கல்விநீக்கம் – ஒரு விவாதம்.
சென்ற 8- ஜூன் 2025 அன்று குமரகுருபரன் – விஷ்ணுபுரம் விருது விழாவில் நிகழ்ந்த ஓர் உரையாடலில் வெய்யில், போகன் சங்கர், மனுஷ்யபுத்திரன் ஆகியோரிடையே ஒரு விவாதம் இயல்பாக உருவாகி வந்தது. ‘இளம் கவிஞர்கள் இதுவரையிலான கவிதைமரபையும் அது சார்ந்த கருத்துக்களையும் கல்விநீக்கம் (unlearn) செய்யவேண்டும்’ என்று வெய்யில் சொன்னதை ஒட்டி மனுஷ்யபுத்திரனும் போகனும் தங்கள் மறுப்பைத் தெரிவித்தனர்.
கவிதை விமர்சகனாக என் பார்வையில் அது சார்ந்து என் கருத்துகள் இவை. ஒன்று, வெய்யில் குறிப்பிட்டதுபோல தமிழ் நவீனக்கவிதையில் அப்படி ஒரு மாறாத மையம் கட்டமைக்கப்பட்டிருக்கவில்லை. இங்கே நவீனக்கவிதையின் சிறிய வட்டத்திற்குள்ளேயே அழகியல் சார்ந்து வெவ்வேறு பள்ளிகள், அதையொட்டிய வெவ்வேறு முன்னோடிகளின் வரிசைகள் உள்ளன. அதில் ஒன்றை தேர்வுசெய்யும் இளம் கவிஞன் தன் ரசனை, தன் கருத்தியல் ஆகியவற்றை ஒட்டியே அத்தெரிவை நிகழ்த்துகிறான். அவனை எவரும் ‘கேன்வாஸ்’ செய்து கூட்டிச்செல்லவில்லை. அதைத்தான் போகனும் மனுஷ்யபுத்திரனும் சொன்னார்கள்.
அத்தெரிவினூடாக இளங்கவிஞன் தனக்குரிய முன்னோடிகளை உருவகித்துக்கொள்கிறான். அவர்களை அவன் கற்கிறான். அதுதான் அவனுடைய கல்வி (learning). அவனே தேடித்தேடிக் கற்பதுதான் அது. அது தற்கல்வியே ஒழிய புகட்டப்படும் கல்வி அல்ல. அது அவனுடைய கல்வி. எதைக் கற்றானோ அதற்கு அவனே பொறுப்பு. அவனுடைய ரசனையும் இயல்புமே காரணம்.
எல்லா கவிஞர்களும் அத்தகைய கல்வி வழியாகவே உருவாகி வருகிறார்கள். உலகமெங்கும். அக்கல்வி இல்லாமல் ஒரு கவிஞன் உருவாகி வரவே முடியாது – உருவாகி வந்த ஒருவர் கூட உலகக்கவிதை வரலாற்றில் இல்லை. அப்படி ஒரு மருத்துவ அற்புதம் நிகழ்ந்தது என்றால் உடனடியாக அந்த ஐட்டத்தை மினசோட்டா பல்கலைக்கழகம் உடற்கூறியல் ஆய்வுக்கு உட்படுத்தவேண்டும். அது ஒரு தேசியச்சொத்தும்கூட, டெல்லி அருங்காட்சியகத்திலும் சேமிக்கப்படவேண்டும்.
ஏனென்றால் கவிதை என்பது ஒரு தனிமொழி. (Meta language).மொழிக்குள் செயல்படும் ஒரு மொழி அது. கவிதைவாசகனும் கவிஞனும் அந்தத் தனிமொழியினூடாகவே உரையாடிக்கொள்கிறார்கள். அது மொழியில் பொதுவாக நிகழும் உரையாடல் அல்ல. அந்த மொழியை கவிஞன் கற்றாகவேண்டும். ஆனால் அந்த மொழியை புறவயமாகக் கற்க முடியாது. அதற்கு இலக்கணநூல்களோ அகராதிகளோ இல்லை. அதற்கான ஒரே வழி சூழலில் உள்ள முன்னோடிகளின் கவிதைகளை வாசிப்பதும், அதைப்பற்றிய விவாதமும்தான். அதாவது கவிதை மரபும், கவிதையியலும் மட்டுமே அந்த நுண்மொழியை கவிஞனுக்கு அளிக்கின்றன. அவன் அதிலேயே தன் கவிதையை எழுதமுடியும்.
கவிஞன் மட்டுமல்ல வாசகனும் அந்த நுண்மொழிக்குள் வந்தாகவேண்டும். ‘எனக்கு தமிழ் நல்லாவே தெரியும். இந்தக் கவிதை ஒண்ணுமே புரியலை. அப்ப தப்பு கவிஞனோடதுதானே? புரியும்படி எழுதவேண்டியது கவிஞனோட பொறுப்பு இல்லையா?’ என்பது எப்போதுமே நம் சூழலில் உள்ள புலம்பல். அதற்கு பல ஆண்டுகளாக பதில் சொல்லி வருகிறோம். கவிதைக்குரிய நுண்மொழியையே கவிதை வாசகன் பயிலவேண்டும், அதுதான் கவிதைக்குள் நுழையும் வழி.
அதற்காகவே கவிதை வாசிப்பரங்குகள், கவிதையியியல் அரங்குகள் உலகமெங்கும் நிகழ்கின்றன. மேலைநாடுகளில் பல்கலைகள் ஏராளமான வகுப்புகளை நிகழ்த்துகின்றன. கவிதைவாசகர்கள் பணம் கட்டி கலந்துகொண்டு பயில்கிறார்கள். இங்கே இலக்கிய அமைப்புகள் மட்டுமே அவ்வப்போது அவற்றை நிகழ்த்துகின்றன. அதுவும் மிகமிகக்குறைவாக. அந்தக் குறைபாட்டை உணர்ந்துதான் நாங்களும் கவிதை சார்ந்த உரையாடல்களை ஒருங்கிணைக்கிறோம். இந்த மூன்று மாதங்களுக்குள் விஷ்ணுபுரம் ஒருங்கிணைக்கும் இரண்டாவது கவிதையமர்வு இது. முதல் அமர்வு ஓசூர் கவிதை முகாம். மூன்றாவது கவிதையமர்வு வரும் வெள்ளிமுதல் தொடங்குகிறது. (குரு நித்யா காவிய அரங்கு)
அந்த நுண்மொழிக்குள் வராத பல்லாயிரம்பேர் சூழலில் கவிதைகள் என எழுதிக்கொண்டிருப்பார்கள். அவர்களின் எழுத்துக்கள் நாம் உரையாடிக்கொள்ளும் பொதுமொழியில் தொடர்புறுத்துவன, கவிதைக்குரிய அகமொழிக்குள் செல்லாதவை. ஆகவே அவை நம்மால் கவிதை என கொள்ளப்படுவதில்லை. அவை வெறும் பேச்சுக்களாகவோ, கருத்துக்களாகவோ, அனுபவக்குறிப்புகளாகவோ நின்றுவிடுகின்றன.
வெய்யில் சொன்னதில் எனக்குள்ள சிக்கல் என்னவென்றால் அவர் கவிதைக்கான கல்வி (Learning) சூழலில் இருந்து கவிஞனுக்கு புகட்டப்படுகிறது என்றும், அது ஒருவகை ஆதிக்கம் அல்லது மோசடி என்றும், அதுதான் இளம்கவிஞர்கள் தாண்டவேண்டிய தடை என்றும் சொன்னார் என்பதே. அதாவது கல்வி என்பது ஒரு தடை. கல்வி அழித்தல் (Unlearning) மட்டும்தான் கவிஞன் செய்யவேண்டியது என்றார். உண்மையில் கவிஞன் முதலில் செய்யவேண்டியது கற்பதைத்தான்.
அக்கல்வியில் ‘அனைவரும்’ முக்கியமானவர்களாக இருக்க முடியாது. அப்படி ஒரு இலக்கியமே இருக்கமுடியாது. அறிவியக்கத்தில் ‘ஜனநாயகம்’ பேசுபவர்களின் சிக்கலே இதுதான். பெரும்பாலும் கவிதையை அரசியல்கூச்சலாக மட்டுமே பார்க்கும் முற்போக்கு முகாம் உருவாக்கும் அறியாமை இது. எந்த வகையான கவிதையானாலும் அதில் கவிஞர்களும், கவிஞர் அல்லாதவர்களும் உண்டு. முதன்மைக் கவிஞர்களும், சிறந்த கவிஞர்களும் அதில் திரண்டு முன்னெழுவதும் உண்டு. அப்படி அல்ல, எல்லாருமே சமம்தான் என்றால் அது கவிதையென்பதையே நிராகரிப்பதுதான்.
அப்படி சிலர் முதன்மையானவர்கள் (மாஸ்டர்ஸ்) என்றும், சிலர் நல்ல கவிஞர்கள் என்றும் ‘தானாக’ உருவாகி வருவதில்லை. அவர்கள் ஒரு தொடர் அறிவுச்செயல்பாட்டால் கண்டடையப்பட்டு, முன்வைக்கப்பட்டு, ஏற்பு கொள்கிறார்கள். அந்த அறிவுச்செயல்பாடு இரு படிநிலைகள் கொண்டது. தேர்ந்த வாசகனாகிய விமர்சகனும் வாசகனும் இணைந்து உருவாக்குவது அந்த தேர்வு. விமர்சகன் மட்டும் எவரையும் முதன்மைக் கவிஞராக நிலைநிறுத்த முடியாது. அதை வாசகன் ஏற்கவேண்டும். வாசகன் ஏற்காவிட்டால் எந்த விமர்சகனும் ஒருவரை முன்நிறுத்திவிடமுடியாது. வாசகனின் ஏற்பு கண்கூடானது அல்ல, ஆனால் அதுவே முதன்மையான சக்தி. வாசகனும் விமர்சகனும் சந்திக்கும் ஒரு நுண்புள்ளியில் நிகழ்வது அந்த ஏற்பு.
எவரும் ‘தீர்ப்பு சொல்லி’ அல்லது ‘சூழ்ச்சி செய்து’ எவரையும் முதன்மையான கவிஞராக நிறுவிவிடுவது இல்லை. அப்படியெல்லாம் இங்கே இலக்கியம் அறியாதவர்கள் சொல்வது உண்டு. ஒருவர் முதன்மையான கவிஞர் என ஏற்பு பெறுகிறார் என்றால் அது ஒரு நீண்ட விவாதம் வழியாகவே நிகழ்கிறது. ஒரு கவிஞருக்கு வாசகரிடையே இயல்பாக ஓர் ஏற்பு உருவாகிறது. ஒரு விமர்சகன் அதை தொகுத்து ஒரு விமர்சன நிலைபாடாக முன்வைக்கிறான். அதற்கு மறுப்புகள் உருவாகின்றன. விவாதம் நிகழ்கிறது. காலப்போக்கில் எதிர்ப்பைவிட ஏற்பு கூடுதலாக அமையும்போது அவர் முதன்மைக் கவிஞராக ஏற்கப்படுகிறார்.
அதேபோல எந்தக் கவிஞரும் எப்போதைக்கும் உரிய சிம்மாசனத்தில் அமர்ந்திருப்பதுமில்லை. அவரை தொடர்ச்சியாக மறுக்கும் குரலும் இருந்துகொண்டே இருக்கும். தலைமுறை தலைமுறையாக அவரை அந்த இடத்தில் இருந்து இறக்கும் முயற்சிகளும் நிகழும். அதைக் கடந்தே அவர் நிலைகொள்ள முடியும். உதாரணமாக பிரமிள். அவர் தமிழின் முதன்மைக் கவிஞர் என ஏற்கப்பட்டவர். ஆனால் அன்று முதல் இன்றுவரை அதை மறுக்கும் மிக வலுவான தரப்பும் தமிழ் நவீனக்கவிதையில் உண்டு. நகுலன் முதன்மைக் கவிஞர் என நினைக்கும் ஒரு பெரிய தரப்பு உண்டு, எனக்கு நகுலன் ஒருசில அரைத்தத்துவ வரிகளை எழுதிய சாதாரணமான கவிஞராகவே தென்படுகிறார். பிரமிள்தான் என் பார்வையில் நவீனக்கவிதை உருவாக்கிய பெரும்கவிஞர்.
ஆகவே இங்கே ஏதோ ஒரு மறுக்கமுடியாத பட்டியல் இருப்பதாகவும், அதை மறுத்து கலகம் செய்துதான் புதிய கவிஞர் எழுதமுடியும் என்பதெல்லாம் ஒருவகையான பிரமைகள் மட்டுமே. இப்படியெல்லாம் பேசுபவர்கள் பெரும்பாலும் கவிதையின் உலகுக்குள் வராதவர்கள், கவிதையின் வரலாற்றை அறியாதவர்கள். வெய்யில் அக்குரலை ஒலித்தது விந்தையாகவே இருந்தது. அது அவருக்கு முற்போக்கு மேடைகள் அளித்த கருத்தாக இருக்கலாம்.
சரி, கல்விஅழித்தல் (delearning) அல்லது கல்விநீக்கம் (unlearning) தேவையா? அதை கவிஞன் செய்யவேண்டுமா? ஆம், ஆனால் அதை செய்யாத கவிஞனே இல்லை. நல்ல படைப்புச் செயல்பாடு எதிலும் கல்விநீக்கம் இயல்பாகவே நிகழும். அது எப்படி நிகழ்கிறது என நாம் உணர்ந்திருப்பதில்லை. இரண்டு வகையில் அது நிகழ்கிறது.
ஒன்று, ஒரு படைப்பாளி தன் வாழ்வனுபவங்கள் வழியாகவும் சிந்தனை வழியாகவும் முன்னகரும்போது இயல்பாகவே கல்விநீக்கம் நிகழ்கிறது. இப்படிச் சொல்கிறேன், கல்வி எல்லாமே கல்விநீக்கமும் கூடத்தான். ஒன்றைக் கற்கையில் இயல்பாக இன்னொன்றை நீக்கம் செய்கிறோம். நாம் இளமையில் கொண்டாடிய பல படைப்புகள் அடுத்தகட்ட இலக்கிய அறிமுகம் அடைகையில் தன்னியல்பாக உதிர்ந்துவிட்டன என்பதை அறிந்திருப்போம். எந்தக் கல்வியும் முந்தைய கல்வியின் அழிவின்மேல்தான் நிகழ்கிறது.
ஆகவே கல்வியே கல்விநீக்கத்திற்கான ஒரே வழி. மேலும் மேலும் கற்பதே முந்தைய கல்வியில் இருந்து கடந்து செல்லுதல். ஒரு கவிஞனை கடந்துசெல்ல அவனை நம்மில் சிறியவனாக்கும் இன்னொரு கவிஞனைக் கற்பதே வழி. பெருங்கவிதை பெருங்கல்வியில் இருந்தே உருவாகி வரமுடியும். கல்விநீக்கம் என்பது கற்காமல் நின்றுவிடுவது அல்ல. கல்வியை நிறுத்திக்கொள்வது அல்ல. ஏற்கனவே கற்றவற்றை மொட்டையாக மறுப்பதும் அல்ல.
இரண்டாவதாக, படைப்பாளி இலக்கிய ஆக்கத்தைப் படைக்கும்போதே இயல்பாகவே ஒரு கல்விநீக்கம் நிகழ்கிறது. அவன் அதுவரையிலான மரபை ஒருவகையில் அழித்து, மறுஆக்கம் செய்துதான் தன் படைப்பை முன்வைக்க முடியும். எந்த அசல் படைப்பாளியும் ஏற்கனவே எழுதப்பட்டதை அப்படியே திரும்ப எழுதிக்கொண்டிருக்க மாட்டான். அவன் ஒரு புதிய படைப்பை ஏற்கனவே தன்னுள் இருக்கும் படைப்புகளை அழித்துத்தான் உருவாக்குகிறான். சூழலில் உள்ள பல படைப்புகளை பின்தள்ளியே தன் படைப்பை முன்வைக்கிறான். அதுவே இயல்பான கல்விநீக்கம்.
உதாரணமாக, பிரமிள் படைப்புகளில் ஈடுபட்டு, அதன் நீட்சியாக எழுதத் தொடங்கிய தேவதேவன் பிரமிளை அழித்துத்தான் தேவதேவனாக ஆனார். இன்று அவர் முற்றிலும் வேறொருவர், தமிழின் இன்னொரு முதன்மைக் கவிஞர். மனுஷ்யபுத்திரன் முதல் இசை வரை அனைத்துக் கவிஞர்களுமே எப்படி முன்னோடிகளிடமிருந்து தொடங்கினர், எப்படி அவர்களைக் கடந்தோம் என விரிவாகவே எழுதியுமுள்ளனர்.
உலகக்கவிதையிலேயே ஒரு பகுப்பு உண்டு. தனிப்பட்ட வாழ்க்கை சார்ந்து சில நல்ல கவிதைகளை எழுதுபவர்கள் ஒரு வகை. தன் பண்பாட்டின் முகமாகத் திகழும் பெருங்கவிஞர்கள் இரண்டாம் வகை.
முதல்வகையினர் கவிதையின் தனிமொழியை கற்கும் அளவுக்கு இலக்கியக்கல்வி அடைந்தாலே போதும். ஆனால் பெருங்கவிஞன் அப்பண்பாட்டை முழுதாக அறிந்த பெரும் கல்விமானாகவும் இருப்பான். அப்பண்பாட்டின் எல்லா கூறுகளைப்பற்றியும் அறிதலும், சுயமான கருத்துக்களும் கொண்டிருப்பான். அந்தப் பண்பாடு எதைச் சிந்திக்கவேண்டும், எப்படி முன்னகரவேண்டும் என்று சொல்லும் அளவுக்கு தகுதி கொண்டிருப்பான். உலக வரலாற்றின் மாபெரும் கவிஞர்கள் பலரும் மாபெரும் தத்துவஞானிகளாகவும் கருதப்படுபவர்கள். பலர் அரசியல்மேதைகளாகவும் மதிக்கப்படுபவர்கள்.ஆகவே ‘கற்கவேண்டாம்’ என்று சொல்லும் குரல் கவிதைக்கு எதிரானது என்றே நினைக்கிறேன். எந்த அளவுக்குக் கற்கவேண்டும் என்பது அக்கவிஞன் தன்னை எப்படி வரையறை செய்துகொள்கிறான் என்பதைப் பொறுத்தது.
கல்விநீக்கம் என்பது மேலும் கல்வியால், படைப்புச்செயல்பாட்டால் நிகழ்த்திக்கொள்ளப்படவேண்டியது மட்டுமே.
Jeyamohan's Blog
- Jeyamohan's profile
- 835 followers
