Jeyamohan's Blog, page 80
June 11, 2025
காவியம் – 52

ரோமஹர்ணன் வியாசவனத்தைச் சென்றடைந்த அன்றுதான் வியாசருக்குத் தொலைவிலிருந்து ஒரு செய்தி வந்து சேர்ந்திருந்தது. பாஞ்சாலத்தின் அரசன் துருபதனுக்கு ஒரு பெண்குழந்தை பிறந்திருக்கிறது என்ற செய்தியுடனும் அக்குழந்தையின் ஜாதகக்குறிப்புடனும் ஒரு சூதன் வந்திருந்தான். யாஜர், உபயாஜர் என்னும் இரண்டு அதர்வவேத வல்லுநர்கள் நடத்திய பதினெட்டுநாள் நீண்ட வேள்வியின் பயனாக துருபதனின் மனைவி கருவுற்றிருந்ததை வியாசர் முன்னரே அறிந்திருந்தார். அங்கிருந்து குழந்தையின் ஜாதகம் வருவதற்காக ஒவ்வொரு நாளும் காத்திருந்தார்.
ஜாதகத்தைப் பார்த்ததும் அவர் சோர்வுற்று தனியாகச் சென்று ஓடைக்கரையில் அமர்ந்திருந்தபோதுதான் ரோமஹர்ஷணன் வந்திருக்கும் செய்தியை வைசம்பாயனன் சென்று அவரை அறிவித்தான். அவர் எவரையும் பார்க்கவிரும்ப மாட்டார், உடனே அந்த இளம் நிஷாதனை திருப்பி அனுப்பிவிடுவார் என அவன் எண்ணினான். ஆகவே வியாசரைப் பணிந்து “காட்டுமிராண்டி போலிருக்கிறான். அழுக்கும் கந்தலுமாக தெரிகிறான். உச்சரிப்பிலும் கல்வி கற்ற தடையங்கள் தெரியவில்லை” என்றான்.
வியாசர் “அவன் பெயர் என்ன?” என்றார்.
“ரோமஹர்ஷணன் என்றான்”
வியாசர் கண்களில் ஆர்வத்துடன் “வரச்சொல் அவனை” என்றார்.
அவன் வந்து பணிந்து நின்றதும், அவன் தன்னை அறிமுகம் செய்வதற்கு முன்னரே “உன் குருமரபு என்ன?” என்றார்.
அவன் “நான் வால்மீகியின் மாணவரான லோமஹர்ஷணரின் மரபைச் சேர்ந்தவன். என் தந்தை லோமஹர்ஷணரிடம் காவியம் பயின்றவன்” என்றான்.
“ஆதிகவியின் மரபில் வந்த நீ என்னிடம் எதைக் கற்றுக்கொள்ள விரும்புகிறாய்?” என்று வியாசர் கேட்டார்.
“அதர்மத்தின் வழிகளைப் பற்றி” என்று ரோமஹர்ஷணன் சொன்னான். “ஏனென்றால் வேறொரு காலம் தொடங்கிவிட்டது என்று உணர்கிறேன்”
தன் கையிலிருந்த ஜாதகத்தை அவனிடம் தந்து “இதைப் பார்த்துச் சொல். என்ன பொருள் இதற்கு?” என்று வியாசர் கேட்டார்.
அவன் அதை வாங்கி ஒருமுறை பார்த்துவிட்டு “பஞ்சாக்னி” என்றான்.
வியாசர் ”அதாவது…” என்றார்.
”இவள் நெருப்பு வடிவம், அழிப்பவள்”
“அந்த அழிவை தடுக்கமுடியுமா?” என்று வியாசர் கேட்டார்.
“ஐந்து பருப்பொருட்களில் நீர் நெருப்பை அணைப்பது. மண்ணும் நெருப்பை கட்டுப்படுத்துவது. காற்று வளர்ப்பது. வானம் அணையாத நெருப்புகளை மட்டுமே கொண்டது” என்று ரோமஹர்ஷணன் பதில் சொன்னான்.
“நீ அஸ்தினபுரியின் கதையை அறிந்திருப்பாய். அங்கே இந்த தீயை அணைப்பவர் எவர்?” என்றார் வியாசர்.
“பாண்டுவின் மனைவியாகிய அரசி குந்தி காற்று, மாருதர்கள் உலவும் பெரும்புல்வெளிகளைச் சேர்ந்தவள். இந்த நெருப்பை வளர்ப்பவள். திருதராஷ்டிரரின் மனைவியாகிய காந்தாரி நிலம். இந்த நெருப்பை அவள் கட்டுப்படுத்த முடியும். இதை அணைக்கும் நீர் அந்தக் குலத்தில் இல்லை” என்று ரோமஹர்ஷணன் சொன்னான்.
“நீரை நான் வரவழைக்க முயல்கிறேன். பகீரதனைப் போல வானத்துக் கங்கையை இறக்குகிறேன்” என்றார் வியாசர்.
ரோமஹர்ஷணன் ஒன்றும் சொல்லவில்லை.
“நீ என்னுடன் இரு” என்று அவர் சொன்னார்.
அவ்வாறாக அவன் அவருடைய பிரியத்திற்குரிய மாணவனாக ஆனான். அவருடன் இருந்து அவருடைய ஒவ்வொரு சொல்லையும் நினைவில் நிறுத்திக் கொண்டான். அவர் அஸ்தினபுரிக்குச் சென்றபோதெல்லாம் அவனும் உடன் சென்றான். அவனை அவர் தன் முதன்மை மாணவன் என சபைகளில் அறிமுகம் செய்துவைத்தார்.
வியாசரின் பிற மாணவர்கள் அவன்மேல் ஒவ்வாமையும் சீற்றமும் கொண்டிருந்தாலும் அதை வெளிக்காட்டிக் கொள்ளவில்லை. அவனை அவர்கள் விலக்கியே வைத்திருந்தார்கள். தங்களுக்கு நோன்புகளும் நெறிகளும் பூஜைவிதிகளும் உள்ளன என்றும், நிஷாதனாகிய அவன் அவையேதும் இல்லாதவன் என்பதனால் அவனிடம் இருந்து தாங்கள் சற்று விலகியிருப்பதாகவும் அவர்கள் வியாசரிடம் சொன்னார்கள். “இவன் என்றோ ஒருநாள் தன்னுடைய இருட்டின் கதைகளை அவர் சொன்னதாகச் சொல்லி அலையப்போகிறான்” என்று வைசம்பாயனன் சொன்னான். பிறருக்கும் அந்த எண்ணம் இருந்தது.
இந்திரப்பிரஸ்தம் அமைந்தபோது அங்கே நிகழ்ந்த ராஜசூய வேள்விக்கு ரோமஹர்ஷணன் வியாசருடன் சென்றிருந்தான். அந்நகரின் பிரம்மாண்டமான தோற்றம் அனைவரையும் திகைக்கச் செய்தது. “இது ஆயிரமாண்டுக்காலம் இங்கே நிலைகொள்ளப்போகும் நகரம்!” என்று வைசம்பாயனன் வியப்புடன் சொன்னான்.
“பாரதவர்ஷத்தின் மிகப்பெரிய கோட்டை இதுதான்” என்று சுமந்து சொன்னான்.
“இல்லை, யாதவர்களின் துவாரகை இதைப்போலவே பெரியது” என்று அத்ரி சொன்னான்.
“ஆனால் அது ஆரியவர்த்ததிற்குள் இல்லை. இது ஆரியவர்த்தத்தின் நெஞ்சில் அமைந்துள்ளது” என்று ஜைமினி பதில் சொன்னான்.
வியாசர் அதைக் கேட்டார். தன்னருகே நின்றிருந்த ரோமஹர்ஷணனிடம் “நீ என்ன நினைக்கிறாய்?” என்றார்.
“ஆசுரம்” என்று அவன் பதில் சொன்னான்.
அவன் சொல்வதென்ன என்று அவர் புரிந்துகொண்டு பெருமூச்சுவிட்டார். மற்றவர்கள் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டார்கள்.
தனித்திருக்கையில் அவன் வியாசரிடம் சொன்னான். “வளர்ந்து பெருகுபவை நீடிக்கும். அவற்றை வளரச் செய்த சக்திகளே அவற்றை தாங்கி நிறுத்தும். கட்டப்பட்டு பெருகியவை அவற்றைக் கட்டியவர்களின் இறுதித்துளி ஆற்றலையும் உறிஞ்சிக்கொண்டவை. அவற்றை தாங்கிநிறுத்த கூடுதல் ஆற்றல்தேவை. அது அவர்களிடம் இருக்காது.”
வியாசர் மேலும் மேலும் துயரமடைந்தபடியே சென்றார். அந்த வேள்வியிலேயே யாகசாலை முதல்வனாக துவாரகையின் யாதவமன்னன் கிருஷ்ணன் அமர்த்தப்பட்டதை சிசுபாலன் எதிர்த்துப்பேச, கிருஷ்ணன் அவரைக் கொன்றான். ரத்தத்தில் யாகசாலை நனைந்தது. அந்நகருக்கு எதிரான போர் அங்கேயே தொடங்கிவிட்டது.
அது பெரும்போரில் முடிந்தது. யாதவ அரசன் கிருஷ்ணன் அந்தப்போரை தானே முன்னெடுத்துச் செய்து, முடித்து வென்றான். அசுரர்களையும் நிஷாதர்களையும் பிறரையும் தன்னுடன் அணிசேர்த்துக்கொண்டு அவன் க்ஷத்ரியர்களின் பெரும்படையை அழித்தான். அஸ்தினபுரியையும் பிறநாடுகளையும் யாதவர்கள் கைப்பற்றிக் கொண்டார்கள்.
“க்ஷத்ரியர்கள் வெல்லப்பட்டாக வேண்டும். கண்கூடான ஆற்றல் அவர்களுக்குக் காட்டப்பட்டாகவேண்டும். சதிகளாலோ, விதியாலோ, அல்லது வரலாற்றின் ஏதேனும் விடுபடல்களாலோ தாங்கள் அதிகாரம் இழக்கவில்லை என்றும்; ஆற்றலை இழந்தமையால்தான் அதிகாரம் இழந்தோம் என்றும் அவர்கள் அப்போது மட்டும்தான் ஏற்றுக்கொள்வார்கள். ஆற்றலுடையவர்களுக்கு ஆற்றலற்றவர்கள் முழுமையாக அடங்கினால் மட்டுமே நிலத்தில் அமைதி உருவாகும். அரசியலில் அமைதி உருவானாலொழிய உழவும் தொழிலும் கலையும் அறிவும் செழிக்காது” என்று ரோமஹர்ஷ்ணன் சொன்னான்.
“ஆமாம், ஆனால் அழிவுகள் என்னை நெஞ்சுபிளக்கச் செய்கின்றன. இருபக்கங்களிலும் சிந்தியது என் ரத்தம்தான். ஆனால் இப்படித்தான் வரலாறு முன்னால் செல்லும். இப்படித்தான் எப்போதும் நிகழ்ந்திருக்கிறது. இனியும் இதுவே நிகழும். வல்லவன் வெல்வது என்பது இயற்கையின் நியதி. வல்லவன் அறத்தைக் கைக்கொள்ளவேண்டும் என்பது தெய்வங்களின் ஆணை. அதை மீறுவார்கள் என்றால் அவர்களும் வீழ்த்தப்படுவார்கள்” என்று வியாசர் சொன்னார்.
அவர் தன் மாணவர்களிடம் வியாசவனத்தில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தார். நீண்டநாள் ஆழ்ந்த துயரில் இருந்த அவர் அப்போதுதான் சற்று மீண்டு வந்திருந்தார்.
“அறம் வெல்வது அத்தனை எளிதாக நிகழ்வதில்லை. அறமும் அறமீறலும் அத்தனை தெளிவானவையும் அல்ல. தாமரைநூலை தையல் ஊசியால் பிரித்தெடுப்பது போல அறத்தை அன்றாடத்தில் இருந்து பிரித்தெடுக்க வேண்டும். அதை நீதிநூல்கள் செய்ய முடியாது. அறியப்பட்ட அறத்தை நடைமுறைத் தேவைக்காக வகுத்துரைப்பதே அவற்றின் பணி. அறத்தை உரைக்கக் காவியங்களால்தான் முடியும்” என்றார் வியாசர். “ஒன்று இன்னொன்றாகிக் கொண்டே இருக்கும் நிலையில்தான் இங்கே ஒவ்வொன்றும் இருந்துகொண்டிருக்கின்றன. நிலையென ஏதுமில்லாத இவ்வுலகில் அறமோ, மீறலோ கூட நிலையானவை அல்ல. அறம் அறமீறலாக, அறமீறல் அறமாக உருமாறிக்கொண்டே இருக்கும் வாழ்வின் விந்தையைக் காட்ட கதைகளால் மட்டுமே இயலும். கதைகளைக் கதைகளால் சமன்செய்தும் கதைகளைக்கோத்தும் செல்லும் காவியத்தால் மட்டுமே அறத்தை உரைக்கமுடியும்.”
வியாசர் தொடர்ந்தார். “காவியம் அறம் என்ன என்று உரைப்பதில்லை, அறத்தின் முன் மானுடரை தனித்தனியாக நிறுத்திக் காட்டுகிறது. ஒவ்வொருவரும் அவர்களின் வாழ்வின் தருணங்களில் நடந்துகொண்டவையும் நிகழ்த்தியவையும் அறத்தின் பின்புலத்தில் உண்மையில் என்ன மதிப்புகொண்டவை என்பதை காவியத்தை பயில்பவர்கள் உணரமுடியும். வாழ்க்கையின் ஒரு தருணத்தில் அதைப்போன்ற ஒரு காவியத்தருணத்தை எளிய மனிதர்கள்கூட உணரவேண்டும். அதிலிருந்து தனக்கான நெறியை அவர்கள் உருவாக்கிக் கொள்ளவேண்டும்”
“அப்படியென்றால் அக்காவியம் எல்லா வாழ்க்கைச் சந்தர்ப்பங்களும் கொண்டதாக இருக்கவேண்டும், ஒன்றுகூட மிச்சமின்றி சொல்லப்பட்டதாக அமையவேண்டும்” என்று வியாசர் சொன்னார். “நான் அவ்வாறு ஒன்றை இயற்றவிருக்கிறேன். அதன்பொருட்டே நான் பிறந்து, நூல்பயின்றேன் என உணர்கிறேன். இந்தப் போரும் அதன் பின்புலமும் என்னை திகைக்கச் செய்தன. இந்தப்போரைத் தடுக்க என்னால் முடிந்தவரை முயன்றேன். அது மிகப்பெரிய மலைப்பாறை சரிவில் உருள்வதுபோல தன் வழியை தானே தெரிவுசெய்து செல்வதைக் கண்டபோது மலைத்து செயலற்றுவிட்டேன். அதன் முடிவில் துயரம் தாங்காமல் சோர்ந்து விழுந்தும் விட்டேன். ஆனால் இப்போது தெரிகிறது, இவையனைத்தும் எனக்கு ஏற்கனவே நன்றாகத் தெரிந்தவைதான் என்று. நான் இவையனைத்தையும் கதைகளாக அறிந்திருக்கிறேன். என் கனவில் அவை இருந்தன. அவை எனக்குள் எப்படி வந்தன என்றும், எவரிடமிருந்து வந்தன என்றும் எண்ணி எண்ணி சலித்து அம்முயற்சியை கைவிட்டேன். ஆனால் நான் இதையெல்லாம் காவியமாக ஆக்கவேண்டும் என்பதே எனக்கிடப்பட்டிருக்கும் ஆணை என்று மட்டும் தெளிவு கொண்டிருக்கிறேன்.”
மாணவர்கள் அனைவரும் ஊக்கமடைந்தனர். வியாசர் தன் காவியத்தை எழுதத் தொடங்கினார். ஒவ்வொரு நாளும் சரஸ்வதி யாமத்திலேயே அவர் நூறு செய்யுட்களை சொன்னார். அவரது மாணவர்கள் அவற்றை எழுதிக்கொண்டார்கள். அன்றே அவற்றை அவர்கள் மனப்பாடம் செய்துகொண்டார்கள். வியாசர் எஞ்சிய பொழுதெல்லாம் முற்றிலும் அமைதியிலாழ்ந்து தனித்து அமர்ந்திருந்தார். தொலைவிலிருந்து பார்க்கையில் அவர் உடலிலும் முகத்திலும் அக்காவியம் நிகழ்ந்துகொண்டிருப்பதாகத் தோன்றியது. அதை மாணவர்கள் மரங்களின் மறைவிலிருந்து பார்த்துக் கொண்டிருந்தனர். காவியதேவர்கள் அவரை ஆட்கொண்டிருக்கிறார்கள் என்றனர். அவர் கைதொட்டால் செடிகளில் மலர்கள் மலர்ந்தன, கூழாங்கற்கள் வண்ணம் கொண்டன, புழுக்கள் சிறகு கொண்டு வண்ணத்துப் பூச்சிகளாக மாறின என்று சொல்லிக்கொண்டார்கள்.
ஆனால் வியாசர் நிழல்களால் சூழப்பட்டிருந்தார் என்பதை ரோமஹர்ஷ்ணன் கண்டான். அவரைச் சுற்றி எப்போதுமே ஒன்றுக்கும் மேற்பட்ட நிழல்கள் இருந்தன. அவை அவருடைய உடலில் இருந்து விடுபட்டு தன்னியல்பாக அசைந்தன. அவர்மேல் வளைந்து அவரை தழுவிக் கொள்பவை போலவும், அவர் செவிகளில் பேசுபவை போலவும் தெரிந்தன. அவற்றை அவர் விலக்க முற்பட்டார். சிலசமயம் சீற்றத்துடன் அவற்றை அடித்து விரட்ட முயன்றார். பலசமயம் முழுமையாகவே தன்னை அவற்றிடம் ஒப்படைத்துவிட்டு துயரம் நிறைந்த முகத்துடன் அமர்ந்திருந்தார். அவருடைய உதடுகள் அசைந்தபடியே இருந்தன. அவர் தூங்கும்போதும் அவை அசைந்தன. ஒரு முறை அவர் தூங்கும் அறையில் அருகே அமர்ந்திருந்த ரோமஹர்ஷணன் அவர் சொன்ன ஒரு சொல்லைத் தெளிவாகவே கேட்டான். அது பைசாசிக மொழியில் அமைந்திருந்தது.
அந்தக் காவியத்தை இயற்றி முடிக்க அவருக்கு நாற்பத்தைந்து ஆண்டுகள் ஆயின. அவர் தன் நூற்றியிருபதாவது வயதில் அக்காவியத்துடன் ஜனமேஜயனின் சபைக்குச் சென்றார். அங்கே அந்தக் காவியம் சான்றோர்கள், அறிஞர்கள் கூடிய சபையில் அரங்கேற்றம் செய்யப்பட்டது. ஏழாண்டுக்காலம் தொடர்ச்சியாக அந்த காவியம் அங்கே வாசிக்கப்பட்டு அவை முன் வைக்கப்பட்டது. அதன் மீது விவாதங்கள் நடைபெற்றன.
துரியோதனனின் அடங்காத மண்மீதான வெறி, பண்டவர்களின் உரிமை, பதினான்கு ஆண்டுகள் அவர்கள் காடுகளில் அலைந்தது, கால்கடுக்க தூது சென்ற யாதவ மன்னன் கிருஷ்ணனின் பணிகள், அவை ஒவ்வொன்றும் வீணாகி போர் சூழ்ந்து வந்தது என அவருடைய காவியம் விரிந்துகொண்டே சென்றது. ’மழைமுகிலை புயல்காற்று சுமந்து வரும்போது சுவர்கள் கட்டி தடுக்கமுடியுமா என்ன?’ என்று வியாசரின் காவியம் கேட்டது. பல்லாயிரம் நிகழ்வுகள் ஒவ்வொன்றும் தங்களுக்குரிய பிறப்புநியாயங்கள் கொண்டிருந்தன. தங்களுக்குரிய பாதைகளும் கொண்டிருந்தன. ஆனால் அவை தெய்வ ஆணையை ஏற்றவை போல இணைந்து, ஒன்றையொன்று செலுத்திக்கொண்டு, ஒற்றைப் பாதையென்றாகிப் போரை நோக்கிச் சென்றன.
“எவர் கையில் எவர் இறப்பார் என்றுகூட முடிவாகியிருந்தது. ஒவ்வொருவரும் பிறப்பதற்கு முன்னரே அவர்கள் அப்பிறவியில் ஆற்றவேண்டியது என்ன என்பதை பெற்றோரும் குலமும் முடிவுசெய்துவிட்டிருந்தன. அதை நிகழ்த்துவது மட்டுமே ஒவ்வொருவருக்கும் செய்யக்கூடுவதாக இருந்தது” என்றது அக்காவியம். களத்தில் பிதாமகர் தன் கைகளால் பேரர்களைக் கொன்று குவித்தார். தந்தையாகிய பீமனின் கைகளால் தனையர்களாகிய இளங்கௌரவர்கள் இறந்தனர். உடன்பிறந்தார் உடன்பிறந்தாரைக் கொன்று வெற்றிகொண்டாடினர். ஆசிரியர்களை மாணவர்கள் கொன்றனர். மதிப்புக்குரிய முதியவர்களின் தலையை வெட்டி பந்தாக விளையாடினர்.
எந்தப் போர்க்காவியமும் இறுதியில் பெரும் புலம்பலாக ஆகிவிடுகிறது. கண்ணீருடன் வியாசமகாகாவியம் அரற்றியது ’போர்நெறிகள் முதலில் மறைந்தன. பின்னர் அறநெறிகள் அழிந்தன. இறுதியாக மானுடநெறியும் சிதைந்தது. துயின்று கொண்டிருந்த இளஞ்சிறுவர் கூடாரங்களோடு கொளுத்தப்பட்டனர். தோற்றவர்கள் நிலத்தை இழந்தனர், வென்றவர்கள் பெரும்பழியை ஈட்டிக்கொண்டனர். எந்த நிலத்தின்பொருட்டு போரிட்டு ரத்தம் சிந்தினார்களோ அந்த நிலத்தை கைவிட்டுவிட்டு பாண்டவர்கள் காட்டுக்குச் சென்றனர். ஒன்றும் மிஞ்சவில்லை, கண்ணீரும் வஞ்சமும் கதைகளும் தவிர.’
ஒவ்வொரு நிகழ்வுக்கும் அவையில் கொந்தளிப்பு எழுந்தது. பாண்டவர்களின் அரக்கு மாளிகை கொளுத்தப்பட்டபோது. துருபதனின் அவையில் இருந்து கர்ணன் சிறுமையுடன் இறங்கி விலகியபோது. ஆனால் வியாசர் திரௌபதி அவையில் சிறுமை செய்யப்பட்டதை விவரித்தபோது பலர் சீற்றத்துடனும் தவிப்புடனும் எழுந்து நின்றுவிட்டார்கள். “மண்ணையும் பெண்ணையும் போற்றுபவர்கள் வாழ்வார்கள். உடைமை கொள்பவர்கள் அழிவார்கள்” என்ற வரியை அவர் சொல்லி முடித்ததும் அறிஞரான கௌதமர் எழுந்து “அரசன் மண்ணை உரிமை கொள்ளவேண்டும் என்றுதான் தொன்மையான நெறிநூல்கள் சொல்கின்றன” என்றார்.
“அந்த நெறிநூல்களை அகற்றவேண்டிய காலம் வந்துவிட்டது. அழியாத வேதச் சொல் ’மாதா பூமி புத்ரோகம் பிருத்வ்ய:’ என்றே சொல்கிறது” என்று வியாசர் சொன்னார்.
சபையிலிருந்து வெவ்வேறு குரல்கள் எழுந்து வந்தன. அந்த கதைத்தருணம் பல்வேறு வகையில் அவர்கள் கேட்டும், பேசியும் வந்தது என்பதனால் அனைவருக்கும் சொல்வதற்கு ஏதேனும் இருந்தது. முதியவரும், தொன்மையான பரத்வாஜ குருமரபைச் சேர்ந்தவருமான அக்னிவர்ண பரத்வாஜர் எழுந்ததும் அனைவரும் அமைதியடைந்தார்க்ள்.
பரத்வாஜர் “இவை நடந்து நீண்டகாலம் ஆகிறது. இப்போது இவை நினைவுகள் மட்டுமே. கடந்தகாலத்தில் இருந்து நாம் எவர் செய்தது சரி, எவர் செய்தது பிழை என்று தேடக்கூடாது. நாம் தேடவேண்டியது இன்றைய நமது வாழ்க்கைக்கு நாம் என்ன கற்றுக்கொள்ள முடியும் என்பதைப்பற்றி மட்டுமே” என்றார். “வியாசருக்கு நான் சொல்லிக் கொள்ளவேண்டியது இதுதான். இந்தக் கடந்தகாலப் பேரழிவை நாம் பார்க்கும்போது இன்று நாம் கற்றுக்கொள்ளவேண்டிய முதன்மையான ஒன்று இருப்பதை ஏன் மறந்துவிடுகிறோம்? ஏன் அதைச் சங்கடமான ஒன்றாக எண்ணி நமக்குள் மறைத்துக் கொள்கிறோம்?”
அந்த சபையில் இருந்த அனைவருக்கும் அவர் சொல்லப்போவது என்ன என்று தெரிந்திருந்தது என்பதை அந்த அமைதி காட்டியது
“இன்று அனைவரும் அதை உணர்ந்திருக்கின்றனர். அதனாலேயே புதிய நெறிகளைச் சொல்லும் புதிய ஸ்மிருதிகளும் உருவாகியிருக்கின்றன” என்றார் பரத்வாஜர். “ஆனால் இந்தக் காவியம் அதைப் பற்றி ஒன்றுமே சொல்லவில்லை… ஏன்?”
“நீங்கள் சொல்லவந்ததைச் சொல்லலாம் பரத்வாஜரே” என்றார் வியாசர்.
“இரண்டு பெண்களின் அடங்காக் காமம் அல்லவா இத்தனை அழிவுக்கும் காரணம்? ஒருத்தி தீ என்றால் இன்னொருத்தி காற்று. இருவரும் கட்டற்றவர்கள். இருவரும் ஒருவரை ஒருவர் தூண்டி வளர்த்தனர். அவர்களின் வம்சத்தவர் இங்கே அரசுவீற்றிருக்கிறார்கள் என்பதனால் அவர்கள் கற்புநெறியைக் கடந்தவர்கள் என்பதை நாம் மறக்கவேண்டியதில்லை. ஒருத்திக்கு ஏழு கணவர்கள். உலகம் அறிந்த கணவனிடமிருந்து அவள் குழந்தை பெறவில்லை, உலகமறியாத ஏழுபேரிடமிருந்து குழந்தை பெற்றாள். இன்னொருத்திக்கு ஐந்து கணவர்கள், ஆனால் உலகம் அறியாத ஆறாவது கணவனை அவள் உள்ளத்தில் வைத்திருந்தாள்… அவர்கள்தான் பேரழிவை உருவாக்கியவர்கள். அவர்களின் கட்டற்ற தன்மையால்தான் அவர்களின் குலம் போரிட்டு அழிந்தது. குருக்ஷேத்திரமே ரத்தத்தால் நனைந்தது”
“பெண்ணின் காமம் கட்டுக்குள் வைக்கப்பட்டலொழிய அழிவைத் தடுக்கமுடியாது” என்று தொடர்ந்து பரத்வாஜர் சொன்னார். “பெண்ணும், பொன்னும், மண்ணும் உரிய காவலுடன் மட்டுமே இருந்தாகவேண்டும். அவை எவருடையவை என்பது வகுக்கப்பட்டிருக்கவேண்டும். ந ஸ்த்ரீ ஸ்வாதந்த்ரியமர்ஹதி. பெண்ணுக்கு சுதந்திரத்திற்கான தகுதி இல்லை. நாம் கற்றுக்கொள்ளவேண்டிய பாடம் இது ஒன்றே. இதைச் சொல்லாததனால் இந்தக் காவியம் பொய்யானது…”
சபையில் இருந்து எழுந்த கூட்டமான ஏற்புக்குரல்களை வியாசர் கேட்டார். அவர் எழுந்து கைகூப்பியபடி பலமுறை பேசமுயன்றபோதும் சபை அமைதியடையவில்லை. இறுதியாக ஜனமேஜயன் கைதூக்கியபோது அமைதி திரும்பியது.
வியாசர் “நான் இதை மறுக்கக் கூடாது. நூலாசிரியன் இதில் சொல்ல ஒன்றுமில்லை. இதைப் பற்றி என் மாணவர்கள் விளக்கட்டும்” என்று சொல்லி வைசம்பாயனை நோக்கி கைகாட்டினார்.
வைசம்பாயனன் எழுந்து “தர்மசாஸ்திரங்களின்படி, எந்நிலையிலும் தன் முன்னோரைக் கண்காணிக்கவும் மதிப்பிடவும் எவருக்கும் உரிமை இல்லை. தன் காலகட்டத்திற்குரிய நெறிகளை ஒவ்வொருவரும் தாங்களே வகுக்கலாம். ஆனால் அதைக்கொண்டு முன்னோரை ஆராயக்கூடாது. முன்னோர் வாழ்வது அவர்களுக்குரிய காலத்தில் என்பதை மறக்கவேண்டியதில்லை” என்றான்.
அடுத்ததாக எழுந்த ஜைமினி “காவியாலங்கார சாஸ்திரங்களின்படி காவியம் தனக்கான விதிகளின்படித்தான் இயங்கமுடியும். நிகழ்ந்தது என்ன என்று அது சொல்லும். அதற்கான யுக்திகளை அதுவே உருவாக்கிக் கொள்ளும். காவியத்திலிருந்து நெறிகளை அந்தந்த காலத்திற்கு உரியவகையில் உருவாக்கிக்கொள்வது வழிவழியாக வரும் தலைமுறைகளின் பணி. இவை நிகழ்ந்தவை, இவ்வாறே நிகழ்ந்தவை, இதை மட்டுமே காவிய ஆசிரியன் சொல்லமுடியும்” என்றான்.
சுமந்து “நியாயசாஸ்திரத்தின்படி அவர்கள் இருவரும் அக்னியும் காற்றும். அந்த சக்திகளின் இயல்பையே அவர்கள் வெளிக்காட்ட முடியும். அதை காவிய ஆசிரியன் மாற்றமுடியாது” என்றான்.
அத்ரி “காவியமீமாம்சையின் படி ஒரு காவியத்தின் நாயகர்களும் நாயகிகளும் அந்தச் சூழலாலும், அதன் பிற கதைமாந்தரின் இயல்புகளாலும், அந்நிகழ்வுகளின் இணைப்புகளாலும்தான் தங்கள் இயல்பை பெறுகிறார்கள். காவியகதியே கதாபாத்திரங்களின் விதி. தங்களுக்கென மாறாத இயல்புகள் கொண்ட காவியநாயகியர், நாயகர்கள் இருக்கமுடியாது” என்றான்.
வியாசர் ரோமஹர்ஷணனிடம் கைகாட்ட அவன் எழுந்து “உலகவழக்கப்படி, எது ஆற்றலுள்ளதோ அது கட்டற்றதும்கூட. ஆற்றலே வெல்லும், நீடிக்கும். ஆற்றல் கட்டுப்படுத்தப்படும் என்றால் அச்சமூகம் தன்னைச் சிறையிடுகின்றது என்றே பொருள். அன்னையரின் காமமும் குரோதமும் மோகமும் அவர்களின் உயிரின் ஆற்றல்.” என்றான்.
சபையிலிருந்து அவன் சொற்களை எதிர்க்கும் ஒலிகள் எழுந்தன. கைகளை நீட்டியபடி சிலர் எழுந்தார்கள். ஜனமேஜயன் கையசைத்து அவர்களை அமரும்படி ஆணையிட்டான்.
ரோமஹர்ஷ்ணன் “பிறநான்கு பூதங்களுக்கும் அடிப்படையானது பிருத்வி. நிலத்தின்மேல்தான் நீர் ஓடுகிறது, அக்னி வளர்கிறது, காற்று வீசுகிறது, வானமும் நிலத்தால் அளவிடப்பட்டாலொழிய மனிதர்களுடன் தொடர்பு கொள்வதில்லை” என்றான். “அழுக்கென்று நாம் நினைப்பவை எவையும் மண்ணுக்கு அழுக்கல்ல. அவை மண்ணை அடையும்போது அமுதமாகிந்றன. தாவரங்களில் அவை உயிராகி, தளிரும் மலரும் தேனும் காயும் கனியும் ஆகின்றன. மண்ணையே அழுக்கு என நினைப்பவர்களும் கூட அதில் விளைவனவற்றையே உண்ணவேண்டும்” என்றான்.
பரத்வாஜர் வியாசரிடம் “உங்களுடைய இந்த ஐந்தாவது மாணவன் எந்தக் குலத்தைச் சேர்ந்தவன்?” என்றார்.
“இவன் வால்மீகியின் மரபைச் சேர்ந்த ரோமஹர்ஷணரின் வழிவந்தவன்…”
“நிஷாதனுக்குரிய சொற்களைச் சொன்னான். அவற்றுடன் நான் விவாதிக்க விரும்பவில்லை” என்றார் பரத்வாஜர். ”ஆனால் ஒரு காவியம் தனக்கான நெறிகளை தானே உருவாக்கிக் கொள்கிறது என்பதில் எனக்கும் ஏற்புதான். இது காவியம், நெறிநூல் அல்ல என்று கொண்டால் மறுப்பில்லை” என்றார்.
சபை அதை ஏற்றுக்கொண்டது. அந்த சபையில் ஜய என்னும் வியாசரின் காவியம் அரங்கேறி நிறைவுற்ற விழா பன்னிருநாட்கள் நடைபெற்றது. பல்லாயிரம்பேர் வந்து விருந்துண்டார்கள். அந்நூலின் நிகழ்வுகள் கலைகளாக நடிக்கப்பட்டன, பாடல்களாக பாடப்பட்டன. அக்காவியத்தைக் கற்பிக்க நான்கு கல்விச்சாலைகள் அமைக்கப்பட்டு வைசம்பாயனும், அத்ரியும், சுமந்துவும் ,ஜைமினியும் அவற்றுக்குத் தலைமையேற்றனர். அவற்றில் நூற்றுக்கணக்கான கவிஞர்களும் சூதர்களும் இணைந்து பாடம் கேட்டார்கள். பாரதநிலம் முழுக்க அச்செய்தி பரவி நான்கு திசைகளில் இருந்தும் மாணவர்கள் வந்துகொண்டே இருந்தார்கள்.
வியாசர் விழா முடிந்ததும் தன் மகன் தங்கிய சுகவனத்திற்கே திரும்பிச் சென்றார். அங்கே சென்ற சிலநாட்களிலேயே நோயுற்று நினைவழிந்தார். ஏழாண்டுகளுக்குப் பின் ஒரு வைகாசிமாதப் பௌர்ணமி நாளில் விண்புகுந்தார். அவர் மறைந்த நாளை அவரை தங்கள் முதல் ஆசிரியராக ஏற்றுக்கொண்ட பல்லாயிரம் பேர் பாரத நிலம் முழுக்க ஆசிரியரை வணங்கும் நாளாக கொண்டாடத் தொடங்கினார்கள்.
”ரோமஹர்ஷணர் ஜனமேஜயனின் சபையில் இருந்து மறைந்துபோனார். அவர் தண்டகாரண்யத்தில் ஒரு சிறு கல்விச்சாலையை அமைத்தார். அங்கே அவருக்கு மாணவர்கள் அமைந்தார்கள். அவர் வியாசரின் காவியத்தை அங்கே மாணவர்களுக்குக் கற்பித்தார்” என்று கானபூதி சொன்னது. ”நீ கேட்ட கேள்விக்கு பதிலை நான் சொல்லிவிட்டேன். அதையே உன்னிடம் கேள்வியாக நான் கேட்கிறேன்”
நான் புன்னகைத்து “கேள்” என்றேன்.
“சொல், நான் சொன்ன கதையில் எந்த இடத்தில் குணாட்யர் சீற்றமடைந்து உன்னைப் போல கதை கேட்டது போதும் என்று எழுந்து சென்றார்?” என்றது கானபூதி. “எந்தக் கேள்வியைக் கேட்டபடி அவர் திரும்பவும் வந்தார்”
“வியாசருக்கு பரத்வாஜர் சொன்ன மறுப்பின்போது” என்று ஆபிசாரன் என் செவியில் சொன்னது.
நான் அதனிடம் “அல்ல” என்றபின் கானபூதியிடம் “வியாசர் தன் பிற நான்கு மாணவர்களுக்கும் ரோமஹர்ஷணருக்குச் சமானமான இடம் அளித்தபோது.” என்று சொன்னேன். “அதுதான் வியாசரிடம் இருந்த பிழை. அந்தப் பிழையால்தான் அவருடைய காவியம் எட்டுத்திசைகளுக்கும் இழுக்கப்பட்டு சிதைக்கப்பட்டது.”
“ஆம், உண்மை” என்றது கானபூதி “ஆனால் அதனால்தான் அது பாரதம் என்றே பெயர் பெற்று அனைவருக்கும் உரியதாக நீடித்தது. சொல், இரண்டாவது கேள்விக்கான விடை என்ன?”
“வியாசரை மீண்டும் ரோமஹர்ஷணர் சந்தித்தாரா என்ற கேள்வியுடன் அவர் திரும்ப வந்தார்” என்றேன். “தன் பிழையை வியாசர் இறுதியிலாவது உணர்ந்தாரா என்றுதான் குணாட்யர் அறிய விரும்பியிருப்பார்”
“ஆமாம். சரியான பதில்” என்று சொன்ன கானபூதி என் தோள்மேல் கைபோட்டு அணைத்துக்கொண்டு “நீ இனியவன், உனக்குக் கதை சொல்வது மகிழ்ச்சியானது” என்றது.
“சொல், குணாட்யரின் கேள்விக்கு நீ என்ன சொன்னாய்?” என்று நான் கேட்டேன்.
(மேலும்)
பிரேமா நந்தகுமார்
பிரேமா நந்தகுமார் அரவிந்தர், பாரதி ஆகியோரைப் பற்றி ஆங்கிலத்தில் எழுதிய நூல்கள் குறிப்பிடத்தக்கவை. இலக்கியச் சொற்பொழிவாளர், இலக்கிய ஆய்வாளர், கல்வியாளர் என்னும் நிலைகளில் பங்களிப்பாற்றினார்.

வாழ்வின் மீதான நம்பிக்கை
…அப்படிப் பார்த்தால் “குற்றமும் தண்டனையும்” மற்றும் “அன்னா” போன்ற உங்களால் கொண்டாடப்படும் நாவல்கள் கூட “துன்பியல் மற்றும் மனிதர்களின் வாழ்க்கைப் போராட்டம்” போன்ற எதிர்மறை சிந்தனைகள் பற்றியதாகவே இருப்பதாக எனக்குப் படுகிறது.
வாழ்வின் மீதான நம்பிக்கை , கடிதம்
Your speech about the use of literature or literature as an education is intriguing. You categorically deny the idea that literature is an entertainment or consumption material. I concur, but in today’s world, everything transforms into a means of consumption
Consumerism and literature- A letterவாழ்த்துக்கள் வசந்தபாலன்
வசந்தபாலன் இயக்கத்தில் வெளிவந்த தலைமைச்செயலகம் வலைத்தொடர் சிறந்த வலைத்தொடருக்கான விகடன் விருதை பெற்றுள்ளது. வசந்தபாலனுக்கு வாழ்த்துக்கள்
June 10, 2025
கல்விநீக்கம் – ஒரு விவாதம்.
சென்ற 8- ஜூன் 2025 அன்று குமரகுருபரன் – விஷ்ணுபுரம் விருது விழாவில் நிகழ்ந்த ஓர் உரையாடலில் வெய்யில், போகன் சங்கர், மனுஷ்யபுத்திரன் ஆகியோரிடையே ஒரு விவாதம் இயல்பாக உருவாகி வந்தது. ‘இளம் கவிஞர்கள் இதுவரையிலான கவிதைமரபையும் அது சார்ந்த கருத்துக்களையும் கல்விநீக்கம் (unlearn) செய்யவேண்டும்’ என்று வெய்யில் சொன்னதை ஒட்டி மனுஷ்யபுத்திரனும் போகனும் தங்கள் மறுப்பைத் தெரிவித்தனர்.
கவிதை விமர்சகனாக என் பார்வையில் அது சார்ந்து என் கருத்துகள் இவை. ஒன்று, வெய்யில் குறிப்பிட்டதுபோல தமிழ் நவீனக்கவிதையில் அப்படி ஒரு மாறாத மையம் கட்டமைக்கப்பட்டிருக்கவில்லை. இங்கே நவீனக்கவிதையின் சிறிய வட்டத்திற்குள்ளேயே அழகியல் சார்ந்து வெவ்வேறு பள்ளிகள், அதையொட்டிய வெவ்வேறு முன்னோடிகளின் வரிசைகள் உள்ளன. அதில் ஒன்றை தேர்வுசெய்யும் இளம் கவிஞன் தன் ரசனை, தன் கருத்தியல் ஆகியவற்றை ஒட்டியே அத்தெரிவை நிகழ்த்துகிறான். அவனை எவரும் ‘கேன்வாஸ்’ செய்து கூட்டிச்செல்லவில்லை. அதைத்தான் போகனும் மனுஷ்யபுத்திரனும் சொன்னார்கள்.
அத்தெரிவினூடாக இளங்கவிஞன் தனக்குரிய முன்னோடிகளை உருவகித்துக்கொள்கிறான். அவர்களை அவன் கற்கிறான். அதுதான் அவனுடைய கல்வி (learning). அவனே தேடித்தேடிக் கற்பதுதான் அது. அது தற்கல்வியே ஒழிய புகட்டப்படும் கல்வி அல்ல. அது அவனுடைய கல்வி. எதைக் கற்றானோ அதற்கு அவனே பொறுப்பு. அவனுடைய ரசனையும் இயல்புமே காரணம்.
எல்லா கவிஞர்களும் அத்தகைய கல்வி வழியாகவே உருவாகி வருகிறார்கள். உலகமெங்கும். அக்கல்வி இல்லாமல் ஒரு கவிஞன் உருவாகி வரவே முடியாது – உருவாகி வந்த ஒருவர் கூட உலகக்கவிதை வரலாற்றில் இல்லை. அப்படி ஒரு மருத்துவ அற்புதம் நிகழ்ந்தது என்றால் உடனடியாக அந்த ஐட்டத்தை மினசோட்டா பல்கலைக்கழகம் உடற்கூறியல் ஆய்வுக்கு உட்படுத்தவேண்டும். அது ஒரு தேசியச்சொத்தும்கூட, டெல்லி அருங்காட்சியகத்திலும் சேமிக்கப்படவேண்டும்.
ஏனென்றால் கவிதை என்பது ஒரு தனிமொழி. (Meta language).மொழிக்குள் செயல்படும் ஒரு மொழி அது. கவிதைவாசகனும் கவிஞனும் அந்தத் தனிமொழியினூடாகவே உரையாடிக்கொள்கிறார்கள். அது மொழியில் பொதுவாக நிகழும் உரையாடல் அல்ல. அந்த மொழியை கவிஞன் கற்றாகவேண்டும். ஆனால் அந்த மொழியை புறவயமாகக் கற்க முடியாது. அதற்கு இலக்கணநூல்களோ அகராதிகளோ இல்லை. அதற்கான ஒரே வழி சூழலில் உள்ள முன்னோடிகளின் கவிதைகளை வாசிப்பதும், அதைப்பற்றிய விவாதமும்தான். அதாவது கவிதை மரபும், கவிதையியலும் மட்டுமே அந்த நுண்மொழியை கவிஞனுக்கு அளிக்கின்றன. அவன் அதிலேயே தன் கவிதையை எழுதமுடியும்.
கவிஞன் மட்டுமல்ல வாசகனும் அந்த நுண்மொழிக்குள் வந்தாகவேண்டும். ‘எனக்கு தமிழ் நல்லாவே தெரியும். இந்தக் கவிதை ஒண்ணுமே புரியலை. அப்ப தப்பு கவிஞனோடதுதானே? புரியும்படி எழுதவேண்டியது கவிஞனோட பொறுப்பு இல்லையா?’ என்பது எப்போதுமே நம் சூழலில் உள்ள புலம்பல். அதற்கு பல ஆண்டுகளாக பதில் சொல்லி வருகிறோம். கவிதைக்குரிய நுண்மொழியையே கவிதை வாசகன் பயிலவேண்டும், அதுதான் கவிதைக்குள் நுழையும் வழி.
அதற்காகவே கவிதை வாசிப்பரங்குகள், கவிதையியியல் அரங்குகள் உலகமெங்கும் நிகழ்கின்றன. மேலைநாடுகளில் பல்கலைகள் ஏராளமான வகுப்புகளை நிகழ்த்துகின்றன. கவிதைவாசகர்கள் பணம் கட்டி கலந்துகொண்டு பயில்கிறார்கள். இங்கே இலக்கிய அமைப்புகள் மட்டுமே அவ்வப்போது அவற்றை நிகழ்த்துகின்றன. அதுவும் மிகமிகக்குறைவாக. அந்தக் குறைபாட்டை உணர்ந்துதான் நாங்களும் கவிதை சார்ந்த உரையாடல்களை ஒருங்கிணைக்கிறோம். இந்த மூன்று மாதங்களுக்குள் விஷ்ணுபுரம் ஒருங்கிணைக்கும் இரண்டாவது கவிதையமர்வு இது. முதல் அமர்வு ஓசூர் கவிதை முகாம். மூன்றாவது கவிதையமர்வு வரும் வெள்ளிமுதல் தொடங்குகிறது. (குரு நித்யா காவிய அரங்கு)
அந்த நுண்மொழிக்குள் வராத பல்லாயிரம்பேர் சூழலில் கவிதைகள் என எழுதிக்கொண்டிருப்பார்கள். அவர்களின் எழுத்துக்கள் நாம் உரையாடிக்கொள்ளும் பொதுமொழியில் தொடர்புறுத்துவன, கவிதைக்குரிய அகமொழிக்குள் செல்லாதவை. ஆகவே அவை நம்மால் கவிதை என கொள்ளப்படுவதில்லை. அவை வெறும் பேச்சுக்களாகவோ, கருத்துக்களாகவோ, அனுபவக்குறிப்புகளாகவோ நின்றுவிடுகின்றன.
வெய்யில் சொன்னதில் எனக்குள்ள சிக்கல் என்னவென்றால் அவர் கவிதைக்கான கல்வி (Learning) சூழலில் இருந்து கவிஞனுக்கு புகட்டப்படுகிறது என்றும், அது ஒருவகை ஆதிக்கம் அல்லது மோசடி என்றும், அதுதான் இளம்கவிஞர்கள் தாண்டவேண்டிய தடை என்றும் சொன்னார் என்பதே. அதாவது கல்வி என்பது ஒரு தடை. கல்வி அழித்தல் (Unlearning) மட்டும்தான் கவிஞன் செய்யவேண்டியது என்றார். உண்மையில் கவிஞன் முதலில் செய்யவேண்டியது கற்பதைத்தான்.
அக்கல்வியில் ‘அனைவரும்’ முக்கியமானவர்களாக இருக்க முடியாது. அப்படி ஒரு இலக்கியமே இருக்கமுடியாது. அறிவியக்கத்தில் ‘ஜனநாயகம்’ பேசுபவர்களின் சிக்கலே இதுதான். பெரும்பாலும் கவிதையை அரசியல்கூச்சலாக மட்டுமே பார்க்கும் முற்போக்கு முகாம் உருவாக்கும் அறியாமை இது. எந்த வகையான கவிதையானாலும் அதில் கவிஞர்களும், கவிஞர் அல்லாதவர்களும் உண்டு. முதன்மைக் கவிஞர்களும், சிறந்த கவிஞர்களும் அதில் திரண்டு முன்னெழுவதும் உண்டு. அப்படி அல்ல, எல்லாருமே சமம்தான் என்றால் அது கவிதையென்பதையே நிராகரிப்பதுதான்.
அப்படி சிலர் முதன்மையானவர்கள் (மாஸ்டர்ஸ்) என்றும், சிலர் நல்ல கவிஞர்கள் என்றும் ‘தானாக’ உருவாகி வருவதில்லை. அவர்கள் ஒரு தொடர் அறிவுச்செயல்பாட்டால் கண்டடையப்பட்டு, முன்வைக்கப்பட்டு, ஏற்பு கொள்கிறார்கள். அந்த அறிவுச்செயல்பாடு இரு படிநிலைகள் கொண்டது. தேர்ந்த வாசகனாகிய விமர்சகனும் வாசகனும் இணைந்து உருவாக்குவது அந்த தேர்வு. விமர்சகன் மட்டும் எவரையும் முதன்மைக் கவிஞராக நிலைநிறுத்த முடியாது. அதை வாசகன் ஏற்கவேண்டும். வாசகன் ஏற்காவிட்டால் எந்த விமர்சகனும் ஒருவரை முன்நிறுத்திவிடமுடியாது. வாசகனின் ஏற்பு கண்கூடானது அல்ல, ஆனால் அதுவே முதன்மையான சக்தி. வாசகனும் விமர்சகனும் சந்திக்கும் ஒரு நுண்புள்ளியில் நிகழ்வது அந்த ஏற்பு.
எவரும் ‘தீர்ப்பு சொல்லி’ அல்லது ‘சூழ்ச்சி செய்து’ எவரையும் முதன்மையான கவிஞராக நிறுவிவிடுவது இல்லை. அப்படியெல்லாம் இங்கே இலக்கியம் அறியாதவர்கள் சொல்வது உண்டு. ஒருவர் முதன்மையான கவிஞர் என ஏற்பு பெறுகிறார் என்றால் அது ஒரு நீண்ட விவாதம் வழியாகவே நிகழ்கிறது. ஒரு கவிஞருக்கு வாசகரிடையே இயல்பாக ஓர் ஏற்பு உருவாகிறது. ஒரு விமர்சகன் அதை தொகுத்து ஒரு விமர்சன நிலைபாடாக முன்வைக்கிறான். அதற்கு மறுப்புகள் உருவாகின்றன. விவாதம் நிகழ்கிறது. காலப்போக்கில் எதிர்ப்பைவிட ஏற்பு கூடுதலாக அமையும்போது அவர் முதன்மைக் கவிஞராக ஏற்கப்படுகிறார்.
அதேபோல எந்தக் கவிஞரும் எப்போதைக்கும் உரிய சிம்மாசனத்தில் அமர்ந்திருப்பதுமில்லை. அவரை தொடர்ச்சியாக மறுக்கும் குரலும் இருந்துகொண்டே இருக்கும். தலைமுறை தலைமுறையாக அவரை அந்த இடத்தில் இருந்து இறக்கும் முயற்சிகளும் நிகழும். அதைக் கடந்தே அவர் நிலைகொள்ள முடியும். உதாரணமாக பிரமிள். அவர் தமிழின் முதன்மைக் கவிஞர் என ஏற்கப்பட்டவர். ஆனால் அன்று முதல் இன்றுவரை அதை மறுக்கும் மிக வலுவான தரப்பும் தமிழ் நவீனக்கவிதையில் உண்டு. நகுலன் முதன்மைக் கவிஞர் என நினைக்கும் ஒரு பெரிய தரப்பு உண்டு, எனக்கு நகுலன் ஒருசில அரைத்தத்துவ வரிகளை எழுதிய சாதாரணமான கவிஞராகவே தென்படுகிறார். பிரமிள்தான் என் பார்வையில் நவீனக்கவிதை உருவாக்கிய பெரும்கவிஞர்.
ஆகவே இங்கே ஏதோ ஒரு மறுக்கமுடியாத பட்டியல் இருப்பதாகவும், அதை மறுத்து கலகம் செய்துதான் புதிய கவிஞர் எழுதமுடியும் என்பதெல்லாம் ஒருவகையான பிரமைகள் மட்டுமே. இப்படியெல்லாம் பேசுபவர்கள் பெரும்பாலும் கவிதையின் உலகுக்குள் வராதவர்கள், கவிதையின் வரலாற்றை அறியாதவர்கள். வெய்யில் அக்குரலை ஒலித்தது விந்தையாகவே இருந்தது. அது அவருக்கு முற்போக்கு மேடைகள் அளித்த கருத்தாக இருக்கலாம்.
சரி, கல்விஅழித்தல் (delearning) அல்லது கல்விநீக்கம் (unlearning) தேவையா? அதை கவிஞன் செய்யவேண்டுமா? ஆம், ஆனால் அதை செய்யாத கவிஞனே இல்லை. நல்ல படைப்புச் செயல்பாடு எதிலும் கல்விநீக்கம் இயல்பாகவே நிகழும். அது எப்படி நிகழ்கிறது என நாம் உணர்ந்திருப்பதில்லை. இரண்டு வகையில் அது நிகழ்கிறது.
ஒன்று, ஒரு படைப்பாளி தன் வாழ்வனுபவங்கள் வழியாகவும் சிந்தனை வழியாகவும் முன்னகரும்போது இயல்பாகவே கல்விநீக்கம் நிகழ்கிறது. இப்படிச் சொல்கிறேன், கல்வி எல்லாமே கல்விநீக்கமும் கூடத்தான். ஒன்றைக் கற்கையில் இயல்பாக இன்னொன்றை நீக்கம் செய்கிறோம். நாம் இளமையில் கொண்டாடிய பல படைப்புகள் அடுத்தகட்ட இலக்கிய அறிமுகம் அடைகையில் தன்னியல்பாக உதிர்ந்துவிட்டன என்பதை அறிந்திருப்போம். எந்தக் கல்வியும் முந்தைய கல்வியின் அழிவின்மேல்தான் நிகழ்கிறது.
ஆகவே கல்வியே கல்விநீக்கத்திற்கான ஒரே வழி. மேலும் மேலும் கற்பதே முந்தைய கல்வியில் இருந்து கடந்து செல்லுதல். ஒரு கவிஞனை கடந்துசெல்ல அவனை நம்மில் சிறியவனாக்கும் இன்னொரு கவிஞனைக் கற்பதே வழி. பெருங்கவிதை பெருங்கல்வியில் இருந்தே உருவாகி வரமுடியும். கல்விநீக்கம் என்பது கற்காமல் நின்றுவிடுவது அல்ல. கல்வியை நிறுத்திக்கொள்வது அல்ல. ஏற்கனவே கற்றவற்றை மொட்டையாக மறுப்பதும் அல்ல.
இரண்டாவதாக, படைப்பாளி இலக்கிய ஆக்கத்தைப் படைக்கும்போதே இயல்பாகவே ஒரு கல்விநீக்கம் நிகழ்கிறது. அவன் அதுவரையிலான மரபை ஒருவகையில் அழித்து, மறுஆக்கம் செய்துதான் தன் படைப்பை முன்வைக்க முடியும். எந்த அசல் படைப்பாளியும் ஏற்கனவே எழுதப்பட்டதை அப்படியே திரும்ப எழுதிக்கொண்டிருக்க மாட்டான். அவன் ஒரு புதிய படைப்பை ஏற்கனவே தன்னுள் இருக்கும் படைப்புகளை அழித்துத்தான் உருவாக்குகிறான். சூழலில் உள்ள பல படைப்புகளை பின்தள்ளியே தன் படைப்பை முன்வைக்கிறான். அதுவே இயல்பான கல்விநீக்கம்.
உதாரணமாக, பிரமிள் படைப்புகளில் ஈடுபட்டு, அதன் நீட்சியாக எழுதத் தொடங்கிய தேவதேவன் பிரமிளை அழித்துத்தான் தேவதேவனாக ஆனார். இன்று அவர் முற்றிலும் வேறொருவர், தமிழின் இன்னொரு முதன்மைக் கவிஞர். மனுஷ்யபுத்திரன் முதல் இசை வரை அனைத்துக் கவிஞர்களுமே எப்படி முன்னோடிகளிடமிருந்து தொடங்கினர், எப்படி அவர்களைக் கடந்தோம் என விரிவாகவே எழுதியுமுள்ளனர்.
உலகக்கவிதையிலேயே ஒரு பகுப்பு உண்டு. தனிப்பட்ட வாழ்க்கை சார்ந்து சில நல்ல கவிதைகளை எழுதுபவர்கள் ஒரு வகை. தன் பண்பாட்டின் முகமாகத் திகழும் பெருங்கவிஞர்கள் இரண்டாம் வகை.
முதல்வகையினர் கவிதையின் தனிமொழியை கற்கும் அளவுக்கு இலக்கியக்கல்வி அடைந்தாலே போதும். ஆனால் பெருங்கவிஞன் அப்பண்பாட்டை முழுதாக அறிந்த பெரும் கல்விமானாகவும் இருப்பான். அப்பண்பாட்டின் எல்லா கூறுகளைப்பற்றியும் அறிதலும், சுயமான கருத்துக்களும் கொண்டிருப்பான். அந்தப் பண்பாடு எதைச் சிந்திக்கவேண்டும், எப்படி முன்னகரவேண்டும் என்று சொல்லும் அளவுக்கு தகுதி கொண்டிருப்பான். உலக வரலாற்றின் மாபெரும் கவிஞர்கள் பலரும் மாபெரும் தத்துவஞானிகளாகவும் கருதப்படுபவர்கள். பலர் அரசியல்மேதைகளாகவும் மதிக்கப்படுபவர்கள்.ஆகவே ‘கற்கவேண்டாம்’ என்று சொல்லும் குரல் கவிதைக்கு எதிரானது என்றே நினைக்கிறேன். எந்த அளவுக்குக் கற்கவேண்டும் என்பது அக்கவிஞன் தன்னை எப்படி வரையறை செய்துகொள்கிறான் என்பதைப் பொறுத்தது.
கல்விநீக்கம் என்பது மேலும் கல்வியால், படைப்புச்செயல்பாட்டால் நிகழ்த்திக்கொள்ளப்படவேண்டியது மட்டுமே.
காவியம் – 51

கானபூதி சொன்னது. “மனிதர்கள் கதைசொல்லிகளாக ஆவது மிகப்பெரிய ஆபத்து. அவர்களுக்கு காலம் உண்டு, கதைகளுக்குக் காலம் இல்லை. அவர்கள் சொல்லும் கதைகள் அவர்களைக் கடந்து வளர்ந்து செல்வதை அவர்கள் பார்க்க நேரிடும். கதைகளை தங்கள் குழந்தைகள் என அவர்கள் நினைத்தார்கள் என்றால் அவற்றைப் பார்த்துப் பரிதவித்துக் கொண்டே இருப்பார்கள். கதைகளை முழுமையாகக் கைவிட்டு விட்டார்கள் என்றால் அவர்களால் புன்னகைத்தபடிச் சாகமுடியும்” புன்னகையுடன் என்னைப் பார்த்து “நான் காலமற்ற கதைசொல்லி. என் கதைகளுடன் நானும் வளர்கிறேன்…”
”நான் சலித்துவிட்டேன்” என்று நான் சொன்னேன். “இந்தக் கதைகளைக் கேட்டு நான் அடையப்போவதுதான் என்ன? இந்த வாழ்க்கைக்கு எந்தப் பொருளும் இல்லை, எனவே என் துயரமும் முற்றிலும் பொருளற்றது என்று நான் உன் சொற்கள் வழியாக கற்றுக்கொண்டே இருக்கவேண்டும் இல்லையா? நான் சோர்ந்திருக்கிறேன். மீண்டும் மீண்டும் சோர்வை ஏன் இழுத்து என் மேல் போட்டுக்கொள்ள வேண்டும்?”
“ஆமாம், நான் சொல்வதும் அதுதான்” என்று சக்ரவாகி என்னிடம் சொன்னது. “கதைகள் கேட்குந்தோறும் நீ மேலும் துன்பம் அடைகிறாய். உனக்கு இழைக்கப்பட்ட அநீதி இந்தக் கதைகளால் சற்றும் குறையவில்லை. கதைகள் அந்த புள்ளியை எல்லாப் பக்கங்களிலும் இழுத்து இழுத்து விரிக்கின்றன. அது பெரிதாகியபடியே செல்கிறது. உனக்கு இழைக்கப்பட்ட அநீதி ஒரு சில மனிதர்களால் செய்யப்பட்டது அல்ல என்று நீ அறிகிறாய். அது எங்கெங்கோ ஊறி எங்கெங்கோ எப்படியெப்படியோ தேங்கும் நஞ்சு… அதைப்பார்த்து நீ மலைத்துச் செயலற்று நிற்கிறாய். எவரால் என்ன செய்யமுடியும் என்று எண்ணி எண்ணி களைப்படைகிறாய்…”
“தன்னால் கையாள முடிந்த சிறுவட்டத்தை மட்டுமே மனிதர்கள் அறிந்துகொள்ள வேண்டும்” என்று சூக்ஷ்மதரு சொன்னது. “எந்த விளையாட்டுக்கும் முதலில் நீங்கள் ஒரு களத்தைத்தானே வரைந்துகொள்கிறீர்கள்… களமில்லாமல் விளையாடமுடியுமா?” சிரித்து “உங்கள் மொழியில்கூட ஒரு பாடல் உண்டு. அரங்கின்றி வட்டாடுதல்…”
சக்ரவாகி சொன்னது “நம்மால் கையாளக்கூடியவற்றை மட்டுமே அறிந்து அந்த எல்லைக்குள் வாழ்வதென்பது ஒரு மாயையாக இருக்கலாம். அதிலுள்ள மாபெரும் அறியாமை என்பது நாம் நம் வாழ்க்கையை கையாளமுடியும் என்னும் நம்பிக்கைதான். ஆனால் அறியாமை என்பது எப்போதுமே பயனற்றதோ தீங்கானதோ அல்ல. பலசமயம் அறியாமைபோல மிகச்சிறந்த ஆறுதல் வேறில்லை. அது தீவிரமான ஆயுதமாக ஆவதும் உண்டு.”
”மனிதவாழ்க்கை என்பதே ஒருவகையான அறியாமைதான். அதைச் சிறப்பாக நடத்த அறியாமைதான் உதவும்” என்றது சூக்ஷ்மதரு. “நீ அறியுந்தோறும் செயலற்றவனாக ஆவாய் என்றால் அதனால் என்ன பயன்?”
என் காதருகே வந்து சக்ரவாகி கிசுகிசுத்தது. “நீ இதுவரை வாழ்ந்ததே அந்த வஞ்சத்தின் பலத்தால்தான். இந்தக்கதைகள் அதை மெல்ல மெல்லக் கரைக்கின்றன. அதை நீ கவனித்தாய் அல்லவா?”
“ஆமாம், மனிதர்களின் குரூரத்தையும் இழிவையும் இல்லாமலாக்கிக் காட்ட ஒரே வழிதான் உள்ளது. அவர்கள் எத்தனை அற்பமானவர்கள் என்று காட்டுவதுதான் அது. அதைத்தான் இந்தக் கதைகள் செய்கின்றன” என்று நான் சொன்னேன். “மொத்த மனித வாழ்வே அற்பமானது என்று எண்ணத் தொடங்கிவிட்டேன்… நான் கிளம்புகிறேன்.”
“நல்லது, கிளம்புவதென்றால் அது உன் விருப்பம்” என்றது கானபூதி. “நான் எவரையும் இங்கே நிறுத்துவதில்லை. கதைகள் தோற்றுவிடும் ஓர் இடம் உள்ளது, கதைகேட்பவன் கதையில் ஆர்வமிழக்கும் புள்ளி. கதைகேட்பவன் ஆர்வமிழக்கையில் என்னென்ன நிகழ்கிறது என்று எல்லா கதைசொல்லிகளுக்கும் தெரியும். ஏனென்றால் கதைசொல்லும்போது நாங்கள் கேட்பவர்களையே கூர்ந்து பார்த்துக் கொண்டிருக்கிறோம்…“
“கதைகேட்பவன் ஆர்வமிழந்தால் சட்டென்று கதை வெறும் மொழியாகவும், சொற்களாகவும் ஆகிவிடுகிறது. நிகழ்வுகளாகவும், மனிதர்களாகவும், எண்ணங்களாகவும் மாறுவது நின்றுவிடுகிறது” என்று கானபூதி தொடர்ந்து சொன்னது. “அக்கணமே கதை இறந்துவிடுகிறது. கதைகேட்பவன் கதையை வேண்டுமென்றே எதிர்நிலையில் நின்று கேட்டால், தர்க்கபூர்வமாக உடைக்க முற்பட்டால், தனக்குப் பிடித்ததுபோல மாற்றிக்கொள்ள ஆரம்பித்தால், தனக்கு தெரிந்ததை கதைமேல் போடத்தொடங்கினால் கதை தன் எல்லா மாயச்சக்திகளையும் இழந்துவிடும். சிறகு உதிர்ந்து வண்ணத்துப்பூச்சி புழுவாக ஆவதைப் போல” என் தோளைத் தொட்டு “நீ கிளம்பலாம்…” என்று சொல்லி புன்னகைத்தது.
நான் என் கழியை ஊன்றி, உடலை உந்தி எழுப்பிக்கொண்டு கிளம்பினேன். கானபூதியின் தெளிந்த கண்களிலும், குழந்தைகளுக்குரிய பால்பற்கள் ஒளிவிட்ட அழகிய உதடுகளிலும் இருந்த சிரிப்பை இறுதியாக ஒருமுறைப் பார்த்தேன். “எவ்வாறானாலும் நீ என்னிடம் கனிவுடன் இருந்தாய்… நன்றி” என்றேன்.
நான் நடக்கத் தொடங்கியபோது ஆபிசாரன் மட்டும் என் பின்னால் வந்தது. “மெய்யாகவே போகிறாயா?” என்றது.
”ஆமாம்”
“போய் என்ன செய்யப்போகிறாய்? அதே வஞ்சத்துடன் எரிந்தபடி அந்த படிக்கட்டில் அழுக்குக்குவியலாக படுத்துக் கிடக்கப்போகிறாய் இல்லையா?”
“அதுதான் நான் செய்யவேண்டியது. ராதிகாவுக்கு நான் செய்யவேண்டிய கடமை அது… ஒரு பிராயச்சித்த நோன்பு அது. அங்கே கிடந்து செத்து மட்கினால்தான் அவளுக்கான என் கடன் தீரும்…”
“சரி” என்று ஆபிசாரன் சொன்னது. “நான் ஒன்று கேட்கிறேன்… ஒருவேளை கானபூதி உன் கதையில் உள்ள அடிப்படையான உண்மையை உன்னிடமிருந்து மறைக்கிறதா?”
நின்று, “என்ன சொல்கிறாய்?” என்று நான் கேட்டேன்.
”உன் மனம் தொட்டுத் தொட்டு அலையும் ஒரு புள்ளி இருக்கிறது. அத்தனை குரூரம் மனிதர்களில் எப்படி உருவாகிறது என்று நீ எண்ணிக்கொண்டே இருக்கிறாய். ஒரு கொடிய செயலைச் செய்யும்போது மனிதர்கள் எதை அடைகிறார்கள்? எப்படி அச்செயல் வரை வந்து சேர்கிறார்கள்? அதைத்தான் நீ அறியவிரும்பினாய். அதை கானபூதி இதுவரைச் சொல்லவே இல்லை.”
“நாம் அதை நான் விரும்பியதுபோல பேச வைக்க முடியாது. எந்தக் கேள்விக்கும் அது பதில் சொல்லாது.”
“உண்மை, அது கதைசொல்லி. கதைகளையே அது சொல்லமுடியும். ஆனால் கதைசொல்லியும் கதையை கட்டுப்படுத்த முடியாது. நீ அதை கதைசொல்ல வைத்தால் மட்டும் போதும், எப்படியும் கதை வளர்ந்து அந்தப் புள்ளியைத் தொட்டுவிடும்” ஆபிசாரன் என்னை தொட்டு “உண்மையில் கதைசொல்லிகள் நேராகச் சென்றால் உண்மையை அவர்களால் தொடவே முடியாது. அவர்கள் கதையின் முடிச்சுகளிலும் சுழல்களிலும் அலைவார்கள். தற்செயலாக உண்மையை தொட்டுவிடுவார்கள். கானபூதி தனக்குத் தோன்றிய கதைகளைச் சொல்லட்டும். கதைகள் அதன் கட்டுப்பாட்டை இழந்து விரியட்டும். உண்மை வெளிவந்துவிடும்.”
“நான் என்ன செய்யவேண்டும்?”
“நீ கேள்விகளைக் கேட்டு அதைக் கதைசொல்ல வைக்கவேண்டும்… அந்தக் கதைகளிலுள்ள கேள்விகளுக்குப் பதில் சொல்லி அதை தோற்கடித்து மேலும் சொல்லவைக்கவேண்டும்… இந்த ஆட்டத்தில் நீ வென்றபடியே இருக்கவேண்டும்…”
“நான் வென்றபடியே இருக்கமுடியுமா என்ன?”
“நீ வெல்வாய்… ஏனென்றால் நீ வெல்லவேண்டும் என கானபூதி உள்ளுர விரும்புகிறது”
“ஏன்?”
“ஏனென்றால் கதைகேட்பவன் தன்னை வெல்லவேண்டும் என விரும்பாத கதைசொல்லி இல்லை. அந்த வெற்றி கதைசொல்லியின் தோல்வி, ஆனால் கதையின் வெற்றி. அந்த வெற்றிகள் வழியாக கதை தன்னை கதைசொல்லியிடமிருந்து விடுவித்துக்கொண்டு கதைகேட்பவனிடம் சென்றுவிடுகிறது. அந்த விடுதலையை கதைசொல்லி விரும்புகிறான்”
நான் யோசித்துக் கொண்டிருந்தேன். ”யோசிக்காதே… திரும்பிச் சென்று ஒரு கேள்வியைக் கேள்” என்று ஆபிசாரன் சொன்னது. “ஆனால் கதைசொல்லியிடம் எப்போதும் நேரடியான கேள்வியைக் கேட்கக்கூடாது. அடிப்படையான கேள்விகளையும் கேட்கக்கூடாது. அது திகைத்து தெரியவில்லையே என்றுதான் சொல்லும். சாதாரணமான ஒரு நடைமுறைக் கேள்வியைக் கேள். அது உற்சாகமடைந்து கதைசொல்லத் தொடங்கும்… நல்ல கதைசொல்லி என்பவன் கதைகளை விரித்துக்கொண்டே செல்பவன். ஆற்றல் அற்ற கதைசொல்லிதான் சொல்லியவற்றையே திரும்பச் சொல்பவன்… கானபூதி ஒருபோதும் திரும்பச் சொல்வதில்லை. மீண்டுமொருமுறை சொல்லப்படாமல் விரியும் கதை எப்படியோ ஆழத்திற்கும் செல்லும்.”
நான் திரும்பிச் சென்று கானபூதியின் அருகே நின்றேன். கானபூதி மரத்தில் மறைந்துவிட்டிருந்தது. நான் அருகே சென்றதும் அது தோன்றியது. “திரும்பி வந்துவிட்டாய்!” என்றது.
“என்னிடம் ஒரு கேள்வி உள்ளது” என்று நான் சொன்னேன். “அதை மட்டும் கேட்டுவிட்டுப் போய்விடுகிறேன்.”
“சொல்”
”நீ சொன்ன கதைகளில் எந்தக் கதையில் குணாட்யர் சீற்றமடைந்து என்னைப் போல கதை கேட்டது போதும் என்று எழுந்து சென்றார்?” என்றேன். “எந்தக் கேள்வியைக் கேட்டபடி அவர் திரும்பவும் வந்தார்?”
“திரும்பி வந்திருப்பார் என்று உறுதியாக நம்புகிறாய் அல்லவா?”
”ஆமாம், அப்போதும் இந்த ஆபிசாரன் இருந்திருக்கும்” என்று நான் சொன்னேன்.
கானபூதி சிரித்து “உண்மை” என்றது. “உட்கார். அந்தக்கதையைச் சொல்கிறேன். அது குரங்குத்தாவல் போலச் செல்லும் கதை” என்று தன் இரு கைகளையும் மண்ணில் வைத்தது.
நான் “எல்லா கதைகளையும்போல” என்றேன்.
”ஆமாம்” என்று சிரித்து கானபூதி கதைசொல்லத் தொடங்கியது. மற்ற நிழல்கள் ஒவ்வொன்றாக வந்து எங்களைச் சூழ்ந்து அமர்ந்துகொண்டன.
”நான் குணாட்யருக்குச் சொன்ன கதை இங்கே வாழ்ந்த கதைசொல்லிகளின் நீண்ட மரபு ஒன்றைப் பற்றியது” என்று கானபூதி சொன்னது. “அவர் அக்கதை வழியாக அவர் கற்றவற்றின் தொடர்ச்சியை அறிந்துகொள்வார் என்று நான் நினைத்தேன். தொடர்ச்சி என்பது தெரிவதும் தெரியாதவற்றாலும் ஆனது அல்லவா?”
வால்மீகியின் மாணவர்களில் ஒருவரான லோமஹர்ஷணர் அவர் மறைந்தபின் வால்மீகியின் ஆசிரமத்தை தன் வாழ்நாள் முழுக்க தலைமைதாங்கி நடத்தினார். அவருடைய மகன் ரோமஹர்ஷணன் அவருக்குப் பின் அந்த ஆசிரமத்தை நடத்தினார். அவ்வாறு நூற்றிப் பன்னிரண்டு தலைமுறைக்காலம் அந்த ஆசிரமம் அங்கே நடந்தது. ராமனின் கதையைப் பாடும் சூதர்கள் அங்கே சென்று அங்கிருக்கும் முதல் ஆசிரியனின் கையால் ஏடு எடுத்து தரப்பட்டு தங்கள் பயணத்தைத் தொடங்க வேண்டும் என்ற மரபு உருவாகியது. வால்மீகியிடமிருந்து ராமனின் கதை கேட்டவர்கள் என அவர்கள் தங்களைப் பற்றிச் சொல்லிக்கொள்ள முடிந்தது.
வால்மீகி ஆசிரமத்தின் நூற்றிப்பன்னிரண்டாவது தலைமுறையின் ஆசிரியராகத் திகழ்ந்த லோமஹர்ஷ்ண வால்மீகியின் மகனுக்கு அப்போது எட்டு வயது. அவன் பெயர் ரோமஹர்ஷணன். அவன் ஒருநாள் தன் தந்தை ராமகதையை ஓதிக்கொண்டிருக்கும்போது பொறுமையின்மை காட்டி அசைந்து அமர்ந்தான். லோமஹர்ஷணர் அதை கவனித்து “என்ன? வேறெங்காவது உன் நினைவு ஓடுகிறதா?” என்று கேட்டார்.
“இது ஷத்ரியனின் வெற்றிக்கதை. நாம் நிஷாதர்கள். நாம் ஏன் இந்தக் கதையை ஓதவேண்டும்?”
“இதை எழுதியவர் நிஷாதர். விரிவாக்கியவர் நம் மூதாதையான லோமஹர்ஷணர்” என்று லோமஹர்ஷணர் சொன்னார். “அத்துடன் நாம் நிஷாதர்கள் அல்ல, சூதர்கள்”
“அது இன்னும் இழிவு. நிஷாதர்களை விட நமக்கு இருக்கும் கூடுதல் தகுதி என்பது நம்மிடம் பிராமணரத்தக் கலப்பு உள்ளதுதான் என்றால் அதை நாம் வெளியே சொல்லிக்கொள்ளவே கூடாது” என்று ரோமஹர்ஷணன் சொன்னான்.
“இங்கே அறத்தை நிலைநாட்டவந்தவனின் கதை இது. இந்த அறத்தை நம்பியே இங்கே மனிதர்களும் விலங்குகளும் வாழ்கிறார்கள்” என்று லோமஹர்ஷ்ணர் சொன்னார்.
”அது இந்த சிறிய காட்டுக்குடிலில் அமர்ந்து நாம் எண்ணிக்கொள்வது மட்டுமே. ஒவ்வொரு நாளும் திரும்பத் திரும்பச் சொல்லிக் கொள்வதனாலேயே அது உண்மை என்று நாம் நினைக்கிறோம். வெளியே என்ன நிகழ்ந்து கொண்டிருக்கிறது என்று உங்களுக்குத் தெரியாது. இன்று பாரதம் முழுக்க புதிய நாடுகள் உருவாகி வந்துகொண்டே இருக்கின்றன. நிஷாதர்களும் அசுரர்களும் அரசுகளை அமைத்து முடிசூடி அமர்ந்திருக்கிறார்கள். அவர்களின் நகரங்கள் பெருகி வளர்கின்றன. அங்கே கல்வியும் கலைகளும் செழிக்கின்றன. சூதர்கள் அவர்களையும் பாடிப் புகழ்ந்து பரிசுபெறுகிறார்கள். அவர்களை பாட்டுத்தலைவர்களாகக் கொண்ட காவியங்கள்கூட உருவாகிக்கொண்டிருக்கின்றன” என்று ரோமஹர்ஷணன் சொன்னான்.
“அவர்களுக்கும் உரிய அறத்தைத்தான் இந்நூல் பேசுகிறது” என்று லோமஹர்ஷணர் சொன்னார்.
“இல்லை, உருவாகி வந்துகொண்டிருக்கும் புதிய அரசுகளுக்கு வேத ஏற்பு இல்லை என்று க்ஷத்ரியர்கள் சொல்கிறார்கள். அவற்றுக்கு எதிராக அவர்கள் அணிதிரள்கிறார்கள். அவர்கள் தங்களுக்கு முன்னுதாரணமாக வைத்திருப்பது ராமனைத்தான். ராமனின் புகழைப் பரப்ப அவர்கள் பொன்னும் பொருளும் அளிப்பது அதனால்தான். அவர்களின் நோக்கில் க்ஷத்ரியர்கள் மட்டுமே அறத்தின் காவலர்கள், க்ஷத்ரியர் அல்லாதவர்கள் க்ஷத்ரியர்களுடன் இணைந்து நின்றால் மட்டுமே அறத்திற்கு சார்பானவர்கள், க்ஷத்ரியர்களை எதிர்ப்பவர்களை எந்த வகையில் கொன்றாலும் அது அறம்தான். அதைத்தான் இந்த நூல் வழியாக அவர்கள் மக்களிடம் சொல்கிறார்கள். நாம் இங்கிருந்து அதற்குரிய சூதர்களையும் பாடல்களையும் அனுப்பிக் கொண்டிருக்கிறோம்.”
“நீ உளறிக்கொண்டிருக்கிறாய். இங்கே இந்த வகையான பேச்சுக்களுக்கு இடமில்லை” என்று சீற்றத்துடன் லோமஹர்ஷணர் சொன்னார்.
“ஒரு பெரும்போர் எப்படியும் வந்தாகவேண்டும் என்று சொல்கிறார்கள். போர் வழியாகத்தான் இன்றைய மோதல் முடிவுக்கு வரும். போரில் முழுமையாகத் தோற்கடிக்கப்படாமல் க்ஷத்ரியர் பிறரை ஏற்கவே மாட்டார்கள். அந்தப் போருக்கு அணிதிரட்டுவதற்காகப் பயன்படுத்தப்படும் நூல் இது” என்று சொன்னபடி ரோமஹர்ஷணன் எழுந்தான். “இனி நான் இதைக் கற்கமாட்டேன்.”
“அப்படியென்றால் நீ விலகிச்செல்லலாம்…” என்று லோமஹர்ஷணர் சொன்னார். “ஆனால் நீ இனிமேல் என் மகன் அல்ல. உன் மகனுக்கு நீ என் பெயரைப் போடக்கூடாது.”
ஒருகணம் தயங்கியபின் ஒரு சொல்லும் பேசாமல் வணங்கிவிட்டு ரோமஹர்ஷணன் வால்மீகியின் ஆசிரமத்தில் இருந்து கிளம்பினான். எங்கே செல்வது என்று தெரியாமல் அவன் தெற்கு நோக்கி நடந்தான். அது எப்போதுமே அப்படித்தான். வடக்கிலுள்ளோர் தெற்குக்கும் தெற்கிலுள்ளோர் வடக்குக்கும் செல்கிறார்கள். அது ஞானத்தை அளிக்கும் என்பதும் உண்மை. ஏனென்றால் நமக்கு விருப்பும் வெறுப்பும் இல்லாத நிலத்திலுள்ள வாழ்க்கையிலேயே நாம் உண்மையை கண்கூடாகக் காணமுடியும்.
அவ்வாறு வரும் வழியில் ரோமஹர்ஷண வால்மீகி இந்த மரத்தடியில் வந்து அமர்ந்தான். நான் அவன் முன் தோன்றினேன். என்னை அச்சமின்றி ஏறிட்டுப்பார்த்தவர்கள் ஒரு காலகட்டத்திற்கு ஒருவரே தோன்றுகிறார்கள். அவனிடம் நான் என்னை அறிமுகம் செய்துகொண்டேன். அவன் செல்லவேண்டிய இடம் கிருஷ்ண துவைபாயன மகாவியாசன் வாழும் வியாசவனமே என்று சொன்னேன். “அவர் அங்கே நூல்களில் இருந்து புராணங்களையும், சூதர்களிடமிருந்து வம்சகதைகளையும் தொகுத்துக் கொண்டிருக்கிறார். ஒரு மகாகாவியத்தை எழுதும் கனவு அவருக்கு இருக்கிறது. நீ அங்கே செல். உன்னிடமிருந்து கதைகள் என்பவை தோன்றுபவையோ மறைபவையோ அல்ல, அவை நிலைகொண்ட ஒற்றைக் கடலின் அலைகள் என அவர் அறியட்டும்” என்றேன்.
அவன் வியாசனைப் பற்றி ஓரளவு அறிந்திருந்தான். நான் வியாசனின் கதையை அவனுக்குச் சொன்னேன். மீனவகுலத்துப் பெண் காளியின் மகன் அவர். காளி இளமையிலேயே விசித்திரமானவளாக இருந்தாள். முரட்டுத்தனமும் அதற்குரிய உடல் வலிமையும் கொண்டிருந்தாள். எதற்கும் கட்டுப்படாதவளாக இருந்தாள். இளமையிலேயே கங்கையில் குதித்து மறுகரை வரை நீந்தி திரும்பி வந்தாள். வெறும் கைகளால் மீன்களைப் பிடித்து பச்சையாகவே தின்றாள். மீனின் ரத்தம் படிந்த உடையும், மீன்செதில் படர்ந்த உடலுமாக அவள் ஒரு மீன்போலவே இருந்தாள்.
அவள் வளர்ந்தபோது தலைமுடி சிக்குபிடித்து பின் சடையாகியது. அவள் எவரிடமும் நேருக்குநேர் பார்த்துப் பேசுவதில்லை. அவளிடம் பேசப்படுபவை அவள் வரைக்கும் சென்று சேர்கின்றனவா என்றும் எவருக்கும் தெரியவில்லை. ஊரில் அவளை பைத்தியக்காரி என்றுதான் அழைத்தனர். எப்போதுமே நீரின் வாடை எழும் உடல்கொண்டிருந்தமையால் மத்ஸ்யகந்தி என அழைத்தார்கள். படகோட்டுவதில் தனித்திறமை கொண்டிருந்தாள். புயலிலும் மூடுபனியிலும் அனைவரும் அஞ்சிப் பின்வாங்கும்போதும் அவள் படகை ஓட்டினாள்.
திடீரென்று ஒருநாள் அவள் கருவுற்றாள். அவளை புணர்ந்தவர் யார் என்று எவருக்கும் தெரியாது. அவள் கருவுற்ற செய்தியை அறிந்து அவள் தந்தையும் குலமும் அவளை துரத்தி வெளியேற்றினார்கள். அவள் ஆற்றின் நடுவே நாணல்கள் செறிந்த ஒரு தீவில் சென்று தங்கினாள். அங்கே ஏற்கனவே ஊராரால் பிச்சி என்றும் பேய்ச்சி என்றும் துரத்தப்பட்ட ஒரு கிழவி இருந்தாள். முன்பு அவள் ஒரு பேற்றுத்தாதியாக திகழ்ந்தவள். அவள் அறியாத மொழிகளைப் பேசத்தொடங்கியதும் அவளை அஞ்சி மக்கள் விலக்கினார்கள். அவள் அவர்களையும் விலக்கினாள். அவள் நாவிலிருந்து பைசாசிக மொழி பெருகி வந்துகொண்டே இருந்தது.
அந்தப் பேய்ச்சியிடம் சென்று சேர்ந்த காளி அங்கேயே ஆண்குழந்தை ஒன்றை பெற்றாள். கன்னங்கரிய குறுகிய தோற்றம் கொண்டிருந்த அக்குழந்தையை அந்த பிச்சியிடம் விட்டுவிட்டு அவள் கங்கைக்கே திரும்பிவிட்டாள். அவள் அங்கே இருந்தபோது அந்தக் கிழவி பேசிய ஒரு சொல்லும் அவளுக்கு புரியவில்லை. அது விசித்திரமான ஒலிகளாகவே அவளுக்குத் தோன்றியது. விலங்குகளின் ஓசை, பறவைகளின் ஓசை, நீரின் நெருப்பின் ஓசை எல்லாம் கலந்து உருவான ஒலிப்பெருக்கு. ஆனால் அவள் கனவுகளில் அவளிடம் அந்த கிழவி பேசுவதாக உணர்ந்தாள். அவளிடமிருந்து அவள் ஆயிரக்கணக்கான கதைகளைக் கேட்டறிந்தாள்.
திரும்பி வந்த காளி ஒவ்வொரு நாளும் அழகானாள். அவளுடைய பேரழகைக் கண்டு அனைவரும் திகைத்தார்கள். அவளில் ஏதோ தெய்வம் கூடிவிட்டிருப்பதாக எண்ணினார்கள். அவள் கங்கைக் கரையில் ஒரு குடில் அமைத்து அங்கேயே தங்கினாள். அப்போது சந்திரகுலத்தைச் சேர்ந்தவனும், அஸ்தினபுரியின் அரசனுமாகிய சந்தனு தன் படையினருடன் படகில் அவ்வழியாகச் சென்றான். திடீரென்று வீசிய புயலில் அவன் படகு கவிழ்ந்தது. அவன் கங்கையின் அடிநீரோட்டத்தில் அடித்துச் செல்லப்பட்டான். படைவீரர்கள் பரிதவித்து அவனைத் தேடியும் கண்டடைய முடியவில்லை.
கங்கையின் ஆழத்திற்குச் சென்ற அவனை நீரில் மூழ்கி விளையாடிக்கொண்டிருந்த காளி காப்பாற்றி தன் குடிலுக்கு கொண்டு சென்றாள். அங்கே கண்விழித்த அவன் தன்னைக் காப்பாற்றியவள் பேரழகியான மீனவப்பெண் என்று அறிந்தான். அவளுடைய அறிவு அவனைத் திகைக்கச் செய்வதாக இருந்தது. “இத்தனை மொழிகளும் இத்தனை நூல்களும் உனக்கு எப்படித் தெரிந்தன?” என்று அவன் கேட்டான்.
“நான் நிழல்களிடமிருந்து கற்றுக்கொண்டேன்” என்று அவள் சிரித்தபடி பதில் சொன்னாள்.
சில மாதங்களுக்குப்பின் சந்தனு மீண்டும் தன் அமைச்சர்களுடன் திரும்பி வந்து காளியின் தந்தையிடம் பேசி அவளை கன்னிதானமாகப் பெற்று மணம்புரிந்து கொண்டான். அவளை சத்யவதி என்று பெயர் மாற்றம் செய்து தன் அரசியாக ஆக்கிக்கொண்டான்.
அந்த கிழட்டு மருத்துவச்சியால் தீவில் வளர்க்கப்பட்டதனால் கரியநிறம் கொண்ட சத்யவதியின் மகன் கிருஷ்ண த்வைபாயனன் என அழைக்கப்பட்டான். பதினெட்டு வயது வரை அவன் அவளுடன் அந்தப் பிச்சி பேசிய மொழியை மட்டுமே அறிந்தவனாக வாழ்ந்தான். அவனைக் கண்டால் பிறர் அஞ்சி ஒளிந்து கொண்டார்கள். நீண்ட சடைமுடிகளும், தீ போல எரியும் கண்களும், நாணலால் ஆன ஆடையும் அணிந்த அவனை பைசாசிகன் என்று நினைத்தார்கள். அவனும் தன்னை பிற மனிதர்களைச் சேர்ந்தவன் என்று நினைக்கவில்லை.
ஒருநாள் காலையில் கிருஷ்ணன் கண்விழித்து எழுந்தபோது பிச்சியின் உடல் அருகே கருமையாக எவரோ அமர்ந்திருப்பதாக கண்டான். தெளிந்த கண்களும், வெண்சிரிப்பும் கொண்ட ஓர் உருவம். அவன் “யார்?” என்று கேட்டபடி எழுந்தபோது அது மறைந்துவிட்டது. அவன் சென்று தன்னை வளர்த்த முதியவளை தொட்டுப் பார்த்தபோது அவள் இறந்துவிட்டிருப்பதை உணர்ந்தான்.
அவனால் அதன் பின் அங்கே தங்க முடியவில்லை. அவன் தெற்கே கிளம்பினான். விந்தியமலை நோக்கி வந்தவன் இந்த மரத்தடியில் வந்து அமர்ந்தான். ஆற்றில் ஒழுகும் எல்லா பொருளும் ஒரு பாறையை முட்டிச்செல்வதைப்போல தெற்கும் வடக்கும் செல்பவர்கள் விந்தியனை நோக்கி நடந்தால் இங்கே வந்தாகவேண்டும். நான் அவனிடம் பேசினேன்.
என் குரல் கேட்டு அவன் திடுக்கிட்டு எழுந்தான். என்னைக் கூர்ந்து பார்த்து ”உன்னைப் பார்த்திருக்கிறேன்” என்றான். “உன் மொழி எனக்குப் புரிகிறது… நான் வெளியே வந்தபின் எனக்கு புரியும் மொழியைப் பேசிய முதல் குரல் உன்னுடையது” என்றான்.
நான் என்னை அறிமுகம் செய்துகொண்டேன்.
அவன் ”நான் உன்னுடன் இருந்துகொள்கிறேன். எனக்கு இங்கே மனிதர்களின் மொழி எதுவும் தெரியவில்லை. எவருடைய வாழ்க்கையும் புரியவில்லை.நான் பைசாசிகன் என்று அவர்களால் துரத்தப்படுகிறேன்” என்றான்.
“நீ இங்கே வாழமுடியாது. ஏனென்றால் நீ மனிதன்” என்று நான் சொன்னேன். “நீ அறிந்தவற்றுக்கு அப்பால் இங்கே ஏதுமில்லை. நீ அவற்றை மீண்டும் அறியவேண்டும் அவ்வளவுதான். உனக்கு நான் அதற்கான மந்திரத்தைச் சொல்கிறேன். அதர்வவேதத்தின் அழிவற்ற சொல் அது. அது அதர்வத்தை உனக்காகத் திறக்கும். அதர்வம் பிற அனைத்தையும் திறக்கும்.”
நான் அந்த மந்திரத்தை அவன் செவிகளில் சொன்னேன். “மாதா பூமி புத்ரோகம் பிருத்வ்ய:” அவன் அதை மூன்றுமுறை திரும்பச் சொன்னான். ”அதன் இறுதிச் சொல் உன் நாக்கில் எப்போதும் இருக்கவேண்டும். பிருத்வ்ய… எப்போதும் பூமியுடன் உனக்குத் தொடர்பு இருக்கவேண்டும். வெறுங்காலுடன் நட. வெறுந்தரையில் படு. மண்ணை எண்ணிக்கொண்டிரு. இங்குள்ள எல்லாம் மண்ணில் முளைத்தவையே என்று அறிந்துகொள்.”
”அவன் என்னை வணங்கி கிளம்பிச் சென்றான். மண்ணிலுள்ள அனைத்து மெய்ஞானங்களையும் அறிந்தவன் என்று புகழ்பெற்றான். ’வியாசோச்சிஷ்டம் ஜகத்சர்வம்’ என அவனைப் பற்றி கவிஞர்கள் சொன்னார்கள். அவன் நா தொட்ட எச்சிலே இங்குள்ள அனைத்து ஞானமும் என்று பொருள். அது உண்மையும்கூட.” என்று நான் ரோமஹர்ஷணனிடம் சொன்னேன். “நீ அவனைத் தேடிச்செல். அவனிடம் மாணவனாகச் சேர்ந்துகொள்.”
“அவர் என்னைச் சேர்த்துக் கொள்வாரா?” என்று அவன் கேட்டான்.
“உனக்கு என்ன தெரியும் என்று அவர் சோதனைசெய்வார். அவர் கேட்கும் எந்தக் கேள்விக்கும் உன்னிடம் பதில் இருக்கும். அவர் உன்னை விடமாட்டார்” என்று நான் சொன்னேன்.
ரோமஹர்ஷ்ணன் என்னை வணங்கிவிட்டு கிளம்பிச் சென்றான். அவன் வியாசனை அணுகி அவருடைய மாணவனாக ஆனான். அவருக்கு ஏற்கனவே வைசம்பாயனன், அத்ரி, ஜைமினி, சுமந்து என்னும் நான்கு மாணவர்கள் இருந்தார்கள். வியாகரணமும், காவியமும், நியாயமும், தர்மசாஸ்திரங்களும் அறிந்த அந்தணர்கள். ஆனால் நிஷாதனாகிய ரோமஹர்ஷ்ண வால்மீகி அவருடைய முதல் மாணவராக ஆனான்.
கானபூதி என்னிடம் சொன்னது. “ரோமஹர்ஷணர் வியாசனின் காவியத்தை முழுமையாக்கி முன்னெடுத்தவர். அவருக்கு சுமதி, அக்னிவர்ச்சஸ், மித்ராயுஸ், சாம்சபாயனன், அகிருதவிரணன், சாவர்ணி என ஆறு மாணவர்கள் அமைந்தனர். அதில் சாவர்ணி மட்டுமே அந்தணன். சுமதியும் மித்ராயுஸும் சூதர்கள். அக்னிவர்ச்சஸும் சாம்சபாயனனும் ஷத்ரியர்கள். அகிருதவிரணன் நிஷாதன்”
(மேலும்)
கே. ஆர். ஸ்ரீநிவாச ஐயங்கார்
எழுத்தாளர், மொழிபெயர்ப்பாளர், திறனாய்வாளர், சொற்பொழிவாளர். கல்லூரிப் பேராசிரியராகவும், ஆந்திரப் பல்கலையின் துணை வேந்தராகவும் பணியாற்றினார். முதன்முதலில் ஸ்ரீ அரவிந்தரின் வாழ்க்கை வரலாற்றை விரிவாக எழுதியவராக அறியப்படுகிறார். இந்திய அரசின் சாகித்ய அகாதெமி விருது பெற்றார்.

அறியாத நிலம்- கடிதம்
அன்புள்ள ஜெ,
என் மனைவி அவுஸ்திரேலியாவில் தான் வசிக்கின்றாள். சென்ற ஆண்டே நானும் செல்வதற்கான ஏற்பாடுகள் செய்ய ஆரம்பித்து விட்டேன் இனி அவர்கள் வீசா தந்தால் செல்வதுதான். எனக்கு வெண்முரசை அறிமுகப்படுத்திய நண்பர்களில் ஒருவன் “நீ போக முன்னம் ஜெயமோகன்ட அவுஸ்திரேலியா பயண அனுபவத்தின் புல்வெளி தேசம் எண்ட புத்தகம் இருக்கு வாசிச்சிரு” என்று சொல்லி இருந்தான். உண்மையில் அவன் “ஜெயமோகன்” என்ற வார்த்தையை பயன்படுத்த வில்லை. அது என்ன என்று இப்போது சொல்ல மாட்டேன் இறுதியில் சொல்லுவேன்.
ஐந்து மாதங்கள் கடந்திருந்தது. நான் என் அக்காவை பார்ப்பதற்காக மல்லாவியிலிருந்து யாழ்ப்பாணம் சென்றிருந்தேன். அவள் மெசையில் இருந்த புத்தகங்களுக்கு இடையில் புத்தகம் ஒன்றின் அடிப்பகுதி மட்டும் தெரிவது போல் ஒரு புத்தகம் இருந்தது. அதில் அடியில் கறுப்பான நிழல் உருவில் புல்வெளியில் கங்காரு ஒன்று தாவ தயாரான நிலையில் பின்புலம் அந்திவானத்திற்குரிய மஞ்சள் சிவப்பு நிறங்களில் காணப்பட்டது. உள்ளுணர்வு தூண்ட அப்புத்கத்தை இழுத்து வெளியே எடுத்தவுடன் நினைத்து சரிதான் என்ற புன்னகையுடன் பார்தேன். அது 2009ம் ஆண்டு முதல் பதிப்பில் வந்த புல்வெளி தேசம் புத்தகம்.
அக்கா யாழ்ப்பாண பொது நூலகத்திலிருந்து இரவல் எடுத்து வந்திருந்தாள். நூலகத்திற்குரிய பாணியில் துணி மற்றும் கடினமான அட்டை வைத்து கட்டப்பட்டிருந்தது. புத்தகத்தை திறந்து முகர்ந்து பார்தேன் பழைய புத்தகங்களுக்கே உரித்தான கிளர்ச்சி ஊட்டும் மணத்துடன் இருந்து. தாள்கள் இளம் பழுப்பு நிறத்தில் இருந்தது. அக்காவிடம் புத்தகத்தை கொண்டு சென்று வாசிக்க தருமாறு கேட்டேன். அவள் ” டேட்ட பார்,இருந்தா கொண்டு போ” என்றாள். பின் அட்டையின் உட்புறத்தில் பார்தேன் இது வரை பதினொருவர் முன்னமே எடுத்திருந்தனர். ஒப்படைப்புக்கான திகதி மே 14 என்று குறிக்கப்பட்டிருந்து. ” “இன்னும் நாலு நாள் இருக்கு வாசிச்சுட்டு தாரன்” என்று எடுத்துவந்து விட்டேன்.
நான் இதுவரை ஜெயமோகனின் பயணக்கட்டுரைகள் எதையும் வாசித்திருக்கவில்லை. ஆனால் கடந்த மூன்று மாதங்களாக ஜெயமோகனின் இணைய தளத்தின் தின பதிவுகள் அனைத்தயும் தினமும் காலையில் காலைக்கடன் முடிக்கும் வேளையில் வாசித்து முடித்து விடுவேன். அதில் நான் வாசித்த கட்டுரைகள் பொதுவாக சொல்ல வந்த விடயத்தை தெளிவாகவும் செறிவாகவும் சொல்லப்பட்டதாக இருக்கும். இப்புத்தகத்திலும் அவுஸ்திரேலியா பற்றி அவ்வாறு இருக்கும் என்றுதான் நினைத்து வாசிக்க ஆரம்பித்தேன். வாசித்து முடித்த பின் அது சிறந்த அனுபவத்துடன் கூடிய பரந்த அறிதலாக இருந்து.
அவுஸ்திரேலிய விமானநிலைய கட்டுப்பாடுகளையும் காரணத்தையும் சொல்லி ஜெட்லாக்கை முறியடிப்பதற்கான டிப்சுடன் ஆரம்பித்த புத்தகம் தாவரங்கள், விலங்குகள், நிலத்தோற்றம், குடியேற்றம், போர், பொருளாதாரம், மக்கள், ஆக்கிரமிப்பு, கலைகள், தமிழ் ஆளுமைகள் என்று புத்தகத்தில் அவுஸ்திரேலியாவை பற்றி மட்டும் அல்லாமல் இந்தியாவுடன் ஒப்பிட்டு ஜெயமோகனுக்கே உரித்தான உருவகங்கள், தத்துவார்த்த சிந்தனைகளுடன் சிறந்த விவரணைகள் மூலம் விளக்கி இருந்தார்.
அவுஸ்திரேலியா மற்றும் இந்தியா இரண்டுமே நான் அறியா நாடுகள் இயலுமானவரை நான் இலங்கையில் உள்ள விடயங்களை வைத்தே புரிந்து கொண்டேன். பின்வரும் விடயங்களை உதாரணமாக சொல்லலாம்.
மக்கள் வாழும் மிகச் செறிவான இடங்கள் ( செரி), இரண்டு மூன்று ஏக்கர் இடைவேளி உள்ள வீடுகள், இடைப்பட்ட சிறிய நிலப்பரப்புடைய வீடுகள் பொன்ற வேறுபாடுகளை பொதுவாக இலங்கையில் உள்ள ஒரு மாவட்டத்திற்குள் ஒன்றரை மணித்தியால பயணத்திற்குள்ளாகவே பார்த்துவிடலாம். மற்றும் கங்காரு களை பற்றி சொல்லும் போது இந்திய மலை அணில் பற்றியும் சொல்லி இருப்பார் இலங்கையிலும் அவ்வகை அணில்கள் உண்டு மர அணில் என்று நாங்கள் அழைப்போம். பார்த்ததும் அவ்… என்று சோக்கி நிக்குமளவு adorable ஆக இருக்கும். அது இலங்கையில் மலையகத்தில் மட்டுமல்லாது அனைத்து காட்டு பிரதேசங்களிலும் உள்ளது. மல்லாவியில் உள்ள எங்கள் வீட்டிற்கு கிழமைகளில் குறைந்தது நான்கு தினங்கள்சரி வரும். பார்த்து விட்டேன் என்றால் அது போகும் வரை நானும் போவதில்லை.
*இப் புத்தகத்தில் கூறப்பட்ட விடயங்களில் 90% ஆனவை எனக்கு தெரியாத விடயங்கள். குறிப்பாக ஒன்றை சொல்வதென்றால், இது வரை நான் கூவம் என்ற வார்தையை என்றால் பொதுவாக கழிவுநீர் மற்றும் குப்பை நிறைந்து இருக்கும் நீர் நிலை அல்லது ஆறு என்று தான் நினத்திருந்தேன். வாசித்த பின் தான் அது உண்மையான ஆற்றின் பெயர் என்று தெரிந்து.
எனக்கு இப்புத்தகம் அறிதலுடன் மட்டுமல்லாது அணுக்கம் ஆவதற்கு முக்கிய காரணம் இடையிடையே உள்ள நகைச்சுவை மற்றும் அவர் மனைவியுடனான செல்லச் சீண்டல்களும் என்று சொல்லலாம்.
இப்புத்தகம் அறிதல் ஆர்வம் உள்ளவர்களுக்கான Chocolate Multipack என்று சுருக்கமாக சொல்லாம்.
எனக்கு பல நண்பர்கள் ஆசானாக உள்ளார்கள். இப்புத்தகத்தை வாசித்து முடித்தபின் என் ஆசான் நண்பன் ஆனதாக உணர்கிறேன்.
ரொனால்ட் ஹாரிசன்
எவர் தேவை?

நாங்கள் இந்த அமைப்பை தீவிரமான சிறு குழுவுக்காகவே நடத்த விரும்புகிறோம். இதன் தீவிரம் தளர அனுமதிக்கக்கூடாது என எண்ணுகிறோம். ஆகவே நம் சூழலில் உள்ள பொதுவான அக்கறையின்மை, சோம்பல், மேலோட்டமான ஆர்வம் ஆகியவற்றைக் கொண்டவர்களை தவிர்க்க முயல்கிறோம். அத்தகையவர்கள் கல்வியை விட அசௌகரியங்களை முதன்மையாகக் கருதுவார்கள். குறைகளை மட்டுமே சொல்வார்கள். சிறிய ஒரு காரணத்துக்காகவரே பதிவுசெய்த நிகழ்வை தவிர்ப்பார்கள். ஒரு சினிமா ரிலீஸ் ஆகிறது என்பதற்காகவே நிகழ்ச்சிகளை தவிர்த்தவர்கள் உண்டு. ஆகவே கொஞ்சம் கறாராகவே இருக்கிறோம்.
எவர் தேவை?I was reading your short articles about Advaita. I am 80 years old and was listening to the general discourse on Advaita in Tamil Nadu. My impression is that Advaita was abducted by casteism and religion in Tamil Nadu again.
Revival of Advaita -A letterயுவனுக்கு இயல்
கனடா இயல் விருது 2025 ஆம் ஆண்டுக்கு எழுத்தாளர் யுவன் சந்திரசேகருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. யுவன் சந்திரசேகருக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள். இலக்கியத் தோட்ட விருது பெறும் ரவி சுப்ரமணியனுக்கும், புனைவிலக்கியத்திற்காக விருது பெறு இரவி அருணாசலத்திற்கும் வாழ்த்துக்கள்.
யுவன் சந்திரசேகர் தமிழ் விக்கி ரவி சுப்ரமணியம் தமிழ் விக்கியுவன் சந்திரசேகர் காணொளி
Jeyamohan's Blog
- Jeyamohan's profile
- 835 followers
