Jeyamohan's Blog, page 75

June 18, 2025

யுவபுரஸ்கார்- லட்சுமிஹர்

இளம்படைப்பாளிகளுக்கு வழங்கப்படும் யுவபுரஸ்கார் விருதை 2025 ஆம் ஆண்டுக்கு லக்ஷ்மிஹர் பெறுகிறார். அவருடைய கூத்தொன்று கூடிற்று சிறுகதைத் தொகுதிக்காக இவ்விருது அளிக்கப்படுகிறது. வாழ்த்துக்கள்.

லட்சுமிஹர் தமிழ்விக்கி 

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on June 18, 2025 11:36

வேதாந்தம் உலகியலுக்கு எதிரானதா?

வணக்கம், உங்களுடைய இந்த காணொளி பார்த்தேன். நன்றாக இருந்தது. ஆனால் எனக்கு மிகப்பெரிய முரண்பாடாக தோன்றிய விஷயம் இது: 

யுவால் நோவா ஹராரி யின் வாழ்க்கை பார்வையானது ஒரு யூத, கிருத்தவ மனநிலையை ஆமாம் போட வைக்கும், அவர்களின் ஆழ் மனதோடு ஒத்திசைக்கும் என்று கூறினீர்கள். மற்றும் அவர்களின் விமோசனம், தீர்ப்பு நாள், மறுபிறப்பு எதிர்பார்ப்பு கோட்பாடுகள் எப்படி progress/utopia போன்ற கருத்துக்களை பெற்று எடுக்கும் என்று கூறினீர்கள். மிக நல்ல அனாலிசிஸ். 

கிருத்தவம் மற்றும் யுத மனநிலை மனித வாழ்வை பாவத்தின் வெளிப்பாடாக பார்க்கிறது என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. வாழ்க்கை ஒரு சாபம் எனவும், கடவுளின் தண்டனை எனவும், விமோசனம் பெற வேண்டிய ஒரு நிலை எனவும், ஒரு சக்கரத்தில் மாட்டிகொண்ட எலி போல பதற்றம் நிறைந்த சூழலாகவும், சமாதானதிற்கு ஏங்கும் ஒரு நிலை போலவும் கருதுகிறது என்பது ஏற்கதக்கது. 

மறுபடியும்: மிக நல்ல அனாலிசிஸ். 

ஆனால் சுற்றி நடக்கும் அனைத்தும் மாயை, இன்ப துன்பம், பிறப்பு, இறப்பு, நியாய அநியாயம் என்று சொல்லப் படும் அனைத்தும் “பிரம்மம்” என்னும் ஒருமையை உணராத அறியாயமை மனநிலை என்று கூறும் வேதாந்த தத்துவம் எந்த வகையில் உயர்ந்தது? குழந்தையின் சிரிப்பு இருக்கும் இந்த உலகத்தில்தான் தாங்க முடியாத பிரசவ வலியும் இருக்கிறது. இன்பம் அள்ளித்தரும் இந்த உலகில் துன்பத்திற்கும் பஞ்சம் இல்லை. ஒரு பக்கம் பூந்தோட்டம், மறுபக்கம் சாக்கடை கிடங்கு..ஆனால் எந்த வித்தில் இவை எல்லாம் மாயை என்ற கருத்து மேம்பட்டதாகும்? இரண்டும் வேண்டும், இரண்டையும் ஏற்க வேண்டும், அள்ளி பருகவேண்டும் என்று கூறும் தத்துவமே மேலானது அல்லவா? அடிப்படையில் இரண்டுக்கும் என்ன வேறுபாடு உள்ளது? முக்தி/விடுதலை போன்ற கருத்துக்களுக்கும் விமோசனம்/இறுதித்தீர்ப்பு போன்ற கருத்துக்களுக்கும் என்ன வேறுபாடு இருக்கிறது? அவர்களுக்கு வாழ்க்கை பாவம், விமோசனம் வேண்டும்.. இவர்களுக்கு வாழ்க்கை அறியாமை..அதில் இருந்து விழிப்பு/விடுதலை வேண்டும். 

இந்த இரண்டு தத்துவமும் அடிப்படையில் சுற்றி நடக்கும் வாழ்க்கை நிகழ்வுகளை வேறு வேறு வகையில் சிறுமை படுத்தும் நோக்கமே என்பது என் கருத்து! வாழ்கையை பொறுக்க முடியாதவர்களின் ஐடியலிசம். எதோ ஒரு ideal இந்த வாழ்கையை சமாளிக்க/சகித்துக்கொள்ள இந்த இரண்டு மதங்களுக்கும் தேவை படுகிறது என்பது என்னுடைய கருத்து. 

வாழ்க்கை பொறுக்க முடியாத ஒரு மனநிலை தானே இதை அனைத்தையும் மாயை என்று சொல்லி அதில் பங்கு பெறாமல் ஆறுதல் அடைய முடியும்?

நான் “வேதாந்தம்” என்று குறிப்பிட்டு சொன்னதன் காரணம்: பிரம்மம் என்பதற்கு பல தத்துவங்களில் பல விதமாக உணரப்பட்டு இருக்கிறது. பிரம்மம் என்பது ஒருமை என்பதே எல்லா இந்திய தத்துவங்களும் ஒற்றுகொள்வதில்லை. ஆனால் இதை நீங்கள் மேலோட்டமாக அந்த காணொளியில் கிழக்கத்திய தத்துவம் என்று சொல்லிவிட்டீர்கள். ஆனால் நீங்கலே இன்னொரு காணொளியில் நான் சொன்னதை பற்றியும் பேசி இருக்கிறீர்கள். உங்களுக்கு தெரியாது என்ற அர்த்தத்தில் நான் சொல்லவில்லை.

இது போன்று தத்துவங்களை perspectival அனாலிசிஸ் வேறு யாரும் தமிழில் செய்து நான் கேட்டது இல்லை. அனைவரும் இடது சாரி தத்துவம் பேசினால் தான் ஏதோ உண்மையின் பக்கம் இருப்பது போல பேசுகிறார்கள். மேற்கத்திய கோட்பாடுகள், அறிவியல் தகவல்களை பேசினால் ஏதோ ஒரு மிக உயர்ந்த இடத்தில் இருந்து பேசுவது போல் நினக்கிறார்கள்.  எந்த ஒருவருக்கும் தமிழ்சூழலிலே கருத்துக்கள் எங்கிருந்து வருகிறது, எந்த மனநிலை எந்த கருத்துக்களை பெற்று எடுக்கும், கருத்துக்களின் மதிப்பு போன்ற விஷயங்களை யாரும் பேசி கேட்டதே இல்லை(based on my very limited exposure to Tamil literature). முதல் முறை இது போன்ற ஒரு காணொளி பார்த்த சந்தோஷமே என்னை எதிர் கருத்து பதிவு செய்ய தூண்டியது. 

நல்ல காணொளி. மிக்க நன்றி. 

(என்னுடைய கருத்து, என்னுடைய அபிமானம் என்று பல இடங்களில் கூறி இருக்கிறேன்.. ஆனால் அவ்வளவு பெரிய அறிவாளி அல்ல நான். என் உலக பார்வை நான் படித்து, பெரிதும் பாதிக்கப்பட்டு, ஏற்றுகொண்ட, மறுத்த பெரிய பெரிய மனிதர்களின் தாக்கமே ஆகும்..)

நன்றி

சுவாமிநாதன் 

அன்புள்ள சுவாமிநாதன்,

இந்திய ஞானமரபு, அத்வைதம் ஆகியவற்றைப் பற்றி நம் சூழலில் விவாதமே நிகழ்வதில்லை. அவற்றைப்பற்றிய கல்வி என்பது அனேகமாக இல்லை. இந்தியாவெங்கும் அப்படித்தான். இங்கே இருப்பவை இரண்டு தரப்புகள். ஒன்று, பக்தி மற்றும் நம்பிக்கை சார்ந்தது. அங்கே பெரும்பாலும் தத்துவமும் ஞானமும் மூத்தோர் உபதேசம் என்ற வகையில் கொள்ளப்படுகின்றன. பெரும்பாலும் மூடநம்பிக்கை, அசட்டுச் சார்புநிலைகளே அங்கே நமக்கு கிடைக்கின்றன.

இன்னொன்று, இங்கே நாத்திகம், மார்க்ஸியம் சார்ந்து சொல்லப்படுபவை. அவை முழுமையான நிராகரிப்புகள். தத்துவ நிலைபாடுகள்கூட அல்ல, வெறும் எதிர்ப்புகள். அவற்றைச் சொல்பவர்கள் தங்களை சிந்தனையாளர்கள் அல்லது சிந்தனைகளைக் கற்பவர்கள் என எண்ணிக்கொள்கிறார்கள். அவர்களுக்கு இருப்பதும் உண்மையில் வெறும் கருத்தியல் நம்பிக்கைதான். மேற்குலகம் உருவாக்கிய கருத்துக்களை அவர்கள் மூர்க்கமாக நம்புகிறார்கள். அவை சரியாக இருக்கும் என எண்ணி அவற்றை அதே தர்க்கங்களுடன் முன்வைக்கிறார்கள்.

இந்த இரண்டு தரப்பும் இவர்களை எதிர்ப்பவர்களை தங்கள் எதிர்த்தரப்பு என முத்திரையடிக்கும். நீங்கள் இந்திய ஞானமரபின் உண்மையான பக்கங்களைச் சொல்லி, இந்து நம்பிக்கையாளர்களை எதிர்த்தால் அவர்கள் உங்களை இந்துவிரோதியான மார்க்ஸியர் என்பார்கள்.நீங்கள் இடதுசாரிகளின் கருத்தியல் அடிமைத்தனத்தைச் சுட்டிக்காட்டினால் இந்து வெறியர் என பட்டம் சூட்டப்படுவீர்கள்.

இந்தச் சூழலில்தான் நான் பேசிக்கொண்டிருக்கிறேன். எனக்கான வட்டம் மிகச்சிறியதாக இருப்பது இதனால்தான். இந்த விவாதச்சூழலில் நீங்கள் வந்தமைக்கு வாழ்த்துகக்ள். நீண்டகாலமாக நான் முன்வைத்து விவாதித்துவரும் இந்த விஷயங்களை பொதுவெளியில் விவாதிப்பதில் அண்மையில் நம்பிக்கை இழந்துவிட்டேன். ஏனென்றால் இங்கே விவாதங்களில் எந்த முட்டாளும் வந்து தன்னம்பிக்கையுடன் பேச சமூகவலைத்தளச் சூழல் வழியமைக்கிறது. விளைவாக எல்லாமே வெட்டிவிவாதங்களாக ஆகிவிடுகின்றன.

ஆகவே திட்டவட்டமான வகுப்புகளே பயனுள்ளவை என நினைத்து 2022 முதல் அவ்வகுப்புகளை நடத்தி வருகிறேன். அவை மிகவும் பயனுள்ளவையாக உள்ளன என்பதைக் காண்கிறேன்.

*

உங்கள் கேள்விக்கு வருகிறேன். இந்திய தத்துவம், வேதாந்தம் ஆகியவற்றில் முறையான அறிமுகம் உடையவர்களின் கேள்வி அல்ல அது. எந்த முறையான அறிமுகமும் இல்லாமல் மேலைநாட்டு ஆய்வாளர் சிலர் (உதாரணம் ஆல்பர்ட் ஷ்வைட்ஸர்) சொன்ன மேலோட்டமான விமர்சனம் அது. அதை இங்கே நகல்குரல்களை எழுப்பும் இடதுசாரிகளும் நாத்திகர்களும் உரக்கக்கூவிக்கொண்டிருக்கிறார்கள்.

அத்வைதம் இந்த உலகவாழ்க்கை எந்தவகையிலும் பொய் அல்லது மாயை என்று சொல்லவில்லை. இங்குள்ள எதற்கும் அர்த்தமில்லை என்ற எதிர்மறைப்பார்வையை அது முன்வைக்கவில்லை.

தெளிவாக எடுத்த எடுப்பிலேயே அது வாழ்க்கை, பிரபஞ்சம் ஆகியவற்றைப் பற்றிய அறிதல்களை இரண்டாகப் பிரிக்கிறது. சாமான்யம்- விசேஷம். சாமான்யம் என்பது உலகியல். அந்த உலகியல் தளத்தில் தர்மம், அர்த்தம், காமம், மோக்ஷம் (அறம் ,பொருள் ,இன்பம், வீடு) என்னும் நான்குவகை விழுப்பொருட்களை (புருஷார்த்தங்களை) மனிதர்கள் கொள்ளவேண்டும் என்கிறது. அறநெறிகள் மற்றும் ஒழுக்கநெறிகளே தர்மம். புறவுலகம் சார்ந்த செல்வமும் அதிகாரமும் கடமைகளும் அர்த்தம். அகவாழ்க்கையாகிய காதல், குடும்பம் இரண்டும்தான் காமம். இவையனைத்தையும் துறந்துசெல்லுதல் வீடு.

இந்நான்குமே மனிதனுக்குத் தேவை என்றே வேதாந்த மரபு சொல்கிறது. அறம், பொருள், இன்பம் ஆகிய மூன்றையும் அந்தந்த காலகட்டத்தில் முறைப்படிச் செய்து, அவற்றின் இன்பதுன்பங்களை அடைந்து முதிர்வதே வாழ்க்கையாகும். ஒன்றை முழுமையாக அடைவது என்பது அதில் இருந்து விடுபடுவதும்தான். வயிறுநிறைய உண்டவர் உணவில் இருந்து விடுபடுகிறார். அவ்வாறு முதல் மூன்றில் இருந்தும் விடுபடுவதே வீடுபேறு.

ஈதல் அறம், ஈட்டல் பொருள்

காதலிருவர் கருத்தொருமித்து -ஆதரவு

பட்டதே இன்பம், பரனை நினைந்து இம்மூன்றும்

விட்டதே பேரின்ப வீடு.

(ஔவையார்)

மாயை பற்றிய உணர்வு, அதிலிருந்து ஆத்மஞானம், அதன் முடிவில் பிரம்மஞானம் என்பவை எல்லாம் விசேஷ தளத்தைச் சேர்ந்தவை. அன்றாட உலகியல் சார்ந்த உண்மைகள் அல்ல. அவற்றை பரமார்த்திகம், பரஞானம் என்றே எல்லா ஞானிகளும் சொல்கிறார்கள். ‘பர’ என்றால் ‘பிற’ என்று பொருள். அதாவது ‘வேறு’ ஞானம் அது.  நாம் வாழும் உலகியலை வேதாந்தம் வியவகாரிகம் என்கிறது. புழக்கவுலகம். நாம் அறியும் எல்லா உண்மையும் வியவகாரிக சத்யம், பரமார்த்திக சத்யம் என்னும் இரண்டு நிலையில் உள்ளன.

நாம் எவரும் ஒற்றை உண்மையில் வாழ்வதில்லை. உதாரணமாக இப்படிச் சொல்கிறேன். நாம் அனைவரும் இன்றைய நவீன இயற்பியல் சொல்லும் கொள்கைகளை ஒட்டியா இந்த உலகில் வாழ்கிறோம்? இயற்பியலின்படி நாம் வாழும் இந்த பொருள்வயப் பிரபஞ்சம் மூலகங்களால் ஆனது, மூலகங்ங்கள் மூலக்கூறுகளால் ஆனவை, மூலக்கூறுகள் அணுக்களால் ஆனவை. அணுக்கள் ஆற்றலின் துளிகள் அன்றி வேறில்லை. நம் உடலும் ஆற்றல் மட்டுமே. எதிரே உள்ள சுவரும் ஆற்றல்தான். அவ்வாறென்றால் நாம் ஏன் ஒரு சுவர் வழியாக அப்பால் செல்லமுடிவதில்லை?

இரண்டில் எது உண்மை? நம் உடல் ஒரு பொருள், சுவர் இன்னொரு பொருள், இரண்டுக்கும் எடையும் நிறையும் உள்ளன என்பது ஓர் உண்மை. இரண்டுமே வெறும் ஆற்றல்தான் என்பது இன்னொரு உண்மை. இரண்டு உண்மைகளும் ஒன்றையொன்று மறுப்பதில்லை. ஒரு பேருண்மையின் உள்ளே சிற்றுண்மை அமைந்துள்ளது. பரமார்த்திக உண்மையின் உள்ளே வியவகாரிக உண்மை அமைந்துள்ளது.

வியவகாரிக உண்மையில்தான் நாம் அனைவருமே வாழ்கிறோம், அதுவே நம்மால் செய்யக்கூடுவது. நாம் அனைவருமே உண்டு, உறங்கி, புணர்ந்து, குடும்பத்தைப் பேணி, உலகச்செயல்களில் ஈடுபட்டு, இன்ப துன்பங்களில் திளைக்கிறோம். இது வியவகாரிக உண்மை. ஆனால் பரமார்த்திக உண்மையையும் அறிந்திருப்பவர் வியவகாரிக உண்மையிலேயே இன்னும் ஒரு பங்கு தெளிவு உடையவர் ஆகிறார். கயிற்றுப் பாலத்தின்மேல் சமன் செய்து நடப்பவருக்கு ஒரு பிடிமானம் கிடைப்பதுபோன்றது அது. ஓர் உறுதிப்பாடு உருவாகிறது. இதைத்தான் வேதாந்தம் சொல்கிறது.

சித்பவானந்தர்

இப்படிச் சொல்கிறேன். இங்கே பணம் ஈட்டி, அதிகாரத்தை அடைந்து, காமத்தில் திளைத்து, குடும்பத்தைப் பேணி வாழ்கிறோம். நாம் வாழும் நகரிலுள்ள ஒரு கோடி வாழ்க்கையில் ஒன்று நம்முடையது. நம் சூழலில் உள்ள இயற்கையில் அந்த நகரமே ஒரு சிறு துளிதான். இந்த பூமியிலுள்ள இயற்கை என்பது சூரியனைச் சுற்றிவரும் கோள்களில் ஒன்றிலுள்ள ஒரு சிறிய நிகழ்வுதான். பலகோடி சூரியன்கள், பலகோடி பால்வழிகள் கொண்டது இந்தப்பிரபஞ்சம். நம்முடைய வெற்றிதோல்விகள், சுகதுக்கங்களுக்கு இந்தப் பிரபஞ்சத்தின் கணக்கில் என்னதான் அர்த்தம்? நாம் இருப்பதற்கும் இல்லாமலிருப்பதற்கும் ஏதாவது வேறுபாடு உண்டா என்ன?

நோய் வந்தால் நாம் பிரார்த்தனை செய்கிறோம். கடவுள் காப்பாற்றவேண்டும் என்கிறோம். நாம் சாப்பிடும் ஒரு ‘ஆண்டி பயாட்டிக்’ மாத்திரை நம் உடலுக்குள் பலகோடி பாக்டீரியாக்களையும் வைரஸ்களையும் கொன்று அழிக்கிறது. நம் வேண்டுதலுக்கு என்ன பொருள்? ஆனால் வேண்டிக்கொள்ளக்கூடாது என்றில்லை. அது வியவகாரிகம். அங்கே நாம் வேண்டிக்கொள்ளலாம். அதனால் நமக்கு ஓர் உறுதி கிடைக்கலாம். பாமரர் அந்த வியவகாரிகத்திலேயே மூழ்கிகிடப்பார்கள். ஆனால் ஞானம் தேடுபவர் அந்த பரமார்த்திகத் தளத்தையும் அறிந்திருப்பார். கொஞ்சமாவது வேதாந்த ஞானம் உள்ளவர் இந்த வேறுபாட்டை உணர்ந்திருப்பார்.

இதுவும்கூட ‘அரிய’ உண்மை எல்லாம் அல்ல. அனைவருக்கும் தெரிந்ததே. ஒரு சாவின்போது, ஓர் எதிர்பாராத பெருநிகழ்வின்போது நாம் அனைவருமே சட்டென்று வியவகாரிக உலகம் எந்த அளவு பொய்யானது, மாயையானது என உணரத்தான் செய்கிறோம். எந்தச் சாவுமே நமக்கு அந்த அர்த்தமின்மையை பயங்கரமாக விரித்துக் காட்டிவிடுகிறது. அதனால்தான் நாம் அலறி அழுகிறோம். ஆனால் உடனே மீண்டும் வியவகாரிக உலகுக்கு வந்துவிடுகிறோம். பரமார்த்திகத்தில் சாமானியர் முழுமையாக வாழமுடியாது.

ஆகவே, இந்த தெளிவை அடையுங்கள். இந்து மெய்ஞானம், அதன் சாராம்சமான வேதாந்தம், ஒருபோதும் உலகியலை நிராகரிக்கவில்லை. மாறாக உலகியலை மிகச்சிறப்பாகச் செய்வது எப்படி என்றுதான் அது பேசிக்கொண்டிருக்கிறது. இந்திய வேதாந்தத்தின் மையநூலான கீதை ‘செயல்புரிக’ என்றுதான் ஆணையிடுகிறது. அதன் முதல் அத்தியாயமான சாங்கிய யோகம் உலகியல் செயலை சிறப்புறச் செய்யவேண்டும் என்றுதான் சொல்கிறது.

சுவாமி பிரம்மானந்த சரஸ்வதி

ஒவ்வொரு உலகியல் செயலையும் அதற்கான மிகச்சிறந்த வழிகளின்படிச் செய்யவேண்டும். ஆனால் நம்மால் செயல்புரியவே முடியும், அதன் விளைவுகள் நம் கையில் இல்லை. ஆகவே செயலைச் செய்ய சிறந்த வழி செய்வதை சிறப்பாகவும் நிறைவுறும்படியும் செய்வதும், விளைவை காலத்தின் கையில் கொடுத்து விடுவதும்தான்- கீதை சொல்வது இதைத்தான்.  சிறப்பாக செய்யப்பட்ட செயல் கர்மயோகம். கர்மயோகம் என செய்யப்படும் செயல் அச்செயலில் இருந்து நம்மை விடுவிக்கிறது. அதிலிருந்து நாம் மேலும் முன்னகர்கிறோம்.

இந்த உலகியல் செயலைச்  சிறப்புறச் செய்ய அவசியமானது ஒன்று உண்டு. பிரபஞ்ச அளவில் நமக்கும் நம் செயலுக்கும் எல்லாம் என்ன அர்த்தம் என்ற ஒரு புரிதலும் நம்முள் இருப்பதுதான் அது. வியவகாரிகத்தைச் சிறப்பாகச் செய்வதற்கு பரமார்த்திகத்தில் ஒரு பிடி இருந்தாகவேண்டும் என்று ஆசிரியர்கள் மீண்டும் மீண்டும் சொல்கிறார்கள்.

நான் இடைவிடாமல் எழுதிக்கொண்டும், கற்பித்துக்கொண்டும், கற்றுக்கொண்டும் இருக்கிறேன். ஆனால் நான் இந்த பிரபஞ்சத்திலுள்ள ஒரு சிறு பாக்டீரியாவிடமிருந்து மேலானவன் அல்ல என்றும் அறிந்திருக்கிறேன். நான் செயலாற்றினாலும் செயலாற்றாவிட்டாலும் பிரபஞ்சத்தின் அளவில் அது ஒன்றுமே இல்லைதான். என் செயலுக்கு என்ன பயன் என்று என்னால் கணிக்கவே முடியாது. ஆனால் இச்செயலைச் செய்யவேண்டும் என்னும் உந்துதல் எனக்குள் உள்ளது. இதைச் செய்வதனால் நான் நிறைவை அடைகிறேன். ஆகவே செயலாற்றுகிறேன். ஆனால் இந்தச் செயலுடன்  உள்ளூர ஒட்டாமலும் இருந்துகொண்டிருக்கிறேன். பிரபஞ்சப்புரிதலையும் கொண்டிருக்கிறேன். அதுவே வேதாந்தம் சொல்லும் வழி. இரட்டை உண்மைகளில் வாழ்வதுதான் ஞானம் என்பது. ஒரு இயற்பியல் அறிஞனுக்கு அணுப்பிரபஞ்சம் தெரியும், அவன் வாழும் வீடும் தெரிந்திருக்கும். ஓர் உயிரியல் அறிஞனுக்கு மனித உடல் என்பது பலகோடி உயிர்களின் தொகுப்பு என்று தெரிந்திருக்கும். கூடவே மனைவிமக்களை நேசிக்கவும் செய்வான். அதுபோலத்தான்.

வேதாந்த மெய்ஞானத்தை கற்பதற்கு தமிழகத்தில் முதன்மை ஆசிரியர் சுவாமி சித்பவானந்தர்தான். குறைந்தது அவர் நூல்களையாவது வாசிக்கலாம். நான் சொல்லும் இந்த விஷயங்களை சுவாமி மிகமிக விரிவாகப்பேசியிருக்கிறார்.

ஜெயமோகன்

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on June 18, 2025 11:35

விஷ்ணுபுரம் சரவணன்

விஷ்ணுபுரம் சரவணன் முற்போக்கு அரசியல் பார்வையுடன் , சமூக உண்மைகளை சிறார் உணர்ந்துகொள்ளும் நோக்குடன் சிறார் இலக்கியம் படைப்பவர். குழந்தைகளுக்குரிய கற்பனையுலகை சமூக யதார்த்தங்களின் உருவகங்களாக மாற்றி கதைகளை எழுதுகிறார்.

விஷ்ணுபுரம் சரவணன் விஷ்ணுபுரம் சரவணன் விஷ்ணுபுரம் சரவணன் – தமிழ் விக்கி
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on June 18, 2025 11:33

காவியம் – 59

சுடுமண் சிலை. சாதவாகனர் காலம். பொயு1 பைத்தான் அருங்காட்சியகம்

”கதையை முடித்துவிட்டு, என் முன் கதைகேட்டு அமர்ந்திருந்த குணாட்யரிடம் நான் கேட்டேன்” என்றது கானபூதி. “குணாட்யரே, இரண்டு கேள்விகளை திரட்டிக் கொண்டிருக்கிறது இந்த நீண்ட கதை. ஒற்றைப்புள்ளி, ஒரு சிறு ரத்தத்துளி போல. அதிலிருந்து விரிந்து விரிந்து செல்கின்றது இந்தக் கதைகளின் தொடர். இதை என்னால் எங்குமே நிறுத்தமுடியாது. இந்தக் கேள்விகளில் இக்கதையை இப்போதைக்கு நிறுத்தியிருக்கிறேன்.”

“கேள்” என்று குணாட்யர் சொன்னார்.

“ஒரு குற்றத்திற்கான காரணம் நினைப்புக்கெட்டாத தொலைவில், தலைமுறைகளுக்கு அப்பால், வரலாற்றின் தொடக்கத்தில் இருக்கிறது. அவத் சம்ஸ்தானத்திற்குள் படையெடுத்து வந்து, அங்குள்ள வீடுகளுக்குள் நுழைந்து பெண்களை பிடித்து இழுத்துவந்து தெருவிலேயே நிர்வாணமாக ஆக்கி, அங்கேயே ஏலம் விட்டு, தங்களுக்குள் பிரித்துக்கொண்ட படைவீரர்கள் வரை இந்தக் கதை செல்கிறது. அங்கே நின்றிருந்த ஒவ்வொரு படைவீரனையும் தொடர்ந்து மேலும் மேலும் பின்னகர்ந்து செல்லமுடியும்… முடிவே இல்லை.”

“ஆம்”

“தன் செயல்கள் எதையும் மனிதன் எந்த வகையிலும் யோசித்து முடிவு செய்வதில்லை. ஏதேதோ உணர்வுகளால், எவரெவருடனோ கொண்ட மோதல்களால், என்னென்னவோ சூழல்களால் அவன் முடிவுநோக்கி செலுத்தப்படுகிறான். செயல்கள் மேல் மனிதர்கள் கால்தடுக்கி விழுகிறார்கள் என்று சொல்லலாம்” என்று  குணாட்யரிடம் கானபூதியாகிய நான் கேட்டேன். “அப்படியென்றால் மனிதர்களின் பிழைகளுக்கு அவர்களை எப்படி பொறுப்பாக்குவது? எவர் அவர்களுக்குத் தண்டனை அளிக்கும் உரிமை கொண்டவர்கள்?”

”கதைசொல்லி கேட்பது நேரடியான கேள்வி” என்றபடி ஆபிசாரன் குணாட்யரின் தோளைத் தொட்டுத் திருப்பியது. “ராதிகாவை கொலைசெய்த அஸ்வத்தை எவர் தண்டிப்பது? எந்த அடிப்படையில் அவர் தவறு இது என்று முடிவுசெய்வார்?”

குணாட்யர் உடலை நீட்டி சோம்பல் முறித்து “இந்தக் கேள்வி இந்தக் கதையில் மட்டும் உள்ளது அல்ல. கதைசொல்லிக்கே தெரியும், எந்தக் கதையிலும் இதுவே கேள்வி. தவறும் சரியும் காலஇடம் சார்ந்தவை, சார்புநிலை கொண்டவை. ஆனால் தண்டனையோ காலாதீதமானது, முழுமுதலானது. இன்று ஒரு சூழலில் நமக்குப் பிழை என தோன்றும் ஒன்றுக்காக ஒருவனைக் கொல்கிறோம், நாளை அது பிழையல்ல என்று ஆகிவிடுமென்றால் கொல்லப்பட்டவனை உயிருடன் மீட்கமுடியுமா? அப்படியென்றால் கொல்வதற்கு உரிமைகொண்டவன் யார்?”

நான் அவர் கையை மெல்லத்தட்டி “ஆம், என் கேள்வி அதுவேதான். இந்தக் கேள்வியத்தான் தஸ்தயேவ்ஸ்கி என்னும் எழுத்தாளர் அவருடைய கரமஸோவ் சகோதரர்கள் என்னும் உரைநடைக் காவியத்தில் கேட்கிறார்” என்றேன். “தொலைதூர நாடாகிய ரஷ்யாவைச் சேர்ந்தவர் அவர்…”

”அந்த மஹாசயருக்கு வணக்கம்” என்று குணாட்யர் சொன்னார். “அதைக் கேட்காமல் எந்த காவிய ஆசிரியனும் கதைகளை மேலே கொண்டுசெல்வதில்லை.”

“உன் பதில் என்ன குணாட்யரே?” என்றது சக்ரவாகி.

“இது நான் எழுதிய ஒரு குறுங்காவியத்தில் வரும் காட்சி. காவ்யபிரதிஷ்டான சபையில் நான் அரங்கேற்றிய வித்யாதர்ப்பணம் என்னும் அந்தக் காவியத்தில் ஒரு குற்றவிசாரணைச் சபை. அங்கே குற்றவாளி நின்றுகொண்டிருக்கிறான். மாபெரும் வாசாலகன் அவன். எதையும் பேசி நியாயப்படுத்திவிட முடியும் என்னும் ஆற்றல் கொண்டவன். ஏற்கனவே எல்லா சாட்சியங்களையும் அவன் அழித்துவிட்டான். அனைவரையும் தனக்குச் சாதகமாக நம்பவைத்துவிட்டான். நம்பிக்கையுடன் சிரித்துக்கொண்டே அவன் நின்றிருக்கிறான்” என்று குணாட்யர் சொன்னார். “அப்போது அரியணையில் தீர்ப்பு சொல்ல வந்து அமர்கிறான் அரசன். அவன் ஒரு கையில் வாள், மறு கையில் சமன்செய்து சீர்தூக்கும் தராசு. அவனைக் கண்டதும் குற்றவாளி திடுக்கிடுகிறான். அலறியபடி மயங்கி மண்டியிடுகிறான். ஏனென்றால் அந்த அரசன் அவனேதான்.”

“ஆம், தஸ்தயேவ்ஸ்கியும் அதையே கண்டடைந்தார்” என்று சொல்லி நான் அவரை தழுவிக்கொண்டேன்.  “அந்தக் காவியத்திலேயே அதை அவர் கண்டடைந்தார். குற்றமும் தண்டனையும் என்னும் இன்னொரு காவியத்திலும் அதையே சொல்கிறார்.”

“காவிய ஆசிரியர்கள் வெவ்வேறு விடைகளைச் சொல்வதே இல்லை” என்று குணாட்யர் சொன்னார். “புதிய ஒன்றை ஒருவன் சொன்னாலே அவன் மெய்மையை அறிந்தவனல்ல என்று பொருள். அறுதியான உண்மை என்பது மானுட உள்ளம் உருவானபோதே தானும் உருவானதாகவே இருக்கமுடியும். ஒரு காவிய ஆசிரியனின் மதிப்பு என்பது அவனுடைய காவியம் அதுவரையிலான அத்தனை காவியங்களுடனும் எப்படிச் சென்று இணைந்து ஒன்றாகிறது என்பதில் மட்டும்தான் உள்ளது. சொல்லில் பிறிதொன்றிலாமை, சொல்லப்படும் பொருளில் என்றுமுள தன்மை ஆகியவையே காவியங்களின் இலக்கணம். ’அனன்யவாக், அனந்ததர்சன:’ என்று நூல்கள் சொல்கின்றன.”

”இரண்டாவது கேள்வி” என்று நான் சொன்னேன். “ராதிகாவும் ராமும் கொல்லப்பட்ட செய்தியை கேட்டதும் அஸ்வத் முதலில் உணர்ந்தது என்ன?”

“முதலில், முதன்முதலில், முதற்கணம் அல்லது முதற்கணத்தில் ஆயிரத்தில் ஒரு பங்கில்…” என்று ஆபிசாரன் அவர் தாடையை பிடித்து திருப்பி ஆர்வத்துடன் சொன்னது.

குணாட்யர் “அதை நான் அரசர்களின் முகத்திலும் படைவீரர்களின் கண்களிலும் எத்தனையோ முறை கண்டிருக்கிறேன்” என்றார். “ஒரு கணம்தான். அந்தக் கணத்தின் முதற்பாதியில் ஓர் ஏமாற்றம்… வருத்தமோ கசப்போ அல்ல. இது அல்ல என்பது போன்ற ஓர் உணர்வு. அவ்வளவுதான். அக்கணத்தின் இரண்டாம் பாதியில் ஒரு நிறைவும் நிமிர்வும்.”

“ஆம்” என்று நான் சொன்னேன். மேற்கொண்டு எதையும் சொல்லாமல் கைகளைக் கட்டிக்கொண்டேன்.

“ஏன் அப்படி” என்று சொல்லி சூக்ஷ்மதரு குணாட்யரின் தோள்மேல் கவிந்தது.

“விலகி நில், அவர் சொல்வார்” என்றது அங்காரகன் என்னும் நிழல்.

கராளன் என்னும் நிழல் “அதை விளக்காவிட்டால் அவர் சொன்ன இந்த பதிலுக்கு என்ன பொருள் இருக்கமுடியும்?” என்றது.

“அதை என்னால் விளக்க முடியவில்லை. உலகியலில் எதை எய்தினாலும் முதற்கணம் இது அல்ல என்ற நிறைவில்லாமைதான் உருவாகிறது. ஆனால் ஒருவன் தன் எல்லைகளைக் கடந்துசென்று செய்யும், அல்லது செய்ய நேரிடும் வன்பழிகளின் போதும் அந்த நிறைவின்மை உணர்வு ஏன் உருவாகிறது?” என்றார் குணாட்யர். “அந்த உணர்வு தோன்றியதுமே மறைந்து ஏன் அந்த நிறைவும் களிப்பும் உருவாகிறது? ஏன் அதில் மானுடர் திளைக்கிறார்கள்?”

“பழிகளுக்குப் பின் அதைச்செய்த மனிதர்கள் துயருறுவதில்லையா? குற்றவுணர்ச்சி கொள்வதில்லையா?” என்று சக்ரவாகி கேட்டது.

”பெரும் பழிகளைச் செய்பவர்கள் அதை நோக்கி நெடுந்தூரம் வந்துவிட்டவர்கள்” என்று குணாட்யர் சொன்னார். “அவர்கள் அதை பலமுறை பலவகைகளில் தங்களுக்குள் நிகழ்த்திப் பார்த்திருப்பார்கள். அதன் உக்கிரம் முழுக்க முன்னரே நிகழ்ந்து விட்டிருக்கும். மெய்யாக நிகழ்வது ஒரு சலித்துப்போன பழைய நாடகம் போலிருக்கும்” அவரே உடனே “ஆனால் அந்த நிறைவின்மை என்பது அதனால் அல்ல. அது வேறொன்று” என்றார்.

“இரு கேள்விகளுக்கும் குணாட்யர் பதில் சொன்னார். ஆகவே அவரிடம் அவர் விரும்புவதை கேட்கும்படிச் சொன்னேன்” என்று கானபூதி பைதானின் மாளிகையில் செறிந்திருந்த காட்டில், இரவின் அமைதியில் என்னிடம் சொன்னது. “அவர் என்னிடம் கேட்டபடி குப்பையையும் மலர்களையும் அள்ளிச்செல்லும் பெரிய ஆறு போல ஆகிவிட்டிருந்த வியாசகாவியத்தின் எல்லா வடிவங்களையும் அவருக்குச் சொல்லிக் கொண்டிருந்தேன்.”

நான் கானபூதியைப் பார்த்துக்கொண்டு அமர்ந்திருந்தேன்.

“எத்தனை வடிவங்கள்… முடிவே அற்றவை. உக்ரசிரவஸின் சொற்களில் உருவாகி நினைவுக்குள் சென்றுவிட்டவை. அவை வெவ்வேறு பூசகர்களின் சன்னதங்களில் தோன்றின. கவிஞர்களின் கனவுகளாக எழுந்தன. ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக அவை கிளம்பி வந்துகொண்டே இருக்கின்றன. புதையுண்டதே பேராற்றல் கொண்டது. உக்ரசிரவஸின் காவியத்தில் இருந்து வியாசகாவியம் விடுதலையடையவே முடியாது.” என்றது கானபூதி.

“ஆமாம், நான் ஒவ்வொரு முறையும் புதிய கதையைக் கேள்விப்படுகிறேன்” என்று ஆபிசாரன் சொன்னது. “நிஷாதர்களின் கதையில் ஒன்றை நேற்று கேள்விப்பட்டேன். அஸ்வத்தாமனும் கிருபரும் அடங்காத சீற்றத்துடன் பாண்டவர்களின் பிள்ளைகளை கொல்வதற்காக போர்முடிந்து அவர்கள் தூங்கிக்கொண்டிருக்கும் பாடிவீட்டுக்கு வந்தார்கள். பாடிவீடுகளை கொளுத்த அஸ்வத்தாமன் அக்னிசரம் ஒன்றை வில்லில் தொடுத்தால் அது உடனே அணைந்தது. க்ஷத்ரியர்களுக்கும் பிராமணர்களுக்கும் அருள்புரியும் நூற்றெட்டு அக்னிகளும் அவர் அம்பில் குடிகொள்ள மறுத்துவிட்டன.”

ஆபிசாரன் தொடர்ந்து சொன்னது .“நீ ஏன் பலிகொள்ள விரும்புகிறாய்? அதற்கான காரணத்தைச் சொல். அதைக்கேட்டு எந்த தீ பற்றிக்கொள்கிறதோ அதைக்கொண்டு அந்தப் பாடிவீடுகளைக் கொளுத்து” என்று நூற்றெட்டு அக்னிகளில் முதல்வனாகிய அஜயன் சொன்னது. துரியோதனன் பீமனால் தொடையில் அறைந்து கொல்லப்பட்டதை அஸ்வத்தாமன் சொன்னபோது அபிமன்யூ எப்படிக் கொல்லப்பட்டான் என்று அஜயன் கேட்டது. துரோணர் ஏமாற்றிக் கொல்லப்பட்டதைச் சொன்னபோது அஜராயன் என்னும் இரண்டாவது தீ துருபதனின் சாவைப் பற்றிச் சொன்னது.

இறுதியாக, வனஸ்பதி என்னும் நூற்றெட்டாவது அக்னி திரௌபதி சபையில் சிறுமை செய்யப்பட்டதைச் சொல்லி வரமறுத்தபோது தீ எழாத அம்புகளுடன் அஸ்வத்தாமனும் கிருபரும் திகைத்து நின்றார்கள். அதன்பின் அவர்கள் தலையைத் தாழ்த்தியபடி திரும்பி நடந்தனர். அப்போது அஸ்வத்தாமனின் கால்பட்டு ஒரு கூழாங்கல் உருண்டது. அவன் குனிந்து பார்த்தபோது அது ஒரு கண் என்பதைக் கண்டான். அந்தக் கண் அவனை இமைக்காமல் பார்த்தது.

அந்த கண்ணுக்குரியவன் மண்ணில் இருந்து மண்ணாலான உடல்கொண்டவனாக எழுந்து வந்தான். தொடர்ந்து அவனுடைய சகோதரர்களும் தாயும் எழுந்து வந்தார்கள். ‘நீங்கள் யார்?’ என்று அஸ்வத்தாமன் கேட்டான்.

’நாங்கள் காட்டாளர்கள். எங்களை வாரணவதத்தில் அரக்குமாளிகையில் தூங்கவைத்து தீக்குக் கொடுத்துவிட்டு பாண்டவர்கள் தப்பிச் சென்றார்கள். எங்கள் அழல் அணையவில்லை. எங்கள் உடல் மண்ணில் மட்கினாலும் கண்மணிகள் மட்டும் இன்னும் அழியாமல் உள்ளன’ என்று அவர்கள் சொன்னார்கள்.

அஸ்வத்தாமன் அந்த ஐவரிடமும் ‘உங்கள் அழலை அழிக்கும் வழி இதோ. உங்கள் நெஞ்சின் தீயை இந்த அம்பில் கொளுத்துங்கள்” என்றான்.

அவர்கள் தொட்டதும் அவனுடைய ஐந்து அம்புகளில் அணையாத தீ பற்றிக்கொண்டது. அஸ்வத்தாமன் கையில் இருந்து அந்த அம்புகள் சென்று விழுந்து பாண்டவர்களின் மகன்கள் எரிந்து சாம்பலானார்கள். அந்தத் தீயில் ஐந்து காட்டாளர்களும் கரிய உருவாகத் தோன்றி சிரித்து கைவீசி கூத்தாடினார்கள்.

“விந்தையான கதை. அதைச் சொன்னவன் ஒரு நிஷாதகுலத்துக் கதை சொல்லி” என்றது ஆபிசாரன். “எஞ்சிய நிஷாதர்குலத்துத் தாயின் கண்கள் போர் முடிந்து குந்தியும் விதுரரும் குடியேறிய காட்டில் கிடந்தன. அவை குந்தியின் கனவில் தோன்றிக்கொண்டே இருந்தன. ஒருநாள் குந்தியின் கால்பட்டு இரு கண்களும் ஒன்றோடொன்று உரசிக்கொண்டன. தீ பிடித்து அந்தக் காடே எரிந்தது. குந்தியையும் விதுரரையும் அது பலிகொண்டது.”

என் தோளைப்பிடித்து திருப்பி சக்ரவாகி சொன்னது. “நான் பல்லாயிரம் கதைகளைச் சொல்ல முடியும். பீஷ்மர் காந்தாரத்தை வென்றார். அப்போது சகுனி சிறுவனாக இருந்தான். பீஷ்மர் சகுனியின் மொத்தக் குடும்பத்தையும் ஒரு குகையில் போட்டு அடைத்து, ஒருவருக்கு மட்டுமே போதுமான உணவைக் கொடுக்க ஆணையிட்டார். அந்த உணவை அனைவரும் சேர்ந்து சகுனிக்கு மட்டுமே கொடுத்து அவரை உயிவாழச் செய்தனர். அவர் தன் தந்தையின் சுட்டுவிரல் எலும்பை பகடைக்காயாக எடுத்துக் கொண்டு வெளியே வந்து அதை வைத்து பீஷ்மரின் குலத்தையே அழித்தார்.”

“சிகண்டிக்கு காமம் நூறுமடங்கு. ஆறுமாதம் ஆண், ஆறுமாதம் பெண். ஆணாக இருந்து ஆணையும் பெண்ணாக இருந்து பெண்ணையும் அறிந்தவனாதலால் காமத்தில் அவனுக்குத் தெரியாத ஒன்று இல்லை” என்று சியாமன் சொன்னது. “இதேபோன்று எத்தனை கதைகள். பாண்டவர்கள் பதினான்கு ஆண்டு காட்டில் அலைந்தபோது இந்திரப்பிரஸ்தத்தையும் பாண்டவர்களின் குழந்தைகளையும் பார்த்துக்கொண்டவன் துரியோதனன். அவன் மடியில் வளராத ஒரே உபபாண்டவன் அபிமன்யூ. ஆகவே அபிமன்யூ தவிர எவரையுமே கொல்ல துரியோதனன் ஒப்புக்கொள்ளவில்லை. ஆனால் பாண்டவர்கள் உபகௌரவர்கள் அனைவரையுமே கொன்றார்கள்.”

கராளன் என்னும் நிழல் சொன்னது “அங்கே நாகர்களின் நிலத்தில் உள்ள வியாச காவியக் கதையில் கதைநாயகனே வாசுகிதான். அவன் ஒவ்வொருநாளும் பாண்டவர்களின் அரண்மனைக்குள் ஒரு துளையில் இருந்து சிறுபுழுவாகத் தோன்றி விஸ்வரூபம் எடுக்கிறான். தன் மீசையின் ஒரு முடியால் அர்ஜுனனை கைகால்களை கட்டிப்போட்டுவிட்டு திரௌபதியை புணர்ந்து செல்கிறான். திரௌபதி உட்பட பாண்டவர்கள் பெற்ற எல்லா பிள்ளைகளும் வாசுகியின் ரத்தம்தான்.”

“சிசுபாலன் இறந்தபின் ஆவியாக வந்து கிருஷ்ணனின் சக்கரத்தைப் பிடித்துக் கொண்டான். கிருஷ்ணனால் தன் சக்கராயுதத்தை அசைக்கவே முடியவில்லை. ஆகவே சிவனை வணங்கினான். சிவன் அருளால் தன் சக்கரத்தில் சிசுபாலன் இருப்பதைப் புரிந்துகொண்டான். ’உனக்கு என்ன வேண்டும்?’ என்று கேட்டான். ‘இந்தச் சக்கரத்தில் என் ரத்தம் இருக்கிறது. நான் ஆயுதம் ஏந்தாதபோது உன்னால் கொல்லப்பட்டேன். என் ரத்தம் யாகசாலையில் விழுந்தது. உன்னை நான் விடப்போவதில்லை’ என்று சிசுபாலன் சொன்னான்” என்று சூக்ஷ்மதரு சொன்னது.

“இந்தக்கதையை கலிங்கத்தில் சொல்கிறார்கள்” என்று அது தொடர்ந்தது. “கிருஷ்ணன் சிசுபாலனிடம் மன்னிப்பு கோரினான். சிசுபாலன் கடைசியில் மன்னிக்க முடிவுசெய்தான். ’ஆனால் உன் சக்கரத்திலும் இனி எல்லா சக்கராயுதங்களிலும் நானே இருப்பேன். நூறு முறைக்கு ஒருமுறை சக்கரத்தின் திசையை நான் என் விருப்பப்படி மாற்றுவேன். நினைத்தவர்களை பலிகொள்வேன். வீசியவன் தலையை வேண்டுமென்றாலும் அறுப்பேன்’ என்று அவன் சொன்னான். கிருஷ்ணன் அதற்கு ஒப்புக்கொண்டான். அப்படித்தான் சக்கரம் அத்தனை அபாயமான ஆயுதமாக ஆகியது. வீசியவர்களின் கழுத்தையும் அவ்வப்போது அறுக்கத் தொடங்கியது.”

“திரௌபதி துலுக்காணத்தம்மன் என்ற சீற்றமே அடங்காத தெய்வமாக தெற்கே மகேந்திரமலை என்ற ஊரில் தோன்றினாள். அவளுக்கு நூற்றியொரு பூதகணங்கள் அமைந்தன. அந்தப் பூதங்கள் ஒவ்வொரு அமாவாசையிலும் ஊருக்குள் போய் மனிதர்களைப் பிடித்து வந்து தங்கள் தெய்வத்திற்கு பலிகொடுத்தன. நூற்றெட்டு குடம் ரத்தத்தால் அம்மனின் சிலை குளிப்பாட்டப்பட வேண்டும் என்பது வழக்கம். மகன்களை இழந்த தாய்மார்கள் அலறி அழுது ஓலமிட்டார்கள். அந்த ஓசைதான் திரௌபதிக்கான பாமாலை” என்று பிரீதன் என்னும் நிழல் சொன்னது.

“இந்தக் கதையை நான் தட்சிணத்தில் கேட்டேன். பாண்டவர்களும் அவர்களில் பிறந்த  உபபாண்டவர்களும், திரௌபதியை சபையில் ஆடைகளை களைந்தபோது அவளுடைய ஐந்து கணவர்கள் உட்பட அங்கே அமர்ந்திருந்தவர்களும், அந்தக் கதையை கேட்டவர்களும் அனைவரும் மீண்டும் மீண்டும் பிறந்து திரௌபதியால் பலிகொள்ளப்படுபவர்கள். ஆயிரத்தெட்டு முறை அப்படி பலிகொண்டால்தான் திரௌபதியின் தாகம் அடங்கி அவள் வானத்திற்குத் திரும்பிச் செல்வாள் என்று சிவன் ஆணையிட்டிருந்தான். அந்த நூற்றொன்று பூதங்கள் நூறு கௌரவர்களும் ஜயத்ரதனும். தலைமைப் பூதம் துரியோதனன். அவள் காலடியில் கைகூப்பி அமர்ந்திருந்த நாகம்தான் கர்ணன்” என்றது பிரீதன்.

“தெற்கே அல்லி என்னும் அரசி அர்ஜுனனை தோற்கடித்து தூக்கிச் சென்று திருமணம் முடித்துக்கொண்டு அவனை அடிமையாகவே வைத்திருந்தாள் என்று ஒரு கதை உள்ளது” என்றது கிரீஷ்மன் என்னும் நிழல். “தன் ஏழு சகோதரர்களைக் கொன்றதற்காக பீஷ்மர் குருவம்ச இளைஞர்களை கொன்றழித்தார் என்று இன்னொரு கதை. அம்பை வில்லில் அவர் தொடுத்ததும் அவருடைய ஏழு சகோதரர்களும் வந்து அம்பறாத்தூளியில் அமைந்தனர் என்கிறது அந்தக் கதை.”

“போதும்” என்று கானபூதி சொன்னது. “கதைகளுக்கு முடிவில்லை. நான் உனக்கு வியாசகாவியத்தையும் அது எங்கிருந்தெல்லாம் முளைத்ததோ அந்த வேர்கள் அனைத்தையும் அதன் விதைகள் எங்கெல்லாம் முளைக்கின்றனவோ அந்த தளிர்கள் அனைத்தையும் சொல்கிறேன். இந்த பைசாசிகக் காட்டின் ஒவ்வொரு மணல் பருவுக்கும் ஆயிரம் கதைகள் உள்ளன…”

“நான் கேட்ட கேள்வி அப்படியே உள்ளது” என்றேன்.

“நீ கேட்டாயா அல்லது குணாட்யர் கேட்டாரா?” என்றது கானபூதி.  “இரு அவர் அந்தப் பக்கம் காத்திருக்கிறார். அவரிடம் ஒரு வார்த்தை கேட்டுவிட்டு வருகிறேன்” மறைந்து மீண்டும் தோன்றி “ஆச்சரியம்தான் இருவரும் ஒரே கேள்வியைத்தான் கேட்டிருக்கிறீர்கள்” என்றது.

“சொல்” என்று நான் சொன்னேன்.

”இது வடக்கே இமையமலையடிவாரத்தில் கடோத்கஜனை தெய்வமாகக் கும்பிடும் ஒரு இனத்தவர் சொல்லும் கதை” என்றது கானபூதி. “வியாச காவியம் சொல்லும் அந்த மாபெரும் போர் நடந்து முடிந்துவிட்டது. பாண்டவர்கள் ஆட்சி செய்து முதியவர்களாக ஆகி மறைந்துவிட்டார்கள். அவர்களை வானத்தில் இருந்து புஷ்பவிமானம் வந்து கூட்டிச்சென்று எமதர்மனின் உலகுக்குள் நிறுத்தியது. எமன் அங்கே தன்னுடைய நியாயபீடத்தில் அமர்ந்திருந்தார். பாண்டவர்களை அங்கே கொண்டுசென்று நிறுத்தினார்கள்.”

ஒவ்வொருவரிடமாக அவர்களின் பாவங்களை எமனின் தூதர்கள் சொன்னார்கள். துரியோதனனை தன்னை விட கீழானவனாகவும், தன்னை தூய்மையானவனாகவும் நினைத்த குற்றம் யுதிஷ்டிரனுக்கு. அவன் தன் மகன்களை இழந்ததாலும், வெற்றி பெற்ற அரசை கைவிட்டு யுயுத்சுவுக்கு அளித்ததனாலும் மன்னிக்கப்பட்டான். அவனை சொர்க்கத்திற்கு அனுப்பினார்கள். அறம் மீறி பீஷ்மரையும் துரோணரையும் கர்ணனையும் கொன்ற குற்றம் அர்ஜுனனுக்கு. அவன் கீதையைக் கேட்டதனாலும், அரசப்பொறுப்பு எதையும் ஏற்காததனாலும் கழுவாய் செய்துவிட்டான் என்று சொர்க்கத்திற்கு அனுப்பப்பட்டான்.

நகுலன் அவன் மருத்துவம் பார்த்த ஆயிரம் குதிரைகளின் வாழ்த்து அளித்த புண்ணியத்தால் சொர்க்கத்துக்குப் போனான். சகாதேவன் சாஸ்திர நெறியை மீறாமல் நல்ல நேரத்தை துரியோதனனுக்குச் சொன்னதனால் சொர்க்கத்துக்குப் போனான். மண்ணுக்கு ஆசைப்பட்டு போரை உருவாக்கிய திரௌபதி அந்த செயலுக்காக தன் பிள்ளைகளை எல்லாம் பலிகொடுத்ததனால் சொர்க்கத்துக்கு அனுப்பப்பட்டாள். அவள் தன் பிள்ளைகளை நினைத்துக் கண்ணீர் விட்டு அழுதபடி சொர்க்கத்துக்குச் சென்றாள்.

சபை நடுவே பீமன் மட்டும் நின்றான்.  “நீ உன் குலாந்தகன். உன் உடன்பிறந்தவர்களைக் கொன்றாய்.  மகன் முறை கொண்டவர்களைக் கொன்றாய். ஆனால் உன் மகன்களை இழந்தாய். போரில் வென்று நீ எதையுமே அடையவுமில்லை. ஆகவே உன் பழிகள் எல்லாம் பிராயச்சித்தம் செய்யப்பட்டன. ஒன்றே ஒன்று தவிர…” என்று எமதூதன் சொன்னான். “நீ துச்சாதனனின் ரத்தத்தைக் குடித்தாய். மனிதனின் ரத்தத்தை மனிதன் குடிப்பதை ஏற்கவே முடியாது. அதற்கு பிராயச்சித்தமே இல்லை. நீ நித்யநரகத்துக்குத்தான் போயாகவேண்டும்.”

பீமன் கண்களை மூடி தன் தமையனாகிய ஆஞ்சநேயரை நினைத்தான். ”அண்ணா என்னை காப்பாற்றுங்கள், நான் சொல்லவேண்டியது என்ன?” என்று கேட்டான். அவன் மனதுக்குள் தோன்றிய அனுமார் சொன்னதை அவன் அப்படியே எமனின் சபையில் சொன்னான். “நான் துச்சாதனனின் ரத்தத்தைக் குடித்தது உண்மை. ஆனால் அப்படி நான் குடித்தபோது அதைப் பார்த்துக்கொண்டிருந்தவர்களில் வாயில் எச்சில் ஊறாத ஒருவராவது இருந்தால் என்னை நரகத்துக்கு அனுப்புங்கள்.”

எமன் திகைத்துவிட்டான். அவன் சித்ரபுத்திரனை நோக்கி திரும்ப அவர் ‘ஒருவரும் இல்லை’ என்று கையை காட்டினார்.

எமன் ஒன்றும் பேசாமலிருப்பதைக் கண்டு ”அப்படியென்றால் என்னுடன் பிரம்மனையும் நரகத்துக்கு அனுப்புங்கள்”  என்று பீமன் சொன்னான்.

”நீ சொர்க்கத்துக்குப் போ. இந்த சபையில் இதற்குமேல் விசாரிக்க அனுமதி இல்லை” என்று எமன் சொன்னான். அவ்வாறாக பீமன் தன் சகோதரர்களுடன் சொர்க்கத்துக்குப் போனான்.

கானபூதி சொன்னது. “இந்தக் கதையை நான் ஒரே சமயம் இரண்டுபேருக்குச் சொல்லிக் கொண்டிருக்கிறேன். மறுபக்கம் இந்தக்கதையை குணாட்யர் கேட்டுக்கொண்டிருக்கிறார்.”

”மகாசயருக்கு என் வணக்கம்” என்று நான் சொன்னேன். ”இந்தக் கதையில் திரண்டு வரும் கேள்வி என்ன?”

கானபூதி “பீமனுக்கு துச்சாதனனின் ரத்தம் ஏன் இனித்தது?” என்றது. “இருவரிடமும் அதைத்தான் கேட்கிறேன்”

“அது பீமனின் சொந்த ரத்தம்” என்று நான் பதில் சொன்னேன். “அத்தனைபேரும் அறிந்த ரத்தச்சுவை என்பது அதுதான். சுவைகளிலேயே இனியது அது. தனித்திருந்து மனிதர்கள் சுவைத்துச் சுவைத்து உண்பது”

“ஆமாம், சரியான பதில்தான்” என்றூ கானபூதி சொன்னது.

“அவர் சொன்ன பதில் என்ன?” என்று நான் கேட்டேன்.

“அது இந்தக் காலத்திற்குரிய பதில் அல்ல, அதை நீ அறியமுடியாது.” என்று கானபூதி சொன்னது. “நீ என்னிடம் கேள்வி கேட்க உரிமை உடையவன்.”

“தொடையில் அடிபட்டு குளத்தின் கரையில் சாகக்கிடக்கும்போது துரியோதனன் தான் ஏதேனும் பிழையைச் செய்ததாக உணர்ந்தானா?” என்று நான் கேட்டேன்.

“அவன் ஓர் அரசன். அரசனுக்குரிய கடமை என்பது நிலத்தை வெல்வதும், அதை ஆள்வதும், அதற்காகப் போர்புரிவதும். அதைத்தான் அவன் செய்தான். திரௌபதியை அவன் சபையில் அவமதித்ததுகூட அவள் பெண் என்பதனால் அல்ல, பங்காளி நாட்டின் அரசி என்பதனால்தான். ராஜதர்மப்படி அவன் பிழை என்று எதையுமே செய்யவில்லை. மண்ணில் வாழ்ந்த காலம் முழுக்க அவன் அப்படி எந்தப் பிழையையும் உணரவுமில்லை” என்றது கானபூதி.

“ஆம், ஆனால் உடலில் இருந்து ரத்தம் வெளியேறும்போது ரத்தத்தில் கலந்திருந்த ஒவ்வொன்றாக வெளியே செல்கின்றன. முதலில் பெண்ணாசையும் பின் மண்ணாசையும் விலகுகிறது. மக்கள் மீதான ஆசை அதன்பிறகு வெளியே செல்கிறது. புகழ் மீதான ஆசை அதைத் தொடர்ந்து விலகிச் செல்கிறது. தான் என்ற எண்ணமும் தன்னடையாளமும் விலகுகின்றன. மண் அவனைக் கைவிடுகிறது, விண் அருகே வருகிறது என்கிறார்கள். அந்த சுக்ஷுப்தி நிலையில் அவன் உணர்ந்தது என்ன? பிழை என எதையாவது அவன் அறிந்தானா?”

”அதற்கு நான் விரிவான பதிலைச் சொல்கிறேன். கேள்” என்று கானபூதி சொல்லத் தொடங்கியது.

(மேலும்)

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on June 18, 2025 11:33

கவிதைகள் இதழ் ஜூன்

அன்புள்ள ஜெ,

ஜூன் மாத கவிதைகள் இதழ் வெளிவந்துள்ளது. இவ்விதழில் சந்தப்பாடல்கள் குறித்து ‘பொருளின்மையின் துள்ளல்’ என்ற கட்டுரையை தாமரைக்கண்ணன் எழுதியுள்ளார். க.நா.சு கட்டுரை தொடரின் பகுதியாக ‘எது இலக்கியம்’ என்ற விமர்சனக் கட்டுரை வெளிவந்துள்ளது. கமலதேவி சுகந்தி சுப்ரமணியன் கவிதைக் குறித்து ‘மொழி கைவிடாத இருள்’ என்ற தலைப்பில் வாசிப்பனுபவம் எழுதியுள்ளார். தேவதேவனின் கவிதையின் மதம் கட்டுரை தொகுப்பின் ஒரு பகுதியான ‘குழந்தைமையும் மேதைமையும்’ என்ற கட்டுரையுடன், சில தமிழ் கவிதைகள் பகுதியில் விக்ரமாதித்யனின் கவிதைகள் இடம்பெற்றுள்ளன.

https://www.kavithaigal.in/

நன்றி

ஆசிரியர் குழு

(மதார், ஜி.எஸ்.எஸ்.வி. நவின்)

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on June 18, 2025 11:32

Mani Ratnam- A letter

That conversation with Mani Ratnam is interesting. Mani Ratnam is very cautious as usual, but he is expressing his ideas with the utmost politeness.

Mani Ratnam- A Letter

கார்ப்பரேட் சூழலில் இதற்கிணையான ‘சுய ஊக்கச் சொற்பொழிவுகள்’ நிறையவே நடக்கும். ஊழியர்களுக்கு ஊக்கம், செயல்திறமை ஆகியவற்றை அளிப்பதற்கான பயிற்சிகள் ஏராளமாகவே உண்டு. அவற்றை அளிக்கும் நிபுணர்களும் பலர் உள்ளனர். அவர்கள் பல லட்சம் சம்பாதிப்பவர்கள். 

இந்தக் காணொளிகள்

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on June 18, 2025 11:30

விஷ்ணுபுரம் சரவணன் -பாலபுரஸ்கார்

சிறார் எழுத்தாளர் விஷ்ணுபுரம் சரவணன் ஒற்றைச் சிறகு ஓவியா என்ற தனது குழந்தைகள் படைப்புக்காக இந்த ஆண்டுக்கான சாகித்ய பால புரஸ்கார் என்னும் குழந்தை இலக்கிய விருது பெறுகிறார்.

வாழ்த்துக்கள்

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on June 18, 2025 03:44

June 17, 2025

தனிமையும் ஏகாந்தமும்

கொஞ்சம் சிந்திக்கும் ஒருவர் இயல்பாகவே ஒரு தனிமை கொண்டிருப்பார். சாதாரணமாக அதை பிறர் புரிந்துகொள்வதற்கும் அவர் உணர்வதற்கும் பெரிய வேறுபாடு உண்டு. தனிமை வேறு, ஏகாந்தம் வேறு. ஆண்டனி ஸ்டோர் என்னும் உளவியலாளர் அதைப்பற்றிப் பேசியிருக்கிறார். அவரை முன்வைத்து ஒரு சிறு உரை.

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on June 17, 2025 11:36

மழைக்குப்பின்…

இரவெல்லாம் மழைபெய்து ஓய்ந்திருக்கும் காலையில் நடைசெல்வது குமரிமாவட்டத்திற்கு உரிய தனி அனுபவம் என எண்ணிக்கொண்டிருக்கிறேன். பிற ஊர்களிலும் மழை பெய்கிறதுதான், ஆனால் மழைக்குப்பின் சாக்கடை வழியும் தெரு வழியாக நடப்பது அப்படியொன்றும் இனிய அனுபவம் அல்ல. இங்கே பத்தடி தள்ளிச் சென்றால் மனிதக்காலடி படாத மண் வழியாகச் செல்லமுடியும். பச்சை பொலிந்த சூழலை, மேகக்கருமை இறங்கிய மலைகளை பார்த்துக்கொண்டு நடக்கமுடியும்.

இளமைமுதல் இருந்து வரும் ஒரு பரவசம் இது. காலையில் மழைக்குப் பிந்தைய மண்ணில் மணல் பொரிந்திருக்கும், மழைச்சரடுகளின் அடியால் கரைக்கமுடியாத மணல்துளிகள். நடுவே மண்ணின் மூடிய உதடு ஒன்று செந்நிறமாக. இரவெல்லாம் மழைகுடித்து நிறைந்துவிட்ட மண்ணின் புன்னகை அதில் இருப்பதுபோலத் தோன்றும். அந்த மென்மணல் பொருக்கை மனிதன் தோன்றுவதற்கு முந்தைய மண்ணாக எண்ணிக்கொள்ளலாம். அல்லது நாம் சென்றிறங்கும் புத்தம்புதிய கோள். நம் காலடி படும்போது மண்ண்ணின் பொருக்கு மெல்ல ஓசையுடன் அழுந்துகிறது. ஒரு மென்மையான பதிவு. ஒரு முத்தம், ஓர் ஒப்பந்தம்.

மழைக்குப்பின் பெயர் தெரியாத சிறுசெடிகள் அடைந்திருக்கும் நிறைவைப் பார்க்கையில் எப்போதுமே பரவசம்தான். நின்று நின்று ஒவ்வொரு செடியையாகப் பார்த்துச்செல்லவேண்டும் என நினைப்பேன். ஆனால் என்றும் எவரும் பார்க்காமலேயே அச்செடிகள் தழைத்துப் பூத்து நிறைந்து மறைந்து கொண்டிருக்கின்றன. அவற்றுக்கு பொதுப்பேச்சில் பெயர்கள்கூட இல்லை. தாவரவியல் பெயர்கள்கூட இன்னொரு செடியின் பெயரில் இருந்து சற்று நீட்டப்பட்டவையாக இருக்கும். சின்னஞ்சிறு செடிகள், மிகச்சிறிய மலர்கள், மிகச்சிறிய தளிர்கள். மழையில் தண்டிலும் சாறு நிறைந்த மிளிர்வு.

நான் இதைக் கண்டிருக்கிறேன், வயிறுமுட்டச் சாப்பிட்டபின் குழந்தைகளிடம் இந்த தளர்வான நிறைவு இருக்கும். இளமையில் நாடோடியாக அலையும்போது ஒருமுறை ஒரு குடிசைக்குழந்தை சாப்பிட்டு உப்பிய தன் வயிற்றை தானே வருடி வருடி மகிழ்ந்ததைக் கண்டு சாலையோரம் அமர்ந்து கண்ணீர்விட்டு அழுதியிருக்கிறேன்.

மழையில் மலைகள் கொள்ளும் மௌனத்தை பார்த்துக்கொண்டு நின்றிருந்தேன். முகில்கள் இங்கே வானமே பெரிய திரையாக சரிந்திறங்கியது போல மலைகளை மூடியிருக்கின்றன. காற்று அந்த மாபெரும் திரையை அள்ளி ஒருபக்கமாக சுருக்கி அகற்ற, மலை தெளிந்து வருகிறது. மடம்புகளிலெல்லாம் பசுமை பொலிந்த மலை. நுரைபோல வழிந்திறங்கிய பசுமை. குளிர்ந்து சிலிர்த்த எருமையின் உடல் போன்ற கருமையின் மெருகுடன் பாறைகள். மலைகளை அப்போது பார்க்க ஏதோ பெருமுரசு ஒன்றின் ஓங்கார முழக்கமே பருவடிவம் கொண்டது போலிருக்கும்.

மழைக்குப் பிந்தைய பசுமை எங்கும் நிறைந்திருக்கிறது. வேறெந்த வண்ணமும் கண்ணை நிறைத்தால் சட்டென்று திகட்டிவிடும். பசுமை மட்டும் கண் வழியாக அகத்தை நிரப்பி, ஒருபோதும் நம்மில் நிறைவடையாத எதையோ நிறைத்துவிடுகிறது. நம்மை எடுத்துத் தன்னுள் வைத்துக் கொள்கிறது. மிச்சமில்லாமல் நாம் இருக்கும் தருணங்கள் எல்லாமே பச்சைப்பசும் வெளியில் தனிமையில் இருக்கும் பொழுதுகள்தான். நாம் ஓர் எளிய விலங்கு, ஓரு சிறு உயிர், அதற்கப்பால் நாமென நாம் உணர்வதெல்லாம் நம் ஆணவம் மட்டுமே என அறியும் தியானங்கள் அவை.

மழை திரண்டு நின்றிருக்கும் வானத்தின் கீழ் தென்னைகள் அசையாமல் நின்றிருப்பதை ஒரு மாபெரும் பிரார்த்தனை என்றே எண்ணிக்கொள்கிறேன். வாழைகளும் தென்னைகளும்தான் நீருக்காக அத்தனை பிரார்த்தனை செய்கின்றன. அவற்றின் உடலே நீராலானதுதான். பௌத்த மரபில் யானை நீராலானது. புலி நெருப்பாலானது. குதிரை காற்றாலும், செம்பருந்து வானத்தாலும் ஆனது. நிலத்தாலானது பாம்பு. தாவரங்களில் ஆலமரம் வானத்தாலானது. பலா மண்ணாலானது. கொன்றை நெருப்பு. சவுக்கு மரங்கள் காற்றாலானவை. நீர் நீர் என்று தென்னை தவித்துக் கொண்டே இருக்கிறது. இதோ நீர் என முகிலைப் பார்த்துத் தோகைவிரித்து நின்றிருக்கிறது.

திரும்பிவரும் வழியில் முகில்வாசல் திறந்தது. மென்மையான ஒளி கொண்ட சூரியன். குளிப்பாட்டப்பட்ட குழந்தைகளுக்குரிய சருமமெருகுடன். தண்டவாளத்தின் மேல் நின்று பார்த்துக்கொண்டிருந்தேன். ஒவ்வொரு நாளும் கண்முன் தெய்வம் தோன்றுவது என எண்ணினார்கள் முன்னோர். சவிதா. வரந்தருபவன். ஆதவன், அதுவேயானவன். மழைக்காலச் சூரியன் வேறொன்று. நீருக்குள் போடப்பட்ட வைரம். முகில்கள் படிகமாளிகைகள் போலச் சுடர்விடத்தொடங்கின.

பின்பு மெல்ல வாசல் மூடியது. முகில்களின் வழியாக ஒளி, மெல்லிய திரைக்கப்பால் தீபம் போல கதிர். தாந்த்ரீக பூஜை அல்லது வைகானச பூஜை நிகழும் ஆலயங்களில் முதல்நடை திறந்தபின்னர் மீண்டும் மூடிவிடுவார்கள். உள்ளே தந்த்ரி ஆத்மமந்திரம் அல்லது புருஷமந்திரம் சொல்லி தன்னையே பிரம்மம் ஆக ஆக்கிக்கொள்வார். அந்த பிரம்மப்பிரசன்னத்தை தன் மூச்சுக்காற்றால் ஊதி விக்ரகத்தை பிரம்மஸ்வரூபமாக ஆக்குவார். இப்போது உள்ளே அதுவே நிகழ்கிறது.

மெல்லிய மின்னல். மந்திரஸ்தாயியில் இடியோசை. தத்த, தய, தம. மீண்டும் மீண்டும் அந்த ஓசை. காற்றில் மழைத்துளிகளின் ஈரத்தை உணரமுடிகிறது. அத்தனை தாவரங்களும் சிலிர்த்துக்கொண்டன. நான் வானை நோக்கி நின்றிருக்கையில் சட்டென்று தொலைவில் இருந்து ஒரு பெரும் தூரிகை விசையுடன் வந்து வருடிச்செல்வதுபோல மழை. குளிர்ந்த பீலிகள் என்னை முழுமையாக மூடிக்கொண்டன.

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on June 17, 2025 11:35

சுரதா

சுரதா

சுரதா தமிழ் கற்பனாவாதக் கவிதை மரபின் ஆளுமைகளில் ஒருவர். பாரதிதாசன் மரபைச் சேர்ந்தவர். யாப்பில் அரசியல் கருத்துக்களையும் சமகாலச் செய்திகளையும் கூறுபவை பெரும்பாலான கவிதைகள். மரபான உவமை போன்ற அணிகளும் கூறுமுறையும் கொண்டவை. திராவிட இயக்க அரசியல் சார்புடைய சமூகநோக்குக் கவிதைகள் பலவற்றை எழுதியிருக்கிறார்.

சுரதா சுரதா சுரதா – தமிழ் விக்கி
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on June 17, 2025 11:33

Jeyamohan's Blog

Jeyamohan
Jeyamohan isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow Jeyamohan's blog with rss.