எழுத்தாளனை மதிப்பதன் பின்னணி- ஒரு பதில்
ஜெ,
உங்கள் ஆனந்த விகடன் பேட்டியை ஒட்டி உருவான விவாதங்களைக் கண்டிருப்பீர்கள். ஏராளமானவர்கள் ஒரு வாரத்துக்கும் மேலாக உங்களை கீழ்த்தரமாக வசைபாடிக்கொண்டே இருந்தார்கள். ‘பெரியாரையும் அண்ணாவையும் கலைஞரையும் விட எவண்டா எழுத்தாளன்?’ என்பதுதான் ஓங்கி ஒலித்தகுரல். வசைகளின் பெரும்பகுதி திரும்பத்திரும்ப ஏதாவது ஒரு கேலிப்பெயரைச் சொல்லி காழ்ப்பை கொட்டுவதாகவே இருந்தது. பேட்டியில் நீங்கள் சொன்ன அந்த ஒரு விஷயத்த்தின் ஒரு பகுதியை விகடன் தன் பிரமோவுக்குப் பயன்படுத்தியிருந்தது. அதைத்தான் இவர்கள் படித்திருந்தார்கள். முழுப்பேட்டியை எவரும் படிக்கவில்லை என்றே தெரிந்தது. வசைபாடியவர்கள் நீங்கள் சொல்வதுபோல பெரும்பாலும் கட்சி சார்பான வம்பர்கள், முகமூடிபோட்ட மதவெறியர்கள்.
சமூகத்தின் மீதான விமர்சனமும், மேலான ஒன்றுக்கான கனவும்தான் எழுத்தின் அடிப்படைகள். ஓர் எழுத்தாளன் ஒரு சமூகத்தை நோக்கி மிக எளிமையான ஒரு விமர்சனத்தைக்கூட வைக்கமுடியாது என்றால், அவனை இப்படி நாலாந்தர அல்லக்கைகள் இழிவுசெய்வார்கள் என்றால் இங்கே இருப்பது என்னவகையான சூழல்? அதையும் நீங்களே அந்தப் பேட்டியில் சொல்லியிருக்கிறீர்கள். அந்தப் பேட்டியில் சொன்னவை எல்லாம் எந்த அளவுக்கு உண்மை என்ற எண்ணம்தான் அந்த எதிர்வினைகளைப் பார்த்தபோது உருவானது. ஒட்டுமொத்தமாகவே நாம் எழுத்து, எழுத்தாளன் மேல் அவமரியாதை கொண்ட ஒரு சமூகம். அந்த வசையை கொட்ட ஒரு சாக்காகவே ஏதேனும் ஒரு தரப்பை நாம் எடுத்துக்கொள்கிறோமே ஒழிய நமக்கு உண்மையில் எந்த தரப்பும் இல்லை.
ஆர்.ரவிக்குமார்
அன்புள்ள ரவிக்குமார்.
என் கருத்துக்கு வந்த எதிர்வினைகளில் பொருட்படுதத்தக்கது மனுஷ்யபுத்திரன் எழுதிய இந்த பதில். நாலைந்து நாட்களுக்கு முன்னர்தான் இது என் கவனத்துக்கு வந்தது. இந்த வசையலை ஓய்ந்தபின் இதை வெளியிடலாமென நினைத்தேன்.
மனுஷ்யபுத்திரன் பதில்நவீன தமிழ் எழுத்தாளர்களுக்கு தமிழ்நாட்டில் சிலைகள் இல்லை என ஜெயமோகனின் ஒரு கூற்றை ஒட்டி கடுமையான பேச்சுவார்த்தைகள் முகநூலில் நடந்துகொண்டிருக்கின்றன. திராவிடம் நவீன தமிழுக்கு செய்த பணிகள் ஒரு எழுத்தாளருக்கு சிலை வைப்பதைவிட பிரமாண்டமானவை. அதிலும் இன்றைய அரசு செய்துவருபவை இதற்குமுன்பு நடந்திராதவை.
1. பள்ளி– கல்லூரி பாடநூல்களில் நவீன எழுத்தாளர்களின் படைப்புகள் பரவலாக இடம்பெற்றுள்ளன.
2. சென்னையில் அண்ணா நூற்றாண்டு நூலகமும் மதுரையில் கலைஞர் நூலகமும் தமிழ்நாட்டின் நவீன பண்பாட்டு மையங்களாக மாறியுள்ளன. இதே போன்ற பிரமாண்டமான நூலகங்கள் கோவையில் பெரியார் பெயரிலும் திருச்சியில் காமராஜர் பெயரிலும் கட்டப்பட்டு வருகின்றன.
3. அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் அமைந்துள்ள செந்தமிழ் சிற்பிகள் அரங்கில் தமிழுக்கு தொண்டாற்றிய பழந்தமிழ் அறிஞர்கள் முதல் நவீன எழுத்தாளர்கள்வரை அவர்களது படங்களும் அவர்களைப்பற்றிய வாழ்க்கைக் குறிப்புகளும் இடம்பெற்றுள்ளன. தினமும் ஏராளமானோர் அவற்றை பார்வையிடுகின்றனர்.
4. கி.ராஜநாராயணன் அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டதுடன் அவருக்கு மணிமண்டபமும் அமைக்கப்படுகிறது
5. கோணங்கிக்கு 5 இலட்சம் ரூபாய் விருதுத் தொகைகொண்ட இலக்கிய மாமணி விருது இந்த அரசால் வழங்கப்பட்டது.
6. இந்த அரசு மாவட்டம்தோறும் புத்தகக் கண்காட்சிகள்மூலம் புத்தக வாசிப்பு தமிழ்நாடு முழுக்க ஒரு பேரியக்கமாக மாறியுள்ளது. இதற்காக அரசு ஒரு பெரும் தொகையை நிதியாக ஒதுக்கி வருகிறது. அவற்றில் கணிசமான நவீன எழுத்தாளர்கள் உரையாற்ற அழைக்கப்படுகின்றனர்
7. மண்டல வாரியாக நதிகளின் பெயரில் நடத்தப்படும் இலக்கியத் திருவிழாக்களில் பெரும்பாலும் நவீன எழுத்தாளர்களே உரையாற்ற அழைக்கபடுகின்றனர்.
8. பதிப்புத்துறையின் கடைந்தெடுத்த ஊழல்பேர்வழிகளால் சீரழிக்கப்பட்ட பொது நூலகத்துறை கடந்த காலத்தில் சீரழிக்கபட்டதை மாற்றி இன்று எல்லாவிதமான பதிப்பகங்களிலும் நூல்கள் வாங்கப்படும் வகையில் புதிய நூலகக்கொள்கை வகுக்கபட்டு ஏராளமான நவீன படைப்பாளிகளின் நூல்கள் சமீபத்தில் வாங்கப்பட்டன. இந்தக் கொள்முதல் தொடர்ந்து நடைபெறுகிற இருக்கிறது.
9. இந்தியாவில் எந்த மாநில அரசும் செய்திடாத வகையில் உலகப் புத்தகக் கண்காட்சிகள் தொடர்ந்து இந்த அரசு வந்ததிலிருந்து ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வருகிறது. மொழிபெயர்ப்பு உரிமைகளை வாங்குவதும் விற்பதும் சிலரின் ஏகபோகமாக இருந்த நிலை மாற்றப்பட்டு அது அனைவருக்கும் ஜனநாயகப்படுத்தபட்டு உலகத்துடனான கதவுகள் திறந்துவிடப்பட்டுள்ளன.
10. தமிழ் படைப்புகளை பிறமொழிகளுக்கு எடுத்துச் செல்ல பெருமளவு நிதி நல்கைகள் வழங்கப்படுகின்றன.
11. தமிழ்நாடு பாடநூல் கழகம் இன்று மிக முக்கியமான பழைய நூல்களை பதிப்பிப்பது மட்டுமல்ல, தமிழ் படைப்புகளை பிறமொழிகளுக்கு எடுத்துச் செல்வதிலும் பெரும் பங்காற்றி வருகிறது
12. எழுத்தாளர்களுக்கு கனவு இல்லம் திட்டத்தின் மூலம் வீடுகள் அளிக்கப்பட்டு வருகின்றன
13. தமிழ்நாடு முழுக்க நூலகங்கள் புதுப்பிக்கப்பட்டு வருகின்றன
14. நான் சென்னை மாநகர நூலக ஆணைக்குழு தலைவராக பொறுப்பேற்ற பிறகு முழுக்க முழுக்க நவீன எழுத்தாளர்களை மையமாகக்கொண்ட நிகழ்வுகளை தொடர்து நடத்தி வந்திருக்கிறேன். புதுப்பிக்கபட்ட சிற்றரங்கத்திற்கு புதுமைப்பித்தன் பெயரை இட்டோம். இதற்கான முழு ஆதரவை துறை சார் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்களும் அதிகாரிகளும் அளித்து வந்திருக்கிறார்கள்.
15. நவீன எழுத்தாளர்களின் படைப்புகள் அடங்கிய இலக்கிய மலர்களை அரசின் இதழான தமிழரசு இதழ் வெளியிட்டுள்ளது.
16. கலைஞர் செம்மொழி ஆராய்ச்சி விருது பத்து இலட்ச ரூபாய் கொண்ட இந்தியாவின் உயரிய விருது. கலைஞர் சொந்த நிதியிலிருந்து வழங்கிய ஒரு கோடி ரூபாயிலிருந்து பபாஸி ஆண்டு தோறும் வழங்கிவரும் கலைஞர் விருதை சி.மோகன் உட்பட பல நவீன படைப்பாளிகள் பெற்றுள்ளனர்.
இதெல்லாம் சட்டென நினைவில் வந்தவற்றை மட்டும் எழுதுகிறேன். சில சிலைகளைக் காட்டிலும் இத்தகைய செயல்கள் ஆயிரம் மடங்கு மேலானவை. இதற்கு முந்தைய ஆட்சிக் காலங்களில் கலைஞர் தமிழுக்கும் தமிழ் அடையாளத்திற்கும் செய்தவற்றை மிகப்பெரிய பட்டியலிடலாம். வள்ளுவத்தையும் சிலப்பதிகாரத்தையும் தமிழின் முகமாக மாற்றியது கலைஞரே.
திராவிடம் நவீன எழுத்தாளர்களை ஒருபோதும் விலக்கியதில்லை. கலாப்ரியா, வண்ணதாசன் போன்ற பலரும் வெவ்வேறு காலகட்டங்களில் திராவிட இயக்கத்தோடு நல்லுணர்வுர்களை கொண்டிருந்திருக்கின்றனர். கனிமொழி, தமிழச்சி தங்கபாண்டியன் போன்றோர் பல நவீன எழுத்தாளர்களுக்கு ஆதரவளித்து நட்புகொண்டிருந்திருக்கின்றனர். ஒரு நவீன கவிஞனான என்னை திமுகவைத் தவிர வேறு எந்த அரசியல் இயக்கத்தால் அரவணைத்துக்கொள்ள இயலும்?
ஆனால் தமிழ் சிறுபத்திரிகைச் சூழலில் அதிகாரத்துடன் இயங்கிய உயர்சாதியினர் திராவிட இயக்கத்தால் தங்கள் சமூக அரசியல் அதிகாரம் முறிக்கபட்டதை தாங்கிக்கொள்ள முடியாமல் ஒரு கற்பனையான வெறுப்பு அரசியலை வளர்த்துக்கொண்டனர். அதனால்தான் நான் மதிக்கும் ஞானக்கூத்தன் ’ எனக்கும் தமிழ்தான் மூச்சு அதை பிறர்மேல் விடமாட்டேன்’ என்று மொழிப்போராட்டத்தை கேலி செய்து எழுதினார். அவரது பல கவிதைகள் திராவிட அரசியல் ஒவ்வாமையை வெளிப்படுத்தின. அசோகமித்திரன் ‘ தமிழ் நாட்டில் பிராமணர்கள் ஜெர்மனியில் யூதர்கள் போல வாழ்கிறார்கள்’ என்றார். எவ்வளவு நுட்பமான எழுத்தாளர்கள்கூட எவ்வளவு அரசியல் பண்பாட்டு மாற்றங்கள் குறித்தோ சமூக நீதி குறித்தோ விழிப்புணர்ச்சியற்று இருந்தார்கள் என்பதற்கு எத்தனையோ சான்றுகள் இருக்கின்றன. அவர்கள் இடது சாரிகளோடு உரையாடினார்கள். ஆனால் திராவிட இயக்க பண்பாட்டு அரசியலோடு அவர்கள் உரையாடியதே இல்லை. வெறுப்பு மட்டுமே அவர்களிடம் மேலோங்கி இருந்திருக்கிறது. ஆனால் திராவிடம் தன்னளவில் நவீன இலக்கியத்தின்மீதோ இலக்கியவாதிகளின்மீதோ அத்தகைய வெறுப்பை கொண்டதில்லை. அவர்களை விலக்கியதுமில்லை. கடந்த காலத்தில் திமுகமீது கடும் வெறுப்பைக் கக்கிய ஒரு இலக்கிய ஏட்டின் ஆசிரியர்கூட தமிழ்நாடு அரசின் பன்னாட்டுப் புத்தகக் கண்காட்சியின் ஆலோசனைக்குழுவில் இடம்பெற்றார்.
நவீன எழுத்தாளர்கள் சிலருக்கு சிலை அமைக்கவேண்டும் என்றால் அது ஒரு அரசுக்கு பெரிய விஷயம் அல்ல. தமிழுக்கு எவ்வளவோ செய்தவர்கள் இதைச் செய்யமாட்டோமா? ஒரு அரசை மதித்து முறையாக ஒரு கோரிக்கை எழுப்பபட்டால் இந்த அரசு அதைப் பரிசீலிக்கும். அதற்கு முதல் தேவை இந்த அரசு தமிழுக்கு ஆற்றும் பணிகளை பொருட்டாகக்கொண்டு ஒரு கண்ணியமான உரையாடலை அரசோடு தொடங்கவேண்டும். ஒவ்வொரு சிறு சிறு பிரச்சினைகள், அல்லது போதாமைகளின் அடிப்படையில் ஒட்டுமொத்தமாக ஒரு அரசின் தமிழ்ப் பணிகளை, இலக்கியப் பணிகளை நிராகரிக்கும் போக்கே பெரும்பாலன நவீன இலக்கிய வாதிகளிடம் வெளிப்படுகிறது. இது இருப்பதையும் இல்லாமலாக்கும் ஒரு முயற்சி.
நவீன இலக்கியத்திற்கான புதிய வெளிகளை இந்தத் திராவிட மாடல் அரசு மேலும் மேலும் விரிவாக்கும் என உறுதிபடக் கூறுகிறேன்.
– மனுஷ்ய புத்திரன்
*
என் தரப்பை விளக்குகிறேன்.
நான் என் பேட்டியிலேயே சொல்கிறேன், நான் விமர்சிப்பது தமிழ்ச்சமூகத்தைப் பற்றி. அரசை அல்ல. எந்த அரசிடமும் நான் எந்தக் கோரிக்கையையும் வைப்பதில்லை. எந்த அரசைச் சார்ந்தும் அறிவியக்கம் செயல்படலாகாது என நினைக்கிறேன். ஆனால் அரசு அறிவியக்கத்துக்காகத் தானாகவே சிலவற்றைச் செய்யும் என்றால் அதை வரவேற்கிறேன்.
எந்த எழுத்தாளனையும்போல நான் வாழும் சமூகம் பற்றிய விமர்சனத்தை முன்வைக்கிறேன், அதன் அடுத்த கட்டம் சார்ந்த கனவை முன்வைக்கிறேன். ஓர் இலக்கியவாதியாக அக்கனவை நிகழ்த்திக்கொள்ளும் எல்லா முயற்சிகளையும் ஒவ்வொருநாளும், விழித்துக்கொண்டிருக்கும் ஒவ்வொரு நிமிடமும் செய்துகொண்டும் இருக்கிறேன், அதில் சாதனைகளும் நிகழ்ந்துள்ளன. அந்த தகுதியிலேயே அந்த விமர்சனம் முன்வைக்கப்படுகிறது.
வசைபாடும் கும்பலை எப்போதுமே நான் பொருட்படுத்தியதில்லை. அவர்கள் அப்படித்தான், அவர்களின் அறிவுத்திறனும் கலாச்சாரப் பயிற்சியும் அவ்வளவுதான். அதை அறியாமலா இங்கே எழுத வந்திருக்கிறோம்? அவர்களிடமா நாம் உரையாடிக்கொண்டிருக்கிறோம்? அவர்கள் தங்கள் கூச்சலை எழுப்பட்டும். அந்த ஓசை எப்போதும் இங்கே இருந்துகொண்டிருப்பதுதானே?
மனுஷ்யபுத்திரனுக்கான என் பதில் இதுதான். திராவிட இயக்கம் தனக்கான இலக்கிய அடையாளங்களாக மரபில் இருந்தும், நவீனகாலகட்டத்திலும் சில எழுத்தாளர்களை முன்வைத்தது எனக்குத் தெரியும். எந்த அரசியலியக்கமும் அதன் கொள்கைகள் சார்ந்த ஆளுமைகளை முன்வைக்கவே செய்யும். திருவள்ளுவர் என்பது தமிழ்மறுமலர்ச்சி இயக்கம் இங்கே உருவாக்கிய முதன்மைத் திருவுரு. அதை திராவிட இயக்கம் எடுத்துக்கொண்டு தன் முகமாக முன்வைத்தது. மனோன்மணியம் சுந்தரனார் போல தமிழியக்கத்தில் இருந்து திராவிட இயக்கம் எடுத்துக்கொண்ட ஆளுமை முகங்கள் பல உண்டு. தேவநேயப்பாவாணர், பாரதிதாசன் போன்றவர்கள் திராவிட இயக்கத்தின் நேரடியான முகங்கள்.
வெவ்வேறு காலங்களில் திராவிட இயக்கத்துடன் அரசியல் அணுக்கம் கொண்டிருந்த பல எழுத்தாளர்கள் உண்டு. அவர்கள் தங்களுக்கான பரிசுகளை அரசிடம் இருந்தும், அரசியலியக்கங்களில் இருந்தும் பெற்றிருக்கிறார்கள். உதாரணம் சுரதா, அவருக்குச் சென்னையில் சிலை உள்ளது. இன்னொரு உதாரணம் ம.பொ.சி. நாளை வைரமுத்துவும் அப்பரிசைப் பெறுவார். திராவிட இயக்கம் அப்படி தன் அறிவுத்தளத்தை தொடர்ந்து முன்வைத்துக்கொண்டுதான் உள்ளது. நான் அதைச் சொல்ல வரவில்லை.
இன்றைய திமுக அரசு இலக்கியம் – கலாச்சாரம் சார்ந்த தளங்களில் எடுத்துவரும் முன்னெடுப்புகளை ஏற்றும் பாராட்டியும்தான் தொடர்ச்சியாக எழுதி வருகிறேன். இந்த தளத்திலேயே பல கட்டுரைகள் உள்ளன. புத்தகவிழாக்களை ஒருங்கிணைப்பது, மாவட்டம்தோறும் இலக்கியநிகழ்வுகளை நிகழ்த்துவது ஆகியவை முக்கியமான நிகழ்வுகள். இலக்கியவாதிகளுக்கு வீடு அளிப்பதென்பது பிற மாநிலங்களும் பின்பற்றவேண்டிய முன்னுதாரணம். அதை கேரளத்திலும், கர்நாடகத்திலும் சொல்லியிருக்கிறேன். மனுஷ்யபுத்திரன் நூலகத்துறை வழியாக முன்னெடுக்கும் மாணவர் பயிற்சி வகுப்புகளும் முன்னர் தமிழில் நிகழாதவை, முன்னுதாரணமானவை, அவற்றையும் முன்னர் எழுதியுள்ளேன்.
நான் சொல்லிக்கொண்டிருப்பது எழுத்தாளர்களை அரசு மதிப்பதைப் பற்றி அல்ல. எல்லா அரசுகளும் அந்த அரசுகளை அமைக்கும் கட்சியின் அடையாளங்களாகச் சில எழுத்தாளர்களை முன்னிறுத்தும். அந்த அரசுகளுடன் ஒத்துப்போகும் எழுத்தாளர்கள் முகங்கள் அரசுகளின் ஏற்பைப் பெறுவார்கள். இதெல்லாம் எங்கும் நிகழ்வதுதான். நான் சொல்வது அதை அல்ல. (இப்போதைய தமிழக அரசு இந்த எல்லையை மீறி பொதுவாக அனைத்து எழுத்தாளர்களுக்கும் இடமளிப்பதையும் ஏற்றுக்கொள்கிறேன்) .நான் சொல்வது ஒரு சமூகமாக நமக்கு எழுத்துடன், இலக்கியத்துடன் உள்ள உறவைப் பற்றி. இது கொஞ்சம் எழுத்தோ, வாசிப்போ உள்ள அனைவருக்குமே தெரிந்த ஒன்றுதான். வாசிப்போ, எழுத்தோ என்னவென்றே தெரியாதவர்களுக்கு எந்த வகையிலும் புரியவைக்க முடியாததும்தான்.
நம் சமூகம் வாய்மொழி மரபு சார்ந்த பண்பாடு சார்ந்தது. இன்றும் நம் மனநிலை அதுவாகவே நீடிக்கிறது. நமக்கு நவீனக் கல்வி அறிமுகமானபோதுதான் மிகப்பெரும்பாலானவர்கள் எவ்வகையிலாவது எழுத்து மரபுக்கு அறிமுகமானார்கள். ஆனால் பள்ளி, கல்லூரிகளில் நாம் அடையும் எழுத்துக் கல்வி என்பது ஏதேனும் தொழிலுக்கோ வேலைக்கோ தகுதி பெறுவதற்கான ஒரு பயிற்சி மட்டுமாகவே நம் மனதில் இன்றும் நீடிக்கிறது. வீட்டில் பள்ளிப்பாடம் அன்றி ஒரு நூலாவது உள்ள குடும்பங்கள் இங்கே மொத்த தமிழகத்திலும் சில ஆயிரங்கள் கூட இருப்பதில்லை. பாடம் அன்றி ஏதேனும் ஒரு நூலை வாசித்தவர்களின் எண்ணிக்கை தமிழகத்தில் ஒரு சதவீதம் இருந்தாலே அதிகம்.
நமக்கு இன்னும்கூட எழுத்துப் பண்பாட்டின்மேல் அச்சமும் விலக்கமும் இருக்கிறது. அதேசமயம் வாய்மொழிப் பண்பாட்டின்மேல் பற்றும் ஈடுபாடும் இருக்கிறது. தமிழகத்தில் நூல்களை வாசிப்பவர் நூறுபேர் என்றால் சமயச்சொற்பொழிவுகள், பட்டிமன்றங்களை கேட்பவர்கள் லட்சம் பேர். இன்று அந்த வாய்மொழிக் கலாச்சாரம்தான் அப்படியே யூடியூப் ஷார்ட்ஸ்- இன்ஸ்டா கலாச்சாரமாக ஆகியிருக்கிறது. நான் சுட்டிக்காட்டுவது இந்தக் கலாச்சார அம்சத்தைத்தான். ஒரு சராசரிச் சினிமாவுக்கு கிடைக்கும் கவனத்தில் ஆயிரத்தில் ஒரு பங்குகூட இங்கே இதுவரை எந்த நூலுக்கும் கிடைத்ததில்லை.
தமிழகத்தில் ஒரு ஜனரஞ்சகப் பேச்சாளர் அடையும் புகழில் நூறில் ஒரு பங்கைக்கூட ஓர் இலக்கிய மேதை அடையமுடியாது. பேசி இங்கே வாழமுடியும், எழுதி வாழமுடியாது. ஒருவர் பிரியாணி பற்றிப் பேசி பலகோடிப்பேரால் கவனிக்கப்பட முடியும். தமிழகத்தின் மிகப்புகழ்பெற்ற ஜனரஞ்சக எழுத்தாளர்கள்கூட அந்த இடத்தை அடையமுடியாது. நான் சொல்வது இந்த குறிப்பிட்ட அம்சத்தைப் பற்றித்தான்.
இதைக் கடந்தே ஆகவேண்டும். எழுத்துப் பண்பாட்டுக்குள் செல்லும் சமூகங்கள்தான் நவீனச் சமூகங்கள், அவையே வெல்லும் சமூகங்கள். வாய்மொழிப் பண்பாட்டின் மனநிலைகளை உதறாமல் அது சாத்தியமில்லை. வாய்மொழிப் பண்பாடு என்பது எழுத்தை அஞ்சுவது, உதாசீனம் செய்வது, அதன் இடத்தையும் பங்களிப்பையும் புரிந்துகொள்ளாமல் எழுத்தையும் எழுத்தாளர்களையும் வசைபாடுவது. அதைத்தான் என் பேட்டிக்கான எதிர்வினையிலும் காண்கிறோம்.
அந்த அடிப்படையிலேயே நான் அறிவு வழிபாட்டைப் பற்றிப் பேசினேன். ஓர் எழுத்தாளன் எழுத்துப் பண்பாட்டின் அடையாளம். அவனை அடையாளம் காண, அவனை மதிக்க நம்மால் இயலவில்லை. கொஞ்சம் எழுத்தும் வாசிப்பும் கொண்டவர்களில் இதை அறியாத எவரும் தமிழகத்தில் உண்டு என நான் நினைக்கவில்லை. சுந்தர ராமசாமியை நாகர்கோயிலில் எவருக்குத் தெரியும்? அசோகமித்திரனை எவருக்குத் தெரியும்? சரி ,ஜெயகாந்தனைத்தான் எத்தனைபேர் அறிந்திருக்கிறார்கள்? அந்த மக்களிடையே அவர்களுக்கு இடமில்லை, ஆகவேதான் அவர்கள் எவ்வகையிலும் அந்த ஊர்களில் நினைவுகூரவில்லை. அரசு ஒரு சிலை வைக்கலாம், அது புழுதிபடிந்து குப்பைமலையில் நின்றிருக்கும். மதுரையில் பாண்டித்துரைத் தேவரின் சிலை கிடப்பதைப்போல.
அந்த உதாசீனம் நமக்கு எழுத்துப் பண்பாட்டுடன் உள்ள விலக்கத்தின் விளைவு. அதை நாம் கடந்தேயாகவேண்டும், நான் சொல்வது அதை மட்டுமே. அதைக்கூட எழுத்துப் பண்பாட்டுக்குள் வந்தவர்களிடமே சொல்லமுடியும். அதற்குள் வராதவர்கள் நான் சொல்வதைக் கேட்டு மீண்டும் சீண்டப்பட்டு கெட்டவார்த்தைதான் சொல்வார்கள். ஏனென்றால் என் இடமென்ன என்றோ, எழுத்தாளன் என்றால் என்ன என்றோ அவர்களால் புரிந்துகொள்ள முடியாது.
நான் சொல்வதையே மனுஷ்யபுத்திரனும் அண்மையில் ஓர் உரையாடலில் சொல்கிறார். ஒரு கவிதையை ‘மக்களிடையே’ கொண்டு செல்லமுடிகிறது இன்றைய நவீன ஊடகத்தால். அதாவது அதை வாய்மொழி வடிவமாக ஆக்கி, வாய்மொழிப் பண்பாட்டில் வாழ்பவர்களிடையே கொண்டுசெல்லப்படுகிறது நவீனக் கவிதை. ஆனால் அவர்களுக்கு எழுத்துப்பண்பாடு அறிமுகம் இல்லை. எழுத்தாளன், கவிஞன் என்னும் ஆளுமையை அவர்கள் அறிந்திருக்கவே இல்லை. அவர்கள் அறிந்திருப்பதெல்லாம் பேச்சாளர்களையும், மேடையில் கவி பாடும் பாடகர்களையும்தான். ஆகவேதான் மனுஷ்யபுத்திரன் சொல்லும் பிரச்சினை எழுகிறது.
பேச்சாளர்களும் ,மரபுக்கவிஞர்களும் வாய்மொழிப்பண்பாட்டை சேர்ந்தவர்கள். பழைய குலப்பாடகர்களின் மன அமைப்பு கொண்டவர்கள். அவர்கள் சபையாக தங்கள் முன்னால் இருப்பவர்களை போற்றிப் பாடுவதுதான் வழக்கம். கேட்பவர்களுக்கு உகக்காததைச் சொல்லாதவர்கள் அவர்கள். புகழ்ந்து, மகிழ்வித்து அதற்கான பரிசையும் பெற்றுச் செல்வார்கள். ஆனால் நவீன எழுத்தாளன் என்பவன் எழுத்துமரபால் உருவாக்கப்பட்டவன். அவன் ஓர் ஐரோப்பிய உருவகம். அவன் சமூகத்தை விமர்சனம் செய்பவன், சமூகத்தின் சராசரியை விட பலமடங்கு சிந்தனையாலும் தரிசனத்தாலும் முன்னால் சென்றவன். அவனை வாய்மொழிப் பண்பாட்டைச் சேர்ந்தவர்களால் உணரமுடியாது. ஆகவே அதிர்ச்சி அடைகிறார்கள். ‘யார் நீ’ என்று கேட்கிறார்கள். ‘எங்கள் தலைவனை நீ எப்படி விமர்சிக்கலாம்’ என வசைபாடுகிறார்கள். சமூகத்தை விமர்சனம் செய்தால் கொல்லவும் வருகிறார்கள்.
கவனியுங்கள் நான் மட்டும் வசைபாடப்படவில்லை. மிகக்கவனமாகப் பேசும் எஸ்.ராமகிருஷ்ணனும் வசைபாடப்படுகிறார். மனுஷ்யபுத்திரனும் வசைபாடப்படுகிறார். தன்னை நவீன எழுத்தாளனாக, சமூக விமர்சகனாக முன்வைக்கும் அத்தனை எழுத்தாளர்களும் வசைபாடப்படுகிறார்கள். சுந்தர ராமசாமியோ , ஜெயகாந்தனோ, புதுமைப்பித்தனோ அப்படித்தான் வசைபாடப்பட்டனர். நான் சுட்டிக்காட்டுவது இந்த எழுத்துப் புறக்கணிப்பு மனநிலையைத்தான். இது இருக்கும் வரை இங்கிருந்து அறிவியக்கம் உருவாக முடியாது என்கிறேன். ‘எழுத்தாளனை மதிப்பது’ என்று நானோ சாருநிவேதிதாவோ, எஸ்.ராமகிருஷ்ணனோ சொல்வது இதைத்தான்.
ஜெ
Jeyamohan's Blog
- Jeyamohan's profile
- 835 followers
