Jeyamohan's Blog, page 77

June 15, 2025

வாய்மொழிப் பண்பாடும் எழுத்துப் பண்பாடும்

எழுத்தாளனை மதிப்பதன் பின்னணி- ஒரு பதில்

நம் சமூகம் வாய்மொழிப் பண்பாடு கொண்டது, எழுத்துப் பண்பாட்டை அஞ்சுவது என்று முந்தைய குறிப்பு ஒன்றில் சொல்லியிருந்தேன். வாய்மொழிப் பண்பாடு பிற்பட்ட, தேக்கநிலை என்றும் எழுத்துப் பண்பாட்டை நோக்கி நாம் நகர்ந்தாகவேண்டும், அதற்கு நமக்குச் சுயவிமர்சனமும், சுயபரிசீலனையும் தேவை என்றும் சொல்லியிருந்தேன். எழுத்தாளனை மதிப்பதன் பின்னணி- ஒரு பதில். பல கேள்விகள் அதையொட்டி எனக்கு அனுப்பப்பட்டன.

பண்பாட்டு அடிப்படையில் சமூகங்கள் இரு வகையாக பகுத்துப்பார்க்கலாம். வாய்மொழிச் சமூகங்கள், எழுத்துசார் சமூகங்கள். எல்லா சமூகங்களும் தொடக்கத்தில் வாய்மொழிப் பண்பாடு கொண்டவைதான். அவற்றில் சில சமூகங்கள் தங்களை எழுத்துசார் சமூகங்களாக ஆக்கிக் கொள்கின்றன. ஐரோப்பியச் சமூகம் கிரேக்கப் பண்பாட்டின் காலம் முதலே எழுத்தை நோக்கியதாக தன்னை நகர்த்திக்கொண்ட ஒன்று. சீனச்சமூகமும், அராபியச் சமூகமும்கூட எழுத்துப் பண்பாட்டுக்குள் நீண்டகாலம் முன்னரே சென்றுவிட்டவைதான். மானுடக் கலாச்சராம் என நாம் அறியும் அனைத்தையும் விடத் தொன்மையான எகிப்தியக் கலாச்சாரம் மாபெரும் எழுத்துப் பண்பாட்டைக் கொண்டது. மாறாக இந்தியச் சமூகம் வாய்மொழிச் சமூகமாகவே நீடித்தது, இன்றும் நீடிக்கிறது.

இந்தியச் சமூகத்தில் நீண்டகால எழுத்து மரபு உண்டு. ஆனால் அது ஒரு சிறுவட்டத்திற்குள், மிகச்சிறிய அளவில்தான் என்றும் இருந்தது. இந்தியச் சமூகம் ஒட்டுமொத்தமாக வாய்மொழிச் சமூகமே. நம்முடைய முதன்மை மதநூல்களாகிய வேதங்கள் அச்சு ஊடகம் வந்தபின்னரே எழுத்துவடிவை அடைந்தன. ராமாயணம், மகாபாரதம், புராணங்கள் போன்ற அனைத்துமே பேசி- கேட்கப்படும் நூல்களாகவே இருந்தன. அவற்றை வாய்மொழிமரபாக பாடிப்பரப்பும் சூதர்கள், மாகதர்கள், பாணர்கள் எல்லா காலத்திலும் இருந்தனர், இன்றும் அம்மரபு பெரும்பாலும் அப்படியே நிலைகொள்கிறது.

நம் சங்கக் கவிமரபு முழுக்கமுழுக்க வாய்மொழி சார்ந்ததே. அவை உரிய வாத்தியங்களுடன் துணையுடன் பாடப்பட்டன. சங்கம் மருவிய காலகட்டத்து காவியங்களும் சரி, அதன்பின் உருவான அறநூல்களும் சரி, பக்திக் காலகட்டத்துப் பாடல்களும் சரி, கம்பன் முதல் சேக்கிழார் வரையிலான இரண்டாவது காவியகாலகட்டமும் சரி, சிற்றிலக்கியக் காலகட்டமும் சரி செவிச்சொல் சார்ந்தவையே. நமக்கு பத்தொன்பதாம் நூற்றாண்டில் அச்சுவடிவில்தான் எழுத்துப்பண்பாடு அறிமுகமானது.

எழுத்துவடிவம் ஏடுகளில் இருந்ததே என்று கேட்கலாம். மூலம் என்ற வகையில்  நூல்களின் ஒரு எழுத்துவடிவம் பேணப்பட்டது, அவ்வளவுதான். அவை நேரடியாகப் பயிலப்பட்டது மிகக்குறைவு. மனப்பாடம் செய்யப்படவேண்டும் என்பதற்காகவே குறள், வெண்பா போன்ற செய்யுள்வடிவங்கள் பயின்று வந்தன.மிழிலும் நம் இலக்கியங்கள் அனைத்துமே செவிநுகர் கனிகள்தான். நூல்வாசிப்பு என்பது மிகமிக அரிதான, மிகச்சிறிய வட்டத்திற்குரிய ஒன்றாகவே என்றும் இருந்தது. சொல்லிக் கேட்பதுதான் நமது மரபு. கற்றலில் கேட்டல் நன்று என்றுதான் நம் மரபு அறிவுறுத்தியது.

இந்தக் காரணத்தால்தான் இந்திய அளவிலேயே நமக்கு மிகமிகக்குறைவாகவே எழுத்துப்பிரதிகள் கிடைக்கின்றன. இத்தனை நீண்ட ஒரு பண்பாடு எத்தனை நூல்களை உருவாக்கியிருக்கவேண்டுமோ அதில் நூறிலொரு பங்கு நூல்கள் கூட நமக்கு உண்மையில் இல்லை. நம் இலக்கிய மரபு மிகப்பெரியது என நாம் நினைக்கிறோம், அது ஒரு பிரமைதான். எண்ணிப்பாருங்கள், இங்கே ஒரு நூற்றாண்டுக்கு ஒருசில நூல்களே நமக்கு இன்று கிடைக்கின்றன. பெரும்பாலான நூல்கள் வாய்மொழியில் நிகழ்ந்து அப்படியே மறைந்தன.

உ.வே.சாமிநாதையரின் வாழ்க்கை வரலாற்றை வாசித்தாலே தெரியும், எத்தனை நூல்கள் அப்படி ஒரே ஒரு பிரதி மட்டும் எழுதப்பட்டு, வாய்மொழியாக பயிலப்பட்டு, அப்படியே மறைந்தன என்று. அவருடைய ஆசிரியர் மீனாட்சிசுந்தரம் பிள்ளை கம்பனை விட கூடுதலாக எழுதியவர். அவருடைய எந்த நூலும் நம்மிடம் இல்லை. இந்தியாவில் அப்படி பல ஆயிரம் ஆசிரியர்கள் நிகழ்ந்து மறைந்திருக்கிறார்கள். மதம் சார்ந்த நூல்களே இந்தியாவில் பெரும்பாலும் பேணப்பட்டன, மதவழிபாட்டின் ஒரு பகுதியாக. இன்று இந்திய இலக்கியத்தில் நமக்கிருக்கும் அதிகமான நூல்கள் பெரும்பாலும் ஐநூறு ஆண்டுகளுக்கு உட்பட்டவை. இத்தனைபெரிய சிற்பங்களும் ஆலயங்களும் இருக்கும் நம்மிடம் சிற்பம், மருத்துவம் ஆகியவற்றில் நூல்கள் மிகக்குறைவு. பெரும்பாலான நூல்கள் ஏற்கனவே எழுதப்பட்டவற்றின் மறுஆக்கங்கள்

நமக்கு வரலாற்றெழுத்தே இல்லை. கிரேக்க வரலாற்றெழுத்துக்கு மூவாயிரமாண்டு தொன்மை உண்டு. அராபிய வரலாற்றெழுத்து பத்தாம் நூற்றாண்டு முதல் மிகப்பெரிய அலையாக எழுந்தது. சீன வரலாற்றெழுத்து மிகப்பிரம்மாண்டமானது, மூவாயிரமாண்டு தொன்மை கொண்டது. இந்தியாவில் வரலாற்று நூல் என எதுவுமே இல்லை — அராபிய மரபால் உருவாக்கப்பட்ட முகலாய வரலாற்றாசிரியர்களின் எழுத்துக்கள் தவிர. நமது மாபெரும் மன்னர்கள் பற்றி எந்தச் செய்தியும் எங்குமே எழுதிவைக்கப்படவில்லை. உண்மையில் எதையுமே எழுதி வைக்கும் வழக்கம் இல்லை. நமக்கு கிடைக்கும் கல்வெட்டுக்கள் மட்டுமே நம் வரலாற்றுக்குச் சான்று, அவையும் ஓரிரு வரிகள்.தற்செயலாகவே அவற்றில் வரலாறு இடம்பெறுகிறது. டி.டி.கோஸாம்பி சொல்கிறார், நமது ஒட்டுமொத்த கல்வெட்டுகளைச் சேர்த்தாலே ஆயிரம் பக்கம் வராது என. பல நூற்றாண்டுக்காலம் ஆட்சி செய்த பேரரசுகளேகூட ஓரிரு வரி கல்வெட்டுகளுக்கு அப்பால் ஏதும் பதிவே இல்லாமல் மறைந்து விட்டிருக்கின்றன – சாதவாகனப் பேரரசு போல, களப்பிரப் பேரரசு போல.

அறிவுச்செயல்பாட்டில் உள்ளவர்கள் இதை விரிவாகவே பார்க்கலாம். நமது மரபில் பிரதிசெய்யும் வழக்கம் இருந்தது, ஆனால் பாடவேறுபாடு பார்க்கப்பட்டதாக எந்தக்குறிப்பும் இல்லை. ஏனென்றால் எழுதப்படும் நூல் மாறாதது, மாற்றமில்லாமல் அது பேணப்படவேண்டும் என்னும் எண்ணமே நமக்கு இருந்ததில்லை. நமது எல்லா நூல்களும் பாடபேதம் மலிந்தவை. வெள்ளையர் இங்கு வந்து அவர்கள் பாடவேறுபாடு நோக்கி திரட்டியவையே நாம் வைத்திருக்கும் மகாபாரதம், ராமாயணம் எல்லாமே. அந்த முறைமையை அடியொற்றி அறிஞர்கள் பாடவேறுபாடு நோக்கிப் பதிப்பித்தவையே நாம் தமிழில் வைத்திருக்கும் இலக்கியங்கள்.

நம் பக்தி மரபிலேயே மிக அண்மைக்காலம் வரை அதில் எழுத்துப்பண்பாட்டுக்கு, புத்தகங்களுக்கு இடமே இல்லை. வழிபாடுகளின் தோத்திரங்களும் மந்திரங்களும் வாய்மொழியாகவே பயிலப்பட்டன. நம் முன்னோர் பெரும்பக்தர்கள். ஆனால் பக்தி சார்ந்த ஒரு நூலைக்கூட கண்ணால் பார்த்திராதவர்கள். திருமுறைகள், பிரபந்தங்கள்கூட வாய்மொழியாகவே கற்கப்பட்டு பாடப்பட்டன. நாம் ஏதேனும் பக்தி நூல்களை நமக்காக வாங்கி வைக்க ஆரம்பித்ததே இருபதாம் நூற்றாண்டில்தான். இன்றுகூட ஏதேனும் ஒரு பக்திநூல் வீட்டில் இருக்கும் இந்துக்கள் ஐந்து சதவீதம்பேர் கூட இருக்க வாய்ப்பில்லை. ஒரு பக்திநூலையேனும் படித்த பக்தனாகிய இந்து அரிதிலும் அரிதானவர். அத்தனை கிறிஸ்தவ இல்லத்திலும் பைபிள் இருக்கும் , ஏனென்றால் கிறிஸ்தவம் எழுத்து சார்ந்தது- இதுதான் நான் சொல்லவரும் வேறுபாடு.

ஐரோப்பிய எழுத்து மரபைப் பார்க்கையில் ஓர் இந்தியனாக தாழ்வுணர்ச்சியே உருவாகிறது. எகிப்தியப் பண்பாட்டைப் பார்க்கையில் குன்றிபோகிறேன். கிருஷ்ணனின் சமகாலத்தவர் என்று சொல்லத்தக்க இரண்டாம் ராம்சேயின் ஒவ்வொரு ஆண்டும், ஒவ்வொரு செயலும் எழுத்தில் ஆவணப்படுத்தப்பட்டு கிடைக்கிறது. நமக்கு கிருஷ்ணனைப் பற்றிக் கிடைப்பவை எல்லாம் நீண்டகாலம் வாய்மொழியில் இருந்து, தொன்மமாக வளர்ந்து, பின்னர் பாடலாகப் பாடப்பட்ட கதைகள் மட்டும்தான். எகிப்தில் இரண்டாம் ராம்சே கட்டிய ஒரு ஆலயத்திலுள்ள கல்வெட்டுகளே சில ஆயிரம் பக்கங்களுக்கு நீள்பவை.

இங்கே இருந்த அறிவுமரபு வாய்மொழிப் பண்பாட்டைச் சார்ந்தது. புலவர்கள்கூட ‘பாடி’ பரிசில் பெற்றவர்கள்தான். சங்கப்பாடல்கள் முழுக்க கவிஞர்களைப் பாடகர்களாகவே சொல்கின்றன. பதினெட்டாம் நூற்றாண்டு வரை அப்படித்தான். நம் சமூகத்தில் கவிஞர்களின் இடம் என்பது அரசர்களையும், தெய்வத்தையும் புகழ்பவன் என்பதுதான். அது பழைய இனக்குழுக்களில் உள்ள குலப்பாடகனின் இன்னொரு வடிவம் அன்றி வேறல்ல. இன்றும்கூட குமரிமாவட்டத்திலும், கொங்கு வட்டாரத்திலும் குலப்பாடகர்கள் உள்ளனர். அவர்கள் குலங்களைப் புகழவேண்டியவர்கள். அதாவது ‘போற்றிப் பாடடி பெண்ணே, தேவர் காலடி மண்ணே’ மரபு.

நம் குலப்பாடககளுடைய சமூக அந்தஸ்து என்பது இசைக்கலைஞர்களுக்குச் சமானமானது. நாம் இசைக்கலைஞர்களை எப்படி நடத்தினோம்? திருமணங்களில் வந்திருக்கும் பெரிய மனிதர்களுக்கு நாதஸ்வரக் கலைஞர்கள் சந்தனம் பூசிவிடவேண்டும் என ஒரு வழக்கம் இருந்தது. அதை எதிர்த்தவர் திருவாவடுதுறை ராஜரத்தினம் பிள்ளை. இசைக்கலைஞர் சபையில் அமர்ந்து பாடுவதையே பதினெட்டாம் நூற்றாண்டுவரை நாம் அனுமதித்ததில்லை.  இலக்கியம், கலை பற்றி இன்றும் நம் மனதில் நீடிக்கும் பிம்பம் என்பது அந்த வாய்மொழிக் கலாச்சாரத்தில் இருந்து வந்தடைந்தது. நமக்குப் பிடித்ததைச் சொல்லி நம்மை மகிழ்விப்பவனே கலைஞன், கவிஞன் என நாம் நினைக்கிறோம். நமது பேச்சாளர்கள், கவியரங்கக் கவிஞர்கள் அந்த மனநிலைக்கு ஒத்துப்போகிறார்கள். ஆகவே அவர்களைக் கொண்டாடுகிறோம்.

எழுத்துப்பண்பாட்டில் வேரூன்றியது கிரேக்கக் கலாச்சாரம். வாய்மொழிப் பண்பாட்டில் இருந்து முளைத்த கிறிஸ்தவம் அங்கே சென்றபோது அதுவும் தன்னை எழுத்துப்பண்பாட்டுக்குள் செலுத்திக்கொண்டது. தொடர்ச்சியாக அந்த எழுத்துப் பண்பாட்டின் பரிணாமத்தை அங்கே பார்க்கலாம். அதன் இயல்புகள் என சிலவற்றை வரையறை செய்யலாம்.

எல்லாவற்றையுமே எழுதி வைத்துக்கொள்வது. வரலாறு, அறிவியல், இலக்கியம் முதல் அன்றாடச்செய்திகள் வரை.எழுதப்பட்டது தூய்மையானது, மாறாதது, அழியாதது என்னும் நம்பிக்கை. எழுத்தை தெய்வீகமாகக் கருதுதல். ஆகவே எழுதப்பட்டவற்றில் தொடர்ச்சியாகப் பிழைகளைக் களைந்துகொண்டே இருத்தல்.சமூகத்தில் பெரும்பாலானவர்களுக்கு எழுத்துப் பண்பாட்டுடன் தொடர்பு இருத்தல். அவர்கள் நேரடியாக எழுதவோ படிக்கவோ செய்யவில்லை என்றாலும் புத்தகத்துடன் தொடர்பு இருந்துகொண்டே இருத்தல்.மொத்தச் சமூகத்திற்கும் எழுத்து வாசிப்பு என்னும் செயல்பாட்டின்மேல் மதிப்பு உருவாகியிருத்தல்.

இந்த எழுத்து மரபை கண்கூடாக நாம் பார்ப்பது கிரேக்கச் சிலைகளிலும் கிறிஸ்தவச் சிலைகளிலும். குறிப்பாக ரோமில் எங்கு பார்த்தாலும் தேவதைகளும் புனிதர்களும் நூலையோ, ஏட்டுச்சுருளையோ ஏந்தி நின்றிருக்கிறார்கள். கைகளால் நூலை சுட்டிக்காட்டுகிறார்கள். ‘இது எழுதப்பட்டுள்ளது’ என்ற அறிவுறுத்தல் எங்கும் தெரிந்துகொண்டே இருக்கிறது. அதுவே அது அதிகாரபூர்வமானது என்பதற்கான ஆதாரம். அந்த மனநிலையே எழுத்துவடிவப் பண்பாட்டின் அடிப்படையானது.

எழுத்துவடிவப் பண்பாடு கொண்ட ஐரோப்பாதான் ‘நவீன எழுத்தாளன், சிந்தனையாளன், கவிஞன், கலைஞன்’ என்னும் இன்றைய அடையாளத்தை உருவாக்கியது. இந்த அடையாளத்திற்கும் நம் மரபில் உள்ள கவிஞன், கலைஞன் என்னும் அடையாளங்களுக்கும் பெரிய வேறுபாடு உண்டு. அதை தெளிவாக வரையறை செய்துகொள்ளாமல் நாம் பேசவே முடியாது.

நம் மரபில் கவிஞர்கள், கலைஞர்களுக்கு இரண்டு வகை அடையாளங்கள்தான். மிக அரிதாகச் சிலர் தெய்வீக அடையாளம் அடைகிறார்கள். எஞ்சியோர் வெறுமே மகிழ்விப்போர், புகழ்வோர் ஆக நீடிக்கிறார்கள். குலப்பாடகர்கள், பூசாரிகள் என இரண்டு அடையாளங்கள் வாய்மொழி மரபில் உண்டு. அந்த அடையாளங்களின் மறுவடிவங்கள்தான் இவை இரண்டும்.

பூசாரி தெய்வத்துடன் நேரடியாகத் தொடர்புடையவன், தெய்வமே அவன் வழியாகப் பேசுகிறது, அவன் தெய்வீகமானவன். கவிஞர்களிலும் கலைஞர்களிலும் சிலர் அந்த அடையாளத்தை அடைகிறார்கள். திருவள்ளுவர் அல்லது சேக்கிழார் உதாரணம். எஞ்சியோர் புகழ்பாடிகள் மட்டுமே. தெய்வத்தன்மையை அடைபவர்கள் அதை பெரும்பாலும் மத அடையாளம் வழியாகவே அடைகிறார்கள்.  இன்றும் இந்த பேதம் உள்ளது. நம் பேச்சாளர்களில் புலவர் கீரனோ, சுகிசிவமோ புகழ்பாடிகள், பாணர்கள் மட்டும்தான். ஞானியார் சுவாமிகளோ, மறைமலையடிகளோ பூசாரிகள், தெய்வீகக்குரல் கொண்டவர்கள்.

ஐரோப்பிய மரபு கிரேக்க காலகட்டத்திலேயே ‘தத்துவஞானி’ என்னும் உருவகத்தை அடைந்துவிட்டது. தெய்வத்தன்மை ஏதும் ஏற்றப்படாமல், தன் சிந்தனையின் ஆற்றலாலேயே சமூகத்தின்மேல் செல்வாக்கு செலுத்துபவன் அவன். தொடர்ந்து வந்த கிறிஸ்தவ மரபில் கிறிஸ்தவத்தின் எல்லைக்குள் மட்டுமே தத்துவஞானிகளும் கலைஞர்களும் அனுமதிக்கப்பட்டனர். ஆனால் பதினைந்தாம் நூற்றாண்டில் அந்த மதக்கட்டுப்பாடு உடையத் தொடங்கியது. சுதந்திரமான தத்துவசிந்தனையாளன், எழுத்தாளன், கலைஞன் என்னும் ஆளுமை உருவகங்கள் உருவாகி வந்தன.

இந்த ஆளுமைகளை உருவகம் செய்வது என்பது பதினைந்தாம் நூற்றாண்டு முதல் இருபதாம் நூற்றாண்டு வரை தொடர்ச்சியாக ஐரோப்பாவில் நிகழ்ந்த ஓர் அறிவுச் செயல்பாடு. ரஸ்கின் எழுதிய Modern Painters போன்ற நூல்கள், பாஸ்வெல் எழுதிய Life of Samuel Johnson போன்ற வாழ்க்கை வரலாறுகள், எழுத்தாளனை கதைநாயகனாகக் கொண்ட ஏராளமான தொடக்ககால நாவல்கள் என அந்த உருவகத்தை நிறுவியவை பலநூறு நூல்கள்தான்.

அந்த அறிவியக்கம் எழுத்தாளன் என்பவன் தனித்தன்மை கொண்ட ஆளுமை என்றும், அவன் ஒருவகையான சமூக அன்னியன் என்றும், அவனுடைய இயல்பு சமூகத்துடன் ஒத்துப்போவது அல்ல சமூகத்துடன் முரண்படுவதுதான் என்றும், அவனுடைய மீறல்களும் கலகங்களுமே அவனை எழுதச்செய்கின்றன என்றும் நிறுவியது. சமூகத்திற்குப் பிடித்ததைச் சொல்பவன் அல்ல எழுத்தாளன், சமூகத்தை விமர்சிப்பவன் என்று நிலைநாட்டியது. எழுத்தாளனும் கலைஞனும் தத்துவஞானியும் சமூகத்தின் வழிகாட்டிகளே ஒழிய, சமூகத்தின் சார்பாக பேசும் பிரதிநிதிகள் அல்ல என்று விளக்கியது. அரசியல்வாதிகளோ ,அரசர்களோ ,மதகுருக்களோ அல்ல; உண்மையில் சமூகத்தின் சிந்தனையை உருவாக்குபவர்கள் எழுத்தாளர்களும் கலைஞர்களுமே என நிலைநாட்டியது.

எழுத்தாளன் , சிந்தனையாளன், கலைஞன் பற்றிய ஐரோப்பிய உருவகத்தை இப்படிச் சுருக்கிச் சொல்லலாம். ‘எழுத்தாளர்களும் சிந்தனையாளர்களும் சமூகத்திற்கு பிடித்தமானவர்களாக நடந்துகொள்ள வேண்டியதில்லை, சமூகம்தான் அவர்களைக் கவனித்து அவர்களின் சிந்தனைகளைப் பரிசீலித்து அவர்களை தொடர்ந்து செல்ல முயலவேண்டும். அவர்கள் சமூகத்திற்கு ‘சேவை’ செய்பவர்கள் அல்ல. அவர்கள் தங்கள் போக்கில் தங்கள் கலையையும் சிந்தனையையும் முன்னெடுப்பவர்கள் மட்டுமே. அவர்களின் சிந்தனைகளால், எழுத்துக்களால் சமூகத்திற்கு உடனடியாக என்ன பயன் என்று சொல்லவே முடியாது. அப்படி ஒரு சிந்தனைக்கான வாய்ப்பு இருந்தால் ஒரு சிந்தனையாளன் அதை நிகழ்த்துவான். சில சமயம் அச்சிந்தனை அழிவை அளிப்பதாகக்கூட இருக்கலாம், அதை இன்னொரு சிந்தனை எதிர்த்து வெல்லும். ஆனால் சிந்திப்பதற்கான எல்லா வாய்ப்புகளையும் ஒரு சமூகம் அதன் எழுத்தாளர்கள் வழியாக பரிசீலிக்கவேண்டும். Stem cell போல ஒரு சமூகத்தின் வளரும் விளிம்புதான் எழுத்தாளர்களும் கலைஞர்களும். அவர்களை சமூகம் பயன்படுத்திக்கொள்ளவேண்டுமே ஒழிய அவர்களை தங்கள் அப்போதைய தேவைகளை நிறைவேற்றவேண்டியவர்கள் என எண்ணக்கூடாது’ 

சமூகம் எழுத்தாளனுக்கும் கலைஞனுக்கும் தத்துவஞானிக்கும் சிந்திக்கவும், செயலாற்றவும் தேவையான சுதந்திரச் சூழலை அளிக்கவேண்டும். அவனை மதிக்கவும், சிந்தனையாளனாகவும் எழுத்தாளனாகவும் மட்டுமே அவன் தன் வாழ்வௌ அமைத்துக் கொள்வதற்கான அடிப்படைகளை அளிக்கவும் வேண்டும். இதெல்லாம் இருநூறாண்டுகளில் ஐரோப்பாவில் மெல்லமெல்ல நிறுவப்பட்ட மனநிலைகள். அதற்கு அடிப்படையாக அமைந்தது அங்கே ஏற்கனவே இருந்த எழுத்துப் பண்பாடு.

இன்றைக்கு சமூக வலைத்தளங்களில் எழுத்தாளன் வசைபாடப்படுவதைப் பார்த்தாலே நம் சூழலில் இன்னமும் இந்தக் கருத்துக்கள் வந்தடையவில்லை என்பது தெரியும். ‘எழுத்தாளனால் சமூகத்திற்கு என்ன பயன்?’ ‘எழுத்தாளன் சமூகத்திற்குச் சேவை செய்யவேண்டும்’ ‘மக்களுக்குப் பயனுள்ளவற்றை எழுதவேண்டும்’ ‘எழுத்தாளனை சமூகம் கட்டுப்படுத்தவேண்டும்’ ‘எழுத்தாளன் வேலைசெய்து பிழைக்கவேண்டியதுதானே’ ‘எழுதி கல்லா கட்டுகிறான்’ என்றெல்லாம்தான் இங்கே  குரல்கள் எழுகின்றன. இங்கே எழுத்தாளன் சமூகத்தைப் புகழ்ந்துகொண்டே இருக்கவேண்டும் என எண்ணுகிறார்கள். தங்கள் சாதி, மதம், அரசியல்தலைமை, தங்களுக்குப் பிடித்த நடிகன் ஆகிய எதை ஓர் எழுத்தாளன் விமர்சனம் செய்தாலும் கொதிக்கிறார்கள். எழுத்தாளன் தங்களுக்கு ஏற்கனவே தெரிந்து, தாங்கள் நம்புவதையே தானும் சொல்லவேண்டும் என்று நினைக்கிறார்கள். இங்கே கல்லூரிக்கல்வி பெற்றவர்கள்கூட எழுத்தாளனுக்கு தங்களைவிட கூடுதலாக ஏதேனும் தெரிந்திருக்கக்கூடும் என நினைப்பதில்லை. அவன் ‘கதை எழுதுறவன்’ அவ்வளவுதான். எழுத்தாளனை திருத்தியமைக்க, அவனுக்கு வழிகாட்ட, அவனுக்கு அறிவுரை சொல்ல அத்தனைபேருமே தயாராக இருக்கிறார்கள். இவையெல்லாமே பழைய வாய்மொழி மரபைச் சேர்ந்த மனநிலையில் இருந்து எழுபவை. அதாவது தொன்மையான பழங்குடி மனநிலையின் வெளிப்பாடுகள்.

ஆனால் பழைய வாய்மொழி மரபுக்கு, பழங்குடி மரபுக்கு, சில நம்பிக்கைகளும் சில அறங்களும் உண்டு. அவையும் இவர்களிடம் இல்லை. பழைய வாய்மொழி மரபு ‘சொல்வெளிப்பாடு’ கொண்டவனை, அதாவது ‘சரஸ்வதி கடாட்சம் கொண்டவனை’, அதாவது கலைஞனையும் எழுத்தாளனையும் அவமதிக்காது. அவன் ஏதாவது வசையாகவோ சாபமாகவோ சொல்லிவிட்டால் அது தீங்கு என நம்பும். ஒருபோதும் கலைஞனையும் எழுத்தாளனையும் கீழ்த்தரமாக வசைபாடாது. இன்று சமூக வலைத்தளங்களுக்கு வந்து எழுத்தாளனை வசைபாடும் கும்பலின் பெற்றோர் எவரும் அதையெல்லாம் செய்ய மாட்டார்கள். ஆனால் இவர்கள் கூசாமல் செய்வார்கள். ஏனென்றால் இவர்கள் வாய்மொழிப் பண்பாட்டை இழந்துவிட்டவர்கள், எழுத்துவழிப் பண்பாட்டை கற்றுக்கொள்ளாதவர்கள்.

நான் மீண்டும் சொல்வது இதையே. நம் குடும்பங்களில், நம் சமூகச் சூழலில் இன்றும் நீடிப்பது நமது தொன்மையான வாய்மொழிப் பண்பாட்டின் மனநிலை மட்டுமே. அது எழுத்துக்கு எதிரானது. நீங்கள் உங்கள் வீட்டில் அமர்ந்து எதையாவது வாசித்தால் முதல் எதிர்ப்பு உங்கள் பெற்றோரிடமிருந்துதான் வரும், காரணம் இதுதான். ‘நமக்கு எதுக்கு அதெல்லாம், நாம நம்ம பொழைப்பைப் பார்ப்போம்’ என்னும் அணுகுமுறை அவருகளுடையது. உங்கள் நண்பர்கள் வாசிப்பை கேலி செய்வார்கள், ‘ஆமா பெரிய ஷேக்ஸ்பியர்’ என்பார்கள். ஆனால் மணிக்கணக்கில் காணொளிகளில் ஊறிக்கிடப்பார்கள். அதுதான் நம் வாய்மொழிப்பண்பாட்டு உளநிலை

நாம் அதில் இருந்து வெளியேறியே ஆகவேண்டும். எழுத்துப்பண்பாட்டை, அதன் மனநிலைகளை நோக்கிச் சென்றே ஆகவேண்டும். வாய்மொழிப் பண்பாடு இலக்கியத்தை மரபான தெய்வீக வெளிப்பாடு அல்லது புகழ்பாடல் மரபு என்று மட்டுமே பார்ப்பது. நவீன எழுத்துப் பண்பாடு என்பது இலக்கியம் என்பது ஒரு சமூகத்தின் வளரும் விளிம்பு என்று பார்ப்பது, அதற்கான சுதந்திரத்தை அளிப்பது. அந்த மனநிலை உருவானாலொழிய நம்மால் எழுத்தாளர்களை, சிந்தனையாளர்களை மதிக்க முடியாது. அந்த மதிப்பு இன்று தமிழில் அறவே இல்லை என்பதனால்தான் இங்கே வாசிப்பு என்பது இத்தனை குறைவாக இருக்கிறது. வாசிக்காதவர்களுக்கு வாசிப்பின்மை பற்றிய குற்றவுணர்ச்சியோ தாழ்வுணர்ச்சியோ இல்லை, மாறாக பெருமை உள்ளது. வாசிப்புக்கு எதிரான மனநிலை நம் சமூகம் முழுக்க உள்ளது.

நாம் நம் குழந்தைகளுக்கும் அந்த வாய்மொழிப்பண்பாட்டின் எழுத்து எதிர்ப்பு மனநிலையை புகுத்துகிறோம். நான் ஆச்சரியத்துடன் கவனிப்பது ஒன்று உண்டு, எழுத்துப் பண்பாட்டின் உச்சமான அமெரிக்காவில் குடியேறிய நம்மவர் அங்கேயும் இதே எழுத்துக்கு எதிரான மனநிலையுடன் நீடிக்கிறார்கள், அங்கும் வாய்மொழி மரபினரையே விருந்தினராக அழைத்துக் கொண்டாடுகிறார்கள், எழுத்தாளர்களை வசைபாடுகிறார்கள், பிள்ளைகளுக்கு எழுத்துப்பண்பாட்டை அறிமுகம் செய்ய மறுக்கிறார்கள். இந்த மனநிலையை நாம் கடந்தே ஆகவேண்டும்.

இந்தக் கருத்துக்களைச் சொல்லும்போது இவை வாய்மொழி மனநிலையில் ஊறிவந்தவர்களால் எப்படி எடுத்துக்கொள்ளப்படும் என்றும் எனக்குத் தெரியும். ஓர் எழுத்தாளன் தங்களை, தங்கள் பண்பாட்டையும் சமூகத்தையும் புகழ மறுக்கிறான் என்றே நினைத்துச் சீற்றம் கொள்வார்கள், வசைபாடுவார்கள்.தங்கள் மரபின் சில பெயர்களைச் சொல்லி தாங்கள் ஏற்கனவே பண்பாட்டின் உச்சத்தில் இருப்பதாக கூச்சலிடுவார்கள். பண்பாட்டின் அடிப்படை அறிந்தவன் எழுத்தாளனை வசைபாட மாட்டான் என்றுகூட அவர்களிடம் சொல்ல முடியாது. நான் இதை எழுதுவது இன்று கொஞ்சம் எழுத்துமரபுக்குள் வந்துவிட்ட, கொஞ்சம் ஐரோப்பிய எழுத்துப் பண்பாட்டின் சாயலை அடைந்துவிட்ட சிறுபான்மையினரிடம்தான். இங்கே என்ன நிகழ்கிறது என்று அவர்கள் அறிந்துகொள்ளவும், இங்கிருந்து முன்னே செல்லவேண்டிய திசையை அறியவும் அவர்களுக்கு இவ்விவாதம் உதவலாம்.

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on June 15, 2025 11:35

காவியம் – 56

நடனமங்கை.(அப்சரஸ்) சுடுமண், மதுரா அருங்காட்சியகம். சாதவாகனர் காலம். பொயு1

கானபூதி சொன்னது. “நான் குணாட்யரிடம் இரண்டு மனிதர்கள் ஒருவரை ஒருவர் உற்றுநோக்குவதாக எண்ணி ஒருவரை ஒருவர் உருவாக்கிக் கொண்டிருந்த கதையைச் சொல்லிக்கொண்டிருந்தேன். மனிதர்களில் மிகச்சிலரே வாழ்கிறார்கள். எஞ்சியோர் வாழ்க்கையை நடிக்கிறார்கள். பிறன் என ஒருவர் எண்ணத்திலேயே இல்லாமல் தனக்கென ஒரு வரையறையை உருவாக்கிக்கொண்டவன் மட்டுமே வாழ்கிறான். அவன்  முற்றிலும் தனித்தவனாகவும் இருக்கிறான்.”

கானபூதி தொடர்ந்தது. ஒருநாள் அஸ்வத் பிரகாஷிடம் ”நான் ஒரு ஜோதிடரைப் பார்க்கலாம் என்று நினைக்கிறேன்” என்றான்.

“ஜோதிடரையா எதற்காக?” என்று பிரகாஷ் கேட்டான்.

”நீ இந்தக்கதையில் எழுதியது போல எனக்கு என்றாவது ஒரு மீட்பு இருக்குமா என்று நான் யோசித்துக் கொண்டிருக்கிறேன்.”

”அப்படியென்றால் வீழ்ந்திருக்கிறாய் என்றுதானே நீ நினைக்கிறாய்?” என்று பிரகாஷ் கேட்டான்.

”வீழ்ந்திருப்பதாக நினைக்கவில்லை. இப்போது ஒருவகையான யதார்த்தத்தில் வாழ்ந்துகொண்டிருக்கிறேன். எனக்கு இன்னொரு வகையான யதார்த்தம் தேவைப்படுகிறது. இதே யதார்த்தத்திலேயே நான் சுற்றிச் சுற்றி வாழ்ந்தேன் என்றால் சீக்கிரமே இது சலித்துவிடும். அத்துடன் இப்போது எனக்கு சமூகக்கௌரவம் என்று எதுவுமில்லை. என்னுடைய அப்பாவின் நிழலில்தான் நான் இருக்கிறேன். அப்பாவுக்கு பிறகு எனக்கென்று ஒரு சமூகக்கௌரவம் வரும்போது இப்படி ஒரு பின்னணி எனக்கிருந்தால் என் மேல் மதிப்பு கொள்ளமாட்டார்கள். எனக்கு சமூகத்தில் ஒரு கௌரவமான இடமும் தேவை என்றுதான் உறுதியாக நம்புகிறேன்.”

”அதாவது அழகான தேவதையை திருமணம் செய்து கொண்டு தேவனாக வாழவேண்டும் என்று நினைக்கிறாய் சரிதானே…” என்றான் பிரகாஷ்.

”ஆமாம், அவள் என்னை மீட்க வேண்டும். என்னை தன் கைக்குள் வைத்திருக்கவேண்டும். அவள் சொன்னதையெல்லாம் நான் கேட்கவேண்டும். அவளுடைய கணவன் என்று நான் எங்கு சென்றாலும் என்னை அனைவரும் திகைப்புடனும் மதிப்புடனும் பார்க்க வேண்டும். அதுதான் என்னுடைய கற்பனை” என்று அஸ்வத் சொன்னான்.

”அது நிகழுமா என்று நீ சோதிடரிடம் கேட்க விரும்புகிறாய் இல்லையா?” என்றான்.

”ஆமாம் உனக்கு ஏதாவது சோதிடரை தெரியுமா?” என்று அஸ்வத் கேட்டான்.

”நான் விசாரித்துச் சொல்கிறேன். இங்கே நல்ல சோதிடர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள்” என்று பிரகாஷ் சொன்னான்.

அவன் விசாரித்துச் சொன்ன சோதிடர் விஸ்வேஸ்வர் சர்மா பாட்னாவிலிருந்து நூறு கிலோமீட்டர் அப்பால் ஒரு சிறிய ஊரில் வாழ்ந்தார். பசுக்களும் மாட்டுவண்டிகளும் டிராக்டர்களும் நின்ற தெருவழியாகச் சென்று, முன்பக்கம் பெரிதாக அஸ்பெஸ்டாஸ் கொட்டகை போட்ட அவருடைய இல்லத்தை அடைந்தனர். காலை வெயில் ஏறியிருந்தது. அவரைப் பார்க்க வந்தவர்கள் விடியற்காலையிலேயே வந்து சென்றிருந்தார்கள்.  விஸ்வேஸ்வர் சர்மா அவர்களின் அழைப்பை கேட்டு வெளியே வந்தார். பிரகாஷ் அவனுடைய நண்பரிடமிருந்து அவருக்கு கொண்டு வந்திருந்த சிபாரிசுக் கடிதத்தை அளித்தான். அவர் வாசித்துவிட்டு அங்கே கயிற்றுக் கட்டிலில் அமரச்சொன்னார். இன்னொரு கயிற்றுக்கட்டிலில் அவர் அமர்ந்தார்.

அவர்கள் இருவரும் தங்களுடைய ஜாதகத்தின் நகல்களை குறித்துக்கொண்டு வந்திருந்தார்கள். அதை அவரிடம் கொடுத்தபோது அவர் அவற்றை வாங்கி படிக்காமலேயே எடுத்துக்கொண்டு சென்று அந்த வீட்டின் முகப்பில் இருந்த திண்ணையில் பூஜைப்பகுதி போல் ஒதுக்கப்பட்டிருந்த இடத்தில் சந்தனக்கட்டையாலான மணையில் அமர்ந்து கண்களை மூடிக்கொண்டார். அந்த இரு ஜாதகக் குறிப்புகளையும் தன் முன் சுவரில் மாட்டப்பட்டிருந்த ஏராளமான தெய்வப்படங்களுக்கு முன்னால் ஒரு தாம்பாளத்தில் வைக்கப்பட்டிருந்த மஞ்சள் அரிசி, மலர்கள் ஆகியவற்றின் மேல் வைத்தார். ஏற்கனவே அங்கு விரிவான பூஜை நடந்திருந்தது. தூபம் கனன்று சுருள் சுருளாக புகை எழுந்து கரைந்து வந்துகொண்டிருந்தது.

சர்மா உதடுகளை மட்டுமே வேகமாக அசைத்து ஏதோ மந்திரங்களை சொல்லிக்கொண்டிருந்தார். விரல்களை வீணை வாசிப்பது போல அசைத்து, எதையோ எண்ணுபவர் போலவோ காற்றை அளைபவர் போலவோ செய்துகொண்டிருந்தார். அவரைப் பார்த்தபடி இருவரும் அமர்ந்திருந்தனர். பிரகாஷ் ஆர்வமில்லாமல் சுற்றுமுற்றும் பார்த்தான். ஆனால் அஸ்வத் நெஞ்சுமேல் குவித்த கைகளுடன் பணிவாக அமர்ந்திருந்தான்.

சுவரில் இருந்த படங்களில் சிவன், விஷ்ணு, பிள்ளையார், காலபைரவர், சண்டிகேஸ்வரர், துர்க்கை, காளி, ஷிர்டி சாய்பாபா, ராமகிருஷ்ண பரமஹம்சர் என எல்லா வகையான தெய்வங்களும், புனிதர்களும் இருந்தனர். பெயர் தெரியாத மேலும் பல பாபாக்களின் படங்களும் இருந்தன. விஸ்வேஸ்வர் சர்மா கண்களைத் திறந்து எழுந்து வந்தபோது அவர் முகம் ஆழ்ந்த தூக்கத்திலிருந்து முற்றிலும் விழிக்காதவர் போல் இருந்தது.

அவர் அருகே வந்து மீண்டும் அமர்ந்தபடி அந்த ஜாதகத்தை புரட்டி பார்த்தார். ஒரு சிறு பென்சிலால் ஒரு தாளில் நிறைய குறிப்புகள் எடுத்தார். அந்தக் குறிப்புகள் எல்லாமே எண்களாக இருப்பதை அஸ்வத் கவனித்தான். அந்த எண்களை ஒன்றோடொன்று கூட்டி, அவற்றை கழித்து, அதன்பிறகு ஜாதகக் குறிப்புகளை அந்த தாளையும் சுருட்டி கொண்டு சென்று அப்பால் வைக்கப்பட்டிருந்த இரும்பாலான கனல் சட்டி ஒன்றில் போட்டார். பசுக்களுக்கு பூச்சி கடிக்காமல் இருப்பதற்கான சாம்பிராணிப் புகை அதிலிருந்து எழுந்துகொண்டிருந்தது. தாள்கள் விழுந்ததுமே அதில் அனல் பற்றிக்கொண்டு எரிந்து, அணைந்து, கரிய புகைவந்து, மீண்டும் சாம்பிராணி வாசனை எழத் தொடங்கியது.

தன் ஜாதகக் குறிப்புகள் எரிவதை அஸ்வத் திகைப்புடன் பார்த்தான். விஸ்வேஸ்வர் சர்மா அஸ்வத் முகத்தைப் பார்த்து ”மனைவி வருவாள், நீ  எண்ணுவது போலவே இருப்பாள்” என்றார்.

அஸ்வத்தின் முகம் மலர்ந்தது.

அவர் ”ஆனால் உன்னுடைய ஜாதகம் காட்டுவது உன்னுடைய பெரிய கதையை. இங்கே ஒருவருடைய கதை என்பது ஒரு கதை அல்ல. இங்கே நாம் அமர்ந்திருக்கிறோம். இது என்னுடைய வீடு. ஆனால் இந்த வீட்டுக்கு வலப்புறம் கிஷன் தேஷ்பாண்டேயின் வீடு இருக்கிறது. இடதுபக்கம் பிரதாப் பாண்டேயின் வீடு இருக்கிறது. அதற்கப்பால் இன்னும் வீடுகள் இருக்கின்றன. இந்த வீடு ஒரு கிராமத்தில் அமைந்திருக்கிறது. இந்த கிராமம் ஒரு ஆற்றங்கரையில் அமர்ந்திருக்கிறது. இந்த ஆறு நூற்றுக்கும் மேற்பட்ட ஊர்களை இணைக்கிறது” என்றார்.

“சரி, இந்த வீடு இருக்கும் இந்த இடத்தை எடுத்துக்கொண்டால் இந்த வீட்டை எனது முப்பாட்டா கட்டுவதற்கு முன்பு இங்கே ஒரு பிராமணர் குடிசை போட்டு தங்கியிருந்தார். அவருக்குமுன் இங்கு யாரோ தங்கியிருக்கலாம். அதற்குமுன் இது காடாக இருந்திருக்கலாம். அந்த மரங்களில் குரங்குகளும் பிற விலங்குகளும் வாழ்ந்திருக்கலாம். பாம்புகள் வாழ்ந்திருக்கலாம். அதற்கும் முன் இங்கு வேறேதோ இருந்திருக்கலாம். இனி இந்த வீடு எவ்வளவு காலம் இருக்கும் என்று சொல்ல முடியாது. இது இடிந்து இங்கு வேறொரு வீடு வரலாம். அங்கு வேறொருவர் தங்கலாம். எப்படிப்பார்த்தாலும் வாழ்க்கையின் ஒரு புள்ளி எல்லாப் பக்கமும் தொடர்பு கொண்டிருக்கிறது” என்று அவர் அவர்களை தன் பெரிய கண்களை அகல விழித்து உற்றுப்பார்த்தபடிச் சொன்னார்.

“ஜோதிடத்தின் பிரச்னையே ஒரு புள்ளியைத் தொட்டதுமே எல்லாப் பக்கமும் திறந்துகொள்ளும் என்பதுதான். அப்படித் திறந்து கொள்வனவற்றில் எந்தப்பகுதியை ஜோதிடம் கேட்க வருபவனுக்கு சொல்லவேண்டும் என்பதில்தான் ஜோதிடனின் திறமையும் மனப்பக்குவமும் உள்ளது. எல்லாவற்றையும் சொல்லக்கூடியவர்கள் நிறைய தருணங்களில் மோசமான சோதிடர்களாக தோற்றுப்போகிறார்கள். தேவையானவற்றை மட்டும் தேவையானபடி சொல்லும் சோதிடர்கள் தான் பணம் சம்பாதிக்கிறார்கள்” என்றார் சர்மா.

”நான் எல்லாவற்றையும் தெரிந்துகொள்ள விரும்புகிறேன்” என்று அஸ்வத் சொன்னான்

”நான் எல்லாவற்றையும் சொல்ல விரும்புவதில்லை” என்று விஸ்வேஸ்வர் சர்மா புன்னகை இல்லாமல் சொன்னார். ”நான் ஒரு மனிதன் எப்படி முன்னால் செல்லலாம், வாழ்க்கையின் அடுத்த அடியை எப்படி வைக்கலாம், அதில் எதை கவனிக்க வேண்டும் என்பதைத் தவிர எதையுமே சொல்வதில்லை. நேற்று நடந்ததை தெரிந்து கொள்வதற்காக இங்கு வருவார்கள். அதை நான் சொல்ல மாட்டேன். நாளை என்னென்ன நடக்குமென்று கேட்பதற்காகவும் வருவார்கள். அதையும் நான் சொல்வதில்லை. நீங்கள் இங்கிருந்து சென்றதுமே உங்களைப்பற்றிய எல்லா நினைவையும் இந்தக் காகிதங்களை எறிந்ததுபோல இந்த தீயிலே எறிந்து மறந்துவிடுவேன். இல்லையென்றால் நானும் இங்கு வாழமுடியாது” என்றார்.

“நான் என்ன செய்ய வேண்டும்?” என்று அஸ்வத் கேட்டான்.

விஸ்வேஸ்வர் சர்மா “நெடுங்காலம் முன்பு நடந்த ஒரு கதை இது…” என்றார். ”நெடுந்தூரத்தில் ஒரு நகரம். அந்த நகரத்தில் ஒரு வெற்றித்தூணை அந்தக் கால அரசர் ஒருவர் உருவாக்கினார். அவர் தென்திசை சென்று வென்று வந்ததற்கான புகழ் அந்தத் தூண் வழியாக காலகாலமாக நிலைகொள்ள வேண்டும் என்று நினைத்தார். ஆனால் அந்தத் தூணை எத்தனை முயன்றாலும் மண்ணில் நிறுத்த முடியவில்லை அது ஒவ்வொரு பக்கமாக சரிந்துகொண்டே இருந்தது. அங்கே அரசவையில் ஒரு ஜோதிடர் இருந்தார். அந்த ஜோதிடர் அவருக்கொரு ஆலோசனை சொன்னார். நூற்றெட்டு மனித உயிர்களை பலி கொடுத்து அந்த ரத்தத்தால் அந்தத் தூணைக் கழுவினால் அந்தத் தூணில் ஒட்டியிருக்கும் தீய தேவதைகள் எல்லாம் அமைதியடையும், ஆயிரமாண்டுக்காலம் அவை வெளியே வரவே வராது என்றார்.”

அந்த தூணில் செதுக்கப்பட்டிருந்தவை பூதகணங்கள், பைசாசங்கள் போன்ற பாதாள தேவதைகள். ”அவை இங்கே நமக்கு முன்னரே இருந்துகொண்டிருந்தன. அவற்றுக்கும் நம் உலகுக்கும் தொடர்பில்லை. ஆனால் அவற்றுக்கு நாம் கல்லில் உருவம் கொடுத்த உடனே அவை நம் உலகுக்குள் வந்துவிட்டன. நம்மைப்போலவே தாகமும் பெற்றுவிட்டன. அவற்றுக்கு தாகசாந்தி செய்யாமல் அந்தத் தூணை நிறுத்தமுடியாது” என்றார் ஜோதிடர் .

அரசர் “நூற்றெட்டு பேரின் ரத்தம் தானே? இந்தபோரில் நாம் நாற்பதாயிரம் பேரை களப்பலி கொடுத்தோம். உடனே நூற்றெட்டு வீரர்களை கூட்டி வாருங்கள்” என்றார்.

அமைச்சர் ”நூற்றெட்டு வீரர்களை அப்படி பலிகொடுக்கமுடியாது” என்று தயங்கினார். ”போர்க்களத்தில் ஆயிரம் பேர், பத்தாயிரம் பேர் சாகலாம். ஆனால் அது வீரம். விலங்குகளைப் போல வீரர்களை பலிகொடுத்தால் பிற வீரர்கள் மனச்சோர்வு அடைவார்கள். நம்மீது அவர்களுடைய நம்பிக்கை இல்லாமலாகும். அரசனுக்காக உயிர்கொடுப்பேன், அது எனக்கு வீரன் என்ற பெயரையும் சொர்க்கத்தையும் அளிக்கும் என்று ஒவ்வொரு வீரனும் நினைக்கும்போதுதான் ஓர் அரசு வாழும். அரசன் விரும்பினால் விளையாட்டுக்குக் கூட தன் உயிரை எடுப்பான் என்று ஒரு படைவீரன் நினைத்தானென்றால் அந்தப்படை தன் அடிப்படையான நம்பிக்கையை இழக்கிறது. அதை ஒருபோதும் செய்யக்கூடாது” என்றார்.

“சரி, அப்படியென்றால் நூற்றெட்டு சிறைக்கைதிகளை கொண்டு வாருங்கள்” என்றார் அரசர்.

“சிறைக்கைதிகளில் பெரும்பாலானவர்கள் நமது ஊரைச் சேர்ந்தவர்கள் அல்ல. பலர் கொடும் குற்றவாளிகள். தீராத நோயாளிகளும் அவர்களில் உண்டு. அங்கக்குறைவு இல்லாதவர்களும் அவர்களில் மிகக் குறைவு. அவர்களைத் தேர்ந்தெடுத்து பலிகொடுப்பது சரியல்ல. அவர்களின் ஆவிகள் இங்குதான் இருக்கும். தூய மனிதர்களைத்தான் நாம் தெய்வங்களுக்கு பலிகொடுக்க முடியும். ஏற்கனவே கீழ்மையில் உழல்பவர்களை அல்ல” என்று அமைச்சர் சொன்னார்.

”வேறென்ன செய்வது? நூற்றெட்டு குடிமக்களை நமது நாட்டிலிருந்து பிடித்து வரப்படலாம்” என்றார் அரசர்

”சாதாரணகுடிகள் அரசன் மேல் நம்பிக்கை கொள்ளவேண்டும். தங்களை அரசன் காப்பாற்றுவான் என்று அவர்கள் நினைக்கவேண்டும். நூற்றெட்டு பேரை இழுத்து வந்து பலிகொடுத்தால் அது ஒரு கதையாக மாறும். அந்தக் கதை தலைமுறை தலைமுறைகளாக நீடித்து அரசன் மேல் நம்பிக்கை இல்லாமல் செய்யும். ஒருபோதும் எளிய மக்கள் தங்களை அரசன் பலிகொடுக்கிறான் என்ற எண்ணத்திற்கு வரக்கூடாது. அதன் பிறகு எந்த ஒரு நோயோ, விபத்தோ, போரோ நிகழ்ந்தாலும் அரசர் தங்களை சாகவிட்டுவிட்டார் என்றுதான் இந்த மக்கள் நம்புவார்கள். ஒரு சிறு அச்சம் உருவானாலே கூட்டம் கூட்டமாக ஊரைவிட்டு வெளியேறுவார்கள்”

”பிறகு என்ன தான் செய்வது?” என்று அரசன் சீற்றத்துடன் கேட்டான்.

”நூற்றெட்டு சமர்களை பலி கொடுக்கலாம்” என்றார் அமைச்சர்.

”அவர்கள் தீண்டத்தகாதவர்கள் அல்லவா ?” என்று அவர் கேட்டார்.

”ஆமாம் ஆனால் அவர்களை நல்ல நீராட்டி, தூய்மைச் சடங்குகள் செய்து,  நகரத்துக்குள்ளே கொண்டு வரலாம். அவர்களை சமர்களாக்கியது அரசாணைதான். அவர்களை தூயவர்களாக்குவதற்கும் அரசாணை உண்டு. அவர்களை தீண்டத்தகாதவர்கள் ஆக்கியது புரோகிதர்களின் சடங்கு. அதே போன்ற புரோகிதர்களின் சடங்கு அவர்களை தீண்டக்கூடியவர்களாக ஆக்கலாம். அவர்களை பலிகொடுக்கலாம். பலிகொடுக்கப்பட்டவர்கள் சமர்களல்லாமலாகி மோக்ஷத்தை அடைந்தார்கள் என்று சொல்லலாம். சமர்களுக்கும் அது மிகப்பெரிய விடுதலையாக இருந்தது அமைந்தது என்றும் சொல்லலாம்” என்றார் அமைச்சர்.

அரசன் யோசித்தான்.

“சோதிடப்படி சமர்களிலேயே மிகச்சிறந்தவர்களான நூற்றெட்டு பேரை தேர்ந்தெடுத்து அவர்களை ஷத்ரியர்களாக மாற்றித்தான் அந்தப் பலி கொடுக்கப்பட்டது என்றும் நிறுவலாம். அந்தச் சமர்களை தெய்வங்களே தேர்ந்தெடுத்தன என்றும் சொல்லலாம். சமர்களே அதை காலப்போக்கில் ஏற்றுக்கொள்வார்கள். அவர்களுக்கும் நாம் விடுதலை அளித்ததாகவே நமது குடிகளும் நினைப்பார்கள். எல்லாவகையிலும் இது சிறந்தது” என்று அமைச்சர் சொன்னார்.

“ஆம், அது நல்ல யோசனைதான்” என்று அரசன் சொன்னான்.

விஸ்வேஸ்வர சர்மா அஸ்வத்திடம் சொன்னார் ”அவ்வாறு நூற்றெட்டு சமர்கள் பலிகொடுக்கப்பட்டனர். அந்தத் தூண் இங்கு எங்கோ இன்னும்கூட நின்றுகொண்டிருக்கிறது. அது விழுந்துவிட்டிருந்தால் பிரச்சினை இல்லை, அது முடிந்த கதை. ஆனால் அது நின்றிருக்கிறது”

அந்தக்கதையை ஏன் அவர் தன்னிடம் சொல்கிறார் என்று தெரியாமல் அஸ்வத் கைகளை ஒன்றோடொன்று சேர்த்து பிடித்தபடி கேட்டிருந்தான்.

”அன்று அவ்வாறு அரசனுக்கு சோதிடம் உரைத்தவர் ஒரு பிராமணர். அவர் பெயர் என்னவென்று நமக்குத் தெரியாது. ஆனால் அவர் மீது நூற்றெட்டு சமர்களின் சாபம் விழுந்திருக்கிறது. அந்த பிராமணர் திரும்பத் திரும்ப இங்கே பிறந்துகொண்டே இருக்கிறார். ஒவ்வொரு முறையும் அவர் உயர்குடியில் பிறந்து, கீழ்மை நோக்கிச் சென்று, கீழ்மையிலேயே மறைந்து கொண்டிருக்கிறார். பிறவிபிறவியாக நிகழ்கிறது இது. பெருங்கலைகள், உயர்ந்த இலக்கியங்கள், மெய்ஞானம் அனைத்தையும் தேடிச் செல்ல எல்லா வாய்ப்புகளும் உள்ள குடும்பத்தில்தான் அவர் பிறக்கிறார். குறைவற்ற செல்வம் கொண்டவராகவும் இருக்கிறார். ஆனால் எதுவுமே அவருக்குப் பயன்படுவதில்லை. அவர் சென்று பொருந்துவதற்கு கீழ்மைதான் உகந்ததாக இருக்கிறது. கீழ்மை தவிர எதிலும் அவருக்கு ஆர்வமில்லை”

“ஏனெனில் அந்த சோதிடர் வேறு குடியில் பிறந்து உயர்ந்த பண்பாட்டை கற்று மிக உயர்ந்த இடத்தில் இருந்தபோது கூட தன் ஓர் ஆழத்தில் ஒரு ரகசிய ஆசையாக கீழ்மையை வைத்து விளையாடிக் கொண்டிருந்தார். அது வேறெவருக்குமே தெரியாது. மிக அணுக்கமானவர்களிடம் கூட அவர் சொன்னதில்லை. ஆனால் அவருடைய தனிப்பட்ட பகற்கனவுகள் எல்லாமே கொடியவையும் இருண்டவையுமாக இருந்தன. அவர் சமர்களை வெறுத்தது அதனால்தான். அவர் உண்மையில் அவர்களை வெறுக்கவில்லை. அவர்கள் வாழும் அழுக்கான உலகிற்கு சமானமான ஒன்றில்தான் அவர் உள்ளம் தடையின்றி திளைத்தது. அதனாலேயே அவர் அவர்களை வெறுத்தார். அந்தத் தருணத்தில் அப்படி ஒன்றை சொல்வதன் வழியாக தனக்கு ஒரு தூய்மை அடையாளம் கிடைக்கும் என்று எண்ணினார்” விஸ்வேஸ்வர் சர்மா தொடர்ந்து சொன்னார்.

“எந்தவகையிலும் அவருடைய அந்தரங்கத்தை இன்னொருவர் அறிந்துகொள்ள வாய்ப்பே இல்லாமல் இருந்தும் கூட, எங்கோ எப்போதோ எவரோ அதை அறிந்துகொள்வார் என்று அவர் நினைத்தார். ஒருவர் தன் கண்களைப் பார்த்து பேசினாலோ, தன் முகம் பார்த்து சற்றே புன்னகைத்தாலோ, அவருக்குள் ஒரு திடுக்கிடல் ஏற்பட்டது. தன்னை அவர் அறிந்துகொண்டாரா என்று பலமுறை சோதித்து இல்லையென்று உறுதி செய்துகொள்வது வரை அவர் பதற்றம் அடைந்துகொண்டிருந்தார். உறுதி செய்துகொண்டபிறகும் கூட மெல்லிய சந்தேகம் நீடித்தது. ஆகவே தூய்மையில் வெறிகொண்ட அந்தணர் ஒருவர் என்று அவர் தன்னை காட்டிக்கொள்ள விரும்பினார். அவ்வாறுதான் பலிகொடுப்பது பற்றிய அந்த ஜோதிடத்தை அவர் சொன்னார்”

சர்மா தொடர்ந்தார். ”ஒருவரின் மறுபிறப்பென்பது அவருடைய உள்ளிருக்கும் மறைமுக ஆசைக்கு இன்னொரு வாய்ப்பு அளிக்கப்படுவதுதான். அவர் மேல் நூற்றெட்டு சமர்களின் சாபம் விழுந்திருக்கிறது. அந்த சாபம் அவரை தட்டி ஒரே குழியில் விழவைக்கிறது அதிலிருந்து அவ்வளவு எளிதாக மீளமுடியாது”

பிரகாஷ் அமைதியிழந்து அசைந்தான்.

சர்மா அஸ்வத்திடம் “ஆனால் இத்தனை தொலைவு தேடி வந்து என்னிடம் இதை கேட்கும் எண்ணம் உனக்கு வந்ததே ஒருவேளை இப்பிறப்பில் அந்த மீட்சியை நீ தொடங்கிவைக்கலாம் என்பதனாலாக இருக்கும். இவ்வளவு தொலைவுக்கு நீ சென்றுவிட்டது அந்த சாபத்தால்தான். ஆனால் இனிமேல் நீ மீள முடியும். சற்றும் சபலமற்ற உறுதியுடன் எஞ்சிய வாழ்க்கையை நீ கழிப்பாய் என்றால் உன்னால் மீண்டுவிட முடியும்” என்றார்.

அஸ்வத் ஒன்றூம் சொல்லவில்லை. பிரகாஷ் ”அவன் செய்வான். அவன் அதற்காகத்தான் வந்திருக்கிறான்” என்றான்.

”உனக்கு நீ விரும்பியது போல மனைவி அமைவாள். அவளை நீ உனது மீட்புக்கான தேவதையாகக் கொண்டால் தலைமுறை தலைமுறையாக பிறந்து பிறந்து நீ திளைத்துக் கொண்டிருக்கும் இந்த சேற்றிலிருந்து நீ விடுபடமுடியும்” என்றார் விஸ்வேஸ்வர் சர்மா. ”மலத்தில் தவறுதலாக முட்டை போட்டுவிட்ட பட்டாம்பூச்சியின் புழு மலப்புழுவாக வளர்வதைப் போலத்தான் இது. அதற்கு சிறகு முளைத்தால் அது பறந்து எழுந்துவிட முடியும்.”

அவருக்குரிய தட்சிணையை கொடுத்துவிட்டு இருவரும் திரும்பிவரும்போது வெகுநேரம் பேசமுடியவில்லை.

சட்டென்று அஸ்வத் உரக்க சிரித்து ”அவர் சொன்ன ஓர் உவமை நன்றாக இருந்தது” என்றான். ”மலப்புழுவுக்குச் சிறகு முளைப்பது…”

பிரகாஷ் ”அவர்கள் இது போன்று நினைவில் நிற்கும் எதையாவது சொல்ல விரும்புவார்கள்” என்றான்.

அஸ்வத் சிரித்து “அவர் சொன்னதில் எனக்குப் புரிந்தது ஒன்றே ஒன்றுதான். ரகசிய ஆசைதான் ஒருவனை மறுபிறப்புக்கு ஆளாக்குகிறது என்றால் அடுத்தபிறவியில் நீ நான்தான்” என்றான்.

பிரகாஷ் ஒன்றும் சொல்லவில்லை மென்மையாக புன்னகைத்தான். அஸ்வத் அந்த நிலைகுலைவை சிரித்தும் கேலி செய்தும் கடந்து செல்ல விரும்புகிறான் என்று அவனுக்குத் தெரிந்தது. அந்த பயணம் முழுக்க அஸ்வத் கேலியும் கிண்டலுமாகப் பேசிக்கொண்டே இருந்தான். ஆனால் அந்த நாளுக்குப் பின் அவர்களின் நெருக்கம் மறைந்துவிட்டது. சந்திக்கும்போது பொதுவாகப் பேசிக்கொண்டார்களே ஒழிய சேர்ந்து அமர்ந்து உரையாடும் தருணத்தையே தவிர்த்தார்கள்.

கல்லூரி முடித்தபின் பிரகாஷை அஸ்வத் சந்திக்கவில்லை. அவன் போலீஸ் அதிகாரியாகி, திருமணம் செய்துகொண்டு, வாழ்க்கையில் நெடுந்தொலைவு சென்றபிறகு ஒருமுறை பிரகாஷை ஒரு  கிராமத்தில் பள்ளி ஆசிரியராக சந்தித்தான். பிரகாஷ் திருமணம் செய்துகொண்டு, இரண்டு குழந்தைகளுடன் வாழ்ந்து கொண்டிருந்தான். நாற்பது வயதிலேயே ஐம்பது வயதான உடல் தோற்றம் அவனுக்கு வாய்த்திருந்தது. நெற்றியில் நீண்ட திலகமும், கன்னங்களில் நெடுங்காலம் பீடாபோட்ட உப்பலும் இருந்தன. தடித்த கண்ணாடி போட்டிருந்தான். தோள்கள் முன்னால் வளைந்து, தொந்தி போட்டு, நடக்கும்போது ஒரு கூனல் விழுந்தது.

சாலையை வேடிக்கை பார்த்துக்கொண்டு அவ்வழியே காரில் கடந்து சென்ற அஸ்வத்தால் பிரகாஷை அடையாளம் காண முடியவில்லை. தாண்டிச்சென்றபிறகு தான் அது யார் என்று தெரிந்தது. காரை பின்னால் எடுக்கச் சொல்லி,  வந்து இறங்கி ”நீ பிரகாஷ் தானே?” என்று கேட்டான்.

பிரகாஷ் சட்டென்று அடையாளம் கண்டுகொண்டு ”ஆ! நீயா?” என்றபின் தன் பிள்ளைகளைக் காட்டி ”என்னுடைய குழந்தைகள்” என்றான். “நமஸ்காரம் சொல்” என்று குழந்தைகளிடம் சொல்ல அவை கண்களைச் சுருக்கியபடி முனகின.

”வா, உன்னைப்பார்த்து நெடுங்காலம் ஆகிறது. உனக்குத் திருமணம் அழைப்பிதழ் அனுப்புவதற்காக உன் ஊருக்கு ஆளனுப்பியிருந்தேன். அங்கே யாருமில்லை என்று சொன்னார்கள்”

“ஆமாம், கடை நொடித்து போய் அப்பாவும் நானும் கிளம்பிவிட்டோம். நல்லவேளையாக எனக்கு அரசாங்க வேலை கிடைத்தது, இப்போது நன்றாக இருக்கிறோம்” என்றான் பிரகாஷ்.

அஸ்வத் அவர்களை வீட்டுக்குக் கொண்டு வந்து விட்டு ஒரு காப்பி சாப்பிட்ட பிறகு, பிரகாஷை தன்னுடன் அழைத்துக்கொண்டு அருகிலிருந்த தங்கும் விடுதிக்கு சென்று அங்கு இரவு ஆகும் வரை பேசிக்கொண்டிருந்தான்.

”நீ எண்ணியது போல உனக்கு ஒரு அழகான தேவதை வந்துவிட்டாள்” என்று பிரகாஷ் சொன்னான். “சோதிடம் பலித்தது. அன்றைக்கு அது ஒரு சாபம் போல் இருந்தது…”

அஸ்வத் “உன்னை கண்டுபிடிக்கவே முடியவில்லை” என்றான்.

”நம்முடன் படித்த பிரஜ்நாத் போஸ் என்னிடம் உன் திருமணம் பற்றிச் சொன்னான். மகிழ்ச்சியாக இருந்தது. என்னால் வரமுடியாத நிலை அப்போது” என்றான். “தேவதை வரவேண்டும் என்று விதியிருந்தால் வருவாள்”

சற்று நேரம் யோசித்த பிறகு அஸ்வத் ”தேவதை வந்தது உண்மைதான் ஆனால் தேவதையை என்னால் அணுக முடியவில்லை. நான் அவ்வளவு தூரம் என்னை இறுக்கிக் கொண்டுவிட்டேன். தேவதையை காமம் வழியாக அணுக முடியாது. காமமன்றி வேறொன்று எனக்குத் தெரியவும் தெரியாது” என்றபின் ஒரு சிகரெட்டை பற்ற வைத்தபின் “ஒரு தேவதையை மிக எளிதாக பிசாசாக ஆக்க முடியும் என்று கண்டு கொண்டேன்” என்றான்.

(மேலும்)

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on June 15, 2025 11:34

சு. கருணானந்தம்

கவிஞர், எழுத்தாளர், மொழிபெயர்ப்பாளர், பேச்சாளர், இதழாளர். திராவிட இயக்கம் சார்ந்து செயல்பட்டார். அஞ்சல்துறையில் பணியாற்றினார். தமிழக அரசுச் செய்தித் துறையில் துணை இயக்குநராகப் பணியாற்றினார். தமிழக அரசு இவரது படைப்புகளை நாட்டுடைமை ஆக்கியது.

சு. கருணானந்தம் சு. கருணானந்தம் சு. கருணானந்தம் – தமிழ் விக்கி
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on June 15, 2025 11:32

Birds and bliss

Initially I was curious as what the bird watching class is all about and also while seeing the kids initially, I thought how the kids even sit and listen the classes! Perception went completely wrong since the kids were the one who were very enthusiastic, hence they were able to participate and engage better than adults.

Birds and bliss

காணொளி உலகில் ஏன் வாசிக்கவேண்டும் என்ற காணொளியை நான் நாலைந்து நண்பர்களுக்கு அனுப்பினேன். ‘அதையும் காணொளியாத்தானே குடுக்கறார்?’ என்ற வகையான எதிர்வினைகள் வந்தன

காணொளியும் வாசிப்பும்
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on June 15, 2025 11:30

June 14, 2025

எழுத்தாளனை மதிப்பதன் பின்னணி- ஒரு பதில்

ஆனந்தவிகடன் பேட்டி

ஜெ,

உங்கள் ஆனந்த விகடன் பேட்டியை ஒட்டி உருவான விவாதங்களைக் கண்டிருப்பீர்கள். ஏராளமானவர்கள் ஒரு வாரத்துக்கும் மேலாக உங்களை கீழ்த்தரமாக வசைபாடிக்கொண்டே இருந்தார்கள். ‘பெரியாரையும் அண்ணாவையும் கலைஞரையும் விட எவண்டா எழுத்தாளன்?’ என்பதுதான் ஓங்கி ஒலித்தகுரல். வசைகளின் பெரும்பகுதி திரும்பத்திரும்ப ஏதாவது ஒரு கேலிப்பெயரைச் சொல்லி காழ்ப்பை கொட்டுவதாகவே இருந்தது. பேட்டியில் நீங்கள் சொன்ன அந்த ஒரு விஷயத்த்தின் ஒரு பகுதியை விகடன் தன் பிரமோவுக்குப் பயன்படுத்தியிருந்தது. அதைத்தான் இவர்கள் படித்திருந்தார்கள். முழுப்பேட்டியை எவரும் படிக்கவில்லை என்றே தெரிந்தது. வசைபாடியவர்கள் நீங்கள் சொல்வதுபோல பெரும்பாலும் கட்சி சார்பான வம்பர்கள், முகமூடிபோட்ட மதவெறியர்கள்.

சமூகத்தின் மீதான விமர்சனமும், மேலான ஒன்றுக்கான கனவும்தான் எழுத்தின் அடிப்படைகள். ஓர் எழுத்தாளன் ஒரு சமூகத்தை நோக்கி மிக எளிமையான ஒரு விமர்சனத்தைக்கூட வைக்கமுடியாது என்றால், அவனை இப்படி நாலாந்தர அல்லக்கைகள் இழிவுசெய்வார்கள் என்றால் இங்கே இருப்பது என்னவகையான சூழல்? அதையும் நீங்களே அந்தப் பேட்டியில் சொல்லியிருக்கிறீர்கள். அந்தப் பேட்டியில் சொன்னவை எல்லாம் எந்த அளவுக்கு உண்மை என்ற எண்ணம்தான் அந்த எதிர்வினைகளைப் பார்த்தபோது உருவானது. ஒட்டுமொத்தமாகவே நாம் எழுத்து, எழுத்தாளன் மேல் அவமரியாதை கொண்ட ஒரு சமூகம். அந்த வசையை கொட்ட ஒரு சாக்காகவே ஏதேனும் ஒரு தரப்பை நாம் எடுத்துக்கொள்கிறோமே ஒழிய நமக்கு உண்மையில் எந்த தரப்பும் இல்லை.

ஆர்.ரவிக்குமார்

அன்புள்ள ரவிக்குமார்.

என் கருத்துக்கு வந்த எதிர்வினைகளில் பொருட்படுதத்தக்கது மனுஷ்யபுத்திரன் எழுதிய இந்த பதில். நாலைந்து நாட்களுக்கு முன்னர்தான் இது என் கவனத்துக்கு வந்தது. இந்த வசையலை ஓய்ந்தபின் இதை வெளியிடலாமென நினைத்தேன்.

மனுஷ்யபுத்திரன் பதில்

நவீன தமிழ் எழுத்தாளர்களுக்கு தமிழ்நாட்டில் சிலைகள் இல்லை என ஜெயமோகனின் ஒரு கூற்றை ஒட்டி கடுமையான பேச்சுவார்த்தைகள் முகநூலில் நடந்துகொண்டிருக்கின்றன. திராவிடம் நவீன தமிழுக்கு செய்த பணிகள் ஒரு எழுத்தாளருக்கு சிலை வைப்பதைவிட பிரமாண்டமானவை. அதிலும் இன்றைய அரசு செய்துவருபவை இதற்குமுன்பு நடந்திராதவை.

1. பள்ளி– கல்லூரி பாடநூல்களில் நவீன எழுத்தாளர்களின் படைப்புகள் பரவலாக இடம்பெற்றுள்ளன.

2. சென்னையில் அண்ணா நூற்றாண்டு நூலகமும் மதுரையில் கலைஞர் நூலகமும் தமிழ்நாட்டின் நவீன பண்பாட்டு மையங்களாக மாறியுள்ளன. இதே போன்ற பிரமாண்டமான நூலகங்கள் கோவையில் பெரியார் பெயரிலும் திருச்சியில் காமராஜர் பெயரிலும் கட்டப்பட்டு வருகின்றன. 

3. அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் அமைந்துள்ள செந்தமிழ் சிற்பிகள் அரங்கில் தமிழுக்கு தொண்டாற்றிய பழந்தமிழ் அறிஞர்கள் முதல் நவீன எழுத்தாளர்கள்வரை அவர்களது படங்களும் அவர்களைப்பற்றிய வாழ்க்கைக் குறிப்புகளும் இடம்பெற்றுள்ளன. தினமும் ஏராளமானோர் அவற்றை பார்வையிடுகின்றனர். 

4. கி.ராஜநாராயணன் அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டதுடன் அவருக்கு மணிமண்டபமும் அமைக்கப்படுகிறது

5. கோணங்கிக்கு 5 இலட்சம் ரூபாய் விருதுத் தொகைகொண்ட இலக்கிய மாமணி விருது இந்த அரசால் வழங்கப்பட்டது. 

6. இந்த அரசு மாவட்டம்தோறும் புத்தகக் கண்காட்சிகள்மூலம் புத்தக வாசிப்பு தமிழ்நாடு முழுக்க ஒரு பேரியக்கமாக மாறியுள்ளது. இதற்காக அரசு ஒரு பெரும் தொகையை நிதியாக ஒதுக்கி வருகிறது. அவற்றில் கணிசமான நவீன எழுத்தாளர்கள் உரையாற்ற அழைக்கப்படுகின்றனர்

7. மண்டல வாரியாக நதிகளின் பெயரில் நடத்தப்படும் இலக்கியத் திருவிழாக்களில் பெரும்பாலும் நவீன எழுத்தாளர்களே உரையாற்ற அழைக்கபடுகின்றனர். 

8. பதிப்புத்துறையின் கடைந்தெடுத்த ஊழல்பேர்வழிகளால் சீரழிக்கப்பட்ட பொது நூலகத்துறை கடந்த காலத்தில் சீரழிக்கபட்டதை மாற்றி இன்று எல்லாவிதமான பதிப்பகங்களிலும் நூல்கள் வாங்கப்படும் வகையில் புதிய நூலகக்கொள்கை வகுக்கபட்டு ஏராளமான நவீன படைப்பாளிகளின் நூல்கள் சமீபத்தில் வாங்கப்பட்டன. இந்தக் கொள்முதல் தொடர்ந்து நடைபெறுகிற இருக்கிறது. 

9. இந்தியாவில் எந்த மாநில அரசும் செய்திடாத வகையில் உலகப் புத்தகக் கண்காட்சிகள் தொடர்ந்து இந்த அரசு வந்ததிலிருந்து ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வருகிறது. மொழிபெயர்ப்பு உரிமைகளை வாங்குவதும் விற்பதும் சிலரின் ஏகபோகமாக இருந்த நிலை மாற்றப்பட்டு அது அனைவருக்கும் ஜனநாயகப்படுத்தபட்டு உலகத்துடனான கதவுகள் திறந்துவிடப்பட்டுள்ளன. 

10. தமிழ் படைப்புகளை பிறமொழிகளுக்கு எடுத்துச் செல்ல பெருமளவு நிதி நல்கைகள் வழங்கப்படுகின்றன. 

11. தமிழ்நாடு பாடநூல் கழகம் இன்று மிக முக்கியமான பழைய நூல்களை பதிப்பிப்பது மட்டுமல்ல, தமிழ் படைப்புகளை பிறமொழிகளுக்கு எடுத்துச் செல்வதிலும் பெரும் பங்காற்றி வருகிறது

12. எழுத்தாளர்களுக்கு கனவு இல்லம் திட்டத்தின் மூலம் வீடுகள் அளிக்கப்பட்டு வருகின்றன

13. தமிழ்நாடு முழுக்க நூலகங்கள் புதுப்பிக்கப்பட்டு வருகின்றன

14. நான் சென்னை மாநகர நூலக ஆணைக்குழு தலைவராக பொறுப்பேற்ற பிறகு முழுக்க முழுக்க நவீன எழுத்தாளர்களை மையமாகக்கொண்ட நிகழ்வுகளை தொடர்து நடத்தி வந்திருக்கிறேன். புதுப்பிக்கபட்ட சிற்றரங்கத்திற்கு புதுமைப்பித்தன் பெயரை இட்டோம். இதற்கான முழு ஆதரவை துறை சார் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்களும் அதிகாரிகளும் அளித்து வந்திருக்கிறார்கள்.

15. நவீன எழுத்தாளர்களின் படைப்புகள் அடங்கிய இலக்கிய மலர்களை அரசின் இதழான தமிழரசு இதழ் வெளியிட்டுள்ளது.

16. கலைஞர் செம்மொழி ஆராய்ச்சி விருது பத்து இலட்ச ரூபாய் கொண்ட இந்தியாவின் உயரிய விருது. கலைஞர் சொந்த நிதியிலிருந்து வழங்கிய ஒரு கோடி ரூபாயிலிருந்து பபாஸி ஆண்டு தோறும் வழங்கிவரும் கலைஞர் விருதை சி.மோகன் உட்பட பல நவீன படைப்பாளிகள் பெற்றுள்ளனர்.

இதெல்லாம் சட்டென நினைவில் வந்தவற்றை மட்டும் எழுதுகிறேன். சில சிலைகளைக் காட்டிலும் இத்தகைய செயல்கள் ஆயிரம் மடங்கு மேலானவை.  இதற்கு முந்தைய ஆட்சிக் காலங்களில் கலைஞர் தமிழுக்கும் தமிழ் அடையாளத்திற்கும் செய்தவற்றை மிகப்பெரிய பட்டியலிடலாம். வள்ளுவத்தையும் சிலப்பதிகாரத்தையும் தமிழின் முகமாக மாற்றியது கலைஞரே. 

திராவிடம் நவீன எழுத்தாளர்களை ஒருபோதும் விலக்கியதில்லை. கலாப்ரியா, வண்ணதாசன்  போன்ற பலரும் வெவ்வேறு காலகட்டங்களில் திராவிட இயக்கத்தோடு நல்லுணர்வுர்களை கொண்டிருந்திருக்கின்றனர். கனிமொழி, தமிழச்சி தங்கபாண்டியன் போன்றோர் பல நவீன எழுத்தாளர்களுக்கு ஆதரவளித்து நட்புகொண்டிருந்திருக்கின்றனர். ஒரு நவீன கவிஞனான என்னை திமுகவைத் தவிர வேறு எந்த அரசியல் இயக்கத்தால் அரவணைத்துக்கொள்ள இயலும்?

ஆனால் தமிழ் சிறுபத்திரிகைச் சூழலில் அதிகாரத்துடன் இயங்கிய உயர்சாதியினர் திராவிட இயக்கத்தால் தங்கள் சமூக அரசியல் அதிகாரம் முறிக்கபட்டதை தாங்கிக்கொள்ள முடியாமல் ஒரு கற்பனையான வெறுப்பு அரசியலை வளர்த்துக்கொண்டனர். அதனால்தான் நான் மதிக்கும் ஞானக்கூத்தன் ’ எனக்கும் தமிழ்தான் மூச்சு அதை பிறர்மேல் விடமாட்டேன்’ என்று மொழிப்போராட்டத்தை கேலி செய்து எழுதினார். அவரது பல கவிதைகள் திராவிட அரசியல் ஒவ்வாமையை வெளிப்படுத்தின. அசோகமித்திரன் ‘ தமிழ் நாட்டில் பிராமணர்கள் ஜெர்மனியில் யூதர்கள் போல வாழ்கிறார்கள்’ என்றார். எவ்வளவு நுட்பமான எழுத்தாளர்கள்கூட எவ்வளவு அரசியல் பண்பாட்டு மாற்றங்கள் குறித்தோ சமூக நீதி குறித்தோ விழிப்புணர்ச்சியற்று இருந்தார்கள் என்பதற்கு எத்தனையோ சான்றுகள் இருக்கின்றன. அவர்கள் இடது சாரிகளோடு உரையாடினார்கள். ஆனால் திராவிட இயக்க பண்பாட்டு அரசியலோடு அவர்கள் உரையாடியதே இல்லை. வெறுப்பு மட்டுமே அவர்களிடம் மேலோங்கி இருந்திருக்கிறது. ஆனால் திராவிடம் தன்னளவில் நவீன இலக்கியத்தின்மீதோ இலக்கியவாதிகளின்மீதோ அத்தகைய வெறுப்பை கொண்டதில்லை. அவர்களை விலக்கியதுமில்லை. கடந்த காலத்தில் திமுகமீது கடும் வெறுப்பைக் கக்கிய ஒரு இலக்கிய ஏட்டின் ஆசிரியர்கூட தமிழ்நாடு அரசின் பன்னாட்டுப் புத்தகக் கண்காட்சியின் ஆலோசனைக்குழுவில் இடம்பெற்றார். 

நவீன எழுத்தாளர்கள் சிலருக்கு சிலை அமைக்கவேண்டும் என்றால் அது ஒரு அரசுக்கு பெரிய விஷயம் அல்ல. தமிழுக்கு எவ்வளவோ செய்தவர்கள் இதைச் செய்யமாட்டோமா? ஒரு அரசை மதித்து முறையாக ஒரு கோரிக்கை எழுப்பபட்டால் இந்த அரசு அதைப் பரிசீலிக்கும். அதற்கு முதல் தேவை இந்த அரசு தமிழுக்கு ஆற்றும் பணிகளை பொருட்டாகக்கொண்டு ஒரு கண்ணியமான உரையாடலை அரசோடு தொடங்கவேண்டும். ஒவ்வொரு சிறு சிறு பிரச்சினைகள், அல்லது போதாமைகளின் அடிப்படையில் ஒட்டுமொத்தமாக ஒரு அரசின் தமிழ்ப் பணிகளை, இலக்கியப் பணிகளை நிராகரிக்கும் போக்கே பெரும்பாலன நவீன இலக்கிய வாதிகளிடம் வெளிப்படுகிறது. இது இருப்பதையும் இல்லாமலாக்கும் ஒரு முயற்சி.

நவீன இலக்கியத்திற்கான புதிய வெளிகளை இந்தத் திராவிட மாடல் அரசு மேலும் மேலும் விரிவாக்கும் என உறுதிபடக் கூறுகிறேன்.

மனுஷ்ய புத்திரன்

*

என் தரப்பை விளக்குகிறேன்.

நான் என் பேட்டியிலேயே சொல்கிறேன், நான் விமர்சிப்பது தமிழ்ச்சமூகத்தைப் பற்றி. அரசை அல்ல. எந்த அரசிடமும் நான் எந்தக் கோரிக்கையையும் வைப்பதில்லை. எந்த அரசைச் சார்ந்தும் அறிவியக்கம் செயல்படலாகாது என நினைக்கிறேன். ஆனால் அரசு அறிவியக்கத்துக்காகத் தானாகவே சிலவற்றைச் செய்யும் என்றால் அதை வரவேற்கிறேன்.

எந்த எழுத்தாளனையும்போல நான் வாழும் சமூகம் பற்றிய விமர்சனத்தை முன்வைக்கிறேன், அதன் அடுத்த கட்டம் சார்ந்த கனவை முன்வைக்கிறேன். ஓர் இலக்கியவாதியாக அக்கனவை நிகழ்த்திக்கொள்ளும் எல்லா முயற்சிகளையும் ஒவ்வொருநாளும், விழித்துக்கொண்டிருக்கும் ஒவ்வொரு நிமிடமும் செய்துகொண்டும் இருக்கிறேன், அதில் சாதனைகளும் நிகழ்ந்துள்ளன. அந்த தகுதியிலேயே அந்த விமர்சனம் முன்வைக்கப்படுகிறது.

வசைபாடும் கும்பலை எப்போதுமே நான் பொருட்படுத்தியதில்லை. அவர்கள் அப்படித்தான், அவர்களின் அறிவுத்திறனும் கலாச்சாரப் பயிற்சியும் அவ்வளவுதான். அதை அறியாமலா இங்கே எழுத வந்திருக்கிறோம்? அவர்களிடமா நாம் உரையாடிக்கொண்டிருக்கிறோம்? அவர்கள் தங்கள் கூச்சலை எழுப்பட்டும். அந்த ஓசை எப்போதும் இங்கே இருந்துகொண்டிருப்பதுதானே?

மனுஷ்யபுத்திரனுக்கான என் பதில் இதுதான். திராவிட இயக்கம் தனக்கான இலக்கிய அடையாளங்களாக மரபில் இருந்தும், நவீனகாலகட்டத்திலும் சில எழுத்தாளர்களை முன்வைத்தது எனக்குத் தெரியும். எந்த அரசியலியக்கமும் அதன் கொள்கைகள் சார்ந்த ஆளுமைகளை முன்வைக்கவே செய்யும். திருவள்ளுவர் என்பது தமிழ்மறுமலர்ச்சி இயக்கம் இங்கே உருவாக்கிய முதன்மைத் திருவுரு. அதை திராவிட இயக்கம் எடுத்துக்கொண்டு தன் முகமாக முன்வைத்தது. மனோன்மணியம் சுந்தரனார் போல தமிழியக்கத்தில் இருந்து திராவிட இயக்கம் எடுத்துக்கொண்ட ஆளுமை முகங்கள் பல உண்டு. தேவநேயப்பாவாணர், பாரதிதாசன் போன்றவர்கள் திராவிட இயக்கத்தின் நேரடியான முகங்கள்.

வெவ்வேறு காலங்களில் திராவிட இயக்கத்துடன் அரசியல் அணுக்கம் கொண்டிருந்த பல எழுத்தாளர்கள் உண்டு. அவர்கள் தங்களுக்கான பரிசுகளை அரசிடம் இருந்தும், அரசியலியக்கங்களில் இருந்தும் பெற்றிருக்கிறார்கள். உதாரணம் சுரதா, அவருக்குச் சென்னையில் சிலை உள்ளது. இன்னொரு உதாரணம் ம.பொ.சி. நாளை வைரமுத்துவும் அப்பரிசைப் பெறுவார். திராவிட இயக்கம் அப்படி தன் அறிவுத்தளத்தை தொடர்ந்து முன்வைத்துக்கொண்டுதான் உள்ளது. நான் அதைச் சொல்ல வரவில்லை.

இன்றைய திமுக அரசு இலக்கியம் – கலாச்சாரம் சார்ந்த தளங்களில் எடுத்துவரும் முன்னெடுப்புகளை ஏற்றும் பாராட்டியும்தான் தொடர்ச்சியாக எழுதி வருகிறேன். இந்த தளத்திலேயே பல கட்டுரைகள் உள்ளன. புத்தகவிழாக்களை ஒருங்கிணைப்பது, மாவட்டம்தோறும் இலக்கியநிகழ்வுகளை நிகழ்த்துவது ஆகியவை முக்கியமான நிகழ்வுகள். இலக்கியவாதிகளுக்கு வீடு அளிப்பதென்பது பிற மாநிலங்களும் பின்பற்றவேண்டிய முன்னுதாரணம். அதை கேரளத்திலும், கர்நாடகத்திலும் சொல்லியிருக்கிறேன். மனுஷ்யபுத்திரன் நூலகத்துறை வழியாக முன்னெடுக்கும் மாணவர் பயிற்சி வகுப்புகளும் முன்னர் தமிழில் நிகழாதவை, முன்னுதாரணமானவை, அவற்றையும் முன்னர் எழுதியுள்ளேன்.

நான் சொல்லிக்கொண்டிருப்பது எழுத்தாளர்களை அரசு மதிப்பதைப் பற்றி அல்ல. எல்லா அரசுகளும் அந்த அரசுகளை அமைக்கும் கட்சியின் அடையாளங்களாகச் சில எழுத்தாளர்களை முன்னிறுத்தும். அந்த அரசுகளுடன் ஒத்துப்போகும் எழுத்தாளர்கள் முகங்கள் அரசுகளின் ஏற்பைப் பெறுவார்கள். இதெல்லாம் எங்கும் நிகழ்வதுதான். நான் சொல்வது அதை அல்ல. (இப்போதைய தமிழக அரசு இந்த எல்லையை மீறி பொதுவாக அனைத்து எழுத்தாளர்களுக்கும் இடமளிப்பதையும் ஏற்றுக்கொள்கிறேன்) .நான் சொல்வது ஒரு சமூகமாக நமக்கு எழுத்துடன், இலக்கியத்துடன் உள்ள உறவைப் பற்றி. இது கொஞ்சம் எழுத்தோ, வாசிப்போ உள்ள அனைவருக்குமே தெரிந்த ஒன்றுதான். வாசிப்போ, எழுத்தோ என்னவென்றே தெரியாதவர்களுக்கு எந்த வகையிலும் புரியவைக்க முடியாததும்தான்.

நம் சமூகம் வாய்மொழி மரபு சார்ந்த பண்பாடு சார்ந்தது. இன்றும் நம் மனநிலை அதுவாகவே நீடிக்கிறது. நமக்கு நவீனக் கல்வி அறிமுகமானபோதுதான் மிகப்பெரும்பாலானவர்கள் எவ்வகையிலாவது எழுத்து மரபுக்கு அறிமுகமானார்கள். ஆனால் பள்ளி, கல்லூரிகளில் நாம் அடையும் எழுத்துக் கல்வி என்பது ஏதேனும் தொழிலுக்கோ வேலைக்கோ தகுதி பெறுவதற்கான ஒரு பயிற்சி மட்டுமாகவே நம் மனதில் இன்றும் நீடிக்கிறது. வீட்டில் பள்ளிப்பாடம் அன்றி ஒரு நூலாவது உள்ள குடும்பங்கள் இங்கே மொத்த தமிழகத்திலும் சில ஆயிரங்கள் கூட இருப்பதில்லை. பாடம் அன்றி ஏதேனும் ஒரு நூலை வாசித்தவர்களின் எண்ணிக்கை தமிழகத்தில் ஒரு சதவீதம் இருந்தாலே அதிகம்.

நமக்கு இன்னும்கூட எழுத்துப் பண்பாட்டின்மேல் அச்சமும் விலக்கமும் இருக்கிறது. அதேசமயம் வாய்மொழிப் பண்பாட்டின்மேல் பற்றும் ஈடுபாடும் இருக்கிறது. தமிழகத்தில் நூல்களை வாசிப்பவர் நூறுபேர் என்றால் சமயச்சொற்பொழிவுகள், பட்டிமன்றங்களை கேட்பவர்கள் லட்சம் பேர். இன்று அந்த வாய்மொழிக் கலாச்சாரம்தான் அப்படியே யூடியூப் ஷார்ட்ஸ்- இன்ஸ்டா கலாச்சாரமாக ஆகியிருக்கிறது. நான் சுட்டிக்காட்டுவது இந்தக் கலாச்சார அம்சத்தைத்தான். ஒரு சராசரிச் சினிமாவுக்கு கிடைக்கும் கவனத்தில் ஆயிரத்தில் ஒரு பங்குகூட இங்கே இதுவரை எந்த நூலுக்கும் கிடைத்ததில்லை.

தமிழகத்தில் ஒரு ஜனரஞ்சகப் பேச்சாளர் அடையும் புகழில் நூறில் ஒரு பங்கைக்கூட ஓர் இலக்கிய மேதை அடையமுடியாது. பேசி இங்கே வாழமுடியும், எழுதி வாழமுடியாது. ஒருவர் பிரியாணி பற்றிப் பேசி பலகோடிப்பேரால் கவனிக்கப்பட முடியும்.  தமிழகத்தின் மிகப்புகழ்பெற்ற ஜனரஞ்சக எழுத்தாளர்கள்கூட அந்த இடத்தை அடையமுடியாது. நான் சொல்வது இந்த குறிப்பிட்ட அம்சத்தைப் பற்றித்தான்.  

இதைக் கடந்தே ஆகவேண்டும். எழுத்துப் பண்பாட்டுக்குள் செல்லும் சமூகங்கள்தான் நவீனச் சமூகங்கள், அவையே வெல்லும் சமூகங்கள். வாய்மொழிப் பண்பாட்டின் மனநிலைகளை உதறாமல் அது சாத்தியமில்லை. வாய்மொழிப் பண்பாடு என்பது எழுத்தை அஞ்சுவது, உதாசீனம் செய்வது, அதன் இடத்தையும் பங்களிப்பையும் புரிந்துகொள்ளாமல் எழுத்தையும் எழுத்தாளர்களையும் வசைபாடுவது. அதைத்தான் என் பேட்டிக்கான எதிர்வினையிலும் காண்கிறோம்.

அந்த அடிப்படையிலேயே நான் அறிவு வழிபாட்டைப் பற்றிப் பேசினேன். ஓர் எழுத்தாளன் எழுத்துப் பண்பாட்டின் அடையாளம். அவனை அடையாளம் காண, அவனை மதிக்க நம்மால் இயலவில்லை. கொஞ்சம் எழுத்தும் வாசிப்பும் கொண்டவர்களில் இதை அறியாத எவரும் தமிழகத்தில் உண்டு என நான் நினைக்கவில்லை. சுந்தர ராமசாமியை நாகர்கோயிலில் எவருக்குத் தெரியும்? அசோகமித்திரனை எவருக்குத் தெரியும்? சரி ,ஜெயகாந்தனைத்தான் எத்தனைபேர் அறிந்திருக்கிறார்கள்? அந்த மக்களிடையே அவர்களுக்கு இடமில்லை, ஆகவேதான் அவர்கள் எவ்வகையிலும் அந்த ஊர்களில் நினைவுகூரவில்லை. அரசு ஒரு சிலை வைக்கலாம், அது புழுதிபடிந்து குப்பைமலையில் நின்றிருக்கும். மதுரையில் பாண்டித்துரைத் தேவரின் சிலை கிடப்பதைப்போல.

அந்த உதாசீனம் நமக்கு எழுத்துப் பண்பாட்டுடன் உள்ள விலக்கத்தின் விளைவு. அதை நாம் கடந்தேயாகவேண்டும், நான் சொல்வது அதை மட்டுமே. அதைக்கூட எழுத்துப் பண்பாட்டுக்குள் வந்தவர்களிடமே சொல்லமுடியும். அதற்குள் வராதவர்கள் நான் சொல்வதைக் கேட்டு மீண்டும் சீண்டப்பட்டு கெட்டவார்த்தைதான் சொல்வார்கள். ஏனென்றால் என் இடமென்ன என்றோ, எழுத்தாளன் என்றால் என்ன என்றோ அவர்களால் புரிந்துகொள்ள முடியாது.

நான் சொல்வதையே மனுஷ்யபுத்திரனும் அண்மையில் ஓர் உரையாடலில் சொல்கிறார். ஒரு கவிதையை ‘மக்களிடையே’ கொண்டு செல்லமுடிகிறது இன்றைய நவீன ஊடகத்தால். அதாவது அதை வாய்மொழி வடிவமாக ஆக்கி, வாய்மொழிப் பண்பாட்டில் வாழ்பவர்களிடையே கொண்டுசெல்லப்படுகிறது நவீனக் கவிதை. ஆனால் அவர்களுக்கு எழுத்துப்பண்பாடு அறிமுகம் இல்லை. எழுத்தாளன், கவிஞன் என்னும் ஆளுமையை அவர்கள் அறிந்திருக்கவே இல்லை. அவர்கள் அறிந்திருப்பதெல்லாம் பேச்சாளர்களையும், மேடையில் கவி பாடும் பாடகர்களையும்தான். ஆகவேதான் மனுஷ்யபுத்திரன் சொல்லும் பிரச்சினை எழுகிறது.

பேச்சாளர்களும் ,மரபுக்கவிஞர்களும் வாய்மொழிப்பண்பாட்டை சேர்ந்தவர்கள். பழைய குலப்பாடகர்களின் மன அமைப்பு கொண்டவர்கள். அவர்கள் சபையாக தங்கள் முன்னால் இருப்பவர்களை போற்றிப் பாடுவதுதான் வழக்கம். கேட்பவர்களுக்கு உகக்காததைச் சொல்லாதவர்கள் அவர்கள். புகழ்ந்து, மகிழ்வித்து அதற்கான பரிசையும் பெற்றுச் செல்வார்கள். ஆனால் நவீன எழுத்தாளன் என்பவன் எழுத்துமரபால் உருவாக்கப்பட்டவன். அவன் ஓர் ஐரோப்பிய உருவகம். அவன் சமூகத்தை விமர்சனம் செய்பவன், சமூகத்தின் சராசரியை விட பலமடங்கு சிந்தனையாலும் தரிசனத்தாலும் முன்னால் சென்றவன். அவனை வாய்மொழிப் பண்பாட்டைச் சேர்ந்தவர்களால் உணரமுடியாது. ஆகவே அதிர்ச்சி அடைகிறார்கள். ‘யார் நீ’ என்று கேட்கிறார்கள். ‘எங்கள் தலைவனை நீ எப்படி விமர்சிக்கலாம்’ என வசைபாடுகிறார்கள். சமூகத்தை விமர்சனம் செய்தால் கொல்லவும் வருகிறார்கள்.

கவனியுங்கள் நான் மட்டும் வசைபாடப்படவில்லை. மிகக்கவனமாகப் பேசும் எஸ்.ராமகிருஷ்ணனும் வசைபாடப்படுகிறார். மனுஷ்யபுத்திரனும் வசைபாடப்படுகிறார். தன்னை நவீன எழுத்தாளனாக, சமூக விமர்சகனாக முன்வைக்கும் அத்தனை எழுத்தாளர்களும் வசைபாடப்படுகிறார்கள். சுந்தர ராமசாமியோ , ஜெயகாந்தனோ, புதுமைப்பித்தனோ அப்படித்தான் வசைபாடப்பட்டனர். நான் சுட்டிக்காட்டுவது இந்த எழுத்துப் புறக்கணிப்பு மனநிலையைத்தான். இது இருக்கும் வரை இங்கிருந்து அறிவியக்கம் உருவாக முடியாது என்கிறேன். ‘எழுத்தாளனை மதிப்பது’ என்று நானோ சாருநிவேதிதாவோ, எஸ்.ராமகிருஷ்ணனோ சொல்வது இதைத்தான்.

ஜெ

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on June 14, 2025 11:35

சுகன்

சுகன் என்னும் சிற்றிதழை கையெழுத்து இதழாக தொடங்கினார். நகலச்சு, ரோனியோ, அச்சு இதழ் என பல வடிவங்களில் தொடர்ந்து 28 ஆண்டுகள் ஒரு மாதம்கூட இடைவெளியின்றி 333 இதழ்கள் வெளியிட்டார். நடுவே பதிவுச்சிக்கல்களால் இதழின் பெயர் ‘சுந்தர சுகன்’, ‘செளந்தர சுகன்’ மாற்றம் பெற்றது. இதழில் தொடர்ச்சியாக அறிமுக எழுத்தாளர்களின் படைப்புகளை வெளியிட்டார்.

சுகன் சுகன் சுகன் – தமிழ் விக்கி
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on June 14, 2025 11:34

காவியம் – 55

பைசாசம், சாதவாகனர் காலம் பொமு 1 பைத்தான்

தன் பிரச்னை என்ன என்று அஸ்வத் நன்கு அறிந்திருந்தான். ஒவ்வொரு நாளும் அந்தப்பிரச்னையுடன் அவன் போரிட்டுக்கொண்டிருந்தான். கல்லூரி நாட்களிலேயே அவன் அதற்குள் ஆழமாகச் சென்றான். அது தன்னை எப்படி ஆட்கொள்கிறது என்ற ஒவ்வொரு நுணுக்கத்தையும் அவன் தன்னைத்தானே பார்த்துப் புரிந்து கொண்டிருந்தான். ஆனால் அந்த அறிதலால் எந்தப் பயனும் இல்லை என்பதும் அவனுக்குத் தெரிந்திருந்தது. அதை வெல்ல அவன் ஒருபோதும் முயன்றதில்லை. ஏனெனில் அது வெல்ல முடியாத அளவுக்கு ஆற்றல் கொண்டதென்று தன்னைப் பார்த்தே தெரிந்துகொண்டிருந்தான்.

ஒன்று  அழகற்றது ,முரட்டுத்தனமானது, அருவருப்பானது என்றால் மட்டுமே தன் உள்ளம் அதை நோக்கிச் செல்கிறது என்பதும்;அத்தகையவை மட்டுமே கிளர்ச்சியுறச் செய்கின்றன என்பதும்; தன்னால் அங்கு மட்டுமே இயல்பாகவும் மகிழ்ச்சியாகவும் இருக்கமுடிகிறது என்பதும்தான் தன்னுடைய பிரச்னை என்று அறிந்திருந்தான். ஒருமுறை தொலைக்காட்சியில் அழுகிய சடலம் ஒன்றைச் சாப்பிடும் புலியைப் பார்த்து அவன் உடல் மெய்சிலிர்ப்படைந்து, கண்கள் நீர் கொண்டன. அந்த உணர்வு  தனக்கு மட்டுமே இருக்கும் ஓர் ரகசிய உளச்சிக்கல் என்று எண்ணியிருந்தான். அதற்காக சாதாரணமாக வெட்கமும் கூச்சமும் கொண்டிருந்தான். ஆனால் அதில் ஈடுபடுந்தோறும், அனுபவங்கள் அதிகரித்து நினைவுகள் சேர்ந்துகொண்டே இருக்குந்தோறும் அதுவே தான் என சித்தரித்துக் கொண்டான்.

கல்லூரி நாட்களில் பாட்னாவின் சதுப்பு பகுதிகளில் குடியேறியிருந்த பல்வேறு ஊர்களைச் சேர்ந்த அடித்தட்டு மக்களில் இருந்து பாலியல் தொழிலுக்கு வந்த பெண்களை அவன் நாடிச் சென்று கொண்டிருந்தான். அப்பெண்களை அணுகுவதற்கு ஆரம்பநாட்களில் தரகர்களும் ரிக்ஷாக்காரர்களும் தேவைப்பட்டனர். பின்னர் அவனே அதில் தேர்ந்தவனாக ஆனான். அவர்களைப் பார்த்ததுமே அவனால் கண்டுபிடிக்க முடிந்தது. ஒருமுறை அவன் சாலையோரம் நின்றிருந்தபோது ஒரு ஆட்டோ ரிக்ஷாவில் விரைவாகக் கடந்து சென்ற பெண்ணை அரைக்கணம் பார்த்ததுமே அவள் யார் என்று தெரிந்து, இன்னொரு ஆட்டோரிக்ஷாவில் அவளைத் துரத்திச் சென்று, அவள் அடுத்த சிக்னலில் நிற்கும்போது இறங்கி நேராகச் சென்று பேரம் பேசி முடித்தான்.

அவள் ‘என்னை முன்னரே தெரியுமா?’ என்று கேட்டபோது ‘தெரியாது உன்னைப் பார்த்ததும் தெரிந்தது’ என்றான். ’பார்த்ததும் எப்படித் தெரியும்?’ என்று அவள் கேட்டபோது அவனுக்கு அது பதில் சொல்லத் தெரியவில்லை. ஆனால் ‘எனக்குத் தெரிகிறது’ என்று மட்டும் சொன்னான். அவள் மீண்டும் கேட்டபோது ’கத்தரிக்காயை பார்த்தால் கத்தரிக்காய் என்று தெரியாதா என்ன?’ என்றான். அவள் சிரிப்பாள் என அவன் நினைத்தான். அவள் புண்பட்டாள். அத்தகைய பெண்கள் புண்படும்போது கண்கள் சுருங்கி, தங்களுக்குள் உள்வாங்கும் ஒரு பாவனை உருவாகும். முரட்டுத்தனமானவர்களாக, சட்டென்று சீற்றம் கொண்டு தாக்குபவர்களாகத் திகழும் அப்பெண்கள் உள்ளூரப் புண்பட்டவர்கள், சட்டென்று அழுதுவிடுபவர்கள் என்றும் அவன் அறிந்திருந்தான். அந்த எல்லைவரை அவர்களைக் கொண்டுசெல்லாவிட்டால் அவன் நிறைவடைந்ததில்லை.

விபச்சாரிகளிடம் அவனுக்கு வழக்கமான ஓர் அணுகுமுறை இருந்தது. எப்போதும் அவன் அவர்களிடம் மிகுந்த தயக்கத்துடனும், முதல் முறையாக அத்தகைய ஒரு பெண்ணை அணுகும் உயர்குடி இளைஞனுக்குரிய பயத்துடனும் சென்று பேசினான். அவன் குரல் தழைந்திருக்கும். முகத்தில் மெல்லிய வியர்வையும் இருக்கும். கைகளை கால்சட்டைப்பைக்குள் போட்டு முஷ்டி பிடித்து இறுக்கியபடி கீழ்நோக்கிப் பார்த்து அவளிடம் ’எனக்கு ஆசை இருக்கிறது, பணம் தருகிறேன்’ என்று அவன் சொன்னான். அப்பெண்கள் அவனை உடனடியாக ஒரு உயர்குடிப்பையன் முதல்முறையாக தங்களிடம் வருகிறான் என்று எடுத்துக் கொண்டார்கள். அதற்கேற்ற அவன் வெளிர்வண்ணமும், உயரமும், மெலிந்த உடலும், சற்றே நீலங்கலந்த கண்களும் கொண்டிருந்தான். அவன் அவர்களுடன் சென்று தங்கி காமத்தை தொடங்கும்போது மட்டும் தான் அவர்கள் அவனிடமிருந்து வேறொன்று வெளிவருவதை உணரத்தொடங்கினார்கள்.

”நல்ல அனுபவசாலி போலிருக்கிறதே” என்று முதலில் வியந்தார்கள். “இந்தக் குரூரமெல்லாம் இங்கே ஆகாது. அடித்தேனென்றால் பல் போய்விடும்“ என்று எச்சரிக்கத் தொடங்கினார்கள். ஒரு கட்டத்தில் காமமா கைகலப்பா என்று தெரியாத அளவுக்கு ஓர் உச்சகட்ட நிகழ்வு அவர்களிடையே நடந்து முடியும். அவள் தன் வாழ்நாளில் அதுவரை பார்த்திராத ஒரு பாலியல் வெறியையும் வன்முறையையும் அவனில் பார்த்திருப்பாள். ”நீ மனிதல்ல, மிருகம். உன் முகத்துக்கு அடியிலிருப்பது ஒரு பேய். உன்னைப் பேய் பிடித்திருக்கிறது” என்று சொல்வார்கள்.

அவன் அவர்களுக்கு பணத்தை விட்டெறிவான். அந்தப்பணத்தைக்கூட அவர்கள் ஆர்வத்துடன் எடுத்துக்கொள்வதில்லை. “நீ ஒரு பேய்… உன்னைப்பெற்றவள் எவள்?” என்று சொல்லி கீழ்த்தரமான சொற்றொடர்களால் அவனை வசைபாடிக்கொண்டே இருப்பார்கள். அவன் மேல் துப்புவார்கள். ”நீ ஒரு நல்ல தந்தைக்கு பிறந்திருக்க முடியாது. உன் அம்மா தெருவில்போனவனைப் புணர்ந்து பெற்றவன் நீ ”என்பார்கள்.

ஒவ்வொரு முறையும் உறவுக்குப்பின் கட்டிலில் நிர்வாணமாக அமர்ந்து சிகரெட் பிடிக்கும்போது அவர்களின் வசைபாடல் அவனுக்கு ஒரு இனிய அனுபவமாக இருந்தது. பின்னர் எழுந்து புன்னகையுடன் ”மீண்டும் பார்ப்போம்” என்றபின் இறுதியாக இன்னொரு தொகையை எடுத்து அவர்களிடம் கொடுத்துவிட்டு அவன் அறையைவிட்டு வெளியேறினான். அந்தப்பெண்கள் அவனது நடத்தையை சில நாட்களில் மறந்துவிட்டாலும் அந்தத் தொகையை மறப்பதில்லை. மீண்டும் அவனைப் பார்க்கும்போது அவர்கள் ஒருகணம் தயங்கி அஞ்சிப் பின்னடைந்தாலும், அவன் புன்னகைத்தபடி அருகே வந்து ”வருகிறாயா?” என்று கேட்கும்போது அவர்கள் முகத்தில் தயக்கமும் ஆர்வமும் கலந்த தடுமாற்றம் உருவாகும். அவனுடைய அழகிய முகம் அப்போதும் அனைத்தையும் மறக்கடிப்பதற்கான ஆற்றல் கொண்டிருக்கும்.

அவன் பெண்களை மட்டுமல்ல பாட்னா நகர் முழுக்க அலைந்துகொண்டிருந்த இருபாலினரையும் தேடிச் சென்று கொண்டிருந்தான். பெண்களை அவனால் ஓரளவுக்குமேல் அடிக்கவோ துன்புறுத்தவோ முடியவில்லை. இருபாலினரை அவன் என்ன வேண்டுமானாலும் செய்ய முடிந்தது. அவர்கள் வன்மையாகத் திருப்பி தாக்கினார்கள். பல தருணத்தில் உதடு கிழிந்து, கண்கள் கருமையாகி, பலநாட்கள் அவன் மருத்துவம் செய்துகொண்டது உண்டு. ஆயினும் அவர்கள் திருப்பி தாக்கும்போது அவர்களிடமிருந்த குரூரம் அவனுக்கு மேலும் கிளர்ச்சியளித்தது.

“ஒரு பெண் அழகில்லாதவள் ஆகும்போது அவளிடம் அதற்கு சமானமாக அவளிடம்  காமம் கூடுகிறது” என்று அவன் தன்னுடைய நெருக்கமான தோழனாகிய பிரகாஷ் சின்ஹாவிடம் சொன்னான். “ஒரு நோட்டு எடுத்து இதையெல்லாம் குறித்து வைத்துக்கொள், உதவும்”

பிரகாஷ் அவனை எப்போதுமே வியப்புடனும் திகைப்புடனும் பார்த்துக் கொண்டிருந்தான். ஒருநாள் அஸ்வத் தேஷ்பாண்டே தன் தந்தையின் பணத்தை வைத்து ஒரு திரைப்படம் எடுப்பான் என்றும், அதற்கு திரைக்கதை வசனம் எழுதி இயக்கபோவது தான் என்றும் பிரகாஷ் நினைத்துக்கொண்டிருந்தான். அஸ்வத் தனக்கு ஒரு துணைவன் வேண்டுமென்பதற்காக அந்த நம்பிக்கையை கல்லூரிக்காலம் முதல் கலைக்காமலும் இருந்தான்.

பிரகாஷ் ஒவ்வொரு நாளும் விடுதியில் தன் அறையில் அமர்ந்து திரைக்கதைகளை எழுதினான். பாடல்கள், பின்னணி அமைப்பு, ஒப்பனை, நடிப்புக்கான குறிப்புகள் என்று விரிவாகவே தயாரித்தான். அவற்றை அவன் அஸ்வத்துக்கு வாசித்துக் காட்டும்போது, சிகரெட் புகையை சுட்டுவிரலால் தட்டியபின் ஆழ இழுத்தபடி கண்களைத் தாழ்த்தி அதை அஸ்வத் கேட்டிருந்தான்.

ஒவ்வொரு கதையிலும் ஏதேனும் ஒரு குற்றம் நடக்க வேண்டும் என்பது பிரகாஷின் எண்ணமாக இருந்தது. அதன்வழியாகவே அவன் கதையில் திருப்பங்கள் நிகழ்ந்தன. நேர்மாறாக அஸ்வத் தெய்வீகமான காதல் கதைகளை மட்டுமே விரும்பினான். ”ஒரு நல்ல காதல்! அதுதான் சினிமாவாக ஓடும். பாபி போல இருக்கவேண்டும்” என்று அவன் அழுத்தமாகச் சொன்னான்.

நல்ல காதல் கதை என்பது காதலர்கள் குழந்தையாக இருக்கும்போதே சந்தித்துக் கொள்வதில் ஆரம்பிக்கிறது. முதிர்ந்த பிறகு வரக்கூடிய காதல் காதல் கிடையாது என்று அஸ்வத் பிரகாஷுக்கு அறிவுறுத்தினான். இருவர் காதலர்களாகவே பிறக்கவேண்டும், காதலர்களாகவே செத்துப்போகவும் வேண்டும். அவர்கள் திருமணமாகி தம்பதிகளாகி வாழ்ந்தாலும் அது சாவு போலத்தான். அவர்கள் அமரர்களாக வேண்டும். அதுதான் காதல். ”நல்ல காதல் விதியால் உருவாக்கப்பட்டு, விதியால் பிரிக்கப்படும். சலீம் அனார்க்கலி காதல் போல. லைலா மஜ்னு காதல் போல. எத்தனை முறை வேண்டுமானாலும் அந்தக் கதைகளை எடுக்கலாம்.”

பிரகாஷ் ”அந்தக்கதைகளை நிறையவே எடுத்துவிட்டார்கள். அந்தவகையான  கதைகள் இப்போது ஓடுவதுமில்லை. இன்றைய இளைஞர்கள் அவற்றை பார்க்க விரும்புவதும் இல்லை” என்றான்.

”பார்ப்பார்கள், நல்ல பாட்டு இருக்கவேண்டும். ஹம் தும் ஏக் கம்ரே கி பந்த்ஹே மாதிரி” என்று சொல்லி அஸ்வத் அதைப் பாடிக்காட்டினான்.

அவர்கள் இரானி டீக்கடையில் லெமன் டீ அருந்த செல்லும்போது பிரகாஷ் அவனிடம் ”எனக்குப் புரியாதது உன்னுடைய மனநிலைதான். உனக்கும் தெய்வீகக் காதலுக்கும் என்னதான் தொடர்பு? இப்படியே போனால் ஒருநாள் நீ தெய்வீகக்காதல் கொண்டுவிட்டாய் என்று சொல்லி என்னிடம் வருவாய்” என்று சொன்னான்.

”அமர் பிரேம் படத்தின் கதையில் அது நடந்திருக்கிறதே” என்று சொல்லி அஸ்வத் சிரித்தான்.

“உன்னையும் மனிதனாக்க ஒரு பெண் வருவாள் என்று கற்பனை செய்துகொள்வது நன்றாகத்தான் இருக்கிறது” என்று பிரகாஷ் சொன்னான்.

“என்னை மனிதனாக்க எந்தப்பெண்ணாலும் முடியாது. நான் மனிதன் வேடம் போட்டிருக்கிறேன். உண்மையில் நான் அரக்கர் குலத்தைச் சார்ந்தவன்” என்று அஸ்வத் சொன்னான். “ஆனால் நான் தவம் செய்து தேவர்களின் தலைவனாகவும் ஆக முடியும்… எல்லா அசுரர்களும் அந்த சாத்தியக்கூறு கொண்டவர்கள்தான்”

பிரகாஷுக்கு அஸ்வத் எப்போதுமே ஒரு விந்தையான கிளர்ச்சி அளிப்பவனாக இருந்தான். அவன் அஸ்வத்தின் சாகசங்கள் எதற்குமே துணை சென்றதில்லை. அஸ்வத் ஒரு பெண்ணைப் பார்த்து ‘இரு நான் அவளிடம் சென்றுவிட்டு வருகிறேன்’ என்று சொன்னால் ’சரி’ என்று அப்போதே திரும்பி விலகிவிடுவது அவனுடைய பழக்கம்.

பிரகாஷ் பிகாரில் ஒரு சிறிய கிராமத்தைச் சேர்ந்த காயஸ்தரின் மகன். அவர் உள்ளூரில் ஒரு சிறிய மளிகைக்கடை நடத்தி வந்தார். நன்றாகப் படிப்பவன் என்பதால் தன் சக்திக்கு மீறி அவனை பாட்னாவுக்கு அனுப்பி படிக்கவைத்தார். ஒருமுறை பொருளாதாரச் சிக்கலினால் கல்லூரிக்கட்டணத்தை கட்ட முடியாமல் பிரகாஷ் திகைத்தபோது கேள்விப்பட்டு தானாக வந்து அஸ்வத் உதவினான். அதிலிருந்து அவர்கள் நட்பு உருவாகியது.

அவர்கள் நட்பு கல்லூரியிலேயே ஆச்சரியமாகத்தான் பார்க்கப்பட்டது. சிலர் அவனைப் பாங்கன் என்றும் தூதுவன் என்றும் சொன்னார்கள். ஆனால் அஸ்வத்தின் எந்த ஊடுவழிகளிலும் பிரகாஷ் ஈடுபடுவதில்லை என்பது கொஞ்சம் கொஞ்சமாக தெளிவுபட்ட பிறகு ”நீ எப்படி அவனுடன் நண்பனாக இருக்கிறாய்?” என்ற வியப்போ; அல்லது “பார், அவன் ஏதேனும் ஒரு சிக்கலில் மாட்டிக்கொள்ளும்போது உன் பெயர் இழுபடும். அவன் தப்பித்துவிடுவான். அவனுக்குப் பணம் இருக்கிறது” என்ற எச்சரிக்கையோ அவனுக்கு வந்துகொண்டே இருந்தது.

சிலர் மட்டும்தான் ”உண்மையிலேயே உனக்கும் அவனுக்கும் என்ன தான் ஈடுபாடு? உனக்கு அவனில் எது சுவாரசியத்தை அளிக்கிறது ?அதைவிட அவன் உன்னில் எந்த சுவாரசியத்தை காண்கிறான்?” என்று அவனிடம் தனிப்பட்ட முறையில் கேட்டிருக்கிறார்கள்.

பிரகாஷுக்கே அந்த வியப்பு உண்டு. அவன் அதைப்பற்றி யோசிக்க யோசிக்க ஒன்றுக்கு மேற்பட்ட பதில்கள் வந்து, ஒவ்வொன்றும் சரி என்று தோன்றுவதனால் ஒரு கட்டத்தில் நிறுத்திவிடுவான். ஆனால் அவன் ஒரு திரைக்கதை எழுதினால் அது ஏறத்தாழ அவனுக்கும் அஸ்வத்துக்குமான உறவைச் சார்ந்ததாகவே இருந்தது. அதில் அவன் ‘ராக்-தாள்’ என்று பெயரிட்டிருந்த கதை கல்கத்தாவில் நடந்தது. கல்கத்தாவின் புகழ்பெற்ற ஜமீந்தாரின் பெண்வேட்டையனும், முரடனுமாகிய மகன் கல்லூரிக்கு படிக்க வர, அங்கே கவிஞனும் அழகானவனும் சிந்தனையாளனுமாகிய மென்மையான இளைஞனை நண்பனாக்கிக் கொள்கிறான்.

அந்த திரைக்கதையை எழுதும்போது அவர்களின் குணச்சித்திரங்களை விவரிக்கும் போது பிரகாஷ் அந்த உறவின் சில நுட்பங்களை அவனே ஊகித்து எழுதியிருந்தான். அவனுடைய கதைநாயகர்கள் இருவரும் ஒருவரை ஒருவர் நுணுக்கமாக நடித்துக்கொண்டார்கள். மென்மையானவனும் ஒழுக்கமானவனுமாகிய நரேன் சென்குப்தா எதையெல்லாம் அஞ்சி செய்யாமல் தவிர்த்தானோ அவை அனைத்தையுமே செய்யக்கூடியவன் அமிதவ் ராய்சௌத்ரி.  அமிதவ் ராய் சௌத்ரி தன் அழுக்கையும் குரூரத்தையும் தானே அஞ்சி, அவற்றை உதறி என்றோ ஒரு நாள் தன்னை மீட்டுக்கொள்ளலாம் என்று நம்பினான். அவ்வாறு மீட்டுக்கொள்ளும்போது தான் எப்படி இருப்போம் என்று அவனுக்கு ஒரு கற்பனை இருந்தது. அந்த உருவகம்தான் நரேன் சென்குப்தா.

அதை எழுதியபிறகு தங்கள் உறவு இன்னும் திட்டவட்டமாக ஆகிவிட்டதாக பிரகாஷ் நினைத்தான். என்றாவது ஒருநாள் அதை அஸ்வத்திடம் சொல்ல வேண்டும் என்று தோன்றியது. ஆனால் அஸ்வத் இத்தகைய சிந்தனைகள் எதையுமே கவனிப்பதில்லை. அவை தன்னை பலவீனமாக்கும் என்று அவன் நினைத்தான். ”சிந்தனைகள் ஒருவனை ஆற்றல் கொண்டவையாக்கும். பலவீனமானவையும் ஆக்கும். ஒன்றை ஆராய்ந்து ஒன்றுக்கு மேற்பட்ட கோணங்களை உருவாக்கிக்கொண்டால் அதை சிந்திப்பவன் பலவீனமாகிறான். ஒன்றையே ஆராய்ந்து, ஒரே முடிவை அடைந்து, அதை நம்பிக்கையாக ஆக்கிக்கொள்பவர்கள் மட்டுமே ஆற்றல் கொள்கிறார்கள். அது ஹிட்லரானாலும் நெப்போலியனானாலும் காந்தியானாலும்” என்று அவன் சொன்னான்.

பிரகாஷ் அஸ்வத்தின் ஒவ்வொரு நடவடிக்கையையுமே மிகக்கூர்ந்து கவனித்துக் கொண்டிருந்தான். ஒவ்வொரு முறை பிரகாஷ் தன் அறைக்குள் இருக்கையிலும் அவன் உள்ளம் அஸ்வத்துடன் சென்று கொண்டிருந்தது. அஸ்வத் செய்வன அனைத்தையுமே அவனும் செய்துகொண்டிருந்தான். திரும்பி வந்து அஸ்வத் தன் அறையில் குளித்து ஆடை மாற்றும்போது ”என்ன நிகழ்ந்தது? யார் அவள்? என்ன சொன்னாள்? எதோ சொல்லியிருப்பாளே? நீ விடமாட்டாயே” என்று பிரகாஷ் கேட்டான்.

பிரகாஷ் எதைக்கேட்க விரும்புகிறான் என்று அஸ்வத் புரிந்து வைத்திருந்தான். ஆகவே ஒவ்வொரு முறையும் சிறு சுவாரசியமான செய்தியை, அல்லது நிகழ்வை அவன் சொன்னான். பிரகாஷ் “அடப்பாவி” என்றோ “சீச்சீ” என்றோ கூச்சலிட்டபடி எழுந்து ஓடுமளவுக்கு ஒரு விஷயம். அவ்வாறு சொல்வதற்காக அவன் தன்னுடைய அனுபவங்களில் இருந்து எப்போதுமே ஏதோ ஒன்றைத் திரட்டிக்கொண்டான். அல்லது கேள்விப்பட்டவை, வாசித்தறிந்தவற்றில் இருந்துகூட ஒரு துணுக்கைத் திரட்டி அதை தனக்குரியதாக மாற்றிக்கொண்டான்.

ஒருமுறை அவன் வெளியே சென்று அன்று ஜெயப்பிரகாஷ் நாராயணன் ஆதரவாளர்கள் நடத்திய ஒரு பேரணியில் போலீஸ் லத்தி வீசியபோது உருவான அரசியல் கலவரத்தால் எவருமே தெருக்களில் இல்லாமலாயிற்று. திரும்பி வந்து அறைக்குள் அவன் ஒரு நாவலை படித்துக்கொண்டு இருந்தபோது பிரகாஷ் ”என்ன நிகழ்ந்தது? என்ன சொன்னாள் உன் தெய்வீகக் காதலி?” என்று கேட்டுக்கொண்டிருந்தான். ”ஒன்றுமே இல்லை. ஒன்றும் நிகழவில்லை” என்று பலமுறை அஸ்வத் பதில் சொன்னான். ஒருகட்டத்தில் எரிச்சலும் சிரிப்புமாக பிரகாஷ் ”எதையாவது கற்பனை செய்து சொல்லடா, நான் கேட்கும் மனநிலைக்கு வந்துவிட்டேன்” என்றான்.

பிரகாஷ் அஸ்வத்தின் எதிர்காலத் தயாரிப்பு நிறுவனத்திற்காக அந்த வங்காள இரட்டையரின் கதையை முழுமையான திரைக்கதையாக மாற்றினான். அதை வாசிப்பதற்காக அவர்கள் இருவரும் ஒரு விடுதி அமர்த்தி அங்கு சென்று தங்கினார்கள். அங்கே பிரகாஷ் தன் திரைக்கதையை படிக்க, அஸ்வத் முதல்முறையாக அந்தத் திரைக்கதைக்குள் ஆழமாக ஈடுபட்டான். பிரகாஷ் இறுதியில் அந்தக் கதையை முடிக்கும்போது அவன் எண்ணியிருந்த உச்சமே நிகழ்ந்தது. குடிகாரனும் பெண்பித்தனும் கீழானவற்றில் திளைப்பவனாகிய ராய்சௌத்ரி ஒரு தெய்வீகமான பெண்ணைக் கண்டடைந்து, மனம் திருந்தி, ஓர் உயர்ந்த வாழ்க்கைக்கு சென்று, அந்த வாழ்க்கை அளித்த சவால்களை எதிர்கொண்டு, ஒரு பெரிய போராட்டத்தில் தியாகியாக உயிர்விட்டான். அவனை அந்நகரமே திருவுருவாகக் கொண்டாடியது.

ராய்சௌதுரியின் நண்பனாகிய மென்மையானவனும் எழுத்தாளனுமான சென்குப்தா அந்த தோழனை விரும்பினாலும், உள்ளூர அவன் தன்னை விட ஒருபடி கீழானவன் என்று நினைத்திருந்தான். ஆனால் அவனுக்கே ஒரு சந்தர்ப்பம் வந்தபோது முதல் முறையாக ஒரு கீழான நடத்தையை செய்துவிடுகிறான். குற்றவுணர்ச்சியாக் தற்கொலைக்கு முயன்று ராய்சௌத்ரியால் காப்பாற்றப்படுகிறான். மனந்திருந்திய சென்குப்தா தியாகியும் திருவுருவுமான தன்னுடைய தோழனின் வாழ்க்கை வரலாற்றை எழுதத் தொடங்கும்போது அந்தக் கதை முடிவுக்கு வந்தது.

கதையை வாசித்து கடைசிப் பக்கத்தை முடித்து நிமிர்ந்து பார்த்த பிரகாஷ், அஸ்வத் கட்டிலில் தலைகுனிந்து அமர்ந்து மௌனமாகக் கண்ணீர் விட்டுக்கொண்டிருப்பதைப் பார்த்தான் அவனுக்கு முதலில் எதுவும் புரியவில்லை அஸ்வத் ஏதோ வேடிக்கை காட்டுகிறான் என்று நினைத்தான். ஆனால் விசும்பலும் கண்ணீரும் அஸ்வத் உண்மையிலேயே கலங்கியிருப்பதைக் காட்டின. ”என்னடா? என்ன?” என்று அவன் அஸ்வத்தின் தோளைப் பிடித்தான்.

அஸ்வத் ஒன்றுமில்லை என்று சொல்லி கண்ணீரை துடைத்துவிட்டு மெத்தையில் குப்புற படுத்துக்கொண்டான். அவன் அருகே அமர்ந்து “என்ன? என்னடா? சொல்” என்று பிரகாஷ் கேட்டான்.

”ஒன்றுமில்லை” என்று சொல்லிக்கொண்டே இருந்த அஸ்வத் சட்டென்று உரத்த  ஒலியுடன் அழத்தொடங்கினான்.

என்ன செய்வதென்று தெரியாமல் சற்று நேரம் அமர்ந்துவிட்டு பிரகாஷ் எழுந்து வெளியே சென்றான்.

பிரகாஷ் திரும்ப வரும்போது அஸ்வத் தன் வழக்கப்படி சிகரெட் பிடித்தபடி பால்கனியில் நின்றுகொண்டிருந்தான். பிரகாஷைப் பார்த்ததும் சிரித்தபடி கையசைத்து தான் நன்றாக இருப்பதாக சைகை காட்டினான். அருகே வந்த பிரகாஷ் அதைப்பற்றிக் கேட்கலாமா என்று யோசித்து தவிர்த்துவிடலாம் என்ற முடிவுக்கு வந்தான்.

அஸ்வத் “நாம் வெளியே சென்று எதாவது சாப்பிடுவோம்” என்றான். அஸ்வத் மாமிசம் சாப்பிட எப்போதும் விரும்புபவன். அவர்கள் இருவரும் வெளியே சென்று அங்கிருந்த பிகாரி ஹோட்டலில் ஆட்டிறைச்சியும் சப்பாத்தியும் சாப்பிட்டார்கள். உணவைப் பற்றிப் பேசப்பேச அஸ்வத் உற்சாகமானான்.

பீடா போட்டுக்கொண்டு சாலையோரமாக நின்றுகொண்டிருந்தபோது அஸ்வத் எதிர்பாராதபடி பிரகாஷிடம் ”நீ என்ன நினைக்கிறாய்? உண்மையிலேயே நான் மீண்டுவிடுவேனா?” என்று கேட்டான்.

பிரகாஷ் அவன் தோளைப் பிடித்து ”அதிலென்ன சந்தேகம்? நீ இப்போது செய்து கொண்டிருக்கும் செயல்கள் அல்ல நீ. அவ்வளவு படிக்கிறாய். நல்ல மதிப்பெண்கள் வாங்கக்கூடிய மாணவனாகவும் இருக்கிறாய். இதெல்லாம் இந்த வயதின் பிரச்சினைதான். உனக்கு எங்கோ ஒரு மனக்குறை இருக்கிறது. அல்லது உன்னுடைய ஆழத்தில் ஏதோ ஒன்று திரிந்திருக்கிறது. அதை ஏற்கனவே நீ சொன்னாய். உன் தந்தை ஒரு பெண்ணிடம் உறவுகொண்டதை நீ பார்த்தாய் என்று. அது காரணமாக இருக்கலாம் அல்லது வேறு ஏதேனும் காரணங்கள் இருக்கலாம். ஆனால் இது ஒரு புண் போலத்தான். எந்தப்புண்ணும் சீக்கிரமே ஆறிவிடும். அதன் பிறகு ஒரு வடு மட்டும் தான் எஞ்சியிருக்கும். அதுபோல இந்தக் கல்லூரி நாட்களில் நீ செய்வதெல்லாம் உனக்கு ஒரு சிறிய கசப்பான நினைவாகத்தான் இருக்கும். யார் சொன்னது. ஒரு ஐம்பது அறுபது வயதாகும்போது நீ இந்த வடுவை வருடி வருடி மகிழ்ச்சியடைவும் வாய்ப்பிருக்கிறது.”

பிரகாஷ் அதை அப்போது நம்பித்தான் சொன்னான். ஆனால் அஸ்வத் அவனிடம் ”இப்படி நீ என்னை சமாதானப்படுத்துவதற்கான வார்த்தைகளை நீ நெடுநாட்களாக யோசித்து வைத்திருக்கக் கூடும். இந்த திரைக்கதையையே நீ என்னை மகிழ்ச்சியடைய வைப்பதற்காகத்தான் எழுதியிருக்கிறாய்” என்றான்.

பிரகாஷ் அதனால் புண்பட்டான். ”நீ அப்படி நம்பினால் நான் ஒன்றும் சொல்வதற்கில்லை. ஆனால் அந்தத் திரைக்கதையில் என்னைப்போன்ற ஒரு கதாபாத்திரத்தை நான் உயர்வாக ஒன்றும் எழுதவில்லை” என்றான்.

“ஆமாம் ,அவனை சற்று தாழ்த்தாமல் என்னுடைய கதாபாத்திரத்தை நீ உயர்த்த முடியாதல்லவா?” என்று அஸ்வத் சொன்னான்.

”நான் உன்னிடம் விவாதிக்க விரும்பவில்லை. ஆனால் நான் என் மனமார என்ன சொன்னேனோ அதைத்தான் கதையிலும்  சொல்ல விரும்புகிறேன்” என்றான்.

அதன்பிறகு அவர்கள் பேசிக்கொள்ளவில்லை. விடுதிக்கு வந்து சற்று நேரம் டிவி பார்த்துவிட்டு தூங்குவதற்கு முன் அஸ்வத் பிரகாஷிடம் ”இந்தக் கதையில் எழுதியது போல உண்மையிலேயே உனக்கு ரகசிய ஆசை இருக்கிறதா? உன்னுடைய பொருளாதாரக் குறைவால் அல்லது பயத்தால் எல்லாவற்றையும் தவிர்த்துக் கொண்டிருக்கிறாயா?” என்றான்.

”கண்டிப்பாக இல்லை. நான் ரகசிய ஆசை என்று எழுதியது எனக்கே தெரியாமல் இருக்கலாம் என்ற கற்பனைக்காகத்தான். எவ்வளவு யோசித்தாலும் எனக்கு அது அருவருப்பாகவும் என்னால் ஒருபோதும் செய்ய முடியாததாகவும் தெரிகிறது” என்றான்.

”நீ நான் சொல்வது போன்ற பெண்களைத்தான் பார்த்திருக்கிறாய். அவர்கள் எல்லாம் அரக்கிகள். ஆனால் தேவதை போன்ற பெண்கள் எல்லாம் இருக்கிறார்கள். பிரிவினைக் காலத்தில் கிழக்கு வங்காளத்திலிருந்து கல்கத்தாவுக்கு வந்து குடியேறியவர்களின் மகள்கள். அந்தத் தலைமுறையே இப்படித்தான் வாழ்கிறது. அவர்களில் நிறைய பேர் இப்போது பாட்னாவில் குடியேறிவிட்டார்கள். இன்னும் சில நூறு ரூபாய அதிகமாகக் கொடுக்க முடிந்தால் பழைய லக்னோவின் அரச தாசிகளையே நாம் அடையமுடியும். அவர்கள் பென்ஸ் கார் வைத்திருப்பவர்கள். நான்கடுக்கு மாளிகைகளில் வாழ்பவர்கள். நீ பார்த்த திரைப்படத்தில் உள்ள எந்த ஒரு நடிகையை விடவும் அழகானவர்கள். துணிந்து பெரிய ஒரு தொகையை செலவழித்தால் போதும்” என்று அஸ்வத் சொன்னான்.

பிரகாஷ் ”நாம் இதைப்பற்றி பேசவேண்டாம்” என்றான்.

அஸ்வத் எழுந்து ”நீ சொல், ஒருமுறை அந்த மாதிரி ஒரு பேரழகியிடம் நீ செல்ல வேண்டுமென்றால் அதற்கான பணத்தை நான் ஏற்பாடு செய்கிறேன். உனக்குப் பிடித்த எந்தப் பெண்ணையும் நீ சொல். பணத்தைப்பற்றி கவலைப்பட வேண்டாம். பாதுகாப்பைப் பற்றியும் நீ கவலைப்படவேண்டாம். எல்லாவற்றையும் நான் பார்த்துக்கொள்கிறேன்” என்றான்.

”நீ எதற்காக இதை எனக்கு செய்கிறாய்?” என்று பிரகாஷ் கேட்டான். ”என்னைக் கீழே இழுத்துவிட்டால் உனக்கு மகிழ்ச்சியாக இருக்கும் என்பதனாலா?”

அஸ்வத் புண்பட்டான் ”உன்னைக்கீழே இழுத்துவிட்டு நான் அடையப்போவது ஒன்றுமில்லை. நான் கீழே விழுந்து கிடப்பதாக எனக்கு எண்ணமுமில்லை” என்றான். “நீ என் நண்பன் பொய்யாக எழுதினாலும் என்னைப் புகழ்ந்து எழுதியிருக்கிறாய். ஒரு ஷத்ரியனாக நான் உனக்கு எதாவது பரிசு தரவேண்டும். அதற்காகத்தான் சொன்னேன். உனக்கு பிடித்தமான ஒன்றை அளிக்கவேண்டும் என்று சொன்னேன். நீ விரும்பவில்லை என்றால் வேண்டாம். பரவாயில்லை” என்றான்.

அப்படியில்லை ”அப்படியில்லை அப்படியில்லை…” என்று பிரகாஷ் சமாதானம் செய்தாலும் அஸ்வத் அதன்பிறகு அதைப்பற்றி பேச மறுத்துவிட்டான்.

(மேலும்)

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on June 14, 2025 11:33

Talking about the past to invent it…

Hi Jay,

I am an ardent follower of your writing. We have met a couple of times in Bangalore and Toronto.

I am currently in Coimbatore. went to vishnupuram publication last week and bought a couple of books along with ‘Of Man women and witches’.

This is one of your most intriguing works I have read in recent times. After purpadu this one is about your childhood memories  and  Travancore so this is very special.

I can feel I got to know more about your father , mother and extended family. As this was not in tamil it is very new and the translation was awesome and it succeeded by capturing  your malayalam narration in english. This is going to be the next English hit for you.

Some parts of this novel were moving. Especially your father, a very difficult character who will not express love for you. But he was a lovable father at heart. like a jackfruit. Maybe his difficult childhood made him a rigid self-made man .

And your mother was more knowledgeable in literature finding difficulty to cope with your father who was very aggressive sometimes using physical violation and slur words.  Maybe she was the one who pulled the family together.

And your father’s love for travancore was exciting. I got to know more about Travancore tales and the people were amazing.

Thank you,

Kandasami Raja

 

Dear Kandasami,

Thank you for the kind words. I wrote that article nearly 25 years ago, and I feel happy to know still my heart is communicating through those words. Those are not only memories; there are my inventions of love and bond in them. I may say I found them after everything became just memories.

Jeyamohan

Of Men, Women and Witches – Amazon Jeyamohan writes about the matriarchal family system he grew up in A Lazy Wet Morning, Some Stray Thoughts and The Book — Of Men, Women and Witches ‘Devastated by my mother’s death, I found refuge in writing’
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on June 14, 2025 11:31

வேதாந்தம் செயலின்மையை அளிக்குமா?

நான் நித்ய சைதன்ய யதி பற்றி அல்லது வேதாந்தம் பற்றிப் பேச ஆரம்பிக்கையில் உடனடியாக ஒரு எதிர்ப்பேச்சு உருவாகும். வேதாந்தம் படித்தால் எல்லாவற்றிலும் பற்று இல்லாமலாகிவிடும். எதிலும் அர்த்தமில்லை என்று தோன்றிவிடும். எதையும் செய்யத்தோன்றாது.இந்தியாவை வேதாந்தம்தான் தேங்கச் செய்தது. அந்த வரிகளை அறிஞர்கள் என்று அறியப்பட்ட பலரும் அவர்களின் நூல்களில் எழுதியிருப்பதை கண்டிருக்கிறேன்.

வேதாந்தம் செயலின்மையை அளிக்குமா?

[image error]

I watched the classes you are conducting in the name of unified wisdom. Education about alternative medicine is essential in today’s environment. That is the way to prevent monopolies and exploitation in the modern medical field. I think you need to consolidate classes for that. (I have been taking classes for a long time.)

Why not alternate medicine? 
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on June 14, 2025 11:30

தஞ்சை பிராகாஷ் இலக்கிய விருது

தஞ்சை பிரகாஷ் இலக்கியவிருது 2025 ஆண்டில் எழுத்தாளர் சிவகுமார் முத்தய்யாவுக்கு வழங்கப்படுகிறது. மங்கையற்கரசி பிரகாஷ் தலைமையில் நிகழ்வும் இவ்விருதுவிழாவில் ச.தமிழ்ச்செல்வன் முதலிய எழுத்தாளர்கள் கலந்துகொள்கிறார்கள்.

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on June 14, 2025 00:11

Jeyamohan's Blog

Jeyamohan
Jeyamohan isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow Jeyamohan's blog with rss.