Jeyamohan's Blog, page 2301
August 17, 2011
இந்திய நிர்வாகிகள்
நேற்று டைம் வாரப் பத்திரிகையில் இந்தக் கட்டுரையைப் படித்தேன் http://www.time.com/time/magazine/article/0,9171,2084441,00.html . பெரிய பன்னாட்டுநிறுவனங்களின் தலைவராக அமெரிக்கர்களுக்கு அடுத்தபடியாக இந்தியர்கள்தான் அதிகமாக நியமிக்கப்படுகிறார்கள் என்பது பற்றிய செய்திக் குறிப்புடன் அது ஏன் என்று ஆராயவும் செய்கிறது. வழக்கம் போல இந்தியாவின் பன்முகத் தன்மை, கடுமையான கல்விப் போட்டி, இந்திய சிகப்பு நாடா அதிகாரத்துவம் அளிக்கும் விசேஷப் பயிற்சி போன்றவை காரணமாக சுட்டிக் காட்டப்பட்டன. கடைசியில் இந்தியர்களின் நெறிமுறைகள் எப்படி அவர்கள் வெற்றி பெறுவதற்குத் துணையாக இருக்கிறது என்பது பற்றியும் ஆராய்ந்தது வியப்பாக இருந்தது. நீங்களே மேலும் படிங்கள்..
சிவா
வாழும் கணங்கள்
ரயிலில் ஒருவர் கூடவே பயணம் செய்தார். என்னைப்பற்றி விசாரித்தார். நான் எழுத்தாளன் என்று பொதுவாகச் சொல்லிக்கொள்வதில்லை, உடனே எழுத்தாளன் என்றால் யார், அவனுக்குப் பொதுவாகத் தமிழில் என்ன வருமானம் வரும், அவன் எப்படி முதல்வகுப்பு அறையில் பயணம்செய்யக்கூடியவனாக ஆனான், எல்லாவற்றையும் நான் விளக்கியாகவேண்டியிருக்கும். 'பிஸினஸ் செய்கிறேன்' என்று மட்டும் சுருக்கமாகச் சொல்வேன். 'என்ன பிஸினஸ்?' என்று கேட்டால் 'கொடுக்கல்வாங்கல்' என்று சொல்வேன். உண்மையில் இந்த வார்த்தைக்குச் சரியான அர்த்தம் என்ன என்று எனக்கு இன்றுவரை தெரியாது. ஆனால் அதைக்கேட்டதுமே எதிர்த்தரப்பு அனேகமாக மௌனமாகிவிடும்.
ஆனால் இந்த நபர் அங்கே நிற்கவில்லை. என் முகத்தைக் கூர்ந்து பார்த்தார். 'உங்கள எங்கியோ பாத்திருக்கேனே?' என்றார். 'கேரளாவிலே இருந்தீங்களோ?' என்றார். ஒரே கணம் யோசித்து 'ஆ, உங்க படத்தை மாத்ருபூமியிலே பாத்தேன்' என்றார். என் அனுபவமென்னவென்றால் பொதுவாக அச்சிட்டபடங்களை வைத்து அதிகம்பேர் மனிதர்களை நேரில் அடையாளம் கண்டுகொள்வதில்லை.ஒரேமுறை தொலைக்காட்சியில் வந்தால் போதும் சிக்கல். நான் கூடுமானவரை தொலைக்காட்சியைத் தவிர்ப்பேன்.
'நீங்க தமிழ் எழுத்தாளர் இல்லியா சார்? ஜெயமோகன்னு பேரு..இல்லசார்? கிளாட் டு மீட் யூ' . ஆச்சரியம்தான். வாசகர் போலிருக்கிறது. 'வாசிப்பீங்களா?' என்றேன். 'எங்க சார்? அதுக்கெல்லாம் நேரமே இல்ல.நான் மார்க்கெட்டிங்லே இருக்கேன்…என்னோட வேல ராத்திரி ஒரு ஒம்பது மணிக்கு முடியும். உடனே ஒரு லார்ஜ் போட்டுட்டு அப்டியே தூங்கிடறதுதான்…நியூஸ்பேப்பர் மட்டும்தான் வாசிப்பேன்' எனக்குப் புரியவில்லை. 'எர்ணாகுளத்திலே என் ஓட்டல் லௌஞ்சிலே மாத்ருபூமி பத்திரிகை கெடந்தது. எனக்கு மலையாளம் கொஞ்சம் தெரியும். புரட்டிப்பாத்தேன். உங்க படம் இருந்தது. நாலஞ்சு வரி வாசிச்சுப் பாத்தேன்…'
சிரித்துக்கொண்டு 'என்ன எழுதியிருந்திச்சுன்னு ஞாபகமில்ல சார். படமும் பேரும் மட்டும் பதிஞ்சிட்டுது..அது என்னோட கிஃப்ட். எனக்கு மனுஷ முகமும் பேரும் மட்டும் எப்பமுமே மறக்கிறதில்லை…' நான் 'அப்படியா?' என்றேன் மையமாக. 'நான் ஆரம்பத்திலே பலவேலைகள் செஞ்சிருக்கேன். செய்யாத வேல கெடையாது. எவ்ளவு தொழில் செஞ்சிருப்பேன்னு நினைக்கிறீங்க?' நான் வேடிக்கையாக 'அம்பது?' என்றேன் 'இருக்கும்சார் ,அம்பது இருக்கும்' என்றார் ஆவலாக.
'படிப்பு வரலை சார்…எஸ்எஸ்எல்சியோட சரி. அந்தக்காலத்திலே எவன் வேலைகுடுக்கான்? திண்ணவேலியில மளிகைக்கடையிலே நின்னேன். நானே சின்னதா மளிகைக்கடைவச்சேன். என்னென்னமோ செஞ்சிருக்கேன். தியேட்டர் முன்னால பிளாஸ்டிக் செருப்பு வித்திருக்கேன். கேரளாவிலே வட்டிக்குப் பணம் விட்டிருக்கேன். முந்திரிக்கொட்டை வாங்கிக் கடையிலே போட்டிருக்கேன். ஒண்ணுமே வெளங்கல்லை. நல்லவேள நமக்குப் பெரிய குடும்பம் கெடையாது. அம்மா மட்டும்தான்… ஒருகட்டத்திலே வெக்ஸ் ஆயிட்டேன். இனிமே நமக்குத் தொழில் கதியில்லேன்னு ஒரு ஓட்டலிலே கணக்கு எளுதினேன். அங்கயும் மரியாதையா வேலைசெய்யமுடியலை சார். கணக்கு தப்புன்னு அனுப்பிட்டாரு ரெட்டியாரு.
'சரீன்னு நேரா குருவாயூர் போய்ட்டேன். என்னத்துக்கு போனேன்னா, தற்கொலைக்குத்தான். போய் ஒரு சின்ன ரூமைப்போட்டுட்டு ராத்திரி வரை படுத்தே கெடந்தேன்.ராத்திரி கெளம்பி ரோட்டிலே நடந்து போனேன். எதுத்தாப்ல ஒருத்தரைப் பார்த்தேன். தூரத்துச் சொந்தக்காரரு. அப்பாவோட மச்சினன் மொறை. பரமக்குடியிலே இருக்கிறவரு. எனக்குத் தெரிஞ்சவங்கள பாத்தாலே மனசு நெறைஞ்சு ஒரு சிரிப்பு வந்திரும்சார். 'மாமா நல்லா இருக்கேளா'ன்னு கேட்டுட்டேன் 'தம்பி ஆரு'ன்னு அவரு கேக்காரு…பாத்து முப்பத்தாறு வருசமாயிருக்கு. நான் எங்கப்பா பேரைச்சொன்னேன். அவரோட பேரையும் வீட்டையும் எல்லாத்தையும் சொன்னேன்…அடடான்னு கட்டிப்புடிச்சாரு…என் நெலைமைய சொன்னேன். நீ என் கூட வான்னு கூட்டிட்டு போனாரு'
'அவருகூட சில்லறை வேலைகள் செஞ்சுட்டு ஒரு வருஷம் இருந்தேன்… அவரு ஊரூரா போய் வத்தல் மல்லி மொளகா மொத்தமாப் புடிப்பாரு. அதைக் கேரளாவுக்கு ஏத்தி அனுப்புவாரு. நான் கணக்குப்புள்ள. அவருக்கு டூவீலர் ஆக்ஸிடெண்ட் ஆகிப் படுத்திட்டார்.எங்கிட்ட அவருக்குப்பதிலா போகச்சொன்னார். எனக்கானா அப்டி ஒரு இன்ஃபீரியாரிட்டி காம்ப்ளெஸ் சார். ஆளு கறுப்பா இருக்கேன். பேச்சும் சரியா வராது. மனுஷங்க கிட்ட பேசிக் கவுக்கிறதுக்குண்டான சாமர்த்தியமும் கெடையாது…மாட்டேன்னு சொன்னேன். கோவிச்சுகிட்டார். வேற வழியே தெரியல்லை…சரீன்னு கெளம்பிட்டேன்.
''சொல்லப்போனா ஒரு மூணுநாளு ஒருத்தரையுமே பாக்கலை. மஞ்சப்பையோட கெளம்பிப் போறது வெயிலிலே சுத்தி நாலெஞ்செடத்திலே டீயக்குடிச்சிட்டுத் திரும்பி வர்ரது. இதான்… ஒண்ணுமே ஓடலை. எங்கேயாவது ஓடிப்போய்டலாம்னு ஒரு நெனைப்பு…அதுக்கும் தைரியமில்லை…அப்டியே போய்ட்டிருக்கு சார்…அப்ப ஒருநாள் ரோட்டிலே ஒருத்தர பாத்தேன். பாத்ததுமே ஆளைத்தெரிஞ்சுகிட்டு 'என்ன மாமா நல்லாருக்கேளா'ன்னு கேட்டேன். அவருக்கு நம்மளத் தெரியல. பழைய மளிகைக்கடைக்கு வார ஆளு. நான் அவரப்பத்தி சொன்னதும் 'ஏலே மறக்காம வச்சிருக்கியே'ன்னு சொல்லி டீ குடிக்கக் கூப்பிட்டார். டீ குடிச்சுட்டிருக்கிறப்ப அவரே என்ன செய்றேன்னு கேட்டார். சொன்னேன். 'டேய் நான் மல்லி வச்சிருக்கேண்டா…நீ வெலையச்சொல்லு குடுக்கறேன்'னார்
'என்ன சொல்றது? ரொம்ப சகாயவெலைக்கு நாப்பதுமூட்ட மல்லியோட திரும்பிவந்தேன். அன்னைக்கு நில கொள்ளல்ல. துள்ளலா இருக்கு. நேரா கோயிலுக்கு போய் சாமி கும்பிட்டேன். சுத்திட்டு வர்ரப்ப ஒரு வெளிச்சம் மாதரி தெரிஞ்சுது சார். நம்ம கிட்ட ஒரு தனித்தெறம இருக்கு. நமக்கு மனுஷங்கள மறக்கிறதே கெடையாது. இந்த ரயிலிலே ஒருத்தர ஒருவாட்டி பாத்து ஹலோ சொல்லிட்டேன்னா ஆயுசுக்கும் அவரையும் அவரப்பத்தின எல்லா டீட்டெயிலையும் மனசுக்குள்ள வச்சுக்கிடுவேன்
'அது சாதாரண விஷயம் கெடையாது…நாட்டிலே பெரும்பாலும் சனங்களுக்கு மத்தமனுஷங்க முகம் ஞாபகத்திலே நிக்காது சார். அவனவன் தன்னைப்பத்தியே தான் நினைச்சுட்டிருக்கிறான் பாருங்க. நான் ஆரைப்பாத்தாலும் என்னையறியாமலேயே சிரிச்சு வணக்கம் சொல்லி மாமா சித்தப்பான்னு கூப்பிட்டு எல்லா விசயமும் கேட்டிருவேன். சின்னவயசுப் பழக்கம். அந்தத் தெறம இருக்கக்கொண்டுதானே நான் குருவாயூரிலே சாவாம தப்பினேன். அதனாலத்தானே இப்ப வியாபாரம் அமைஞ்சுது.
'அப்ப ஆரம்பிச்சேன் சார். நம்ம ஏரியா சேல்ஸுன்னு தெரிஞ்சுது. முதலு போடுறது, வாங்கி விக்கிறது, கணக்கு வச்சுகிடுறது ஒண்ணும் நமக்கு ஒத்துவராது. ஆனா மனுஷங்க கிட்ட பழக முடியும். இந்த மண்டைக்குள்ள ஒரு லெச்சம்பேருக்க முகமும் அட்ரஸும் மத்த விசயங்களும் இருக்கு… தொண்ணித்தி ஒம்பதிலே ஆடர் புடிச்சுக் குடுக்கிற வேலைய ஆரம்பிச்சேன். 'தனா சேல்ஸ் செர்வீஸஸ்'னு பேரு. எல்லாத்துக்கும் ஆர்டர் புடிச்சுக் குடுப்பேன்…நாலஞ்சு பயக இருக்கானுக. ஆனா நான்தான் மெயின்… ராத்தூக்கம் ரயிலிலேன்னு வச்சுக்கிடுங்க…ஆனா இப்பம் நாலஞ்சுகோடி தேத்திட்டேன் சார்'
ஆச்சரியமாக இருந்தது. கொஞ்சநேரம் பேசிக்கொண்டிருந்துவிட்டு கேட்டேன் 'சரியா எப்ப உங்களுக்கு இந்த நினைப்பு வந்தது? அதாவது உங்க ஒரிஜினல் திறமை இதுன்னு எப்ப தோணிச்சு' 'கோயிலிலே சார்' 'ஆமா…ஆனா கோயிலிலே எப்ப? என்ன செஞ்சுட்டிருந்தப்ப?' அவர் முகம் மலர்ந்து 'அதுகூட நல்லா ஞாபகமிருக்கு சார். சுத்தி வர்ரப்ப ஒரு செலையப் பார்த்ததும் என்னமோ அது என் மாணிக்கமாமா முகம் மாதிரின்னு ஞாபகம் வந்தது. சிரிச்சுக்கிட்டேன். உடனே இப்டித் தோணிச்சுது'
'அதுதான் ஜென் தருணம்னு சொல்றாங்க' என்றேன். 'அப்டீன்னா?' 'கடவுள் நமக்கு ஞானத்தைக் குடுக்கிறது கொஞ்சம் கொஞ்சமா இல்ல…சட்டுன்னு ஒரு நிமிஷத்திலே அப்டியே வாசலத் தெறந்திடுறார். அந்த வாசலை நாம தட்டிக்கிட்டே இருக்கலாம். சிலசமயம் ஆயுசுபூராக்கூடத் தட்டலாம். ஆனா நினைச்சிருக்காத நேரத்திலே சட்டுன்னு அது தெறந்திருது…' 'ஆமாசார்…நான் இப்பமும் மாசம் ஒண்ணாம்தேதி திருச்செந்தூரு போய்டறது' என்றார்.
அறிதல் என்று நாம் சாதாரணமாகச் சொல்கிறோம். ஆனால் தெரிந்துகொள்ளுதலுக்கும் அறிதலுக்கும் நிறைய வேறுபாடுண்டு. தெரிந்து கொள்ளுதல் நம் அன்றாட வாழ்க்கையில் சாதாரணமாக நடந்துகொண்டே இருக்கிறது. நாம் ஒன்றைத் தெரிந்துகொள்ளும்போது நம்மிடம் ஒரு தகவல் அல்லது ஒரு அனுபவம் வந்து சேர்கிறது. சிலசமயம் நமக்கு அது பயன்படுகிறது. பெரும்பாலும் பயன்படுவதில்லை. நம்மிடம் வந்துசேரும் விஷயங்களில் பெரும்பாலானவை நம்மிடமிருந்து உதிர்ந்து விடுகின்றன. நல்லவேளை, அப்படி அவை உதிர்வதனால்தான் நாம் மனச்சமநிலையுடன் இருக்கமுடிகிறது.
என்னென்ன விஷயங்கள் வந்துசேர்கின்றன! முருங்கைக்காயில் இரும்புச்சத்து இருக்கிறது, வீட்டுக்கடனைத் தனியார் வங்கியில் வாங்கினால் கூட்டுவட்டி போடுவார்கள், பெங்களூர் சென்னை ரயிலுக்கு சதாப்தி எக்ஸ்பிரஸ் என்று பெயர்….தகவல்களைத் தெரிந்துகொண்டே இருக்கிறோம். தகவல்கள் வழியாக நாம் சென்றுகொண்டே இருக்கிறோம். இல்லையேல் தகவல் நம் வழியாக சென்றுகொண்டே இருக்கிறது. பலவருடங்களாக நாம் வார இதழ்களை வாசிக்கிறோம். சென்ற இதழ் விகடனில் என்ன இருந்தது சொல்லுங்கள் பார்க்கலாம்.
நம்முடைய கல்வி என்பதே தெரிந்துகொள்வதைத்தான் நடைமுறைப்படுத்துகிறது. தகவல்களை நம்மீது இருபது வருடங்கள் வரை கொட்டிக்கொண்டே இருக்கிறது அது. இருபத்தைந்து வயதில் நாம் கல்விமுடித்து வாழ்க்கையை எதிர்கொள்ளும்போதுதான் அனேகமாக முதல் அறிதல் நிகழ்கிறது. 'நாம் எதையுமே கற்றுக்கொள்ளவில்லை'; என்ற அறிதல்!
அறிதல் என்பது வேறு. தெரிந்துகொள்ளுதல் என்பது எப்போதுமே ஒரு துண்டு அறிவைத்தான். அறிதல் என்பது ஒரு முழு அறிவை. எல்லா அறிதலும் நம்மை அறிவதுதான். நம்மைச்சுற்றி உள்ள உலகை நாம் அறிவதும்கூட நம்மை அறிந்துகொள்ளுதல்தான் இல்லையா?
அறிதலை எப்படி வகுத்துக்கொள்வது? தெரிந்துகொள்ளும் விஷயங்களில் இருந்து அதைப் பிரித்துப்பார்ப்பதன்மூலம்தான்.தெரிந்துகொள்ளும் விஷயங்களில் நமக்குப் பயனற்றவை உள்ளன. ஆனால் அறிந்துகொள்ளும் விஷயங்களில் பயனற்றவையே இல்லை.
தெரிந்துகொள்ளும்போது சலிப்பும் சோர்வும் உண்டு. நம் கல்விக்கூட வகுப்புகள் பெரும்பாலும் அப்படித்தான். ஆனால் அறிந்துகொள்ளுதல் ஒருபோதும் சோர்வோ சலிப்போ அளிப்பதில்லை. சொல்லப்போனால் மனித வாழ்க்கையிலேயே உச்சகட்ட இன்பம் என்றால் அறிதலின் இன்பம்தான். ஆகவேதான் உண்மையான குரு சீடனுக்கு அளிக்கும் ஆனந்தத்தை வேறெந்த மனிதரும் அளிப்பதில்லை என நம் மரபு சொல்கிறது.
சிலசமயம் அறிதலின் அந்த முகாந்திரம் வேதனை மிக்கதாக இருக்கும். பெரும் இழப்புகள் வழியாக பெரும் அவமதிப்புகள் வழியாக உச்சகட்ட துயரங்கள் வழியாக நம் அறிதலின் கணங்கள் நிகழக்கூடும். அப்போது அது கடினமாகவே இருக்கும். ஆனால் நாம் வாழ்நாளெல்லாம் அந்தத் தருணங்களை நினைவில் கொண்டிருப்போம். அதையே சொல்லிக்கொண்டிருப்போம். மீளமீள நினைக்க ஆசைப்படுவோம். அப்போது ஒன்று தெரியும், நாம் உள்ளூர அந்த அறிதலின் கணத்தை விரும்பவும் செய்கிறோம். உண்மையிலே நாம் விரும்பாத ஒன்றை நாம் பிறகு நினைக்கவே மாட்டோம். அப்படி அந்த எதிர்மறை விஷயங்களையும் நம்மை ரசிக்கச்செய்வது எது? அப்போது நிகழும் அந்த அறிதலில் மாயம்தான்.
தெரிந்துகொள்ளுதல் நம் நினைவை நிரப்புகிறது. அறிதல் அப்படி அல்ல. அது நம் ஆளுமையை மாற்றியமைக்கிறது. ஒன்றைத் தெரிந்துகொண்டதுமே நாம் மாறிவிடுகிறோம். அதற்கு முன்பிருந்த நாம் அல்ல அதற்குப்பின். அதற்குமுன் இருந்த உலகம் அல்ல அதற்குப்பின்.
நாம் மானசீகமாக வளர்வதே அறிதலின் மூலம்தான். நாம் ஒவ்வொரு அங்குலம் அங்குலமாக வளர்வதில்லை, ஒவ்வொரு அறிதல் அறிதலாக வளர்கிறோம். நாம் வளர்வதை எப்படி உணர்வதில்லையோ அப்படித்தான் நாம் அறிவதையும் பெரும்பாலும் உணர்வதில்லை. இருபது வயதில் உங்களுக்கு உறவுகளைப்பற்றி என்ன எண்ணம் இருந்தது , இப்போது என்ன இருக்கிறது என்று மட்டும் பாருங்கள். ஒரு பெரிய அறிதல் நிகழ்ந்திருக்கிறது. அந்த அறிதல் வழியாக நீங்கள் வளர்ந்திருக்கிறீர்கள்.
ஆனால் அந்த அறிதல் எப்போது நிகழ்ந்தது என்று உங்களால் வகுத்துக்கொள்ள முடியுமா? பலசமயம் நாம் நினைப்போம், அந்த அறிதல் படிப்படியாக, கிணற்றில் நீர் ஊறி நிறைவது போல கொஞ்சம் கொஞ்சமாக ஊறியது என்று. ஆனால் நம்மை நாமே கூர்ந்து நோக்கும் வழக்கம் நமக்கிருந்தால் , நம்முள் என்ன நிகழ்கிறதென்பதை நாம் கவனித்திருந்தால், ஒன்று தெரியும் அந்த அறிதல் ஒரு விதை மரமாவது போல நம்முள் வளர்ந்து வந்த ஒன்று என.
அந்த விதை நம்முள் விழுந்த கணம்தான் அறிதலின் கணம். அதன் மேல் நாம் நம் கற்பனையை நீராக ஊற்றுகிறோம். நம்முடைய சிந்தனைகளை உரமாகப் போடுகிறோம். நம்முடைய தர்க்கத்தால் வேலி கட்டுகிறோம். அது நம்முள் மரமாக ஆகிறது. அந்த விதை விழுந்த கணத்தை நம்மால் கொஞ்சம் கவனித்தால் கண்டுபிடிக்கமுடியும். அத்தகைய கணங்களே வாழும் கணங்கள். நாம் மிக முக்கியமாக நினைத்து மீண்டும் மீண்டும் சொல்லிக்கொண்டிருக்கும் கணங்கள். நாம் அறிதலின் பரவசத்தை அடைந்த கணங்கள்.
சிலசமயம் சில தருணங்கள் ஓர் அர்த்தமும் இல்லாமல் நம் நினைவில் கிடக்கும். ஏனென்றே தெரியாது. சும்மா ஒருமுறை சேர்மாதேவி போய் பேருந்து நிலையத்திலே நின்றுகொண்டிருக்கும்போது ஒருவர் வெள்ளரிக்காய் வேணுமா என்று கேட்ட தருணமாக இருக்கும். ஆனால் கவனியுங்கள் அங்கே நாமறியாத ஏதோ ஓர் அறிதலை நம் ஆழ்மனம் அடைந்திருக்கும். நமக்குள் உள்ள சிப்பி வாய்திறந்து ஒரு மணலை உண்டிருக்கும். அது அங்கே முத்தாக ஆகிவிட்டிருக்கிறது
அறிதல் என்பது ஒரு மாயக்கணத்தில் நிகழ்கிறது. அதன் சாத்தியங்கள் எல்லையே இல்லாதவை. சட்டென்று நம் மலர்ந்து விடுகிறோம். சட்டென்று உலகம் தெளிவாகி விடுகிறது. சட்டென்று சத்தங்கள் சங்கீதமாகிவிடுகின்றன. சட்டென்று நிறங்கள் ஓவியமாகிவிடுகின்றன
பூதப்பாண்டி கோயிலில் நின்று பின்னால் பார்த்தால் ஒரு மலை தெரியும். அது தாடகை மலை என்று சொல்வார் ஒருவர். எது கூந்தல் எது மூக்கு நுனி எது மார்பகம் எது இடுப்பு என்று சுட்டிக்காட்டுவார். சட்டென்று மல்லாந்து படுத்திருக்கும் பேருருவம் கண்ணுக்குத்தெரியும். அதன்பின் அதை நம்மால் மலை என பார்க்கமுடியாது. அது அரக்கிவடிவமாகவே தெரியும். அதுதான் அறிதலின் கணம்.
அறிதல் எனபதை வெவ்வேறு வகையாக விளக்கமுயன்றிருக்கிறார்கள் இந்திய ஞான மரபில். ஓஷோ,அறிதல் என்பது கடந்துசெல்லுதலே என்கிறார். அறிதல் என்பது எப்போதுமே ஒருகணம். அது நிகழ்ந்ததுமே நாம் அதைகடந்து வந்துவிட்டோம். அந்த அறிதலால் ஆன ஓர் உலகில் வாழ ஆரம்பித்துவிட்டோம். ஆகவே ஒன்றைகடந்துசெல்வது என்பது அதை அறிதலே என்கிறார்
தொன்மையான கருத்து. அந்தி இருளில் சுருண்டுகிடக்கும் கயிறை பாம்பு என நினைக்கிறோம். அந்த பாம்பை நாம் கடந்து செல்ல ஒரே வழிதான், அது கயிறென அறிதல். அத்வைதத்தின் முக்தி என்பதே அறிதல்தான். முழுமையான அறிதலின் மூலம் அடையும் விடுதலை.
அறிதல் நிகழும் கணத்தை அறிவும் அறிபடுபொருளும் அறிபவனும் ஒன்றாக ஆகும் கணம் என்கிறார் நாராயணகுரு. அதை அறிவிலமர்தல் என்கிறார். ஆம், அந்தக் கணத்தில் அந்த அறிவு நாமே ஆகிவிடுகிறது. நாம் அந்த அறிவே ஆகிவிடுகிறோம். நாம் அறியும் அந்த உச்ச பரவச கணத்தில் நாம் இருப்பதே நமக்குத் தெரிவதில்லை. அந்த அறிதல் மட்டுமே நமக்குத்தெரிகிறது. அதைத்தான் நாம் மெய்மறத்தல் என்று சொல்கிறோம்
ஏன் அப்படி நிகழ்கிறது? நாம் என நம்மைப்பற்றி சொல்கிறோமே அந்த சுயம் என்பது என்ன? நாம் இதுவரை அடைந்த அறிதல்களின் தொகை அல்லவா? ஆறுமாதத்தில் பாப்பா எங்கே என்று அம்மா கேட்கும்போது குதூகலமாக சொந்த குட்டித்தொப்பையில் தட்டி எம்பி எம்பி குதிக்கிறோமே அந்த முதல் அறிதல் முதல் எத்தனையோ அறிதல்களால் ஆனது நம் சுயம். நாம் ஒன்றை அறியும்போது நாம் என நாம் வகுத்திருக்கும் இந்த சுயம் உடைபடுகிறது. அந்த அறிவை உள்ளிழுத்து அந்த சுயம் இன்னொரு வடிவத்தை அடைகிறது.
நம்முடைய ஒரு வாழ்க்கையில் சாதாரணமாக அப்படி எத்தனை அறிதல்கள் நமக்கு நிகழமுடியும்? மிக சாகசத்தனமாக வாழ்பவர்களுக்குக் கூட வாழ்க்கையனுபவங்கள் என்பவை மிகமிகச் சிலவே. மற்றவர்களுக்கு என்ன பெரிய வாழ்க்கை? சின்னவயசில் எல்கெஜி யுகெஜி எனப் பள்ளிக்கூடம். கோடைவிடுமுறையில் கொஞ்சம் கிரிக்கெட். பிளஸ்டூ பரீட்சை. காலேஜ் தேர்வுகள். வேலை. ஒருபெண்ணைப்பார்த்துக் காதல் கல்யாணம்,குழந்தைகுட்டி, லோன்போட்டு ஒரு வீடு,பிள்ளைகளுக்குக் கல்யாணம் ஓய்வு,கிருஷ்ணா ராமா……அவ்வளவுதான்.
நாம் அறிதல்களை நோக்கி நம்மைத் திறந்து வைப்பதே இல்லை. நாம் நம்மைச்சுற்றி ஒரு வேலி கட்டியிருக்கிறோம். அது நம்மை ஆபத்துகளில் இருந்து காக்கிறது என்று நினைக்கிறோம். உண்மையில் அது நம்மை அறிதல்களில் இருந்து தடுக்கிறது. நாம் நிச்சயமின்மையை அஞ்சி அறிதல்களே இல்லாத வழக்கமான வாழ்க்கையை வாழ்ந்துகொண்டிருக்கிறோம்.
நம்மை ஒரு வாழ்க்கைக்குள் பல வாழ்க்கை வாழச்செய்கிறது இலக்கியம். நாம் செல்லாத இடங்களுக்கு நம்மைக் கற்பனைமூலம் செல்லச்செய்கிறது. நாம் அனுபவிக்காதவற்றை அனுபவிக்கசெய்கிறது. வாழ்க்கையில் மிக அதிசயமாக, மிகமிக அபூர்வமாக நிகழும் அறிதல்கணங்களை எளிதாக நாம் அடையச்செய்கிறது. அதனூடாக நாம் வளர்கிறோம்.
தெரிந்துகொள்வதற்கான நூல்கள் பல உள்ளன. அவற்றை நாம் பயனெழுத்து என்று சொல்கிறோம். கோழி வளர்ப்பது எப்படி ,நண்பர்க்ளை சேர்ப்பது எப்படி, லெபனானின் பொருளாதாரம், ஹோஸ்னி முபாரக்கின் எதிர்காலம் எல்லாவற்றையும் நாம் தெரிந்துகொள்ளலாம். ஆனால் சிலநூல்களே அறிதலின் கணங்களைச் சாத்தியமாக்குகின்றன.
அந்தக் கணங்களைத்தான் ஒரு நல்ல நூலில் நாம் அடையும் பேரனுபவம் என்கிரோம். அது ஒரு மெய்ம்மறந்த நிலை. தான் அழியும் நிலை. மனிதனுக்கு இந்த பூமியில் சாத்தியமானதிலேயே மிகப்பெரிய ஆனந்தம் அதுவே என்கிறார் சாக்ரடீஸ். அறிவின் ஆனந்தம் பிற எதற்குமே நிகராகாது. அதை அறிந்தவன் அதற்காக தன் வாழ்க்கையையே அர்ப்பணிக்கிறான்
எதற்கு நூல்கள் என்று கேட்பவர்கள் உண்டு. நூல்கள் தேவை என்று சொல்பவர்கள்கூட இந்த நூல் அருமையான செய்திகளைச் சொல்கிறது, நல்ல கருத்துக்களைச் சொல்கிறது என்கிறார்கள். அதைப்போல அசட்டுத்தனமான பேச்சே கிடையாது. ஒரு நல்ல நூல் அளிக்கும் அறிவனுபவத்தை அடைந்தவர் அது செய்திகளை அளிக்கிறது கருத்துக்களை அளிக்கிறது என்று ஒருபோதும் சொல்லமாட்டார்.
இன்னும் சிலர் அசட்டுத்தனமாக எல்லாத் தகவல்களும் எல்லாக் கருத்துக்களும் இணையத்திலேயே உள்ளன, புத்தகங்கள் எதற்கு என்பார்கள். இணையத்தில் நிறையப் புத்தகங்கள் உள்ளன. ஆனால் ஒட்டுமொத்தமாக இணையம் வெறும் தகவல் வெளி. அந்தத் தகவல்களை நாம் அறிதலாக ஆக்காவிட்டால், சிந்தனையாக ஆக்காவிட்டால் அவற்றால் பயனில்லை. சொல்லப்போனால் வெற்றுத்தகவல்களாக நினைவை நிரப்பி நம்மை முட்டாள்தனமான தகவல்மூட்டைகளாக ஆக்கவும்கூடும்.
நூல்களை அவை அளிக்கும் அறிதல்களுக்காகத் தேடுங்கள். அந்த அறிதல்கணங்கள் ஒவ்வொன்றும் நாம் வாழும் கணங்கள். நாம் வளரும் படிகள்.
அசோகமித்திரனின் அற்புதமான சிறுகதை ஒன்றுண்டு. 'திருப்பம்'. மல்லையா என்ற ஆந்திர கிராமத்து இளைஞன் சென்னைக்கு டிரைவிங் கற்பதற்காக வருகிறான். ஊரிலே அவன் ஆடு மேய்த்துக்கொண்டிருந்தான். அவன் அண்ணன் இங்கே டிரைவர். அவன்தான் இவனுக்குப் பணம் கட்டி டிரைவிங் கற்றுக்கொள்ள சேர்த்திருந்தான். ஆனால் மல்லையாவுக்கு எவ்வளவு சொல்லியும் கிளட்ச் பிடித்து கியர் மாற்றும் நுட்பம் பிடிகிடைக்கவில்லை. எல்லாமே சொல்லிக்கொடுத்துவிட்டார். ஆனால் ஒவ்வொருமுறையும் ஏதோ தப்பாக ஆகும். வண்டி உதறும். கிரீச் என்று ஓலமிடும். அந்த விஷயம் ஒரு தகவலாக மூளைக்குள் இருந்தது. அறிதலாக ஆகிக் கைக்கு வந்துசேரவில்லை.சொல்லிக்கொடுக்கும் மாஸ்டர் பொறுமையிழந்து வெறிபிடித்தது மாதிரி அடிக்கிறான். கொடுமை என்னவென்றால் தனக்குத் தெரியாத தெலுங்கில் தப்புத்தப்பாக வசைபாடியபடி அடிக்கிறான்
வீங்கிய கன்னங்களுடன் அன்றும் மல்லையா டிரைவிங் கற்கச் செல்கிறான். தனக்கு டிரைவிங் வராது, ஓடிவிடவேண்டியதுதான் என்று நினைத்தபடியே கிளம்புகிறான். எவ்வளவோ விளக்கியாகிவிட்டது. எவ்வளவோ சொல்லியாகிவிட்டது. என்னென்னவோ செய்தும் அவனுக்கு கியர்மாற்றி கிளட்ச் போடுவது பிடிகிடைக்கவே இல்லை. அன்றும் கார் சாலையில் செல்லும்போது கிளட்சைப்போடு என்று மாஸ்டர் கத்துகிறான். மல்லையா தப்பாகப் போட கார் எங்கோ ஓட அவனை மாஸடர் 'நீங்கள் இறங்குங்கள் கீழே இப்போது நானே' என்று தெலுங்கில் உளறிக்கொண்டு அடிக்கிறான். காருக்கும் மல்லையாவுக்கும் சம்பந்தமே இல்லாததுபோல் இருக்கிறது.
மீண்டும்மீண்டும். மல்லையாவுக்கு டிரைவிங் தனக்கு வராது என உறுதியாகிவிட்டது. அன்றோடு ஊருக்குப் போக முடிவெடுத்தும்விட்டான். மீண்டும் சாலையில் கார் செல்கிறது. மல்லையாவை மீறி கார் ஒரு திசை நோக்கிச் செல்கிறது. அவன் பீதியுடன் செயலற்று இருக்க மாஸ்டர் கத்திக்கொண்டே இருக்கிறான். கார் பிடிவாதமாக ,சடமாக, ஒரு லாந்தர் கம்பம் நோக்கியே செல்கிறது.ஒரு போலீஸ்காரன் கையைத் தூக்குவதை மல்லையா கண்டான். மல்லையா வெறி பிடித்தது போல கன்னாபின்னாவென்று கிளட்சைத் திருப்ப அப்போது சட்டென்று அதன் நுட்பம் அவனுக்குத் தெரிந்துவிட்டது. எப்படி? சொல்லமுடியாது. ஆனால் அவன் கைக்கு அது தெரிந்துவிட்டது. மீண்டும் பலமுறை போடுகிறான். ஒவ்வொருமுறையும் சரியாக விழுகிறது. அவ்வளவு சின்ன விஷயம் அது என அவனுக்குத் தெரிகிறது. ஆச்சரியமாக இருக்கிறது. உற்சாகமாக இருக்கிறது.
அவ்வளவுதான். அவன் டிரைவர் ஆகிவிட்டான். ஒரு பரவசக் கணத்தைத் தொட்டுவிட்டான். அந்த வாசலைத் தாண்டிவிட்டான். அதற்கு முன் அவன் டிரைவர் அல்ல. அதன்பின் அவன் டிரைவர். இதுவே அறிதலின் கணம். ஜென் கணம். அற்புதமாக அதைத் தன் சிறுகதையில் தொட்டுக்காட்டியிருக்கிறார் அசோகமித்திரன். தமிழில் எழுதப்பட்ட மகத்தான சிறுகதைகளில் ஒன்று அது.
ஜென் பௌத்தம் அத்தகைய மாயக்கணங்களைப்பற்றியே பேசுகிறது. வானத்தில் ஒரு பறவை பறக்கிறது. 'என்ன பார்க்கிறாய்?' என்கிறார் குரு. 'வானில் பறக்கும் ஒரு பறவை' என்று சீடன் சொல்கிறான். பறவை பறந்து போய்விட்டது. 'இப்போது என்ன பார்க்கிறாய்?' 'பறவை பறந்துசென்றுவிட்டது' என்றான் சீடன். குரு தன் கைத்தடியால் அவன் மண்டையில் ஓர் அடிபோடுகிறார். சீடனுக்குச் சட்டென்று மொத்தமும் புரிந்து விடுகிறது. பறவையும் அவனும் காலமும் தூரமும் எல்லாம் கலந்த அந்த பிரம்மாண்டமான ஆடல். ஜென் குருக்கள் அப்படி ஓர் அதிர்ச்சி மூலம் சீடனின் பார்வையை விரியச்செய்வதைக் காணலாம்.
நல்ல இலக்கியம் அத்தகைய அடிகளை நமக்குப் போட்டபடியே இருக்கும். நாம் பல நூல்களை வாசிக்கிறோம். ஆனால் மிக அபூர்வமாக நாம் ஒரு எழுத்தாளனை மிக அந்தரங்கமாக நேருக்கு நேராக மிக அந்தரங்கமாகச் சந்திக்கிறோம். அது ஒரு மகத்தான கணம். நான் சின்னப்பையனாக இருக்கும்போது என் அறைக்குள் வந்துவிட்ட ஒரு பூனையை அடிக்கத் துரத்தினேன். பூனை பலபக்கங்களுக்குத் தாவியது . ஒரு சுவர்முடுக்கில் சரியாக மாட்டிக்கொண்டது. நான் அதை நோக்கிச் சென்றபோது அது என் கண்களைச் சந்தித்தது. உடல்முடிகள் எல்லாம் சிலிர்க்க மிக மெல்ல ர்ர்ர் என்றது. அந்தக்கணம் நான் அதையும் அது என்னையும் அறிந்தோம். என் உடம்பும் சிலிர்த்தது. நான் விலகிக்கொண்டேன். அது மிக நிதானமாக, எந்த அச்சமும் இல்லாமல் மிக நிதானமாக நடந்து வெளியே சென்றது. இரு மிருகங்கள் ஒன்றை ஒன்று கண்டுகொண்ட தருணம் அது.
நாம் ஒரு பெரிய எழுத்தாளனை முதலில் அந்தரங்கமாகச் சந்திக்கும் தருணமும் அத்தகையதே. புதுமைப்பித்தனின் மகாமசானம் என்ற கதையை முதன்முதலில் வாசித்த தருணத்தை சுந்தர ராமசாமி எழுதியிருக்கிறா. உடல்ரீதியாகவே ஓர் கிளர்ச்சி, உயிர் போவது போல ஓர் வலிப்பு, அவருக்கு ஏற்பட்டது என. அதன்பின் அவர் பழைய சுந்தர ராமசாமி அல்ல. அதுதான் வாசிப்பின் ஜென் கணம்.
ஒரு வாசகனாக நான் தல்ஸ்தோயை, தஸ்தயேவ்ஸ்கியை, ஹெர்மன் ஹெஸ்ஸை, பஷீரை, அசோகமித்திரனை அந்தரங்கமாகச் சந்தித்த தருணங்கள் பல. இரு மனிதர்கள் மிகமிக ஆழத்தில் ஒருவரை ஒருவர் சந்தித்து 'சிருஷ்டியின் ஆதிகாலம் முதல் நாம் அறிவோம்' எனப் பரஸ்பரம் அங்கீகரிக்கும் தருணங்கள் அவை.
இங்கே கூடிக்கிடக்கும் நூல்களில் நாம் தெரிந்துகொள்ளவேண்டியவை அடங்கிய நூல்கள் பல்லாயிரம். அவை இந்தத் தகவல்நூற்றாண்டின் சிருஷ்டிகள். நாம் அறிந்து அதுவாக வேண்டிய மாயக்கணங்கள் கொண்ட நூல்களும் பல இங்குள்ளன. நீங்கள் யார் என்பதே அந்த நூல் எது என்பதைத் தீர்மானிக்கிறது. அதை நோக்கிச் செல்லுங்கள். வேட்டைநாய் இறைச்சியைக் கண்டுகொள்வது போல, முமுட்சு ஞானத்தைக் கண்டுகொள்கிறான். நீங்களும் கண்டுகொள்வீர்கள்.
அவ்வாறே நிகழ்வதாக
வணக்கம்
[17-08-2011 அன்று கோவை புத்தகக் கண்காட்சி அரங்கில் ஆறிய உரை]
August 16, 2011
அசோகமித்திரன் பேட்டி
அன்புள்ள ஜெ
அசோகமித்திரன் உங்களைப் பற்றிச் சொன்னதை வாசிக்க அந்த இணைப்பைச் சுட்டினேன். அது வேலை செய்யவில்லை. அவரது பேட்டி அங்கே இல்லை. அவர் உங்களைப் பற்றி சொன்னதை அறிய ஆவலாக இருக்கிறேன்
சரவணன்
அன்புள்ள சரவணன்,
அச்சு இதழை அனைவரும் வாங்கவேண்டும் என்ற நோக்கமாக இருக்கலாம். அவரது முழுப்பேட்டி அச்சிதழில்தான். என்னைப் பற்றி சொன்னவை என் நண்பரால் எனக்கு அனுப்பப்பட்டிருந்ததை இணைக்கிறேன்
தற்கால தமிழ்ப் படைப்புலகத்தில் உங்களைக் கவர்ந்த தமிழ் எழுத்தாளராக யாரைக் குறிப்பிடுவீர்கள்?
"ஜெயமோகன். இந்தத் தலைமுறையில் என்னைக் கவர்ந்த தமிழ் எழுத்தாளர் இவர்தான். சில விஷயங்களில் இவரது ஆழமும் படிப்பறிவும் வேறு யாருக்கும் இல்லை. இவருக்கு முன்னால் ஆய்வு என்கிற விஷயத்தில் இவரைப் போன்ற தேர்ச்சியை கொண்டிருந்தவர் க.நா.சுப்பிரமணியன்தான். இதுதவிர ஜெயமோகன் படைப்புகளில் சில இடங்கள் மிகவும் அபாரமாக இருக்கின்றன. அவரது குறுநாவல்கள் தொகுப்பு ஒன்று படித்தேன். அவ்வளவு அருமையாக இருந்தது. இந்தத் தலைமுறையில் சிறந்த எழுத்தாளர் என்று சொல்லக் கூடிய எல்லாத் தகுதியும் ஜெயமோகனிடம் இருக்கிறது."
அண்ணா ஹசாரே மீண்டும்
அண்ணாஹசாரே அவர்கள் நடத்திய உண்ணா விரதப் போராட்டத்தில் டெல்லி அரசு அடக்குமுறையைக் கையாள்வதும், சில நாட்களுக்கு முன் பிரதமர் இவ்விசயத்தில் பொறுப்பில்லாமல் பதில் அளித்ததும் பார்க்கும் போது ஹசாரே குழுவினரின் வேண்டுகோளை முற்றிலும் நிராகரிக்கும் எண்ணம் கொண்டுள்ளதாகத் தெரிகிறது,
இருந்தாலும் தடையை மீறி உண்ணாவிரதப்போராட்டம் நடத்த இருக்கும் ஹசாரே அவர்களைக் கைது செய்து 7 நாட்கள் காவலில் வைப்பதாக அறிவித்த போலீஸ் நாடு முழுவதும் எழுந்த எதிர்ப்பால் அவர் இன்று விடுதலை செய்யபடுவதாகத் தெரிகிறது, கூடிய விரைவில் ஹசாரே குழுவினரை அரசு அழைத்துப் பேசலாம், அகிம்சைப் போராட்டத்தின் பலம் என்ன என்பதை இப்போது புரிகிறது, காந்தியின் அகிம்சைப்போராட்டத்தின் மீது இப்போது உள்ள இளைய தலைமுறைக்கு நம்பிக்கை ஏற்படுத்துவதாக இருக்கிறது,
"சத்யாக்கிரகப்போராட்டம் என்பது ஒரு எதிர்ப்புக்கருத்தை மக்களிடம் பரவலாகக் கொண்டு செல்லவும் மக்களிடையே அந்தக்கருத்து செல்வாக்குப் பெறும்போது அதை ஒரு முனையில் குவிக்கவும் உதவக்கூடிய ஒரு போராட்ட வழிமுறை. அவ்வாறு குவிக்கப்படும் வெகுஜனக்கருத்து என்பது ஒரு பொருண்மையான அதிகார சக்தி. அது எந்த அரசதிகாரத்தையும் எதிர்க்கும் வல்லமை கொண்டது"
ஜெவின் இந்த வரிகள் கண்முன் நடப்பது தெரிகிறது,
கார்த்திகேயன் [குழுமத்தில்]
அன்புள்ள கார்த்திகேயன்,
காந்தியின் முதல் எதிரி பிரிட்டிஷ் அரசு அல்ல, இந்தியர்களிடம் இருந்த அச்சம்தான். அவர் அந்த அச்சத்தை எதிர்த்தே இருபதாண்டுக்காலம் போராடினார், அதன்பின்னரே அவரால் பிரிட்டிஷ் அரசை எதிர்க்க முடிந்தது.
அண்ணாவின் முதல் எதிரி இந்திய அரசு அல்ல. நம்மில் உள்ள அவநம்பிக்கைதான். அண்ணா அவரது போராட்டத்தை ஆரம்பித்தபோது, நம் அறிவுஜீவிகள் உருவாக்கிய அவநம்பிக்கைப் பிரச்சாரத்தைக் கவனியுங்கள். நம் சிற்றிதழ்களில் நம் சில்லறைஅறிவுஜீவிகள் எழுதிய தலையங்கங்களை வாசியுங்கள். எவ்வளவு அவநம்பிக்கை. அதிலிருந்து எவ்வளவு இளக்காரம், எவ்வளவு நக்கல்!
அந்த அவநம்பிக்கையின் ஊற்றுமுகம் எது? நம் சிற்றிதழ்களின் தரம் என்ன? கடந்த ஆட்சியில் நூலக ஆணைக்குழுவைக் கையில் வைத்திருந்தார் என்பதற்காகவே தமிழச்சி என்ற பெண்மணியைக் கவிஞர் எனக் கற்பிதம் செய்து அட்டையில்போட்டு மகிழ்ந்த சிற்றிதழ் ஒன்று அண்ணா ஹசாரேயை நையாண்டிசெய்து கட்டுரை வெளியிட்டது. கனிமொழி வழிபாட்டில் மூழ்கியிருந்த சிற்றிதழ்கள் அண்ணாவை நடுத்தர வர்க்கத்தின் போலிநாயகன் என ஏளனம்செய்தன.
எந்த சமரசத்துக்கும் துணிந்த சுயநலவாதிகளான க.திருநாவுக்கரசு, எஸ்.வி.ராஜதுரை, அ.மார்க்ஸ் போன்ற அரசியலெழுத்தர்கள் சிற்றிதழ்களில் கட்டுரை எழுதி தங்களை அனல் கக்கும் புரட்சியாளர்களாகக் காட்டிக்கொண்டார்கள். இவர்களுடைய அன்றாட அயோக்கியத்தனங்கள் , சரிவுகள் இவர்களுக்குத் தெரியும். ஆகவே இவர்களால் ஒரு நல்ல விஷயத்தை உண்மையிலேயே நம்ப முடியவில்லை என்பதே உண்மை.
அப்படித்தான் இருக்கிறார்கள் இந்திய இதழாளர்கள். அரசியல் தரகர்களாக, அரசியல் கையாட்களாக, வெளிநாட்டு நிதிக்கு ஏற்பக் கருத்துக்களை உருவாக்கி முன்வைப்பவர்களாக இருப்பவர்களே நாம் இதழாளர்களில் மிகப்பெரும்பாலானவர்கள். இவர்களே நம் சிந்தனையை இன்று தீர்மானிப்பவர்களாக நடந்துகொள்கிறார்கள்.
நேற்று தினமணி சிறப்பிதழில் ஒரு இதழாளர் எழுதியிருந்ததை வாசித்து மொத்த இதழையே கிழித்து குப்பைக்கூடையில் போட்டேன். அண்ணா யோக்கியமானவரல்ல என்கிறார். காரணம் அந்த நிருபரும் அண்ணா ஹசாரேயும் ஜீ தொலைக்காட்சி நிறுவனத்துக்குச் சென்றார்களாம். அண்ணாவை அவர்கள் உடனே உள்ளே அழைத்துச்சென்றார்களாம், இந்த மாமேதை பாதுகாப்புமுறைகளைக் கடைப்பிடித்துக் காத்திருக்க நேரிட்டதாம். இவர் கேட்ட 'ஆழமான' தத்துவக் கேள்விகளை அண்ணா அறிவுபூர்வமாக எதிர்கொள்ளவில்லையாம். இருந்தாலும் அண்ணா பரவாயில்லை என்கிறார் கடைசியில்.
இந்த அசட்டு அற்பர்களால் நிறைந்திருக்கிறது நம் ஊடகம். அண்ணாவின் மிகப்பெரிய பலவீனம் என்பது அவர் வேறுவழியில்லாமல் இதைச் சார்ந்திருக்கிறார் என்பது. காந்தியைப்போலத் தனக்கென ஒரு மக்கள் தொடர்பை அண்ணாவால் உருவாக்கிக்கொள்ள முடியவில்லை. அதற்கான சாத்தியம் இன்று உள்ளதா என்றும் தெரியவில்லை.
இந்த மூடுவலையை மீறியே அண்ணா போன்ற சிலர் எழுந்து வருகிறார்கள். அண்ணா அவரது தகுதியை நிரூபித்தவர். பல ஊழல் எதிர்ப்புப் போராட்டங்களை வெற்றிகரமாக ந்டத்தியவர். தகவலறியும்சட்டம் போன்றவற்றின் வழியாக வெற்றிகளைக் காட்டியவர். ஆயினும் அவர் சந்தித்த ஏளனங்கள் எவ்வளவு!.
நம் அயோக்கிய அறிவுஜீவிகள் உருவாக்கும் பிம்பங்களில் இருந்து, நம் சொந்த அவநம்பிக்கையில் இருந்து நாம் வெளிவர வேண்டியிருக்கிரது. நம்மாலும் சில செய்யமுடியும் என்ற நம்பிக்கை, ஜனநாயகம் ஆற்றலுள்ளதே என்ற நம்பிக்கை நம்மில் நிகழ்வேண்டியிருக்கிறது. அண்ணா மலையளவு பிரயத்தனப்பட்டு அந்நம்பிக்கையை மயிரிழையளவு உருவாக்கியிருக்கிறார். அது எவ்வளவுதூரம் நீடிக்கும் என்பதைப்பொறுத்தே வெற்றி இருக்கிறது
அந்நம்பிக்கையைக் குலைக்கவே காங்கிரஸ் முயல்கிறது. அண்ணாவும் பிற அரசியல்வாதிகளைப் போன்றவரே என்று காட்ட மோசடிகளில் ஈடுபடுகிறது. அவர் மேல் ஊழல், மதவாத முத்திரைகளைப் போடுகிறது. இடதுசாரிகள் அவரைச் சிறுமைப்படுத்த முயல்கிறார்கள், அவர்கள் காந்தியையே சிறுமைப்படுத்திய பாரம்பரியம் கொண்டவர்கள். பத்துரூபாய் சில்லறையை நீட்டினால் ஓடிப்போய்க் கவ்வும் நம் இதழாளர்களும் எதிர்காலத்தில் அந்தப்பிரச்சாரத்துக்கு விலைபோவார்கள் என்றே நான் நினைக்கிறேன். அதைமீறி இந்நாட்டு மக்களின் மனசாட்சி சிந்திக்கத் துணியவேண்டும். இளைஞர்கள் அவர்களின் அலட்சியம், அவநம்பிக்கையை மீறி இதயத்தால் இதைப் பார்க்கமுடியவேண்டும்.
காந்தியப்போராட்டம் என்பது எதிரிக்கு எதிரானது அல்ல. நம்முடைய உள்ளே உள்ள பலவீனத்துக்கு எதிரானது. உடனடிப்புரட்சி அல்ல. மிக மெல்லப் படிப்படியாக நிகழும் ஒரு மாற்றம் அது. இந்த லோக்பால் மசோதாவுக்கான போராட்டம்மூலம் நிகழ்ந்துகொண்டிருப்பது என்னவென்றால் மெல்லமெல்ல இந்திய சமூகம் ஊழலுக்கு எதிராகப் போராடும் மனநிலையை நோக்கி நகர்த்தப்பட்டிருக்கிறது என்பதே. அந்நகர்வு இன்னும் வெகுதூரம் செல்லவேண்டும். லோக்பால் மசோதா அண்ணா கோரியபடியே அப்படியே நிறைவேறினால்கூட காந்திய வழிமுறைகளின்படி உடனே அடுத்த போராட்டம் அடுத்த நடைமுறைக்கோரிக்கையுடன் ஆரம்பிக்கப்படவேண்டும். தொடர்ச்சியாக இலக்கை நோக்கிப் பிடிவாதமாகச் சென்றபடியே இருக்கவேண்டும்.
அது நடக்கும் என நம்புவோம். காந்திய வழி வெற்றிகரமானதா என்பதை நாம் விவாதிக்கலாம். ஆனால் அதைவிட்டால் வேறு வழியே இல்லை என்பதில் மட்டும் விவாதிப்பதற்கே ஏதுமில்லை
ஜெ
ஐரோம் ஷர்மிளாவும் அண்ணா ஹசாரேவும்-1
ஐரோம் ஷர்மிளாவும் அண்ணா ஹசாரேவும்-2
அண்ணா ஹசாரே-இடதுசாரிசந்தேகங்கள்…
கோவையில் இன்று…
இன்று [17-08-2011] மாலை ஆறு மணிக்கு கோவை புத்தகக் கண்காட்சியில் உரையாற்றுகிறேன். காந்திபுரத்தில் வ.உ.சி பூங்கா வாசல் அருகே கைத்தறிக் கண்காட்சி அரங்கு.
புத்தகக் கண்காட்சி 12 ஆம் தேதி முதல் நிகழ்கிறது. தினமும் மாலையில் கூட்டங்கள். காலை ஒரு நண்பர் கூப்பிட்டு நேற்றைய கூட்டத்தில் ஏழுபேர் கூட்டத்தைக் கேட்டதாக சொன்னார். எனக்கு பொதுவாக அந்தமாதிரி ஒழுகும் கூட்டத்தில் பேசி பழக்கமில்லை. அதோடு காலி நாற்காலிகள் என்றால் இன்னும் கைகால் உதறும், அவற்றில் காலஞ்சென்ற மூதாதையர் அமர்ந்திருப்பதுபோல ஒரு பிரமை.
ஆகவே நான் பேசுவதை வழக்கமாகக் கேட்கும் நண்பர்களை கோவைக்கு வரச்சொல்லியிருக்கிறேன். கட்டுச்சோற்றுடன் விருந்துக்குப்போன கதைதான்
சிங்காரவேலர் – ஒருகடிதம் ,விளக்கம்.
ஜெயமோகன்,
எவனோ ஒருவன் என்றைக்கோ பிராமனனை வெறுத்தான் என்றால் அவன் ஒரு பிராமண அறிஞனை வெறுத்ததுக்கெல்லாம் அதற்கும் பிராமணனே காரணம் என்பதைப்போல எழுதுகிற எழுதுக்குமுறை எவ்வளவு கழிசடைத்தனமானது. மேலும் நீங்கள் எழுதியிருப்பதெல்லாமே தவறு . அடிப்படைத்தகவல்கள்கூட தவறு. இதையெல்லாம் தெரிந்துதான் நீங்கள் எழுதியிருக்க வேண்டும். கோசாம்பி அயோத்திதாசரை சந்தித்தெல்லாம் 1900த்திலே. அதேபோல சிங்காரவேலு என்பவர் முதலியாரரே கிடையாது. அவர் மீனவர். அரசாங்கமே அப்படி சொல்லி அவருக்கு மாளிகை கட்டியிருக்கிறது. முதலில் நீங்கள் சொன்ன விக்கிபீடியா கட்டுரையையே வாசிக்கவும். உலகப்போர் முடிந்த பிறகு சிங்காரவேலு அயோத்திதாசரை சந்தித்தார் , உலகப்போரிலே பிராமணர்கள் பிராமணரல்லாதவர்களை சுரண்டியதனால்தான் சிஙாரவேலருக்கு பிராமண வெறுப்பு என்றெல்லாம் உளறி வைத்திருக்கிறீர்கள். பிராமணர்கள்தான் எல்லாத்துக்கும் காரணம் என்று சொல்வதற்கு எவ்வளவு உளறல்கள் தேவையா உங்களுக்கு?
ரமணன் சென்னை
அன்புள்ள ரமணன்,
கடிதத்தை சுருக்கியிருக்கிறேன். மையக்கருத்துக்கள் எல்லாம் இருக்கும்படியாக.
என்னிடம் ஐந்து வெவ்வேறு நூல்கள் உள்ளன. நான்கில் மூன்றில் சிங்காரவேலரின் இயற்பெயர் மயிலாப்பூர்.சிங்காரவேலு செட்டியார் என்றும் ஒன்றில் மயிலை. சிங்காரவேலு முதலி என்றும் உள்ளது. அதில் ஒன்று இந்திய கம்யூனிஸ்டுக் கட்சியின் அதிகாரபூர்வ வரலாறு
நான் அறிந்தவரை அவரது இயர்பெயர் ம.சிங்காரவேலு செட்டியார் என்றே ஆவணங்கள் சொல்கின்றன. பெரும்செல்வந்த குடும்பத்தைச்சேர்ந்தவர்.சட்டம் பயின்றவர். அக்காலகட்டத்தில் பிள்ளை,செட்டி, முதலி பட்டங்கள் மாறி மாறி சொல்லப்படுவது வழக்கமே என்பதை ஓரளவு வாசிக்கும் பழக்கம் உடையவர் அறியலாம். ஆகவே என் கட்டுரையில் ஜடாயு சொன்னதை ஒட்டி நானும் முதலியார் என்று சொன்னேன், அது ஒரு நினைவுப்பிழை அல்லது புரிதல்பிழை.
அவர் மீனவசமூகத்தைச்ச் சேர்தவர் என சமீப காலமாகச் சொல்லப்படுவதை நான் இணையச்செய்திகளில் வாசித்தேன். அது எனக்கு இன்னும் குழப்பமாகவே இருக்கிறது. செட்டி, முதலி, பிள்ளை போன்ற அடைமொழிகள் குடும்ப பட்டங்களாக தென்மாவட்டங்களின் மீனவ சமூகத்திலும் உண்டு. ஒருவேளை இது அந்த வகையான பெயரா என தெரியவில்லை. தென்மாவட்டங்களில் இவ்வாறு பட்டம் கொண்ட மீனவக்குடும்பங்கள் பட்டக்காரர்கள் என்று அழைக்கப்பட்டனர். இவர்கள் மீனவத்தொழில் செய்பவர்கள் அல்ல. வரிவசூல் உரிமை கொண்டவர்கள், பெருவணிகர்கள், நிலக்கிழார்கள். மீனவச்சாதிக்குள் ஆதிக்க சாதி என்றே இவர்களைச் சொல்லலாம். பிற மீனவர்களுடன் மண உறவு வைத்துக்கொள்பவர்கள் அல்ல. தென்னகத்தில் மதம் மாறியபின்னரும் இந்த குலமேன்மையை தக்கவைத்துக்கொண்டார்கள். இவர்களின் சமூக இடமும் பிராமணரல்லாத இரண்டாம்நிலை ஆதிக்கசாதிக்குரியதே.
சிங்காரவேலரின் பிராமணவெறுப்பு என்பது ஒரு தனிப்பட்ட உளச்சிக்கல் அல்ல, அக்காலகட்டத்து சமூகச்சூழலால் உருவாக்கப்பட்டது என்று பார்ப்பதே வரலாற்று நோக்கு என்பதே என் தரப்பு. என் கட்டுரையில் மிகத்தெளிவாகவே அதைச் சொல்லியிருக்கிறேன். பிரிட்டிஷ் அரசு உருவான காலகட்டத்தில் ஒரேசமயம் பிராமணர்களின் எழுச்சியும் நிலவுடைமைச்சாதிகளின் சரிவும் நிகழ்ந்தது. பிராமணர்கள் ஒரு வடக்கத்தியஅடையாளம் தேடினர். பிறர்மேல் ஆதிக்க உணர்ச்சியையும் காட்டினர். விளைவாக பிராமண எதிர்ப்புணர்வு உருவானது. அது உருவான தொடக்க காலகட்டத்தைச் சேர்ந்தவர் சிங்காரவேலர்
அதையே 'இந்த வெறுப்புக்கள் முனைதிரண்டுவந்த காலகட்டத்தில் வாழ்ந்தவர் சிங்காரவேலுமுதலியார். அவரது தனிப்பட்ட காழ்ப்பாகவோ அல்லது அவரது ஆளுமையின் இருண்ட பக்கமாகவோ நான் அவரது பிராமண வெறுப்பைக் காணவில்லை. அதற்கான சமூகக் காரணங்கள் அன்று இருந்தன' என்று திட்டவட்டமாக சொல்கிறேன்.
அவருக்கும் திராவிட இயக்கத்துக்கும் என்ன உறவு என்ற ஜடாயுவின் வினாவுக்கு விடையாக அந்த பிராமண எதிர்ப்புணர்ச்சி மெல்ல சைவஎழுச்சியாகவும் பின் தமிழ் அடையாள மீட்பியக்கமாகவும் கடைசியாக திராவிட இயக்கமாகவும் உருவானது என்று சொல்கிறேன். இரு உலகப்போர்களின் வரிவசூல் நெருக்கடிகள் வழியாக பிராமண -பிராமணரல்லாதார் பிளவு துல்லியப்பட்டு திராவிட இயக்கமாக பரிணாமம் கொண்டது.
இதெல்லாம் ஒன்றும் நான் ஆராய்ந்து சொல்லும் ரகசிய தகவல்களும் அல்ல. சாதாரணமான வரலாற்றுச்சித்திரம்தான். சிங்காரவேலரை இந்த விரிந்த பின்னணியில் வைத்துப்பார்க்கலாமென்பதே என் சித்திரம்.
இதைவிடவும் தெளிவாக எப்படி எழுதுவதென்று எனக்கு தெரியவில்லை.
ஜெ
உங்கள் கதைகள்-கடிதம்
ஜெ,
தங்களது இணய தளத்தில் வட கிழக்குப் பயணம் பற்றிய கட்டுரைகளைப் படிக்கும் வாய்ப்பு கிடைத்தது. ஐம்பது வயதுகளைத் தாண்டி, நாயர் புலி வாலைப் பிடித்த கதையாக, வர்த்தக உலகின் ஓட்டத்தில் இருந்து விடுபட முடியாமல் தவிக்கும் எனக்கு, உங்களைப் பார்க்கும் போது பொறாமையாக இருக்கிறது. மனதுக்கு இனிய நண்பர்களுடன், வட கிழக்கின் இயற்கைச் சூழலில் சுற்றி வருவது ஒரு பெரிய பாக்கியம்.
பத்து ஆண்டுகளுக்கு முன் உங்களது எழுத்துக்களைப் படிக்க முயன்று தோல்வி அடைந்திருக்கிறேன். தி.ஜானகிராமன், சுந்தர ராம சாமி, ஜெயகாந்தன்,இந்திரா பார்த்த சாரதி, ஆதவன் எழுத்துக்களைப் படித்து ரசிக்க முடிந்த எனக்கு, உங்களது எழுத்துக்கள் சவாலாகவே இருந்தது.
தற்செயலாக திரு பி.ஏ.கிருஷ்ணன் அவர்களைத் தில்லியில் சந்தித்து உரையாடும் சந்தர்ப்பம் வாய்த்தது. அவருடைய 'புலி நகக் கொன்றை' எனக்கு மிகவும் பிடித்தமான ஒன்று. எனது சொந்த ஊர் திருநெல்வேலி என்பதும், அவருடைய கதாநாயகன் கண்ணன்,ஏறத்தாழ எனது சம காலத்தவன் என்பதும், அவருடைய எழுத்து நடையும் என்னைக் கவர்ந்தது.
அவர் கேட்ட கேள்வி – உமக்குப் பிடித்தமான எழுத்தாளர்கள் யார்?
என்னுடைய பதில் – திஜா, சுரா, இபா, ஆதவன், இராமுருகன், அ முத்துலிங்கம்.
ஜெயமோகன் எழுத்துக்களைப் படிக்க வில்லையா?
படிக்க முடியவில்லை – இது எனது பதில்.
முயற்சி செய்யுங்கள் – இது அவரது அறிவுரை.
தங்களுடைய காடு புத்தகம் வாங்கினேன். புத்தகத்தைப் படித்து முடித்து விட்டேன். ஆனால் எழுத்தில் என்னால் முங்க முடியவில்லை. வெகு நாட்களுக்குப் பின் தங்களுடைய 'சோற்றுக் கணக்கு' கதையை இணைய தளத்தில் படிக்க நேரிட்டது. அன்று முழுவதும் யாருடனும் பேச முடிய வில்லை. அழுகை அழுகையாக வந்தது. இருபது ஆண்டுகளுக்கு முன், ஒரு திசம்பர் மாதக் குளிரில், மகாநதி இரண்டாம் காட்சியைக் கோவையில் ஒரு அரங்கில் பார்த்து விட்டு, மனது கனமாக விடுதியில் தூங்க முடியாமல் தவித்த நாள் நினைவுக்கு வந்தது.
அறம் தலைப்பில் நீங்கள் எழுதிய கதைகள் அனைத்தும் படித்து முடித்து விட்டேன். என்னுடைய ரசனை உயர்ந்து விட்டதா அல்லது என் போன்றவர்களுக்காகத் தங்களது திறமையைக் குறைவாக வெளிப்படுத்துகிறீர்களா என்பது தெரியவில்லை.
ஒரு பெரிய தொழிற்சாலை நிறுவ வேண்டி, பூர்வாங்க பணிகளுக்காகக் குடும்பத்தை விட்டுப் பிரிந்து ஒரு சிறிய கிராமத்தில் வசித்து வரும் எனக்கு, சோற்றுக் கணக்கு போன்ற எழுத்துக்களே, பாலைவனச் சோலைகள்.
வாழ்த்துக்களுடன்
சு செல்லப்பா
அன்புள்ள செல்லப்பா அவர்களுக்கு
அறம் வரிசைக் கதைகள் அறம் என்ற நேரடியான விஷயத்தைப் பேசுகின்றன. ஒவ்வொருவரும் அந்தரங்கத்தில் நன்கறிந்தது அறம். ஆகவே அவற்றுக்கு உள்ளாழங்களேதும் தேவையில்லை
நுண்ணிய அகச்சிக்கல்களையோ வாழ்க்கைசார்ந்த அறச்சிக்கல்களையோ ஞான உசாவல்களையோ பேசும் ஒரு ஆக்கத்துக்கு இந்த எளிமை சாத்தியமில்லை. எல்லாப் பக்கங்களையும் கணக்கில் கொண்டு எழுந்தாகவேண்டியிருப்பதனால் விரிவாகவும் ஆழ்மனம் சார்ந்து செல்லவேண்டியிருப்பதனால் கனவுத்தன்மையுடனும் அவை அமைகின்றன.
கடினம் என ஏதுமில்லை. என்னுடைய நடை மற்றும் குறியீடுகள் பிடிபடக் கொஞ்சம் தொடர்ந்து வாசிக்கவேண்டும். நான் செறிவாக எழுதுபவன் என்பதனால் கொஞ்சம் கவனமாக வரிக்குவரியாக வாசிக்கவேண்டும். அப்படி வாசித்தால் நீங்கள் வாசித்த பல இலக்கிய நூல்களில் ஆங்காங்கே தென்படும் நுட்பங்களும் ஆழங்களும் அனேகமாக எல்லா வரிகளிலும் இருக்கக் காண்பீர்கள். இது அவர்கள் தோள் மேல் ஏறி அடுத்த கட்டத்துக்குச் செல்லும் அவர்களின் தொடர்ச்சியின் எழுத்து.
ஜெ
கருணா
திருவண்ணாமலையில் ஒரு பொறியியல் கல்லூரியின் பொறுப்பாளரான எஸ்.கெ.பி கருணா,பவா செல்லத்துரையின் நண்பராக எனக்கும் அறிமுகமானவர். சென்றமுறை நாஞ்சில்நாடன் பாராட்டுவிழாவுக்காகத் திருவண்ணாமலை சென்றிருந்தபோது அவரது கல்லூரி விடுதியில்தான் தங்கியிருந்தேன். நல்ல இலக்கியவாசகர். மிகப்பெரிய அக்கல்லூரியின் ஒரு திறந்தவெளி அரங்கு மிக அழகானது.
கருணா எழுதும் அனுபவக்குறிப்புகளை இணையத்தில் வாசித்தேன். பேருந்தில் முதியவர்களுக்கும் கர்ப்பிணிப் பெண்களுக்கும் எழுந்து இடம் கொடுப்பது பற்றிய இரு அனுபவங்களை எழுதியிருக்கிறார். இரண்டு எல்லைகளில் உள்ள இரு அனுபவங்களைக் கோர்த்திருப்பதில் நுட்பம் தெரிகிறது. இரண்டுவகையான பண்பாட்டுச்சூழல். ஆனால் உண்மையான எதிர்வினைகள் ஒன்றுதான்.
மேலைநாடுகளில் முதியோருக்கு எழுந்து இடமளிப்பது அவர்களால் தவறாக எடுத்துக்கொள்ளப்படுகிறது என்பது உண்மை. அதைப் பரிதாபம் அல்லது ஒதுக்குதல் என அவர்கள் எடுத்துக்கொள்கிறார்கள். ஆனால் ஒரு இந்தியன் அதற்காகத் தன் வளர்ப்பால் அடைந்த பண்பாட்டை விட்டுவிடவேண்டுமா என்ன?யோசிக்க வைக்கும் சின்னவிஷயம்.
கோவையில் பேசுகிறேன்
கோவை புத்தகக் கண்காட்சி ஆகஸ்ட் 12 முதல் 21 வரை கோவை காந்திபுரம் வ.உ.சி பூங்கா வாசலருகே கைத்தறிக் கண்காட்சியகத்தில் நடைபெறுகிறது. தினமும் 11 மணிமுதல் கண்காட்சி நிகழும்
அதில் 17-8-2011 அன்று மாலை ஆறு மணிக்கு நான் பேசவிருக்கிறேன்.
18 -8-2011 மாலை ஊர்திரும்புவேன்.
August 15, 2011
மெல்லுணர்ச்சிகளும் கலையும்
ஓர் உரையாடலில் இன்றைய இலக்கியத்தில் மெல்லுணர்ச்சிகளுக்கான இடம் என்ன என்று கேட்கப்பட்டது. நாம் இலக்கியத்தில் இன்று மெல்லுணர்ச்சிகளை இழந்துகொண்டிருக்கிறோமா என்று ஐயம் தெரிவிக்கப்பட்டது
உணர்ச்சிகள் அல்லது மெல்லுணர்ச்சிகள் இல்லாமல் இலக்கியம் இல்லை. இந்தக்காலத்தில் நுண்மையான உணர்ச்சிகள் குறைகின்றன என்று சொல்வது ஒரு வழக்கம் என்றாலும் அது உண்மை அல்ல. யோசித்துப்பாருங்கள், பெரும்போர்கள் பஞ்சங்களின் காலமாக இருந்த நம் இறந்தகாலங்கள் மெல்லுணர்ச்சிகளுக்கு இன்றைவிட சாதகமான காலங்களா என்ன? மெல்லிய உணர்ச்சிகள் எப்போதும் இருக்கும். அவை இலக்கியத்தையும் கலைகளையும் எப்போதும் ஊடகமாகவும் கொள்ளும்.
ஆனால் இந்த மெல்லுணர்ச்சி என்ற சொல்லை நாம் கொஞ்சம் கவனமாகப் பயன்படுத்தவேண்டியிருக்கிறது. பலசமயம் சல்லிசான ஒரு உணர்ச்சியையே மெல்லுணர்வு என்று சொல்லிக்கொள்கிறார்கள். பெரும்பாலும் அன்றாட லௌகீக வாழ்க்கையின் சில சாதாரணமான தருணங்களை வேறுகோணங்களில் கண்டடைவதையே அப்படி எண்ணுகிறார்கள். அவற்றை முன்வைக்கும் எழுத்துக்களுடன் எளிதாக அடையாளம் காணமுடிகிறதென்பதே அவற்றை ரசிப்பதற்கான காரணங்களாக அமைகின்றன.
பலசமயம் ஹோமியோ மருந்துபோல ஊசிமுனையில் தொட்டு ஒரு செம்பு நீரில் கலக்கி ஒன்றை அளித்தால் அது நுண்மை என்றும் அதை ஊகித்தெடுப்பதே கலையுணர்வு என்றும் சொல்லப்பட்டது. அவை உத்திநுட்பங்களே அல்லாமல் இலக்கியநுட்பங்கள் அல்ல. நல்ல வாசகன் ஒருபோதும் படைப்பின் உத்திநுட்பங்களை அக்கறைகொண்டு வாசிக்கமாட்டான்
அறுபது எழுபதுகளில் சாதாரணமான மனிதர்களிடம் மனிதாபிமானம் வெளிப்படும் தருணங்களைக் கண்டுபிடித்து எழுதுவது மெல்லுணர்ச்சி சார்ந்ததாகக் கருதப்பட்டது. இத்தகைய கணிசமான கதைகளைத் 'தப்பாகப்புரிந்துகொண்டுவிட்டுப் பின்னால் வருந்துவது' என்ற வகைமைக்குள் அடக்கிவிடலாம். ஒரு முறைமீறிய பாலுறவை மெல்ல தொனிக்கவிட்டுச் சொன்னால் அது மெல்லுணர்வு என்று எழுபதுகளில் கருதப்பட்டது. இன்று அக்கதைகளை செம்மலர் கணையாழி தொகுதிகளில் வாசித்தால் ஆச்சரியமாகவே உள்ளது.
சுந்தர ராமசாமி சொல்வார் 'காலையில் எழுந்ததுமே இன்று எதைப்பார்த்து நெகிழலாம் என யோசிக்கும் மனநிலை இது' என. இதை மிகையுணர்ச்சி [செண்டிமென்ட்] என்றே சொல்வேன். எப்படி மிகைநாடகம் [மெலோடிராமா] இலக்கியத்துக்கு ஒவ்வாததோ அப்படித்தான் இதுவும். ஆசிரியரே நெகிழ்ந்துகொண்டே கதைசொல்வது எப்போதுமே தமிழில் ரசிக்கப்படுகிறது. வாசகர் முன்கூட்டியே அந்த மனநிலைக்குத் தன்னைத் தயாரித்துக்கொள்கிறார். தன் முதிர்ச்சி, தர்க்கபுத்தி, நகைச்சுவைஉணர்ச்சி ஆகியவற்றை இக்கதைகளுக்காக கொஞ்சம் ரத்து செய்துகொள்கிறார்.
நல்ல வாசகன் அதைச்செய்வதில்லை. அவனுக்குத் தேவை சௌகரியமான சில மனநிலைகள் அல்ல. உண்மைகள். ஆகவே தன் முழுத் தர்க்கத்தாலும், முழு நகைச்சுவையாலும், முழு முதிர்ச்சியாலும் இலக்கியத்தை அணுகுவதே அவன் வழக்கமாகும். அந்த நிலையிலும் அவனை ஈர்த்து மேலே கொண்டுசெல்லும் ஆக்கங்களையே நாம் முக்கியமானவை என்கிறோம். தர்க்கத்தை நிறைவுசெய்தபின் உணர்வுகளையும் உள்ளுணர்வுகளையும் நோக்கிப் பேசுபவையாக அவை இருக்கும்.
அப்படியானால் மெல்லுணர்ச்சி என்றால் என்ன? 'மெல்லுணர்ச்சி என்பது இயற்கையிலும் மனிதர்களிலும் மறைந்துகிடக்கும் நுண்ணிய விஷயம் 'ஒன்றை உணர்வால் தொட்டு எடுப்பது' என வரையறை செய்யலாம். அந்த அம்சம் என்றும் இலக்கியத்தில் உண்டு. அத்தகைய உண்மையான மெல்லுணர்ச்சி என்பது அதைத் தொட்டதுமே சல்லிசாகப் போய்விடாது. நினைவிலும் உணர்விலும் வளரும். நாம் இங்கே சாதாரணமாக மெல்லுணர்வு என்று சொல்லிக்கொள்ளும் பலவிஷயங்கள் ஒருநாள் தாண்டினால் அற்பமானவையாக ஆகிவிடுகின்றன.
கலையின் இலக்கு இதெல்லாமா என்ன? கலையின் ஊடகம் கற்பனை. அது நம்மைக் கற்பனைவழியாக இணையான ஒரு வாழ்க்கையை வாழச்செய்ய வேண்டும். அன்றாடவாழ்க்கையில் எப்போதோ ஒரு உச்ச அனுபவத்தருணத்தில் மட்டுமே நாம் நம் ஆழத்தைக் கண்டுகொள்கிறோம். அந்தத் தருணத்தைக் கலை கற்பனைமூலம் அளிக்கவேண்டும். அதன் வழியாக நம் ஆழ்மனத்தை நோக்கி , அதன் வழியாக வாழ்க்கையின் மையம் நோக்கி அது செல்லவேண்டும்.
அறிவுடன் மட்டும் பேசும் மேலான ஆக்கங்கள் உள்ளன. அங்கத இலக்கியங்கள் அவ்வகைப்பட்டவை. ஆனால் சிறந்த இலக்கியங்கள் நம் கனவுடன் பேசுகின்றன. நம்மில் ஊடுருவி நம் கனவை அவை கட்டமைக்கின்றன. அதற்காக மொழியைப் படிமங்களாக ஆக்குகின்றன.
அப்படியானால் படைப்பில் தர்க்கம் எதற்காக? ஒரு நல்ல வாசகனின் கனவுத்தளம் வலிமையான தர்க்கத்தால் மூடப்பட்டதாகவே இருக்கும். அவன் அதுவரை வாசித்தவையும் யோசித்தவையும் அடங்கிய ஒரு ஓடு அது. அதை உடைத்துத் திறக்கக்கூடிய அளவுக்கு வல்லமையான தர்க்கம் எழுத்தில் தேவை. வாசகனைவிட மேலான அறிவார்ந்த தர்க்கதளம் இல்லாத படைப்பு அவனைக் கவர்வதில்லை. ஆனால் அந்தக்கதவைத் திறந்தபின் இலக்கியம் செல்லும் இலக்கு அவனுடைய ஆழ்மனக் கனவுகளை நோக்கியே.
நல்ல வாசகனின் கனவுலகைச்சுற்றி அவன் அறிவுத்தர்க்கம் வீட்டைக் காக்கும் நாய்களைப்போல நின்றுகொண்டிருக்கிறது, எப்போதும் விழிப்புடன். அவனுக்கு அந்தக் கனவு அவ்வளவு முக்கியமென்பதனால் அவன் அதை அப்படிப் பத்திரமாக அந்தரங்கமாகத்தான் வைத்திருப்பான். அதைத் தீண்டாமல் ஆயிரம் கதைகளை சும்மா வாசித்துத் தள்ளிக்கொண்டுமிருப்பான். புனைகதையின் அறிவார்த்தம் என்பது அந்த வேட்டைநாய்களுக்கான இறைச்சித்துண்டுகள்தான். அவற்றை மீறி உள்ளே நுழைவதற்காக.
ஒரு நல்ல படைப்பின் உடல் மெல்லுணர்வைத் தீண்டும் நூற்றுக்கணக்கான அவதானிப்புகளுடன் மொழிவெளிப்பாடுகளுடன்தான் கட்டமைக்கப்பட்டிருக்கும். அவற்றின் சில வரிகளை எடுத்து நீர்க்கச்செய்து அளித்தால் எளிய வாசகர்கள் எழுச்சியும் உவகையும் கொள்வார்கள். ஆனால் நல்ல வாசகனுக்கு அவை அவன் செல்லும் வழியாகவே இருக்கும் , இலக்காக அல்ல. இலக்கு என்பது மெய்மையைத் தீண்டும் கனவாகவே இருக்கமுடியும்
Jeyamohan's Blog
- Jeyamohan's profile
- 840 followers

