்தை அறிந்துகொண்டால் ஒட்டுமொத்த சமூகமே மாற்றமடையும் வாய்ப்புள்ளது என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. மொத்தத்தில் இந்த ஐந்துபைசா என்னுடைய எல்லா பேராசைகளுக்கும் தடை போடும்அளவிற்கு ஆற்றலுடையதாய் இருக்கிறது.
(4)
இப்படிப்பட்ட அப்பாவும் சிறிதளவு சாதத்தை வீணாக்க வேண்டியிருந்த ஒரு வேடிக்கை நிகழ்ச்சியும் என் நினைவிற்கு வருகிறது. நாய், பூனை போன்ற வளர்ப்பு விலங்குகள்மீது அம்மாவிற்கு அவ்வளவொன்றும் விருப்பமிருக்கவில்லை. அளவிற்கு அதிகமாக மடி விழுப்பு பார்க்கும் மாத்வ குடும்பமாக இருந்த காரணத்தினால் அங்கு வளர்ப்பு விலங்குகள் மீது பிரியம் குறைவாகவே இருக்கிறது. அது எப்படியோ எங்கள் வீட்டு கொல்லைப் புறத்தில் நோயுற்ற நாயொன்று வந்து ஒண்டிக்கொண்டுவிட்டது. எவ்வளவுதான் துரத்திவிட்டாலும் திரும்பத் திரும்ப வந்து ஒதுங்கிக் கொண்டிருந்தது. சாப்பிட்ட இடத்தை தூய்மைப் படுத்தி கொண்டு சென்று கொட்டுவதை உண்பதற்காக ஆசையுடன் காத்துக்கொண்டு உட்கார்ந்திருந்தது. ஆனால் ஒரு பருக்கையையும் வீணாக்காமல் சாப்பிடும் பழக்கத்தை வளர்த்துக் கொண்டிருந்த எங்கள் வீட்டில் அதற்கு என்ன கிடைக்கப்போகிறது? ஏமாந்த முகத்துடன் திரும்பிப் போய்க் கொண்டிருந்தது. ஓர் இரு முறை இதைப் பார்த்து அப்பா வருத்தப்பட்டார். மறு நாளிலிருந்து ஒரு வேடிக்கையான முறைமையை ஏற்படுத்திக்கொண்டார். சாப்பிடுவதற்கு முன்பு சித்திராவதி வைக்கவேண்டும் இல்லையா?அதற்கு இவ்வளவு பெரிய பெரிய கவளங்களை உருட்டி,நான்கு கவளம் சித்திராவதி வைக்க ஆரம்பித்தார். அப்பா ஏன் இப்படி செய்துகொண்டிருக்கிறார் என்று எங்களுக்கெல்லாம் முதலில் புரியவே இல்லை.கேட்டதற்கு ‘அவ்வாறு செய்வது சிறந்தது என்று ஆச்சாரியார் சொல்லியிருக்கிறார்’ என்று காரணம் சொன்னார். ஆனால் இரண்டே நாட்களில் அதன் ரகசியம் அம்மாவிற்கு புரிந்துவிட்டது. ‘இதோ அந்த பாழாய் போன நாய்க்காக உங்கள் அப்பா அடிக்கும் லூட்டியைப் பாருங்களடா’ என்று எங்கள் முன்னர் முனகிக் கொண்டிருந்தாள்.
ஏதாவது விருந்திற்கு இப்போது போகும்போதும், மக்கள் எப்படி சாப்பிட்டிருக்கிறார்கள் என்பதை கவனிப்பது என் பொழுதுபோக்கு. பஃபே,விருந்து இருந்தாலும் சாப்பிட்டு முடித்த தட்டுகளிலிருந்து வீசிய பாத்திரத்தின் அருகே சென்று ஒரு முறை பரிசீலிப்பதை நான் தவறவிடுவதே இல்லை. இந்தத் தேசத்தில் அதிகமான அளவிற்கு உணவுப் பற்றாக்குறை இருக்கிறது. நிறையபேர் சாப்பாடு இல்லாமல் பட்டினி கிடக்கிறார்கள். அதனால் நாம் வீணாக்கக் கூடாது என்ற எளிய விஷயமாக இது என்னுள் அமையவில்லை. அந்த விஷயம் உண்மை என்று ஒப்புக் கொண்டாலும், அதையும் கடந்த அறம்சார் நிகழ்வாக இது என்னை பாதிக்கிறது. உலகிலுள்ள அனைவரும் அப்பாவின் ஐந்து பைசாவை அடைந்துவிட வேண்டும் என்று எனக்கு ஆசையாய் இருக்கிறது.
“சுவையற்றதை எதற்காக சாப்பிடவேண்டும்?” என்ற வாதம் ஒன்றை அவ்வப்போது கேட்டிருக்கிறேன். இத்தகைய சொற்களை நான் ஒப்புக்கொள்வதில்லை. சாப்பாட்டு விஷயம் ஒருபுறம் இருக்கட்டும், வாழ்விலும் சுவையற்ற எவ்வளவோ விஷயங்களை நாம் ஏற்றுக்கொள்ள வேண்டிய கட்டாயம் இருக்கத்தான் செய்கிறது. அப்படியிருக்க சாப்பாட்டு வேளையில் ஏன் அந்த ஏற்றத்தாழ்வு? அவ்வப்போது சுவையற்றதை சாப்பிட்டால் அப்படியொன்றும் பெரியதாய் நடந்துவிடப் போவதில்லை. நமக்கு சமையல் செய்து பரிமாறுபவர்களுக்குக் காட்டும் மரியாதையாகவும் அது இருக்கும். வேண்டுமென்றால் நலத்திற்கு தீங்கு செய்யும் உணவை உட்கொள்ளலாகாது என்பதை ஒப்புக்கொள்ளலாம்.
முந்தாநாள் அக்காவின் மகளுக்குத் திருமணம் நடந்தது. மாப்பிள்ளை எப்படிப்பட்ட பையனோ என்ற குழப்பம் அக்காவிடம் இருக்கவே செய்தது. யாரோ சம்மந்தத்தை சுட்டிக்காட்டினார்கள் என்று ஜாதகப் பொருத்தம் பார்த்துச்செய்யும் திருமணங்களில் பையனின் குணம் எப்படிப்பட்டது என்று எந்த அளவிற்கு தெரிந்துகொள்ள வாய்ப்பு? கல்யாண நாளன்றே நான் அதற்கு பதிலைக் கண்டுபிடித்துவிட்டேன். பையன் ஒரு துளியும் சிந்தாமல் சுத்தமாய் சாப்பிட்டுமுடித்திருந்தான். அவனுடைய அப்பாவும் அம்மாவும்கூட அவ்வாறே சாப்பிட்டிருந்தார்கள். அக்காவை கூப்பிட்டு அந்த இலைகளை காண்பித்து பயப்படாதே அக்கா. பையன் நல்லவன். அகங்காரம் இல்லை. அவர்களின் குடும்பமும் நல்லது என்றே தோன்றுகிறது என்று சொன்னேன். அக்காவிற்கு அந்த வார்த்தைகளால் திருப்தி ஏற்பட்டது.
“மாப்பிள்ளைக்கு ஐந்து பைசா வரதட்சிணை கொடுத்துவிடலாம் இல்லையா”?என்ற என் வார்த்தைகளுக்கு பால்யத்தை நினைத்துக்கொண்ட அக்கா புன்னகைத்தாள்.
கன்னடத்திலிருந்து தமிழில் கு. பத்மநாபன்.
நன்றி:
திசையெட்டும்மொழிபெயர்ப்புக் காலாண்டிதழ்
Jeyamohan's Blog
- Jeyamohan's profile
- 835 followers
