Jeyamohan's Blog, page 68

June 28, 2025

புத்தகக் குழுமங்கள்- குழந்தைகளுக்கான மீட்பியக்கம்.

மின்னணு அடிமைத்தனமும் மீட்பும்

எண்பதுகளில் நூல்குழுமம் (Book club) எனும் அமைப்பு சர்வதேச அளவில் மிகப்புகழ் பெற்றிருந்தது. கேரளத்தில் எல்லா நூலகங்களிலும், நூல்விற்பனையகங்களிலும் அவை நடைபெற்றன. ருஷ்ய கலாச்சார மையம் போன்ற அமைப்புகளும் நூல்குழுமங்களை நடத்தின.

ஒரு காலத்தில் ஒரு குறிப்பிட்ட துறை சார்ந்த நூல்களைப் படிக்கும் வாசகர்கள் தங்களுடைய கருத்துக்களை ஒருவருடன் ஒருவர் பகிர்வதற்காக உருவாக்கிக்கொண்ட சிறிய கூடுகைகள்  ‘புக் கிளப்’ எனப்பட்டன. உதாரணமாக மிகத்தொன்மையான நூல்குழுமம் என்பது உலகெங்கும் கிடைத்து வந்துகொண்டிருந்த தொல்லியல் தடயங்களை ஒருவரோடொருவர் விவாதித்து பரிசீலித்து புரிந்துகொள்ளும் பொருட்டு லண்டனில் உருவாக்கப்பட்ட ராயல் ஆர்கியாலஜிகல் கிளப் என்பது. பின்னர் அதுதான் இன்று உலகமெங்கும் கிளைவிரித்து மாபெரும் அறிவியக்கமாக நின்றிருக்கும் ராயல் ஏசியாட்டிக் சொசைட்டியாக மாறியது. இவ்வாறு தாவரவியல், சிற்பவியல், மொழியியல் என பல்வேறு துறைகளுக்கு புக் கிளப்கள் உருவாயின.

ஆனால் சென்ற இருபதாண்டுகளாக ஐரோப்பாவிலும் அமெரிக்காவிலும் குழந்தைகளுக்கான நூல்குழுமம் என்பது ஒரு புதிய கருத்துருவமாக மீண்டும் உருவாகி வந்துகொண்டிருக்கிறது. பெற்றோர் குழந்தைகளை அந்த புத்தகக் குழுக்களுக்கு அழைத்துக்கொண்டு சென்று இளமையிலேயே குழந்தைகளை புத்தக உலகுக்குள் அறிமுகம் செய்கிறார்கள். அங்கே குழந்தைகள் எழுந்து பேசுவதற்கும் விவாதிப்பதற்கும் ஊக்குவிக்கப்படுகிறார்கள்.

குழந்தைகளை புத்தக வாசிப்பிலிருந்து விலக்கி நவீன மின்னணு சூதாட்டங்களுக்கும், சமூக வலைத்தள ஊடாட்டங்களுக்கும் பழக்கப்படுத்தும் ஒரு பெரும் சூழல் நம்மைச்சுற்றி உருவாகி வந்திருக்கிறது. பலகோடி ரூபாய் முதலீடு கொண்ட மாபெரும் வணிகம் அது. குழந்தைகளை உள்ளே இழுத்து வெளியேற முடியாமல் வைத்துக்கொள்ளும் ஆற்றல் கொண்ட செயலிகள் அவை. தொடர்பியல், ஊடகவியல் நிபுணர்களால் அவை உருவாக்கப்படுகின்றன. அவை குழந்தைகளை இழுத்து மாபெரும் சராசரிகளாக ஆக்கிக்கொண்டே இருக்கின்றன. அவற்றை வெல்வது எளிதல்ல. சூழலில் இருந்து அவை குழந்தைகளை நோக்கி வந்துகொண்டே இருக்கின்றன, ஆகவே குழந்தைகளை அவற்றிலிருந்து விலக்குவதும், அவற்றை நோக்கிச் சென்றுவிட்ட குழந்தைகளை தடுப்பதும் இயலவே இயலாதது. அவற்றுக்கு இணையான மாற்று உலகம் ஒன்றை குழந்தைக்கு அளிப்பதே ஒரே வழி. அவ்வாறுதான் நூல்குழுமங்கள் மீண்டும் உருவாகி வந்துள்ளன.

இன்றைய செயற்கை நுண்ணறிவுக் காலகட்டத்தில் சராசரி வேலைகளை எல்லாம் செயற்கை நுண்ணறிவு செய்யும் என்னும்போது ஒரு சராசரி அறிவை அடையும் ஒருவர் தன்னைப் பயனற்றவர் ஆக்கிக்கொள்கிறார் என்றுதான் பொருள். ஒருவருக்கான தனித்திறன் என்ன, அவர் மட்டுமே செய்யும் பணி என்ன என்பதுதான் இன்றைய முதன்மைக்கேள்வியாக இருக்கிறது. அந்த தகுதியை அடையவேண்டும் என்றால் ஒருவ அனைவரும் ஈடுபடும் எதிலும் ஈடுபடாமல் இருப்பதுதான் ஒரே வழி. சமூக வலைத்தளங்கள் வழியாகவோ, நவீன மின்னணு துறை வழியாகவோ ஒருவர் தன் தனித்திறனை அடையவே முடியாது. ஏனெனில் அவை பலகோடி பேருக்காக உருவாக்கப்பட்டவை. பலகோடி ரூபாய் முதலீடு கொண்டவை.

தனித்திறன் என்பது தனக்கான துறையை கண்டடைதல், அதில் தனக்கான சிந்தனைமுறையை உருவாக்கிக்கொள்ளுதல் ஆகியவற்றின் வழியாகத்தான் உருவாகும். தனக்கான ஓர் உலகை புத்தக வாசிப்பின் வழியாகவே ஒரு குழந்தை கண்டடைய முடியும். ஆனால் இன்றைய சூழல் புத்தக வாசிப்புக்கு முற்றிலும் எதிராக இருக்கும்போது அவர்களை புத்தக வாசிப்பில் எப்படி கொண்டு செல்வது, எப்படி அதற்குள் செயல்படவைப்பது என்பது உலகமெங்கும் எழுந்துள்ள வினா. அதற்காகவே அறிவை வழிபடும் நாடுகளில் பெற்றோரும் கல்வியியலாளர்களும் முட்டிமோதுகிறார்கள்.

பெற்றோர் கொடுக்கும் அழுத்தத்தால் எந்தக் குழந்தையும் படிப்பதில்லை. பெற்றோரின் முன்னுதாரணத்தால் மட்டுமே குழந்தை படிக்க முடியும். அப்போது கூட அதன் சூழல் அதை வெளியே இழுத்துக்கொண்டே இருக்கும். குழந்தையின் சராசரி நண்பர் வட்டம் புத்தகத்திலிருந்து விலக்கி அவர்கள் ஈடுபடும் சராசரி செயல்களை நோக்கி அக்குழந்தையை ஆற்றுப்படுத்திக்கொண்டே இருக்கும். கேலி, கிண்டல் வழியாகவும் விமர்சனம் வழியாகவும் கூட்டு அழுத்தம் வழியாகவும் நூல்களைப் படிக்கும் குழந்தையை நூல்களைப் படிக்காத  குழந்தை சமூகவலைத்தள உலகம், மின்னணுவிளையாட்டு உலகம் நோக்கி இழுத்துக்கொண்டே இருக்கும்.

அதிலிருந்து வாசிக்கும் குழந்தைகளை காப்பாற்றிக் கொள்வதற்காக அக்குழந்தைகளை அதே ரசனை கொண்ட பிற குழந்தைகள் அடங்கிய ஒரு வாசிப்புக் குழுமத்திற்குள் கொண்டு செல்லலாம். அத்தகைய ’புக் கிளப்’ஸ் குழந்தைகளை மிகவும் ஊக்கத்துடன் வாசிப்புக்குக் கொண்டு செல்கிறது என்று கண்டடையப்பட்டுள்ளது. ஏனெனில் அங்கே குழந்தை வெறும் பார்வையாளர் அல்லது பங்கேற்பாளர் மட்டுமல்ல. அக்குழந்தை அங்கே தன் வெளிப்பாட்டை நிகழ்த்துகிறது. ஒரு ஐந்தாம் வகுப்புக் குழந்தை தான் படித்த ஒரு நூலைப் பற்றி பதினைந்து பேர் கொண்ட ஒரு சபையில் எழுந்து பேசுகிறது என்றால் பிறகு ஒருபோதும் அது அந்த சுவையிலிருந்து வெளியே செல்லாது. ஏனெனில் அது அதற்குள் இருக்கும் ஓர் ஆணவத்தை நிறைவு செய்கிறது. மேலும் முன்செல்லவேண்டும் என்கிற துடிப்பை உருவாக்குகிறது. செயலூக்கம் படைப்பூக்கம் அளிக்கும் நிறைவை அக்குழந்தை அறிந்துவிட்டது. அதன்பிறகு தொடர்ந்து அங்கு அது பேசவும் விவாதிக்கவும் தொடங்கிவிடும்.

நூல்களைச் சார்ந்து விவாதிக்கும்  ஒரு குழந்தை அறிவுலக விவாதமென்ற அந்த மாபெரும் இயக்கத்துடன் தன்னை தொடர்புறுத்திக் கொண்டதென்றால், அதன்பிறகு அதற்கு சராசரித்தனம் கொண்ட விளையாட்டுகள் எதிலும் ஆர்வம் இருக்காது. இந்த புக் கிளப்ஸ் குழந்தைகளுக்காகவும், வெவ்வேறு அகவையினருக்காக உலகம் முழுக்க இன்று தொடர்ந்து உருவாக்கப்படுகின்றன. அவை இன்று இணையத்தை பயன்படுத்தியும் பிரச்சாரம் செய்யப்படுகின்றன.

அத்தகைய புத்தகக் குழுக்களை மிகச் சிறுபான்மையினரே நாடுகிறார்கள் என்பது ஓர் உண்மை. ஏனெனில் அவற்றுக்கு இன்றைய நவீன ஊடகங்களின் பிரச்சார வல்லமை இல்லை. ஒருவகையான தலைமறைவு இயக்கங்களாகவேதான் அவை நடக்க வேண்டியிருக்கிறது. அண்மையில் பெங்களூர் சென்றபோது அங்கே ஒரு புத்தகக்கடையில் ஒரே சமயம் ஐந்து வெவ்வேறு புக்கிளப்ஸ்களின் உரையாடல் அமர்வுகள் நடந்துகொண்டிருப்பதையும், பெரும்பாலானவற்றில் சிறுவர்கள் அமர்ந்திருப்பதையும் பார்த்தேன். சென்னையில் அவ்வாறு எங்காவது நடக்கிறதா என்று விசாரித்தபோது நான் அறிந்தவரை எங்கும் நிகழவில்லை என்றே தெரிந்தது.

அதைப்பற்றி பேசிக்கொண்டிருந்தபோது மானஸா பதிப்பகம் தொடங்கப்படும்போது அடையாறில் அதற்கு உருவாகியிருக்கும் புதிய அலுவலகத்தில் இவ்வாறு புத்தக விவாதங்களை வாரந்தோறும் நிகழ்த்தினால் என்ன என்று பேசினேன். அவை புத்தக வாசிப்புக்கும் உதவும் ஒரு புத்தகச் சமூகத்தை கொஞ்சம் கொஞ்சமாக கட்டி எழுப்பவும் உதவும்.

ஆனால் எந்த செயலும் முதலில் தமிழ்ச் சமூகத்திலிருந்து புறக்கணிப்பையும் எதிர்ப்பையுமே உருவாக்கும். ஏனெனில் நம்முடைய சமூகம் பெரும்பாலும் நடுத்தர வர்க்க மனநிலைகளால் ஆனது.  ‘எல்லாரையும்போல் இருப்பது’ ‘நாலுபேரைப்போல் நடந்துகொள்வது’ என்பதுதான் நம்முடைய வாழ்க்கைக்கொள்கை. அனைவரும் குழந்தைகளிடம் செல்போன் எடுத்துக் கொடுத்தால் நாமும் எடுத்துக்கொடுக்கும் பண்பாடு நம்முடையது. ஆகவே தனியாக எந்த ஒன்றைச் செய்தாலும் அது ஏதோ வகையில் தேவையற்றது என்ற எண்ணமும், அர்த்தமற்ற எதிர்ப்பும்தான், அசட்டுக் கேலியும்தான் நம் சமூகத்திலிருந்து கிளம்பும்.

அதைக்கடந்து இத்தகைய செயல்களை செய்து நிலை நிறுத்துவதற்கு ஒரு பிடிவாதம், எளிதில் தளராமை தேவை. ஒவ்வொன்றும் கணந்தோறும் தாவிச்சென்றுகொண்டே இருக்கும் இன்றைய உலகில் Consistency என்பதுதான் பிற அனைத்தையும் விட முதன்மையான தகுதியாக இருக்கிறது. அது குழந்தைகளிடம் வாசிப்பிலும் இருக்கவேண்டும். இந்த வகையான வாசிப்பு அமைப்புகளை உருவாக்கி நடத்துவதிலும் இருக்கவேண்டும். அவ்வாறு ஒரு தொடர் புத்தக இயக்கம் ஒன்றை மானஸா பதிக்கம் சார்பில் நடத்த முடியுமென்றால் அது வெற்றியாகவே அமையும்.

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on June 28, 2025 11:35

காவியம் – 69

கானபூதி சொன்னது. குணாட்யரின் அருகே காட்டுசேப்புச் செடிகள் யானைக்காதுகள் போல இலைவிரித்து நின்றிருந்தன. அவர் அதில் ஓர் இலையைப் பறித்து தரையைத் துழாவி எடுத்த சிறிய முள்ளைக்கொண்டு நுணுக்கமாக எழுதத் தொடங்கினார். அவர் எழுதியவற்றை அவரால் படிக்கவோ திருத்தவோ முடியாது. அவர் விரல்கள் இலைமேல் அசைந்தபடியே இருந்தன. எழுதிய இலைகளை தன்னருகே அடுக்கி வைத்தபடி அவர் காட்டு சேப்பு இலைவிரித்து அடர்ந்திருந்த அரைச்சதுப்பில் முன்னகர்ந்து சென்றுகொண்டிருந்தார்.

என் நிழல்கள் பிரதிஷ்டானபுரிக்குச் சென்றன. அங்கே கோதாவரிக்கரையில் குடில் கட்டி வாழ்ந்து கொண்டிருந்த குணாட்யரின் மாணவர்களான குணதேவனையும் நந்திதேவனையும் அணுகி, அவர்களின் செவிகளில் அவர் காவியம் எழுதும் செய்தியைக் கூறின. தங்கள் உள்ளத்தில் தோன்றிக்கொண்டே இருந்த அந்த எண்ணத்தைக் கண்டு வியந்த அவர்கள் இருவரும் காட்டுக்குள் குணாட்யரைத் தேடிவந்து கண்டடைந்தனர். அவர் எழுதிய காவியத்தை அவர்கள் வாசித்தறிந்தார்கள். அவற்றை ஓலைகளில் உடனே எழுதிக்கொண்டனர். காட்டிலேயே அவருக்கு ஒரு குடிசை கட்டி அவருடன் தாங்களும் தங்கினார்கள்.

ஏழு ஆண்டுகள் இரவும் பகலும் குணாட்யர் எழுதிக்கொண்டிருந்தார். அவருடைய மாணவர்கள் அவருக்கு தேனும் கனிகளும் கிழங்குகளும் கொண்டு வந்து அளித்தார்கள். அவர் எழுதுபவற்றை உடனுக்குடன் பிரதி எடுத்துக்கொண்டார்கள். நிறைவடைந்தபோது அந்த பெருங்காவியம் ஏழு காண்டங்களில், ஏழாயிரம் உபாக்யானங்களில், எழுபதாயிரம் சர்க்கங்களில், ஏழு லட்சம் பாடல்களில் அமைந்திருந்தது. ஐம்பத்தாறு லட்சம் வரிகள், இரண்டரைக்கோடி சொற்கள் கொண்டிருந்தது. பாரதத்தில் எழுதப்பட்ட அத்தனை காவியங்களையும் அது தன்னுள் அடக்கியிருந்தது. எழுதப்படவிருக்கும் காவியங்கள் அனைத்துக்குமான கதைகளை மேலும் கொண்டிருந்தது.

”மறு எல்லை காண முடியாத பெருங்கடல். அதன் ஒரு துளியே ஒரு கடலென்னும் ஆழம் கொண்டது” என்று அதை முழுக்க ஓலையில் எழுதிக்கொண்ட குணதேவன் சொன்னார்.

“இனி இங்கே சொல்வதற்கேதும் இல்லை. கேட்பதற்கு ஆயிரம் ஆயிரம் தலைமுறைகள் பிறந்து வந்தாக வேண்டும்” என்று நந்திதேவன் சொன்னார்.

“இதைக் கொண்டுசெல்லுங்கள். பிரதிஷ்டானபுரியின் காவியசபையில் இதை நிறுவுங்கள். இனி இதுவே இங்கு காவியம் என்னும் சொல்லின் பொருள் என நிலைகொள்ளவேண்டும்” என்று குணாட்யர் சொன்னார். “முதல் ஞானி அதர்வனும், ஆதிகவி வால்மீகியும், முதல்வியாசனும், மகாசூதர் உக்ரசிரவஸும் சொன்னவை அனைத்தும் இதிலுள்ளன. அச்சொற்கள் முளைத்துப் பெருகிய கதைகள் ஒவ்வொன்றும் இதில் விரிந்துள்ளன. இங்கே வாழ்ந்தவர்கள் இனி வாழ்பவர்களுக்குச் சொல்லும் ஒவ்வொரு சொல்லும் இதிலுள்ளது”

அந்தக் காவியத்தை எழுபது பெரிய நார்ப்பெட்டிகளில் அடுக்கி அவற்றை ஊரில் இருந்து அழைத்துவந்த சுமைதூக்கிகளின் தலையில் ஏற்றிக்கொண்டு குணதேவனும் நந்திதேவனும் பிரதிஷ்டானபுரியின் காவியசபையைச் சென்றடைந்தார்கள். அவர்கள் வரும் செய்தி அதற்குள் நகருக்குள் பரவியிருந்தது. நகரின் கோட்டை முகப்பு முதல் அவர்களுக்குப் பின்னால் கூட்டம் சேர்ந்துகொண்டே இருந்தது. அவர்கள் வாக்பிரதிஷ்டான் என்னும் அந்த சபையைச் சென்றடைந்தபோது நகரின் அத்தனை புலவர்களும், கவிஞர்களும், பாடகர்களும், மாணவர்களும் அங்கே திரண்டிருந்தார்கள்.

சபைக்கூடத்தில் வாக்பிரதிஷ்டானத்தின் சதுர்வித்வத்கோசத்தின் நவரத்னாவளியின் ஒன்பது பெரும்புலவர்களான சர்வவர்மனும், ரத்னாகரரும், திரிவிக்ரமரும், குணபூஷணரும், சுபாஷிதரும், பிரபாகரரும், அஸ்வதரரும், சுபகரும் அவைக்கு வந்து அமர்ந்திருந்தனர். கனகமாலாவின் பதினெட்டு புலவர்களும், ரஜதமாலாவின் வட்டத்தின் நூற்றியெட்டு புலவர்களும் இருந்தனர். அக்ஷமாலாவின் அத்தனை புலவர்களும் வந்திருந்தனர். அவர்களின் மாணவர்களும் இணைந்துகொண்டபோது சபை தலைகள் நிறைந்து தென்பட்டது.

வாக்பிரதிஷ்டான சபையின் வாசலில் சென்று நின்று கணதேவன் சொன்னான். “இந்த பாரதவர்ஷம் கண்ட முதற்பெரும் கவிஞர் குணாட்யரின் மாணவனாகிய கணதேவன் நான். இந்த மண் கண்ட மிகப்பெரிய காவியத்தை இந்தச் சபையில் அரங்கேற்றம் செய்ய வந்திருக்கிறேன்”

நந்திதேவன் சொன்னான், “இதுவரை இங்கே இயற்றப்பட்டவையும் பயிலப்பட்டவையுமான எல்லா காவியங்களுக்கும் இதுவே அன்னை. இதுவரை இங்கே தோன்றிய நூல்களெல்லாம் மரங்களும் செடிகளும் என்றால் இதுவே தாய்மண். இனி பிரதிஷ்டானபுரியின் இந்தச் சபை இக்காவியத்தாலேயே அறியப்படுவதாகுக!”

அச்செய்தி அரசர் அக்னிபுத்ர சதகர்ணியைச் சென்றடைந்திருந்தது. அவர் தன் பட்டத்து யானையை அலங்கரித்து அனுப்பி அந்நூலை எதிர்கொண்டு வரவேற்கச் செய்து வாக்பிரதிஷ்டானச் சபைக்குக் கொண்டு சென்றார்.

சபைக்குள் அக்காவியம் அடங்கிய பெட்டிகள் சென்று அமைந்தபோது ஆழ்ந்த அமைதி நிலவியது. அங்கிருந்த ஒவ்வொருவரும் தங்கள்மேல் பெரும் எடை ஒன்றை உணர்பவர்கள் போலிருந்தார்கள். சிறிய ஒலிகள்கூட அவர்களில் அதிர்வை உருவாக்கின.

வழக்கம்போல அத்தனை சபை நிகழ்வுகளும் நடைபெற்றன. ஆனால் எப்போதும் எழும் உரத்த வாழ்த்தொலிகளும், ஏற்பொலிகளும் எழவில்லை. அனைவரும் பிரமை பிடித்து அமர்ந்திருப்பவர்கள் போலிருந்தார்கள்.

முறைப்படி சபை தொடங்கியதும் கோல்காரன் எழுந்து அங்கே அரங்கேற்றத்திற்கு குணாட்யரின் மாபெரும் காவியம் கொண்டு வரப்பட்டுள்ள செய்தியை அறிவித்தான். ஆனால் சபையில் இருந்து ஒரு வாழ்த்தொலியோ வரவேற்புக்குரலோ எழவில்லை.

சபைத்தலைவரான சர்வவர்மன் கைகாட்டியதும் குணதேவன் எழுந்து வணங்கி அந்தக் காவியத்தைப் பற்றிச் சொன்னான். “இந்த வாக்பிரதிஷ்டான சபை பாரதவர்ஷத்தில் முதன்மையானது. இதன் தலைமைக் கவிஞராக இருந்த எங்கள் ஆசிரியர் குணாட்யர் பாரதவர்ஷத்தின் முதன்மைக்கவிஞர் என ஏற்கப்பட்டவர்”

“ஆனால் தோற்கடிக்கப்பட்டு அகற்றப்பட்டவரும்கூட” என்று சர்வவர்மனின் மாணவனாகிய அஸ்வபாலன் சொன்னான். சபையில் ஒரு முழக்கம் ஏற்பட்டது.

குணதேவன் அவனை கவனிக்காதவனாக சொன்னான். “என் ஆசிரியர் நகர்துறந்து காட்டுக்குச் சென்றார். அங்கே அவர் தன் ஏழாண்டுக்காலத் தவத்தால் இந்தப் பெரும் காவியத்தை இயற்றியிருக்கிறார். இதை இந்த சபையில் அரங்கேற்றவேண்டும் என எங்களுக்கு ஆணையிட்டிருக்கிறார். இதுவரை இந்த பாரதநிலத்தில் சொல்லப்பட்டவையும் கேட்கப்பட்டவையுமான எல்லா கதைகளும் இந்தக் காவியத்தில் உள்ளன. இனி இங்கே சொல்லப்படும் எந்த கதையும் இந்நூலில் இருந்தே தொடங்கும். இக்காவியத்தை அரங்கேற்றும் பேறு இச்சபைக்கு அமைந்துள்ளது என்றே சொல்வேன்”

சர்வவர்மன் “சில ஐயங்களை முதலில் களையவேண்டும் குணதேவரே” என்றார். “மகாகவிஞரான குணாட்யர் இங்கே இருக்கும்போது வேதம் முதலான அனைத்து நூல்களையும் கற்றறிந்தவர். அவற்றை இங்கே கற்பித்தவர். அவர் கற்று கற்பித்த கதைகளும் ஞானமும்தன் இந்நூலிலும் உள்ளனவா?”

“இல்லை, இதிலுள்ளவை அவர் தன் காட்டுவாழ்க்கையில் பெற்றவை”

“அங்கே அவர் எப்படி கற்றார்? கண்களும் செவிகளும் நாவும் இல்லாதவருக்கு எவர் கற்பிக்கமுடிந்தது?”

“சபையினரே, விந்தியமலைக் காட்டில் , கோதாவரிக் கரையில் பாரதநிலம் அறிந்த அத்தனை கதைகளையும் அறிந்த கானபூதி என்னும் பைசாசம் வாழ்கிறது. அதைப் பற்றி முன்னரே நம் நூல்களிலும் சொல்லப்பட்டுள்ளது. குபேரனின் சபையில் இருந்து சாபத்தால் மண்ணுக்கு வந்த சுப்ரதீகன் என்னும் யக்ஷனே கானபூதியாகியது. நம் நூல்களில் அகோரபைரவன் என்றும் உக்ரவீரபத்ரன் என்றும் வழிபடப்படும் தெய்வமும் அதுவே. சூலசிரஸ் என்னும் அரக்கனிடமிருந்து சுப்ரதீகன் கேட்டறிந்த கதைகளையும் பின்னர் இங்கு வாழ்ந்து அறிந்தவற்றையும் அந்தக் கதைசொல்லும் பிசாசு என் ஆசிரியருக்குச் சொன்னது. அவற்றையே என் ஆசிரியர் இக்காவியமாக எழுதியுள்ளார்”

“நல்லது, பிசாசின் கதை” என்று புன்னகையுடன் சர்வவர்மன் சொன்னார். “அந்தப் பிசாசின் கதைகள் இந்நகருக்குள் வர முடியும் என்றால் ஏன் அது மட்டும் காட்டில் இருக்கிறது?”

“காடு தெய்வங்கள் உறையும் இடம்” என்று நந்திதேவன் சொன்னான்.

“நகரிலும் தெய்வங்கள் வாழ்கின்றன. அவை மங்கலத்தெய்வங்கள்” என்று சர்வ வர்மன் சொன்னார். “எட்டு திருமகள்கள் இங்கே வாழ்கிறார்கள். அழகுவடிவமான திருமாலும், வெள்ளை எருதில் ஊர்பவனாகிய சிவனும், படைப்பவனாகிய பிரம்மனும் இங்கே திகழ்கிறார்கள். மூன்று தேவியரும் கோயில்கொண்டிருக்கிறார்கள்”

“எந்நகரில் வாழ்ந்தாலும் மனிதர்கள் இறுதியில் காட்டுக்குத்தான் சென்றாகவேண்டும்” என்று குணதேவன் சொன்னான். “அங்கே மெய்யுணர்த்தி நின்றிருக்கின்றன தெய்வங்கள்”

“அவை உணர்த்துவது மெய்தான் என்பதில் எனக்கு மறுப்பில்லை” என்று சர்வ வர்மன் சொன்னார். “ஆனால் மெய்யே இரண்டுவகை. வாழச்செய்யும் மெய் உண்டு. வாழ்வை துறக்கச்சொல்லும் மெய்யும் உண்டு. குலம்வாழச்செய்யும் மெய் உண்டு, எரித்து விபூதியாகச்செய்யும் மெய்யும் உண்டு. இது வாழும் நகர், அமைதியும் வளமும் கல்வியும் நிலைபெற்ற நகரம்”

“இந்நகரம் இதுவரைப் பேசிய அனைத்தும் முழுவடிவில் இந்நூலில் உள்ளன” என்று குணதேவன் சொன்னான். “இங்கு இதுவரை முன்வைக்கப்பட்ட அத்தனை நூல்களும் பிழையானவை என்று இந்நூல் காட்டும். பிழையான நூல்களின்மேல் கட்டப்பட்டவை எல்லாம் சரிந்துவிழும்… நமக்கு அடித்தளமாக அமையும் அழியாத உண்மையை இந்நூல் உரைக்கும்”

“இந்நூல் எந்த மொழியில் இயற்றப்பட்டது? குணாட்யர் தானறிந்த தேசமொழிகள் அனைத்தையும் உதறுவதாக அறிவித்தார் என்பதனால் கேட்கிறேன்” என்றார் ரத்னாகரர்.

“இது பைசாசிக மொழியில் அமைந்துள்ளது” என்று குணதேவன் சொன்னான். “ஆனால் அதை நான் சம்ஸ்கிருதத்திலும் பிராகிருதத்திலும் இன்னும் தேசபாஷைகளிலும் பொருள்சொல்லமுடியும்”

சுபாஷிதர் “அரசே, எனக்கு இந்நூல் இங்கே ஒலிப்பது சரியல்ல என்று படுகிறது. இது நாமறியாத மொழி. நாமறியாத ஏதோ தெய்வத்தின் சொல். அது நமக்கு ஒரு சாபத்தை இந்நூல் வழியாக இங்கே அனுப்பியிருக்கலாம். இந்நகர்மேல் அந்த சாபம் இந்நூல் வழியாகப் பரவலாம்” என்றார்.

சட்டென்று சபையில் இருந்து ஓங்காரமாக ஆமோதிப்பு எழுந்தது. பலர் தங்கள் கோல்களைத் தூக்கியபடி எழுந்து “ஆம்! மெய்!” என்று கூவினார்கள். “உண்மை அது” “நாம் யோசித்துச் செய்யவேண்டும்” என்று கூச்சல்கள் எழுந்தன.

குணதேவன் “நீங்கள் எதற்கு அஞ்சுகிறீர்கள் புலவர்களே? உங்கள் நூல்களெல்லாம் அழிந்துவிடும் என்றா?” என்றான். “அஞ்சவேண்டாம். இந்த முழுமுதல் உண்மை இங்கே நிலைகொள்ளும்போது உங்கள் நூல்கள் பொய்யாக ஆவதில்லை. அழகுள்ள பொய்களெல்லாம் உண்மைக்கு அணிகலன்களே ஆகும்”.

“இந்நூலை இங்கே அரங்கேற்றுவதற்கான காரணம் என்ன?” என்று சுபகர் கேட்டார். “இந்த சபையில் வேதாதிகாரம் கொண்ட அந்தணர்களின் ஞானநூல்களும், காவியங்களும், நெறிநூல்களும் அரங்கேறியுள்ளன. சதகர்ணிகள் நிஷாதர்களின் ரத்தம் கொண்டவர்கள் என்னும் பழிப்பேச்சு பிறநாடுகளில் உண்டு. அவற்றுக்கு நாம் அளிக்கும் பதில் அந்த நூல்கள்தான்… இந்த நிஷாதநூலை நாம் இங்கு அரங்கேற்றி ஒருவேளை அது பிற நூல்கள் அனைத்தையும் பொருளற்றதாக ஆக்கிவிடும் என்றால் அதன் விளைவு என்ன? சதகர்ணிகள் நிஷாதர்கள் என்று நிறுவப்படுவதா?”

“இந்நூல் நிஷாதர்களின் புகழ்பாடுவது என்பதில் சந்தேகமே தேவையில்லை” என்று அஸ்வதரர் சொன்னார். “சூலசிரஸ் சொன்ன அரக்கர்களின் கதைகளில் இருந்துதான் கானபூதி தன் கதைகளைத் தொடங்குகிறது. இதில் அரக்கர், அசுரர், நிஷாதர், பைசாசிகர்களின் கதைகள்தான் இருக்கும். சந்தேகமே வேண்டாம், இந்நூல் க்ஷத்ரியர்களுக்கும் பிராமணர்களுக்கும் எதிரானது. அவர்களின் அதிகாரத்தை நிறுவும் வேதங்களுக்கு எதிரானது. அவ்வேதங்களை ஒட்டி எழுந்த ஆதிகவியின் ராமாயணத்திற்கும் மகாவியாசனின் பாரதகாவியத்திற்கும் எதிரானது. இது நாம் எவற்றையெல்லாம் நம்பி இங்கே நிலைகொள்கிறோமோ அனைத்துக்கும் எதிரானது. இது நாம் நம் கூரைமேல் வைத்துக்கொள்ளும் கொள்ளி”

குணதேவன் அரசரை நோக்கி “அரசே, இந்த நூல் இங்கே அரங்கில் முன்வைக்கப்பட்ட பிறகு எழவேண்டிய விவாதங்கள் இவை. முதலில் இந்தச் சபை நூலை கேட்கட்டும். அவர்கள் சொல்லட்டும் இந்நூல் ஏற்கத்தக்கதா இல்லையா என்று” என்றான்.

“இந்நூல் அவையில் வைக்கப்படவே தகுதியற்றது…” என்று திரிவிக்ரமர் சொல்ல ஆரம்பித்தார்.

அரசர் கையமர்த்தி “நூல் சபைக்கு வந்துவிட்டது. அது இங்கே படிக்கப்படட்டும். அதன்பிறகு உங்கள் மறுப்புகளைச் சொல்லலாம். அம்மறுப்புகளைச் சபை ஏற்குமென்றால் இந்நூலை நாம் நிராகரிக்கலாம்… அதுவே இந்த சபையின் முறைமையாக இருந்து வருகிறது” என்றான்.

அதன் பின் ஒன்றும் சொல்வதற்கில்லாமல் வாக்பிரதிஷ்டான சபையின் முதல் வரிசைகள் அடங்கின. ஏற்கனவே வெளிவட்டங்களைச் சேர்ந்தவர்கள் அந்நூலைக் கேட்கும் ஆர்வத்துடன் அமைதி அடைந்திருந்தனர்.

நந்திதேவர் காவியத்தின் செய்யுட்களை வாசிக்க குணதேவர் சம்ஸ்கிருதத்தில் அச்செய்யுளின் பொருளைச் சொல்லவேண்டும் என அவர்கள் வகுத்துக் கொண்டிருந்தனர். அதன்படி நந்திதேவர் தன் உரத்த மணிக்குரலில் காவியத்தின் முதற்செய்யுளை வாசித்தார்.

பைசாசிகமொழியின் விந்தையான ஒலி அந்தச் சபையை திகைக்கவைத்தது. ஓர் மெல்லிய முழக்கம் உருவானது. அதுவே தருணம் என்று சர்வவர்மன் புரிந்துகொண்டார். கையை ஓங்கித்தட்டியபடி உரத்தகுரலில் வெடித்துச் சிரித்தார். அதை புரிந்துகொண்டு பிற புலவர்களும் உரக்கச் சிரிக்கத் தொடங்கினார்கள்.

சிரிப்பு மிகவேகமாக அனைவரிலும் பரவியது. ஒருவர் சிரிப்பதைப் பார்த்து இன்னொருவர் சிரித்தார்கள். ஏன் என்றே தெரியாமல் சிரித்தார்கள். பின்னர் சிரிப்பு அவர்களை ஆட்கொண்டது.

நந்திதேவர் கைகாட்டி சபையினரை கட்டுப்படுத்த முயன்றார். ஆனால் அவர் செய்யுளின் அடுத்த வரியை படித்ததும் சற்றே தணிந்த சிரிப்போசை மீண்டும் வெடித்தெழுந்தது. வயிற்றைப் பிடித்துக்கொண்டு, பீடங்களில் சரிந்து அமர்ந்தும் குனிந்து விழுந்தும், ஒருவரை ஒருவர் தழுவிக்கொண்டும் சிரித்தார்கள்.

அஸ்வதரர் தலையில் அடித்துக்கொண்டு “காதல்கொண்ட நாய்களின் ஒலி” என்றார். அந்தச் செய்யுளின் ஒலியை ஏளனமாக மிகைப்படுத்தி ஊளைபோல ஆக்கினார். “ஊ ஊ…. மகரமாதத்து நாய்கள்…. ஊ ஊ”

அத்தனைபேரும் எழுந்து நின்றுவிட்டார்கள். அனைவரையும் விந்தையான பேய்க்கூட்டம் ஒன்று ஆட்கொண்டதுபோலிருந்தது. கைநீட்டி கூச்சலிட்டுச் சிரித்தனர். வாயில் கைவைத்து ஊளையிட்டார்கள். எக்களிப்புடன் துள்ளித் துள்ளிக் குதித்தனர்.

தன்னைச் சுற்றியிருந்த முகங்களை குணதேவன் பார்த்தான். அவற்றில் வெறும் பித்துதான் நிறைந்திருந்தது. அக்கண்கள்  அனைத்தும் ஒன்றுபோலவே வெறித்து இளித்துக்கொண்டிருந்தன.

சிரிப்பு சற்று தழைந்தபோது அஸ்வதரர் “இதோ இறைச்சிக்குச் சண்டைபோடும் நாய்” என்று சொல்லி வவ் வவ் வவ் என்று ஓசையிட்டார். புஷ்பதரர் என்னும் கவிஞர் “இதோ தண்ணீர் குடிக்கும் நாய்”  என்று சொல்லி “ளக் ளக் ளக்” என்று ஓசையிட்டார். ஒவ்வொன்றுக்கும் அவர்கள் வெறிகொண்டு சிரித்துக்கூத்தாட்டமிட்டனர்.

அர்த்தமற்ற ஒன்று மட்டுமே அத்தனை தீவிரமாக வெளிப்படும் என்று குணதேவன் எண்ணினான். அதற்கு மட்டுமே மறுபக்கமே இருக்காது. அவன் என்ன செய்வதென்று அறியாமல் அரசனைப் பார்த்தான். அரசனும் சிரித்துக்கொண்டுதான் இருந்தார்.

சர்வவர்மன் “பைசாசத்தின் மாணவர்களே உங்கள் நாய்க்குரல் காவியத்துடன் கிளம்புங்கள். வாக்பிரதிஷ்டானம் இதற்குமேல் தெளிவாக தன் தீர்ப்பைச் சொல்லவேண்டியதில்லை” என்றார்.

திரிவிக்ரமர் “சபை உங்கள் காவியத்தை எள்ளிநகையாடியிருக்கிறது….” என்றார். “கிளம்புங்கள்…கிளம்புங்கள்… காவியம் புளித்துவிடப்போகிறது!”

“போகும்போது வாக்பிரதிஷ்டானத்தின்மேல் ஒற்றைக்கால் தூக்கி சிறுநீர் துளி விட்டுக்கொண்டு போங்கள்” என்றார் ஒருவர்.

மீண்டும் சிரிப்பொலிகள் பொங்கி எழுந்தன. குணதேவர் அரசனைப் பார்க்க அவர் வெளியேறும்படி கைகாட்டினார். நந்திதேவர் முகத்தைப் பொத்திக்கொண்டு அழுதபடி அப்படியே கால்மடித்து அமர்ந்தார். அவரை குனிந்து தோள்தொட்டு ஆறுதல் சொல்ல குணதேவர் முயன்றபோது சர்வவர்மன் கண்களைக் காட்ட அவருடைய மாணவர்கள் கூச்சலிட்டபடி ஓடிவந்து காவியம் வைக்கப்பட்ட பெட்டிகளை தூக்கி அப்பால் வீசினர்.

சதகர்ணி அரசர் சீற்றத்துடன் எழுந்து கைநீட்டி கூச்சலிட்டு அதைத் தடுக்க முயல்வதற்குள் சபையில் இருந்தவர்கள் பெருந்திரளாக எழுந்து வந்து அந்தப் பெட்டிகளை தூக்கி வீசினார்கள்.

அரசர் “அவர்களை தடுங்கள்…படைவீரர்களிடம் ஆணையிடுங்கள்” என்று கூவினார்.

“அது நிகழட்டும் அரசே” என்றார் தலைமை அமைச்சர் மாதவர். “அவர்களை தடுக்க முயன்றால் காவியசபையில்  ரத்தம் சிந்த நேரிடும்…அது நமக்கு பெருமை அல்ல. அத்துடன் பைசாசிக மொழியில் அமைந்த ஒரு நூலை நம் சபை எள்ளிநகையாடி நிராகரித்தது என்ற பெயர் உங்கள் குலப்பெருமைக்கும் சான்றாக அமையும்…”

கூட்டத்தினர் காவியம் அடங்கிய பெட்டிகளை கொண்டுசென்று தெருவில் வீசினார்கள். குணதேவனையும் நந்திதேவனையும் பிடித்து இழுத்து அவர்களின் ஆடைகளை களைந்து கோவணத்துடன் புழுதியில் போட்டு புரட்டினர். புலவர் சபைக்கு வெளியே இருந்த இளைஞர்களும் பிறரும் நாய்கள் போல கேலியாக ஊளையிட்டபடி அவர்களை காலைப்பிடித்து புழுதியில் இழுத்துச் சென்றார்கள். பெட்டிகளைச் சுமந்துவந்தவர்கள் ஓடி தப்பினார்கள். பெட்டிகள் உடைக்கப்பட்டு சுவடிகள் கிழித்து தெருவெங்கும் வீசப்பட்டன. ஆங்காங்கே போட்டு கொளுத்தப்பட்டன.

அந்த நாள் முழுக்க நகரில் நாய்போல நடிப்பதும் கூச்சலிடுவதும் ஒரு கூட்டுமனநோய் போலப் பரவியது. ஒவ்வொருவரும் தங்களுக்குள் கட்டுப்படுத்தி வைத்திருந்த ஏதோ ஒன்று வெளிவந்தது. வயது முதிர்ந்தவர்கள், கல்வி கற்றவர்கள், பல்லக்கில் செல்லும் செல்வம்கொண்டவர்கள் கூட வாயில் கைவைத்து நாய்போல ஊளையிட்டனர். கையை பின்பக்கம் வால்போல வைத்து ஆட்டி உரக்கச் சிரித்து கூச்சலிட்டனர். தெருக்களில் ஒருவர் மேல் ஒருவர் கால்தூக்கி சிறுநீர் கழிப்பதுபோல நடித்து துரத்தினர். குலப்பெண்கள்கூட திண்ணைகளிலும் உப்பரிகைகளிலும் நின்று அந்த கண்மண் தெரியாத கூத்தை ரசித்துக் கூச்சலிட்டனர். மலர்களையும் பொரியையும் தெருக்களில் நெரிசலிட்ட கூட்டத்தினர் மேல் வீசி சிரித்தார்கள்.

நள்ளிரவில் சட்டென்று எல்லாம் அடங்கியது. களைப்படைந்த மக்கள் தங்கள் வீடுகளிலும் சத்திரங்களிலும் அமர்ந்தனர். பலர் களைத்து தூங்கினார்கள். மதுக்கடைகளில் மட்டும் கூச்சல் விடிய விடிய நீடித்தது. அங்கே அமர்ந்திருந்த சிலர் தங்கள் செயல்களை நியாயப்படுத்த முயன்றனர்.

“அந்தக் காவியத்தை அவையில் படிக்காமல் இருந்தது நல்ல விஷயம்… அந்தப் பெட்டியை திறந்ததற்கே நகரில் பைத்தியம் பரவிவிட்டது” என்றார் ஒருவர்.

“அது நிஷாதர்களின் சூது. அவர்கள் ஆபிசார மந்திரங்கள் வழியாக இந்நகரை கைப்பற்ற முயன்றார்கள்… நாம் அதில் ஒரு சொல்லைக்கூட செவிகொள்ளவில்லை. ஆகவே தப்பித்தோம்”

அரண்மனையின் உப்பரிகையில் நின்று நகரில் எழுந்த பைத்தியக்கூத்தை பார்த்துக் கொண்டிருந்த அக்னிபுத்ர சதகர்ணி பெருமூச்சுவிட்டார்.

அவர் அருகே நின்ற அமைச்சர் மாதவர் “அவ்வப்போது இவர்களுக்கு இப்படி ஏதோ ஒன்று தேவைப்படுகிறது. நாம் அதை அளித்தாகவேண்டும்” என்றார். “ஓர் அரசர் அவ்வப்போது தன் குடிமக்களுக்கு போரையும் அழிவையும்கூட அளிக்கவேண்டும் என்று அர்த்தசாஸ்திரங்கள் சொல்கின்றன”

நகர் முழுக்க குணாட்யரின் மாபெரும் காவியம் ஓலைக்கிழிசல்களாகப் பரவி காற்றில் அலைக்கழிந்தது. பின்னிரவில் வீசிய காற்று அதை அள்ளிக்கொண்டுசென்று சுவர்களின் அருகே சேர்த்தது. சில சுவடிகள் இல்லங்களின் சாளரங்களில் சிக்கி இருந்து புறாபோலச் சிறகடித்தன.

“அவை உள்ளே வர முயல்கின்றன. அவற்றை உள்ளே விடக்கூடாது… அந்த சுவடிகளில் ஆபிசார மந்திரங்கள் இருக்கலாம்” என்றார்கள் கிழவிகள். சுவடிகளை அவர்கள் கைகளால் தொடாமல் கழிகளால் தள்ளி வெளியே விட்டனர்.

தன் இல்லத்தில் சர்வவர்மன் அமைதியிழந்து தாடியை தடவியபடியும் கைகளை சேர்த்து இறுக்கியபடியும் முகப்புக்கும் அறைக்குமாக அலைக்கழிந்தார்.

அவருடன் இருந்த சுபகர் “எல்லாம் நாம் எண்ணியவாறே முடிந்தது. அவர்கள் இருவரும் இந்நேரம் தங்கள் ஆசிரியரைத் தேடி காட்டுக்குச் சென்றிருப்பார்கள்” என்றார். “நகரம் அடங்கிவிட்டது…ஓசைகள் ஓய்ந்துவிட்டன”

“ஆம்” என்று சர்வ வர்மன் சொன்னார். ”ஆனால் மக்கள் நாளைக் காலை தங்களைப் பற்றி நினைக்கவே கூச்சப்படுவார்கள். என்ன நடந்தது என்றே அவர்களுக்குப் புரியாது. அத்தனை எளிதாக இன்னொருவரால் கையாளப்படத்தக்கவர்களா நாம் என்று எண்ணி எண்ணி வெட்கப்படுவார்கள்”

“அது ஒரே ஒரு காலைப்பொழுதுக்குத்தான். அனேகமாக அவர்கள் இந்த நாளைப் பற்றி பேசிக்கொள்ளவே மாட்டார்கள். அப்படியே கடந்துசென்றுவிடுவார்கள்” என்று சுபகர் சொன்னார்.

“ஆமாம், ஆனால் மனிதர்கள் அப்படிக் கடந்துசெல்பவை எல்லாம் அவர்களுக்குள் கல்லிடுக்கில் ஈரம்போல நுழைந்து நிரந்தரமாக தங்கிவிடுகின்றன. எதிர்பாராத முறையில் அவை வெளியாகவும்கூடும்” என்றார் சர்வவர்மர். “சட்டென்று ஏதோ ஒன்று நடந்து அவர்கள் அனைவரும் அப்படியே குணாட்யர் மாபெரும் ஞானி என்று ஏற்றுக்கொள்ளலாம். குற்றவுணர்ச்சி தாளாமல் இந்நகரமே சென்று அவர் காலில் விழவும்கூடும்”

“நாம் அப்படியெல்லாம் எண்ணிக்கொள்ள வேண்டியதில்லை” என்று சொன்னபோது சுபகரின் உற்சாகமும் முற்றாக வடிந்துவிட்டிருந்தது. “நான் வருகிறேன்” என்று அவர் கிளம்பினார்.

அதுவரை பேசாமலிருந்த ரத்னாகரர் “நான் வரும் வழியெல்லாம் தெரு முழுக்க அந்த மாபெரும் காவியத்தின் ஓலைகள் சிதறிக்கிடப்பதைக் கண்டேன்” என்றார். “மண்ணில் போட்டு மிதித்தார்கள். கிழிந்த ஓலையை எடுத்து மேலும் கிழித்தார்கள். ஒருவன் ஓலைகளை அள்ளிப்போட்டு அதன்மேல் சிறுநீர் கழிப்பதைக் கண்டேன்.”

சர்வவர்மன் வெறுமே பார்த்தார்.

“அது காவியம் என்பதற்கே எதிரான உணர்வு அல்லவா? கல்விக்கும் ஞானத்திற்கும் எதிராக பாமரர் கொள்ளும் வஞ்சம் அல்லவா?” என்றார் ரத்னாகரர். “சாமானியர் கண்களில் நாம் அனைவருமே அதைப் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறோம். அவர்களுக்கு காவியமும் இலக்கியமும் எல்லாம் என்னவென்றே தெரியாது. தெரியாததனால் இதன் மேல் அச்சம். அச்சத்தில் இருந்து காழ்ப்பு. காழ்ப்பினால் அவர்கள் இதை முழுக்க விலக்கிக் கொள்கிறார்கள். இதை அணுகவே முடியாதவர்கள் ஆகிறார்கள்”

ரத்னாகரர் தொடர்ந்தார். “நாம் அவர்களின் தலைக்குமேல் அமர்ந்திருக்கிறோம். அவர்களின் பார்வையில் முற்றிலும் அர்த்தமில்லாத ஒன்றுக்கு பொன்னும் புகழும் மதிப்பும் கிடைக்கின்றன. ஆகவே அவர்கள் நாம் அனைவரையும் வெறுக்கிறார்கள். இந்நகரின் ஆட்சி அவர்களில் ஒருவருக்குக் கிடைத்தால் நாமனைவரும்தான் முதலில் தலைவெட்டி வீசப்படுவோம்… சர்வவர்மரே, நாம் இன்று நகரத்தெருக்களில் கண்டது அந்த உணர்ச்சியை அல்லவா?”

“போதும், நாம் இதை நாளைப் பேசுவோம்”

”ஐயமே தேவையில்லை. அது மகத்தான காவியம்தான்… மானுட இனம் உருவாக்கியவற்றிலேயே அதுதான் மிகப்பெரிய காவியம். இனி அதற்கிணையான ஒன்று உருவாகவும் வாய்ப்பில்லை” என்றார் ரத்னாகரர். “அதை அழித்துவிட்டோம். நாம் எதை நம்பி வாழ்கிறோமோ அதன் அடித்தளத்தையே தயங்காமல் இடித்துவிட்டோம். அந்த துயரம் கொஞ்சமேனும் இல்லை என்றால் நாம் கற்ற கல்விக்கு என்ன மதிப்பு?”

“ஆமாம், நாம் நம் முதற்பெருங்காவியத்தை கொலைசெய்தோம்… ஆனால் அதை நான் செய்யும்போது உங்களில் ஒருவர்கூட ஏன் எதிர்க் குரல் எழுப்பவில்லை?” என்றார் சர்வவர்மர். “ஏனென்றால் உங்களுக்கெல்லாம் தெரியும், அந்தக் காவியம் இருக்குமென்றால் நீங்களும் நானும் எழுதியவை அனைத்தும் பொய்யாக ஆகிவிடும். இங்குள்ள அனைத்துமே அர்த்தமற்றவை ஆகிவிடும். அது இல்லையென்றால்தான் நாம் உண்மை என்று நிலைகொள்ள முடியும். நாம் காவியத்தை தெய்வமாக வழிபடுபவர்கள் அல்ல. அதன் காலடியில் தலையை வெட்டி பலிகொடுப்பவர்களும் அல்ல. நாம் அந்தப் பசுவை கறந்து உண்பவர்கள். அது பால்கறக்காவிட்டால் அதை காட்டுக்கு துரத்திவிடுவோம்”

ரத்னாகரர் “எனக்கும் தெரியும் அது. ஆனால் எனக்கு நெஞ்சம் ஆறவில்லை” என்றார்.

“ஆறும்…நாளை தெருக்களை நன்றாகக் கூட்டிவிடுவார்கள். அத்தனைபேரின் பேச்சில் இருந்தும் இன்றைய நாள் அப்படியே மறைந்துபோகும். கண்ணுக்கு முன் நின்றிருப்பது மட்டுமே நம் நினைவிலும் நீடிக்கும். நாமும் மிக விரைவிலேயே மறந்துவிடுவோம்… இன்றைய ஒரு இரவைக் கடப்பது மட்டும்தான் கடினம்…ஆனால் நாம் ஒன்றும் செய்யவில்லை என்றாலும் பொழுது ஓடிப்போகும். இரவு விடியும்” என்றார் சர்வ வர்மர்.

(மேலும்)

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on June 28, 2025 11:33

மைதீ. அசன்கனி

[image error]மைதீ. அசன்கனி வானொலி, தொலைக்காட்சி செய்தி வாசிப்பாளராக அறியப்பட்டவர். மலேசியத் தொலைக்காட்சியில் தமிழ் செய்தி வாசித்த முன்னோடி.

மைதீ. அசன்கனி மைதீ. அசன்கனி மைதீ. அசன்கனி – தமிழ் விக்கி
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on June 28, 2025 11:33

கருவிலிருந்து காவியம் வரை

அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு, 

தத்துவ வகுப்பு முடிந்து வந்ததுமே, திங்கட்கிழமை  காலையிலேயே மறுபடியும் “கரு” நாவலை எடுத்து வாசித்தேன். அது ஏன் எனக்குள் ஒரு அலைக்கழிப்பை உருவாக்குகிறது என்பது ஒரு புதிராகத்தான் உள்ளது. எத்தனை முறை படித்தாலும் புதிது புதிதாக ஏதோ கிடைக்கிறது. கர்ம வினை எச்சங்களின்றி,  அகாலத்தில் இருக்கவே ஆழ்மனம் விழைகிறது. ஆனால் எல்லா மதங்களும் அதற்குள்ளேயே செல்வதில்லை.   முக்தா சொல்லுவது போல் புற உலகத்தை நடந்து கடக்கலாம் . ஆனால் அகப்பயணம் சென்றடைவது கடினம் தான்.  சில நேரங்களில் எதை தேடுகிறோம் என்பதிலேயே குழப்பம் ஏற்படுகிறது. 

இந்த நாவலில் குறிப்பிடும்  தரவு/reference  படித்து தீர முடியாதது. இந்த முறை படித்த போது மிகவும் ரசித்தது yarlow tsangpo  canyon பற்றிய வர்ணனைகளை. Grand canyon  விட மிகப்பெரியது.  பிரம்மபுத்திராவின் திபெத்திய Yarlang Tsangpo காலத்தால் இமாலயத்தை விட மிகப் பழமையானது ( antecedent river)  நாவலில் வரும் மனிதர்களின் காலம் 50 அல்லது 60 வருடத்திற்ககுள் என்றால், நதிகள் புரண்டோடும் காலம்  கோடானு கோடி வருடங்கள்.

முக்தா சொல்லுவது போல் இப்புவியின் வாழ்க்கை என நாம் அறிவது அறியமுடியாமைகளால் கோத்து நாம் உருவாக்கிக்கொள்வது. இது வினாக்களின் பெருந்தொகை. ஆனால் அறிவால் தொகுத்துக்கொள்வது என்று நாம் நம்புகிறோம். இவற்றை நேரில் உணர்ந்த பின்னரே வேதாந்தத்தில் இவை ஃபாஸம் என்றும் ஃபானம் என்றும் விளக்கப்படுகின்றன.

நீங்கள் தற்போது எழுதும் காவியத்தின் நாவலிலும் இந்த தொடர்ச்சியை காண முடிகிறது.   கானபூதி காலத்திற்கு அப்பால் நின்று,  வெவ்வேறு  கதைகளும் வினாக்களும் வழியே கோர்க்க உதவ முற்படுகிறது. கதைகளில் எப்படியும் அது கோர்க்கப்படலாம், ஆனால் வாழ்க்கையில் தான் ஒன்றோடு ஒன்று தனித்தனியாக இயங்குவது போல் தோற்றமளிக்கிறது.

அன்புடன்,

மீனாட்சி

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on June 28, 2025 11:31

Reading as meditation

Toward the end, I felt I could easily judge his wit and the form of the story. His style is stale and somewhat artificial. In fact, I felt that he was writing in a manner similar to a serious adult who is pretending to be a mischievous young man.

Reading as meditation.

உலகம் மிக நெரிசலாக ஆகியுள்ளது. ஆனால் அனைவரும் தனியாக இருக்கிறார்கள். தனிமையை கையாள்வது எப்படி  என்பது மிக முக்கியமான கேள்வி இன்று. அதற்கு எந்தவகையான தனிமை நம்முடையது என்று நாம் அறிந்திருக்கவேண்டும்.

தனிமை, ஏகாந்தம்- கடிதம்
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on June 28, 2025 11:30

ஆசிரியர்- மாணவர் எனும் உறவு

இந்தியச் சூழலில் இன்று இரண்டு வகையில் சிதைவுற்றிருப்பது ஆசிரியர் மாணவர் என்னும் உறவு. ஒருபக்கம் அதை ஒருவகையான மதவழிபாடு போல ஆக்கி அர்த்தமிழக்கச் செய்துள்ளனர். இன்னொரு பக்கம் எவரிடமிருந்தும் எதையும் கற்றுக்கொள்ளாமலிருப்பதே தன்னடையாளம் என்னும் அபத்தத்தை பகுத்தறிவு என நிறுவியிருக்கின்றனர். உலகில் எங்கும் கல்வியும் கலைகளும் ஒரு மனிதரிடமிருந்தே இன்னொரு மனிதருக்குச் செல்லமுடியும் என்பது நிறுவப்பட்டுள்ளது. குறிப்பாக மேலைநாட்டுக் கல்விநிலையங்கள் மிகச்சிறந்த ஆசிரிய மாணவ உறவை உருவாக்கும்பொருட்டு கட்டமைக்கப்பட்டவை. நமக்கு கல்விநிலையங்களில் ஆசிரியர் அமைய வாய்ப்பே இல்லை என்னும் நிலை. ஆசிரியர் யார், எப்படி நம்மை அவர் அடைகிறார்?

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on June 28, 2025 09:19

June 27, 2025

ஸ்வர்ணமஞ்சரி, சைதன்யா, நவீனதத்துவம்

நீலி பெண்ணிய உரையாடல்கள்- சைதன்யா

நீலி இதழ் சார்பில் இன்று நிகழவிருக்கும் சைதன்யாவின் உரையாடலை வழிநடத்துபவர் ஸ்வர்ண மஞ்சரி. இந்த உரையாடல் சைதன்யா பெண் தத்துவ இயலாளர்களைப் பற்றி எழுதிய கட்டுரைகளை ஒட்டி அறவியல் – தத்துவம் சார்ந்து நிகழும். பொதுவாக எந்த தத்துவ விவாதத்திலும் பெண் தத்துவ அறிஞர்கள் பேசப்படுவதே இல்லை. சைதன்யா குறிப்பிடும் இந்த தத்துவ அறிஞர்கள் பற்றி நானறிந்து தமிழில் முதல்முறையாக அவள் வழியாகவே பேசப்படுகிறது. நான் முன்னர் அவர்களை கேள்விப்பட்டதுமில்லை.

பொதுவிவாதங்களில் அவர்கள் தவிர்க்கப்பட்டதில் ஆண்நோக்கு அரசியல் உள்ளது என்று சொல்லப்படுவதை எளிதில் மறுத்துவிடமுடியாது. உண்மையில் இந்தப் பெண் தத்துவசிந்தனையாளர்கள் தத்துவத்தை அறவியலுடன் பிணைத்து முன்வைத்தனர். ஆனால் சென்ற இருநூறாண்டுகளில் உயர்தத்துவம் அறவியலை வேறொரு துறையாக எண்ணி மிக அருவமான கருத்துநிலைகளைப் பற்றிய விவாதங்களை நோக்கிச் சென்றது. பொருள் உருவாக்கம், அதிகாரம் என அதன் பேசுபொருட்களே வேறு. ஆகவேதான் இந்த சிந்தனையாளர்கள் மையவிவாதங்களுக்குள் வரவில்லை என்று சொல்லப்படுகிறது.

ஆனால் அறவியலை தத்துவத்தில் இருந்து பிரிப்பதே ஓர் ஆணாதிக்க அரசியல் என்று சொல்லும் பெண்ணியர்கள் இன்று உருவாகி வந்துள்ளனர். சைதன்யா அறவியலையே தத்துவத்தின் மையம் என எண்ணுகிறாரோ என எனக்கு தனிப்பட்ட விவாதங்களில் தோன்றியதுண்டு. அதைச்சார்ந்த ஒரு விவாதம் இது.

ஸ்வர்ணமஞ்சரி இன்று இந்த விவாதத்தை ஒருங்கிணைக்கிறார். ஒரு நோக்கில், தமிழ்ச்சூழலில் தத்துவம் என்பதே முழுக்கமுழுக்க ஆண்களின் உலகமாகவே இருந்துள்ளது. பெண்கள் அந்த எல்லைக்குள் நுழைந்ததே இல்லை. ஒரு குரல்கூட இல்லை. மரபான தத்துவமும் சரி , நவீன தத்துவமும் சரி. பெண்கள் உணர்ச்சிகரமானவர்கள், தர்க்கநோக்கை நம்பாதவர்கள் என்னும் விளக்கமும் அதற்கு அளிக்கப்படுவதுண்டு. அதுவும் ஓர் ஆண்நோக்கு விளக்கமாக இருக்கலாம். இன்று இளம் பெண்கள் இந்த விவாதத்தை நிகழ்த்துவது தமிழ்ச்சூழலைப் பொறுத்தவரை ஒரு புதிய தொடக்கம்

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on June 27, 2025 20:43

அறிவியலே இலக்கியம்

மனு அறக்கட்டளை சார்பில் இன்று (28-ஜூன் 2025) வெளியிடப்படும் லோகமாதேவியின் இரு நூல்களுக்கு (தந்தைப்பெருமரம், கல்லெழும் விதை) எழுதிய முன்னுரை இருபதாம் நூற்றாண்டுக்கே உரிய ஓர் இலக்கியத்துறை என்பது அறிவியல் இலக்கியம். அறிவியல்புனைவு என ஒன்று உண்டு, அது இலக்கியத்திற்கான கருப்பொருட்களையும்  படிமங்களையும் அறிவியலில் இருந்து எடுத்துக்கொள்வதுதான் அது. அறிவியல் இலக்கியம் என்பது அறிவியலையே இலக்கியமாக எழுதுவது. அறிவியலில் உள்ள தகவல்களும் கொள்கைகளும்தான் எழுதப்படும். கற்பனைக்கு இடமே இல்லை. ஆனால் அந்தத் தகவல்களையும் கொள்கைகளையும் கொண்டுவாசகனின் கற்பனையை விரிவாக்கி அறிவியலை புகட்டுபவை அறிவியல் இலக்கியங்கள்.நான் அப்படிப் படித்த முதல்நூல் சோவியத் ருஷ்ய வெளியீடான யாக்கோப் பெரெல்மான் எழுதிய பொழுதுபோக்குப் பௌதீகம் என்னும் இரண்டு பகுதிகள் கொண்ட நூல். என் பள்ளிப்பருவத்தில் எந்த ஒரு மாயாஜாலப் படைப்பையும் விட என்னை ஆட்கொண்டது அந்த புத்தகம்தான். அந்நூலில் ஜூல்ஸ்வெர்ன் போன்ற அறிவியல் புனைவெழுத்தாளர்களை தொடர்ந்து மேற்கோள் காட்டியிருந்தார். பல நாவல்களை நான் முதன் முதலில் கேள்விப்பட்டதே அந்நூல் வழியாகத்தான்.தொடர்ந்து சோவியத் வெளியீடுகளான அறிவியல்நூல்கள் என்னை பெரிதும் கவர்ந்தன. ‘அனைவருக்குமான உடலியங்கியல்’ என்னும் நூலை செல்லுமிடமெல்லாம் கொண்டு சென்று பயின்றதை நினைவுகூர்கிறேன். அதன்பிறகு ஆங்கிலத்தில் எழுதப்பட்ட பொதுவாசிப்புக்குரிய அறிவியல்நூல்கள் மேல் பெரும் பித்தே எனக்கு உருவாகியது. என்னை ஆங்கில அறிவியல் இலக்கியத்திற்குள் கொண்டுசென்ற நூல் டெஸ்மண்ட் மோரிஸ் எழுதிய நிர்வாணமான குரங்கு. இன்றுவரை அத்தகைய எழுத்துக்களின் தீவிரமான வாசகன் நான்.  அவற்றில் ரிச்சர்ட் ரிஸ்டாக், கார்ல் சகன் போன்ற அறிவியலாளர்கள் உண்டு. கொஞ்சம் கூடுதலான ஊகங்களை அளிக்கும் லயால் வாட்ஸன் போன்றவர்கள் உண்டு.பெரும்பாலும் புனைவா என்ற ஐயம் தோன்றச்செய்யும் எரிக் வான் டேனிகன் போன்றவர்களும் உண்டு. தமிழில் அறிவியல் எழுத்துக்கு பலரும் சுஜாதாவை மேற்கோள் காட்டுவதுண்டு. எனக்கு சுஜாதாவின் நல்ல சிறுகதைகள், அதைவிட நாடகங்கள் மேல் பெருமதிப்புண்டு. தமிழின் சிறந்த சூழல்சித்தரிப்பாளர் என்ற எண்ணமும் உண்டு. ஆனால் அவர் மேலோட்டமான அறிவியல் எழுத்தாளர் , அறிவியல் எழுத்தைப் பொறுத்தவரை மிக மோசமான முன்னுதாரணம் என நினைக்கிறேன். நல்ல அறிவியல்நூல்கள் இல்லாத பொதுவாசிப்புச் சூழலில் அறிவியலை வேடிக்கையான துணுக்குச் செய்திகளாக கொண்டுசென்றவர். அறிவியல்கொள்கைகளை விளக்குவதற்கான மொழியோ புரிதலோ அவருடைய எழுத்தில் வெளிப்பட்டதில்லை.பாமரர்களுக்கும் அறிவியலைக் கொண்டுசெல்வது என்பது அறிவியலை பாமரத்தனமாக ஆக்குவதோ, பாமர மொழியில் அறிவியலைச் சொல்வதோ அல்ல. சுஜாதாவுக்கு அறிவியல் சுவாரசியமாக இருக்கமுடியும் என்ற நம்பிக்கை இருந்ததில்லை. ஆகவே அறிவியலை எப்போதுமே மிக மேலோட்டமாகவும், பெரும்பாலும் அரைகுறையாகவும்தான் அவர் சொன்னார். (அதை அவர் சுருக்கிச் சொல்வது என நினைத்துக்கொண்டார்) பாமரவாசகர்களைக் கவரும் வேடிக்கை, கிண்டல் ஆகியவற்றை ஊடாகக் கலந்துகொண்டார். பெரும்பாலும் அவருடைய வாசகர்கள் அவருடைய அறிவியலெழுத்தில் ரசித்தது அந்த சில்லறை வேடிக்கைகளைத்தான். அத்தகைய விடலைத்தனமான மொழியில் எழுதப்படும் அறிவியல் சார்ந்த எழுத்துக்களை ஏராளமாக உருவாக்கினார் என்பதனால்தான் அவர் மோசமான முன்னுதாரணம்.அறிவியல் இலக்கியம் சுவாரசியத்திற்காக அறிவியலுக்கு அப்பால் எதையும் நாடவேண்டியதில்லை. இந்தப் பிரபஞ்சத்தின் , இந்த உயிர்வெளியின் ஆழத்து மர்மங்களை நோக்கித் திறப்பது என்பதனாலேயே அறிவியல் பெரும் வசீகரம் கொண்டது. கற்பனையை அதன் எல்லை வரைக்கும் கொண்டுசெல்லக்கூடியது. தமிழில் அத்தகைய அறிவியல் சார்ந்த எழுத்துக்களை என்.ராமதுரை ஓரளவுக்கு எழுதியிருக்கிறார்.ஆனால் சூழியல் தளத்தில் தியடோர் பாஸ்கரன் எழுதிய நூல்களே மெய்யாகவே அறிவியல் இலக்கியம் என்று சொல்வதற்கான தகுதி கொண்டவை.தியடோர் பாஸ்கரன் வாசகனை மொழியால் கிச்சுகிச்சு மூட்டவில்லை. அவர் அவனுடைய முதிர்ச்சியை நம்பினார். அறிவியல் செய்திகளைக் கொண்டு வாசகனை திகைப்படையச் செய்யவுமில்லை. அறிவியலின் தரவுகளையும் கொள்கைகளையும் கூரிய மொழியில், தெளிவாக முன்வைத்தார். அதற்குரிய கலைச்சொற்களை தானே உருவாக்கினார் . தனியொருவராக சுற்றுச்சூழலியல் அறிவியலை தமிழ் வாசிப்புலகில் நிலைநிறுத்தினார். அறிவியல் செல்லும் அறிதலின் ஆழங்களை, அது உருவாக்கும் பிரபஞ்ச தரிசனங்களையே தியடோர் பாஸ்கரன் முன்வைத்தார். தமிழில் அவர் அதற்கு மகத்தான முன்னுதாரணம்.தியடோர் பாஸ்கரனின் வழியில் வந்த முதன்மையான அறிவியல் இலக்கிய ஆசிரியர் என்று லோகமாதேவியைச் சொல்வேன். அவர் தாவரவியல் நிபுணர், ஆய்வாளர், பேராசிரியர். தாவரங்களைப் பற்றிய அளப்பரிய ஆர்வத்தை தன் வாழ்க்கையாகக் கொண்டவர். தன் துறையில் பெரும் ஈடுபாடு கொண்ட ஓர் ஆசிரியர் என்ன செய்யமுடியும் என்பதற்கான சான்றாக அமையும் சிலரையே நாம் வாழ்க்கையில் சந்திக்க முடியும். லோகமாதேவி அத்தகையவர்களில் ஒருவர். அவ்வகையில் தமிழில் தாவரங்களைப் பற்றி பொதுவாசகர்களுக்காக உருவாக்கப்படும் இலக்கிய மரபு ஒன்று இனி உருவாகும் என்றால் அவரே அதன் முன்னுதாரணமும் முன்னோடியுமாகக் கருதப்படுவார்.லோகமாதேவி அறிவியல் திரட்டியுள்ள தரவுகளையும், அறிவியல் நிரூபித்துள்ள கொள்கைகளையும் மட்டும்தான் சொல்கிறார். ஆனால் அவற்றை இன்றைய வாழ்க்கைச்சூழலுடன் இணைத்துக்கொண்டு, நாம் அறிந்த நம் சூழலில் நாமறியாத என்னென்ன உள்ளது என்ற பிரமிப்பை உருவாக்கும்படி முன்வைக்கிறார். அந்தப் பிரமிப்பு இயற்கை என்னும் இந்த மாபெரும் உயிர்வெளி பற்றிய ஒரு மெய்யியல்தரிசனமாக வாசகனில் விரிவடைகிறது. அந்த தரிசனமே அவருடைய கட்டுரைகளை வாசிப்பவர்கள் அவற்றை இலக்கியமாகக் கொள்ளச் செய்கிறது.உதாரணமாக, ஒரு தாவரவியலாளரின் பார்வையில் பயிர் என்றும் களை என்றும் பேதமில்லை. எல்லாமே செடிகள்தான். களைகளும் ஓரு சூழலின் பிரிக்கமுடியாத பகுதிதான், அவையும் ஒருவகை தேசியச் செல்வம்தான், அரசு களைகளின் அழிவையும் கண்காணிக்கவேண்டும் என்று லோகமாதேவி சொல்லும் இடம். எனக்கு அது மெய்சிலிர்ப்பூட்டும் ஒரு வேதாந்த தரிசனமாகவே இருந்தது. களை,களையப்படவேண்டியதுஎன்னும் சொல்லே தாவரங்கள் மீதான பொறுப்பற்ற பார்வையை காட்டுவது என நினைத்தேன்.தமிழில் சூழியல் பற்றி பேசியவர்களே அதிகமும் இயற்கை பற்றிப் பேசியிருக்கிறார்கள். ஆனால் அவர்கள் தொடர்ச்சியாக இயற்கையின் அழிவைப்பற்றிய அபாயமணியை அடிப்பவர்களாக, அதற்காக கொஞ்சம் அறிவியலை கடந்து செல்பவர்களாக இருக்கிறார்கள். உதாரணமாக, சீமைக்கருவேலத்தை ஒரு மாபெரும் நோய்க்கூறாக அவர்கள் சித்தரிப்பதைச் சொல்லலாம். ஆனால் அவர்கள் சொல்லும் எந்த தீங்கையும் சீமைக்கருவேலம் இழைப்பதில்லை, அதற்கான ஒரு அறிவியல்சான்றுகூட உருவாக்கப்படவில்லை என்று லோகமாதேவி சொல்லுமிடத்தைக் குறிப்பிடலாம்.இயற்கையை காக்கும் பொறுப்புள்ளவனாக மனிதனை லோகமாதேவி சித்தரிக்கவில்லை. இயற்கை மேல் பரிவுணர்ச்சி (sympathy) கொள்ள மனிதனுக்கு தகுதி உண்டா என்ன?  இயற்கையைப் புரிந்துகொள்ள, அதில் தன்னை இணைத்து உணர மட்டுமே அவருடைய கட்டுரைகள் வலியுறுத்துகின்றன. அவற்றிலுள்ளது ஓர் ஆழ்ந்த தன்மய உணர்வுதான் (empathy). உதாரணமாக நகரங்களில் செயற்கை மின்வெளிச்சத்தில் இரவெல்லாம் நின்றிருக்கும் தாவரங்கள் இரவும் பகலும் மாறிவருவதை உணரமுடியாதபடி ஆகின்றன, இது ஒரு சித்திரவதை, அவற்றின் உயிரியல்பே தாறுமாறாகிவிடுகிறது என்னும் குறிப்பைச் சுட்டிக்காட்டுவேன். இங்கே எவருமே யோசிக்காத ஒரு கோணம் அது.லோகமாதேவி ஒரு வாசகராக எனக்கு அறிமுகமானவர். கடிதங்கள் எழுதிக்கொண்டிருந்தவரை கட்டுரைகள் எழுதும்படி கோரி, வற்புறுத்தி எழுதச் செய்தேன். ஏனென்றால் தமிழில் அறிவியல் இலக்கியம் உருவாகவேண்டும் என்னும் விழைவு எனக்கு இருந்தது. மிகமிகக் குறைவாகவே பொறுப்புணர்வுடன், அறிவார்ந்த நடையில், எழுதப்படும் அறிவியல் இலக்கியம் தமிழில் வெளிவருகிறது. அதற்கான வாசகர்கள் இங்கே இன்னும் பெருவாரியாக உருவாகவில்லை. அறிவியலை  வேலைக்கான கல்வியாகவே நாம் கற்கிறோம், அறிவுத்தேடலுக்காக வாசிப்பதே இல்லை. ஆயினும் அறிவியக்கச் செயல்பாடு என்பது அது இயல்பானது என்பதனால், தேவை என்பதனால் நிகழவேண்டியதே ஒழிய சூழலின் ஆதரவு அதற்கு ஒரு பொருட்டு அல்ல என எண்ணினேன்.லோகமாதேவி என் இணையப்பக்கத்தில்தான் நீண்ட அறிவியல் கட்டுரைகளை எழுதினார். பல கட்டுரைகள் எனக்கு எழுதப்பட்ட கடிதங்கள். இன்று லோகமாதேவியின் பலநூல்கள் வெளிவந்துவிட்டன. அவர் ஓர் ஆய்வாளராக சர்வதேச அளவில் கவனம் பெற்றிருக்கிறார். தாவரவியல் வகுப்புகள் நடத்துகிறார். தமிழகத்தில் தேவையான,முற்றிலும் புதிய ஓர் அறிவுத்தளத்தை அறிமுகம் செய்யும் வாசகராகவும் அறியப்பட்டிருக்கிறார். அவருக்கு என் வாழ்த்துக்கள்.ஜெயமோகன்(லோகமாதேவியின் நூலுக்கு எழுதிய முன்னுரை)
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on June 27, 2025 11:35

Jeyamohan's Blog

Jeyamohan
Jeyamohan isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow Jeyamohan's blog with rss.