காவியம் – 65

கானபூதி சொன்னது. அந்த பங்கி இளைஞன் ராம்சரண் நினைத்தது போல பயந்தவனாக இல்லை.அவன் மிரட்டல், ரத்தம் எதையும் பார்த்தவன் அல்ல என்பதனால் அவனுக்கு நடுக்கம் இருந்தது. ஆனால் அவன் அனைத்தையும் கூர்ந்து கவனித்துக் கொண்டும் இருந்தான். கோழைகள் எப்போதுமே மடையர்களும் கூட. புத்திசாலிகள் உயிரை நினைத்து பயப்படுவார்கள். விளைவுகளை நினைத்தும் பயப்படுவார்கள். ஆனால் இன்னொருபக்கம் தங்களைக் காப்பாற்றிக் கொள்வதற்கான வழிகளைப் பற்றி அவர்கள் மூளை யோசித்துக்கொண்டே இருக்கும்.
ராம்சரண் அந்த பங்கி இளைஞனை மிரட்டிக் கொண்டிருக்கும்போது அவன் கண்களில் தெரிந்த பயமும் பணிவும் முழுமையானதல்ல என்றும் உணர்ந்திருந்தான். அவன் உள்ளம் உறுதியாகவே இருந்தது. அவர்கள் தன்னைக் கொல்லமாட்டார்கள் என்று தெரிந்ததுமே அவன் பயத்தை கடந்துவிட்டான். அப்போது அந்த சந்தர்ப்பத்தை கடந்து செல்ல மட்டும் தான் முயன்றான். அநேகமாக இந்தக் காயத்துடன் அவன் தன் ஊருக்குத் திரும்பிச் செல்வான். அவன் ஊர் எங்கோ ஔரங்காபாத் பக்கம் இருந்தது. அங்கு அவனுக்கு ஏதோ ஆதரவு இருக்கும். சட்டமோ, சங்கமோ, கட்சியோ ஏதோ ஒன்று இருக்கும். அதை எடுத்துக்கொண்டு அவன் திரும்பவும் வருவான். அவ்வளவு எளிதாக ராதிகாவை விட்டுவிட மாட்டான்.
அவனைக் கையை கிழித்து ஆற்றங்கரையில் போட்டுவிட்டு திரும்பும்போது ராம்சரண் வழியில் ஒரு விடுதியில் அறைபோட்டு அங்கிருந்து போனில் அஸ்வத்தை அழைத்து ”பயமுறுத்திவிட்டேன், அவன் கங்கைக்கரையில் கிடக்கிறான்” என்றான்.
”செத்துவிடமாட்டானே?” என்று அஸ்வத் கேட்டான்.
”சாகமாட்டான். கையைத்தான் கிழித்திருக்கிறோம். ரத்தம் நிறைய வெளியேறும், மயங்கிவிடுவான். ஆனால் அந்த இடத்தில் எப்படி இருந்தாலும் அரைமணிநேரம் அல்லது ஒருமணி நேரத்துக்கு ஒருமுறை யாராவது வருகிறார்கள். ஒருமணி நேரத்திற்குள் யாராவது வந்தால் கூட அவனை ஆஸ்பத்திரியில் சேர்த்துவிடுவார்கள். கையை அழுத்தமாகக் கட்டினாலே ரத்தம் நின்றுவிடும். அவனுக்கு ஒரு நல்ல வடு இருக்கும் அவ்வளவுதான். மற்றபடி, எந்த ஆபத்தும் இல்லை” என்றான்.
”அவன் பயந்தால் போதும். அவன் கையை யார் கிழித்தார்கள் என்று அவளுக்குத் தெரியும். ஆனால் அதை அவளால் என்னிடம் கேட்கவே முடியாது. நானும் அவளும் பேசிக்கொள்வதே இல்லை” என்றபின் அஸ்வத் சிரித்தான்.
புன்னகையுடன் போனை வைத்தபிறகு அவன் ’அவன் உங்களுக்கு அதிர்ச்சி கொடுக்கப்போகிறான்’ என்று ராம்சரண் மனதுக்குள் நினைத்துக்கொண்டான். அதை அப்போது அஸ்வத்திடம் சொல்வதில் பிரயோஜனமில்லை. அது நடக்கட்டும். அநேகமாக அவன் அவளை ஓராண்டுக்குள் திருமணம் செய்துகொள்ள வாய்ப்பிருக்கிறது, அப்போது பார்ப்போம். இப்போதைக்கு வேலை முடிந்தது. ஒருவேளை அந்த இளைஞன் அவளை மறந்துவிட்டான் என்றால் அதன்பிறகு செய்வதற்கு ஒன்றுமில்லை.
ராம்சரண் அதன்பின் ஹரீந்திரநாதை ஃபோனில் அழைத்தான். அவர் “என்ன நடந்தது?” என்றார்.
அவன் அனைத்தையும் சொன்னதும் அவர் “அவன் அழுது புலம்பி உன் காலில் விழுந்தானா?” என்றார்.
“இல்லை, இறுக்கமாக இருந்தான்”
“சட்” என்று ஹரீந்திரநாத் சொன்னார். “அவன் தைரியமானவன். அவளை விடவே மாட்டான். அவள் அவனை விட்டுவிடும் பேச்சுக்கே இடமில்லை”
ராம்சரண் ”எனக்கும் அப்படித்தான் தோன்றுகிறது” என்றான்.
“நான் அவளிடம் பேசுகிறேன். அழுது புலம்பி மன்றாடுகிறேன். அவள் மனம் எந்த திசைக்கு போகிறது என்று பார்க்கிறேன்” என்றார்.
ராம்சரண் பாட்னாவுக்குச் சென்று, தன் வீட்டில் சாப்பிட்டுவிட்டு தூங்கிக்கொண்டிருக்கும்போது அவனைத் தேடி அஸ்வத்தே வந்தான். அவன் கலவரம் அடைந்திருந்தான். ”வா” என்றபடி அவனை அழைத்து அருகிருந்த பாருக்கு கூட்டிச் சென்றான் .ஆளுக்கொரு பீர் வரவழைத்தபின் அஸ்வத் படபடப்புடன் ”அவள் அவனை அழைத்துக்கொண்டு கிளம்பிவிட்டாள்” என்றான்.
”யார்?” என்று ஒன்றும் புரியாமல் ராம்சரண் கேட்டான்.
”ராதிகா… அவனை ஆஸ்பத்திரிக்குச் சென்று அங்கிருந்தே கூட்டிக்கொண்டு போய்விட்டாள்.”
”எங்கே?”
”தெரியவில்லை. எல்லாவற்றையும் எடுத்துக்கொண்டு சென்றிருக்கிறாள். அவர்கள் இனி கல்லூரிக்கு வரப்போவதில்லை. அநேகமாக அவர்கள் கல்கத்தா தான் செல்வார்கள். கல்கத்தாவுக்கு உடனடியாக ஒரு ஆளனுப்பவேண்டும். ரயில்நிலையம் உட்பட எல்லா இடங்களிலும் தேடவேண்டும்.” என்றான் அஸ்வத். “எப்படியிருந்தாலும் அவர்கள் உடனடியாக போய் ஒரு வீடு வாடகைக்கெல்லாம் எடுக்கமுடியாது. கல்கத்தாவிலுள்ள விடுதிகளில்தான் தங்குவார்கள். கல்கத்தாவிலுள்ள எல்லா விடுதிகளிலும் அவனைத் தேடும்படி சொல்லி தகவல் அனுப்பியிருக்கிறேன்”
ராம் சரண் தனக்குள் ஒரு மெல்லிய புன்னகையை உணர்ந்தான். ஒரு சிகரெட் பற்றவைத்துக் கொண்டான்.
“அவனுடைய புகைப்படம் ஒன்று வேண்டும். காசியில் உள்ள இன்ஸ்பெக்டரிடம் சொல்லி கல்லூரியிலிருந்து அவன் புகைப்படம் ஒன்றை வாங்க சொல்லியிருக்கிறேன். ஒரு குற்றவாளியை தேடுவது போல அவனைத் தேடினால் பிடித்துவிடுவார்கள். ஆனால் அதற்கு அவன்மேல் ஒரு எஃப்.ஐ.ஆர் போடவேண்டும். அதைப் போடுவதற்கு இப்போதைக்கு முகாந்திரம் ஒன்றுமில்லை. எதையாவது கண்டுபிடிக்கிறேன். தனிப்பட்ட முறையில்தான் போலீஸாரிடம் தேடச் சொல்லியிருக்கிறேன். அவர்களை முழுக்க நம்ப முடியாது. ஒரு இரண்டு நாட்கள் தேடுவது போல பாவலா காட்டிவிட்டு நின்று விடுவார்கள். அவர்கள் தேடும்போது கூடவே நீயும் போய் கல்கத்தாவில் அத்தனை இடங்களிலும் தேடவேண்டும்.”
“கல்கத்தாவில் அத்தனை இடங்களில் தேடுவது அத்தனை எளிதல்ல. அவ்வளவு பெரிய ஆள்பலம் எனக்குக் கிடையாது” என்று ராம்சரண் சொன்னான்.
”நீ போலீஸ்காரர்களுடன் இணைந்து செயல்பட்டால் போதும். இங்கே எனக்கு வேலைகள் இருக்கின்றன. நான் உனக்கு பணம் தருகிறேன்” என்றான்.
ராம்சரண் அஸ்வத்தின் கண்களைப்பார்த்து ”அவ்வளவு பெரிய பணத்தை எல்லாம் நீங்கள் தரமுடியாது” என்றான்.
”நான் என்ன செய்ய வேண்டும் என்று நீ நினைக்கிறாய்?” என்று அஸ்வத் எரிச்சலுடன் கேட்டான்.
”தேடுவதெல்லாம் எங்களால் முடியாது. என் வேலை முழுக்கக் கெட்டுப்போகும். நீங்களே அவர்களை தேடிப்பிடித்தால் எங்களிடம் சொல்லுங்கள், வருகிறேன்.”
”தேடிப்பிடிக்கிறேன். தேடிப்பிடித்தபிறகு உன்னிடம் சொல்கிறேன். அவளை பிடித்து என் கையில் கொண்டு வந்து சேர்க்கவேண்டும். அந்தப் பங்கி முகத்தில் நான் காறித்துப்ப வேண்டும். கிடைத்துவிடுவார்கள், பார்த்துக்கொள்ளலாம்.”
அவர்கள் கிடைக்கவே போவதில்லை என்று தான் ராம்சரண் நினைத்தான்.இது அவளுக்கும் இவர்களுக்குமான ஒரு ஆட்டம். அவள் இவர்களைவிட புத்திசாலி. இவர்களை முற்றாகத் தோற்கடித்துவிட்டாள்.
அஸ்வத் ஆறுமாதங்கள் கல்கத்தாவிலும், லக்னோவிலும், காசியிலும், வெவ்வேறு நகரங்களிலும் போலீஸை வைத்து தேடிக்கொண்டே இருந்தான். எங்குமே எந்தத் தகவலும் கிடைக்கவில்லை. அவள் காணாமல் போய்விட்டாள் என்ற ஒரு புகாரை ஹரீந்திரநாதைக் கொண்டு அவனே பதிவு செய்து, அதை சந்தேகத்திற்கிடமான கொலை முயற்சியாக எழுதி, அதன் அடிப்படையில் சட்டபூர்வமாகவே விரிவாக தேடுவதற்கு ஏற்பாடு செய்தான்.
ஹரீந்திரநாத் ஒரு முறை மட்டும் ராம்சரணை சந்தித்தார். “அவன் அவளை கண்டுபிடித்துவிடுவானா?” என்றார்.
“வாய்ப்பில்லை என்று நினைக்கிறேன். கண்டுபிடித்தால்கூட நீண்டநாட்கள் ஆகியிருக்கும். அதன்பிறகு ஒன்றும் செய்யமுடியாது. அவர்களுக்குக் குழந்தைகூட இருக்கலாம்”
ஹரீந்திரநாத் “அவள் ஜெயித்துவிட்டாள்” என்றார்.
ராம்சரண் “யாரை?” என்றான்.
“எங்கள் இருவரையும்தான்” என்றபின் அவர் சலிப்புடன் தலையசைத்து “அவன் அவளை விடமாட்டேன் என்று உறுமிக்கொண்டிருக்கிறான். அவனுக்கு அது ஒரு அகங்காரப் பிரச்சினையாக ஆகிவிட்டது இப்போது.” என்றார்.
“அது எப்போதும் அப்படித்தானே?” என்று அவன் சொன்னான்.
ஹரீந்திரநாத் “எனக்கு இனிமேல் இதில் ஆர்வமில்லை. சலிப்பாக இருக்கிறது. இது எப்படியாவது ஒழியட்டும்” என்றபின் எழுந்துகொண்டு “அவளைக் கண்டுபிடித்தால் அவன் என்னிடம் அதைச் சொல்ல மாட்டான். உன்னிடம் சொல்வான். அவன் அதைச் சொன்னதும் நீ என்னிடம் விஷயத்தைச் சொல். நான் உனக்குண்டானதைச் செய்கிறேன்” என்றார்.
அஸ்வத்துடனான அவனுடைய உறவு முழுக்க குறைந்துவிட்டது. இரண்டு முறை அஸ்வத்தை பார்க்கும்போதும் அஸ்வத் ”தேடிக் கொண்டிருக்கிறேன். விடப்போவதில்லை” என்றான்.
ராம்சரண் “இத்தனை நாள் தேடி என்ன? இதற்குள் அவர்கள் திருமணம் செய்து குழந்தையும் பெற்றிருக்க வாய்ப்பிருக்கிறது” என்றான்.
”அந்தக் குழந்தையைம் கொல்வேன், விட மாட்டேன்” என்றான் அஸ்வத்.
”உங்களுக்கு என்ன பிரச்னை?” என்று ராம்சரண் கேட்டான். “அவளைக் கொன்றால் உங்கள் மானம் திரும்ப வந்துவிடுமா? நீங்கள் நினைத்ததுபோல இங்கே எவருமே அதையெல்லாம் பொருட்படுத்தவில்லை. அத்தனை பேரும் மறந்து அவரவர் வேலையை பார்க்கிறார்கள். உங்கள் அப்பா தினமும் கிளப்புக்குப்போய் குடிக்கிறார்”
”இது ஓர் ஆட்டம். இது தொடங்கிவிட்டது .இதில் தோற்க எனக்கு மனமில்லை.”
”யாரிடம் தோற்கிறீர்கள்?”
“அவளிடம்தான். அவள் என்னை ஜெயித்துவிட்டதாக எங்கோ நினைத்துக் கொண்டிருக்கிறாள். நான் இதுவரை ஜெயிக்க முடியாதவள் அவள்தான். அவளை நான் ஜெயிப்பதற்கு ஒரே வழி, அவள் கண்முன் அந்தப் பங்கியை கொல்வதுதான். எத்தனை ஆண்டுகள் ஆனாலும் அவளைப்பிடிப்பேன். கொல்வேன் இதில் சந்தேகமே வேண்டியதில்லை” என்று அஸ்வத் சொன்னான்.
”எனக்கு உண்மையிலேயே உங்களைப் புரிந்துகொள்ள முடியவில்லை. முதலில் குடும்ப கௌரவமாக இருக்கும் என்று நினைத்தேன். இப்போது தனிப்பட்ட முறையில் ஏதோ சொல்கிறீர்கள்” என்று ராம்சரண் சொன்னான்.
”எனக்குத் தெரியவில்லை. குடும்ப கௌரவம் முக்கியம்தான். அம்மாவிடமும் அப்பாவிடமும் சொல்லிவிட்டேன். அவளைத் தேடிக்கொண்டிருப்பதையும், பிடித்தால் அந்த நிமிடமே அந்த பங்கியை கொன்று விடுவேன் என்பதையும் சொன்னேன். அம்மா அழுதாள். அவள் குறுக்கே வந்தால் அவளையும் கொன்றுவிடுவேன் என்று சொன்னேன். அப்பா என்னிடம் இதெல்லாம் வேண்டாம், விட்டுவிடு என்று சொன்னார். நான் ஷத்ரியன், வஞ்சம் எடுத்தால் நிறைவேற்றாமல் விடமாட்டேன் என்று அவரிடம் சொன்னேன். அந்தப் பங்கியிடம் அவள் குழந்தை பெற்றிருந்தால் அந்தக் குழந்தையையும் அவளையும் சேர்த்தே சொல்வேன் என்று தெளிவாகவே சொல்லிவிட்டேன்.”
”உங்கள் அம்மா என்ன சொன்னார்கள்?”
“அழுதபடியே பூஜை அறைக்கு போனாள். வேறென்ன சொல்வாள்?”
”வேறொன்றும் சொல்லவில்லையா?”
”இல்லை, பூஜை அறையில் கதவைமூடிக்கொண்டு அழுதுகொண்டிருந்தாள்.”
”உங்கள் அப்பா?
”அவரும் தலைகுனிந்து அழுதுகொண்டிருந்தார். எல்லாருக்கும் அவளை கொல்வது இஷ்டம்தான் .ஆனால் அந்தப் பொறுப்பை நான் மட்டும் தான் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று நினைக்கிறார்கள். நான் அவளைக் கொன்றால், கொஞ்சம் வருஷம் கழித்து ’அடப்பாவி, நீதானே அவளைக்கொன்றாய்? பெண் சாபம் உனக்குத்தான்’ என்று என்னைச் சொல்வார்கள். அதன் வழியாக தங்களை விடுவித்துக்கொள்வார்கள். இதை எல்லாம் நான் எவ்வளவு பார்த்துவிட்டேன்.” என்றான் அஸ்வத்.
“இதை விட்டுவிடலாமே” என்று ராம்சரண் சொன்னான்.
“அப்படி நான் நினைத்துப் பார்த்தேன். ஆனால் என்னால் அவளை அகற்றாவிட்டால் நான் அர்த்தமில்லாத பிணம் என்று தோன்றுகிறது. உடம்பில் ஒரு உறுப்பு கெட்டுவிட்டால் அதை அறுவைச் சிகிச்சை செய்து விலக்குவது போல. சில சமயம் ஓர் அறுவை சிகிச்சை மனதுக்கும் ஒரு பெரிய விடுதலை ஆகிவிடுகிறது.” அஸ்வத் ஒரு சிகரெட்டை பற்றவைத்துக்கொண்டான்.
“இப்போதே உங்கள் உடல் கெட்டுவிட்டது. முற்றிய குடிகாரர்போல இருக்கிறீர்கள்”
“அவளை வெட்டிவீசிவிட்டால் நான் மீண்டுவிடுவேன்” என்றான் அஸ்வத் “அது ஒரு மனச்சிக்கலாகக்கூட இருக்கலாம். என் சொந்தக்காரர் ஒருவர் அவருக்கு இடுப்பு வலிப்பதாக சொல்லிக்கொண்டே இருந்தார். டாக்டர் அவரை படுக்க வைத்து அப்பெண்டிக்ஸ் சர்ஜரி செய்துவிட்டார். அதற்கும் இடுப்பு வலிக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது. ஆனால் அறுவை சிகிச்சை செய்து முடிந்தவுடனே தன் உடம்பிலிருந்து ஒரு தீய பகுதி வெட்டி வீசப்பட்டுவிட்டது என்ற எண்ணம் வந்து அவர் தேறிவிட்டார். ஒருவேளை அவளும் அவனும் கொல்லப்பட்டால் என் அப்பாவும் அம்மாவும் அப்படியே எல்லாவற்றையும் மறந்து இயல்பாக ஆகிவிடுவார்கள். ஒருவேளை மகிழ்ச்சியாகக்கூட ஆகிவிடுவார்கள்”
“இப்போது அவர்கள் என்ன அழுதுகொண்டா இருக்கிறார்கள்? அவர்கள் மறந்துவிட்டிருப்பார்கள்” என்றான் ராம்சரண்
“இல்லை, இன்று அவர்களுக்கு அவளுடைய நினைப்பு ஒரு பெரிய சங்கடமாகவே இருக்கிறது. அப்பா முற்றிய குடிகாரர் ஆகிவிட்டார். என் அம்மா இப்போதெல்லாம் வெளியாரைச் சந்திப்பதே இல்லை. அவளுடைய பழைய தோழிகள் நடத்தும் எந்த நிகழ்ச்சிக்கும் போவதில்லை. கோயிலுக்கும் பூஜைக்கும் செல்வது தவிர வெளியுலகமே கிடையாது. அவள் செத்தால் ஒரு வருடத்துக்குள் வெளியே கிளம்பிவிடுவாள்.”
”இருக்கலாம்” என்று ராம்சரண் சொன்னான். ”மனிதர்கள் இன்னொருவரைக் கொன்று தான் வாழ்கிறார்கள். நேரடியாக கொல்பவர்களும் உண்டு. மானசீகமாக கொல்பவர்களும் உண்டு. தான் கொல்ல வேண்டியவரை வேறு யாராவது கொன்று கொடுத்தால் அது மனிதர்களுக்கு மிக வசதியாக இருக்கிறது. கடவுளே அந்த வேலையைச் செய்வார் என்றால் மிகுந்த நிம்மதி அடைவார்கள். தன்னுடைய எதிரி விபத்தில் செத்தால் மனிதர்கள் எப்படியெல்லாம் மகிழ்ச்சி அடைந்து கொண்டாடுகிறார்கள் என்று பார்த்துக்கொண்டு தானே இருக்கிறேன்”
அஸ்வத் “நீ அதே தத்துவப் பைத்தியமாகத்தான் இருக்கிறாய்” என்றான். “சரி, நான் அவளைக் கண்டுபிடித்தால் நீதான் எனக்கு காரியத்தை முடித்துத் தரவேண்டும்”
ஓராண்டுக்குப் பின் எம்.எல்.ஏ ராம்சரணை அழைத்தார். “அஸ்வத் அவளைக் கண்டுபிடித்துவிட்டான்.”
“அப்படியா?” என்று அவன் கேட்டான். அவனுக்கு அப்போது அஸ்வத், ராதிகா எதுவும் நினைவுக்கு வரவில்லை. அவன் இன்னொரு வாழ்வா சாவா சிக்கலில் உழன்றுகொண்டிருந்தான். அவனைக் கொல்ல இரண்டு வெவ்வேறு அணிகள் தாக்கூர் கோஷ்டியால் அனுப்பப்பட்டிருந்தன.
“தற்செயலாகத்தான். ஒரு பள்ளிக்கூடம் அல்லது கல்லூரி என்று நினைக்கிறேன். சரியாக ஞாபகம் இல்லை. அவர்கள் தங்களிடம் வேலை செய்யும் எல்லாருடைய புகைப்படங்களையும் போலீஸ் ஸ்டேஷனில் ஒப்படைத்திருக்கிறார்கள். அதில் ராதிகாவின் படம் இருந்தது. அதை ஒரு இன்ஸ்பெக்டர் அடையாளம் கண்டு கொண்டார். அஸ்வத் அவரிடம் நேரிடையாகப் பேசிவிட்டான். என்ன கொடுக்கவேண்டுமோ எல்லாம் கொடுத்தாகிவிட்டது. நீ அங்கே போனால் அந்த இன்ஸ்பெக்டரே அவர்களை வரவழைத்து உன் கையில் ஒப்படைப்பார்.”
”என்ன செய்ய வேண்டுமென்று சொல்கிறீர்கள்?”
”அவள் கர்ப்பமாக இருக்கிறாள்” என்று எம்.எல்.ஏ சொன்னார்.
அவன் ஒன்றும் சொல்லவில்லை.
”நீ இரண்டு பேரையுமே தீர்த்துக்கட்டிவிட்டு வரவேண்டும் என்றுதான் அஸ்வத் சொல்கிறான். தேர்தல் வரப்போகிறது. எனக்கு அஸ்வத் இல்லாமல் முடியாது. அவனுக்காக நான் இதை செய்தே ஆகவேண்டும். முடித்துவிடு” என்றார்.
”அஸ்வத்துக்காக இவ்வளவு பெரிய விஷயத்தை செய்வது…” என்று அவன் தொடங்கினான்.
எம்.எல்.ஏ இடைமறித்தார் ”எனக்கு அஸ்வத் மிகப்பெரிய விஷயத்தை செய்து கொடுத்திருக்கிறான். நான் அவனிடம் சிக்கிக்கொண்டிருக்கிறேன். இதைச் செய்தால் உண்மையில் அவன்தான் என்னிடம் மாட்டிக் கொள்வான். இது சிறிய விஷயம். முடித்துவிடு”
ராம் சரண் “நானும் சிக்கலில் இருக்கிறேன்” என்றான். “ஏற்கனவே சொல்லியிருக்கிறேன் எல்லாவற்றையும்”
“நான் பார்த்துக் கொள்கிறேன்” என்றார் எம்.எல்.ஏ. “இந்தத்தேர்தலில் நான் மனுத்தாக்கல் செய்யும் போதே எனக்கெதிராக சில விஷயங்கள் வரும். அஸ்வத் இருந்தால் மட்டும் தான் அதையெல்லாம் தோற்கடித்து நான் ஜெயிக்க முடியும். ஆகவே அஸ்வத் எனக்கு மிக முக்கியம். நீயும் எனக்கு வேண்டும். இதை எனக்காக நீ முடித்துக்கொடு”.
”சரி” என்ற பின் அவன் எழுந்துகொண்டான். புன்னககைத்தபடி “அதாவது நானும் உங்களிடம் மாட்டிக்கொள்வேன்”
“ஏன் அப்படி நினைக்கிறாய்? நானும்தான் உன்னிடம் மாட்டிக்கொள்கிறேன்” என்றார் எம்.எல்.ஏ. “நீ ஏற்கனவே என்னிடம் சொன்ன மூன்று விஷயங்களையும் நான் டெல்லி போய் முடித்துவிடுகிறேன். ஒன்றுமட்டும் இப்போது முடியாது. நாங்கள் மறுபடியும் ஜெயித்து வரவேண்டும். அதற்கு ஒரு இரண்டு வருடங்களாகும். அதையும் முடித்துவிடுகிறேன்.”
அவன் ”சரி” என்று சொல்லி கிளம்பினான்.
தன் அலுவலகத்தில் இருந்து அவன் ஹரீந்திரநாதனை ஃபோனில் அழைத்தான். அஸ்வத் ராதிகாவைக் கொல்லச் சொல்லியிருப்பதை அவன் சொன்னதும் அவர் மறுமுனையில் அமைதியாக இருந்தார்.
“நான் இதைச் செய்தாகவேண்டும், எனக்கு வேறுவழியில்லை”
ஹரீந்திரநாத் “ம்” என்றார்.
“ஆனால் அஸ்வத்தே வேண்டாம் என்று சொன்னால் அவள் பிழைத்துவிடுவாள்…”
“அவன் மூர்க்கன், கேட்கமாட்டான்”
“நீங்கள் சொல்லலாம்”
“நான் சொன்னால் அவன் கேட்கமாட்டான்” என்றார் ஹரீந்திரநாத்.
“ஆனால்…”
“இதில் நான் ஒன்றும் செய்வதற்கில்லை. இறைவன் விட்ட வழி” என்றபின் ஹரீந்திரநாத் ஃபோனை வைத்தார்.
வேலை முடிந்ததும் ராம் சரண் சென்னையிலிருந்தே எம்.எல்.ஏக்கு போனில் அழைத்து ”முடிந்துவிட்டது” என்றான்.
“அவள்?”
“இருவரும்”
”எங்கே?” என்று அவர் கேட்டார்.
”இங்கே ஒரு ஆற்றங்கரையில். அவன் உடல் ஒருவேளை கிடைக்க வாய்ப்பிருக்கிறது. அவள் உடலை மூழ்கடித்துவிட்டோம். பெரும்பாலும் கிடைக்காது”
”தற்கொலை மாதிரியா? கொலை மாதிரியா?”
”கொலைதான். வெட்டினேன்” என்றான்.
”சரி, அங்கே பேசியாயிற்று. பெரும்பாலும் அங்கே நிகழும் வட இந்தியர்களின் கொலைகளை அங்குள்ள போலீஸ் பெரிதாக கண்டுகொள்வதில்லை. உள்ளூர் கொலையென்றால் அவர்களால் அவ்வளவு எளிதாக தப்ப முடியாது. இது அப்படியே போய்விடும். ஒருவேளை போகவில்லை என்றால் உன்னுடைய ஆட்கள் இரண்டு பேர் பொறுப்பேற்க வேண்டியிருக்கும்”
”அதனால் ஒன்றுமில்லை, பார்த்துக்கொள்ளலாம்” என்று அவன் சொன்னான்.
சென்னைக்கு திரும்பி வரும் வழியிலேயே ராதிகாவையும் அந்த பங்கி இளைஞனையும் அவன் மறந்துவிட்டான். அஸ்வத்தை அவன் பிறகு பார்க்கவும் இல்லை. வந்து சேர்ந்த ஒரு மாதத்திலேயே தேர்தல் தொடங்கியது. அதில் எம்.எல்.ஏ தோற்றுப்போனார். புதிய எம்.எல்.ஏ ஆளனுப்பி அவனை வரச்சொல்லி அவன் அவருடன் சேர்ந்துகொள்ள முடியுமா என்று கேட்டார். அவன் உடனடியாக கட்சி மாறி அவருடன் சேர்ந்துகொண்டான். பழைய எம்.எல்.ஏ.வின் ஆட்களுக்கும் அவனுக்கு ஒரு சண்டை நடந்தது. பழைய எம்.எல்.ஏ. கட்சிமாறி அவரைத் தோற்கடித்த கட்சியிலேயே வந்து சேர்ந்துகொண்டார். புதிய எம்.எல்.ஏயின் கீழே அவரது ஆதரவாளராக ஆனார். அவனும் அவரும் புதிய எம்.எல்.ஏயின் கீழே சந்தித்து ஒருவரை ஒருவர் வணங்கி புன்னகைத்து சிரித்துக்கொண்டனர்.
ஒவ்வொன்றும் மிக வேகமாக அடுத்த கட்டத்துக்கு சென்று கொண்டே இருந்தது. அவன் பிறகு எப்போதும் ராதிகாவையோ, அந்த பங்கி இளைஞனையோ நினைத்ததே இல்லை. செய்த கொலைகள் எல்லாமே நினைவில் இருந்து எவ்வளவு விரைவாக அழிந்து போகின்றன என்று அவன் எப்போதோ ஒருமுறை எண்ணிப் பார்ப்பதுண்டு. அவன் முதலில் கொன்ற டாகூரின் முகம் எத்தனை நினைத்தாலும் அவன் நினைவில் தெளிவதில்லை. கொலை செய்யப்பட்டவர்கள் அனைவரும் நீரில் மூழ்கிமறைவது போல அக்கணத்தில் சென்று மறைந்தனர். எப்போதுமே அடுத்து செய்யவேண்டிய செயலுக்கான பரபரப்பில் தான் அவன் இருந்தான் என்பதுதான் அதற்குக்காரணமா என்று யோசித்ததுண்டு. அல்லது இந்தக்கொலைகளை எல்லாம் அவன் எந்த உணர்ச்சியும் இல்லாமல் தான் செய்கிறானா?
நீண்டநாட்கள் அவன் அஸ்வத்தை சந்திக்கவில்லை. ஹரீந்திரநாத் தேஷ்பாண்டேயின் சாவுக்கு அவனுடைய தலைவராக இருந்த புதிய எம்.எல்.ஏ சென்றபோது அவனும் உடன் சென்றான். அவர்தான் அவனை அழைத்தார். “உன் பழைய தலைவர் நீ தேஷ்பாண்டேக்களுக்காக பெரிய வேலையை எல்லாம் செய்துகொடுத்ததாகச் சொன்னார்” என்றார். அவன் புன்னகைத்தான்.
ஹரீந்திரநாத் தன் மனைவியின் சாவுக்குப் பின் பெரும்குடிகாரராக ஆகி, குடலும் ஈரலும் பாதிக்கப்பட்டு, நீண்டநாள் சிகிழ்ச்சையில் இருந்து ஆஸ்பத்திரியில் இறந்தார். அவருடன் அந்த பெரிய பங்களாவில் வேலைக்காரர்கள் மட்டும்தான் இருந்தார்கள். அஸ்வத் ஊர்வசியின் சாவுக்குப் பின் இன்னொரு பெண்ணை மணந்துகொண்டு பக்ஸரில் இருந்தான். தந்தையின் சாவுக்காக அவன் பாட்னா வந்திருந்தான். சாவுக்கு வந்தவர்கள் ஒவ்வொருவராக அவனிடம் சென்று துயரத்தை அறிவித்துவிட்டு கிளம்பிக்கொண்டிருந்தார்கள்.
எம்.எல்.ஏ வந்து இறங்கியதும் அஸ்வத் எழுந்து ஓடி அருகே வந்தான். அவனும் முற்றிய குடிகாரனாக இருப்பதை ராம்சரண் கண்டான். எம்.எல்.ஏ வணங்கியபடி “பார்த்து நீண்டநாட்களாகிறது. நெடுந்தொலைவுக்குப் போய்விட்டீர்கள்” என்றார்.
அஸ்வத் “மீண்டும் பாட்னா வரப்போகிறேன்” என்றான். திரும்பி ராம்சரணைப் பார்த்து புன்னகைத்து கைகளை நீட்டினான். ராம்சரண் அவன் கைகளைப் பற்றிக்கொண்டான்.
“இவர் ஒரு காலத்தில் உங்களுக்கு மிகவும் நெருக்கமானவர் என்று சொன்னார்கள்” என்றார் எம்.எல்.ஏ.
“எனக்கு இப்போதும் நெருக்கமானவர்தான்… அதனாலென்ன?” என்று அஸ்வத் சிரித்தான். ராம்சரணும் சிரித்தான்.
“எதையும் விட்டுவிடவே மாட்டீர்கள் என்று பழைய எம்.எல்.ஏ சொன்னார். எனக்கு அப்படிப்பட்ட அட்கள்தான் வேண்டும்” என்றார் எம்.எல்.ஏ.
“அப்பாவும் தாத்தாவும் எல்லாம் அப்படித்தான்… எங்கள் பரம்பரைக் குணம்” என்றான் அஸ்வத். “ராம் ஃபையாவுக்குத் தெரியுமே”
”ஆமாம், ஊரில் தெரியாதவர்கள் உண்டா?” என்றான் ராம்சரண்.
“சரி, துக்கவீடு… இதெல்லாம் முடிந்தபின் வாருங்கள். சாவகாசமாக அமர்ந்து ஒரு சாயங்காலத்தைச் செலவழிப்போம். பேச நிறைய இருக்கிறது” என்றார் எம்.எல்.ஏ.
”சொல்லவேண்டுமா? வந்துவிடுகிறேன்… “ என்று அஸ்வத் சொன்னான்.
(மேலும்)
Jeyamohan's Blog
- Jeyamohan's profile
- 835 followers
