கட்டிமுடிக்க முடியாத மாளிகை
அரிதாக நம்பமுடியாத சில விஷயங்கள் இயல்பாக நிகழ்கின்றன. ஆனால் அரிதாகவா என்றால் அப்படியும் அல்ல. கொஞ்சம் கவனித்தால் அவை தினமும் நிகழ்கின்றன என்பதையும் காணலாம். வாழ்க்கையின் விசித்திரமான சுழற்சியை, ஒவ்வொன்றும் இன்னொன்றுடன் தொடர்பு கொண்டிருப்பதை, ஏன் எதிர்காலம் நிகழ்காலத்துடன் பின்னியிருப்பதை நாம் கவனித்தால் ஒவ்வொரு நாளும் உணரமுடியும்.
அன்று அப்படி ஒரு நாள். (14 ஜூன் 2025). காலையில் வழக்கம்போல நடை. கிளம்பும்போது மெல்லிய மழை பெய்துகொண்டிருந்தது. நல்ல குளிர். பின்னர் மழை நின்றுவிட்டது. காற்று மட்டும் நீர்த்துளிகளுடன் வீசிக்கொண்டிருந்தது. பார்வதிபுரம் Under de bridge டீக்கடையில் சூடான டீயுடன் அமர்ந்திருந்தேன். சந்தைக்குச் செல்லும் கோஷ்டி ஒன்று. நான்கு ஆட்டோ டிரைவர்கள். இரண்டு டாக்சிகள் நின்றன. அதில் வந்தவர்கள் எங்கோ ஏதோ கோயிலுக்குச் சென்று திரும்பிக்கொண்டிருந்தார்கள் என்று பட்டது.
அந்த குழுவில் தாடி வைத்த ஒருவர் கணீர் குரலில் மற்றவர்களிடம் பேசிக்கொண்டிருந்தார். “…உண்மையான கதை என்னான்னு தெரிஞ்சுக்கிட்டு பேசணும். இல்லேன்னா பேசப்பிடாது. நமக்கு தெரியல்லேங்கிற வெவரமாவது தெரிஞ்சிருக்கணும். அதுதான் வெவரத்திலேயே நல்ல வெவரம். அது இருக்கப்பட்டவன் மேக்கொண்டு என்ன ஏதுன்னு கேட்டு தெரிஞ்சுக்கிடுவான். அது நம்மாளுங்களுக்கு கெடையாது”
ஏதோ பொதுத்தகராறு என நினைத்துக்கொண்டேன். ஆனால் அடுத்து அவர் சொல்லிக்கொண்டே போனது ஆச்சரியத்துடன் கவனிக்க வைத்தது. “…கிருஷ்ணன் பாஞ்சாலிக்கு துணிகுடுக்கதுக்கு பதிலா மத்தவனுக்க கைய வெளங்காம ஆக்கியிருக்கலாமேன்னு கேக்குதான். ஏலே அவன் நினைச்சா துரியோதனனுக்க பேலஸை அப்டியே பஸ்பமா ஆக்கமாட்டானா? அது லீலையாக்கும். அவளுக்க கர்மபலன் அப்பிடி. அதை அவ அனுபவிச்சாகணும். பாண்டவன்மார் அஞ்சுபேரும் அனுபவிக்கணும்னு விதியிருக்குடே”
“அப்ப கிருஷ்ணன் எப்டி சேல குடுத்தான்? அந்தக் கதை என்னது? சொல்லு பாப்பம். ஏலே, கிருஷ்ணன் குடுக்கல்ல, கிருஷ்ணையாக்கும் குடுத்தது. அவ துரியோதனனுக்க மக. அவ பெரிய கிருஷ்ணபக்தையாக்கும். அவளை கெட்டிக்குடுத்ததும் கிருஷ்ணனுக்க குடும்பத்திலேயாக்கும். இப்டி பாஞ்சாலிய சபையிலே வைச்சு துணி உரியுதான் துச்சாதனன். அவ என்ன பண்ணினா, கிருஷ்ணா கோவிந்தான்னு கத்திக்கிட்டே பால்கனியிலே இருந்து மேலாடைய தூக்கி கீள வீசினா… அதக்கண்டு மத்த கௌரவகுடும்பத்து பொம்புளையாளுகளும் கிருஷ்ணா கிருஷ்ணான்னு கத்திக்கிட்டு சேலைகளை அள்ளி போட்டாளுக… சேலை வந்து மலையா அவமேலே குமிஞ்சு போட்டு. அதாக்கும் நடந்தது”
“அவன் குடுத்த சேலதான். ஆனா அவன் கடவுள், கடவுள் ஒருநாளும் அவனா வந்து குடுக்கமாட்டான். நியாயத்துக்காக நிக்கான்பாரு, அவனாக்கும் தெய்வசொரூபம். தர்மிஷ்டனாக்கும் தெய்வ சொரூபம். அவனாக்கும் கடவுள் நினைக்கிறத செய்யுறவன்… அத தெரிஞ்சுகிடணும்”
உண்மையாகவே மெய்சிலிர்த்துவிட்டது. டீக்கு பணம் கொடுத்தபடி “சாமிக்கு எந்த ஊரு?” என்றேன்.
“நமக்கு வடக்கே, அஞ்சுகிராமம் பக்கம்.”
“கதை சொல்லுகதுண்டா?”
“புலவராக்கும்” என்று இன்னொருவர் சொன்னார். “வில்லுப்பாட்டு பாடுதவரு”
“இங்க எங்க?”
“அப்டியே ஒரு ரவுண்டு போனம்… கொல்லம் வளியாபோயி சக்குளத்தம்மை, ஆற்றுகால் பகவதியெல்லாம் பாத்துட்டு வாற வளியிலே மண்டைக்காடு… “ என்றார் இன்னொருவர். “கன்யாகுமரி பகவதியோட முடிச்சுக்கிடுவோம்…அதொரு சீலமாக்கும் குறே காலமாட்டு”
“நல்லது” என்று கும்பிட்டுவிட்டு கிளம்பினேன்.
“சாருக்கு?”
“இங்க பக்கம், காலம்பற நடக்க கெளம்பினேன்”
“சுகருக்கு காலைலே நடக்குதது நல்லதாக்கும்”
”சுகர் இல்ல, ஆனா நடந்தா சுகர் வராதுன்னு சொன்னாங்க” என்றேன். விடைபெற்றுக்கொண்டேன்.
மழை முகில் மூடிக்கிடந்த வேளிமலையை பார்த்துக்கொண்டே நடந்தேன். வழியெல்லாம் புன்னகைத்துக் கொண்டிருந்தேன். வழக்கமாக ஏதோ ஒரு மலையாளப் பாட்டு வாயில் வரும். அன்று நானே நினைவில் தேடி எடுத்த பாட்டு.
“பணிஞ்ஞிட்டும் பணிஞ்ஞிட்டும் பணி தீராதொரு
பிரபஞ்ச மந்திரமே
நின்றே நாலு கெட்டின்றே படிப்புர முற்றத்து
ஞானென்றே முறிகூடி பணியிச்சோட்டே!
(கட்டுந்தோறும் குறைதீராத பிரபஞ்ச மாளிகையே உன் நாலுகட்டின் திண்ணைமுகப்பில் முற்றத்தில் நான் என் சிறிய அறையையும் கட்டிக்கொள்கிறேன்)
நாளை மறுநாள் (10 ஜூலை 2015 வியாசபூர்ணிமை, வெண்முரசு நாள்)
Jeyamohan's Blog
- Jeyamohan's profile
- 834 followers
