Jeyamohan's Blog, page 86

June 1, 2025

காவியம் – 42

(கருங்கல்செதுக்குச் சிற்பம், பெயர் தெரியாதது. சாதவாகனர் காலம் பொயு1, பைத்தான்)

கானபூதி சொன்னது. “நான் அவனுக்குச் சொன்ன கதை சாதவாகனர்களின் ஆட்சிக் காலத்தில் நிகழ்கிறது. அக்னிபுத்ர சதகர்ணியின் ஆட்சிக்காலத்தில் அந்த அரசு வடக்கே உஜ்ஜையினி முதல் தெற்கே அமராவதி வரை, கிழக்கே மகாநதிக்கரை முதல் மேற்கே துவாரகை வரை பரவியிருந்தது. நான்குதிசைகளில் இருந்தும் பிரதிஷ்டானபுரிக்கு வந்து சேர்ந்த சாலைகள் வழியாகப் பயணிகளின் வண்டிகளும், செல்வமும் நுழைந்துகொண்டே இருந்தன”.

பிரதிஷ்டானபுரியை நோக்கி வடக்கிலிருந்தும் தெற்கிலிருந்தும் புலவர்கள் வந்துகொண்டே இருந்தார்கள். அங்கே சொல்லுக்குப் பொன்னுக்கு நிகரான மதிப்பிருந்தது என்னும் செய்தி நாடோடிகளின் நாக்குகளின் வழியாகவே பரவிக் கொண்டிருந்தது. சாதவாகனர்களின் புலவர் சபையில் சதுர்வித்வத்கோசம் என அழைக்கப்பட்ட நான்குவட்டங்கள் இருந்தன. நவரத்னாவளி என பெயர்கொண்ட முதல் வட்டத்தில் ஒன்பது பெரும்புலவர்கள் திகழ்ந்தனர். கனகமாலா என அழைக்கப்பட்ட இரண்டாவது வட்டத்தில் பதினெட்டு புலவர்களும், ரஜதமாலா என அழைக்கப்பட்ட மூன்றாவது வட்டத்தில் நூற்றியெட்டு புலவர்களும் இருந்தனர். அக்ஷமாலா என அழைக்கப்பட்ட நான்காவது வட்டத்தில் ஆயிரத்தெட்டு புலவர்கள் இருந்தனர். நான்காவது வட்டத்தில் நுழைவதற்கு ஆயிரக்கணக்கான புலவர்கள் போட்டியிட்டனர்.

ஒரு புலவர் அவையில் விவாதத்தில் தோல்வியுற்றாலோ, நோயுற்று சபைக்கு வரமுடியாமலானாலோ, உயிரிழந்தாலோ அடுத்த வட்டத்தில் இருந்த சிறந்த புலவர் அவ்வட்டத்திற்குள் அமர்த்தப்பட்டார். அதற்கென்று அவைகூடி போட்டிகள் நிகழ்த்தப்பட்டன. ஒவ்வொரு புலவருக்கும் அவையிலிருந்து அவர்களின் தகுதிக்கேற்ப பொருளும் இடமும் வழங்கப்பட்டது. வைரம் பதித்த கோல்காரன் முன்னால் வர சபைக்குள் நுழைவது நவரத்னாவளியின் புலவர்களுக்கு உரிமையாக இருந்தது. பொற்பூணிட்ட பல்லக்கும், வெள்ளிப்பூணிட்ட பல்லக்கும், மஞ்சள் கொடி பறக்கும் பல்லக்குகளும் அடுத்தடுத்த நிலையைச் சேர்ந்த புலவர்களுக்குரிய உரிமையும் பதவியுமாக வகுக்கப்பட்டிருந்தன.

புலவர்கள் அமர்வதற்காக அமைக்கப்பட்டிருந்த வாக்பிரதிஷ்டான் என்னும் காவிய சபை ஒன்றுக்குள் ஒன்றாக அமைந்த நான்கு அரைவட்டங்களால் ஆனது. அதன் நடுவே அரசர் அமரும் அரியணைமேடை அமைந்திருந்தது. ஒவ்வொரு வாரமும் வெள்ளிக்கிழமை புலவர் அவை அங்கே கூடியது. அவர்கள் இலக்கிய ஆராய்ச்சிகளை நிகழ்த்தினர். அரசரின் ஊழியர்களால் வரவேற்கப்பட்டு கொண்டு சென்று தங்கள் இருக்கைகளில் அமரச்செய்யப்பட்ட புலவர்கள் ஒவ்வொருவருக்கும் அவரவர் குலத்தின் சின்னம் பொறிக்கப்பட்ட கைக்கோல்கள் இருந்தன. பேச விரும்புகையில் அந்த கைக்கோலை தலைக்குமேல் தூக்கி மும்முறை அசைத்தனர். சம்ஸ்கிருதத்திலும் பிராகிருதத்திலும் சபையில் பேச அனுமதி இருந்தது.

பிரதிஷ்டானபுரியின் அவையில் ஒரு நூல் அரங்கேறுவது என்பது இமையமலையின் சிகரத்தில் விளக்கேற்றி வைப்பதுபோல என்று கவிஞர்கள் பாடினர். ஒவ்வொரு முழுநிலவு நாளிலும் அங்கே ஒரு நூல் அரங்கேறியது. ஆண்டுக்கு ஆறு காவியங்களேனும் அங்கே முன்வைக்கப்பட்டன. மூன்றாண்டுக்கு ஒரு காவியமே அரங்கத்தி புலவர்களிடம் ஏற்பு பெற்றது. அந்நூல்கள் அர்ஜுனனில் வில்லில் இருந்து அம்புகள் கிளம்புவதுபோல எடுக்கையில் ஒன்றும், தொடுக்கையில் நூறும், செல்கையில் ஆயிரமும், அடைகையில் லட்சமும் என பெருகி பாரதவர்ஷமெங்கும் சென்றன. அந்நூல்களின் முகப்பில் ‘பிரதிஷ்டான முத்ரித:’ என்னும் புகழ்மொழி இடம்பெற்றது. அந்தச் சொல் எந்த அவையின இரும்புக் கதவுகளையும் திறக்கும் தாழ்க்கோல் என அறியப்பட்டது.

அங்கே எல்லா மொழிகளில் இருந்தும் நூல்கள் வந்து ஆராய்ச்சி செய்யப்பட்டன. வேதமொழியும் சம்ஸ்கிருதமும் சபைக்கு வந்தன. பிராகிருதமும் பாலியும் வந்தன. தென்நாட்டு மொழியாகிய தமிழும் ஆராயப்பட்டது அம்மொழிகளின் கலப்பால் உருவான நூற்றுக்கணக்கான சங்கரபாஷைகளும் அபப்பிரஹ்ம்சங்களும் வந்துகொண்டே இருந்தன. ஒவ்வொரு மொழிக்கும் உரிய இலக்கண அறிஞர்களும் அவையில் இருந்தனர். ’வாக்யார்த்தாலங்கார நைபுண்ய’ என அழைக்கப்பட்ட அவர்கள் சொல், பொருள் ஆகியவற்றை ஆராய்ந்து  நூல்களை மதிப்பிட்டனர்.

பிரதிஷ்டானபுரியில் மூச்சுக்களின் அளவுக்கே சொற்களும் பிறந்தன என்று ஒரு சொல்லாட்சி இருந்தது. சொற்கள் பெருகிப்பெருகி அந்நகரமே மாபெரும் தேனீக்கூடு போல முழங்கிக்கொண்டிருந்தது என்றனர் கவிஞர். எட்டுத்திசையில் இருந்தும் தேன் அங்கே தேடிவந்தது. தேன் ஒலிக்கும் கூடு என்று பிரதிஷ்டானபுரி பெயர்பெற்றது. ஆகவே அதை ’மதுபுர:’ என்றே பலநூல்கள் அதைக் குறிப்பிட்டன.

பலதிசைகளில் இருந்தும் புலவர் அங்கே தங்கள் சொற்களுடன் வந்து சேர்ந்தமையால் சொற்கள் மயங்கி உருமாறின. பொருளின் எடையை உதறி சொற்கள் சிறகுகள் கொண்டன என்று கவிஞர் கூறினர். ஆனால் சொற்கள் எல்லை மீறுந்தோறும் இலக்கணம் வலுப்பெற்றது. ஒவ்வொரு மொழி இலக்கணமும் இன்னொரு மொழியின் இலக்கணத்தை ஏற்றுக்கொண்டு தன்னை பெருக்கிக்கொண்டது. கவிதையை கற்பிக்கமுடியாது, இலக்கணத்தைக் கற்பிக்க முடியும். ஆகவே இலக்கணவாதிகள் பெருகினர், அவர்கள் கவிஞர்கள்மேல் ஆதிக்கம் கொண்டனர்.

பிரதிஷ்டானபுரியின் அவையில் காவியத்துடன் சென்று நிற்பது சிங்கங்களும் புலிகளும் சூழ்ந்த அவையில் புள்ளிமான் தனித்து சென்று நிற்பதுபோல என்று கவிஞர்கள் சொல்ல ஆரம்பித்தனர். வியாஹ்ரசதஸ் என்றே பகடிநூல்களில் பிரதிஷ்டானபுரியின் புலவர் மன்றம் குறிப்பிடப்பட்டது. சிலர் கழுதைப்புலிகளும் ஓநாய்களும்தான் அங்கே உள்ளன என்று சொன்னார்கள். இலக்கணத்தால் வேட்டையாடப்பட்ட கவிஞர்கள் அவைக்கு வெளியே நகரம் முழுக்க நிறைந்திருந்த சிற்றவைகளில் தங்கள் கவிதைகளையும் கதைகளையும் முன்வைத்தனர். ஆலயங்களிலும் சந்தைகளிலும் மட்டுமல்லாது உழவர்கூட்டங்களிலும் கதைகளும் பாடல்களும் நிறைந்தன.

பிரதிஷ்டானபுரியில் கதைகள் நூறுமேனி விளைந்தன என்றனர் நாடோடிப் பாடகர்கள். ‘கதாவிலசித:, காவ்ய சம்புஷ்ட: வித்யா விஃபூஷித: சிரஃபிரதிஷ்டான: பிரதிஷ்ட:’ என அந்நகரை வாழ்த்திய பெருங்கவிஞர் அஷ்டகரின் சொற்களை நாகனிகாவின் மைந்தன் சதகர்ணி தன் கோட்டை முகப்பில் பொன்னால் பொறித்து வைத்தான். அந்நகரின் ஓங்கிய கோட்டைவாசலில் நூல்களுடனும் கனவுகளுடனும் வந்து நின்ற ஒவ்வொருவரும் அண்ணாந்து அச்சொற்களைப் பார்த்து கைகூப்பி மெய்சிலிர்த்துக் கண்ணீர்மல்கினர்.

பிரதிஷ்டானபுரியின் வாக்பிரதிஷ்டான் சபை கூடும் மாளிகைகள் அடங்கிய திரிரத்னகோசம் என்னும் நான்காவது கோட்டையின் வாசலான திரிரத்ன ஶ்ரீமுகம் என்றும் அழைக்கப்பட்ட முகப்பில் ஒருநாள் பதினைந்து வயதான சிறுவன் ஒருவன் வந்து நின்றான். மெலிந்த உடலும், கன்னங்கரிய நிறமும், பெரிய கண்களும்  கொண்டிருந்த அவன் அந்தணர்களுக்குரிய சிகையும் பூணூலும் மேலாடையும் மிதியடியும் அணிந்திருந்தான். அங்கே அப்படி பெரும்புலவர்களை நேரில் காண்பதற்காகவும் அவர்களிடம் மாணவர்களாகச் சேரமுயல்வதற்காகவும் இளைஞர்கள் வந்து நிற்பதுண்டு. அவர்களிடமிருக்கும் பணிவும் அச்சமும் அவனிடம் இருக்கவில்லை. அவன் தலைநிமிர்ந்து ஒருவகையான ஏளனத்துடன் அங்கே வரிசையாக மாளிகைக்குள் நுழையும் பண்டிதர்களைப் பார்த்துக் கொண்டு நின்றான்.

வாக்பிரதிஷ்டான் சபைக்குச் சென்றுகொண்டிருந்த  நவரத்னாவளியில் ஒருவரான பிரபாவல்லபர் என்னும் பெரும்புலவரின் பல்லக்குக்கு முன்னால் கைகளை விரித்துக் கொண்டு சென்று நின்ற அந்த இளைஞன் “பொன்னால் பூண் போடப்பட்ட பல்லக்கு… வெள்ளியாலான மிதியடிகள்… இப்படி ஆடம்பரங்களில் திளைப்பதற்கு வெட்கமே இருக்கக்கூடாது. அறியாமையால் மட்டுமே அது கைவரும்” என்று கூவினான்.

அவனை பிரபாவல்லபரின் மாணவர்கள் பிடித்து விலக்கினர். அவன் அதை மீண்டும் மீண்டும் கூவினான். பிரபாவல்லபர் “என்ன சொல்கிறான்?” என்று கேட்டு பல்லக்கின் திரையை விலக்கினார்.

அவன் அதை மீண்டும் கூவினான். “நீர் ஒரு  மூடர்… வேதமோ வியாகரணமோ அறியாதவர். நான் அறைகூவுகிறேன். எனக்குத் தெரிந்த வேதமும் வியாகரணமும் உங்களுக்குத் தெரியாது…” என்றான். “நாந் தரையில் நிற்கும்போது நீர் பல்லக்கில் போவது கீழ்மை!”

அவனை படைவீரர்கள் பிடித்து வெளியே தள்ளினார்கள். அவன் கூச்சலிட்டுக்கொண்டே இருந்தான். மேலும் பண்டிதர்கள் வந்தபோது வேறு வழியாக உள்ளே வந்து அதே போல அவர்களை இகழ்ந்தான். அவன் அந்தணன் என்பதனால் அவனை பிரதிஷ்டானபுரியின் வீரர்களால் ஒன்றும் செய்ய முடியவில்லை.

மறுநாளும் அதன்பிறகு வந்த ஒவ்வொரு நாளும் அவன் அங்கே அப்படி அவர்களை இகழ்ந்து கொண்டிருந்தான். அவன் ஒரு பைத்தியக்காரன் என்று புலவர்களும் பிறரும் முடிவுசெய்தனர். அவனைப்பற்றி ஓரிரு சொற்களில் ஏளனம் செய்ததும் அவனை மறந்தும் விட்டனர்.

பிரதிஷ்டானபுரியின் அவையில் கனகமாலா என்னும் இரண்டாவது வட்டத்தைச் சேர்ந்த ரத்னாகரர் என்னும் கவிஞர் அந்த சபையின் வயதில் இளையவர், ஆனால் அவர் தக்ஷசிலாவில் சென்று பயின்று வந்திருந்தார். ஆகவே அவர் மேல் பிறருக்கு அச்சமும் வெறுப்பும் இருந்தது. ஆனால் அவர் கண்முன் அனைவரும் அவரை புகழ்ந்தும் நயந்தும் பேசினார்கள். பிரபாவல்லபரிடம் பலரும் அவரை அகற்றிவிட்டு அந்த இடத்தில் தான் நுழையவேண்டும் என்று ரத்னாகரர் திட்டமிட்டிருப்பதாகச் சொல்லி உருவேற்றினார்கள். அவர் வெளிப்படையாகவே ரத்னாகரரை வெறுத்தார்.

ரத்னாகரர் அலங்காரங்கார சாஸ்திரம் பற்றி இயற்றிய ‘காவ்யாலங்கார புஷ்பாவலி’ என்னும் இலக்கணநூலை சபையில் முன்வைத்தார். அதற்காகவே காத்திருந்த பிரபாவல்லபர் அந்நூலை கடுமையாக கண்டித்துப் பேசினார். அதன் ஒவ்வொரு வரியிலும் இலக்கணப்பிழை கண்டுபிடித்தார். அவர் தொடங்கிவைக்க மற்ற புலவர்கள் அந்தப் பாதையை பிடித்துக்கொண்டார்கள். அங்கே ஒருவரை வதைப்பதென்றால் ஒரு தொடக்கம் கிடைத்ததுமே அத்தனை பேரும் பாய்ந்து வந்துவிடுவது வழக்கம்.

பிரபாவல்லபர் ரத்னாகரரின் வரிகளில் இருந்த உவமைகளையும் உருவகங்களையும் நேரடியாகப் பொருள் எடுத்துக்கொண்டு தாக்கினார்.  “நத்தை ஊர்ந்து செல்லும் பாதை ஒளிவிடுவதில்லை. வெளிச்சத்தில் அது அப்படி நமக்கு தோன்றுகிறது. இடம் மாறி நின்றால் அந்த ஒளி மறைந்துவிடும்” என்று அவர் சொல்ல அதன்பின் நீண்டநேரம் நத்தை உண்மையில் ஒளியை உருவாக்குகிறதா என்று கேலியும் கிண்டலுமாகப் பேசிக்கொண்டார்கள். நத்தைவெளிச்சம் என்று அதை ஒரு கேலிச்சொல்லாக உடனே மாற்றிக்கொண்டனர். சூரியன் ஒரு பெரிய நத்தையா இல்லையா என்று விவாதம் உருமாறியது.

“அலங்கார இலக்கணத்தை அலங்காரங்கள் வழியாகத்தான் சொல்லமுடியும். இது சொல்லிலக்கணம் போலவோ, எழுத்திலக்கணம் போலவோ, பொருள் இலக்கணம் போலவோ திட்டவட்டமாக வகுத்துச் சொல்லத்தக்கது அல்ல. அலங்காரம் என்பது மொழியில் நேரடியாகச் சொல்லப்பட முடியாத ஒன்றை வேறுவகையில் உணர்த்துவதற்கான முயற்சி. ஆகவே அதில் சஹ்ருதயனின் கற்பனைக்கே முதன்மை இடம். ஆகவே அலங்கார சாஸ்திரமும் சஹ்ருதய விஃபாவனத்தை அடிப்படையாகக் கொண்டே இயங்கமுடியும்” என்று ரத்னாகரர் சபையில் மன்றாடினார்.

ஆனால் அதற்குள் சபையின் மொத்த மனநிலை அந்நூலை அழிக்க முடிவுசெய்துவிட்டிருந்தது. பிரபாவல்லபரின் ஆதரவாளர்கள் அவரை குத்திக்கிழித்தனர். “பதங்கம் சிறகுகளைக் கனவுகாணவில்லை. ஏனென்றால் பூச்சிகள் கனவுகாண்கின்றன என்பதற்கு ஆதாரமே இல்லை” என்று சுகுமார சர்மா சொன்னார். “பதங்கம் எப்படி சிறகைக் கனவுகாண முடியும்? ஒருவருக்கு முன்னரே தெரியாத ஒன்று கனவிலே வருமா என்ன?”

“இது உவமை, உவமைக்கு இந்தவகையான தர்க்கம் கிடையாது” என்றார் ரத்னாகரர், அழும்குரலில்.

”இலக்கணமே இலக்கியத்தை உருவாக்குகிறது” என்று பிரபாவல்லபர் அவருடைய வழக்கமான வரியைச் சொன்னார். அதை தேவர்கள் அருளிய மந்திரத்தை சொல்வதுபோல தன்னம்பிக்கையும் பணிவும் இணையாகக் கலந்த, புன்னகையா துயரமா என்று அடையாளம் காணமுடியாத ஒரு முகபாவனையுடன் சொல்வது அவருடைய வழக்கம். “ஒரு சொல் இன்னொரு சொல்லுடன் பழுதற இணையும்போதே பொருள் பிறக்கிறது. ஒவ்வொரு சொல்லுக்கும் உரிய தனிப்பொருட்கள் மனிதர்களுக்குரியவை அல்ல, அவை தெய்வங்களுக்குரியவை. சொற்களைச் சேர்த்து உருவாக்கும் பொருளே மனிதர்களுக்குரியது. அதை உருவாக்குவது இலக்கணம். இலக்கணமே மொழி.” என்று அவர் தொடர்ந்தார்.  

“இலக்கணமற்ற மொழி எவருக்கும் பயன்படுவது அல்ல. அது விண்ணிலிருக்கும் தூயநீர் போன்றது. மழையெனப் பொழிந்து ஆறென ஓடினாலன்றி அதற்கும் நமக்கும் எந்த உறவுமில்லை. இலக்கணமே மொழியை மண்ணென்றும், அதன்மேல் நகர்களென்றும், கோட்டைகளென்றும், அதற்குள் மாளிகைகள் என்றும், அறைகள் என்றும், அமர்விடங்கள் என்றும்  மாற்றுகிறது”

அவர் சொல்லி இடைவெளி விட்டதும் சபையினர் ”ஆகா!”  “ஆகா!” என ஓசையெழுப்பினார்கள்.

“அந்த பீடத்தில் அமர்பவர்களும் இலக்கணத்தால் உருவாக்கப்பட்டவர்களே” என்று பிரபாவல்லபர் தொடர்ந்தார். “இலக்கணமே நம்மைப்போன்ற பண்பட்ட மனிதர்களை  உருவாக்குகிறது. நாம் பேசும் மொழியும் நாம் அணியும் உடைகளும், நமது நடத்தையும் அனைத்தும் இலக்கணத்தால் உருவானவை. இலக்கணமற்ற மானுடரை கிராதர் என்றும் நிஷாதர் என்றும் அரக்கர் என்றும் கூறுகிறோம். பண்பட்டது மட்டுமே பயனுள்ளது என்று அறிக. என் பிரியத்திற்குரிய இளைய அறிஞரே, அந்த மரம் வெற்றுச்சொல். அறைக்குள் இருக்கும் இந்த மஞ்சம் இலக்கணத்திற்குட்பட்ட மொழி. இதன்மீதுதான் நாம் துயில முடியும்”. 

“ஆனால் கவிதை எப்போதுமே இலக்கணத்தை விட்டு மேலெழுகிறது… கூட்டில்தான் பறவை முட்டையிடமுடியும். அங்கேதான் குஞ்சு பிறக்கவும் சிறகு கொள்ளவும் முடியும். ஆனால் அந்தச் சிறகைக்கொண்டு அது கூட்டை விட்டு வானிலெழாவிட்டால் அது பறவையே அல்ல” என்று ரத்னாகரர் சொன்னார்.

“நாம் பறவைகளின் இலக்கணத்தைப் பற்றிப் பேசவில்லை” என்று பிரபாவல்லபர் சொன்னதும் சபையே சிரித்தது. அவர் தீவிரமாக “இலக்கணம் மொழியின் கணிதம். கணிதம் பருப்பொருளின் இலக்கணம். இவையன்றி மனிதர் அறியத்தக்கதும் கற்பிக்கத்ததுமான அறிவென்று இப்புவியில் பிறிதில்லை” என்றார்.

“ஆமாம்! ஆமாம்!” என்று பிரபாவல்லபரின் மாணவர்களும் நண்பர்களும் ஆராவாரம் செய்தார்கள்.

ரத்னாகரன் இருகைகளையும் விரித்து உரக்க சொன்னார். ”சபையிலிருக்கும் அறிஞர்களே, மனிதக் கைகள் எவ்வண்ணம் இருக்கவேண்டும் என்பது இலக்கணம். கட்டைவிரல் ஒவ்வொரு செயலிலும் இருக்கவேண்டும் என்பதும், சிறுவிரல் பெரும்பாலான செயல்களில் விலகியிருக்கவேண்டும் என்பதும் வகுக்கப்பட்டுள்ளது. அதை மீறினால் கைகள் செயலற்றவை ஆகும். அதை நான் மறுக்கவில்லை. ஆனால் கைவிரல்களின் ரேகைகள் ஒன்றல்ல. ஒவ்வொருவருக்கும் அது ஒவ்வொன்றாகவே உள்ளது. ஒவ்வொருவருக்கும் அவரவர் ஊழை வகுத்த தெய்வம் அதை அவர்களின் கைரேகைகளிலேயே பொறித்துள்ளது. ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு வாழ்க்கை என படைத்த பிரம்மம் இலக்கணத்திற்கு அடங்காத பெருவிரிவென்றே தன்னைக் காட்டுகிறது”

அவன் சீற்றம் கொள்ளும் தோறும் பிரபாவல்லவர் கனிந்து கனிந்து வந்தார். அன்பு நிறைந்த கண்களால் அவனைப் பார்த்து ”இளைஞரே, நெறிகளெனத் தன்னை வெளிக்காட்டுவதே பிரம்மம். நீர் வீழ்வதும் தீ எழுவதும் இலக்கணம் சார்ந்தே நிகழ்கிறது. அவை இலக்கணத்தை மீறுமென்றால் இப்புவி அழியும். இலக்கணம் தெய்வமென்றால் அதன்மேல் ஓயாது மோதும் இலக்கணமீறல் என்பதே மாயை ஆகும்” என்றார்.

ரத்னாகரர் மேலும் சீற்றமடைந்தார். சினத்தில் அவருக்கு அழுகை வந்து குரல் உடைந்தது. ”இலக்கணத்தின் பார்வையில் இங்கே சபையில் இருக்கும் சுபத்திரருக்கும் ,அதற்கப்பால் அமர்ந்திருக்கும் கல்மாஷருக்கும், அப்பால் இருக்கும் ஸ்ரீதரருக்கும் எந்த வேறுபாடும் இல்லை என்றால் ஒவ்வொருவருக்கும் இருக்கும் தனிச்சிறப்பு என்ன?” என்றார.

அவரை முழுமையாக வென்றுவிட்டதை உணர்ந்த பிரபாவல்லபர் மேலும் கனிவுகொண்டு ”இன்னமும்கூட புரிந்துகொள்ளாமலிருக்கிறாயே. உன் ஆசிரியர்களை நான் வணங்குகிறேன்” என்றார். சபை சிரித்தது. “மகனே, நாம் அனைவரும் வாயால் உண்டு குதத்தால் கழிகிறோம். கண்ணால் பார்த்து காதால் கேட்டு வாயால் மொழிகிறோம். நமக்கிடையே வேறுபாடென்பது நாம் எண்ணிக்கொள்வதே. பொதுமையை நோக்கிச் செல்பவன் தெய்வத்தை அணுகுகிறான். தனித்துவத்தை நாடுபவன் தன்னைத்தானே பெருக்கிக்கொள்கிறான். தனித்துவமே ஆணவம். ஆணவமே அழிவு” என்றார்.

“தனித்துவம் இல்லாமல் கவிதையா? என்ன இது?” என்று ரத்னாகரர் தன்னை மறந்து வெளிவந்த அழுகையுடன் சொன்னார்.

“குழந்தை, பொதுமை நோக்கிச் செல்வது தேவர்களின் இயல்பு. முப்பத்து முக்கோடி தேவர்களுக்கும் ஒரே முகம், ஒரே விழிகள். அவர்களின் பெயர்களும் ஒன்றே. ஆனால் ஒவ்வொரு அசுரரும் தனிப்பெயரும் ,தனிமுகமும் தனக்கென ஆணவமும் கொண்டவர்கள். ஆணவம் நெருப்பு போல. இருத்தலும் பெருகுதலும் அதற்கு ஒன்றுதான். பெருகும்போது எங்கோ அது அழிந்தாகவேண்டும் என்பதும் நெறியென்று உள்ளது. தனித்தன்மையை நாடுபவன் தன்னை தெய்வங்களுக்கு முன் தருக்கி நிறுத்துகிறான். அவனை அது அழிக்கும்” என்றார் பிரபாவல்லபர்.

ரத்னாகரர் தத்தளித்துக் கொண்டிருக்கையில் கீர்த்திதரர் எழுந்து “என்னை பிரம்மம் மறுக்காமலிருப்பதாக. நான் பிரம்மத்தை மறுக்காமலிருப்பேனாக. இருபக்க மறுப்பும் எவ்வகையிலும் நிகழாமலிருப்பதாக. ஓம், அவ்வாறே ஆகுக!” என்றார்.

சபை “ஓம்! ஓம்! ஓம்!” என்று குரலெழுப்பியது.

கைகளைக் கூப்பிக்கொண்டு ரத்னாகரர் அமர்ந்துகொண்டார்.

அன்று பல்லக்கில் திரும்பிச் செல்லும்போது பிரபாவல்லபர் தன் மகனும், ,முதன்மைச் சீடனுமாகிய வாக்வல்லபனிடம் சொன்னார் “மகனே, கவிதையை கற்றுக்கொள்ளாதே. அது காலந்தோறும் மாறுவது. கணந்தோறும் புதிதாக நிகழ்வது. அதன் பின்னால் செல்பவர்கள் புகையைப் பற்றிக்கொள்ள விரும்பும் குழந்தைகளைப் போன்றவர்கள். இலக்கணம் என்பது இதோ தெற்கே நிமிர்ந்து நின்றிருக்கும்  விந்திய மலைமுடிகளைப் போன்றது. அது என்றும் அங்குதான் இருக்கும் அதிலிருந்து ஒரு கல் கொண்டு வந்து நம் இல்லத்தில் போட்டோமென்றால் இங்கும் அது விந்தியனாகவே இருக்கும். எப்படிப் புரட்டினாலும் எங்கு போட்டாலும் அது கல்தான். எத்தனை தலைமுறைகளானாலும், யுகங்கள் புரண்டு சென்றாலும் அது கல்லாகவே நீடிக்கும். இலக்கணத்தை பற்றிக்கொள். அது கற்பாறையுடன் சேர்த்து வீட்டைக்கட்டிக்கொள்வது போல“

ஆனால் மறுநாள் சபைகூடியபோது ரத்னாகரர் தன் கோலை தூக்கிக் காட்டினார். “சான்றோர்களே, இங்கே ஒரு நூலை முன்வைக்கும் ஆசிரியன் தனக்குத் துணையாக ஓர் அறிஞரை கூட்டிவரலாம் என்று நெறி உள்ளது. நான் என் தோழனாகிய அறிஞனை சபையில் முன்வைக்க எனக்கு அனுமதி வேண்டும்” என்றார்.

பிரபாவல்லபர் அதை எதிர்பார்க்கவில்லை ”யாரவர்? இங்கே இதற்கு முன் இல்லாத ஒருவர் என்றால் அவருடைய தகுதி என்ன?” என்று கேட்டார்.

“இங்கு இதற்கு முன் நுழையாதவர்தான். அவருக்குத் தகுதி என நான் நினைப்பது அவர் என் நண்பர் என்பதுதான். அவருக்கு தகுதி இல்லை என்று இந்த சபையில் நிறுவப்பட்டால் சபை என்னை தண்டிக்கலாம்” என்றார் ரத்னாகரர்.

“இதை அனுமதிக்கக்கூடாது” என்று பிரபாவல்லபர் சொன்னார். ஏதோ சூது உள்ளது என்று அவருக்கு தோன்றிவிட்டது

தலைமை அமைச்சரான விஷ்ணுகுப்தர் “சபை முறைமைகளின்படி அவரை அனுமதித்தே ஆகவேண்டும்” என்றார். அவருக்கு முந்தையநாள் பிரபாலவல்லபர் கொஞ்சம் தலைதூக்கிவிட்டார் என்ற கசப்பு இருந்தது, அவரை தட்டிவைக்க விரும்பினார்.

பிரபாவல்லபர் மேற்கொண்டு பேசமுடியாமல் அதை ஏற்றுக்கொண்டார். சபையில் இருந்த அரசர் அக்னிபுத்ர சதகர்ணி அங்கே ஒரு வேடிக்கை நிகழ்வதைப் பார்க்க விரும்பினார்.

சபையின் கோல்காரன் அழைத்ததும் உள்ளே நுழைந்தவன் அவர்கள் நன்கு அறிந்திருந்த அந்த பைத்தியக்கார இளைஞன். அவன் குளித்து, நல்ல ஆடை அணிந்து, வந்திருந்தான். அவனைக் கண்டதும் சபையில் சிரிப்பு ஓடியது. ஆனால் பிரபாவல்லபர் ஏதோ தவறாக நடக்கப்போகிறது என்று சந்தேகப்பட்டார். அவனைக் கூர்ந்து பார்த்தபடி அமர்ந்திருந்தார்.

இளைஞன் கரிய நிறத்துடன், உயரமில்லாதவனாகவும் ஒடுங்கிய நெஞ்சு கொண்டவனாகவும் இருந்தான். அரசரை நோக்கி “சதஜனபதநாயக, உபயவிஜய, உதயமார்த்தாண்ட, வியாஹ்ரவீர்ய, சர்வஜனப்ரிய, சகஸ்ரகுலசேகர, நிருபதுங்க, புருஷோத்தம, பத்மஹஸ்த, வஜ்ரஹஸ்த, சத்ருபயங்கர, மித்ரபரிபாலக, உத்துங்கசீர்ஷ, அஜயசரித்ர, அஜாதசத்ரு, அபயவரத, அசலமகாகீர்த்தி ,ஸ்வஸ்திஶ்ரீ ,அக்னிபுத்ர சதகர்ணிக்கு கௌதம கோத்திரத்தில் பிறந்தவனும் சோமசர்மன் என்னும் வைதிக பிராமணணனின் மகனுமாகிய குணபதியின் வாழ்த்துக்கள்” என்றான்.

அதுவும் ஒரு நடிப்பு போலிருக்கவே சபையினர் சிரித்தனர்.

“வணங்குகிறேன் அந்தணரே, நீங்கள் இங்கே ரத்னாகரரின் நூலை ஆதரித்துப் பேச வந்திருக்கிறீர்கள் அல்லவா?” என்று அரசர் கேட்டார்.

“ஆமாம், அவர்தான் என்னை அழைத்துவந்தார்” என்று அவன் சொன்னான்.

“அதற்கு முன் இந்த சபையைப் பற்றி உங்களுக்குத் தெரியுமா என்று கேட்கவிரும்புகிறேன். இந்தச் சபையில் நின்றிருக்கும் தகுதி உங்களுக்கு உண்டு என்று எண்ணுகிறீர்களா? அதை நிரூபிக்கமுடியுமா?” என்றார் பிரபாவல்லபர்.

“ஆமாம், நான் முற்றிலும் தகுதிகொண்டவனே. ஆனால் என் தகுதியை மதிப்பிட இந்த சபையில் உள்ளவர்களுக்குத் தகுதி உண்டா?” என்று குணபதி கேட்டான்.

சபையினர் திகைத்து ஒருவரை ஒருவர் பார்த்தனர். சிலர் சிரித்தனர்.

அரசர் சிரித்தபடி “சபையினரின் தகுதியை முதலில் நீங்கள் சோதிக்கலாம் அந்தணரே” என்றார்.

“சரி. நானே சோதனையை வைக்கிறேன். நான்கு வேதங்கள், ஆறு சாஸ்திரநூல்கள், நூற்றியெட்டு அடிப்படை வியாகரண நூல்கள், பதினெட்டு புராணங்கள், சபையில் ஏற்பு பெற்ற எழுபத்திரண்டு காவியங்கள் உட்பட இந்தச் சபையிலுள்ளவர்கள் அவர்கள் அறிந்த எந்த நூலில் இருந்தும் என்னிடம் கேள்வி கேட்கலாம். ஒரு பாடலின் முதற் சொல்லையோ இறுதிச்சொல்லையோ சொல்லி அது எந்தப் பாடல் என்று கேட்டால் மூன்று நொடிகளுக்குள் நான் அந்தப்பாடலையும் அதன் பொருளையும் சொல்வேன். அவர்கள் தாங்கள் அறிந்த எந்த சொல்லுக்கும், எந்தப் பாடலுக்கும் பொருள் கேட்கலாம். ஒரு சொல்லைச் சொல்லி அது வேதங்களிலும் பிறநூல்களிலும் எங்கெல்லாம் வருகிறது என்றுகூடக் கேட்கலாம்” என்றான் குணபதி.

“நான் பதில் சொல்லமுடியாத ஒரு கேள்வி இங்கே வருமென்றால் அக்கணமே நான் இந்த எழுத்தாணியால் என் கழுத்தைக் குத்திக்கொண்டு இந்தச் சபையிலேயே செத்துவிழுவேன். ஒரு கேள்விக்கு நான் பதில் சொல்லிவிட்டால் கேள்வி கேட்டவர் எழுந்து என்னைப் பணிந்து வணங்கவேண்டும்… மூன்றுமுறை அவ்வாறு என்னை பணிந்தவர் அதன்பின் என் சொல்லுக்கு வாழ்நாள் முழுக்க முழுமையாகக் கட்டுப்படவேண்டும்” என்று குணபதி தொடர்ந்தான்.

“இந்த சபையில் எவரேனும் என்னைவிடக் கற்றவர் என்று தன்னைப்பற்றி கருதினால் அவரிடம் நான் கேட்கும் ஒரே ஒரு கேள்விக்கு மட்டும் அவர் பதில் சொன்னால் போதும்.  அவ்வாறு அவர் பதில் சொல்லிவிட்டால் அவரை நான் பணிந்து வணங்கி அக்கணமே அவையை விட்டு வெளியேறுவேன். பதில் சொல்ல முடியவில்லை என்றால் அவர் என் கால்களை தன் தலையில் அணியவேண்டும்” 

சபை திகைத்துவிட்டது. அப்படி ஓர் அறைகூவல் அந்தச் சபையில் எழுந்ததே இல்லை. சிறிதுநேரம் எந்த கேள்வியும் எழவில்லை. பிரபாவல்லபர் தன் மாணவர்களிடம் கண்காட்ட அவர்கள் கேள்வி கேட்கலானார்கள். பின்னர் அவையிலிருந்த அனைவருமே கேள்வி கேட்டனர். எல்லா கேள்விக்கும் அவன் பதில் சொன்னான். பெரும்பாலும் கேள்வி தொடங்கும்போதே பதிலைச் சொல்லி அடுத்தவருக்காக கைகாட்டினான். சற்றுநேரத்தில் மொத்த சபையும் அவனை வணங்கிவிட்டது.

நவரத்னாவளியின் ஒன்பது புலவர்கள் மட்டுமே எஞ்சியிருந்தனர். அரசரின் கண்களில் சிரிப்பு நிறைந்தது. “பிரபாவல்லபரே, நீங்கள் கேட்கும் கேள்விக்கு இந்தச் சிறுவனால் ஒருபோதும் பதில் சொல்லமுடியாது. அதில் எனக்கு ஐயமே இல்லை” என்றார்.

பிரபாவல்லபர் திகைத்து அரசரைப் பார்க்க சபை சிரித்துக்கொண்டிருந்தது. அவர் தட்டுத்தடுமாறி எதையோ கேட்டு முடிப்பதற்குள் அவன் பதில் சொன்னான். அவர் எழுந்து சென்று அவன் கால்களைத் தொட்டு வணங்கினார்.

அரசர் அடுத்தடுத்து ஒன்பது பேரிடமும் கேள்விகேட்கும்படிச் சொன்னார். ஒவ்வொருவராக அவன் முன் பணிந்தார்கள். அவன் கேள்விகேட்க வேண்டிய தேவையே இருக்கவில்லை.

பிரதிஷ்டானபுரியின் புலவர்சபையான காவ்யப்பிரதிஷ்டானின் தலைமைப் புலவனாக அவன் அமரச்செய்யப்பட்டான். அவனுக்கு வைரம் பதித்த பொற்கோலை அளித்த அரசர் அக்னிபுத்ர சதகர்ணி “இனிமேல் இந்த சபையின் முதன்மைப் புலவர் நீங்கள்தான். அந்தப்பொருளில் இனி உங்கள் பெயர் குணாட்யன் என்றே அழைக்கப்படட்டும்” என்றார்.

(மேலும்)

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on June 01, 2025 11:33

சசி இனியன்

சசி இனியன் தமிழில் கவிதைகள் எழுதி வருகிறார். 8 ஜூன் 2025 அன்று சென்னையில் நிகழும் குமரகுருபரன் – விஷ்ணுபுரம் விருதுவிழாவில் விருந்தினராகக் கலந்துகொள்கிறார்.

சசி இனியன்
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on June 01, 2025 11:33

நெ.து.சுவும் அங்கதமும் -கடிதம்

[image error]

அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு,

நலம் விழைகிறேன்.

கடந்த மாதம்  பெங்களூரில் “Of Men, Women and Witches” புத்தகம் பற்றிய கலந்துரையாடலுக்கு முன்  பூங்காவில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்த போது

“தமிழ் நாட்டுல கல்வி வளர்ச்சிக்கு முக்கியமானவர் நெ.து.சுந்தரவடிவேலு அவர பத்தி பெரும்பாலான பேர்களுக்கு தெரியாது” என்று நீங்கள் சொல்லும்போது உண்மையில் அவரை நான் அறிந்திருக்கவில்லை பின்னர் இணையத்தில் தேடியப்பொழுது  நகைச்சுவை நடிகர் வடிவேலுவின் புகைப்படத்திற்கு கீழே தமிழ் விக்கி பதிவு இருந்தது 

நெ.து சுந்தர வடிவேலுவை பற்றிய புகைப்படங்களுடன்  விரிவான விளக்கங்கள் இருந்தது. தொடர்ந்து அரசியல் வாதிகளால் முன்வைக்கப்படும் கருத்துகளை மட்டுமே அறிந்திருந்தேன்.இன்று எதேட்சயாக மனதில்  “அங்கதம்” என்ற சொல் தோன்றியது இதற்கு முன் அந்த சொல்லை எங்கோ கேட்டிருக்கிறேன்.

ஒரு நூல் விமர்சனத்தில் “அங்கதமாக எழுதியிருக்கிறார்” என்று ஒரு எழுத்தாளர் கூறியது நினைவிற்கு வந்தது. அந்த சொல் இன்று பூத்த ஒரு மலரைப் போல எனக்கு மகிழ்வளித்தது மீண்டும் மீண்டும் அந்த சொல்லை சொல்லிப்பார்த்தேன். அங்கதம்..அங்கதம்…அங்…கதம்

பின்னர் தமிழ் விக்கியில் அந்த சொல்லுக்கான பதிவு இருந்தது .அதில் அதன் வகைகள் அதற்கான எடுத்துக்காட்டுகளுடன் இருந்தது. அங்கதம்

கலைச் சொற்களை கவனமாக பயன்படுத்த வேண்டும் என்று கூறுவீர்கள் அதற்கேற்ப அந்தச் சொல் உணர்த்தும் பொருளும் மிக நுணுக்கமானது அதனால் ஒரு பொற்கொல்லரின் கவனத்துடன் அச்சொல்லை அணுக அப்பதிவு உதவியது.

நமது கண்முன்னே மெல்ல மெல்ல தமிழ் விக்கி வளர்ந்து வருகிறது.இதற்கு பின் பல நபர்களின் உழைப்பு உள்ளது என்பதை அறிவேன்.அவர்களது முயற்சிகள் மேலும் சிறப்படைய வாழ்த்துக்கள்.

தமிழ்குமரன் துரை, 

பெங்களூர்

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on June 01, 2025 11:31

மதத்தை இன்று ஏன் பயிலவேண்டும்?

Religion and Unity- Sohel Mehboob

நீங்கள் பல்வேறு மதவகுப்புகளை நடத்துகிறீர்கள். சைவசித்தாந்தம், வைணவம் எல்லாம் நடத்துகிறீர்கள். இந்த வகுப்புகள் ஒரு நவீன இளைஞனுக்கு ஏன் அவசியமென நினைக்கிறீர்கள்? நான் இவற்றில் ஆர்வம் காட்டவேண்டுமா என்ன

மதத்தை இன்று ஏன் பயிலவேண்டும்?

https://youtu.be/4l_p6gjV7-o

I listened to this speech and was practically overwhelmed by its clarity and novelty. You categorically explain what the special features are in Indian philosophy, but you do not dismiss or reduce the importance of Western philosophy. The clarification you give is wonderful.

About Indian Philosophy
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on June 01, 2025 11:30

May 31, 2025

வாழ்வின் பற்றுதல் எது?

வாழ்க்கையை பொருளியல் போராட்டம், அன்றாடச்சிக்கல்கள் இல்லாமல் அமைத்துக்கொண்டதுமே உருவாகும் முதல் சிக்கலே வாழ்க்கையை எதன்பொருட்டு அமைத்துக் கொள்வது என்பதுதான். ‘என் குடும்பத்துக்காக நான் வாழ்கிறேன்’ என்பதே பெரும்பாலானவர்கள் வாழ்க்கையின் பற்றுகோல் என்ன என்ற கேள்விக்கு அளிக்கும் பதில். அதற்குமேல் ஒரு பதிலைச் சொல்ல விரும்புபவர்களின் சிக்கல் இது. உண்மையில் வாழ்க்கையின் பற்றுகோல் என்னவாக இருக்கமுடியும்?

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on May 31, 2025 11:36

அழிவற்ற புல்

ஆஸ்திரேலியா குறித்த பெரும்பாலான பயணப்பதிவுகள் அதை கங்காருவின் தேசம் என்றே குறிப்பிடுகின்றன. இளமையில் ஆஸ்திரேலியா என்றதுமே நினைவுக்கு வரும் விலங்காகவும் அது இருந்தது. அதன் விந்தையான பின்னங்கால் அமைப்பு, குழந்தையை வயிற்றின் பையில் சுமந்து செல்லும் பழக்கம். வேறெங்கும் இல்லாத அவ்விலங்கு இந்தியாவின் எந்த உயிர்க்காட்சியகத்திலும் வளர்க்கப்படவும் இல்லை. என்றோ ஒரு நாள் ஆஸ்திரேலியா சென்று கங்காருவை நேரில் பார்ப்பேன் என்று நான் எண்ணியிருந்ததும் இல்லை.

எனது இளமையில் ஆஸ்திரேலியா பிற இனத்தவருக்கு தடைசெய்யப்பட்ட நாடாகவும் இருந்தது. சுற்றுலாவை அது ஊக்குவிக்கவில்லை. வெள்ளை இனத்தவருக்கு மட்டுமே குடியுரிமை வழங்கப்பட்டது. பிற இனத்தவர் சுற்றுலாப் பயணிகளாகவும் பெரிதாக ஊக்குவிக்கப்படவில்லை. தமிழகத்தில் எழுதப்பட்ட பயணக்கட்டுரைகளில் ஆஸ்திரேலிய பயணக்கட்டுரைகள் மிக அரிதானவை. ஆஸ்திரேலியா அன்று சுற்றுலாப் பயணிகளுக்கு ஈர்ப்பை அளிக்கும் நிலமாகச் சித்தரிக்கப்படவும் இல்லை. ஒரு விரிந்த வெறும் நிலம் என்று மட்டுமே அது இங்கே உருவகிக்கப்பட்டது. அதில் இருந்த ஒரே ஆர்வமூட்டும் கூறு கங்காரு மட்டும்தான்.

ஆஸ்திரேலியாவுக்கு ஒரு பயணம் என்பதை நான் திட்டமிட்டிருக்கவில்லை. ஆனால் எனது நண்பரும் உதயம் இதழின் ஆசிரியருமான திரு நோயல் நடேசன் அவர்கள் ஒரு நிகழ்வுக்காக என்னை அங்கே அழைத்திருந்தார். நோயல் நடேசனை அதற்குமுன் ஐந்தாண்டுகளாகவே எனக்குத் தெரியும். அவர் நடத்தி வந்த உதயம் இதழில் தொடர்ந்து தமிழக அரசியல், பண்பாடு பற்றிய கட்டுரைகளை நான் எழுதிவந்தேன். அந்த அழைப்பு ஒரு பெரும் உளக்கிளர்ச்சியை அளித்தது.

நானும் அருண்மொழியும் 2009ல் ஆஸ்திரேலியாவுக்கு பயணமானோம். மிக நீண்ட பயணம். நடுவே ஹாங்காங் விமான நிலையத்தில் மிக நீண்ட காத்திருப்பு. ஆஸ்திரேலியாவுக்கான எல்லா விமானங்களும் மிகப்பெரியவை. ஏனெனில் அந்த நீண்ட தொலைவை அத்தகைய பெரிய விமானங்கள் மட்டுமே சுருக்கமான செலவில் எதிர்கொள்ள முடியும். ஆனால் நாங்கள் செல்லும்போது தாய்லாந்தில் ஏதோ அரசியல் கிளர்ச்சி நடந்து கொண்டிருந்தது. அரசருக்கெதிரான உணர்வுகள் ஓங்கியிருந்தன. சுற்றுலா தொய்வடைந்திருந்தது. குறிப்பாகப் பாலியல் சுற்றுலா. ஆகவே அந்த விமானம் பெரும்பகுதி காலியாகவே இருந்தது. ஓர் ஒழிந்த திரையரங்கில் அமர்ந்து ஓடாத திரைப்படத்தைப் பார்க்கும் அனுபவம் என்று சொல்லலாம்.

ஆஸ்திரேலியாவுக்குச் சென்றிறங்கி மெல்போர்ன் நகரத்தைப் பார்த்தபோது அது ஒரு அமெரிக்க நீட்சி என்ற எண்ணமே எனக்குப் ஏற்பட்டது. அமெரிக்காவின் தெருக்கள், அமெரிக்காவின் சாலைகள், அமெரிக்காவின் இல்லங்கள். ஆஸ்திரேலிய நிலத்தை நான் விரிவாகப் பார்த்தது மெல்போர்னிலிருந்து கன்பரா வரை காரு நண்பருடன் சென்ற பயணத்தின் போது. அதன்பிறகு அங்கிருந்து விமானத்தில் சிட்னி சென்று சிட்னியிலிருந்து ரயிலில் மெல்போர்ன் திரும்பியபோது.

ஆஸ்திரேலியா என்பது மிகப்பிரம்மாண்டமான ஒரு விரிநிலம் என்பதைக் கண்டேன். நாங்கள் சென்ற நிலம் மாபெரும் புல்வெளியால் ஆனதாக இருந்தது. ஆஸ்திரேலியாவின் நடுப்பகுதி செந்நிறப் பாலை நிலம். அது என் விழியில் பதியவில்லை. என் கண்கள் நிறைத்து உள்ளத்தில் பெருகியிருந்தது அலையலையாக விரிந்து கிடந்த முடிவிலி எனத் தோற்றமளித்த மாபெரும் புல்வெளிப் பரப்புதான். அந்தப் புல்வெளிப் பரப்பில் அலைந்து  திரிவதற்காகவே அங்கிருந்த மான்கள் ஏதோ ஒரு காலகட்டத்தில் வலுவான பின் கால்களை உருவாக்கிக்கொண்டு கங்காருகளாக மாறின, உடன் வரமுடியாத குழந்தைகளுக்காக வயிற்றில் பைகளை உருவாக்கிக்கொண்டன. கங்காரு புல்வெளிக்காக வடிவமைக்கப்பட்டது.

இளமையில் மாடுகளை வளர்த்த எனக்கு புல் எப்போதுமே செல்வமென்று தோன்றும். அன்றெல்லாம் ஒவ்வொரு காலையிலும் கிளம்பி பசுக்களுக்கும் எருமைகளுக்குமான புல்லை வெட்டிக்கொண்டுவந்து இல்லம் சேர்த்துவிட்டுத்தான் கல்லூரிக்குச் செல்ல வேண்டும். பசும்புல் சற்றேனும் உண்ணாவிட்டால் பசுக்களும் எருமைகளும் தொய்வடைந்துவிடும். புல்லைப் பார்க்கையிலேயே அவற்றின் முகத்தில் எழும் பரவசத்தை, உடலெங்கும் ததும்பும் ஆனந்தத்தை கண்ட எவருக்கும் தாங்களே புல்லை மேய்வது போன்ற கிளர்ச்சி ஏற்படும்.

நான் அன்றெல்லாம் ஒவ்வொரு கணமும் புல்லுக்கான பார்வை கொண்டிருப்பேன். எங்கு புல்லைப் பார்த்தாலும் அதை உள்ளத்தில் குறித்துக்கொள்வேன். பல தருணங்களில் வீட்டிலிருந்து பல கிலோமீட்டர் அகன்று கூட புல்லிருக்கும் இடத்தை அடையாளம் கண்டு அங்கு சென்று புல்லைப் பறித்து வருவதுண்டு. பின்னர் அது ஒரு மனப்பழக்கமாக ஆகியது. எந்த ஊரில் இருந்தாலும் புல் கண்ணில் பட்டால் உடனே கைகளும் மனமும் பரபரக்கும். தரையில் ரூபாய் நோட்டுகள் சிதறிக்கிடப்பதைக் காணும்போது ஏற்படும் அதே பரபரப்பு. அந்த விழிகளுக்கு புல் மட்டுமேயான ஒரு பெரும் தேசம் என்ன உணர்வை அளித்திருக்கும் என்பதை எவரும் உணர்ந்துகொள்ள முடியும்.

ஆஸ்திரேலியா எனக்கு புல்வெளியாகவே உள்ளத்தில் பதிந்து இன்றும் அவ்வாறே நீடிக்கிறது. ஒரு கட்டுரையில் இந்தியாவை விட்டு வேறெதேனும் நாட்டில் குடிபுக விரும்புவேனெனில் அது ஆஸ்திரேலியாதான் என்று சொல்லியிருந்தேன். ஆஸ்திரேலியாவின் மிதமான பருவநிலை ஒரு காரணம். அதைவிட முதன்மையான காரணம், ஆஸ்திரேலியாவின் மகத்தான புல்வெளிப்பரப்பு. அது திருவரம்பு மாடுகளுக்கு புல் தேடி அலைந்த ஒரு சிறுவன் தங்க விரும்பும் மண்ணிலெழுந்த  விண்ணுலகன்றி வேறென்ன?

புல்லை உயிரின் முதல் துளி என்கின்றன வேதங்கள். வேதத்தில் திருண சூத்திரம் என்றே ஒரு பகுதி உண்டு. இங்குள்ள ஒவ்வொரு உயிரினமும் புல்லையோ புல்லை உண்ணும் விலங்குகளையோ உண்பவைதான். சூரிய ஒளியை உணவென சமைப்பவை புல்லே.  புல்லிலிருந்தே அனைத்து உயிர்களும் அனைத்து அறங்களும் தோன்றுகின்றன. தெய்வங்களுக்கான அனைத்து அவிப்பொருட்களும் புல்லிலிருந்து உருவாகின்றவையே. புல்லே அன்னம் .புல்லே பிரம்மத்தின் உயிர் வடிவம் .அது கண்கொளாது விரிந்த ஆஸ்திரேலியா ஒரு தெய்வ சாந்நித்தியம் என்று எனக்குத் தோன்றியது. அவ்வுணர்வையே இந்நூலில் எழுதியிருக்கிறேன்.

ஜெ

21.09.2024

நாகர்கோவில்

(விஷ்ணுபுரம் பதிப்பக வெளியீடாக வெளிவந்துள்ள  புல்வெளிதேசம் நூலின் மறுபதிப்புக்கான முன்னுரை)

புல்வெளி தேசம் வாங்க
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on May 31, 2025 11:35

றாம் சந்தோஷ்

கவிஞர் றாம் சந்தோஷ் கவிதை, மொழியாக்கம், இலக்கியக் கோட்ப்பாட்டு ஆய்வுகள் ஆகிய தளங்களில் பங்களிப்பாற்றி வருகிறார். வரும் 8 ஜூன் 2025 அன்று சென்னை கவிக்கோ அரங்கில் நிகழும் விஷ்ணுபுரம்- குமரகுருபரன் விருது விழாவில் நிகழும் இலக்கியக் கருத்தரங்கில் ஓர் அமர்வு றாம் சந்தோஷ் கவிதைகளைப் பற்றியது

றாம் சந்தோஷ்
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on May 31, 2025 11:33

காவியம் – 41

வெற்றித்தூண், பைத்தான், சாதவாகனர் காலம் பொயு 4

கானபூதி என்னும் கதைசொல்லும் பிசாசு பைத்தான் நகரின் மூடிய காட்டுக்குள் அமர்ந்திருந்த என்னிடம் சொன்னது. “என் இடது கையை பொத்தியபடி நான் இன்னொரு கதையைச் சொல்லத் தொடங்கினேன். என் முன் சுத்யும்னன் கண்களை இமைக்காமல் கேட்டு அமர்ந்திருந்தான். இது நான் அவனுக்குச் சொன்ன கதை.”

சமர்கள் இரவில் விழித்திருக்க வேண்டும் என்பது அவர்களின் வாழ்க்கை முறை. அவர்களை பிறர் வவ்வால்கள் என்று அழைத்தனர். வவ்வால்கள் பகலில் கண்ணுக்குப்படுவது அபசகுனம். வவ்வால்களும் பகலில் திகைத்து திசை மறந்து அங்குமிங்கும் முட்டிக்கொண்டு அலைக்கழியும். காகங்களால் துரத்திச் செல்லப்பட்டு சிறகு கிழிக்கப்பட்டு தரையில் விழுந்து துடிக்கும். காகங்கள் அவற்றை சூழ்ந்து கூச்சலிட்டு கொத்தி உண்ணும். சிறு குழந்தைகளுக்குரிய மின்னும் கண்களுடன், சிறு பற்களுடன், அவை கிரீச்சிட்டு துடித்து சாகும்போது கூட சிறுகுழந்தைகளுக்குரிய என்ன நிகழ்கிறதென்று தெரியாத பதைப்பு அவற்றின் முகத்தில் இருக்கும்.

இருநூறாண்டுகளுக்கு முன் அந்நகரை ஆண்ட ரஜதபுத்ர சதகர்ணியின் ஆணைப்படி இரவில் நகர் அடங்குவதற்கான மணிகள் ஒலித்த பிறகே சமர்கள் தங்கள் இல்லங்களிலிருந்து வெளிக்கிளம்ப வேண்டும். விடிவெள்ளிக்கு முன்பு மீண்டும் அதே மணிகள் அதே போல ஒலிக்கும்போது அவர்கள் தங்கள் குடில்களுக்கு திரும்பியிருக்க வேண்டும். அதன் பிறகு நகரத்தில் தென்படும் சமர் உடனடியாக இழுத்து செல்லப்பட்டு நகரின் தெற்குப்பக்கம் இருந்த முள்காட்டில் கழுவிலேற்றப்படுவான்.

சமர் சாதியின் பெண்களும் குழந்தைகளும் கூட அந்த ஆணைக்கு முற்றாக கட்டுப்பட்டனர். ஆகவே அந்நகரில் வாழ்ந்த மக்கள் பெரும்பாலானவர்கள் தங்கள் வாழ்நாள் முழுக்க சமர்கள் என்பவர்களைக் கண்ணால் பார்த்ததே இல்லை. அவர்கள் அந்நகரின் வடமேற்குச் சரிவில் கோதாவரியின் கரையில் இருந்த அரைச்சதுப்பு நிலத்தில் கோரைப்புற்களுக்கு நடுவே கோரைப்புற்களால் கட்டப்பட்ட இடையளவே உயரம் கொண்ட சிறுகுடில்களில் வாழ்கிறார்கள் என்று அவர்களுக்குத் தெரியும். அப்பகுதியை நோக்குவதே தீட்டு என்று நிறுவப்பட்டிருந்தது.

சமர்கள் இரவெல்லாம் நகரில் உள்ள குப்பைகளையும் கழிவுகளையும் அள்ளி தூய்மை செய்தனர். அந்த மலினங்களை தலையில் சுமந்துகொண்டு சென்று தங்கள் சதுப்பு நிலத்தில் தோண்டப்பட்டிருந்த பெரிய குழிகளில் புதைத்தனர். அதன் பிறகு அங்கேயே தீமூட்டி தாங்கள் பிடித்த எலிகளைச் சுட்டு உண்டனர் அவர்களுக்கு நகரின் வெவ்வேறு இடங்களில் உப்பு தானியம் போன்றவை வைக்கப்பட்டிருக்கும், ஆண்டில் ஓரிருமுறை பழைய ஆடைகளும் இருக்கும். ஒவ்வொருவருக்கும் அவர்களுக்கு உரிய இடங்கள் தலைமுறைகளாக  வகுக்கப்பட்டிருந்தன.

அவற்றை எடுத்துக்கொண்டு சென்று அவர்கள் தங்கள் இடங்களில் இருளிலேயே சமைத்து உண்டனர். இரவில் நெருப்பு மூட்டி அதைச் சூழ்ந்து அமர்ந்து சிறிய பறைகளை விரல்களால் மீட்டி தாங்கள் வழிவழியாகப் பாடி வந்த கதையைப் பாடிக் கேட்டனர். அவர்கள் அந்த இருட்டிலிருந்தும், அழுக்கிலிருந்தும் வெளியேறுவதற்கான ஒரே வழியாக இருந்தது பாடல்கள்தான்.

முந்நூறாண்டுகளுக்கு முன் அவர்கள் தங்கள் தொன்மையான நிலங்களிலிருந்து கிளம்பி பிரதிஷ்டானபுரிக்கு வந்திருந்தனர். அவர்களின் நிலங்கள் தண்டகாரண்யத்துக்கு அப்பால், சர்மாவதி ஆற்றின் கரைகளில் அமைந்திருந்தன. அங்கே வேட்டையாடியும், மீன் பிடித்தும் அவர்கள் பெருகினர். கல்மாலைகளை அணிந்துகொண்டும், மலர்களாலான தலையணிகளைச் சூடிக்கொண்டும் வசந்தத்தில் மகிழ்ந்து கொண்டாடினர்ர். தங்கள் கைகளால் மென்மையான மரங்களைக் குடைந்து செய்த படகுகளில் சர்மாவதியில் மீன் பிடித்தனர். முதலைகளைக் கொன்று அந்தத் தோல்களை உரித்து பதப்படுத்தி ஆடையாக்கிக் கொண்டனர். மரத்தாலான மார்புக்கவசங்களை அணிந்துகொண்டு ஒருவருடன் ஒருவர் மற்போரிட்டனர்.

அவர்களின் காடுகளில் தேனும் அரக்கும் பிறபொருட்களும் நிரம்பியிருந்தன. சணலையும் மரப்பட்டைகளையும் நீரில் ஊறவைத்து நார்பிரித்து மரவுரி செய்து அவற்றை படகுகளில் வரும் வணிகர்களுக்கு விற்றார்கள் தேனும் அரக்கும் கொம்பும் தோலும் பிற மலைப்பொருட்களும் பெற்றுக்கொண்டு அவர்களுக்கு உப்பையும், கூரிய இரும்பு கத்திகளையும் கொவணிகர்கள் அளித்தார்கள். ஒளிரும் கற்களையும் வணிகர்கள் உப்புக்கு வாங்கிக்கொண்டனர்.

பின்னர் வடக்கே கங்கைக்கரையில் இருந்து படைகள் ஆண்டுதோறும் கிளம்பி அவர்களின் நிலங்களின்மேல் பரவின. எதிர்ப்பட்டவர்களை எல்லாம் கொன்று வீழ்த்தி பெண்களையும் ஆண்களையும் அடிமைகளாக பிடித்துக்கொண்டு சென்றனர். அதன்பின் வந்த படைகள் அந்நிலங்களிலேயே தங்கினர். காடுகளை எரித்து அழித்து மரங்களை வெட்டி அகற்றி விளைநிலங்களாக்கினர். காட்டை அழித்து புல்வெளிகளை உருவாக்கி அங்கே மந்தைகளாக மாடுகளை வளர்க்கலாயினர். மந்தை பெருகப்பெருக அவர்களுக்கு மேலும் மேலும் நிலம் தேவைப்பட்டது

மலைக்குடியினர் ஒவ்வொரு ஆண்டும் தங்கள் பழைய நிலங்களை கைவிட்டு பின்நகர்ந்து கொண்டே இருந்தனர். பின்நகர இடமில்லாதபோது அவர்கள் எதிர்த்துப் போரிட்டனர். போரில் முழுமையான அழிவு மட்டுமே மிஞ்சும் என்று கண்டபோது அங்கிருந்து கிளம்பி புதிய நிலங்களைத் தேடி அலையத் தொடங்கினார்கள். சிறு சிறு குழுக்களாக பெண்களையும் குழந்தைகளையும் மட்டும் கூட்டிக்கொண்டு அவர்கள் வாழ்விற்கான இடங்களைத் தேடிச் சென்றனர். தங்கள் பழையநிலங்களில் இருந்து அவர்கள் பாடல்களை மட்டுமே எடுத்துச் சென்றனர்.

காடுகளில் அவர்களால் நுழைய முடியவில்லை.  அங்கு ஏற்கனவே நிலைகொண்டுவிட்ட பழங்குடிகள் அம்புகளாலும் கண்ணிகளாலும் தங்கள் எல்லைகளை மூர்க்கமாகக் காத்து நின்றிருந்தனர். அவர்கள் நிலங்களுக்குள் நுழைய முற்பட்டபோது பல குழுக்கள் கொன்றழிக்கப்பட்டனர். விளைநிலங்களாக்கப்பட்ட பகுதிகள் எங்கும் அவர்கள் தலைகாட்ட முடியவில்லை. அக்கணமே அவர்கள் பிடிக்கப்பட்டு மூக்கும் செவிகளும் அறுக்கப்பட்டு அடிமைகளாகக் கொள்ளப்பட்டனர். பல ஊர்களில் பிடிபட்டவர்களின் நாக்கு அறுத்து மொழியற்றவர்களாக ஆக்கி விலங்குகள் போல விற்றனர்.

ஆகவே மீண்டும் மீண்டும் புதிய நிலங்களைத் தேடிச் சென்ற அவர்கள் நகரங்களிலேயே தங்களுக்கு இடம் இருப்பதைக் கண்டடைந்தனர். உஜ்ஜயினியிலும் காம்பில்யத்திலும் அவர்களுக்கு வாய்ப்புகள் இருந்தன. அந்நகரங்கள். வளர்ந்து விரிந்து கொண்டிருந்தன. அவற்றை கட்டி எழுப்பவும் தூய்மைப்படுத்தவும் பெருமளவுக்கு கைகள் தேவைப்பட்டன.

அந்நகர்களில் சமர்கள் என்று அவர்கள் அழைக்கப்பட்டனர். அவர்கள் வலுவான உடல் கொண்டவர்கள் அல்ல. சிறிய கரிய உடலில் கூடான நெஞ்சும்,சற்றே முன்வளைந்த தோள்களும் கொண்டிருந்தனர். பரவிய மூக்கும் சிறிய கண்களும் கொண்ட முகம். கற்களைத் தூக்கி நகரங்களைக் கட்டி எழுப்பும் பணிகளுக்கு அவர்கள் உதவமாட்டார்கள் எனபதனால் அவர்கள் தூய்மைப்பணிகளுக்கு அமர்த்தப்பட்டனர்.

ஏற்கனவே அங்கு திரண்டிருந்த தூய்மைப்படுத்தும் தொழில் செய்தவர்களை அங்குள்ளோர் சமர்கள் என்றனர். புதிதாக வந்தவர்களை அவர்களுடன் இணைத்துக் கொண்டு அப்பெயரை அவர்களுக்கும் வழங்கினார்கள்.நகரங்களில் சமர்கள் தங்கள் நினைவுகளிலிருந்த அனைத்து மகிழ்ச்சிகளையும் இழந்தனர். பகல் வெளிச்சம் என்பதையே மறந்தனர். அவர்களின் கண்கள் ஒளியை தாளமுடியாதவை ஆயின. அவர்களின் தோல் வெளிறி, புண்களும் தேமல்களும் கொண்டதாக ஆயிற்று. அவர்களின் விரலிடுக்குகளும் வாய்முனைகளும் வெந்திருந்தன. அவர்களின் உடலில் இருந்து அழுகும் மாமிசத்தின் வாடை எழுந்தது.

எனினும் அவர்கள் அங்கே வாழ்ந்தனர். ஏனென்றால் சாகாமல் உயிர் வாழ முடியும் என்றாயிற்று. குழந்தைகள் உணவு உண்ணமுடியும் என்றாயிற்று .அவர்கள் இரவுக்குரியவர்கள் என தங்களைச் சொல்லிக்கொண்டனர். நிசாசரர் என்னும் பெயர் நூல்களில் அவர்களுக்கு அமைந்தது. கராளர் என்று உள்ளூரில் சொன்னார்கள். அவர்கள் கராளி, சியாமை, பைரவன், காளராத்ரி போன்று இரவுக்கான தெய்வங்களை உருவாக்கிக்கொண்டனர். இரவுக்கான களியாட்டுகளும் பிறந்து வந்தன.

சமர்களின் மொழியில் ஒவ்வொன்றுக்கும் வேறு பெயர்கள் இருந்தன. நாள் எனும்போது அவர்கள் இரவைக் குறித்தனர். ஒளி எனும்போது தீயை. நிழல்நாள் என்றால் பௌர்ணமி. பிற நாட்களில் எப்போதுமே அவர்கள் தங்கள் நிழல்களுடன் ஆட முடிந்ததில்லை. இரவுகளில் பிரதிஷ்டானபுரியில் ஒளி இருப்பதில்லை. மாளிகைகளின் உப்பரிகைகளில் மட்டும் சிறு விளக்குகள் மின்னிக்கொண்டிருக்கும். கோட்டைகளின் முகப்பில் பந்தங்கள் எரியும். நகரத்தெருக்கள் முற்றிலும் இருண்டு இருக்கும் அவர்கள் அந்த இருளுக்குள் நிழல்கள் போல் வேலை பார்த்தாக வேண்டும். நிழல்கள் என்று அவர்களை பிறர் குறிப்பிட்டபோது அவர்கள் தங்களை அசைபவர்கள் என்று சொல்லிக்கொண்டனர். அவர்கள் ஒருவகையான பைசாகர்கள் என்றும், இறந்த மனிதர்களை அவர்கள் உண்கிறார்கள் என்றும் பிரதிஷ்டானபுரியில் மக்கள் நம்பினார்கள். அவர்களில் ஒருவரை கண்ணால் பார்த்தாலே நோயுறுவது உறுதி என்று சொல்லப்பட்டது.

அன்று காலை கூர்மன் தன் மனைவியுடனும் குழந்தைகளுடனும் பிரதிஷ்டானபுரியின் தெற்குப் பெருவீதியைத் தூய்மை செய்வதற்குச் சென்றான். தலைமுறைகளாக அவர்கள் செய்துவந்த பணி அது. அவனுடன் அப்பகுதிக்கு பொறுப்பான மேலும் எட்டு குடும்பத்தினர் சேர்ந்து கொண்டார்கள்.  விரிந்த சாலையின் ஓரத்தில் வட்டமாக அமர்ந்து அவர்கள் தாங்கள் கொண்டு வந்த உணவை உண்டார்கள். பொறுக்கி வைத்திருந்த பாக்குத் துண்டுகளை வாயிலிட்டு மென்றபடி துடைப்பங்களுடன் பணிகளுக்கு சென்றனர்.

கூர்மனிடம் அவன் தோழன் சப்தன் ”மீண்டும் வெற்றித்தூண் சாய்ந்துவிட்டது” என்றான். அது கூர்மனுக்கு ஒரு மெல்லிய நடுக்கத்தை அளித்தது. எந்த வகையிலும் அவனுடன் தொடர்புள்ளது அல்ல அது.  அவன் அந்தத் தூணை அதற்கு முன் பார்த்ததும் இல்லை. அப்பகுதியைத் தூய்மை செய்பவர்கள் அதை அவனிடம் சொல்லி அவன் கற்பனை செய்திருந்ததுதான். அரசர் சூர்யபுத்ர சதகர்ணி விந்திய மலை கடந்து சென்று தட்சிணத்தை வென்றதன் பொருட்டு நிலை நிறுத்தப்படவிருந்த வெற்றித்தூண் அது. நிகரற்ற தூணாக அது அமையவேண்டும் என அரசர் எண்ணினார்.

அதற்கான கொள்கையை அவருடைய சிற்பிகள் அவரது அரச குருவிடம் இருந்து பெற்றார்கள். அதன்பிறகு அவர்கள் விந்திய மலை மேலேறி அதற்கான கருங்கல்லை கண்டடைந்தனர். அங்கு அந்தக்கல் கோடு வரையப்பட்டு வெட்டி எடுக்கப்பட்டது. கோதாவரியின் நீர்ப்பெருக்கினூடாக தெப்பங்களில் அது இட்டு வரப்பட்டது. வரும் வழியிலேயே நான்கு முறை அது வெவ்வேறு இடங்களில் தடுக்கி நின்றது. மூன்று முறை தெப்பம் சரிந்து நீருக்குள் மூழ்கிச் சென்றது. அதை மீட்டு நகருக்குள் கொண்டு வருவதற்கு இரண்டு ஆண்டுகளுக்கு மேலாகியது.

பல காலமாக அதை சிற்பிகள் செதுக்கிக்கொண்டே இருந்தார்கள். அப்பகுதியை தூய்மை செய்த சமர்கள் ஒவ்வொரு முறையும் இரவில் அது எந்த அளவிற்கு செதுக்கப்பட்டது என்று பார்த்தார்கள். சேற்றுக்குள் புதைந்து கிடக்கும் மனிதன் ஒருவன் மேலெழுவது போல கல்லிலிருந்து அது புடைத்தெழுகிறது என்று ஒருவன் சொன்னான். அதிலுள்ள சிற்பச்செதுக்குகளை மணலில் வரைந்து அவர்கள் விளக்கினார்கள்.

“அவ்வளவு பெரிய கல்தூண் எப்படி நிற்கமுடியும்?” என்று கூர்மன் கேட்டான்.

“அதில் பாதிப்பகுதி மண்ணுக்குள் தான் இருக்குமாம். எஞ்சியது மட்டும் தான் மேலே இருக்கும் மண்ணுக்குள் இருக்கும் ஒரு பகுதியில் நூற்று எட்டு சிற்பங்கள் உள்ளன. அனைத்துமே பூதங்கள், பைசாசர்கள். அவர்களின் இளிப்பும் வெறிப்பும் கொடியதாக இருக்கிறது. மண்ணுக்குள் அதை எப்போதைக்குமாக இறக்கிவிட்டால் எத்தனை ஆண்டுகளாயினும் அந்த பிசாசுச் சிற்பங்கள் வெளிவரப்போவதில்லை. ஆனால் அவை அங்கிருக்கும். நாம் அவற்றைப் பார்க்கவில்லை என்றாலும் அவை நம்மைப் பார்த்துக்கொண்டிருக்கும்” என்று ஒருவன் சொன்னான்.

வெற்றித்தூணின் பணி முடிந்தபிறகு மூன்று மாதங்களுக்கு மேலாக அதை சிற்பிகள் நிலைநிறுத்த முயன்று கொண்டிருந்தனர். ஒவ்வொரு முறையும் அது ஏதேனும் ஒரு பக்கமாகச் சரிந்தது. ஒவ்வொரு முறையும் அதிலுள்ள பிழை என்ன என்று கண்டறிந்து அதை நிறுத்தும் பொறுப்பிலிருந்த சிற்பி தண்டிக்கப்பட்டார். ஆனால் மீண்டும் அது பிறிதொரு பக்கமாக சரிந்தது. விழும்போதெல்லாம் ஒரு சில சிற்பிகளை பலிகொண்டது. அங்கே மறைந்த சிற்பிகளின் ஆத்மாக்கள் சுற்றிவருவதாகவும், அவைதான் திரும்ப திரும்ப பலிகொள்கின்றன என்றும் சொல்லப்பட்டது.

”அந்த ஆத்மாக்களுக்கு என்ன தேவையென்று கேட்கவேண்டும்,அவை கேட்கும் குருதியை மொத்தமாகக் கொடுத்து அவை நிறைவடையச் செய்ய வேண்டும். அதன் பிறகுதான் அந்த தூணை நிலைநிறுத்த முடியும்” என்று முதியவராகிய சங்கன் சொன்னார்.

“அந்த தூணை நிலைநிறுத்த தேவர்கள் அனுமதிக்க மாட்டார்கள். ஏனென்றால் இந்த சாதவாகன அரசர்கள் அசுரகுடியில் தோன்றியவர்கள். இவர்களின் பழைய நகரங்களை தேவர்கள் அழித்தனர். இந்நகரமும் ஒருநாள் தேவர்களால் அழிக்கப்படும்” என்று இன்னொருவர் சொன்னார்.

அவர்கள் ஒவ்வொரு நாளும் அந்த தூணைப்பற்றிய செய்திகளை பேசிக்கொண்டே இருந்தார்கள். ஒரு கட்டத்தில் அதை எப்படி நிறுத்துவார்கள் என்பது அவர்கள் ஒவ்வொருவருக்கும்  உரிய அக்கறையாக மாறியது. அதை அவர்கள் நிறுத்தவே போவதில்லை என்று ஒருவன் சொன்னான்.

“இவர்களின் குலமூதாதையர்களாகிய அசுரர்களின் காலத்தில் இதற்கு நூறுமடங்கு பெரிய தூண்கள் நிறுத்தப்பட்டன. இவர்கள் வெறும் மானுடர்கள். அசுரர்களின் குருதி தங்களிடம் இருப்பதாகச் சொல்லிக் கொள்கிறார்கள் அதை வெளிக்காட்டுவதற்காகவே இவ்வளவு பெரிய தூணை நிறுத்த முயல்கிறார்கள். இதை ஒருபோதும் அவர்கள் நிறுத்தப்போவதில்லை” என்று கிழவியாகிய சமேலி சொன்னாள்.

ஒவ்வொருநாளும் நகரை கூட்டி குப்பைகளை அள்ளிக்கொண்டு திரும்பும்போதும் அவர்கள் அந்தப்பெரிய தூணைப்பற்றியெ பேசிக்கொண்டிருந்தார்கள்.  அவர்கள் எப்போதுமே அந்நகரின் மாளிகைகள், கோட்டைகள் பற்றியே பேசினார்கள். அரசர்களையும் அரசிகளையும் படைகளையும் பற்றிய தங்கள் கற்பனைகளை விரித்து முன்வைத்தனர். நகரத்தெருக்களில் கிடக்கும் குப்பைகள், புழுதியில் படிந்திருந்த காலடிச்சுவடுகள் ஆகியவற்றில் இருந்தே அவர்கள் அந்த வரலாறுகளை உருவாக்கிக்கொண்டனர். அந்த உரையாடல் அவர்களுக்கு ஒரு நிறைவை அளித்தது. தங்கள் சிறிய வாழ்க்கைக்கு அப்பால் சென்று பெரியவற்றைப் பேசிக்கொள்கிறோம் என்னும் பெருமிதம் எழுந்தது.

அன்று இருள் விலகுவதற்கு முன்னரே அவர்கள் தங்கள் குடில்களை அடைந்து உறங்கிக்கொண்டிருந்தபோது முரசுகள் முழங்கின. அவர்கள் விழித்துக்கொண்டு எழுந்து அமர்ந்தனர். முரசுகள் அங்கே ஒலிக்க வாய்ப்பே இல்லை. அவை தொலைவில் நகரத்தில் ஒலிப்பதாகவே அவர்கள் எண்ணினார்கள். அவர்கள் எழுந்து வெளிவருவதற்குள் படைவீரர்கள் அப்பகுதியை வளைத்துக்கொண்டனர் அவர்களுடன் வேட்டை நாய்களும் இருந்தன. அவர்களை சுற்றி வளைத்துக்கொண்ட நாய்கள் வெறியுடன் பற்களைக் காட்டி குரைத்தன. அஞ்சி நடுங்கி குழந்தைகளை நெஞ்சோடு அணைத்துக்கொண்டு அவர்கள் ஒரு சிறு திரளாக வட்டமாக அமர்ந்திருந்தனர்.

படைவீரர்கள் அவர்களை கயிறுகளை வீசி சுருக்குப்போட்டு பிடித்தனர். நூற்றெட்டு சமர் குலத்து ஆண்கள் அவ்வாறு பிடிக்கப்பட்டார்கள். அவர்கள்  ஒற்றைக்கூட்டமாக சேர்த்துப் பிணைக்கப்பட்டு குதிரை வீரர்களால் இழுத்துச் செல்லப்பட்டனர். அலறியபடியும் தடுக்கிவிழுந்து எழுந்தபடியும் அவர்கள் இழுபட்டுச் சென்றனர். நகர எல்லைக்குள் நுழைவதற்கு முன் அவர்கள் மேல் மஞ்சள் நீர் கொட்டப்பட்டு உடல் தூய்மை செய்யப்பட்டது.

அவர்கள் அந்த வெற்றித்தூண் இருந்த பகுதியை சென்றடைந்தனர். அன்று நகரில் எவருமே வெளியே வரக்கூடாது என்று அரசாணை இருந்தது. ஆகவே நகர் முற்றிலும் ஒழிந்து கிடந்தது. வெற்றித்தூணின் அருகே ஆபிசாரக் கடன்களைச் செய்யும் பூசகர்கள் பன்னிருவர் நின்றிருந்தனர். நீண்டு இடைவரைத் தொங்கும் சடைக்கற்றைகளும், சடைபிடித்த தாடியும், வெறிஎழுந்த சிவந்த கண்களும் கொண்டவர்கள். புலித்தோல் இடையாடை அணிந்து தோளில் கரடித்தோல் போர்த்தியவர்கள். அவர்களுடன் அவர்களின் உதவியாளர்கள் இருபதுபேர் நின்றிருந்தார்கள்.

அங்கே காலைமுதல் தொடங்கிய பூசை ஒன்று நிகழ்ந்துகொண்டிருந்தது. முதியவராகிய ஆபிசாரகர் ஒருவர் அதைச் செய்துகொண்டிருந்தார். அவர் கைகாட்டியதும் கட்டி இழுத்துக் கொண்டுவரப்பட்ட சமர்களில் ஒருவனை அவிழ்த்து உந்தி முன்னால் கொண்டுசென்றனர். அவனை பிடித்து குனியவைத்து கைகளைப் பின்னால் சேர்த்துக் கட்டினர். அவன் பின்னால் நின்ற ஒருவன் அவன் கழுத்தின் இரண்டு ரத்தக்குழாய்களையும் சிறுகத்தியால் வெட்டினான். ஊற்றுபோல பீரிட்ட ரத்தம் ஒரு குடத்தில் பிடிக்கப்பட்டது.

ரத்தக்குழாய் வெட்டுபட்டவனின் உடல் துள்ளித்துடித்தது. மூச்சுக்காற்றுடன் கலந்த குழறல்கள் ஒலித்தன. ரத்தம் முழுமையாக வெளிவருவதற்காக அவன் உடலை பின்னிலிருந்து தூக்கி தலைகீழாகப் பிடித்தனர். பிற சமர்கள் ஓலமிட்டுக் கதறி திமிறினார்கள். சிலர் மயங்கிவிழுந்தனர். ஒவ்வொருவராக இழுத்துச்செல்லப்பட்டு ரத்தம் எடுக்கப்பட்டது. பாதி செத்த சடலங்கள் அப்பால் ஒரு மாட்டுவண்டியில் குவிக்கப்பட்டன. அவை ஒன்றன்மேல் ஒன்றாக கிடந்து அதிர்ந்துகொண்டிருந்தன. அந்த வண்டி கோதாவரிக்கரைக்குக் கொண்டு செல்லப்பட்டது.  அவர்கள் பேய்களாகி திரும்பிவராமலிருக்கும் பொருட்டுஉடல்கள் எரியூட்டப்பட்டன.

பதினெட்டு குடங்களில் நிறைந்த மனிதரத்தம் ஊற்றப்பட்டு மந்திரகோஷத்துடன் அந்த வெற்றித்தூண் மும்முறை கழுவப்பட்டது. மறுநாள் அந்தத் தூணை சிற்பிகள் தூக்கி நிறுத்தினார்கள். அது உறுதியாக நிலைகொண்டது. “இனி இந்த யுகத்தின் முடிவு வரை இந்தத் தூண் இங்கே நிற்கும். சாதவாகனர்களின் வெற்றியை அறைகூவிக்கொண்டே இருக்கும்” என்று ராஜகுரு கபிலதேவர் சொன்னார்.

அந்நிகழ்வுக்குப் பின்னர் சர்மாவதிக்கரையில் இருந்து வந்த சமர்களின் நூறு குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் நோயுறத் தொடங்கினார்கள். அவர்கள் அஞ்சி நடுங்கி இரவுகளில் விழித்துக் கொண்டனர். சிலர் கோதாவரியில் பாய்ந்து உயிர்விட்டனர். பலர் காய்ச்சல்களில் மறைந்தனர். ஒருவன் இரவில் நகரில் இருந்த துர்க்கையன்னையின் கோயிலைச் சூழ்ந்திருந்த கோட்டைமேல் ஏறி காவலனின் ஈட்டிமேல் குதித்து செத்தான். இருவர் காவலர்கள் மேல் பாய்ந்து அவர்களை கடிக்கமுயன்றனர். அவர்கள் வெட்டி வீழ்த்தப்பட்டாலும் அதில் ஒரு காவலன் நோயுற்று சிலநாட்களுக்குப் பின் உயிர்விட்டான்.

அக்குடியினரை அங்கே வைத்திருப்பது மேலும் சிக்கல்களைக் கொண்டுவரும் என்று அரசவையில் விவாதிக்கப்பட்டது. அமைச்சர்கள் அக்குடியினரை நகரின் எல்லைக்கு அப்பால் கொண்டுசென்று விட்டுவிடலாம் என்று சொன்னார்கள். ஆனால் அரசகுரு அப்படி ஒரு சிலர் விடுவிக்கப்பட்டால் எஞ்சிய சமர்களிடம் வேலைவாங்க முடியாது என்றார். என்ன செய்வது என்று முடிவெடுக்கும்படி அரசரிடம் கோரப்பட்டது.

அரசர் சூர்யபுத்ர சதகர்ணி வந்து அமர்ந்து தாம்பூலம் கொண்டதுமே இருதரப்பும் சொல்லப்பட்டு அந்த கேள்வி அவர் முன்னால் வைக்கப்பட்டது. அவர் கையசைத்து துப்பும் கலத்தை அருகே காட்டச் சொல்லி துப்பிவிட்டு “அவர்களில் எவரும் உயிருடன் இருக்கவேண்டியதில்லை” என்று சொன்ன பிறகு அன்றைய ஓலைகளை வாசிக்கும்படி கைகாட்டினார். அவை பிற செய்திகளுக்கு திசைதிரும்பியது.

“திரும்பத் திரும்ப நிகழும் கதை இது” என்று நான் சுத்யும்னனிடம் சொன்னேன். பொத்தி வைத்த என் கையை விழிகளால் சுட்டிக்காட்டி “இந்த கதையின் வினா இதுதான். இதற்குப் பதில் சொல்லி என் கையை வெல்க. இல்லையேல் இங்கிருந்து நீ கிளம்பமுடியாது” என்றேன். “சமர்கள் அவ்வாறு கொல்லப்பட்டமைக்குக் காரணம் என்ன?”

அவன் தன் கையை என் கைமேல் வைத்து “ஆணையிட்டவன் அவர்களைப்போலவே நிஷாதனாகிய என் வம்சத்தைச் சேர்ந்தவன் என்பதுதான்” என்றான்.

“உண்மை, நீ வென்றுவிட்டாய்” என்று நான் சொன்னேன். “நீ என்னிடம் ஒரு கேள்வி கேட்கும் உரிமையை அடைந்துவிட்டாய்”

சுத்யும்னன் என்னை பார்த்தபோது அவன் கண்கள் மங்கலடைந்தன. சற்றுநேரம் யோசித்தபின் “கானபூதி என்னும் பிசாசே, இது என் கேள்வி. புகழ், வெற்றி அனைத்தும் உச்சமடையும்போது ஒரு புள்ளியில் வீழ்ச்சி தொடங்குகிறது. என் ரத்தத்தில் இருந்து முளைக்கும் இந்த சாதவாகனர்களின் அரசு வீழ்ச்சியடையத் தொடங்கும் அந்த முதல்புள்ளி எது?” என்றான்.

“நான் அக்கதையைச் சொல்கிறேன். அதில் உனக்கான விடை இருக்கும். அதன் கேள்விக்கு நீ பதில் சொன்னாய் என்றால் நீ விரும்பியதை நான் செய்வேன்” என்றேன்.

“நான் விரும்புவது ஒன்றுதான், அந்தக் கதையை நீ திருத்தியமைக்கவேண்டும் என்பேன். அந்த வீழ்ச்சியின் புள்ளியை மேலும் பலநூறாண்டுகளுக்கு தள்ளி வைப்பேன்” என்று அவன் புன்னகையுடன் சொன்னான்.

“கேள்” என்று நான் சொன்னேன். என் இரு கைகளையும் மண்ணில் பதித்து “கதைசொல்லும் பிசாசாகிய நான் நான் சொல்லவிருக்கும் இந்த இருகதைகளும் இரு கேள்விகளாகத் திரள்வதைக் கவனி” என்றேன்.

(மேலும்)

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on May 31, 2025 11:33

May 30, 2025

ஆனந்தவிகடன் பேட்டி

எது உங்களை தொடர்ந்து எழுதவைக்குது? அந்த தூண்டுதல் என்னன்னு சொல்ல முடியுமா?

அடிப்படையிலே அந்தத் தூண்டுதல் ஒண்ணுதான். ஆனா ஒவ்வொரு வயசிலேயும் அதை வேற வேறயா புரிஞ்சுக்கறோம்.சின்னப்பையனா இருந்தப்ப நான் என்னை இந்த உலகுக்கு நிரூபிக்கணும்கிறதுக்காக எழுதினேன். அப்றம் புகழ், அடையாளம் எல்லாத்துக்காகவும் எழுதினேன். இந்த வயசிலே ஒரே காரணத்துக்காகத்தான், செயலிலே உள்ள இன்பத்துக்காகவும் நிறைவுக்காகவும். 

உண்மையிலே இதுதான் அடிப்படையான காரணம். இந்த உலகத்திலே இருக்கிற எல்லாமே செயல்வடிவா இருக்கு. செயலற்றிருக்குதுன்னு நமக்கு தோணுற கல்லு, மலை எல்லாமே செயல்வடிவாத்தான் இருக்கு. செயலிலேதான் நம்மோட நிறைவு இருக்கமுடியும். 

நமக்குன்னு ஒரு செயல் இருக்கு. நம்ம மனசு முழுசா குவிஞ்சு நம்ம ஆற்றல் முழுசா வெளிப்படுற இடம் எதுவோ அதுதான் நம்மோட செயல். அது எனக்கு இலக்கியம், தத்துவம் ரெண்டும்தான். இப்ப நான் எழுதுறது அதனாலே மட்டும்தான். மனித அறிவுங்கிறது ஒரு பெரிய பிரவாகம். நான் ஒரு துளியை அதிலே சேர்க்கிறேன். அதுக்காகத்தான் வந்திருக்கேன்னு தோணுது. அதைச் செய்றப்ப எனக்கு நிறைவு வர்ரது அதனாலேதான்.

எழுத்தாளனைச் சமூகம் கொண்டாடலைன்னு பலபேர் சொல்றாங்க. எழுத்தாளனை ஏன் சமூகம் கொண்டாடணும்?

ஒரு சமூகம் எதை, யாரை முன்னுதாரணமா கொண்டிருக்குங்கிறதுதான் அந்த சமூகம் எப்படிப்பட்டதுங்கிறதுக்கான ஆதாரம். இப்ப நாம யாரை கொண்டாடுறோம்?  சினிமாநடிகர்களையும் அரசியல்வாதிகளையும்தான் இல்லையா? அந்த சினிமாநடிகர்கள் வெறும் பிம்பங்கள். அரசியல்வாதிகள் ஊழல், குற்றம் ,சாதிவெறி, மதவெறி வழியா அதிகாரத்தை அடையறவங்க. அப்ப அவங்களை முன்னுதாரணமா நம்ம குழந்தைகள் முன்னாடி நிறுத்துறோம். நம்ம குழந்தைங்க ரீல்ஸ்லே மூழ்கி கிடக்கிறாங்கன்னா அதுக்கு இதான் காரணம். பள்ளிக்கூட பையன் அரிவாள் எடுத்து இன்னொரு பையனை வெட்டுறான்னா இதான் காரணம்.

இந்தச் சென்னையிலே அரசியல்வாதிங்களுக்கு எவ்வளவு சிலை இருக்கு. சினிமாக்காரங்களுக்கு எவ்வளவு சிலை இருக்கு. கணிதமேதை ராமானுஜனுக்கு ஒரு சிலை இருக்கா? இலக்கியமேதை புதுமைப்பித்தனுக்கு ஒரு ஞாபகச்சின்னம் உண்டா? அறிவை வழிபடுற ஒரு சமூகம் அவங்களைத்தானே கொண்டாடும். அவங்களைத்தானே தன்னோட பிள்ளைங்களுக்கு முன்னுதாரணமா காட்டும்? உலகநாடுகள் முழுக்க அந்த ஊர் அறிஞர்களையும் எழுத்தாளர்களையும்தான் சிலைவைச்சு கொண்டாடுறாங்க. நாம அப்டி செய்றதில்லையே. நீங்க களையை விதைக்கிறீங்க, பயிர் விளையணும்னு எதிர்பார்க்கிறீங்க.

சமகாலத்திலே எழுத்தாளனை கொண்டாடணும்னா அவனை போற்றிப் புகழணும்னு அர்த்தம் இல்லை. அவன் முக்கியமானவன்னு உணரணும்னு அர்த்தம். அவனோட எழுத்துக்களைப் படிக்கிறது அவன் புத்தகங்களை வாங்கி ஆதரிக்கிறதுதான் அவனைக் கொண்டாடுறது. அவன் எழுத்தை நம்பிக்கையோட செய்யணும். எழுத்துக்கான ஆதரவு கொஞ்சமாவது சமூகத்திலே இருக்கணும். கம்பனை சடையப்ப வள்ளல் ஆதரிச்சதனாலேதான் கம்பராமாயணம் உண்டாச்சு. கடந்த காலத்திலே மன்னர்கள் ஆதரிச்சாங்க. இப்ப மன்னர்கள் இல்லை. இப்ப மக்கள்தான் மன்னர்கள். அதைத்தான் இலக்கியவாதியை கொண்டாடுறதுன்னு சொல்றோம்.

அப்டி கொண்டாடுறப்ப நாம கொண்டாடுறது இலக்கியத்தையும் அறிவையும்தான். அதை நம்ம பிள்ளைங்களுக்கு முன்னுதாரணமா காட்டுறோம். அப்பதான் அவங்களிலே இருந்து எழுத்தாளர்களும் சிந்தனையாளர்களும் உருவாகி வருவாங்க. 

என் அம்மா எனக்கு வைக்கம் முகமது பஷீரைத்தான் உதாரணமாச் சுட்டிக்காட்டினாங்க. அவரை மாதிரி ஆகணும்னுதான் நான் எழுத்தாளன் ஆனேன். இன்னிக்கு என் புத்தகம் அமெரிக்காவிலே புகழ்பெற்ற பதிப்பகங்களாலே வெளியிடப்படுது. அந்த மேடையிலே நின்னுட்டு நான் தமிழிலக்கியம் பத்தி பேசறேன். அவங்க தமிழ்ங்கிற வார்த்தையையே கேள்விப்பட்டதில்லை. அங்க நம்ம மொழியையும் பண்பாட்டையும் கொண்டுபோயி நிறுத்துறேன். தொடக்கம் என் அம்மா வைக்கம் முகமது பஷீரை கொண்டாடினதுதான். இன்னிக்கு எழுத்தையும் எழுத்தாளரையும் கொண்டாடுங்க, நாளைக்கு உங்க பிள்ளைங்க உலக அரங்கிலே போயி நிப்பாங்க.

ஆனா இதை இங்க உள்ள அரசியல்வாதிங்களும் அவங்களோட அடிவருடிக் கும்பலும் ஒத்துக்க மாட்டாங்க. ஜனங்க இலக்கியவாதியையோ அறிவாளியையோ கொண்டாட ஆரம்பிச்சா அவங்களோட அதிகாரம் அழிய ஆரம்பிச்சிரும்னு பயப்படுவாங்க. இலக்கியவாதியை எல்லாம் கொண்டாடவேண்டாம்னு சொல்லுவாங்க. சரி, யாரைக் கொண்டாடணும்னு கேட்டா எங்களைக் கொண்டாடுங்கன்னு சொல்லுவாங்க… அவங்க கிட்டதான் அதிகாரம் பணம் எல்லாம் இருக்கு. அதனாலே தெருத்தெருவா சிலைவைச்சு, மண்டபம் கட்டி, மேடைபோட்டு பேசி அவங்களே அவங்களை கொண்டாடிக்கிடுவாங்க. வேற மாதிரி சிந்திக்கவே ஜனங்களை விடமாட்டாங்க. கொஞ்சபேராவது இவங்க உருவாக்குற இந்த மாயையிலே இருந்து வெளிவரணும். அதிகாரத்தை கொண்டாடுறதை விட்டுட்டு அறிவை கொண்டாடணும். 

அறமதிப்பீடுகள் குறைஞ்சிட்டே வர்ர இந்தச் சூழலை எப்டி மதிப்பிடுறீங்க?

நான் திரும்பத் திரும்பச் சொல்றதுதான், அறமதிப்பீடுகள் குறைஞ்சிட்டு வருதுன்னு சொல்றது ஒரு அப்பட்டமான பொய். அது ஒரு மாயை. நேத்தைக்கு என்னென்ன அறமதிப்பீடுகள் இருந்திச்சோ அதைவிட இன்னிக்கு பல மடங்கு அறமதிப்பீடு வளர்ந்திருக்கு. இன்னும் வளரும். இதான் வரலாற்றை பாக்கத்தெரிஞ்சவன் உறுதியாச் சொல்லும் உண்மை.

நேத்து இருந்த அற மதிப்பீடு என்ன? தீண்டாமை, சாதிவெறி, ஈவிரக்கம் இல்லாத உழைப்புச் சுரண்டல் இதெல்லாம்தானே? அந்திவரை வேலை செஞ்சுட்டு கூலிக்கு நடையாநடந்த காலம்தான் அறம் வாழ்ந்த காலமா? பண்ணையடிமை முறை, பட்டினி இதெல்லாம் அறமா?

நேத்து அறம் வாழ்ந்ததுன்னு சொல்றவன் யார்? உயர்சாதிக்காரன், பரம்பரையா உக்காந்து தின்னவன் சொல்லலாம். இப்பதான் உழைக்கிறவங்களுக்கு முறையா ஊதியம் இருக்கு. அவனும் பட்டினி இல்லாம வாழ முடியுது. அவன் பிள்ளைங்க பள்ளிக்கூடம் போகுது, படிச்சு முன்னேற வாய்ப்பிருக்கு. அவன் சொல்ல மாட்டான்.

இப்பதான் மனுஷன் எல்லாமே சமம்ங்கிற சிந்தனை வந்திருக்கு. பெண்களுக்கு உரிமைகள் வந்திருக்கு. குழந்தைகளை கொடுமைப்படுத்தக்கூடாதுங்கிற எண்ணமே ஒரு தலைமுறையாத்தான் வந்திருக்கு. நம்ம அம்மாக்கள் அப்பாக்களுக்கு அடிமையா வாழ்ந்தாங்க. இன்னிக்குள்ள பெண்கள் சுதந்திரமா இருக்காங்கன்னா அதுக்குக் காரணம் அ.மாதவையா முதல் பாரதி, புதுமைப்பித்தன் வரையிலான எழுத்தாளர்களும் சிந்தனையாளர்களும் நம்ம சிந்தனையை மாற்றினதுதான். 

அறமதிப்பீடுகள் வளர்ந்திருக்குன்னா அதுக்குக் காரணம் மார்க்ஸ் முதல் காந்தி வரையிலான சிந்தனையாளர்கள்தான். திருவள்ளுவர் முதல் ஜெயகாந்தன் வரையிலான எழுத்தாளர்கள்தான். அவங்களோட பங்களிப்பாலேதான் நாம் இன்னிக்கு வாழுறோம். அதை கொஞ்சம்கூட உணராம என்னமோ நேத்து எல்லாமே சரியா இருந்ததுன்னு சொல்றது நன்றிகெட்டத்தனம்.

ஆமா, அறமதிப்பீடுகள் இன்னும் வளரணும். இன்னும் நெறைய மாறணும். அதுக்காகத்தான் இன்னிக்கு எழுதிக்கிட்ருக்கோம். எழுதிக்கிட்டேதான் இருப்போம்.

தொடர்ச்சியா நெறைய எழுதுறீங்க. தரமாகவும் எழுதறீங்க. எப்டி இது சாத்தியமாகிறது?

செய்க தவம்னு பாரதி சொன்னான். எது உங்க செயலோ அதை முழுமூச்சா செய்றதுதான் தவம். எனக்கு எழுத்து தவம்தான். முன்னாடி ஒருமுறை சொன்னேன். புத்தருக்கு தியானம் எதுவோ அதுதான் எனக்கு இலக்கியம்னு. எனக்கு கவனக்கலைவு கெடையாது. நேரவிரயம் கெடையாது.

நான் நெறைய எழுதுறேன், உண்மை. ஆனா உலக இலக்கியத்திலே மாஸ்டர்ஸ்னு நாம சொல்ற அத்தனைபேரும் என்னைவிட எழுதினவங்கதான். 51 வயசிலே செத்துப்போன பிரெஞ்சு எழுத்தாளர் பால்ஸாக் என்னைவிட அரைப்பங்கு ஜாஸ்தியா எழுதியிருக்கார். கொஞ்சம் இலக்கிய ரசனையும், கொஞ்சம் உலக இலக்கிய அறிமுகமும் உள்ள யாருக்கும் தெரியுறது ஒண்ணு உண்டு- நான் தமிழிலே எழுதினாலும் இன்னிக்கு உலக அளவிலே எழுதிட்டிருக்கிற முக்கியமான இலக்கியவாதிகளிலே ஒருவன்.  

ஏன் நெறைய எழுதுறாங்க பெரிய இலக்கியவாதிகள்? ஏன்னா அவங்க மத்தவங்களை சந்தோஷப்படுத்த எழுதுறதில்லை. சொந்த வாழ்க்கைச்சிக்கல்களை மட்டும் எழுதுறதுமில்லை. அவங்களுக்குச் சில அடிப்படையான தத்துவக் கேள்விகள் இருக்கு. அதை ஒருபக்கம் சரித்திரத்திலே வைச்சு பார்க்கிறேன். இன்னொரு பக்கம் மனிதசிந்தனையோட பாரம்பரியத்திலே வைச்சு பார்க்கிறேன். இன்னொரு பக்கம் நம்ம பண்பாட்டிலே வைச்சுப் பார்க்கிறேன். அப்ப அது விரிஞ்சுகிட்டே போகும். அதனாலே எழுதித்தீராது. எழுத்தோட தரம் கூடிட்டே தான் போகும்.

சலிப்பில்லாத மொழி, திடமான ஒரு ஸ்டைல் இவ்ளவு சிறப்பா எப்டி வசப்பட்டுது? 

மொழிநடை அல்லது ஸ்டைல்னா என்ன? நம்ம மனசுக்குள்ள ஒரு உரையாடல் ஓடிட்டே இருக்கு இல்லை? நம்ம கைரேகை போல ஒவ்வொருவருக்கும் அது ஒரு மாதிரி. நம்ம நடை அந்த மனமொழியா ஆயிட்டுதுன்னா அதான் நம்ம ஸ்டைல். ஆனால் அதை அடையறது ரொம்ப கஷ்டம். ஏன்னா நாம பேசுற, எழுதுற மொழி வெளியே இருந்து வர்ரது. அது பொதுவான மொழியாத்தான் இருக்கும். அந்த பொதுமொழிய நம்ம மொழியா மாத்தணும்னா நமக்குள்ள நாம போய்ட்டே இருக்கணும். கூடவே எழுதுற மொழிய பயிற்சி பண்ணிட்டே இருக்கணும்.

ஆனா அந்த அகமொழி கூட ஒரே மாதிரி ஆயிட வாய்ப்பிருக்கு. அப்ப நம்ம அகமொழியை நாம மாத்தணும். அதுக்கு தொடர்ச்சியா வாசிக்கணும். தொடர்ச்சியா வேற வேற அறிவுக்களங்களுக்குள்ள போய்ட்டே இருக்கணும். விஷ்ணுபுரம் எழுதுறப்ப நான் ஆலயக்கலை மரபுக்குள்ள மூழ்கி கிடந்தேன். கொற்றவை எழுதுறப்ப பழந்தமிழ் இலக்கியத்திலே வாழ்ந்தேன். பின் தொடரும் நிழலின் குரல் எழுதுறப்ப ரஷ்ய இலக்கியத்திலே இருந்தேன். இப்ப வரலாற்றுக்கு முன்னாடி இருக்கிற குகைஓவியங்களிலேயும் கற்காலத்து சின்னங்களிலேயும் வாழ்ந்திட்டிருக்கேன். அதுக்கேற்ப மொழி மாறிடுது. அதான் அது சலிக்காமலேயே இருக்கு.

நல்ல எழுத்தை எழுதணும்னா எழுத்தாளனா முழுமூச்சா வாழணும். அதுதான் ரகசியம்.

போதிய கருத்துச் சுதந்திரம் உங்களுக்கு இருக்குன்னு நினைக்கிறீங்களா?

இந்தியாவைச் சுத்தி இருக்கிற மத்த நாடுகளோட ஒப்பிட்டுப்பாத்தோம்னா கண்டிப்பா முழுமையான கருத்துச் சுதந்திரம் இருக்கு. இங்க எழுத்தாளனை ஜெயிலுக்கு அனுப்புறதில்லை. புத்தகங்களை தடை பண்றதில்லை. தணிக்கை இல்லை.

ஆனா சில்லறை அரசியல்வாதிகள் உருவாக்குற நெருக்கடி இருக்கு. இப்ப நான் கம்யூனிச சிந்தாந்தத்த அல்லது திராவிட இயக்கச் சிந்தனையை விமர்சிச்சா உடனே என்னை சங்கின்னு சொல்லி முத்திரையடிப்பாங்க. சங்கிகளையும் கூடவே விமர்சிக்கிறேன். அவங்க என்னை தேசத்துரோகின்னும் விலைபோனவன்னும் சொல்லுவாங்க.

’எங்ககூட நின்னு நாங்க சொல்றத அப்டியே எழுது, இல்லாட்டி நீ எங்க எதிரியோட ஆளு’ இதான் நம்ம அரசியல்வாதிங்களோட அணுகுமுறை. அவங்க உருவாக்குற காழ்ப்புங்கிறது இங்க பெரிய பிரச்சினைதான். அவங்களுக்கு பெரிய ஆள்பலமும் பணபலமும் உண்டு. அதனாலே அவதூறு பண்றது ஈஸி. அதான் அவங்களோட ஆயுதம். அதைவைச்சு பயமுறுத்துறாங்க.

ஆனா நான் வாசகர்களை நம்பறேன். அவங்க எப்டியும் எங்கிட்ட வந்து சேந்திருவாங்கன்னு நினைக்கிறேன். தொண்ணூறு பேர் அரசியல் பிரச்சாரங்களை நம்பலாம், பத்துபேர் புத்தகங்களை வாங்கி வாசிச்சு நம்மகிட்ட வருவாங்க… அதான் நடந்திட்டிருக்கு.

அறுபது வயதுக்குமேல் டால்ஸ்டாய் , தாகூர் மாதிரியானவங்க உச்சகட்ட படைப்புகளைக் குடுத்திருக்காங்க… உங்களோட புதிய படைப்பு என்ன?

உண்மையிலே பாத்தா ஐம்பதை ஒட்டின வயசிலேதான் பெரிய படைப்புகளை மாஸ்டர்ஸ் எழுதியிருக்காங்க. என்னோட ஐம்பது வயசிலேதான் நான் வெண்முரசு எழுதறேன். மகாபாரதததை ஒட்டி எழுதின 26 நாவல்கள் வரிசையா… உலகிலேயே பெரிய இலக்கியப்படைப்பு அதுதான். 

ஆனா அதை எழுதி முடிச்சதுமே ஒருநாளைக்கு ஒரு கதை வீதம் 136 கதைகளை எழுதினேன். 13 தொகுதிகளா வந்திருக்கு. அப்றம் சின்ன நாவல்கள் அஞ்சு எழுதினேன்.

இப்ப கடல் நாவல் வெளிவரப்போகுது. கடல் சினிமாவுக்காக நான் ஒரு நாவல் வடிவத்தைத்தான் எழுதி மணி ரத்னத்துக்கு குடுத்தேன். பெரிய நாவல், அறுநூறு பக்கம் வரும். அந்த நாவல் புத்தகமா இப்பதான் வரப்போகுது.

இன்னொரு நாவல் எழுதிட்டிருக்கேன். காவியம்னு பேரு. இந்தியாவிலே உள்ள காவியமரபோட உண்மையான ஆழம் என்னன்னு ஆராயற ஒரு நாவல். நாவல் நடக்குற இடம் பிரதிஷ்டானபுரின்னு ஒரு பழைய நகரம். இப்ப அதோட பேரு பைத்தான். அங்கே போயி தங்கி எழுத ஆரம்பிச்சேன்… 

தமிழ் இலக்கியம் உலக அளவிலே மதிக்க்கப்படுதா? தமிழ் இலக்கியத்துக்கு இன்னிக்கு இந்திய அளவிலேயாவது இருக்கிற இடம் என்ன?

என்னோட அறம்ங்கிற புத்தகம் பிரியம்வதா ராம்குமார் மொழிபெயர்ப்பிலே இங்கிலீஷ்லே வந்தது. Stories of the true ன்னு புத்தகத்தோட பேரு. மிகப்பெரிய அளவிலே வரவேற்பு கிடைச்ச புத்தகம் அது. அமெரிக்காவிலே உள்ள American Literary Tranlaters Assocoation ங்கிற அமைப்பு உலக அளவிலே ஆங்கிலத்திலே செய்யப்படுற இலக்கிய மொழிபெயர்ப்புக்கு விருது குடுக்குது. நாற்பது உலகமொழிகளிலே இருந்து இறுதிப்பட்டியலுக்குத் தேர்வுசெய்யப்பட்ட ஆறு புத்தகங்களிலே ஒண்ணா என்னோட புத்தகம் இருந்தது. 

ஆனா அந்த விருது வியட்நாம் நாவலுக்குப் போச்சு. அந்த விருதுவிழாவுக்கு பிரியம்வதா போயிருந்தாங்க. அங்க உள்ளவங்க தமிழ்ங்கிற மொழியைப்பத்தியே கேள்விப்பட்டிருக்கலை. ஆனா வியட்நாம் மொழியிலே இருந்து நூத்துக்கணக்கான புத்தகங்கள் ஆங்கிலத்திலே வந்திருக்கு. அந்த புத்தகங்களை வாசிச்சு வாசிச்சு அந்தக் கலாச்சாரம் அங்க உள்ள வாசகர்களுக்குத் தெரிஞ்சிருந்தது. அதனாலே அந்த நாவலை அவங்க கூடுதலா ரசிச்ச்சாங்க. வியட்நாம் கூட அமெரிக்கா போர் புரிஞ்சதனாலே வியட்நாம் பத்தி தெரிஞ்சிருக்குன்னு வைச்சுக்கலாம். அந்தவகையான அறிமுகம் தமிழுக்கு இல்லை.

தமிழிலே இருந்து இலக்கியங்கள் அமெரிக்காவிலே சர்வதேசப்பதிப்பா வர்ரது அனேகமா கிடையாது. சின்ன பதிப்பகங்கள் போட்ட புத்தகங்களே ஒண்ணுரெண்டுதான் அங்க வந்திருக்கு. ALTA விருதுக்குப் பிறகு என்னோட அறம் கதைகளோட மொழியாக்கமான Stories of the true ங்கிற சிறுகதைத் தொகுப்பும் வெள்ளையானை நாவலோட மொழியாக்கமான The white elephant ங்கிற புத்தகமும் அமெரிககவோட முக்கியமான பதிப்பகமான FSG நிறுவன வெளியீடா சர்வதேசப்பதிப்பா வருது. ஏழாம் உலகம் நாவலோட மொழிபெயர்ப்பு The Abyss ங்கிற பேரிலே Transit பதிப்பகம் வழியா அமெரிக்காவிலே சர்வதேசப் பதிப்பா வெளிவருது. இது தமிழுக்கு பெரிய தொடக்கம். 

ஆனா இந்த புத்தகங்களுக்கு நாம அங்க ஒரு வாசிப்பை உருவாக்கி எடுக்கணும். இயல்பா அவங்களாலே நம்ம இலக்கியத்தை வாசிக்க முடியாது. ஏன்னா நம்ம கலாச்சாரமே அவங்களுக்குத் தெரியாது. நம்ம நாட்டை அவங்க மேப்பிலேதான் பாக்கணும். அதிலே தமிழ்நாடுன்னு தனியா ஒரு ஏரியா இருக்குன்னு எடுத்துச் சொல்லணும். அதனாலே இங்கேருந்து நெறைய புத்தகங்கள் அங்க போகணும். அவங்க நெறைய வாசிக்க வாய்ப்பு இருக்கணும். அப்டிபோகணும்னா இந்த புத்தகங்கள் நெறைய விக்கணும். நான் எப்பவுமே தமிழோட நல்ல படைப்புகளை எல்லாம் தொடர்ச்சியா எல்லா மேடைகளிலேயும் முன்வைக்கிறவன்.

துருக்கி, கொரியா, ஜப்பான் படைப்புகள் அமெரிக்காவிலே நூற்றுக்கணக்கிலே வருது. நோபல் பிரைஸ் கூட வாங்குது. ஏன்னா அமெரிக்காவிலே வாழுற புலம்பெயர்ந்த துருக்கி, கொரியா, ஜப்பான் மக்கள் அந்த ஆங்கில மொழிபெயர்ப்புகளை வாங்குறாங்க. அதிலேயே ஒரு அடிப்படையான விற்பனை அமைஞ்சிருது. அதனாலே பதிப்பகங்கள் நம்பி புத்தகங்களை போடுறாங்க. தமிழ் ஜனங்களும் அதேபோல இந்த புத்தகங்களை வாங்கினா ஒரு பெரிய திருப்பம் உண்டாகும்.

ரெண்டு காரணத்துக்காக இந்த புத்தகங்களை அவங்க வாங்கணும். ஒண்ணு, அங்க பிறந்து வளர்ந்த தமிழ்ப்பிள்ளைகளுக்கு நம்ம பண்பாட்டையும் இலக்கியத்தையும் அறிமுகம்பண்ண இதான் வழி. இன்னொண்ணு, தமிழ் இலக்கியம் உலக அரங்கிலே அறியப்பட்டாத்தான் தமிழர்களுக்குப் பெருமை.

ஆனா ஒண்ணு, தரமான இலக்கியத்தை அங்க கொண்டுபோகணும். இங்க உள்ள வெகுஜன ரசனைக்கான எழுத்தை அங்க கொண்டுபோனா மதிக்க மாட்டாங்க. என்னோட கதைகளோட எந்த நல்ல மொழிபெயர்ப்பை குடுத்தாலும் உலகத்திலே உள்ள நல்ல இலக்கிய இதழ்களிலே வெளியாயிடுது… நல்ல பதிப்பகங்கள் பிரசுரிக்குது… ஏன்னா அதிலே அந்த தரம் உண்டு. அந்த வகையான படைப்புகளுக்கு கிடைக்கிற அங்கீகாரம்தான் நமக்கு பெருமை…

தமிழ்விக்கின்னு ஒரு பெரிய கனவை முன்னெடுக்கிறீங்க…அடுத்த கனவு என்ன?

தமிழ்மொழிக்கு ஒரு பண்பாட்டுக் கலைக்களஞ்சியம் வேணும்னுதான் தமிழ் விக்கியை ஆரம்பிச்சோம். 2022லே வாஷிங்டனிலே வெளியீட்டுவிழா நடந்தது. இன்னிக்கு பத்தாயிரம் பதிவுகளோட மிகப்பெரிய ஒரு இணையக் கலைக்களஞ்சியமா வளந்திட்டிருக்கு… தமிழ்விக்கி சார்பிலே பெரியசாமித்தூரன் நினைவா தமிழ் ஆய்வாளர்களுக்கு ஒரு பெரிய விருதை ஆண்டுதோறும் குடுக்கறோம். ஏற்கனவே மூத்த எழுத்தாளர்களுக்கு விஷ்ணுபுரம் விருது 2010 முதல் குடுத்திட்டிருக்கோம்…

இனி ஒரு பெரிய கனவு 2026லே அமெரிக்காவிலே நவீனத் தமிழிலக்கியத்துக்காக ஒரு மாநாடு….இங்கேருந்து ஒரு ஐம்பது எழுத்தாளர்களை அங்கே கொண்டுபோயி அறிமுகம் பண்ணணும். நாம எழுதுறத அந்த ஊர் மக்களுக்கு அறிமுகம் செய்றது நோக்கம். இப்ப எனக்கு கிடைச்சிருக்கிற கவனத்தை தமிழ் இலக்கியம் மேலே திருப்பணும்னு நினைக்கிறேன்…

வாழ்க்கையோட பொருள் என்னன்னு நினைக்கிறீங்க?

நம்ம வாழ்க்கைக்கு பொருள் உண்டு, ஆனா அதை நாம அறிய முடியாது. ஏன்னா பிரபஞ்சத்துக்கு பொருள் உண்டுன்னா, இயற்கைக்கு பொருள் உண்டுன்னா, இங்க உள்ள மொத்த மனித வாழ்க்கைக்கும் பொருள் உண்டுன்னா அந்தப் பொருள்தான் நம்ம வாழ்க்கைக்கும் இருக்கு. எல்லாம் ஒட்டுமொத்தமா ஒண்ணுதான். நம்மாலே பிரபஞ்சத்தை அறியவே முடியாது. அதனாலே வாழ்க்கையோட பொருள் என்னான்னு கேக்கிறது பயன் இல்லாத வேலை.

நம்ம வாழ்க்கைக்கு நாம பொருளை குடுத்துக்கலாம். நமக்குள்ள என்ன ஆற்றல் இருக்குன்னு நாம உணரமுடியும். நாம செய்யவேண்டிய செயல் என்னன்னு தெரிஞ்சுகிட முடியும். அதைத் தெரிஞ்சு முழுமூச்சா அதைச்செய்றதுதான் நிறைவும் மகிழ்ச்சியும். அதுதான் நாம நம்ம வாழ்க்கைக்கு அளிக்கிற அர்த்தம். என் வாழ்க்கைக்கு அப்டி ஒரு அர்த்தத்தை என்னோட 26 வயசிலே நான் தான் குடுத்தேன். நாப்பதாண்டுகளா அதுதான் என்னோட வாழ்க்கை. 

நன்றி ஆனந்தவிகடன்

பேட்டி நா.கதிர்வேலன்

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on May 30, 2025 11:35

விஜய ராவணன்

தமிழில் சிறுகதைகள் எழுதிவரும் இளம் படைப்பாளி விஜய ராவணன். குமரகுருபரன் – விஷ்ணுபுரம் விருது விழாவை ஒட்டி வரும் 8 ஜூன் 2025 அன்று சென்னை கவிக்கோ அரங்கில் நிகழும் இலக்கியக் கருத்தரங்கில் விஜய ராவணன் படைப்புகள் பற்றி ஓர் அரங்கு நிகழ்கிறது.

விஜய ராவணன்
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on May 30, 2025 11:34

Jeyamohan's Blog

Jeyamohan
Jeyamohan isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow Jeyamohan's blog with rss.