விடியல்கள்
நீண்டகாலமாக நான் விடியற்காலையில் எழுவதில்லை. அரிதாகப் பயணங்களின் போதுதான் புலரியைப் பார்ப்பது. அதிலும் நாகர்கோயில் ரயில்களில் காலை நான்கு அல்லது ஐந்து மணிக்கு வந்திறங்கி, ஆட்டோவில் வீட்டுக்கு வரும்போது. அப்போது அரைத்தூக்க நிலையிலும் இருப்பேன்.
விடியற்காலையின் அழகு எனக்குத் தெரியாமல் இல்லை. ஆனால் என் நாளொழுங்கு அதை அனுமதிப்பதில்லை. மதியம் வெயிலிலும் புழுக்கத்திலும் பொழுதை வீணடிக்கவேண்டாம் என சாப்பிட்டதுமே நன்றாகத் தூங்கிவிடுவேன். நான்கு மணிக்குத்தான் எழுவேன். இன்னொரு காலைபோல அது. ஒரு நீண்ட நடை. திரும்பி வந்து அமர்ந்தால் இன்னொரு வேலைநாளின் தொடக்கம்.
இரவு பதினொரு மணி வரைக்கும்கூட எழுதிக்கொண்டிருப்பேன். எழுதிமுடித்து கொஞ்சநேரம் இசை. தூங்க பன்னிரண்டரை மணி ஆகிவிடும். என் இணையதளம் வலையேற்றம் செய்யப்பட்டபின் அதை ஒருமுறை பார்த்துவிட்டுத்தான் தூங்குவேன். அதில் ஏதேனும் திருத்தங்கள் செய்யவேண்டியிருந்தால் மீண்டும் நேரம் பிந்திவிடும்.
அத்தனை பிந்தி தூங்குவதனால் காலையில் ஆறரை மணிக்குத்தான் எழுவேன். சொந்தமாக ஒரு காபி போட்டுக் குடிப்பேன். உடனே நேராக கணிப்பொறி முன் அமர்வேன். காலைநடை வழக்கமில்லை. களைப்பாக்கி, எழுதும் ஊக்கத்தை இல்லாமலாக்கிவிடும் என்பது என் அனுபவம். பல ஆண்டுகளாக இதுதான் வழககம்.
ஆனால் அண்மையில் என் நாளொழுங்குகளை மாற்றியமைக்க வேண்டிய சூழல் அமைந்தது. முதல்விஷயம் ஆழ்ந்த நல்ல தூக்கம் இருக்கிறதா என்னும் ஐயம். அத்துடன் உடற்பயிற்சியைக் கூட்டவேண்டியிருந்தது. ஆகவே பகல்தூக்கத்தை நிறுத்தினேன். சாப்பிட்டதும் சரியாக இருபது நிமிட ஓய்வு. அதன்பின் எழுந்தமர்ந்து எழுத ஆரம்பிப்பேன். சற்று பழகவேண்டியிருந்தது, அதன்பின் பிரச்சினை இல்லை. வழக்கம்போல் மாலைநடை. வந்ததும் எழுத்து.
ஆனால் இரவு ஒன்பதரைக்கே படுக்கைக்குப் போய்விடுவேன். பத்துமணிக்கெல்லாம் தூக்கம். காலையில் ஐந்து மணிக்கு எழுந்து காலைநடை. முற்றிலும் புதிய ஓர் அனுபவம் இது. உண்மையில் இரவு படுக்கும்போதே காலையில் எழுந்து நடை செல்லவேண்டும் என்பது அத்தனை தித்திப்பான ஒரு நினைவாக இருக்கிறது. காலையில் எழுந்து நடை செல்லும்போது இருக்கும் அபாரமான மன ஒருமையை, நிறைவை, விடுதலையை இப்போது துளிசிந்தாமல் அனுபவிக்கிறேன்.
காலையில் எழுந்தால் அருண்மொழியை எழுப்பிவிடக்கூடாது, பிரச்சினையாகிவிடும். ஆகவே மெல்ல நடந்து வந்து ஆடைமாற்றிக்கொள்ளவேண்டும். அவசரமாக ஆடை மாற்றியமையால் ஒருமுறை டிராக்சூட்டை திருப்பிப் போட்டுக்கொண்டேன். பைகள் வெளியே இருந்தன. பாதிவழியில்தான் கவனித்தேன். ஒன்றும் செய்வதற்கில்லை. ’பொத்தினாப்ல’ நடந்து திரும்பி வந்துவிட்டேன்.
காலையில் தெருக்கள் தூங்கிக்கொண்டிருக்கின்றன. குழந்தைகள்தான் அப்படி அழகாகத் தூங்கமுடியும். அத்தனை அமைதி. அத்தனை நிறைவு. நம் காலடிகளின் எதிரொலி நமக்கே கேட்கும் மௌனம். பார்வதிபுரத்தின் சாரதா நகருக்குள் நல்லவேளையாக கோயில்கள் இல்லை. ஆகவே காலையிலேயே பக்திக்கூப்பாடும் இல்லை. பார்வதிபுரம் சாலைக்குச் சென்றால் மூன்று அம்மன்கோயில்களிலும் ஒரு சர்ச்சிலும் ஏககாலத்தில் பிலாக்கணம். அனுராதா ஸ்ரீராம், சீர்காழி சிவசிதம்பரம் மீதெல்லாம் ஏதேனும் சட்ட நடவடிக்கை எடுக்க வாய்ப்புண்டா?
எனக்கு காலையில் கேட்கும் பக்திக்கூப்பாடு போல ஒவ்வாமையை அளிப்பது ஏதுமில்லை. காலை ஒரு பெரும் பரிசு. அதன் அழகும் தூய்மையும்போல இப்பிரபஞ்சமாக நின்றிருப்பதன் முகம் வெளிப்படும் இன்னொரு தருணம் இல்லை. ஆனால் ’அய்யா சாமி, எனக்கு அதைக் கொடுக்க மாட்டியா, இதைக்கொடுக்க மாட்டியா, எத்தனவாட்டி கேக்கிறது, உனக்கென்ன செவி அவிஞ்சா போச்சு, கல்மனசா உனக்கு, நல்லாயிருப்பியா’ என்ற பிச்சைக்காரக் குரல்தான் பக்திப்பாடல்கள் எனப்படுகிறது. இவன்களுக்கு ஏதாவது கொடுக்குமென்றால் அந்த சாமியை நான் எக்காலத்திலும் கும்பிடப்போவதில்லை.
மங்கலான ஒளியில் தெரியும் பொருள் வெள்ளை ஒளியில் தெரியும் பொருள் அல்ல. அதன் முப்பரிமாணம் வேறு. அதன் வண்ணங்கள் வேறு. நாம் எண்ணுவதுபோல இங்கே பொருட்கள் மாறாமல் இல்லை. அவை ஒவ்வொன்றும் வேறு பொருட்கள். நாம் அறியும் நம் அறிதல், அல்லது நம் நினைவின் தொடர்ச்சிதான் அவற்றை மாறாமல் நிலைகொள்வதாகத் தோன்றவைக்கிறது.
காலையில் என் நடை இயல்பாக இருக்கும். பலர் கைகளை வீசிக்கொண்டு, சட்டென்று நின்று குனிந்து நிமிர்ந்து, என்னென்னவோ செய்கிறார்கள். வியர்க்க விறுவிறுக்க ஒருவர் ஓடுகிறார். முகத்தில் அப்படி ஒரு பொறுப்பின் சோகம். நான் என் இனிய எண்ணங்களில் மூழ்கிச் சென்றுகொண்டிருக்கிறேன். காலையிளங்காற்றின் மென்மையான வருடல். மேலே தென்னையோலைகளின் அசைவு. தொலைவில் வானம் ஒளிபெற்றபடியே வருகையில் பொருட்கள் துலங்கி வரும் நேர்த்தி.
மலைகளின் மேல் முகில்கள் வெண்ணிறம் கொள்கின்றன. மலைகள் தெளிந்து தெளிந்து முப்பரிமாணம் கொள்கின்றன. முகில்களுக்கும் முப்பரிமாணம். பறவையொலிகள் மாறுபடுகின்றன. அதன்பின் அந்த மகத்தான கருவறையின் வாசல்கள் திறக்கின்றன.
ஏதோ ஒருபுள்ளியில் அதைப் பார்த்தபடி நின்றிருக்கிறேன். ஒரு சொல் இல்லாமல். ஒரு நினைவு எஞ்சாமல். அன்று, அக்கணம், அப்படியே உருவாக்கப்பட்டவனாக திரும்பி வருகிறேன்.
Jeyamohan's Blog
- Jeyamohan's profile
- 835 followers
