Jeyamohan's Blog, page 88

May 28, 2025

நீ. வின்சென் டிபோல்

[image error]ஈழத்து நாட்டுக்கூத்து கலைஞர். பல நாட்டுக்கூத்து, இசை நாடகங்களை எழுதியுள்ளார். தன் குரல் வளத்தாலும், பாகவதர் பாணி நடிப்பாலும் அறியப்படுகிறார். மாணவர்கள் இளைஞர்களுக்கு நாட்டுக்கூத்தைப் பழக்கிய அண்ணாவியார்.

நீ. வின்சென் டிபோல் நீ. வின்சென் டிபோல் நீ. வின்சென் டிபோல் – தமிழ் விக்கி
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on May 28, 2025 11:32

காவியம் – 38

அடையாளம் தெரியாத முகம், சாதவாகனர் காலம்.பொயு2 மதுரா அருங்காட்சியகம்

ஊர்வசி தேஷ்பாண்டே ஒவ்வொரு நாளும் நலிந்துகொண்டே வந்தாள். தனியாக அமர்ந்து பேசிக்கொண்டாள். எவரிடமோ பூசலிட்டாள். சீற்றம் அடைந்து கூச்சலிட்டபடி எழுந்து ஓடினாள். கைக்குச் சிக்கிய பொருளை எடுத்து சுற்றிலும் கண்ணுக்குத் தெரியாத எவரையோ அடித்தபடி சுழன்று விழுந்தாள். தன் அருகிலிருந்து எவரையோ துரத்திக்கொண்டே இருந்தாள்.

அவளை மீண்டும் மீண்டும் உளவியல் மருத்துவர்களிடம்தான் அழைத்துப் போனார்கள். அவர்கள் மாத்திரைகளை எழுதிக்கொண்டே இருந்தனர். ”ஓர் எல்லைக்குமேல் மாத்திரைகளின் அளவைக் கூட்டமுடியாது. அவள் கர்ப்பிணி. குழந்தைக்கு ஏதாவது ஆகலாம்” என்றார்கள். ஆனால் வேறுவழியில்லாமல் மருந்தைக் கூட்டிக்கொண்டும் இருந்தனர்.

ஊர்வசியின் கண்களை ஒருமுறை ருக்மிணி நேருக்கு நேர் பார்த்தாள். அவள் தலைகுனிந்து ஏதோ பேசிக்கொண்டிருக்கையில் ருக்மிணி அறைக்குள் நுழைந்தாள். ஊர்வசி நிமிர, அக்கணம் இருவர் கண்களும் தொட்டுக்கொண்டன. ருக்மிணி திடுக்கிட்டு உடல்நடுங்க, ஓடி வெளியே சென்றுவிட்டாள். அவளுக்குப்பின் ஓடிவந்த ஊர்வசி தன் மாமியாரையும் மாமனாரையும் மிகக்கீழ்த்தரமான சொற்களால் வசைபாடத் தொடங்கினாள்.  வேலைக்காரர்களே அந்தச் சொற்களைக் கேட்டு மிரண்டு விலகிச் சென்றனர்.

அந்தச் சொற்களெல்லாம் எப்படி அவளுக்குத் தெரியவந்தன என்ற திகைப்பு ருக்மிணிக்கு வந்தது. அதைவிட ருக்மிணி மட்டுமே அறிந்த, ஒரு போதும் அவளே அவளுக்குள் சொல்லிக்கொள்ளாத  அந்தரங்கங்களை எல்லாம் ஊர்வசி கூவிச்சொல்ல தொடங்கினாள். “உன் பூனைக்கண்ணனின் உலக்கை சிவப்பாக இருக்கும்… போடி…” என்று ஆரம்பித்து வசைகளைக் கொட்டினாள். அச்சொற்களை தவிர்ப்பதற்காக ருக்மிணி ஓடிப்போய் தன் அறைக்குள் நுழைந்து கதவை மூடிக்கொண்டாள்.

“அய்யய்யோ, மலக்கிடங்கை எடுத்து தலைமேல் கொட்டியதுபோல ஒரு மொழி… எப்படி அவளுக்கு இதெல்லாம் தெரிகிறது?” என்று அவள் தன் கணவனிடம் கேட்டாள்.

“அவள் கணவனிடமிருந்து தெரிந்துகொண்டிருப்பாள். குடித்தால் அவன் தெருவில் வாழும் கழிசடையின் மொழிதான் பேசுகிறான்” என்று தேஷ்பாண்டே சொன்னார்.

அவர்கள் அஸ்வத்திடம் அவளுடைய நிலைமையை பலமுறை எடுத்துச் சொன்னார்கள். அவன் ஆர்வமே காட்டவில்லை. “குழந்தை பிறந்தால் சரியாகிவிடும்” என்று சொன்னான். “முன்பே அவளுக்கு இப்படி வந்திருக்கிறது… சிறுவயதிலேயே இப்படி வந்திருக்கலாம். சரியான நோய்க்காரி… அவளை என் தலையில் கட்டிவைத்தீர்கள்.”

அவன் குடி முற்றி நோயாளிபோல ஆகிவிட்டிருந்தான். கழுத்து மெலிந்து தலை நடுங்கியது. கன்னங்கள் வெம்பியிருந்தன. கண்களுக்குக் கீழே சுட்ட இலைபோல கருகிய சுருக்கங்கள். கண்களில் சிவந்த நீர்ப்பளபளப்பு.

“இப்படி குடிக்காதே… உன் வேலைக்குக் கூட இது நல்லது அல்ல” என்று தேஷ்பாண்டே சொன்னார்.

“இப்போது கொஞ்சம் வேலை அதிகம்… அதுதான்” என்று அவன் சொன்னான்.

”எதையும் மனதில் வைத்துக் கொள்ளாதே… நம் குடும்பத்தின்மேல் எவரோ வைத்த சூனியம் இது. நாம் தோற்றுவிடக்கூடாது” என்றபோது ஹரீந்திரநாத்தின் குரல் உடைந்தது. “ஊரே அண்ணாந்து பார்த்த குடும்பம்… நீதான் அதன் வாரிசு.”

அவனிடம் ஒரு பழக்கம் உருவாகியிருந்தது. வாயில் ஏதோ இருப்பதுபோல துப்பிக்கொண்டே இருந்தான். சிகரெட் இழுப்பதும் துப்புவதுமாகவே இருந்தான். பாட்னாவுக்கு வந்தால் அவன் சிகரெட் பிடித்தபடி ஒரு மணி நேரம் இருப்பான். ஒரு ஃபோன் வரும், அப்படியே கிளம்பிவிடுவான். அவன் ஊர்வசியை அறைக்கு வெளியே நின்று பார்ப்பதுடன் சரி. அவள் அவனை அடையாளம் காண்பதே இல்லை.

ஊர்வசியின் நடத்தைகள் மேலும் விசித்திரமாக ஆகிக்கொண்டிருந்தன. அவள் கழிப்பறைக்குள் சென்று அமரத்தொடங்கினாள். கழிப்பறைக்குச் சென்று மலம் கழித்தபின்புகூட கழுவாமல் வந்தாள். அதன்பின் வேலையாட்களுக்கான கழிப்பறைக்குள் போய் அமர்ந்தாள். ஒருமுறை உள்ளே கைவிட்டு அள்ளி இரு கைகளிலும் வைத்திருந்தாள். இன்னொருநாள் கொல்லைப்பக்கம் சாக்கடைக்குள் இறங்கி சப்பணம் போட்டு அமர்ந்திருந்தாள். அவளை இழுத்து எடுத்தபோது அவள் அவர்கள் எவருமே அதுவரை கேட்டிராத மொழியில் ஏதோ சொன்னாள்.

ஒரு பூஜையைச் செய்தால் என்ன என்று ருக்மிணி தன் கணவனிடம் சொன்னாள். “லக்ஷ்மி என்னிடம் சொன்னாள். சக்தி வாய்ந்த ஒரு வைதிகர் இருக்கிறார். ஹேமந்த்குமார் சர்மா என்று பெயர். அவர் வேதம் ஓதினால் எல்லா தீங்கும் பறந்துபோகுமாம்.”

“என்ன தீங்கு?” என்று தேஷ்பாண்டே எரிச்சலுடன் கேட்டார். “பேய்களா? அதற்கு நீ வைதிகரைக் கூப்பிடக்கூடாது. பிங்கு நாயக் என்று ஒரு பூசாரி இருக்கிறான். துடைப்பத்தால் அடித்தே பேய்களை ஓட்டுவான் என்று என் கணக்குப்பிள்ளை நேற்று சொன்னார். கூப்பிடுவோமா?”

“அவனை அடுத்தபடியாக கூப்பிடுவோம். முதலில் இவரைக் கூப்பிட்டுப் பார்ப்போம்” என்று அவள் சொன்னாள். அவருடைய எரிச்சலையும் நையாண்டியையும் அவள் புரிந்துகொள்ளவில்லை.

“பூஜை என்றால் ஹோமமா?”

“ஆமாம், நூற்றெட்டு சுமங்கலிகள் கலந்துகொள்ளவேண்டும். பூஜை முடிந்து வேள்விப்புகை எல்லா அறைக்குள்ளும் சென்றால் போதும்…”

“இவள் இப்படி என்று ஊருக்கே சொல்லவேண்டும் என நினைக்கிறாய்?”

“இப்போது ஊருக்கு தெரியாது என நினைக்கிறீர்களா? நாம் போகாத டாக்டர் இல்லை இந்த ஊரில்…”

தேஷ்பாண்டே ஒன்றும் சொல்லவில்லை. அவளைத் தடுக்க முடியாது என்று அவர் அறிந்திருந்தார். பத்து நாட்களுக்குள் எல்லா ஏற்பாடுகளும் செய்யப்பட்டன. இருபது வேலைக்காரர்கள் வீட்டைத் தூய்மை செய்தனர். வீடு வைதிகமுறைப்படி அலங்கரிக்கப்பட்டது. முந்தைய நாளே ஹேமந்த்குமார் சர்மா தன் இரண்டு மாணவர்களுடன் வந்து சேர்ந்தார். அவரே ஹோமத்துக்கான எல்லா பொருட்களையும் கொண்டுவந்திருந்தார்.

“இவரே பார்க்க ஒரு பிங்கு நாயக் மாதிரித்தான் இருக்கிறார்” என்று தேஷ்பாண்டே சொன்னார்.

“வாயை மூடுங்கள்… வேத ஒலியில் எல்லாம் அகன்று இல்லம் சுத்தமாகவேண்டும்.”

ருக்மிணி வீடுவீடாகச் சென்று பெண்களை அழைத்திருந்தாள். ஆகவே நூற்றெட்டு சுமங்கலிகள் வர ஒத்துக்கொண்டனர். பெரும்பாலும் ஐம்பது வயது கடந்த பெண்கள். அவர்களுக்கும் என்ன நடக்கிறது என்று பார்க்க ஆவல் இருந்தது. ருக்மிணி தேஷ்பாண்டே வீட்டில் நடப்பது அவர்களின் பேசுபொருளாக பல மாதங்களாகவே இருந்து வந்தது. ஊர்வசிக்கு பேய் பிடித்திருக்கிறது என்றும், அந்தப் பேய் ருக்மிணி தேஷ்பாண்டேயின் தாய்தான் என்றும் சுமித்ரா ராய் சொன்னாள். “பாவம் கிழவி, அவள் ஆத்மா சாந்தி அடையவில்லை. அவளை அவள் மகனே பட்டினி போட்டுக் கொன்றான் என்கிறார்கள்.”

தேஷ்பாண்டே இல்லத்தில் முன்பும் ஏராளமான பேய்கள் இருந்தன என்று மாதங்கி பாண்டே சொன்னாள். “அங்கே ஏராளமான பெண்களை கொன்று உள்ளேயே புதைத்துவிட்டார்கள். ஹரீந்திரநாத் தேஷ்பாண்டேயின் தந்தை ஃபணீந்திரநாத் தேஷ்பாண்டே பெரிய பெண்பித்தர். எந்தப் பெண்ணாக இருந்தாலும் இழுத்துக்கொண்டு போய்விடுவார்…”

“அதெல்லாமில்லை. அவள் மகளை அவர்களே ஆள்வைத்து கொன்று புதைத்துவிட்டார்கள். அவள் ஒரு சமருடன் மதராஸுக்கு ஓடிப்போய்விட்டாள். எனக்கு உள்கதை எல்லாமே தெரியும்… அந்த சமரையும் பெண்ணையும் தெற்கே மதராசிலேயே கொன்று புதைத்தார்கள். அந்தப் பெண்ணின் பேய்தான் இது. ருக்மிணி ஒன்றும் தெரியாதவள் போல நடிக்கிறாள். நம்மைப்போன்ற சுமங்கலிகள் வந்து வீடு மங்கலமாக ஆகிவிட்டால் பேய் ஓடிவிடும் என நினைக்கிறாள்.”

“அந்தப்பெண் எங்கோ அந்தமானில் இருப்பதாகத்தானே சொன்னார்கள்?”

“யார் சொன்னார்கள்? ருக்மிணியா? கேட்டால் ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு கதை சொல்வாள்…”

ஹோமம் நிகழ்ந்த நாளில் விடியற்காலையிலேயே தேஷ்பாண்டேயின் வீட்டின் மிகப்பெரிய கூடம் நிறைந்துவிட்டது. அதன் நடுவே ஹோமகுண்டம் அமைக்கப்பட்டு சடங்குகள் நடைபெற்றன. புகையை மின்விசிறி வைத்து வெளியே தள்ளினார்கள். வேதகோஷம் ஒலித்துக் கொண்டிருந்தது. பட்டுப்புடவைகளும் நகைகளும் அணிந்த பிராமணப் பெண்கள் அப்பால் வரிசையாக அமர்ந்திருந்தனர். அவர்கள் முன் வெள்ளித்தாம்பாளங்களில் கனிகளும் மலர்களும் வைக்கப்பட்டிருந்தன.

ருக்மிணி தேஷ்பாண்டே அந்தச் சடங்கை ஏற்பாடு செய்வதில் ஈடுபட்டபோது கொஞ்சம் கொஞ்சமாக அதில் ஈடுபாடு கொண்டு அதை ஒரு வெறியாக ஆக்கிக்கொண்டாள். அவள் அத்தனை தீவிரத்துடன் எதிலாவது ஈடுபட்டு நீண்ட நாட்கள் ஆகியிருந்தன. ஒவ்வொரு பொருளாக அவளே ஓடி ஓடி வாங்கினாள். அதற்காகவே பணத்தை அள்ளி இறைத்தாள். நிகழ்ச்சிக்கு வரும் எல்லா சுமங்கலிகளுக்கும் இரண்டு பவுன் எடையில் ஒரு தங்கச்சங்கிலியும் ஒரு பட்டுப்புடவையும் கொடுக்க முடிவெடுத்தாள்.

அந்த பூஜை வைதிகச் சடங்காகவும் இல்லாமல், வங்காளத்து தாந்திரீகச் சடங்காகவும் இல்லாமல் கலவையாக இருந்தது. பலவகை நாட்டுப்புறச் சடங்குகளும் கலந்திருந்தன. அதற்கு என்னென்னவோ பொருட்கள் தேவைப்பட்டன. சீசன் முடிந்துவிட்டிருந்தாலும் கரும்பு தேவைப்பட்டது. கருப்பு நிறமான தேன் தேவைப்பட்டது. கன்னங்கரிய நிறத்தில் மூன்று பட்டுப்புடவைகள் சொல்லிச் செய்யவேண்டியிருந்தது.

பூஜை தொடங்கியபோது ருக்மிணி ஒரு நிறைவை அடைந்தாள். எல்லாம் முறையாக நடக்கிறது. எல்லாம் அமைந்து வருவதே எல்லாம் சரியாகிவிடும் என்பதற்குச் சான்று. அதை செய்து முடித்தவள் அவள், அந்த யோசனையே அவளுடையதுதான். அந்த வீட்டை அவள்தான் காப்பாற்றினாள். அவளுக்குப் பெருமிதமாக இருந்தது.

காலையிலேயே ஊர்வசியை எழுப்பி குளிப்பாட்டி பட்டுப்புடவை கட்டி, நகைகள் போட்டு அலங்கரித்திருந்தார்கள். அவளுக்கு முந்தையநாள் இரவு பாதிப்பங்கு மாத்திரை கொடுத்தால் போதும் என்று ருக்மிணி ஆணையிட்டிருந்தாள். அவளே நாலைந்து முறை போய்ப்பார்த்துவிட்டு வந்திருந்தாள். ஹேமந்த்குமார் சர்மா சொன்னதும் வேலைக்காரிகள் போய் அவளை அழைத்து வந்தார்கள்.

படுக்கையில் அமர வைக்கப்பட்டிருந்த ஊர்வசி அப்படியே சரிந்து விழுந்து தூங்கிவிட்டிருந்தாள். அவளை எழுப்பி, புடவையையும் நகைகளையும் சரிசெய்து, இரண்டு பக்கமும் இருவர் கைத்தாங்கலாக கூட்டிவந்தனர். அவள் தூக்கத்திலேயே வந்தாள். கால்கள் நடைபின்னி தரையில் இழுபட்டன. தலையும் முன்னால் கவிழ்ந்து தொங்கிக்கொண்டிருந்தது.

அவளை அங்கே விரிக்கப்பட்டிருந்த தர்ப்பைப்புல் மேல் அமரச் செய்தனர். அவள் தலையைச் சுழற்றியபடி முனகிக்கொண்டிருந்தாள். ஹேமந்த் சர்மா அவள் மேல் நீரைத் தெளித்தபோது அவள் சிலிர்த்தாள். சட்டென்று தலைதூக்கி அனைவரையும் பார்த்து தலையை ஒருமாதிரியாகச் சரித்து சிரித்தாள்.

ருக்மிணி “ஊர்வசி, இங்கே பார். உன்னைப் பார்க்க எல்லாரும் வந்திருக்கிறார்கள்” என்றாள்.

ஊர்வசி அவர்கள் அதுவரை கேட்டிராத மொழியில் ஏதோ சொன்னாள். பெண்கள் பயந்துவிட்டனர். அவள் கைநீட்டி அவர்களை சுட்டிக்காட்டி வேகமாக பேசிக்கொண்டே சென்றாள். அது மொழியா வெறும் சத்தங்களா என்று அவர்கள் திகைத்தனர். ஆனால் அவள் கைசுட்டியபோது அவர்களின் பெயர்களை சரியாகச் சொன்னாள்.

ஒரு பெண் பயந்து எழுந்துவிட்டாள். ஊர்வசி கைநீட்டி அமரும்படி சைகை காட்டினாள். அப்போது அவள் குரல் முரட்டு ஆண்குரல் போலிருந்தது. அந்தப் பெண் அப்படியே அமர்ந்துவிட்டாள்.

ஹேமந்த்குமார் சர்மா “பயப்படவேண்டாம்… இதோ இது கிளம்பிவிடும்” என்றார்.

ஊர்வசி சட்டென்று குமட்டினாள். முன்னால் குனிந்து அங்கிருந்த வேள்விப்பொருட்கள் மேல் வாந்தி எடுத்தாள். அதேகணம் மலநாற்றமும் எழுந்தது. ஹேமந்த் சர்மா அதை எதிர்பார்க்கவில்லை. அவர் தர்ப்பையுடன் பாய்ந்து விலகினார்.  பெண்கள் எல்லாம் கூச்சலிட்டபடி எழுந்துவிட்டனர்.

ருக்மிணி “ஊர்வசி, மகளே, என்ன இது?” என்று அவளை நோக்கி சென்றாள்.

ஊர்வசி உரக்கக் கூச்சலிட்டபடி எழுந்து நின்றாள். “சீ நாயே… அப்பால் போடி… பெற்ற பெண்ணை ஆள் வைத்து கொன்றவள்தானே நீ? என் குழந்தையையும் கொல்லப்பார்க்கிறாயா? சாதிகெட்டவளே, ரத்தக்கலப்பு கொண்ட சாக்கடை நீ… பூனைக்கண்ணனின் வேசி நீ… தள்ளிப்போடீ” என்று வசைபாடினாள்.

“ஊர்வசி… இதோபார்” என்று ஏதோ சொல்லியபடி ருக்மிணி அவள் அருகே போய் கையைப் பிடித்தாள்.

ஊர்வசி ஏதோ அறியாத மொழியில் வீறிட்டபடி அருகே இருந்த கனமான பித்தளை விளக்கை எடுத்து ஓங்கி ருக்மிணியின் மண்டையை அறைந்தாள்.

ஓசையே எழுப்பாமல் அப்படியே ருக்மிணி கீழே விழுந்து அக்கணமே இறந்தாள். அவள் உடலெங்கும் மின்னதிர்ச்சி போல ஓரு வலிப்பு மட்டும் ஓடிச் சென்றது. விரல்கள் நடுங்கி அதிர்ந்து பின்னர் விடுபட்டன. கண்கள் விழித்திருக்க, வாய்திறந்து மஞ்சளோடிய பற்களின் அடிப்பகுதி தெரிந்தது. இடது கையின் சுட்டுவிரல் மட்டும் சற்றுநேரம் அதிர்ந்துகொண்டிருந்தது.

பெண்கள் கூச்சலிட்டபடி வெளியே ஓடினார்கள். தன் அறைக்குள் எவரிடமோ பேசிக்கொண்டிருந்த தேஷ்பாண்டே ஓடி கூடத்துக்குள் நுழைந்தபோது ஹேமந்த்குமார் சர்மாவும் மாணவர்களும் அலறியடித்து அவரைக் கடந்து வீட்டுக்குள் ஓடினார்கள். அவர் கூடத்தின் நடுவே தரையில் ருக்மிணி கிடப்பதைக் கண்டார். ஓடிப்போய் அவளை தூக்க முயன்றார். அவளுடைய எடையால் அவள் உடலை அவரால் அசைக்க முடியவில்லை. ஆனால் அவள் இறந்துவிட்டது தெரிந்தது. ஆனால் ஒரு துளி ரத்தம்கூட எங்குமில்லை. அந்த விளக்கு அருகே கிடந்தது. அவர் பீதியுடன் நிமிர்ந்து பார்த்தபோது அவரைக் குனிந்து பார்த்து ஊர்வசி சிரித்துக் கொண்டிருந்தாள்.

கானபூதி சொன்னது. “அவள் மனநோய்விடுதிக்குக் கொண்டுசெல்லப்பட்டாள். அங்கே அவள் குழந்தை இறந்தே பிறந்தது. ஒன்பது மாதம் கழித்து அவளும் இறந்தாள்.”

நான் கைகளைக் கட்டியபடி தலைகுனிந்து அமர்ந்திருந்தேன்.

ஆபிசாரன் “அவளுக்கு உகந்த முடிவுதான். அப்படித்தான் அது நிகழவேண்டும்… எப்போதுமே அப்படித்தான்” என்றது.

கானபூதி “இந்தக் கதையின் கேள்வி இதுதான். நீ இதற்குரிய பதிலைச் சொல்லவேண்டும்… சொன்னால் மட்டுமே இந்த ஆட்டம் முன்னால் செல்லும்” என்றது.

“தெரியும், சொல்” என்று நான் சொன்னேன்.

“ருக்மிணி ஏன் தண்டிக்கப்பட்டாள்? அவள் குற்றவாளி என்றால் எப்படி?”

“அவள் குற்றவாளியே அல்ல, அவள் வெறும் பெண். உலகம் அறியாதவள்” என்று சூக்ஷ்மதரு சொன்னது.

“அந்த வகையான குடும்பங்களில் பெண்களுக்கு என்ன இடமிருக்கமுடியும்?” என்றது சக்ரவாகி.

சூக்ஷ்மதரு “ஆம், என் எண்ணமும் அதுதான்” என்றது. “ருக்மிணி தேஷ்பாண்டே தன் மகளை நேசித்தாள். தன் மகளுக்காக கணவனிடமும் மகனிடமும் திரும்பத் திரும்ப மன்றாடினாள். அவர்களை விட்டுவிடும்படிச் சொல்லி கண்ணீர்விட்டு கெஞ்சினாள். மகள் கொல்லப்பட்டபின் மாதக்கணக்காக அழுதாள். அவள் ஆத்மாவுக்காக கோயில்கள் தோறும் பிரார்த்தனை செய்தாள். மகள் நினைவு அவ்வப்போது எழுகையில் அவளுடைய புத்தகங்களையோ ஆடைகளையோ நெஞ்சோடு அணைத்துக்கொண்டு விடிய விடிய அழுதுகொண்டிருப்பாள்… அவள் பரிதாபத்திற்குரிய ஒரு பெண்…”

ஆபிசாரன் “ஆனால் அவளுக்கு தன் மகள்மேல் ஒரு போட்டியுணர்வு இருந்தது. அதை நான் சொல்லமுடியும்” என்றது. “ராதிகா எல்லா வகையிலும் ருக்மிணிக்கு எதிரானவள். ஏனென்றால் அவள் ருக்மிணியின் நிறைவேறாத ஆசைகளின் வடிவமாக ருக்மிணியால் வளர்க்கப்பட்டவள். ருக்மிணி பாட்னாவின் புகழ்பெற்ற வைதிகப் பிராமணக் குடும்பத்தில் பிறந்தாள். ஃபணீந்திரநாத் தன் மகனுக்கு வைதிகக்குடும்பத்தில்தான் பெண் எடுக்கவேண்டும் என்று எண்ணியிருந்தார். ஏனென்றால் அவருடைய சாதி பற்றி அங்கே சந்தேகம் இருந்தது. புகழ்பெற்ற பண்டிதரான சந்திரமோகன் தேஷ்பாண்டே குடும்பத்தில் இருந்து ருக்மிணி தேவியை அவர் மகனுக்காக முடிவுசெய்தார். சந்திரமோகன் தேஷ்பாண்டே அவரிடமிருந்து வாங்கியிருந்த எண்பதாயிரம் ரூபாய் கடனை தள்ளுபடி செய்து அவர் மகளை பதிலுக்குப் பெற்றுக்கொண்டார்.”

“ருக்மிணி வயது வந்தபின் வீட்டைவிட்டு வெளியே சென்றதே இல்லை. பதினெட்டு வயதில் அவள் ஹரீந்திரநாதுக்கு மனைவியாக வந்தாள். வந்தபின் அந்தப்பெரிய குடும்பத்தின் அடிமையானாள். அப்போது அவள் மாமியார் பார்வதி உயிருடன் இருந்தாள். மருமகளை தன் வீட்டின் வேலைக்காரிகளில் ஒருத்தியாகவே பார்வதி நடத்தினாள். அவமதிப்பும் வசையும் கூடுதலாகக் கிடைத்தன. வெளியே செல்லும்போது நகைகளும், ஆடைகளும், ஆடம்பரமான காரும் இருந்தாலும் வீட்டுக்குள் அவளுக்கு பலநாட்கள் உணவுகூட சரியாக அளிக்கப்படவில்லை. அவளை ஹரீந்திரநாத் தேஷ்பாண்டே பொருட்படுத்தவுமில்லை. பார்வதி இறந்தபோது ருக்மிணியின் மகன் அஸ்வத் உயர்நிலைப் பள்ளிக்குச் செல்ல ஆரம்பித்திருந்தான். அவள் உடல் பருத்து நடக்க முடியாதவளாக ஆகியிருந்தாள். அவள் வாழ்க்கை முடிந்துவிட்டிருந்தது என்று உணர்ந்துகொண்டிருந்தாள்.” ஆபிசாரன் தொடர்ந்தது.

“ருக்மிணி இளமையில் நூறு கனவுகளுடன் இருந்தாள். பயணம் செய்யவேண்டும், புதிய நிலங்களைப் பார்க்கவேண்டும். வெளியே சைக்கிளில் செல்லவேண்டும். இமையமலைக்குச் சென்று தனியாக மலையேறவேண்டும். கேதார்நாத் லிங்கத்தைக் கும்பிடவேண்டும்… எந்தக் கனவும் நிறைவேறவில்லை. அந்தக் கனவுகளை ராதிகாவுக்கு அளித்து வளர்த்தாள். பதினாறு வயதில் குட்டைப்பாவாடை அணிந்து டென்னிஸ் விளையாடியவள் ராதிகா. ஸ்கூட்டரில் கல்லூரிக்குச் சென்றாள். கராத்தே கற்றுக்கொண்டாள். தேஷ்பாண்டே ஏதாவது தயங்கினால் ருக்மிணி மகளுக்காக வாதாடினாள். மகளை சுதந்திரமாக வளர்க்கவேண்டும் என்ற வெறிகொண்டிருந்தாள்.”

“ஆனால் ராதிகா சுதந்திரமான இளம்பெண்ணாக ஆனபோது எங்கோ ருக்மிணி பயம் கொண்டாள். மகளிடமிருந்து விலகவும் அவளை தேவையில்லாமல் கண்டிக்கவும் தொடங்கினாள். சுதந்திரம் அளவுக்கு மீறக்கூடாது என்றும், ராதிகா திருமணமாகி கணவன் வீட்டுக்குச் செல்லவேண்டிய பெண் என்றும் சொல்ல ஆரம்பித்தாள். உண்மையில் அது பயமா அல்லது பொறாமையா? அதை அவளாலேயே சொல்லிவிட முடியாது. அவள் அப்படி தன்னைக் கூர்ந்து பார்த்ததும் இல்லை. தாய்க்கும் மகளுக்கும் இடையே அப்படி ஒரு போட்டி வரும் வயது உண்டு. ராதிகாவும் தாயிடமிருந்து மிக விலகிப்போயிருந்தாள்” என்றது ஆபிசாரன். “ஆனால் ராதிகா இறந்தபின் தனக்கும் அவளுக்கும் இடையே உருவான அந்த அந்நியத்தன்மையை எண்ணி எண்ணித்தான் ருக்மிணி அழுதாள்…”

“போதும்” என்று ஆபிசாரனை நிறுத்திய கானபூதி என்னிடம் “நீ உன் பதிலைச் சொல்லலாம்” என்றது. கையை மண்ணில் ஊன்றியபடி “பிழையான பதில் என்றால் விளைவு என்னவென்றும் தெரிந்திருக்கும் உனக்கு” என்றது.

“அவள் குற்றவாளிதான்” என்று நான் சொன்னேன். “அவள் உண்மையிலேயே நினைத்திருந்தால் ராதிகாவின் கொலையை தடுத்திருக்கலாம். எந்த வீட்டிலும் அந்தத் தாய் உறுதியாக இருந்திருந்தால் இப்படி ஒன்று நடக்கவே நடக்காது. அவர்கள் அதை நுட்பமாக அனுமதிக்கிறார்கள். அதற்கு அவர்களுக்கே உரிய பல பாவனைகள் உள்ளன. தனக்கு மகளும் வேண்டும், மகனும் வேண்டும், கணவனும் வேண்டும் என்பது ஒரு பாவனை. தன் சொல்லை எவரும் கேட்கமாட்டார்கள், தனக்கு கடவுளே துணை என்பது இன்னொரு பாவனை. கதறி அழுது மன்றாடி மயங்கிவிழுந்து எல்லா உச்சகட்டங்களையும் நடத்திவிட்டால் தன் பங்கு முடிந்தது என்பது அவர்களின் எண்ணம்… “

“ருக்மிணி எல்லா பாவனைகளையும் ஒன்றுவிடாமல் செய்திருப்பாள். அவளைப் போன்றவர்கள் தங்கள் நடிப்பை தாங்களே நம்புபவர்கள். தாங்கள் நம்புவதற்காக அதை மிகைநாடகமாக ஆக்கிக் கொள்பவர்கள். நம் குடும்பங்களின் மிகப்பெரிய பொய் என்பது தாய் என்பதுதான்… ஒடுக்கப்பட்டவளும், குரலற்றவளும், பாசமே உருவானவளும், குழந்தைகளுக்காக வாழ்பவளும், தியாகியுமான தாய்… எப்பேற்பட்ட பொய்” என்று நன கசப்புடன் சொன்னேன். “அவள் அதைத் தடுத்திருக்க முடியும் அது நடந்தால் அக்கணமே உயிர்விடுவேன் என்று அவள் நெஞ்சில் இருந்து எழுந்த தீயுடன் ஓங்கிச் சொல்லியிருந்தால் அது நடந்திருக்காது…”

பேய்கள் என்னைச் சூழ்ந்து அசைவற்று நின்றன. மூன்று நிழல்களும் பேச்சில்லாமலாகி ஒன்றுடன் ஒன்று படிந்தன.

“சரி, அது நடந்தபின் அவள் என்ன செய்தாள்? அவள் போலீஸுக்கு போனாளா? கொலைகாரனாகிய தன் மகனை தூக்கிலேற்ற வேண்டும் என்று முயன்றாளா? அவனை காப்பாற்றத்தானே நினைத்தாள். தன் குடும்பத்தின் கௌரவம் முக்கியம் என்று தானே யோசித்தாள்? அவளுக்கு தன் மகளைவிட அதெல்லாம்தானே முக்கியமாக இருந்திருக்கிறது? அது அவள் கணவனுக்கும் மகனுக்கும் தெரியும், அதனால்தான் அவர்கள் அவளை தேடித்தேடி வேட்டையாடிக் கொன்றார்கள்” என்று நான் சொன்னேன். “இங்கே குடும்பம் செய்யும் எல்லா பழிபாவங்களுக்கும் உடன்நிற்பவள் அந்த வீட்டுத் தாய்தான்… அந்தப் பாவத்தை தனக்குத்தானே மறைத்துக்கொள்ளவே அவள் கண்ணீர் விட்டு நாடகமாடுகிறாள். அவளை தேஷ்பாண்டே வீட்டு முகப்பில் கழுவில் ஏற்றி அமரச்செய்தால்கூட குறைவான தண்டனைதான் அது.”

“உண்மை” என்றபடி கானபூதி தன் கையை விரித்தது. “நீ வென்றிருக்கிறாய்.”

என் மனவேகம் குறைந்தது. நான் தளர்ந்து மண்ணில் தொய்ந்து அமர்ந்தேன். “நான் இதைச் சொல்ல விரும்பவில்லை. இதற்கு நேர் மாறாக உண்மை இருந்தால் நல்லது என்று நினைத்தேன். நீ என்னை மறுத்து நான் தோற்கவேண்டும் என்று ஆசைப்பட்டேன்” என்று உடைந்த குரலில் சொன்னேன்.

“இதெல்லாம் ஊகங்கள்… இவர் இருக்கும் மனநிலையில்…” என்று சக்ரவாகி சொன்னது.

“நாம் ருக்மிணிக்கு நியாயம் செய்யவில்லை” என்றது சூக்ஷ்மதரு.

”நான் அவள் கதையை முழுக்கச் சொல்லவில்லை” என்றது கானபூதி “நீண்டநாட்களுக்கு முன்னால் ருக்மிணி தேஷ்பாண்டேயின் மகன் அஸ்வத் ஒரு கிராமத்துச் சிறுமியை வல்லுறவுகொண்டு கொன்றான். அவள் பத்தாம் வகுப்பில் தோற்றபின் வீட்டை விட்டு ஓடி கயாவை வந்தடைந்த ஒரு சிறுமி. பேருந்து நிலையத்தில் இருந்து அவளை போலீஸ் ஸ்டேஷனுக்குக் கூட்டிச்சென்றனர். அங்கிருந்து அவளை ஒரு போலீஸ்காரர் அஸ்வத்திடம் அவளைக் கொண்டு சென்றார். அஸ்வத்தும் அவன் நண்பனாகிய உள்ளூர் ரௌடி ஒருவனும் சேர்ந்து அவளை மூர்க்கமாக வல்லுறவு கொண்டனர். மெலிந்த பலவீனமான கிராமத்துச் சிறுமி. அவர்களின் எடை தாளாமல் அவள் இறந்து விட்டாள். சடலத்தை போலீஸ் வண்டியில் ஏற்றிக்கொண்டுசென்று ஊர்க்குளத்தருகே வீசினார்கள்.”

“ஆனால் அதை ஊரார் நாலைந்துபேர் பார்த்துவிட்டனர். பெரிய பிரச்சினை எழுந்தது” என்று கானபூதி தொடர்ந்தது. “ஹரீந்திரநாத் தேஷ்பாண்டே கிட்டத்தட்ட ஐம்பது லட்சம் ரூபாய் செலவழித்து மகன் சிக்கிக்கொண்ட அந்த வழக்கைத் தீர்த்துவைத்தார். அப்போது அவருக்கு எல்லா வகையிலும் கூடநின்றவள் ருக்மிணி. ஒவ்வொரு நாளும் தன் மகனுக்காக அவள் அழுதாள். அவனுக்காக அவளே நேரில் சென்று அமைச்சரைச் சந்தித்துக் காலில் விழுந்து மன்றாடினாள். கோயில்கள் தோறும் வேண்டுதல்கள் செய்தாள். அவன் தப்பியபின் கோயில்களில் நேர்த்திக்கடன் முடித்தாள். ஒரு கணம்கூட அவள் அந்த கிராமத்துச் சிறுமியைப் பற்றி எண்ணவில்லை. அந்தச் சிறுமியின் உறவினர்களுடன் பேரம்பேசியபோது தேஷ்பாண்டே தரப்பினர் அவளே பணத்துக்காக அஸ்வத்திடம் சென்றதாகச் சொன்னார்கள். அதை ருக்மிணி நம்பினாள். பேசும்போதெல்லாம் அந்த கிராமத்து வேசி என்றே சொன்னாள்…”

“ஏனென்றால் அந்தச்சிறுமி அவள் மகள் அல்ல” என்றது கானபூதி. “தன் குழந்தைகளுக்காக நீதியைக் கைவிடும் தாய் வேறொன்றுக்காகத் தன் குழந்தைகளையும் கைவிடுவாள். எந்நிலையிலும் நீதிக்காக நிலைகொள்பவளாக ருக்மிணி இருந்திருந்தால் ராதிகா கொல்லப்பட்டிருக்க மாட்டாள்.”

“ஆம்” என்று சக்ரவாகி சொல்லி தளர்ந்து அமர்ந்தது. “யோசித்தால் அப்படித்தான் தோன்றுகிறது. ராதிகா கொலைசெய்யப்பட்ட பிறகும் ருக்மிணி தன் மகன் அஸ்வத்திடம் பேசிக்கொண்டுதான் இருந்தாள். நல்ல உணவைச் சாப்பிட்டாள். நல்ல ஆடை அணிந்தாள். அந்த வீட்டை நடத்தினாள். குடும்பப்பெருமையை காட்டிக்கொண்டாள். அவ்வப்போது ராதிகாவின் ஆடைகளை அணைத்துக்கொண்டு அவள் அழுதது ராதிகாவுக்காக அல்ல, அவளை மறந்துவிட்டதை தனக்குள் சமன்படுத்திக் கொள்வதற்காகத்தான். அழுது முடித்து அவள் நிம்மதியுடன் விடுபட்டாள். இயல்பாக டிவி பார்க்க அமர்ந்தாள்…”

“எத்தனை இடங்களில் ஒரு கேள்விக்கான விடையை கண்டெடுப்பது… எத்தனை விடைகள்” என்றது சூக்ஷ்மதரு. “ஏதாவது ஒரு விடையில் நாம் சமாதானம் ஆகிவிடவேண்டுமா என்ன?”

கானபூதி என்னிடம் “இப்போது நீ ஒரு கேள்விக்கு உரிமையை அடைந்திருக்கிறாய்” என்றது. “கேள்”

நான் “என்னிடம் கேள்வி என ஏதுமில்லை. கசப்பும் இனம்புரியாத சீற்றமும் மட்டுமே உள்ளது” என்றேன்.

கானபூதி “நீ கேட்கவேண்டியதில்லை” என்றது. “இப்போது உன் உள்ளத்திலுள்ள கேள்வியில் இருந்தே நான் என் கதையைத் தொடங்குகிறேன்.”

“எனக்குக் கதை கேட்க ஆர்வமில்லை” என்றபடி நான் கால்களை நீட்டிப் படுத்துக் கொண்டேன்.

“எனக்குச் சொல்ல ஆர்வமிருக்கிறது” என்று கானபூதி சிரித்தது. “என் கதைகளை நான் சொல்லியாகவேண்டும். எங்கோ ஓர் இடத்தில் நான் தொடங்கியாகவேண்டும்”

“சொல்” என்று சொல்லி நான் கண்களை மூடிக்கொண்டேன்.

“நெடுங்காலத்திற்கு முன்பு, இதே காட்டில், இதே இடத்தில் என் முன் ஒருவன் உன்னைப்போலவே வந்து அமர்ந்திருந்தான். அவனிடம் இருந்ததும் உன்னிடம் இப்போது குழம்பிக் கலங்கிக் கொண்டிருக்கும் அதே கேள்விதான். அவனைப் பற்றிச் சொல்கிறேன்”

“என்ன கேள்வி?” என்று நான் சீற்றத்துடன் சொன்னேன்.

“அன்னையர் எங்கே ஏன் குழந்தைகளைக் கைவிடுகிறார்கள், அதுதானே உன் கேள்வி”

நான் பெருமூச்சுடன் “ஆமாம்” என்றேன். மீண்டும் பெருமூச்சுவிட்டேன்.

கானபூதி தன் கதையைத் தொடங்கியது.

(மேலும்)

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on May 28, 2025 11:32

ஒரு காதல் காட்சி

இந்த சிறிய காட்சித்துணுக்கு இளம் இயக்குநர்கள்- நடிகர்களுக்காக மழவில் மனோரமா நடத்திய போட்டியில் வென்ற ஒன்று. இயல்பான நடிப்பு. இரண்டு பேர் இயல்பாக இருப்பதாக நடிக்கிறார்கள் என்பதை நடிக்கிறார்கள். அத்தனை இயல்பாக

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on May 28, 2025 11:31

Are we presenting politics?

I am listening to your discourses on Indian philosophy and Vedanta. I am also interested in it. But I have a doubt, maybe silly, but I am curious about this. Today Hindu religious fundamentalism is propagated vigorously by politicians, and it is slowly developing as fascism. Our religious personalities are silently supporting this tendency. By discussing Hindu philosophy, are we also supporting this trend?

Are we presenting politics?

இன்றைய காணொளி உலகில் நம் குழந்தைகள் எளிதாக காணொளிக்குள் சென்றுவிடுகிறார்கள். எதையுமே அவர்களால் தொடர்ச்சியாகக் கவனிக்க முடியவில்லை. கவனம் குவியாமல் வாசிக்கமுடியாது. ஆகவே இன்று 90 சதம் பிள்ளைகளும் எதையும் வாசிப்பதில்லை. பள்ளிகளிலும் அதற்கு ஏற்ப காணொளி அசைன்மெண்டுகளை கொடுத்து அதன் வழியாகச் சிலவற்றை கற்றுக்கொள்கின்றன. கம்யூட்டர் கல்வியில் உள்ள பிராப்ளம் சால்விங் கல்விக்கு அதுவே போதுமானதாக உள்ளது.

காணொளியும் வாசிப்பும்

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on May 28, 2025 11:30

May 27, 2025

நம் புரிதலின் பிழைகள்

நமது அடிப்படையான தவறுகளில் ஒன்று நாம் புரிந்துகொள்ளும் முறை, புரிந்துகொள்ளும் கோணம் சரியானதா என்று நாம் யோசிப்பதே இல்லை என்பதுதான். நாம் ஒன்றை புரிந்துகொண்டாலே அது சரியானதுதான், அறுதியானதுதான் என்னும் நிலைபாடை எடுத்துக்கொள்கிறோம்…

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on May 27, 2025 11:36

நெருக்கடிகளின்போது தீவிரமாக வாசித்தல்…

https://vishnupuram.com/  நாவல் பற்றிய பார்வைகளுக்காக விஷ்ணுபுரம் வாங்க

விஷ்ணுபுரம் மின்னூல் வாங்க

அன்புள்ள ஆசிரியர் திரு ஜெயமோகன் அவர்களுக்கு வணக்கம்.

நலமா? 

கடந்த 2020 இல் தங்களின் விஷ்ணுபுரம் நூல் வாங்கினேன். படிக்க ஆரம்பித்தால் 10 பக்கங்களை கூட தாண்ட முடியவில்லை.

தற்போது கடந்த ஒரு மாதமாக கடும் மனசோர்வு என்னவென்றே தெரியாத ஒரு மனப்பதட்டம் இருந்து கொண்டே இருந்தது. ராமநவமி அன்று விஷ்ணுபுரம் வாசிக்கலாம் என்று தோன்றி படிக்க ஆரம்பித்தேன். பக்கங்கள் புரள ஆரம்பித்தன. ஆழ்ந்து படிக்க ஆரம்பித்து விட்டேன். சொற்களை குறிப்புகள் எடுத்து அர்த்தம் விளங்கி கொண்டு படிக்க ஆரம்பித்து விட்டேன். தொடர்ந்து  வாசித்து வருகிறேன். தேங்கிய வினாக்களுக்கு விடை கிடைப்பது போல மூழ்கி இருக்கிறேன்.       

குரங்கு சேக்கப்சர் கட்டுரை போல நானும் நிறைய விளம்பரப் போர்டுகளின் பெயர்களை கவனிப்பேன். நடந்து முடிந்த எங்கள் ஊர் புத்தக விழாவில் தெரிந்த புத்தகக் கடை உரிமையாளர் இந்த முறை ஜெயமோகனின் தங்கப்புத்தகம், அறம்  புத்தகங்கள் நிறைய விற்றன என்றார். 

நன்றி. 

அன்புடன் 

சிவநேசன்

அன்புள்ள சிவநேசன்,

நான் கவனித்த ஒன்று நீங்கள் எழுதியிருப்பது. கொற்றவை, விஷ்ணுபுரம் போன்ற நூல்களை படிப்பவர்கள் பலர் ‘சாமானிய நிலையில்’ அவற்றுக்குள் செல்ல முடியவில்லை என்று சொல்வதுண்டு. பல்வேறு உலகக்கவலைகள், நுகர்வுவேகம், வாழ்வின் அலைவுகள், கவனச்சிதறல்கள் நடுவே கூர்ந்து படிக்கவும் உள்வாங்கவும் முடிவதில்லை.

(வெண்முரசு வேறு ரகம். அதை எவரும் தொடங்கி படிக்கலாம். இறுதிவரை ஒரே வேகத்துடன் படித்து முடிக்கவும் முடியும். ஏனென்றால் மகாபாரதக் கதை ஏதோ வடிவில் அனைவருக்குள்ளும் உள்ளது. அது மிக ஆழமான ஒரு பண்பாட்டுத் தொடர்பு. அத்துடன் வெண்முரசு வலுவான கதைத்தொடர்ச்சியும் கதாபாத்திரப்பரிணாமமும் கொண்டது)

சாதாரணமாக நாம் வாசிக்கும் நாவல்கள் நம் அன்றாடத்துடன் உரையாடுபவை. அவற்றிலுள்ள ஒரு கதையோ, கருத்தோ, கதாபாத்திரமோ, அதன் சிக்கலோ நம் அன்றாடத்துடன் தொடர்புகொண்டு விடுகின்றன. அதைப் பிடித்துக்கொண்டு நாம் உள்ளே செல்லமுடியும். பெரும்பாலானவர்கள் இலக்கியம் வாசிக்கையில்கூட அன்றாடத்தையே வாசிக்கிறார்கள். அதாவது உண்மையில் அது ஒருவகை ஓர் உயர்நிலை வம்புதான்.

ஊர்வம்பை நாம் ஏன் ரசிக்கிறோம்? ஏனென்றால் நாமும் அந்த ஊரின் பகுதி. அந்த வம்பிலும் நாம் ஒரு பகுதிதான். அந்தத் தொடர்பு இருக்கிறது நமக்கு. ‘ஓ, இன்னாரா?’ என்பதுதான் ஊர்வம்பின் மிகச் சுவாரசியமான பகுதி. அதையே இலக்கியத்திலும் சற்று நுட்பமாக அடைகிறோம். தமிழில் நாம் கொண்டாடிய பல படைப்புகள் உண்மையில் பாலியல் வம்புகளின் அழகியல் வடிவங்கள் என்று சொன்னால் ஒருவகையில் உண்மைதான்.

அன்றாடத்தைப் பேசும் யதார்த்தவாதப் படைப்புகளில் நாம் கற்பனை செய்ய குறைவாகவே உள்ளது. நாம் அறிந்த இடம், அறிந்த காலம், அறிந்த பண்பாட்டுச் சூழல். மனிதர்களும் நாம் அறிந்தவர்களே. அதன் பிரச்சினைகளும் நமக்கு இருக்கலாம். அது சமகால அரசியல் சிக்கலைப் பேசுவது என்றால் நாம் எளிதில் இணைந்துகொள்கிறோம். பாலியல் சிக்கல் என்றால் மேலும் தீவிரமாக இணைந்து கொள்கிறோம். நம் சமகாலத்தில் பலராலும் விரும்பப்பட்ட படைப்புகளைப் பாருங்கள், அந்த சமகாலத்தன்மையால்தான் அவை வாசிக்கப்பட்டிருக்கும். இலக்கியம் சமகாலத்தை ‘பிரதிபலிக்க’ வேண்டும் என்று சொல்பவர்களும் உண்டு.

விஷ்ணுபுரம் மற்றும் கொற்றவை முற்றிலும் வேறுபட்டவை. அவற்றில் நாமறிந்த அன்றாடமே இல்லை. அவை நிகழும் களம் நமக்கு முற்றிலும் புதியது, ஏனென்றால் அது ஆசிரியரின் கற்பனை. நாம் முதலில் அந்தக் களத்தைக் கற்பனை செய்துகொள்ள வேண்டியிருக்கிறது. அதில் சென்று வாழவேண்டியிருக்கிறது. அது பேசும் பிரச்சினைகள் அன்றாடத்தன்மை கொண்டவை அல்ல. அதன் கதைமாந்தர்களும் நாமறிந்தவர்கள் அல்ல.

அவற்றை வாசிக்க நாம் இரண்டு வகை பயிற்சியை அடையவேண்டியிருக்கிறது.

ஒன்று, அடிப்படையான மானுடப்பிரச்சினைகளை நாம் உணர்ந்து அவற்றை விவாதிக்கப் பழகியிருக்கவேண்டும். எளிய சமகாலச் சிக்கல்கள் மற்றும் தனிப்பட்ட பிரச்ச்னைகளுக்கு மேலாகவே தத்துவச்சிக்கல்களை, வரலாற்று முடிச்சுகளை, ஆன்மிகவினாக்களை கருத்தில்கொள்ளவேண்டும்.

இரண்டாவதாக, ஒரு புனைவின் கதைமாந்தர் நாம் அன்றாடத்தில் சந்திக்கும் மனிதர்களின் நகல்கள் அல்ல என்றும், அவர்கள் ஏதோ ஒருவகையில் உருவகங்கள் என்றும், அவர்கள் கருத்துநிலைகளையோ உணர்வுநிலைகளையோ பிரதிநிதித்துவம் செய்கிறார்கள் என்றும் உணரவேண்டும்.

கொற்றவை அல்லது விஷ்ணுபுரம் படிப்பவர்களில் பலர் அன்றாடத்தில் இருந்து சற்று ஒதுங்கிக்கொண்டவர்கள். ஓய்வான, அலைச்சல் அற்ற வாழ்க்கை கொண்டவர்கள். கவனக்குவிப்புக்கு உகந்த அன்றாட ஒழுங்கும் இருக்கும். அறிவார்ந்த பயிற்சி கொண்டவர்களாகவும் இருப்பார்கள். ஆகவே சீராக வாசித்து முடிப்பார்கள்.

ஆனால் இன்னொரு சாரார் கடுமையான உளநெருக்கடிகளில் அவற்றை வாசிக்க ஆரம்பித்து மூழ்கிப்போகிறார்கள். உளநெருக்கடி ஒருபக்கம் இழுக்க, மறு எல்லையில் இந்நாவல்களை எடுப்பவர்கள் எதிர்வினையாக அசாதாரணமான  தீவிர மனநிலை ஒன்றை அடைகிறார்கள். ஒரு பாம்பு துரத்தும்போது நாம் வேகமாக ஒடுகிறோம். அந்த ஓட்டத்தில் நாம் அந்தப்பாதையை, அச்சூழலை மிகமிகக் கவனமாக பார்த்து நினைவில் வைத்திருக்கிறோம் இல்லையா, அதுபோல. வழக்கமாக அவ்வழியாகச் செல்லும்போது நாம் எதையும் கவனிப்பதே இல்லை.

சாமானிய வாழ்க்கைநிலையில் உள்ள கவனம் தளர்ந்த நிலையே விஷ்ணுபுரத்தை வாசிப்பதற்கான தடை. எதிர்நிலையாக உருவானாலும் அந்த தீவிரநிலை வாசிப்பை ஒருங்குகுவியச் செய்கிறது. என் நல்ல வாசகர்கள் பலர் கடுமையான அக -புற நெருக்கடிகளின்போது விஷ்ணுபுரம், கொற்றவை ஆகியவற்றை வாசித்தவர்கள்தான்.

அத்துடன், உளச்சோர்வு போன்றவற்றில் இருந்து விஷ்ணுபுரம் போன்றவை உருவாக்கும் கனவுநிகர்த்த மாற்றுலகம் நம்மை விடுவிக்கிறது. இன்னொரு உலகில் மூழ்கியிருக்க முடிகிறது. அத்துடன் நம் சோர்வுகள், கவலைகள் காலப்பெருக்கின் முன் எத்தனை எளியவை என அவ்வாசிப்பு உணரச்செய்கிறது.  

தொடர்க.

ஜெ

விஷ்ணுபுரம் – கடிதம் விஷ்ணுபுரம்- கடிதம்
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on May 27, 2025 11:35

காவியம் – 37

சாதவாகனர் காலம், மதுரா அருங்காட்சியகம் பொயு 2

கானபூதி என்னிடம் சொன்னது. ”கதையின் முடிவு நெருங்கிவிட்டது. எனக்கு உன் அனுமதி தேவை. நான் கையை விலக்கப் போகிறேன். என் கை விலகியதென்றால் கதை முடிந்து விட்டிருக்கும். ஊர்வசி தேஷ்பாண்டே செத்துவிடுவாள்.”

நான் நெஞ்சு படபடக்க அவனைப் பார்த்துக்கொண்டிருந்தேன்.

“நீ முடிவெடுக்கலாம். உன் முடிவே இறுதியானது. எந்த முடிவெடுத்தாலும் அதை எவ்வகையிலும் நீ திருத்த முடியாது. முடிந்த கதைகளுக்குள் எவராலும்  செல்லமுடியாது.”

“நான் என்ன சொல்வது என்று எனக்குத் தெரியவில்லை” என்று தடுமாறிய குரலில் சொன்னேன். ”இந்தக் கதை மிகப்பெரியது… எங்கெங்கோ கட்டற்று சென்றது. என் முன்னால் ஏதேதோ நிகழ்வுகள் அருவிபோல வந்து கொட்டின. நீண்டகாலம், ஏராளமான மனிதர்கள், ஒன்றோடொன்று பின்னிப்பரவிய நிகழ்வுகள்…”

“அதுதான் வாழ்க்கை. நீ வாசிக்கும் நாவல்கள் போல இதற்கு ஒரு ஒழுங்கும் வடிவமும் ஒன்றுமில்லை. இயற்கையிலுள்ள எல்லாவற்றையும் போல இதுவும் கட்டற்றது. ஆனால் இதற்கு ஒரு காரணகாரிய அமைப்பு உண்டு. சாங்கிய தரிசனத்தின் சத்காரியவாதம் கேள்விப்பட்டிருப்பாய்தானே? அதன் வளர்ச்சியான பௌத்தர்களின் பிரதீத சமுத்பாதமும் நீ கற்றதாகவே இருக்கும்.”

“ஆமாம்” என்றேன். “காரணம் காரியமாகவும் அக்காரியமே காரணமாகவும் அமைந்து தொடரும் நிகழ்வுகளின் முடிவில்லாத வலைப்பின்னல்… ”

“ஆகவே ஒவ்வொன்றுக்கும் முடிவில்லாத பின்னணி உள்ளது. எவரிடமிருந்து எங்கிருந்து எப்போது ஒன்று தொடங்குகிறது என்று எந்நிலையிலும் சொல்லிவிட முடிவதில்லை. இங்கே எந்தச் செயலுக்கும் ஆதாரம் என்று எதையும் சுட்டிக்காட்ட முடியாது” என்றது கானபூதி. “ஒரு சிறு செயலுக்கு மொத்தப் பிரபஞ்சமுமே காரணம் என்று சொல்வதே சரியாக இருக்கும்”

நான் பெருமூச்சுடன் அசைந்து அமர்ந்தேன்.

“ஊர்வசி தேஷ்பாண்டே தன் அறையில் அமர்ந்திருக்கிறாள். அவளைச் சூழ்ந்து நிழல்கள் அலைகொள்கின்றன. கண்களை மூடிக்கொண்டு தன் இமைகளுக்குள் அலையலையாக வண்ணங்கள் கொப்பளிப்பதைப் பார்த்துக் கொண்டிருக்கிறாள். எவரோ அருகே இருப்பதைக் கண்டு சட்டென்று கண்விழிக்கிறாள். அறை முழுக்க நிழல்கள் கண்களும் சிரிப்பும் கொண்டு நின்றிருப்பதைக் கண்டு அலறிக்கூச்சலிடுகிறாள். ருக்மிணி ஓடிவருகிறாள்… வேலைக்காரர்கள் வந்து ஊர்வசியைப் பிடிக்கிறார்கள். அவள் கைகளை அங்குமிங்கும் வீசி சுட்டிக்காட்டி குழறிக் கூச்சலிட்டுக்கொண்டிருக்கிறார்கள்” என்றது கானபூதி.

“நான் நினைத்தால் அவளை மீட்கமுடியுமா?”

“முடியும்… அந்த நிழல்களை திரும்ப வரச்சொல்லிவிடலாம். அவை விலகிவிட்டால் அவள் விடுபடுவாள்.”

சூக்ஷ்மதரு என்னிடம் மெல்லிய குரலில் “அந்தப் பெண் ஊர்வசி ஒன்றும் அறியாதவள். உன் சமூகத்திலுள்ள பெரும்பாலான பெண்களைப் போல அவள் முழுக்க முழுக்க அறியாமையிலேயே வளர்க்கப்பட்டாள். அவள் அறியாத வாழ்க்கைக்கு தூக்கி வீசப்பட்டாள். எளிதாக ஏமாற்றப்பட்டாள். அனைத்துப் பருவத்திலும் அனைவரும் அவளை உடலாகவும், காம உறுப்புகளாகவும், பிரசவத்துளையாகவும் மட்டுமே பார்த்தனர். அவள் தந்தையும் தாயும் தமையன்களும் பாதுகாக்கப்படவேண்டிய செல்வம் என்ற கோணத்தில் பார்த்தனர். பிறர் அவளை சூறையாடப்படத்தக்க செல்வம் என்று கருதினார்கள்” என்றது.

என் கையைப் பிடித்து சூக்ஷ்மதரு சொன்னது “நினைத்துப்பார், அவளுக்கு என்னவேண்டும் என்று கூட அவள் அறிந்ததில்லை. அவளுக்கு மகிழ்ச்சியை அளிப்பது எது என்றே அவளுக்குத் தெரியாது. சாதாரண விலங்குகளுக்குக் கூட தெரிந்த ஒன்று அது. எப்போதாவது அவள் தன்னை மறந்து மகிழ்ச்சியாக இருந்தாளா? அவள் அடைந்த மகிழ்ச்சிகளில் எல்லாம் குற்றவுணர்ச்சியும் சஞ்சலமும் கலந்து ஒருவகை தவிப்பாகவே அவை இருந்தன. அவள் மகிழ்ச்சிக்காக முயன்றதே இல்லை. ஏனென்றால் அவளுக்கு அப்படி ஒன்று உண்டு, அதைநோக்கிச் செல்லமுடியும், அதற்காக எதையாவது செய்துகொள்ள முடியும் என்றே தெரியாது. தனக்காக என்ன செய்துகொண்டாலும் அது பெண் என்ற நிலைக்கு இழுக்கு என நினைத்தாள். தியாகமே பெண்மை என்று அவளுக்குச் சொல்லப்பட்டிருந்தது. மகிழ்ச்சியாக இருப்பதே ஒருவகை பிழை என்றுகூட அவளுக்குக் கற்பிக்கப்பட்டிருந்தது.”

சூக்ஷ்மதரு உத்வேகத்துடன் தொடர்ந்தது “அவள் தன்னைத்தானே முடிந்தவரை துயரமானவளாக ஆக்கிக்கொண்டாள். ஏனென்றால் கதைகளில் அவள் அறிந்த நல்ல பெண்கள் அனைவருமே துயரமானவர்கள். சீதைதான் இந்த நாட்டின் பெண்களுக்கெல்லாம் முன்னுதாரணம். சீதை வாழ்நாளில் செய்த சாதனை என்ன? துயரமடைந்தாள் என்பதற்கு அப்பால் சீதைக்கு என்ன தகுதி இருக்கிறது? ஆனால் அவள் இந்த தேசத்தின் தாய் இல்லையா? பாவம் ஊர்வசி. துயரமான பெண்கள் மேல் பிறர் அனுதாபம் கொள்வார்கள் என அவள் நினைத்தாள். உண்மையில் துயரமானவர்களை அனைவரும் வெறுப்பார்கள் என்றுகூட அவள் கடைசிவரை புரிந்துகொள்ளவில்லை. அடிமுட்டாள், வேறொன்றுமில்லை அவள். பண்பாடு, சமூகம், குடும்பம் எல்லாவற்றாலும் கைவிடப்பட்ட ஒரு தனிப்பெண். அவள் மேல் உனக்கு என்ன கசப்பு இருக்கமுடியும்?” என்றது.

நான் ஏதோ பேச வாயெடுப்பதற்குள் என் மறுபக்கத்தில் இருந்து சக்ரவாகி “அவளுக்குள் இருந்த நம்பிக்கைகளுக்கும் காழ்ப்புகளுக்கும் அவளா பொறுப்பு? அவை சரியா தவறா என்று பரிசீலிக்கும் வாய்ப்பைக் கூட அவளுக்கு எவரும் அளித்ததில்லை” என்றது.

நான் அமைதியிழந்து எழ முயன்றேன். ஆனால் என் மனதுக்குள் சொற்கள் திரளவில்லை. மீண்டும் அமர்ந்துகொண்டேன்.

கானபூதி “நீ அவர்கள் சொல்வதை முழுமையாகக் கேள். அதன்பின் முடிவெடு” என்றது.

“ராதிகாவைப் பற்றி அவள் எதையுமே தன் கணவனிடம் பேசவில்லை. தேஷ்பாண்டே குடும்பத்தில் என்ன நிகழ்கிறது என்று அவளுக்குத் தெரிந்திருந்தது என்பது உண்மை. ஏனென்றால் அவள் குடும்பச் செய்திகளிலேயே மூழ்கியிருந்தாள். அதைத் தவிர அவளுக்கு வேறு உலகமே இருக்கவில்லை. ஆனால் அவள் அதைப் பற்றி எதுவுமே தன் கணவனிடம் விசாரிக்கவில்லை. அவன் தன் அப்பாவிடமும் அம்மாவிடமும் தொலைபேசியில் பேசுவதை அவள் கேட்டுக்கொண்டுதான் இருந்தாள். ஆனால் அவன் பேசிமுடித்ததும் ஒன்றும் அறியாதவள் போல நடந்துகொண்டாள்… அவள் எதுவுமே செய்யவில்லை, எதுவுமே சொல்லவில்லை. அவள் எப்படி ராதிகாவின் சாவுக்குப் பொறுப்பேற்க முடியும்?” என்றது சூக்ஷ்மதரு.

”வாழ்நாள் முழுக்க மனம் நோயுற்றும் உடல்நலிந்தும் வருந்திக் கொண்டிருந்த ஒரு பெண் மீதா உன் வஞ்சம்? நீயாவது சென்னை வாழ்க்கை வரை மகிழ்ச்சியாக இருந்திருக்கிறாய். சொல்லப்போனால் நீ வாழ்க்கையை கொண்டாடிய தருணங்கள்கூட உண்டு. சாகும் கணத்தில் மிஞ்சியது என்று சொல்ல பல அரிய நினைவுகள் உனக்கு உள்ளன. அவளுக்கு அப்படி ஒரு தருணம்கூட இல்லை” என்று தொடர்ந்தது சக்ரவாகி.

“அவள் மெய்யாகவே இன்பத்தை அடைந்த தருணம் என்பது ஆனந்த்குமாருடன் அவள் கொண்ட பாலுறவுகளின் போதுதான். ஆனால் அவையெல்லாமே மிகமிகக் குறைவான நேரம் மட்டுமே நீடித்தவை. உடல்கொள்ளும் ஒரு துடிப்பும் அடங்கலும். அதற்கு முன் உள்ளம் அதன் பொருட்டு கொள்ளும் வேட்கையும் படபடப்பும். அவ்வளவுதான். தன் உடலை ஆணிடம் ஒப்படைக்கையில் பெண்ணுக்கு வரும் கிளர்ச்சி, தன் உடல் கையாளப்படுகையில் வரும் அவமானம், தவறு செய்கிறோம் என்னும் பதற்றம் எல்லாம் கலந்த ஒரு கொந்தளிப்பு. அதுதான் அவள் அடைந்த பாலின்பம். அவளுக்கு அவன் தவறானவன் என்று தெரிந்திருந்தது. அந்த உறவு தன்னை சிக்கல்களில் கொண்டு சேர்க்கும் என்று அவள் அகம் பதைத்துக் கொண்டே இருந்தது. அங்கும் அறியாமையால்தான் அவள் சிக்கிக் கொண்டாள். அவன் அவளை பருந்து கோழிக்குஞ்சை தூக்கிக்கொண்டு செல்வதைப்போல கைப்பற்றிக் கொண்டான்.”

“ராதிகாவின் சாவில் அவள் பங்கு என்ன? ஒருவேளை அவள்  அதற்கெல்லாம் காரணமாக அமைந்திருக்கலாம். அவளிடமிருந்து எல்லாம் தொடங்கியிருக்கலாம் என்றுகூடச் சொல்லலாம். அவளை தேஷ்பாண்டே குடும்பத்தினர் அஞ்சியதனாலோ, அவள் முன் தங்களை நிறுவிக்கொள்ளவேண்டும் என்று எண்ணியதனாலோ கூட அந்தக்கொலை நடந்திருக்கலாம். ஆனால் அவளுக்கு எதுவும் தெரியாது. அவளுடைய அறியாமையை பெருங்குற்றமாகக் கருதலாமா? எண்ணிப்பார்” என்று சூக்ஷ்மதரு சொன்னது. “நீ எடுக்கும் முடிவால் இன்னொரு அநீதி நிகழ்ந்துவிடக்கூடாது…”

“இது கதை… இப்போது ஆண்டுகள் எவ்வளவோ கடந்துவிட்டன” என்று நான் சொன்னேன்.

“காலம் இங்கே ஒரு பொருட்டல்ல” என்றது கானபூதி. “ஏனென்றால் இது கதை. இங்கே நிகழ்பவை இனி நிகழலாம். நேற்றும் நிகழலாம்… எந்த வேறுபாடுமில்லை.”

“ஆம், அவள்மேல் எனக்கு அனுதாபம்தான் இருக்கிறது. அவள் ஒரு சாதாரணப் பெண்” என்று நான் சொன்னேன்.

மேற்கொண்டு நான் பேசுவதற்குள் என் பின்னாலிருந்து உரத்தகுரலில் “என்ன பேசுகிறாய் என்று தெரிகிறதா முட்டாள்!” என்று கூவியபடி என் முதுகில் ஓங்கி அறைந்தது ஆபிசாரன். “அவளைப் பற்றி நான் சொல்கிறேன். இந்தக் கதையில் விடுபட்டவற்றை நான் சொல்கிறேன்.”

நான் திரும்பி அவனைப் பார்த்தேன். “என்ன?” என்றேன்.

“அவள் ஏன் ஆனந்த்குமாருக்கு தன் உடலை வழங்கினாள் தெரியுமா? அவன் பெண்வேட்டையன் என்று தெரிந்தும் அவனை ஏன் ஏற்றுக்கொண்டாள் தெரியுமா?” எக்களிப்புடன் சிரித்தபடி அது முன்னால் வந்தது. “அவன் பெண்வெறியன் என்பதனால்தான். அத்தனை பெண்களை அடைந்தவன் காமத்தில் சிறந்தவன் என அவளுடைய காமம் நிறைந்த மனம் கணக்கிட்டது. அந்தக் கணக்குதான் பெண்களை திரும்பத் திரும்ப பெண்வேட்டையர்களுக்கு இரையாக்குகிறது…”

ஏதோ பேசமுனைந்த சூக்ஷ்மதருவை பிடித்து தள்ளிவிட்டு ஆபிசாரன் என் முன் வந்தான். “அது அவள் உடல்… உடலின் வேட்கையும் வீழ்ச்சியும் அவளுடையவை அல்ல. அதைத்தான் இவர்கள் சாக்காகச் சொல்வார்கள். ஆமாம், எல்லாமே உடல்தான். உள்ளம் என்பது உடலின் இன்னொரு வடிவம் மட்டும்தான். கட்டுப்படுத்தத்தக்க உடலுக்கு நாம் பொறுப்பல்ல என்றால் கட்டுப்படுத்தவே முடியாத உள்ளத்துக்கு மட்டும் நாம் பொறுப்பா என்ன?”

“அது எனக்கு பெரிதாகத் தோன்றவில்லை. அதற்கும் எனக்கும் என்ன தொடர்பு?” என்றேன்.

“தொடர்பு உண்டு. அவளை அப்படி ஆக்கியது அந்த உறவு. அவள் கொண்ட அந்த மீறல்தான் அவளை நரம்பு நோயாளியாக ஆக்கியது” என்றது ஆபிசாரன் என்னும் நிழல். “அவளுடைய உள்ளத்தில் நிறைந்திருந்த சாதிமேட்டிமைத்தனம் அவள் குடும்பத்தால் அளிக்கப்பட்டது. அக்குடும்பம் அந்த மேட்டிமைத்தனத்தை தங்கள் சாதியின் ஒட்டுமொத்த மனநிலையில் இருந்து உருவாக்கிக் கொண்டது. அந்தச் சாதி தன் இழிவையும் கையாலாகாத்தனத்தையும் மறைக்க அந்த மேட்டிமைத்தனத்தை கட்டமைத்துக் கொண்டது. இதோ, இந்த மண்மேல் அறைந்து ஆணையிடுகிறேன். காவியதேவனாகிய கானபூதி முடிந்தால் என்னை மறுக்கட்டும். எல்லா மேட்டிமைத்தனங்களும் இழிவை மறைக்க உருவாக்கப்பட்டவைதான். உடலில் விழுந்த அடியின் மேல் எழுந்த வீக்கங்கள்தான் அவை… ஒன்றுகூட விதிவிலக்கில்லை. ஆம், ஒன்றே ஒன்றுகூட!”

“நீ கூச்சலிடவேண்டியதில்லை” என்று சூக்ஷ்மதரு சொன்னது. “உன் தனிப்பட்ட காழ்ப்பை ஒரு பெண்மேல் ஏற்றுகிறாய்”

“நான் மலக்குழியில் தள்ளி கொல்லப்பட்டவன்!” என்றது ஆபிசாரன். “நான் அதை மறைக்கவில்லை. அந்த கொதிப்பில் இருந்து ஒரு கணமும் வெளிவரவில்லை. உங்களைப்போல என்னிடம் கேள்விகள் இல்லை, தத்துவச் சிக்கல்களோ காவிய மர்மங்களோ இல்லை. நான் நேரடியான ஒரு கொப்பளிப்பு. காறித்துப்பப்பட்ட எச்சில் போல. வெட்டி வீசப்பட்ட தசைத்துண்டுபோல… அவ்வளவுதான்”

”நீ சொல்லவேண்டியதைச் சொல்” என்றது கானபூதி.

“ஊர்வசி தேஷ்பாண்டே ஒன்றுமே செய்யவில்லையா? யார் சொன்னது? ஏன் கதைகள் அதை தவறவிடுகின்றன? ஏன்?” என்றபடி ஆபிசாரன் இரு கைகளையும் விரித்து கானபூதியின் முன்னால் சென்றான். “ஏன் எல்லா கதைகளிலும் அதன் மையம் மட்டும் தவறவிடப்படுகிறது?”

“நீ சொல்” என்றது கானபூதி. “உனக்கான இடம் அது”

“ராதிகா தேஷ்பாண்டே ஒரு பங்கியை காதலிக்கும் செய்தி காசியின் பேராசிரியர் ஒருவர் வழியாக ஹரீந்திரநாத் தேஷ்பாண்டேயிடம் வந்தது. அந்தப் பேராசிரியர் ஹரீந்திரநாதிடம் கடன் கேட்டு வந்திருந்தார். கடன் பெற்றபின் அந்த செய்தியை விளக்கமாகச் சொல்லிவிட்டுச் சென்றார்” என்றது ஆபிசாரன். “அந்தச் செய்தியைச் சொல்லும்போது அவர் அத்தனை மகிழ்ச்சியுடன் இருந்தார். ஏனென்றால் எளிய மனிதர்களால் எங்கும் எப்போதும் எந்த பெரிய விளைவையும் உருவாக்க முடிவதில்லை. ஆகவே ஏதேனும் நிகழும்படி ஒன்றைச் சொல்லவோ செய்யவோ முடிந்தால் அவர்கள் பரவசம் அடைகிறார்கள்.”

பேராசிரியர் சென்குப்தா சமூகவியல் பேராசிரியர். பெரிய குடும்பத்தின் ஒரே சம்பாதிக்கும் நபர். ஆகவே வாழ்க்கை முழுக்க பணிந்தும், நயந்தும் பழக விதிக்கப்பட்டவர். நயமாகப் பேசச் சிறுவயது முதல் பழகியவர். அதற்கேற்ப அவருடைய உடலும் முகமும் குரலும் அமைந்துவிட்டிருந்தன. அவர் மெல்ல ராதிகாவின் காதல் பற்றிய பேச்சை எடுத்து அதிர்ச்சியாக உருவாகாமல் துளித்துளித் தகவல்களாக அதை தேஷ்பாண்டேயிடம் சொன்னார். “இது ஒன்றும் பெரிய விஷயம் இல்லை, இப்போதெல்லாம் இளம்பெண்கள் புரட்சி என்ற பெயரில் இப்படி எதையாவது செய்துவிடுகிறார்கள். நீங்கள் கூப்பிட்டுக் கண்டித்தால் போதும். எப்படியிருந்தாலும் அவள் நம் மகள்” என்றார்.

ஹரீந்திரநாத் தேஷ்பாண்டே அந்தச் செய்தியை கேட்டபோது அதன் முழுவீச்சும் அவருக்குப் புரியவில்லை. மகள் ஏதோ தவறு செய்துவிட்டாள் என்ற எண்ணமும் அர்த்தமற்ற ஒரு நடுக்கமும்தான் உருவாயிற்று. ஆனால் சென்குப்தா சென்றபின்னர், அவருடைய வட்டக்கண்ணாடிக்குள் மின்னிய சிரிப்பை நினைவுகூர்ந்தபோது ஓங்கி ஓர் அறை விழுந்தது போல் உணர்ந்தார். நெஞ்சைப் பிடித்துக்கொண்டு நாற்காலியிலேயே சாய்ந்துவிட்டார். கடைச் சிப்பந்திகள் அவரை தூக்கிப் படுக்கவைத்தனர். முகத்தில் நீர் தெளித்து விழிக்கச் செய்தனர். குடிக்கத் தண்ணீர் கொடுத்தனர்.

உடனே வீடுதிரும்பிய ஹரீந்திரநாத் தேஷ்பாண்டே காரில் விசும்பி விசும்பி கண்ணீர் மார்பெல்லாம் வழிய அழுதுகொண்டிருந்தார். வீட்டுக்கு வந்ததும் அவரால் படி ஏற முடியவில்லை. இருமுறை படிகளில் விழப்போனார். தன் அறைக்குள் சென்று மகனை போனில் அழைத்தார். அவன் எங்கோ வேலையில் இருந்தான். அந்த எண்ணை அவன் அலுவலகத்தில் இருந்து வாங்கி அந்த போலீஸ் நிலையத்தை அழைத்து அவனிடம் பேசினார். அவனிடம் விஷயத்தைச் சொல்ல அவரால் முடியவில்லை. சொற்கள் உடைந்து தெறிக்க அழத்தொடங்கினார்.

அஸ்வத் தேஷ்பாண்டே தன் தாய்க்கு ஏதோ ஆகிவிட்டது என்றுதான் நினைத்தான். ஆனால் அதற்காக தந்தை இப்படி அழ வாய்ப்பில்லையே என்றும் தோன்றியது. “என்ன விஷயம்? என்ன நடந்தது? சொல்லுங்கள்” என்று பலமுறை கேட்டான்.

அவர் ஒருவழியாகச் சொல்லி முடித்ததும் அவனுக்கு ஒருவகையான எரிச்சல் மட்டும்தான் வந்தது. ”அவளிடம் உடனடியாக படிப்பை எல்லாம் முடித்துவிட்டு திரும்பி வரச்சொல்லுங்கள். இன்றே கிளம்பி நாளைக்குள் இங்கே அவள் வந்தாகவேண்டும்” என்று சொன்னான்.

அவர் “சொல்கிறேன்… உடனே சொல்கிறேன்” என்றான்.

“கழிசடை… அவளை செல்லம்கொடுத்துக் கெடுத்தவர் நீங்கள்”

“நான் என்ன செய்தேன்… உன் அம்மாதான்…”

“இனி என்ன பேச்சு? ஊர் சிரித்தாகிவிட்டது. அவள் உடனே திரும்பி வரவேண்டும்… நீங்கள் கூப்பிட்டதுமே பையுடன் கிளம்பிவிடவேண்டும். படிப்பும் கல்லூரியும் ஒன்றும் இனிமேல் தேவையில்லை” என்று அவன் கத்தினான். போனை அறைந்து வைத்தான். அதன்பின் அருகே நின்றிருந்த கான்ஸ்டபிளிடம் மேஜைமேல் இருந்த ஒரு ஃபைலை ஏன் எடுத்துக்கொண்டு செல்லவில்லை என்று கேட்டு கெட்டவார்த்தை சொல்லி வசைபாடி அதை தூக்கி நிலத்தில் வீசினான்.

ஆனால் இன்னொரு போனில் அவனுக்கு வேறொரு அழைப்பு வந்தது. அதில் அவனை அழைத்த உள்ளூர் அரசியல்வாதி ஒரு வேலையைப் பற்றி விவாதித்தார். அவனுக்கு அவர் அளிக்க வாய்ப்புள்ள தொகையைப் பற்றிச் சொன்னார். அவன் அவருக்காகச் செய்யவேண்டிய சிலவேலைகள் இருந்தன. அதில் அவன் தந்தை சொன்னதை மறந்துவிட்டான்.

மாலையில் வீடு திரும்பியதும்தான் அவனுக்கு தங்கை நினைவு வந்தது. அவன் தந்தையைக் கூப்பிட்டு ராதிகா என்ன சொன்னாள் என்று விசாரித்தான். அது வெறும் நட்புதான் என்றும், எவரோ தவறாகப் புரிந்துகொண்டு விட்டார்கள் என்றும் அவள் சொன்னாள் என்று தேஷ்பாண்டே சொன்னார். அவள் ஆய்வு செய்யும் அதே தலைப்பில் ஆய்வுசெய்பவன் அவன் மட்டுமே என்பதுதான் அந்த நட்புக்கான ஒரே காரணம். அந்த நட்பையும் உடனடியாக முறித்துக்கொள்வதாக அவள் சொன்னதாக தேஷ்பாண்டே சொன்னார்.

ஹரீந்திரநாத் தேஷ்பாண்டே மகனிடம் “எனக்கு அவள் சொல்வது சரியாகத்தான் இருக்கிறது. அவள் திமிரான பெண். சொகுசுவாழ்க்கையை விரும்புபவளும்கூட. இந்த மாதிரி இறங்கவே மாட்டாள். வேண்டுமென்றேகூட என்னிடம் கோள் சொல்லியிருக்கலாம்…” என்றார்.

“அவளை உடனே கிளம்பி வரச்சொன்னீர்களா?” என்று அஸ்வத் கத்தினான்.

“ஆமாம் சொன்னேன். வருகிறேன் என்று சொன்னாள். ஆய்வை இங்கே பாட்னாவில்கூட தொடர்ந்து செய்யலாம். தேவையென்றால் அங்கே போனால் போதுமாம்” என்றார் தேஷ்பாண்டே. “நாளை மாலையே இங்கே வருவதாகச் சொன்னாள். எனக்கு ஒன்றுமே தவறாகத் தெரியவில்லை.”

“நீங்கள் அவளிடம் என்ன சொன்னீர்கள்?”

“நான் அவளிடம் குடும்ப கௌரவத்தை விட்டுவிடாதே… நான் உயிருடன் இருக்க மாட்டேன் என்று சொன்னேன். சொல்லும்போதே அழுதுவிட்டேன்.”

“அழுதீர்களா? வெட்கமாக இல்லையா உங்களுக்கு?”

“என்ன செய்ய? நான் பயந்துவிட்டேன்.”

“சரி, அவள் வந்ததும் நான் பேசுகிறேன்” என்று அஸ்வத் ஃபோனை வைத்தான். தன் அறைக்குச் சென்று சிகரெட் பிடித்துக்கொண்டு ஃபைல்களைப் பார்த்தான். போன் செய்து அரசியல்வாதியிடம் பேசினான். படுக்கையறைக்குச் சென்றபோது ஊர்வசி டிவி பார்த்துக்கொண்டிருந்தாள். அவளிடம் சொல்லலாமா என்று யோசித்து வேண்டாம் என்று தவிர்த்தான்.

அவள் அருகே கட்டிலில் படுத்துக்கொண்டு அவளிடம் டிவி நிகழ்ச்சி பற்றி கேட்டான். அவள் ஆர்வமில்லாமல் ஏதோ சொல்லி அதை அணைத்தாள். அவன் அவளை பிடித்து இழுத்து மூர்க்கமாக உறவுகொண்டான். எப்போதுமே அவன் அவளிடம் அப்படித்தான் உறவுகொண்டான். ஏனென்றால் அவள் அவனிடம் எந்த வகையான காமத் தூண்டுதலையும் உண்டுபண்ணுவதில்லை. அவள் படுக்கையில் குளிர்ந்த உடலுடன் கண்களை மூடிக்கொண்டு கிடப்பாள். அவள் உடல் அசைவதுகூட உயிரற்ற சடலம் அசைவதுபோல் இருக்கும். முதலிரவில் இருந்தே அவள் அப்படித்தான் இருந்தாள். முதலிரவிலேயே அவன் அவளை வசைபாடி அடித்தான். வேண்டுமென்றே அவள் முலைகளை ஆழமாகக் கடித்து அவளை அலறச்செய்தான். தன்னைச் செயற்கையாகத் தூண்டிக்கொண்டுதான் அவளுடன் உறவுகொள்ள அவனால் முடிந்தது. அவள் திருமணத்திற்குப் பின் ஊதிப்பெருத்து பெரிய வெள்ளைப்பன்றி போல ஆகிவிட்டிருந்தாள். அவள் முலைகள் கனத்து தொங்கி உடலின் இரு பக்கங்களிலாகத் தொங்கின. அவள் இடையும், தொடைகளும் தசை மடிப்புகளாக இருந்தன. அந்த மடிப்புகளில் இருந்த நிறமாற்றமும் அவற்றில் எழுந்த வியர்வை வீச்சமும் அவனுக்குக் குமட்டலை உருவாக்கின.

ஆனால் அவன் அவளை எதனாலோ அஞ்சினான். அவளுக்கு அவனிடமிருந்து சிஃபிலிஸ் வந்ததனாலா என்று அவன் எண்ணிப்பார்ப்பதுண்டு. அவள் அதை அனைவரிடமிருந்தும் மறைத்து அவனைக் காப்பாற்றினாள். ஆனால் அது அல்ல. வேறொன்று. அவன் வெறியுடன் தேடித்தேடி உறவுகொண்ட விபச்சாரிகளின் நினைவுதான் அவனை அஞ்சவைத்தது என அவன் எப்போதாவது உணர்வதுண்டு. விபச்சாரிகள் எந்த அளவுக்கு அடித்தட்டுப் பெண்களாக, எந்த அளவுக்கு மூர்க்கம் கொண்டவர்களாக இருந்தார்களோ அந்த அளவுக்கு அவன் தூண்டப்பட்டான். அவர்கள் பேசும் கெட்டவார்த்தைகளையும் ஆபாசச்செய்திகளையும் விரும்பினான். அவர்களுடன் சலிக்காமல் காமத்தைக் கொண்டாடினான். அதை அவனுடைய கீழே பணியாற்றியவர்கள் அறிந்திருந்தனர். அவர்கள் செல்லுமிடமெல்லாம் பெண்களை அழைத்துவந்து அளித்தனர்.

அதை ஊர்வசி அறிந்திருந்தாள் என அவனுக்குத் தோன்றியது. அதனால்தான் அவள் தீவிர பக்தையாகவும் ஆசாரமானவளாகவும் மாறினாள். எப்போதும் அவன் முன் அவள் குங்குமம், கருகமணிமாலை, படிகமாலைகள் என தோன்றினாள். அவளை தொடுவதே பாவம் என அவன் எண்ணச் செய்தாள். அவளுடன் அவன் மிக அரிதாகவே உறவுகொண்டான். காமத்திற்குப் பின் அவன் அகம் சிறுத்து, தனிமைகொண்டு, சிகரெட் பிடித்தபடி நெடுநேரம் விழித்திருந்தான். அவளிடம் அப்போது பேச விரும்பினான். அவள் தன்னை ஒரு சிறுவனைப்போல, கைக்குழந்தைபோல நடத்தவேண்டும் என அவன் அகம் ஏங்கியது. ஆனால் அவள் அதன்பின் ஒரு வார்த்தைகூட பேசுவதில்லை. பெரும்பாலும் உடனே சென்று குளித்துவிட்டு வருவாள். கூந்தலை உலரச் செய்துகொண்டிருப்பாள். அதன்பின் தண்ணீர் குடித்துவிட்டு அப்படியே தூங்கிவிடுவாள்.

அன்று அவன் நான்காவது சிகரெட்டை பிடித்துக்கொண்டிருந்தான். அவள் குளித்து, வேறு உடை மாற்றிக்கொண்டு. கூந்தலை உலர்த்தினாள். டிவி ஓடிக்கொண்டிருந்தது. அதில் ஏதோ அமிதாப் பச்சன் சினிமா. அவன் அவளுடைய பின்பக்கத்தையே பார்த்துக்கொண்டிருந்தான். அவள் மிகப்பருமனாக ஆகிவிட்டிருந்தாள். அவள் கைகள் பருத்து இரண்டு தனி உடல்கள் போலிருந்தன. அவள் அணிந்திருந்த தடிமனான தங்கச் சங்கிலிகள் அவள் புறங்கழுத்தில் தடத்தை உருவாக்கியிருந்தன.

அவள் எழுந்து படுக்கையை நீவிவிட்டு படுத்துக்கொண்டபோது அவன் சிகரெட்டை குத்தி அணைத்துவிட்டு “ஊர்வசி” என்றான்.

அவள் பெயரைச் சொல்லி அவன் மிகமிக அரிதாகவே அழைத்தான். பெரும்பாலும் ‘இங்கே பார்’ என்றுதான் அழைப்பது வழக்கம். அவள் பெயரைச் சொல்லும்போது முற்றிலும் அந்நியமான ஒருத்தியை அழைப்பதுபோல் அவன் உணர்வதுண்டு. அன்று அப்பெயரை அழைத்தபோது அவன் குரல் இடறியது.

அவள் தலையை மட்டும் திருப்பி அவனைப் பார்த்தாள்.

அவன் படுக்கையில் சற்று சரிந்து கால்நீட்டி “உன்னிடம் ஒன்று சொல்லவேண்டும்” என்றான்.

அவள் தலையசைத்தாள்.

“ராதிகா பற்றி…”

அவள் கண்களில் எந்த ஆர்வமும் தென்படவில்லை. ஆனால் அவன் அறிந்திருந்தான், அவள் கவனிப்பாள் என்று. அவள் எப்போதுமே ராதிகாவின்மீது கசப்பும் காழ்ப்பும் கொண்டிருந்தாள். ராதிகாவின் துணிச்சலும் சுதந்திரமும் அவளை எரிச்சலூட்டிக் கொண்டே இருந்தன. ஆனால் அவளைப் பற்றி ஒன்றுமே சொல்வதில்லை. அவள் பெயரைச் சொல்லும்போது முகம் மாறுபடும், கண்களில் வஞ்சம் தெரியும். மிக அரிதாகக் கேலியாக ஏதேனும் சொல்வாள்.

அவள் அவன் சொல்லும் எதையுமே கவனிப்பதில்லை. அவள் முழு ஆர்வத்துடன் கவனிக்கும் ஒன்றை தான் சொல்லவிருப்பதாக எண்ணினான். அந்த உரையாடல் வழியாக ஓர் அணுக்கம் இருவருக்கும் நடுவே உருவாகும் என்று எதிர்பார்த்தான். அந்த சில நிமிடங்களிலேயே இரவெல்லாம் கவலையுடன் அவர்கள் அதைப் பற்றிப் பேசிக்கொள்வதையும், அவள் தாய் போல அவனை தழுவி ஆறுதல் சொல்வதையும் கற்பனை செய்துவிட்டிருந்தான்.

“ராதிகா பற்றி அப்பா ஒரு செய்தி சொன்னார்” என்று அவன் சொன்னான். எப்படி மேலே சொல்வது என்று தெரியாமல் தத்தளித்து, கூடுமானவரை அழுத்தமாகவும் அதிர்ச்சியூட்டும் படியாகவும் சொல்லவேண்டும் என்று முடிவுசெய்தான். அதுவே அவளுக்குப் பிடிக்கும் என அறிந்திருந்தான். “அந்தப் பெட்டை நாய் அங்கே ஒரு பங்கியுடன் சேர்ந்து கூத்தடிக்கிறாளாம். காசி நகரமே காறித்துப்புகிறதாம்” என்றான்.

அவள் புருவம் சுருங்க அவனை பார்த்துவிட்டு “சரி” என்றாள். கொட்டாவி விட்டபடி திரும்பிப் படுத்துக்கொண்டாள்.

அவன் உடன் சீற்றத்தில் பதறத் தொடங்கியது. “என்ன செய்வது?” என்றான்.

அவள் ஒன்றும் சொல்லாமல் இருக்கக் கண்டு “நீ என்ன நினைக்கிறாய்?” என்றான். அப்போது அவன் குரல் மிக இறங்கிவிட்டிருந்தது.

“நான் என்ன சொல்வது? உங்கள் குடும்பத்தில் என்னென்னவோ இருக்கும்” என்றபின் அவள் கண்களை மூடிக்கொண்டாள்.

அவன் அவளையே பார்த்துக்கொண்டிருந்தான். அவன் உடல் நடுங்கிக்கொண்டே இருந்தது. பின்னர் எழுந்து வெளியே சென்று வராந்தாவில் நின்று தொடர்ச்சியாகச் சிகரெட் பிடித்தான். எட்டு பாக்கெட் சிகரெட். அதன்பிறகுதான் அவன் தனக்குத்தெரிந்த ரவுடியாகிய ராம்சரண் நாயக்கை ஃபோனில் அழைத்தான்.

“அறியாமை எவரையும் குற்றங்களில் இருந்து விடுவிப்பதில்லை” என்று ஆபிசாரன் சொன்னான். அவன் முகம் சீற்றத்தில் இளிப்பு போல விரிந்திருந்தது. “குற்றங்களுக்கான காரணங்கள் குற்றத்தை இல்லாமல் செய்வதுமில்லை. ஆம் என்றால் காவியதேவனாகிய கானபூதி சொல்லட்டும்… இப்போதே சொல்லட்டும்.”

கானபூதி “நான் கதைகளைச் சொல்பவன் மட்டுமே” என்றது.

நிழல்கள் என்னைச் சூழ்ந்து நெருக்கியடித்தன. அவை நான் சொல்லப்போவதை எதிர்பார்த்து நின்றிருந்தன.

“சொல்” என்றது கானபூதி.

“எவர் காரணம், எவர் செய்த குற்றம் என்றெல்லாம் என்னால் யோசிக்க முடியவில்லை. எனக்கு தனிப்பட்ட முறையில் எவர்மேலும் எந்தப் பகையும் இல்லை” என்று நான் சொன்னேன். “குற்றங்களும் பழியும் எல்லாம் பேசப்பேச உருமாறுபவை. ஒன்றுடன் ஒன்று ஒப்பிடுந்தோறும் கூடிக்குறைபவை. என்ன சொன்னாலும் மாறாதது ஒன்றே ஒன்றுதான்… ராதிகா கொல்லப்பட்டாள். அவளுக்கு இழைக்கப்பட்ட அநீதி என்பது கண் முன் நின்றிருக்கும் மலைபோன்றது. அந்த அநீதிக்காக இந்த உலகையே எரித்தழிக்க எனக்கு ஒரு வாய்ப்பு அமைந்தால் அதைத்தான் செய்வேன்… ஒரு நொடிகூட தயங்க மாட்டேன்.”

மூச்சிரைக்க நான் கானபூதியின் மூடிய கைகள்மேல் என் கைகளை வைத்தேன். “பழிகொண்டவர்கள் அழியட்டும். எந்தக் கருணையும் தேவையில்லை. எறும்புகள் எறும்புகளுக்குரிய அழிவை அடையட்டும். யானைகள் யானைகளுக்குரிய அழிவை அடையட்டும்… அழிந்தாகவேண்டும்.”

“உன் விருப்பப்படி” என்றது கானபூதி. “அவள் முடிவைச் சொல்கிறேன்.”

(மேலும்)

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on May 27, 2025 11:33

சி. கணபதிப்பிள்ளை

[image error]சி.கணபதிப்பிள்ளை சைவசமய அடிப்படைகளை விளக்கும் நூல்களை எழுதியவர், சைவநூல்களைப் பதிப்பித்தவர் என்னும் வகையில் ஈழத்துச் சைவ மறுமலர்ச்சிக்குப் பங்களிப்பாற்றினார். சைவத்துடன் இணைத்து மரபிலக்கியத்தை முன்வைத்தவர் என்னும் வகையில் தமிழிலக்கிய ஆய்வுகளின் முன்னோடியாகவும் மதிப்பிடப்படுகிறார். ஈழத்தில் ஆறுமுக நாவலர் உருவாக்கிய சைவத்தமிழ் இயக்கத்தை முன்னெடுத்தவர்.

சுவாரசியமான ஒரு செய்தி, சி. கணபதிப்பிள்ளை சைவராயினும் பின்னாளில் கவிஞனுக்குரியது அழகியல் சார்ந்த இன்னொரு மரபு என்று சொன்னார். கவிச்சமயம் என அதை வகுத்துரைத்தார்.

சி. கணபதிப்பிள்ளை சி. கணபதிப்பிள்ளை சி. கணபதிப்பிள்ளை – தமிழ் விக்கி
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on May 27, 2025 11:33

The unexplainable and logic

I am listening to your speeches continuously. You are speaking with enormous enthusiasm and power. You are cautious not to cross the logical and scientific boundaries of spiritualism. I am doubtful about your way of expression. Could you please clarify if you possess a logical and scientific temperament? Or are you just trying to keep up with the current generation’s expectations? Don’t you have any supernatural, inexplicable experiences?

The unexplainable and logic

நுண்ணலகு அரசியல் பற்றி சச்சரவே இல்லை. அதுவே அது எத்தனை ஆக்கபூர்வமான ஒன்று என்பதற்கான சான்று என நினைக்கிறேன்

இன்னொரு அரசியல்
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on May 27, 2025 11:30

May 26, 2025

சிலநேரங்களில் சிலமனிதர்கள் – ஒரு கழுவாய்

Jeyakanthan

காலச்சுவடு பதிப்பகம் ஜெயகாந்தனின் சில நேரங்களில் சிலமனிதர்கள் நாவலை செவ்வியல் வரிசையில் வெளியிட்டிருக்கிறது. ஜெயகாந்தனின் புத்தகங்கள் எதற்கும் இத்தனை அழகிய பதிப்பொன்று வந்ததில்லை. அவர் தன் நண்பர்களின் நட்பை முதன்மையாகப் பேணுபவர் என்பதனால் தன்னுடைய வழக்கமான பதிப்பாளர்களை மாற்றியதில்லை. அவர்களுக்கு அட்டை என்பது அழகான ஒன்றாக இருக்கவேண்டும் என்ற எண்ணம் எப்போதுமே இருந்ததில்லை.

ஜெயகாந்தனின் நூலை அழகிய தயாரிப்பில் பார்த்தது எனக்கொரு மனக்கிளர்ச்சியை ஏற்படுத்தியது. தமிழகத்தின் முதன்மைப் படைப்பாளிகளில் ஒருவராகக் கருதப்படும் ஒருவருக்கு அழகிய நூலொன்று இத்தனை ஆண்டுகளுக்குப் பின்னரே வருகிறது என்பதே விந்தையான ஒன்று. ஜெயகாந்தன் இருந்து இந்த பதிப்பை பார்த்திருந்தால் பெருமகிழ்ச்சி அடைந்திருப்பார் என்று தயங்காமல் சொல்லலாம். நூல் வடிவமைப்பாளர்களுக்கு என்னுடைய பாராட்டுக்கள்.

உபால்டு கோட்டோவியமாக வரைந்த முழுப்பக்க விளம்பரம் ஒன்று 1976-ல் தினத்தந்தியில் வெளிவந்தது. ஒரு கார் தொலைவில் வருகிறது. சப்பையான காண்டஸா க்ளாசிக் அல்லது இம்பாலா. சிறிய உடல் கொண்ட ஒரு பெண் புத்தகங்களை அடுக்கியபடி சாலையோரம் நின்றிருக்கிறாள். கீழே சில நேரங்களில் சில மனிதர்கள் என்னும் எழுத்துக்கள். அந்த கோட்டோவியம் அளித்த கற்பனையும் சில நேரங்களில் சில மனிதர்கள் என்ற சொல்லாட்சியில் இருந்த அழகிய தாளமும் என்னைக் கவர்ந்தன. இத்தனை ஆண்டுகளுக்குப் பின்னரும் கூட நினைவில் நிற்கும்படி அந்த விளம்பரம் என்னுள் பதிந்திருக்கிறது.

அந்நாட்களில் ஜெயகாந்தன் குமுதம் வார இதழில் ஒரு பக்கத் தொடர் கட்டுரை ஒன்று எழுதிக் கொண்டிருந்தார். நான் அவற்றின் தீவிர வாசகனாக இருந்தேன். அன்று எங்கள் வீட்டருகே இருந்த ஆரம்பப் பள்ளியில் தமிழாசிரியராக வந்தவர் எனக்கு ஜெயகாந்தனின் வாழ்க்கை அழைக்கிறது என்ற நாவலை வாசிக்கத் தந்தார். ஜெயகாந்தனின் மிக மோசமான நாவல் என்று அதைச் சொல்லலாம். அவரது முதல் நாவல் முயற்சி அது. ஆயினும் அது எனக்கு பெரிய உளக்கிளர்ச்சியை அளித்தது. தொடர்ந்து ஒரு மாதத்தில் அன்றுவரை வெளிவந்த ஜெயகாந்தனின் அனைத்து நாவல்களையும் படித்தேன். மூன்று நாவல்கள் அவருடைய வெற்றிகரமான ஆக்கங்கள் என்று எனக்குத் தோன்றியது. முறையே பாரீஸுக்குப்போ, ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம், சில நேரங்களில் சில மனிதர்கள்.

சில நேரங்களில் சில மனிதர்கள், கங்கை எங்கே போகிறாள் ஆகியவற்றை இணைத்து ஒரு பெரு நாவலாக வாசிக்கலாம். ஆனால் இந்த நாவலே கூட தன்னளவில் முழுமையான படைப்பு. அக்னிப்பிரவேசம் என்ற பெயரில் ஜெயகாந்தன் எழுதிய சிறுகதையும் அதை ஒட்டி வந்த விவாதங்களும் இந்த நாவலுக்கு வழிவகுத்தன. இது வெளி வந்த காலத்தில் பெரும் சர்ச்சைகளைக் கிளப்பி அதனாலேயே வாசகர்களின் கவனத்தை ஈர்த்தது. அக்னிப்பிரவேசம் கதை அன்று உருவாக்கிய விவாதத்தை இன்று மேலும் பெரிய வரலாற்றுப் பின்னணியில் பார்க்க முடியும்.

அந்தக் காலகட்டத்தில் ஆயிரமாண்டுக்கால இற்செறிப்புப் பண்பாடு உடைபட்டு, நூறாண்டுக்கால பெண்கல்வி இயக்கம் கனிகளை அளிக்கத் தொடங்கியிருந்தது. பெண்கள் கல்வி கற்க வெளியே சென்று கொண்டிருந்தார்கள். பெண்கள் வேலைக்கு போகலாமா கூடாதா என்பதைப்பற்றிய ஆழ்ந்த விவாதம் நடந்து கொண்டிருந்தது. வழக்கம் போல இந்தியச் சூழலில் பிராமணப் பெண்கள் தான் அதிகமாக படிக்கவும் வேலைக்குச் செல்லவும் முன்வந்தார்கள். வேளாளர்கள் முதலியார்கள் போன்றோர்கள் இன்னும் இறுக்கமான குலநெறிகளுக்குள் தான் பெண்களை வைத்திருந்தார்கள். பிராமணர்களின் ஆசாரியர்களான காஞ்சி சங்கராச்சாரியார் போன்றவர்கள் பெண்கள் கல்வி கற்பதையும் வேலைக்குச் செல்வதையும் கடுமையாக எதிர்த்து வந்தனர். ஜெயகாந்தனின் நாவல் வெளிவந்து முப்பது ஆண்டுகளுக்குப் பிறகு கூட சங்கராச்சாரியார் பெண்கள் வீட்டை விட்டு வெளியே செல்வதும் கல்வி கற்பதும் வேலை செய்வதும் அவர்களை ஒழுக்கமற்றவர்களாக ஆக்கிவிடும் என்று கருத்துரைத்திருந்தார் என்பதை நினைவுகூரவேண்டும்

அன்றைய பிராமணர்களுக்கு ஒரு பெரிய சங்கடம் இருந்திருக்கலாம். அவர்களுடைய மதம், ஆசாரம் நம்பிக்கை ஆகியவை பெண்களை வீட்டுக்குள் பூட்டி வைக்கச் சொல்லின. அன்று உருவாகி வந்த புதிய வாய்ப்புகளும் அதன் லௌகீக சாத்தியங்களும் பெண்களை கல்வி கற்க வெளியே செல்லும்படித் தூண்டின. வேலைக்குச் செல்லும் பெண்களுக்குத் திருமணச் சந்தையில் பெரிய மதிப்பு இருந்தது. பெண்கள் வேலைக்குச் செல்வதன் வழியாக குடும்பங்கள் மிக எளிதாக பொருளியல் சிக்கல்களிலிருந்து விடுபடுவதை உணரமுடிந்தது. மேலும் மேலும் பிராமணப் பெண்கள் கல்விக்கும் வேலைக்கும் சென்று கொண்டிருந்தார்கள். ஆனால் தங்கள் ஆசாரியனின் மறுப்பை எதிர்த்து பிராமணர்கள் வாதிடவும் இல்லை. ஒரு குற்றவுணர்ச்சியுடன் ஒரு மௌன அலையாகவே அவர்கள் மீறிக்கொண்டிருந்தனர்.

அந்தச் சூழலில் தான் ஜெயகாந்தனின் கதை வருகிறது. அதில் எளிய பிராமணப்பெண், அம்மன் சிலை போன்றவள், ஒரு கயவனால் எளிதில் பாலுறவுக்கு ஆட்படுத்தப்படுகிறாள். அவளை அவன் வலுக்கட்டாயமாக கவர்ந்து செல்லவில்லை. சொல்லப்போனால் பேசி ஏமாற்றி அழைக்கவும் இல்லை. அவளுக்குப் புதிய உலகத்தை எதிர்கொள்ளத் தெரியவில்லை, புதியசூழலை கையாளத்தெரியவில்லை என்பதனால் அவள் அவனுக்கு உடன்படுகிறாள். ஒரு வலுவான “நோ” வழியாக அவள் கடந்து வந்திருக்கலாம். ஆனால் அவள் காலாகாலமாக வீட்டில் அடைபட்டிருந்த பெண். அவளால் எதையும் மறுப்பது இயலாது. கைகால் உதற சொற்கள் தொண்டைக்குள் தாழ்ந்து போக மறுக்கத் தெரியாமல் இருந்த ஒரே காரணத்தாலேயே அவள் அவனுக்கு வயப்படுகிறாள். கூடவே அவளுடைய பருவ வயதின் விருப்பமும் இணைந்து கொள்கிறது.

sila-nerangalil-sila-manithargal

இந்தக் கதை பெண்கள் படிக்கவும் வேலைக்கும் செல்லலாமா கூடாதா என்று அன்றிருந்த விவாதத்தின் ஒரு பகுதியாக ஆனதனாலேயே அத்தனை கொந்தளிப்பையும் கிளப்பியது. சொல்லப்போனால் கதைக்கு வெளியேதான் விவாதம் நடந்தது. பெண்கள் வீட்டுக்கு வெளியே சென்றால் இத்தனை எளிதாக நெறி அழிவார்களா? வீட்டைவிட்டு வெளியேறும் பெண்ணுக்கு தன் தெரிவுகளும் தன் வழியும் தெளிவாக இருக்காதா? தன்னளவில் பெண் பலவீனமானவள் தானா? அவ்வாறு ஒரு பெண் தவறிவிட்டால் அதை அக்குடும்பம் இயல்பாக எடுத்துக் கொள்ள வேண்டுமா? அது வழிவழியாக வந்த குலநெறிகளுக்கும் ஆசாரங்களுக்கும் எதிரானதாக ஆகாதா? அவளை அச்செய்தியை மறைத்து ஒருவனுக்குத் திருமணம் செய்துவைப்பது ஏமாற்றுவது ஆகுமா? அவ்வாறு ஒருவன் திருமணம் செய்து கொண்டபின் தெரியவந்தால் அவன் அவளை ஏற்றுக் கொள்ள வேண்டுமா? இப்படி பல கேள்விகள்.

அன்றைய விவாதத்தில் இருசாராருக்கும் சொல்வதற்கான தரப்புகள் இக்கதையில் இருந்தன. பெண்கள் வீட்டைவிட்டு சென்றால் அவர்களால் தங்களை தற்காத்துக் கொள்ள முடியாது என்பவர்களுக்கு இந்தக் கதை ஒரு அரிய வாய்ப்பாக அமைந்தது. பெண்ணின் கற்பு என்பது உள்ளம் சார்ந்ததே ஒழிய உடல் சார்ந்தது அல்ல என்று வாதிடும் முற்போக்குத் தரப்பினருக்கும் ஒரு மேற்கோள் கதையாக அமைந்தது. அதை மேலும் விரிவு படுத்தி ஜெயகாந்தன் எழுதிய இந்த நாவல் அந்தக் கேள்வியை பல்வேறு வரலாற்று பின்புலத்தில் வைக்கிறது.

ஜெயகாந்தன் மார்க்சியர் என்றாலும் வரலாற்று வாதத்தில் நம்பிக்கையற்றவர். எனவே இக்கதை அது நடக்கும் காலத்தில் முன்பு செல்வதே இல்லை. மரபையோ வரலாற்றையோ ஆராய்வதில்லை. நடைமுறைத்தளத்தில் வைத்தே கதையை பேசுகிறது. இந்தக் கதை எந்தவகையிலும் அதற்கு முன்பிருந்த மரபையோ தொன்மங்களையோ குறிப்புணர்த்துவதில்லை, விவாதிப்பதில்லை. ஆனால் இதற்குள் அன்றிருந்த மரபுகள் அனைத்தும் உள்ளன. அனைத்து வகையான பாலியல் மீறல்களையும் அனுமதித்துக் கொண்டு மேலே ஒரு ஆசாரவாதத்தை போர்த்திக் கொண்டு இருக்கும் மரபின் முகமாகவே இதில் வெங்கு மாமா வருகிறார். வெறும் லௌகீக அற்பப் பிறவிகளாக வாழும் சூழலின் பிரதிநிதியாக கங்காவின் அண்ணா வருகிறார். வீட்டுக்குள் அடைபட்டு சுயசிந்தனையற்றிருக்கும் பெண்களின் முகமாக அம்மா. இந்த மூன்று தரப்புகளுக்குள் முட்டி முட்டி அலைக்கழியும் நவீனப்பெண் கங்கா. பழைய காலகட்டத்தில் முளைத்து புதிய காலகட்டத்தில் இலைவிடும் தளிர்.

ஜெயகாந்தன் எழுதிய அனைத்து கதைகளுக்கும் யுகசந்தி என்று தலைப்பு கொடுத்துவிடலாம். சமூக மாறுதலின் ஒரு காலகட்டத்தில் அந்த விழுமிய மாற்றங்களை தன் வாழ்க்கையிலேயே சந்திக்க நேரும் கதாபாத்திரங்கள் அவரால் எழுதப்பட்டவர்கள். சரிதவறுகளும் செல்வழிகளும் குழம்பிக்கிடக்கும் ஒரு காலகட்டத்தில் தொடர்ந்து தன்னையும் சூழலையும் மறுபரிசீலனை செய்து அழுதும் சிரித்தும் தங்கள் வழியைக் கண்டடைபவர்களும் வீழ்பவர்களும். ஆனால் அடிப்படையில் ஒரு மார்க்சியர் என்பதனால் அவர் எப்போதும் நம்பிக்கை சார்ந்த பார்வையையே தேர்ந்தெடுக்கிறார். அதற்கு ஒரே விதிவிலக்கென்று சில நேரங்களில் சில மனிதர்களையே சொல்ல முடியும். இது கங்காவின் மாபெரும் வீழ்ச்சியின் கதை.

வெளிவந்த காலத்தில் சிறுபத்திரிகை சார்ந்த இலக்கியச்சூழலால் இந்த நாவல் முற்றிலும் புறக்கணிக்கப்பட்டது என்றுதான் சொல்ல வேண்டும். அதற்கு பல காரணங்கள். சிற்றிதழ்ச் சூழல் அன்று தன்னை மையப்போக்கிலிருந்து பிரித்துக் கொண்டு தனியடையாளத்தை உருவாக்குவதில் தீவிரமாக இருந்தது. எது இலக்கியம் என்பதை விட எது இலக்கியம் அல்ல என்பதுதான் அன்றைய பேச்சுகளில் முக்கியமானது. பெரும்பாலும் மேற்கத்திய இலக்கியங்களைச் சார்ந்து ஒரு இலக்கியப்பார்வையை இங்கு உருவாக்க முடியுமா என்று முன்னோடி முயற்சிகள் நடந்து கொண்டிருந்த காலம். தீவிர இலக்கியம் என்பது எல்லாவகையிலும் பொதுமக்களின் ரசனைக்கு எதிரானதாகவும் மாற்றானதாகவும் இருக்கும் என்ற நிலைபாடு ஓங்கியிருந்தது.

அத்துடன் அன்றைய சிறுபத்திரிகையின் வாசகர்கள் என்பவர்கள் அதிகபட்சம் ஆயிரம் பேர். அவர்கள் தங்களுக்கென ஒரு தனி அடையாளத்தை விரும்புபவர்கள். பொது ரசனையை எவ்வகையிலும் தங்களுடன் இணைக்க விரும்பாதவர்கள். அவர்களில் கணிசமானவர்கள் ஏதோ ஒரு வகையில் வாழ்க்கையில் தோல்வியடைந்தவர்களோ ஒதுக்கப்பட்டவர்களோ ஆகவே அவர்கள் இருந்தனர். ஆகவே வாசிப்பு என்பதும் அழகியல் நிலைபாடு என்பதும் பொதுப்போக்கு மீதான ஒரு வஞ்சமாகவும் வன்மமாகவும் அவர்களிடம் இருக்கவும் செய்தது என்று இப்போது தோன்றுகிறது.

ஆகவே அவர்களின் நிராகரிப்புகளும் மிகக்கூர்மையாக இருந்தன. வெற்றி பெற்றவர் என்பதனாலேயே அதிகமாக வாசிக்கப்பட்டவர் என்பதனாலேயே ஜெயகாந்தன் அவர்களால் முற்றிலும் புறக்கணிக்கப்பட்டார். சிறுபத்திரிகைச் சூழல் சார்ந்த மயக்கங்கள் கலைந்து அதை பகல் வெளிச்சத்தில் வந்து பார்க்கும் இடத்திற்கு வந்துவிட்டிருக்கும் இன்று, சிறுபத்திரிகை சூழலின் உருவாக்கமாகிய நான் அன்றைய சிற்றிதழ்சார் வாசகர்களின் ‘பாடல்பெற்ற’ ரசனைக்கூர்மை மீது ஆழ்ந்த ஐயம் கொண்டிருக்கிறேன்.

7829

முக்கியமாக முன்னோடிகள் வகுத்த வழியிலேயே பெரும்பாலும் அவர்களுடைய ரசனை நிகழ்ந்தது. அவர்கள் அன்று அதிகபட்சம் ஐம்பது பேர் கொண்ட சிறு சிறு குழுக்களாகவே இருந்தனர். அக்குழுக்களுக்கு தலைமை தாங்கிய ஒருசிலரின் கருத்துக்களையே பிறர் பகிர்ந்து கொண்டனர். உதாரணமாக மௌனி மணிக்கொடியிலும் பின்னர் தேனியிலும் எழுதிய காலகட்டத்தில் அவருடைய கதைகளை அன்றிருந்த மணிக்கொடியினரோ பிறரோ அடையாளம் கண்டுகொள்ளவோ பாராட்டவோ இல்லையென்று எம்.வி.வெங்கட்ராம் குறிப்பிடுகிறார். பல ஆண்டுகளுக்குப் பின்னர்தான் க.நா.சு. அவை முக்கியமான கதைகள் என்று சொல்ல ஆரம்பித்தார். மௌனியின் முக்கியத்துவம் தொடர்ந்து பேசி அவரால் நிலைநிறுத்தப்பட்டது. அதன் பின்னரே செல்லப்பா இணைந்து கொண்டார். அவர்கள் இருவருமே மௌனியின் இடத்தை தமிழில் நிறுவினார்கள். ஒருவேளை கு.ப.ரா. போல மௌனி முன்னரே இறந்துவிட்டிருந்தால் தனக்கு இலக்கியத்தில் வந்த அந்த முக்கியத்துவம் தெரியாமலேயே சென்றிருப்பார்.

இவர்களின் வாசிப்பு சார்ந்த உளநிலைகள் மிகச்சிக்கலானவை. தான் மட்டுமே தேடி வாசிக்கும் ஒன்று அபூர்வமான ஒன்றாக இருக்கவேண்டும் என்று இவ்வாசகன் நினைக்கிறான். தனக்குரிய இலக்கியமே எங்கோ பதுக்கப்பட்டிருப்பதாகவும், அதைத் தேடி நூலக அடுக்குகள் வழியாக தான் சென்று கொண்டிருப்பதாகவும் ஒரு கனவு அவனை இயக்குகிறது. அது ஒவ்வொரு காலகட்டத்திலும் ஏதோ ஒருவகையில் எங்கோ மறைந்திருக்கும் புகழ் பெறாத ஒரு எழுத்தாளனைக் கண்டுபிடித்து தங்களுடையவனாக சொல்லும் ஒரு பாவனை அவனிடம் கைபடுகிறது. மௌனியும் பின்னர் நகுலனும் பின்னர் சம்பத்தும் ஜி.நாகராஜனும், ப.சிங்காரமும் இவ்வாறு வெவ்வேறு காலகட்டங்களில் அவர்களால் முன்னிறுத்தப்பட்டிருக்கிறார்கள். இது ரசனையின் தேடல் அல்ல. தன்னைப்பற்றிய ஒரு புனைவை உருவாக்கும் முயற்சி மட்டும் தான்.

ரசனை என்பது அனைவரும் கவனிக்கும் மேடையின் உச்சியில் நின்றிருப்பதால் ஜெயகாந்தனை புறக்கணிக்காது. எவராலும் கவனிக்கப்படாமல் இருந்ததனால் ப.சிங்காரத்துக்கு மேலதிக அழுத்தத்தையும் கொடுக்காது. அந்த சமநிலை அன்றும் இன்றும் சிற்றிதழ் சூழலில் இருந்ததில்லை. ஜெயகாந்தனை வாசிப்பதும் விவாதிப்பதும் சரி ஒரு அறிவு ஜீவியின் அடையாளத்தை தருவதில்லை என்பதனால் அவர் புறக்கணிக்கப்பட்டார், படுகிறார். அவர் விவாதிக்கப்பட்டு, படைப்புகளின் நுட்பங்கள் முழுமையாக வாசிக்கப்பட்டு, கடக்கப்படவில்லை.

அத்துடன் சமகால சர்ச்சைகள் பெரும்பாலும் படைப்புகளை மறைத்துவிடுகின்றன. படைப்புகளின் மீது பொதுக்கருத்து எனும் பெரும் கம்பளத்தை அவை போர்த்திவிடுகின்றன. பெண்ணின் சுதந்திரம் கற்பு ஆகிய இரு கோணங்களிலேயே அன்று ஜெயகாந்தனின் இந்நாவல் எதிர்கொள்ளப்பட்டது. அதை ஒட்டியே அனைத்து கருத்துகளும் வெளிவந்தன. ஆகவே இது அதைப்பற்றிய நாவல் மட்டுமே என்று முழுமையாகவே வகுக்கப்பட்டுவிட்டது. அது நாவலுக்கு மிக மேலோட்டமான ஒரு வாசிப்பை அளித்தது. அவ்வகையில் பெரும்புகழ் பெற்ற நாவல் அப்பெரும்புகழாலேயே மறைக்கப்படுகிறது என்பது உண்மைதான்.

ஐம்பதாண்டுகாலம் இந்நாவல் வாசிக்கப்பட்டதை இன்று பார்த்தால் அது இந்நாவலுக்கு நியாயம் செய்ய வில்லை என்று தான் தோன்றுகிறது. இத்தகைய சூழலில் இந்தப் பொதுவாசிப்பின் திரையைக் கிழித்து விலக்கி மேலதிக வாசிப்பை அளிப்பதும் புதிய வாசிப்புக்கான சாத்தியங்களைத் திறந்து கொடுப்பதும் விமர்சகனின் வேலை. ஆனால் அத்தகைய கூரிய விமர்சனங்கள் தமிழில் எப்போதும் இருந்ததில்லை. க.நா.சு. சுந்தர ராமசாமி போன்றவர்கள் இலக்கிய சிபாரிசுக்காரர்கள். இலக்கியங்களைச் சுட்டிக் காட்டுவதன் வழியாக ஒரு பொதுச் சித்திரத்தை உருவாக்க முனைந்தவர்கள்.. இலக்கியப் படைப்புகளுக்குள் சென்று பிறர் வாசிக்காதவற்றை வெளியே கொண்டு வைத்து புதிய சாத்தியங்களை நோக்கித் திறக்கும் வல்லமை கொண்ட எழுத்துக்கள் அல்ல அவர்களுடையவை. தமிழில் அத்தகைய விமர்சகனின் பெருங்குறை எப்போதும் இருந்துகொண்டிருக்கிற்து என்பதற்கு ஜெயகாந்தனின் இந்நாவல் மீதான வாசிப்பு ஒரு முக்கியமான சான்று.

நீண்ட இடைவெளிக்குப்பின் இந்நாவலை இன்று வாசிக்கையில் இதன் மொழிநடை புதிதாக இருப்பதுபோல் தோன்றியது வியப்பளித்தது. அதற்கான காரணம் என்ன என்று என் கோணத்தில் யோசித்தேன். செம்மை நடையில் எழுதப்பட்ட பகுதிகள் தான் எப்போதும் விரைந்து காலாவதியாகின்றனவோ என்று தோன்றியது. ஏனெனில் பேச்சு மொழி என்னும் உயிர்த்துடிப்பான ஒரு மொழிபிலிருந்து அறிவு பூர்வமாக அள்ளப்படுவது அந்த செம்மைநடை. அந்தக் காலகட்டத்திலுள்ள பொதுவான பிற மொழிபுகளின் பாதிப்புள்ளது அது. அன்றைய பத்திரிகை நடை, மேடைப்பேச்சுநடை, அரசுத் துறைகளில் பயன்படுத்தப்பட்ட மொழி ஆகிய பல விஷயங்கள் அதை தீர்மானிக்கின்றன.

ஜெயகாந்தன் இந்நாவலை கங்காவின் பேச்சு மொழியில் அமைத்திருக்கிறார். அந்த மொழி பெரும்பாலும் அப்படியேதான் இன்றும் புழங்குகிறது. இந்நாவல் உருவாக்கும் காலகட்டத்தின் நேரடிப் பிரதிநிதித்துவம் அந்த மொழிக்கு இருக்கிறது. ஆகவே அந்த மொழியினூடாக அந்தக் காலத்திற்குள் செல்ல முடிகிறது. கங்காவுடன் ஒரு நீண்ட உரையாடலில் ஈடுபட்ட உணர்வை இந்நாவல் அளிக்கிறது.

jeyakanthan

இன்றைய வாசிப்பில் இது பெண்சுதந்திரம் பற்றிய நாவல் அல்ல என்றே தோன்றுகிறது. இது பெண்ணின் தனித்தன்மை பற்றிய நாவல். பெண்ணின் பாலியல் உரிமை பற்றிய நாவல். பெண்ணில் பாலியல் தேடல் பற்றிய நாவலும் கூட. அவ்வகையில் தமிழில் எல்லாத் தளத்திலும் முதன்மையான் பெரும் படைப்புகளில் ஒன்று என்று இதை தயங்காமல் சொல்வேன்.

இக்கோணங்களில் இதுவரை இந்நாவல் வாசிக்கப்பட்டதில்லை. கங்கா தேடுவது தனக்கென ஒர் அடையாளத்தை. காலூன்றி நின்று கிளைவிரிக்க ஒரு பிடி மண்ணை. அதை ஒரு ஆண் தான் உனக்குக் கொடுக்க முடியும் என்று அவளிடம் மரபு சொல்கிறது. அவள் அதைத் தேடி கண்டடைந்து அங்கு நிற்க முயல்கிறாள். அது மாயை என்று பெரும் வலியுடனும் துயரத்துடனும் அவள் கண்டடைகிறாள். பிறிதொரு அடையாளத்தை தனக்கென தேடிக்கொள்ள அவளால் இயலவில்லை. மூர்க்கமாகத் தன்னைக் கலைத்துக் கொள்கிறாள்.

இன்னொரு கோணத்தில் வாசித்தால் இது கங்காவின் பாலியல் சுதந்திரத்துக்கான தேடலைக் காட்டுகிறது. அன்று காரிலிருந்து இறங்கி வருகையில் அவள் வாயில் ஒரு சூயிங்கம் இருந்தது. தான் ஒருவனுடன் இருந்ததை அவள் அன்னையிடம் சொல்லும்போது கூட அதை மென்றுகொண்டுதான் இருக்கிறாள். அம்மா அதை துப்பு என்கிறாள். அது ஒரு அசைபோடல். பெண்ணுடலின் கொண்டாட்டம்… ஆனால் அவளுக்கே அது தெரியவில்லை.

அம்மா அழுது ஊர்கூட்டி குடும்பத்தாலும் சுற்றத்தாலும் பழிக்கப்பட்டு கெட்டுப்போன பெண்ணாக தன் வாழ்க்கையை அவள் அமைத்துக் கொள்ளும்போது அப்படி என்ன தவறு செய்துவிட்டேன் என்ற எண்ணம் அவளுக்குள் இருந்து கொண்டிருக்கிறது. தன்னுடைய பாலியல் விடுதலையைத்தான் அவள் தேடுகிறாள். இயல்பான சகஜமான பாலியல் உறவொன்றுக்கான தேடலே அவளை மீண்டும் பிரபுவிடம் கொண்டு சேர்க்கிறது. மேலும் நுட்பமாகப் பார்த்தால் பாலியல் வேட்கை அதில் உள்ளது. முதல் நாள் முதல் அணுகலிலேயே பிரபுவை அவள் ஏற்றுக்கொண்டது. பெண்ணென அவளில் உறையும் ஒன்றின் இயல்பான விருப்பத்தால் தான் அவளுக்குரிய ஆண் அவன். அதை அவள் உடல் அறிந்திருந்தது. உள்ளத்தின் ஆழம் அறிந்திருந்தது. பிறிதொருவன் அதேபோல வந்து அவளை அழைத்திருந்தால் சீறி எழுந்திருக்ககூடும்.

அவனை அவள் ஏற்றுக் கொள்வது சமூகமோ எதிர்காலமோ கற்பிக்கப்பட்ட நெறிகளோ தடையாக இருக்கவில்லை. ஏனெனில் அவை அனைத்தும் எண்ணத்தில் வருமளவுக்கு அவளுக்கு வயதாகி இருக்கவில்லை. பின்னர் அவனை மீண்டும் காண்பது வரை அவளுக்குள் அந்த சூயிங்கத்தை அவள் ரகசியமாக மென்று கொண்டு தான் இருந்தாள். உனது கணவன் கந்தர்வ முறைப்படி உன்னுடன் இருந்தவன் தான் முடிந்தால் அவனைத் தேடிக் கண்டுபிடி என்று வெங்குமாமா சொல்லும்போது அவள் அவனைத் தேடிச் செல்வது, மேலோட்டமாகப் பார்த்தால் ஒரு வீம்பினால் தனது ஆளுமையை தேடிக் கண்டடைய வேண்டும் என்ற வெறியினால். உள்ளாழத்தில் அது பாலியல் விருப்பினாலும் கூட.

அந்நெருக்கத்தின் ஒரு கட்டத்தில் மானசீகமாக அவனிடம் தன் உடலை எடுத்துக் கொள்ளும்படி அவள் மன்றாடிக் கொண்டே இருக்கிறாள். எனது படுக்கையில் உனக்கு இடமிருக்கிறது என்று உணர்த்திக் கொண்டே இருக்கிறாள். ஒரு கட்டத்தில் அதை நேரடியாகச் சொல்லும்போது அவன் துணுக்குற்று விலகுகிறான். உண்மையில் அவள் உடைந்து சிதறுவது அதிலிருந்து தான். அவளுடைய சுய கௌரவமா தனித்தன்மையா பாலியல் வேட்கையா எது அவமதிக்கப்பட்டது என்ற வினாவை இந்நாவலில் இறுதியில் எடுத்துக் கொள்ளும்போதுதான் அதுவரைக்கும் அந்த நாவலின் உள்விரிவுகள் பல பகுதிகளைக் கொண்டு திறந்து கொள்கின்றன. அவளின்சிதைவு ஒரு தற்கொலையா ஒருவகையான பழிவாங்கலா அல்லது உடைவா பல கோணங்களில் இன்று இந்த நாவலை நாம் வாசிக்க முடியும்.

இத்தகைய வாசிப்பு ஒன்றை அன்றைய சிறுபத்திரிகை சூழல் ஜெயகாந்தனுக்கு அளிக்கவில்லை என்பது ஒருவகை அநீதி. அதற்கு அன்றைய சிறுபத்திரிகை சூழலை ஆண்டு கொண்டிருந்தவர்களில் முன்னோடிகள் ஒரு காரணம். இன்று புதிய கோணத்தில் இந்நாவலை வாசிக்கலாம். புதிய கண்டடைவுகளை நோக்கிச் செல்லவும் கூடும். எந்தச் சிற்றிதழ் விமர்சகன் விழிமூடினாலும் தமிழ்ச் சூழலில் இந்நாவல் அளவுக்கு பெண்களின் ஆளுமையை விழைவை சுதந்திரத்தை பாலியல் வேட்கையை விவாதித்த பிறிதொரு நாவல் இல்லை என்ற உண்மை நிலைநிற்கத்தான் செய்யும்.

இதனுடன் ஒப்பிடுகையில் பெரிதும் கொண்டாடப்பட்ட மோகமுள் போன்றவை உள் மடிப்புகளற்ற உணர்வுப்பெருக்கான படைப்புகள். தளுக்கினால் மட்டுமே பெரும்பகுதியைக் கடந்து சென்றவை என்பதைக் காணலாம். குறிப்பாக இன்று ஜானகிராமனின் மோகமுள் போன்ற நாவல்களின் உரையாடல்கள் அர்த்தமற்ற வெறும் வளவளப்புகளாக சலிப்பை ஏற்படுத்துகையில் சில நேரங்களில் சில மனிதர்களின் கூரிய உரையாடல்களும் சுய விமரிசன நோக்கு கொண்ட எண்ணங்களும் ஒன்றையொன்று வெட்டிச் செல்லும் தீவிரமும் பலமடங்கு மேலான ஒரு முதன்மைப் படைப்பாளியை நமக்குக் காட்டுகின்றன. வரலாற்றில் அந்த இடம் என்றும் ஜெயகாந்தனுக்கு அளிக்கப்படும் என்றே நான் நினைக்கிறேன். அதை எனக்கு உறுதிப்படுத்திய ஒன்று என்று இந்நூலுக்கு சுரேஷ்குமார் இந்திரஜித் அளித்த முன்னுரையைச் சொல்வேன்.

சுரேஷ்குமார இந்திரஜித்

சுரேஷ்குமார் இந்திரஜித்தை தமிழ் சிறுபத்திரிகை சூழலின் மனநிலைகளின் மையத்தை சார்ந்த ஒருவர் என்று அடையாளப்படுத்தலாம். இந்நாவலை இப்போதுதான் அவர் வாசிக்கிறார் என்பது தெரிகிறது. இன்று வாசிக்கையில் ஒரு தேர்ந்த சிற்றிதழ் வாசகன் ஒருவன் இந்நாவலில் கண்டு கொள்ளும் பெரும்பாலான அனைத்து நுட்பங்களையும் அவருடைய் வாசிப்பு கண்டடைந்து முன்வைக்கிறது. நேற்றைய முன்னோடிகள் ஜெயகாந்தனுக்குச் செய்த புறக்கணிப்புக்கு ஒரு பிராயச்சித்தமாகவும் சுரேஷ்குமாரின் முன்னுரை அமைந்துள்ளது. கூரிய சொற்களில் முற்றிலும் புதிய பார்வையில் ஜெயகாந்தனை மீட்டு முன்வைக்கும் சுரேஷ்குமாரின் இந்த முன்னுரை காலச்சுவடு இந்நாவலுக்கு அணிந்திருக்கும் கட்டமைப்புக்கு நிகரான பெறுமதியுள்ளது. அதன் பொருட்டும் இதன் தொகுப்பாசிரியர்களுக்கு நன்றி சொல்லக் கடமைப்பட்டிருக்கிறேன்.

 

முதற்பிரசுரம் May 12, 2017 

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on May 26, 2025 11:35

Jeyamohan's Blog

Jeyamohan
Jeyamohan isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow Jeyamohan's blog with rss.