Jeyamohan's Blog, page 93

May 20, 2025

காவியம் – 30

சாதவாகனர் நாணயம், பொமு 2, ஜூனார் அருங்காட்சியகம்

”இந்த வாய்ப்பை நீ இறுதியானது என்றே கொள்ளலாம், கானபூதியிடமிருந்து இனியொரு சலுகை உனக்குக் கிடைக்க வாய்ப்பில்லை” என்று சக்ரவாகி என்னிடம் சொன்னது.

அதன் அருகே உடன் வந்த இன்னொரு சூக்ஷ்மதரு என்னும் நிழல். “நீ தோற்பாய் என்று உறுதி இருப்பதனால்தான் கானபூதி இந்த வாய்ப்பை உனக்கு அளிக்கிறது. இப்படி எத்தனையோ பேரை அது தோற்கடித்திருக்கிறது.”

“தோற்றவர்கள் என்ன ஆவார்கள்? அவர்கள் பிசாசுகளால் உண்ணப்படுவார்கள் என்று கதைகள் சொல்கின்றன” என்றேன்.

“அறிவின்மை” என்று சுபர்ணி என்னும் நிழல் சொன்னது. “நிழல்களாகிய நாங்கள் உங்கள் பருப்பொருள் உலகிலேயே இல்லை. உங்கள் உடல்கள் எங்களுக்கு உண்மையில் கண்ணுக்கே படுவதில்லை. எங்களைப் பொறுத்தவரை அவை இல்லாதவைதான். உங்கள் உடல்கள் வழியாக நாங்கள் அப்பால் கடந்துசென்றால் அதை நீங்கள் அறியக்கூட முடியாது.”

சூக்ஷ்மதரு “நாங்கள் உங்கள் உயிரை நேரடியாகப் பார்த்துக் கொண்டிருக்கிறோம்…” என்றது.

“எப்படி?” என்றேன்.

“அதை உனக்கு விளக்கவே முடியாது. நீ உடலுடன் இருக்கும் வரை உன்னால் எவ்வகையிலும் புரிந்துகொள்ள முடியாது.”

“நீ விரைவில் எங்களுடன் வந்து சேர்ந்துகொள்வாய்” என்று ஆபிசாரன் என்னும் நிழல் இளித்தபடி சொன்னது.

நான் நிழல்களுடன் நன்கு பழகிவிட்டிருந்தேன். அவற்றில் ஒவ்வொன்றும் ஒரு குணம் கொண்டிருந்தன. ஆபிசாரனைப்போல எரிச்சலூட்டும் சில நிழல்களும் இருந்தன.

“தோற்றவர்களிடம் நாங்கள் கேள்விகளைத்தான் மிச்சம் வைக்கிறோம். அந்தக் கேள்வி அவர்களை வாழவிடாது. அதைப்பற்றி யோசித்து யோசித்து அவர்கள் அனைத்தில் இருந்தும் விலகுவார்கள். அனைவரிடமிருந்தும் அந்நியப்படுவார்கள். உண்ணாமல் உறங்காமல் உடல்நலிவார்கள். அவர்கள் இறந்தபின்னரும் அந்தக் கேள்வி எஞ்சுவதனால் இங்கேயே நிழல்களாக ஆகிவிடுவார்கள்.”

மீண்டும் சக்ரவாகி சொன்னது. “இன்று உன்னிடம் கானபூதி என்ன கேட்கப்போகிறது என்று என்னால் சொல்ல முடியும்.”

“என்ன?”

“காவியங்களில் உள்ள ஒரு கேள்வியை… ஆனால் அந்த விடை காவியங்களில் இருக்காது. நீ காவியங்களை துழாவித் துழாவி சலிப்பாய். காவியங்களில் இருந்து ஏதேனும் ஒன்றை தேடி எடுத்துச் சொன்னால் தோற்றுவிடுவாய்.”

“நாம் ஏன் இப்போதே பேசவேண்டும்? கானபூதி என்னிடம் கேட்கும் வரை நான் காத்திருக்கிறேன்” என்று நான் சொன்னேன்.

இரவு கனத்து வந்தது. வானில் நட்சத்திரங்கள் செறிந்துகொண்டே இருந்தன. காற்றில் நாகபடங்களாக தங்கள் அசல் உருவுக்கு மாறிவிட்டிருந்த மரங்களின் இலைகள் அசைந்தன. நாங்கள் கானபூதிக்காகக் காத்திருந்தோம்.

“அது கோதாவரியின் மேல் பறந்தலைய விரும்புவது. பகலில் பருந்தாகவும், இரவில் வௌவாலாகவும்” என்று சக்ரவாகி சொன்னது. “கோதாவரி இப்போதிருப்பதை விட நூறு மடங்கு பெரிய நீர்ப்பெருக்காக இருப்பதை அது பார்த்திருக்கிறது.”

மரத்தின் உருவம் மெல்லத்திரண்டு கானபூதி எழுந்து வந்தது. அதன் கண்கள் என்னை நோக்கிப் புன்னகைத்தன. என்னருகே நின்ற நிழல்களை நோக்கியபின் என்னிடம் “வருக” என்றது. “நாம் இன்று நம் ஆடலை மீண்டும் தொடங்கவிருக்கிறோம் அல்லவா?”

“ஆம்”

“நான் உன்னை மீண்டும் விளையாட அழைத்தது நீ உன்னை மேலும் தகுதிப்படுத்திக் கொள்வதற்காகவே” என்று கானபூதி சொன்னது. “ஆகவே இந்த ஆட்டம் அத்தனை எளிதாக இருக்கப்போவதில்லை.”

“ஆம், எனக்குத் தெரியும்.”

“நான் இருக்கும் இந்த நகரத்தைப் பற்றி உனக்குச் சொல்லியாகவேண்டும்” என்று கானபூதி சொன்னது. கைகள் இரண்டையும் மண்ணில் பதியவைத்தபின் சொல்லத் தொடங்கியது. ”இங்கிருந்து வடமேற்கே விந்திய மலையடுக்குகள் உள்ளன. திரயம்பகேஸ்வர் மலைநிலத்தில் இருந்து கோதாவரி பெருகி இறங்குகிறது. அது மலைச்சரிவுகளில் இருந்து சமநிலத்தை அடைந்து விரைவை இழந்து அகன்று செல்லத் தொடங்கும் இடத்தில் உள்ளது இந்நகரம்.”

இப்பகுதி முன்பு அடர்ந்த பெருங்காடாக இருந்தது. ஆண்டிற்கு ஒரு முறை கோதாவரி பெருகி பாம்பின் பத்தி போல அகன்று இப்பகுதியை முழுமையாக நிறைக்கும். காடு நீரில் பாதிமூழ்கி நின்றிருக்கும். வண்டலைப் படியச்செய்தபடி நீர் வடிந்ததும் புதர்களும் கொடிகளும் இடைவெளியில்லாமல் நுரைபோல முளைத்துப் பெருகி மேலெழும். இங்கு வாழ்ந்த எல்லா விலங்குகளும் மரங்களில் ஏறி வெள்ளத்தில் இருந்து தப்பக் கற்றுக்கொண்டிருந்தன. மண்புழுக்கள் கூட.

வெள்ளத்திற்குப் பிந்தைய சேற்றுநிலம் கோதாவரியின் கருப்பையின் நிணம் போன்றது. கல்லையும் முளைக்கச் செய்யும் உயிர்நிறைந்தது அது என்று பின்னர் கவிஞர்கள் பாடினார்கள். கோதாவரி தானே வண்டலைக் கொண்டு நிறைத்து நிறைத்து கரையை மேடாக்கியது. தானே ஓடி ஓடி தன் வழியை ஆழமாக்கியது. நிலம் மேடானபோது இங்கே முதலில் வேடர்கள் குடிவந்தனர். வெள்ளமில்லா காலங்களில் வேட்டையாட வந்து இந்நிலத்தை நன்கறிந்தவர்கள் அவர்கள். அவர்களின் சிற்றூர்கள் இப்பகுதியெங்கும் முளைத்தன. பின்னர் அவ்வூர்கள் இணைந்து ஒரு சமூகம் ஆயின.

வேட்டையர்களிடமிருந்து வேளாண்மை செய்பவர்கள் உருவானார்கள். விதைகளை சேர்த்து வைத்து விதைத்தாலே அறுவடை செய்யலாம் என்னும் அளவுக்கு வளம் மிக்க நிலம் இது. மிக விரைவிலேயே இது விளைநிலங்களாகியது. வேளாண்மக்களின் ஊர்கள் உருவாயின. சந்தைகளும் சாலைகளும் பிறந்தன. ஊர்த்தலைவர்கள் எழுந்து வந்தனர். அவர்கள் இணைந்து தங்கள் தலைவரை தெரிவுசெய்தனர். அவன் இப்பகுதியின் ஆட்சியாளனாக ஆனான்.

உங்கள் நூல்களில் மகாபாரதத்தின் வனபர்வத்தில் இந்நகர் குறிப்பிடப்படுகிறது. பிரயாகை, பிரதிஷ்டானம், காம்பில்யம், அஸ்வதரம், போகவதி ஆகியவை நீராடியாக வேண்டிய புனிதத்தலங்கள் என்கிறது. பாணினியின் இலக்கணநூலான அஷ்டாத்யாயியில் இந்நகரை பற்றிய குறிப்பு உள்ளது. ஆனால் இந்நகர் அதற்கும் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே இருந்துகொண்டிருக்கிறது. இந்நூலைப் பற்றி உங்கள் நூல்கள் சொல்வதை உனக்கு நினைவூட்டவே சொல்கிறேன்.

இது அசுரர்களின் நிலம், இங்கே உருவானவை அசுரர்களின் அரசுகள். துவஸ்த மனுவின் மகனும், அசுரர் வம்சத்து அரசனுமான சுத்யும்னனால் இந்நகரம் உருவாக்கப்பட்டது. நூற்றெட்டு அசுர குலங்களைச் சேர்ந்த்த நாற்பத்து நாலாயிரம் பேர் இந்நகரை உருவாக்குவதற்காக உழைத்தார்கள். மலைகளில் இருந்து வெட்டி எடுத்த மரங்களையும், கற்களையும் கோதாவரியின் தெப்பங்கள் வழியாகக் கொண்டுவந்து இங்கே அடுக்கி இதை கட்டினார்கள். பன்னிரண்டாயிரம் அசுரச் சிற்பிகள் அசுர சிற்பியான மயனின் வழிவந்த மிருண்மயனின் தலைமையில் இங்கே பணியாற்றினார்கள்.

இதைக் கட்டும்போது ஒவ்வொருவருக்கும் சந்தேகமிருந்தது, இந்நகர் நிலைக்குமா? ஏனென்றால் இதற்கு முன் இவ்வாறு கட்டப்பட்டு வானுயர்ந்து எழுந்த ஏராளமான அசுரப்பெருநகரங்கள் எல்லாமே அழிக்கப்பட்டிருந்தன. ஆகவே சுத்யும்னன் தன் மூதாதையான  துவஸ்த மனுவை நோக்கித் தவமிருந்தான். பதினெட்டுநாள் உணவு உண்ணாமல், நீர் அருந்தாமல் கோதாவரிக்கரையில் அவன் செய்த தவத்தின் முடிவில் துவஸ்த மனு தோன்றினார். அவன் அவரிடம் இந்நகர் ஒருபோதும் அழியக்கூடாது என்ற வரத்தைக் கேட்டான். அவர் “இந்நகர் வெல்லப்படலாம், அழிக்கப்படலாம், ஆனால் அருகம்புல் வேர் போல எப்போதும் எஞ்சியிருக்கும், ஒருபோதும் முழுமையாக அழியாது” என்று வரம் கொடுத்தார்.

அந்தச் சொல்லை ஏற்று இந்நகரை கட்டி முடித்தான் சுத்யும்னன். என்றென்றும் நிலைபெறும் நகர் என்னும் பொருளில் இந்நகருக்கு பிரதிஷ்டானபுரி என்று சுத்யும்னனின் ஆசிரியரும் பிரஹஸ்பதி முனிவரின் வழிவந்தவரும் சாங்கிய மகாதரிசனத்தில் ஞானியுமான பரமேஷ்டி பெயரிட்டார். ஏனென்றால் இங்கே ஏற்கனவே சுப்பிரதிஷ்டானம் என்னும் அசுரர்களின் தலைநகர் இருந்தது. அது இடிந்து அழிந்து மண்ணுக்குள் சென்றுவிட்டது. அதன் மீதுதான் இந்தப் புதிய நகரம் கட்டப்பட்டது. இங்கே அடித்தளம் போடுவதற்காக அகழ்ந்தபோதெல்லாம் பழைய நகரங்களின் இடிபாடுகள் கிடைத்தன.

பிரதிஷ்டானபுரி அழியாதவரம் கொண்டது என்ற பேச்சே அந்நகர் வளர்வதற்குக் காரணமாகியது. பல திசைகளில் இருந்தும் அசுர வம்சங்களைச் சேர்ந்தவர்களும் நிஷாதர்களும் நாடோடிகளும் அங்கே வந்துசேர்ந்து கொண்டே இருந்தனர். மழைக்கால ஏரிபோல நகர் பெருகிக்கொண்டே இருந்தது என்று பிரதிஷ்டான வைபவம் என்னும் நூல் குறிப்பிடுகிறது. ஆனாலும் இந்நகரம் அழியும் என்று சிலர் சொன்னார்கள். “மாமரம் பூப்பதும் அசுரநகர் பொலிவதும் ஒன்றுதான்” என்று ஒரு பிராமணக் கவிஞர் பாடிய வரியை எவராவது எப்போதாவது சொன்னார்கள்.

அந்த அச்சத்திற்குக் காரணம் நினைவுகளில் நீடித்த அழிந்த நகரங்கள். கரையான் புற்றுகளில் இருந்து மண்ணை எடுத்துக் குழைத்து மாபெரும் கரையான் புற்றுகளின் அதே வடிவில் கட்டப்பட்ட வால்மீகபௌமா என்னும் தொல்நகர்தான் துவஸ்தமனுவின் மைந்தனாகிய விருத்திரனால் கட்டப்பட்ட முதல் தலைநகர். துவஸ்த மனுவின் முதல் மைந்தராகிய விஸ்வரூபன் இந்திரனால் கொல்லப்பட்டு விஸ்வபிந்து என்ற பெயருடைய அவனுடைய மலைநகரும் அழிக்கப்பட்ட பின் அவர் தன் இளையமைந்தன் விருத்திரனுக்கு எந்த ஆயுதத்தாலும் வெல்லமுடியாத நகர் ஒன்றைப் படைக்க ஆணையிட்டார். விருத்திரன் அழியாதது எது என்று தன் குலப்பூசகரிடம் கேட்டான். அழிவற்றது சிதல்புற்று என்று அவர் சொன்னார். அதன்படியே அந்நகர் கட்டப்பட்டது. வால்மீகபௌமா அந்தப் பெருநகர் புற்று போல ஒவ்வொரு நாளும் தானாகவே வளர்ந்தது. அவ்வளர்ச்சியை அந்தணரும் ஷத்ரியரும் அஞ்சினர். அவர்கள் வேள்விசெய்து இந்திரனிடம் மன்றாடினர். அந்நகரை  இந்திரனின் வேண்டுதலின்படி பெருகிவந்த கடல் அலைகள் அழித்தன.

அதன் பின் எத்தனையோ நகரங்கள் இந்திரனாலும் அவன் வழிபட்ட தெய்வங்களாலும் அழிக்கப்பட்டன. களிமண்ணாலான மிருத்திகாவதி, நர்மதை நதிக்கரையில் ஹேகயர்கள் அமைத்த பெருநகரமான மாகிஷ்மதி, சூரபத்மன் ஆட்சி செய்த வீரமகேந்திரபுரி, சுமாலியால் கட்டப்பட்டதும் ராவணப்பிரபு ஆட்சிசெய்ததுமான மாநகர் இலங்கை… அவ்வாறு அறிந்தும் அறியப்படாமலும் மறைந்தவை பல ஆயிரம் நகரங்கள் என்று பரமேஷ்டி சொன்னார். அவை உடைந்து விண்ணில் இருந்து உதிர்ந்து சிதறியவை போல அடர்காடுகளுக்குள் சேற்றில் புதைந்தும், தாவரப்பசுமையில் மறைந்தும் கிடக்கின்றன.

பிரதிஷ்டானபுரி அழியவில்லை. சுத்யும்னனின் சோமகுலம் அங்கே வேரூன்றியது. அவன் மகன் புரூரவஸில் இருந்து மன்னர்களின் வரிசை உருவாகிக்கொண்டே இருந்தது. அஸ்மக ஜனபதத்தின் தலைமையிடமாக அது திகழ்ந்தது. பின்னர் மூலகப் பெருங்குடியின் நிலங்களை அது தன்னுள் இணைத்துக்கொண்டது. பெரும்போர்களை அது கண்டது. பலமுறை அதன் கோட்டைகள் உடைக்கப்பட்டன, மாளிகைகள் தீயிடப்பட்டன. அதன் தெருக்களில் பிணங்கள் அழுகி மட்கி எலும்புகளாயின. ஆனால் சிதைவில் இருந்து அது முளைத்துக்கொண்டே இருந்தது.

அந்த நிலைபெற்ற தன்மையின் ரகசியம் பரமேஷ்டியால் சுத்யும்னனுக்கும் அவன் வழிவந்த அரசர்களுக்கும் சொல்லப்பட்டிருந்தது. பரமேஷ்டி சுத்யும்னனிடம் சொன்னார், “நம் மூதாதையரின் நகரங்கள் அழிந்தமைக்கான காரணம் இதுவே. அவர்கள் ஆண்மை நிறைந்தவர்கள், ஆகவே நெகிழ்வு அறியாதவர்கள். நெகிழாதவை உடைய வேண்டியிருக்கும் என்பது பிரபஞ்ச நெறி. ஆண் கூறு புருஷன், பெண்கூறு பிரகிருதி. ஆண்மையும் பெண்மையும் இணையாக இருக்கும் அமைப்பே அழியாதது. ஆண்மை நிலைகொள்ளும் ஆற்றல் என்றால் பெண்மையே மீண்டெழும் விசை. தன்னில் இருந்து தானே முளைத்தெழுவதை எவராலும் அழிக்கமுடியாது.”

பரமேஷ்டி அவருக்கு தொல்முனிவராகிய கபிலர் அளித்த சாங்கிய மந்திரத்தை கற்பித்தார். அதன்படி நூற்றெட்டுநாள் ஊழ்கத்தில் இருந்த சுத்யும்னன் இளா என்னும் பெண்ணாக மாறினான். வளர்பிறையில் ஆண் என்றும் தேய்பிறையில் பெண் என்றும் திகழ்ந்தான் என்று பிரதிஷ்டான வைபவம் என்னும் நூல் சொல்கிறது. சுத்யும்னனை இந்திரனின் படைகள் வானில் இடிமின்னலென திரண்டு வந்து அழித்தன. இந்திரனை வணங்கும் அரசர்கள் வடக்கே உஜ்ஜயினி வழியாக வந்து நகரைக் கைப்பற்றிக்கொண்டார்கள். தோல்வி அடைந்த சுத்யும்னன் காட்டுக்குச் சென்று இளாவாக மாறினான். இளாவின் அழகின்மேல் காதல் கொண்ட தேவனாகிய புதன் அவளுக்கு உதவிசெய்தான். இளா படைதிரட்டி வந்து மீண்டும் நகரை கைப்பற்றினாள்.

ஒவ்வொரு முறை தோற்கடிக்கப்படுகையிலும் த்வஸ்த மனுவின் வம்சத்தில் வந்த மன்னர்கள் உடையவில்லை, நெளிந்து உருமாறினர். ஓடையாகப் பெருகி மீண்டும் வந்தனர். ஆகவே பிரதிஷ்டானபுரி அழியவே இல்லை. அஸ்மாகர்களின் வம்சத்தில் வந்த நான்கு குலங்களைச் சேர்ந்த மன்னர்கள் பிரதிஷ்டானபுரியை ஆட்சி செய்தனர். அவர்களின் காலகட்டத்தில் பிரதிஷ்டானபுரி வெல்லமுடியாத நகர் என்று பெயர் பெற்றுவிட்டிருந்தது. வடக்கே கங்கையின் கரையில் உருவாகிவந்த யாதவ அரசுகளும் பின்னர் பேருருக்கொண்டு வந்த மகதப்பேரரசும் பிரதிஷ்டானபுரியை வெல்லமுடியவில்லை.

அஸ்மாகர்களின் நான்காவது வம்சமே சாதவாகனர் என அழைக்கப்பட்டது. நூறுதேர்களைக் கொண்டவர்கள் என்று அதற்குப் பொருள். அதன் முதல் மாமன்னன் விந்தியமலைக்கு நிகரானவன் என்னும் பொருளில் பிரதிவிந்தியன் என அழைக்கப்பட்டான். ஐம்பது சிற்றரசர்களின் வாழ்த்துகளை ஆண்டுதோறும் பெறும் அரியணையில் அமர்ந்தமையால் அவன் நூறு காதுகள் கொண்டவன் என்று போற்றப்பட்டு, சதகர்ணி என பெயர் பெற்றான். அவன் புகழின் உச்சத்தில் இருந்தபோது வடக்கே கோஸாம்பியை ஆட்சி செய்த தனமித்ரனின் படை வந்து பிரதிஷ்டானபுரியை வென்றது.

காட்டுக்குள் தன் படையுடன் பின்வாங்கிச்சென்ற பிரதிவிந்திய சதர்கணி அங்கே தன் முன்னோர் காட்டிய வழியில் நாகனிகை என்ற பெண்ணாக மாறி திரும்பி வந்து மீண்டும் பிரதிஷ்டானபுரியை வென்றார். காட்டுக்குள் சென்ற பிரதிவிந்திய சதகர்ணி அங்கே நாகர்குலத்துப் பெண்ணான நாகனிகையை மணந்ததாகவும், சதகர்ணி மறைந்தபின் அவளே படைகொண்டுவந்து பிரதிஷ்டானபுரியை வென்றதாகவும் சொல்லப்பட்டாலும் அவைக்கவிஞர்களும் தெருப்பாடகர்களும் சதகர்ணியே முதல் அரசர் சுத்யும்னரின் வழியில் பெண்ணுருக்கொண்டு வந்து அரசியென அமர்ந்ததாக பாடி நிறுவினர்.

நாகனிகை பிரதிஷ்டானபுரியைச் சுற்றி நான்கு பெரிய கோட்டைகளை கட்டினாள். முதல் மதில் மரத்தாலானது. இரண்டாவது மதில் மண்ணாலானது. மூன்றாவது மதில் கல்லால் ஆனது. நான்காவது மதில் ஒன்றோடொன்று பிணைத்து கட்டப்பட்ட முள்மரங்களாலான குறுங்காடால் ஆனது. அதைச்சூழ்ந்து கோதாவரியின் நீர் வந்து நிறைந்திருந்த அகழியும் அதற்கப்பால் காப்புக்காடுகளும் இருந்தன. வடக்கே கங்கைக்கரையில் இருந்து வந்த ஏழு ஆக்னேயபதங்களும், மேற்கே உஜ்ஜயினியில் இருந்து வந்த மிருச்சகடிகாபதம் என்னும் பெருஞ்சாலையும் இணைந்து ஒன்றாகி அதன் கிழக்கு வாயிலை வந்தடைந்தன. விந்தியமலையில் இருந்து நாகனிகையின் பெயர்தாங்கிய நாகனிகாகட்டம் என்னும் மலைப்பாதை வழியாக இறங்கிவந்த கழுதைப்பாதை நகரின் மேற்குவாயிலை வந்தடைந்தது.

ஒவ்வொரு கோட்டைக்கும் ஓர் அடையாளமும் அதைக் குறிக்கும் பெயரும் இருந்தன. முதல் வெளிக்கோட்டை சக்ரமரியாதம் என்றும் அதன் வாயில் சக்ர மகாத்துவாரம் என்றும் அழைக்கப்பட்டது. அதன் முகப்பில் ஒன்பதுமுனைகள் கொண்ட சக்கரம் பொறிக்கப்பட்டிருந்தது. இரண்டாவது உள்மதில் ஷட்சிருங்க வியூகம் என்றும் அதன் நுழைவாயில் ஷட்சிருங்கத் துவாரம் என்றும் பெயர்கொண்டிருந்தது. ஆறு மலைகளின் சின்னம் அந்த வாயிலில் பொறிக்கப்பட்டிருந்தது. மூன்றாவது மதில் அர்த்தசந்த்ர விருத்தம் என்றும், அதன் வாயில் சந்த்ரத்வாரம் என்றும் அழைக்கப்பட்டது. மலைகளுக்குமேல் நிலவு எழும் சின்னம் பொறிக்கப்பட்ட வெள்ளித்தகடு அதன்மேல் பதிக்கப்பட்டிருந்தது. நான்காவது மதில் திரிரத்னகோசம் என்றும், அதன் வாயில் திரிரத்ன ஶ்ரீமுகம் என்றும் அழைக்கப்பட்டது. மூன்று வைரங்கள் பொறிக்கப்பட்ட பொற்தகடு அதன் முகப்பில் அமைந்திருந்தது.

முதல் மதிலுக்குள் உழவர்களும், தொழில்செய்பவர்களும் வாழ்ந்தனர். இரண்டாவது மதிலுக்கு அப்பால் வணிகர்களும், அவர்களுக்குரிய சந்தைகளும் இருந்தன. மூன்றாவது மதிலுக்குள் படைச்சாதியினரும் அவர்களின் பயிலகங்களும் அவர்களுக்குரிய ஆலயங்களும் அமைந்திருந்தன. நான்காவது மதிலுக்குள் அரசகுலத்தவரும் அந்தணரும் தங்கள் தெய்வங்களுடன் வாழ்ந்தனர். அங்கே வேதவேள்விகள் நாளுக்கு மூன்றுமுறை நிகழ்ந்தன. நாளுக்கு ஐந்து வேளை ஆலயப்பூசைகளின் மணியோசைகள் ஒலித்தன. நகருக்குள் நுழைவதற்கு நான்கு பெரிய வாசல்கள் இருந்தன. ஒன்றில் அரசகுடியினரும், பிறிதொன்றில் வணிகர்களும், மூன்றாவதில் படைவீரர்களும், நான்காவது வாயிலில் உழுகுடிகளும் நுழைந்து வெளியேறும்படி வகுக்கப்பட்டிருந்தது.

கானபூதி என்னைக் கூர்ந்து நோக்கிச் சொன்னது. “நீ பிறந்து வளர்ந்த நகரைப் பற்றி உன்னிடம் சொல்லிக்கொண்டிருக்கிறேன். நீ நடந்த மண்ணில் அந்நகரம் புதைந்து கிடக்கிறது. நீ பேசிய மொழியில் அந்நகரின் வரலாறு சிதறி ஊடுருவியிருக்கிறது. அந்நகரில் நீ நுழைவதற்குரிய வாசலை திறக்கும் சாவி உன்னைச் சுற்றியே இருக்கிறது.”

நான் அதை ஏற்பதாக முகம் காட்டினேன்.

”இதுவரை நான் சொல்லிக்கொண்டிருந்தவை உங்கள் நூல்களைப் பற்றி மட்டுமே. என் கதையை நான் சொல்லத் தொடங்கவில்லை. அவற்றை நீ கேட்கவேண்டும் என்றால் உன் செவிகளைப் பற்றி நான் அறிந்தாகவேண்டும்.”

நான் தலையசைத்தேன்.

”ஆகவே நீ சொல். உன் நகரின் கடந்தகாலத்தை திறக்கும் சாவி எங்குள்ளது?”

நான் அதைப் பார்ப்பதைத் தவிர்த்து நேர் முன்னால் மண்ணைப் பார்த்துக்கொண்டு அமர்ந்திருந்தேன்.

என் காதில் முணுமுணுப்பாக “உன் மொழியை அளைந்து அளைந்து பார், அது ஒரு சொல்லாக இருக்கும். அச்சொல்லை நீ சொல்லியிருப்பாய்” என்றது சக்ரவாகி.

மறுபக்கம் சூக்ஷ்மதரு “அது பருவடிவமான நகரத்தைப் பற்றியது. எனவே அது ஒரு பொருளாகவே இருக்கமுடியும். இந்நகரில் அது எங்கோ இருக்கிறது. மண்ணில் புதைந்து கிடக்கலாம். அல்லது ஒவ்வொரு நாளும் காலில் இடறுவதாகக்கூட இருக்கலாம்” என்றது.

ஆபிசாரன் சிரித்து “உன்னால் ஏற்கனவே அது அறியப்பட்டது என்றால் இப்போது நினைவுக்கு வந்திருக்கும். இனிமேல் அறியப்படவேண்டியது என்றால் அதற்கு உனக்கு நேரமில்லை” என்றது.

“விலகு” என்று அவனை சூக்ஷ்மதரு தள்ளி விலக்கியது.

சக்ரவாகி “இங்கே அமர்ந்து யோசிப்பதில் அர்த்தமில்லை. இந்த இரவு வெளுப்பதற்குள் சொல்லிவிடுவதாக கானபூதியிடம் சொல். உனக்கு நகரில் தேடுவதற்கான நேரம் கிடைக்கும். கூடவே நீ உனக்குள் உன் மொழியை துழாவிப் பார்ப்பதற்கான தனிமையும் கிடைக்கும்.”

நான் “எனக்கு விடியும்வரை பொழுதுகொடு” என்றேன்.

“அதை நீ எடுத்துக் கொள்ளலாம்… விடிவெள்ளி தோன்றிவிட்டால் அதன்பின் நீ இங்கே நுழையமுடியாது” என்றது கானபூதி.

“சரி” என்று நான் சொன்னேன். கையை ஊன்றி எழுந்து வெளியே நடந்தேன். மூன்று நிழல்களும் என்னைத் தொடர்ந்துவந்தன.

சக்ரவாகி “நீ இளமைமுதல் சென்ற இடங்களை எல்லாம் நினைத்துப் பார்… எங்கோ அது உன்னை தொட்டிருக்கும்… தொடாமலிருக்க வாய்ப்பே இல்லை” என்றது.

சூக்ஷ்மதரு “உன் அம்மாவின் நாவில் இருந்து வெளிப்பட்ட மொழி உங்கள் மொழியில் ஊடுருவியிருக்கும். அவற்றில் எங்கோ அச்சொல் இருக்கிறது. உன் மொழியிலுள்ள புதிய சொற்களை தேடிப்பார். ஆனால் பல சொற்கள் உன் மொழியில் வேறு பொருள் பெற்று புழக்கத்தில் இருக்கும். ஆகவே சொற்களை அர்த்தங்களை நீக்கி வெறும் ஒலிகளாக எண்ணிப்பார்” என்றது.

“அல்லது நீ விடிந்தபின் என்ன செய்யலாம், தப்பியோட என்ன வழி என்றுகூட யோசிக்கலாம்” என்று ஆபிசாரன் என் பின்னாலிருந்து சிரித்தது.

நான் நகரில் நடக்கத் தொடங்கினேன். என் இளமைமுதல் நான் அறிந்த அனைத்து இடங்களுக்கும் சென்றேன். என் சாதியினரின் வீடுகள் மங்கலான மின்விளக்குகளுடன் தூங்கிக் கொண்டிருந்தன. என் வாசனையை உணர்ந்து குரைக்கத் தொடங்கிய நாய்கள் நிழல்களின் அசைவை உணர்ந்து அஞ்சி ஊளையிட்டபடி வால் தாழ்த்தி பின்னால் சென்றன. வீட்டுக்குள் குழந்தைகள் விழித்துக்கொண்டு சிணுங்கி அழுதன. கர்ப்பிணிகள் அச்சம்தரும் கனவு கண்டு வியர்த்து எழுந்து அமர்ந்தனர். அவர்களைப் பிறர் சமாதானம் செய்யும் ஓசை கேட்டது.

நான் நகர் முழுக்க அலைந்துகொண்டிருந்தேன். என் இளமை முதல் என் கால் தொட்ட இடங்களை எல்லாம் மீண்டும் கால்களால் தொட்டு அவற்றை நினைவில் விரித்துப் பார்த்தேன். என்னை வியக்கச் செய்தவை, அல்லது சர்வசாதாரணமாக நான் கையாண்டவை. எவரோ எதுவோ என்னிடம் சொன்ன பொருட்கள். வெற்றுப்பொருட்களாக அமைதியில் கிடந்தவை. ஒரு சிறுபொருளைக் கூட விடவில்லை. கூடவே என்னுள் நான் அறிந்த எங்கள் மொழியில் இருந்த எல்லா சொற்களையும் எடுத்து நோக்கிக்கொண்டே இருந்தேன்.

”இரவு முடிந்துகொண்டே இருக்கிறது. நட்சத்திரங்கள் இடம் மாறுகின்றன” என்று சக்ரவாகி என்னிடம் சொன்னது.

“உடலால் நடப்பதுதான் நேரத்தை இழுத்துக் கொள்கிறது. உள்ளத்தை மட்டும் ஓட்டு” என்றது சூக்ஷ்மதரு.

“ஒன்றுசெய்யலாம், இனி காலில் மொழியையும் நினைவில் மண்ணையும் இடம் மாற்றிக்கொள்ளலாம்” என்றது ஆபிசாரன்.

நான் எழுந்து “அது நல்ல வழி… என் கால்களில் மொழி இருக்கட்டும்” என்றேன். மீண்டும் நடக்கத் தொடங்கினேன்.

“நான் உன்னை முட்டாளாக்க முயன்றேன்” என்றது ஆபிசாரன்.

“இல்லை அது ஒரு நல்ல வழி” என்று நான் சொன்னேன்.

என் கால்கள் அறிந்த சொற்கள், அறியாத சொற்கள் வழியாகச் சென்றுகொண்டே இருந்தன. நான் சென்றடைந்த இடம் நன்கறிந்ததாக இருந்தது.

“இது ஸ்தம்பம்… விஜயஸ்தம்பம்” என்று சக்ரவாகி சொன்னது. “சாதவாகனர்களின் வெற்றித்தூண் இது. அவர்கள் தெற்கே காஞ்சீபுரம் வரை வந்து வெற்றி கொண்டதற்காக இங்கே நாட்டப்பட்டது.”

நான் என் ஆரம்பப் பள்ளி நாட்களில் அங்கே ஆசிரியருடன் முதல்முறையாக வந்தேன். அதன் பிறகு பலமுறை வந்திருக்கிறேன். ஐந்தாள் உயரமான கல்தூண் அது. ஆழமாக நடப்பட்ட அதன் அடியில் ஒரு கல்லால் ஆன மண்டபம். அதன் மேல் இடுப்பில் தொற்றிக்கொண்டது போல இன்னொரு சிறுமண்டபம். சிறிய சிற்பங்கள்.

“இதன் அடிப்பகுதி பாதாளம். நடுப்பகுதி மானுட உலகம். மேலே விண்ணுலகங்கள்” என்று ஆசிரியர் ராம்தாஸ் ஷிண்டே சொன்னார். மாணவர்கள் பாதாளத்தை தடவிப் பார்த்தனர். அந்த மண்டபத்தின் மேல் தொற்றி ஏறி மேலுலகங்களை நோக்கிச் செல்ல முயன்றபோது அவர் பிரம்பால் அடித்து இறக்கிவிட்டார்.

நான் அந்தத் தூணின் செதுக்குகளை நுணுக்கமாகவே பார்த்ததுண்டு. அது வழக்கமான ஒரு தூண் என்றே எனக்குப்பட்டது. பாதாளம், விண்ணுலகம் என்பதெல்லாம் வெறும் கற்பனை என்றும்.

“இந்தத் தூணா சாவி?” என்றது ஆபிசாரன். “சற்றுப் பெரிய சாவிதான்!”

”வாயை மூடு” என்று சக்ரவாகி சொன்னது. “நீ அதில் எதையாவது பார்க்கவேண்டுமா என்ன?”

“ஆமாம்” என்று நான் சொன்னேன். அதை என் நினைவில் நுணுக்கமாக விரித்துக் கொண்டே இருந்தேன். எதுவுமே அரிதாகத் தென்படவில்லை. ஆனால் ஏதோ ஒன்றை நெருங்குகிறேன் என்று தெரிந்தது. பின்னர் நினைவு அதை தொட்டுவிட்டது.

என் பதினேழு வயதில் ஒருமுறை அதன் மேல் ஏற முயன்றேன். நெஞ்சு உரச தொற்றி மேலேறியபோது கை வழுக்கிவிட்டது. கீழே அந்தக் கல்மண்டபத்தின் கூர்முனை. நெஞ்சு பதற அள்ளி இறுக்கிப் பற்றிக்கொண்டு சறுக்கிக் கீழிறங்கினேன். அப்போது அந்தக்கோணத்தில் என் கையில் உரசிச்சென்ற அந்தத் தூணின் செதுக்குகளில் ஒன்று என் விரல்களில் துலங்கி வந்தது. அதன்பிறகே அதை நான் நினைவுகூர்ந்தேன்.

“போகலாம்… அதுதான் சாவி” என்று நான் சொன்னேன்.

நாங்கள் திரும்பிச் சென்றோம். “நீ என்ன கண்டுபிடித்தாய்? அதை ஒருபக்கம் வைத்துவிட்டு இன்னொரு முறையும் தேடிப்பார். இந்த ஒன்றை மட்டுமே நம்பிச் செல்லாதே” என்றது ஆபிசாரகன்.

நான் ஒன்றும் சொல்லவில்லை. மீண்டும் காட்டுக்குள் புகுந்து அந்த மரத்தடியை அடைந்து கானபூதியின் முன் அமர்ந்தோம். காடு முழுக்க நாகங்களின் கண்கள் எங்களை நோக்கி மின்னிக் கொண்டிருந்தன. நாக்குகள் பறந்துகொண்டிருந்தன.

தன் கைகளை மண்ணில் பொத்தி ஊன்றியடி அமர்ந்திருந்த கானபூதி “சொல்” என்றது.

“அது ஒரு சொல். ஆனால் அது ஓர் அடையாளச் சின்னமாக அந்த தூணில் இருந்தது. பிரதிஷ்டானபுரியின் ஒன்பது முனைகொண்ட சக்கரம், ஆறு மலைமுடிகள், சந்திரன், மூன்று ரத்தினங்கள் என்னும் நான்கு அடையாளங்களும் அச்சொல்லின் ஒலியின் எழுத்துகள்தான். அந்த அடையாளங்கள் அவர்களின் நாணயங்கள் அனைத்திலும் இருப்பவையும்கூட. அச்சொல்லே அந்நகரின் நுழைவாயில்… அது பைசாசிக மொழியின் சொல்” என்று நான் சொன்னேன்.

வலக்கையை திறந்து “உண்மை” என்று கானபூதி சொன்னது. “அச்சொல்லின் பொருளைச் சொல். இடக்கையிலுள்ள கேள்வி அதுதான்.”

(மேலும்)

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on May 20, 2025 11:34

கக்கன்

[image error]இந்திய சுதந்திரப் போராட்ட வீரர், அரசியல்வாதி, இந்திய அரசியலமைப்பு சட்டசபையின் உறுப்பினர். தமிழக காங்கிரஸின் தலைவராகப் பணியாற்றினார். காமராஜர் ஆட்சிக்காலத்தில் பொதுப்பணித் துறை, உணவு, வேளாண்மை போன்ற துறைகளின் அமைச்சராகப் பணிபுரிந்தார். தீண்டாமைக்கு எதிரான போராட்டம், ஆலய நுழைவுப் போராட்டம் ஆகியவற்றில் ஈடுபட்டார். மதுரை மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகள், மருத்துவமனைகள், பாசனக் கால்வாய்கள் பெருகக் காரணமானவர்.

கக்கன் கக்கன் கக்கன் – தமிழ் விக்கி
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on May 20, 2025 11:32

காண்டீபத்தில் கைக்கிளை மெய்ப்பாடுகள் – – இராச.மணிமேகலை

(விஷ்ணுபுரம் பதிப்பக வெளியீடாக வெண்முரசு 26 தொகுதிகளும் வெளிவந்துள்ளன. முழுத்தொகுப்பாக வாங்கக் கிடைக்கும். தனித்தனி நூல்களும் வாங்கக்கிடைக்கும்.

தொடர்புக்கு : contact@vishnupurampublications.com Phone : 9080283887)

மகாபாரதக் கதையின் மறுஆக்கமாக வெண்முரசு நாவலை எழுத்தாளர் ஜெயமோகன் அவர்கள் படைத்துள்ளார். காவிய மரபின் இலக்கணங்கள் ஒருங்கே அமையப்பெற்ற உரைநடைக் காவியமாக வெண்முரசு திகழ்கிறது.  இந்நாவல் 26 தொகுதிகளைக் கொண்டது. வெண்முரசு நாவல் வரிசையில், எட்டாவது தொகுதி காண்டீபம் ஆகும். இந்நாவல் அர்ஜுனின் வீரசாகசங்களையும், பிறரால் அடைய முடியாத அரிய மகளிரைத் தடைகளைத் தகர்த்து, திருமணம் புரிந்த விதங்களைப் பற்றியும் பேசுகிறது. காண்டீபத்தில் அர்ஜுனின் மனைவியர் சுபகை, உலூபி. சித்ராங்கதை, சுபத்திரை ஆவர். இவர்களில் சுபகை அரண்மனைச் சேடிப்பெண். மற்றவர்கள் அரச குலத்தவர்கள் ஆவர்.

முதலாவதாக, சுபகையின் பாத்திரப் படைப்பு. சுபகை யாதவஅரசி சுபத்திரையின் அரண்மனைச் சேடியருள் ஒருத்தி ஆவாள். காண்டீபத்தின் கதைப்போக்கும் கதைமாந்தர்களும் ஆசிரியர் கூற்றாகவே சொல்லப்பட்டிருக்க, சுபகையின் பாத்திரப் படைப்பு மட்டும் ‘தன் கூற்றாகவே’ இந்நாவலில் அமைந்திருப்பது திட்டமிட்டதா, தற்செயலா என்கிற ஐயம் எழுகிறது. ஏனெனில் யாருமற்றவளாக காட்டப்படும் சுபகை தன்னைப் பற்றியும், அர்ஜுனன் பற்றியும் முதியசேடியிடமும், மாலினியிடமும் இந்நாவல் முழுக்கப் பேசுகிறாள். அதைப் போலவே இடைநாழியில் இருவரும் நோக்கெதிர் நோக்கி, அர்ஜுனனால் அவள் தெரிவு செய்யப்பட்டு, கொள்வாரும் கொடுப்பாரும் இன்றி (காந்தருவம்?) அவனுடன் இணைகிறாள்.

இங்கே,  ‘இங்குள்ள அத்தனை இளம்பெண்களைப் போலவே உடல் பூத்து முலை எழுந்த நாள் முதலே நானும் அவரைத் தான் எண்ணிக்கொண்டிருந்தேன். அவர் விழிகளுக்கு உகந்தவள் ஆவேனோ என்று என்னையே மதிப்பிட்டுக் கொண்டிருந்தேன். அவர் விழி வழியாகவே என்னைச் சமைத்திருந்தேன்’ என்கிற சுபகையின் கூற்று இவளைத் தொல்காப்பியக் கைக்கிளைத் திணைக்கு உரியவளாக எண்ணச் செய்கிறது. மேலும் இவளின் அகப்புற உணர்வு நிலைகளைத் தொல்காப்பியம் கூறும் மெய்ப்பாடுகளோடு பொருத்திப் பார்க்கவும் தூண்டுகிறது.

இதனடிப்படையில் இக்கட்டுரை 1.மெய்ப்பாடு வரையறைகள் 2.கைக்கிளை வரையறைகள் 3.கைக்கிளை மெய்ப்பாட்டுக்கூறுகள் — சுபகை ஓர் ஒப்பீடு என்ற மூன்று நிலைகளில் அமைகிறது.

மெய்ப்பாடு வரையறைகள்

தொல்காப்பியர் மெய்ப்பாடு என்பது

“கண்ணினும் செவியினும் திண்ணிதின் உணரும்

உணர்வுடை  மாந்தர்க் கல்லது தெரியின்

நன்னயப் பொருள்கோள் என்னருங் குரைத்தே”    (தொல்.மெய்.27)

என்று மெய்ப்பாட்டியியலிலும்,

 

“உய்த்துணர்வு இன்றித் தலைவரு பொருளான்

மெய்ப்பட முடிப்பது மெய்ப்பாடாகும்”

என்று செய்யுளியலிலும் கூறுகிறார்.                          (தொல்.செய்.202)

 

“உய்ப்போன் செய்தது காண்போர்க் கெய்துதல்

மெய்ப்பாடென்ப  மெய்யுணர்ந்தோரே”

என்கிறது செயிற்றியம்.

திருவள்ளுவம் ‘குறிப்பறிதல்’ என்று பொருட்பாலிலும், காமத்துப் பாலிலும் பேசுகிறது.

ஒன்பான் சுவை, நவரசம் என்ற சொல்லாக்கங்கள் மெய்ப்பாடு என்ற பொருள் தருவனவே. ஒருவர் தன் மனதில் நினைக்கின்ற ஒன்றைத் தன் ஐவகைப் பொறிகளால் பிறர்க்கு வெளிப்படச் செய்வதே மெய்ப்பாடாகும். நாடகம், நாட்டியம், சினிமா போன்றவை மெய்ப்பாட்டினை வெளிப்படுத்தும் கருவிகள் ஆகும். “பாலுணர்வு சார்ந்த உளவியல் செய்திகளே மெய்ப்பாடாகும்” என்பார் தமிழண்ணல் (தொல்.பொருள்.தொகுதி 1 தமிழண்ணல் உரை பக்.8,9)

கைக்கிளை வரையறைகள்

“கைக்கிளை முதலாப் பெருந்திணை இறுவாய்

முற்படக் கிளந்த எழுதிணை என்ப”                       ( தொல். அக. நுற்பா.1)

 

“காமஞ்சாலா இளமையோன் வயின்

ஏமஞ்சாலா இடும்பை எய்தி

நன்மையும் தீமையும் என்றிரு திறத்தான்

தன்னொடும் அவளொடும் தருக்கிய புணர்த்துச்

சொல்லெதிர் பெறாஅன் சொல்லி இன்புறல்

புல்லித் தோன்றும் கைக்கிளைக் குறிப்பே”               (தொல் அகத். 53)

என்று தொல்காப்பியர் அகத்திணையியலில் குறிப்பிடுகின்றார்.

“காமம் அமையாத இளையாள்மாட்டு, ஏமம் அமையாத இடும்பை எய்தி, புகழ்தலும் பழித்தலுமாகிய இருதிறத்தால், தனக்கும் அவட்கும் ஒத்தன புணர்ந்து, சொல் எதிர் பெறானாய்த்தானே சொல்லி இன்புறுதல், கைக்கிளைக் குறிப்பு.  ‘பொருந்தித் தோன்றும் என்றதனால் அகத்தோடு பொருந்துதல்’ கொள்க. என்னை? காமஞ்சாலா, என்றதனால் தலைமைக்கு குற்றம் வராதாயிற்று. ‘புல்லித் தோன்றும்’ என்றதனால் புல்லாமல் தோன்றும் கைக்கிளையும் கொள்ளப்படும். அஃதாவது, காமம் சான்ற தலைமகள் மாட்டு நிகழும் மனநிகழ்ச்சி” என்று இளம்பூரணார் உரை செய்துள்ளார்.

தொல்காப்பியர் அகனைந்திணைக்குரிய மெய்ப்பாடுகளைக் கூறிய பின்னர்,

‘அவையும் உளவே அவையலங்கடையே’              (தொல்.மெய்.21)

 

என்ற நுற்பாவை வைத்தார். இதற்கு உரை எழுதிய இளம்பூரணர்,  “என் எனின் கைக்கிளைக்குரியதோர் மரபு உணர்த்துதல் நுதலிற்று. சொல்லப்பட்ட புகுமுகம் புரிதல் முதலாயின உள; நடுவணைந்திணையல்லாத கைக்கிளைப் பொருண்மைக்கண் என்றவாறு.

அவையலங்கடை என்றமையான் பாடாண் பாட்டிற் கைக்கிளையும் கொள்ளப்படும்… பிற்கூறிய அவை என்பன களவும் கற்புக்குறியன. முன் கூறிய அவை என்பன புகுமுகம் புரிதல் முதலாயின. அவையலங்கடையும் அவையும் உளவே என மாற்றிக் கூட்டுக” என்றதனால் புகுமுகம் புரிதல் முதலாக கையறவுரைத்தல் ஈறாக 24 மெய்ப்பாடுகளும், ‘இன்பத்தை வெறுத்தல் முதலாக கலக்கமும் அதுவே’ என்பது ஈறாக 20 மெய்ப்பாடுக் கைக்கிளைக்குரியதோர் மரபு உணர்த்திற்று எனக் கருதமுடிகிறது

“கைக்கிளை என்பது ஒருமருங்கு பற்றிய கேண்மை; இஃது ஏழாவதன் தொகை. எனவே ஒருதலைக் காமமாயிற்று” என்பது நச்சினார்க்கினியர் உரை.

“கைக்கிளை உடையது ஒருதலைக் காமம்”     (நம்பி .அக.நூற்பா.3)

“காட்சி ஐயம் துணிபு குறிப்பென

மாட்சி நான்கு வகைத்தே கைக்கிளை”           (நம்பி.கள.நூற்பா.3)

 

“தண்டாக் காதல் தளரியல் தலைவன்

வண்டார் விரும்பிய வகையுரைத்தன்று”    (புறப்.வெண்.கொளு.45)

“கெடாத அன்பினையும், நுடங்கும் இயல்பினையும் உடையவள் ஒருத்தி தலைவனுடைய வளவிய மாலையினைப் பெறுதற்கு ஆசைப்பட்ட வகையினை உரைப்பது”  என்பார் ஐயனாரிதனார்.

வ.சுப. மாணிக்கனார் தம் ‘தமிழ்க்காதல்’ என்ற நூலில் “கைக்கிளை என்ற தொடருக்கு சிறிய உறவு என்பது பொருள். சிறிய என்றால் இழிந்த என்னும் பொருளன்று. அவ்வுறவு நிற்கும் காலம் சிறியது என்பது கருத்து.

அகத்திணையியலில், கைக்கிளை, பெருந்திணை, ஐந்திணை இவற்றின் இலக்கணங்களை தொல்காப்பியர் கூறிற்றிலர். ஆண்டு கூறியிருப்பவை இலக்கணம் அல்ல; அவ்விரு திணை பற்றிய காதற் செய்கைகள்” எனக் கூறிய கருத்துகள் கைக்கிளைத் திணையைத் தெளிவுற விளக்குகிறது எனலாம்.

மேற்காட்டிய வரையறைகளின்படி தொல்காப்பியமும்,  நம்பியகப் பொருளும் கைக்கிளைத் திணையை ஆண்மகனுக்குரியதாக காட்டுவதைக் காணமுடிகிறது. ‘அச்சமும் நாணமும் மடனும் பெண்பாற்குரிய’ என்பதனால் (தொல்.கள.8) தன் காதலை முந்துறுத்துக் காட்டுதல் மகளிர்க்கில்லை என்பது பெறப்படுகிறது. புறப்பொருள் வெண்பாமாலை ஆணுக்கு மட்டுமன்றி பெண்பாற்கும் உரியதாக கைக்கிளையை வரையறுக்கிறது. பிற்காலத்தில் தனிவகை சிற்றிலக்கியமாக மட்டுமல்லாமல் தூது, உலா, கலம்பகம், குறவஞ்சி முதலானவற்றில் கைக்கிளை ஓர் உறுப்பாகவும் காணப்படுகிறது. நாலாயிரத் திவ்யபிரபந்த, தேவாரப் பாடல்களில் ஆழ்வார்களும் நாயன்மார்களும் நாயக நாயகி பாவத்தில் கைக்கிளைத் திணையைப் பாடியிருப்பதைக் காணலாம். இவ்வாறு கைக்கிளை இலக்கணம் பல்வேறு காலக்கட்டத்தில் பலவகையான கருத்து வேறுபாடுகளுக்கு இடமளித்திருப்பதைக் காணமுடிகிறது.

கைக்கிளை மெய்ப்பாடுக் கூறுகள் சுபகை ஓர் ஓப்பீடு

மேற்காட்டிய மெய்ப்பாடு மற்றும் கைக்கிளை வரையறைகளின் அடிப்படையில் சுபகை எவ்வகையிலெல்லாம் கைக்கிளைக் கூறுகளுள் பொருந்துகிறாள் என்று இக்கட்டுரை ஆராய்வதோடு காண்டீபவழிக் காட்சிப்படுத்துகிறது

காட்சி 1

அன்று நான் அரண்மனை இடைநாழியில் நடந்து சென்றேன். என்னெதிரே இளையபாண்டவர் வந்தார்….. என் அருகே வந்து கண்களை நோக்கி என் பெயரென்ன என்று கேட்டார். ‘நீ நாணம் கொண்டு சொல் மறந்திருப்பாயே’ என்றாள் முதியசேடி. உடனே பதறி நாக்கைக் கடித்துக் கொண்டு ‘அய்யய்யோ’ என்றேன். எனக்கு மட்டுமேயான புன்னகையுடன் குனிந்து என்ன என்றார். நான் தலை குனிந்து நின்றேன். சொல் என்றார். அவரது பார்வை என் முகத்திலும் மார்பிலுமாக இருந்ததைக் கண்டேன்.” இப்போதும் பாதி ஆண்களின் பார்வை உன் மார்பில்தானே இருக்கிறது’ என்றாள் முதியவள். இங்கு  சுபகை முதிய சேடியிடம் முதன் முதலில் அர்ஜுனனும் அவளும் நேருக்குநேர் சந்தித்துக் கொண்ட காட்சியைக் கூறும்போது வெளிப்படும் கைக்கிளை வகைகளையும், மெய்ப்பாட்டினையும் காணமுடிகிறது.

“கூற்றமோ கண்ணோ பிணையோ மடவரல்

நோக்கமிம் மூன்று உடைத்து”

 

“முகைமொக்குள் உள்ளது நாற்றம்போல் பேதை

நகைமொக்குள் உள்ளதொன் றுண்டு”

 

காட்சி, ஐயம், தெளிவு, குறிப்பறிதல் என்ற கைக்கிளையின் வகைகளை இந்த இரண்டு திருக்குறள்களும் தெளிவுற விளக்குகின்றன.

 

“முதிர்கோங்கின் முகை என, முகம் செய்த குரும்பை என,

பெயல் துளி முகிழ்என, பெருத்த நின் இளமுலை

மயிர் வார்ந்த வரி முன்கை மடநல்லாய் நிற் கண்டார்

உயிர் வாங்கும் என்பதை உணர்தியோ?  உணராயோ?

….. ……

நீயும் தவறு இலை நின்னைப் புறங்கடைப்

போதர விட்ட நுமரும் தவறு இலர்

நிறை அழிகொல்யானை நீர்க்கு விட்டாங்கு

பறை அறைந்தல்லது செல்லற்க என்னா

இறையே தவறு உடையான் ”                (கலி. குறிஞ்சிக்கலி.20)

 

“அழகிய மயிர் வரிசையுடையை நின் முன்னங்கைகள்! நின் முலைகள் தாம் என்ன? முற்றின கோங்கின் இளமுகையோ? அடிபரந்து விளங்கும் குரும்பைகளோ? மழைத்துளி விழும்போது கிளம்பும் பெருத்த நின் இளமுலைகள் இவை போலிருக்கின்றன தாம்! ஆனால் கண்டவரின் உயிரை அவை வாங்கும் என்பதை நீ அறிவாயோ மாட்டாயோ?

நான் சொல்வதைக் கேளேன்! ஏதுந் சொல்லாது அகன்று போகின்றாயே? நீயும் குற்றமுடையவள் அல்லள்; இப்படி நின்னை உலவவிட்ட சுற்றத்தாரும் தவறுடையவரல்லர்; யார் குற்றம் என்பாயேல், ‘மதங்கொண்ட கொல்லும் யானையை நீர்த்துறைக்கு விட்டால் முற்படப் பறையறைந்து அதன்பின்னர் அனுப்புவார்களே! அதுபோல நின்னையும் முன்பே பறைச்சாற்றி செல்லவிடல் வேண்டும்’ என ஆணையிடாத இந்நாட்டு மன்னனே பெரிதும் தவறு உடையவன்”.

இக்கலித்தொகைப் பாடலின் தலைவனும் தலைவியும் நோக்கெதிர் நோக்கும் காட்சி, காண்டீபத்தின் அர்ஜூனனும் சுபகையும் நோக்கும் காட்சியை ஒத்தது. இவ்விரு இடங்களிலும்  புகுமுகம் புரிதல்’ மெய்ப்பாடு பொருந்தி வருவதைக் காணமுடிகிறது.

காட்சி 2

“ஒவ்வொரு முறையும் யாதவ அரசியைப் பார்த்துவிட்டு செல்லும்போது மான்கண் சாளரம் வழியாக நான் பார்ப்பேன். இந்த மகளிர் மாளிகையில்  பல நூறு நெஞ்சங்கள் ஏங்கி நீள் மூச்சிடும். பல நூறு முலைகள் விம்மும்… என்னை நேரில் அவர் காண்பாரென்றால் அக்கணமே அடையாளம் கண்டுக்கொள்வார். தன் குழற் கற்றையில் அருமலர் போல் சூடிக்கொள்வார் என்று கற்பனை செய்தேன் .ஒன்றும் நிகழவில்லை… எண்ணி எண்ணி நான் வணங்கிய தெய்வம் என்னை ஏற்கவில்லை… அவர் விழி வழியாகவே நான் என்னை சமைத்திருந்தேன் என்பதனால் ஏந்தியிருந்தவை எல்லாம் வெறும் கனவே என்று தோன்றியது.”

 

“சூடுவேன் பூங்கொன்றைச் சூழச் சிவன்திரண்தோள்

கூடுவேன் கூடி மயங்கி நின்று

ஊடுவேன் செவ்வாய்க் குருகுவேன் உள்ளுருகித்

தேடுவேன் தேடிச் சிவன்கழலே சிந்திப்பேன்

வாழுவேன் பேர்த்தும் மலர்வேன்..”.

இறைவனது இன்பம் பெற விழைவாரது நிலையிலுள்ள, நாயக நாயகி பாவத்தில் பாடப்பட்ட மாணிக்கவாசகரின் திருவம்மானைத்  தலைவியின் அகவுணர்வுகள், அர்ஜுனன்பால் தீராக்காதல் கொண்ட சுபகையின் கலங்கிமொழிதல், புலம்பித்தோன்றல் மெய்ப்பாடுகளோடு ஒப்புநோக்கத்தக்கது.

காட்சி 3

“என்னைக் கடந்து சென்ற இளம்சேடி ஒருத்தி என்னடி இளையவர் உன்னைத் தேர்வு செய்துவிட்டாராமே! என்றாள்.. எங்கும் கால் நிலைக்கவில்லை. எப்பொருளிலும் விழி பொருந்தவில்லை. படிகளில் ஏறினேன். இடைநாழி தோறும் தூண்களைத் தொட்டபடி ஓடினேன்… ஓடும்போதே நான் துள்ளுவதை அறிந்தேன். மகளிர் மாளிகைக்குள் சென்று சேடியர் பணியாற்றும் இடங்களுக்கெல்லாம் அலைந்தேன்… ஒவ்வொரு கணமும் நான் மலர்ந்து கொண்டிருந்தேன். வெறும் சிரிப்பையே விடையென அளித்தேன்… பின்னர் தடையற்ற வெறும் உவகை மட்டுமென அது மாறியது… என்னுள்ளிலிருந்து எழுந்து கதவைத் திறந்து காற்றென விரைந்து வசந்தமாளிகையை அடைந்த ஒருத்தியை அசைவற்ற உடலுடன் இங்கிருந்து பார்த்துக் கொண்டிருந்தேன். சுபகை நீ இன்று மாலை அவரது வசந்த மாளிகைக்குச் செல்லப்போகிறாய். “கிளம்பு” என்றாள் தோழி.

“முன்னம் அவனுடைய நாமங் கேட்டாள்

மூர்த்தி யவனிருக்கும் வண்ணங் கேட்டாள்

பின்னை யவனுடைய ஆருர் கேட்டாள்

பெயர்த்தும் அவனுக்கே பிச்சி யானாள்

அன்னையும் அத்தனையும் அன்றே நீத்தாள்

………………………….. …………………..

தன்னை மறந்தாள்தன் நாமங் கெட்டாள்

தலைப்பட்டாள் நங்கை தலைவன் தாளே!”

 

திருவாருர்ப் பெருமாளின் திருப்பெயரைக் கேட்டவுடன் வசமிழந்த, மிக்க அன்புடையவளான தலைவி ஒருத்தியின் தன்மையை நாயக நாயகி பாவத்தில் திருநாவுக்கரசர் பாடிய இப்பாடல் பெண்பாற் கைக்கிளையில் அமைந்த பாடலாகும். இப்பகுதியில் காதல் கைம்மிகல், கரந்திடத் தொழில், கையறவு உரைத்தல் என்ற மெய்ப்பாடுகளால் சுபகை பித்தியாகி அகம் அழிகிறாள்.

 

காட்சி 4

“காதல் ஏற்கப்படாத பெண்ணின் கண்ணீர் அது. ஆண்களுக்கு ஆயிரம் உலகங்கள்.  பெண்களுக்கு காதல் கொண்ட ஆணன்றி வேறுலகம் ஏது? அவர் ஏற்கவில்லை என்றால் பிறிதென ஒன்றுமில்லை….. அன்றிரவெல்லாம் இல்லாமல் ஆவதைப் பற்றி எண்ணிக் கொண்டே என் அறையில் இருந்தேன். எழுந்து ஓடி அவ்விருளில் கலந்து மறைந்துவிட விரும்பினேன்… அப்போது மலைகளை எண்ணி இரக்கம் கொண்டேன்… மலைகள் காதல் கொண்டு புறக்கணிக்கப் படுமென்றால் அவை என்னச்செய்யும்?… இரவு முழுக்க அங்கெல்லாம் இருள் நிறைந்திருந்தது என்பதை என்னால் எண்ணமுடியவில்லை… சூழ்ந்த பறவைகளின் ஒலிகளெல்லாம் நீருக்குள் கேட்பவைப் போல் அழுந்தி ஒலித்தன.  என்னதென்றே தெரியாத எடை மிக்க எண்ணங்களால் ஆனது என் நெஞ்சம்”.

கலித்தொகைத் தலைவி ஒருத்தி மனங்கலங்கிக் கூறும் பாடல் ஒன்று இக்காட்சியோடு தொடர்புடையது என்பது நினைவுகூரத்தக்கது.

“பொங்கிரு முந்நீர் அகமெல்லாம் நோக்கினை

திங்களுள் தோன்றியிருந்த குறுமுயால்

எங்கேள் இதனகத்துள் வழிக் காட்டீமோ

காட்டீ யாயிற் கதநாய் கொளுவுவேன்

வேட்டுவ ருள்வழிச் செப்புவேன் ஆட்டி

மதியொடு பாம்பு மடுப்பேன் மதிதிரிந்த

என்னல்லல் தீரா யெனின்”                        (கலித் .144)

காதல் மிகுதியால் அஃறிணைப் பொருட்களை நோக்கி கேட்குந  போலவும்,  கிளக்குந போலவும்  கூறும் தலைவியின் கூற்றெல்லாம் ‘காமம் மிக்க கழிபடர் கிளவி’ என்று இலக்கண நூல்கள் கூறுகின்றன. இங்கே சுபகை அர்ஜூனனின் நினைவினால் ஆங்கு நெஞ்சழிதல், கலக்கம் போன்ற மெய்ப்பாடுகளின் வசமாகிறாள்

 

காட்சி 5

”ஆம் பிறிதொரு ஆடவன் என்னைத் தொடக்கூடாது என்று எண்ணினேன். அந்த முத்தைச் சுற்றி வெறும் சிப்பியாக என்னை ஆக்கிக் கொண்டேன். ஓர் இரவுதான் அதன்பின் அவர் என்னை அழைக்கவில்லை. நான் செல்லவும் இல்லை” என்றாள் சுபகை. ’வாழ்வெனப் படுவது வருடங்களா என்ன? ஓரிரவு என்று சொல்வதே மிகைதான். அப்பெயர் எழுந்து அவர் இதழில் திகழ்ந்த அந்தக் கணம்தான் அது”… எத்தனை காலமாயிருக்கும்? காலம் செல்லச்செல்ல அந்த ஒரு நாள் அவளுக்குள் முழுவாழ்க்கையாக விரிந்து அகன்று பரவியிருக்கிறது. பல்லாயிரம் அனுபவங்களும், அச்சங்களும், ஐயங்களும், உவகைகளும் உள எழுச்சிகளுமாக அவனுடன் வாழ்ந்த முடிவற்ற தருணங்கள்.

அர்ஜுனனுடன் வாழ்ந்த அந்த ஓர் இரவு அவளுள் எத்தனை உணர்வு நிலைகளைக் கிளர்த்தியிருக்கும் என்பதை பின்வரும் குறுந்தொகைப் பாடல்களோடு ஒப்பிட்டுக் காணமுடிகிறது.

”யாருமில்லை தானே கள்வன்

தானது பொய்ப்பின் யானெவன் செய்கோ          (குறுந். 25)

 

நிலத்தினும் பெரிதே வானினும் உயர்ந்தன்று

நீரினும் ஆரளவின்றே சாரல்

கருங்கோட் குறிஞ்சிப்பூக் கொண்டு

பெருந்தேன் இழைக்கும் நாடனொடு நட்பே          (குறுந். 3)

 

அர்ஜுனன் பெரும் பெண்விழைவு கொண்டவன் என்று அறிந்தவள்தான் சுபகை. ஆனாலும் அவன்மேல் கொண்ட தூய அன்பின் தன்மை குறுந்தொகைத் தலைவியின் காதலுக்கு சற்றும் குறைந்ததன்று. அதனாலேயே அவள் புரையறம் தெளிதல், அருள்மிக  உடைமை, கட்டுரை இன்மை என்ற மெய்ப்பாடுகளைத் தன்னகத்தே கொண்டவளாகிறாள்.

 

காட்சி 6

அன்று இரவு நான் தூங்கவில்லை. குளிர்ந்த கரியமை போல என்னை சூழ்ந்திருந்தது இரவு. அறுபடாத ஒரு குழலோசை போல .உள்ளத்தை ஒற்றைச் சொல்லென ஓரிரவு  முழுக்க உணர்வது பிறகு எந்நாளும் எனக்கு வாய்த்ததில்லை… இவ்விரவினில் இங்கிருப்பவள் அவரது காதலி அல்லவா என்று எண்ணிக் கொண்டேன். அவ்வெண்ணத்தின் எழுச்சி தாளாது நெஞ்சைப் பற்றிக் கொண்டு இருளில் அழுதேன்… ஒருகணமென கடந்து சென்றது அந்த இரவு. ஆம் இன்று நினைக்கும்போது அது ஒரு இமைப்புத்தான் அது என்று எண்ணுகிறேன்… முற்றிருளுக்குள் கண்களை முடி அவ்விரவை திரும்ப நிகழ்த்த முயன்றேன்… அருகே வா என்றழைக்கையில் அடம் பிடித்து விலகி நிற்கும் குழந்தை போன்று இருந்தது”.

“நனந்தலை யுலகமுந் துஞ்சும்

ஓஒயான் மன்ற துஞ்சா தேனே”                                                   (குறுந். 6)

 

ஆய்மணிப் பைம்பூன் அலங்கு தார்க்கோதயைக்

காணிய சென்று கதவு அடைத்(ந்)தேன்  நாணிப்

பெருஞ்செல்வர் இல்லத்து நல்கூர்ந்தார் போல

வருஞ் செல்லும் பேருமென் நெஞ்சு             (முத்தொள் 8)

 

இங்கு கண்துயில் மறுத்தல், துன்பத்துப் புலம்பல், பிரிவாற்றாமை, ஆகிய மெய்ப்பாடுகளால் சுபகை நெஞ்சொடு கிளத்தும் நிலையினைக் காணமுடிகிறது.

காண்டீபம் நாவலின் தொடக்கமே அர்ஜுனன் சுபகைக்கு இடையிலான உறவுநிலையில் இருந்துதான் தொடங்குகிறது. சுபகை தன்னுள் கிளர்த்தும் உணர்வு நிலைகளைத் தன்கூற்றாவே இந்நாவலில் பேசுகிறாள். இந்நாவலில் அர்ஜுனனின் நாயகியர் யாருக்கும் இல்லாத தனிச்சிறப்பைச் சுபகையிடம் காண முடிகிறது.

”சேடி என்பவள் தன் உள்ளிருப்பவை அனைத்தையும் எடுத்து வெளியே வீசிவிட்டு நன்கு கழுவிய  வெற்றுக்கலம்போல் தன்னை ஒழித்துக் கொள்பவள். பிறரால் முற்றிலும் நிறைக்கப்படுபவள். துயரங்களில் பெருந்துயரமென்பது தன்னுள் தானென ஏதும் இல்லாமலிருப்பது பிறிதொருவரி நிழலென வாழ்வது பெண்ணுக்கு இறுதியாக எஞ்சுவது தன்னகம் மட்டுமே சேடிக்கு அதுவும் இல்லை” .(வெண்முரசு, மாமலர்,70) என்பது சேடிப்பெண்ணின் வாழ்க்கை நிலையாக இருக்கிறது. ஆனால் சுபகை என்ற சேடிப்பெண் அர்ஜுனனை மட்டுமே மனதில் வரித்தாள். ஓரிரவு மட்டுமே அவளுடன் வாழ்ந்தாள். தன்னை ஆத்மார்த்தமாக அவனிடம் ஒப்படைத்தாள். நாவலின் தொடக்கம் போலவே முடிவும் இவர்களின் உறவுநிலையின் உண்மைத்தன்மையோடு நிறைவுறுவதை அர்ஜுனனின் கூற்றாகக் காணமுடிகிறது.

”உன்னை நினைவுகூர்ந்த அனைத்துத் தருணங்களிலும் நான் பழுத்து இறப்பை நோக்கிச் செல்லும் முதியவனாக  இருந்தேன். அவற்றில் நீ இன்னும் உடல்தளர்ந்து, தோல்சுருங்கி, கூந்தல் நரைத்த முதியவளாகி இருந்தாய்… இந்தக் காண்டீபத்தை தூக்கிவிட்டு எறிந்து விட்டு முதியவனாக நான் சென்று அமரும் இடம் எங்கோ இருக்கிறது” என்றான். ‘அங்கு எனக்கு ஒரு இடம் இருந்தால் என் வாழ்வு முழுமைபெறும்‘ என்றாள் சுபகை. “அங்கு இவர்கள் எவருக்கும் இடம் இல்லை. உனக்கு மட்டுமே இடம் உள்ளது” என்றான்”. பிறிதொன்றில்லாத முழுமை ஒன்றுக்காக என் அகம் தேடிக்கொண்டிருந்தது. நிகர் வைக்கப்படாத ஓரிடம். நான் மட்டுமே அமரும் ஒரு பீடம்”, என்று முன்பொருமுறை உலூபியிடம் கூறுகிறான் அர்ஜூனன். அவனைப் போலவே சுபகை “அந்த ஓர் இரவில் அவர் என் வழியாக எங்கும் கடந்து செல்லவில்லை. எதற்கும் என்னை நிகர் வைக்கவும் இல்லை… ஐயமே இல்லை. அன்றொருநாள் அவர் உள்ளத்தில் அரசியாக இருந்தேன் என்று உறுதியாக உணர்கிறேன்” என்று மாலினிதேவியிடம் கூறுகிறாள். இருவரும் மாறிப்புக்கு  இதயம் எய்திய இந்த நிலையே  இறுதிப்பகுதியில் சுபகையிடம், “அங்கு இவர்கள் எவருக்கும் இடம் இல்லை. உனக்கு மட்டுமே இடம் உள்ளது” என்று  அவனைச்  சொல்ல வைக்கிறது. அவனுடைய மனப்பீடத்தில் சுபகையை மட்டும்  அமர்த்திப் பார்க்கும் காட்சி மூலமாக கைக்கிளைத் திணையிலிருந்து அன்பின் ஐந்திணை  நிலைக்கு உயர்த்தப்படுகிறாள் சுபகை.

காதலின் அழகியலை, பரிமாணத்தை, தன் அகவுணர்வுகளை நாவலின் தொடக்கம் முதல் இறுதிவரை தன் கூற்றாகவே சொல்லும் சுபகையின் பாத்திரப் படைப்பு மிகச்சிறப்பான ஒன்று என்றே கூறலாம்.

இலக்கியம் என்பது வாசிப்பவனின் கருத்து விவரிப்புகளை, சிந்தனைகளைத் தூண்டுவது; படைப்பாளி யோசித்திருக்காத கோணத்தில் அவரவர் வாழ்க்கை முறைகளோடும், ரசனைகளோடும் படைப்பில் பொருத்திப் பார்த்து இன்புற்று மகிழ்வது. ஒரு சிறந்த படைப்பாளனின் இலக்கியத்தை ‘திண்ணிதின் உணரும் உணர்வுடைய வாசகனால் மட்டுமே அனுபவித்து, இன்புற்று, மகிழமுடியும். அந்தக் கோணத்தில் தொல்காப்பியம் மெய்ப்பாடுகளை இன்றைய உரைநடைக் காவியமாம் வெண்முரசில் பொருத்திப்பார்க்க இடமளிக்கிறது. எந்நாட்டவர்க்கும், எக்காலத்தவர்க்கும் பொதுவான இம்மெய்ப்பாடுகள், காதலாகி, கசிந்து, கற்பாகி வாழ்க்கையை சிறப்புடையதாக்குகிறது.

 

இருநதிகளின் இணைவில்- இந்துமதி நழுவும் தருணம் – கலைச்செல்வி மாமனிதர்களின் உருக்கு உலை மழை தொடக்கம் வெண்முரசு சுருக்க வடிவம் வெளிவருமா? மழைக்காவியம் ஊழின் பெருங்களியாட்டு  – அருணா ஐந்து முகங்கள் – கடிதம் காண்டீபத்தில் மெய்ப்பாடுகள் -இராச. மணிமேகலை

வழிவழியாக வந்தமைவோர்

இந்திரநீலம் வாசிப்பு- கடிதம்

வெண்முரசின் குரல்கள் அன்பெனும் மாயை -கலைச்செல்வி இளமையின் வண்ணங்கள்- கடிதம் குருதியெழும் பொழுது – சின்னக்கிருபானந்தன் தீ – கடிதம் மழையின் காவியம் விண்திகழ்க! கனவின் நுரை மானஸாவின் காலடியிலிருந்து… மழைப்பாடகர்கள் எஞ்சும் நிலங்கள் தெய்வத்தளிர் பெண்பேராற்றல் முகிலில் எழுதல்! எண்முக அருமணி வில்துணை வழிகள் அளித்துத் தீராதவன்

களம் அமைதல்

படைக்கலமேந்திய மெய்ஞானம் காட்டின் இருள் முடிவிலி விரியும் மலர் மயங்கியறியும் மெய்மை தளிர் எழுகை அன்னைவிழிநீர் அறிகணம் ஊழ்நிகழ் நிலம் எங்குமுளப் பெருங்களம் மைவெளி ஊழின் விழிமணி அனைத்தறிவோன் விழிநீரின் சுடர்   மீண்டெழுவன களிற்றியானை நிரை – ஆதன் களிற்றியானை நிரை ‘களிற்றியானை நிரை’ வாசிப்பு முனைவர் ப. சரவ ணன் இருட்கனி, வாசிப்பு- முனைவர் ப.சரவணன் ‘திசைதேர்வெள்ளம்’ வாசிப்பு- முனைவர் ப.சரவணன் கார்கடல் வாசிப்பு முனைவர் ப சரவணன் ‘எழுதழல்’ வாசிப்பு – முனைவர் ப. சரவணன்  கிராதம் முனைவர்  முனைவர் ப சரவணன் மதுரை சொல்வளர்காடு – முனைவர் ப சரவணன் மதுரை ‘செந்நா வேங்கை’ வாசிப்பு-முனைவர் ப. சரவணன், மதுரை   ‘இமைக்கணம்’ வாசிப்பு-முனைவர் ப. சரவணன் பன்னிருபடைக்களம்’ வாசிப்பு -முனைவர் ப. சரவணன், ‘வெய்யோன்’ வாசிப்பு -முனைவர் ப. சரவணன் காண்டீபம்’ வாசிப்பு முனைவர் ப. சரவணன், மதுரை   ‘இந்திர நீலம்’ வாசிப்பு -முனைவர் ப. சரவணன், மதுரை ‘வெண்முகில் நகரம்’ வாசிப்பு முனைவர் ப. சரவணன் ‘பிரயாகை’ வாசிப்பு- முனைவர் ப. சரவணன் வண்ணக்கடல் வாசிப்பு- முனைவர் ப.சரவணன் முதற்கனலும் நீலமும் – முனைவர் ப. சரவணன்
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on May 20, 2025 11:31

Talking about organization

I think if you can deliver a speech on organizational skills and the problem of organization, it will be useful for many. In my judgment, you are one of the excellent organizers of Tamil Nadu.

Talking about organization

 

நாங்கள் பணத்தை திரும்பப் பெற்றுக்கொள்பவர்களை மீண்டும் வகுப்புகளில் சேர்ப்பதில்லை. இதனால் எங்களுக்கு கூடுதல் வேலையும், பணப்பரிமாற்ற கட்டண இழப்புதான் ஏற்படுகிறது. இந்த மனநிலை கொண்டவர்கள் இத்தகைய வகுப்புகளுக்கு உகந்தவர்கள் அல்ல.

கட்டணத்தை திரும்பப்பெறுதல்
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on May 20, 2025 11:30

May 19, 2025

என் அரசியல் என்ன?

திரும்பத் திரும்ப என்னிடம் கேட்கப்படும் கேள்வி என்பது என் அரசியல் என்ன என்பது. சாமானியர்களால் கட்சியரசியல் சார்ந்து மட்டுமே யோசிக்க முடியும் என்பதனால் எப்போதும் ஏதேனும் ஓர் அரசியல் கட்சியின் சார்பை என் மேல் ஏற்றி தங்கள் கருத்தைச் சொல்வார்கள். நான் இந்த தளம் வழியாக அதற்கு தொடர்ந்து பதில் சொல்லியும் வருகிறேன். இந்தத் தளத்தை பார்க்கும் எவருக்குமே அது புரியும், நான் எவரை முன்வைக்கிறேன் என்று, எவரை மட்டுமே முன்வைக்கிறேன் என்று அவர்கள் சாதாரணமாகவே காண முடியும்.

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on May 19, 2025 11:36

ரா.ராகவையங்கார்

ரா. ராகவையங்கார் தமிழ் இலக்கிய மறுமலர்ச்சி நிகழ்ந்த தொடக்க காலகட்டத்தில் அதை முன்னெடுத்த தமிழறிஞர்களில் ஒருவர். இதழியல், இலக்கிய அமைப்புகள், கல்வித்துறை, பதிப்பு ஆகிய தளங்களில் பங்களிப்பாற்றினார். செந்தமிழ் தமிழாய்வுக்கான இதழ்களின் ஆசிரியப்பொறுப்பில் இருந்தார். நான்காம் தமிழ்ச்சங்கம் தமிழ் அமைப்புகளை பொறுப்பேற்று நடத்தினார். அண்ணமலைப் பல்கலை போன்ற கல்வி நிறுவனங்களில் ஆசிரியராகப் பணியாற்றினார். நேமிநாதன், நான்மணிக்கடிகை, பன்னிரு பாட்டியல் உட்பட ஏராளமான நூல்களை உரையெழுதிப் பதிப்பித்தார்.

ரா.ராகவையங்கார் ரா.ராகவையங்கார் ரா.ராகவையங்கார் – தமிழ் விக்கி
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on May 19, 2025 11:33

காவியம் – 29

பாட்னா நகரில் மையத்தெருவில் அமைந்த ஃபணீந்திரநாத் தேஷ்பாண்டேயின் பெரிய மாளிகையில் நான் அனுப்பிய மூன்று நிழல்கள் சென்று குடியேறின. அவர்கள் அங்கு பகலிலும் உலவுவதற்கான இடங்கள் நிறையவே இருந்தன. ஃபணீந்திரநாத் அந்த மாளிகையை ஓர் அறைகூவலாகத்தான் கட்டினார். அப்போது அந்நகரின் முதன்மையான செல்வந்தர்களில் ஒருவர் அவரென்று வெளித்தெரிய வேண்டும் என்று நினைத்தார். வெள்ளையர்கள் தன் வீட்டுக்கு விருந்துக்கு வரும்போது அவர்கள் அங்கே எந்த வசதிக்குறைவையும் அறியக்கூடாது என்று நினைப்பதாக அவர் பிறரிடம் சொல்லிக்கொண்டார்.

கத்தாக்கிலிருந்தும் புவனேஷ்வரிலிருந்தும் கட்டிடம் கட்டுபவர்களை வரவழைத்து, அவர்களுக்கு குடிசைகள் கட்டித்தந்து, இரண்டு ஆண்டுகளுக்கு மேல் தங்க வைத்து, அந்த மாளிகையை அவர் எழுப்பினார். சுதை அரைப்பதற்காக மூன்று செக்குகள் அமைக்கப்பட்டன. அந்த செக்குகளை ஓட்டுவதற்கான காளைமாடுகள் தங்கும் நான்கு கொட்டகைகள் அருகே இருந்தன. கடலிலிருந்து கங்கைக்கு வந்து, கங்கையினூடாக பாட்னா வரை வந்து சேரும் பெரிய படகுகளில் சுண்ணாம்புக்காக கடல் சிப்பிகள் கொண்டுவரப்பட்டன. அவை அங்கேயே உருவாக்கப்பட்ட சூளைகளில் வேகவைக்கப்பட்டு நீரூற்றி நீறாக்கப்பட்டன.

ஒவ்வொரு நாளும் ஃபணீந்திரநாத் தன் மாளிகை கட்டப்படுவதை வந்து பார்த்துவிட்டு சென்றார். அதன் சுவர்கள்  கோழி முட்டை போன்ற மேற்பரப்பு கொண்டவையாக உருவாயின. மான்செஸ்டரிலிருந்து தருவிக்கப்பட்ட இரும்புக்கம்பிகளும், பெல்ஜியம் கண்ணாடிகளும் கொண்ட சன்னல்களுடன்; இமையமலை அடிவாரத்திலிருந்து கொண்டு வரப்பட்டு அறுத்து இழைத்து உருவாக்கப்பட்ட பெரிய கதவுகளும் உத்தரங்களுமாக அந்த வீடு உருவாகி வந்தபோது அவர் பாட்னாவில் தன்னை முழுமையாக நிகழ்த்திக்கொண்டதாக நினைத்துக்கொண்டார்.

அளவில் பெரியதாக இருக்கவேண்டும் என்ற ஒரே காரணத்துக்காகவே ஒன்றுக்குப் பின் ஒன்றாக நான்கு கட்டுகள் கொண்டதாக அந்த மாளிகை கட்டப்பட்டது. அதன் முகப்பில் ஃபணீந்திரநாத்தின் அலுவலகமும் அவருடைய உதவியாளர்களும் இருந்தனர். அவருடைய படுக்கையறை முதல் மாடியில் அமைந்திருந்தது. இரண்டாம் கட்டில் அவருடைய குழந்தைகளும் மனைவியும் பிறரும் தங்கியிருந்தனர். வெளியே இருந்து வருவதற்கு பின்பக்கச் சந்தில் வழி இருந்த மூன்றாவது கட்டில் வேலைக்காரர்களும் அண்டிப்பிழைக்கும் உறவினர்களும் தங்குவதற்கான அறைகள் இருந்தன.

இல்லம் பெரிதானதும் அங்கே தொலைவிலிருந்தெல்லாம் எவரெவரோ வந்து தங்கத் தொடங்கினார்கள். கணவனை இழந்த பெண்கள், கைவிடப்பட்ட பெண்கள் புகலிடம் தேடிவந்தனர். வேலைக்காரிகளாகவும் உறவினர்களாகவும் அவர்கள் அங்கே தொடுத்துக் கொண்டனர். அவர்களில் பெரும்பாலான பெண்கள் ஃபணீந்திரநாத்தின் படுக்கையறைக்கும் அவர் விரும்பியபோது செல்ல வேண்டியிருந்தது. அவர்கள் அங்கேயே குழந்தைகளை பெற்றார்கள். அக்குழந்தைகளும் அங்கே வேலைக்காரர்களாக வளர்ந்தார்கள். அத்தனை பேரும் தங்குவதற்காக அந்த மாளிகை பக்கவாட்டில் மேலும் சிறிய அறைகளும் கொட்டகைகளுமாக வளர்ந்தது.

ஃபணீந்திரநாத்துக்கு பிறகு அவருடைய மகன் ஹரீந்திரநாத் தேஷ்பாண்டேயின் காலகட்டத்தில் நிறைய பெண்கள் வெளியேற்றப்பட்டார்கள். பலர் எப்படியோ எங்கோ சிறுவாழ்க்கை வாய்ப்புகளைக் கண்டடைந்து கிளம்பிச் சென்றார்கள். அறைகள் தொடர்ந்து பூட்டப்பட்டுக்கொண்டே இருந்தன. ஒவ்வொரு அறையிலும் அள்ளி வைத்து பூட்டுவதற்கான பொருட்கள் ஏராளமாக அங்கிருந்தன. பழைய நாற்காலிகள், காலாவதியான பெட்ரோமாக்ஸ் விளக்குகள், வெவ்வேறு வகையான பித்தளைப் பாத்திரங்கள், வெள்ளிப் பொருட்கள், கூரைகளிலிருந்து கழற்றப்பட்ட அலங்கார விளக்குகள். அவற்றை விற்பதற்கு அவரது கௌரவம் இடம் தரவில்லை பயன்படுத்த முடியாதபடி அவை பழையதாகியும் விட்டிருந்தன. ஆகவே இல்லத்தின் பாதிக்கு மேற்பட்ட பகுதிகள் பூட்டப்பட்டு, புழுதி அடைந்து, பழங்கால பொருட்களுடன் பல்லாண்டு கால அமைதியுடன் இருந்தன. நிழல்கள் குடியேறுவதற்கு உகந்த இடம் அது.

நிழல்கள் உரிய இடங்களை முதலில் கண்டடைந்து அங்கே தங்களை நிலைநிறுத்திக் கொண்டன. பின்னர் அவை இல்லங்களிலுள்ள ஒவ்வொருவரையும் மதிப்பிட்டன. அவர்களின் பின்னால் ஓசையும் அசைவும் இன்றி உடன் சென்றன. தங்களுக்குப் பின்னால் ஒரு நிழல் வரத்தொடங்கியிருப்பது புலன்களால் அறியப்படவில்லை எனினும் ஒவ்வொரு உயிருக்கும் எப்படியோ தெரிந்துவிடுகிறது. அது அவர்களுக்கு ஒரு நிலைகுலைவை உருவாக்குகிறது. தங்கள் சொற்களை எவரோ கேட்டுக்கொண்டிருப்பதாகவும், தங்களை யாரோ பார்த்துக் கொண்டிருப்பதாகவும் உணர்கிறார்கள். குறிப்பாக தனிமையில் அமர்ந்திருக்கையில் மிக அருகே எவரோ இருப்பதாக உணர்ந்து அவ்வப்போது திடுக்கிட்டு சுற்றுமுற்றும் பார்க்கிறார்கள்.

ஃபணீந்திரநாத்தின் இல்லத்தில் அவருடைய மனைவியும் மருமகளும் மட்டுமே அப்போது குடியிருந்தனர். அவருடைய மகன் அஸ்வத் தேஷ்பாண்டே தன் மனைவியை இரண்டாவது பிள்ளைப்பேற்றுக்காக அங்கே கொண்டுவிட்டிருந்தான். அவனுக்கு பதவி உயர்வும் இடமாற்றமும் வந்திருந்தது. கிருஷ்ணகஞ்ச் மிகக் கிழக்கே, மலைப்பகுதியில் இருந்தது. அங்கே மருத்துவ வசதி குறைவு என்பதனால் பாட்னாவிலேயே தன் மனைவி தங்கியிருக்கலாம் என்றும் அவன் நினைத்தான்.

ஆறுமாத கர்ப்பிணியான அவன் மனைவி ஊர்வசி அந்தப் பெரிய இல்லத்தை வெறுத்தாள். அவன் மணமுடித்த நாளிலிருந்து அந்த வீட்டில் இருக்க விரும்பியதில்லை. அது மிகப்பெரியதாக இருந்தது. ஆகவே எல்லாப் பக்கமும் திறந்து கிடக்கும் உணர்வை அளிப்பதாக இருந்தது. அவளுடைய பிறந்தவீடு வங்காளத்தில் காலிம்போங் மாவட்டத்தில் சுமாங் என்னும் சிற்றூரில் அமைந்திருந்தது. சுமாங் ஒரு காடு, அது பீர்பகதூர் ராய்சௌதுரி என்னும் ஜமீன்தார்களின் உடைமை. அவர்களுக்கு அவள் குடும்பம் சோதிடர்களாகப் பணியாற்றியது.

அவளுடைய பூர்வீக வீடு சுருள் ஓடு வேய்ந்த உயரமற்ற கூரை கொண்ட நீண்ட கட்டிடம். ஒவ்வொரு அறையிலும் பத்து பேர் நின்றால் நெரிசலாகத் தோற்றமளிக்கத் தொடங்கும். வீட்டிலிருந்து நேராகவே தெருவுக்கு இறங்கமுடியும். கொல்லைப்பக்கம் மிகச்சிறியது. அதற்குப்பின்னால் ஆறு ஓடிக்கொண்டிருந்தது. அந்தச் சிறு வீட்டில் வளர்ந்ததனால் அவள் உள்ளம் திகழும் இடமும் மிகச்சிறிதாக இருந்தது. ஆகவே பெரிய வீட்டில் அவள் திகழும் இடத்திற்கு அப்பால் மிகப்பெரிய இடம் ஒழிந்து கிடந்து அவளை பயமுறுத்தியது.

திருமணமாகி வந்த புதிதில் தங்கள் வீடு எவ்வளவு பெரியது என்பதைப் பற்றி போகிற போக்கில் தன் மாமியார் சொன்ன ஒரு வார்த்தை அவளை எரிச்சலூட்டியபடி நினைவிலேயே நீடித்தது. ஆகவே அந்த வீட்டில் தங்க முடியாதென்றே அவள் எப்போதும் அடம்பிடித்து வந்தாள். அங்கே தங்கியிருக்கும் போதெல்லாம் அவளுக்கு ஹிஸ்டீரியா தாக்குதல் வந்து அழுதுகொண்டே இருந்தாள். மெல்லிய வலிப்பும் அவ்வப்போது வந்தது. பெரும்பாலும் தன் கணவனுக்கு உடனிருந்து பணிவிடை செய்யவேண்டும் என்று கூறி அழுது மன்றாடி அவனுடனேயே அவன் பணியாற்றிய இடங்களுக்குச் சென்று தங்கியிருந்தாள்.

கருவுற்றபோது அவள் தன் வீட்டில் தங்க விரும்பினாள். ஆனால் தேஷ்பாண்டே குடும்பம் அதற்கு அனுமதிக்கவில்லை. அவள் சாதாரணமாக அங்கே செல்வதுகூட அவர்களுக்குப் பிடித்தமானது அல்ல. அம்மா மறைந்ததும் அவள் அங்கு செல்வது முடியாமலாயிற்று. அவளுடைய இரண்டு அண்ணன்களின் மனைவிகளும் அவ்வீட்டில் இருந்தார்கள். அண்ணன்கள் உள்ளூரிலேயே ஆரம்பப்பள்ளிகளில் ஆசிரியர்களாகப் பணியாற்றினார்கள். அவர்களுக்கு அவள் அங்கு வருவது கூடுதல் செலவு என்பதுடன் அவர்கள் மனைவிகள் அவள் மேல் கடும் ஒவ்வாமையும் கொண்டிருந்தனர்.

முதல் குழந்தையுடன் சென்று மூன்று மாதம் தங்கியிருந்தபோது இனி அங்கே ஒருபோதும் வருவதில்லை என்ற எண்ணத்துடன் தான் அந்த வீட்டிலிருந்து கிளம்பி வந்தாள். அவளுடைய சகோதரர்களுக்கு அவள் கணவன் மேல் பொறாமை இருந்தது. ஆகவே அவர்கள் அவன் பிராமணனின் வாழ்க்கை வாழவில்லை என்று சொன்னார்கள். ”அவன்மேல் சாபம் இருக்கிறது. எத்தனையோ ஏழைகளை அவன் துன்புறுத்தியிருப்பான். எத்தனையோ அநீதிகளை அவனே செய்திருப்பான். க்ஷத்ரியர்கள் அநீதி செய்யாமல் வாழ முடியாது. அவர்கள் அநீதியின் பயனை தங்கள் வாரிசுகளுக்குக் கொடுத்த பின்னரே இறப்பார்கள்” என்று அவளுடைய இளைய தமையன் நாராயண் சர்மா சொன்னான்.

”ஷத்ரியர்கள் ஷத்ரியர்களுக்கான தெய்வத்தையே வணங்கவேண்டும். சாமுண்டி வீரபத்ரர், காலபைரவர், காளி என அவர்களுக்கான தெய்வங்கள் வேறு. அவை குருதிபலி கேட்பவை. அவர்கள் குருதிபலி கொடுத்தாக வேண்டும். குருதிபலி கொடுப்பதென்பது ஷத்ரியர்கள் தாங்கள் பெற்ற குருதிபலியை திரும்ப தெய்வங்களுக்கு திருப்பி அளிப்பது தான். அப்படி அவர்கள் அவற்றை சமனபடுத்திக் கொள்ளவில்லையென்றால் அந்த ரத்தத்தின் பாவம் முழுக்க அவர்களிடமே தங்கிவிடும்” என்று பனையோலை விசிறியால் விசிறிக்கொண்டு திண்ணையில் கால் நீட்டி சாய்ந்து அமர்ந்திருந்த அவளுடைய தமையன் திபங்கர் ஷர்மா சேர்ந்துகொண்டான்.

“உன் கணவரிடம் பிராமண தெய்வங்களை மட்டும் அவன் வழிபட்டால் போதாதென்று சொல். அவனுடைய குழந்தைகள் உடல்குறையோ வளர்ச்சிக்குறையோ இல்லாமல் பிறக்கவேண்டும். அவர்கள் நீண்டநாள் வாழவும் வேண்டும். ஏழைகளின் பழி மிகக்கொடியது” என்றான் நாராயண்  “அத்துடன் அவன் போலீஸ் அதிகாரியாக இருப்பதால் மாமிசம் உண்ணாமல் இருக்க முடியாது. எங்கோ அவன் மாமிசம் உண்ணத் தொடங்கியிருக்க வேண்டும், உனக்குத் தெரிந்திருக்காது. மாமிசம் உண்ணாமல் அவனை அந்த வேலையில் வைத்திருக்கமாட்டார்கள்.”

அவள் தன் தமையன்களுடன் விவாதிப்பதில்லை. அவர்கள் பேசும்போது கேட்டுக்கொண்டிருந்துதான் அவளுக்குப் பழக்கம். ஆனால் அவள் உள்ளிருந்து சீற்றத்துடன் ஒரு குரல் எதிர்க்கும், வாதங்களை முன் வைத்துக்கொண்டே இருக்கும். ஆனால் நாளடைவில் தன்னுடைய வாதங்கள் எல்லாமே பலவீனமானவை என்றும் அவன் சொல்வதே சரி என்றும் அவளுக்குத் தோன்றத் தொடங்கியது.

ஒருமுறை அவள் கண்ணீருடன் ”அப்படியென்றால் என்னை எதற்கு போலீஸ்காரருக்கு திருமணம் செய்து கொடுத்தீர்கள்?” என்று கேட்டாள்.

திபங்கர் எழுந்து “அந்த முடிவை அன்றே நான் எதிர்த்தேன். அப்பாவுக்குத்தான் அதில் ஒரு பெரிய ஆர்வமிருந்தது. அவர்தான் ’பிராமணர்களை எவரும் மதிப்பதில்லை சாலையில் எவரும் முன்பு போல் வணங்குவதில்லை. ஆனால் ஒவ்வொரு போலீஸ்காரரையும் சாலையில் வணக்கம் தெரிவிக்கிறார்கள் காலம் மாறிவிட்டது’ என்று சொன்னார். ’காலம் மாறாது பிராமணன் என்றைக்குமே பிராமணன் தான்’ என்று நான் சொன்னேன்” என்றான்.

நாராயண் “நீ என்ன இங்கே மாப்பிள்ளை கிடைக்காமலா போனாய்? ஏன் போனாய் என்று உனக்கே தெரியும். இங்கே… என்றபின் தன் மனைவி கண்களைக் காட்டுவதைக் கவனித்து “சரி விடு” என்றான்.அவளும் அதை கவனித்து மேற்கொண்டு பேசாமல் எழுந்து சென்றாள்.

திரும்பத் திரும்ப funny dog என்றே தான் அவர்களுடைய மாமனாரை அவளுடைய அண்ணன்கள் சொன்னார்கள். ”ஃபன்னி டாக் துரைகளுக்கு கால் அமுக்கிவிட்டவர். அவர்கள் தங்கள் மாட்டுத்தோல் செருப்புகளை தங்களுக்குக் கீழே உள்ள பிராமணர்கள் சுமந்தாகவேண்டும் என்று கட்டாயப்படுத்துவார்கள். மாட்டுமாமிசம் தின்னாமல் விடவே மாட்டார்கள். ஆகவேதான் நம் குடும்பத்தினர் எவரும் வெள்ளையர்களிடம் வேலைக்குச் செல்லவில்லை. இதோ இங்கேயே எஸ்டேட்களில் எத்தனை வெள்ளைக்காரர்கள் நல்ல பிராமணர்கள் கிடைக்காமல் தேடிக்கொண்டிருந்தனர். பிரிட்டிஷ் பணத்தில் சம்பளமும் தருவதற்குத் தயாராக இருந்தார்கள். நம் முன்னோர்கள் அதை ஏற்றுக்கொள்ளவில்லை. உண்மையான பிராமணர்கள் எவரும் அதையெல்லாம் ஏற்கமாட்டார்கள்” என்று நாராயண் சொன்னான்.

அந்த உணர்வுடன் தான் அவள் ஃபணீந்திரநாத் குடும்பத்தில் வாழ்ந்தாள். அவற்றை அவள் அங்கே ஒருபோதும் பேசியதில்லை என்றாலும் எப்படியோ அவள் என்ன நினைக்கிறாள் என்பதை அங்கே உணர்த்திக்கொண்டிருந்தாள். ”எனது குடும்பம்…” என்று சொல்லும்போது அவள் குரல் உயரும். ”என் அப்பா ஆசாரமானவர்…” என்பாள். ஆசாரங்களை அவள் அப்பா அணுவளவுகூட மீறாமல் விரதம்போல கடைபிடித்தது, அவருடைய சொல்லுக்கு ஜமீன்தார்கள் தலைவணங்கியது, வணிகர்கள் அவரது காலில் விழுந்து வணங்கி அவரது இடது கை ஆசீர்வாதம் பெற்றுச் சென்றது என சொல்லிக்கொண்டே இருப்பாள்.  ஒவ்வொரு நாளும்  “கிஷன் சர்மாவின் குடும்பம் என்றால் அனைவருக்கும் தெரியும். ராஜகுரு வம்சம் என்பார்கள்…” என்றாள்.

அதை சொல்வதற்கு ஒருமுறையை அவள் கண்டடைந்திருந்தாள். “நாங்கள் ராஜகுருவின் வம்சம்” என்று சொல்லும்போது கூடவே “என்ன சொல்லி என்ன? எங்கள் வீட்டில்  நிறைய நாட்கள் வெறும் சப்பாத்தியும் வெங்காயமும் மட்டுமே உணவாக இருந்தது. நெய்யும் வெண்ணையும் பண்டிகை நாட்களில் எப்போதாவது எவராவது கொடையாக தந்தாலொழிய கிடையாது. எங்கள் வீட்டில் பால் உணவு எப்போதுமே கிடையாது” என்று சொல்வாள். உடனெ “முத்ரா ராட்சசம் நாடகத்தில் வருகிறது. சந்திரகுப்த மௌரியரின் பேரரசை உருவாக்கிய ராஜகுருவான சாணக்கியர் தன் குடிலில் வெறுந்தரையில் அமர்ந்து மடியில் பலகை வைத்து எழுதிக்கொண்டிருந்தார். ஓர் ஓரமாக அவருடைய சமையல் அடுப்பு. இன்னொரு ஓரத்தில் அவர் செய்த வேள்வியின் சாம்பலும். இதுதான் அவருடைய நிலைமை… ராஜகுரு என்றால் மதிப்பு மட்டும்தான். பணம் இல்லை” என்று சேர்த்துக்கொள்வாள்.

அவள் சொன்னதை மறுத்தால் அவள் தன் குடும்பத்தின் வறுமையைப்பற்றி சொன்னதை மறுப்பதாக ஆகும். அதை ஏற்றுக்கொண்டால் அவள் ராஜகுரு குடும்பம் என்பதை ஏற்றுக்கொண்டதாகும். அந்த விவாதத்தை அவர்கள் நீட்டிக்க விரும்பாமல் வேறுபக்கம் கொண்டு சென்றார்கள். ஆனால் அந்த வார்த்தைகள் அவள் சொல்லாமலேயே அவர்களிடம் ஒலித்துக்கொண்டுதான் இருந்தன. அவர்கள் தங்களுக்குள் பேசிக்கொள்வதில் கூட அவளைப்பற்றி சொல்வதில்லை.

தேஷ்பாண்டே குடும்பம் அடுத்த தலைமுறையில் வணிகத்தில் இறங்கியது. வெள்ளைக்காரர்களின் காலத்தில் ஃபணீந்திரநாத் தேஷ்பாண்டே ஈட்டியது போன்ற ஆண்டுதோறும் இரட்டிப்பாகும் செல்வம் பிறகு உருவாகவில்லை. வணிகத்தில் பிராமணர்களுக்கான இடம் குறைவுதான். அவர்கள் மார்வாடிகளுடனும் ஜைனர்களுடனும் போட்டி போட வேண்டியிருந்தது. ஒவ்வொரு முறையும் அவர்களைப் பார்க்கும்போது பணிந்து முகமன் உரைத்து வணங்கிச்செல்லும் மார்வாடிகளும் ஜைனர்களும் வியாபாரத்தில் ஈவிரக்கமற்றவர்களாகவும், முடிந்தபோதெல்லாம் தயக்கமேயின்றி ஏமாற்றிச் செல்பவர்களாகவும் இருந்தார்கள்.

தன்னிடமிருந்த முதலீட்டாலும் முன்னரே தந்தை காலத்திலிருந்து சேர்த்துவைக்கப்பட்ட சொந்தக்கடைகளாலும்தான் ஹரீந்திரநாத் தேஷ்பாண்டே தாக்குப்பிடிக்க முடிந்தது. தன்னுடைய மகன் காவல் துறை உயரதிகாரியாகச் சென்ற பிறகு அவர் வணிகத்தை வளர்க்கும் யோசனையை கைவிட்டு தன் காலம் வரைக்கும் அவற்றை நடத்திச் சென்றால் போதும் என்ற எண்ணத்தை அடைந்தார். ஃபணீந்திரநாத் கட்டிய இல்லத்தில் வைதிகச் சடங்குகளும் பண்டிகைகளும் குறைவில்லாமல் கொண்டாடப்பட்டன. அவருடைய தந்தைக்கான திதி அளிக்கும் நாட்கள் ஒவ்வொரு மாதமும் முந்நூற்றுக்கு மேற்பட்ட பிராமணர்களுக்கு அன்னதானத்துடனும் தான தர்மங்களுடனும் தொடர்ந்து நடந்து வந்தன. தீபாவளி அன்று அவர் ஆயிரம் பேருக்கு புத்தாடைகளும் உணவும் அளித்தார். ’தேஷ்பாண்டே குடும்பம் இங்கு தலைநிமிர்ந்து நின்றிருக்கிறது என்பதை சொர்க்கத்திலிருந்து எனது தந்தை பார்க்கவேண்டும்’ என்று அவர் அடிக்கடி சொல்வதுண்டு.

நிழல்கள் அங்கே செல்லும்போது அந்தக் குடும்பத்தினர் அதன் எண்ணிக்கைக் குறைவாலேயே ஒருவரிலிருந்து ஒருவர் விலகி இருந்தார்கள். ஹரீந்திரநாத் தேஷ்பாண்டே காலை ஏழுமணிக்கு எழுவார். வேலைக்காரி அவருக்கு காபி கொண்டு வைப்பாள். அதைக் குடித்தபடி அவர் இந்தியின் மூன்று பத்திரிகைகளைப் படிப்பார் அதன்பிறகு குளியலறையில் வெந்நீர்த்தொட்டியில் மூழ்கிக்குளிப்பார். அவர் ஒருபோதும் வெளியே சென்று பொது படித்துறைகளில் குளித்ததில்லை. தன் தந்தைக்கான திதி அளிக்கும்போது கூட கங்கையில் இறங்கி கைப்பிடி நீரை அள்ளி தலையில் தெளிப்பது போல் பாவனை காட்டிவிட்டு இல்லம் திரும்பி வெந்நீரில் மீண்டும் குளித்துவிடுவார்.

அத்தர் பூசிக்கொள்வது அவருக்குப் பிடிக்கும் ஒவ்வொரு நாளும் மூன்று முறை புதிய வெள்ளை ஆடையை மாற்றிக்கொள்வார். வெண்ணிற செருப்பணிந்து தனது பழைய பென்ஸ் காரில் கடைக்கு கிளம்பிச் செல்வார். ஒன்பது மணிக்கு கடை திறக்கையில் அவர் அங்கிருப்பார். எப்போதுமே கடை திறப்பதற்கு முன்பே கடையில் இருந்தாக வேண்டும் என்பது அவரது தந்தை அவருக்கு கற்பித்தது. ‘கடையை திறப்பவனும் மூடுபவனும் முதலாளியாக இருந்தாலொழிய கடை பொலியாது’ என்று அவர் சொன்னார். கடையில் அமர்ந்து முந்தைய நாள் கணக்குகளை அவர் பார்த்து முடிப்பதற்கு பதினொன்றாகிவிடும். அதன்பிறகு வாடிக்கையாளர்களைச் சந்திப்பது, தொலைபேசி அழைப்புகள்.

மதியம் திரும்பி வந்து சாப்பிட்டுவிட்டு அரைமணி நேரம் ஓய்வு. குளித்து மீண்டும் ஆடைகளை அணிந்து கடைக்குச் செல்வார். மாலை ஆறுமணிக்கு கடையைவிட்டுக் கிளம்பி வீட்டுக்கு வந்து மீண்டும் குளித்து ஆடைமாற்றிக்கொண்டு கோயிலுக்கு செல்வார். கோயிலில் இருந்து அவர் தன் நண்பர்கள் வந்துகூடும் இடங்களுக்குச் சென்றார். அங்கே அவர்கள் குடித்து, மாமிச உணவு உண்டு பின்னிரவு வரை சீட்டாடினார்கள். அதற்கென்றே ஒரு வீட்டை கங்கைக் கரையோரமாக வாங்கி வைத்திருந்தார்.அவரை டிரைவர் கைத்தாங்கலாகக் கொண்டுவந்து படுக்கவைப்பான். சிலநாட்கள் அவர் வீட்டுக்கு வருவதே இல்லை.

அவருடைய மனைவி ருக்மிணிக்கு உடல் எடை அதிகம். மூட்டுவலி உண்டு. அவள் தன்னுடைய அறையிலேயே பெரும்பாலும் தூங்கினாள். கணவருடன் சென்று அவருடைய அறையில் படுத்துக்கொள்வதென்பது எப்போதாவது அவர் அழைத்தால் மட்டும்தான். அதுவும் அவர் ஏதாவது பேசவேண்டும், ரகசியமாக அவளை திட்டவேண்டும் என்றால் மட்டும்தான். அவர்கள் உடலுறவு கொண்டு பல ஆண்டுகள் ஆகிவிட்டிருந்தன. அவருக்கு வேறு பெண்களுடன் உறவுகள் உண்டென்று அவளுக்குத் தெரியும் அதைப்பற்றி அவள் கவலைப்படுவதில்லை.

காலையில் ஏழு எட்டு மணிக்கு மேல் தான் அவள் தூங்கி எழுவாள். அவளுக்கு அதில் நேர ஒழுங்கென ஏதுமில்லை. முந்தைய நாள் இரவு எவ்வளவு பிந்தித் தூங்கினாள் என்பதுதான் கணக்கு. எழுந்ததுமே படுக்கையில் அமர்ந்து கண்மூடி பிரார்த்தனை செய்வாள். ஒவ்வொரு பிரார்த்தனையின் போதும் எந்தக் காரணமும் இல்லாமல் அவள் விசும்பி அழுவதுண்டு. அதன்பிறகு பணிப்பெண்களின் துணையுடன் குளித்து அவர்களுடைய வழக்கப்படி வங்காள பாணியில் கரை போடப்பட்ட வெண்ணிற ஆடை அணிந்து அதன் நுனியை தலையில் முக்காடாகப் போட்டுக்கொண்டு சமையலறைக்கு வந்து அங்கே இருக்கும் நாற்காலியில் அமர்ந்துகொள்வாள் அங்கிருந்தபடியே பணிப்பெண்களுக்கு ஆணையிடுவாள். அவளுடைய அணுக்கமான வேலைக்காரியான சம்பா அவளுடனேயே இருந்தாள்.

அவ்வப்போது எழுந்து அந்த மாளிகையின் எட்டு பின்வாசல்களிலும் ஒவ்வொன்றுக்குமாக சென்று எதையேனும் பார்த்துவிட்டு வருவது தவிர ருமிணிக்கு அசைவென்று எதுவுமே கிடையாது. மதியம் உணவுக்குப்பின் அவள் இரண்டு மூன்று மணி நேரம் தூங்கினாள். மாலையில் அவர்களின் கரிய அம்பாசிடர் காரில் கிளம்பி அருகிருக்கும் விஷ்ணு ஆலயங்களுக்கு சென்று வருவாள். மாலை வந்தவுடனேயே தொலைக்காட்சி முன் அமர்ந்து தொடர்களைப் பார்க்கத்தொடங்குவாள். எட்டுத் தொடர்களை அவள் தொடர்ந்து பார்த்துவந்தாள். இரவு பதினொன்று மணி வரைக்கும் தொடர்களைப் பார்த்துவிட்டு அதன்பிறகு படுக்கைக்குச் செல்வாள். நீண்ட நேரம் அவளால் தூங்க முடிவதில்லை. புரண்டு புரண்டு படுத்து எழுந்தமர்ந்து தண்ணீர் குடித்தும் தானாகவே மயங்கி எப்போதோ அவள் தூங்கிவிடுவாள்.

அவள் மகன் அஸ்வத் தேஷ்பாண்டே அரிதாகத்தான் அந்த மாளிகையில் தங்கினான். அவன் கல்லூரிக்குச் சென்றுவிட்டபிறகு அந்தப்பகுதியில் அவனுக்கு எந்தத் தொடர்பும் இல்லை. இளமையிலேயே அவனுக்கு வியாபாரமும் அதைச் சூழ்ந்திருக்கும் மனிதர்களும் முற்றிலும் பிடிக்காமலானார்கள். படித்து மேலே செல்ல வேண்டுமென்பதே அவன் ஒரே நோக்கமாக இருந்தது. கல்லூரிப்படிப்பை முடித்த பிறகு அவன் விடுதியில் சென்று தங்கி இந்திய அரசுப்பணிக்கான தேர்வுகளை முயற்சி செய்யத்தொடங்கினான்.

இரண்டு முறை அவன் தேர்வில் தோற்ற பிறகு தயங்கி தன் தந்தையிடம் வந்து தன்னுடைய நோக்கம் இந்திய அரசுப்பணிதான் என்றும் அதில் எப்படியாவது தனக்கு உதவி செய்ய வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டான். அவர் தன்னுடைய அறைக்குள் சாய்வுநாற்காலியில் படுத்து அருகே தரையில் அமர்ந்திருந்த வயதான பண்டிதர் வாசித்துக் கொண்டிருந்த ராம்சரிதமானஸைக் கேட்டுக்கொண்டிருந்தார். அவன் வாசலுக்கு வெளியே நின்று தாழ்ந்த குரலில் சொல்வதைக் கேட்டபின் பண்டிதரிடம் விரலை அசைத்தார். பண்டிதர் ராம்சரிதமானஸைக் கீழே வைத்துவிட்டு சென்று கோளாம்பியை எடுத்து அவர் அருகே வைத்தார். அதில் பீடாவை துப்பிவிட்டு வாயைத் துடைத்தபின் ”அது எப்படி இந்திய ஆட்சிப்பணித் தேர்வை நாம் வாங்க முடியும்?” என்று கேட்டார்.

”அதற்கு வழி இருக்கிறது எனக்குத் தெரிந்த ஒருவர் உதவுவதாகச் சொல்கிறார்.”

தந்தையும் மகனும் ஒருவரை ஒருவர் பார்த்து பேசிக்கொள்வதில்லை. அவர் தன் முன் தரையைப் பார்த்தபடி ”தோராயமாக எவ்வளவு கேட்பார்கள்?” என்றார்.

அவன் தொகையைச் சொன்னதும் திடுக்கிட்டு திரும்பிப்பார்த்து ”என்ன?” என்றார். அவன் தரையைப்பார்த்தபடி ”பெரிய தொகைதான் ஆனால் ஒருபோதும் நஷ்டம் அல்ல” என்றான்.

”என்ன சம்பளம் கொடுப்பார்கள்? எத்தனை ஆண்டுகளில் அந்தப்பணம் திருப்பிக்கிடைக்கும்?” என்று அவர் கேட்டார்

”சம்பளம் முக்கியமே அல்ல சம்பளம் என்பது ஒரு டிப்ஸ் போலத்தான். பத்து ஆண்டுகளில் நாம் செலவிடும் பணத்தைப்போல பத்து மடங்கை திரும்ப எடுத்துவிடமுடியும். நாம் நினைத்தால் எதுவும் செய்ய முடியும். இங்கே உண்மையான அதிகாரம் என்பது இந்திய ஆட்சிப்பணியிடம் தான் இருக்கிறது.”

அவர் கண்களைச் சற்று சுருக்கியபின் ”நீ போலீஸ் அதிகாரியாக முடியுமா?” என்று கேட்டார்.

தந்தையின் உள்ளே என்ன நிகழ்கிறது என்று புரிந்துகொண்டு மகன் முன்நகர்ந்து ”முடியும்” என்றார்.

“ம்” என்று அவர் தலையசைத்தார்.

மூன்று மாதங்களுக்குள் தொகை இரண்டு நிலங்களாகவும் ஒரு வீடாகவும் மூவருக்கு கைமாற்றப்பட்டது ஓராண்டுக்குள் அவன் தேர்வை வென்று பயிற்சிக்காக டேராடூன் கிளம்பிச் சென்றான். அவனுடைய வாழ்க்கை அத்துடன் வேறொன்றாக மாறியது. பாட்னாவுடனும் அந்த இல்லத்துடனும் அவனுக்கு எந்தத் தொடர்பும் இல்லாமலாயிற்று. அதன்பிறகு தொடர்ந்து பத்து நாட்கள் கூட அவன் அங்கு தங்கியதில்லை. பாட்னாவில் அதிக நாட்கள் தங்கவேண்டியிருக்கும்போது கூட அரசு மாளிகைகளிலேயே தங்கினான். அங்கு அவனுக்கு காவலர்களின் பணிவிடைகள் இருந்தன. மூன்று அல்லது நான்கு காவலர்கள் பணிவிடை செய்யாமல் அவனால் இருக்க முடியாது என்ற நிலைமை இருந்தது. இரவுகளில் அவன் மாமிசமும் மதுவுமின்றி தூங்குவதில்லை. அவனுக்கு அவர்கள் பெண்களையும் கொண்டு வந்து சேர்த்தார்கள்.

அவன் மனைவி அவனுடைய அதிகாரத்தின் சுவையை அறிய வேண்டுமென்று விரும்பினான். ஆகவே எப்போதும் அவர்கள் வீட்டில் மூன்று நான்கு காவலர்கள் வேலை செய்தார்கள். அவர்களில் ஒருவரேனும் சீருடையில் இருக்கவேண்டும் என்பதும் அவனுக்கு கட்டாயமாக இருந்தது. அவர்களுக்கு அவள் உரத்த குரலில் ஆணையிடவேண்டும் என்று அவளை சொல்லி சொல்லி பயிற்றுவித்தான். அவளுக்கு ஆணையிடும் குரல் நீண்ட காலம் அமையவேயில்லை. வேலைக்காரர்களை அவளால் அதட்டவோ கண்டிக்கவோ முடியவில்லை. அவன் அதை வலுவாகக் கண்டித்து திருத்தினான். அதற்கு பதிலாக “நாங்கள் சாத்வீக பிராமணக்குடும்பத்தை சார்ந்தவர்கள். எளிதில் நாகரீங்களை விட முடிவதில்லை” என்று அவள் தன்னுடைய மேட்டிமையைச் சொல்லி பதிலளித்தாள்.

அவள் மிக மென்மையானவளாக, தனித்தவளாக, தனித்திருக்கும் போதெல்லாம் தானாகவே உடைந்து அழுபவளாக இருந்தாள். அவன் எந்த அளவுக்கு பிராமண வாழ்க்கை முறையிலிருந்து வெளியே சென்றானோ அந்த அளவுக்கு அவள் வெறியுடன் பிராமண வாழ்க்கைக்குள் நுழைந்தாள். அவள் கடுமையாக ஆசாரங்களை கடைப்பிடித்தாள். காலையில் இருட்டு விலகுவதற்கு முன்பே எழுந்து பூஜைகளையும் அனுஷ்டானங்களையும் முடித்தாள். சமையலறையிலும் சமையலறையை ஒட்டிய பகுதிகளிலும் பிராமணப் பெண்களன்றி எவரையுமே அவள் அனுமதிக்கவில்லை. பிராமணரன்றி எவரையும் எப்போதுமே அவள் தொட்டதும் இல்லை.

வெளியுலகமே அவளுக்கு இருக்கவில்லை. வெளியே காரில் மட்டுமே சென்றாள். காரில் ஏறும்போது கூட அவள் தானே கொண்டு வரும் ஒரு வெண்ணிற டர்க்கி டவலை விரித்து அதன்மேல் தான் அமர்ந்தாள். ஒவ்வொரு நாளும் இரவில் நீண்ட நேரம் தனியாக அமர்ந்து சைதன்யரின் பஜனைப்பாடலை பாடிவிட்டுத் தூங்கினாள். மாதத்திற்கு நான்கு நோன்புகளுக்கு மேல் எடுத்தாள். இந்த மண்ணில் அறத்தையும் நெறியையும் நிறுவும்பொருட்டு பிறந்தவர்கள் பிராமணர்கள். அந்தப்பொறுப்பு அவர்களுக்கு உண்டு. அவர்களுக்கு அழகும் அறிவும் அதற்காகத்தான் அளிக்கப்பட்டிருக்கிறது என்று வேலைக்காரர்களிடம் அவள் திரும்பத்திரும்ப சொல்லி வந்தாள்.

”அந்த இல்லத்தில் குடியேறிய நிழல்கள் அவர்கள் ஒவ்வொருவரையும் பின் தொடரத்தொடங்கின இப்போது இந்தக் கதையை நான் உனக்கு சொல்லிக் கொண்டிருக்கையில் அங்கே அவர்களைப் பின் தொடர்ந்து நிழல்கள் சென்று கொண்டிருக்கின்றன. அவர்கள் தங்கள் விருப்பப்படி தான் செயல்படுவார்கள். தங்களுக்குரிய வழியில் அங்கு பழி கொள்வார்கள். உன் மனைவியின் சாவுக்கான முதற்பொறுப்பை ஏற்கவேண்டியவர் அவர்களில் யார்? யாரை அந்நிழல்கள் பழி கொள்ளும்? இப்போது அதை நீ சொல்ல வேண்டும். சொல்லவில்லை எனில் இந்த ஆட்டம் இங்கு முடிகிறது. கதைகளை நிறுத்திவிட்டு நான் விலகிச்செல்வேன்” என்று கானபூதி சொல்லியது. ”சொல். முதலில் பலியாகவேண்டியவர் யார்?”

நான் என் உடல் முழுக்க ததும்பிய சீற்றத்துடன் கைகளைத் தரையில் அறைந்தபடி எழுந்து முகத்தை கானபூதியை நோக்கி நீட்டி பற்கள் கிட்டித்து முகம் இழுபட ”அவன்… அவனுடைய ஆணைப்படித்தான் அந்த கிரிமினல்கள் என் மனைவியைக் கிழித்தார்கள். அவன் அவளை வேட்டையாடினான். ஓராண்டுகாலம் தொடர்ந்து அவளை அவன் வேட்டையாடியிருந்தான் என்றால் அவனுக்கு எத்தனை வஞ்சமிருந்திருக்கும். ஈவிரக்கமற்ற விலங்கு அவன். அவன் முதற்பலியாக வேண்டும்” என்றேன்.

தன் முன் நிலத்தில் பொத்தி வைத்திருந்த கையை விலக்கி கானபூதி சொன்னது, ”இல்லை நிழல்கள் முதலில் அவன் மனைவியைத்தான் தேர்வு செய்திருக்கின்றன. அவள் தான் முதல் பலி.”

நான் தளர்ந்து அமர்ந்து ”ஏன்?” என்றேன்.

”அவள்தான்” என்று கானபூதி சொன்னது.

நான் கண்ணீருடன் தலைகுனிந்தேன். ”ஏன்?” என்றேன்.

“அவளைத்தான் தேர்வுசெய்துள்ளன. ஏன் என்று அவற்றுக்குத் தெரியும்”

நான் தளர்ந்து பெருமூச்சுவிட்டேன். என்னால் எதையும் யோசிக்கவே முடியவில்லை.

“இந்த ஆட்டத்தில் நீ தோற்றுவிட்டாய் நமது கதைகள் இத்துடன் முடிந்தன”

“கதை முடிகிறது என்றால் என்ன பொருள்.. அவளையாவது அவர்கள் பலி கொள்வார்களா?” என்று நான் கேட்டேன்.

”இல்லை. அவை திரும்பிவிடும். அவளை அவர்கள் பலிகொள்ள வேண்டுமென்றால் நீ மீண்டும் ஒரு போட்டிக்கு என்னுடன் வரவேண்டும் உனக்கு ஒரு வாய்ப்புத்தருகிறேன். மீண்டும் ஒருமுறை நான் சொல்லும் கதையின் முடிவை நீ சரியாகச் சொல்லிவிட்டால் இந்தக் கதையை நான் தொடர்கிறேன்” என்றது கானபூதி. “நண்பனே, கதையில் தான் அவள் பலி வாங்கப்படமுடியும். கதை நிகழ்ந்தபிறகு தான் அது மெய்யாக நிகழும்.”

(மேலும்)

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on May 19, 2025 11:32

வானமும் பறவைகளும்

 

இன்று காலை கணவருடன் நடைபயணம். மழைக்குபின் சென்றதால், எங்கும் அழகான பச்சை. Oriental magpie robin எனும் குண்டுகரிச்சான், common iora எனும் மாம்பழ சிட்டு, குயில் முதலியவற்றை இங்கு முதல் தடவையாக கண்டோம். குண்டுகரிச்சான் தன் சின்ன அலகை திறந்து பாடவும் செய்தது.

வானமும் பறவைகளும்

I saw your video today about finding my god in you tubeI was mesmerized, I wanted to share my namaskaram with youMy gratitudeThanks & Regards God- A Letter
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on May 19, 2025 11:30

May 18, 2025

ஒரு பழைய பிறழ்வெழுத்து

அவன் புணரத்தொடங்கியதும் அவள் ‘நிறுத்தாதே, நம்மிடையே ஓரங்குல இடைவெளியும் விடாதே. இன்னும் செய். இறுகப்பிடி. என்னை நிரப்பு’ என்றெல்லாம் அவள் வெளியிட்ட சத்தம் அந்த மாளிகை முழுவதிலும் எதிரொலித்தது. அவன் அழுத்த அவளும் தன் உறுப்பை இறுக்கி எதிர்ச்செயல் புரியத்தொடங்கினாள் 

இந்த வரிகள் ஒரு நவீன ‘டிரான்கிரேசிவ்’ எழுத்திலுள்ளவை அல்ல. ஏறத்தாழ முந்நூறு ஆண்டுகளுக்கு முன்பு தஞ்சையில் எழுதப்பட்ட ஒரு தெலுங்கு நூலில் இடம்பெற்றவை. எழுதியவர் ஒரு பெண். முத்துப்பழனி என்று பெயர். நூலின் பெயர் ராதிகா சாந்த்வனமு. மேலே சொன்ன வரிகளைச் சொல்பவள் ராதை. அவளுடன் கூடுபவன் கிருஷ்ணன்.

முத்துப்பழனி தஞ்சையில் 1739- 1790 ல் வாழ்ந்தவர். தஞ்சையை ஆட்சி செய்த மராட்டிய அரசர் பிரதாபசிம்மரின் ஆதரவில் இருந்தார். இந்நூல் 1887ல் முதல்முதலாக அச்சிடப்பட்டது, இதிலிருந்த காமவெளிப்பாட்டுப் பகுதிகள் வெட்டப்பட்டிருந்தன. 1910ல் பெங்களூர் நாகரத்தினம்மாள் முன்னுரையுடன், முழுமையாக இது வெளியாகியது. பெரும் விவாதம் வெடித்தது.

ஆந்திர இலக்கிய முன்னோடி கந்துகூரி வீரேசலிங்கம் பந்துலு ‘ஒரு வேசியால் எழுதப்பட்டு இன்னொரு வேசியால் வெளியிடப்பட்ட நூல் என்று’ விமர்சனம் செய்தார். அரசு இந்நூலை 1912ல் தடைசெய்தது. நூலை அச்சிட்ட அச்சகம் சூறையாடப்பட்டது. பின்னர் 1946ல் டி.பிரகாசம் அவர்களால் தடை நீக்கம் செய்யப்பட்டது.

ராதிகா சாந்த்வனம் உட்பட காமத்தைப் பேசும் சிற்றிலக்கியங்கள் பதினேழு பதினெட்டாம் நூற்றாண்டுகளில் நிறைய உருவாயின. அது இந்திய அளவிலேயே ஒரு நலிவுக்காலகட்டம். இலக்கியம் அறம், வீடுபேறு முதலிய பெரும் பேசுபொருட்களை விட்டு விலகியது. பக்தி அலை அடங்கியது. ஆகவே பேரிலக்கியங்களின் காலம் முடிவுக்கு வந்தது. இலக்கியம் என்பது சிறு ஆட்சியாளர்களின் அவையின் கேளிக்கையாக மாறியது.

தமிழகத்தில் நாயக்கர் ஆட்சிக்காலத்தில் அத்தகைய நூல்கள் பெருகின. கூளப்பநாயக்கன் காதல், விறலிவிடு தூது முதலிய படைப்புகளின் காலம். தெலுங்கில் அந்தக் காலகட்டத்தில் அத்தகைய ஏராளமான நூல்கள் இயற்றப்பட்டிருக்கின்றன.

இந்நூலை வாசிக்கையில் இன்று தோன்றுவது இதுதான். கிட்டத்தட்ட மூவாயிரம் ஆண்டுக்குமேல் தொன்மை கொண்ட இந்திய இலக்கியத்தில் மிகப்பெரும்பாலானவை காமம் சார்ந்தவை. அவை அனைத்துமே ஆண்களின் காமவெளிப்பாடுகள்தான். பெண்கள் ஆண்களுக்காக ஏங்குகிறார்கள். ஆண்களுக்காகக் காத்திருக்கிறார்கள். ஆண்களுடன் ஊடுகிறார்கள், கூடுகிறார்கள். பெண்களின் உறுப்புகள் ஆண்களின் ரசனைக்குரிய வகையில் வர்ணிக்கப்படுகின்றன.

மொத்தச் சங்க இலக்கியமும் ஆண் இலக்கியம்தான். பெண்களின் சில கவிதைகள் உள்ளன, ஆனால் அவற்றில் காமம் இல்லை. மிகச்சில பாடல்களில் மிகமிக உள்ளடங்கிய தாபம் வெளிப்பட்டுள்ளது. அந்த வகையான மறைமுகத் தாபத்தை பின்னர் வந்த காரைக்காலம்மையார், ஆண்டாள் பாடல்களில் காணலாம். ஆனால் அதுவே பெரும் மீறல், மிக அரிது. அந்த வகையான மென்மையான தாபம் மீரா பாடல்களில் வெளிப்படுகிறது. அதை ஜயதேவ அஷ்டபதியின் காமவிழைவுடன் ஒப்பிட்டால் வேறுபாடு புரியும்.

ஆனால், தமிழிலக்கியப் பரப்பில் இன்னொரு சுவாரசியம் உள்ளது. பெண்கள் தங்கள் உடலை உருக்கி உதறிக்கொண்டு, பெண் என்னும் அடையாளத்தையே துறந்து, கவிஞர் என்னும் விடுதலையை அடையமுடிகிறது. ஔவை கிழவியானாள். காரைக்காலம்மையார் பேயானார். பேய்மகள் இளவெயினிகூட அவ்வாறுதானோ என்னவோ. மணிமேகலையும்கூட பெண் என்னும் அடையாளம் இழந்தே சுதந்திரம் அடைய முடிந்தது.

அப்படிப் பார்த்தால் ராதிகா சாந்த்வனமும் ஒரு விந்தையான நூல். இன்னொன்று அதைப்போல இந்திய இலக்கியத்திலேயே இல்லை. இருந்திருக்கலாம். இது வெள்ளையர் கண்பட்டு, அச்சிடப்பட்டதனால் நீடிக்கின்றது. எஞ்சிய எத்தனையோ நூல்கள் அழிந்திருக்கலாம். தனிப்பட்ட ரசனைக்காக எழுதப்பட்டவை. அவற்றை பேணவேண்டும் என்ற எண்ணமே முற்றிலும் ஆண்களின் உலகமான இந்திய இலக்கியம் என்னும் களத்திற்கு இல்லாமல் இருந்திருக்கலாம். யார் கண்டது, பெண்களே எழுதி, பெண்களே ரசித்து, அப்படியே மறைந்துபோன நூல்களும் இருந்திருக்கலாம்.

ராதிகா சாந்த்வனமு ஆண்களின் காம உலகை ஒட்டி, அவர்களுக்காக எழுதப்பட்டது போன்ற பாவனைகொண்ட தந்திரமான நூல். இது ராதைக்கும் கண்ணனுக்குமான காதல், காமத்தைச் சித்தரிக்கிறது. கண்ணன் ராதை உட்பட பல பெண்களுடன் திளைப்பதுதான் இதன் பேசுபொருள். அது வேறுபல நூல்களில் உள்ளதுதான். ஆனால் இதில் பெண்களின் ரகசியக் காமவிழைவுகள் எல்லாமே வெளிப்பட்டுள்ளன. குறிப்பாக அவர்களின் பிறர்காமம் நோக்கும் விழைவு (Voyeurism) பிற பெண்ணிடமிருந்து ஆணை பறிக்கும் விழைவு, தன்னைவிட வயது குறைந்த இளைஞர்களுடன் உறவுக்கான விழைவு, ஆணை வலிந்து கைப்பற்றும் விழைவு, ஆணை தன் காலடியில் விழச்செய்யும் விழைவு அனைத்துமே.

இந்நூலின் ராதை மணமானவள், கிருஷ்ணனை வளர்த்தவள். (பல மூலநூல்களிலும் அப்படித்தான்). ஆனால் இதில் அவள் சற்று வயது முதிர்ந்தவள். கிருஷ்ணனுக்கு இளாவை அவளே மணம் புரிந்து வைக்கிறாள். அவர்களின் முதலிரவில் புகுந்து கிருஷ்ணனிடம் உறவு கொள்கிறாள். இப்படியே செல்கிறது இதன் சித்தரிப்பு.

பெண்கள் தங்கள் வேட்கையை எழுதத் தொடங்கியது இந்திய – தமிழ் நவீன இலக்கியத்திலேயே 1990 வாக்கில்தான் தொடங்கியது. ஆனால் ராதிகா சாந்த்வனம் அதில் பலபடிகள் முன்னே நிற்கிறது. அதனாலேயே இதற்கு ஒரு முக்கியமான இடம் உண்டு என நினைக்கிறேன்.

அகநி வெளியீடாக வந்துள்ள இந்நூல் விரிவான ஆவணக்குறிப்புகள் இணைக்கப்பட்டது. அ. வெண்ணிலா அந்தக்கால அரசு ஆவணங்கள், இதழ்விவாதங்கள் ஆகியவற்றை தேடி எடுத்து ஆய்வுப்பதிப்பாக வெளியிட்டிருக்கிறார்.

ராதிகா சாந்த்வனமு அகநி வெளியீடு

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on May 18, 2025 11:35

காவியம் – 28

சாதவாகனர் நாணயங்கள் பொமு 3

ஃபணீந்திரநாத் தேஷ்பாண்டே பதிமூன்று நாட்கள் நடந்து பாட்னாவை  வந்தடைந்தார். அவர்  செல்லும் வழியில் அவரை விசாரித்த அனைவரிடமும் தான் காசிக்குச் செல்லும் பிராமணன் என்றும், தன் தந்தையின் எலும்புகள் அந்தப் பொட்டலத்தில் இருப்பதாகவும் சொன்னார். பாட்னாவை வந்தடைந்த அவர் அங்கே ஓர் ஹனுமான் ஆலயத்தின் முன்பு சென்று நின்று சோதிடம் பார்க்கவும், செல்வந்தர்களை பார்த்து புகழ்ந்து செய்யுட்களைச் சொல்லி பணம் பெறவும் முயன்றார். அதில் அவருக்கு பெரிய அளவில் பணம் கிடைக்கவில்லை. புரோகித வேலைகளைச் செய்ய முயன்றார். அவருக்கு அதில் பயிற்சி இருக்கவில்லை.

அங்கே சில பிராமணர்கள் சிறு தொகைகளை வட்டிக்குக் கொடுப்பதைக் கண்டு அவரும் அவ்வாறு பணம் கொடுக்க ஆரம்பித்தார். ஒரு வாரத்திற்குள் திருப்பித் தரவேண்டிய தொகைகள். ஆறணா, எட்டணா அளவுக்குத்தான். ஆனால் வட்டி விகிதம் மிக அதிகம். பிராமணர்களை ஏமாற்றுவது பெரும்பாவம் என பிறர் நம்பியமையால் வட்டியுடன் பணம் எங்கும் அவர் சென்று கேட்காமலேயே திரும்ப வந்தது. அவரிடம் ரகசியமாக நிறைய பணம் இருந்தமையால் விரைவிலேயே பெருந்தொகைகளை சுழற்சிக்கு விடத்தொடங்கினார்.

பாட்னா அன்று பெரும் வேகத்தில் வளர்ந்துகொண்டிருந்தது. ஆகவே அங்கே தொடங்கப்பட்ட எல்லாத் தொழில்களும் வெற்றியடைந்தன. பாட்னாவில் அன்று வட்டிக்கு பணம் பெற்றவர்கள் வணிகர்கள். அவர்கள் அந்த வட்டியைவிட அதிகமாக ஈட்டியதனால் அவர்களுக்கு திருப்பி கொடுக்க சிரமம் இருக்கவில்லை. கங்கை வழியாக சிறு படகுகளில் வந்தடைந்த பொருட்களை வாங்கி கப்பல்களுக்கு போகும் பெரிய படகுகளுக்கு விற்பது லாபகரமான தொழிலாக இருந்தது. வண்டிகளில் சிற்றூரிலிருந்து வந்து சேரும் பொருட்களை வாங்கி பலமடங்கு விலைக்கு கப்பலுக்கு பொருள் சேர்க்கும் பெரும்படகுகளுக்கு விற்பதும் நடந்தது.

விற்பவர்களுக்கு தங்கள் பொருட்களின் உண்மையான மதிப்பு தெரிந்திருக்கவில்லை. பொருட்களுடன் கிளம்பி வந்தபிறகு அதிலிருந்து திரும்பிச் செல்லவும் முடியாது. அதை விற்றே ஆகவேண்டும் என்ற கட்டாயம். ஒரு வணிகர் ஒரு முறை கூறியது போல விதைப்பையில் துளையிட்டு மரத்துடன் சேர்த்துக்கட்டப்பட்ட கரடியுடன் சண்டை போட்டு ஜெயிப்பது போன்றது அந்த வணிகம். மேய்ச்சல் விலங்குகளை வேட்டையாடி உண்ணும் விலங்குகள் போன்றவர்கள் அந்த வணிகர்கள். அந்த மாமிசப்பட்சிணிகளின் ரத்தம் குடிக்கும் ஒட்டுண்ணிகள் போன்றவர்கள் வட்டித்தொழில் செய்பவர்கள்.

மிகவிரைவிலேயே தேஷ்பாண்டே பாட்னாவின் பெரிய செல்வந்தர்களில் ஒருவராக ஆனார். நிரந்தரமாக ஒரு கடை போட்டு அங்கே அமர்ந்துகொண்டார். வசதியான பெரிய வீட்டுக்கு இடம்பெயர்ந்தார். பாட்னாவின் முக்கியமான , ஆனால் ஏழைக் பிராமணக் குடும்பத்தில் இருந்து தன்னை விட இருபத்திரண்டு வயது குறைவான அழகிய இளம்பெண்ணை மணந்துகொண்டார். பிரபாவதிக்கு அப்போது பதினெட்டு வயதுதான். தன் திருமணத்தை அவர் பெருஞ்செலவில் ஒரு திருவிழா போல நடத்தினார். அந்த மனைவியில் அவருக்கு ஆறு குழந்தைகள் பிறந்தன. இரண்டு குழந்தைகள் காய்ச்சலில் இறந்தபின் நான்கு குழந்தைகள் எஞ்சின. மூன்று மகள்களும் ஒரே மகனும்.

ஃபணீந்திரநாத் தேஷ்பாண்டே திரும்ப ஒருபோதும் வாடியா ராஜுக்கு திரும்பிச் செல்லவில்லை. அவர் அதன்பின் பாட்னா நகரைவிட்டு விலகவே இல்லை. அவர் கைவிட்டு வந்த மனைவியும் குழந்தைகளும் என்ன ஆயினர் என்று அறிந்து கொள்ளவும் முயலவில்லை. எப்போதேனும் அவர்கள் அவர் நினைவுக்கு வந்தால் “கல்லிலும் புல்லிலும் இருக்கும் ஈஸ்வரன் அவர்களுடன் இருப்பார். நான் எளிய மனிதன்” என்று சொல்லிக்கொண்டு அண்ணாந்து வானைப்பார்த்து ஒருமுறை கும்பிட்டுவிட்டு அந்த நினைவை அப்படியே ஒதுக்கினார்.

பல ஆண்டுகளுக்குப் பிறகு வாடியாராஜில் இருந்து வந்த எவரோ அவரது மனைவி உள்ளூர் வணிகர் ஒருவரின் ஆசைநாயகியாக ஆகிவிட்டதாகவும், அவர் மகன் ஓடிப்போய்விட்டதாகவும் சொன்னார். மேலும் சில ஆண்டுகளுக்குப்பின் அவருடைய மகள் கல்கத்தாவில் இருந்து வந்த ஒருவனால் பொய்யாக மணம் செய்துகொண்டு அழைத்துச்செல்லப்பட்டதாகவும், அங்கே சோனாகஞ்ச் பகுதியில் அவள் விபச்சாரியாக இருப்பதாகவும், வணிகனைக் கைவிட்டுவிட்டு அவர் மனைவியும் மகளுடன் சென்றுவிட்டதாகவும் இன்னும் சிலர் சொன்னார்கள். அவையெல்லாமே வெறும் வதந்திகள் என்று மட்டுமே அவர் எடுத்துக் கொண்டார். அதன்பின் அவர் மனைவி கல்கத்தாவில் இறந்துவிட்டதாகச் செய்தி வந்தது. அவர் தன்னுடைய மனைவிக்காக கங்கையில் பணம் செலவு செய்து ஒரு விரிவான நீர்க்கடன் சடங்கை நடத்தினார். அவள் சொர்க்கத்துக்கு சென்றுவிட்டாள் என்று புரோகிதர் சொன்னபோது மனநிறைவுடன் தலையசைத்து ”அவள் அங்கே நிறைவுடன் இருக்கட்டும்” என்றார்.

தன்னுடைய வட்டித்தொழிலுக்கு மிக அவசியமானது வைதிக பிராமணனின் தோற்றம் என்பதனால் ஃபணீந்திரநாத் மிகுந்த ஆசாரமானவராக இருந்தார். பிராமணர் அல்லாத எவரையுமே அவர் தொடுவதில்லை. தீண்டத்தகாத மனிதர்களை நோக்கி விழி தூக்குவதும் இல்லை. தீண்டத்தகாதவர்கள் ஒருபோதும் நுழைய முடியாத தெருவில் தான் அவர் தன் புதிய மாளிகையைக் கட்டிக்கொண்டார். அங்கிருந்து தீண்டத்தகாத மக்களை ஒருபோதும் பார்க்காதபடி நடந்து தன் கடைக்கு வரமுடியாது என்பதனால் ஒரு நவீன குதிரை வண்டியை வாங்கிக்கொண்டார். அதில் பட்டுத்திரைகளை அமைத்து உள்ளே அமர்ந்தபடி கடைக்கு வந்தார்.

கடையில் பட்டுத்திரைகள் மூடிய ஒரு சிற்றறைக்குள் தான் அவர் அமர்ந்திருந்தார். வெளியே இருந்த அவருடைய ஏவலர்கள் வருபவர்களை நன்கு பரிசோதித்து, அவர்களின் சாதி என்ன என்று உறுதிப்படுத்திய பிறகே உள்ளே அனுப்பினார்கள். தன் முன் அந்தணரல்லாத எவரையுமே அவர் அமரச்செய்யவில்லை. வணிகர்கள் வந்தால் மட்டும் அவர்கள் நிற்கும்போது அவரும் எழுந்து நின்றுகொண்டார். பிற சாதியினர் அவர் முன் நின்று, கைகூப்பியபடி பேசவேண்டுமென்று வகுத்திருந்தார். தனது இடது காலை ஒரு வெண்பட்டுத் தலையணைமேல் முன்னால் நீட்டி வைத்திருந்தார். வருபவர்கள் அந்தக் காலைத்தொட்டு தன்னிடம் பேச வேண்டும் என்று எதிர்பார்த்தார். அவருடைய ஏவலர்கள் அதை திரும்பத்திரும்ப அறிவுறுத்தித்தான் அவரை நோக்கி அனுப்பினார்கள். இடது கையால் அந்தணர் அல்லாதவர்களுக்கு அவர் ஆசீர்வாதம் செய்தார். ஆசீர்வாதம் செய்கையில் வணிகர்களையும் ஷத்ரியர்களையும் மட்டுமே கண்களைத் தூக்கிப்பார்த்தார். மற்றவர்களை வலது பக்கம் கண்களைத் திருப்பியபடி வாழ்த்தினார்.

காலையில் இருள் விலகும் முன்னரே எழுந்து தன் குதிரை வண்டியில் நீண்டதூரம் சென்று கங்கைக் கரையை அடைந்து நீராடி, விரிவான சந்தியாவந்தனங்களைச் செய்துவிட்டு ஆலயத்தில் வணங்கிவிட்டுத்தான் அவர் வீடு திரும்புவார். மதியம் வீட்டிலேயே பூஜைகள் செய்தபிறகுதான் உணவருந்தச் செல்வார். அந்தியில் கடை மூடிவிட்டு மீண்டும் கங்கைக்குச் சென்று சந்தியாவந்தனம் செய்வார். அவர் சந்தியாவந்தனம் செய்யுமிடம் அனைவரும் பார்க்கும் படித்துறை என்பதனால் அவருக்கான நேரமும் இடமும் வகுக்கப்பட்டு மாறமுடியாததாக மாறிவிட்டது. அவர் கங்கைப் படித்துறையில் தன்னுடைய வழிப்பாட்டுக்கென்று சிறு கோயிலைக் கட்டினார். அதில் அவரே ஒரு பூசகரை நியமித்தார். ஒவ்வொரு நாளும் அவர் வந்தபிறகு அவருக்காக அங்கே  பூசைகள் நடைபெற்றன

தன் பெயர் வங்காளிகளிடையே புழக்கமானது என ஃபணீந்திரநாத் எண்ணினார். தன்னை பிறர் வங்காளப் பிராமணன் என எண்ணிவிடக்கூடாது என்பதனால் தன் பெயருடன் தேஷ்பாண்டே என்பதையும், தான் பிகாரிப் பிராமணன் என்பதையும் அழுத்திச் சொல்லிவந்தார். வங்காளிகளில் பிராமணர்களே இல்லை என்று அவர் தன் வேலைக்காரர்களிடம் சொல்வதுண்டு. அவர்கள் மீன் தின்பவர்கள், கரியவர்கள், அல்லது அவர்களின் கண்கள் இடுங்கி இருந்தன. ‘நல்ல பிராமணன் அக்னிவர்ணன் என்று சொல்லப்பட்டிருக்கிறது’ என்று அவர் சொல்வார்.

பிராமணன் வட்டிக்கடைத் தொழில் செய்யலாமா என்ற கேள்வி அவரிடம் எழுந்துகொண்டே இருந்தது. அதற்கு அவர் தான் பேசும் அனைவரிடமும் பேச்சுவாக்கில் பதில் சொனனார். “நான்கு வேதங்களையும் ஆறு சாஸ்திரங்களையும் ஐயமறப் பயின்ற பண்டிதன் நான். என் வாழ்க்கையில் இருபத்தேழு ஆண்டுகளை அதற்காகச் செலவழித்தேன். கூடுதலாக ஜோதிடமும் பயின்றேன். ஆசுகவியாக நினைத்த நேரத்தில் என்னால் கவிதை எழுத முடியும். முக்காலமும் கணிக்க முடியும். ஆனால் ஞானத்திற்கு மதிப்பிருந்த காலம் என் தந்தையுடன் போயிற்று. இப்போது பணத்திற்குத்தான் மதிப்பு. ஆகவே என் வழி இதுவாக ஆகிவிட்டது.”

”கேட்டுக்கொள்ளுங்கள். பிராமணன் பணத்தை மறுத்து ஏழையாக இருப்பவனே ஒழிய பணம் ஈட்டத்தெரியாமல் ஏழையாக இருப்பவன் அல்ல. இங்குள்ள அரசர்கள், வணிகர்கள் அனைவரும் பிராமணனின் வழிகாட்டலின்படி பணம் ஈட்டியவர்கள்தான். இன்று அவர்கள் பிராமணனை அவமதிக்கிறார்கள் எனும்போது அந்தப் பணத்தை ஏன் பிராமணனே ஈட்டக்கூடாது?” அவர் எப்போதுமே கேட்கும் கேள்வி அது. “ஷத்ரியர்களும் வைசியர்களும் இன்று தானதர்மங்கள் செய்வதில்லை. ஆகவே பிராமணனாகிய நானே பொருளீட்டி அதைச் செய்யவேண்டியிருக்கிறது. இதுவும் பிராமண தர்மம்தான்.”

ஆனால் அவர் எவருக்கும் எதுவும் கொடுப்பதில்லை. ஆண்டுதோறும் தன் தந்தையின் திதி நாளுக்கு நூறு பேருக்குக் கங்கைக் கரையில் உணவளிப்பதையே பெரிய கொடையாக ஆண்டு முழுக்கச் சொல்லிக்கொள்வார்.அந்த செலவை ஒவ்வொருமுறை சொல்லும்போதும் கூட்டிக்கொண்டே இருப்பார். எவர் அவரிடம் கொடை கேட்டு வந்தாலும் “பிராமணன் தகுதியானவருக்கே கொடையளிக்கவேண்டும். இல்லையேல் கொடை பெறுபவரின் பாவங்களை ஊக்குவித்த பாவம் அவனுக்கு அமையும். உன் ஜாதகத்தைக் கொண்டுவா. பார்த்துவிட்டுச் சொல்கிறேன்” என்று சொல்லி தவிர்த்துவிடுவார்.

ஆட்சியாளர்களான வெள்ளையர்களால் மதிக்கப்படுபவராகவும், வெள்ளை அதிகாரிகள் நேரில் அழைத்து பேசக்கூடியவராகவும் அவர் மாறினார். கவர்னரையோ கலெக்டரையோ பார்க்க செல்லும்போது அவர் சரிகை வைத்த சட்டையும் சரிகைக்குலாயும் அணிந்துகொண்டார். தங்கப்பூணிட்ட கைத்தடியும் தங்க சங்கிலியில் பிணைக்கப்பட்ட பைக்கடிகாரமும் வைத்துக் கொண்டார். செருப்பும் இடைப்பட்டையும் அணிவதை மட்டும் தவிர்த்தார். அதற்குப் பதிலாக சந்தன மிதியடியும், பட்டுத்துணியால் கச்சையும் அணிந்துகொண்டார். குதிரை வண்டியில் கலெக்டரைப் பார்க்க செல்லும்போது அவர் பட்டுத்திரைகளை விலக்கி தன்னை அனைவரும் பார்க்க செய்தார்.

வெள்ளைத்துரைகளுக்கு முன்னால் நிற்கும்போது பணிந்து ஆங்கிலத்தில் சொல்ல வேண்டிய முகமன்கள் அனைத்தையும் முறையாகக் கற்று வைத்திருந்தார். சம்ஸ்கிருத மந்திரங்களைச் சொல்லும் அதே ஓசை நயத்துடனும் உரத்த குரலிலும் அவற்றை அவர் சொன்னார். அவர்கள் அதை விரும்பினார்கள். ஒவ்வொரு முறையும் அவர்கள் அவரை அமரச்செய்து அவருக்குத் தெரிந்த இந்துஸ்தானியில் பேசினார்கள். அவர்களின் குழறலான இந்துஸ்தானி அவருக்குப் புரியவில்லை என்றாலும் ஒவ்வொரு சொல்லையும் அவர் உதிர்க்கப்படும் தங்க நாணயங்களைப் பெற்றுக்கொள்வது போல இரண்டு கைகளையும் விரித்து வாங்கிக்கொண்டார்.

ஒவ்வொரு முறை கவர்னர் மாளிகையிலிருந்தும் கலெக்டர் அலுவலகத்திலிருந்தும் திரும்பும்போது முகம் மலர்ந்து சிரித்துக்கொண்டே இருந்தார். ஒவ்வொரு முறை பிறரிடம் பேசும்போதும் அவர் வெள்ளை அதிகாரிகளிடம் எத்தனை அணுக்கமாக அமர்ந்து பேசினார் என்றும் ,அவர்கள் அவரிடம் என்னென்ன சொன்னார் என்றும் விவரித்தார். வேண்டுமென்றே கலெக்டர் அலுவலகச் சிப்பந்திகளை அவர்களின் வண்ணமயமான குறுக்குத் தோள்பட்டையுடன் தன் கடைக்கு வரச்செய்தார். அதை பிறர் பார்க்கிறார்கள் என்று அவர் அறிந்திருந்தார். ஒரு முறை வெள்ளைக்கார சார்ஜண்ட் ஒருவனே அவர் கடைக்கு வந்து கலெக்டருக்கான ஒரு பொருளை வாங்கிச் சென்றான். அவருடைய வைதிகத் தோற்றத்தை போலவே வெள்ளையர்களிடமான அணுக்கமும் தொழிலுக்கு பெரிதும் உதவியது.

வெள்ளையர்களால் அவர் பெயரைச் சொல்ல முடியவில்லை. அவரை அவர்கள் funny Dog என்றார்கள். முதலில் கவர்னர் அதை வேடிக்கையாகச் சொல்ல அப்பெயரே அவருக்கு நிலைத்துவிட்டது. அதன் பொருள் என்ன என்று அவர் விசாரித்து அறிந்துகொண்டார். அதன்பின் அதுவே தன்னை எளிதில் அவர்கள் நினைவில்கொள்ள காரணமாக அமைவதை புரிந்துகொண்டதும் அவரே அப்பெயரைச் சொல்லி தன்னை அறிமுகம் செய்துகொள்ளலானார். தன்னை கவர்னரும் கலெக்டரும் செல்லமாக அப்படித்தான் அழைப்பார்கள் என்று அவரே அனைவரிடமும் சொன்னார். ’என் குடும்பமே இனி அந்தப் பெயரால் அழைக்கப்படும்’ என்றார்.

ஆங்கில அதிகாரிகள் அவர்கள் வெவ்வேறு வகையில் முறைகேடாக ஈட்டிய பணத்தை அவரிடம் கொடுத்து அதற்கு வட்டி பெற்றுக்கொண்டனர். அந்தப் பணத்தை அவர் வெளியே கூடுதல் வட்டிக்குக் கொடுத்து தனக்குரிய லாபத்தை எடுத்துக்கொண்டார். அது அவரை மேலும்மேலும் செல்வந்தராக்கியது. ஒவ்வொரு ஆங்கில அதிகாரிக்கும் மாதந்தோறும் பெருந்தொகை வட்டியாகக் கொடுப்பவராக மாறினார். பிரிட்டிஷ் மாளிகைகள் அனைத்திலும் அவருக்கு செல்வாக்கு உருவாகியது. அவர் அவர்களுக்குத் தேவையான சிறிய ஏவல் பணிகளையும் செய்யத்தொடங்கினார். ஒரு வெள்ளைக்காரக் காப்டனின் மனைவிக்கு உள்ளூர் மாம்பழங்களை வாங்கி அனுப்புவதில் தொடங்கி கவர்னரின் மாளிகைக்கு வேலைக்காரப் பெண்களை ஏற்பாடு செய்வது வரை அவர் செய்தார். பின்னர் சிறுசட்டவிரோத செயல்களையும் செய்யத்தொடங்கினார். மலையிலிருந்து வரும் கஞ்சாவை அதிகாரிகளின் இல்லங்களுக்கு கொண்டு சென்று கொடுத்தார். அதிகாரிகள் வெளியே தங்குமிடங்களுக்கு பெண்களை வரவழைத்து அனுப்பி வைத்தார்.

ஃபணீந்திரநாத் தேஷ்பாண்டே மறையும்போது பாட்னாவில் அவருக்கு இருபது மாளிகைகள் இருந்தன. தொலைவில் கிராமங்களில் நூறு ஏக்கருக்கு மேல் நஞ்சை வயல்கள் குத்தகைக்கு விடப்பட்டிருந்தன. வெவ்வேறு ஆங்கிலேய வங்கிகளிலாக இரண்டு லட்சம் ரூபாய்க்கு மேல் சேமித்து வைத்திருந்தார். கங்கைக்கு சந்தியாவந்தனம் செய்ய சென்றவர் படிகளில் ஏறும்போது கால் வழுக்கி விழுந்து தலையில் அடிபட்டு அங்கிருந்து மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்படும்போதே உயிரிழந்தார். அவரது நினைவுச்சடங்கு ஒன்று டவுன்ஹாலில் நடைபெற்றது. அதில் கலெக்டர் அனுப்பிய செய்தியை அவருடைய நேர்முக உதவியாளர் வாசித்தார். அதில் பிரிட்டிஷ் அரசின் விருது ஒன்றுக்கு அவர் பெயர் பரிந்துரைக்கப்படுவதாக இருந்தது என்று சொல்லப்பட்டிருந்தது.

ஃபணீந்திரநாத் தேஷ்பாண்டேயின் மகன் ஹரீந்திரநாத் தேஷ்பாண்டேக்கு தந்தை இறக்கும்போது இருபத்தேழு வயது. இளமையிலேயே படிப்பு ஓடாதவராக இருந்தார். பள்ளி இறுதி வகுப்பை பலமுறை எழுதிப்பார்த்தபின் கைவிட்டார். தந்தையுடன் கடைக்கு வந்து அமரத்தொடங்கினார். வட்டித்தொழிலிலும் அவருக்கு ஆர்வம் உருவாகவில்லை. பிராமணசாபம் என்னும் கருத்து மறைந்துகொண்டிருந்தது. ஆகவே இனிமேல் அத்தொழிலில் பிராமணர்கள் நீடிக்கமுடியாது என்று அவர் ஊகித்துக்கொண்டார். அதில் மார்வாடிகளும் ஜைனர்களும் நுழைந்தனர். உள்ளூர் ஷத்ரியர்களும் யாதவர்களும் புதிய சக்தியாக எழுந்து வந்துகொண்டிருந்தனர். பிரிட்டிஷ் அரசு விரைவிலேயே அகன்றுவிடும் என்ற எண்ணம் உறுதியாகியிருந்தது. ஆனால் ஃபணீந்திரநாத் வெள்ளையரை நம்பினார். இந்திய அரசர்கள் எப்படி வெள்ளையர் முன் வாலைக்குழைத்து காலை நக்கிக்கொண்டிருந்தனர் என அவர் கண்டிருந்தார். “நான் உலகத்தை ஆட்சி செய்யும் ஆங்கிலேயரின் செல்லப்பிள்ளை. அவர்கள் என்னை ஃபன்னி டாக் என்றுதான் அழைப்பார்கள்” என்று சாவதற்கு முன்பு வரை சொல்லிக்கொண்டிருந்தார்.

ஹரீந்திரநாத் தேஷ்பாண்டே பணம் கட்டி ஒரு சிமிண்ட் ஏஜென்ஸி எடுத்தார். சுதந்திரத்திற்குப் பின் பாட்னா மிகப்பெரிய நகரமாக வளர்ந்துகொண்டே இருந்தமையால் அது அவருக்கு லாபத்தை தரத்தொடங்கியது. ஆகவே வட்டித்தொழிலை நிறுத்திவிட்டு முழுக்கவே சிமெண்ட் வணிகத்தில் இறங்கினார். பின்னர் இரும்பு மொத்த வியாபாரத்தையும் தொடங்கினார். ஆனால் பிராமணர்கள் வணிகத்தில் குறைவான எண்ணிக்கையில்தான் இருந்தார்கள். ஆகவே பிற சாதியினரைப்போல அவரால் ஒரு குழுவாகச் செயல்பட முடியவில்லை. எனவே அவருடைய வளர்ச்சி ஓர் எல்லையில் நின்றுவிட்டது. பாட்னாவில் மிகப்பெரிய வணிகர்களும் கோடீஸ்வரர்களும் உருவானார்கள். அவர் பார்த்து கடை திறந்தவர்கள் மிகப்பெரிய அடையாளங்களாக ஆனார்கள். ஆகவே அவர் தன் அடையாளமாக பிராமணன் என்பதை இறுகப்பற்றிக் கொண்டார். “நான் பிராமணன். என்னால் அவர்கள் செல்லும் சில விஷயங்களைச் செய்ய முடியாது” என்று சொல்லி அவர் கசப்புடன் சிரிப்பதுண்டு. அவரே அதை காலப்போக்கில் நம்பி சொல்லத் தொடங்கினார்.

ஃபணீந்திரநாத் தேஷ்பாண்டே ராவ்பகதூர் பட்டத்திற்காகப் பரிந்துரைக்கப்பட்ட போது அவர் உயிர்துறக்க நேரிட்டது என்று ஹரீந்திரநாத் சொல்வார். அவருடைய மிகப்பெரிய ஓவியம் அவருடைய வீட்டிலும் கடையிலும் இருந்தது. பூஜையறையில்கூட சிறிய படம் ஒன்றை வைத்திருந்தார். “வணிகத்தை வேள்வியாகச் செய்தவர்” என்று உள்ளூர் கவிஞரான சுபாஷ் பாண்டே அவரைப்பற்றிச் சொன்ன வரியை ஹரீந்திரநாத் நம்பினார். தன் வணிகத்தில் கிடைத்த லாபத்தில் பெரும்பகுதியை ஃபணீந்திரநாத் ஏழைகளுக்கு உதவுவதற்காகவே செலவிட்டார் என்றும், அவர் மட்டும் அந்தப் பணத்தை மீண்டும் தொழிலிலேயே போட்டிருந்தால் பாட்னாவே தன் கையில் இருந்திருக்கும் என்று அவர் சொல்வதுண்டு. ஃபணீந்திரநாத் அமர்ந்திருந்த மரநாற்காலி அவருடைய வீட்டுக் கூடத்தில் போடப்பட்டு அவருடைய சரிகை மேலாடையும் தொப்பியும் அதன்மேல் போடப்பட்டிருந்தது.

உண்மையிலேயே பாட்னாவின் மக்களில் பலர் ஃபணீந்திரநாத் ஒரு பெரும் வள்ளல் என நம்பினார்கள். ‘அன்னதாதா’ என்ற அடைமொழியுடன் அவரை அழைத்தனர். கங்கைக் கரையில் அவர் கட்டிய கோயிலில் அவருடைய சிறிய பளிங்குச் சிலையை ஹரீந்திரநாத் நிறுவினார். பூசாரி அதற்கும் பூசை செய்ய ஆரம்பித்தார். மக்கள் அதையும் வணங்கி வேண்டுதல்களைச் செய்யத் தொடங்கினர். ‘ஃபணி தாதா’ என்று அவரை குறிப்பிட்டனர். குழந்தைகள் funny Dada என்றார்கள். தன் மாபெரும் கொடைத்திறனுக்காகவும், ஏழைமக்கள் மேல் கொண்ட கனிவுக்காகவும் அவர் சர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டார் என்று பரவலாக நம்பப்பட்டது.

ஃபணீந்திரநாத் பற்றிய உண்மைத்தகவல் தனக்குத் தெரியும் என நீண்டநாட்கள் அவருடைய கடையில் கணக்குப்பிள்ளையாக இருந்த லால்ஜி மக்கான் என்னும் கிழவர் சாகும் வரை சொல்லிக்கொண்டிருந்தார். பிகாரில் பெரும் பஞ்சம் உருவாகி மக்கள் கூட்டம் கூட்டமாகச் செத்துக்கொண்டிருந்த காலம் அது. ராமகிருஷ்ண அமைப்பினரும் ஆரியசமாஜிகளும் சிறு சிறு அன்னதானக் குழுக்களை அமைத்து மக்களை சாகவிடாமல் பார்த்துக்கொண்டனர். வயதான ஃபணீந்திர நாத்தை ஒருமுறை ராமகிருஷ்ண மடத்தின் அன்னதானக் குழு வந்து சந்தித்து நிதியுதவி கேட்டது. “ஒவ்வொரு உயிருக்கும் அதற்கான உணவை அளிப்பவர் பகவான். கல்லுக்குள் இருக்கும் தேரைக்கும் கனிக்குள் இருக்கும் வண்டுக்கும் அவரே உணவை கொண்டுசென்று கொடுக்கிறார். ஒருவருக்கு உணவு கிடைக்கவில்லை என்றால் அது பகவானின் ஆணை. அதில் நாம் தலையிடக்கூடாது” என்று ஃபணீந்திரநாத் சொன்னார். “மேலும் இந்தப் பணத்தை நான் தருவதனால் எனக்கு என்ன நன்மை?”

“நீங்கள் வட்டிக்கு பணம் கொடுப்பவர். உங்களை மக்கள் வெறுப்பார்கள். உங்களைப் பற்றிய கீழான எண்ணம் மக்களிடையே நீடிக்கும். நீங்கள் இறந்தபின் கஞ்சன் என்றும் கொடிய வட்டி வாங்கியவர் என்றும் நினைவுகூரப்படுவீர்கள்” என்றார் குழுத்தலைவராக இருந்த பண்டிட் பிரஜ்மோகன் பட்டாச்சாரியா.

“பண்டிட்ஜீ, வள்ளல் என்ற பெயர் எனக்கு நிலைக்கவேண்டும் இல்லையா? அதற்கு நான் அவ்வளவு பணம் செலவழிக்க வேண்டியிருக்காது” என்று ஃபணீந்திரநாத் சொன்னார்.

அவர் என்ன சொல்கிறார் என அவர்களுக்குப் புரியவில்லை. ஆனால் அவர் செய்து காட்டினார். உள்ளூரின் சிறு கவிஞர்களை அழைத்து சிறிய தொகை அளித்து தன்னை கொடைவள்ளல் என்று புகழ்ந்து கவிதைகளை எழுதி பாடச்செய்தார். அந்தக் கவிதைகளை பணம் கொடுத்து உள்ளூர் நாளிதழ்களில் வெளிவரச் செய்தார். அவரை கொடைவள்ளல் என வாழ்த்தி அவருடைய நிதி பெற்ற சில அமைப்புகள் அவருடைய பிறந்தநாளில் நகரில் சுவரொட்டிகளை ஒட்டின. அவர் பெயருடன் கொடைவள்ளல் என்னும் சொல் இயல்பாக இணைந்துகொண்டது. அதற்கு அவர் சில ஆயிரங்களை மட்டுமே செலவழிக்க நேர்ந்தது.

அவர் என்ன கொடுத்தார், எவருக்குக் கொடுத்தார் என்று எவருக்கும் தெரியவில்லை, ஆனால் அனைவரும் கொடைவள்ளல் என்றனர். பிறரிடம் நன்கொடை கேட்கும்போது அவரை சுட்டிக்காட்டி அவர் போல புகழ்பெறுவதற்காக பணம் கொடுக்கும்படிக் கோரினர். அவர் இறந்தபோது அவர் மாபெரும் கொடைவள்ளல், இரக்கமே உருவானவர் என்று சொல்லி ஊராரில் பலர் கண்ணீர்விட்டனர். இல்லத்தில் இருந்து கங்கைக்கரை மயானம் வரை அவருடைய இறுதி ஊர்வலத்தில் எளிய மக்கள் திரண்டு அழுதபடியே சென்றனர்.

(மேலும்)

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on May 18, 2025 11:33

Jeyamohan's Blog

Jeyamohan
Jeyamohan isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow Jeyamohan's blog with rss.