Jeyamohan's Blog, page 92
May 22, 2025
இஸ்லாமிய – சூஃபி மரபை ஏன் கற்கவேண்டும்?
நான் அதனால் கவரப்பட்டு இஸ்லாமியனாக மதம் மாறினால் அதை நீங்கள் ஆதரிப்பீர்களா?- இது என் நண்பனின் கேள்வி
Once, as I strolled with a hunter, he pointed out a wild dog and remarked, “Observe the wound. It’s fatal.”
Why does Advaida Matter?தங்கப்புத்தகம், அஜிதன், ஓர் இணைய உரையாடல்
ஐரோப்பிய விஷ்ணுபுரம் வட்டத்தின் சார்பாக, எழுத்தாளர் ஜெயமோகன் எழுதிய புனைவுக் களியாட்டு கதைகளின் ஒரு படைப்பாகிய தங்கபுத்தகம் தொகுதியை வாசித்து வருகிறோம்!
அதன் தொடர்ச்சியாக எங்கள் வாசிப்பை மேன்படுத்தும் விதத்தில் அக்கதைகளின் தத்துவ சாரம், மேலும் அக்கதைகளின் ஆழம் பற்றி உரையாட எழுத்தாளர் அஜிதன் இசைந்துள்ளார்.
வரும் ஞாயிறு (25- மே) இந்திய நேரம் காலை 10:30 மணி அளவில் நிகழ்வு துவங்கும்.
Zoom:
கூடுகை சுட்டி:
https://us02web.zoom.us/j/81824287154?pwd=VlVEOEpZNFUrMFUwWlAzMS8yeGdJdz09
Meeting ID: 818 2428 7154
பாஸ்வேர்ட் எதுவும் இல்லை.
May 21, 2025
அஞ்சலி: குமார் அம்பாயிரம்
எழுத்தாளரும் சூழியல் செயல்பாட்டாளருமான குமார் அம்பாயிரம் மறைந்தார் என்று அறியவந்தது. குக்கூ நண்பர்களுக்கு அணுக்கமானவர். அஞ்சலி.
முழுமையறிவு வகுப்புகளில் கற்றது என்ன?
ஓர் உரையாடல். எழுத்தாளர்கள் ஜி.எஸ்.எஸ்.வி நவீனும் சுசித்ராவும். முழுமையறிவு வகுப்புகளின் கற்கும் முறை, கற்பவை பற்றி. இந்திய தத்துவ இயல், இரண்டாம் நிலை முடிந்தபின் ஓர் இயல்பான உரையாடல். அந்தச் சூழல் இப்போது பார்க்கையில் அழகாக இருக்கிறது.
நிழல்கள் உடனிருக்கின்றன.
நமக்குத் தெரியாமல் மனம் எதையாவது நம்மை மீறி உணர்கிறதா? ஆம் என்பது என் அனுபவம். என் மனதின் நுண்மைதான் என்னுடைய பெரும் செல்வம். என் பெரும் சுமையும் வதையும் அதுதான்.
சென்ற மூன்று நாட்களாகவே தூக்கமே இல்லை. 17 ஆம் தேதி தொடங்கியது. ஆழ்ந்த அமைதியின்மை. என் முகத்தைப் பார்க்கும் எவருக்கும் நான் ஒரு மனநோயாளியா என்று தோன்றியிருக்கும். நடை சென்றபோது என்னைச் சந்தித்த ஒருவர் “என்ன சார் பிரச்சினை?” என்றார்.
“ஒண்ணுமில்லியே” என்றேன்.
“இல்லை, தானே பேசிட்டே போறீங்க”
புன்னகைத்து கடந்துசென்றேன். என்ன பிரச்சினை என்று எனக்கே தெரியவில்லை என்று சொன்னால் குழம்பிவிடுவார்.
எழுதிக்கொண்டிருக்கும் நாவல் தொடரான ‘காவியம்’ ஒரு முக்கியமான காரணம். அது வேர்களைப் பற்றிய நாவல். தளிர், இலை, பூ, காய், கனி என ஏதுமில்லை. ஆழத்தின் மௌனமும் இறுக்கமும் அழுக்கும் செறிவும் கொண்டது. ஈரமும்தான். அது என்னை கையிலெடுத்து வீசி விளையாடுகிறது.
ஆனால் எழுத்துக்கு என்னைக் கொடுப்பதொன்றும் புதியது அல்ல. வெண்முரசு நாட்களில் தற்கொலைக்கும் கொலைக்கும் நடுவே உள்ள கோடுவழியாகக் கடந்து சென்றிருக்கிறேன். உச்சகட்ட பொறுமையின்மை, எவருடனென்று இல்லாத சீற்றம் என அலைக்கழிந்திருக்கிறேன்.
கலை என்றோ இலக்கியமென்றோ தெரியாதவர்கள் மட்டுமே வாழும் ஒரு தேசத்தில் அதை எவரும் புரிந்து கொள்ளப் போவதில்லை. எழுத்தாளனை வசைபாடும் ஒரு வாய்ப்பையும் இங்குள்ள பாமரர் விடுவதுமில்லை. பைத்தியமோ குற்றவாளியோ ஆக்கிவிடுவார்கள். ஆகவே என்மேல் ஒரு நடுத்தரவர்க்க மனிதன் என்னும் வேடத்தை எடுத்துப் போர்த்திக் கொண்டிருக்கிறேன். கூடுமானவரை மனிதர்களை தவிர்த்து வாழவும் கற்றுக்கொண்டிருக்கிறேன்.
தூங்க முடிந்தது என்றால் எந்தப் பிரச்சினையும் இல்லை. காலையில் புதியதாக விழித்தெழ முடியும். இந்த அலைக்கழிப்பை நாட்களாகப் பிரித்துக் கொள்ள முடியும். து ஃபு சொன்னதுபோல, அது ஆற்றை வாளால் வெட்டுவதுபோலத்தான். ஆனால் வெட்டும் செயல் நம்முள் ஓடும் ஆற்றை துண்டுகளாக்கிவிடுகிறது.
பதினேழாம் தேதி இரவு வழக்கம்போல ஒன்பதரைக்குப் படுத்தேன். திடுக்கிட்டு எழுந்தேன். அதன்பின் தூக்கமே இல்லை. என்னென்னவோ செய்து பார்த்தேன். பகலில் தூங்கவில்லை. மதியத்திற்குமேல் டீயும் காபியும் குடிக்கவில்லை. காலையில் குடித்த காபி கடுமையாக ஆனதுதான் காரணமா என்றெல்லாம் யோசித்தேன். தூக்கமே இல்லை. விடிய விடிய எழுதிக்கொண்டிருந்தேன். காலை நான்கரை மணிக்கு கூடத்திலேயே சோபாவில் படுத்து இரண்டு மணிநேரம் தூங்கினேன்.
அன்று பகல் முழுக்க இருந்துகொண்டிருந்த என்னவென்று தெரியாத பதற்றத்தையும் எவர் மீதென்று தெரியாத எரிச்சலையும் அந்த தூக்கக்கலக்கம் கொஞ்சம் மங்கலடையச் செய்தது. ஒரு சினிமா பற்றிப் பேச ஒருவர் வந்திருந்தார். அது கொஞ்சம் விலக்கிச் சென்றது. அன்று பகலில் தூக்கமில்லை. தலைநிறைய எண்ணை தேய்த்து குளித்தேன். பத்து கிலோமீட்டர் நடை சென்றேன். ஆனால் அன்றும் பன்னிரண்டு மணிக்குத்தான் தூக்கம். காலை மூன்று மணிக்கே விழித்துக்கொண்டேன்.
அடுத்தடுத்த நாட்களிலும் அதேதான். தூக்கம் ஒருசில மணிநேரம் மட்டுமே. மோசமான எதையோ எதிர்பார்ப்பவன் போலிருந்தேன். என்னென்னவோ தீமைகள் வரவிருப்பதாக கற்பனை செய்துகொண்டிருந்தேன். ஒவ்வாதவை ஏதாவது கண்ணுக்குப் பட்டுவிடும் என்று வாட்ஸப், இணையம் என எல்லாவற்றையும் அணைத்து வைத்தேன். சரி, மனநிலை மாறட்டுமே என அருகே உள்ள பரோட்டா கடையில் இருந்து பரோட்டாவும் சிக்கனும் வாங்கிவந்து அருண்மொழியுடன் அமர்ந்து சாப்பிட்டேன். நகைச்சுவைக் கதைகள், படக்கதைகள் வாசித்தேன். அகம் அப்படியே கல்போலத்தான் இருந்தது.
தொடர்ச்சியாக எழுதிக்கொண்டும் இருந்தேன். நாவல் அதுவே கட்டின்றி வளர்ந்து செல்வதை நான் அனுமதித்தாலே போதும். அநேகமாக ஒன்றுமே செய்ய வேண்டியதில்லை, விரல்களை கணிப்பொறி விசைப்பலகைமேல் வைப்பதைத் தவிர. சொல்லப்போனால் நாவலில் இருந்தே மிக விலகிவிட்டேன். அதன் முந்தைய அத்தியாயம் என்ன என்றுகூட நினைவில் இல்லை. எந்தத் தொடர்ச்சியையும் யோசித்து எடுக்கவும் முடியவில்லை. ஆனால் அது எப்படியோ தானாக சரியாக வரும், வடிவம் அமையும் என முன்னர் வெண்முரசு வழியாக அறிந்திருக்கிறேன். ஆனால் இந்த நாவல் ஒருவகையான பைத்திய வெளிப்பாடு. வெளிப்பட்டாலே அது முழுமையாகிவிடுகிறது.
நேற்று முன்தினமும் நேற்றும் எரிச்சலும் பதற்றமும் அடங்கி, ஆழ்ந்த துயர் நிறைந்த மனநிலை நீடித்தது. melancholy என்று ஆங்கிலத்தில் சொல்வார்கள். எவரிடமாவது பேசலாம் என எண்ணினால், ஒவ்வொருவரும் ஒவ்வொன்றில் தீவிரமாக இருந்தனர். கிருஷ்ணன் நண்பர்களுடன் காட்டுப்பயணம், மழைப்பயணம் என இருந்தார். குவிஸ் செந்தில் கோவை புத்தகக் கண்காட்சிப் பணிகளில். காசர்கோடு நண்பர்களை அழைத்தேன். அவர்கள் அங்கே ஏதோ திரைப்பட விழா ஒருங்கிணைப்பில் பதற்றமாக இருந்தார்கள்.
அருண்மொழியிடம் வழக்கம்போல விளையாட்டுத்தனமான சாதாரணமான உரையாடல்கள். அவை மட்டுமே ஒரே விடுதலையாக இருந்தன. மாறாத உற்சாகமும் நேர்நிலை மனநிலையும் கொண்ட ஒரு சிறுமியும், தீவிரமாகப் படிக்கும் ஓர் அறிவுஜீவியும் கலந்த ஆளுமை அவள். இந்நாட்களில் அவள் இல்லையென்றால் மூளையின் மூடி தெறித்துவிட்டிருக்கும்.
நேற்றிரவும் தூங்காமலிருந்தேன். தமிழ்விக்கியில் இரண்டு பெரிய பதிவுகள் போட்டேன். இரண்டு பதிவுகளைச் சரி செய்தேன். மொத்தம் நான்கு நூல்களை அதற்காகப் புரட்டினேன். விடிந்துவிட்டது. காலையில் நடைசென்று டீ குடித்து சுற்றி திரும்பிவந்தேன்
வந்து சேர்ந்து மின்னஞ்சல்களைப் பார்த்துக்கொண்டிருந்த போது காட்சன் அழைத்து அவர் மகன் மித்ரன் இறந்துவிட்டான் என்று சொன்னார். பலநிமிடங்கள் மண்டைக்குள் செய்தி ஏறவே இல்லை. பின்னர் ‘இதுதானா?’ என்று அகம் அரற்றத் தொடங்கிவிட்டது. அஞ்சலி: மித்ரன் காட்சன்
சென்ற சில மாதங்களுக்கு முன்பும் இதேபோன்று ஒரு செய்தி வருவதற்கு மூன்று நாட்களுக்கு முன்னரே அமைதியிழந்திருந்தேன். என் அம்மா இறப்பதற்கு ஏழு நாட்களுக்கு முன்னரே நான் கொடுங்கனவுகள் கண்டுகொண்டே இருந்ததை அடிக்கடி நினைப்பதுண்டு.
உடனிருக்கும் நிழல்களைப் பற்றி காவியம் சொல்லிக்கொண்டே இருக்கிறது. நான் உணரும் நிழல்கள் அவை. அந்நிழல்களைப் பற்றிய மெல்லிய உணர்வையாவது அடைந்தவர்களுக்கே அந்நாவல் புரியும் என நினைக்கிறேன். சிலரே இருப்பார்கள் என்றாலும் அவர்களுக்காக அது எழுதப்பட்டுள்ளது என அவர்கள் உணர்வார்கள்.
கிளம்பி உதயமார்த்தாண்டம் அருகே காட்சனின் மனைவி இல்லத்திற்குச் சென்று அவரைப் பார்த்துவிட்டு வந்தேன். புத்ரசோகம் போல தாளமுடியாதது ஒன்றும் இல்லை. ஆனால் விசுவாசம் என்று கிறிஸ்தவர்கள் சொல்லும் ஒன்று உண்டு, முழுமையாக அர்ப்பணித்தல், அளித்துவிட்டு விடுபடுதல். காரணகாரியம் தேடி உழற்றிக் கொள்ளாமலிருத்தல். அது அவரை கைவிடாது என நினைக்கிறேன்.
இன்றிரவு தூங்க வாய்ப்புண்டு. அல்லது இந்த துயரை முற்றவைத்து, உச்சமடையச் செய்து அதுவே தன்னை குறைத்துக்கொள்ள வைக்கலாம். நெருப்பை அணைக்கும் வழிகளில் அதுவும் ஒன்று. மித்ரன் என் கைகளில் இன்னும் தொடுகையாகவே நீடிக்கும் குழந்தை.
இந்த நுண்ணுணர்வுகளை அடைவது வரமா சாபமா என்றால் இரண்டும்தான் என்றே சொல்வேன்.
அருணாசலக் கவிராயர்
இயலிசை நாடக இணைப்பு, தமிழிசை மீட்டுருவாக்கம் என்னும் இரு களங்களில் முன்னோடிப் பங்களிப்பாற்றியவர் அருணாசலக் கவிராயர்.தமிழிசை முன்னோடிகளில் ஒருவர்

காவியம் – 31

என்னைச் சுற்றி நிழல்கள் என் சொற்களைக் காத்து நின்றிருந்தன. கானபூதியிடம் நான் “அந்த மொழி நான் அறியாதது” என்றேன்.
“கொஞ்சம்கூட தெரியாத மொழியை எவரும் கற்கவும் முடியாது. அந்த மொழியின் ஒரு துளி உன்னில் முளைத்து எழ வேண்டும்…” என்றது. “அவ்வாறு முளைத்தெழுந்தால் மட்டுமே நீ என் மொழிக்குள் வரமுடியும்.”
“நான் என்ன செய்யவேண்டும்?” என்றேன்.
”நீ அடைந்த அச்சொல்லை பொருள் கொண்டு என்னிடம் சொல். உன் மனத்தை துரத்தி முடிவு வரைக்கும் கொண்டு போ” என்றது கானபூதி. “நாளை இரவு மீண்டும் வா… அதுவரை என் இடது கை இந்த மண்ணிலேயே இருக்கும்.”
நான் கிளம்பும்போது சக்ரவாகி என்னுடன் வந்தது. “நாங்கள் உடன் வரப்போவதில்லை. நீ தனிமையில் அலைவதே உனக்கு நல்லது. ஒரு பகல் முழுக்க உன்னுடன் இருக்கிறது.”
நான் வெளியே வந்து என் படிக்கட்டில் படுத்துக்கொண்டபோது விடியத்தொடங்கி வெளியே மக்கள் கழிப்பறைக்கும் ஆற்றங்கரைக்கும் செல்லத் தொடங்கி விட்டிருந்தார்கள். வெயில் நன்றாக எழுவது வரை நான் தூங்கினேன். அதன்பின் எழுந்து என் உணவைத் தேடிச்சென்றேன்.
எனக்குள் இருந்து அச்சொல்லின் பொருளை நான் தேடி எடுத்தாகவேண்டும். வெளியே மிஞ்சுவது ஒன்றுமில்லாத நிலையில் உள்ளே கேட்கும் குரல்கள் மிக வலுவானவை. அவை உள்ளே மிக மிகத் தொலைவில் எங்கோ இருந்து கேட்கின்றன. குரல்கள் அண்மையில் ஒலிக்கையில் அவை நம்மால் விலக்கிக் கேட்கப்படுகின்றன. மிகத் தொலைவில் ஒலிக்கையில் நாம் அவற்றை மேலும் மேலும் அணுகிக் கேட்கிறோம். மெல்லிய முணுமுணுப்பாகத்தான் அந்தக் குரல் எனக்குக் கேட்கத்தொடங்கியது. ஒரு மூச்சு நெஞ்சுக்குள் அடக்கிக்கொள்ளப்படுவதன் ஓசை. அல்லது உலர்ந்த உதடு மெல்ல பிரிவதன் அரவம்.
உதடுகளுக்குள் இருந்து வெளிவராத ஒலி மந்திரம் எனப்படுகிறது. மந்திரங்கள் கூட செவிகொடுக்கப்பட்டால் நமக்குள் முரசொலி போல முழங்கக்கூடும். நான் ஒலித்தவற்றை விலக்கினேன். அடியில் திகழ்ந்த ஓசைகளைச் செவிகூர்ந்தேன். அது எத்தனை தாழ்ந்திருந்ததோ அத்தனை நான் கூர்ந்து கவனித்தேன். என் செவிகள் முற்றாக மூடிவிட்டிருந்ததனால் தலைக்குள் சுண்டப்பட்ட இரும்புத்தட்டின் மீட்டல் போலொரு ரீங்காரம் எப்போதும் இருந்துகொண்டிருந்தது. என் தலை இறுகக் காற்றடைத்த பலூன் போல நிறைந்ததாகவும், கூடவே எடையற்றதாகவும் இருந்தது. அங்கே ஒலிகள் எல்லாம் இணைந்து ஒரு முழங்கும் அமைதியாக மாறியிருந்தன. நான் கேட்கும் சொற்கள் எவராலும் சொல்லப்படாதவை.
என் கண்களையும் காதுகளையும் பேச்சையும் இழந்தபின் நடக்கும்போது முற்றிலும் எடையே இல்லாத தலையால்தான் சமநிலைகொள்ள முடியாமல் ஆகிறது என்று கண்டுகொண்டேன். ஆகவே என் கையிலிருந்த கழியில் உடலை முழுக்கத் தாங்கி தலை தனியாகக் காற்றில் மிதப்பது போல விட்டு நடக்கத் தொடங்கினேன். பின்னர் என் உடலில் தலையே இல்லை என்று எண்ண ஆரம்பித்தேன். தலையில்லாத என் முண்டம் மட்டும் தள்ளாடித் தெருவில் நடந்தது. தலை கூடவே தனியாக மிதந்து வந்தது. காற்றில் அலைபாய்ந்தது. வலுவான காற்று வீசுமென்றால் அது எழுந்து பறந்து விலகிச் சென்றது. இலைகள் மேல் தொட்டுத் தொட்டு தழைந்தும் எழுந்தும் அகன்றது.
என் தலை பறந்தலைவதை நான் பார்த்துக்கொண்டிருந்தேன். கூரிய கற்களிலும் முட்களிலும் அது விழுந்து செல்லும்போது சட்டென்று உடைந்துவிடுமோ என்று நான் அஞ்சினேன். செங்குத்தாக எழும் காற்றில் அது சுழன்று மேலெழுந்தபோது விடுதலை ஒன்றை உணர்ந்தேன். மேலும் மேலும் என்று தவித்தேன். அது மிகத்தொலைவில் அகன்று சென்றபோது திசைமுடிவில் சென்று மறைந்துவிடுமென்று அஞ்சினேன். அதை உடனே திரும்ப அழைக்க வேண்டுமென்று என் உடல் தவித்தது. மெய்யாகவே விலகிச் சென்றுவிடுமெனில் எஞ்சக்கூடிய நான் எதுவாக இருப்பேன். தவித்து தவித்து தெருவில் நிற்கும் என் மீது மெல்ல கருணை கொண்டு அதுவந்து பொருந்திக் கொள்ளும்போது மகிழ்ச்சியானேன். கை அசைத்து ஓசை எழுப்பினேன்.
என் தலை அதிர்ந்து கொண்டே இருந்தது. காற்றிலுள்ள ஒவ்வொரு ஓசையும் அதன் மெல்லிய ஜவ்வை வந்தடைந்தது. செவிகளும் கண்களும் பிற புலன்களும் அகத்திருக்கும் தன்னுணர்வு கொள்ளும் வெறும் பாவனைகளே என்று நான் உணர்ந்தேன். சேறு ஒரு பகுதியில் உலர்ந்து பருப்பொருளாக இருக்கிறது. மறு எல்லையில் நொதிக்கும் தண்ணீராக இருக்கிறது. என்னிலிருந்து என் தன்னுணர்வின் உலர்ந்த பகுதி மறைந்துவிட்டிருந்தது. அதுதான் பிற உலர்ந்த பகுதிகளை அறிந்து கொண்டிருந்தது. அந்த நீர் கரிய இருண்ட குளிர்ந்த எடைமிக்க எல்லா புறமும் மூடப்பட்ட குடுவைக்குள் எப்போதைக்குமென சிக்கிக்கொண்ட அந்தத் திரவம் நலுங்கிக்கொண்டே இருந்தது. அது பருப்பொருள் அல்லாத அனைத்தையும் அறியும் ஆற்றல் கொண்டிருந்தது.
மிகத் தொலைவில் கேட்கும் ஒலிகள். அவை சொற்களாக மாறத் தொடங்கியது எப்போது? எல்லா ஒலியுமே சொற்கள்தான். புரியாத மொழியனைத்தையும் ஒலி என்று பார்க்கும் பார்வையே நாம் நமக்கென விதித்துக்கொண்ட பெரிய வாழ்க்கை வட்டம். அதைவிடச் சிறிய புரிதல் வட்டமே அதை உருவாக்குகிறது. வட்டங்களுக்குள் வட்டங்களுக்குள் வட்டங்கள். வட்டங்கள் உள்ளுக்குள் சுருங்கிச் செல்லுந்தோறும் அவை செறிவடைகின்றன. புரிந்தவையாகின்றன. வெளிவட்டங்கள் நம்மால் பிழையாக புரிந்துகொள்ளப்பட்டவை. நம் வட்டங்களுக்கு வெளியே நாம் முற்றிலும் அறியாத ஒரு மாபெரும் வட்டம்.
இலைகளும் காற்றில் நகரும் மணல் பருக்களும் கூட பேசிக்கொண்டுதான் இருக்கின்றன. அவற்றின் சொற்கள் ஒவ்வொன்றும் தனித்த பொருள் கொண்டவை. நூற்றுக்கணக்கான சொற்கள், ஆயிரக்கணக்கான சொற்கள். அவை ஒன்றையொன்று பொருள் கொள்ளச் செய்து, வளர்ந்து, ஆயிரமென பல்லாயிரமென லட்சங்களென, கோடிளெனப் பெருகிக்கொண்டிருந்தன. அச்சொற்களில் ஏதேனும் ஒன்று பொருள் தரத்தொடங்கினால் அது பிறிதொன்றை பற்றிக்கொள்ள வைக்கும். ஒன்று போதும். நான் தேடும் சொல் வேண்டாம், ஏதேனும் ஒரு சொல் போதும்.
நான் என் உடலுக்குள் ஒடுங்கி, உடலையே இரு கைகளாக மாற்றி உள்ளிருக்கும் அந்த சிறிய சுடரை பொத்தி அசைவில்லாமலாக்கி, அந்தக் குரல்களுக்கு என் அகத்தைக் கொடுத்து அமர்ந்திருந்தேன். பல்லாயிரம் சொற்கள், பல்லாயிரம் உள்ளங்களின் வெளிப்பாடுகள். அவை இங்கு உடல் கொண்டிருக்கவில்லை. வேறெங்கோ அவை நிகழ்ந்து கொண்டிருக்கின்றன. இங்கே, முச்சந்தியில் நின்று கொண்டு நான் அவற்றைக் கேட்டுக்கொண்டிருக்கிறேன். இந்த முச்சந்தி எனக்கு முழுக்கத் தாளிடப்பட்ட முற்றிலும் காலியான அறைதான்.
இளமையில் என் குடிசைப்பகுதியில் எங்கள் கட்டில் மீது காதை அழுத்திப்படுத்தால் பக்கத்துவீட்டில் பேசுவது கட்டிலின் இரும்புச் சட்டகம் வழியாக மெல்லிய முணுமுணுப்பாகக் கேட்கும். மிகச் செவி கூர்ந்தால் அது எவருடைய பேச்சென்றும், என்ன சொல்கிறார்கள் என்றுகூடத்தெரியும். இப்போது இந்த மாளிகையின் சுவர்களில் என்னை முழுதாக ஒட்டிக்கொண்டு, இச்சுவரில் வரையப்பட்ட ஓவியம்போலப் பதிந்துகொண்டு, அக்குரல்களைக் கேட்க முயல்கிறேன். இந்த அறைக்கு அப்பால் நூற்றுக்கணக்கான அறைகள். ஒவ்வொரு அறையும் இன்னொரு அறையின் குரலுக்கு தன் வெறுமையால் செவி கொண்டிருக்கிறது. ஒரு அறையில் இருந்து இன்னொரு அறைக்கு குரல்கள் கசிகின்றன.
மிக அப்பால், மிகமிகத் தொலைவில், எங்கோ குரல்கள் மட்டுமே ஆன பெருவெளி ஒன்றிருக்கிறது. அங்கிருந்து மழை பொழிந்து குடங்களை நிறைப்பது போல இந்தச் சிற்றறைகளை அந்தக் குரல்கள் நிரப்பிக்கொண்டிருக்கின்றன. அந்த வெளி முடிவில்லாதது. குரல்கள் மட்டுமேயானது. தொலைந்துபோகும் சொற்கள் எல்லாம் அங்கேதான் சென்று சேர்கின்றன. எல்லா சொற்களும் அங்கிருந்துதான் தோன்றுகின்றன.
நான் கேட்ட முதற்சொல், நான் செவிகூரும்போது துலங்கவில்லை. அதை மிகத்தொலைவிலும் மிக மங்கலாகவும் முதலில் அடையாளம் கண்டேன். அது தெரிந்தது போலிருந்தது. தெரிந்த சொல் என்பதே என்னைப் பரபரக்கச் செய்தது. ஆனால் நான் நெருங்கும் தோறும் விலகுவதாகவும் விலகும் தோறும் மெதுவாக நெருங்கி வருவதாகவும் அது என்னுடன் விளையாடியது. என்னுடைய மொத்த சொற்கிடங்கிலும் எந்தச் சொல்லும் அதனுடன் சென்று இணைந்து கொள்ளவில்லை. நான் அச்சொல்லைத் தொடர்ந்து சென்று கொண்டிருந்தேன். பின்னர் ஒரு கட்டத்தில் அது இயலாதென்று தெரிந்து கைவிட்டேன். அது இனி இல்லை என்று எனக்கே சொல்லிக்கொண்டேன்.
அந்தக் கைவிடுதல் அளித்த விடுதலையுணர்வு நிறைவை அளித்தது. எல்லாக் கைவிடுதல்களும் விடுதலைகள் தான். நாம் கைவிடுவதும் நம்மைக் கைவிடுவதும் எல்லாமே விடுதலைகள்தான். அதை மீண்டும் மீண்டும் உணர்வதே என் வாழ்வென்று ஆகிவிட்டிருக்கிறது. முற்றிலும் அதிலிருந்து விலகி விலகி விலகி நான் வந்து அமையத் தொடங்கிய பின்னர் என் மிக அருகே அச்சொல் அமர்ந்திருந்ததைக் கண்டேன். நான் நன்கறிந்திருந்ததாக, நெடுநாள் என்னுடன் இருந்ததாக, என்னுடனேயே பிறந்து வளர்ந்ததாகத் தோன்றிய அச்சொல்லை நான் புன்னகையுடன் திரும்பிப் பார்த்தேன்.
‘த்வி’. ஒரு மெல்லிய குருவியின் ஒலி. சட்டென்று உருமாறி மயிலின் அடிக்குரலாக ஒலித்தது. பம்பை போன்ற ஏதோ ஒரு மேளத்தின் உறுமல். கல் பாறை வெடிக்கும் ஓசை. வானம் முழுக்க நிரம்பி பல்லாயிரம் எதிரொலிகளுடன் அகன்றகன்று தொலைவின்மைக்கு செல்லும் இடியோசை. ‘த்வி’ முழங்கிக்கொண்டே இருந்தது அச்சொல். பெரிய மலைபோல ஆகியது. அதன் அருகிலேயே சிறிய கூழாங்கல் போலவும் அதுவே இருந்துகொண்டிருந்தது. ‘த்வி’
அச்சொல்லையே பார்த்துக்கொண்டு அமர்ந்திருந்தேன். சில சமயம் வண்ணச் சிறுகுமிழி. சிலசமயம் சுழற்றி உள்ளிழுக்கும் மாபெரும் நீலக்கருஞ்சுழி. சில சமயம் புன்னகைக்கும் ஒரு குழந்தை முகம். சில சமயம் புல்நுனியில் நின்று நடுங்கும் பனித்துளி. சில சமயம் ஒரு துளி அனல்.
த்வி என்றொரு சொல் எந்த மொழியைச் சார்ந்தது? நான் அச்சொல்லை மெல்லக் கைநீட்டி என் விரலால் தொட்டேன். நீர்க்குமிழி போல அத்தனை மென்மையான அத்தனை நிலையற்ற ஒன்று. ஆனால் என் கைவிரலில் அதன் குமிழிப்படலம் மெல்ல அழுந்தி மீண்டது. அது புன்னகைப்பது போலிருந்தது. ஒரு கண்ணாக மாறி என்னைப் பார்ப்பது போல.
அழகிய இனிய சொல்லே. ஆயிரமாண்டு விடாது பெய்யும் ஒற்றைப்பெருமழையின் ஒரு துளி நீரே. தன்னுள் தான் நிறைந்து முழுமை கொண்ட பெருங்கடலே கூறுக, நீ யார்? இங்கு இப்போது வந்து நின்று புன்னகைப்பது எதற்காக? நீ என் இளமையிலேயே என்னை வந்தடைந்தாய். என் நினைவு தொடங்கும்போதே என்னுடன் இருந்தாய். இந்த மூடிய மாளிகையில் இருந்து என்னை நோக்கி பாய்ந்து வந்து என்னை அறைந்து வீழ்த்தினாய். என்னை காய்ச்சலில் உளறச் செய்தாய். என் கனவுகளில் ஒலித்துக்கொண்டே இருந்தாய். உன்னை என் தூக்கத்தில் குழறினேன். திடுக்கிட்டு விழித்துக்கொண்டபோது நீ அகன்று சென்றுவிட்டிருந்தாய்.
த்வி என்று நான் அறிந்த பல மொழிச்சொற்கள் உள்ளன. சம்ஸ்கிருதத்தில் இரண்டு. அதுவே லத்தீனில் Duo. கிரீக்கில் Dyo. பார்ஸியில் Do ஆங்கிலத்தில் Two. உலகம் முழுக்க அச்சொல் பரவியிருக்கிறது. இப்பிரபஞ்சத்தில் அவ்வாறு ஒரு நிகழ்வு உண்டு என முதலில் உணர்ந்த மூதாதை அளித்த சொல் அது. அச்சொல் அவனுக்கு அப்போது அந்த அர்த்தம் என்று தோன்றியது. அந்த இணைவு எப்படி நிகழ்ந்தது? சொல்லும் பொருளும் எப்படி இணைகின்றன? சொல்லும் பொருளும்போல என்று பார்வதி பரமேஸ்வர லயத்தை காளிதாசன் சொல்கிறான். சொல்லும் பொருளும் கொள்ளும் முதல்புணர்ச்சியே பெற்றுப்பெருகி மொழியாகியது.
முதலில் அச்சொல் என இங்கு என்றும் திகழும் ஒன்றை உணர்ந்தவன் இடிவிழுந்த மரம்போல நின்று எரிந்திருப்பான். அவன் அந்த வெளிச்சத்தை மனிதகுலம் முழுக்க அதை அளித்துவிட்டு சென்றான். ஆனால் என் முன் அமர்ந்திருப்பது அவன் அளித்த அந்த அர்த்தத்தைப் பெற்றுக் கொள்வதற்கு முந்தைய சொல். முற்றிலும் தூயது. இன்னும் பெயரிடப்படாத குழந்தை போல. இது வெறும் ஒலி. இங்கே அனைத்திலும் திகழ்ந்துகொண்டிருக்கும் ஒலிகளில் ஒன்று.
த்வி, த்வ, த்வம், திவி… திரும்பத் திரும்ப அது ஒலித்துக்கொண்டிருந்தது. நான் அந்தச் சொல்லை என் சுட்டுவிரலில் ததும்பிக்கொண்டிருக்கும் ஒரு துளி நீர் போல ஏந்தியபடி பைத்தானின் தெருக்களில் அலைந்தேன். அதை என் முன் ஏந்தி அதில் சூரிய உதயமும் சூரிய அஸ்தமனமும் உருவாவதை பார்த்துக்கொண்டு அரண்மனைப் படிக்கட்டில் அமர்ந்திருந்தேன்.
எத்தனை தூய ஒரு சொல்! இதற்கு நான் பொருள் அளித்தே ஆகவேண்டும். ஆனால் பொருள் அளிக்காவிட்டால் இதற்கு பயனேதும் இல்லை. பொருளில்லையென்றால் இது என் உள்ளமாக ஆவதில்லை. ஆனால் என்னில் இருந்து அகல்வதுமில்லை. பொருளை ஏற்றுக்கொண்டது என்றால் இது அருளும் தெய்வம். பொருளை விலக்கியது என்றால் இது என்னை அழிக்கும் தெய்வம்.
இது எனக்குப் பொருளாகப் போவதில்லை. இது தன் முடிவற்ற சாத்தியங்களால் இது என்னைத் தொட்டு உலுக்கிக் கொண்டே இருக்கும். எனக்கொரு பெயர் போடு, பெயர் போட்ட பிறகு என்னிடம் நீ பேசமுடியும் என்று இந்தக்குழந்தை என்னிடம் சொல்கிறது. என்னைப் பிடித்து உலுக்கிக்கொண்டே இருக்கிறது. என்னைத் தூங்கவிடாமல் உதைத்துக்கொண்டோ சிணுங்கிக்கொண்டே அழுதுகொண்டோ இருக்கிறது. எத்தனை நாள், எத்தனை ஆண்டு, எத்தனை பிறவிக்காலம் அச்சொல்லுடன் இருந்தேன் என்று எனக்குத் தெரியாது. என் பொழுது என்னவாயிற்று என்றும் நான் உணரவில்லை.
எப்போதோ நான் மீண்டும் ஒரு சமநிலையை அடைந்தேன். அப்போதும் அச்சொல்லை பொருள் கொள்ள முயலாமல் அப்படியே வைத்திருந்தேன். எப்போதும் எவரிடமும் காட்ட முடியாத வைரம் ஒன்றை பொதிந்து வைத்திருக்கும் பிச்சைக்காரன் போல. தனிமையில் அதை எடுத்துப்பார்த்து அதன் ஒளியை என் முகத்தில் வாங்கி புன்னகைத்துக் கொண்டேன். மீண்டும் பொதிந்து பொதிந்து பொதிந்து ஆடைகளுக்குள் உடலுக்குள் எங்கோ வைத்துக்கொண்டேன்.
அச்சொல் அவ்வாறு முற்றிலும் மறைந்து இல்லையென்றே ஆனபின் எப்போதோ அது வேறு ஒரு சொல்லுடன் அமர்ந்திருப்பதைப் பார்த்தேன். இரண்டு பனித்துளிகள், இரண்டு வைரங்கள், ஒரே பார்வையென ஆகும் இரண்டு கண்கள். நான் குனிந்து அந்த இரண்டாவது சொல்லைப் பார்த்தேன். எப்படி வந்து அதனுடன் இணைந்துகொண்டது அது? அதன் பிரதிபலிப்புதானா இது? படிகக்கல்லின் அருகே விழுந்து கிடக்கும் அதன் ஒளி போல இது அதன் நீட்சியா?
ப்ரு. ப்ரு என்னும் ஒலி. ப்ரு என்றொரு சொல் இதன் பொருள் என்ன? இதன் ஆழத்தில் முளைக்கும் விழைவுடன் இருக்கும் அந்த முளை என்ன? நேர்நிலையான ஒன்று. pro ? முன்னரே இருப்பது pre. ப்ரு. ப்ரு, ப்ர… பரந்தது. பர. திரண்டது புரு… பின்னர் அவ்விரு சொற்களையும் கொண்டு நான் அலைந்தேன். ஒரு நாள் என்பது எத்தனை நீளம். ஒருவன் தன்னுள் மட்டுமே முழுமையாக வாழ்வான் என்றால் ஆண்டுகளே கணங்களாகலாம். கணங்கள் ஆண்டுகளாகலாம். அவன் வாழ்வதும் உணர்வதும்தான் காலம் என்பது.
பின்னர் ஒரு கணத்தில் பைத்தான் நகரின் பேருந்து நிலையம் அருகே நடுத்தெருவில் அவ்விரு சொற்களும் என்னில் இணைய என் கைத்தடியும் சட்டியும் நடுநடுங்க நின்றிருந்தேன். அங்கேயே தரையில் அமர்ந்தேன். என் உடலில் வலிப்பு உருவாகியது. யாரோ என்னை இழுத்து சாலையோரமாகப் போட்டு பேருந்துகள் செல்ல வழி ஏற்படுத்திக் கொடுத்தார்கள். என் உடல் வலிப்பு வந்து துள்ளிக்கொண்டிருந்தது. பின்னர் எச்சில் வழிய அடங்கியது. எப்போதும் வலிப்பு அடங்கும்போது உள்ளம் துல்லியமாக இருக்கிறது. எல்லா சிந்தனைகளும் உணர்வுகளும் தேங்கி கல்லாகிவிடுகின்றன. அலைகளெல்லாம் ஒளி ஊடுருவும் படிகவெளிபோல மாறிவிடுகின்றன.
நான் மல்லாந்து வானைப்பார்த்தபடி படுத்துக்கிடந்தேன். என் கண்களில் இருந்து கண்ணீர் வழிந்துகொண்டிருந்தது. என் முகத்தைப் பார்த்தவர்கள் வியந்து சுற்றிலும் நின்று பேசிக்கொள்ளும் அதிர்வுகள் எனக்கு உடல் தோல் வழியாகவே வந்துகொண்டிருந்தன. என் முகம் தெய்வத்தைக் கண்டது போல் மலர்ந்திருக்கக் கூடும். வானில் இருந்து இறங்கி பத்து திசைகளிலும் சூழ்ந்திருக்கும் பேரிசை ஒன்றில் முற்றிலும் ஆழ்ந்து மயங்கியிருக்கும் கந்தர்வன் சிலை போல் இருந்திருக்கக் கூடும். திகட்டாத இனிப்பை அள்ளி அள்ளித் தின்றுகொண்டிருக்கும் குழந்தையின் முகம் என பொலிருந்திருக்கக் கூடும்.
இணையாத சொல் முழுக்க முழுக்க அர்த்தம் அற்றது. அல்லது நாமறியும் அர்த்தங்கள் ஏதும் அற்றது. அல்லது ஒவ்வொரு சொல்லும் முழுப்பொருளையும் கொண்டது என்பதனால் தனிப்பொருள் என ஒன்று இல்லாதது. சொற்களின் இணைவு வழியாகவே இப்பிரபஞ்சத்தை படைத்த அது, அல்லது இப்பிரபஞ்சமென ஆகி நின்றிருக்கும் அது, இங்கே தன்னை நிகழ்த்திக்கொள்கிறது. சொற்களின் இணைவே லீலை. அதற்கு வேறு வழியில்லை. இப்பிரபஞ்சம் அதன் முடிவற்ற தன்வெளிப்பாடென்றால் அதில் ஒருகணம் ஒரு சொல். அது முடிவற்ற காலம் கொண்டது. அதன் காலம் நீள்வதும் அகல்வதுமாகும். நீள்வதிலும் அகல்வதிலும் முடிவின்மை. அதற்கு கணம் தோறும் கணங்கள் கோடி. எனவே முடிவற்ற கோடியால் முடிவற்ற கோடியைப் பெருக்கி உருவாகி முடிவின்மையில் கலந்து உருவாகும் முடிவில்லாத கணங்கள். முடிவில்லாத சொற்கள்.
ஆயினும் ஒரு சொல் இன்னொன்றுடன் முற்றிலும் தொடர்பற்றது. ஒன்று இன்னொன்றை எவ்வகையிலும் அறியாததும்கூட. ஒவ்வொரு கணத்திலும் ஒரு முழுக்காலம், முழு வெளி. ஒவ்வொரு காலவெளியிலும் முற்றிலும் புதிய ஒரு முதற்பொருள். சொற்கள் இணைவது என் அறிவென்னும் இக்கணத்தில் மட்டுமே. சொற்கள் முழுமையாகவும் என்றென்றைக்குமாகவும் இணைய முடியாது. அவை ஒன்றை ஒன்றை தொட்டுக்கொள்ளலாம். ஒன்றின் மேல் ஒன்று படியலாம். ஒன்றை ஒன்று இணைத்துக்கொண்டு பிறிதொன்றை நோக்கிச் செல்லலாம். இணைந்து இணைந்து அவை விளையாடும் முடிவில்லாத விளையாட்டினூடாக ஒற்றைப் பெருஞ்சொல்லென திரளவும் திரளலாம்.
சொல்லிணைவை வகுக்கவே மொழியிலக்கணம் எப்போதும் முயன்று வருகிறது. ஜைமினியை தொடரும் பூர்வமீமாம்சகர்களின் வியாகரண மரபு என்பது சொல்லை அதன் இணைவுச் சாத்தியங்களைக் கொண்டு மட்டும் வகுப்பதுதான். ஆனால் சொல்லிணைவை நிலையாகவும் முழுமையாகவும் வகுத்துவிடவே முடியாதென்று ஒவ்வொரு கணமும் அது கண்டடைகிறது. ஆகவே உறுதியான ஒன்றை நம்பி இயலும் குறைந்தபட்ச வரையறை ஒன்றை அது உருவாக்கிக்கொள்கிறது. உறுதியானது என்பது இங்கு வெளியே திகழும் பருப்பொருள். அதிலிருந்து வரும் புலனறிதல். புலன் அறிதலில் இருந்து வரும் தர்க்கம். தர்க்கத்திலிருந்து வரும் தொடர்புறுத்தல். எல்லா சொல்லிணைவு இலக்கணங்களும் தொடர்புறுத்தலை அடிப்படையாகக் கொண்டு உருவானவைதான்.
ஆகவே எல்லாச் சொல்லிணக்கங்களும் சொல்லின் சாத்தியக்கூறுகளை கட்டுப்படுத்தும் தன்மை கொண்டவைதான். முடிவற்ற சாத்தியக்கூறுகள் உண்டு என்றால் அப்போதே இலக்கணம் இல்லை என ஆகிவிடுகிறது. இவ்வாறாகத்தான் இச்சொல் இன்னொன்றுடன் இணையும் என்றால் மட்டுமே அது உன்னருகே நின்றிருக்கும் இன்னொருவருக்கு புரியும் என்று இலக்கணம் சொல்கிறது. அதை நம்பும் பல்லாயிரம் கோடி சாமானியர்கள் அன்றாட வாழ்க்கையில் கோடு வழியே வழியும் நீர்போல அதில் ஒழுகி நகர்கிறார்கள். ஆனால் கவிஞன் புறப்பொருளில், புலனறிவில், தர்க்கத்தில் திகழ்பவன் அல்ல. அதற்கப்பால் ஒன்று அவனிலிருந்து வெட்டவெளி நோக்கி கை நீட்டுகிறது. அவனருகே நின்றிருக்கும் ஒருவனிடம் அது அனைத்து சொற்களையும் கடந்து தொடர்புறுத்துகிறது. ஆகவே சொல்லிணைவு இலக்கணத்தை அவன் மீறிக்கொண்டே இருக்கிறான். தூளித்தொட்டிலில் இருந்து கையையோ காலையோ வெளியே விட்ட குழந்தையே கவிஞன்.
கவிதை என்பதை இவ்வாறு வரையறையறுப்பேன். அறியப்பட்ட சொல்லிணைவு. இலக்கணங்களையும் சாத்தியக்கூறுகளையும் கடந்து நிகழும் ஒரு புதிய சொல்லிணைவு. அதற்கப்பால் ஒன்றுமில்லை. அச்சொல்லிணைவு அதுவரை இருந்த அர்த்தங்களை சிதைத்து பிறிதொன்றை உருவாக்குகிறது. அதுவரை இல்லாத ஒன்றை கொண்டு வந்து நிறுத்திவிடுகிறது. புதுச்சொல்லிணைவு உருவாக்கும் புதிய பொருள்கொள்ளலின் சாத்தியத்தை மட்டுமே கவிஞன் உருவாக்க முடியும். அவன் பொருளை உருவாக்க முடியாது. பொருள் அவனுக்குச் சலிப்பூட்டுவது. ஏனென்றால் அது இங்கே, இப்போது என நிகழ்வது.
சொல் ஒரு பிரபஞ்சம் என்பதனால்தான் கவிஞன் படைப்பவன் என்றும், கடவுளுக்கு மறுவடிவம் என்றும் கருதப்படுகிறான். இச்சொல் இவ்வாறுதான் இணையும் என்பவன் மொழியை அறிவது ஏற்கனவே அவன் அறிந்த ஒன்றாக மட்டுமே. இவ்வாறு இங்கு நிகழும் என்றால் நிகழட்டும், இது இனி இவ்வாறே ஆகுமென்றால் ஆகட்டும் என்றே கவிஞன் அதைக் கடந்து செல்கிறான். இரு சொற்கள் இணைய முடியுமென்பதே ஓசைகளின் பெருவெளிக்கு அடியில் ஒன்று உள்ளது என்பதற்கான ஆதாரம். இணைவு எதுவும் இணைந்திணைந்து மேலே செல்லும். ஒன்றென்றேயாகியும் செல்லும். சரிந்து செல்லும் எந்த பரப்பும் கூர்மையைத்தான் சென்றடையும்.
இச்சொற்கள் இணைகின்றன. இணைந்து இன்னொன்றாகின்றன. சொல் இங்கு பிறந்துள்ளது. வியனுருவ ஆணும் பெண்ணும் முயங்குகின்றனர். ப்ரு, ப்ர, பர… பரத்தல், பரவுதல், பரு. எத்தனை சொற்களாக எந்தெந்த மொழிகளில் இது உருமாறியுள்ளது. த்வி, த்வ. பரவும் இரண்டு. இணையும் இரண்டு. புரக்கும் இரண்டு. அச்சொல்லை அப்போது பிறந்த குழந்தையை கையில் எடுக்கும் நடுக்கத்துடனும் பரவசத்துடனும் எடுத்து அதைப்பார்த்து நான் சொன்னேன். “நிலம்! நிலம்!”
நான் கானபூதியின் முன் அமர்ந்தபோது மெல்லிய புன்னகையுடன் இருந்தேன். நிழல்கள் என்னை திகைத்த பெரிய விழிகளுடன் பார்த்தன. நாகங்கள் அசைவிழந்து நின்றன. ஆபிசாரகன் கூட இரு கைகளையும் நிலத்தில் ஊன்றி என்னை நோக்கி அமர்ந்திருந்தான்.
“அழிவற்றவனே, முடிவிலாக் கதைகள் கொண்டவனே, உன் மொழிக்கும் என் மொழிக்கும் இடையேயான பாலம் ஒரு சொல். ப்ருத்வி” என்று நான் சொன்னேன். “அது அன்னையுடன் குழந்தையை இணைக்கும் தொப்புள் சரடு என்றும் நினைக்கிறேன்.”
இடக்கையை விரித்து தூக்கி கானபூதி சொன்னது. “ஆமாம், நீ ஜெயித்து விட்டாய்”
நிழல்கள் என்னை பாய்ந்து வந்து தழுவிக்கொண்டன. சக்ரவாகியும் சூக்ஷ்மதருவும் இருபக்கமும் என்னை முத்தமிட்டுக்கொண்டே இருந்தன.
“எங்கள் மொழியை நீ இனி புரிந்துகொள்ள முடியும்” என்று கானபூதி சொன்னது. “நீண்டநாட்களுக்கு முன்பு அதர்வன் என்னும் வேதமுனிவர் நான் சொன்ன கதையில் இருந்த அந்தச் சொல்லில் இருந்துதான் அறியவேண்டிய அனைத்தையும் அறியத் தொடங்கினார். இங்கிருந்து அந்தச் சொல்லுடன்தான் அவர் கிளம்பிச் சென்றார். அந்தச் சொல் முளைத்த சிறுமுளை என ஒரு வரியை அடைந்தார். அதர்வம் என அது பெருகியது. அதிலிருந்து ரிக் உருவாகியது. ரிக் சாமம் ஆகியது. சாமம் யஜூர் ஆகியது. பிராமணங்களும் ஆரண்யகங்களும் ஆகியது. சூத்திரங்களும் உபநிஷதங்களும் ஆகியது.”
கைகளைக் கூப்பியபடி நான் அமர்ந்திருந்தேன். என் கண்களில் இருந்து நீர் வழிந்துகொண்டிருந்தது.
“வண்டல் படிந்த கோதாவரியின் மண்ணில் இருந்து உருவான அந்த வரி இது. ‘மாதா பூமி புத்ரோகம் பிருத்வ்ய:’ அதுவே வேதங்களின் தொடக்கமும் மையமும் சாரமும். இப்புவி ஓர் அன்னை, நான் நிலத்தின் மகன்” என்றது கானபூதி.
(மேலும்)
Hope and despair
Our society is spiritually void now. Do you believe the small number of people you are training can make any change?
Hope and despairவெறுப்புணர்ச்சி,தாழ்வு மனப்பான்மை, உயர்வு மனப்பான்மை பற்றி அருமையாக விளக்கினீர்கள்.இவை எல்லாம் அலைகடல் போல அலைகள் வந்த வண்ணம் இருக்கும்.உண்மையாக வாழ்பவன் அலையின் திசையை அறிந்து அலையின் திசையை தனக்கு சாதகமாக பாய்மரக் கப்பலை திருப்பி துடுப்பு போட்டு தான் அடைய நினைத்த கரையை சென்றடைய வேண்டும்
வெறுப்பு, கடிதம்May 20, 2025
அஞ்சலி: மித்ரன் காட்சன்
தினத்தந்தியில் செய்தி வந்திருக்கிறது, நான் கவனிக்கவில்லை. காட்சன் எனக்கே வாட்ஸப் செய்தி அனுப்பியிருந்தார். அதையும் நான் பார்க்கவில்லை. எழுத்தின் அலைக்கழிப்புகள். அதிலும் இப்போதைய நாவல் இருண்ட ஆழங்களை நோக்கிச் செல்வது. எனக்கு அணுக்கமான நண்பர் போதகர் காட்சனின் மகன் மித்ரன் 19 மே 2025 அன்று மறைந்தான்.
காட்சனும் அவருடைய நண்பர்கள் பதினொரு பேரும் சேர்ந்து கோதையாறு அருகே உள்ள கொடுந்துறை என்னும் ஊரில் பழங்குடியினரின் வாழ்விடத்திற்கு சென்றிருக்கிறார்கள். அவர்களுடன் பேசிக்கொண்டிருந்துவிட்டு அருகே உள்ள பெரிய மரத்தின் அடியில் அமர்ந்து உணவுண்டு கொண்டிருக்கையில் அந்த மரத்தின் கிளை ஒன்று முறிந்து விழுந்து காட்சனின் மகன் மித்ரனும், இன்னொரு சிறுவனும் காயமடைந்தனர். மித்ரன் அங்கேயே உயிரிழந்தான்.
மித்ரன் மும்பையில் ஏழாம் வகுப்பு படித்துவந்தான். போதகர் காட்சன் விடுமுறைக்காக நாகர்கோயில் வந்தபோது நிகழ்ந்தது இது.
மித்ரன் ஏழுமாதக் குழந்தையாக காட்சன் என் வீட்டுக்குக் கொண்டுவந்து என் கையில் தந்த நினைவு இன்னும் கைகளில் இருக்கிறது. அவனைக் காணும்போதெல்லாம் தழுவிக்கொள்ளாமல் இருக்க முடிந்ததில்லை. அபாரமான திறமைகள் கொண்ட சிறுவன். பணிவும் சூட்டிகையும் கலந்த சில அரிதான குழந்தைகளுண்டு. அவர்களில் ஒருவன்.
இந்தப் பிரபஞ்சப் பெருக்கில் எதற்கும் எந்த காரணகாரியத் தொடர்பையும் நாம் நம் சிறிய அறிவால் ஊகிக்கவோ விளக்கிக்கொள்ளவோ முடியாது. விளக்கமுயலும் எந்த முயற்சியும் வெறும் ஆணவமே. ஆனால் மிகப்பிரம்மாண்டமான ஒரு காரணகாரியத் தொடர்பு இருந்துகொண்டும்தான் உள்ளது.
நமக்கு இரண்டு வழிகளே உள்ளன. அதை அறியமுடியாமை என்று அப்படியே நிராகரித்து நாமறிந்த தர்க்கங்களில் உழல்வது. அதன் அறியமுடியாத பிரம்மாண்டத்தின் முன் பணிவதும், நம்மை ஒப்படைப்பதும். என் வழி இரண்டாவது என இன்று தெளிந்திருக்கிறேன்.
இந்த நாளில் வெளியே ஒலித்துக் கொண்டிருக்கும் பறவைகளின் குரல்களைக் கேட்டுக்கொண்டு, மனம் முழுக்கக் கண்ணீருடன் அமர்ந்திருக்கிறேன். அமைக!
தொடர்பு விடுபடுதல்…
என்னுடன் உரையாடலில் இருந்தமை, விலகியமை பற்றி ஒரு நண்பர் எழுதியிருந்தார். எல்லாருமே இந்த இரண்டு நிலைகளிலும் மாறிமாறி இருப்பார்கள் என நினைக்கிறேன். கடிதங்கள் வழியாக தொடர் உரையாடலில் இருப்பவர்கள் விலகிச் செல்வதும், மீண்டும் வருவதும் அடிக்கடி நிகழ்கிறது.
விலகிச்செல்வதற்குத் தனிப்பட்ட காரணங்கள் சில இருக்கலாம். நான் பதில் அளிக்காமலிருப்பது, அல்லது தாமதமாவது காரணமாக இருக்கலாம். உண்மையில் இன்று எல்லா கடிதங்களுக்கும் பதிலளிப்பது குறைந்துவிட்டது. காரணம் நான் தொடர்ச்சியாக தத்துவக்கல்வி, இலக்கியவாசிப்பு, எழுத்து என என் மூளையை முழுக்க நிரப்பி வைத்திருக்கிறேன். வயதாகிறது, இனி அதிக நேரமில்லை என்னும் எண்ணமும் உள்ளது.
ஆனால் கடிதங்களுக்கு பதில் இல்லை என்பதனால் எவரையேனும் நான் பொருட்படுத்தவில்லை என்று பொருள் இல்லை. நான் ஒவ்வொரு கடிதத்தையும் வாசிக்கிறேன், அவற்றைப் பற்றி சிந்திக்கிறேன், அவற்றை எழுதியவர்களுடன் நுட்பமாக உடனிருக்கிறேன். அவை எனக்கு மனிதர்களை அறிய முக்கியமான வாசல்கள். அவர்களுடன் நானும் உரையாடிக்கொண்டுதான் இருக்கிறேன்.
என் அணுகுமுறை ‘பரிவானது’ அல்ல. எனக்கு அது கைவரவில்லை என நினைக்கிறேன். நான் அறிந்தவரை சுந்தர ராமசாமியோ, ஆற்றூர் ரவிவர்மாவோ, பி.கே.பாலகிருஷ்ணனோ பரிவானவர்கள் அல்ல. அவர்கள் ஒரு விழுமியத்தை, ஒரு கனவை முன்வைத்தார்கள். அதைப் பகிர்ந்துகொள்ளவே முயன்றனர். அதை மட்டுமே அவர்கள் பரிந்து ஊட்டினார்கள். எனக்கும் இன்னும் பலருக்கும். அந்த விழுமியங்கள், கனவுகள் வழியாக தங்களை தொகுத்துக்கொண்டவர்கள் பலர். மீட்டுக்கொண்டவர்கள் பலர். அவர்களின் நினைவில்தான் அந்த ஆசிரியர்கள் பரிவானவர்களாக நீடிக்கிறார்கள்.
அந்த விழுமியத்தையோ கனவையோ எட்டும் ஆர்வமோ முயற்சியோ இல்லாமல் மீண்டும் மீண்டும் வீழ்ச்சி அடைபவர்கள், அதையே சொல்லிப் புலம்புபவர்கள், எப்போதுமே ஒரு தளர்ந்த உளநிலையில் இருப்பவர்கள் உண்டு. அவர்கள் மேல் அந்த ஆசிரியர்களுக்குப் பரிவு ஏதும் இருக்கவில்லை என்று கண்டிருக்கிறேன். எளிதாக அவர்களை அந்த ஆசிரியர்கள் கடந்து சென்றனர்.
உதாரணமாக ஒருவர் ‘என்னால் வாசிக்க முடியவில்லை’ என்று சொன்னால் வாசிப்பதற்கான வழிகளை சொல்லி அவர்களை சு.ரா ஆற்றுப்படுத்துவதைக் கண்டிருக்கிறேன். அப்படிப் பலர் உண்டு. ஆனால் அவர் சொன்ன எதையுமே செய்து பார்க்காமல் மீண்டும் மீண்டும் தன் சோர்வையே சொல்லிக்கொண்டிருந்த ஒருவரை சுந்தர ராமசாமி மென்மையாக ‘நீங்க ஏன் உங்க சர்ச்சிலே போயி ஃபாதர் கிட்ட பேசக்கூடாது? அவருதான் உங்களுக்கு ஹெல்ப் பண்ண முடியும்’ என்று தவிர்ப்பதைக் கண்டேன்.
தமிழிலக்கியத்தில் முனைவர் பட்ட ஆய்வுசெய்யும் ஒருவரிடம் அந்த வரி சொல்லப்படுவது என்பது மிகக் கடுமையானது. அது அந்தப் பெண்மணிக்கும் புரிந்தது. அவர் முகம் சிவந்தது. அவரை சு.ரா. அவமதித்துவிட்டதாகவே எனக்கும் பட்டது. அப்பெண்மணி பின்னர் சுராவிடம் வரவும் இல்லை. (ஆனால் அவர் பிறகு அதிதீவிர கிறிஸ்தவராக, அசட்டுத்தனமான மதபோதனை செய்பவராக ஆனார். சு.ராவின் கணிப்புதான் சரி என எனக்குத் தெரிந்தது)
நித்ய சைதன்ய யதி அனைவரிடமும் பரிவு காட்டியவர். எவரிடமும். மிகக்கீழ்நிலையில் திளைக்கும் உள்ளம் கொண்டவர்களிடமும். அறிவியக்கம் அவருக்கு முக்கியமே அல்ல. அதுபோல் நான் இருக்கவேண்டும் என விரும்பினேன். என்னால் முடியவில்லை. அதற்கு வேறொரு உளநிலை தேவை. எதனாலும் பாதிக்கப்படாமல் விலகி நின்றிருக்கவேண்டும். நித்யா மிகுந்த பரிவுடன் வெளிப்பட்டார், ஆனால் அவர் பரிவானவரா? அவர் உண்மையில் இங்கிருக்கும் எவரையேனும் எவ்வகையிலேனும் பொருட்படுத்தினாரா?
நான் எனக்கு எழுதப்படும் கடிதங்களில் அறிவார்ந்த தவிப்பும் தேடலும் இருந்தால் அவர்களை என்னவர்களாகக் கொள்கிறேன். வெறுமே வாழ்க்கைப் பிரச்சினைகளை எழுதுபவர்களைக் கூட அன்புடன் தொட்டுக்கொள்கிறேன். தனிமையின் வெளிப்பாடுகளை எழுதுபவர்களுக்குக் கூடுமானவரை அணுக்கமாக இருக்க நினைக்கிறேன். ஆனால் அறிவார்ந்த ஆர்வமே இல்லாத, வெறும் கடிதங்களில் உள்ளம் படிவதில்லை. மேலோட்டமான வம்புகள், சீண்டல்கள், அரட்டைகளில் இருந்து உடனே விலகிவிடுகிறேன்.
என்னிடம் உரையாடுபவர்கள் என் எழுத்துக்களை, பேச்சுக்களை எல்லாம் அவர்களுடனான என் உரையாடலாகவே கொள்ளவேண்டும். அவர்கள் என்னிடம் பேசியவற்றுக்கு நான் அவற்றில் பதில் சொல்லியிருக்கலாம். என்னுள் அந்த பதில் உருவாக சற்று காலம் பிந்தியிருக்கலாம். அந்த பதில் வேறு சிலவற்றுடன் இணைந்து வெளிப்பட்டிருக்கலாம்.
இன்னொரு வகை விலக்கம் என்பது, என்னுடன் உரையாடிக்கொண்டிருப்பவர் தன் உரையாடலை வேறு திசைக்குக் கொண்டு செல்வது. அல்லது தனக்குள் நிகழ்த்த ஆரம்பிப்பது. அல்லது தானாகவே எழுதவோ வேறெவ்வகையிலாவது வெளிப்படவோ ஆரம்பிப்பது. அதுவும் இயல்பானதுதான். அங்கே ஏதாவது ஒரு புள்ளியில் அசைவின்மை உருவானால், முன்னகரும் வழி மூடி நின்றுவிட்டால் திரும்பி வந்து மீண்டும் அந்த உரையாடலைத் தொடங்கலாம். அதுவும் இயல்பானதே.
அரிதாகச் சிலர் உண்டு. ஆர்வத்துடன் அணுகி வந்து உரையாட முற்படுவார்கள். ஆனால் நான் சொல்லும் ஏதேனும் ஒரு கருத்தால் ‘புண்பட்டு’ விலகிவிடுவார்கள். பிற படைப்பாளிகள் பற்றி ‘அப்டி அவர் சொன்னதோட சப்னு போயிடுச்சு. படிக்கிறத விட்டுட்டேன்’ என்று சொல்பவர்களை அடிக்கடிப் பார்க்கிறேன். என்னைப்பற்றியும் சொல்வார்களாக இருக்கும். இது ஒரு முதிர்ச்சியற்ற நிலை. இப்படிச் சொல்பவருக்கு 35 வயதுக்கும் குறைவு என்றால் அவர் முதிர்வதற்கு ஒரு வாய்ப்பு உண்டு. மேலே என்றால் அவ்வளவுதான், முடிந்த கதை.
ஓர் எழுத்தாளர் நாம் ஏற்கனவே தெரிந்து வைத்திருப்பதையே சொல்லவேண்டும் என்றும், நாம் ஏற்கனவே நம்புவதையே சொல்லவேண்டும் என்றும் எதிர்பார்ப்பதைப் போல அசட்டுத்தனம் வேறில்லை. நாம் ஓர் எழுத்தாளரை வாசிப்பதே அவருடைய உலகுக்குள் நுழைவதற்காகத்தான். அவரை நம் கட்சியில் சேர்ப்பதற்காக அல்ல. அவருடன் விவாதிப்பதே அவர் சொல்வதை நாம் சரியாக உள்வாங்கிக் கொள்வதற்காகத்தான். அவரை நோக்கிச் சென்றுதான் அவரை புரிந்துகொள்கிறோம்.
நாம் ஏற்கனவே பூரணமான ஞானத்தையும் உலகப்புரிதலையும் அடைந்துவிட்டோம் என்றும், அதனுடன் ஒத்துப்போகும் நபர்களே நமக்குத் தேவை என நம்புகிறவர்கள் முகநூலில்தான் அதைத் தேடவேண்டும். இலக்கியம் என்பது தொடர்ச்சியாக வளர்ந்துகொண்டே இருப்பவர்களுக்கான களம். வளர்ச்சி என்பது ஒவ்வொரு கணமும் தான் இருந்துகொண்டிருக்கும் நிலையை நிராகரித்து முன்னகர்வதுதான்.
ஓர் எழுத்தாளர் நம் சாதியைப் பற்றி விமர்சனம் செய்தால் நாம் புண்படுகிறோம் என்றால், நாம் கொண்டாடும் மனிதர்களை விமர்சனம் செய்தால் நாம் சீற்றம் அடைகிறோம் என்றால், நாம் சிந்தனைக்குள் நுழைவதற்கான தகுதியையே அடையவில்லை என்றே பொருள். கருத்துக்களை நம்மால் புரிந்துகொள்ள முடியவில்லை. நம்முடைய எளிய சுய அடையாளங்களே நமக்கு பெரிதாக உள்ளன.
எந்த ஒரு புதிய கருத்தும் நமக்கு ஒரு அதிர்வையே அளிக்கும். நாம் ஏற்கனவே கொண்டிருக்கும் கருத்துநிலைகளை அது உலுக்கும். சிலசமயம் நம் அடித்தளத்தையே உடைத்துச் சரித்துவிடும். புதிய சிந்தனை என்பது நமக்கு உடனடியாகப் புரியாமலிருக்கலாம். நம் தர்க்கத்திற்கு ஒத்துவராமல் இருக்கலாம். நாம் ஏற்கனவே கொண்டிருக்கும் கருத்துக்களுடன் பொருந்தாமல் இருக்கலாம். அது நம்மை சீண்டி கொந்தளிக்கச் செய்யலாம். பொறுமையிழக்க வைக்கலாம். எரிச்சல் மூட்டலாம், ஒவ்வாமையை அளிக்கலாம். ஆங்கிலத்தில் rupture என்று இந்நிலையை பல ஆசிரியர்கள் சொல்வதைப் பார்க்கலாம்.
சிந்தனையில் ஆர்வமுள்ளவர், கற்கவிரும்புபவர் அச்சிந்தனைகளை, அல்லது அவற்றைச் சொல்பவரை உடனடியாக எதிர்க்க மாட்டார். வெறுப்பையும் ஒவ்வாமையையும் உருவாக்கிக் கொள்ளமாட்டார். தன் அகக்கொந்தளிப்பினூடாக அக்கருத்தை உள்வாங்கிக்கொள்ள, தன்னை அதை நோக்கி நகர்த்திக்கொள்ள, தர்க்கபூர்வமாக அதை அணுக மட்டுமே முயல்வார்.
தன் தரப்பை கல்லாக உறையவைத்துக்கொண்டு, அதை எந்நிலையிலும் உடையாமல் பேணிக்கொண்டு, சிந்தனையில் செயல்படுபவர் உண்மையில் சிந்தனைக்கு எதிரானவர். அவர் சிந்தனைக் களத்தில் இல்லை, அவர் நிலைகொண்டுவிட்ட சிந்தனைகளின் விசுவாசி மட்டுமே. மதம், அரசியல், சாதி போன்ற எவ்வளவோ காரணங்களுக்காக இப்படி கல்லான சிந்தனையைக் கொண்டவர்கள் உண்டு. அவர்கள் என்னிடம் அணுகினால் வந்த விரைவிலேயே திரும்பிச் செல்வதை கடந்த முப்பதாண்டுகளாகவே பார்த்துக்கொண்டிருக்கிறேன். அது அவர்களின் பிரச்சினை, நான் செய்வதற்கொன்றும் இல்லை.
‘ஜெயமோகனின் கருத்துகள் மேல் எனக்குக் கடுமையான முரண்பாடுகள் உண்டு, ஆனால்…’ என்று சொல்லும் இளைஞர்களை நான் கொஞ்சம் ஒவ்வாமையுடன் விலக்கி நிறுத்துவது வழக்கம். ஏனென்றால் கற்றுக்கொண்டு விரியவேண்டிய வயதில், எதையும் முழுமையாகவும் விரிவாகவும் தெரிந்துகொள்வதற்கு முன்னரே, உறுதியான நிலைபாடுகளை எடுத்துக்கொண்டும் அதை அறிவித்துக்கொண்டும் செயல்படுபவர்கள் சிந்தனைக்கும் கலைக்கும் எதிரான உளநிலை கொண்டவர்கள். அவர்களில் நூற்றுக்கு ஒருவரே ஏதேனும் வகையில் தன்னை உடைத்துக்கொண்டு உண்மையான சிந்தனை அல்லது கலை நோக்கி வரமுடியும். அந்த ஒருவருக்காக அந்த நூறுபேரிடமும் நான் நேரம் செலவிட முடியாது.
இறுதியாக ஒன்று உண்டு. தனக்கு என் மனதில், அல்லது என் சூழலில் முக்கியத்துவம் இல்லையோ என்னும் எண்ணம் கொண்டு விலகுபவர்களும் சிலர் உண்டு. அது ஒரு தாழ்வுணர்ச்சி மட்டுமே. உண்மையான சிந்தனையார்வம் உடையவர்களுக்கு தனிப்பட்ட முறையில் அவர்கள் மதிக்கப்படுகிறார்களா என்பது எவ்வகையிலும் முக்கியமானதாகத் தோன்றாது. எனக்கு எப்போதுமே தோன்றியதில்லை.
ஏனென்றால் சிந்தனையார்வம் உடையவர் ‘தான்’ என நினைப்பது தன் தனிப்பட்ட ஆளுமையை அல்ல. தன் சிந்தனைகளைத்தான். அந்த சிந்தனைகள் மதிக்கப்படவேண்டும் என அவர் எண்ணுவதிலை, அவை ஏற்கப்படவேண்டும் என்றே எண்ணுவார். அவற்றை தீவிரமாக முன்வைப்பார். பிறரது எதிர்ப்பும் அலட்சியமும் அவரை இன்னும் தீவிரமாக ஆக்கும். தன் தரப்பை அவர் மேலும் மேலும் செறிவாக்கிக் கொள்ளவே முயல்வார்.
உண்மையில் சிந்தனைக் களம் ஒரு போர்நிலம். அது திருமணவீடு அல்ல, உங்களை மதிப்பதற்கு. உங்கள் ஆயுதங்களுடன் நுழைந்து போரிட்டு வென்று நீங்கள் அடையும் இடம்தான் உங்களுக்கு. உங்களை வெல்ல எப்போதும் எதிர்த்தரப்பு இருந்துகொண்டும் இருக்கும். அதனுடன் விவாதித்துத்தான் நாம் கற்றுக்கொள்கிறோம். அதனுடன் போராடித்தான் நாம் ஆற்றல்கொண்டவர் ஆகிறோம். நான் என் இளமையில் என்னை எந்தெந்த ஆளுமைகள் மதித்தார்கள் என்று கணக்கிட்டதே இல்லை. என் கருத்துலகை முழுமையாக்கிக் கொள்ள மட்டுமே முயன்றேன். அதற்கான தீவிரமான செயல்பாட்டில் இருந்தேன். செயல்பாடு வழியாகவே நமக்கான அடையாளம் உருவாகி வரும். அதுவே மதிப்பு பெறும்.
என்னுடன் ஒருவர் கொள்ளும் அணுக்கமும் விலக்கமும் ஏன் என அவர்தான் நுணுகி ஆராயவேண்டும். அது அவர் எந்நிலையில் இருக்கிறார் என்பதற்கான சான்று. அவர் உள்நோக்கிய பயணத்தால் அந்த விலக்கத்தை அடைந்தார் என்றால் அது மிக இயல்பானது, அவர் மீண்டும் வருவதும் இயல்பே. பிற காரணங்கள் என்றால் அவர்தான் அவற்றை ஆராய்ந்து தெளியவேண்டும்.
Jeyamohan's Blog
- Jeyamohan's profile
- 835 followers
