இன்றைய கதைகளின் சித்தரிப்புச் சிக்கல்கள்
அண்மையில் ஓர் இலக்கிய இதழில் ஒரு போட்டியின் பொருட்டு வெளியிடப்பட்டிருந்த சிறுகதைகளை ஒன்றன்பின் ஒன்றாக படித்துக்கொண்டிருந்தேன். ஏற்கனவே எனக்கு இருந்த ஓர் அவதானிப்பு அக்கதைகளைப் படித்தபோது மேலும் வலுப்பெற்றது. அக்கதைகளில் புதியதாக எழுதுபவர்கள் மற்றும் இன்னமும் எழுதித் தேறாதவர்கள் செய்யும் சில குறிப்பிட்ட பிழைகள் பொதுவாக இருந்தன. இவற்றை சுட்டிக்காட்டுவதென்பது ஒருவேளை தொடர்ந்து கதைகளை எழுத முயல்பவர்களுக்கு உதவலாம்.
கதைகளை எழுத முயல்பவர்களிடம் எப்போதும் ஒரு எதிர்ப்புவிசையும் இருக்கும். அது இயல்பானது ,அவசியமானது .அதுவே அவர்களுடைய தனித்தன்மையை தக்கவைக்க உதவுவது. ஆனால் இத்தகைய கதைத் தொழில்நுட்பங்களை தெரிந்துகொண்டு எழுதுவதென்பது தாங்கள் எழுதுவதை தாங்களே புறவயமாகப் பார்ப்பதற்கும், தங்கள் எழுத்தை தொழில் நுட்பரீதியாக மேம்படுத்திக் கொள்வதற்கும் உதவும்.
முதலில் கதையின் தொழில் நுட்பம் எந்த அளவுக்கு முக்கியம் என்பதை தெளிவுபடுத்திக்கொள்ள வேண்டும்.
கதை என்பது இரண்டு நிலைகள் கொண்டது. முதல் நிலையில் அது ஒருவகையான எடுத்துரைப்புத் தொழில்நுட்பம்தான். ஓர் உணர்வை , ஒரு கருத்தை, ஒரு சித்திரத்தை வாசகர்கள் உள்ளே வந்து கற்பனையை விரித்துக்கொண்டு வாழும்படி மொழியில் விவரிப்பதுதான் அது. எழுதியவற்றிலிருந்து மேலும் விரிந்து முன்செல்லும்படி குறிப்புணர்த்திக் கூறுவதுதான் அது. அந்தத் தொழில்நுட்பம் பயிலப்படவேண்டியதும் தொடர்ந்து மேம்படுத்தப்பட வேண்டியதுமாகும்.
இரண்டாவது பகுதிதான் அதிலிருக்கும் அகவெளிப்பாடு என்பது. அல்லது ஆழ்மன வெளிப்பாடு. அது கதைத் தொழில்நுட்பத்திற்கு மேலதிகமாகத் தன்னியல்பாக நிகழவேண்டியது. மரக்கிளையில் அமர்ந்திருக்கும் பறவை என்று நான் எப்போதும் சொல்வதுண்டு. மரக்கிளை வேறு, பறவை வேறுதான். எப்போதும் மரக்கிளையில் பறவை வந்து அமர்வதும் இல்லைதான். அந்தப் பறவை மிக அஞ்சியது, எச்சரிக்கையானது. அது வந்தமர்வதற்கு அதற்கேயுரிய காரணங்களும், உணர்வு நிலைகளும், தற்செயல்களும் உள்ளன. ஆனால் அது வந்தமரும் தருணங்கள் தான் கலை என்று சொல்லப்படுகின்றன.
இலக்கிய வடிவத்தில் அடையப்படும் தேர்ச்சி என்பது எழுத்தாளனை சுயப்பிரக்ஞை இல்லாதவனாக எழுதச்செய்கிறது. தன்னை மறந்து அவன் ஒன்றைச் செய்யும்போதுதான் அவனுக்கு அப்பால் உள்ளவை அவனிடம் வந்து அமைகின்றன. மரக்கிளையில்தான் குருவி வந்து அமருமே ஒழிய மனிதர்கள் கைகளை நீட்டிக்கொண்டு நின்றால் வந்தமர்வதில்லை. அந்த தன்னுணர்வு அதை எச்சரிக்கை அடையச்செய்து விலகச்செய்துவிடுகிறது. வடிவத்தை அறியாமல் எவரும் அந்த தன்னியல்பான அந்த தன்மையை அடையமுடியாது.
ஆகவே வடிவத்தேர்ச்சியும், அதனூடாக வடிவத்தைக் கடந்து சென்று அதை மறந்துவிடுதலும்தான் அகவெளிப்பாட்டுக்கு ஒரே வழி. வடிவத்தேர்ச்சி என்பது வடிவத்தைப் பற்றிய தொடர்ந்த அவதானிப்பும், திரும்பத் திரும்ப செய்வதனால் வரும் பயிற்சியும் ஒருங்கே இணைந்தது. அதாவது வடிவப்புரிதல் என்பது ஓர் அறிதல். செய்து பழகுதல் என்பது பயிற்சி. கார் ஓட்டுவதனாலும் இவ்விரண்டும் ஒரே சமயம் அவசியமாகிறது.
வணிக எழுத்தாளர்கள் வடிவத்தைக் குறித்த தன்னுணர்வை அடைவதே இல்லை. உதாரணமாக தமிழில் முதன்மையான வணிக எழுத்தாளராகிய சுஜாதா இலக்கிய வடிவம் என்பதைப் பற்றிய விவாதம் எதையுமே தனக்குள் நிகழ்த்திக்கொள்ளவில்லை என்பதை அவருடைய கதைகளைப் படித்தால் தெரியும். அனைத்து கதைகளும் ஒரே வடிவத்தைக் கொண்டவை. கிட்டத்தட்ட ஓர் அச்சுமுத்திரை போன்ற தன்மை உடையவை. அந்த அச்சிலிருந்து ஒரே வடிவம்தான் வரும். வணிக எழுத்தாளர்கள் ஏராளமாகத் தொடர்ந்து எழுதுவதனால் அவர்களுடைய எழுத்து கைத்திறன் மிக்கதாகவும், பழக்கத்தால் வரக்கூடிய ஒழுக்கு கொண்டதாகவும் இருக்கும். அதை எளிய வாசகர்கள் விரும்புவார்கள்
இலக்கியவாதி அந்த இயல்பை ஒரு எதிர்மறை அம்சமாக, பலவீனமாகத்தான் காண்பான். ஒவ்வொரு கதைக்கும் அதற்கான பேசுபொருளும் உணர்வு நிலைகளும் மாறுபடுவது போலவே வடிவமும் மாறுபடவேண்டும் தனக்கான வடிவத்தை கதை அடையவேண்டும். ஒவ்வொரு உணர்வு நிலைக்கும் இசையில் ஒவ்வொரு ராகம் தோன்றுவதுபோல என்று வேண்டுமானால் சொல்லலாம். ஆகவே வடிவத்தைப்பற்றிய பிரக்ஞையும் தொடர்பழக்கமும் தான் இலக்கியத்தை அடைவதற்கு அவசியம். அந்த வடிவ பிரக்ஞையை அடையவேண்டும் என்பவர்களுக்காக மட்டுமே இந்த வரிகள்.
நான் முன்பு சொன்ன தொடக்கநிலை படைப்புகளில் முதன்மையாகக் காணும் சிக்கல் என்னவென்றால் ’செயற்கையான சித்தரிப்பு நுட்பம்’ என்று சொல்லலாம் ஒரு கதையைச் சொல்ல வரும்போது தன்னியல்பான ஓர் ஒழுக்குக்கு பதிலாக மிகக் கவனமாக எண்ணி எழுதப்படும் நுண்சித்தரிப்பு இவற்றில் பொதுவாக உள்ளது. அதாவது செயற்கையான அதிநுட்பங்கள் காணப்படுகின்றன.
சிறுகதை என்பது அடிப்படையில் ’சொல்லாதே காட்டு’ என்னும் முதல் விதியைக்கொண்டது. கதையைச் சுருக்கமாக சொல்ல ஆரம்பிப்பதுதான் நாம் அனைவருமே எழுத ஆரம்பிக்கும்போது செய்வது. ஆசிரியனே ஒரு நிகழ்வை வாசகனிடம் சொல்வது போல நாம் ஆரம்பத்தில் எழுதுவோம். அன்றாட வாழ்வில் மிக அவசியமானவற்றை மட்டுமே சொல்கிறோம். அந்த சுருக்கம் இலக்கியத்திற்கு எதிரானது. இலக்கியமென்பது விரித்துச்செல்லும் கலைதான். Detail தான் கலை. Art is in details என்று சொல்லப்பட்டபோது God is in details என்று Gustave Flaubert அதற்கு பதில் சொன்னார் என்பார்கள்.
“ராமசாமி காலையில் வீட்டைவிட்டு கிளம்பியபோது எதிரே குப்புசாமி வந்தார். குப்புசாமியிடம் அவர் நான் இன்றைக்கு பெண் பார்க்கபோகிறேன் என்றார்’ என்ற வகையில் ஒரு கதையை ஆரம்பிப்பதுதான் சுருக்கமாகச் சொல்வது. அதில் வாசகனுக்கு ’தெரிந்துகொள்ளும்’ அனுபவம் தான் கிடைக்கிறது. அது இலக்கிய அனுபவம் ஆவதில்லை. இலக்கிய அனுபவம் என்பது மொழியினூடாக ‘வாழும்’ அனுபவம்தான். அப்படிக் கிடைக்கவேண்டும் என்றால் அது காட்சி வடிவமாகவேண்டும்.
’வீட்டைவிட்டு கிளம்பும்போது தன் சட்டை சரியாக சலவை செய்யப்பட்டிருக்கிறதா, மடிப்பு கலையாமல் இருக்கிறதா என்று ராமசாமிக்கு சந்தேகமாக இருந்தது. புதிய வெள்ளைநிறச் சட்டைதான். ஆனால் பெட்டியில் கொஞ்சநாள் இருந்தது. திரும்பி இன்னொரு தடவை போய் கண்ணாடியில் பார்க்கலாமா என்று யோசித்தான். ஆனால் அப்போதே ராகு காலம் கடந்துவிட்டிருந்தது. பெண் பார்க்கப்போகும்போது இத்தகைய நம்பிக்கைகளை கடக்கவே முடிவதில்லை. அவை நம்பிக்கையற்றவர்களுக்கு கூட ஒரு சின்ன எச்சரிக்கையாக கூடவே வந்துகொண்டிருக்கின்றன’
என்று ஆரம்பித்தால் அதை வாசிக்கும் வாசகன் தன்னை அடையாளப்படுத்திக்கொண்டு ,அந்தத் தருணத்தை கண்களில் விரித்துக்கொண்டு, உடன் வரத்தொடங்குவான். இதுதான் வேறுபாடு.
ஆனால் நான் சொன்ன கதைகளைப் படிக்கும்போது சித்தரிப்பு தேவைக்குமேல் அடர்த்தியும் நுட்பமும் கொண்டதாக ஆகிறதோ, அந்த நுட்பமும் செயற்கையானதாக இருக்கிறதோ என்று தோன்றுகிறது. காட்சிகளை சொல்லும்போது அந்தக் காட்சியின் முக்கியத்துவம் என்ன, அந்தக் காட்சியில் அளிக்கப்படும் தரவுகளும் நுட்பங்களும் மேலும் அக்கதைகளில் எந்த அளவுக்கு விரிகின்றன என்பதும் கவனத்தில் கொள்ளப்படவேண்டும்.
உதாரணமாக, ஒரு சிறுவன் முச்சந்தியில் மற்ற நண்பர்களுடன் விளையாடிக்கொண்டிருக்கிறான். அது அந்தக்கதைக்கு ஒரு தொடக்கம் மட்டும்தான். அவனுடைய அப்பா இறந்துபோன செய்தி இன்னும் சற்று நேரத்தில் வரப்போகிறது. அதிலிருந்துதான் உண்மையில் கதையே ஆரம்பிக்கிறது. அப்படி என்றால் அந்த விளையாடும் சித்திரத்தை மிக நுட்பமாகவும் விரிவாகவும் அளிக்க வேண்டியதில்லை. அந்த விளையாட்டின் உற்சாகத்தை சொல்லும் ஒருசில வரிகள், அந்த தெருவை வாசகன் காட்சிப்படுத்தும் ஓரிரு வரிகள் மட்டுமே போதுமானது.
ஆனால் பல கதைகளில் அந்த சிறுவன் விளையாடும் தெரு, அதிலுள்ள நண்பர்கள், அப்போதுள்ள மனநிலை எல்லாமே மிகவிரிவாகச் சொல்லப்பட்டிருக்கும். கதையின் எல்லா தருணத்தையும் இவ்வாறு விரித்துரைக்க ஆசிரியர்கள் பலர் முயல்கிறார்கள். இன்னொன்று இவ்வாறு விரித்துரைக்கும்போது மொழி தடங்கலின்றி தன்னியல்பாக வரவேண்டும். அவ்வாறன்றி மொழியை சிடுக்கான சுழலும் சொற்றொடர்களில் அமைத்து அக்காட்சியை விவரித்திருந்தால் வாசகன் மிகக் கவனமாக அதை படிக்க வேண்டியிருக்கிறது. ஆனால் அதன் விளைவாக அவனுக்கு கிடைப்பது ஒரு பையன் தெருவில் விளையாடிக்கொண்டிருக்கும் எளிய சித்திரம் மட்டும் தான்.
நூல்கண்டு போல மொழி இருக்கும்போது வாசகன் கவனம் கூர்மையடைகிறது. அத்தகைய கூர்மை அடைந்த கவனமானது தான் அளிக்கும் உழைப்பிற்கு ஏற்ற முக்கியத்துவம் கொண்ட ஒரு விஷயம் அதில் சொல்லப்பட்டிருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறது. அவ்வாறன்றி மிக எளிய ஒரு விஷயம் அதற்கு கிடைக்கும் என்றால் ஏமாற்றப்பட்டதாக உணர்கிறது, எரிச்சலடைகிறது.
தன்னியல்பான சித்தரிப்பு என்பது என்ன? நீங்கள் நல்ல கதைசொல்லி என்றால் நண்பர்களிடம் பேசிக்கொண்டிருக்கையில் ஒரு காட்சியை நீங்கள் அவர்களுக்கு சொல்லும்போது அங்கே தேவையற்ற அடர்த்தியை திணிக்க மாட்டீர்கள். அந்த தருணத்தில் எழும் உணர்வு எழுச்சிக்கு ஏற்ப மிக சாதாரணமாகவும், அதே தருணத்தில் அவர்கள் அனைவரையும் மகிழ்விப்தாகவும், அவர்களுடைய கவனத்தை குவிப்பதாகவும் அக்காட்சியை வர்ணிப்பீர்கள். அந்த அளவுக்கு ஒரு கதையில் இருந்தால் போதுமானது. அதாவது சுருக்கமான செய்தியாகவும் இருக்கக் கூடாது. வளவளப்பாகவும் அமையக்கூடாது. மிகையான செறிவும் செயற்கையான நுட்பமும் கொண்டதாகவும் இருக்கலாகாது.
தொடக்க நிலையில் மொழி தன்னியல்பான ஒழுக்குடன் வருவது அரிதுதான். ஆனால் கூடுமானவரை அதற்காக முயன்று கொண்டே இருக்கவேண்டும் என்று நினைக்கிறேன். சில தருணங்களில் ஐம்பது கதைகளை எழுதியவர்களின் கதையைப் படிக்கும்போது கூட வரும் இந்த செயற்கை நுட்பமும் மொழிச் சிடுக்கும் உள்ளது என்பது மிக அலுப்பூட்டக்கூடியதாக இருக்கிறது. ஒரு கதை தேவையற்ற தரவுகளுடனும், செயற்கை நுட்பங்களுடனும் பயிற்சியற்ற அடர்த்தியான மொழியில் எழுதப்பட்டிருக்கும் என்றால் அது ’செறிவான’ கதை அல்ல. அவ்வாறு தோன்றுவது ஒரு பிரமைதான் வாசகன் அதை ’கலங்கியிருப்பது, சிக்கல் கொண்டிருப்பது’ என்றே எடுத்துக்கொள்வான்.
கலைப்படைப்பு சிக்கல் கொண்டதாக இருக்கலாம், அல்லது எளிமையானதாக இருக்கலாம். சிக்கல் எனில் அது அக்கதையில் அது வெளிப்படுத்தும் சிந்தனைக்கும் உள்ளுணர்வுக்கும் உணர்வு நிலைகளுக்கும் ஏற்ப அடைந்த சிக்கல்களாகவே இருக்கவேண்டும். தவிர்க்க முடியாததாகவே வெளிப்பட வேண்டும். ஒரு மனித உடலில் நுட்பமானதும் சிக்கலான பகுதிகள் உண்டு. எளிமையான நேரடியான பகுதிகள் உண்டு. ஒவ்வொன்றுக்கும் அதற்கான அமைப்பு நியாயங்கள் உண்டு. கலையின் விதி ஒன்றே. அதில் எப்பகுதியும் தேவையற்றதாக இருக்காது.
Jeyamohan's Blog
- Jeyamohan's profile
- 834 followers
