Jeyamohan's Blog, page 84

June 4, 2025

காவியம் – 45

யட்சி, சாதவாகனர் காலம், சுடுமண் சிலை, பொமு2 யெல்லேஸ்வரம்

கானபூதி சொன்னது. “நான் என் மரத்தில் ஒடுங்கி என் கதைகளில் ஒன்றிலிருந்து ஒன்றுக்குச் சென்றுகொண்டிருந்தபோதுதான் அவர் வந்து என் நிழலில் அமர்ந்தார். முற்றிலும் புலன்கள் மூடப்பட்டவர். கால்கள் உணரும் வழி என ஏதும் அந்தக் காட்டில் இல்லை. ஆனால் அகம் உணரும் வழி என ஒன்று உண்டு. உடல் முற்றிலும் மூடப்பட்டால் உள்ளம் அதை அறியத்தொடங்கும். சுத்யும்னனை அவன் புலன்கள் கைவிட்டபோது உயிர் தனக்கான பாதைக்காகத் தவித்து என்னிடம் கொண்டுவந்தது. அது இங்கே நிழல்கள் வந்துசெல்லும் பாதை. இவரும் அவ்வழியே வந்தார்.”

நான் அவரைக் குனிந்து பார்த்தேன். விழிகள் இரண்டு சிவந்த கட்டிகள் போல அசைந்தன. செவிகள் கேட்காதவர்களுக்குரிய வகையில் தலையைச் சரித்துப் பிடித்திருந்தார். உடலெங்கும் புண்கள் பொருக்கோடியும், சீழ்கட்டியும், ரத்தக்கீற்றாகவும் பரவியிருந்தன. நான் மெல்ல “வருக பண்டிதரே, இது நீ வந்துசேர வேண்டிய இடம்” என்றேன்.

அவர் திடுக்கிட்டு எழுந்தார். “யார்?” என்றார். உரக்க “யார் அது?” என்றார்.

அவை உதடசைவாகவும், நெஞ்சுக்குள் முழங்கிய உறுமலாகவும்தான் வெளிப்பட்டன. நான் “அஞ்சவேண்டாம்” என்றேன்.

“அஞ்சுவதா? நானா?” என்று அவர் சிரித்தார். “நான் இன்றுவரை எதற்கும் அஞ்சியதில்லை.”

“ஒரு பைசாசத்தின் முன் நின்றிருக்கையில் கூடவா?”

”நீ என்னை எப்படி பயப்படுத்துவாய்? பேயுருவம் காட்டுவாயா?” என்று அவர் சிரித்தார். “இல்லை ஏதாவது பயங்கரமான ஓசையை எழுப்பப் போகிறாயா?”

நான் சிரித்து “நான் பேசிக்கொண்டிருக்கிறேனே?” என்றேன்.

“நீ எனக்குள் இருந்து பேசுகிறாய், தெரியும்” என்றார். “உனக்கு என்னுடன் தொடர்புகொள்ள வழியே இல்லை. நீ என்னை என்ன செய்ய முடியும்? கொல்லலாம். ஆனால் நான் இன்னும் நாலைந்து நாட்களில் இங்கே சாகப்போகிறேன். நான் உணவுண்டு எட்டுநாட்களாகின்றன… இலைகளில் சொட்டும் நீரை மட்டும் விடியற்காலைகளில் குடித்துக்கொண்டிருக்கிறேன்.”

நான் அவர் தோளைத் தொட்டேன்.  “என் தொடுகையை உணர்கிறாயா?”

“ஆமாம்” என்றார். திகைப்புடன் என் கைமேல் தன் கையை வைத்து “அப்படியென்றால் நீ ஒரு மனிதன். ஆனால் உன் கை குரங்கின் கைபோல் மயிரடர்ந்திருக்கிறது.”

“என்னைப் பார்” என்று நான் அவர் முன் நின்றேன்.

அவர் என்னை பார்த்தார். கண்கள் ரத்தக்குமிழிகள் போல துள்ளித் துள்ளி அசைந்தன. ஆனால் முகத்தில் மகிழ்ச்சிதான் தெரிந்தது. “உன்னை எனக்குத் தெரியும்… என்னால் உன்னைப் பார்க்கமுடிகிறது… நீ யார்? காவியங்களில் சொல்லப்படும் பைசாசமா?” என்றார்.

என் முன் அஞ்சி ஒடுங்கி நிற்பவர்களையே திரும்பத்திரும்ப பார்த்துக் கொண்டிருந்தேன். அஞ்சாமல் என் கண்களை நோக்கி என் சொற்களை செவி கொள்பவர்களை தேடிக்கொண்டும் இருந்தேன். அஞ்சாதவரிடம் மட்டும் தான் எனக்கு சொல்வதற்கு சொற்கள் இருந்தன. ஆயினும் ஒவ்வொரு முறையும் அஞ்சாமல் என் கண்களை பார்க்கும் ஒருவர் என்னில் கடும் சீற்றத்தை எழுப்புகிறார். நான் பைசாசிகன் என்பது அத்தருணத்தில் எழுந்து வருகிறது.

நான் அவர் கண்களைப் பார்த்து ”நீ இந்தக் கணம் என் கைகளால் உயிரிழக்கப் போகிறாய்” என்று சொன்னேன்.

”உயிரிழப்பது எனக்கொரு பொருட்டே அல்ல. எப்போதுமே உயிரை ஒருபொருட்டென நான் எண்ணியதில்லை. ” என்று அவர் சொன்னார்.

”உயிரிழந்த பின் ஒருவன் மூதாதையர் உலகத்துக்கு செல்லவேண்டும். அல்லது வானில் தேவர்கள் வாழும் உலகிற்கு செல்லவேண்டும். பிசாசுகளால் கொல்லப்படும் ஒருவன் பிசாசாக மாறிவிடுவான். எங்கும் செல்ல முடியாமல் இங்கெல்லாம் அழிவின்றி அலைந்துகொண்டிருப்பான். சாவென்பது கொடிது. பைசாசத்தின் மையால் சாவு என்பது கொடிதினும் கொடிது” என்று நான் சொன்னேன்.

”கொடிது என்று எவையும் இப்போது எனக்கு இல்லை. பிறிதொன்றை விரும்புபவர்களுக்கே அவை கொடிதானவை. நான் ஒவ்வொரு தருணத்திலும் முன்னால் மட்டுமே பார்க்கப் பழகியவன். அஞ்சுவதேதுமில்லை” என்று அவர் சொன்னார்.

நான் மெல்ல சீற்றம் அடங்கி இயல்பானேன். அவரைப் பார்த்து புன்னகைத்தேன். என் புன்னகையும் கண்களும் அப்போதுதான் அழகு கொள்கின்றன.

அவர் முகம் மலர்ந்து ”உன் புன்னகை சிறு குழந்தைக்குரியது. நெடுநாட்களுக்குப்பின் என் உள்ளம் உன்னைக் கண்டு மலர்கிறது” என்று சொன்னார்.

”என் பெயர் கானபூதி. இந்த விந்தியக்காட்டில் யுகங்களாக வாழ்ந்துகொண்டிருக்கும் பைசாசிகன்” என்றேன்.

“கானபூதி என்ற பெயர் எனக்கு நன்கு தெரிந்ததுதான். எங்கள் காவியங்களில் அப்பெயர் உள்ளது” என்று அவர் சொன்னார்.

நான் ”ஆம், என்னைப்பற்றி பல கதைகள் உங்கள் காவியத்தில் உள்ளன” என்றேன். ”சிவனின் அவையில் ஒரு பூதகணமாக இருந்த நான் பார்வதியின் சாபத்தால் மண்ணில் பைசாசிகனாக வந்தேன் என்று நீ அறிந்திருப்பாய்.”

”ஆமாம்” என்றார்.

”அது என்னைப்பற்றிய கதைகளில் ஒன்று மட்டும்தான். இந்த மண்ணில் ஊழி ஊழிக்காலமாக மனிதர்கள் வாழ்கிறார்கள். அரியணை அமர்ந்த அரசர்களும், மாளிகைகளில் பட்டு மஞ்சங்களில் துயிலும் வணிகர்களும் உண்டு. அவர்கள் முன்பு காட்டில் வேட்டையாடி பச்சை இறைச்சியை வெறும் கைகளால் கிழித்துண்பவர்களாக இருந்தார்கள். அதற்கும் முன்பு மொழியின்றி ஒருவருக்கொருவர் ஓசைகளால் பேசிக்கொண்டிருந்தார்கள். அதற்கும் முன்பு அவர்கள் தங்களை தாங்களே அறியாத விலங்குகளாக இருந்தார்கள். நான் அதற்கும் முன்பு ஏதோ காலத்தில் இங்கே முளைத்தவன். இந்த மலைகளைப்போல இந்த ஆறுகளைப்போல அன்று முதல் இருந்துகொண்டிருக்கிறேன்.”

நான் தொடர்ந்தேன் .“நீ இந்த நிலத்தின் தொன்மையான குகைகளுக்குள் சென்றால் அங்கே எவரோ சிவப்புக்கற்களாலும் வெள்ளைக்கற்களாலும் என் உருவத்தை வரைந்து வைத்திருப்பதை பார்க்கலாம். இதே முகம் இதே சிரிப்பு. நூற்றுக்கணக்கான முறை நூற்றுக்கணக்கான கைகள் என்னை வரைந்திருக்கின்றன. ஆயிரக்க்கணக்கான ஓவியங்கள் அழிந்திருக்கின்றன. எஞ்சியவை இன்னும் எவராலும் பார்க்கப்படாமல் எங்கெங்கோ இருக்கின்றன. பின்னர் அவர்கள் என்னை மண்ணிலும் மரத்திலும் செய்தார்கள். கல்லில் செதுக்கினார்கள். மனிதர்கள் என்னைப்போல் வேடமிட்டு ஆடினார்கள். என்னை தங்களுக்கு உகந்த முறையில் உருமாற்றி தெய்வங்களாக்கிக் கொண்டனர். ஒவ்வொரு உருமாற்றமும் ஒவ்வொரு தெய்வமாகியது.”

“இங்கே காளன் என்றும், கராளனென்றும் ,காளராத்திரி என்றும், பைரவன் என்றும், பத்ரன் என்றும், சண்டன் என்றும், பிசண்டன் என்றும் நூறு நூறு பெயர்களில் தெய்வங்களாக நான் வழிப்படப்படுகிறேன். என்றோ ஒருநாள் இந்த மனித குலம் முற்றழியும். இங்கு விலங்குகள் எஞ்சும். இவர்கள் உருவாக்கிய அனைத்தும் வெறும் பொருட்களாகி, பின்னர் பொருளற்ற வடிவங்களாகி மறையும். அப்போதும் இங்கு நான் இப்படியே இருந்துகொண்டிருப்பேன், முடிவற்ற கதைகளை என்னுள் அடக்கியபடி” என்று நான் சொன்னேன்.

அவர் ”கதைகளின் தெய்வத்திற்கு வணக்கம். என் வாழ்நாள் முழுக்க கதைகளைத் தேடி அலைந்திருக்கிறேன். கதைகளே மெய்யென்றும், பிற அனைத்தும் பொய்யென்றும் எப்போதும் உணர்ந்திருக்கிறேன். கதைகளின் உலகில் வாழவே விரும்புகிறேன்” என்றார்.

நான் அவர் அருகே சென்று அணுக்கமாக அமர்ந்தேன்.

“உன்னை நான் முன்பு பலமுறை பார்த்தது போலவே இருக்கிறது. உன் கண்களின் கனிவை நான் பலமுறை என் கனவுகளில் கண்டிருக்கிறேன்” என்று அவர் சொன்னார். “நான் பிரதிஷ்டானபுரியின் அவைப்புலவனாகிய குணாட்யன்.”

“தெரியும். இந்நிலத்தில் எனக்குத் தெரியாத எவரும் இல்லை” என்று நான் சொன்னேன். “எல்லாமே உடனடியாக கதைகளாகி காற்றில் கரைகின்றன. நான் காற்றிலிருந்து கதைகளை எடுத்துக்கொள்பவன்.”

“இந்தக் காட்டில் நான் உன்னைச் சந்தித்தது அளிக்கும் மகிழ்ச்சியை எப்படிச் சொல்வேன்? முதன்முதலாக சொல் எனக்கு கிடைத்ததுபோல. என் முதல் செய்யுளை நான் எழுதியதைப் போல… ” என்று குணாட்யர் சொன்னார்.

“அமர்ந்து இளைப்பாறு. உனக்கான உணவை நான் கொண்டுவரச் சொல்கிறேன்” என்றேன்.

சற்றுநேரத்திலேயே என் நிழல்களால் வழிநடத்தப்பட்ட வேடன் ஒருவன் அங்கே வந்தான். அவன் கையில் இருந்த கூடை நிறைய பழங்களும் கிழங்குகளும் மூங்கில் குழாயில் தேனும் பூசணிக்குடுவையில் நீரும் இருந்தன. அங்கே வரவும், அந்த விழியிழந்த மனிதரின் முன் அந்தக் கூடையை அப்படியே வைத்து வணங்கவும் தனக்கு எப்படி தோன்றுகிறது, அந்த எண்ணம் எப்படி அழுத்தமாக நிலைகொள்கிறது என்று அவனே திகைத்துக்கொண்டிருந்தான்.

அவன் வணங்கி திரும்பிச் சென்றதும் துழாவும் கைகளால் அந்தக் கூடையை தொட்டு எடுத்த அவர் என்னிடம் “என் அருகே பழங்களும் காய்களும் கனிகளும் உள்ளன. அவை உன்னால் கொண்டுவரப்பட்டவையா? அவை பைசாசிக ஜாலங்களா?” என்று கேட்டார்.

“அவை மெய்யான உணவுகள். கொண்டுவந்தவன் மெய்யான வேடன்” என்றேன்.

“அவன் உழைத்துச் சேர்த்தவை… அவனே விரும்பி அளிக்காவிட்டால் இவை திருட்டு என்றே கொள்ளப்படும்” என்று குணாட்யர் கூடையை தள்ளி வைத்தார்.

“பொறு. நீ இவற்றை விலைகொடுத்து வாங்கப்பட்டவை என்று கொள்ளலாம். அந்த வேடன் இன்று முழுக்க விலங்குகளைத் தேடிச் சலித்து, எதுவும் கிடைக்காமல் சோர்ந்து, இந்த காய்கனிகளுடன் திரும்ப முற்பட்டவன். அவனுக்கு செல்லும் வழியிலேயே சுமக்கமுடியாத அளவு பெரிய பன்றி கிடைக்கும்” என்றேன். “என் நிழல்களில் ஒன்று அவனை அழைத்துச் செல்கிறது”

குணாட்யர் உண்ணத்தொடங்கினார். தேனையும் நீரையும் குடித்து முடித்ததும் நீண்ட பசியின் களைப்பால் தூங்கினார். நான் அவரைப் பார்த்துக்கொண்டு அமர்ந்திருந்தேன்.

குணாட்யர் விழித்துக்கொண்டபோது முகம் மலர்ந்திருந்தார். நான் அவர் அருகே அமர்ந்திருப்பதைப் பார்த்தார்.

“இப்போது நான் எப்படி உன்னைப் பார்க்கிறேன்? எந்தப் புலன்களால் உன்னை அறிகிறேன்?” என்றார்.

“எல்லாப் புலன்களும் மனம் என்னும் ஆறாவது புலனின் கருவிகள் மட்டுமே என்று சாங்கிய சூத்திரத்தில் கபில முனிவர் சொல்கிறார்” என்று நான் சொன்னேன். “மனம் நினைவையும், கற்பனையையும், அதற்கு அப்பாலுள்ளவற்றையும் கூட தன் கருவிகளாக ஆக்கிக்கொள்ள முடியும்.”

“ஆம், பெருங்காவியங்கள் அவ்வாறுதான் உருவாகின்றன என்பார்கள்” என்று அவர் சொன்னார்.

“பெருங்காவியங்களெல்லாம் கதைகள்தான். கதைகள் எல்லாமே கற்பனையும் மெய்யுணர்வும் அதைக்கடந்த மீயுணர்வும் சேர்ந்து உருவாக்கப்படுபவை. புலன்கள் அறியும் உண்மைகளைக் கடந்து செல்லாத எதுவும் காவியமாவதில்லை” என்று நான் சொன்னேன். “நான் கதைகளைச் சொல்லும் பிசாசு… என் கதைகள் திகழும் முடிவில்லாத வெளியில்தான் நானும் வாழ்கிறேன்.”

“உன் கதைகளை எனக்குச் சொல்” என்று குணாட்யர் கேட்டார். “இனி நானும் அந்த உலகில் மட்டுமே வாழமுடியுமென நினைக்கிறேன்.”

“என் மொழிக்குள் நீ வந்தாகவேண்டும்” என்று நான் சொன்னேன். “அதன் முதற்சொல்லை நீ அறியவேண்டும்.”

“உன் மொழியில் நீ பேசு, எனக்கு அது புரிகிறதா என்று பார்க்கிறேன்.”

நான் பைசாசிகத்தில் பேசத் தொடங்கியதுமே குணாட்யர்  “இந்த மொழியை நான் அறிவேன். என் அம்மா அவளுக்கு வெறியெழுந்து ஆடும்போது இந்த மொழியைப் பேசுவதுண்டு. இதன் சொற்கள் எனக்கு தெரியவில்லை. ஆனால் நீ பேசத்தொடங்கினால் என்னால் புரிந்துகொள்ள முடியும் என்று நினைக்கிறேன்” என்றார்.

நான் பேசத்தொடங்கிய சற்றுநேரத்திலேயே அவர் புரிந்துகொள்ளத் தொடங்கினார். நான் நிறுத்திவிட்டு “எப்படிப் புரிகிறது இந்த மொழி?” என்றேன்.

“சொற்கள் என எதையும் நான் மறப்பதில்லை. ஒருமுறை செவியில் விழுந்த சொல்லைக்கூட. ஆகவே எனக்கு பாரதத்தின் எல்லா மொழிகளும் தெரியும்” என்று குணாட்யர் சொன்னார். “பாரதத்தின் மொழிகளிலுள்ள எல்லா நூல்களும் என் நினைவில் உள்ளன. நீ பேசும் ஒரு சொல் நானறிந்த பாரதமொழிகளில் ஏதோ ஒன்றில் இருப்பதை காண்கிறேன். உன் மொழி சிதறிப்பரந்து அத்தனை மொழிகளிலும் ஊடுருவியுள்ளது. நீ பேசும்போது நான் நதிக்கரை மணலை அள்ளி அரித்து தங்கம் சேகரிப்பதுபோல் உன் மொழியை நானறிந்த மொழிகளில் இருந்து திரட்டிக்கொண்டே இருக்கிறேன்.”

நான் வியப்புடன் அவரை அணுகி அவர் கைகளை என் கைகளில் எடுத்துக்கொண்டேன். “புலவரே, என்னால் இந்தக் கதைகளின் பெருஞ்சுழலில் இருந்து விடுபடமுடியும் என்று நம்பிக்கை வந்திருக்கிறது. என் கதைகளை முழுக்கக்கேட்டு நினைவில் கொள்ளும் ஒருவரை நான் முதல்முறையாகச் சந்தித்திருக்கிறேன். என் கதைகளைக் கேட்டு எனக்கு அருளவேண்டும்” என்றேன். “என் கதைகளில் இருந்து எனக்கு விடுதலை வேண்டும்… கதைகள் என்னிடம் இருந்து விலகினால் நான் அந்த மலையைப்போல முழுமையான அமைதியில் அமைவேன்.”

“உன் கதைகளை என்னிடம் கொடு. நான் அறிந்த மொழிகளெல்லாம் என் அறிவை நிறைத்திருக்கின்றன. அவற்றை வெளியே வீசி இந்தக் கதைகளால் என்னை நிறைத்துக் கொள்கிறேன்” என்று குணாட்யர் சொன்னார். “ஒரு சொல் மிச்சமில்லாமல் பெற்றுக்கொள்வேன் என உனக்கு நான் உறுதி சொல்கிறேன்.”

நான் என் கையை மண்ணில் வைத்தேன். “கதைகளை நான் கூறும்போது அவை கேள்விகளாகத் திரளும். கதையில் கேள்வி மட்டுமே உண்டு. அதன் விடை கேட்பவனிடமே எப்போதும் இருக்கும். கேள்வியில்லாத கதை பயனற்றது. இங்கு திரண்டு வரும் கேள்விகளுக்கு நீ பதில் சொன்னாய் என்றால் என்னுடைய கதைகளின் களஞ்சியத்தை நான் திறப்பேன். பதில் சொல்லவில்லையெனில் நீ உன்னுள்ளிருக்கும் அத்தனை சொற்களும் ஒன்றோடொன்று இணைந்து குழம்பி ஒரு பெரிய ஓலமாக ஆவதை உணர்வாய். புயல்காற்றில் ஊளையிடும் மூங்கில் காடுபோல உனது உள்ளம் உருமாறும். நீ சாகமாட்டாய், இந்தக்காட்டில் ஓலமிடும் தலையுடன் யுகங்கள் தோறும் அலைந்து திரிவாய். கதைகள் அத்தனை அருளையும் சாபத்தையும் கொண்டவை. நான் உனக்குக் கதை சொல்ல உனக்கு சம்மதம் தானா?” என்றேன்.

”அவ்வாறே” என்று குணாட்யர் சொன்னார்.

நான் என் வலக்கையை மண்ணில் புதைத்தேன். பின்னர் ”எனது கதைகள் எல்லாமே ஒன்றை ஒன்று நிரப்பும் இருசரடுகள்” என்று சொல்லி இடதுகையை மண்ணில் புதைத்தேன். “இப்போதுகூட இக்கதையில் இருந்து விலகிக்கொள்ள உனக்கு வாய்ப்பிருக்கிறது.”

”முன்பே சொல்லிவிட்டேன். நான் ஒருபோதும் எதன்பொருட்டும் பின்நகர்வதில்லை .கூறுக கதைகளை” என்று குணாட்யர் சொன்னார்.

நான் வலது கையைப் பார்த்தபடி சொல்லத் தொடங்கினேன்.

இந்தக்கதை நிகழ்வது பாடலிபுத்திரம் என்றும் பின்னர் பாட்னா என்றும் அழைக்கப்பட்ட நகரில். கங்கைக்கரையில் அமைந்துள்ள அந்த நகரம் பெருவணிகர்கள் வாழ்வது. அங்கு கலிகாலத்தில் அந்தணன் ஒருவன் வணிகனாக உருமாறினான். அவன் பெயர் ஃபணீந்திரநாத். அவன் தன் குலத்தொழிலை உதறி, கையில் சிறு செல்வத்துடன் இந்நகருக்கு வந்தான். பாடலிபுத்திரத்தில் அவன் பணத்தை பணத்தால் பெருக்கலானான். பெரும் செல்வந்தனாக மாறினான். செல்வந்தர்கள் செய்யும் அனைத்தையும் செய்தான். உலகியல் என்பது பணத்தால் ஆனது என்று அவர்கள் எண்ணுவார்கள். பணத்தால் உலகை வாங்க நினைப்பார்கள். வாங்கக்கூடுவது மட்டுமே உலகமென்று பின்னர் நிறைவுறுவார்கள். ஃபணீந்திரநாத் அவ்வாறு அங்கு வாழ்ந்து மறைந்தான்.

அவனுடைய மகன் ஹரீந்திரநாத் தன்னை ஒருபோதும் ஒரு அந்தணென்று உணர்ந்ததில்லை. மேலும் மேலும் வணிகனாக மாறினான். வணிக வெற்றியை நோக்கிச் சென்றான். அவன் மகன் அஸ்வத் என்பவன் தன்னை ஷத்ரியனாக உருமாற்றிக் கொண்டான். வணிகனுக்கு இருக்கும் உலகியல் இன்பம் என்பது பணத்தை ஈட்டுவது மட்டுமே. பணம் கொடுத்து பெறும் பொருட்கள் பணத்தின் இன்பத்தை அளிக்கின்றனவே ஒழிய பொருள் மட்டுமே அளிக்கும் இன்பத்தை அளிப்பதில்லை என்று அறிந்தவன் தன்னை ஷத்ரியனாக மாற்றிக்கொள்கிறான். ஏனென்றால் வெல்லப்படும்போதே பொருள் பொருள் கொண்டதாக ஆகிறது. வேட்டையில்லாமல் வெற்றி இல்லை.வேட்டையே ஷத்ரியனின் பேரின்பம். அதில் வெற்றியும் வெல்வதன் பொருட்டு தன்னை ஆற்றல் மிக்கவனாக ஆக்கிக்கொள்ளும் பயணமும் ,வென்றதை முற்றாக ஆட்கொள்ளும் தன்முனைப்பும் உள்ளந. அவன் அவற்றில் திளைத்தான்.

அவன் மனைவி பெயர் ஊர்வசி. அந்தணப்பெண்ணாக வளர்ந்து, வணிகனின் இல்லத்தில் மனைவியாகி, ஷத்ரியனின் துணைவியாக வாழ விதிக்கப்பட்ட அவள் தன்னை அதற்கு அப்பால் எங்காவது அடையாளப்படுதிக் கொள்ள எப்போதும் முயன்றுகொண்டிருந்தாள். ஹரீந்திரநாத்தின் மகள் ராதிகாவும் அத்தகைய பழைய அடையாளங்களிலிருந்து தன்னை விடுவிக்க முயன்றாள். தன்னுடைய அடையாளம் தன் ஞானத்தால் மட்டுமே அமைய வேண்டுமென்று ராதிகா எண்ணினாள். அவள் குடும்பத்தாரால் அதைப் புரிந்துகொள்ள முடியவில்லை. வகுக்கப்பட்ட நால்வர்ணங்களுக்குள் வாழும் எவருக்கும் விடுதலை என்பது அச்சமூட்டுகிறது. அச்சம் வெறுப்பாக மாறுகிறது. வெறுப்பு வன்முறை நோக்கி செலுத்துகிறது.

ஊர்வசி பித்தாகி தன் கணவனின் அன்னையை கொன்றாள். ஒரு தனியறையில் ஒன்பது மாதங்கள் இடைவெளியில்லாது சுற்றிவந்து, சுவர்களை கைகளால் அறைந்து கூச்சலிட்டுக் கொண்டிருந்தாள். ஒருநாள் அவள் கூச்சல் கேட்காதபோது அவர்கள் கதவைத் திறந்து பார்த்தார்கள். அவள் வெறுந்தரையில் இருகைகளையும் விரித்து இறந்து கிடந்தாள். அவள் உடலில் இருந்து எழுந்த ஆத்மா அங்கிருந்து பாடலிபுத்திரத்தின் தெருக்களினூடாக அலைந்து கங்கையின் வழியாகச் சென்று அவள் பிறந்து வளர்ந்த சிற்றூரின் அருகே ஆற்றங்கரையோரமாக நின்றிருந்த சிறிய மரம் ஒன்றில் குடியேறியது. அந்த மரம் காற்று வீசுகையில் எல்லாம் விம்மி ஊசலிட்டு ஊளையிட்டு அழுதது.

எனது இந்தக் கையில் இருப்பது பிறிதொரு கதை. இவன் ஒரு நிஷாதன். உடல் என அமைந்த சமூகத்திலிருந்து உடைந்தவர்கள் என்றழைக்கப்பட்ட பங்கிகள் என்னும் குலத்தில் பிறந்தவன். அவன் ராதிகா என்னும் பெண்ணை மணப்பதுவரை தன் அறிவினூடாக மலர்ந்து கொண்டிருந்தான். பெரும் காவியம் ஒன்றை இயற்றும் தகுதி கொண்டவனாக தன்னை வளர்த்துக் கொண்டிருந்தான். அவளை மணந்துகொண்டது அக்காவியத்தில் உள்நுழைவதற்கான வழி என்று எண்ணினான். அவன் அவர்களால் வெட்டி வீழ்த்தப்பட்டான். அவனுடைய புலன்கள் நான்கும் இருட்டாக்கப்பட்டன. முற்றிலும் மூடப்பட்ட உடலுக்குள் அவன் தனித்திருந்தான்.

அவன் உடலே அவனுக்கான சிறையாகியது. அவன் அதை உதறிவிட்டு வெளியேற ஒரு வழி இருந்தது. ஆனால் அவன் கொண்ட வஞ்சம் அவனை அந்த உடலுடன் கட்டிப்போட்டிருந்தது. அந்த வஞ்சத்தை கைவிட அவன் சித்தமாக இல்லை. கொடிய நோயை தன் உடைமையாக நினைக்கும் பைத்தியக்காரன் போல அந்த வஞ்சத்தையே அவன் மனம் பற்றிக்கொண்டிருந்தது. அந்த வஞ்சத்தைப் பற்றுகோலாகக் கொண்டு அவன் கதைகளின் வழியாகச் சென்றுகொண்டிருந்தான்.

நான் கதையை சொல்லிக்கொண்டிருக்கையில் குணாட்யர் விழிகள்கூட அசையாமல் அமர்ந்திருந்தார். ”இத்தனை நெடுந்தொலைவில் இருந்து அவன் ஆத்மாவின் ஓலத்தை நீ கேட்க முடியும். அவனை நீ மிக அருகே என உணரமுடியும்” என்று நான் அவரிடம் சொன்னேன். ”ஏனென்றால் அத்தனை தொலைவில் இருந்துகொண்டு உன் குரலை அவன் கேட்டுக்கொண்டிருக்கிறான்…”

குணாட்யர் பெருமூச்சு விட்டார். பின்னர் “ஆம், நான் அவன் குரலைக் கேட்கிறேன். நாங்களிருவரும் மட்டுமே அத்தனை நெருக்கமாக ஒருவரை ஒருவர் உணரமுடியும்” என்றார்.

“இந்தக்கதையில் இருந்து எழும் இரண்டு கேள்விகள்” என்று நான் சொன்னேன். “ஏன் நிழல்கள் ஊர்வசியை முதல் இரையாக்கின? பெண்ணுக்கு இழைக்கப்படும் அநீதிக்கும் பெண்களே பொறுப்பா என்ன?” இன்னொரு கையை அசைத்து “இது இரண்டாவது கேள்வி, வஞ்சத்தை ஏன் அவனால் விட இயலவில்லை? அத்தனை துயரத்திற்கு மேல் அந்த வஞ்சத்தின் துயரையும் அதன் பழியையும் எல்லாம் அவன் ஏன் சுமக்கவேண்டும்?”

குணாட்யர் “என்னால் இதற்குச் சொல்லப்படும் பதிலை ஏற்கவிருப்பவர் யார்? அங்கே மறு எல்லையில் இருக்கும் அவனா?” என்றார்.

“ஆம், இவை இரண்டும் அவனுடைய கேள்விகளே” என்று நான் சொன்னேன்.

குணாட்யர் சொன்னார். “இரண்டாவது கேள்விக்கு என் விடை இதுவே. வஞ்சத்திற்கு பதிலாகக் கிடைப்பவை என வாழ்க்கையின் இன்பங்களையும் அவற்றையும் கடந்த விடுதலையையும் முழுக்க அள்ளிஅள்ளி வைத்து காட்டிய பின்னரும்கூட ஒருவனின் உள்ளத்தில் வஞ்சமே எஞ்சுகிறதென்றால் அது அந்த மனிதனுடையது அல்ல. அது அவனை மீறியது, அவன் அதன் எளிய கருவி. எத்தனை சொற்களைப் பெய்தாலும் மறைக்கமுடியாத உண்மை என்பது ஒன்றே, வஞ்சம் இல்லாமல் நீதி என்பது இல்லை. நீதி காலம் கடந்தது என்றால் வஞ்சமும் அவ்வாறுதான்.”

நான் கையை விலக்கி “ஆம்” என்றேன்.

குணாட்யர் “காலத்தைக் கடந்து நின்றிருக்கும் வஞ்சம் என்பது வேட்டை நாய்களைப் போன்றது. மிக ஆழமாகப் புதைக்கப்பட்டவற்றையே அவை தேடித்தேடி முகர்ந்துசென்று கண்டடையும். வெறிகொண்டு தோண்டி எடுக்க முயலும். முதற்கேள்விக்கான என் பதில் இது” என்றார். “ஒரு பெண்ணுக்கான அநீதி எவராலும் இழைக்கப்படலாம். ஆனால் ஒவ்வொரு பெண்ணும் அந்த அநீதிக்கு எதிராக நிலைகொள்ள இயற்கையாகவே கடன்பட்டிருக்கிறாள்.”

“ஆம்” என்று நான் என் கையை விரித்தேன். ”இந்தக் கதைவிளையாட்டை அடுத்த கேள்வியின் வழியாகத் தொடரும் உரிமையை நீ அடைந்திருக்கிறாய்”

குணாட்யர் “ஒவ்வொருமுறை ஒரு கதைக்கு பதில் சொல்லும்போதும் நான் ஏமாற்றமும், எரிச்சலும், அறுதியாகக் கசப்புமே அடைகிறேன். சரியான பதிலைச் சொல்லிவிட்டேன் என்னும் நிறைவை அடைவதேயில்லை” என்றார். “ஏனென்றால் சரியான பதில் என்பது கண்டடையப்படுவது அல்ல. புதியது அல்ல. அது எப்போதும் இருந்துகொண்டிருப்பது, அனைவரும் அறிந்தது. நாம் சொற்களாலும் தர்க்கங்களாலும் பொத்தி மறைத்து வைத்திருப்பது. கதைகளுக்குப் பதில்சொல்வதென்பது ஆடைகளை அவிழ்த்துப் போட்டுவிட்டு நின்றிருப்பதுபோலத்தான்.”

“ஆடையில்லாமல் முச்சந்தியில் நிற்பவன் பதற்றமும் அவமதிப்பும் கொள்கிறான். ஏகாந்தமான காட்டுச்சுனையில் ஆடையின்றி நீராடுபவன் விடுதலையையும் நிறைவையும் அடைகிறான்” என்று நான் சொன்னேன். “நீ கேள்வி கேட்கலாம்”

“காவியங்கள் திரும்பத் திரும்பச் சொல்வது பெண்ணின் கண்ணீரின் கதையைத்தான். வீழ்த்தப்பட்ட அன்னையின் கதையை…” என்றார் குணாட்யர். “எங்கே அன்னை அறுதியாக வீழ்த்தப்படுகிறாள்? ஏன்?”

“அந்தக் கதையை நான் உனக்குச் சொல்கிறேன்” என்று கானபூதி சொன்னது.

(மேலும்)

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on June 04, 2025 11:33

பி.எம்.சுந்தரம் 

பி.எம்.சுந்தரம் ஆறு களங்களில் இசைப்பணி ஆற்றினார். புதுச்சேரி வானொலியின் இசைத்தயாரிப்பாளராகப் பணியாற்றியபோது சிறந்த இசைநிகழ்வுகளை ஒருங்கிணைத்தார். இசைப்பாடலாசிரியராகவும், இசையமைப்பாளராகவும் இசைத்துறையில் ஈடுபட்டார். இசையியல் ஆய்வாளராக முக்கியமான நூல்களை எழுதினார். ஆய்வுக்கட்டுரைகளை உருவாக்கினார். இசைவரலாற்றாசிரியராகவும் பங்களிப்பாற்றினார். இசைநூல்களை பதிப்பித்தார், இசைநூல்களை மொழியாக்கமும் செய்தார்.

பி.எம்.சுந்தரம் பி.எம்.சுந்தரம் பி.எம்.சுந்தரம் – தமிழ் விக்கி
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on June 04, 2025 11:33

The tiger claw

I possess a book provided by Nitya Chaidanya Yati solely for my personal study. It is a handwritten version not accessible in the public domain. While perusing it, a question arose regarding the term vyahrapada. This can be translated as pulipani in Tamil and tiger claw in English.

Tiger Claw

வாசிப்பின் வழிமுறைகள் பற்றிய உரை மிக முக்கியமான ஒன்று. நான் அதைப்பற்றி ஒருவரிடம் பேசினேன். அப்படியெல்லாம் தேவையே இல்லை, சும்மாவே வாசிக்கலாம், வாசிப்பது என்ன பெரிய கம்பசூத்திரமா என்றெல்லாம் பேசினார். அவர் ஒரு கவிஞர். நான் அவரிடம் அவர் அண்மையில் என்னென்ன வாசித்தார் என்று கேட்டேன். ஒவ்வொன்றாக கேட்டல் எதுவுமே வாசிக்கவில்லை. வாசிக்கும் வழக்கமே இல்லை. வாசிப்பதெல்லாமே முகநூலில் 200 வார்த்தை வாசிப்பது மட்டும்தான். அதைத்தான் வாசிப்பு என நினைத்து வைத்திருக்கிறார்

வாசிப்பின் வழிமுறைகள், கடிதம்
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on June 04, 2025 11:30

June 3, 2025

விடியல்கள்

நீண்டகாலமாக நான் விடியற்காலையில் எழுவதில்லை. அரிதாகப் பயணங்களின் போதுதான் புலரியைப் பார்ப்பது. அதிலும் நாகர்கோயில் ரயில்களில் காலை நான்கு அல்லது ஐந்து மணிக்கு வந்திறங்கி, ஆட்டோவில் வீட்டுக்கு வரும்போது. அப்போது அரைத்தூக்க நிலையிலும் இருப்பேன்.

விடியற்காலையின் அழகு எனக்குத் தெரியாமல் இல்லை. ஆனால் என் நாளொழுங்கு அதை அனுமதிப்பதில்லை. மதியம் வெயிலிலும் புழுக்கத்திலும் பொழுதை வீணடிக்கவேண்டாம் என சாப்பிட்டதுமே நன்றாகத் தூங்கிவிடுவேன். நான்கு மணிக்குத்தான் எழுவேன். இன்னொரு காலைபோல அது. ஒரு நீண்ட நடை. திரும்பி வந்து அமர்ந்தால் இன்னொரு வேலைநாளின் தொடக்கம்.

இரவு பதினொரு மணி வரைக்கும்கூட எழுதிக்கொண்டிருப்பேன். எழுதிமுடித்து கொஞ்சநேரம் இசை. தூங்க பன்னிரண்டரை மணி ஆகிவிடும். என் இணையதளம் வலையேற்றம் செய்யப்பட்டபின் அதை ஒருமுறை பார்த்துவிட்டுத்தான் தூங்குவேன். அதில் ஏதேனும் திருத்தங்கள் செய்யவேண்டியிருந்தால் மீண்டும் நேரம் பிந்திவிடும்.

அத்தனை பிந்தி தூங்குவதனால் காலையில் ஆறரை மணிக்குத்தான் எழுவேன். சொந்தமாக ஒரு காபி போட்டுக் குடிப்பேன். உடனே நேராக கணிப்பொறி முன் அமர்வேன். காலைநடை வழக்கமில்லை. களைப்பாக்கி, எழுதும் ஊக்கத்தை இல்லாமலாக்கிவிடும் என்பது என் அனுபவம். பல ஆண்டுகளாக இதுதான் வழககம்.

ஆனால் அண்மையில் என் நாளொழுங்குகளை மாற்றியமைக்க வேண்டிய சூழல் அமைந்தது. முதல்விஷயம் ஆழ்ந்த நல்ல தூக்கம் இருக்கிறதா என்னும் ஐயம். அத்துடன் உடற்பயிற்சியைக் கூட்டவேண்டியிருந்தது. ஆகவே பகல்தூக்கத்தை நிறுத்தினேன். சாப்பிட்டதும் சரியாக இருபது நிமிட ஓய்வு. அதன்பின் எழுந்தமர்ந்து எழுத ஆரம்பிப்பேன். சற்று பழகவேண்டியிருந்தது, அதன்பின் பிரச்சினை இல்லை. வழக்கம்போல் மாலைநடை. வந்ததும் எழுத்து.

ஆனால் இரவு ஒன்பதரைக்கே படுக்கைக்குப் போய்விடுவேன். பத்துமணிக்கெல்லாம் தூக்கம். காலையில் ஐந்து மணிக்கு எழுந்து காலைநடை. முற்றிலும் புதிய ஓர் அனுபவம் இது. உண்மையில் இரவு படுக்கும்போதே காலையில் எழுந்து நடை செல்லவேண்டும் என்பது அத்தனை தித்திப்பான ஒரு நினைவாக இருக்கிறது. காலையில் எழுந்து நடை செல்லும்போது இருக்கும் அபாரமான மன ஒருமையை, நிறைவை, விடுதலையை இப்போது துளிசிந்தாமல் அனுபவிக்கிறேன்.

காலையில் எழுந்தால் அருண்மொழியை எழுப்பிவிடக்கூடாது, பிரச்சினையாகிவிடும். ஆகவே மெல்ல நடந்து வந்து ஆடைமாற்றிக்கொள்ளவேண்டும். அவசரமாக ஆடை மாற்றியமையால் ஒருமுறை டிராக்சூட்டை திருப்பிப் போட்டுக்கொண்டேன். பைகள் வெளியே இருந்தன. பாதிவழியில்தான் கவனித்தேன். ஒன்றும் செய்வதற்கில்லை. ’பொத்தினாப்ல’ நடந்து திரும்பி வந்துவிட்டேன்.

காலையில் தெருக்கள் தூங்கிக்கொண்டிருக்கின்றன. குழந்தைகள்தான் அப்படி அழகாகத் தூங்கமுடியும். அத்தனை அமைதி. அத்தனை நிறைவு. நம் காலடிகளின் எதிரொலி நமக்கே கேட்கும் மௌனம். பார்வதிபுரத்தின் சாரதா நகருக்குள் நல்லவேளையாக கோயில்கள் இல்லை. ஆகவே காலையிலேயே பக்திக்கூப்பாடும் இல்லை. பார்வதிபுரம் சாலைக்குச் சென்றால் மூன்று அம்மன்கோயில்களிலும் ஒரு சர்ச்சிலும் ஏககாலத்தில் பிலாக்கணம். அனுராதா ஸ்ரீராம், சீர்காழி சிவசிதம்பரம் மீதெல்லாம் ஏதேனும் சட்ட நடவடிக்கை எடுக்க வாய்ப்புண்டா?

எனக்கு காலையில் கேட்கும் பக்திக்கூப்பாடு போல ஒவ்வாமையை அளிப்பது ஏதுமில்லை. காலை ஒரு பெரும் பரிசு. அதன் அழகும் தூய்மையும்போல இப்பிரபஞ்சமாக நின்றிருப்பதன் முகம் வெளிப்படும் இன்னொரு தருணம் இல்லை. ஆனால் ’அய்யா சாமி, எனக்கு அதைக் கொடுக்க மாட்டியா, இதைக்கொடுக்க மாட்டியா, எத்தனவாட்டி கேக்கிறது, உனக்கென்ன செவி அவிஞ்சா போச்சு, கல்மனசா உனக்கு, நல்லாயிருப்பியா’ என்ற பிச்சைக்காரக் குரல்தான் பக்திப்பாடல்கள் எனப்படுகிறது. இவன்களுக்கு ஏதாவது கொடுக்குமென்றால் அந்த சாமியை நான் எக்காலத்திலும் கும்பிடப்போவதில்லை.

மங்கலான ஒளியில் தெரியும் பொருள் வெள்ளை ஒளியில் தெரியும் பொருள் அல்ல. அதன் முப்பரிமாணம் வேறு. அதன் வண்ணங்கள் வேறு. நாம் எண்ணுவதுபோல இங்கே பொருட்கள் மாறாமல் இல்லை. அவை ஒவ்வொன்றும் வேறு பொருட்கள். நாம் அறியும் நம் அறிதல், அல்லது நம் நினைவின் தொடர்ச்சிதான் அவற்றை மாறாமல் நிலைகொள்வதாகத் தோன்றவைக்கிறது.

காலையில் என் நடை இயல்பாக இருக்கும். பலர் கைகளை வீசிக்கொண்டு, சட்டென்று நின்று குனிந்து நிமிர்ந்து, என்னென்னவோ செய்கிறார்கள். வியர்க்க விறுவிறுக்க ஒருவர் ஓடுகிறார். முகத்தில் அப்படி ஒரு பொறுப்பின் சோகம். நான் என் இனிய எண்ணங்களில் மூழ்கிச் சென்றுகொண்டிருக்கிறேன். காலையிளங்காற்றின் மென்மையான வருடல். மேலே தென்னையோலைகளின் அசைவு. தொலைவில் வானம் ஒளிபெற்றபடியே வருகையில் பொருட்கள் துலங்கி வரும் நேர்த்தி.

மலைகளின் மேல் முகில்கள் வெண்ணிறம் கொள்கின்றன. மலைகள் தெளிந்து தெளிந்து முப்பரிமாணம் கொள்கின்றன. முகில்களுக்கும் முப்பரிமாணம். பறவையொலிகள் மாறுபடுகின்றன. அதன்பின் அந்த மகத்தான கருவறையின் வாசல்கள் திறக்கின்றன.

ஏதோ ஒருபுள்ளியில் அதைப் பார்த்தபடி நின்றிருக்கிறேன். ஒரு சொல் இல்லாமல். ஒரு நினைவு எஞ்சாமல். அன்று, அக்கணம், அப்படியே உருவாக்கப்பட்டவனாக திரும்பி வருகிறேன்.

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on June 03, 2025 11:35

மு. இசக்கிமுத்து வாத்தியார்

நாடக நடிகர், பாடலாசிரியர் மற்றும் நாடகப் பயிற்றுநர். தமிழக அரசின் கலைமாமணி விருது பெற்றார்.மு. இசக்கிமுத்து சிறு வயது முதலே நாடக ஆர்வம் கொண்டிருந்தார். தனது பதினொன்றாம் வயதில் சங்கரதாஸ் சுவாமிகளின் மாணவனாகச் சேர்ந்து அவரிடம் நாடகமும், இலக்கண, இலக்கியமும் பயின்றார். பல்வேறு நாடகங்களில் நடித்தார்.

மு. இசக்கிமுத்து வாத்தியார் மு. இசக்கிமுத்து வாத்தியார் மு. இசக்கிமுத்து வாத்தியார் – தமிழ் விக்கி
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on June 03, 2025 11:33

காவியம் – 44

நாணயம் அரசியின் முகம், சாதவாகனர் காலம் பொமு1 மதுரா அருங்காட்சியகம்

கானபூதி சொன்னது. “நான் என் முன் அமர்ந்திருந்த நிஷாதனாகிய சுத்யும்னனிடம் சொன்னேன். நீ என்னிடம் கேட்ட கேள்விக்கான பதிலை அடைந்துவிட்டாய். நீ கேட்டுக்கொண்டிருக்கும் இந்தக் கதையின் கேள்விகள் திரண்டு வந்துவிட்டிருக்கின்றன. அவற்றுக்கு நீ பதில்சொல்லி வென்றாலொழிய இந்த கதைவிளையாட்டு முன்னால் செல்லாது என்று மீண்டும் சொல்கிறேன். அவன் புன்னகையுடன் சொல் என்று என்னிடம் சொன்னான்”

கானபூதி தொடர்ந்தது. நான் சுத்யும்னனின் கண்களைப் பார்த்தேன். அவற்றில் எந்த குழப்பமும் இருக்கவில்லை. கதை கேட்கும் சிறுவர்களுக்குரிய ஆர்வமே இருந்தது. கதைகள் என்றோ எங்கேயோ நிகழ்ந்தவை என பெரியவர்கள் எண்ணுகிறார்கள். உடன் நிகழ்பவை என சிறுவர்கள் எண்ணுகிறார்கள். பெரியவர்கள் கதைகளை விலகி நின்று ரசிக்கிறார்கள். சிறுவர்கள் கதைக்குள் சென்று விளையாடுகிறார்கள்.

நான் சுத்யும்னனிடம் கேட்டேன். “இரு கைகளுக்கும் சேர்த்து என் கேள்வி ஒன்றே. ஏன் குணாட்யர் இளம் வயதில் அந்த சபையை அத்தனை எளிதாக வென்றார்? ஏன் அறிவு முதிர்ந்த வயதில் தோற்றார்?”

அவன் கண்கள் சுருங்க யோசித்துக் கொண்டிருந்தான். பின்னர் “வல்லவர்களை இளையவன் ஒருவன் வெல்வான் என்னும் மாறாத இயற்கை விதியால் அவர் வென்றார், பின்னர் தோற்றார்” என்றான்.

நான் என் கைகளை அப்படியே வைத்துக்கொண்டு நிழல்களிடம் ”சொல்லுங்கள், சரியான பதிலா?” என்றேன்.

ஒரு நிழல் “சரிதான். அவருடைய இளமையில் வெல்லவேண்டும் என்னும் விசை அவருக்கு ஆற்றலை அளித்தது. முதுமையில் வென்றுவிட்டோம் என்னும் ஆணவம் அவருடைய ஆற்றலை அழித்தது. இரண்டும் எப்போதும் நிகழ்வதுதானே?” என்றது.

இன்னொரு நிழல் “அவர் இலக்கண ஆசிரியர். பாஷா மீமாம்சகர்கள் மொழி நிரந்தரமானது, ஆகவே இலக்கணம் மாறாதது என்று நம்பியிருப்பார்கள். ஆனால் மொழி ஒவ்வொரு முறை ஒருவரால் சொல்லப்படும்போதும் , ஒருவரால் எண்ணப்படும்போதும்  நுணுக்கமாக மாறிக்கொண்டிருக்கிறது. ஒரு பெரிய நதியில் நீரின் ஒவ்வொரு அணுவும் முன்னகர்வது போல. ஒட்டுமொத்தமாக நதி ஓடிக்கொண்டே இருக்கிறது. அதை இலக்கண ஆசிரியர்கள் அறிவதில்லை. நேற்று வந்து நீராடிய ஆற்றிலேயே இன்றும் நீராடுவதாக எண்ணிக்கொண்டிருக்கிறார்கள். இலக்கணம் மாறுவது கண்ணுக்குத் தூலமாகத் தெரிய ஒரு தலைமுறைக் காலம் ஆகும். ஆகவே எல்லா இலக்கண ஆசிரியர்களும் அடுத்த தலைமுறையினரால் வெல்லப்படுவார்கள்” என்றது.

மூன்றாவது நிழல் “தன் வாழ்க்கை முழுக்க குணாட்யர் இலக்கணத்தை மட்டுமே பயின்றார். காவியங்களை பயிலவில்லை. இலக்கணங்கள் நனவில் கற்கப்படுபவை. காவியங்கள் கனவுகளில் கற்கப்படுபவை. அரசன் கற்றது காவியம். அரசன் கற்ற முறையை குணாட்யர் அறியவே இல்லை” என்றது.

நான் புன்னகையுடன் என் கைகளை விரித்தேன். “இவை எல்லாமே இரண்டாவது கேள்விக்குப் பதில் சொல்கின்றன. முதல்கேள்விக்கும் அதுவே பதிலென அமையவேண்டும். பேரறிஞர்கள் அமர்ந்திருந்த அந்த அவையில் சிறுவனாகிய குணபதி வென்றதும், அதே அவையில் குணாட்யராக அவன் தோல்வியடைந்ததும் ஒரே காரணத்தால்தான். அவர் அத்தனை இலக்கண இலக்கியங்களுக்கும் அடித்தளமான வேறு ஒன்றுக்கு இளமையிலேயே தன்னை முழுமையாக அளித்திருந்தார். ஆகவேதான் அவர் அனைத்தையும் விரைவில் கற்றுக்கொண்டார். அந்த அடித்தளத்தையே மொழி என்று அவர் எண்ணியிருந்தமையால் மூன்றுமாதங்களில் கற்கத் தகுந்ததே மொழியின் மேற்பரப்பு என்று உணராமல் இருந்தார்.”

சுத்யும்னன் “நான் தோல்வியடைந்தேன்” என்றான். “என் குலம் எந்த இடத்தில் வீழ்ச்சியடையத் தொடங்கும் என்பதைக் கண்டுகொண்டேன். அதை என்னால் மாற்றமுடியாது என்றும் உணர்ந்தேன்.”

“இந்தக் கதைவிளையாட்டை நாம் மேலும் தொடரலாம்” என்று நான் அவனிடம் சொன்னேன். “என்னிடம் இன்னும் பல்லாயிரம் கதைகள் உள்ளன.”

“ஆனால் இனி இக்கதைகளைத் தொடர்வதில் எனக்கு விருப்பம் இல்லை. கதைகளை தொடர்ந்து கேட்பவர்கள் காவியகர்த்தர்கள் ஆகிறார்கள். ஒற்றைக்கதையை மட்டுமே கேட்பவர்கள்தான் வெல்லமுடியும். நான் வெல்லப் பிறந்தவன்.”

“ஆனால் முழுமையானதே உண்மை. முழுமையற்றது பொய்.” என்றேன். “ஒரு கதை எப்போதுமே ஒரு பிருஹத்கதையின் உடைந்த துண்டுதான்”

“உண்மை மேல் ஒரு கல்லும் நிலைகொள்ள முடியாது. நான் கோட்டைகளையும் மாளிகைகளையும் கட்டி எழுப்ப விரும்புபவன். என் அடித்தளக் கற்கள் பொய் மீதுதான் நிலைகொள்ளும் என்றால் அதுவே எனக்குரியது.”

“உன் பேரரசு அழியும்.”

“ஆமாம், ஆனால் எல்லாமே அழியும்” என்று அவன் சொன்னான். “அழியாதது கதை மட்டுமே. நான் கதைகளை கேட்பவன் அல்ல, கதைகளின் பாத்திரமாக ஆகின்றவன் என்பதை இங்கே உன்னிடம் கதைகளைக் கேட்கும்போது உணர்ந்தேன்.”

“உன் கதையைத்தான் நான் மேலும் சொல்லவிருக்கிறேன்.”

“அது உன் பணி… என் கதையை நான் வாழ்ந்து அறிந்துகொள்கிறேன்” என்று அவன் அதே புன்னகையும் உறுதியுமாகச் சொன்னான். “விந்தையாக இல்லையா? அனைத்துக் கதைகளையும் அறிந்த பைசாசிகனாகிய நீ வெறுமே கதைகளை அறிபவனும் சொல்பவனும் மட்டும்தான். கதைகளை அறியாமல் அவற்றை உருவாக்கிக் கொண்டிருப்பவர்களைப் பற்றித்தான் நீ பேசியாகவேண்டும். உனக்கு வேறுவழியே இல்லை…”

நான் அவனால் தோற்கடிக்கப்பட்டுவிட்டேன் என்று உணர்ந்தேன். என் சிரிப்பு மறைந்தது.

சுத்யும்னன் வெடித்துச் சிரித்து “வருந்தாதே. அறிவற்றவர்களை அறிவுடையோர் போற்றிப் பாடவேண்டும் என்பது என்றுமுள்ள உலக வழக்கம்” என்றான். “ஆகவே ஒரு நெறியை உருவாக்கவிருக்கிறேன். என் ரத்தத்தில் உருவாகும் அரசில் எந்த அரசனும் மொழியைக் கற்றுக்கொள்ளக் கூடாது. அவர்கள் பேசுபொருளாகவே இருக்கவேண்டும், பேசுபவர்கள் ஆகக்கூடாது.”

நிழல் ஒன்று அவன் தோள்மேல் கவிந்து “அக்னிபுத்ர சதகர்ணி வரை அந்த வழக்கம் தொடரும் இல்லையா?” என்று சிரித்தது.

“அதுதான் வீழ்ச்சியின் தொடக்கம்…” என்றது இன்னொரு நிழல்.

“அதை நான் மாற்றமுடியாது” என்று சுத்யும்னன் சொன்னான். “அதற்குப் பின் என்ன நிகழும் என்பதையும் நான் யோசிக்கவே போவதில்லை. நான் தொடங்கவிருக்கிறேன்… அதுதான் என் முன் உள்ள பணி…” கைகூப்பி வணங்கி, “எனக்கு என் வழியைக் காட்டியவன் நீ. என் உலகை உருவாக்கி என் முன் விரித்தவனும் நீ. நீயே என் தெய்வம். என் அரண்மனையில் உனக்காக ஓர் ஆலயம் அமைப்பேன். உன்னை என் தலைமுறைகள் தெய்வமென வணங்கும்” என்றான்.

“அக்னிபுத்ர சதகர்ணி வரை… ஆம், அதுவரை” என்று ஒரு நிழல் எக்களித்துச் சிரித்தது.

தானும் சிரித்தபடி அதை நோக்கி “அதைப்பற்றி நீங்கள் பேசி மகிழ்ந்திருங்கள்” என்று சொல்லி சுத்யும்னன் அந்தக் காட்டில் இருந்து விலகிச்சென்றான்.

நிழல்கள் அவன் பின்னால் சென்று கூச்சலிட்டன.

“நீ எந்தப் போர்களில் எல்லாம் வெல்வாய், எப்போது தோற்பாய் என்று என்னால் சொல்லமுடியும்” என்று ஒரு நிழல் கூச்சலிட்டது. “அதை தெரிந்துகொண்டால் தோல்விகளை உன்னால் தவிர்க்கமுடியும்.” என்றது ஒரு நிழல்.

“உனக்கு துரோகம் செய்பவர்கள் அனைவரையும் நான் இப்போதே அடையாளம் காட்டுகிறேன்” என்றது இன்னொரு நிழல்

அவன் திரும்பியே பார்க்காமல் முன்னால் செல்ல, ஒரு நிழல் கடைசிவரை அவனுடன் சென்று “நீ எடுக்கப்போகும் தவறான முடிவுகளின் பட்டியல் ஒன்றை உன்னிடம் சொல்கிறேன்” என்றது.

அவன் காட்டின் விளிம்புக்குச் செல்வது வரை அவை கூவிக்கொண்டே பின்தொடர்ந்து சென்றன. ஒரு நிழல் காட்டின் விளிம்பில் நின்ற பேராலமரத்தின் மேல் ஏறிக்கொண்டு தொலைதூரத்தில் செல்லும் அவன் செவிக்குக் கேட்கும்படி கூவியது. “இதோபார், உன் வாழ்க்கையில் வெற்றிமேல் வெற்றி அடைந்து செல்லும்போது ஒரு கணமும் மறக்கமுடியாத அவமதிப்பு ஒன்றை அடைவாய். அந்தச் சிறுமையை உன் சாகும் கணத்தில்கூட எண்ணிக்கொண்டிருப்பாய். அது என்ன என்று உனக்கு நான் சொல்கிறேன். அதை நீ தவிர்க்கமுடியும்… திரும்பிப் பார். என்னைப் பார்.”

“அவன் சென்றுவிட்டான். அவன் திரும்பிப் பார்த்திருந்தால், அல்லது சபலப்பட்டு ஒரு கணம் கால்கள் தயங்கியிருந்தால் அவன் கதைகளின் சுழலில் மீண்டும் சிக்கிக் கொண்டிருப்பான். ஆனால் அவன் திரும்பிப் பார்க்காமல் நடந்து சென்றான்” என்று கானபூதி சிரிக்கும் கண்களுடன் என்னிடம் சொன்னது. “மாவீரர்கள் அப்படித்தான். அவர்கள் ஒற்றைக் குறிக்கோள் கொண்டவர்கள், தங்களை அதிலிருந்து திசைதிருப்பிக் கொள்ள அனுமதிக்காதவர்கள்.”

“ஆனால் அவன் அவர்கள் சொல்வதையும் கேட்டிருந்தால் பலவற்றைத் தவிர்த்திருக்கலாமே?” என்றேன்.

“அது சாமானியர்களின் சிந்தனை. ஒரு கதை இன்னொரு கதைக்குத்தான் கொண்டுசெல்லும். அந்த சுழற்சியில் இருந்து விடுபடவே முடியாது.” என்று கானபூதி சொன்னது.

“சாதவாகனப் பேரரசு வீழ்ச்சியடைய அக்னிபுத்ர சதகர்ணியா காரணம்?” என்று நான் கானபூதியிடம் கேட்டேன்.

கானபூதி அதைக் கேட்க மறுத்து அசைவில்லாத பார்வையுடன் அமர்ந்திருந்தது.

சக்ரவாகி என்னிடம் “கதைவிளையாட்டில் மட்டுமே அது கதை சொல்லும்… நீ கேட்ட கேள்விக்கான பதில் இன்னும் அதன் கதைகளில் தெளிந்து வரவில்லை” என்றது.

“சாதவாகனர்களின் தோல்வி அக்னிபுத்ர சதகர்ணி மொழியறிந்த நாளில் தொடங்குகிறதா? அதையா சுத்யும்னன் தெரிந்துகொண்டு சென்றான்?” என்று நான் மீண்டும் பொதுவாக நிழல்களை நோக்கிக் கேட்டேன்.

ஆபிசாரன் என்னை நோக்கி வந்து இரு கைகளையும் மண்ணில் ஊன்றி, கண்களில் ஏளனச் சிரிப்புடன் சொன்னது. “நான் நடந்ததைச் சொல்கிறேன். எனக்கு நீ என்ன தருவாய்?”

“நீ கேட்பது என்ன?”

“நான் சொல்லும் கதையையும் நீ கேட்கவேண்டும்… முடிவுவரை எதிர்வார்த்தையே இல்லாமல் கேட்கவேண்டும்…”

“சரி, சொல்” என்றேன். “நான் இன்றிருக்கும் நிலையைவிட என்னை எந்தக்கதையும் கீழிறக்கிவிட முடியாது.”

“நான் உன்னைக் கீழிறக்குவேன் என்று ஏன் நினைக்கிறாய்? நான் உன்னை விடுதலை செய்ய முயல்பவன். நானே உன்னிடம் உண்மையைச் சொல்பவன்.” என்றது ஆபிசாரன்.

“சொல்” என்று நான் சொன்னேன்.

“அக்னிபுத்ர சதகர்ணி தேன்குடத்தில் விழுந்த தேனீபோல ஆனான் என்று காவியங்கள் சொல்கின்றன. இரவும் பகலும் அவன் காவியங்களையே வாசித்தான். காவியங்களை அவனுக்கு பாடம் சொல்ல ஆசிரியர்களை நியமித்தான். பகல் முழுக்க அவர்கள் அவனுக்குப் பாடம் நடத்தினர். இரவில் அவன் தூங்கும்போது அவன் அறைக்கு வெளியே அவன் செவிகளில் விழும்படி மகாகாவியங்களை இசைக்கலைஞர்கள் யாழுடன் சேர்த்துப் பாடிக்கொண்டே இருந்தார்கள்” ஆபிசாரன் சொன்னது.

பேரரசன் சதகர்ணி தானே ஒரு கவிஞனாக ஆனான். ரிதுமகோத்ஸ்வம், வர்ஷகோலாகலம், புஷ்பசம்வாதம் ஆகிய காவியங்களை எழுதி அவற்றை பிரதிஷ்டானபுரியின் அவையில் அரங்கேற்றினான். அவனே காவியப்பிரதிஷ்டான சபையின் முதன்மைக் கவிஞன் என்று அனைவரும் ஒப்புக்கொண்டார்கள். அவனுக்கு சிறந்த மாணவர்கள் அமைந்தார்கள். அவர்கள் அவனுடைய காவியங்களை கற்று அவற்றை கலிங்கம் முதல் காம்போஜம் வரை, காசி முதல் காஞ்சிபுரம் வரை கொண்டுசென்று பரப்பினார்கள். பாரதவர்ஷமெங்கும் அவனுடைய வரிகளே புகழ்பெற்றிருந்தன.

ஆனால் கொஞ்சம் கொஞ்சமாக அவன் தன் காவியங்கள் மேல் நம்பிக்கை இழக்கலானான். அவை வெறும் அழகிய சொற்சேர்க்கைகள் என்று அவனுக்குத் தோன்றத் தொடங்கியது. ஆனால் அதை அவனே எவரிடமும் சொல்லமுடியாத நிலை உருவாகிவிட்டது. தன் அரசியிடம் அவன் சொன்னான். ”எனக்கு சர்வ வர்மன் கற்றுத்தந்தது மிகமிக அளவுக்குட்பட்ட ஒரு கல்வி. நூற்றெட்டு பூக்களை அவர் எனக்கு அளித்தார். அதைக்கொண்டு மாலைதொடுக்கக் கற்றுத்தந்தார். நான் தொடுத்த மாலைகள் மிக அழகானவை, ஒவ்வொன்றும் புதியவை. ஆனால் நான் எங்கோ முடிவில்லாத வண்ணங்களும் வடிவங்களும் கொண்ட மலர்கள் பூத்த காடு ஒன்று இருப்பதை உணர்கிறேன். இங்கே நான் சிறைப்பட்டிருக்கிறேன்”

அரசி அவனுடைய அந்த மனநிலையை விரும்பினாள். அவன் சம்ஸ்கிருதக் கல்வி வழியாக விலகி நெடுந்தொலைவு சென்றுவிட்டதாக அவள் கவலை கொண்டிருந்தாள். ”சொற்களில் ஈடுபடுபவர்களுக்கு சொற்களின் உலகமே முழுமையானதாகத் தோன்றிவிடுகிறது, மெய்யுலகை அவர்கள் இழந்துவிடுகிறார்கள்”  என்று அவள் அவனிடம் பலமுறை சொல்லியிருந்தாள். “மெய்யுலலகுக்குச்  சற்றுச் சுவையூட்டவே சொற்கள். சொற்களில் வாழ விரும்புபவர்கள் மூன்றுவேளை உணவையும் பாயசமாகவே உண்ணவேண்டும் என எண்ணும் சிறுவர்களைப் போல.”

ஆனால் அவன் சொற்களில் இருந்து அவள் விரும்பியதுபோல மெய்யுலகை நோக்கி வரவில்லை. மேலும் ஆழ்ந்து சென்றுகொண்டிருந்தான். “சொற்களில் இருந்து கனவுக்கும், கனவுகளின் வழியாக கனவுகள் ஊறும் அந்த ஆதிச்சுனைக்கும் செல்வதற்குத்தான் வழி உள்ளது” என்று அவன் அரசியிடம் சொன்னான்.

அவனிடம் வந்துசேர்ந்த கனவுத்தன்மை அவளுக்கு அச்சமூட்டியது. அவன் சொல்லில் மூழ்கிக்கிடந்தபோது இசைக்கருவியைக் கற்றுக்கொள்பவன் போலவும், சதுரங்கம் ஆடுபவன் போலவும் மாறிமாறித் தோற்றமளித்தான். உலகியலின் தர்க்கம் அவனில் இருந்து விலகினாலும் மேலும் செறிவானதும் வரையறைக்குட்பட்டதுமான இன்னொரு தர்க்கம் அவனிடம் வந்தமைந்தது. ஆனால் கனவுக்குள் அவன் நுழைந்தபோது எல்லா தர்க்கங்களையும் இழந்தவனானான். பொழுது, சூழல், சுற்றம் எதையுமே அறியாதவனாக மாறினான். அவன் சொற்களில் எந்த பொருளும் கூடவில்லை. அவன் எவரையும் பார்த்துப் பேசவுமில்லை.

அவனுக்குச் சித்தப்பிரமையா என்று அவையில் இருந்த அமைச்சர்கள் சந்தேகப்பட்டனர். மூன்று அமைச்சர்கள் வந்து அரசியிடம் அதைப்பற்றிப் பேசி அரசருக்கு மருத்துவம் பார்க்கவேண்டியதன் தேவை பற்றி அறிவுறுத்தினார்கள். அரசனின் முதல் மகனுக்கு அப்போது ஒன்பது வயது. அவனை அரசனாக்கி அரசியே ஆட்சி செய்யலாம் என்று தலைமை அமைச்சர் சொன்னார். ஆனால் அந்த முடிவை அரசியால் அப்போது எடுக்கமுடியவில்லை.

ஓர்  இரவில் தன் அரண்மனையின் உப்பரிகையில் தனியாக நின்றிருந்த அரசன் கீழே வரிசையாக யாரோ செல்வதைக் கண்டான். அவர்கள் ஓசையில்லாமல் சென்றுகொண்டிருந்தார்கள். அங்கே சாலையில் விளக்குத் தூண்களின் வெளிச்சம் இருந்தாலும் அவர்களின் உருவம் ஏதும் துலங்கவில்லை. அவன் உப்பரிகையின் விளிம்பில் இருந்து கீழே தொற்றி இறங்கி சாலைக்கு வந்து அவர்களைப் பின் தொடர்ந்து சென்றான்.

அவர்களை காவலர்கள் எவரும் பார்க்கவில்லை என்பது வியப்பாக இருந்தது. காவலர்கள் அனைவருமே அரைத்தூக்கத்தில் இருந்தார்கள். அந்த வரிசை நேராகச் சென்று அவருடைய முப்பாட்டனால் நிறுவப்பட்ட விஜயஸ்தம்பத்தை அணுகியது. அங்கே காவலர்கள் இருவரே இருந்தார்கள். அவர்கள் விழித்திருந்தனர், ஆனால் அத்தனை பெரிய வரிசையை அவர்கள் பார்க்கவில்லை. ஒரு தூணின் மறைவில் நின்றபடி அரசன் அந்த கூட்டத்தைப் பார்த்துக்கொண்டிருந்தான். அந்த உருவங்கள் எல்லாமே நிழல்களாகவே தெரிந்தன. விளக்கொளி அவர்கள் மேல் பட்டாலும் அவர்கள் துலங்கி வரவில்லை.

அவர்கள் ஏதோ முனகலாக பாடியபடி, கைகளை நெஞ்சோடு சேர்த்து தலைகுனிந்து, சிற்றடி வைத்து விஜயஸ்தம்பத்தைச் சுற்றிவந்தார்கள். அவர் பார்த்துக்கொண்டு நின்றதைக் கூட அவர்கள் அறியவில்லை. அதன்பின் அதைச்சூழ்ந்து அமர்ந்தனர். அமர்ந்தபடியே நெஞ்சில் கைவைத்து முன்னும் பின்னும் அசைந்தாடி முனகலான ஒலியில் பாடினர்.

அவர்களைக் கூர்ந்து பார்க்கும் பொருட்டு அரசன் அருகே சென்றான். அருகே செல்லச் செல்ல அவர்கள் மேலும் தெளிவற்றவர்களாக ஆனார்கள். அவர்கள் ஆண்களா, பெண்களா, ஆடைகள் அணிந்திருக்கிறார்களா என்றுகூடத் தெரியவில்லை. மேலும் அவர் அணுகியபோது ஓர் உருவம் அவனைப் பார்த்துவிட்டது. அது திடுக்கிட்டு எழ, சட்டென்று அத்தனைபேரும் எழுந்து அவனைப் பார்த்தனர். அவன் அசையாமல் நிற்க அவர்களும் அசைவின்றி நின்றனர். நீரில் தெரியும் பிம்பங்கள்போல அவர்கள் மெல்ல அசைந்தாலும் அசைவிலாதிருந்தனர்.

அவர்களில் ஓர் உருவம் திரண்டு அவனை நோக்கி வந்தது. அது ஒரு முதியவர். அவர் அவரசனின் அருகே வந்து “நீங்கள் அரசர் அல்லவா?” என்றார்.

“ஆம்” என்று சதகர்ணி சொன்னான்.  “இந்நிலத்தை ஆட்சி செய்பவன்.”

“நாங்கள் ஆட்சி செய்யப்பட்டவர்கள்” என்று முதியவன் சொன்னான். “இந்த வெற்றித்தூணை மண்ணுடன் இறுக்கி நிலைநிறுத்தியிருப்பது சமர்களாகிய எங்கள் ரத்தம்.”

அக்னிபுத்ர சதகர்ணி அன்று கண்ட அந்தக் காட்சியை பின்னர் அவரே எழுதிய ’போதோதய வைபவம்’ என்னும் நூலில் குறிப்பிட்டிருக்கிறான். அங்கே காலையில் மயங்கிக்கிடந்த அவனை காவலர்கள் அரண்மனைக்குக் கொண்டுசென்றனர். பலநாட்கள் காய்ச்சலில் பிதற்றிக்கொண்டிருந்த அவன் நலமடைந்தபின் மிகமிக அமைதியானவன் ஆனான். ஓராண்டுக்காலம் ஒரு வார்த்தைகூட எவரிடமும் பேசவில்லை.

ஆனால் அதுவரை ஆட்சியில் அவனுக்கு இருந்த ஆர்வமின்மை மறைந்து விட்டது. ஒவ்வொரு நாளும் அரசவைக்கு வந்து முழுநேரமும் இருந்தான். எல்லாச் சொற்களையும் கூர்ந்து கேட்டான். தன் ஆணைகளை எழுத்தில் சுருக்கமாக அளித்தான். அந்த வரிகளைப் படித்த அமைச்சர்கள் மிக ஆழ்ந்த சிந்தனைக்குப் பின் அவை வெளியிடப்பட்டிருப்பதை உணர்ந்தார்கள். அவற்றுக்கு மறுவார்த்தை இருக்கமுடியாது என்று சொல்லிக்கொண்டார்கள்.

மேலும் ஓராண்டுக்குப் பின் அக்னிபுத்ர சதகர்ணி பிரதிஷ்டானபுரியில் இருந்து தன் அமைச்சர்களுடனும் தளபதிகளுடனும் கிளம்பி வடக்கே பயணம் செய்து, கனகபதம் என்று அப்போதும் சாஞ்சி என்று பிற்பாடும், அழைக்கப்பட்ட சிறு குன்றில் அமைந்த புத்தபீடிகையை அடைந்து அங்கே இருந்த விகாரையில் தங்கினார். அங்கே சாக்கிய மாமுனிவர் வந்து தர்மசம்போதனை செய்த இடத்தில் செந்நிறமான கற்களால் கவிழ்ந்த கலத்தின் வடிவில் மகதத்தின் மாமன்னர் அசோகரால் கட்டப்பட்டிருந்த தூபி நின்றிருந்தது. நாற்பத்தொரு நாட்கள் அங்கே நோன்பிருந்த பிறகு அந்த தூபியைச் சுற்றிவந்து அக்னிபுத்ர சதகர்ணி பௌத்தமதத்தை ஏற்றார். கொல்லாமை உட்பட அவர்களின் எட்டு நெறிகளையும் தனக்காக வகுத்துக்கொண்டார்.

அவர் திரும்பி வந்தபோது அவருடன் பதினெட்டு புத்தபிக்ஷுக்களும் வந்தனர். அவர்கள் தங்களுடன் பளிங்குக் கல்லால் செய்யப்பட்ட சிறிய புத்தர்சிலை ஒன்றையும் கொண்டுவந்தனர். தர்மசக்கரத்தை உருட்டும் கைகளுடன் அமர்ந்திருந்த அந்தச் சிலை கோதாவரிக்கரையில் அரசனால் உருவாக்கப்பட்ட புத்தபீடிகையில் நிறுவப்பட்டது. அரசன் தர்மத்தை ஏற்றுக்கொண்டதை நிறுவுவதற்காக கோதாவரியின் கரையில் அரசனால் ஒரு தூபி நிறுவப்பட்டது. ஓராண்டுக்குள் அரசகுலத்தினரும், அமைச்சர்களும், அவைப்புலவர்களும் பௌத்த தர்மத்தை ஏற்றுக்கொண்டனர். ஏழாண்டுகளில் பிரதிஷ்டானபுரியே பௌத்தநகரமாக ஆகியது.

தான் ஆட்சி செய்யும் நாடெங்கும் பௌத்தத்தை கொண்டுசெல்ல சதகர்ணி முயன்றார். அரசநாணயங்களில் புத்தரின் முகம் இடம்பெற்றது. புத்தநெறியைக் கற்பிக்கும் மடாலயங்கள் உருவாக்கப்பட்டன. பிரதிஷ்டானபுரியைச் சுற்றி அமைந்த மலைப்பாறைகளைக் குடைந்து மிகப்பெரிய சைத்யங்களும் விகாரங்களும் அமைக்கப்பட்டன. அங்கே நூற்றுக்கணக்கான இளைஞர்கள் முதிய பிக்ஷுக்களுடன் தங்கி சாக்கிய தர்மத்தைப் பயின்றார்கள். அங்கிருந்து அவர்கள் தர்மத்தின் செய்தியுடன் அறியாத நிலங்களை நோக்கிச் சென்றார்கள்.

ஒவ்வொருநாளும் குடைவரைகள் செதுக்கப்பட்டுக் கொண்டே இருந்தன. அங்கே தர்மசம்போதனை முத்திரையுடன் புத்தரும், அறநிலையாகிய ஸ்தூபியும் அமைந்திருந்தன. அந்த குடைவரைகள் அமைந்த இடங்களை இணைத்துக்கொண்டு செல்லும் கழுதைப்பாதைகள் மலையிடுக்குகளின் வழியாக உருவாக்கப்பட்டன. அக்னிபுத்ர சதகர்ணியின் வம்சத்தினர் அனைவருமே பௌத்தர்களாகத் திகழ்ந்தார்கள். அவன் வம்சத்தில் வந்த கௌதமிபுத்ர சதகர்ணியின் ஆட்சியின்போது சாதவாகனர்களின் நிலத்தில் பௌத்தம் சென்றடையாத இடமே இல்லை என்ற நிலை உருவானது.

கௌதமிபுத்ர சதகர்ணி நாடெங்கும் தர்மஸ்தம்பங்களை நாட்டினார். குடைவரைகளிலும் பாறைகளிலும் தர்மத்தின் செய்திகளை எழுதிவைத்தார். பௌத்த தர்மத்தை முன்னெடுத்த பேரரசர்களில் அசோக மகாச்சக்ரவர்த்திக்குச் சமானமானவராக அவரை கவிஞர்கள் போற்றினார்கள். அவருடைய ஆட்சிக்காலத்தில் சாதவாகனர்களின் அரசுடன் புதிய அரசர்கள் தாங்களே விரும்பி வந்து இணைந்து கொண்டார்கள். போரில்லாமலேயே அப்பேரரசு வளர்ந்தது. அவ்வாறு இணைந்த நாடுகளுக்கு பெரிய வணிகப்பாதைகள் அமைந்தன. வணிகம் பெருகி செல்வம் குவிந்தது. கௌதமிபுத்ர சதகர்ணியின் நாணயங்களே பாரதநிலம் முழுக்க புழக்கத்தில் இருந்தன.

ஆபிசாரன் என்னை நோக்கி கண்களைச் சிமிட்டியபடி கேட்டது. “இந்தக் கதையிலும் கேள்வி உள்ளது. சொல், ஏன் அக்னிபுத்ர சதகர்ணி பௌத்த தர்மத்தை ஏற்றுக்கொண்டார்?”

நான் புன்னகையுடன் ”சுத்யும்னன் சொன்ன அதே பதில்தான்” என்றேன். “நிஷாதர்களின் குலத்தில் உருவானவன் அவன் என்பதுதான் காரணம்”

“ஆ! சிறந்த பதில்!” என்றது ஆபிசாரன். கானபூதியிடம் “இவருக்குக் கதைகளைக் கேட்கும் தகுதி உள்ளது, நான் சொல்கிறேன், எல்லா தகுதிகளும் உள்ளன” என்றது.

நான் “குணாட்யரைப் பற்றி இங்கே பைசாசிகர் பேசிக்கொண்டிருந்தார். அவர் என்ன ஆனார்?” என்றேன்.

“நீ கேட்ட கேள்வி வேறொன்று. பெண்களைப் பற்றியது.”  என்று சக்ரவாகி சொன்னது “அதற்கு மட்டும்தான் பைசாசிகர் கதைகளின் வழியாக பதில் சொல்வார்…”

”என்ன கேள்வி என்று நான் சொல்கிறேன்” என்றது சூக்ஷ்மதரு “அன்னையர் எங்கே ஏன் குழந்தைகளைக் கைவிடுகிறார்கள், அதுதான் உன் கேள்வி.”

ஆபிசாரன் அவர்களை உந்தி விலக்கி என்னருகே வந்தது “குணாட்யரைப் பற்றி நான் சொல்கிறேன். குணாட்யர் தன் இல்லத்துக்குச் சென்றார். அழுதபடியே தன் பின்னால் வந்த தன் மாணவர்கள் அனைவரையும் விலகிச்செல்லும்படி சொன்னார். அவருடைய இரண்டு அணுக்க மாணவர்கள் மட்டுமே அவருடன் இருந்தனர். குணதேவனிடம் பழுக்கக் காய்ச்சிய எழுத்தாணியால் தன் இரு காதுகளையும் குத்தி உடைக்கும்படியும், நந்திதேவனிடம் தன் கண்களை இன்னொரு கொதிக்கும் ஊசியால் குத்திவிடும்படியும் ஆணையிட்டார்.”

”அவர்கள் தயங்கி அழுதார்கள். ஆனால் அது குருவின் ஆணை என்று அவர் சொன்னபோது அவர்களால் ஒன்றும் செய்யமுடியவில்லை. எழுத்தாணியால் அவருடைய காதுகளையும் கண்களையும் அழித்தனர். அவர் தனக்கு அவர்கள் செய்யவேண்டியதென்ன என்று விளக்கிய பின்னர், தன் இடையில் இருந்த பாக்குவெட்டும் கத்தியால் தன் நாக்கை வெட்டிக்கொண்டார். அந்த நாக்கை அவர்கள் கோதாவரியின் கரையில் இருந்த நாமகளின் கோயிலுக்குக் கொண்டுசென்று, அதிகாலையின் வேள்வியில் தேவியின் முன்னால் எரிந்துகொண்டிருந்த அக்னிகுண்டத்தில் இட்டனர். அது இளநீலமாக எரிந்து வானத்திற்குச் சென்றது”

ஆபிசாரன் தொடர்ந்தான். “அவர்கள் அவர் ஆணையிட்டபடி அவரை கைகளைப் பிடித்து இட்டுச் சென்று கோதாவரியின் மறுகரையில் இருந்த அடர்ந்த காட்டுக்குள் விட்டனர். அதன்பின் திரும்பிப் பார்க்காமல் நடந்து பிரதிஷ்டானபுரிக்கு மீண்டு வந்தனர். அவர்கள் அதன்பிறகு காவியப்பிரதிஷ்டான சபைக்கு செல்லவில்லை. ஆற்றங்கரையிலேயே குடில்கள் அமைத்து அங்கே தங்களைத் தேடிவந்தவர்களுக்கு இலக்கணமும் காவியமும் கற்றுக்கொடுத்தபடி வாழ்ந்தனர். காவியசபையின் தலைவராக சர்வசர்மன் ஆனான். ரத்னாகரன் அவனுடைய துணைவனாக சபையில் அமர்ந்தான்.”

“சிலநாட்கள் குணாட்யரைப் பற்றி பிரதிஷ்டானபுரியில் பேசிக்கொண்டார்கள். அவரது கதைகளை கவிஞர்கள் பாடல்களாக எழுதி தெருக்களில் பாடினார்கள். அந்தப் பாடல்களும் கதைகளும் பாரதம் முழுக்க பரவின. அதன்பின் குணாட்யர் மறக்கப்பட்டார். அவரை காவியங்களில் மட்டுமே நினைவுகூர்ந்தனர். அவரை காட்டில் புலி தின்றுவிட்டது என்றும், யக்ஷர்களோ பைசாசிகர்களோ கொன்றுவிட்டார்கள் என்றும் பேசப்பட்டது” ஆபிசாரன் சொன்னான். “நிகழ்காலம் அப்படிப்பட்டது. அது எதிர்காலத்தை அறியாதது, இறந்தகாலத்தை மறந்துவிடுவது.”

நான் கானபூதியிடம் “உன் கதையைச் சொல்” என்றேன்.

“நான் சொல்லவிருப்பது குணாட்யரின் கதையைத்தான். அவரை நான் காட்டில் சந்தித்தேன்” என்று கானபூதி சொல்லத்தொடங்கியது.

ஆறு தாரகைகள்

யுவன் சொல்வது போல் இப்பின்னுரை இந்நாவலின் நீண்ட ஆலாபனை அல்லது வலுவான அடித்தளம் தான். இந்நாவலின் மத்யமும், துரிதமும் எங்கிருந்து முளைத்தெழுந்தன என்று உணர்ந்து கொள்ள முடிகிறது.

ஆறு தாரகைகள் – முத்து மதிப்புரை

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on June 03, 2025 11:31

Jeyamohan's Blog

Jeyamohan
Jeyamohan isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow Jeyamohan's blog with rss.