Jeyamohan's Blog, page 71
June 24, 2025
இன்றைய கதைகளின் சித்தரிப்புச் சிக்கல்கள்
அண்மையில் ஓர் இலக்கிய இதழில் ஒரு போட்டியின் பொருட்டு வெளியிடப்பட்டிருந்த சிறுகதைகளை ஒன்றன்பின் ஒன்றாக படித்துக்கொண்டிருந்தேன். ஏற்கனவே எனக்கு இருந்த ஓர் அவதானிப்பு அக்கதைகளைப் படித்தபோது மேலும் வலுப்பெற்றது. அக்கதைகளில் புதியதாக எழுதுபவர்கள் மற்றும் இன்னமும் எழுதித் தேறாதவர்கள் செய்யும் சில குறிப்பிட்ட பிழைகள் பொதுவாக இருந்தன. இவற்றை சுட்டிக்காட்டுவதென்பது ஒருவேளை தொடர்ந்து கதைகளை எழுத முயல்பவர்களுக்கு உதவலாம்.
கதைகளை எழுத முயல்பவர்களிடம் எப்போதும் ஒரு எதிர்ப்புவிசையும் இருக்கும். அது இயல்பானது ,அவசியமானது .அதுவே அவர்களுடைய தனித்தன்மையை தக்கவைக்க உதவுவது. ஆனால் இத்தகைய கதைத் தொழில்நுட்பங்களை தெரிந்துகொண்டு எழுதுவதென்பது தாங்கள் எழுதுவதை தாங்களே புறவயமாகப் பார்ப்பதற்கும், தங்கள் எழுத்தை தொழில் நுட்பரீதியாக மேம்படுத்திக் கொள்வதற்கும் உதவும்.
முதலில் கதையின் தொழில் நுட்பம் எந்த அளவுக்கு முக்கியம் என்பதை தெளிவுபடுத்திக்கொள்ள வேண்டும்.
கதை என்பது இரண்டு நிலைகள் கொண்டது. முதல் நிலையில் அது ஒருவகையான எடுத்துரைப்புத் தொழில்நுட்பம்தான். ஓர் உணர்வை , ஒரு கருத்தை, ஒரு சித்திரத்தை வாசகர்கள் உள்ளே வந்து கற்பனையை விரித்துக்கொண்டு வாழும்படி மொழியில் விவரிப்பதுதான் அது. எழுதியவற்றிலிருந்து மேலும் விரிந்து முன்செல்லும்படி குறிப்புணர்த்திக் கூறுவதுதான் அது. அந்தத் தொழில்நுட்பம் பயிலப்படவேண்டியதும் தொடர்ந்து மேம்படுத்தப்பட வேண்டியதுமாகும்.
இரண்டாவது பகுதிதான் அதிலிருக்கும் அகவெளிப்பாடு என்பது. அல்லது ஆழ்மன வெளிப்பாடு. அது கதைத் தொழில்நுட்பத்திற்கு மேலதிகமாகத் தன்னியல்பாக நிகழவேண்டியது. மரக்கிளையில் அமர்ந்திருக்கும் பறவை என்று நான் எப்போதும் சொல்வதுண்டு. மரக்கிளை வேறு, பறவை வேறுதான். எப்போதும் மரக்கிளையில் பறவை வந்து அமர்வதும் இல்லைதான். அந்தப் பறவை மிக அஞ்சியது, எச்சரிக்கையானது. அது வந்தமர்வதற்கு அதற்கேயுரிய காரணங்களும், உணர்வு நிலைகளும், தற்செயல்களும் உள்ளன. ஆனால் அது வந்தமரும் தருணங்கள் தான் கலை என்று சொல்லப்படுகின்றன.
இலக்கிய வடிவத்தில் அடையப்படும் தேர்ச்சி என்பது எழுத்தாளனை சுயப்பிரக்ஞை இல்லாதவனாக எழுதச்செய்கிறது. தன்னை மறந்து அவன் ஒன்றைச் செய்யும்போதுதான் அவனுக்கு அப்பால் உள்ளவை அவனிடம் வந்து அமைகின்றன. மரக்கிளையில்தான் குருவி வந்து அமருமே ஒழிய மனிதர்கள் கைகளை நீட்டிக்கொண்டு நின்றால் வந்தமர்வதில்லை. அந்த தன்னுணர்வு அதை எச்சரிக்கை அடையச்செய்து விலகச்செய்துவிடுகிறது. வடிவத்தை அறியாமல் எவரும் அந்த தன்னியல்பான அந்த தன்மையை அடையமுடியாது.
ஆகவே வடிவத்தேர்ச்சியும், அதனூடாக வடிவத்தைக் கடந்து சென்று அதை மறந்துவிடுதலும்தான் அகவெளிப்பாட்டுக்கு ஒரே வழி. வடிவத்தேர்ச்சி என்பது வடிவத்தைப் பற்றிய தொடர்ந்த அவதானிப்பும், திரும்பத் திரும்ப செய்வதனால் வரும் பயிற்சியும் ஒருங்கே இணைந்தது. அதாவது வடிவப்புரிதல் என்பது ஓர் அறிதல். செய்து பழகுதல் என்பது பயிற்சி. கார் ஓட்டுவதனாலும் இவ்விரண்டும் ஒரே சமயம் அவசியமாகிறது.
வணிக எழுத்தாளர்கள் வடிவத்தைக் குறித்த தன்னுணர்வை அடைவதே இல்லை. உதாரணமாக தமிழில் முதன்மையான வணிக எழுத்தாளராகிய சுஜாதா இலக்கிய வடிவம் என்பதைப் பற்றிய விவாதம் எதையுமே தனக்குள் நிகழ்த்திக்கொள்ளவில்லை என்பதை அவருடைய கதைகளைப் படித்தால் தெரியும். அனைத்து கதைகளும் ஒரே வடிவத்தைக் கொண்டவை. கிட்டத்தட்ட ஓர் அச்சுமுத்திரை போன்ற தன்மை உடையவை. அந்த அச்சிலிருந்து ஒரே வடிவம்தான் வரும். வணிக எழுத்தாளர்கள் ஏராளமாகத் தொடர்ந்து எழுதுவதனால் அவர்களுடைய எழுத்து கைத்திறன் மிக்கதாகவும், பழக்கத்தால் வரக்கூடிய ஒழுக்கு கொண்டதாகவும் இருக்கும். அதை எளிய வாசகர்கள் விரும்புவார்கள்
இலக்கியவாதி அந்த இயல்பை ஒரு எதிர்மறை அம்சமாக, பலவீனமாகத்தான் காண்பான். ஒவ்வொரு கதைக்கும் அதற்கான பேசுபொருளும் உணர்வு நிலைகளும் மாறுபடுவது போலவே வடிவமும் மாறுபடவேண்டும் தனக்கான வடிவத்தை கதை அடையவேண்டும். ஒவ்வொரு உணர்வு நிலைக்கும் இசையில் ஒவ்வொரு ராகம் தோன்றுவதுபோல என்று வேண்டுமானால் சொல்லலாம். ஆகவே வடிவத்தைப்பற்றிய பிரக்ஞையும் தொடர்பழக்கமும் தான் இலக்கியத்தை அடைவதற்கு அவசியம். அந்த வடிவ பிரக்ஞையை அடையவேண்டும் என்பவர்களுக்காக மட்டுமே இந்த வரிகள்.
நான் முன்பு சொன்ன தொடக்கநிலை படைப்புகளில் முதன்மையாகக் காணும் சிக்கல் என்னவென்றால் ’செயற்கையான சித்தரிப்பு நுட்பம்’ என்று சொல்லலாம் ஒரு கதையைச் சொல்ல வரும்போது தன்னியல்பான ஓர் ஒழுக்குக்கு பதிலாக மிகக் கவனமாக எண்ணி எழுதப்படும் நுண்சித்தரிப்பு இவற்றில் பொதுவாக உள்ளது. அதாவது செயற்கையான அதிநுட்பங்கள் காணப்படுகின்றன.
சிறுகதை என்பது அடிப்படையில் ’சொல்லாதே காட்டு’ என்னும் முதல் விதியைக்கொண்டது. கதையைச் சுருக்கமாக சொல்ல ஆரம்பிப்பதுதான் நாம் அனைவருமே எழுத ஆரம்பிக்கும்போது செய்வது. ஆசிரியனே ஒரு நிகழ்வை வாசகனிடம் சொல்வது போல நாம் ஆரம்பத்தில் எழுதுவோம். அன்றாட வாழ்வில் மிக அவசியமானவற்றை மட்டுமே சொல்கிறோம். அந்த சுருக்கம் இலக்கியத்திற்கு எதிரானது. இலக்கியமென்பது விரித்துச்செல்லும் கலைதான். Detail தான் கலை. Art is in details என்று சொல்லப்பட்டபோது God is in details என்று Gustave Flaubert அதற்கு பதில் சொன்னார் என்பார்கள்.
“ராமசாமி காலையில் வீட்டைவிட்டு கிளம்பியபோது எதிரே குப்புசாமி வந்தார். குப்புசாமியிடம் அவர் நான் இன்றைக்கு பெண் பார்க்கபோகிறேன் என்றார்’ என்ற வகையில் ஒரு கதையை ஆரம்பிப்பதுதான் சுருக்கமாகச் சொல்வது. அதில் வாசகனுக்கு ’தெரிந்துகொள்ளும்’ அனுபவம் தான் கிடைக்கிறது. அது இலக்கிய அனுபவம் ஆவதில்லை. இலக்கிய அனுபவம் என்பது மொழியினூடாக ‘வாழும்’ அனுபவம்தான். அப்படிக் கிடைக்கவேண்டும் என்றால் அது காட்சி வடிவமாகவேண்டும்.
’வீட்டைவிட்டு கிளம்பும்போது தன் சட்டை சரியாக சலவை செய்யப்பட்டிருக்கிறதா, மடிப்பு கலையாமல் இருக்கிறதா என்று ராமசாமிக்கு சந்தேகமாக இருந்தது. புதிய வெள்ளைநிறச் சட்டைதான். ஆனால் பெட்டியில் கொஞ்சநாள் இருந்தது. திரும்பி இன்னொரு தடவை போய் கண்ணாடியில் பார்க்கலாமா என்று யோசித்தான். ஆனால் அப்போதே ராகு காலம் கடந்துவிட்டிருந்தது. பெண் பார்க்கப்போகும்போது இத்தகைய நம்பிக்கைகளை கடக்கவே முடிவதில்லை. அவை நம்பிக்கையற்றவர்களுக்கு கூட ஒரு சின்ன எச்சரிக்கையாக கூடவே வந்துகொண்டிருக்கின்றன’
என்று ஆரம்பித்தால் அதை வாசிக்கும் வாசகன் தன்னை அடையாளப்படுத்திக்கொண்டு ,அந்தத் தருணத்தை கண்களில் விரித்துக்கொண்டு, உடன் வரத்தொடங்குவான். இதுதான் வேறுபாடு.
ஆனால் நான் சொன்ன கதைகளைப் படிக்கும்போது சித்தரிப்பு தேவைக்குமேல் அடர்த்தியும் நுட்பமும் கொண்டதாக ஆகிறதோ, அந்த நுட்பமும் செயற்கையானதாக இருக்கிறதோ என்று தோன்றுகிறது. காட்சிகளை சொல்லும்போது அந்தக் காட்சியின் முக்கியத்துவம் என்ன, அந்தக் காட்சியில் அளிக்கப்படும் தரவுகளும் நுட்பங்களும் மேலும் அக்கதைகளில் எந்த அளவுக்கு விரிகின்றன என்பதும் கவனத்தில் கொள்ளப்படவேண்டும்.
உதாரணமாக, ஒரு சிறுவன் முச்சந்தியில் மற்ற நண்பர்களுடன் விளையாடிக்கொண்டிருக்கிறான். அது அந்தக்கதைக்கு ஒரு தொடக்கம் மட்டும்தான். அவனுடைய அப்பா இறந்துபோன செய்தி இன்னும் சற்று நேரத்தில் வரப்போகிறது. அதிலிருந்துதான் உண்மையில் கதையே ஆரம்பிக்கிறது. அப்படி என்றால் அந்த விளையாடும் சித்திரத்தை மிக நுட்பமாகவும் விரிவாகவும் அளிக்க வேண்டியதில்லை. அந்த விளையாட்டின் உற்சாகத்தை சொல்லும் ஒருசில வரிகள், அந்த தெருவை வாசகன் காட்சிப்படுத்தும் ஓரிரு வரிகள் மட்டுமே போதுமானது.
ஆனால் பல கதைகளில் அந்த சிறுவன் விளையாடும் தெரு, அதிலுள்ள நண்பர்கள், அப்போதுள்ள மனநிலை எல்லாமே மிகவிரிவாகச் சொல்லப்பட்டிருக்கும். கதையின் எல்லா தருணத்தையும் இவ்வாறு விரித்துரைக்க ஆசிரியர்கள் பலர் முயல்கிறார்கள். இன்னொன்று இவ்வாறு விரித்துரைக்கும்போது மொழி தடங்கலின்றி தன்னியல்பாக வரவேண்டும். அவ்வாறன்றி மொழியை சிடுக்கான சுழலும் சொற்றொடர்களில் அமைத்து அக்காட்சியை விவரித்திருந்தால் வாசகன் மிகக் கவனமாக அதை படிக்க வேண்டியிருக்கிறது. ஆனால் அதன் விளைவாக அவனுக்கு கிடைப்பது ஒரு பையன் தெருவில் விளையாடிக்கொண்டிருக்கும் எளிய சித்திரம் மட்டும் தான்.
நூல்கண்டு போல மொழி இருக்கும்போது வாசகன் கவனம் கூர்மையடைகிறது. அத்தகைய கூர்மை அடைந்த கவனமானது தான் அளிக்கும் உழைப்பிற்கு ஏற்ற முக்கியத்துவம் கொண்ட ஒரு விஷயம் அதில் சொல்லப்பட்டிருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறது. அவ்வாறன்றி மிக எளிய ஒரு விஷயம் அதற்கு கிடைக்கும் என்றால் ஏமாற்றப்பட்டதாக உணர்கிறது, எரிச்சலடைகிறது.
தன்னியல்பான சித்தரிப்பு என்பது என்ன? நீங்கள் நல்ல கதைசொல்லி என்றால் நண்பர்களிடம் பேசிக்கொண்டிருக்கையில் ஒரு காட்சியை நீங்கள் அவர்களுக்கு சொல்லும்போது அங்கே தேவையற்ற அடர்த்தியை திணிக்க மாட்டீர்கள். அந்த தருணத்தில் எழும் உணர்வு எழுச்சிக்கு ஏற்ப மிக சாதாரணமாகவும், அதே தருணத்தில் அவர்கள் அனைவரையும் மகிழ்விப்தாகவும், அவர்களுடைய கவனத்தை குவிப்பதாகவும் அக்காட்சியை வர்ணிப்பீர்கள். அந்த அளவுக்கு ஒரு கதையில் இருந்தால் போதுமானது. அதாவது சுருக்கமான செய்தியாகவும் இருக்கக் கூடாது. வளவளப்பாகவும் அமையக்கூடாது. மிகையான செறிவும் செயற்கையான நுட்பமும் கொண்டதாகவும் இருக்கலாகாது.
தொடக்க நிலையில் மொழி தன்னியல்பான ஒழுக்குடன் வருவது அரிதுதான். ஆனால் கூடுமானவரை அதற்காக முயன்று கொண்டே இருக்கவேண்டும் என்று நினைக்கிறேன். சில தருணங்களில் ஐம்பது கதைகளை எழுதியவர்களின் கதையைப் படிக்கும்போது கூட வரும் இந்த செயற்கை நுட்பமும் மொழிச் சிடுக்கும் உள்ளது என்பது மிக அலுப்பூட்டக்கூடியதாக இருக்கிறது. ஒரு கதை தேவையற்ற தரவுகளுடனும், செயற்கை நுட்பங்களுடனும் பயிற்சியற்ற அடர்த்தியான மொழியில் எழுதப்பட்டிருக்கும் என்றால் அது ’செறிவான’ கதை அல்ல. அவ்வாறு தோன்றுவது ஒரு பிரமைதான் வாசகன் அதை ’கலங்கியிருப்பது, சிக்கல் கொண்டிருப்பது’ என்றே எடுத்துக்கொள்வான்.
கலைப்படைப்பு சிக்கல் கொண்டதாக இருக்கலாம், அல்லது எளிமையானதாக இருக்கலாம். சிக்கல் எனில் அது அக்கதையில் அது வெளிப்படுத்தும் சிந்தனைக்கும் உள்ளுணர்வுக்கும் உணர்வு நிலைகளுக்கும் ஏற்ப அடைந்த சிக்கல்களாகவே இருக்கவேண்டும். தவிர்க்க முடியாததாகவே வெளிப்பட வேண்டும். ஒரு மனித உடலில் நுட்பமானதும் சிக்கலான பகுதிகள் உண்டு. எளிமையான நேரடியான பகுதிகள் உண்டு. ஒவ்வொன்றுக்கும் அதற்கான அமைப்பு நியாயங்கள் உண்டு. கலையின் விதி ஒன்றே. அதில் எப்பகுதியும் தேவையற்றதாக இருக்காது.
காவியம் – 65

கானபூதி சொன்னது. அந்த பங்கி இளைஞன் ராம்சரண் நினைத்தது போல பயந்தவனாக இல்லை.அவன் மிரட்டல், ரத்தம் எதையும் பார்த்தவன் அல்ல என்பதனால் அவனுக்கு நடுக்கம் இருந்தது. ஆனால் அவன் அனைத்தையும் கூர்ந்து கவனித்துக் கொண்டும் இருந்தான். கோழைகள் எப்போதுமே மடையர்களும் கூட. புத்திசாலிகள் உயிரை நினைத்து பயப்படுவார்கள். விளைவுகளை நினைத்தும் பயப்படுவார்கள். ஆனால் இன்னொருபக்கம் தங்களைக் காப்பாற்றிக் கொள்வதற்கான வழிகளைப் பற்றி அவர்கள் மூளை யோசித்துக்கொண்டே இருக்கும்.
ராம்சரண் அந்த பங்கி இளைஞனை மிரட்டிக் கொண்டிருக்கும்போது அவன் கண்களில் தெரிந்த பயமும் பணிவும் முழுமையானதல்ல என்றும் உணர்ந்திருந்தான். அவன் உள்ளம் உறுதியாகவே இருந்தது. அவர்கள் தன்னைக் கொல்லமாட்டார்கள் என்று தெரிந்ததுமே அவன் பயத்தை கடந்துவிட்டான். அப்போது அந்த சந்தர்ப்பத்தை கடந்து செல்ல மட்டும் தான் முயன்றான். அநேகமாக இந்தக் காயத்துடன் அவன் தன் ஊருக்குத் திரும்பிச் செல்வான். அவன் ஊர் எங்கோ ஔரங்காபாத் பக்கம் இருந்தது. அங்கு அவனுக்கு ஏதோ ஆதரவு இருக்கும். சட்டமோ, சங்கமோ, கட்சியோ ஏதோ ஒன்று இருக்கும். அதை எடுத்துக்கொண்டு அவன் திரும்பவும் வருவான். அவ்வளவு எளிதாக ராதிகாவை விட்டுவிட மாட்டான்.
அவனைக் கையை கிழித்து ஆற்றங்கரையில் போட்டுவிட்டு திரும்பும்போது ராம்சரண் வழியில் ஒரு விடுதியில் அறைபோட்டு அங்கிருந்து போனில் அஸ்வத்தை அழைத்து ”பயமுறுத்திவிட்டேன், அவன் கங்கைக்கரையில் கிடக்கிறான்” என்றான்.
”செத்துவிடமாட்டானே?” என்று அஸ்வத் கேட்டான்.
”சாகமாட்டான். கையைத்தான் கிழித்திருக்கிறோம். ரத்தம் நிறைய வெளியேறும், மயங்கிவிடுவான். ஆனால் அந்த இடத்தில் எப்படி இருந்தாலும் அரைமணிநேரம் அல்லது ஒருமணி நேரத்துக்கு ஒருமுறை யாராவது வருகிறார்கள். ஒருமணி நேரத்திற்குள் யாராவது வந்தால் கூட அவனை ஆஸ்பத்திரியில் சேர்த்துவிடுவார்கள். கையை அழுத்தமாகக் கட்டினாலே ரத்தம் நின்றுவிடும். அவனுக்கு ஒரு நல்ல வடு இருக்கும் அவ்வளவுதான். மற்றபடி, எந்த ஆபத்தும் இல்லை” என்றான்.
”அவன் பயந்தால் போதும். அவன் கையை யார் கிழித்தார்கள் என்று அவளுக்குத் தெரியும். ஆனால் அதை அவளால் என்னிடம் கேட்கவே முடியாது. நானும் அவளும் பேசிக்கொள்வதே இல்லை” என்றபின் அஸ்வத் சிரித்தான்.
புன்னகையுடன் போனை வைத்தபிறகு அவன் ’அவன் உங்களுக்கு அதிர்ச்சி கொடுக்கப்போகிறான்’ என்று ராம்சரண் மனதுக்குள் நினைத்துக்கொண்டான். அதை அப்போது அஸ்வத்திடம் சொல்வதில் பிரயோஜனமில்லை. அது நடக்கட்டும். அநேகமாக அவன் அவளை ஓராண்டுக்குள் திருமணம் செய்துகொள்ள வாய்ப்பிருக்கிறது, அப்போது பார்ப்போம். இப்போதைக்கு வேலை முடிந்தது. ஒருவேளை அந்த இளைஞன் அவளை மறந்துவிட்டான் என்றால் அதன்பிறகு செய்வதற்கு ஒன்றுமில்லை.
ராம்சரண் அதன்பின் ஹரீந்திரநாதை ஃபோனில் அழைத்தான். அவர் “என்ன நடந்தது?” என்றார்.
அவன் அனைத்தையும் சொன்னதும் அவர் “அவன் அழுது புலம்பி உன் காலில் விழுந்தானா?” என்றார்.
“இல்லை, இறுக்கமாக இருந்தான்”
“சட்” என்று ஹரீந்திரநாத் சொன்னார். “அவன் தைரியமானவன். அவளை விடவே மாட்டான். அவள் அவனை விட்டுவிடும் பேச்சுக்கே இடமில்லை”
ராம்சரண் ”எனக்கும் அப்படித்தான் தோன்றுகிறது” என்றான்.
“நான் அவளிடம் பேசுகிறேன். அழுது புலம்பி மன்றாடுகிறேன். அவள் மனம் எந்த திசைக்கு போகிறது என்று பார்க்கிறேன்” என்றார்.
ராம்சரண் பாட்னாவுக்குச் சென்று, தன் வீட்டில் சாப்பிட்டுவிட்டு தூங்கிக்கொண்டிருக்கும்போது அவனைத் தேடி அஸ்வத்தே வந்தான். அவன் கலவரம் அடைந்திருந்தான். ”வா” என்றபடி அவனை அழைத்து அருகிருந்த பாருக்கு கூட்டிச் சென்றான் .ஆளுக்கொரு பீர் வரவழைத்தபின் அஸ்வத் படபடப்புடன் ”அவள் அவனை அழைத்துக்கொண்டு கிளம்பிவிட்டாள்” என்றான்.
”யார்?” என்று ஒன்றும் புரியாமல் ராம்சரண் கேட்டான்.
”ராதிகா… அவனை ஆஸ்பத்திரிக்குச் சென்று அங்கிருந்தே கூட்டிக்கொண்டு போய்விட்டாள்.”
”எங்கே?”
”தெரியவில்லை. எல்லாவற்றையும் எடுத்துக்கொண்டு சென்றிருக்கிறாள். அவர்கள் இனி கல்லூரிக்கு வரப்போவதில்லை. அநேகமாக அவர்கள் கல்கத்தா தான் செல்வார்கள். கல்கத்தாவுக்கு உடனடியாக ஒரு ஆளனுப்பவேண்டும். ரயில்நிலையம் உட்பட எல்லா இடங்களிலும் தேடவேண்டும்.” என்றான் அஸ்வத். “எப்படியிருந்தாலும் அவர்கள் உடனடியாக போய் ஒரு வீடு வாடகைக்கெல்லாம் எடுக்கமுடியாது. கல்கத்தாவிலுள்ள விடுதிகளில்தான் தங்குவார்கள். கல்கத்தாவிலுள்ள எல்லா விடுதிகளிலும் அவனைத் தேடும்படி சொல்லி தகவல் அனுப்பியிருக்கிறேன்”
ராம் சரண் தனக்குள் ஒரு மெல்லிய புன்னகையை உணர்ந்தான். ஒரு சிகரெட் பற்றவைத்துக் கொண்டான்.
“அவனுடைய புகைப்படம் ஒன்று வேண்டும். காசியில் உள்ள இன்ஸ்பெக்டரிடம் சொல்லி கல்லூரியிலிருந்து அவன் புகைப்படம் ஒன்றை வாங்க சொல்லியிருக்கிறேன். ஒரு குற்றவாளியை தேடுவது போல அவனைத் தேடினால் பிடித்துவிடுவார்கள். ஆனால் அதற்கு அவன்மேல் ஒரு எஃப்.ஐ.ஆர் போடவேண்டும். அதைப் போடுவதற்கு இப்போதைக்கு முகாந்திரம் ஒன்றுமில்லை. எதையாவது கண்டுபிடிக்கிறேன். தனிப்பட்ட முறையில்தான் போலீஸாரிடம் தேடச் சொல்லியிருக்கிறேன். அவர்களை முழுக்க நம்ப முடியாது. ஒரு இரண்டு நாட்கள் தேடுவது போல பாவலா காட்டிவிட்டு நின்று விடுவார்கள். அவர்கள் தேடும்போது கூடவே நீயும் போய் கல்கத்தாவில் அத்தனை இடங்களிலும் தேடவேண்டும்.”
“கல்கத்தாவில் அத்தனை இடங்களில் தேடுவது அத்தனை எளிதல்ல. அவ்வளவு பெரிய ஆள்பலம் எனக்குக் கிடையாது” என்று ராம்சரண் சொன்னான்.
”நீ போலீஸ்காரர்களுடன் இணைந்து செயல்பட்டால் போதும். இங்கே எனக்கு வேலைகள் இருக்கின்றன. நான் உனக்கு பணம் தருகிறேன்” என்றான்.
ராம்சரண் அஸ்வத்தின் கண்களைப்பார்த்து ”அவ்வளவு பெரிய பணத்தை எல்லாம் நீங்கள் தரமுடியாது” என்றான்.
”நான் என்ன செய்ய வேண்டும் என்று நீ நினைக்கிறாய்?” என்று அஸ்வத் எரிச்சலுடன் கேட்டான்.
”தேடுவதெல்லாம் எங்களால் முடியாது. என் வேலை முழுக்கக் கெட்டுப்போகும். நீங்களே அவர்களை தேடிப்பிடித்தால் எங்களிடம் சொல்லுங்கள், வருகிறேன்.”
”தேடிப்பிடிக்கிறேன். தேடிப்பிடித்தபிறகு உன்னிடம் சொல்கிறேன். அவளை பிடித்து என் கையில் கொண்டு வந்து சேர்க்கவேண்டும். அந்தப் பங்கி முகத்தில் நான் காறித்துப்ப வேண்டும். கிடைத்துவிடுவார்கள், பார்த்துக்கொள்ளலாம்.”
அவர்கள் கிடைக்கவே போவதில்லை என்று தான் ராம்சரண் நினைத்தான்.இது அவளுக்கும் இவர்களுக்குமான ஒரு ஆட்டம். அவள் இவர்களைவிட புத்திசாலி. இவர்களை முற்றாகத் தோற்கடித்துவிட்டாள்.
அஸ்வத் ஆறுமாதங்கள் கல்கத்தாவிலும், லக்னோவிலும், காசியிலும், வெவ்வேறு நகரங்களிலும் போலீஸை வைத்து தேடிக்கொண்டே இருந்தான். எங்குமே எந்தத் தகவலும் கிடைக்கவில்லை. அவள் காணாமல் போய்விட்டாள் என்ற ஒரு புகாரை ஹரீந்திரநாதைக் கொண்டு அவனே பதிவு செய்து, அதை சந்தேகத்திற்கிடமான கொலை முயற்சியாக எழுதி, அதன் அடிப்படையில் சட்டபூர்வமாகவே விரிவாக தேடுவதற்கு ஏற்பாடு செய்தான்.
ஹரீந்திரநாத் ஒரு முறை மட்டும் ராம்சரணை சந்தித்தார். “அவன் அவளை கண்டுபிடித்துவிடுவானா?” என்றார்.
“வாய்ப்பில்லை என்று நினைக்கிறேன். கண்டுபிடித்தால்கூட நீண்டநாட்கள் ஆகியிருக்கும். அதன்பிறகு ஒன்றும் செய்யமுடியாது. அவர்களுக்குக் குழந்தைகூட இருக்கலாம்”
ஹரீந்திரநாத் “அவள் ஜெயித்துவிட்டாள்” என்றார்.
ராம்சரண் “யாரை?” என்றான்.
“எங்கள் இருவரையும்தான்” என்றபின் அவர் சலிப்புடன் தலையசைத்து “அவன் அவளை விடமாட்டேன் என்று உறுமிக்கொண்டிருக்கிறான். அவனுக்கு அது ஒரு அகங்காரப் பிரச்சினையாக ஆகிவிட்டது இப்போது.” என்றார்.
“அது எப்போதும் அப்படித்தானே?” என்று அவன் சொன்னான்.
ஹரீந்திரநாத் “எனக்கு இனிமேல் இதில் ஆர்வமில்லை. சலிப்பாக இருக்கிறது. இது எப்படியாவது ஒழியட்டும்” என்றபின் எழுந்துகொண்டு “அவளைக் கண்டுபிடித்தால் அவன் என்னிடம் அதைச் சொல்ல மாட்டான். உன்னிடம் சொல்வான். அவன் அதைச் சொன்னதும் நீ என்னிடம் விஷயத்தைச் சொல். நான் உனக்குண்டானதைச் செய்கிறேன்” என்றார்.
அஸ்வத்துடனான அவனுடைய உறவு முழுக்க குறைந்துவிட்டது. இரண்டு முறை அஸ்வத்தை பார்க்கும்போதும் அஸ்வத் ”தேடிக் கொண்டிருக்கிறேன். விடப்போவதில்லை” என்றான்.
ராம்சரண் “இத்தனை நாள் தேடி என்ன? இதற்குள் அவர்கள் திருமணம் செய்து குழந்தையும் பெற்றிருக்க வாய்ப்பிருக்கிறது” என்றான்.
”அந்தக் குழந்தையைம் கொல்வேன், விட மாட்டேன்” என்றான் அஸ்வத்.
”உங்களுக்கு என்ன பிரச்னை?” என்று ராம்சரண் கேட்டான். “அவளைக் கொன்றால் உங்கள் மானம் திரும்ப வந்துவிடுமா? நீங்கள் நினைத்ததுபோல இங்கே எவருமே அதையெல்லாம் பொருட்படுத்தவில்லை. அத்தனை பேரும் மறந்து அவரவர் வேலையை பார்க்கிறார்கள். உங்கள் அப்பா தினமும் கிளப்புக்குப்போய் குடிக்கிறார்”
”இது ஓர் ஆட்டம். இது தொடங்கிவிட்டது .இதில் தோற்க எனக்கு மனமில்லை.”
”யாரிடம் தோற்கிறீர்கள்?”
“அவளிடம்தான். அவள் என்னை ஜெயித்துவிட்டதாக எங்கோ நினைத்துக் கொண்டிருக்கிறாள். நான் இதுவரை ஜெயிக்க முடியாதவள் அவள்தான். அவளை நான் ஜெயிப்பதற்கு ஒரே வழி, அவள் கண்முன் அந்தப் பங்கியை கொல்வதுதான். எத்தனை ஆண்டுகள் ஆனாலும் அவளைப்பிடிப்பேன். கொல்வேன் இதில் சந்தேகமே வேண்டியதில்லை” என்று அஸ்வத் சொன்னான்.
”எனக்கு உண்மையிலேயே உங்களைப் புரிந்துகொள்ள முடியவில்லை. முதலில் குடும்ப கௌரவமாக இருக்கும் என்று நினைத்தேன். இப்போது தனிப்பட்ட முறையில் ஏதோ சொல்கிறீர்கள்” என்று ராம்சரண் சொன்னான்.
”எனக்குத் தெரியவில்லை. குடும்ப கௌரவம் முக்கியம்தான். அம்மாவிடமும் அப்பாவிடமும் சொல்லிவிட்டேன். அவளைத் தேடிக்கொண்டிருப்பதையும், பிடித்தால் அந்த நிமிடமே அந்த பங்கியை கொன்று விடுவேன் என்பதையும் சொன்னேன். அம்மா அழுதாள். அவள் குறுக்கே வந்தால் அவளையும் கொன்றுவிடுவேன் என்று சொன்னேன். அப்பா என்னிடம் இதெல்லாம் வேண்டாம், விட்டுவிடு என்று சொன்னார். நான் ஷத்ரியன், வஞ்சம் எடுத்தால் நிறைவேற்றாமல் விடமாட்டேன் என்று அவரிடம் சொன்னேன். அந்தப் பங்கியிடம் அவள் குழந்தை பெற்றிருந்தால் அந்தக் குழந்தையையும் அவளையும் சேர்த்தே சொல்வேன் என்று தெளிவாகவே சொல்லிவிட்டேன்.”
”உங்கள் அம்மா என்ன சொன்னார்கள்?”
“அழுதபடியே பூஜை அறைக்கு போனாள். வேறென்ன சொல்வாள்?”
”வேறொன்றும் சொல்லவில்லையா?”
”இல்லை, பூஜை அறையில் கதவைமூடிக்கொண்டு அழுதுகொண்டிருந்தாள்.”
”உங்கள் அப்பா?
”அவரும் தலைகுனிந்து அழுதுகொண்டிருந்தார். எல்லாருக்கும் அவளை கொல்வது இஷ்டம்தான் .ஆனால் அந்தப் பொறுப்பை நான் மட்டும் தான் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று நினைக்கிறார்கள். நான் அவளைக் கொன்றால், கொஞ்சம் வருஷம் கழித்து ’அடப்பாவி, நீதானே அவளைக்கொன்றாய்? பெண் சாபம் உனக்குத்தான்’ என்று என்னைச் சொல்வார்கள். அதன் வழியாக தங்களை விடுவித்துக்கொள்வார்கள். இதை எல்லாம் நான் எவ்வளவு பார்த்துவிட்டேன்.” என்றான் அஸ்வத்.
“இதை விட்டுவிடலாமே” என்று ராம்சரண் சொன்னான்.
“அப்படி நான் நினைத்துப் பார்த்தேன். ஆனால் என்னால் அவளை அகற்றாவிட்டால் நான் அர்த்தமில்லாத பிணம் என்று தோன்றுகிறது. உடம்பில் ஒரு உறுப்பு கெட்டுவிட்டால் அதை அறுவைச் சிகிச்சை செய்து விலக்குவது போல. சில சமயம் ஓர் அறுவை சிகிச்சை மனதுக்கும் ஒரு பெரிய விடுதலை ஆகிவிடுகிறது.” அஸ்வத் ஒரு சிகரெட்டை பற்றவைத்துக்கொண்டான்.
“இப்போதே உங்கள் உடல் கெட்டுவிட்டது. முற்றிய குடிகாரர்போல இருக்கிறீர்கள்”
“அவளை வெட்டிவீசிவிட்டால் நான் மீண்டுவிடுவேன்” என்றான் அஸ்வத் “அது ஒரு மனச்சிக்கலாகக்கூட இருக்கலாம். என் சொந்தக்காரர் ஒருவர் அவருக்கு இடுப்பு வலிப்பதாக சொல்லிக்கொண்டே இருந்தார். டாக்டர் அவரை படுக்க வைத்து அப்பெண்டிக்ஸ் சர்ஜரி செய்துவிட்டார். அதற்கும் இடுப்பு வலிக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது. ஆனால் அறுவை சிகிச்சை செய்து முடிந்தவுடனே தன் உடம்பிலிருந்து ஒரு தீய பகுதி வெட்டி வீசப்பட்டுவிட்டது என்ற எண்ணம் வந்து அவர் தேறிவிட்டார். ஒருவேளை அவளும் அவனும் கொல்லப்பட்டால் என் அப்பாவும் அம்மாவும் அப்படியே எல்லாவற்றையும் மறந்து இயல்பாக ஆகிவிடுவார்கள். ஒருவேளை மகிழ்ச்சியாகக்கூட ஆகிவிடுவார்கள்”
“இப்போது அவர்கள் என்ன அழுதுகொண்டா இருக்கிறார்கள்? அவர்கள் மறந்துவிட்டிருப்பார்கள்” என்றான் ராம்சரண்
“இல்லை, இன்று அவர்களுக்கு அவளுடைய நினைப்பு ஒரு பெரிய சங்கடமாகவே இருக்கிறது. அப்பா முற்றிய குடிகாரர் ஆகிவிட்டார். என் அம்மா இப்போதெல்லாம் வெளியாரைச் சந்திப்பதே இல்லை. அவளுடைய பழைய தோழிகள் நடத்தும் எந்த நிகழ்ச்சிக்கும் போவதில்லை. கோயிலுக்கும் பூஜைக்கும் செல்வது தவிர வெளியுலகமே கிடையாது. அவள் செத்தால் ஒரு வருடத்துக்குள் வெளியே கிளம்பிவிடுவாள்.”
”இருக்கலாம்” என்று ராம்சரண் சொன்னான். ”மனிதர்கள் இன்னொருவரைக் கொன்று தான் வாழ்கிறார்கள். நேரடியாக கொல்பவர்களும் உண்டு. மானசீகமாக கொல்பவர்களும் உண்டு. தான் கொல்ல வேண்டியவரை வேறு யாராவது கொன்று கொடுத்தால் அது மனிதர்களுக்கு மிக வசதியாக இருக்கிறது. கடவுளே அந்த வேலையைச் செய்வார் என்றால் மிகுந்த நிம்மதி அடைவார்கள். தன்னுடைய எதிரி விபத்தில் செத்தால் மனிதர்கள் எப்படியெல்லாம் மகிழ்ச்சி அடைந்து கொண்டாடுகிறார்கள் என்று பார்த்துக்கொண்டு தானே இருக்கிறேன்”
அஸ்வத் “நீ அதே தத்துவப் பைத்தியமாகத்தான் இருக்கிறாய்” என்றான். “சரி, நான் அவளைக் கண்டுபிடித்தால் நீதான் எனக்கு காரியத்தை முடித்துத் தரவேண்டும்”
ஓராண்டுக்குப் பின் எம்.எல்.ஏ ராம்சரணை அழைத்தார். “அஸ்வத் அவளைக் கண்டுபிடித்துவிட்டான்.”
“அப்படியா?” என்று அவன் கேட்டான். அவனுக்கு அப்போது அஸ்வத், ராதிகா எதுவும் நினைவுக்கு வரவில்லை. அவன் இன்னொரு வாழ்வா சாவா சிக்கலில் உழன்றுகொண்டிருந்தான். அவனைக் கொல்ல இரண்டு வெவ்வேறு அணிகள் தாக்கூர் கோஷ்டியால் அனுப்பப்பட்டிருந்தன.
“தற்செயலாகத்தான். ஒரு பள்ளிக்கூடம் அல்லது கல்லூரி என்று நினைக்கிறேன். சரியாக ஞாபகம் இல்லை. அவர்கள் தங்களிடம் வேலை செய்யும் எல்லாருடைய புகைப்படங்களையும் போலீஸ் ஸ்டேஷனில் ஒப்படைத்திருக்கிறார்கள். அதில் ராதிகாவின் படம் இருந்தது. அதை ஒரு இன்ஸ்பெக்டர் அடையாளம் கண்டு கொண்டார். அஸ்வத் அவரிடம் நேரிடையாகப் பேசிவிட்டான். என்ன கொடுக்கவேண்டுமோ எல்லாம் கொடுத்தாகிவிட்டது. நீ அங்கே போனால் அந்த இன்ஸ்பெக்டரே அவர்களை வரவழைத்து உன் கையில் ஒப்படைப்பார்.”
”என்ன செய்ய வேண்டுமென்று சொல்கிறீர்கள்?”
”அவள் கர்ப்பமாக இருக்கிறாள்” என்று எம்.எல்.ஏ சொன்னார்.
அவன் ஒன்றும் சொல்லவில்லை.
”நீ இரண்டு பேரையுமே தீர்த்துக்கட்டிவிட்டு வரவேண்டும் என்றுதான் அஸ்வத் சொல்கிறான். தேர்தல் வரப்போகிறது. எனக்கு அஸ்வத் இல்லாமல் முடியாது. அவனுக்காக நான் இதை செய்தே ஆகவேண்டும். முடித்துவிடு” என்றார்.
”அஸ்வத்துக்காக இவ்வளவு பெரிய விஷயத்தை செய்வது…” என்று அவன் தொடங்கினான்.
எம்.எல்.ஏ இடைமறித்தார் ”எனக்கு அஸ்வத் மிகப்பெரிய விஷயத்தை செய்து கொடுத்திருக்கிறான். நான் அவனிடம் சிக்கிக்கொண்டிருக்கிறேன். இதைச் செய்தால் உண்மையில் அவன்தான் என்னிடம் மாட்டிக் கொள்வான். இது சிறிய விஷயம். முடித்துவிடு”
ராம் சரண் “நானும் சிக்கலில் இருக்கிறேன்” என்றான். “ஏற்கனவே சொல்லியிருக்கிறேன் எல்லாவற்றையும்”
“நான் பார்த்துக் கொள்கிறேன்” என்றார் எம்.எல்.ஏ. “இந்தத்தேர்தலில் நான் மனுத்தாக்கல் செய்யும் போதே எனக்கெதிராக சில விஷயங்கள் வரும். அஸ்வத் இருந்தால் மட்டும் தான் அதையெல்லாம் தோற்கடித்து நான் ஜெயிக்க முடியும். ஆகவே அஸ்வத் எனக்கு மிக முக்கியம். நீயும் எனக்கு வேண்டும். இதை எனக்காக நீ முடித்துக்கொடு”.
”சரி” என்ற பின் அவன் எழுந்துகொண்டான். புன்னககைத்தபடி “அதாவது நானும் உங்களிடம் மாட்டிக்கொள்வேன்”
“ஏன் அப்படி நினைக்கிறாய்? நானும்தான் உன்னிடம் மாட்டிக்கொள்கிறேன்” என்றார் எம்.எல்.ஏ. “நீ ஏற்கனவே என்னிடம் சொன்ன மூன்று விஷயங்களையும் நான் டெல்லி போய் முடித்துவிடுகிறேன். ஒன்றுமட்டும் இப்போது முடியாது. நாங்கள் மறுபடியும் ஜெயித்து வரவேண்டும். அதற்கு ஒரு இரண்டு வருடங்களாகும். அதையும் முடித்துவிடுகிறேன்.”
அவன் ”சரி” என்று சொல்லி கிளம்பினான்.
தன் அலுவலகத்தில் இருந்து அவன் ஹரீந்திரநாதனை ஃபோனில் அழைத்தான். அஸ்வத் ராதிகாவைக் கொல்லச் சொல்லியிருப்பதை அவன் சொன்னதும் அவர் மறுமுனையில் அமைதியாக இருந்தார்.
“நான் இதைச் செய்தாகவேண்டும், எனக்கு வேறுவழியில்லை”
ஹரீந்திரநாத் “ம்” என்றார்.
“ஆனால் அஸ்வத்தே வேண்டாம் என்று சொன்னால் அவள் பிழைத்துவிடுவாள்…”
“அவன் மூர்க்கன், கேட்கமாட்டான்”
“நீங்கள் சொல்லலாம்”
“நான் சொன்னால் அவன் கேட்கமாட்டான்” என்றார் ஹரீந்திரநாத்.
“ஆனால்…”
“இதில் நான் ஒன்றும் செய்வதற்கில்லை. இறைவன் விட்ட வழி” என்றபின் ஹரீந்திரநாத் ஃபோனை வைத்தார்.
வேலை முடிந்ததும் ராம் சரண் சென்னையிலிருந்தே எம்.எல்.ஏக்கு போனில் அழைத்து ”முடிந்துவிட்டது” என்றான்.
“அவள்?”
“இருவரும்”
”எங்கே?” என்று அவர் கேட்டார்.
”இங்கே ஒரு ஆற்றங்கரையில். அவன் உடல் ஒருவேளை கிடைக்க வாய்ப்பிருக்கிறது. அவள் உடலை மூழ்கடித்துவிட்டோம். பெரும்பாலும் கிடைக்காது”
”தற்கொலை மாதிரியா? கொலை மாதிரியா?”
”கொலைதான். வெட்டினேன்” என்றான்.
”சரி, அங்கே பேசியாயிற்று. பெரும்பாலும் அங்கே நிகழும் வட இந்தியர்களின் கொலைகளை அங்குள்ள போலீஸ் பெரிதாக கண்டுகொள்வதில்லை. உள்ளூர் கொலையென்றால் அவர்களால் அவ்வளவு எளிதாக தப்ப முடியாது. இது அப்படியே போய்விடும். ஒருவேளை போகவில்லை என்றால் உன்னுடைய ஆட்கள் இரண்டு பேர் பொறுப்பேற்க வேண்டியிருக்கும்”
”அதனால் ஒன்றுமில்லை, பார்த்துக்கொள்ளலாம்” என்று அவன் சொன்னான்.
சென்னைக்கு திரும்பி வரும் வழியிலேயே ராதிகாவையும் அந்த பங்கி இளைஞனையும் அவன் மறந்துவிட்டான். அஸ்வத்தை அவன் பிறகு பார்க்கவும் இல்லை. வந்து சேர்ந்த ஒரு மாதத்திலேயே தேர்தல் தொடங்கியது. அதில் எம்.எல்.ஏ தோற்றுப்போனார். புதிய எம்.எல்.ஏ ஆளனுப்பி அவனை வரச்சொல்லி அவன் அவருடன் சேர்ந்துகொள்ள முடியுமா என்று கேட்டார். அவன் உடனடியாக கட்சி மாறி அவருடன் சேர்ந்துகொண்டான். பழைய எம்.எல்.ஏ.வின் ஆட்களுக்கும் அவனுக்கு ஒரு சண்டை நடந்தது. பழைய எம்.எல்.ஏ. கட்சிமாறி அவரைத் தோற்கடித்த கட்சியிலேயே வந்து சேர்ந்துகொண்டார். புதிய எம்.எல்.ஏயின் கீழே அவரது ஆதரவாளராக ஆனார். அவனும் அவரும் புதிய எம்.எல்.ஏயின் கீழே சந்தித்து ஒருவரை ஒருவர் வணங்கி புன்னகைத்து சிரித்துக்கொண்டனர்.
ஒவ்வொன்றும் மிக வேகமாக அடுத்த கட்டத்துக்கு சென்று கொண்டே இருந்தது. அவன் பிறகு எப்போதும் ராதிகாவையோ, அந்த பங்கி இளைஞனையோ நினைத்ததே இல்லை. செய்த கொலைகள் எல்லாமே நினைவில் இருந்து எவ்வளவு விரைவாக அழிந்து போகின்றன என்று அவன் எப்போதோ ஒருமுறை எண்ணிப் பார்ப்பதுண்டு. அவன் முதலில் கொன்ற டாகூரின் முகம் எத்தனை நினைத்தாலும் அவன் நினைவில் தெளிவதில்லை. கொலை செய்யப்பட்டவர்கள் அனைவரும் நீரில் மூழ்கிமறைவது போல அக்கணத்தில் சென்று மறைந்தனர். எப்போதுமே அடுத்து செய்யவேண்டிய செயலுக்கான பரபரப்பில் தான் அவன் இருந்தான் என்பதுதான் அதற்குக்காரணமா என்று யோசித்ததுண்டு. அல்லது இந்தக்கொலைகளை எல்லாம் அவன் எந்த உணர்ச்சியும் இல்லாமல் தான் செய்கிறானா?
நீண்டநாட்கள் அவன் அஸ்வத்தை சந்திக்கவில்லை. ஹரீந்திரநாத் தேஷ்பாண்டேயின் சாவுக்கு அவனுடைய தலைவராக இருந்த புதிய எம்.எல்.ஏ சென்றபோது அவனும் உடன் சென்றான். அவர்தான் அவனை அழைத்தார். “உன் பழைய தலைவர் நீ தேஷ்பாண்டேக்களுக்காக பெரிய வேலையை எல்லாம் செய்துகொடுத்ததாகச் சொன்னார்” என்றார். அவன் புன்னகைத்தான்.
ஹரீந்திரநாத் தன் மனைவியின் சாவுக்குப் பின் பெரும்குடிகாரராக ஆகி, குடலும் ஈரலும் பாதிக்கப்பட்டு, நீண்டநாள் சிகிழ்ச்சையில் இருந்து ஆஸ்பத்திரியில் இறந்தார். அவருடன் அந்த பெரிய பங்களாவில் வேலைக்காரர்கள் மட்டும்தான் இருந்தார்கள். அஸ்வத் ஊர்வசியின் சாவுக்குப் பின் இன்னொரு பெண்ணை மணந்துகொண்டு பக்ஸரில் இருந்தான். தந்தையின் சாவுக்காக அவன் பாட்னா வந்திருந்தான். சாவுக்கு வந்தவர்கள் ஒவ்வொருவராக அவனிடம் சென்று துயரத்தை அறிவித்துவிட்டு கிளம்பிக்கொண்டிருந்தார்கள்.
எம்.எல்.ஏ வந்து இறங்கியதும் அஸ்வத் எழுந்து ஓடி அருகே வந்தான். அவனும் முற்றிய குடிகாரனாக இருப்பதை ராம்சரண் கண்டான். எம்.எல்.ஏ வணங்கியபடி “பார்த்து நீண்டநாட்களாகிறது. நெடுந்தொலைவுக்குப் போய்விட்டீர்கள்” என்றார்.
அஸ்வத் “மீண்டும் பாட்னா வரப்போகிறேன்” என்றான். திரும்பி ராம்சரணைப் பார்த்து புன்னகைத்து கைகளை நீட்டினான். ராம்சரண் அவன் கைகளைப் பற்றிக்கொண்டான்.
“இவர் ஒரு காலத்தில் உங்களுக்கு மிகவும் நெருக்கமானவர் என்று சொன்னார்கள்” என்றார் எம்.எல்.ஏ.
“எனக்கு இப்போதும் நெருக்கமானவர்தான்… அதனாலென்ன?” என்று அஸ்வத் சிரித்தான். ராம்சரணும் சிரித்தான்.
“எதையும் விட்டுவிடவே மாட்டீர்கள் என்று பழைய எம்.எல்.ஏ சொன்னார். எனக்கு அப்படிப்பட்ட அட்கள்தான் வேண்டும்” என்றார் எம்.எல்.ஏ.
“அப்பாவும் தாத்தாவும் எல்லாம் அப்படித்தான்… எங்கள் பரம்பரைக் குணம்” என்றான் அஸ்வத். “ராம் ஃபையாவுக்குத் தெரியுமே”
”ஆமாம், ஊரில் தெரியாதவர்கள் உண்டா?” என்றான் ராம்சரண்.
“சரி, துக்கவீடு… இதெல்லாம் முடிந்தபின் வாருங்கள். சாவகாசமாக அமர்ந்து ஒரு சாயங்காலத்தைச் செலவழிப்போம். பேச நிறைய இருக்கிறது” என்றார் எம்.எல்.ஏ.
”சொல்லவேண்டுமா? வந்துவிடுகிறேன்… “ என்று அஸ்வத் சொன்னான்.
(மேலும்)
காவியமுகாம், பதிவுகள்
மதிப்பிற்குரிய ஜெயமோகன் அவர்களுக்கு,
வணக்கம்,
எனது முதல் காவிய முகாம் அனுபவமாக வெள்ளிமலையில் மூன்று நாட்கள் அமைந்தது.முதலில் இத்தகைய இடத்தில் வகுப்புகளை நடத்தும் திட்டம் ஒன்றை நடத்த தோன்றியதற்கே தங்கள் மீதான வியப்பும், மதிப்பும் கூடியது.
அதுவும் இன்றைய நவீனமய சூழலில் ஒரு மலை தங்குமிடத்தில் இதுபோன்ற பண்பாடு, கலை, இலக்கியம் சார்ந்த கற்றல் வகுப்புகளை பயிலும் போது உண்டாகும் நேர்மறை சிந்தனையை காவிய முகாம் நடந்த மூன்று நாட்களில் உணர முடிந்தது.துளியளவு எதிர்மறை எண்ணங்களையும் தூண்டாத வலிமை இயற்கைக்கு இருப்பதாகவே நினைக்கிறேன்.
கம்பனில் தொடங்கி முன்வரலாற்று எழுத்துரு அமர்வு வரையில் ஒவ்வொன்றிலும் கற்று கொள்ளவும் பயிலவும் எண்ணற்றவை கொட்டி கிடந்தது. இடைவெளிகளில் மூத்த படைப்பாளிகளான நாஞ்சில் நாடன், பாவண்ணன், நிர்மால்யா போன்றோருடனும் , எங்கோ இருந்து வந்து சக தோழர்களான பலருடன் இலக்கியம், இசை பற்றி காலை முதல் இரவு வரை உரையாடும் வாய்ப்பு எந்த சூழலிலும் கிடைக்காத பேரனுபவமாக அமைந்தது .
நவீன சிறுகதைகளை எப்படி அணுக வேண்டும் என்பதை கன்னட சிறுகதைகள், சிங்கப்பூர் சிறுகதைகள் , அறிவியல் புனைக்கதைகள் போன்ற சில அமர்வுகளை போல எவ்வாறு அணுக கூடாது என்பதை சரவணன் சந்திரன் சிறுகதைகள், ஷோபா சக்தி சிறுகதை. அமர்வுகளுக்கு பின் நடந்த கேள்வி விவாதங்களில் இன்னும் நுணுக்கமாக அறியும் வாய்ப்பு கிடைத்தது.
கம்பர் பாடல்கள், நெய்தல் திணை பாடல்கள், கஸல் கவிதைகள் அமர்வுகள் தந்த எளிமையும் இனிமையும் புரிதலுக்குரியவை.காவிய முகாம் முடித்து வந்த பின் தங்களின் “மழைக்குப் பின்” கட்டுரையை வாசிக்கையில் வருகிற உணர்வு தனிசுகம்.
தங்கள் வாராமையை உணர்ந்து அவ்விடத்தில் அதை சமன் செய்யும் பல முகங்களை காண முடிந்தது. அத்தகைய ஆளுமைகளை அடையாளங்காட்டும் தங்களுக்கு வணக்கங்கள்.
இத்தகைய நல்வாய்ப்புக்கு நன்றி.
அன்புடன்,
ச.மதன்குமார்.
The depression, resurrection and writing
For more than 2 years, I had a very active sexual life with two friends, and I believed they treated me as both a friend and an intellectual companion. I believed that we belong to a modern society where sex is a pure physical pleasure and it has nothing to do with personal life.
The depression, resurrection and writing
இன்றைக்கு கொஞ்சம் நுண்ணுணர்வும் அறிவும் கொண்டவர்கள் தனித்துவிடப்படுகிறார்கள். அலுவலகத்தில் விரட்டப்படுகிறார்கள். நட்புகளில் விலக்கப்படுகிறார்கள்.
தனிமை- கடிதம்June 23, 2025
வாக்னரை அறியாவிட்டால் இழப்பது என்ன?
வாக்னர் ஓர் இசையமைப்பாளர், அவரை அறிவது இசை ரசிகர்களுக்குத் தேவையாக இருக்கலாம். பிறருக்கு அதன் பயன் என்ன? இந்த வினா சிலருக்கு இருக்கலாம். வாக்னர் இசையமைப்பாளர் மட்டும் அல்ல. அவர் இயற்றியவை இசைநாடகங்கள். அதாவது இசையமைக்கப்பட்ட காவியங்கள். இலக்கிய ஆசிரியராகவும், சிந்தனையாளராகவும் அவர் முக்கியமானவர். ஒருவகையில் நவீன திரைப்படக்கலை, நாவல் உட்பட பல இலக்கியவடிவங்களின் தொடக்கப்புள்ளி அவரே. அவரை பற்றிய ஓர் அறிமுகம்.

பொற்சுழல்
அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு,
வணக்கம்
இரண்டாவது தாவரவியல் அறிமுக வகுப்பும் சிறப்பாக நடைபெற்றது. கோடை விடுமுறைக் காலமாகையால் நிறைய சிறுவர் சிறுமியர் கலந்து கொண்டிருந்தார்கள்.
இப்போது நிலவும் botanical illiteracy அடுத்த தலைமுறையிலும் தொடருமோ என நான் எப்போதும் கவலைப்படுவேன். எனவே கலந்துகொண்ட குழந்தைகளுக்குப் பிரத்யேகமான வகுப்பை நடத்தினேன், குறிப்பாகத் தாவரங்களின் கணித கணக்கீடுகள்குறித்து.
எனக்குத் தாவரங்கள்மீதான பிரமிப்புக்கும், பிரியத்துக்கும், மரியாதைக்கும் பல காரணங்கள் இருந்தாலும் அவற்றின் கணித அறிவு அவற்றில் மிக முதன்மையானது. பூஜ்ஜியத்தை கண்டுபிடித்தோம் கணக்கைக் கண்டுபிடித்தோம், கணிதமேதைகள் நாங்கள் என்றெல்லாம் சொல்லிக் கொண்டிருக்கும் நமக்கு 700 மில்லியன் வருடங்களுக்கு முன்பு தோன்றிய , ஒரே இடத்தில் வேர்கொண்டு நின்றிருப்பதால் நம்மைப் போலச் சிந்திக்கத் தெரியாது எனவே மனிதர்களைவிடக் கீழான உயிரினங்கள் என்று நாம் நம்பும் தாவரங்களின் துல்லியமான கணிதக்கணக்கீடுகள் மிகவும் ஆச்சரியம் அளிப்பவை.
நம்மில் இன்னும் அலாரம் வைத்துக் காலையில் எழுந்திருப்பவர்கள் இருக்கையில் 12 வருட காலக்கணக்கை துல்லியமாக நினைவில் வைத்து பெருங்கூட்டமாகக் காடுகளிலும், மலைச்சரிவுகளிலும் மலரும் குறிஞ்சி, 50/60 வருடங்கள் கழித்து உலகெங்கிலும் சொல்லி வைத்தது போல ஒரே சமயத்தில் பெருமலர்வை அளிக்கும் மூங்கில், வருடா வருடம் தவறாமல் குறித்த காலத்தில் மலர்ந்து கனியளிக்கும் மரங்கள் போன்ற காலக்கணக்கீடுகள் மட்டுமல்ல கணிதமும் அறிந்தவை.
மிகச் சாதாரணமாக நம் காலடியில் மிதிபடும் ஒரு சிறு செடியை எடுத்துக்கொண்டால் அதன் தண்டில் கணுவிடை வெளிகளின் துல்லியமான நீளம், மலர்களின் சமச்சீர் அமைப்பு, இதழ்களின் நீள அகலங்கள், சமச்சீரான கனிகளும் மஞ்சரிகளும், ஒரே நீளத்தில் அமைந்திருக்கும் மகரந்தத்தாள்கள், மிகச்சரியான அளவிலும் எடையிலும் இருக்கும் விதைகள் என அவற்றின் நுட்பமான கணக்கீடுகளை சொல்லிக் கொண்டே போகலாம். அவை அனைத்தும் இந்த மண்ணிலிருந்து, மண்ணுக்கடியிலிருந்து வெளிவந்த ஒரு உயிரினத்தின் அறிவினால் உருவானவை என்னும் பிரமிப்பு எனக்கு எப்போதும் இருக்கிறது.
தாவரவியல் அறிமுக வகுப்பில் சூரியகாந்திப் பூக்களின் golden angle என்னும் மிகச்சரியான, துல்லியமான கணக்கீட்டில் விதைகள் அமைந்திருக்கும் புகைப்படங்களைச் சிறுவர்களுக்குக் காட்டி விளக்கினேன்.
உண்மையில் அது மிக மிக ஆச்சரியமான நம்ப முடியாத தொன்று. எல்லாவற்றிலும் உயர்ந்தவர்களாகச் சொல்லிக்கொள்ளும் நம்மில் பலருக்கும் கணிதம் கடினமான பாடம். மாதா மாதம் பால் கணக்கைக்கூட பத்துத்தரம் போடுபவர்கள் இருக்கிறார்கள். கல்லூரிப் பாடங்களில் கணிதத்தை தேர்வு செய்யாமல் கணிதம் இல்லாத பிரிவுகளைக் கவனமாகத் தேர்வுசெய்து படிப்போர் பலலட்சம் பேர் இருக்கிறார்கள்
ஆனால் சூரியகாந்தி மலர்களின் (உண்மையில் அவை மலர்களல்ல மலர்த்தலைகள்) நடுவில் தட்டுப்போல அமைந்திருக்கும், விதைகள் உருவாகும் பகுதியில் இருக்கும் ஃபிபொனாச்சி கணித அடிப்படையிலான அமைப்பைக் கவனித்துப் புரிந்துகொண்டவர்கள் ஒருபோதும் தாவரங்கள் மனிதர்களைக் காட்டிலும் கீழ்நிலை உயிரினங்கள் என்று சொல்லவும் நினைக்கவும் மாட்டார்கள்.
12-ம் நூற்றாண்டைச் சேர்ந்த இத்தாலிய கணிதவியலாளர் லியனார்டோ. அவரது தந்தைக்கு ’’நல்லியல்புகொண்ட’’ என்னும் பொருளில் பொனாச்சி என்னும் பட்டப்பெயர் இருந்தது. தந்தை இறந்த பின்னர் லியனார்டோவுக்கு ’பொனாச்சியின் மகன்’ என்னும் பொருளில் ஃபிபொனாச்சி என்னும் புனை பெயர் அமைந்தது. இந்து-அரபிக் எண்முறையை ஐரோப்பாவில் அறிமுகப் படுத்திய பிபொனாச்சி 13-ம் நூற்றாண்டில் வெளியிட்ட எண் கணித நூலான Liber Abaci யில் குறிப்பிட்டிருந்த இந்தத் தொடரும் எண் வரிசை (அதை அவர் கண்டுபிடிக்கவில்லை என்றாலும்) அவர் பெயராலேயே பிபொனச்சி எண் வரிசையென அழைக்கப்பட்டது.
கணிதத்தில், ஃபிபொனாச்சி எண் தொடரில் உள்ள எண்களின் பட்டியல் 0, 1, 1, 2, 3, 5, 8, 13, 21, 34, 55, ……..,∞ என்ற வரிசையில் குறிப்பிடப்படுகிறது. ஒவ்வொரு ஃபிபொனச்சி எண்ணும் முந்தைய இரண்டு எண்களைக் கூட்டுவதன் மூலம் பெறப்படுகிறது. பிபொனாச்சி நாள் கொண்டாடப்படும் நவம்பர் 23-ம் தேதியும் அதே எண் தொடர் வரிசையின் முதல் நான்கு எண்களில் தான் அமைந்திருக்கிறது 11/23 (November 23).
சூரியகாந்தி மலரின் நடுவில் அமைந்திருக்கும் தட்டுப் போன்ற அமைப்பில் விதைகள் இந்த ஃபிபொனாச்சி எண்தொடரில் மிகச்சரியாக அமைந்திருக்கிறது
சூரியகாந்தியில் ஒவ்வொரு விதையும் ஒன்றுடன் ஒன்று உரசிக்கொள்ளாமல் ஒவ்வொரு விதையும் சரியாக வளர்வதற்கு இடம் அமைந்து , அனைத்து விதைகளுக்கும் சூரிய ஒளி சீராகக் கிடைக்கும் படி தங்கக்கோணம் (golden angle) என்று கணித்தத்தில் குறிப்பிடப்படும் 137.5° கோணத்தில் அமைந்திருக்கும் இரு பொற்சுழல்களும் (Golden spirals) உள்ளன.
சூரியகாந்தியின் மையத்தில் விதைகளால் ஆன எதிரெதிர் திசைகளில் வளைந்த இந்த இரண்டு தொடர்ச் சுழல்களும் ஒன்றை ஒன்று தழுவிக்கொண்டும் இடையிட்டும் மிக அழகாக ஒவ்வொரு விதைக்குமான இடத்தை உறுதி செய்து அமைந்திருக்கின்றன.
மலரின் மையத்தட்டில் வலதுபுறமாக 21 சுழல்பிரிகளும் இடதுபுறமாக 34 சுழல்பிரிகளுமாக மொத்தம் 55 சுழல்கள் இரு வெவ்வேறு திசைகளில் அமைந்திருக்கின்றன.
(சிறிய சூரியகாந்தி மலர்களில் இது 8 மற்றும் 13 என அமைந்திருக்கும்.)
இந்த நுட்பமான கணித அடிப்படையிலான அமைப்பு, இனப்பெருக்கம் 100 சதவீதம் நடைபெறுவதற்கும், ஒவ்வொரு விதைக்கும் சூரிய ஒளி சீராகக்கிடப்பதற்கும், மலருக்கு க்காற்றின் அழுத்தத்தைத் தாங்கும் வலிமை அளிப்பதற்குமாக அமைந்திருக்கிறது
இப்படியான சுழலமைப்புக்கள் இலைகளை, செதில்களை விதைகளை மைய அச்சில் அல்லது தண்டின் மீது சுழற்சி அமைப்பில் பொருத்துவது தாவரவியலில் parastichies என்னும் பொதுவான பெயரிட்டு குறிப்பிடப்படுகிறது.
நுட்பமான எண்கணிதக் கணக்கீடொன்றை ஒரு அழகிய மலரில் காண்பது பெரும் வியப்பளிப்பது. இன்னும் ஏராளமான உதாரணங்கள் தாவரங்களின் கணித அறிவுக்கு இருக்கிறது.
இந்தப் பொற்சுழல் அமைப்பு தாழை மடல்களில், பைன் கோன்களில், அன்னாசியின் செதிலமைப்பில், கள்ளியின் முட்களில், DNA இரட்டைச்சுழல் அமைப்பில் என்று ஏராளமாக இயற்கையில் அமைந்திருக்கிறது.
முதன்முதலாக ஊட்டி மார்க்கெட்டில் ரொமெனெஸ்கோ பூக்கோஸை பார்த்தபோது அப்படித்தான் உண்மையிலேயே திகைத்து விட்டேன். அத்தனை துல்லியமான கணிதக்கணக்கீட்டில் அமைந்திருக்கும் குட்டிக்குட்டி பூத்தலைகளை எப்படி பிய்த்துச் சமைத்து சாப்பிடுவதென்றே தெரியவில்லை.
கடந்த வாரம் பெங்களூருவிலும் அதே ரொமெனெஸ்கோ பூக்கோசை ஒரு பெரிய மாலில் பார்த்தேன்.கணிதத்தின் பின்னப்பரிமாண அமைப்பில் ஒவ்வொரு பூக்கோசின் தலையும் ஃபிபொனாச்சி எண் வரிசைத்தொடரில் அத்தனை அற்புதமாக அமைந்திருக்கிறது.
வெண்டைக்காய் சாப்பிட்டால் கணக்கு நன்றாக வரும் என்று சொல்வதெல்லாம் எந்த அறிவியல் அடிப்படையும் இல்லாத ‘’கிளப்பி விடுதல்’’ வகை தகவல்தான். ஆனால் எனக்கென்னவோ இந்த ரொமெனெஸ்கோ பூக்கோசை சாப்பிட்டால் கணக்கு வரலாமெனத் தோன்றும். அத்தனை கணக்காக அது அமைந்திருக்கிறது.
பகலில் ஒளிச்சேர்க்கை மூலம் உணவைத் தயாரிக்கும் தாவரங்கள் இரவில் சேமிப்பில் இருக்கும் மாவுச்சத்தை அளந்து, விடியும் வரை தேவைப்படும் இடங்களுக்கு அவற்றைப் பங்கு போட்டு விநியோகிப்பது கண்டறியப்பட்டிருக்கிறது. வலசை போகும் பறவைகள் இப்படி உடலின் கொழுப்பளவை கணக்கிடுகின்றன
ஆப்பிளைப் போலச் சமச்சீரான கனிகள், கோடிக்கணக்கில் சிற்றிலைகளைக் கொண்டிருக்கும் ஒற்றை மரத்தில் மி மீ அளவில் இருக்கும் இலைக்காம்புகள் அத்தனையும் ஒரே அளவில் இருப்பது
மகரந்த சேர்க்கை செய்ய வரும் பூச்சிகள் அமர்ந்து மலரமுதை உண்ண வசதியான, அவை அமர்ந்தால் மலரமுதை உண்ணுகையில் மகரந்தம் அவற்றில் உடலில் படும்படியாகக் கணக்கிட்டு அளந்து வைத்த இடம் அளிப்பது
இலைக்காம்புகளின் நீளத்தைக் கூட்டியும் குறைத்தும் ஒரு அழகிய மலர்க்கொத்து போலச் செடியின் நுனியில் மட்டும் இலைகள் இருக்கும்படி அமைத்ச்து சூரிய ஒளியை வாங்கிக்கொள்ளும் குப்பை மேனிச்செடி.
பப்பாளிமரத்தின் கணித அடிப்படியில் அமைந்திருக்கும் இலைகளின் சுருளமைப்பு,
மக்காச்சோளக்கதிரில் விதைமணிகள் அமைந்திருக்கும் வரிசைச்சுழலும், வரிசைகளில் மணிகள் அமைந்திருக்கும் கணக்கும்,
பெரணிகளின் இலைகளின் அடிப்புறம் இருக்கும் வித்துக்கள் அமைந்திருக்கும் வரிசையும் அப்படித்தான் மிகச்சீரான இடைவெளியில் செய்துவைத்தது போலவே அமைந்திருக்கும்.
அது போலவேதான் மரங்களின் கிளையமைப்பும். Branching architecture என்பது மரங்களில் மிக அற்புதமான ஒரு அமைப்பு. winter habit இதை என்று சொல்லப்படும் இலையுதிர்காலங்களில் மிகத்தெளிவாகக் காணலாம். எல்லா கிளைகளும் இலைகளுக்குச் சூரிய ஒளி கிடைக்கும்படி, ஒன்றுடன் ஒன்று குறுக்கிடாமல் மிக அழகிய அடுக்கிலும் சுழலிலும் அமைந்திருக்கும். இந்தக் கணித வடிவத்துக்கேற்றபடி கிளைகளின் தடிமன் கூடத் துல்லியமாகக் கணக்கிடப்பட்டிருக்கும்
அடிப்படை கணித விதிகளுக்குட்பட்ட இப்படியான கிளைவளர்ச்சியும் விரிதலும் (branching fractals) தாவரங்களின் புத்திசாலித்தனதுக்கு மிக வெளிப்படையான ஒரு உதாரணமாக இருக்கிறது.
இந்தக் கணித வடிவங்களும் அமைப்புக்களும் சவால்களை எதிர்கொண்டு அவற்றின் வாழ்தலை உறுதிப்படுத்தவும், இனப்பெருக்கம், ஒளிச்சேர்க்கை ஆகியவை சரியாக நடக்கவும் பல லட்சம் வருடங்களாக மெல்ல மெல்ல பரிணாம வளர்ச்சியில் உருவாகி வந்திருப்பவை.
தாவரங்களின் கணித அறிவை அறிந்து கொள்ளும்போது அவற்றின் மீதான மதிப்பும் அன்பும் மேலும் மேலும் அதிகமாகிறது.
தாவரங்களின் தண்டில் கணுவிடைவெளிகளின் நீளம், இலைக்காம்பின் நீளம், மலரிதழ்களின் ஒத்த அளவும் எண்ணிக்கையும் இவற்றைக் கணக்கிட்டு தாவரங்களின் கணித அறிவை கற்றுக்கொடுக்க என மிக எளிமையாக சிறார்களுக்கான் ஒரு நாள் பயிலரங்கம் ஒன்றை நடத்தலாமென்றிருக்கிறேன். இதைக்குறித்து தமிழில் ஒரு நூலும் எழுதலாமென்றிருக்கிறேன்.
சிறார்களுக்கு தாவரங்கள் குறித்த மிக முக்கியமானவற்றை கற்றுக் கொடுப்பதில் எனக்கும் பெரும் மனநிறைவு. அவர்களுடன் நானும் புதிது புதிதாக கற்றுக்கொண்டே இருக்கிறேன். இந்த வாய்ப்புக்கென உங்களுக்கு எனது தனிப்பட்ட நன்றிகள்.
அன்புடன்
லோகமாதேவி
அன்புள்ள லோகமாதேவி,
பல ஆண்டுகளாக என் கையருகே இருந்துகொண்டிருக்கும் நூல் Douglas Hofstadter எழுதிய Gödel, Escher, Bach. எனக்கு இது படித்துத் தீராத புத்தகம், நாய்பெற்ற தெங்கம்பழம் என்றும் ஒருவகையில் சொல்லலாம். முழுக்க புரியவுமில்லை, விடவும் மனமில்லை.
இது கணிதத்தின் அழகியலைப் பற்றியது. ஓவியம், இசை கணிதம் ஆகிய மூன்றும் சந்திக்கும் புள்ளி பற்றிய ஓர் ஆய்வு. உயர்நிலைக் கவிதைக்கு இணையாகச் சென்றுகொண்டிருக்கும் ஒரு நூல். அவ்வப்போது எடுத்து ஓரிரு பக்கங்களை வாசித்து ஓர் அழகியல் எழுச்சியை அடைவது என் வழக்கம். பிதகரஸ், யூக்லிட், மைக்கலாஞ்சலோ, கதே, பிகாஸோ என அனைவருமே ஓரிடத்தில் குவியும் நூல்.

எனக்கு அதில் பெருவியப்பு அளிப்பவர் ஈஷர்(M. C. Escher) விந்தையான அவருடைய காட்சியுலகம் என்னை கனவுகளில் எல்லாம் துரத்திக்கொண்டிருப்பது. அது ஜியோமிதி விந்தைகளாலானது. ஆனால் இயற்கையின் பேரழகை வெளிப்படுத்துவது. கலை எப்படி கணிதமாகிறது, கணிதம் எப்படிக் கலையாகிறது என்பதை வெளிப்படுத்தும் மகத்தான ஓவியங்கள் என்று அவற்றைச் சொல்லமுடியும். நவீன கணிப்பொறி வரைகலை உருவானபின் ஈஷரின் கற்பனைகளை மிகமிக முன்னெடுத்துச் சென்றுவிட்டார்கள். ஆனால் தொடக்கம் அவர்தான்.
(ஈஷரின் ஓவியங்களை அறிந்தவர்கள் Inception போன்ற படங்களை முற்றிலும் வேறொரு முழுமைக் கோணத்தில் ரசிக்க முடியும். அந்தப் படம் வந்தபோது நான் மீண்டும் ஈஷரின் உலகுக்குள் அலைந்தேன். ஆனால் தமிழில் எழுதப்பட்ட எந்த திரைவிமர்சனத்திலும் ஈஷர் பற்றி குறிப்பு இல்லை. எல்லாமே கதைச்சுருக்கம் மற்றும் கருத்து மட்டுமே, வழக்கம்போல)
ஈஷரின் ஓவியங்களுக்கு ஸ்வரங்களின் ஆடலில் உள்ள கணக்குகள் வழியாக பாக் கொண்டுள்ள ஒருமையை இந்நூல் விளக்குகிறது, எனக்கு புரியவில்லை. அஜிதனுக்குப் பிடிகிடைக்கலாம். ஆனால் அந்த ஓவியங்களைப் பார்த்தபின் பாக் இசையை கேட்டால் அவை மிகச்சரியாக நினைவில் வந்து இணைந்துகொள்கின்றன. என் கற்பனையில் ஈஷர் ஓவியத்தில் ஒரு போர்ஹெ. போர்ஹெதான் இலக்கியத்தில் சுழற்பாதைகளுக்கு இவ்வளவு பெரிய இடத்தை அளித்தவர்.
இயற்கையின் பொற்சுழல்களை உங்கள் கட்டுரை வழியாகப் பார்த்துக் கொண்டிருக்கிறேன். இவையனைத்தும் சீர்மை (symmetry) என்ற இயற்கையின் மகத்தான நெறியை நாம் கண்ணால் காணும் அனுபவங்களே என்று படுகிறது.
ஜெ

சித்பவானந்தர்
தமிழ்ச்சைவமரபுக்கும் அத்வைத தரிசனத்திற்கும் இடையே தர்க்கபூர்வமான ஒருங்கிணைப்பை உருவாக்குபவை சித்பவானந்தர் திருவாசகம், தாயுமானவர் பாடல்களுக்கு எழுதிய உரைகள். தமிழ் மெய்யியல் சிந்தனையில் அவ்வகையில் சித்பவானந்தர் ஒரு தொடக்கப்புள்ளி.

Jeyamohan's Blog
- Jeyamohan's profile
- 834 followers