Jeyamohan's Blog, page 64
July 4, 2025
முழுமையறிவில் எப்படி கற்பிக்கப்படுகிறது?
முழுமையறிவு வகுப்புகள் பற்றி பரவலாக எழும் சில கேள்விகள் உண்டு. அங்குள்ள வகுப்புகளின் பயிற்று முறைமை என்ன? இது ஆசிரியரின் ஆளுமையால் கல்வி நிகழும் குருகுல முறை. ஆனால் இதிலேயே இரண்டு பாணிகள் உள்ளன.
நிழல்களுடன் ஆடியது-2
என்னுடைய நாவல்கள் எல்லாமே ஒரு சொற்றொடரில் இருந்து தொடங்குபவை. ’கதை சொல்லும் பிசாசு ஒன்று உண்டு என்று அம்மா சொன்னாள்’ என்ற வரிதான் பெங்களூர் ஜெயநகரில் நள்ளிரவில் ஆளோய்ந்த சாலையில், மழைச்சாரல் விழுந்துகொண்டிருந்த வேளையில், ராட்சதர்கள் போல கைவிரித்து நின்றுகொண்டிருந்த கொன்றை மரங்களின் கீழே நடந்துகொண்டிருக்கும்போது என்னில் தோன்றியது. என்னுடைய அம்மாவும் குணாட்யரின் கதையும் இணையும் ஒரு வரி அது என்று இப்போது உணர்கிறேன். அந்த வரி அகத்தூண்டுதலை உருவாக்கிக்கொண்டே இருந்தது. என்னை அமர முடியாமல் செய்தது. மந்திரம் போல அதை திரும்பத் திரும்பச் சொல்லிக்கொண்டே இருந்தேன். அந்த வரியையே பலமுறை தட்டச்சு செய்து முதல் அத்தியாயத்தை எழுதினேன். தூங்கி எழுந்து, அன்றே இரண்டாவது மூன்றாவது அத்தியாயங்களையும் எழுதி முடித்தேன்.
அதன் பிறகு ஏதோ ஒரு வகையில் அந்த தொடக்க விசை குறைவதை உணர்ந்தேன். அந்த மூன்று அத்தியாயங்களும் தன்னளவில் சிறப்பாகவே இருந்தன. ஆனால் ஒரு நாவலை எழுதும்போது எனது அனுபவம் என்பது ஒவ்வொரு அத்தியாயத்திற்கும் அதனுடைய உள்ளிருக்கும் ஒரு விசை பெருகிக்கொண்டே இருக்கவேண்டும் என்பதே. ஓர் அத்தியாயம் மேலும் பல அத்தியாயங்களை உருவாக்குவதாக, தன்னுள் இருந்தே வெளியேதள்ளி என்னை முன்னே செலுத்துவதாக இருக்கவேண்டும். உயிர்களின் இயல்பு அதுதான். இரண்டு இலைகளை விட்டு நிற்கும் செடிக்குள் மரம் தன்னை வெளிப்படுத்தும்பொருட்டு துடித்து உந்திக்கொண்டிருக்கிற்து.
அந்த விசை அந்த மூன்று அத்தியாயங்களில் இல்லையோ என்று தோன்றியதனால் பிரதிஷ்டானபுரிக்கே சென்றாலென்ன என்று எனக்குத் தோன்றியது. இணையத்தில் தேடிப்பார்த்தால் அங்கே பழைய தொல்பொருள் ஆய்வுகள் நிகழ்ந்து சாதவாகனப் பேரரசின் சிறு தடயங்கள் கிடைத்திருக்கின்றனவே ஒழிய, முக்கியமான இடங்களோ சுவாரசியமான இடங்களோ எதுவுமே இல்லை என்று தெரிந்தது. இருந்தாலும் அங்கே போய் அந்த மண்ணை உணர்வோம், அங்கு சில நாட்கள் இருந்து அந்த விசையை உள்வாங்கிக்கொள்வோம், ஏதோ ஒன்று அங்கு எனக்காகக் காத்திருக்கக்கூடும் என்று தோன்றியது.
இந்த உணர்வு எனக்கு எப்போதுமே உண்டு. நான் அறியாத நிலங்களில் எங்கோ எனக்காக எதுவோ காத்துக்கொண்டிருக்கக்கூடும் என்று எண்ணிக்கொண்டே இருப்பேன். அந்தக் கற்பனைதான் என்னைத் தூண்டும் விசையாக இருக்கிறது. ஆகவே கிருஷ்ணனிடம் தொலைபேசியில் அழைத்து பிரதிஷ்டானபுரிக்கு செல்கிறேன். நீங்கள் வருகிறீர்களா என்றேன். ‘ஆனால் எங்கும் நாம் செல்லப்போவதில்லை. சுவாரசியமாக எதுவுமே அங்கு பார்க்கப்போவதில்லை. ஒரு சின்ன நகரத்தில் வெறும் ஐந்து நாட்கள் ஒன்றுமே செய்யாமல் சும்மா சுற்றியலையப் போகிறோம். ஆர்வமிருந்தால் வாருங்கள்’. என்று சொன்னேன். அவர் வருகிறேன் என்று ஒத்துக்கொண்டார்.
பெங்களூர் ஆட்டக்கலாட்டாவில் ஏப்ரல் 20-ம் தேதி எங்கள் நிகழ்ச்சி முடிந்தவுடனே காரில் கிளம்பி விமானநிலையம் சென்று, அங்கிருந்து விடியற்காலையில் ஔரங்காபாத் சென்று இறங்கினோம். அங்கிருந்து டாக்சியில் பைத்தான் நகருக்கு காலை எட்டு மணிக்கெல்லாம் சென்றுவிட்டோம். பைத்தான் அதிகபட்சம் ஐந்து கிலோமீட்டர் சுற்றளவுள்ள ஒரு சிறு ஊர். அதன் அருகே இருக்கும் ஒரு மிகப்பெரிய அணைக்கட்டு இல்லையேல் அதற்கு எந்த முக்கியத்துவமும் இல்லை. அங்கே ஏக்நாதரின் பிறப்பிடம் ஒரு ஆலயமாகக் கட்டப்பட்டிருக்கிறது. ஆண்டுக்கு ஒருமுறை திருவிழா நிகழ்கிறது. ஆண்டு முழுக்க ஏக்நாத்தின் பக்தர்கள் வந்துகொண்டிருக்கிறார்கள். ஜைனர்களுக்கு அது முக்கியமான இடம். அங்கு முக்கியமான ஆலயம் ஒன்று உள்ளது. பைத்தானி புடவைகள் என்று அழைக்கப்படும் குறிப்பிட்ட வகையான பட்டுப்புடவைகள் அங்கு புகழ் பெற்றவை. மராத்திய மாநிலத்தில் திருமணத்திற்கு பைத்தானி புடவைகள் எடுப்பது ஒரு வழக்கமாக உள்ளது
கோதாவரி ஆறு அணைக்கட்டிலிருந்து வெளியேறும் தண்ணீருடன் மிக அகன்ற ஒரு வளைவாக அந்நகரத்தை ஒட்டி சென்றுகொண்டிருக்கிறது. அங்கிருக்கும் ஒரே மகத்துவம் என்பது அது கோதாவரிக்கரையில் அமைந்திருக்கிறது என்பதுதான். ஒரு இடைநிலை விடுதியில் அறை போட்டுக் கொண்டோம். மாலையிலேயே ஏக்நாத் ஆலயத்தை சென்று பார்த்தோம். நகரத்துத் தெருக்களில் சுற்றிவந்தோம். ஏப்ரல் மாதத்தின் உச்சகட்ட வெயில். பத்து மணிக்குமேல் மாலை ஐந்து மணிவரை எங்கும் வெளியே செல்லமுடியாது. உண்மையிலேயே தலைசுட்டெரிவது போல் உணர்ந்தோம். அப்பொழுது முழுக்க அறைக்குள்ளேயே இருந்தோம்.
கிருஷ்ணன் நிலைகொள்ளாத பயணி. தன் வாழ்நாளுக்குள் அதிகமான இடங்களை பார்த்துவிடவேண்டும் என்ற குறிக்கோள் கொண்டவர் ஆகவே மானசீகமான ஒரு பட்டியலில் ’டிக்’ அடிப்பது என்பதே அவருடைய வழக்கம். அத்தனை தூரம் வந்து நான்கு நாட்கள் ஒரே ஊரில் ஒன்றும் பார்க்காமல் சும்மா இருப்பது அவருக்கு மிகக்கடினம். திரும்ப திரும்ப அருகிலிருக்கும் பிற ஊர்களைச் சொல்லி ‘அங்கெல்லாம் சென்று பார்ப்போம். இரண்டு மணிநேர பயணம்தான். ஒருமணி நேரப்பயணம்தான்’ என்று சொல்லிக்கொண்டே இருந்தார். ‘எல்லாத்தையும் கதையிலே கொண்டுவரலாம்’ என என்னை கவர முயன்றார். முந்நூறு கிலோ மீட்டர் தொலைவிலிருக்கும் கிரேட்டர் லேக் என்ற ஊருக்கு போவதற்கு டாக்சியையும் பதிவு செய்துவிட்டார். ’நீங்கள் சென்று வாருங்கள் நான் எங்கும் வருவதாக இல்லை’ என்று நான் சொன்னபிறகு சோர்வுடன் அதை ரத்து செய்தார்.
ஒவ்வொரு நாளும் காலையில் அங்கிருக்கும் இடங்களைச் சுற்றிப்பார்ப்போம். காலை உணவுக்குப்பின் அறைக்குள் வந்து அமர்ந்திருப்போம். மதியம் ஒரு தூக்கம். மாலையில் மறுபடியும் உலா. அங்கே கோதாவரிக்கரையில் இருக்கும் நாக கட்டம் என்னும் பாழடைந்த படித்துறைக்கு செல்லும் ஒரு பாதை உள்ளது. அப்பாதை கோதாவரிக்கரை முழுக்க நிரம்பியிருக்கும் தலித் மக்களின் குடியிருப்புகள் வழியாக செல்கிறது.
பங்கிகள் என்றும் சமர்கள் என்றும் அழைக்கப்படும் தலித் மக்கள் இந்நகரத்தில் பெருவாரியாக இருக்கிறார்கள். இந்நகரத்தின் அரசியலைத் தீர்மானிப்பவர்களாகவும் அவர்கள் திகழ்கிறார்கள். *நகரத்தின் பேருந்து நிலையம் பாழடைந்து கைவிடப்பட்ட ஒரு பகுதி. ஆனால் அதற்கு அருகிலேயே மிகப்பெரிய அம்பேத்கர் நினைவிடம் புத்தம் புதியதாகக் கட்டி வண்ணப்பொலிவுடன் உள்ளது. அது ஒருவகையான அறைகூவல். அதுவே பைத்தானின் வரலாற்றுக்கும் வரலாற்றை மீறி அது இன்றிருக்கும் உளவியலுக்கும் சான்று என்று தோன்றியது.
பைத்தானே நெரிசலான, அழுக்கான தெருக்களால் ஆனதுதான். ஆனால் தலித் குடியிருப்புகள் மேலும் நெருக்கமான வீடுகளுடன், இடிபாடுகளும் குப்பைகளும் மண்டி, நிறைந்து வழியும் சாக்கடைகளுடன் காணப்படுகின்றன. நகரத்தின் முழுச் சாக்கடையும் கோதாவரியை நோக்கி திறந்துவிடப்படுகிறது. அனைத்து சாக்கடைகளும் வந்து சேரும் அந்த தாழ்ந்த பகுதியில் தலித்கள் குடியிருப்பு இருப்பதனால் அவர்கள் அதற்குள்ளேயே தான் வாழவேண்டியிருக்கிறது.
குறுகலான தெருக்களில் சோர்வுற்ற முகங்களுடன் இடுங்கிய கண்களுடன் பீடியை ஆழ இழுத்துக்கொண்டு அமர்ந்திருக்கும் மக்களில் எவர் தலித் எவர் அல்லாதவர் என்பதை மிக எளிதில் கண்டடைய முடியும். தலித்கள் பொதுவாக தலைப்பாகையோ அல்லது மராட்டிக்கே உரிய காந்தித்தொப்பியோ அணிவதில்லை. வெறும் தலையர்கள் பெரும்பாலும் தலித்கள் என்று சொல்லிவிட முடியும்.
நாகா காட்டுக்கு செல்லும் வழியில் இருந்த பிரம்மாண்டமான மாளிகைகளைக் கண்டு திகைத்து நின்றுவிட்டேன். கோட்டை போன்ற ஓங்கிய சுவர்கள் கொண்டவை. ஒன்றுக்கு மேற்பட்ட அடுக்குகள். தலைக்குமேல் திறந்துகிடக்கும் சன்னல்கள். ஆனால் மாளிகைகளுக்கு கூரை கிடையாது. கூரைகள் அழிந்து இருநூறு ஆண்டுகள் கடந்திருக்கும். அப்பகுதியை ஆண்ட ராஜபுத்திரர்களால் கட்டப்பட்டு, இஸ்லாமியர்களால் கைப்பற்றப்பட்டு, வெவ்வேறு ஆட்சியாளர்களால் பயன்படுத்தப்பட்ட மாளிகைகள் அவை. பிரிட்டிஷ் ஆட்சிக்காலத்தில் மொகலாய ஆட்சியாளர்கள் தோற்கடிக்கப்பட்டபோது கைவிடப்பட்டவை. அழிந்து பெரும் சுவர்களாக நின்றிருக்கின்றன.
அவற்றின் கதவுகள் எப்போதைக்குமாக மூடப்பட்டுள்ளன. அவற்றின் இடுக்குகள் வழியாகப்பார்க்கும்போது உள்ளே குப்பையும் கூளமும் முட்செடிகளும் மண்டி இருளடைந்த செறிந்த காடு ஒன்று இருப்பதை உணர முடிந்தது. ஒரு வீட்டுக்குள் காடு என்பது ஒரு திகைக்க வைக்கும் படிமம். அப்போது அந்தக் காட்சி அளித்த திகைப்பு மட்டுமே இருந்தது. நாகா கட்டுக்கு செல்லும் பாதையும் ஆளோய்ந்தது .சுடுகாட்டுக்கு அருகே அந்த படிக்கட்டு இருக்கிறது. ஈமச்சடங்குகளுக்கு மட்டும் தான் அது பயன்படுத்தப்படுகிறது அங்கும் கோதாவரியை ஒட்டி ஓர் இடிந்த மாளிகை உள்ளது. ஒரு காலத்தில் மிக அழகிய ஒரு வசந்த மாளிகையாக அது இருந்திருக்கலாம். எல்லா வாசல்களும் கோதாவரியின் பெருநீர்ப்பரப்பை நோக்கித் திறப்பவை. ஆனால் இன்று உள்ளே புதர்கள் மண்டி முட்கள் செறிந்து கிடக்கிறது.
அந்த மாளிகைகள் என்னை தொந்தரவு செய்துகொண்டே இருந்தன. அந்த நிலம் என்னுள் ஓடிக்கொண்டிருந்த ’கதைசொல்லும் பிசாசு ஒன்று உண்டென்று அம்மா சொன்னாள்’ என்ற வரியுடன் இணைந்துகொண்டது. அந்தக் கதைப்பிசாசு வாழுமிடம் என்று நான் ஏற்கனவே கற்பனை செய்திருந்தது எனக்கு நன்கு தெரிந்திருந்த ஒரு மழைக்காடு, பசுமையின் இருட்டு நிறைந்தது. அந்த அகநிலம் நான் அங்கு வந்தவுடனே மாறிவிட்டது. ஆனால் பிறிதொன்று அமையவும் இல்லை.
என்னுடைய கையில் இருந்த அத்தியாயங்கள் எல்லாமே மனதில் மிகப்பெரிய பின்னடைவை அடைந்துவிட்டிருந்தன. அவை நேரடியாக பிரதிஷ்டானபுரியின் வாழ்க்கையைச் சித்தரிப்பவை. குணாட்யர் பிறந்து, பிரதிஷ்டானபுரியில் வளர்ந்து ,கவிஞனாகும் வாழ்க்கையின் தொடக்கச் சித்திரங்கள் அவை. ஆனால் அவை விஷ்ணுபுரத்தின் நேரடியான செல்வாக்கு கொண்ட அத்தியாயங்கள் போன்றிருந்தன. ஆகவே அவ்ற்றை நான் பயன்படுத்தவில்லை. அவற்றை எப்படி மாற்றியமைப்பது என்ற எண்ணமும் எனக்கு எழவில்லை.
எழுதிய ஒன்றை ஒருபோதும் மாற்றியமைக்க முடியாது என்பது என்னுடைய அனுபவம். ஒன்று பிறந்து வருகிறது. அழகும் மகத்துவமும் கொண்டதாக இருக்கலாம். இறந்தும் பிறக்கலாம் .விரைவில் இறந்தும் போகலாம். ஆனால் அது ஒரு செய்பொருள் அல்ல. சிறு மாற்றங்கள் செய்யலாம். படிப்படியாக ஒரு படைப்பை மேம்படுத்த முடியாது. ஆகவே எழுதிய அத்தியாயங்களை கைவிட முடிவு செய்தேன். வேறொன்று எழுதத் தொடங்கவேண்டும் ஆனால் அந்த முதல் வரியில் என் உள்ளம் விலகிச்செல்லவும் இல்லை.
(மேலும்)
பெங்களூர், இன்னொரு வாழ்க்கைத்துளிஅனோஜன் பாலகிருஷ்ணன்
[image error]இலங்கை தமிழ் எழுத்தாளர்களில் இளைய தலைமுறைப் படைப்பாளியாகிய அனோஜன் பாலகிருஷ்ணன் ஈழ அரசியல் மற்றும் புலம்பெயர் வாழ்க்கைச் சூழல்களை களமாகக்கொண்டு எழுதுகிறார். சுனில் கிருஷ்ணன் அவரது விமர்சன கட்டுரையில் ‘கற்பனாவாத உருவகங்களை கைவிட்டு முன் நகர்ந்திருக்கிறார் தன்னிலை கதைகளில் அகமொழி கூர்மையாக உணர்வுகளை கடத்துகிறது. அவர் அடைந்த கதை தொழில்நுட்ப தேர்ச்சியைக் கொண்டு அவரால் எதையும் கதையாக்கிவிட முடியும்’ என குறிப்பிடுகிறார்
அனோஜன் பாலகிருஷ்ணன்
வேதாசலம், மின்னஞ்சல் எதற்காக?
வேதாசலம் அவர்களுக்கு தமிழ்விக்கி விருது அளிக்கப்படவிருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. அவருடைய பாண்டியநாட்டு ஊர்கள் பற்றிய நூலை நான் ஓர் ஆய்வுக்காக வாசித்தேன். மிகப்பெரிய பணிகளை ஆற்றியிருக்கிறார்.
இன்று ஆய்வாளர்கள் என அறியப்படுபவர்கள்பெரும்பாலும் எளிமையான கட்டுரைகளை இதழ்களில் தொடர்ச்சியாக எழுதுபவர்களோ, அல்லது அரசியல் விவாதங்களில் ஈடுபடுபவர்களோதான். அரசியல் சண்டைகள் இங்கே இடைவிடாமல் நடக்கின்றன. அந்த சண்டைகளில் ஏதாவது ஒரு தரப்புக்கு பயன்படும்படியாக எதையாவது மிக எளிமையாகவும், மிக தீவிரமாகவும் சொன்னாலொழிய ஆய்வாளர்களுக்கு கவனிப்பே இல்லை.
வேதாசலம் போன்றவர்கள் இச்சூழலில் எந்த மதிப்பும் இல்லை. அவர்களை இன்னொரு ஆய்வாளர் தவிர எவருமே அறிந்திருப்பதுமில்லை.
தமிழகச் கல்விச்சூழலில் இன்று ஆய்வு என்பதே கேலிக்கூத்தாகியுள்ளது. முனைவர் பட்ட ஆய்வு என்பது எப்படியாவது ஒப்பேற்றப்படும் ஒரு பட்டம்தான். அது ஆசிரியர் பணிக்கு அவசியம் என ஆனதுமே கடனே என்று செய்யப்படும் ஆய்வுகளே நிகழ்கின்றன. ஆகவே உண்மையான ஆய்வுக்கு எந்த மதிப்பும் இல்லை.
அரசியல்வாதிகளுக்கு உண்மையான தொல்லியல் ஆய்வுகள் மேல் நம்பிக்கை இல்லை. ஏனென்றால் தொல்லியல் ஓர் அறிவுத்துறை. அதற்கான நுணுக்கமான மெதடாலஜி அதற்கு உண்டு. அதில் அதிரடிகளுக்கெல்லாம் இடமில்லை. அதிரடிபேசும் நபர்களை ஆய்வாளர்களாக ஏற்றுக்கொள்வதே நமது வழக்கம்.
வேதாசலம் போன்றவர்கள் இச்சூழலில் இத்தனை பெரிய பணியைச் செய்திருப்பதை எண்ணினால் ஒரு பெரிய நம்பிக்கை உருவாகிறது. எந்நிலையிலும் ஆய்வும் இருக்கும் ஆய்வாளர்களும் இருப்பார்கள் என்ற உறுதிப்பாடு உருவாகிறது. தமிழகத்தில் இன்று இருப்பதுபோல தொல்லியல், வரலாற்று ஆய்வுக்கு எந்த இடமும் இல்லாத ஒரு சூழல் இனி வரப்போவதே இல்லை.
இந்த விருது அவருக்கு ஒரு சிறு நம்பிக்கையை அளித்திருக்கும். அவருக்கு என் வாழ்த்துக்கள்.
பிகு அவருடைய விருது அறிவிப்பில் மின்னஞ்சல் அளிக்கப்பட்டுள்ளது. அது அவருடைய தனிப்பட்ட விவரம் அல்லவா?
எஸ்.கோவர்தனன்
அன்புள்ள கோவர்தனன்,
நீங்களே சொல்லிவிட்டீர்கள், இன்று தமிழகத்தில் மெய்யான ஆய்வாளர்கள் எந்தச்சூழலில் பணியாற்றுகிறார்கள் என்று. இங்கே மிகச்சிலர் அவருடைய நூல்களை வாசித்திருக்கலாம். மிகச்சிலர் மேற்கொண்டு அவரை அறியவும் விரும்பலாம். அவர்கள் அவருக்கு ஒரு வாழ்த்து சொல்வார்கள் என்றால் அவருக்கு சிலராவது தன்னை வாசிக்கிறார்கள் என்னும் நம்பிக்கை உருவாகும். தமிழ் சீரிய இலக்கியவாதிகள், ஆய்வாளர்களுக்கு அப்படி ஒரு நான்குபேர் சொல்வதைப்போல உண்மையான விருது வேறு ஏதுமில்லை.
ஜெ
Guru and Purnima
I expect my friends and readers to celebrate the day as Gurupurnima—Venmurasu Day. They can visit Vellimalai for the event. Or they can celebrate it at their homes; they can read Venmurasu on that day. It is enough.
கிராமங்களில் ஒரு community life உள்ளது, அது நகரங்களில் இல்லை. நகரங்களில் அத்தனைபேரும் தனிமையில் வாழ்கிறார்கள். இதனால் உறவுகள் சிக்கலாகின்றன. பல உளச்சோர்வுகள் உருவாகின்றன.
இலக்கியத்தில் நகரங்கள்July 3, 2025
ஐரோப்பா பயணம்
இன்று (4 ஜூலை 2025 ) அதிகாலை நானும் அருண்மொழியும் சைதன்யாவும் ஐரோப்பா கிளம்புகிறோம். திருவனந்தபுரம் சர்வதேச விமானநிலையத்தில் இருந்து விடியற்காலை 4 மணிக்கு கிளம்பி கத்தார். அங்கிருந்து சூரிச். ஐரோப்பாவில் மூன்றுநாட்கள் தத்துவ – இலக்கிய முகாம். அதன் பின் சுற்றுப்பயணம். ஆகஸ்ட் 1 அன்றுதான் நாகர்கோயில் திரும்புவோம்.
நானும் அருண்மொழியும் செல்லும் நான்காவது ஐரோப்பா பயணம் இது. சைதன்யாவுக்கு இரண்டாவது. ஐரோப்பா என்றுமே பார்த்துத் தீராத வியப்பு கொண்டது. தொன்மையானது, கூடவே நவீனமானது. இலக்கியங்களில் வாசித்த ஊர்களை நேரில் பார்க்கையில் ஒரு வியப்பும், கூடவே மிக அறிமுகமானவை என்னும் சகஜமும் உருவாவது ஓர் அரிய அனுபவம்.
கோவை சொல்முகம் கருத்தரங்கம்
நண்பர்களுக்கு வணக்கம்.
நமது சொல்முகம் வாசகர் குழுமம் ஒருங்கிணைக்கும் 7வது இலக்கிய கருத்தரங்கம் ஜுலை 6ஆம் தேதி ஞாயிறன்று கோவையில் நிகழவுள்ளது. அதில் எழுத்தாளர் திரு. சுப்ரபாரதிமணியன் அவர்கள் முன்னிலையில் அவரது படைப்புகள் மீதான வாசிப்பனுபவங்கள் முன்வைக்கப்படும். இலக்கிய ஆர்வமுள்ள நண்பர்கள் அனைவரையும் இந்நிகழ்விற்கு வரவேற்கிறோம். ஆசிரியருடன் உரையாடி மகிழ வேண்டுகிறோம்.
தமிழ் விக்கி பக்கம் :
சுப்ரபாரதி மணியன்நாள் : 6 ஜுலை 25, ஞாயிற்றுக்கிழமை,
நேரம் : காலை 10:00 – 1:00
இடம் : விஷ்ணுபுரம் பதிப்பகம், வடவள்ளி, கோவை.
Google map : https://maps.app.goo.gl/rEKLkhumw9r6XPGV9
தொடர்பிற்கு:
பூபதி துரைசாமி – 98652 57233
நரேன் – 73390 55954
நிழல்களுடன் ஆடியது-1
இளமையில் என்னைப்பெரும் கனவில் ஆழ்த்திய கதைகளில் ஒன்று ரா.ஸ்ரீ.தேசிகன் எழுதியது. அவரது ஒரே ஒரு சிறுகதைத்தொகுப்பு தான் வெளிவந்துள்ளது என்று தெரியவருகிறது. கலைமகள் பிரசுராலயம் வெளியிட்ட அந்த நூல் என் கைக்கு கிடைக்கும்போது நான் ஐந்தாம் வகுப்பு மாணவன். அதில் ஒரு கதை பல நாட்கள் ஒரு தொடர் உணர்வலகளை எழுப்பிக்கொண்டிருந்தது. கதையின் தலைப்பை இப்போது நான் மறந்துவிட்டேன். ஆனால் அதில் ’அந்த நிலனிலே அந்த நிலவினிலே மந்த மாருதம் மெல்ல வீசவே’ என்றொரு பாடல் வரும். அந்தப்பாட்டை பல ஆண்டுகள் திரும்ப திரும்ப பாடிக்கொண்டே இருந்திருக்கிறேன் இன்றும் அந்தக்கதைத் தொகுதியின் அக்கதை அமைந்த பக்கம் கூட நினைவில் புரளுமென்று தோன்றுகிறது.
அது குணாட்யரின் கதை. தன் மாகாவியத்தை தானே நெருப்பிலிட்டு அழித்த காவிய மேதை. எனக்கு அந்தக்கதை சொல்லொணாத துயரம் ஒன்றை அளித்தது. ஏனென்றால் அன்றே என்னை நான் எழுத்தாளனாக, கவிஞனாக எண்ணிக்கொண்டிருந்தவன். கூடவே விந்தையான அறியா நிலமொன்றில் அலைந்துகொண்டிருக்கும் பரவசத்தையும் அந்தக் கதை கொடுத்தது. அந்தக்கதையை திரும்ப படிக்கவேண்டுமென்ற ஆசையால் தொடர்ந்து ரா.ஸ்ரீ.தேசிகனின் நூல்களைத் தேடிக்கொண்டிருக்கிறேன். இன்றுவரைக்கும் அந்த குறிப்பிட்ட சிறுகதைத் தொகுதி எனக்கு கிடைக்கவில்லை. மீண்டும் அக்கதையை படிக்க வாய்ப்பும் அமையவில்லை.
ரா.ஸ்ரீ.தேசிகன் எழுதிய வேறு மூன்று நூல்கள் என் நூலகத்தில் உள்ளன. அவருடைய புகழ்பெற்ற மொழிபெயர்ப்புநூல் தாமஸ் மன்னின் ’மாற்றிவைக்கப்பட்ட தலைகள்’. அது ஒரு பண்டித நடையில் மொழிபெயர்க்கப்பட்டிருக்கிறது. அப்படியென்றால் அவருடைய சிறுகதையும் அதே போன்று ஒரு பண்டித நடையில் அமைந்திருக்கத்தான் வாய்ப்பு .அந்த வயதில் அதில் எப்படி என் மனம் ஈடுபட்டது?. எப்படி அக்கனவுக்குள் சென்றது? எனக்கு இன்றும் தெரியவில்லை. ரா.ஸ்ரீ.தேசிகனால் ஒரு நல்ல கதை எழுதிவிட முடியும் என்று இன்றும் தோன்றவில்லை. ஆகவே அக்கதையல்ல, குணாட்யரின் கதைதான் என்னை ஆட்கொண்டதென்று எண்ணுகிறேன்.
என்றோ ஒருநாள் தன் காவியத்தை தானே அழித்த பெருங்கலைஞனின் கதையை ஒரு நாவலாக எழுதிவிடவேண்டும் என்று எண்ணினேன். அழிக்கப்பட்ட காவியம் மெய்யாகவே அப்படி அழிந்துவிடுமா? ஒரு பெருங்காவியத்தை காலமேகூட அழித்துவிட முடியுமா? ஒரு கவிஞன் தன் காவியம் அழியவேண்டும் என எப்படி முடிவெடுத்தான்? ஆயிரம் சாவுக்குச் சமானமான அந்த இறுதியை அவன் எப்படி அடைந்தான்?
அதை சிறுவனாக இருந்த நான் வெவ்வேறு வகையில் கதைகளாக எழுதியிருக்கிறேன். எட்டாம் வகுப்பு படிக்கையில் ஒரு கதை எழுதி அதை எங்கோ பிரசுரத்துக்கு அனுப்பிய நினைவுள்ளது. வேறொரு வகையில் அதை மீண்டும் எழுதி ஒரு சிறுகதையாக ஏதோ ஒரு சிறுபத்திரிகையில் வெளியானதும் நினைவிருக்கிறது. நான் எழுதத் திட்டமிட்ட முதல் நாவலே அதுதான். ஆனால் என் நடை தயாராகவில்லை என உணர்ந்து, ஒரு சமூக நாவல் எழுதலாம் என்று எண்ணி அகிலன் நினைவு நாவல் போட்டிக்காக ரப்பர் நாவலை 1989ல் எழுதினேன். அது விருது பெற்றது.
அதற்குப்பின் மீண்டும் குணாட்யரின் கதையை ஒரு வரலாற்று நாவலாக எழுத முயன்றேன். பன்னிரண்டு அத்தியாயங்கள் வரை எழுதியிருந்தேன். அதன்பொருட்டு சமஸ்கிருத காவியங்களின் ஆங்கில, மலையாள மொழிபெயர்ப்புகளை தொடர்ந்து படித்துக் கொண்டிருந்தேன். சம்ஸ்கிருத காவியங்கள் அன்றும் இன்றும் எனக்கு ஈர்ப்பையும் ஒவ்வாமையையும் உருவாக்குபவை – விதிவிலக்கு காளிதாசன். பிற காவியங்கள் எல்லாமே ஒருவகையான உலகியல்தன்மை, என் பார்வையில் அஜீரணத்தால் விளையும் ஏப்பம் போன்ற ஒரு தன்மை, கொண்டவை. அவற்றிலுள்ள சிருங்காரம் வெவ்வேறு அணிகளினூடாக வெறும் ஒரு ‘ரசம்’ மட்டுமாக வெளிப்படும் தன்மை கொண்டது. அது எனக்கு ஒவ்வாமையை அளித்தது. ஆனால் அந்தக் காலகட்டம் உருவாக்கும் கனவு, அழகிய அணிச்சொற்றொடர்கள் ஈர்ப்பையும் அளித்தன.
காவியம் என்ற பேரிலேயே நான் எழுதிய அந்த நாவல் பன்னிரண்டு அத்தியாயங்களுக்குப் பிறகு முன்நகராததால் அதை அப்படியே கைவிட்டுவிட்டு, என் உள்ளத்திலிருந்த இன்னொரு பெருங்கனவாகிய விஷ்ணுபுரத்தை எழுதினேன். 1997-ல் வெளிவந்து இன்று தமிழகம் முழுக்க பரவலாக அறியப்பட்ட ஒரு நாவலாகவும், ஆழ்ந்து பயிலப்படும் ஒரு படைப்பாகவும் அது உள்ளது. விஷ்ணுபுரத்துக்குப் பிறகு இன்னொரு காவிய நாவலை எழுதக்கூடாது என்ற எண்ணத்தினால் பின்தொடரும் நிழலின் குரல், கன்னியாகுமரி போன்ற நாவல்களை எழுதினேன். அந்த நடையில் இருந்து என்னை விலக்கிக் கொண்டேன்.
கொற்றவைக்கு முன்பு மீண்டும் காவியம் என நான் உள்ளத்தில் நிகழ்த்திக்கொண்டே இருந்த அந்நாவலை எழுத முயன்று மீண்டும் ஆறு அத்தியாயங்கள் எழுதினேன். அதற்கான மொழிநடை எனக்குக் கைவரவில்லை என தெரிந்து நிறுத்திவிட்டேன். சம்ஸ்கிருத காவியங்களைப் பற்றிய ஒரு நாவல் ஒருவகையான செவ்வியல் நடையில்தான் இருக்க முடியுமென்று தோன்றியது. ஆனால் அச்செவ்வியல் நடை சம்ஸ்கிருத கலப்பு- மணிப்பிரவாள நடையில் அமையக்கூடாது. எனக்கு மணிப்பிரவாள நடைமேல் ஓர் ஒவ்வாமை உண்டு. அது எம்.கோவிந்தன் உருவாக்கியது. சம்ஸ்கிருத சிருங்காரம் மீதான ஒவ்வாமையும் எம்.கோவிந்தன் அளித்ததுதான். அவர் அதை மூரிசிருங்காரம் என்பார். (எருமைகள் மூக்கு உரசிக்கொள்வதுபோன்றது) . என் மொழி தூய தமிழ் நடையிலும் அமையக்கூடாது. ஏனென்றால் அது தமிழ்நிலத்தின் கதை அல்ல. இன்னொரு நடையை கண்டடைவதற்கான என்னுடைய முயற்சிகள் வெல்லவில்லை. ஆகவே அப்போதும் கை விட்டுவிட்டேன்.
தூய தமிழ்நடையில் குணாட்யரின் கதையை எழுத முயன்று நிறுத்திவிட்டிருந்த அந்தப்பயிற்சியில் கொற்றவையை எழுதினேன். அதன் பிறகு காவியம் நாவலை எழுதவேண்டுமென்ற கனவுடன் இருந்தேன், பின்னர் ஒருவேளை என்னால் அதை ஒருபோதும் எழுதிவிட முடியாது என்ற எண்ணத்துடன் முழுமையாகவே ஒத்திவைத்துவிட்டேன். குணட்யரின் காவியம் முற்றாக அழிந்தது, என் காவியம் என்னுள்ளேயே அழிந்துவிட்டது என்று சொல்லிக்கொண்டேன். நீண்ட நாற்பது ஆண்டுகள் இது கனவாகவே நீடித்திருக்கிறது. நடுவே பெருங்காவியம் என்று நான் கனவுகண்டிருந்த , எழுதமுடியுமா என்றே மலைத்திருந்த வெண்முரசை எழுதி முடித்துவிட்டேன். காவியம் அவ்வப்போது நினைவில் எழும். அக்கணமே விலக்கிவிடுவேன்.
அண்மையில் காவியம் நாவலை மீண்டும் எழுதுவதற்கான ஓர் அகத்தூண்டுதலை நான் அடைந்தேன். எங்கிருந்து அது தொடங்கியது என்று சொல்லமுடியாது. தமிழ் விக்கியில் ரா.ஸ்ரீ.தேசிகனைப் பற்றி ஒரு பதிவு இருந்தது. அப்பதிவில் வெவ்வேறு தரவுகளைச் சேர்த்து சீர்ப்படுத்தி முழுமை செய்தேன். மீண்டும் அந்த நிலவினிலே என்ற பாடல் எனக்குள் ஒலிக்கத் தொடங்கியது. எழுதினாலென்ன என்ற எண்ணம் எழுந்து வளர்ந்து எழுதியாகவேண்டும் என்னும் உணர்வாக ஆகியது. நடுவே கடல் நாவலை பழைய மின்னஞ்சல்களில் இருந்து எழுத்துச் செப்பனிட்டேன். அந்நாவலின் உக்கிரமான செவ்வியல் ஓவியம் போன்ற பகுதிகள் காவியம் போன்ற படைப்பால்தான் என்னுள் மீண்டும் நீள முடியும் என்று தோன்றியது. என் ஆத்மா அதிர்ந்துகொண்டே இருந்த நாவல் கடல். அது ஓர் உக்கிரமான வாக்குமூலம். கைநடுங்க நான் எழுதி முடித்தது. எனக்கு மேலும் உக்கிரம் தேவைப்பட்டது. கடல் எழுதும்போதே என்னை வேறேதோ ஆட்கொண்டிருந்தது.
அஜிதனிடம் இளமையிலேயே இக்கதையை வெவ்வேறு வடிவில் சொல்லியிருக்கிறேன். சென்னை சென்றபோது சைதன்யாவிடம் இப்படி ஒரு கதை என் உள்ளத்தில் உள்ளது, இதை நாவலாக எழுதலாம் என்று நினைக்கிறேன் என்று சொன்னேன். ‘இக்கருவை நான் ஏற்கனவே எழுதிய வடிவங்களில் உள்ள பிழை என்பது குணாட்யரின் காவியம் அழிந்த நிகழ்வில் உள்ள அடிப்படையான குறியீட்டுத்தன்மை ஒன்றை, அதனூடாக வரலாற்றில் ஊடுருவும் வாய்ப்பை, நான் கருத்தில் கொள்ளவில்லை என்பதுதான். எப்படியோ அதை சமகாலத்துடன் இணைக்காமல் வலுவாக எழுதமுடியாதென்று தோன்றுகிறது. ஆகவே அந்த தொலைந்த பெருங்காவியத்தை சமகாலத்திலிருந்து சிலர் தேடிச்செல்வது போல ஒரு நாவலை எழுதலாம் என்று நினைக்கிறேன்’ என்று அவளிடம் சொன்னேன். அல்லது ஒரு துப்பறியும் நாவலாக அமைக்கலாமா என்று கேட்டேன்.
இன்று தமிழ்ச்சூழலில் எனக்குத் தெரிந்த மிகப்பெரிய இலக்கிய வாசகர், மிகக்கூர்மையான இலக்கிய விமர்சகர் என்று நான் சைதன்யாவைத்தான் சொல்வேன். அவள் சிரித்தபடி ‘தொலைந்து போன பிரதியை தேடிச்செல்வது, மறைந்துபோன பிரதியை மீட்டெடுப்பது, துப்பறியும் பாணியில் நவீன நாவலை எழுதுவது இது எல்லாமே காலாவதியாகிவிட்ட எழுத்துமுறைகள். சொல்லப்போனால் தொண்ணூறுகளுக்குப்பிறகே அவை பழையதாகிவிட்டன. தமிழ்நாட்டில் எழுத்தாளர்கள் எப்போதுமே பழைய ஒரு உத்தியைத்தான் காலம் பிந்தி கற்றுக்கொண்டு பின் தொடர்கிறார்கள். அந்த வடிவமே தேவையில்லை’ என்றாள்.
அப்படியானால் எப்படி எழுதுவது என்று அவளிடம் விவாதித்தேன். ’உனக்கு இயல்பாக வருவது நேரடியான கதை விவரணைதான். இயல்பிலேயே நீ ஒரு கதைசொல்லி. கதையைச் சொல். தன்னளவில் அதில் கூடிவருவன வரட்டும். அதுதான் நல்ல வழி.’ என்று அவள் சொன்னாள். ‘எது எளிதில் காலாவதியாகாது என்றால் எந்த வடிவம் தன்னிச்சையானதோ இயல்பானதோ அதுதான். வலிந்து செய்யப்படும் எந்த உத்தியும் அதிகபட்சம் இருபதாண்டுகள் தாக்குப்பிடிக்காது. நீ கதைசொல்லி. கதைசொல்லி மட்டுமே காலத்தை கடப்பான், அறிஞனோ ஆவய்வாளனோ அல்ல’ என்றாள்.
அதன் பிறகு , ஏப்ரல் 19 , 2025 அன்று நான் பெங்களூர் சென்றேன். அங்கே என்னுடைய Of Men women and witches புத்தகத்தின் விவாத அரங்கு ஏப்ரல் 20 அன்று ஒருங்கிணைக்கப்பட்டிருந்தது. இரவு அங்கு சென்று சேர்ந்தேன். அங்கெ ஜெயநகரில் ஒரு விடுதி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அன்றிரவு முழுக்க நிலைகொள்ளாமல், தூக்கமும் பிடிக்காமல், பெங்களூர் நகரத்தில் அலைந்துகொண்டிருந்தேன். பெங்களூரில் இரவு எட்டு, ஒன்பது மணிக்குமேல் சில பகுதிகளைத்தவிர மற்ற இடங்களில் எங்கும் ஒரு டீ கூட கிடைப்பதில்லை. நான் தங்கியிருந்த விடுதி உயர்தரமானது. ஆனால் அங்கேயும் சமையலறையை இரவு எட்டுமணிக்கு மூடிவிடுவார்கள். ஒரு டீ கிடைக்குமா என்று தேடி அப்பகுதியின் தெருக்களில் சுற்றிச் சுற்றி வந்தபோது அந்நாவலை எப்படி எழுதுவது என்ற ஒரு சித்திரம் எனக்குள் உருவாகியது. டீ குடிக்காமலேயே திரும்பி வந்து நாவலின் தொடக்கத்தை எழுதினேன்.
(மேலும்)
இராம குருநாதன்
[image error]கவிஞர், எழுத்தாளர், மொழிபெயர்ப்பாளர், ஆய்வாளர். தமிழ்ப் பேராசிரியராகப் பணியாற்றினார். இலக்கியக் கட்டுரை நூல்களையும், மொழிபெயர்ப்பு நூல்களையும் எழுதினார். பொது வாசிப்புக்குரிய நாவல்களையும் சிறுகதைகளையும் எழுதினார்.
இராம குருநாதன்
வல்லினம்- ஜூலை இதழ்
அன்பான ஜெ, ஜூலை மாத வல்லினம் பதிவேற்றம் கண்டது.
https://vallinam.com.my/version2/
இவ்விதழில் வல்லினம் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. பி.எம்.மூர்த்தி குறித்து 2018இல் உங்களுக்கு ஒரு கடிதம் எழுதியுள்ளேன். நேரிலும் அவர் பணிகள் குறித்து உரையாடி உள்ளேன். அவருக்கே இம்முறை விருது. அவர் பணிகள் குறித்து விரிவாக எழுதியுள்ளோம். விருதை ஒட்டி ஒரு நூலும் வெளிவருகிறது. தங்கள் தளத்தில் வெளியிட்டு மேலும் பரந்த வாசகர்களை சென்றடைய உதவுங்கள்.
மேலும், ஜூன் மாதம் நடந்த இரண்டு மொழிபெயர்ப்பு நூல்கள், உரையாடல்கள் நிகழ்ச்சிகள் குறித்த விரிவான பதிவும் இவ்விதழில் இடம்பெற்றுள்ளது. சுவாமி குறித்த பதிவு ஒன்றை சர்வின் எழுதியுள்ளார்.
ம.நவீன் / M.Navin
No Tel : 0163194522
web site : www.vallinam.com.my
blog : www.vallinam.com.my/navin/
Jeyamohan's Blog
- Jeyamohan's profile
- 834 followers
