காவியமுகாம், பதிவுகள்
மதிப்பிற்குரிய ஜெயமோகன் அவர்களுக்கு,
வணக்கம்,
எனது முதல் காவிய முகாம் அனுபவமாக வெள்ளிமலையில் மூன்று நாட்கள் அமைந்தது.முதலில் இத்தகைய இடத்தில் வகுப்புகளை நடத்தும் திட்டம் ஒன்றை நடத்த தோன்றியதற்கே தங்கள் மீதான வியப்பும், மதிப்பும் கூடியது.
அதுவும் இன்றைய நவீனமய சூழலில் ஒரு மலை தங்குமிடத்தில் இதுபோன்ற பண்பாடு, கலை, இலக்கியம் சார்ந்த கற்றல் வகுப்புகளை பயிலும் போது உண்டாகும் நேர்மறை சிந்தனையை காவிய முகாம் நடந்த மூன்று நாட்களில் உணர முடிந்தது.துளியளவு எதிர்மறை எண்ணங்களையும் தூண்டாத வலிமை இயற்கைக்கு இருப்பதாகவே நினைக்கிறேன்.
கம்பனில் தொடங்கி முன்வரலாற்று எழுத்துரு அமர்வு வரையில் ஒவ்வொன்றிலும் கற்று கொள்ளவும் பயிலவும் எண்ணற்றவை கொட்டி கிடந்தது. இடைவெளிகளில் மூத்த படைப்பாளிகளான நாஞ்சில் நாடன், பாவண்ணன், நிர்மால்யா போன்றோருடனும் , எங்கோ இருந்து வந்து சக தோழர்களான பலருடன் இலக்கியம், இசை பற்றி காலை முதல் இரவு வரை உரையாடும் வாய்ப்பு எந்த சூழலிலும் கிடைக்காத பேரனுபவமாக அமைந்தது .
நவீன சிறுகதைகளை எப்படி அணுக வேண்டும் என்பதை கன்னட சிறுகதைகள், சிங்கப்பூர் சிறுகதைகள் , அறிவியல் புனைக்கதைகள் போன்ற சில அமர்வுகளை போல எவ்வாறு அணுக கூடாது என்பதை சரவணன் சந்திரன் சிறுகதைகள், ஷோபா சக்தி சிறுகதை. அமர்வுகளுக்கு பின் நடந்த கேள்வி விவாதங்களில் இன்னும் நுணுக்கமாக அறியும் வாய்ப்பு கிடைத்தது.
கம்பர் பாடல்கள், நெய்தல் திணை பாடல்கள், கஸல் கவிதைகள் அமர்வுகள் தந்த எளிமையும் இனிமையும் புரிதலுக்குரியவை.காவிய முகாம் முடித்து வந்த பின் தங்களின் “மழைக்குப் பின்” கட்டுரையை வாசிக்கையில் வருகிற உணர்வு தனிசுகம்.
தங்கள் வாராமையை உணர்ந்து அவ்விடத்தில் அதை சமன் செய்யும் பல முகங்களை காண முடிந்தது. அத்தகைய ஆளுமைகளை அடையாளங்காட்டும் தங்களுக்கு வணக்கங்கள்.
இத்தகைய நல்வாய்ப்புக்கு நன்றி.
அன்புடன்,
ச.மதன்குமார்.
Jeyamohan's Blog
- Jeyamohan's profile
- 834 followers
