Jeyamohan's Blog, page 61
July 9, 2025
குருபூஜை மரபு நம்முடையதா?
குருபூர்ணிமா நம்முடையதா என்ற கேள்வி அவ்வப்போது எழுப்பப்படுகிறது. அதையொட்டிய நான்கு கேள்விகளுக்கான பதில்கள்.
குருபூஜை மரபு நம்முடையதா?Venmurasu is written entirely in Tamil, a classical language of antiquity like Latin or Sanskrit, with a rich literary tradition, but still spoken today. It is based on the Indian epic, the Vyasa-Mahabharatha.
Venmurasu- SuchitraJuly 8, 2025
வியாசபூர்ணிமை நாளை
நாளை (10 ஜூலை 2025) வெண்முரசு நாள். வியாசபூர்ணிமையை வெண்முரசு நாளாகக் கொண்டாடுவதாக அந்நாவல் நிரையை நான் எழுதி முடித்தபோது முடிவுசெய்தோம். ஒரு சிறு வாசகர்குழுவுக்குள் இதைச் செய்கிறோம். குருபூர்ணிமா பொதுவாக தமிழகத்திற்கு முற்றிலும் அன்னியமான ஒரு விழாதான். அதை இவ்வாறாக ஒரு பொதுவிழாவாக ஆக்குகிறோம்.
குருபூர்ணிமா அன்று செய்யத்தக்கவை என்ன? தத்தம் ஆசிரியர்களை வணங்குதல். வியாச மகாகாவியத்தையும், அதன் வழிநூல்களையும், அதையொட்டிய கலைநிகழ்வுகளையும் ரசித்தல். அதுவே மரபு. ஆகவே அதை வெண்முரசு நாளாகக் கொண்டாடுவது வியாசனுக்கு வணக்கத்தையும், அவனில் தொடங்கும் காவியங்களை உள்வாங்குதலையும் ஒருங்கே செய்வதுதான்.
நான் கதகளி நடனசபைகளில் இந்நிகழ்வு இப்படித்தான் கொண்டாடப்படுவதைக் கண்டிருக்கிறேன், அங்கே பாடப்படும் அல்லது நடிக்கப்படும் கதகளிக் கதைகள் வியாசனில் இருந்து மேலே வளர்ந்துசென்று கொட்டாரக்கரை தம்புரான் போன்றவர்களால் உருவாக்கப்பட்டவை. வியாசகாவியம் எப்படியெல்லாம் பாரதமாக வளர்ந்தது என அறிந்தவர்களுக்கு அது இயல்பானதாகவே இருக்கும்.
ஒரு நூலை ஏன் அப்படி ஆண்டு தோறும் ஒரு விழாவாகக் கொண்டாடவேண்டும்? ஏனென்றால் அது முடிவில்லாத நூல். வழிநூல்களின் வழியாகவும் வளர்ந்துகொண்டே இருப்பது. வெண்முரசும் அப்படித்தான். அதற்கும் வழிநூல்கள் உருவாகலாம். எந்த ஒரு நல்ல வாசகரும் அதை போதுமான அளவு வாசித்துவிட்டதாகச் சொல்லிக்கொள்ள முடியாது என்றே நான் நினைக்கிறேன். மொத்த இந்தியப்பண்பாட்டின் சித்திரமும், இந்திய தத்துவசிந்தனையின் அழகியல் ரீதியான சுருக்கமும் அதில் உள்ளன. வாசகர் வளருந்தோறும் உடன் வளரும் படைப்பு அது.
கீ.இராமலிங்கனார்
எழுத்தாளர், மொழியியலாளர். தமிழில் ஆட்சிச் சொற்களைத் தொகுத்து நடைமுறைப்படுத்தியவர். தமிழை ஆட்சி மொழியாக்குவதற்கான முயற்சிகளில் ஈடுபட்டதால் ‘ஆட்சிமொழிக் காவலர்’ என அழைக்கப்பட்டார்.

புதைந்த காவியம்
அன்புள்ள ஜெ,
காவியம் நாவலை கதையாகவே வாசித்துச்சென்றவர்களில் நானும் ஒருவன். தொடக்கம் முதல் அது அப்படி தன்னை ஒரு ‘நல்ல கதை’ என்று நம்பவைத்து வாசிப்பில் இட்டுச்சென்றது. துக்காராமுக்கும் ராதிகாவுக்குமான உரையாடல்களில் காவியத்தின் மெய்யான அழகியல் பற்றி வரும் இடங்கள், அவர்களின் ஆசிரியர் காவியத்தின் யக்ஷனாகிய கரடியை உணரும் இடங்கள் எல்லாம் ஒரு காதல்கதையின் ‘ஆம்பியன்ஸ்’ ஆக மட்டுமே என்னால் வாசிக்கப்பட்டன. அவர்கள் அறிவார்ந்த உரையாடலில் ஈடுபடுபவர்கள் என்பதைக் காட்டுவதற்காக மட்டுமே அந்தப்பகுதிகள் வருகின்றன என நினைத்துக்கொண்டவர்களில் நானும் ஒருவன்.
அவர்கள் சென்னைக்கு வந்ததும் நாவல் சூடுபிடித்து வேகம்கொண்டது. ஆனால் ராதிகா கொல்லப்பட்டதும் கதையே முடிந்ததுபோல ஆகிவிட்டது. மேலே படிக்கமுடியாமல் என் நண்பர்களில் பலர் நின்றுவிட்டனர். எனக்கும் சலிப்புதான். அதன்பின் தள்ளித்தள்ளித்தான் நாவலின் தொடர்ச்சியை வாசித்தேன். ராம் கண்,காது, பேச்சு இல்லாமல் மூடிப்போனபோது நாவல் மூச்சுத்திணறச்செய்வதாக ஆகியது.
ஆனால் ஏதோ ஒரு புள்ளியில் நாவலின் அகக்கட்டமைப்பு புரிய ஆரம்பித்தது. நான் வெண்முரசு 16 நாவல்களை வாசித்தவன். அதிலேயே இரண்டு ஆண்டுகளாக வாழ்ந்துகொண்டிருப்பவன். இந்நாவல் வெண்முரசுக்கு நேர் எதிரானது. வெண்முரசின் antithesis இது. ஒட்டுமொத்த இந்து சிந்தனை மாபு, இந்திய மையச்சிந்தன ஓட்டம் ஆகியவற்றை மறுத்து இன்னொரு பக்கத்தை முன்வைக்கிறது.
ரிக்வேதம் ‘ஆகாயவடிவமான அதுவே அறியும்’ என்று பிரம்மத்தை வானம் என்று சொல்கிறது. அதை பலமுறை நீங்களும் மேற்கோள்காட்டியிருக்கிறீர்கள். ரிக்வேதத்தின் தொடர்ச்சியாகவே இந்தியச் சிந்தனை மரபு வளர்ந்திருக்கிறது. ரிக் வேதத்திற்கு நேர் எதிரான ஒன்றாக அதர்வ வேதம் இந்நாவலில் சொல்லப்படுகிறது. அதர்வத்திலுள்ள மண்ணே அனைத்துக்கும் அடிப்படையானது என்னும் வரி முதல்புள்ளியாகச் சுட்டிக்காட்டப்படுகிறது. மண் (தல) அதிலிருந்து தலாதேவி (பன்றிமுகமுள்ள வராஹி) அதன் இன்னொரு வடிவமான சீதை என்று மண்ணைச் சார்ந்தே இந்திய வரலாறும், இந்து ஞானமரபும் அமைந்துள்ளது என்னும் இன்னொரு பார்வையை நாவல் காட்டுகிறது.
நீங்கள் அதை ஒரு புனைவில் சொல்லியிருந்தாலும் ஆழமான ஆய்வுக்குப்பின் வெளிவரும் ஒரு பெரிய thesis போலத்தான் இந்நாவலில் அந்த கருத்து முழுமையாக உள்ளது. அதர்வ வேதம், அதன்பிறகு வால்மீகி, அதன்பிறகு வியாசர், உக்ரசிரவஸ், அதன்பிறகு குணாட்யர் என எல்லா மாபெரும் இந்தியக் கவிஞர்களும் அடித்தள மக்களில் இருந்து வந்தவர்கள் என்றுதான் இந்தியாவின் தொன்மங்களே காட்டுகின்றன. தலித் என்றாலே மண்ணில் இருந்து வந்தவன் என்றுதான் பொருள். அந்தச சரடை துக்காராம் வரை இழுக்கிறீர்கள். அதர்வத்திற்கு எதிராக ரிக் வேதம் செய்த போர்தான் துக்காராமுக்கு எதிராக தேஷ்பாண்டே குடும்பம் செய்யும் போர் என்று நாவலில் திரண்டு வருகிறது என்று தோன்றுகிறது.
நாவல் வளர வளர ஒவ்வொரு அம்சமும் எப்படி ஒரு நுணுக்கமான வலைப்பின்னலாக இணைக்கப்பட்டுள்ளது என்ற வியப்பை அடைந்தேன். நாவல் வெளிவந்துகொண்டே இருக்கும்போதே பலமுறை பின்னால் சென்று வாசித்தேன். மனம்போன போக்கில், உதிரிக்கதைகளாக சிதறுண்ட வடிவில் திட்டமிட்டு எழுதப்பட்ட எதிர்வடிவ நாவல். ஆனால் அடியில் அந்த சிந்தனைக்கட்டுமானம் அழுத்தமான ஒரு பார்வையை கொண்டுள்ளது. அது மேலும் மேலும் திரண்டு ஒன்றாகிக்கொண்டே செல்கிறது. மிக நுணுக்கமாக உங்கள் மனம் நாவலை முன்னரே உள்வாங்கியுள்ளது என்பதை தொடக்கத்திலேயே ததாகதர் வருவது, வால்மீகி வருவது எல்லாம் காட்டுகிறது.
இந்த மெட்டாபிக்ஷன் நாவல் வடிவம் எதற்கானது என்பதை இந்நாவலை வாசிக்கும்போதுதான் உணரமுடிகிறது. நாம் நம்பும் வரலாறு, தத்துவம் அனைத்தையும் தலைகீழாக ஆக்கி வேறொரு கோணத்தில் பார்க்கச்செய்வதற்காகவே இநத வடிவம் உருவாக்கப்பட்டுள்ளது. வெறும் கதையை வைத்து விளையாடுவதற்கு அல்ல. மறைக்கப்பட்ட பிரதிகள் மேல்நாட்டு நாவல்களில் நிறையவே உண்டு. இங்கும் சிலர் எழுதியுள்ளனர். ஆனால் உண்மையான மறைக்கப்பட்ட பிரதி, மறைக்கப்பட்ட அல்லது அழிக்கப்பட்ட பிரதி இங்கே நம் வரலாற்றிலேயே உள்ளது. இந்திய வரலாற்றிலேயே ஒரு மாபெரும் மறைக்கப்பட்ட ஆழம் உள்ளது. தத்துவம், வரலாறு ஆகியவற்றில் ஆழமான ஆய்வும், அதைப்பற்றிய உண்மையான மாற்றுப்பார்வையும் இல்லாமல் அதை எழுதமுடியாது. இந்நாவல் எல்லாவற்றையும் தலைகீழாக்குகிறது. ஆனால் இதுவே வரலாற்று உண்மை என்று தர்க்கபூர்வமாக நிறுவவும் முடிந்துள்ளது.
இந்நாவல் குணாட்யரின் காவியத்தை முன்வைத்து மறைந்த காவியம் என்ற உருவகத்தை உருவாக்குகிறது. இந்தியாவின் உண்மையான வரலாறும், உண்மையான ஞானமும்கூட மறைக்கப்பட்ட ஒன்றுதான் என்கிறது. ஆனால் பிரதிஷ்டான என்றால் வேர். வேர் மறைந்திருப்பதுபோல அந்த ‘தல’ வரலாறும் ஞானமும் நம் வரலாற்றுக்கு அடியில் உள்ளது. அது முளைத்துக்கொண்டே இருக்கிறது. வேர்களின் மௌனம்தான் இந்நாவல் சொல்லி முடிக்கும் கதை.
ஒற்றைவரியில் இருந்து ஆரம்பிக்கும் நாவல் அந்த ஒற்றை வரியில் முடிகிறது. முதல் அத்தியாயத்தில் கதைச் சொல்லும் பிசாசு ராமின் கொள்ளுப்பாட்டியிடம் என்ன சொன்னது என்று சொல்லப்படவில்லை. அதர்வ வேதத்தின் வரிதான் அது. மாதா பூமி புத்ரோகம் பிருத்வ்ய:
கே.ராஜகோபால்
கல்வி,கடிதம்
அன்பின் ஜெ…
தங்கள் தளத்தில் கல்வியின் எதிர்காலம் குறித்து வாசகர் கேள்வியும்,அதற்கு தாங்களளித்த பதிலையும் படித்தேன்.அது கல்வித்துறையின் போதமைகளைப் பற்றிப் பேசியிருந்தது. நன்று.
கல்வித்துறையில் இன்றைய நிலையில் அதிகம் விவாதிக்கப்பட வேண்டிய ஒருபக்கம் இருக்கிறது.அது கிராமப்புற மாணவர்களின் தொடக்கக் கல்வியைப் பற்றியது.
இன்று தமிழகம் முழுவதும் நகரம் துவங்கி கிராமப்புறங்கள் வரை எங்கு திரும்பினாலும் விதவிதமான பெயர்களில் தனியார் ப்ரைமரி பள்ளிகளே நிறைந்திருக்கின்றன. முன்பெல்லாம் பத்திருபது கிராமங்களுக்கு அருகிலிருக்கக்கூடிய சின்ன டவுனில் தான் இப்படிப்பட்ட பள்ளிகள் இருக்கும். இப்போது சிறு சிறு கிராமங்களில் கூட பார்க்க முடிகிறது.இது நல்லது தானே, கல்வி பரவலாக்கப்பட்டிருக்கிறதென்று நீங்கள் நினைக்கலாம். ஆனால் பெரும்பாலான இடங்களில் நிலைமை அப்படியில்லை.
இன்றைய பெற்றோர்களின் ஆங்கிலம் மீதான மோகம் புரிந்து கொள்ளக் கூடியதுதான்.ஆனால் கிராமப்புற பெற்றோர்களில் பெரும்பான்மையினருக்கு அவர்களறிந்த ஆங்கிலம் என்பது அவர்களின் பெயரை எழுதும் அளவிற்குத் தான் பரிட்சயம்.அவ்வகையினரின் குழந்தைகளே இப்பள்ளிகளில் அதிகம் சேர்கிறார்கள். பெரும்பாலான பெற்றோர்கள் அன்றாடக் கூலிகள். அரசுப் பள்ளியில் சேர்த்து படிக்க வைக்கும் அளவிற்கு தாங்கள் வறுமையிலில்லை என்று நம்புபவர்கள். தங்கள் பிள்ளைகளும் ஷூ அணிந்து (!?) வேனில் சென்று படிப்பதை முகம் மலரச் சொல்பவர்கள். ஆனால் தங்கள் பிள்ளைகள் எப்படிக் கற்கிறார்கள் என்பதை அறிந்து கொள்ளும் ஆற்றலோ, நேரமோ இல்லாதவர்கள்.
இப்படி அரும்பாடுபட்டு தங்கள் குழந்தைகளின் கல்விக்காக உழைக்கும் பெற்றோர்களின் மனம் கோணதிருக்கும்படி இப்பள்ளிகளும் அனைத்துக் குழந்தைகளும் ஏதாவது ஒரு ரேங்க் போட்டே ரேங்க் அட்டையை அளிக்கிறார்கள். அதற்கு காரணம் இவ்வளவு பணம் செலவு செய்தும் தன் மகனுக்கு படிப்பு வரவில்லை என்று டீசி வாங்கி கொண்டு போய் அரசுப் பள்ளியில் சேர்த்துவிடக்கூடாதென்ற பயம் தான். விளைவு பெரும்பாலான குழந்தைகளுக்கு தமிழும் தெரிவதில்லை, ஆங்கிலமும் தெரிவதில்லை. பெற்றோர்கள் இதையறிந்து கொள்வதற்குள் குழந்தைகள் நான்காவது ஐந்தாவது வகுப்பு வரை வந்துவிடுகிறார்கள்.கொஞ்சம் முன்னாடி கொண்டு வந்திருந்தா காப்பாத்தியிருக்கலாம் என்று டாக்டர் சொல்வது போல தான் அரசுப் பள்ளி ஆசிரியர்கள் சொல்ல வேண்டியிருக்கிறது.இப்படி சேர்க்கப்படும் குழந்தைகளில் ஒரு சிலரைத் தவிர அநேகர் காலம் முழுவதும் கல்வியில் பின்தங்கிவிடுகிறார்கள்.
சிறு நகரங்களிலுள்ள இவ்வகைப்பள்ளிகளில் ஆசிரியர்களுக்கு வழங்கப்படும் சம்பளம் ஆச்சர்யப்படத்தக்க வகையில் மிகவும் குறைவு. ஆனால் அவர்களுக்கு வழங்கப்படும் வேலை அதிகம். அதுபோக அவர்கள் மீது ஏவப்படும் உளவியல் தாக்குதல்கள் வேறு. எனவே தகுதியானவர்கள் வேலை செய்ய முன்வருவதில்லை.
மறுபுறம் இன்று அனைத்துக் கிராமங்களிலும் அரசுத் துவக்கப்பள்ளிகள் வெறிச்சோடிக் கிடக்கின்றன.
தமிழும் தெரியாமல், ஆங்கிலமும் தெரியாமல் ரெண்டும் கெட்டான் நிலையில் ஒரு பெரும் மாணவர் கூட்டம் உருவாகி வருகிறது. அரசு கவனத்தில் கொள்ள வேண்டும்.
அன்புடன்
மணிகண்ட ராஜா
சூஃபி ஞானத்தின் நாட்கள்
ஆசிரியர் நிஷா மன்சூர் அவர்கள் நபி பெருமான் அவர்கள் அவரது அருகிலேயே நிற்கிறார் எனும் பாவனை கொண்ட பரவசத்துடனே வகுப்புகள் எடுத்தார். நபிகள் பெருமானாரின் வாழ்வு குறித்த பாடத்தை அவர் வாழ்வின் நாடகிய தருணங்களை முதன்மைப்படுத்தி உணர்ச்சிகரமான கதைகள் வழியாக முன்னெடுத்தார்.
சூஃபி ஞானத்தின் நாட்கள்
While listening to your speeches in the background of various places, I feel that they are like some ‘vlogger’ talks. I told my friends that the backgrounds aren’t suitable for the serious talk you’re giving.
The backgrouds of thoughtதியானம் – உளக்குவிப்பு பயிற்சி முதல் நிலை
தில்லை செந்தில்பிரபு நடத்திவரும் தியானம் மற்றும் உளக்குவிப்பு நிகழ்வுகள் தொடர்ச்சியாக நடைபெறுகின்றன. இதுவரை 300க்கும் மேற்பட்டவர்கள் முதல்நிலைப் பயிற்சி முடித்துள்ளனர். இரண்டாம்நிலைப் பயிற்சி வகுப்பும் நிகழ்ந்துள்ளது.
இன்றைய சூழலில் உள்ளத்தைக் குவித்து செயலை ஆற்றுவதென்பதே மிகப்பெரிய சவால். கல்வியிலானாலும் தொழிலில் ஆனாலும். செயற்கையாக உள்ளத்தை தீவிரமாக்கிக்கொண்டால் அதன் விளைவாக உளச்சோர்வு உருவாவது இன்னொரு சிக்கல்.
இன்றைய வாழ்க்கை நம் அட்ரினல் சுரப்பியை சீண்டிக்கொண்டே இருக்கிறது. ஒரு விலங்கு அபாயத்தில் இருக்கையில் அதன் உடலில் முழு ஆற்றலும் வெளிப்படவேண்டும். அதன் உடலின் உணவு முழுமையாக எரிக்கப்பட்டு, தசைகள் முற்றாகச் செயலாற்றவேண்டும். அட்ரினல் அப்பணியைச் செய்கிறது. ஆனால் நாம் இன்று உருவாக்கிக்கொண்டிருக்கும் பதற்றம், பரபரப்பு கொண்ட வாழ்க்கையில் நாம் நிரந்தரமாகவே சிங்கத்தால் துரத்தப்படும் மான் போல் இருக்கிறோம். நாம் பொழுதுபோக்கு என நினைக்கும் கேளிக்கைகள், சமூகஊடகங்கள் ஆகியவையும் நம் அட்ரினலைத் தூண்டுவனதான். அதுவே நம்மை கவனமின்மை மற்றும் உளச்சோர்வுக்குக் கொண்டுசெல்கிறது. செரிமானமின்மை, தூக்கமின்மை முதல் சோரியாஸிஸ் வரையிலான நோய்களுக்கும் காரணமாகிறது.
யோக முறைகள், தியானங்கள் நாமே நம் உடலின் சுரப்பிகளை அமைதிப்படுத்தும் பயிற்சிகள்தான். நம் உள்ளத்தை நாமே மெல்ல அடங்கச் செய்து உடலை ஆறவைக்கிறோம். அவை மிகப்பயனுள்ளவை என்பதனால்தான் உலக அளவில் மிகப்பெரிய அளவில் பரவியுள்ளன. உலகிலேயே மிக அதிகமானபேர் யோக – தியானப்பயிற்சிகளைச் செய்யும் நாடுகள் ஐரோப்பா- அமெரிக்காதான்.
தில்லை செந்தில்பிரபு பயிற்றுவிக்கும் தியானமுறை இன்றைய காலகட்டத்திற்காக வரையறை செய்யப்பட்ட ஒன்று. உலகமெங்கும் செல்வாக்குடன் இருப்பது.
நாள் ஆகஸ்ட் 1, 2 மற்றும் 3 (வெள்ளி சனி ஞாயிறு)
தொடர்புக்கு programsvishnupuram@gmail.com
அறிவிக்கப்பட்ட நிகழ்வுகள்- இடமிருப்பவைஜெயக்குமார் நடத்திய கர்நாடக இசை அறிமுகப் பயிற்சி வகுப்பு பங்கேற்றவர்களுக்கு ஒரு பெரிய தொடக்கமாக அமைந்தது என்று எதிர்வினைகள் வந்தன. மீண்டும் அவ்வகுப்பு நிகழவிருக்கிறது
நம்மில் பலருக்கும் கர்நாடக இசையை அறிந்துகொள்ள வேண்டும் என்னும் ஆர்வம் உண்டு. ஆனால் நம்மால் அதை அறிந்துகொள்ள முடியுமா என்னும் சந்தேகமும் இருக்கும். அது மிகச்சிக்கலானது என்ற பிரமையும் உண்டு. உண்மையில் மரபிசையை ரசிக்க ஒரு நல்ல தொடக்கம் அமைந்தாலே போதுமானது. அதற்கு மூன்றுநாட்கள் நடக்கும் 16 மணிநேரப் பயிற்சி வகுப்பு மிக உதவியானது.
இந்தப் பயிற்சி வகுப்பில் கர்நாடக இசையின் முதன்மை ராகங்களின் ஒரு அறிமுகம் நிகழும். அதை நினைவில் நிறுத்த உதவும் கீர்த்தனைகளும், சினிமாப்பாடல்களும் கேட்கச்செய்யப்படும். இசை கேட்பதற்கான அந்த தொடக்கம் நிகழ்ந்தால் நம்மையறியாமலேயே நாம் பாடல்களை கவனிக்கத் தொடங்கிவிடுவோம். மரபிசையின் மாபெரும் உலகுக்குள் நுழைவதற்கான வாசல் அது.
நாள் ஜூலை 18 ,19 மற்றும் 20 (வெள்ளி சனி ஞாயிறு)
தொடர்புக்கு programsvishnupuram@gmail.com
இசைநாட்கள் மாயாமாளவகௌளை எனும் மாயக்கரம்ஐரோப்பியப் பண்பாட்டின் உச்சப்புள்ளி என்பது ஓப்பராதான் என்று டி.எஸ்.எலியட் ஒரு கட்டுரையில் சொல்கிறார் (The decline of music hall). ஏனென்றால் செவ்வியல் இசை, செவ்வியல் நாடகம்,ஓவியம் ஆகியவை செவ்விலக்கியத்துடன் இணையும் புள்ளி அதுவே. ஓப்பரா இன்றும்கூட ஐரோப்பாவில் முதன்மைக்கலையாகவே உள்ளது. The lion king போன்ற நவீன ஓப்பராக்களும் உருவாகின்றன. ஓப்பராவின் இன்னொரு வடிவம் நவீன இசைநாடகம்.
ஓப்பராவிலேயே மேலையிசையின் உச்சகட்ட சாத்தியங்கள் நிகழ்ந்துள்ளன. ஐரோப்பிய இசையின் முதன்மை ஆளுமை ரிச்சர்ட் வாக்னர். அவருடைய ஓப்பராக்கள்தான் இலக்கியவடிவமான காவியம் மாபெரும் இசைக்கோலங்களாக வெளிப்பட்ட கலைப்பெருநிகழ்வுகள். ஓப்பராவை விட எளிமையான வடிவமே சிம்பனி என்பது.
அஜிதன் ஏற்கனவே சிம்பனி இசை மேதையான பீத்தோவனை அறிமுகம் செய்து இரண்டு வகுப்புகளை நடத்தியிருக்கிறார். பல இளைஞர்களும் கோரியதற்கிணங்க வாக்னரின் ஓப்பராக்களைப் பற்றிய அறிமுக வகுப்பு ஒன்றை நடத்தவிருக்கிறார்.
ஓப்பரா போன்ற கலைவடிவை எளிதாக அறிமுகம் செய்துகொள்ள முடியாது. அதன் இலக்கியப்பின்புலம், பண்பாட்டுப்பின்புலம் ஆகியவற்றுடன் அவ்விசையை கேட்டு உணரவேண்டும்.இந்த வகுப்பில் ஓப்பராவின் தத்துவம், இலக்கியம் ஆகியவற்றுடன் இசையமைப்பையும் அறிமுகம் செய்து ஒரு தொடக்கத்தை அஜிதன் அளிக்கிறார்.
நாள் ஜூலை 25, 26 மற்றும் 27
வரவிருக்கும் நிகழ்வுகள்ஏ.வி.மணிகண்டனின் நவீன ஓவிய அறிமுக நிகழ்வு தொடர்ச்சியாக நிகழ்ந்து வருகிறது. இது வரை கிட்டத்தட்ட 200 பேர் இந்த வகுப்புகளில் கலந்துகொண்டிருக்கின்றனர். இது ஒரு முதன்மையான பண்பாட்டுக் கல்வி, நவீன உலகை அறிமுகம் செய்துகொள்ள மிக அடிப்படையான ஒன்று என இளையதலைமுறையினர் ஏற்றுக்கொண்டுள்ளனர்.
நவீன ஓவியக்கலையே இன்றைய கட்டிட வடிவமைப்பு, ஆடை வடிவமைப்பு, வெவ்வேறு ‘பிராண்ட் டிசைன்கள்’ முதல் இணையதள வடிவமைப்பு வரை அனைத்துக்கும் அடித்தளமான அழகியலை உருவாக்குவது. ஆனால் இந்தியாவில் இன்று இக்கல்விகளை பெறுபவர்கள்கூட நவீன மேலைநாட்டு ஓவியம் பற்றிய அறிமுகம் அளிக்கப்பட்டவர்கள் அல்ல.
நம்மைச் சூழ்ந்துள்ள நவீன வாழ்க்கையையும் தொழில்நுட்பத்தையும் அறிந்துகொள்ள மிக அடிப்படையாக அமையும் பயிற்சி இது.
ஆகஸ்ட் 8,9 மற்றும் 10
குருபூர்ணிமா இணையச் சந்திப்பு
குரு பூர்ணிமா இணையச் சந்திப்பு 10 ஜூலை 2025 அன்று காலை இந்தியநேரம் 930 மணிக்கு. நான் சுவிட்சர்லாந்தில் இருக்கிறேன். இங்கே காலை 6 மணிக்கு
Zoom link:
பாஸ்வேர்ட் எதுவும் இல்லை.
கூடுகை சுட்டி:
https://us02web.zoom.us/j/81824287154?pwd=VlVEOEpZNFUrMFUwWlAzMS8yeGdJdz09
Meeting ID: 818 2428 7154
July 7, 2025
கட்டிமுடிக்க முடியாத மாளிகை
அரிதாக நம்பமுடியாத சில விஷயங்கள் இயல்பாக நிகழ்கின்றன. ஆனால் அரிதாகவா என்றால் அப்படியும் அல்ல. கொஞ்சம் கவனித்தால் அவை தினமும் நிகழ்கின்றன என்பதையும் காணலாம். வாழ்க்கையின் விசித்திரமான சுழற்சியை, ஒவ்வொன்றும் இன்னொன்றுடன் தொடர்பு கொண்டிருப்பதை, ஏன் எதிர்காலம் நிகழ்காலத்துடன் பின்னியிருப்பதை நாம் கவனித்தால் ஒவ்வொரு நாளும் உணரமுடியும்.
அன்று அப்படி ஒரு நாள். (14 ஜூன் 2025). காலையில் வழக்கம்போல நடை. கிளம்பும்போது மெல்லிய மழை பெய்துகொண்டிருந்தது. நல்ல குளிர். பின்னர் மழை நின்றுவிட்டது. காற்று மட்டும் நீர்த்துளிகளுடன் வீசிக்கொண்டிருந்தது. பார்வதிபுரம் Under de bridge டீக்கடையில் சூடான டீயுடன் அமர்ந்திருந்தேன். சந்தைக்குச் செல்லும் கோஷ்டி ஒன்று. நான்கு ஆட்டோ டிரைவர்கள். இரண்டு டாக்சிகள் நின்றன. அதில் வந்தவர்கள் எங்கோ ஏதோ கோயிலுக்குச் சென்று திரும்பிக்கொண்டிருந்தார்கள் என்று பட்டது.
அந்த குழுவில் தாடி வைத்த ஒருவர் கணீர் குரலில் மற்றவர்களிடம் பேசிக்கொண்டிருந்தார். “…உண்மையான கதை என்னான்னு தெரிஞ்சுக்கிட்டு பேசணும். இல்லேன்னா பேசப்பிடாது. நமக்கு தெரியல்லேங்கிற வெவரமாவது தெரிஞ்சிருக்கணும். அதுதான் வெவரத்திலேயே நல்ல வெவரம். அது இருக்கப்பட்டவன் மேக்கொண்டு என்ன ஏதுன்னு கேட்டு தெரிஞ்சுக்கிடுவான். அது நம்மாளுங்களுக்கு கெடையாது”
ஏதோ பொதுத்தகராறு என நினைத்துக்கொண்டேன். ஆனால் அடுத்து அவர் சொல்லிக்கொண்டே போனது ஆச்சரியத்துடன் கவனிக்க வைத்தது. “…கிருஷ்ணன் பாஞ்சாலிக்கு துணிகுடுக்கதுக்கு பதிலா மத்தவனுக்க கைய வெளங்காம ஆக்கியிருக்கலாமேன்னு கேக்குதான். ஏலே அவன் நினைச்சா துரியோதனனுக்க பேலஸை அப்டியே பஸ்பமா ஆக்கமாட்டானா? அது லீலையாக்கும். அவளுக்க கர்மபலன் அப்பிடி. அதை அவ அனுபவிச்சாகணும். பாண்டவன்மார் அஞ்சுபேரும் அனுபவிக்கணும்னு விதியிருக்குடே”
“அப்ப கிருஷ்ணன் எப்டி சேல குடுத்தான்? அந்தக் கதை என்னது? சொல்லு பாப்பம். ஏலே, கிருஷ்ணன் குடுக்கல்ல, கிருஷ்ணையாக்கும் குடுத்தது. அவ துரியோதனனுக்க மக. அவ பெரிய கிருஷ்ணபக்தையாக்கும். அவளை கெட்டிக்குடுத்ததும் கிருஷ்ணனுக்க குடும்பத்திலேயாக்கும். இப்டி பாஞ்சாலிய சபையிலே வைச்சு துணி உரியுதான் துச்சாதனன். அவ என்ன பண்ணினா, கிருஷ்ணா கோவிந்தான்னு கத்திக்கிட்டே பால்கனியிலே இருந்து மேலாடைய தூக்கி கீள வீசினா… அதக்கண்டு மத்த கௌரவகுடும்பத்து பொம்புளையாளுகளும் கிருஷ்ணா கிருஷ்ணான்னு கத்திக்கிட்டு சேலைகளை அள்ளி போட்டாளுக… சேலை வந்து மலையா அவமேலே குமிஞ்சு போட்டு. அதாக்கும் நடந்தது”
“அவன் குடுத்த சேலதான். ஆனா அவன் கடவுள், கடவுள் ஒருநாளும் அவனா வந்து குடுக்கமாட்டான். நியாயத்துக்காக நிக்கான்பாரு, அவனாக்கும் தெய்வசொரூபம். தர்மிஷ்டனாக்கும் தெய்வ சொரூபம். அவனாக்கும் கடவுள் நினைக்கிறத செய்யுறவன்… அத தெரிஞ்சுகிடணும்”
உண்மையாகவே மெய்சிலிர்த்துவிட்டது. டீக்கு பணம் கொடுத்தபடி “சாமிக்கு எந்த ஊரு?” என்றேன்.
“நமக்கு வடக்கே, அஞ்சுகிராமம் பக்கம்.”
“கதை சொல்லுகதுண்டா?”
“புலவராக்கும்” என்று இன்னொருவர் சொன்னார். “வில்லுப்பாட்டு பாடுதவரு”
“இங்க எங்க?”
“அப்டியே ஒரு ரவுண்டு போனம்… கொல்லம் வளியாபோயி சக்குளத்தம்மை, ஆற்றுகால் பகவதியெல்லாம் பாத்துட்டு வாற வளியிலே மண்டைக்காடு… “ என்றார் இன்னொருவர். “கன்யாகுமரி பகவதியோட முடிச்சுக்கிடுவோம்…அதொரு சீலமாக்கும் குறே காலமாட்டு”
“நல்லது” என்று கும்பிட்டுவிட்டு கிளம்பினேன்.
“சாருக்கு?”
“இங்க பக்கம், காலம்பற நடக்க கெளம்பினேன்”
“சுகருக்கு காலைலே நடக்குதது நல்லதாக்கும்”
”சுகர் இல்ல, ஆனா நடந்தா சுகர் வராதுன்னு சொன்னாங்க” என்றேன். விடைபெற்றுக்கொண்டேன்.
மழை முகில் மூடிக்கிடந்த வேளிமலையை பார்த்துக்கொண்டே நடந்தேன். வழியெல்லாம் புன்னகைத்துக் கொண்டிருந்தேன். வழக்கமாக ஏதோ ஒரு மலையாளப் பாட்டு வாயில் வரும். அன்று நானே நினைவில் தேடி எடுத்த பாட்டு.
“பணிஞ்ஞிட்டும் பணிஞ்ஞிட்டும் பணி தீராதொரு
பிரபஞ்ச மந்திரமே
நின்றே நாலு கெட்டின்றே படிப்புர முற்றத்து
ஞானென்றே முறிகூடி பணியிச்சோட்டே!
(கட்டுந்தோறும் குறைதீராத பிரபஞ்ச மாளிகையே உன் நாலுகட்டின் திண்ணைமுகப்பில் முற்றத்தில் நான் என் சிறிய அறையையும் கட்டிக்கொள்கிறேன்)
நாளை மறுநாள் (10 ஜூலை 2015 வியாசபூர்ணிமை, வெண்முரசு நாள்)
கிங்ஸ்டன்
[image error]நாளிதழ்கள், மாத இதழ்கள் ஆகியவற்றில் தமிழ் பற்றி தொடர்ச்சியாக எழுதிவரும் கிங்ஸ்டன் ஆய்வரங்கங்கள் மற்றும் மாநாடுகளில் ஆய்வுக்கட்டுரைகள் சமர்ப்பித்துள்ளார். தொல்காப்பியம் சார்ந்து அவர் தொகுத்த “TOLKAPPIYAM ASAL USUL DAN INTIPATI KARYA AGUNG BAHASA TAMIL” குறிப்பிடத்தக்க நூல்.
கிங்ஸ்டன்
Jeyamohan's Blog
- Jeyamohan's profile
- 834 followers
