Jeyamohan's Blog, page 65

July 3, 2025

ஏர் இந்தியா என்னும் அற்புதம் – சிவா

ஏர் இந்தியா விபத்து

வணக்கம் திரு ஜெயமோகன்,

நான் சிவா. நலமா?

என் தனிப்பட்ட வாழ்வில் எந்த ஒரு இந்திய நிறுவனங்களின் சேவையை பெறுவதையும் கூடுமானவரை தவிர்க்கிறேன். அடிப்டையாகவே இந்தியர்கள்  மனதளவில் corrupt ஆனவர்கள் என்பது என் வாழ்வின் பாடம். இந்தியர்களால் நடத்தப்படும் எந்த ஒரு நிறுவனத்திலும் அந்த அடிப்படை corruption வெளிப்படும். (இந்திய தேசபக்தர்கள் மேற்கொண்டு வாசிப்பதை நிறுத்தி விடவும்.)

இந்த விபத்து நடப்பதற்கு முதல் நாள் இரவு என் வாழ்வின் ஒரு துரதிஷ்டமாக வேறு வழி இல்லாமல் ஏர் இந்திய விமானத்தில் டிக்கெட் போட்டேன். விமானம் பாரிஸ் நகரத்தின் CDG  விமான நிலையத்தில் இருந்து 8:40 PM மணிக்கு புறப்பட்டு இருக்க வேண்டும். வழமையான “என்னால்” எதிர்பார்க்கப்பட்ட தாமதத்திற்கு பின் ஒரு வழியாக 10:15 PM மணிக்கு விமானத்தின் உள் உட்காரவைக்கப்பட்டோம்.. (விமானத்தின் உள்ளே நுழைந்த உடனேயே அழுக்கடைந்த காவி (காலி அல்ல) இருக்கைகளும்,  இந்தியாவிற்கே உரித்தான முடை நாற்றமும், புன்சிரிப்பற்ற பணிப்பெண்களும் வரவேற்றனர்)

அதன் பிறகு எந்த ஒரு அறிவிப்பும் இன்றி 1 மணி நேரம் விமானத்தின் உள்ளேயே பயணிகள் அமர்ந்திருந்தோம். (விமான குளிரூட்டியோ பொழுதுபோக்கு திரைகளோ வேலை செய்யவில்லை) அதன் பின் சில பயணிகள் கேள்வி எழுப்பிய பிறகு, விமானி விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு இருப்பதாகவும் அதனை சரி செய்ய தொழில்நுட்பர்கள் வருவதற்கு காத்திருப்பதாகவும் சொன்னார். அவர்கள் வந்து 1 மணி நேரத்திற்கு பிறகு விமானி சொன்னதுதான் highlight.. அவர் சொன்னது இது “The technicians sort of fixed the issue and hopefully we will be landing in Delhi in another 10 hours” மற்ற நாடுகளில் ஒரு பேருந்தின் ஓட்டுநர் கூட இதை விட மேம்பட்ட choice of words and professionalism கொண்டிருப்பர். ஒரு வழியாக நள்ளிரவு தாண்டி 12:30 மணிக்கு விமானம் மேலேறி 10 மணித்தியாலத்தில் டில்லியை அடைந்தது.

டில்லியிலிருந்து சென்னைக்கு புறப்பட வேண்டிய விமானமும் தாமதம்.. இந்த இடத்தில் விமான பணிப்பெண்/ பையர்களை பற்றியும் சொல்ல வேண்டும். ஒரே வார்த்தையில் சொல்வதாக இருந்தால் இந்தியர்கள் சேவைப்பணிக்கு லாயக்கற்றவர்கள். (வட கிழக்கு மாநிலத்தவர்களை தவிர்த்து.. இயற்கையாகவே அவர்களின் மரபணுக்கள் காரணமாக இருக்கலாம்) 

டெல்லி விமான நிலையத்தில் காத்திருக்கும் போது அஹமதாபாத் விமான விபத்து திரையில் ஓடியது.. என்னுடைய ஆச்சரியம் என்னவென்றால் Air India விமானங்கள் பராமரிக்கப்படும் லட்சணத்தில் இவ்வாறான விபத்துகள் நாள் தோறும் நடக்காமல் இருப்பது தான்! ஏதோ ஒரு சத்தியத்திற்கு கட்டுப்பட்டுத்தான் Air India விமானங்கள் இயங்குகின்றன.

மேலும் இந்த விசாரணை எப்படி முடிக்கப்படும் என்பதையும் நான் சொல்கின்றேன்.. மொத்த தவறும் விமானியின் மேல் சாட்டப்பட்டு விசாரணை மூடப்படும். எந்த ஒரு மேல்நாட்டு விசாரணையும் அனுமதிக்க படாது. 

உங்களின் நேரத்திற்கு நன்றி

சிவா 

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on July 03, 2025 11:31

உயிர் எத்தன்மைத்து?

[image error]முதல்நிலைப் பயிற்சி வகுப்பினால் கிடைத்த உடல் மற்றும் மனநிலையின் முன்னேற்ற அனுபவமும், அடுத்து என்ன என்ற எதிர்பார்ப்பும் ஜ{ன் 6,7,8 தேதிகளில் வெள்ளிமலையில் குரு தில்லை செந்தில் பிரபு அவர்கள் நடத்திய இரண்டாம் கட்டப் பயிற்சி வகுப்பில் கலந்து கொள்ள என்னை வெள்ளிமலை நோக்கி செலுத்தியது. இந்தமுறை உடன் வருவதாகச் சொன்ன வழித்துணை நண்பர் ‘நழுவிவிட’ தனியளாக என் பயணம் தொடர்ந்தது.

உயிர் எத்தன்மைத்து?

 

 

The speech about the importance of learning Western music has essential clarity. As you rightly referred to, introducing Western music is essential for understanding Western philosophy and culture.

Western music- A letter
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on July 03, 2025 11:30

July 2, 2025

பெண் சிந்தனையாளர்கள், அறம் சார்ந்த தத்துவம்- சைதன்யா

அன்பு ஜெ,

நீலியின் இரண்டாவது கலந்துரையாடல் நிகழ்வு ஜூன் 29 காலை 10 மணி முதல் 12 மணி வரை நிகழ்ந்தது. ஜூன் 28 மாலை 6 மணிக்கு நிகழ வேண்டிய நிகழ்வு சில தொழில் நுட்பக் காரணங்களால் அடுத்த நாள் நிகழ்ந்தது. அன்று மாலையும் அடுத்த நாள் காலையும் சுமார் எழுபது பேர் தொடர்ந்து இணைந்திருந்தது மகிழ்வளித்தது.

எழுத்தாளர் சைதன்யாவின் உரையின் தலைப்பு “பெண் சிந்தனையாளர்கள் இடம் – அறம் சார்ந்த தத்துவம்” என்பதாக இருந்தது. சைதன்யா தன்அனுபவத்திலிருந்து எழுந்து வந்த ஒரு கேள்வியை முன் வைத்தபடி உரையை ஆரம்பித்தார். Ethics/ Moral/Virtue ethics உரையின் மையமாக அமைந்தது. இறுதியில் சைதன்யா உரையை முடிக்கையில் உணர்வுப்பூர்வமாக இருந்தது. இக்காலகட்டத்திற்கான சிந்தனை ஒன்றை முன் வைத்தார் என அதை வரையறுக்கலாம். நண்பர்கள் கீழ்க்கண்ட இணைப்பில் சைதன்யாவின் உரையையும் அடுத்து நிகழ்ந்த கேள்வி–பதில் அரங்கையும் கேட்கலாம்.

ஸ்வர்ணமஞ்சரி இரு கேள்விகளுடன் உரையாடல் அரங்கைத் தொடங்கினார். ப்ரியம்வதா, சக்திவேல், சுசித்ரா, மதுமிதா, அஜிதன், பார்கவி, ரொணால்ட் ஹாரிஸன் (இலங்கை), ரம்யா ஆகியோர் கேள்விகளை எழுப்பினர். கேள்விகள் சைதன்யாவின் உரையையும், நீலியில் அவர் எழுதிய கட்டுரையையும் ஒட்டியதாக, கூர்மையாக அமைந்தது. அதற்கான சைதன்யாவின் விரிவான பதில் அவரின் உரைக்கு இணையாகவே சிந்திக்கும்படியாக அமைந்தது.

ஸ்வர்ணமஞ்சரி இந்த உரை நிகழ்வை ஒருங்கிணைத்தது பற்றி பல நண்பர்கள் சரியான தேர்வு என்று குறிப்பிட்டிருந்தனர். உரைக்கு முன் சைதன்யாவின் உரையின் சாரமான “பன்மைத்துவம் ஒருமையுணர்வு” ஆகியவற்றை கொண்டாடும் வாக்னரின் இசை தவழவிடப்பட்டது (https://www.youtube.com/watch?feature=shared&v=uz-9IkVKEU4) முதல் இறுதியாக அவர் வாசித்த சைதன்யாவின் கட்டுரைகளிலிருந்து அவருக்குப் பிடித்த மூன்று வரிகளுடன் உரையை நிறைவு செய்தது வரை உரையாடல் ஒருங்கிணைவுடன் அமைந்தது. அவரிடமிருந்த ஒரு உளப்பூர்வமான ஆர்வம் உரையாடலுக்கு ஒரு துள்ளலை அளித்தது.

இந்த உரை வழியாகவும் நீலியில் எழுதிய கட்டுரைகள் வழியாகவும் உலகப் பெண் சிந்தனையாளர்கள் பற்றிய உரையாடலை தமிழ்ச்சூழலில் தொடங்கி வைத்த எழுத்தாளர் சைதன்யாவுக்கு நன்றி. இந்த உரையாடலில் இத்தருணத்தில் உடன் பயணிக்கும் நண்பர்களுக்கும் மனமார்ந்த நன்றி.

இந்நிகழ்வின் காணொளியை பதிவேற்றம் செய்திருக்கும் ஸ்ருதி டி.வி கபிலன் அவர்களுக்கும் நன்றி.

ரம்யா (நீலி இதழ்)

அன்புள்ள ரம்யா,

பெண் சிந்தனையாளர்கள் உலகம் எங்கும் உள்ளனர். பத்தொன்பதாம் நூற்றாண்டு முதல் ஐரோப்பாவில் அவர்கள் பெரும் பங்களிப்பையும் ஆற்றியுள்ளனர். ஆனால் நம் பொதுவான அறிவியக்க விவாதங்களில் அவர்களின் பெயர்கள் இடம்பெறுவதே இல்லை. சைதன்யா அப்படி இங்கே ஒருமுறைகூட உச்சரிக்கப்படாத சிந்தனையாளர்களை முதல்முறையாக தொடர்ச்சியாக முன்வைத்து எழுதி வருகிறார்.

பெண் சிந்தனையாளர்கள் பொதுவிவாதத்தில் இருந்து வெளியேற்றப்பட்டது  சென்ற நூற்றாண்டின் ஆணாதிக்கப்பார்வையால்தான் என்று இன்று பொதுவாக முன்வைக்கப்படுகிறது. தத்துவத்தை அறவியலில் இருந்து விலக்கி அருவமான கருதுகோள்கள் நோக்கிக் கொண்டுசென்றதும் பெண் சிந்தனையாளர்களை விலக்கியது, அறவியல் விலக்கம் என்பதே பெண்களுக்கு எதிரானது என சைதன்யா வாதிடுகிறார்.

(இலக்கியத்தில் உணர்ச்சிகளை ஐயப்படுவது, உணர்ச்சியின்மையை கொண்டாடுவது ஆகியவையும் பெண் எழுத்துக்களுக்கு எதிரானவை, பெண்களை விலக்கும் உள்ளுறை நோக்கம் கொண்டவை என சைதன்யா வாதிடுகிறார்.நவீனத்துவமே பெண்களுக்கு எதிரானது என்றுகூடச் சொல்லிவிடலாம்)

இந்த விவாதம் நீலி இதழ் சார்பில் நிகழ்ந்தது மகிழ்ச்சியானது. பெண்கள் தத்துவ விவாதங்களில் முன்வருவது தமிழில் நானறிந்து அனேகமாக நிகழ்ந்ததே இல்லை. எளிய பெண்ணிய அரசியலுக்கு அப்பால் அடிப்படைகள் பற்றிய தத்துவ விவாதம் இவ்வாறு நிகழ்ந்தது தமிழுக்கு ஒரு புது வழித்திறப்பு.

ஜெயமோகன்

ஸ்வர்ணமஞ்சரி, சைதன்யா, நவீனதத்துவம் சைதன்யா நீலி இதழ் கட்டுரைகள்
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on July 02, 2025 11:36

கஞ்சன்ஜங்காவின் காலடியில்…2

கஞ்சன்ஜங்காவைப் பார்த்தபடியே மலையிறங்கினோம். கீழே தீஸ்தா வெறிகொண்டு செம்பிழம்பாக ஓடிக்கொண்டிருந்தது. (தீஸ்தா நதிக்கரையில் என்னும் நாவல் தமிழில் வெளிவந்துள்ளது. குறிப்பிடத்தக்க படைப்பு) மேலே மலைகளில் இடைவிடாத மழை. நாங்கள் செல்வதற்குச் சிலநாட்களுக்கு முன்புதான் பெருவெள்ளமும் அழிவும் நிகழ்ந்திருந்தது. சாலைகள் இடிந்து சரிந்திருந்தன.நீண்ட வாகனவரிசைகள். எண்ணைநாற்றம். நின்று, தேங்கி, முன்னகர்ந்து மாலையில் சிக்கிம் தலைநகர் காங்டாக் சென்று சேர்ந்தோம்.

சிக்கிம் செல்லும் பாதை முழுக்க பணிகள் நிகழ்கின்றன. ரயில்பாதைக்காக மலைகளை துளையிட்டுக் கொண்டிருக்கிறார்கள். சாலைகள் அமைப்பது கடினம், மண் மிக மென்மையானது ஒவ்வொரு மழைக்கும் இடிந்து சரிவது. இந்த ஆண்டு சிக்கிம் இந்தியாவுடன் இணைந்து 50 ஆண்டுகள் நிறைகின்றன. இதுவரை அணுகமுடியாத மலைப்பகுதியாகவே இருந்தது இது. இன்று பயணவசதிகள் மேம்பட்டு வருகின்றன. சுற்றுலாத்தொழில் அதற்கேற்ப விரிவடைகிறது.

சிக்கிம் திபெத்தின் நீட்சியாக, திபெத் இந்தியப்பெருநிலத்துடன் தொடர்புகொள்ளும் வழிகளில் ஒன்றாக மட்டுமே இருந்துள்ளது. திபெத் வரைச் செல்பவர்கள் சிலநாட்கள் தங்கி பொருட்களை வாங்கிக்கொள்ளும் ஒரு சிறிய சந்தை, அதையொட்டிய பழங்குடிவீடுகள்- அவ்வளவுதான். வேளாண்மை அனேகமாக இல்லை. அங்கே திபெத்திய பௌத்த மடாலயங்கள் சிறிய அளவில் காலப்போக்கில் உருவாயின.

அம்மக்களின் குடித்தலைவர் திபெத்திய பௌத்த மதஅரசின் ஆதரவுடன் அரசர் ஆனார். நம்க்யால் அரசகுடி என அது அழைக்கப்பட்டது. அறத்தின் தலைவர் சோக்யால் என அவர் அழைக்கப்பட்டார். 1716ல் என்சே மடாலயம் கட்டப்பட்டபோது காங்டாக் ஒரு முக்கியமான மையமாக ஆகியது. 1894ல் அரசர் தும்லாங்கில் இருந்து தலைநகரை காங்டாக்குக்கு மாற்றினார். இந்தியாவுக்குச் சுதந்திரம் கிடைத்தபோது இந்திய ராணுவப்பாதுகாப்பில் தனி அரசாட்சியாக சிக்கிம் நீடித்தது. 1975ல் அரசருக்கு எதிரான கலவரங்கள் உருவாயின. மக்களின் வாக்கெடுப்பை ஒட்டி இந்தியாவுடன் சிக்கிம் இணைந்தது.

கேங்டாக்கில் ரும்டெக் மடாலயத்திற்குச் சென்றோம். ஏற்கனவே வந்த இடம்தான். மிகப்பெரிய மதக் கல்விநிலையம் மற்றும் வழிபாட்டிடம் இது. (விகாரம், சைத்யம் என அமைவதே பௌத்த மத அமைப்புகளின் வழக்கம்) திபெத்தின் மதகுரு மரபில் 12 ஆவது கர்மபா ஆகிய  சாங்சப் டோர்ஜே  18 ஆம் நூற்றாண்டில் நிறுவிய மடாலயம் இது.சிக்கிமின் மிகப்பெரிய மடாலயமாக கருதப்படுகிறது. திபெத் சீனாவால் கைப்பற்றப்பட்ட பின் இந்த மடாலயம் கர்மபாவின் தலைமையிடமாக உள்ளது.

மிகப்பெரிய புத்த மைத்ரேய சிலை தியானத்தில் அமர்ந்த சைத்யகூடம். திபெத்திய பௌத்தத்திற்கே உரிய செக்கச்சிவந்த வண்ணம் பொன்னிறத்துடன் இணைந்த அலங்காரங்கள். ஆழ்ந்த அமைதி, குளிர். சுவர்களில் பழைய கர்மபாக்களின் ஓவியங்கள்.(அவர்களில் ஒருவர் விஷ்ணுபுரத்திற்கு வந்து திரும்பியதை அந்நாவலை வாசித்தவர்கள் நினைவுகூரலாம்)

சுற்றிலும் செங்குத்தான மலைச்சரிவுகள் பச்சைசெறிந்த காடுகளுடன் எழுந்து நின்றன. காங்டாக் நகரமே மலைச்சரிவில்தான் உள்ளது. ஒவ்வொரு கட்டிடத்திற்கும் கீழே மிக ஆழத்தில் அடுத்த கட்டிடம் அமைந்திருந்தது. நாங்கள் தங்கிய விடுதி வசதியானது. நட்சத்திரவிடுதி என்றே சொல்லலாம். எங்களை சிக்கிம் மரபுப்படி பச்சை நிறமான சால்வைநாடா அணிவித்து வரவேற்றார்கள்.

முந்தைய பயணத்தில் சிக்கிம்- சீனா எல்லையான சீரோ பாயிண்ட் என்னுமிடத்திற்குச் சென்றோம். கோடையிலும் உறைபனி பரவியிருக்கும் நிலம் அது. இம்முறை அப்பகுதிகள் மூடப்பட்டிருந்தன. ஆகவே நாது லா  என்னும் மலைமுடிக்குச் செல்ல முடிவுசெய்திருந்தோம். ஜூன் 29 அன்று காலை ஏழு மணிக்கு கிளம்பி மேலே சென்றோம்.

கடல் மட்டத்தில் இருந்து பதினான்காயிரம் அடி உயரத்தில் இருக்கும் நார்து லா (லா என்றாலே கணவாய் என்றுதான் பொருள்) நெடுங்காலமாகவே சீனாவுடனும், திபெத்துடனும் சிக்கிமை இணைக்கும் கழுதைப்பாதையாக இருந்துள்ளது. வெள்ளையர் இதை சீரமைத்து வண்டிப்பாதையாக ஆக்கினர். இந்திய- சீன போருக்குப்பின் இந்த மலைப்பாதை மூடப்பட்டது. இப்போது இருபக்கமும் ராணுவக்காவல் கொண்ட ஒரு சந்திப்புப் புள்ளி. ஆனால் மானசரோவர், கைலாசம் மலைப்பயணிகளுக்காக திறக்கப்படுகிறது.

மேலே ஆக்ஸிஜன் குறைவு. ஆக்ஸிஜன் சிலிண்டர்களை விற்றுக்கொண்டிருந்தார்கள். மேலே செல்லும் வழி முழுக்க மழைபெய்து ஒரு பக்கமிருந்து ஓடைகள் கிளம்பி கீழே சென்றுகொண்டிருந்தன. டார்ஜிலிங் – மேற்கு வங்கத்துக்கு கேங்டாக் – சிக்கிம் நேர்த்தலைகீழ். சுத்தம், ஒழுங்கு, அழகு ஆகியவை ஒரு மேலைநாட்டில் இருப்பதான உணர்வை அளிப்பவை. பொதுவெளியில் சிறுநீர் கழிப்பதைக்கூட முழுமையாக தடைசெய்துள்ளனர். குப்பைகள் போடப்பட்டால், சிசிடிவியில் சிக்கினால் தண்டனை உண்டு.

மேலே பெரிதாக ஒன்றுமில்லை. செல்லும் வழியில் யாக் (இமையக்காளை)களை நிறுத்தி வைத்திருந்தனர். ஏறி ஒரு சுற்று சுற்றலாம். நான் விலங்குகள் மேல் ஏறுவதில்லை. அரங்கசாமியும், ஆனந்தகுமாரும் ஏறி ஒரு சுற்று சுற்றிவந்தனர். அந்த விலங்குகள் பல டன் எடைகொண்டவை. இவர்கள் மேலே இருப்பதை அவை உணர்ந்தததாகவே தெரியவில்லை.

மேலே சீனாவின் எல்லைவரைச் செல்லலாம். ஒரு கம்பிவேலிக்கு அப்பால் சீனாவின் நிலம். சீனாவின் காவல்மாடங்கள். இப்பால் நம்மூர் ஜவான்கள். பார்த்தாலே தெரியும் தென்னிந்தியா என்று. நாங்கள் அங்கே இருக்கும்போது ஏராளமான வண்டிகள் சென்றன. அன்று தமிழக நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எம்.அப்துல்லா உட்பட ஒரு பாராளுமன்ற குழு அப்பகுதியை பார்வையிட்டுச் சென்றனர் என்பதை அறிந்து கொண்டோம்.

திரும்பி வரும்வழியில் பாபா ஹர்பஜன்சிங் கோயிலுக்குச் சென்றோம்.இந்த சிறிய ஆலயம் 1968ல் தன் 22 ஆவது வயதில் மறைந்த சீக்கிய ராணுவவீரருக்கு அமைக்கப்பட்டது. அவர் மறைந்தபின்னரும் கனவில் வந்து ராணுவ வீரர்களைக் காத்ததாகவும், ராணுவவீரராகவே வாழ்வதாகவும் கருதப்படுகிறது. அவருக்கான நினைவிடம் பின்னர் ஆலயமாகியது.

பாபா ஹர்பஜன் சிங் இப்போதும் ராணுவத்தில் தொடர்வதாக உருவகிக்கப்பட்டு அவருக்கு மாதச்சம்பளம் வழங்கப்படுகிறது.(அது அந்த நினைவிடத்துக்குச் செலவிடப்படுகிறது. ) அவருக்கு ஆண்டு விடுமுறை உண்டு. அவரது சீருடை சீக்கிய வீரர்களால் அவருடைய ஊருக்கு கொண்டுசெல்லப்பட்டு விடுமுறை முடிந்தபின் திரும்பக் கொண்டுவரப்படுகிறது.

மழைபெய்துகொண்டிருந்தது. கோயிலில் நல்ல கூட்டம். உள்ளே ஹர்பஜன் சிங்கின் முகம் தெய்வமாக நிறுவப்பட்டு அவருடைய சீருடை, அவருடைய அலுவலகம் எல்லாமே பேணப்பட்டிருந்தது. கேஸரி பிரசாதம் வழங்கப்பட்டது. அங்குள்ள ஊற்றில் நீர் பிடித்துக்கொண்டு செல்கிறார்கள். சீக்கிய ராணுவ வீரர்கள் அங்கே சல்யூட் அடித்தபோது இருந்த உண்மையான தீவிரம் வியப்பூட்டியது.

அங்கே பத்து டிகிரி குளிர் இருந்தது. பால் இல்லாத சூடான டீ அந்த குளிருக்கு ஓர் அற்புதமான பானம் என்றால் பால்விட்ட டீ நேர் எதிர். வங்காளத்தில் இருந்து வந்த பால். யாக் பால் கறக்கும், ஆனால் அதை வெண்ணை எடுக்க மட்டுமே பயன்படுத்துகிறார்கள். லடாக் முழுக்க குளிர்காலத்தில் யாக் எண்ணையை முகத்திலும் உடம்பிலும் பூசிக்கொள்வது வழக்கம்.

நார்துலா கணவாயில் பேசிக்கொண்டிருந்த விஷயம் இந்தியாவும் சீனாவும் எல்லைப்புறப் பூசல்களை முழுமையாக நிறுத்தி அமெரிக்கா- கனடா போல, ஐரோப்பா போல தெளிவான சமாதானத்திற்கு வந்துவிட்டன என்றால் இமையமலை என்னும் வெள்ளையானையை கட்டிமேய்க்கும் பெரும் சுமையில் இருந்து இருநாடுகளுமே விடுதலை அடையமுடியும். இந்தியாவிற்கும் சீனாவுக்கும் இடையே இந்தக் கணவாய்கள் வழியாக பெரும் பொருளியல் பரிமாற்றம் நிகழமுடியும். வடகிழக்கு மாநிலங்கள் பொருளியல் பாய்ச்சலை அடையமுடியும். ஆனால் சீனா அபத்தமான ஒரு விரிவாக்கக் கொள்கையை கடைப்பிடித்து அண்டைநாடுகள் முழுக்க பதற்றத்தை உருவாக்கிக்கொண்டிருக்கிறது. தன் பொருளியல் வளர்ச்சியையும் அதன் வழியாக இப்போது பெரும் தேக்கநிலைக்குக் கொண்டுசென்றுவிட்டிருக்கிறது.

அதைப்பற்றிப் பேசியபோது சீனா அருணாசலப்பிரதேசம், லடாக் உள்ளிட்ட பகுதிகளுக்கு உரிமைகொண்டாடுவதற்கான காரணம் இமையமலை முழுக்க நிறைந்திருக்கும் குவார்ட்ஸ் போன்ற அரிய கனிமங்கள்தான் என்ற நினைவும் எழுந்தது. உலகின் பெரும்பாலான போர்கள் கனிமங்களுக்காகத்தான்.

மாலை நடந்து காங்டாக் நகருக்குள் சென்று ஒரு ‘சரியான சிக்கீமிய’ கடையில் மாலையுணவை உண்டோம். காங்டாக்கின் மாலைப்பொழுது மிதமான குளிருடன் ஏதோ ஐரோப்பிய நகரில் இருப்பதாக எண்ண செய்தது. நகர் நடுவே மகாத்மாகாந்தி மார்க் என்னும் கடைவீதியில் வண்டிகள் செல்லமுடியாது. நடப்பதற்கானது. இருபுறமும் கடைகள். அழகான சீரான கடைகள். ஒண்டுக்கடைகளும் கூச்சல்களும் இல்லை.

இதைப்போன்ற மிகத்தூய்மையான பொதுவெளி என்பதை இந்தியாவில் எங்குமே பார்க்கமுடியாது. அங்கிருந்தவர்கள் அனைவரும் ஓரளவு பொருளியல் வசதியானவர்கள். ஆகவே இயல்பான உற்சாகத்துடனிருந்தனர். சிக்கிமின் பொருளியல்நிலையின் சான்று அந்தச் சாலை.

மிக முக்கியமானது, வட இந்தியாவில் ஒரு நோய் போல பரவியிருக்கும் பான்பீடா பழக்கம் இல்லை. இந்தியாவே ஒரு மாபெரும் எச்சில்தட்டு என தோன்றுவதுண்டு. வடஇந்தியா அளவுக்கு இல்லை என்றாலும் தென்னாட்டிலும் நமக்கு பொதுவெளியை முழுக்க துப்பி சீரழிக்கும் பழக்கம் உண்டு. ரயிலுக்குள்ளேயே நம்மவர் துப்பிக்கொண்டே இருப்பார்கள். பழைய வெற்றிலைபாக்கு பழக்கத்தில் இருந்து வந்த வழக்கம் இது. வடகிழக்கு மாநிலத்து மக்கள் பொதுவாக நம்மை விட உடற்தூய்மை கொண்டவர்கள். துப்புவதுபோன்ற வழக்கம் இல்லை. எளியவர்கள்கூட மிகச்சிறப்பாக உடையணிபவர்கள்.

காங்க்டாக் மையத்தில் சிறுவியாபாரிகள், பிச்சைக்காரர்கள் இல்லை. ஆகவே அங்கே தூய்மை இருந்தது. எவருடைய தொந்தரவும் இல்லை.  நடைபாதை வியாபாரமும் சிறுவியாபாரமும் பலருக்கு தொழில்வாய்ப்பளிப்பது என்பது வங்காளத்தை பிச்சைக்கார நிலமாக ஆக்கிய இடதுசாரிகள் உருவாக்கும் பொய். அது உண்மையில் ஒரு நிழல் உலகம்.

சிறுவணிகர்களுக்கு அவர்களுக்கான இடங்களை உருவாக்கி அங்கே கௌரவமாகத் தொழில்செய்ய வாய்ப்பளிக்கலாம். அவர்கள் பொதுவெளிகளை ஆக்ரமித்து, மலினமாக்க அனுமதிக்கக்கூடாது. அதுவே உலகமெங்கும் நாடுகள் செய்வது. அது அந்த கடைகள் மீது அரசுக்கான கட்டுப்பாட்டுக்கும் வழிவகுக்கும். முதன்மையாக உணவின் தரம் கட்டுப்பாட்டில் இருக்கும்.

இந்தியாவெங்குமுள்ள இந்த சிறுவணிக- தெருவணிக உலகம் பெரும்பாலும் குற்றச்செயல்களுக்கான ஒரு மாபெரும் வலைப்பின்னல், அதை இயக்குபவர்கள் அரசியல்வாதிகளுடன் தொடர்புள்ள நிழல் உலக தலைவர்கள். குழந்தைக் கடத்தல், ஜேப்படி முதல் போதைவணிகம் வரையில் அதன் வழியாகவே நகர்முழுக்க பரவியிருக்கிறது. (அதை ஆறு மெழுகுவத்திகள் படத்துக்கு ஆய்வு செய்யும்போது அப்படத்துடன் தொடர்பிருந்த காவல் அதிகாரிகளிடமிருந்தே அறிந்துகொண்டேன்)

இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்கள் பொருளியல் தேக்கநிலையில் இருக்க இரண்டு காரணங்கள். ஒன்று தீவிரவாதம். தீவிரவாதம் முழுக்கமுழுக்க முன்பு அமெரிக்கா, இப்போது சீனா நம் மீது உருவாக்கும் மறைமுகப்போர்தான். அவர்கள் இங்குள்ள இனக்குழுப் பூசல்களை அதற்குப் பயன்படுத்திக் கொள்கிறார்கள்.

சீனாவுடன் ‘நல்லுறவுடன்’ இருக்கும் நம்மூர் இடதுசாரிகள் அங்குள்ள தீவிரவாதத்தை ஆதரித்து இங்கே எழுதிக்குவித்தவை எல்லாமே கீழ்த்தரமான பிரச்சாரங்கள் அன்றி வேறல்ல. (நாமும் இதை திரும்ப மற்ற நாடுகளுக்குச் செய்கிறோம். அதையும் நான் ஏற்கவில்லை) இனக்குழுப் பூசல்களையே அவர்கள் ‘சுதந்திரப்போராக’ சித்தரித்துள்ளனர்.

இரண்டு, அங்கே செல்வதற்கான பயணச்சிக்கல்கள். அந்த தட்பவெப்பம் அங்கே விமானப்பயணத்தை கடினமானதாக ஆக்குகிறது. இமையமலையின் தட்பவெப்பம் பனிப்புயல், கடும் மழை என மாறிக்கொண்டே இருப்பது. இரண்டு, சாலை அமைப்பது மிகக்கடினம். மண் மிகமிக மென்மையானது, சாலை சரிந்துகொண்டே இருக்கும். ரயில் அமைப்பது மிகமிகக் கடினம், ஏராளமான மலைகளைக் குடையவேண்டியிருக்கும்.

இந்தக் காரணத்தால் வடகிழக்கு நிலம் நம் தொடர்பெல்லைக்கு அப்பால் இருந்தது. வணிகமும் தொழிலும் தேக்கமடைந்தன. ஆனால் இன்று மணிப்பூரில் உள்ள இனக்கலவரம் அன்றி எந்த தீவிரவாதமும் இல்லை. சாலை மிகப்பெரிய செலவில் போடப்பட்டுள்ளது. அருணாச்சலப்பிரதேசம் வரை ரயில் சென்றுவிட்டது. சிக்கிமில் ரயில் அடுத்த ஆண்டு செல்லும்.

இந்த வசதிகளால் வடகிழக்கு பொருளியலில் நம்மைவிட வேகமாக வளர்ந்து கொண்டுள்ளது. சிக்கிம், அருணாச்சலபிரதேசம் ஆகியவை முன்னணியில் உள்ளன. மேகாலயா அடுத்த நிலையில் உள்ளது. எஞ்சிய பகுதிகளும் அவ்வாறாக ஆகலாம். அந்த மக்கள் வெளித்தூண்டுதலுக்குச் செவி சாய்க்காமல் இருந்தால், பொருளியல் வளர்ச்சியே எல்லா விடுதலைக்கும் அடித்தளம் என உணர்ந்தால், இனவாத அரசியலை விலக்கிக்கொண்டால் அது நிகழலாம்.

வடகிழக்கு மக்கள் சென்ற இருபதாண்டுகளில் இந்தியாவெங்கும் சுற்றுலா முதலிய தொழில்களுக்காக வந்துகொண்டிருக்கிறார்கள். அவர்களின் அடிப்படையான நேர்மை, தூய்மையுணர்வு, சேவைமனநிலை அத்துறைகளில் பெரிதும் விரும்பப்படுகிறது. அதனூடாக அந்த மாநிலங்கள் பொருளியல் மாற்றம் அடைந்தன. அந்த மாற்றம் தீவிரவாதத்திற்கு எதிரான மனநிலையை உருவாக்கியது. இன்னும் இருபதாண்டுகளில் இப்பகுதி இந்தியாவின் ஐரோப்பா என்று சொல்லும் நிலையில் இருக்கும். இருக்கவேண்டும்.

ஜூன் 30 அன்று அதிகாலையிலேயே கிளம்பிவிட்டோம். ஆறரை மணிநேரம் காரிலேயே அமர்ந்து பாக்டோத்ரா வந்தோம். வழியெங்கும் போக்குவரத்து நெரிசல். பலமணிநேரம் சாலையிலேயே அமர்ந்திருந்தோம். மழைபெய்து சாலை பல இடங்களில் இடிந்து சரிந்திருந்தது. தீஸ்தா கொந்தளித்துப் பெருகிச்செல்ல, மறுபக்கம் மலைச்சரிவில் குருதிப்பெருக்கு போல மழைநீர் அருவிகள் கொட்டின.

விடுதியில் இருந்து கிளம்பும்போது எங்கள் விடுதியின் சன்னலுக்கு வெளியே கஞ்சன்ஜங்கா தெரிவதை கிருஷ்ணன் வந்து சுட்டிக்காட்டினார். வெண்மேகம் திரவிலகி சிகரம் ஒளிவிட்டுக்கொண்டே இருந்தது. அசையாத வெண்ணிறமான சுடர். விமானம் ஏறும்போது கடைசியாக கஞ்சன்ஜங்காவை எண்ணிக்கொண்டேன்.

(நிறைவு)

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on July 02, 2025 11:35

காவியம் 73

விண்ணுலகில் புத்தர். சாதவாகனர் காலம். அமராவதி ஸ்தூபம். பொயு 2

கானபூதி என்னும் கதைசொல்லும் பிசாசு சொன்னது. ராம்சரண் நாயக் நிழல்களை உணரத் தொடங்கியது ஒரு விடியற்காலையில். அன்று அவனுக்கு ஐம்பது வயது நிறைவடைந்திருந்தது. அது அவன் பிறந்தநாள்.

இரண்டு ஆண்டுகளுக்கு முன்புதான் அவன் திருமணம் செய்துகொண்டான். அவன் திருமணம் செய்துகொள்ள எண்ணியதே இல்லை. அவனிடம் அதைப்பற்றி எவராவது பேசினால் வாய்விட்டுச் சிரித்தபடி “சகோதரா, என்னைப் போன்ற ஒருவன் திருமணம் செய்துகொள்வதென்றால் ஒரு அனாதைக் குடும்பத்தை உருவாக்குவதென்று அர்த்தம். எந்த நாளும், எந்தக் கணமும் என் தலை துண்டிக்கப்படலாம். தெருவில் நான் சடலமாகக் கிடக்கலாம். என் வாழ்க்கை என்னுடையதே அல்ல. அன்றன்று கிடைக்கும் அந்தந்தத் தருணங்களின் கொண்டாட்டம் மட்டும்தான் எனக்கு உள்ளது.”என்பான்.

“தெருவில் என் சடலம் கிடப்பதை நூறுமுறையாவது கனவில் பார்த்திருப்பேன். உண்மையில் அப்படித்தான் நிகழவேண்டும், அதுதான் நியாயம். நான் தெருவில் ரத்தச்சேற்றில் கிடக்கிறேன். என் ரத்தம் உறைந்து கருமையாகிவிட்டது. ஈக்கள் வரத்தொடங்கிவிட்டன. சுற்றிலும் நின்று வேடிக்கை பார்க்கிறார்கள். இறுதிமூச்சுக்கு முன் நான் தவித்துக்கொண்டு தண்ணீர் கேட்டபோது விலகி ஓடிய மக்கள் என் கண்கள் நிலைத்தபின் அருகே வந்து ஆர்வமாக வேடிக்கை பார்க்கிறார்கள்.

“போலீஸ் வருவதற்கு நீண்டநேரமாகிறது. அதுவரை மக்கள் என் உடலைச்சுற்றி நெருக்கியடிக்கிறார்கள். என்னைப் பற்றிப் பேசிக்கொண்டிருக்கிறார்கள். வியப்பும் கேலியும் ஆறுதலுமாக. என் சாவு அவர்களுக்கு ஓர் உறுதியை அளிக்கிறது, அவர்களின் நடுத்தரவர்க்கத்து வாழ்க்கை சிறந்தது என்று எண்ணச் செய்கிறது. குறைந்தது கழுத்தறுபட்டு சாலையில் கிடக்கவேண்டாமே. என்ன சொத்து இருந்தாலென்ன? எவ்வளவு தொடர்புகள் இருந்தால் என்ன? எத்தனைபேர் பயந்தால்தான் என்ன?”

“என்னை மார்ச்சுவரிக்குக் கொண்டுசெல்கிறார்கள். அங்கே போஸ்ட்மார்ட்டம் நடைபெற்றபின் என் உடல் காத்திருக்கிறது. பெற்றுக்கொள்ள எவருமே வரவில்லை. இரண்டுநாளுக்குப் பின் நகராட்சி மயானத்திற்கு கொண்டுசெல்லப்படுகிறேன். என் உடலை ஒரு பொட்டலமாகச் சுற்றி சணல்சாக்கில் வைத்திருக்கிறார்கள். அப்படியே தூக்கி சிதையில் வைக்கிறார்கள். அங்கே ஏற்கனவே ஒரு பிச்சைக்காரக் கிழவன் எரிந்துகொண்டிருக்கிறான். பாதி எரிந்த அவன்மேல் நான் வைக்கப்பட்டு எரியூட்டப்படுகிறேன். நான் எரிந்துகொண்டிருக்கும்போதே இன்னொரு கிழட்டு பிச்சைக்காரியின் உடல் என் மேல் வைக்கப்படுகிறது, அவ்வளவுதான்.”

ராம்சரண் குடித்துவிட்டால் விடிய விடிய பேசுவான் என்பது பாரில் அனைவருக்கும் தெரியும். அந்த சிதையின் கதையை அவன் ஒவ்வொருவரிடமும் பத்துப்பதினைந்து முறை சொன்னதுமுண்டு. அவர்கள் ஒருவரை ஒருவர் பார்த்து சிரிப்பார்கள். “கூட்டுச்சிதை!” என்று சொல்லி தலையை ஆட்டுவார்கள். ஆனால் சட்டென்று ராம்சரண் அழத்தொடங்கும்போது அவர்களின் சிரிப்பு நின்றுவிடும்.

ஆகவே ராம்சரண் சட்டென்று திருமணம் செய்துகொண்டபோது அவர்கள் அதிர்ச்சி அடையவில்லை. “அவன் உணர்ச்சிகரமான ஆள்… அவனை எந்தப்பெண்ணும் வீழ்த்தமுடியும்” என்று அவனுடைய நண்பன் ஆகாஷ் டாகூர் சொன்னான்.

ராம்சரண் திருமணம் செய்ய முடிவெடுத்தது திடீரென்றுதான். அவன் ஒரு சிறிய விடுதியில் தங்கியிருந்தான். அந்த ஊரில் இருந்து விடியற்காலையில் அவன் கிளம்பவேண்டியிருந்தது. முன்னிரவில் ஒருவனை அவனும் டாகூரும் சேர்ந்து வெட்டியிருந்தனர். டாகூர் பிடிபட்டான். ராம்சரண் தப்பிவிட்டான். நகரிலுள்ள எல்லா விடுதிகளிலும் அவனை போலீஸ் தேடிக்கொண்டிருந்தது. கையில் பெட்டிகூட இல்லாத அவனுக்கு அந்த சிறிய விடுதியில்தான் அறை கிடைத்தது.

அன்றிரவு அவன் அறைக்கதவு தட்டப்பட்டது. அவன் அது போலீஸ்தான் என்ற உறுதியுடன் கதவைத் திறந்தான். வெளியில் இருந்து சட்டென்று உள்ளே வந்த ஒரு பெண் கதவை மூடி, அதன்மேல் சாய்ந்து நின்று “என்னைக் காப்பாற்றுங்கள்…என்னை காப்பாற்றுங்கள்” என்றாள்.

“என்ன?” என்று அவன் கேட்டான்.

“என்னை பிடிக்க வருகிறார்கள்” என்றபின் அவள் தன் இடுப்பில் இருந்த பையில் இருந்து ஒரு கருகுமணி மாலையை எடுத்து கழுத்தில் வைத்து “இதை மாட்டிவிடுங்கள்” என்றாள்.

அவன் அதன் கொக்கியை மாட்டினான். கதவு மீண்டும் தட்டப்பட்டது. அவள் சென்று படுக்கையில் படுத்து பாதி போர்த்திக்கொண்டாள். அவன் கதவைத் திறந்தான். வெளியே நின்றிருந்த கும்பலில் வயதானவர் அவனிடம் “உள்ளூரில் உள்ள இளைஞர்கள் இங்கே ஒரு மோசமான பெண்ணை சிலர் அழைத்து வந்ததாகச் சொல்கிறார்கள் … அவள் இங்கே நுழைவதைப் பார்த்திருக்கிறார்கள்…” என்றார்.

“இங்கே நானும் என் மனைவியும்தான் இருக்கிறோம்” என்று அவன் சொன்னான். அவர்கள் உள்ளே எட்டிப்பார்த்தனர்.

அவள் “யாரது?” என்றாள்.

“ஒன்றுமில்லை” என்று ராம்சரண் சொன்னான்.

பெரியவர் “மன்னிக்கவேண்டும்…” என்றபின் மற்றவர்களிடம் போகலாம் என்று தலையசைத்தார்.

மீண்டும் கதவைமூடியபின் அவன் ஒரு சிகரெட் பற்றவைத்துக் கொண்டான். “நீ விபச்சாரியா?” என்றான்.

“ஆமாம், ஒருவன் என்னை அழைத்து வந்தான். இவர்கள் அவனுடைய பக்கத்துவீட்டுக்காரர்கள்”

“சரிதான்”

“நான் கொஞ்சநேரம் கழித்து கிளம்பிவிடுகிறேன்”

”வேண்டாம், என்னுடன் நீ பாட்னா வரை வா. எனக்கு அதுவரை மனைவி தேவைப்படுகிறது”

“எதற்கு?”

“போலீஸ் என்னை தேடுகிறது” என்றபின் சிகரெட்டை இழுத்து புகைவிட்டு “கொலைக்காக” என்றான்.

அவள் “ஓ” என்றாள். ஆனால் கண்கள் மாறிவிட்டன.

“நான் பணம் தருகிறேன்…நீ மகிழ்ச்சி அடையுமளவுக்குப் பணம்”

”நான் பாட்னாவிலேயே இதே தொழிலை செய்யமுடியுமா? யாரையாவது எனக்கு அடையாளம் காட்டிவிடுவீர்களா?”

“அதற்கென்ன? பார்ப்போம்”

அவள் உடைகளை தளர்த்தியபடி “உங்களுக்கு வேண்டுமா?” என்றாள்.

“வேண்டாம்” என்று அவன் சொன்னான். “நான் அந்த மனநிலையில் இல்லை”

“அப்படியென்றால் நான் தூங்கலாமா?”

“சரி, உனக்கு மது வேண்டுமென்றால் அதோ மேஜையில் இருக்கிறது”

”நான் குடிப்பதில்லை. ஆனால் பசிக்கிறது. இந்த நிலக்கடலையை எடுத்துக்கொள்கிறேன்”

அவள் அதைச் சாப்பிட்டுவிட்டு உடனே தூங்கிவிட்டாள். அவன் சிகரெட் புகைத்தபடி அமர்ந்திருந்தான். தூக்கம் வரவில்லை. சிகரெட் தீர்ந்துவிட்டது. ஆகவே கீழே வீசிய சிகரெட் மிச்சங்களை தேடி எடுத்து மீண்டும் புகைபிடித்தான்.

அவள் இரண்டு மணிநேரத்தில் விழித்துக்கொண்டாள்.”தூங்கவில்லையா?”

“இல்லை”

”கொல்லப்பட்டவன் நல்லவனா?”

“என்னைப்போலத்தான்” என்றபின் “எல்லாரும் நல்லவர்கள்தான்” என்றான்.

“அப்படியென்றால் என்ன வருத்தம்?”

“வருத்தமில்லை. நான் வேறொருவரை நினைத்துக்கொண்டிருந்தேன்”

அவன் சொல்லட்டும் என்று அவள் காத்திருந்தாள்.

அவன் ராதிகாவை பற்றிச் சொன்னான். “அஸ்வத் தேஷ்பாண்டே சென்றவாரம் செத்துப்போனார். மாரடைப்பு. கடுமையான குடிப்பழக்கம் இருந்தது. ஈரல் கெட்டுப்போயிருந்தது”

“அவருக்கு குற்றவுணர்ச்சி இருந்ததா?”

“இல்லை. சொல்லப்போனால் பெருமைதான். அதை பலரிடமும் பெருமிதமாகச் சொல்லிக்கொண்டிருந்தார்” என்றான். “ஓய்வுபெற்றபின் வெளிப்படையாகவே சொல்ல ஆரம்பித்துவிட்டார். அதைச் சொன்னால்தான் தன் புதிய மனைவி தன்னை மதிப்பாள் என்று என்னிடம் ஒருமுறை சொன்னார்”

“மதித்தாளா?”

“குடிகாரர்களுக்கு என்ன மதிப்பு? அவளுக்கு தன் குழந்தைகளை படிக்கவைப்பது தவிர வேறு நினைப்பே இல்லை” என்றேன். ”ஆனால் அவளுக்கும் குற்றவுணர்ச்சி ஏதும் இருந்ததாகத் தெரியவில்லை”

“அது எப்போதும் அப்படித்தான்” என்று அவள் சொன்னாள்.

“மேலும் இதெல்லாம் மிகப்பழைய கதைகள்… யாருக்கு நினைவிருக்கிறது?” என்றான் ராம்சரண். “அஸ்வத்தின் முதல் மனைவியின் மகன் உருப்படவில்லை. அவனும் முழுக்குடிகாரன். அவனை யாரோ கொன்று கங்கைப்படிக்கட்டில் போட்டிருந்தார்கள்”

“நாம் இதையெல்லாம் ஏன் பேசவேண்டும்? அதை விட்டுவிடுங்கள்” என்றாள்

“சும்மா நினைத்துக் கொண்டேன்.” என்றான் ராம்சரண். ”இன்று நான் கொன்றவனின் பெயர்கூட அஸ்வத்தான்”

“அவருக்கு குற்றவுணர்ச்சி இருந்ததனால்தான் குடித்தாரா?”

”இல்லை, அதற்கு முன்னரே குடிதான்… அவருடைய இன்பங்கள் எல்லாமே மூர்க்கமானவை. அதற்கு உடல் ஒத்துழைக்காமலானபோது குடிக்க ஆரம்பித்தார். குடித்தால் கொஞ்சம் வெறி ஏறி உடல் கூட வந்தது…பிறகு அதுவும் போய்விட்டது”

“எப்படி இருக்கிறார்கள் மனிதர்கள்! இதையெல்லாம் செய்துவிட்டு குற்றவுணர்ச்சியே இல்லாமல் இருக்கமுடியுமா என்ன?” என்றாள் அவள். “ஆனால் நான் அவர்களைத்தான் தினமும் பார்க்கிறேன்”

“குற்றவுணர்ச்சி அடைவதற்குக்கூட ஒரு ஒரு சுரணை தேவைப்படுகிறது. சிலருக்கு அதைக்கூட கடவுள் அளிப்பதில்லை. குப்பை போல கடவுள் சிலரை தூக்கி அப்பால் வீசிவிடுகிறார். பாவப்பட்ட ஜென்மங்கள்” என்று ராம்சரண் சொன்னான்.

“மிச்சம் ரம் இருக்கிறதே, குடிக்கலாமே”

“நான் விடியற்காலையில் கிளம்பவேண்டும்”

”குடியுங்கள், நான் எழுப்புகிறேன்”

அவன் எஞ்சிய மதுவை குடித்துவிட்டு மேஜையில் உருண்டு கிடந்த ஒரே ஒரு வேர்க்கடலையை எடுத்து வாயிலிட்டு மென்றான். பின்னர் படுக்கையில் அவளருகே படுத்தான்.

“போடா, நீயெல்லாம் ஒரு ஆள் என்று கடவுள் சிலரைப் பார்த்து சொல்கிறார், என்ன சொல்கிறாய்?” என்றான். அவன் குரல் கொஞ்சம் குழறத் தொடங்கியிருந்தது.

அவள் ஒன்றும் சொல்லவில்லை.

“ஒருவன் கடவுளே என்று கூப்பிட்டு அழும்போது கடவுள் மேலே இருந்து கேலியாகச் சிரித்தாரென்றால் அவனெல்லாம் எப்பேற்பட்ட துரதிருஷ்டம் பிடித்தவன் இல்லையா?”

அதன் பின்னரும் அவன் ஏதோ சொல்லிக்கொண்டிருந்தான். எப்போது தூங்கினான் என்று தெரியவில்லை. தூக்கத்தில் சிதிலமான கனவுகளில் அவன் ஒரு பழைமையான கல்தூண் அருகே கழுத்தறுபட்டு துடிப்பதுபோல ஒன்று முற்றிலும் புதியதாக இருந்தது. தரையெல்லாம் அவன் ரத்தம் சிதறிக்கிடந்தது.

காலையில் அவளுடன் ஒரு டாக்ஸியில் பாட்னாவுக்கு கிளம்பினான். டாக்ஸியின் பின் இருக்கையில் தலையில் ஒரு மப்ளரைச் சுற்றிக்கொண்டு படுத்துவிட்டான். இரண்டு இடங்களில் போலீஸிடம் அவள் தன் கணவனுக்கு காய்ச்சல் என்று சொன்னாள்.

பாட்னாவை அடைந்ததும் அவன் அவளிடம் “சரி, நீ கிளம்பலாம். நான் உனக்கு பணம் தருகிறேன்…” என்றபின் இருபத்தைந்தாயிரம் ரூபாயை கொடுத்தான்.

“யாரையாவது அறிமுகம் செய்வதாகச் சொன்னீர்களே?” என்று அவள் பணத்தை வாங்கிக்கொண்டு சொன்னாள்.

“நீ ஊருக்குப் போ. இங்கே நிலைமை மிக மோசம்…”

”நான் இனி புதியதாக என்ன பார்க்கப்போகிறேன்?”

“உன் வீட்டில் யார் இருக்கிறார்கள்?”

“மாமியார் இருக்கிறார். ஒரு மகன் இருக்கிறான். அவனால் எழுந்து நடக்கமுடியாது.” அவள் சொன்னாள். “அங்கே பெரும்பாலும் எனக்கு ஆளே கிடைப்பதில்லை”

”இங்கே ஏதாவது அமைந்தால் சொல்கிறேன்” என்று அவன் சொன்னான்.

“சரி, பரவாயில்லை” என்று அவள் அந்த கருகுமணிமாலையை கழற்றப்போனாள்.

அவன் “அதை கழற்றாதே” என்றான். ”இருக்கட்டும்”

அவள் கண்களைச் சுருக்கியபடிப் பார்த்தாள். அவளைப் போன்ற பெண்களின் கண்கள் எப்போதுமே புண்பட்டதன்மையை காட்டுபவை. தூக்கமின்மையால் கருமை படிந்தவை.

“நான் உன் ஊருக்கு வருகிறேன். உன் மாமியாரையும் மகனையும் கூட்டி வருவோம். நீ என்னுடன் இரு”

அவள் வாயை கையால் பொத்தியபடி ஓசையே இல்லாமல் அழுதாள். அப்படியே கால் தளர்ந்து தரையில் அமர்ந்துவிட்டாள். முந்தானையை முகத்தின்மேல் இழுத்துவிட்டபடி அழுதுகொண்டே இருந்தாள். அவன் ஒரு சிகரெட்டை பற்றவைத்தபடி மதியவெயிலில் வெறிச்சிட்டிருந்த சாலையை பார்த்துக்கொண்டு நின்றான்.

மிக விரைவாக அவன் வாழ்க்கை மாறியது. அவனுக்கு ஒரு வீடு உருவாகியது. அங்கே ஒவ்வொன்று ஒழுங்காக அமைந்தன. அவன் வாழ்க்கையிலும் அந்த ஒழுங்கு உருவானது. ஒவ்வொரு நாளும் அவன் வீடுதிரும்பத் தொடங்கினான்.

அவளை மணந்தபின் அடுத்த ஆண்டே அவன் குற்றச்செயல்களை படிப்படியாக நிறுத்திக் கொண்டான். ஒருநாள் கையிலிருந்த மொத்தப் பணத்துடன் பாட்னாவிலிருந்து மும்பைக்கு குடிபெயர்ந்தான். அங்கே விலாஸ் ஷிண்டே என்று பெயரை மாற்றிக்கொண்டு புறநகரில் ஒரு சிறு அடுக்குமாடி வீட்டில் வாழ்க்கையை தொடங்கினான்.

முதல் ஓர் ஆண்டு எவராவது அடையாளம் கண்டுகொள்வார்கள், யாராவது தேடிவந்து விடுவார்கள் என்ற பயம் இருந்தது. அதன்பின்னர் அந்த பயம் கொஞ்சம் கொஞ்சமாக மறைந்தது. தாடி வளர்த்து, வெண்ணிற துணித்தொப்பியும் வைத்துக்கொண்டான். தடித்த கண்ணாடியும் அணிந்தபோது அவன் தோற்றமே மாறியது. அவனே அவனைக் கண்ணாடியில் பார்த்தபோது முற்றிலும் வேறொருவன் தெரிந்தான். பின்னர் அந்தக் கண்ணாடிப்பிம்பமே அவனாக அவனுள் குடியேறியது. அவனே அவனை வேறொருவனாக உணரத் தொடங்கினான். பழைய காலங்கள் எங்கோ நெடுந்தொலைவில் இருந்தன. எப்போதாவது கனவில் ஒரு கீற்றாக தோன்றிச் செல்லும் சில காட்சிகள் மட்டுமே அங்கிருந்து அவனை வந்தடைந்தன.

ராம்சரண் நீர் இறைக்கும் மோட்டார்களை விற்கும் நிறுவனம் ஒன்றின் விற்பனைப் பிரதிநிதியாகச் சேர்ந்தான். மும்பையைச் சுற்றிய நகர்களிலும் சிறு ஊர்களிலும் கடைகள் தோறும் சென்று விற்பனை ஆணைகளை பெறவேண்டும். எஞ்சியிருக்கும் பணத்தை வசூல் செய்து வங்கியில் கட்டவேண்டும். வாரத்தில் இரண்டுநாட்கள் வீட்டில் மனைவியுடன் இருப்பான்.

அவன் மனைவி நீண்டநாட்களுக்குப் பின் கருவுற்றாள். அது ஒருவகையான பதற்றத்தையே அவனுக்கு அளித்தது. அவளுக்கும் ஏதோ ஒரு பதற்றம் இருந்துகொண்டிருந்தது. இருவரும் அதைப் பகிர்ந்துகொள்ளவில்லை. அவள் ஒரே ஒருமுறை மட்டும் அவனிடம் “வீட்டில் யாரோ இருப்பதைப் போல தோன்றுகிறது, தெரியாத யாரோ” என்று சொன்னாள்.

“கர்ப்பிணிகளுக்கு அப்படி பல பிரமைகள் உருவாகும் என்று சொன்னார்கள். பொருட்படுத்தாதே” என்று அவன் சொன்னான்.

ஆனால் மறுநாளே அவன் வீட்டில் நிழலைப் பார்த்துவிட்டான். யாரோ அறைக்குள் நடமாடும் உணர்வை அடைந்து அவன் தூக்கத்திலிருந்து விழித்துக்கொண்டபோது அறைக்குள் நிழல் நின்றிருந்தது. அவன் திடுக்கிட்டு எழுந்து அமர்ந்தபோது அது கொடித்துணியின் நிழலாக ஆகியது. தரையில் நான்குமாத கர்ப்பமான அவன் மனைவி படுத்திருந்தாள்.

தான் பார்த்தது என்ன என்று ராம்சரண் உள்ளூர உழற்றிக்கொண்டே இருந்தான். அது தன் பிரமை என்று சொல்லிச் சொல்லி அவன் நிலைநாட்டிக்கொள்ளும்போது சட்டென்று அது தன்னைக் காட்டியது. அவன் ஔரங்காபாதுக்கு கிளம்பிச் செல்லும்போது ரயிலில் அவனுடைய இருக்கைக்கு நேர் எதிர் இருக்கையில் அவன் நிழல்போல விழுந்து கிடந்தது. அவன் அசைந்தபோது அது அசையவில்லை. அவன் நெஞ்சு படபடக்க அதைப் பார்த்துக் கொண்டிருந்தபோது அவன் காதில் மெல்லிய குரல் “அது நான்தான்” என்றது.

“எங்கிருந்து வருகிறாய்? என்ன வேண்டும் உனக்கு?” என்று ராம்சரண் கேட்டான்.

“நெடுந்தொலைவில் இருந்து…அதாவது காலத்தின் தொலைவு” என்று அந்நிழல் சொன்னது. “நீ ஆனந்தனைக் கேள்விப்பட்டிருக்கிறாயா?”

“இல்லை”

“அவர் ரோகிணி ஆற்றில் பரிநிர்வாணம் அடைந்தார். அதை நான் பார்த்தேன்”

“அதை ஏன் என்னிடம் சொல்கிறாய்”

“நாங்கள் அப்படித்தான், சம்பந்தமில்லாமல் பேசுவோம். நீங்கள் வாழும் அந்த உலகின் காரணகாரிய உறவுக்கு நாங்கள் கட்டுப்பட்டவர்கள் அல்ல”

அவன் தனக்குத்தானே பேசுவதைக் கண்டு அங்கே அமரவந்தவர் திகைத்து விலகிச் சென்றார். அவன் தலையை உலுக்கி தன்னை விடுவித்துக்கொண்டான்.

அவன் அதிகாலையில் ஔரங்காபாதுக்கு சென்று, பகல் முழுக்க அலைந்துவிட்டு, தன் விடுதிக்குத் திரும்பி வந்து, இறங்கி ஆட்டோரிக்‌ஷாவுக்கு பணம் கொடுத்துவிட்டு, சாதாரணமாகத் திரும்பும்போது ஓரக்கண் எதையோ பார்த்துவிட்டது. எதை? அவன் பதைப்புடன் சுற்றுமுற்றும் பார்த்தான்.

கண்களை கண்கள் தவறவிடுவதில்லை. அருகே இருந்த பைக் பழுதுநீக்கும் கடையில் ஒருவன் சற்றே தூண்மறைவில் இருந்து அவனை ஒரு கணம் பார்த்துவிட்டு கண்களைத் திருப்பிக் கொண்டான். ராம்சரண் அதே ஆட்டோவில் ஏறிக்கொண்டு “கிளம்பு” என்றான்.

“என்ன சார்?”

“பஸ் ஸ்டாண்ட் போ… அங்கே பணப்பையை மறந்துவைத்துவிட்டேன்… கிளம்பு… கிளம்பு…”

ஆட்டோ செல்லும்போது அவன் பின்பக்கம் பார்த்துக்கொண்டே இருந்தான். அவர்கள் அதற்குள் எங்கெங்கோ செய்தி சொல்லியிருப்பார்கள். வலை பல இடங்களிலாக விரியத் தொடங்கியிருக்கும். ஆனால் எவரையும் பார்க்கமுடியவில்லை. அவ்வாறு ஆறுதல் அடையக்கூடாது என்று அவனுக்குத் தெரிந்திருந்தது.

மீண்டும் மும்பைக்கு திரும்பக்கூடாது. விடுதியில் வழக்கம்போல அவன் தவறான விலாசம்தான் கொடுத்திருந்தான். அங்கே இருக்கும் பொருட்கள் எதிலும் அவனுடைய வீட்டுவிலாசமோ, நிறுவனத்தின் விலாசமோ இல்லை. ஒவ்வொரு முறையும் புதிய விடுதியிலேயே அவன் தங்குவது வழக்கம்.

ஒரு பஸ் சாலையில் வளைந்து வருவதைக் கண்டான். ”நிறுத்து” என்று சொல்லி பணத்தை கொடுத்துவிட்டு பாய்ந்து சென்றான். ஓடிப்போய் அந்த பஸ்ஸில் ஏறிக்கொண்டான். டிக்கெட் எடுத்துவிட்டு வெளியே பார்த்தபடியே வந்தான். அடுத்த நிறுத்ததில் இறங்கி இன்னொன்றில் ஏறிக்கொண்டான். அது எந்த ஊர் என்று தெரியவில்லை. நடத்துநர் அவரே ஊர்ப்பெயரைச் சொல்லி கேட்டார். ஆமாம் என்று டிக்கெட் எடுத்துக்கொண்டான்.

அந்த ஊருக்குச் சென்று அவன் இறங்கியபோது இரவு ஆகியிருந்தது. பைதான் என்ற அந்த ஊரை எங்கோ கேள்விப்பட்டதுபோல் இருந்தது. அங்கே துகாராம் ஆலயம் இருந்தது, ஆனால் அது தீர்த்தாடனக் காலம் அல்ல. ஆகவே பஸ் ஸ்டாண்டில் அந்த வேளையில் கூட்டம் இல்லை. குளிர்காலம் ஆகையால் கடைகள் பெரும்பாலும் மூடியிருந்தன. அது முழுநிலவுநாள். சாலையிலுள்ள கூழாங்கற்கள் கூடத் தெரியும் அளவுக்கு வெளிச்சம். ஒவ்வொரு கூழாங்கல்லுடனும் ஒரு சிறிய நிழல்.

ஏதாவது ஒரு சிறிய விடுதியில் தங்கிவிட்டு காலையில் மும்பைக்குச் செல்லவேண்டும் என்று எண்ணினான். மும்பையில் இருந்து ஏதாவது தெற்கு நகரத்திற்கு இடம்பெயர்ந்துவிட வேண்டும். மும்பை திரும்பிய அன்றே அங்கே இருந்து கிளம்பிவிடவேண்டும்.

“அவர்கள் உன்னை பார்த்துவிட்டார்கள்” என்று செவியருகே நிழல் சொன்னது. அக்கணம் அவனும் பார்த்துவிட்டான். ஒரு காரின் முகப்பு வெளிச்சம் அவன் மேல் விழுந்தது. மழுங்கலான குரல்கள் கேட்டன.

அவன் திரும்பி ஓடத்தொடங்கினான். பக்கவாட்டுச் சந்துகளில் திரும்பி திரும்பி ஓடினான். தெருக்களில் நாய்கள் மட்டும்தான். எல்லா வீடுகளும் மூடியிருந்தன.சாலையில் தெருவிளக்குகளின் மங்கலான வெளிச்சம் சிந்தியிருக்க காகிதக்குப்பைகள் காற்றில் அலைபாய்ந்துகொண்டிருந்தன. நிலவின் வெளிச்சம் சரிவான ஓட்டுக் கூரைகளையும் கம்பிகளின் வளைவுகளையும் மின்னச் செய்தது.

தன்னை தொடர்ந்து வரும் காலடியோசைகளை கேட்டுக்கொண்டே இருந்தான். பலர் இருப்பது தெரிந்தது. நீண்டகாலப் பழக்கமின்மையால் ஓட முடியாமல், உடம்பு சூடாகி மூச்சி இறுகிக்கொண்டது. கால்களில் தசைகள் தெறிக்கத் தொடங்கின.

ஒரு கட்டத்தில் ஓடமுடியாமல் தள்ளாடியபடி ஒரு சுவரைப் பிடித்துக்கொண்டான். ஏதோ மசூதியின் சுவர் அது. அலையலையாக உருண்ட தூண். உள்ளே விளக்குகள் எரிந்தன. மிக அருகே பேச்சுக்குரல்கள் கேட்டன. முழுவிசையையும் செலுத்தி, தன் உடலை உந்தி முன்னால் செலுத்திக்கொண்டு மீண்டும் ஓடத்தொடங்கினான். தன் எடையும், அதன் விளைவான காலடியோசையும்தான் தன்னைக் காட்டிக்கொடுக்கிறது, ஆனால் ஒன்றும் செய்வதற்கில்லை. அவன் பதுங்கிக்கொள்ளும் அளவுக்கு எங்கும் இடமில்லை.

கோதாவரிக்கரையில் அமைந்த நகரம் அது. ஆற்றுக்குச் செல்லும் ஒதுக்குப்புறமான பாதை. அங்கே பெரிய வாசல்களுடன் கோட்டைகள் மூடிக்கிடந்தன. கோட்டைகள் அல்ல, வீடுகள். ஆனால் கூரையற்றவை. தொன்மையானவை, கைவிடப்பட்டவை. மேலும் ஓடமுடியாது என்று உணர்ந்தான். குரல்கள் இப்போது பல இடங்களிலாக கேட்டன. தாழ்ந்த ஒலியில் விடுக்கப்படும் ஆணைகள். டார்ச் விளக்கின் வட்டங்கள் சுழன்று சுழன்று முட்புதர்களிலும் மரங்களிலும் இடிந்த குட்டிச்சுவர்களிலும் விழுந்து தாவிச் சென்றன.

அவன் ஒரு மாளிகையின் வாசலை அடைந்ததும் நின்றுவிட்டான். இதயத்தை கிடுக்கியால் கவ்வி இறுக்கியது போலிருந்தது. மேலும் ஓர் அடி எடுத்துவைக்க உடலால் முடியாது என்று உணர்ந்தான். அந்த வாசலிலேயே இருட்டில் அமர்ந்தான். அப்போதுதான் அங்கே பழைய துணிக்குவியல்கள் கிடப்பதைக் கண்டான். ஒருவன் அங்கே ஏற்கனவே படுத்திருந்தான்.

அவன் தொழுநோயாளிபோலத் தோன்றினான். அவன் கூச்சலிட்டால் பிடிபட்டுவிடுவோம் என்று ராம்சரண் உணர்ந்தான். எப்படி அவனிடம் சொல்வது? அவன் கண்களில்லாதவன் என்று தெரிந்தது. தாடியும் மீசையும் தலைமுடியும் மண்டி புதர்போன்ற தலை. ஒன்றுக்குமேல் ஒன்றாகப் போடப்பட்ட அழுக்குச் சட்டைகள். அப்பகுதியிலேயே மட்கும் நாற்றம் நிறைந்திருந்தது.

ராம்சரண் அமர்ந்து அங்கே கிடந்த பழைய துணி ஒன்றை எடுத்து தன் உடல்மேல் சுற்றிப்போர்த்திக்கொண்டான். பின்னர் தலைவழியாகவும் போர்த்திக்கொண்டு உடலைச் சுருட்டி, சுவரின் மடிப்புடன் ஒட்டிக்கொண்டு படுத்தான். காலடியோசைகள் மிக நெருக்கமாக கேட்டன.

“இங்கேதான்…தேடு” என்று குரல் ஆணையிட்டது.

“இந்த வழியாகப்போனால் ஆறு…”

ராம்சரண் மேல் டார்ச் விளக்கின் ஒலி விழுந்து சென்றது. அவன் மூச்சை அடக்கிக்கொண்டு கிடந்தான். இதயம் அறைபடும் ஓசை காதில் கேட்டது. உடல்முழுக்க அனல்போல வெப்பம். மீண்டும் அவன்மேல் விளக்கொளி கடந்து சென்றது.

“டேய், இங்கே ஒருவன் ஓடிவந்தானா?”

இன்னொருவன் “அவன் ஊமை…கண்ணும்தெரியாது” என்றான்.

அந்தப் பிச்சைக்காரன் தூக்கத்திலேயே இருப்பதுபோலிருந்தது.

மீண்டும் ஒளி ராம்சரண் மேல் சுழன்று சென்றது. பிறகு குரல்கள் மங்கி மறைந்தன.

நெடுநேரம் குரல்களுக்காக செவிகூர்ந்தபின் அவன் துணியை விலக்கி எழுந்துகொண்டான். எத்தனை பழந்துணிக் குப்பைகள். பிச்சைக்காரன் பைத்தியம்போல குப்பையில் கிடக்கும் எல்லா துணிகளையும் எடுத்து அங்கே குவித்திருக்கிறான். பெரிய சேமிப்பு.

ராம்சரண் தன் சட்டையை இழுத்து விட்டுக்கொண்டு சுற்றுமுற்றும் பார்த்தான். தொலைவில்கூட குரல்கள் கேட்கவில்லை. செய்யக்கூடுவது வேறொன்றும் இல்லை, வந்தவர்களுக்கு நேர் எதிர் திசையில் முடிந்தவரை விலகிவிடுவதுதான் ஒரே வழி. அந்த ஊர் அவனுக்குத் தெரியாது. அங்கே எங்கு செல்வது என்று எந்த முடிவையும் எடுக்கமுடியாது.

அவன் அந்தப் பிச்சைக்காரனை திரும்பிப் பார்த்தான். அவன் முகம் வான் நோக்க, மல்லாந்து கிடந்தான். நிலவின் ஒளியில் அவன் தலைமுடிச்சுருள்களும் தாடியின் கம்பிபோன்ற மயிர்களும் ஒளிர்ந்தன. தாடியின் நிழல் வலைபோல மார்பில் விழுந்திருந்தது.

ராம்சரண் காலடியோசை எழுப்பாமல் ஆனால் விரைவாக நடந்தான். திரும்பும்போது அவன் வந்த வழி அத்தனை தெளிவாக, பலமுறை அங்கே வந்ததுபோல நினைவிருப்பதை உணர்ந்தான். அத்தனை பதற்றத்திலும் அவன் உள்ளம் வழியை துல்லியமாக கவனித்திருக்கும் விந்தையை எண்ணிக்கொண்டான்.

அவன் மீண்டும் பஸ் ஸ்டாண்டை அடைந்தான். அங்கே எந்த வண்டி கிடைத்தாலும் ஏறி அடுத்த ஊருக்குச் சென்றுவிடவேண்டும் என எண்ணினான். சாலையில் எவருமில்லை. ஒரே ஒரு ஜீப் மட்டும் நின்றுகொண்டிருந்தது. உட்புறக் கிராமங்களுக்கு ஆட்களை ஏற்றிச்செல்லும் ஜீப். அதன் டிரைவர் கால் வெளியே தொங்க தூங்கிக்கொண்டிருந்தான்.

ராம்சரண் அந்த ஜீப்பை அணுகியபோது உள்ளே இருந்து இரண்டு பேர் எழுந்து அவனை பிடித்துக்கொண்டனர். அவன் திமிறுவதற்குள் மறுபக்கமிருந்து மேலும் இரண்டுபேர் வந்துவிட்டனர். அவன் தளர்ந்து நின்றான்.

“ராம்சரண் நாயக், பேசாமல் எங்களுடன் வா. இங்கே வேண்டாம்” என்று ஒருவன் சொன்னான். அந்தக் குரலிலேயே அவன் தொழில்முறைக் கொலையாளி என்று தெரிந்தது.

அவர்கள் அவனை உந்தி ஜீப்பில் ஏற்றிக்கொண்டார்கள். ராம்சரண் இரண்டு பேருக்கு நடுவே தடித்த உடலை இறுக்கிக்கொண்டு அமர்ந்திருந்தான். நிலவின் ஒளியில் குறுகிய நிழல்கள் விழுந்துக் கிடந்த சாலைவழியாகச் சென்றபோது ராம் சரணின் நினைவில் அந்தப் பிச்சைக்காரனின் முகம் தன்னியல்பாக தெளிந்து வந்தது. அவன் யார் என்று புரிந்துவிட்டது.

“ஆ” என்று ராம்சரண் மூச்சொலி எழுப்பினான்.

“என்ன?”

“ஒன்றுமில்லை” என்றான் ராம்சரண். அந்த முகத்தை அப்போது கண்முன் பார்ப்பதுபோல உணர்ந்தான். அதில் புன்னகை இருந்தது. கருணை மிக்க புன்னகை.

அவன் காதருகே நிழல் சொன்னது. “அவனுக்கு உன்னை நன்றாகவே தெரிந்திருந்தது. அவன் அந்தக் கழியால் இரண்டுமுறை தரையைத் தட்டியிருந்தால் நீ அப்போதே பிடிபட்டிருப்பாய்”

ராம் சரண் தலையை அசைத்தான். தலைகுனிந்து பற்களை இறுகக் கடித்தான்.

“அத்தனை பெரிய தண்டனையா எனக்கு என்று அவன் என்னிடம் குமுறினான்” என்றது கானபூதி. “அவன் நிழல் இங்கே நெஞ்சிலும் தரையிலும் அறைந்துகொண்டு அழுதது. எனக்கு ஏன் இந்த கொடுந்தண்டனை என்று என்னிடம் கேட்டுக்கொண்டே இருந்தது. அதன் அழுகையை என்னால் ஒருபோதும் நிறுத்தமுடியாது என்று தெரிந்திருந்ததால் நான் இரக்கத்துடன் பார்த்துக்கொண்டிருந்தேன்”.

அவனை அவர்கள் பாட்னாவுக்கு கொண்டுசென்றனர். பலநாட்கள் வைத்து சித்திரவதை செய்தனர். அவன் கையெழுத்தையும் கைரேகைகளையும் கொண்டு பல வங்கிகளின் அறைகளில் இருந்து நகைகள், பணம், ஆவணங்கள் என எல்லாவற்றையும் எடுத்தபின்பு அவனைக் கொன்று ஒரு பெரிய இரும்பு உருளையுடன் சேர்த்துக் கட்டி கங்கையில் வீசினார்கள். அவன் நீரிலிருந்து வெளிவராமலேயே அழுகி, மட்கி எலும்புக்கூடாகி, கங்கையின் அடிச்சேற்றில் படிந்திருக்கும் பல்லாயிரம் எலும்புக்கூடுகளில் ஒன்றாக ஆனான்.

அவன் மனைவியை அவர்கள் தேடிப்பிடித்தனர். அவளையும் சித்திரவதை செய்தனர். ஆனால் அவளுக்கு ஒன்றும் தெரிந்திருக்கவில்லை. ஆகவே அவளைக் கொன்று அங்கே ஒரு சாக்கடையில் வீசிச்சென்றனர். அந்தக் கிழவியும் சிறுவனும் வீட்டில் இருந்து விரட்டப்பட்டனர். பசித்து குளிர்ந்து தெருவிலேயே இருவரும் இறந்தனர்.

”அந்த நிழல் இங்கே சிலகாலம் இருந்தது. பின்னர் அதைக் காணவில்லை” என்றது கானபூதி. ”என் முன் இரு கைகளையும் விரித்து அது கதறியது. சொல் நிழல்களின் தந்தையே, ஏன் அவன் அப்படிச் செய்தான் என்று கேட்டது. அவனிடம் நான் சொன்னேன், ’அவன் தன்னைத் தானே முடிவுசெய்துகொண்டவன்’ என்று.”

கானபூதி தொடர்ந்தது “கதைகளின் நிறைவில் தோன்றும் முழுநிலவு. அதை தூய உள்ளம் மட்டுமேயாக எஞ்சிய துக்காராம் பார்த்துவிட்டான். நான் அவனிடம் சொன்னேன், நீ குணாட்யன். மாபெரும் கவிஞனாக ஆகும் பொருட்டே பிறந்தவன் என்று உனக்கும் தெரியும். நீயும் அவரும் வெறும் வேர்களாக மட்டுமே உங்களை ஆக்கிக் கொண்டவர்கள். உயிர்கொண்டிருப்பது உங்களுக்கு மட்டுமே தெரியும் என்னும் நிலை. முளைத்தாலொழிய இருப்பு இல்லை என்னும் நிலை. தண்டும், கிளைகளும், இலைகளும் மலர்களும், கனிகளும் விதைகளுமாக ஆகி பொலிவதே வேர்களின் தர்மம்…”

நிலவைச் சுட்டிக்காட்டி நான் சொன்னேன். ”இது பரிநிர்வாணநாள் நிலவு. இவ்விரவு நித்யமானது, இந்த நிலா தேய்வற்றது. இந்நிலவை குணாட்யரும் பார்த்தார். அது பிருஹத்கதா என்னும் பெருங்காவியமாகியது. நீயும் ஒரு காவியத்தை எழுது. இதுதான் தருணம்”

துகாராம் என் முன் அமர்ந்திருந்தான். கைகளால் துழாவி ஓர் இலையை எடுத்தான். இன்னொரு கையால் துழாவி ஒரு முள்ளையும் எடுத்தான்.இலைமேல் அந்த முள்ளை வைத்துக்கொண்டு அப்படியே அமர்ந்திருந்தான். நான் காத்திருந்தேன்.

பின்னர் புன்னகையுடன் அவற்றை கீழே போட்டான்.

“என்ன செய்கிறாய்?” என்று நான் கேட்டேன்.

“நான் எழுதி முடித்துவிட்டேன்” என்றான் “என்னுடைய பிருஹத்கதையை” என்றபின் தவழ்ந்து அப்பால் சென்றான்.

நான் அவனுடன் சென்றபடி “என்ன செய்கிறாய்?” என்றேன்.

“அக்னிபுத்ர சதகர்ணி நிறுவிய முதல் பௌத்த சைத்யம் அமைந்த இடம் இது” என்று சொன்னபடியே துகாராம் தவழ்ந்தான். ஓர் இடத்தில் அமர்ந்து கைகளால் மண்ணை தோண்டத் தொடங்கினான்.

“அதை நீ எப்படி அறிந்தாய்?”

“நான் சொன்னேன்” என்று ஆபிசாரன் சொன்னது.

“நாங்களும் சொன்னோம்” என்றது சூக்ஷ்மதரு.

துகாராம் மண்ணை அள்ளி நீக்க நீக்க புத்தரின் சிலை ஒன்று தெளிந்து வந்தது. பழமையானது. விளிம்பு உடைந்தது. விண்ணுலகில் முகில்களில் அமர்ந்திருக்கும் புத்தரைச் சுற்றி தேவர்கள் மலர்மழை பொழிந்தனர். கந்தவர்களும் யட்சர்களும் இசைஎழுப்பினர். காலடியில் போதிசத்வர்கள் ஞானம் கோரும் கைகளுடன் அமர்ந்திருந்தனர். மாரனும் மரணமும் காலடியில் பணிந்திருந்தனர். புத்தர் ஞானப்புன்னகை விரிந்த முகத்துடன் ஒருகையை இடையில் வைத்து மறுகையால் அபிசம்போதனை முத்திரை காட்டி அமர்ந்திருந்தார்.

“நான் இந்தக் காலடியில் அமர்கிறேன்” என்று அவன் சொன்னான்.

“என் கதைகள்… இத்தனை கதைகளுடன் நான் என்ன செய்வது?” என்று நான் கேட்டேன்.

“கதைகள் அழிவதில்லை, நீயும் காலம் அற்றவன் “ என்று துகாராம் சொன்னான். என்னை நோக்கி புன்னகைத்து “உன் கண்களும் புன்னகையும்போல இந்த வாழ்க்கையில் நான் கண்ட அழகு வேறில்லை. என்னை விடுவித்த தெய்வம் நீ. உனக்கு வணக்கம்” என்று சொல்லி குனிந்து என் கால்களைத் தொட்டு வணங்கினான்.

நான் கண்ணீருடன் அவனைத் தழுவிக்கொண்டு “சென்று வா என் மகனே, மகாதர்மனின் காலடியில் உன் அழலெல்லாம் அமுதமாகட்டும்” என்றேன்.

நிழல்களான ஆபிசாரனும் சக்ரவாகியும் சூக்ஷ்மதருவும் அவனை முத்தமிட்டு முத்தமிட்டு வழியனுப்பினர். அவன் கைநீட்டி அந்த சிற்பத்தின் காலடியை தொட்டான். ஒளி குவிவதுபோல அவன் ஒரு புள்ளியாக மாறி அதில் சென்று மறைந்தான். அச்சிற்பத்தை நீ எப்போதாவது பார்க்கலாம், அதில் வலது எல்லையில் கீழிருந்

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on July 02, 2025 11:34

வேதாசலத்துக்கு விருது- கடிதம்

பேரன்பிற்குரிய ஜெயமோகன் அவர்களுக்கு

    இவ்வருடம் 2025 ஆம் ஆண்டுக்கான தமிழ் விக்கி தூரன் விருது பெறும் தொல்லியல் ஆய்வாளர் வெ. வேதாசலம் அய்யாவுக்கு என் வாழ்த்துக்கள். போன வருட தூரன் விருது நிகழ்விலே சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டிருந்தவிர் என்ற முறையில் நம் நண்பர்களுக்கு ஏற்கனவே அறிமுகம் ஆகி இருந்தவர்தான், ஆனாலும் இவ்வருட விருது அவரை மையத்தில் நிறுத்தி கவனம் குவிய வழி வகுத்துள்ளது.

  தமிழ் விக்கி தூரன் விருது அறிவிப்பு தளத்தில் வெளியானதும் வேதாசலத்தை பற்றி தமிழ் விக்கியில் பார்த்தேன். தமிழ் நாட்டில் அதிக சர்ச்சைகளுக்கு உள்ளான கீழடி ஆய்வில் முதல் கட்டங்களில் அவர் பணியாற்றி இருக்கிறார் என்று தெரிந்தது. மதுரையை சுற்றியுள்ள சமணர் படுக்கைகள் பற்றி முதன் முதலில் ஆய்வு செய்து வெளிப்படுத்தியவர் என்றும் தெரிந்து கொண்டேன்.

  என் கல்லூரி காலத்தில் எழுத்தாளர் முத்துகிருஷ்ணன் நடத்திய ‘பசுமை நடை‘ யில் பங்குபெற்று மாதம் ஒரு மலை என்று சென்று மதுரையை சுற்றி இருக்கும் மலைகளில் இருக்க கூடிய சமணர் படுக்கைகள்,தொல்லியல் குகை ஓவியங்கள் என்று பார்த்து வந்திருக்கிறேன். தொல்லியல் ஆய்வாளர் சாந்தலிங்கமும் எங்களுடன் வந்து ஒவ்வொன்றையும் விளக்கி கூறுவார். வேதாசலம் அய்யாவின் ஜூனியர் தான் சாந்தலிங்கம் என்று போனில் வாழ்த்துக்கூறும்போது வேதாசலம் ஐயா சொன்னார்.

   தமிழ் விக்கியில் அவரை பற்றி படிக்கும் பொது என் பொட்டில் அறைந்த விஷயம், அவர் மதுரையில் என் வீட்டுக்கு அருகில் குடி இருப்பவர் என்பது தான் ( அவர் மதிச்சயம் , நான் கரும்பாலை). வீட்டுக்கு அருகிலேயே என் காலகட்டத்தின் முக்கியமான ஒரு ஆய்வாளர் வாழ்ந்து கொண்டிருந்திருக்கிறார், வழக்கம்போல உங்கள் மூலமே தெரிய வருகிறது. போன் பண்ணி வாழ்த்து கூறினேன், என்னையும் குடும்பத்தையும் பற்றி அன்புடன் விசாரித்தார். ஊருக்கு வரும்போது பார்த்து பேசி வணங்கி வரவேண்டும். அதற்க்கு முன் அவர் புத்தகங்களை வாங்கி வாசித்துவிடவேண்டும்.

இலக்கியத்தில் தோய்ந்திருக்க கற்றுத்தந்த ஆசானின் பாதம் வணங்கி

சதீஷ்குமார்

தென்கொரியா

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on July 02, 2025 11:33

அருப்புக்கோட்டை செல்வம்

அருப்புக்கோட்டை செல்வம் விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த சிறார் படைப்பாளிகளில் ஒருவராகவும், சிறார் பாடலாசிரியராகவும் அறியப்படுகிறார்.

அருப்புக்கோட்டை செல்வம் அருப்புக்கோட்டை செல்வம் அருப்புக்கோட்டை செல்வம் – தமிழ் விக்கி
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on July 02, 2025 11:33

குருபூர்ணிமா நிகழ்வு

பள்ளிகளில் ஆசிரியர்களின் கால்களை கழுவி வழிபடுவது போன்ற சடங்குகள் நிகழ்கின்றன. இந்த வகையான மூடநம்பிக்கைகளை இந்த நிகழ்வின் வழியாக ஊக்குவிக்கக் கூடாது என்னும் எண்ணம் எனக்கெல்லாம் உள்ளது.

குருபூர்ணிமா நிகழ்வு

 

A particular idea amused me. You said writing a novel is the best way to strengthen our skill in language. I thought if I wanted to write a novel in English, I should be well versed in English; you said the opposite.

Writing to learn

https://www.manasapublications.com/manasalitprize

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on July 02, 2025 11:30

July 1, 2025

ஏன் மேலையிசையை தெரிந்துகொள்ள வேண்டும்?

நாம் அறிவார்ந்த பயிற்சியின் ஒரு பகுதியாக இசையை எண்ணுவதில்லை. அது ஒரு கலை என்றும் , ஆன்மிகமானது என்றும் நினைக்கிறோம். ஒருவகையில் அது உண்மை. ஆனால் மேலைநாட்டு இசை அங்குள்ள இலக்கியத்துடனும், விரிந்த அளவில் அதன் பண்பாட்டுடனும் பிரிக்கமுடியாத உறவு உள்ளது. அதை அறியாமல் மேலைநாட்டுப் பண்பாட்டை அறிய முடியாது. மேலைநாட்டுப் பண்பாட்டை அறியாதவர் சமகால சிந்தனையையும் அறியாதவரே.

 

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on July 01, 2025 11:36

கஞ்சன்ஜங்காவின் காலடியில்…

காவியம் எழுதி முடித்ததுமே உருவான ஆழ்ந்த விடுதலை தொடர்ச்சியான தூக்கத்தை உருவாக்கியது. தொடர்ந்து பயணங்களை முன்னரே திட்டமிட்டிருந்தமையால் அதைத்தொடர்ந்து பலநாட்கள் நீடிக்கும் ஆழ்ந்த செயலின்மையில் இருந்து தப்பித்துக்கொண்டேன். சென்ற ஜூன் 7 முதல் தொடர்ச்சியாக பயணங்களிலேயே இருக்கிறேன். எங்கெங்கே இருந்தேன் என டைரியில் பார்க்கையில் எனக்கிணையான பயணங்களை விற்பனைப் பிரதிநிதிகள்தான் செய்கிறார்கள் என்று தோன்றியது.

முன்பு விஷ்ணுபுரம் , பின் தொடரும் நிழலின் குரல், கொற்றவை எழுதிமுடித்தபின் அந்த செயலின்மையை அடைந்து, அதன் இனிய இருட்டில் அழுந்தி பல நாட்களை செலவிட்டிருக்கிறேன். உண்மையில் அது ஒரு நாண் தளர்ந்த நிலை. அதில் ஒரு சுயவதை உண்டு, அது இன்பமானதும்கூட, ஆனால் அழுத்தி அழித்துவிடக்கூடியது. நிறைய படைப்பாளிகள் ‘எழுத்தாளர் அகத்தேக்கம்’ நிலைக்குச் செல்ல ஒரு படைப்புக்குப் பின் உருவாகும் தளர்வு முக்கியமான காரணமாக இருந்துள்ளது.

ஏனென்றால் பொதுவாக ஒரு படைப்பு முடியும்போது ‘வென்றோம்’ என்னும் பெருமிதம் உருவாகும். சில நாட்களிலேயே ‘இன்னும் இல்லை’ என்று தோன்ற ஆரம்பிக்கும்.அதன் பின் அப்படைப்பில் இருந்து வெளியேற ஆரம்பிப்போம். அதன் குறைகள் மட்டுமே கண்ணுக்குப் படும். அது உளச்சோர்வை அளிக்கும். அவ்வுளச்சோர்வே அடுத்த படைப்பை நோக்கிச் செல்வதற்கான வழி. அனேகமாக எல்லா இலக்கியவாதிகளும் இதை அடைவதை கண்டிருக்கிறேன். ஆனால் பாலகுமாரன், சுஜாதா உட்பட எந்த வணிக எழுத்தாளரும் இதை அடைந்ததில்லை என்பதையும் சொல்லியிருக்கிறார்கள்.  

வெண்முரசு முடியும்போது கோவிட் காலகட்டம். ஆகவே மொத்தமாக இருள் வந்து மூடிவிடும் என்னும் எண்ணமிருந்தமையால் அப்போதே அடுத்த புனைவுலகுக்குள் நுழைந்து சிறுகதைகளை எழுதத் தொடங்கிவிட்டிருந்தேன். இன்று பார்க்கையில் கோவிட் காலகட்டத்தில் எழுதப்பட்ட அந்த கதைகளே அண்மைக்காலத்தில் மிக அதிகமாக வாசிக்கப்பட்ட படைப்புகள், மிக அதிகமாக மொழியாக்கம் செய்யப்பட்ட படைப்புகள் என தெரிகிறது. அவை இந்தியாவெங்கும், உலகமெங்கும் சென்றுகொண்டிருக்கின்றன.

கிருஷ்ணன் ஒரு சிக்கிம் பயணத்தை இரண்டு மாதம் முன்னரே திட்டமிட்டிருந்தார். ஆனால் செல்ல உத்தேசித்திருந்த இரண்டு பனிமலைச் சமவெளிகளுக்குச் செல்ல முடியவில்லை.தொடர்மழையும் நிலச்சரிவும் பாதைகளை மூடிவிட்டன. ஆகவே மாற்றுத்திட்டத்தை வகுத்து டார்ஜிலிங் சென்று அங்கிருந்து நேபாளத்தைக் கடந்து ஒருநாள் தங்கிவிட்டு சிக்கிம் செல்ல கிருஷ்ணன் முடிவெடுத்தார். நான் இணைந்துகொண்டேன். தொழிலதிபர் அரங்கசாமி, கல்வித்தந்தை சக்தி கிருஷ்ணன், தாளலயசிம்மம் ஓசூர் பாலாஜி மற்றும் எங்கள் குழுவின் உயிருள்ள செயற்கைநுண்ணறிவான திருப்பூர் ஆனந்தகிருஷ்ணன் ஆகியோர் இணைந்துகொண்டனர்.

நான் சென்னையில் மூன்றுநாட்கள் இருந்தேன். அங்கிருந்து ஒருநாள் முன்னரே, ஜூன் 25 புதன் மாலையிலேயே, பாக்டோக்ரா சென்று அங்கே அஞ்சலி என்னும் தங்கும்வீட்டில் இரவு தங்கியிருந்தேன். பாக்டோத்ரா ஒரு விமானநிலையத்தை ஒட்டி வளர்ந்து வரும் நகரம். முன்பு வடகிழக்குக்கான முதன்மை விமானநிலையம் கல்கத்தாதான். இப்போது பாக்டோத்ரா. இந்த விமானநிலையத்தை இன்றைய மைய அரசின் ஒரு கொடை என ஐயமின்றிச் சொல்லலாம். வடகிழக்கின் மொத்தப் பொருளியலையும் பலமடங்கு மேம்படுத்தியிருக்கிறது இது.

பாக்டோக்ரா ஒரு விமானப்படை விமானநிலையமாக இருந்தது. 2010 அதை சிவில் பயணங்களுக்கும் பயன்படுத்தலாயினர். 2017 முதல் பொதுப்பயணத்திற்குரிய வணிக விமானநிலையமாகியது. 2022ல் அதை விரிவாக்கி இந்தியாவின் முக்கியமான விமானநிலையமாக ஆக்கினர். இன்று தொடர்ச்சியாக விமானங்கள் வந்திறங்குகின்றன. இந்தியாவின் எல்லா நகர்களிலிருந்தும் அங்கே விமான இணைப்பு உள்ளது.இப்படி ஒரு விமானநிலையத்தை உருவாக்கும் எண்ணம் ஏன் முன்னர் தோன்றவில்லை என்பதே ஆச்சரியம்தான்.

பாக்டோத்ரா இன்னும் ஓராண்டில் முற்றாக மாறியிருக்கும். மிகப்பெரிய ஆறுபட்டைச் சாலை வடகிழக்கை இணைக்கும்படி போடப்படுகிறது. அதன் பணிகள் நிகழ்வதனால் ஊரே அகழ்விடம் போல் உள்ளது. அத்துடன் மேற்குவங்கத்திற்கே உரிய வறுமை, அதன் விளைவான தூய்மையின்மை. தலைக்குமேல் கட்டப்பட்டுக்கொண்டிருக்கும் சாலைக்கு அடியில் புழுதியும் குப்பையும் குவிந்திருக்க அங்கே ஏராளமான டீக்கடைகள். அவற்றை நடத்துபவர்கள் அங்கேயே கயிற்றுக்கட்டில், துணிமூட்டைகள் ஆகியவற்றுடன் குடியிருக்கிறார்கள். 

மேற்குவங்கத்தவர் போர்நிகழும் நாட்டின் மக்கள்போல இந்தியாவெங்கும் அகதிகளாகச் சென்றுகொண்டிருக்கின்றனர். கன்யாகுமரி செங்கற்சூளைகள் முழுக்க அவர்கள்தான் கடும் பணிகளைச் செய்கிறார்கள். முன்பு ஒரு ஆட்சியர் அவர்களின் குழந்தைகள் படிப்பதற்காக இங்கே ஆரம்பப்பள்ளியில் வங்கமொழியை அறிமுகம் செய்ததுண்டு. கேரளத்தில் அரைக்கோடி மேற்குவங்க மக்கள் வேலைக்காரர்களாக இருக்கிறார்கள் என ஒரு கணக்கு. பாக்டோத்ராவிலும் மேலே டார்ஜிலிங்கிலும் அவ்வாறு குடியேறி தெருக்களில் குப்பையோடு குப்பையாக வாழும் மக்கள் பல ஆயிரம்பேர்.

இன்று பயணிகள் எவருமே இந்தியாவிலேயே மிகமிகமிக மோசமாக நிர்வாகம் செய்யப்படும் மாநிலம் மேற்குவங்கம் என ஐயமின்றிச் சொல்லிவிடமுடியும். முன்பு, ஜோதிபாஸு ஆட்சியில் அது மிகமிக மோசமான மாநிலமாக இருந்தது. மேற்குவங்கத்தவருக்கு ஒரு மனநிலை உண்டு. கல்கத்தாவை ஒட்டி உயர்குடியினர் (பெரும்பாலும் பிராமணர்கள்) உருவாக்கிய ஐரோப்பியக் கலப்புகொண்ட ஒரு பண்பாடு உண்டு. அதைத்தான் நாம் வங்கப்பண்பாடு என அறிந்திருக்கிறோம். பங்கிம் சந்திரர் முதல் இன்று அமிதவ் கோஷ் வரை அந்த பண்பாட்டின் உருவாக்கங்கள். எஞ்சிய வங்கம் அன்றுமின்றும் வறுமையும் அறியாமையும் அழுக்கும் நிறைந்த நரகம். அதைப்பற்றி மார்க்ஸியர்களும் கவலைப்படவில்லை. இன்றைய எதிர்மார்க்ஸியர்களும் பொருட்படுத்தவில்லை.

மம்தா பானர்ஜிக்கும் படித்த வங்காளிகளுக்கு இருப்பதுபோல அந்த பத்ரலோக்பண்பாடு பற்றிய பெருமிதம் உண்டு. எஞ்சிய வங்கம் அவர்களுக்குப் பொருட்டே அல்ல. வங்கத்தில் எங்கும் அரசு என ஒன்று உள்ளது, நிர்வாகம் என ஒன்று நடைபெறுகிறது என்பதற்கான தடையத்தையே காணமுடியாது. நகரங்களில் பற்பல ஆண்டுகளாக அள்ளப்படாத குப்பைகள், உடைந்து சிதிலமான சாலைகள். பொதுப்போக்குவரத்து என்பது நம்பவே முடியாத அளவு சீரழிந்துள்ளது. தென்மாநிலங்களில் இருந்து வருபவர்களுக்கு ஒவ்வொரு கணமும் ஒவ்வாமையை அளிக்கும் மாநிலம் இது. உண்மையில் இன்றைய தமிழகத்தில் கிராமப்புற வறுமைகூட மறைந்துவிட்டிருக்கிறது.

ஜூன் 26 வியாழக்கிழமை பின்காலையில் நண்பர்கள் பெங்களூரில் இருந்து கிளம்பி வந்து சேர்ந்தார்கள். டார்ஜிலிங்குக்கு டாக்ஸியில் கிளம்பினோம். நான் டார்ஜிலிங் நகருக்கு பலமுறை வந்திருக்கிறேன், சென்ற ஆண்டுகூட வந்தேன். இம்முறை வந்ததும் அதே இடங்களுக்குத்தான். ஆனால் இப்போது மழைக்காலம். மலைச்சரிவுகள் முழுக்க பசுமை செறிந்திருந்தன. மழை சன்னமாகப் பெய்துகொண்டே இருந்தது. செல்லும் வழியில் ஒரு விடுதியில் ‘ஆலுபராத்தா’ சாப்பிட்டோம்.

செல்லும் வழியில் சித்ரே என்னும் பௌத்த மடாலயத்திற்குச் சென்று அங்கிருந்த மாபெரும் அமிதாபபுத்தரைப் பார்த்தோம். (சித்ரே மடாலயம்) கடல்மட்டத்தில் இருந்து 8340 அடி உயரத்திலுள்ளது இந்த இடம். பதினைந்து அடி உயரமான அமிதாப புத்தர் (புத்தமைத்ரேய) சிலை கையில் அமுதகலத்துடன் அமர்ந்திருந்தது. சுற்றிலும் மழைமுகில் மூடியிருந்த குளிர்ந்த மாலைநேரம். மலைக்குமேல் ஏறியதுமே வரும் ஒரு வகையான மண்டைக்கனம்- அல்லது எடையின்மை. வெள்யே மழையிருட்டால் இடைவிடாத சீவிடுகளின் ரீங்காரம். அந்த சுருதி மண்டைக்குள்ளும் ஒலித்துக்கொண்டிருந்தது.

நேபாள எல்லையில் இருந்த டும்லிங் என்னும் ஊருக்குச் சென்று அங்கே ஒரு விடுதியில் தங்கினோம். திபெத்திய வம்சாவளியினரான குருங் என்னும் மக்கள் இங்கே வாழ்கிறார்கள். மொத்தமே ஐம்பது வீடுகள் மட்டும் கொண்ட ஊர். இணையம் வந்தபின் பயணிகள் வரத்தொடங்கியிருப்பதனால் கொஞ்சம் விடுதிகள் உருவாகியுள்ளன. இங்கிருந்து கஞ்சன்ஜங்கா நன்றாகத் தெரியும். குளிர்காலத்தில் மிகச்சிறப்பான காட்சியாக இருக்கும். டார்ஜிலிங்கில் இருந்து மேக்மா என்ற ஊருக்குச் சென்று ராணுவ அனுமதி பெற்று நேபாளத்திற்குள் நுழைந்து அங்கே செல்லவேண்டும்.  

விடுதிகளிலேயே ஏழ்மை, வசதியின்மை எல்லாம் தெரிந்தது. நாங்கள் தங்கிய விடுதியை அப்போதுதான் கட்டிக்கொண்டிருந்தனர். இந்தப் பருவம் சுற்றுலாவுக்குரியது அல்ல. நாங்கள் தங்கிய விடுதி தவிர எங்குமே எவருமே இல்லை. ஒரே ஒருவர் இரண்டு பெரிய பசுக்களை மேய்த்துக்கொண்டு சென்றார். அந்த ஊரிலேயே ஒரே சுற்றுலாக்குழு நாங்கள்தான். நாங்கள் உணவு அருந்த ஒரே ஒரு சிறிய உணவகம். பல விடுதிகளை திறக்கவே இல்லை. ஆனால் உணவு நன்றாகவே இருந்தது.

இரவில்தான் அங்கே சென்று சேர்ந்தோம். இரவு ஏழரைக்கே இருட்டிவிட்டது. ஆனால் காலை ஐந்து மணிக்கே நல்ல வெளிச்சம் வந்துவிடும். காலையில் கஞ்சன்ஜங்கா ஒளியுடன் முகில்நிறைந்த வானில் எழுந்து தெரிந்தது. அதைப் பார்த்தபடி ஒரு நடை சென்றோம். எங்காவது டீ கிடைக்குமா என தேடி அலைந்தோம். ஒரு கடையில் டீ போட்டு தர ஒப்புக்கொண்டார்கள். இங்கே கறுப்பு டீ அருமையாக போடுகிறார்கள்.

இந்தவகையான பயணத்தில் காட்சியனுபவம் என ஒன்று உண்டு. குறுகிய நேரத்திலேயே நாம் அங்கே பலவற்றை உள்வாங்கிக் கொள்கிறோம். ஆனால் இந்தவகையான அரைநாள் ஒருநாள் பயணங்கள், இடங்களைப் பார்த்துக்கொண்டே செல்வது, மேல் நான் ஆர்வமிழந்துவிட்டேன். ஓர் ஊரில் சில நாட்கள் தங்கி அந்த வாழ்க்கையை அறிவதுதான் ஒரு படி மேல் என்று தோன்றுகிறது. முதல் விஷயம், அங்குள்ள ‘விசித்திரங்கள்’ நமக்குப் பழகி, கொஞ்சம் சலிப்பு தட்ட ஆரம்பிக்கவேண்டும். அப்போதுதான் நுணுக்கமான விஷயங்கள் உள்ளே நுழைகின்றன. இரண்டு, நம் ஊரும் நம் அடையாளங்களும் கரைந்து அழிந்து நாம் அங்கே ‘வாழ’ ஆரம்பிக்கவேண்டும்.

மதியம் டார்ஜிலிங் வந்தோம். அங்கே நீராவி இயந்திரம் பொருத்தப்பட்ட சிறிய ரயிலில் ஒரு பயணம் திட்டமிட்டிருந்தார் கிருஷ்ணன். எதையும் அனுபவித்துப் பார்ப்பது என்னும் எண்ணம் கொண்டவர் அவர். அது ஒரு வதை அனுபவம். பலமணிநேரம் அந்த குட்டி ரயில் நிலையத்தில் காத்திருந்தோம். தாமதமாகிக்கொண்டே இருந்தது. 

அப்போது பேசிக்கொண்டிருந்தபோது நான் சரத்சந்திர தாஸ் பற்றிச் சொன்னேன். அவர் ஒரு வங்காள அறிஞர். திபெத்திய பௌத்தம் பற்றிய தொடக்ககால ஆய்வுகளைச் செய்தவர், திபெத் மொழி–ஆங்கில அகராதியை வெளியிட்டவர். ஆனால் அவர் ஓர் உளவாளி. திபெத்துக்குச் செல்லவேண்டும் என்னும் அவருடைய ஆசையை ஆங்கிலேயர் பயன்படுத்திக் கொண்டனர். அவர் திபெத்துக்குச் செல்லவேண்டிய எல்லா ஏற்பாடுகளையும் செய்தனர். (ஓர் ஒற்றரின் கதை)

அன்றைய திபெத் வெளியுலகுக்கு முழுமையாக மூடப்பட்ட நாடு. நிலப்பரப்பை வைத்துப் பார்த்தால் அது இன்றைய இந்தியாவைவிட பெரியது – இன்று அதன் பெரும்பகுதி சீனாவில் இருக்கிறது. ஆனால் மிகக்குறைவான மக்கள்தொகை. மதமும் அரசும் ஒன்று. தலாய்லாமாதான் அரசர். வாழ்வும் வழிபாடும் ஒன்றுதான். ஆனால் திபெத் பழங்கால சீனாவுக்கும் இமையமலை நாடுகளுக்குமான வணிகப்பாதைகளை ஆட்சி செய்தது. ஆகவே நிறைய செல்வம் அங்கிருந்தது. அதைச் சூறையாட ஆங்கிலேயர் விரும்பினர்.

சரத்சந்திர தாஸ் ஒரு பௌத்த துறவியாக பயிற்சி எடுத்துக்கொண்டார். பிரிட்டிஷார் உதவியுடன் திபெத்துக்குள் ஊடுருவினார். அங்கே துறவியாக இருந்து திபெத்திய மொழி கற்றுக்கொண்டார். திபெத்திற்குச் செல்லும் வழிகளை அறிந்து வரைபடமாக தயாரித்துக்கொண்டார். அவற்றை பிரிட்டிஷாருக்குக் கைமாறினார். அவற்றைக் கொண்டு பிரிட்டிஷார் கர்னல் யங் ஹஸ்பெண்ட் தலைமையில் படைகொண்டு சென்று திபெத்தை அழித்தனர், ஏழு டன் தங்கம் கொள்ளையடிக்கப்பட்டது. ஆன்மிகமண்ணான திபெத் அதன்பின் மீளவே இல்லை.

ஐம்பதுகளில் சீனா திபெத்தை கைப்பற்றி முழுமையாக அழித்தது. இன்று அந்த திபெத்தியப் பண்பாடு இந்தியாவில் மட்டுமே நீடிக்கிறது. திபெத் எழுபத்தைந்தாண்டுகளாக சுதந்திரத்துக்காகப் போராடிக்கொண்டிருக்கிறது. பலநூறுபேர் உயிர்த்தியாகம் செய்துள்ளனர். முதல்சூறையாடலைச் செய்தது பிரிட்டிஷார் என்பதை இன்றைய ‘லிபரல் மேற்கு’ வசதியாக மறைக்கிறது. பிரிட்டிஷார் கைப்பற்றியிராவிட்டால் ரஷ்யா கைப்பற்றியிருக்கும், அவர்களுக்கு அந்த திட்டங்கள் இருந்தன என கதைகளைப் புனைகிறது .(ரஷ்யா அன்று எந்த நாட்டின்மேலும் படையெடுக்கும் நிலையிலேயே இல்லை. அவர்கள் சீன எல்லையையே கடக்கவில்லை) .

திபெத்திய ஆக்ரமிப்பை நடத்தியது சீனா என்பதனால் இங்குள்ள முற்போக்கினர் அந்த ஆக்ரமிப்பை முற்போக்கான செயல் என்று நியாயப்படுத்தி, திபெத்தியர்களின் விடுதலைப்போராட்டத்தை மதவாதமாக முத்திரையடிக்கின்றனர். ‘ஒரு தனித்துவம் கொண்ட பண்பாட்டுக்கு, தங்கள் நிலத்தில் தங்கள் மரபை தக்கவைத்துக்கொண்டு வாழ்வதற்கான உரிமை உண்டா?’ என்ற கேள்வியை அவர்கள் எதிர்கொள்வதில்லை. உலகம் திபெத்தை அழித்தது, தன் மாபெரும் பண்பாட்டுமரபு ஒன்றை உலகம் இழந்தது என்பதே உண்மை.

சரத் சந்திர தாஸ் உலகின் மிகச்சிறந்த ஆட்சியாளர்கள் பிரிட்டிஷார் என நம்பினார். திபெத் அங்குள்ள மக்களை கொடிய வறுமையில் அடிமைகளாக வைத்துள்ளது என்னும் பிரிட்டிஷ் பொய்ப்பிரச்சாரத்தை ஏற்றுக்கொண்டார். பிறகு உண்மை தெரிந்து திபெத் ஆதரவாளராக ஆனார். கர்னல் ஆல்காட் , ரோரிச் போன்ற திபெத்திய ஆய்வாளர்களுக்கு உதவினார். ஆனால் அவர் ஒரு துரோகி என்னும் சித்திரமே இன்றுள்ளது. அவர் அறியாமல் துரோகமிழைத்தார் என்பது உண்மை, ஆனால் துரோகம் துரோகம்தான், அவர் துரோகி என்பது மறுக்கமுடியாததுதான்.

நான் அவரை மையமாக்கி ஒரு நாவல் எழுதும் எண்ணம் கொண்டிருந்தேன். கடைசிக்காலத்தில் வங்கத்தில் அவர்மேல் கசப்பு உருவானதனால் சரத் சந்திர தாஸ்  அன்று வெள்ளையர் வாழ்ந்த இடமாகிய டார்ஜிலிங் வந்து அங்கே லாஸா வில்லா என்னும் வீட்டை கட்டி அங்கே குடியிருந்தார். அவருடைய வீட்டை தேடி 1985  வாக்கில் வந்தேன். அப்போது அவருடைய இல்லம் என இடிந்த ஒரு கட்டிடத்தை எவரோ காட்டினர். மீண்டும் இருமுறை தேடினாலும் அவருடைய வீட்டை கண்டுபிடிக்க முடியவில்லை.

இம்முறை ரயிலுக்காக காத்திருக்கும் பொழுதில் அந்த வீட்டை தேடிச்செல்லலாம் என்று தோன்றியது. ரயிலடியில் இருந்து இரண்டு கிமீ தொலைவில்தான். ஆனால் உள்ளூர் உதவியின்றி அதைக் கண்டுபிடிக்க முடியாது. ஒருவர் நாங்கள் சொன்னதை புரிந்துகொண்டு வீட்டைக் காட்டினார். அந்த இல்லம் பழுது பார்க்கப்பட்டு அதில் எவரோ குடியிருந்தனர். அதை வெளியே நின்று பார்த்துவிட்டு திரும்பி வந்தேன்.

 

நீராவி ரயில் ஒருவழியாகக் கிளம்பியபோது மிகப்பெரிய கரும்புகைக் குவியலை வானில் கக்கிக்கொண்டே பலத்த ஓசையுடன் சென்றது. இருபக்கமும் நெரிசலான, அழுக்கான, தெருக்களில் குப்பைமலைகளும் கடைகளும். இந்தியாவின் மலைத்தங்குமிடங்களில் டார்ஜிலிங் அளவுக்கு அசிங்கமான இன்னொரு நகர் இல்லை. குப்பைகள் மட்டும்தான் எங்கும். இடுங்கலான தெருக்களின் வழியாக ரயில் சென்றது. குமட்டல் மட்டுமே எஞ்சியது. பாதியில் இறங்கி காரில் ஏறி சிக்கிம் செல்லும் பயணத்தை தொடர்ந்தோம்.

சிக்கிம் வழியில், சிலிகுரிக்கு கொஞ்சம் அப்பால், மலையடிவாரத்தில் லாமட்டா (Lamahatta) ஊரில் அறைபோட்டிருந்தோம். லாமஹட்டா என்றால் லாமாவின் குடிசை. இங்குள்ள பழமையான புத்த மடாலயம் தொடக்ககாலத்தில் பயணிகளை கவர்ந்திருக்கிறது. இப்போது இங்கே இரும்புக் கம்பிகளில் மலைச்சரிவில் சரிந்திறங்குவது உள்ளிட்ட பல சுற்றுலா செயல்பாடுகள் உள்ளன.

இம்முறை நல்ல அறை. வசதியான தங்குமிடம். உணவும் நன்றாக இருந்தது. அந்த உணவகத்துக்கு ஒரு கதையை உருவாக்க முயன்றிருந்தனர். லால்மோகன் என்பவர் மலையின் அழகை ரசிக்க வங்கத்தில் இருந்து அங்கே வந்தாராம். அவர் அங்கே ஒரு உணவகத்தை தொடங்கினார். அவருடைய பேரர்கள் இப்போது அதை நடத்துகிறார்களாம். பனையோலைப்பொருட்களாலான முறம், விசிறி போன்றவற்றால் அலங்கரிக்கப்பட்ட அழகான உணவகம். அழகான பெண்களால் உணவு பரிமாறப்பட்டது.

அங்கே ஓர் உயிரியல் பூங்கா இருந்தது. வெள்ளையர் காலத்திலேயே உருவாக்கப்பட்டது.செங்குத்தாக வான் நோக்கி  எழுந்த மிகப்பெரிய பைன் மரங்கள் செறிந்த சோலை. அதன் மலைச்சரிவில் ஏறிச்சென்றால் ஒரு தடாகம். காலையில் ஒரு நடை சென்றோம். 

காலை உணவுக்குப் பின் சிக்கிம் நோக்கிச் செல்லத் தொடங்கினோம்.  டார்ஜிலிங் ஒவ்வாமையை உருவாக்கினாலும் பெய்துகொண்டே இருந்த மழை, குளிர், பசுமைபொலிந்த மலைச்சரிவுகளுக்கு அப்பால் வெள்ளிமலைமுடி ஆகியவற்றுடன் நண்பர்கள் ஒருவரை ஒருவர் கேலிசெய்து சிரித்துக்கொண்டும், கல்வி மற்றும் இலக்கியம் சார்ந்து இடைவிடாது விவாதித்துக்கொண்டும் சென்றது உளம்நிறையச் செய்யும் அனுபவமாக அமைந்தது.

(மேலும்)

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on July 01, 2025 11:35

Jeyamohan's Blog

Jeyamohan
Jeyamohan isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow Jeyamohan's blog with rss.