Jeyamohan's Blog, page 66

July 1, 2025

காவியம் – 72

கதைசொல்லும் பிசாசாகிய கானபூதி என்னிடம் சொன்னது. பகதி கண்ணீர் வழிந்து நெஞ்சின்மேல் உதிர, புதர்களை வகுந்தபடி, கூழாங்கற்கள் கால்பட்டு தெறிக்க, விம்மலோசையும் மூச்சிரைப்பும் கலந்து நெஞ்சு விம்ம, ஆனந்தனைத் தொடர்ந்து ஓடினாள். அவன் அருகே சென்று நின்று நெஞ்சில் கைவைத்து அழுத்தியபடி “நான் சாகவேண்டும் என்பதுதான் உங்கள் எண்ணமா?” என்று கேட்டாள். “அது உங்கள் ஆணை என்றால் அதை இப்போதே நிறைவேற்றுகிறேன்.”

”நான் எவருக்கும் ஆணையிடுவதில்லை” என்று ஆனந்தன் சொன்னான். “நான் எனக்கு மட்டுமே ஆணையிட்டுக்கொள்கிறேன். சாவது மிக எளிது, ஆனால் சாவினால் எதுவும் முடிவடைவதில்லை. சாவு என்பது செடியை வெட்டுவதுபோல. வேரிலிருந்து அது மீண்டும் முளைக்கும். செடி காய்த்து கனிந்து விதைகளாகி பரவிவிடவேண்டும். அப்போதுதான் வேர் நிறைவடைந்து மண்ணுக்கு மீள்கிறது. கர்மச்சுழற்சியை முடிக்கும் ஆணை ஒவ்வொரு உயிருக்கும் உள்ளது.”

“நான் என்ன செய்யவேண்டும்?” என்று அவள் கேட்டாள்.

“நீ மண். இயற்கையென்றே உன் பெயர். திரும்பிச்செல். உகந்த ஆணை மணந்துகொள். மடிநிறைய குழந்தைகளைப் பெற்றுக்கொள். உன் குழந்தைகளை இங்கே நிறைத்துவிட்டு முதியவளாகி உதிர்ந்து மண்ணில் சேர்ந்துவிடு. நீ சாகும்போது உன் முலைகளில் நீ கொடுக்காத ஒரு சொட்டு பால்கூட எஞ்சக்கூடாது.”

”என்னால் இன்னொரு ஆண்மகனை நினைக்க முடியாது. இது வெறும் காமமோ மயக்கமோ அல்ல என்று உறுதியாகவே தோன்றுகிறது” என்று அவள் சொன்னாள்.

“இதற்கு நான் ஒன்றும் சொல்லமுடியாது…” என்றபின் ஆனந்தன் திரும்பி நடந்தான்.

“நான் உங்களுடன் சேர்ந்துகொள்ளலாமா?” என்று அவள் அவனை தொடர்ந்தபடி கேட்டாள்.

“கூடாது. என் மரபில் பெண்களுக்கு இடமில்லை. நீ என்னுடன் வந்தால் என்னை பிழையாக மற்றவர்கள் நினைக்கக்கூடும்” என்று ஆனந்தன் சொன்னான்.

“நான் உங்கள் காலடிகளை தொடர்ந்துகொண்டேதான் இருப்பேன். என்னால் வேறு எந்த வகையிலும் வாழமுடியாது”

“அவ்வாறென்றால் எனக்குப்பின்னால் ஆயிரம் காலடிச்சுவடுகளுக்கு அப்பால்தான் நீ வரவேண்டும்”

”அது போதும்” என்று அவள் சொன்னாள். “அவ்வாறே வருகிறேன்.”

கானபூதி என்னிடம் சொன்னது. அவ்வாறாக ஆனந்தன் அவளைவிட்டு சென்றான். அவள் எப்போதும் அவனுடைய ஆயிரத்தொன்றாவது காலடியிலேயே இருந்தாள். அவன் செல்லுமிடங்களிலெல்லாம் அவள் தொடர்ந்தாள். அவன் அவள் வருவதை அறிந்திருந்தான், ஆனால் ஒரு முறைகூட அவளைத் திரும்பிப் பார்க்கவில்லை. ஆனால் நீண்டநாட்களுக்குப் பின் பௌத்த சங்கத்தில் பெண்களையும் சேர்க்கவேண்டும் என்று அவன் தன் ஆசிரியரிடம் மன்றாடிக்கேட்டு வென்றான். கௌதம சித்தார்த்தரின் செவிலித்தாய் கிரிஷா கௌதமி முதல் பிக்ஷுணியாக ஆனாள்.

இரண்டாவது பிக்ஷுணி யார் என்ற கேள்வி எழுந்தது. கௌசாம்பியில் சாலவனத்தில் மரத்தடியில் போடப்பட்ட பீடத்தில் புன்னகையுடன் அமர்ந்திருந்த ததாகதர் தன் மாணவராகிய தேவதத்தனிடம் சொன்னார். “வெளியே சென்று ஆனந்தனைப் பார். அவன் உன்னைக்கடந்து ஆயிரம் காலடிகளை வைத்தபின் உன் முன் தோன்றுபவளை அழைத்துவா. அவள்தான் இரண்டாவது பிக்ஷுணி.”

அவ்வாறாக பகதி பௌத்த பிக்ஷுணிகளின் சங்கத்தைச் சேர்ந்தவளாகி துவராடை அணிந்து தலைமுண்டனம் செய்துகொண்டாள். ஆனால் அவள் தர்மக் கல்விக்கு வரவில்லை. புத்தரின் ஒரு சொல்லைக்கூட அவள் அறிந்திருக்கவுமில்லை.

அதைப்பற்றி சாரிபுத்தன் ததாகதரிடம் கேட்டான். அவர் புன்னகைத்து, “அவள் ஞானத்தை நோக்கிச் சென்றுகொண்டே இருக்கிறாள்” என்றார்.

சாரிபுத்தன் ”அவள் எப்போது ஞானம் அடைவாள்?” என்றார்.

“அவளிடம் கொடுப்பதற்கு ஒன்றுமில்லாமல் ஆகும்போது” என்று ததாகதர் சொன்னார்.

ததாகதர் பரிநிர்வாணம் அடைந்த இருபதாவது ஆண்டில், தன்னுடைய தொண்ணூற்றாறாவது வயதில், அதே ஃபால்குன மாதம் முழுநிலவு நாளில் ஆனந்தர் நிர்வாணம் அடைந்தார். தன் இறுதி நிகழவேண்டிய இடம் என்ன என்பதை அவர் நூல்களில் ஆராய்ந்தார். எழுதப்பட்ட நூல்களில் எழுதப்படவிருக்கும் நூல்கள் அடங்கியிருக்கும். எழுதப்பட்டவற்றை ஆழ்ந்து வாசிப்பவர் எழுதப்படவிருப்பவற்றை வாசிக்க முடியும். ஆனந்தர் சீன அறிஞரும் பயணியுமான ஃபாக்ஸியான் எழுதிய நூலில் குறிப்பிடப்பட்டிருந்ததன்படி தன் நிர்வாணம் வேசாலியில் ரோகிணி ஆற்றில் நிகழும் என்று அறிந்தார்.

ஆனந்தர் தன் வாழ்க்கையில் ஏழு வாக்குறுதிகளை அளித்திருந்தார். முதல் வாக்குறுதியின்படி மஜ்ஜந்திகர் என்னும் துறவிக்கு மெய்ஞானத்தின் இறுதிச் சொல்லை உரைத்து அவரை பிக்ஷுவாக ஆக்கினார். தன் இறுதிநாளைக் காணும் வாய்ப்பை மகதமன்னர் அஜாதசத்ருவுக்கு அளிப்பதாக சொல்லியிருந்தமையால் அவருக்குச் செய்தி அனுப்பி வரச்சொன்னார்.

ரோகிணி ஆற்றில் இன்னொரு படகில் பயணம் செய்தபடி அஜாதசத்ரு ஆனந்தரின் மெய்நிலைத் தருணத்தைப் பார்த்தார். வேசாலியின் லிச்சாவிகள், கபிலவாஸ்துவின் சாக்கியர், மற்றும் கோலியர் குடியைச் சேர்ந்தவர்கள் ஆகியோர் அவருடைய பரிநிர்வாணத்தைக் காண வந்திருந்தனர். அவர்களுக்கு தன் உடலின் எலும்புகளை அளிப்பதாகச் சொல்லியிருந்தார். அவர்கள் ஆற்றின் இரு கரைகளிலும் கூடியிருந்தார்கள்.

ஆனந்தர் படகில் பத்மாசனத்தில் அமர்ந்து விழிகளை மேலேற்றி தியானத்தில் அமர்ந்து பரிநிர்வாணம் அடைந்தார். அப்போது வானத்தில் ஒரு பொன்னிற மேகம் தோன்றியது. இளமழையும் வெயிலொளியும் கலந்து காற்றும் பொன்னிறமாகியது. மேகங்களில் ஒரு மின்னல் அதிர, பல்லாயிரம் விண்ணுலகப் பளிங்கு மாளிகைகள் தெரிந்து மறைந்தன. “தத்த! தய! தம!” என்று வானம் முழங்கி அதிர்ந்து அடங்கியது.

அவர்கள் அவருடைய உடலை ரோஹிணி நதிக்கரையில் சிதைமூட்டி எரித்தனர். அவருடைய எலும்புகளைப் பங்கிட்டுக் கொண்டார்கள். அவருடைய மண்டையோடு அஜாதசத்ருவுக்கு அளிக்கப்பட்டது. விலா எலும்புகள் லிச்சாவி குலத்தவருக்கும், கையெலும்புகள் சாக்கிய குலத்தவருக்கும், கால் எலும்புகள் கோலியருக்கும் அளிக்கப்பட்டன. அவற்றை கொண்டுசென்று அவர்கள் தங்கள் ஊர்களில் அவருக்கான சைத்யங்களை அமைத்தார்கள்.

நெடுங்காலம் முன்னரே பௌத்த பிக்ஷுணி சங்கத்தின் இரண்டாவது பிக்ஷுணியை அனைவரும் மறந்துவிட்டிருந்தார்கள். அவள் ஒருமுறைகூட எந்த பௌத்த சங்கத்திற்குள்ளும் நுழைந்ததில்லை. எந்த பிக்ஷுக்கூட்டங்களிலும் பங்கடுத்ததில்லை. பெரும்பாலும் எவரும் அவளை பார்த்ததும் இல்லை. கிரிஷா கௌதமி மறையும்போது பிக்ஷுணி சங்கத்தில் பன்னிரண்டாயிரம் பிக்ஷுணிகள் இருந்தார்கள். அவர்கள் பாரதநாடெங்கும் பரவிச்சென்றனர். கடல்கடந்து இலங்கைக்கும் சென்றார்கள். அப்போது பாரதநிலத்தில் மட்டும் எழுபத்திரண்டாயிரம் சைத்யங்களும் பதினெட்டாயிரம் விகாரங்களும் இருந்தன.

பாகதி என்னும் அந்த பிக்ஷுணியின் பெயர் அனைவராலும் மறக்கப்பட்டது. தன்னந்தனியாக, நெடுந்தொலைவை நோக்கிய கண்களுடனும் எப்போதும் கூப்பிய கைகளுடனும் சென்றுகொண்டிருந்த அவளை பைத்தியமாகவே அனைவரும் பார்த்தனர். அவள் தன் கப்பரையில் விழுந்த உணவை உண்டு, வெறுந்தரையில் படுத்து தூங்கினாள். எவரிடமும் ஒரு சொல்லும் பேசவில்லை, எவரையும் விழிதூக்கிப் பார்க்கவுமில்லை.

ஆனந்தர் ரோஹிணி நதியில் படகில் மறைந்த அன்று அதே நதிக்கரையில் ஆயிரம் அடி தொலைவில் அவள் நின்றிருந்தாள். அவர் பத்மாசனத்தில் அமர்ந்தபோது அவளும் பத்மாசனத்தில் அமர்ந்தாள். அவர் பரிநிர்வாணம் அடைவதற்கு ஒரு கணத்திற்கு முன் அவள் பரிநிர்வாணம் அடைந்தாள்.

கானபூதி என்னும் கதைசொல்லும் பிசாசு என்னிடம் சொன்னது. ”அந்த நாளுக்கு முந்தையநாள் இரவு ஒன்று நிகழ்ந்தது. அதை அனைத்துக் கதைகளையும் அறிந்த நான் மட்டுமே அறிந்திருக்கிறேன்.”

அது முழுநிலவுக்கு முந்தையநாள். ஆனந்தர் தங்கியிருந்த சாலவனத்தில் அவருடன் லிச்சாவியில் இருந்தும், கபிலவாஸ்துவில் இருந்தும், மகதத்தில் இருந்தும் வந்திருந்த ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் தங்கியிருந்தனர். அப்பால் ரோகிணியின் மணற்கரையில் அஜாதசத்ருவின் பாடிவீடு அமைந்திருந்தது. அன்று நீண்டநேரம் ஆனந்தர் தன் மாணவர்களுக்கு அறவுரை உரைத்தார். ஒவ்வொருவரையும் தனித்தனியாக அழைத்து எஞ்சிய ஆணைகளை அளித்தார்.

அனைவரும் களைத்திருந்தனர். ஏனென்றால் ஆனந்தர் பரிநிர்வாணத்திற்கான நாளையும் இடத்தையும் குறிப்பிட்டு ஒரு மாதகாலம் ஆகியிருந்தது. அவருடைய தூதர்களாக பிக்ஷுக்கள் வெவ்வேறு ஊர்களுக்குச் சென்றனர். பின்னர் அங்கிருந்து ஆனந்தரின் மாணவர்களும், அவர்மேல் பக்திகொண்டவர்களும் வரத்தொடங்கினர். அவர்களில் பேரரசர்களும் பெருவணிகர்களும் சாமானியர்களும் நாடோடிகளும் இருந்தனர். ரோகிணியின் இரு கரைகளிலும் ஏராளமான குடில்கள் உருவாயின. குளிர்காலம் ஆதலால் எல்லா குடில்களிலும் கணப்புகளின் ஒளி எழுந்து நீரில் படிந்து ரோகிணி தீப்பிடித்து எரிவதுபோல் இருந்தது.

முழுநிலவு நதியின் இருண்ட அலையில்லாத ஒழுக்கின்மேல் அசைவற்று நின்றிருந்தது. அவ்வப்போது சிறிய காற்றில் கொடி துவள்வதுபோல நிலா அசைந்தது. அப்போது தன் குடிலில் இருந்து ஆனந்தர் வெளியே வந்தார். கண்கள்மேல் கையை வைத்து நிலவைப் பார்த்தார். அவர் முகம் வெவ்வேறு உணர்வெழுச்சிகளால் சுருங்கியும் நெளிந்தும் அசைந்தது. பின்னர் முதுமையால் மெலிந்து ஒடுங்கிய உடலை மெல்லிய கால்களால் உந்தியபடி, காற்றில் செல்லும் சருகுபோல அவர் ரோகிணியின் கரைவழியாக நடந்தார்.

ஆயிரம் காலடிகளை கடந்ததும் அந்தப் பாதையோரமாக, சருகுகள் பரவிய மரத்தடியில் படுத்திருந்த முதியவளை அணுகினார். அவள் அவர் வருவதை முன்னரே கண்டு எழுந்து கைகூப்பியபடி நின்றிருந்தாள். ஆனந்தர் கைகூப்பியபடி, நடுங்கும் உடலுடன் அவளை அணுகிச்சென்றார். அவளை நெடுங்கியதும் “சரணம்! சரணம்! சரணம்!” என்று சொன்னபடி அப்படியே முன்னால் சரிந்து அவள் காலடியில் விழுந்தார். தன் கொதிக்கும் தலையை அவள் கால்களின்மேல் வைத்துக்கொண்டார்.

அவள் அமர்ந்து அவள் தலையை இரு கைகளாலும் அள்ளி தன் மார்புடன் இறுக அணைத்துக்கொண்டாள். அவர் அவள் மடியில் தலையைப் புதைத்துக்கொண்டு கண்ணீர் வடித்தார். அவர் குழறும் குரலில் ஏதேதோ சொல்லிக்கொண்டிருந்தார். அவள் கைகள் அவருடைய தலையை வருடிக்கொண்டிருந்தன. அவர் காதில் மெல்லிய குரலில் அவள் ஏதோ சொன்னாள்.

அவருடைய தலையின் தீ அணைந்துகொண்டே வந்தது. பின்னர் அவருக்குள் குளிர்ந்த முழுநிலவு எழுந்தது. முகத்தில் புன்னகை விரிந்தது. மல்லாந்து படுத்துக்கொண்டு வானத்தைப் பார்த்தார். ”இனிய நிலவு” என்றார். அவள் ”ஆம்” என்றாள்.

கதை சொல்லி முடித்த கானபூதி என்னிடம் சொன்னது. “இக்கதையில் எழும் முதல் கேள்வி இது. ஆனந்தர் பகதியிடம் சொன்னது என்ன?”

நான் இரு கைகளையும் நெஞ்சோடு சேர்த்து கண்ணீர்விட்டுக்கொண்டிருந்தேன். ஆனால் என் முகம் மலர்ந்திருந்தது. என் உடல் புல்லரித்திருந்தது.

”இரண்டாவது கேள்வி இது என்றது கானபூதி. ”ஆனந்தரிடம் பகதி சொன்னது என்ன?”

நான் தலையை அசைத்தேன். “எனக்குத் தெரியாது… எவருக்கும் தெரியாது. தெரிந்தவர் புத்தராகிவிடுவார்.”

கானபூதி சொன்னது. “ஆமாம், எனக்கும் தெரியாது. அளவேயில்லாத கதைகளை அறிந்தவன் நான். மண்ணிலும் விண்ணிலும் நானறியாத ஒன்றுமில்லை. ஆனால் எனக்கும் தெரியாது.”

நான் மல்லாந்து படுத்தேன். என் முகத்தின்மேல் ஒளி விழுந்ததை உணர்ந்தேன். “ஒளி… குளிர்ந்த ஒளி. வானில் நிலவு இருக்கிறதா என்ன?”

”ஆமாம், இன்று முழுநிலவு”

“இங்கே நிலவு தோன்றுமா? நான் இங்கே எப்போதுமே அமாவாசை என்று நினைத்தேன்.”

“இங்கே என்றுமே முழுநிலவு இருக்கும்” என்றது கானபூதி.

சக்ரவாகி என் அருகே நெருங்கி அமர்ந்து சொன்னது. “மிகப்பெரிய நிலவு, முழுமையானது.”

சூக்ஷ்மதரு மறுபக்கம் சொன்னது. “ஒவ்வொரு இலைநுனிகளிலும், ஒவ்வொரு அலைவளைவுகளிலும், ஒவ்வொரு கூழாங்கல்லிலும் நிலவொளி ததும்பியிருக்கிறது.”

ஆபிசாரன் சொன்னது “நிலவைப் பார்க்க கண்கள் எதற்கு?”

நான் முகத்தை ஒளிநோக்கி நன்றாகத் திருப்பிக்கொண்டேன். என் கண்களுக்குள் அந்த ஒளி நிறைந்தது. அங்கே முழுநிலவு உதிக்கத் தொடங்கியது.

(மேலும்)

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on July 01, 2025 11:32

அசதா

[image error]

அசதா சமகால உலக இலக்கியத்தை ஆங்கிலம் வழியாக தமிழாக்கம் செய்தவர்களில் ஒருவர். கிறிஸ்தவப் பின்னணியைக் கொண்ட குறிப்பிடத்தக்க சிறுகதைகளையும் எழுதியுள்ளார்.

அசதா அசதா அசதா – தமிழ் விக்கி
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on July 01, 2025 11:32

June 30, 2025

கல்வித்துறை பற்றி…

[image error] கல்வியின் வருங்காலம் இன்றைய கல்வியின் சிக்கல்கள்

அன்புள்ள ஜெயமோகன்,

நம் கல்வித்துறை பற்றிய விவாதங்களை கவனித்தேன். இன்று நம் உயர்கல்வித்துறை கிட்டத்தட்ட செயலற்றிருக்கிறது. நம்பமுடியாத அளவுக்குத் தரவீழ்ச்சி நிலவுகிறது. அதற்குக் காரணம் முழுக்க முழுக்க ஊழல் வழியாகவே அரசுக்கல்லூரி ஆசிரியர்களின் நியமனங்கள் நடைபெறத்தொடங்கி முப்பதாண்டுகள் ஆகின்றன என்பதுதான். தனியார்க்கல்லூரிகளில் தொடங்கிய அந்த நடைமுறை அரசுக்கல்லூரிகளின் வழக்கமாகவே ஆகிவிட்டது. எவருக்கு எத்தனை சதவீதம், எப்படி கொடுப்பது என்பதெல்லாம் கிட்டத்தட்ட புரோட்டோகால் போலவே ஆகிவிட்டன. தரவீழ்ச்சி மலைபோல கண்முன் நின்றிருக்கிறது. ஆனால் அதை மறைத்து அரசியல்வாதிகள் ‘ரோஜாவண்ண’ சித்திரத்தை உருவாக்க முயல்கிறார்கள். அது அவர்களின் அரசியல்.

நம் கல்வித்துறையின் வீழ்ச்சி பற்றி எதைச் சொன்னாலும் உடனே அது அரசியல் நிலைபாடாகச் சுருக்கப்படுகிறது. (அதில் அரசியல் உண்டு என்பதும் உண்மைதான். உயர்கல்வித்துறையின் தரவீழ்ச்சி பற்றி தமிழகத்தில் கருத்து சொல்லும் மறுதரப்புக்கு இந்தியாவின் பிற பகுதிகளின் கல்வித்துறையில் இதைவிட மோசமான வீழ்ச்சி உண்டு என்பது பற்றி ஒன்றும் சொல்வதற்கில்லை.அந்த ஊழலுக்கு எதிராக அவரகள் ஒரு வார்த்தைகூட பேசுவதில்லை). ஆனால் இந்த பிரச்சினைகளை பொதுவெளியில் பேசவேண்டிய தேவை உள்ளது. இன்றைய கல்வித்துறையை முன்வைத்து நிகழும் அரசியல் விவாதங்களில் இரு பக்கமும் சாராமல் நின்று இவற்றைச் சொல்லவேண்டியிருக்கிறது.

பி.ஏ.கிருஷ்ணன் எழுதிய இந்தக் குறிப்பை உங்கள் கவனத்திற்கு கொண்டுவருகிறேன். ‘எல்லாம் சிறப்பாக இருக்கிறது’ ‘தமிழகத்தை மற்ற மாநிலங்களுடன் ஒப்பிடுக’ போன்ற அரசியல் கூச்சல்களைக் கடந்து நாம் யோசிக்கவேண்டிய சில கேள்விகள் இதில் உள்ளன.

என்.ஆர். ராமச்சந்திரன்.

நமது பல்கலைகளின் பங்களிப்பு

சில நாட்களுக்கு முன்னால் சன் தொலைக்காட்சியில் நடந்த விவாதம் ஒன்றில் நான் எளிய கேள்வி ஒன்றைக் கேட்டேன். தமிழ் மாணவர்களுக்கு பயன்படும் வகையாக தமிழ் நாட்டின் எந்த அரசுப் பல்கலைக் கழகம் ஒரு சாதாரண அகராதியோ அல்லது கலைச்சொல் அகராதியோ கொண்டு வந்திருக்கிறதா?

எப்போதும் போல மனுஷ்யபுத்திரன் எந்த ஆதாரமும் இல்லாமல் திராவிட அரசு விண்ணை வளைத்தது என்ற பாணியில் பேசினார். எனக்குப் பதில் சொல்ல நேரம் கிடைக்கவில்லை. 

தமிழ் நாட்டில் த தஞ்சாவூர் பல்கலைக் கழகமோ அல்லது மெட்ராஸ் பல்கலைக் கழகமோ தமிழுக்காக என்ன செய்திருக்கிறது?

மாணவர்களுக்காக ஒரு அருஞ்சொல் அகராதி வந்திருக்கிறதா?

 தஞ்சாவூர் பல்கலைக் கழகம் அருங்கலைச் சொல் அகரமுதலி ஒன்றை 2002 ல் வெளியிட்டது. அதற்குப் பிறகு வேறு ஏதும் வந்ததாகத் தெரியவில்லை. அகராதி பகுதியில் காணப்படும் புத்தகங்கள் இவை:

அருங்கலைச்சொல் அகரமுதலி (ஆங்கிலம் – தமிழ்)ஆங்கிலம் – தமிழ் வழிகாட்டி அகராதிகல்வியியல் கலைச்சொல் விளக்க அகராதிசங்க இலக்கியச் சொல்லடைவுசித்த மருத்துவத் தொகை அகராதிதமிழ் அகராதியியல் ஆய்வடங்கல் (1992 வரை)தமிழ் நிகண்டுகள் உள்ளடக்கமும் வரலாறும்தமிழ் பாரம்பரியமிக்க வெளிநாட்டு அறிவிப்புகள்தமிழ் மின்சொற்களஞ்சியம்நாமதீப நிகண்டுபெருஞ்சொல்லகராதி தொகுதி – 2பெருஞ்சொல்லகராதி தொகுதி – 1பெருஞ்சொல்லகராதி தொகுதி – 3பெருஞ்சொல்லகராதி தொகுதி – 4பெருஞ்சொல்லகராதி தொகுதி – 5பெருஞ்சொல்லகராதி தொகுதி – 6மர இனப்பெயர்த் தொகுதி – 2மர இனப்பெயர்த் தொகுதி – 1வயது வந்தோர் கல்வியியல் கலைச்சொல் விளக்க அகராதி

இவற்றில் பெரும்பாலான புத்தகங்கள் சென்ற நூற்றாண்டில் வெளிவந்தவை. பெரும்சொல் அகராதியின் ஆறாம் தொகுதி 2010ல் வந்தது. அது ‘கூ‘ வரையில்தான் வந்திருக்கிறது. அறிவியலைப் பொருத்த வரை நிலைமை இன்னும் மோசம். இது அறிவியல் புத்தகங்களின் அட்டவணை:

அறிவியல் தமிழ் வெளியீடுகள் (நூலடைவு)

உயிர் வேதியியல்கடல்வாழ் ஆமைகளின் வியத்தகு வாழ்க்கைசங்க இலக்கியத் தாவரங்கள்தமிழக அறிவியல் வரலாறுதமிழ்நாட்டு மூலிகைகள் அறிவியல் ஆய்வுகள் தொகுதி – 1தொடக்கப்பள்ளி அறிவியல் தமிழ்ப்பாட நூல்களின் கருத்துப் புலப்பாட்டுத் திறன்பயிரிடாத் தாவரங்களின் பயன்பாடுபழந்தமிழகத்தில் இரும்புத்தொழில்பழந்தமிழ் நூல்களில் நீர்வாழ் உயிரினங்கள்பாரம்பரிய ஊடுருவல் வரலாறுபார்புகழும் பால்சங்குபாலூட்டிகள்புதையல் தேடிக் கடலில் மூழ்குதல்மனிதனும் மரபியலும்மீன்கள் அன்றும் இன்றும்முத்தும் பவளமும்மூலிகை வளர்ப்பு முறைமை பயிற்சிக் கையேடுஇது கணினி அறிவியல் அட்டவணை:அறிவியலும் தமிழும்.

இதுவும் 2009ம் ஆண்டு வெளிவந்தது.  இப்போது புத்தகங்கள் பதிப்பிக்கிறார்களா என்பதே தெரியவில்லை.

3. இனி மெட்ராஸ் பல்கலைக் கழகத்தைப் பார்ப்போம். இணையத்தில் கிடைப்பது 2017ம் ஆண்டின் விலைப்பட்டியல். அதில் கிடைப்பது ஏ. சி. சிதம்பரநாதன் செட்டியாரின் ஆங்கில தமிழ் அகராதி. செட்டியார் சிவலோக பதவி அடைந்து 58 ஆண்டுகள் ஆகி விட்டன. இப்போது கிடைப்பது 2010 பதிப்பு. இயற்பியல் சொல்லகராதி ஒன்று இருக்கிறது. 2016 பதிப்பு. இந்த வருடத்திற்குப் பிறகு பல்கலைக் கழகம் ஏதும் பதிப்பித்திருக்கிறதா என்பதே தெரியவில்லை.  அறிவியல் தொடர்பாக தமிழில் குறிப்பிடத்தக்க எந்த புத்தகமும் இப்பல்கலைக் கழகத்தில் இருந்து வந்ததாகத் தெரியவில்லை.  தமிழில்/ஆங்கிலத்தில் பதிப்பிக்கப்பட்ட புத்தகங்களில் க்ளாசிக்ஸ் என்று கருதப்படும் சில புத்தகங்கள் இருக்கின்றன. இவை அனைத்தும் முதலில் வெளிவந்த காலம் அறுபது ஆண்டுகளுக்கும் முன்னால்.

இதுதான் திராவிடம் தமிழ் வளர்ப்பதின் லட்சணம். 

இவர்கள் முதலில் தமிழில் கலைச்சொற்களையும் மற்றையச் சொற்களையும் வகைப்படுத்தி தமிழில் படிக்கும் மாணவன் எளிதாக புரிந்து கொள்ள அகரமுதலிகளை உருவாக்கட்டும்.  பின் சமஸ்கிருதத்தைப் பற்றிப் பேசலாம். 

இதைப் பரவலாகப் பகிர்ந்து கொள்ளுங்கள். மாணவர்களை நாம் எத்தனை ஆண்டுகள் ஏமாற்றிக் கொண்டிருப்போம்?

அனந்தகிருஷ்ணன் பக்ஷிராஜன்

[image error]

அன்புள்ள ராமச்சந்திரன் அவர்களுக்கு,

Technology the way forward for Indian educationஇந்த கட்டுரையை உங்கள் கவனத்திற்குக் கொண்டுவர விரும்புகிறேன். இதைப்போன்ற நூற்றுக்கணக்கான கட்டுரைகள் இங்கே நாளிதழ்களில் கல்வியாளர்களால் எழுதப்பட்டு நமக்குக் கிடைக்கின்றன.

அண்மைக்காலமாக கேரளப் பல்கலைக்கழகங்கள் பற்றி இதேபோன்ற கடுமையான விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றன. அண்மையில் கேரளத்தில் காலடி பல்கலைக்கழகம் ஆய்வுமாணவர் ஒருவருக்கு மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக உதவித்தொகையை கொடுக்கவில்லை. அவர் நீதிமன்றம் சென்றார். நிதிநெருக்கடி என அங்கே பல்கலை சார்பில் சொல்லப்பட்டது. அப்படியென்றால் துணைவேந்தர், பதிவாளர் இருவருக்கும் ஊதியம் கொடுக்கப்படுகிறதா என நீதிமன்றம் கேட்டது. அந்த உதவித்தொகை கொடுக்கப்படும் வரை அவர்களுக்கு ஊதியம் அளிக்கப்படவேண்டியதில்லை என ஆணையிட்டது.

நானறிந்து கேரளப்பல்கலையில் இருந்து மதிக்கத்தக்க ஒரு நூல் வெளிவந்து முப்பதாண்டுகள் ஆகின்றன. இதுவே இந்தியா முழுக்கவும் உள்ள நிலைமை. கல்வி என்பது தொழிலுக்கான பயிற்சி என ஆக்கப்பட்டுவிட்டது. பிற கல்வி எதற்கும் நிதி இல்லை. பிற கல்விக்கு வருபவர்கள் எந்த அடிப்படை தகுதியும் அற்ற கீழ்நிலை மாணவர்கள். உண்மையான அக்கறையுடன் கற்பிக்க நினைக்கும் ஆசிரியர்கள்கூட மாணவர்களின் முழுமையான உதாசீனத்தால் ஆர்வமிழந்து விடுவதையே நான் காண்கிறேன். கல்வித்துறையில் ஆசிரியர் நியமனங்களிலுள்ள ஊழல் தகுதியற்றவர்களை ஆசிரியர்களாக கொண்டுவந்து நிறுத்துகிறது. ஆகவே ஒட்டுமொத்தமான ஒரு தேக்கநிலை இன்று உள்ளது.

அதைப்பற்றிய அக்கறை இன்று சிந்திப்பவர்கள் நடுவே உருவாகவேண்டும். ஆனால் அந்த விவாதத்தை அரசியல்வாதிகளுடன் நடத்த முடியாது என நாம் உணரவேண்டும். விவாதம் அக்கறை கொண்ட அறிஞர்கள் நடுவே நிகழவேண்டும்.

ஜெ

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on June 30, 2025 11:35

அகிலன் எத்திராஜ்

[image error]“எத்திராஜ் அகிலன் என்னுடைய முப்பது ஆண்டுக்கால நண்பர். கவிஞர் பிரம்மராஜன் ஊட்டியில் இருந்த காலத்தில் அறிமுகமானவர். மீட்சி இதழும் மீட்சி பதிப்பகமும் செயல்பட்ட அந்தப் பொன்னான நாட்களில் அறிமுகமானவர். ஆங்கிலத்திலிருந்து உருப்படியான சில மொழிபெயர்ப்புகளைச் செய்தவர்” என கவிஞர் சுகுமாரன் இவரைப்பற்றி குறிப்பிடுகிறார்.

அகிலன் எத்திராஜ் அகிலன் எத்திராஜ் அகிலன் எத்திராஜ் – தமிழ் விக்கி
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on June 30, 2025 11:33

விஷ்ணுபுரம் வழியாக…

https://vishnupuram.com/  நாவல் பற்றிய பார்வைகளுக்காக விஷ்ணுபுரம் வாங்க

விஷ்ணுபுரம் மின்னூல் வாங்க

பெருமதிப்பிற்கும் பிரியத்திற்கும் உரிய ஜெமோ–விற்கு,

வணக்கம். “விஷ்ணுபுரம்” வாசிப்பு அனுபவத்தை என் முதல் கடிதமாக எழுதுவதில் மகிழ்வுறுகிறேன். “விஷ்ணுபுரம்” என்ற நாவலை செவ்வியல் என்பதைவிட காவியம் என்றழைப்பதில் இன்னும் அணுக்கமாக உணர்கிறேன்.

விஷ்ணுபுரத்தை வாசிக்க தொடங்கிய சில பக்கங்களிலேயே முதலில் என் கற்பனை திறனுக்கு சவால் விட்டது பேராலயத்தின் பிரமாண்டம். அதன் கோபுரங்களும், சிற்பங்களும், மண்டபங்களும், கண்டாமணியும் மிக பிரமாண்டமாகவும் நுட்பமாகவும் விளக்கப்பட்டு இருப்பது சிறு ஓடை போல் இருந்த என் கற்பனை திறனை காற்றாற்று வெள்ளமாக மாற்றியது. மனிதமனமன்றி எந்த திரையும் இதன் பிரமாண்டத்தை காட்டிவிட முடியாது என்று எண்ணுகிறேன்.

புராணங்கள்

இதில் வரும் புராணக்கதைகள் அனைத்தும் சுவாரஸ்யமாகமட்டுமின்றி அனைத்திலும் சிறிது உண்மையும், அறமும்,நீதியும், கலந்து இருப்பதாக உணர்ந்தேன்.புராணத்தின் தேவையும் கூட அதன் பொருட்டுதானோ என்று எண்ணினேன்.

தத்துவங்கள்

நாவல் முழுவதுமாக தத்துவங்கள் பேசப்பட்டு இருந்தாலும் இரண்டாம் பாகத்தில் வரும் ஞானசபையின் நெறிமுறைகளும் தர்க்கபூர்வமான செறிவான விவாதங்களும் சங்கரரின் காலத்தில் தத்துவவிவாதங்கள் இவ்வாறுதான் நடந்து இருக்கக்கூடும் என்று உணரமுடிந்தது. அதீத உணர்ச்சி கொந்தளிப்புகள் தவிர்க்கப்பட்டு தூய அறிவை நோக்கிய விவாதத்தின் நெறிமுறைகள் எக்காலத்திற்கும் கடைபிடிக்கவேண்டியவை.

பிரளயம்

பிரளயத்தின் உக்கிரம் மிரட்சி கொள்ள செய்கிறது. உடலாக மனிதனாக இருந்தாலும் இயற்கையின் ஒரு அங்கமாகவே கலந்து இருக்கும் சோலைபைத்தியம் என்ற வேதத்தத்தன் பிரளயத்தில் பிழைத்து கொள்ளக்கூடும்  என்று எண்ணும் போது அவனது மரணம் மட்டும் தெய்வீகமாக நிகழ்ந்தது.

காட்சிகள் / படிமங்கள்

யானைப்பற்றிய அனைத்து காட்சிகளும் என்னை சிலிர்ப்பு அடைய செய்தன. குறிப்பாக யானையின்  பராமரிப்பும் , பாகனுக்கும் அதற்கும் உண்டான அன்பும், மதம் கொண்ட வீரன் என்ற யானையை கம்பீரமான அனுபவமிக்க வேறொரு யானை அடக்கி கொள்வதும், அங்காரகனின் கனவும் என்கனவுகளில் உறைந்து கொண்டன. மேலும் இக்காவியம் பல்வேறு படிமங்களை என் மனதில் விட்டு செல்கிறது. குறிப்பாக என் நினைவில் நிற்பது சோனாவும் அதன் அக்னி சிவப்பும், தொலைதூரத்து ஹரிததுங்காவின் தரிசனமும்,கண்களை உருட்டிநிற்கும் யட்சிகளும்,காடுகளும், குகைகளும, பாவகனும் யோகாவிரதனும் தொன்மமாக பார்க்கும் மண்டபகங்களும், லட்சுமியின் பசுவின் பிரசவமும், பிங்கலன், திருவடி, சங்கர்ஷணன்,அஜிதன், சூரியதத்தர், பத்மன் ஆகியோரது ஆழ்ந்த அகமும் தான்.

மறுவாசிப்பு

1,2,3 என்ற வரிசையில் மறுவாசிப்பு செய்து இக்காவியத்தை என் மனதில் இன்னும் ஆழமாக விரித்துக்கொள்ள இருக்கிறேன்.

முடிவாக விஷ்ணுபுரத்தின் வரிகளையே பிறருக்கு சொல்வேன் → “நமது வாசிப்பை காவியத்தின் மீது ஏற்றலாகாது. ஒரு வாழ்நாள் முழுக்க அது நம்முன் வீழ்த்தும் பிம்பங்களின் ஒட்டுமொத்தம்தான் காவியதரிசனம் என்பது. இடத்தையும் மனதையும் மாற்றியபடி மீண்டும் மீண்டும் காவியத்தை பார்க்க வேண்டும்.

பணிவுடன்,

ஆ.நாகராஜன்.

பி . கு நான் ஐரோப்பிய விஷ்ணுபுரம் குழுவில் இருக்கிறேன் முத்து கேசவனுடன்   வரும் மே 25 அன்று “Stratford- இல்   உங்களை சந்திக்க
ஆவல்கொண்டுள்ளேன் .

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on June 30, 2025 11:32

காவியம் – 71

”சிராவஸ்தியில் இந்தக் கதை நிகழ்ந்தது” என்று கானபூதி சொல்லத் தொடங்கியது. “அங்கே பகதி என்னும் சண்டாளசாதிப் பெண் இருந்தாள். அவளுடைய தாய் மித்திகை அவள் சாதியில் புகழ்பெற்ற மாயக்காரி. நோய்தீர்ப்பவளும் நோய் அளிப்பவளுமாகத் திகழ்ந்தாள். மண்ணில் ஒரு கைப்பிடி அள்ளி நீரில் கலக்கிக் கொடுத்து அவள் நோய்களை தீர்த்தாள், நஞ்சும் அளித்தாள். மண்ணில் எந்த கைப்பிடியை, எப்படி, எந்தச் சொல்லைச் சொன்னபடி அள்ளவேண்டும் என அவள் மட்டும்தான் அறிந்திருந்தாள். மித்திகையை அவள் சாதியினர் வணங்கினர், அஞ்சவும் வெறுக்கவும் செய்தனர்.”

மித்திகை இளமையில் ரப்தி ஆற்றில் இரவில் நீந்தி விளையாடிக் கொண்டிருக்கையில் வெள்ளப்பெருக்கில் காணாமலானாள். தீண்டப்படாதவர்களாகிய அவளுடைய சாதியினர் ஆற்றில் குளிப்பதற்குத் தடை இருந்தது. அவர்கள் ஊற்றுகளிலும் சிறிய ஓடைகளிலும் புதர்களுக்குள் மறைந்துகொண்டு குளிப்பதே வழக்கம். மித்திகை நீச்சல் பழக விரும்பினாள். அவளுடைய சாதியினர் எவருக்கும் நீச்சல் தெரிந்திருக்கவில்லை. நீச்சலை அவர்கள் கற்றுக்கொள்ளவும் முடியாது என அவர்கள் நம்பினார்கள். நீரில் கருங்கல்போல சண்டாளர்கள் மூழ்கி மறைவார்கள். ஏனென்றால் அவர்கள் மண்ணாலானவர்கள். அவர்கள் தங்களை மிருச்சர்கள் என்று சொல்லிக்கொண்டனர். பிறர் அவர்களை மிலேச்சர்கள் என்றனர்.

ஒவ்வொரு உயிரும் பஞ்சபூதங்களின் கலவை. மிருச்சர்கள் தூய மண்ணால் ஆனவர்கள். அந்தணர் தூய நெருப்பால் ஆனவர்கள். புழுக்கள் மண்ணாலும், மீன்கள் நீராலும், பறவைகள் காற்றாலும் பூச்சிகள் வானத்தாலும் ஆனவை. செம்பருந்து தீயாலானது. பிற மனிதர்களும் உயிர்களும் வெவ்வேறு பூதங்களின் வெவ்வேறுவகை கலவைகள் என அவர்கள் நம்பினர். ”வானம் சத்வகுணம் கொண்டது. நெருப்பு ரஜோகுணம் கொண்டது. மண் தமோகுணம் கொண்டது. நீர் சத்வகுணமும் தமோகுணமும் கலந்தது. காற்று ரஜோகுணமும் சத்வகுணமும் கலந்தது. ஒவ்வொன்றும் இங்கே வகுக்கப்பட்டுள்ளன” என்று மித்திகையின் தந்தையும், சண்டாளர்குடியின் பூசகருமான தூளிகர் சொன்னார்.

“மண்ணில் இருந்து உருவான நாம் தமோகுணம் கொண்டவர்கள். நம் நிறம் கருமை, அது வளமான மண்ணின் நிறம். நம் இயல்பு அமைதி. அதை பிறர் சோம்பல் என்பார்கள். நம் சுவை உப்பு. அதை பிறர் துவர்ப்பு என்பார்கள். நாம் நிலைபெற்றவர்கள், அனைத்தையும் தாங்கியிருப்பவர்கள், அனைத்தையும் முளைக்கவைப்பவர்கள், அனைத்தும் நம்மிடம் வந்துசேர்கின்றன, நாம் அனைத்தையும் தூய்மை செய்கிறோம்” என்று தூளிகர் சொன்னார். “நம் தெய்வமான தலாதேவி அழிவற்றவள், அனைத்தும் அழிந்தபின் அவள் மட்டும் எஞ்சியிருப்பாள். அனைத்தும் வேர்வடிவில் அவளுக்குள் இருக்கும். வானம், நீர், நெருப்பு, காற்று ஆகியவையும் அவளுக்குள் நுண்வடிவில் இருக்கும். அவளிடமிருந்து அனைத்தும் மீண்டும் உருவாகும்.”

இளமையில் மித்திகை எதற்கும் அடங்காதவளாக இருந்தாள். தூளிகர் சொல்லும் ஒவ்வொரு வார்த்தையையும் மறுத்துப் பேசுபவள் அவள் மட்டும்தான். “எளிய விலங்குகள்கூட நீந்துகின்றன. நம்மாலும் நீந்த முடியும்” என்று அவள் தன் தந்தையிடம் சொன்னாள். “என் கைகளும் கால்களும் பிறவிலங்குகள் போலவே உள்ளன. அவற்றிடமிருக்கும் மூச்சுக்காற்றும் என்னிடம் உள்ளது. நான் நீரில் குதித்தால் நீந்துவேன்.”

தூளிகன் “சண்டாளப்பெண் நீந்துவதை அவர்கள் அறிந்தால் நம் குடில்களையே கொளுத்தி அழிப்பார்கள்” என்றார். “அவ்வப்போது நகரைத் தூய்மை செய்வதற்காக அவர்கள் நம் குடில்களைக் கொளுத்திச் சாம்பலாக்குகிறார்கள். அவர்களுக்குக் காரணம் ஒன்று தேவை, அவ்வளவுதான்.”

“அப்படியென்றால் நீங்கள் அஞ்சுகிறீர்கள். அச்சத்திற்காக இந்த கொள்கைகளையெல்லாம் உருவாக்கிச் சொல்லிக்கொண்டிருக்கிறீர்கள்” என்றாள் மித்திகை.

“அஞ்சவேண்டும். ஏனென்றால் நம்மிடம் க்ஷத்ரியர்களுக்குரிய தோள்வீரம் இல்லை. பிராமணர்களுக்குரிய சொல்வல்லமை இல்லை. வைசியர்களுக்குரிய செல்வமும் சூத்திரர்களுக்குரிய கருவித்திறமையும் இல்லை” என்றார் தூளிகர்.

“நாம் அவற்றை கற்கவே இல்லை, கற்பதை நமக்குத் தடைசெய்திருக்கிறார்கள்” என்று மித்திகை சொன்னாள். “ஆனால் அந்த தடையை நாமே நம்பச் செய்திருக்கிறார்கள். நாமே நம்மை தடுத்துக்கொள்கிறோம்.”

அவள் எவருமறியாமல் இரவில் ரப்தியில் இறங்கினாள். ஓரிரு நாட்களிலேயே அவளே நீந்தக் கற்றுக்கொண்டாள். நீச்சல் தன் கைகளிலும் கால்களிலும் ஏற்கனவே இருந்துகொண்டிருப்பதை அவள் அறிந்தாள். இரவுகளில் ஆற்றில் நீந்தி நெடுந்தொலைவு செல்வாள். நகரத்தின் எல்லை வரைச் சென்று அங்கே எரியும் விளக்குகளைப் பார்த்தபின் திரும்பி வருவாள்.

ரப்தியில் வெள்ளம் வந்துகொண்டிருந்தபோது அவள் அதில் நீந்துவதற்காக இறங்கினாள். அவள் ஆற்றில் நீந்துவதை அவள் தோழிகள் அறிந்திருந்தனர். அன்று நான்குபேர் அவள் ஆற்றில் பாய்வதை கண்டனர். ஒருத்தி அவளைத் தடுத்தும் பார்த்தாள். அடிபட்டு சீற்றம்கொண்ட மலைப்பாம்பு போல ஓசையிட்டபடி புரண்டுகொண்டிருந்த ஆற்றுநீர் அவளை அடித்துக்கொண்டுசென்றது. அவள் மறைந்தாள்.

அவர்கள் அவள் தந்தை தூளிகரிடம் மூன்றுநாட்களுக்குப் பின்னர் நடந்ததைச் சொன்னார்கள். அவர் மேலும் இரண்டுநாட்கள் காத்திருந்தபின் அவள் இறந்துவிட்டதாக முடிவுசெய்து சாவுச்சடங்குகளைச் செய்தார். அவளைப்போன்ற உருவத்தை மண்ணில் செய்து, அதை மலர்களுடனும் சோற்றுப் பருக்கைகளுடனும் புதைத்து, அதன்மேல் ஒரு கல்லைவைத்து மேலும் மூன்றுநாட்கள் மலரும், அன்னமும், நீரும் அளித்து வழிபட்டார்.

அவளை அனைவரும் மறக்கத் தொடங்கியபோது, பன்னிரண்டு நாட்களுக்குப் பின்னர் அவள் அதே ரப்தி நதியில் நீந்தி திரும்பி வந்து நனைந்த ஆடையுடன் கரையேறினாள். சென்றபோதிருந்த அதே கோலம், ஆனால் அவள் மாறிவிட்டிருந்தாள். அவள் கண்கள் பாம்பின் நிலைகொண்ட பார்வையை அடைந்துவிட்டிருந்தன.

அவள் இறந்துவிட்டமையால் அவளை மீண்டும் குலத்தில் சேர்த்துக்கொள்ளக்கூடாது என்று தூளிகரே சொல்லிவிட்டார். அவள் வேர்களின் உலகத்திற்குச் சென்று திரும்பிவந்தவள். அவள் உடல் பாதிப் பங்கு பாம்புதான், அவள் கைநகங்கள் நச்சுப்பற்கள் என்றார். அவளும் பிறரிடம் பேச விரும்பவில்லை, பிறரை ஏறிட்டுப் பார்க்கவுமில்லை. ஆற்றங்கரையில் நாணல்குடில் ஒன்றை அமைத்து அங்கே தங்கினாள். அங்கேயே ஒரு பெண்குழந்தையைப் பெற்றெடுத்தாள். அவளுக்கு பிரகிருதி என அவள் பெயரிட்டாள். அவளுடைய சாதியினர் அக்குழந்தையை பகதி என்று அழைத்தனர்.

பகதி தன் தாயின் குடிலிலும், தன் பாட்டனாரின் குடிலிலுமாக மாறி மாறி வாழ்ந்தாள். அவளுக்கு அவள் சாதியில் இடமிருந்தது, எல்லா இல்லங்களிலும் அவளுக்கு வரவேற்பும் இருந்தது. ஆனால் அவள் இரவுகளில் தன் தாயுடன் தங்கினாள். தாய் அவளிடம் பெரும்பாலும் பேசுவதே இல்லை. அவள் நாகத்தின் கண்களுடன் ஆற்றங்கரை நாணல் சதுப்புக்குள் பதுங்கிச் சுருண்டு வானத்தைப் பார்த்தபடி அமர்ந்திருந்தாள். ஆனால் பகதி தன் தாயை விரும்பினாள். அவளுக்கான உணவைச் சமைத்துப் பரிமாறினாள். அவளை நீராட்டி ஆடைகள் அணிவித்தாள். அவள் கூந்தலை கழுவி, எண்ணைபூசி, பின்னி பராமரித்தாள்.

மித்திகை நோய் தருபவள் என்று அவள் சாதியினர் அஞ்சினார்கள். ஒரு முறை அவள் ஆற்றங்கரைச் சதுப்பில் அமர்ந்திருக்கையில் அங்கே தர்ப்பை அறுக்க வந்த ஒரு பிராமணர் அவளைக் கண்டு சீற்றம் அடைந்து கைதூக்கி சாபமிடப்போனபோது அவள் தரையில் இருந்து மண்ணை அள்ளி காற்றில் வீசி அறியாத மொழியில் ஏதோ சொன்னாள். அந்தப் பிராமணர் அங்கேயே மயங்கி விழுந்தார். இரண்டுநாட்கள் கடும் காய்ச்சலில் கிடந்தபின், புரியாத மொழியில் ஏதோ புலம்பியபடி வலிப்பு வந்து இறந்தார். சண்டாளர்களை பிறர் அஞ்சத்தொடங்கியது அதன்பிறகுதான்.

நோய் அளிப்பவளால் நோயை குணப்படுத்தவும் முடியும் என்று சண்டாளர்கள் கண்டுகொண்டார்கள். அவளிடம் நோயுற்ற குழந்தைகளை முதலில் கொண்டுவந்தனர். அவள் மண்ணை அள்ளி அவர்களின் முகத்தில் வீசினாள். வாய்க்குள் சிட்டிகை மண்ணைப் போட்டு அறியாத மொழியில் பேசினாள். அவர்கள் நலம்பெற்று எழுந்தார்கள். அதன்பின் சண்டாளர்களின் பல்வேறு குடிகளில் இருந்து அவளிடம் நோயாளிகளைக் கொண்டுவரத் தொடங்கினார்கள். அவள் அனைவரையும் குணப்படுத்தினாள். அவள் தன் சாதியில் எவருக்கும் நோய் அளிக்கவில்லை. ஆனால் அவளை அவர்கள் அஞ்சினார்கள், அஞ்சியமையால் ரகசியமாக வெறுத்தார்கள்.

பகதி அன்று காலை தன் பாட்டனாரின் குடிலுக்குச் சென்று அதை கூட்டிப் பெருக்கிவிட்டு நீர் அள்ளுவதற்காக மரத்தைக்குடைந்து செய்த குடத்துடன் கிணற்றுக்குச் சென்றாள். அவர்களின் சாதியினருக்காக அவர்களே தோண்டிக்கொண்ட அக்கிணற்றில் அந்த முதிர் கோடைகாலத்தில் நீர் மிக ஆழத்திற்குச் சென்றுவிட்டிருந்தது. கோரைநாரை முறுக்கிச் செய்த கயிற்றை மேலும் மேலும் இணைத்து நீட்டவேண்டியிருந்தது. சுரைக்காய் குடுவையை கட்டி இறக்கி, ஆழத்தில் இருந்த நீரை கலக்காமல் மெல்ல அள்ளிக் கொண்டுவர வேண்டும். ஊரில் ஒவ்வொருவரும் எவ்வளவு நீர் அள்ளவேண்டும், எத்தனை குடம் எடுக்கவேண்டும் என்று கணக்கு இருந்தது.

அந்த ஆண்டு ரப்தி ஆறு வற்றி ஆங்காங்கே சிறுசிறு குட்டைகளாகத் தேங்கிக்கிடந்தது. நூறுவயதான அவள் பாட்டனாரே அப்படி ரப்தி வற்றியதை கண்களால் பார்த்ததில்லை. ஆற்றை நம்பியே வாழ்ந்த சிராவஸ்தி நிலைகுலைந்துவிட்டிருந்தது. நகரில் இருந்து மக்கள் வரிசையாக குடங்களுடன் ஆற்றுக்கு வந்தனர். கரையோரச் சதுப்புக்காடு வறண்டதனால் அங்கிருந்த உயிர்கள் அந்த குட்டைகளில் குடியேறியிருந்தன. காட்டுக்குள் இருந்த விலங்குகள் அங்கே வந்து நீர் அருந்தின. ஆகவே குட்டைகள் கலங்கிச் சேற்றுக்குழிகளாக மாறியிருந்தன. ஒவ்வொரு நாளும் புதிய இடத்தில் மணலில் தோண்டிய ஊற்றுகளில் இருந்துதான் மக்கள் நீர் அள்ளிச் சென்றனர்.

ஆனால் தூளிகரால் இடம் பார்க்கப்பட்டு தோண்டப்பட்ட சண்டாளரின் கிணற்றில் தண்ணீர் முழுக்க வற்றவே இல்லை. நீரின் சுவை மாறுபடவுமில்லை. அவர்கள் அனைவருக்குமான நீர் அதில் இருந்தது. அந்த நீரை உயர்சாதியினர் குடிக்க முடியாது என்பதனால் எவரும் அதை கைப்பற்றவுமில்லை. “தலாதேவி தன்னுடைய ஒரு முலைக்காம்பை அவளுடைய குழந்தைகளுக்காக எப்போதும் விட்டுவைப்பாள். நம் சாதியினர் தண்ணீரில்லாமல் இறந்ததே இல்லை. இந்த சிராவஸ்தியில் இதேபோல ரப்தி வறண்டுபோய் மக்களெல்லாம் கிளம்பிச் சென்றதாக ஒரு கதை உண்டு. நம் மக்கள் இங்கேயே வாழ்ந்தனர். ரப்தி மீண்டும் பெருகி, மக்கள் திரும்பி வந்தபோது நாம் இங்கேயே இருப்பதைக் கண்டு ஆச்சரியப்பட்டார்களாம்” என்றார் தூளிகர்.

பகதி அன்றுகாலை அங்கே நீர் மொண்டுகொண்டிருந்தபோது தொலைவில் ஒருவன் தள்ளாடி நடந்து வருவதைக் கண்டான். அவன் நீண்டதூரப் பயணி என்பது அவன் நடையிலேயே தெரிந்தது. அவன் மண்நிறமான ஒற்றை ஆடையை இடையில் அணிந்திருந்தான். இன்னொரு மண்நிற ஆடையை தோளுக்குக் குறுக்காகப் போட்டிருந்தான். கையில் கரிய பளபளப்புடன் திருவோடு. இன்னொரு கையில் ஒரு கழி. வேறெந்த பொருளும் அவனிடம் இருக்கவில்லை, மாற்று ஆடைகள்கூட. அவன் தலை மழிக்கப்பட்டு மண்கலம்போல் இருந்தது.

அவன் அவளருகே வந்து தன் திருவோட்டை நீட்டி உதட்டசைவால் நீர் கொடுக்கும்படிக் கேட்டான். கடுமையான தாகத்தால் அவன் நடுங்கிக் கொண்டிருந்தான். நீண்டநாட்கள் வெயிலில் அலைந்து வெந்துபோன முகம். ஆனால் மிக அகன்ற, மிகத்தெளிவான கண்கள். புன்னகைக்காமல் இருக்கும்போது கூட கண்களில் அத்தனை மலர்ச்சி இருக்கமுடியும் என அவள் முதல்முறையாகக் கண்டாள். அவள் அந்தக் கண்களைப் பார்த்துக்கொண்டு சிந்தனையற்று நின்றாள். அவன் மீண்டும் உதடுகளை அசைத்து “ஃபவதி பிக்ஷாம் தேஹி” என்றான்.

அவள் திடுக்கிட்டு “இது சண்டாளர்களின் கிணறு” என்றாள்.

“அதில் குடிக்க நீர் உள்ளது அல்லவா?”

”ஆமாம், ஆனால் இங்கே உயர்சாதியினர் குடிப்பதில்லை.”

“நான் உயர்சாதியினன் அல்ல, துறவி, பிச்சைக்காரன்” என்று அவன் சொன்னான். “நானும் நான்கு சாதிகளுக்கு வெளியே வாழ்பவன். சுடுகாடுகளில் இரவு உறங்குபவன்.”

“நீங்கள் உண்மையாகவே இதைக் குடிக்கலாமா?” என்று பகதி மீண்டும் கேட்டாள். “உங்களுக்குத் தெரியாமலிருக்கலாம், உங்களை அவர்கள் பிறகு ஊருக்குள் விடமாட்டார்கள்.”

“நான் நீரில் பேதம் பார்ப்பதில்லை. மண்ணிலும் மனிதரிலும்கூட பேதம் பார்ப்பதில்லை” என்று அவன் சொன்னான். “புரிந்துகொள்ளமுடியாத ஒரு கருணை நம்மை இங்கே வாழச்செய்கிறது. உன்னையும் என்னையும், இந்த நகரின் அரசனையும், இந்த வெந்தமண்ணின் ஆழத்தில் வாழும் புழுவையும் எல்லாம் அதுவே பேணுகிறது. அனைவரும் அதன் முன் சமமானவர்களே. ஒருவன் இன்னொரு உயிரைவிட தன்னை எவ்வகையிலேனும் மேலானவன் என்று ஒரு கணம் எண்ணினால் அகங்காரம் என்னும் பெரும்பழியால் அவன் ஞானத்தில் இருந்தும் நிர்வாணத்தில் இருந்தும் நூறுகாதம் பின்னால் செல்கிறான். ஒருவன் இன்னொரு உயிரைவிட தன்னை தாழ்ந்தவன் என எண்ணினால் அழிவற்ற தர்மத்தை அவமதித்த பழியை அடைந்து ஞானத்தில் இருந்தும் நிர்வாணத்தில் இருந்தும் ஆயிரம் காதம் பின்னடைகிறான்.”

அவள் நெஞ்சில் கைவைத்து “தலாதேவியே!” என்றாள். “நீங்கள் பேசுவது புரியவில்லை. ஆனால் உங்கள் வார்த்தைகள் சங்கீதம் போலிருக்கின்றன… குயில்பாடுவதுபோல..” பரபரப்புடன் “தண்ணீர் இதோ” என்று அவனுடைய திருவோட்டில் நீரை ஊற்றினாள்.

அவன் “புத்தம் சரணம் கச்சாமி, சங்கம் சரணம் கச்சாமி, தர்மம் சரணம் கச்சாமி” என்று சொன்னபின் அதில் சிறிது நீரை அருகே இருந்த செடிக்கு ஊற்றியபின் குடித்தான்.

“நீ அளவிறந்த பெருங்கருணைகொண்ட தர்மத்தால் வாழ்த்தப்பட்டவளாவாய். இந்த எளியவனின் தாகத்தை இன்று நீ தீர்த்தாய்” என்று அவன் சொன்னான்.

“உங்கள் பெயர் என்ன? நீங்கள் யார்? நாடோடியா?”

“என் பெயர் ஆனந்தன். நான் இந்த உலகுக்குக் கருணையின் செய்தியுடன் வந்த ததாகதரான சித்தார்த்த கௌதமரின் மாணவன்” என்று அவன் சொன்னான்.

“நீங்கள் மாயம் அறிந்தவரா? மண்ணில் இருந்து பொன்னை வரவழைக்க உங்களால் முடியுமா? காற்றில் இருந்து மலரை மலரவைப்பீர்களா?”

அவன் சிரித்து “அதெல்லாம் மிகச்சிறிய வித்தைகள். என் ஆசிரியரிடமிருந்து நான் அதைவிட ஆற்றல்மிக்க வித்தைகளைக் கற்றிருக்கிறேன்” என்றான். சற்று கேலி கலந்த இனிய புன்னகையுடன் அவள் கண்களை நோக்கி “ததாகதரின் சொல்லைக் கொண்டு நான் கல்நெஞ்சக்காரர்களான அரசர்களை கருணையால் கண்கலங்கச் செய்திருக்கிறேன். பத்து தலைமுறையாகப் பதுக்கி வைத்திருந்த செல்வத்தை எடுத்து ஏழைகளுக்கு உணவிடும்படி வணிகர்களை மாற்றியமைத்திருக்கிறேன்.”

அவள் நெஞ்சில் கைவைத்து “தெய்வங்களே” என்று ஏங்கினாள்.

மீண்டும் அவளை வணங்கியபின் திரும்பிச் சென்றான். மெல்லிய கால்களாயினும் அவை உறுதியாக மண்ணில் பதிந்தன. அவன் நீர்மேல் தத்துப்பூச்சி போலச் செல்வதாக அவள் நினைத்தாள்.

அவள் குடுவையையும் கயிற்றையும் தரையில் போட்டுவிட்டு அவனுக்குப் பின்னால் ஓடினாள். “நீங்கள் என் குடிலுக்கு வரவேண்டும். என்னுடன் இருக்கவேண்டும்” என்றாள்.

“இல்லை, நான் இல்லறத்தார் வீட்டில் தங்குவதில்லை. அவர்களிடமிருந்து பிச்சை ஏற்பதுண்டு. ஆனால் நான் நேற்று மதியம் சாப்பிட்டுவிட்டேன். இனி இன்று மதியம்தான் சாப்பிடுவேன். அந்த உணவை எனக்காக எடுத்துக்கொண்டு எவரோ அந்நகரில் காத்திருக்கிறார்கள்” என்றபின் அவன் முன்னால் நடந்தான்.

அவள் மீண்டும் அவன் பின்னால் ஓடினாள். “ஆனால் உங்களை என்னால் பிரிய முடியாது. நான் உங்களுடன் இருக்கவேண்டும். உங்களை பார்க்காமல் என்னால் இனிமேல் இருக்கமுடியாது” என்றாள்.

“அது நான் அல்ல” என்று அவன் சொன்னான். ”வெளியே நாம் ஈர்க்கப்படும் அனைத்தும் நமக்குள் இருக்கும் சிலவற்றின் பிரதிபலிப்புகள்தான். இப்போது உனக்குப் புரியாது. நான் சொல்வதை மீண்டும் நினைத்துப்பார்” மீண்டும் கைகூப்பிவிட்டு அவன் நடந்து சென்றான்.

அவள் அவனுடன் செல்லமுடியவில்லை. சட்டென்று அவளுக்கு அவள் தாய் சொல்லிக்கொடுத்த மந்திரம் நினைவுக்கு வந்தது. அதைச் சொன்னபடி இடக்கையால் ஒரு பிடி மண்ணை அள்ளி அவன் காலடிசுவடுமேல் போட்டாள். அப்பால் நடந்துசென்ற அவன் தள்ளாடி மண்மேல் விழுந்தான்.

அவள் அவனருகே சென்று குனிந்து பார்த்தாள். அப்படியே அவனைத் தூக்கிக்கொண்டு நாணல்புதர்களின் வழியாக தன் தாயின் குடில்நோக்கிச் சென்றான். அவன் நீண்ட பயணங்களல் எடையற்றிருந்தான். அவள் உறுதியான கரிய உடலுடன் குதிரைபோலிருந்தாள். மிக எளிதாக அவனை அவள் கொண்டுசென்றாள், தன் தோளில் ஒரு மாலையை அணிந்திருப்பதாகவே அவளுக்குத் தோன்றியது.

அவள் குடிலை அடைந்தபோது அவள் அம்மா அங்கிருந்தாள். அவள் அவனைக் கண்டதும் திகைத்தாள். “இவனை எங்கே கண்டாய்? யார் இவன்?” என்று கேட்டபடி அருகே வந்தாள்.

“இவர் எனக்கு வேண்டும். இவரை என்னால் பிரியமுடியாது. ஆகவே நான் இவரைத் தூக்கி வந்தேன்…” என்று அவள் தன் தாயிடம் சொன்னாள். “எனக்கு இவர் மட்டும்தான் வேண்டும். இவர் இல்லாவிட்டால் நான் உயிர்வாழ மாட்டேன்…”

அவனை அவள் குடிலில் படுக்கச் செய்தாள். அவள் தாய் அருகே நின்றபடி “இவர்களை உனக்குத் தெரியாது. இவர்கள் பெண்களை வெறுப்பவர்கள். பெண்களை தொடுவதையோ, பெண்கள் தங்களைத் தொடுவதையோ விரும்புவதில்லை” என்றாள்.

“அப்படியென்றால் நான் ஆணாகிறேன்… இல்லையென்றால் ஆணும்பெண்ணும் இல்லாதவளாகிறேன். வேண்டுமென்றால் விலங்காக வேண்டும் என்றாலும் ஆகிறேன். இவர் எனக்கு வேண்டும். இவர் இல்லாமல் எனக்கு வாழ்க்கை இல்லை. இவர்தான்… வேறு எவருமே இல்லை, இவர்தான்” என்று பகதி சொன்னாள்.

மித்திகை தன் சடைமுடிக்கற்றைகளை அள்ளி பின்னால் போட்டுக்கொண்டு நாகப்பாம்பின் கண்களுடன் அருகே அமர்ந்தாள். வழக்கமாக முன்னும்பின்னும் அசைந்தபடி அறியாத மொழியில் முனகிக்கொள்வாள். அன்று அறிந்த மொழியில் “அறியாத கணக்குகள்… முடிவே இல்லாத பின்னல்” என்றாள்.

“இவர் விழித்துக்கொண்டால் என்னை விரும்பவேண்டும்… இங்கே என்னுடனேயே இருக்கவேண்டும்” என்று பகதி சொன்னாள். “அதற்கான மாயத்தைச் செய். இவர் பிரிந்துபோனால் இங்கேயே நான் செத்துவிழுவேன்… மண்மேல் ஆணையாக அதன்பின் ஒருநாளும் உயிருடன் இருக்க மாட்டேன்.”

“இரு… இரு, நான் முயல்கிறேன்” என்று மித்திகை சொன்னாள். “எந்த மனிதனையும் மயக்கும் மாரன் என்னும் தெய்வம் உள்ளது. நான் அழைத்தால் அது வருமென்று நினைக்கிறேன்… அழைக்கிறேன்.”

அவள் கைப்பிடி மண் எடுத்து வேண்டிக்கொண்டு வீசியபோது புதருக்குள் இருந்து ஒரு பொன்னிறமான நாகப்பாம்பு வந்து தூங்கிக்கொண்டிருந்த ஆனந்தனின் காலைச் சுற்றிக்கொண்டு மெல்ல கொத்தியது. அவன் உடல் ஒருமுறை உலுக்கிக் கொண்டது.

அவன் விழித்ததும் அவளைப் பார்த்து “ஆ!” என்று மூச்சொலி எழுப்பினான் “யார் நீ?” என்றான். உடனே நினைவுகூர்ந்து “நீ ஏன் இப்படி இருக்கிறாய்?” என்றான்.

“ஏன்?” என்று அவள் கேட்டாள். “நான் உங்களை இங்கே கொண்டுவந்தேன். என் தாயின் மாயத்தால் இங்கே இருக்கிறீர்கள். நீங்கள் என்றும் என்னுடந்தான் இருப்பீர்கள்.”

அவன் ”இல்லை” என்றபின் கண்களை மூடிக்கொண்டு பத்மாசனத்தில் அமர்ந்தான். அவன் உடல் வண்டின் சிறகுபோல அதிர்ந்துகொண்டே இருந்தது. சற்றுநேரத்தில் அந்த பொன்னிறப்பாம்பு மீண்டும் ஊர்ந்து வந்தது. அவனைக் கடித்த கடிவாயில் தன் வாயை வைத்து அந்த நஞ்சை திரும்ப எடுத்துக் கொண்டது. அது திரும்பிச் சென்றபின் அவன் எழுந்தான்.

“பெண்ணே, உன் தாய் மாரனை என் மேல் ஏவினாள். அந்த நஞ்சு என் உடலில் இருந்தமையால் நான் உன்னைப் பார்த்தபோது நீ வெற்றுடலுடன், பேரழகியாகத் திகழ்ந்தாய். காமரூபிணியாகிய உன்னிடமிருந்து வெல்லும் பொருட்டு நான் ததாகதரின் பத்மமந்திரத்தைச் சொன்னேன். என்னை விட்டு மாரன் அகன்றான். உன் மேல் எனக்கு கோபம் இல்லை. நீ கொண்ட விருப்பம் இயற்கையிலுள்ள ஒவ்வொரு உயிரிலும் உள்ளதுதான். நீ நல்லவள், பேரழகி. நான் என் துறவுநெறியை மேற்கொண்டிராவிட்டால் உனக்கு இனியவனாக உன் காலடியில் இருந்திருப்பேன். நீ அனைத்து மங்கலங்களுடனும் வாழவேண்டும் என வாழ்த்துகிறேன்” என்றபின் தன் கப்பரையுடன் நடந்தான்.

பகதி தன் தாயிடம் ஓடிச்சென்று கோரைப்புதருக்குள் இருந்த அவள் தோளைப்பிடித்து உலுக்கினாள். ”அவர் செல்கிறார். அவரை என்னிடம் கொண்டுவந்து சேர்…” என்று அழுதாள்.

“உலகியலுடன் நம்மை இணைப்பது முதலாவதாக காமம். அதை அவன் கடந்துவிட்டான். இரண்டாவதான குரோதம் இன்னும் ஆற்றல் மிக்கது. அதை ஏவுகிறேன். அவன் உன்மேல் தீராத வஞ்சம் கொண்டிருப்பான். ஒவ்வொரு கணமும் உன்னை வெறுப்பான். ஆனால் உன்னையே நினைத்துக்கொண்டு உன்னுடனேயே இருப்பான். உன்னைவிட்டு விலகவே அவனால் இயலாது” என்றாள் மித்திகை.

“ஆகட்டும்… அவர் என்னுடன் இருந்தாலே போதும்” என்று பகதி அழுதாள்.

ஒரு பிடி மண் எடுத்து மித்திகை மாயச்சொல்லை உச்சரித்தபோது ஒரு கரிய வௌவால் தோன்றியது. அது பறந்து அவன் சென்றவழியே தொடர்ந்தது. சற்றுநேரத்தில் அவன் கடும் சீற்றத்துடன் திரும்ப வந்தான்.

“பழிகாரி… என் தவத்தை குலைக்க அனுப்பப்பட்டவள் நீ… என்னை அழிக்கும் கொடிய நோய் நீ” என்று கூவியபடி கையை ஓங்கிக்கொண்டு அவளருகே வந்தான். ஆனால் அப்படியே நின்றான். “புத்தம் சரணம் கச்சாமி, சங்கம் சரணம் கச்சாமி, தர்மம் சரணம் கச்சாமி” என்று சொன்னபடி கண்மூடி நின்றான். கண்களை திறந்தபோது புன்னகை கொண்டிருந்தான். அவன் காலடியில் அந்த கரிய வௌவால் விழுந்து கிடந்தது.

“ஏனோ உன் மேல் கடும் வெறுப்பும் சினமும் கொண்டேன். அதுவும் உன் தாயின் மாயமாக இருக்கலாம்… நல்லது, அதை என் ஞானகுரு அளித்த வஜ்ரமந்திரத்தால் வென்றுவிட்டேன். நீ என்மேல் கொண்ட விருப்பத்தால்தான் இதையும் செய்கிறாய் என்று எனக்குத் தெரியும். நீ வாழ்க!” என்று அவன் திரும்பிச் சென்றான்.

அவள் கதறியபடி தன் தாயிடம் சென்று விழுந்தாள். ஒரு வார்த்தைகூட பேசாமல் அழுதாள்.

“காமத்தையும் குரோதத்தையும் வென்றவர்கள்கூட மோகத்தை வெல்லமுடியாது. மோகம் என்பது மாயையில் ஆழ்தல். மாயையை மாயை என்று அறிந்தே மானுடர் தழுவிக்கொள்கிறார்கள். காலப்பேருருவையும் அதன் முகமாகிய சாவையும் அஞ்சியே மாயையை அள்ளி எடுத்து அணிந்துகொள்கிறார்கள்” என்றாள் மித்திகை. “அவன் இப்போது காலனைப் பார்ப்பான்.” அப்போது தொலைவில் ஒரு புலியின் உறுமல் கேட்டது.

சற்றுநேரத்தில் ஆனந்தன் திரும்பி வந்தான். “நான் வழியில் ஒரு புலியைக் கண்டேன். பசித்திருந்த அந்தப் புலி என்னை கொன்று தின்பதற்கு ஒரு கணம்தான் இருந்தது. ஒரு மரக்கிளை காற்றில் அசைந்த ஒலியில் அது அஞ்சி ஓடிவிட்டது. சாவைக் கண்முன் கண்டேன். எல்லாம் எத்தனை பொருளற்றது என்று புரிந்துகொண்டேன். நான் அடைந்த ஞானம், தேடிக்கொண்டிருக்கும் நிர்வாணம் எதுவும் சாவுக்கு முன் அர்த்தமுள்ளவை அல்ல. நான் செத்தால் மறுகணமே இந்த உலகம் என்னை மறந்துவிடும்” என்றான்.

அவள் கைகளைப் பற்றிக்கொண்டு அவன் சொன்னான். “என்னை காலத்தில் நிலைநிறுத்த உன்னால் முடியும். என் குழந்தைகளை நீ பெறுவாய். என் ரத்தம் இங்கே என்றும் அழியாமல் தொடர்ந்து வாழும்” அவளை தழுவிக்கொண்டு அவன் உடைந்த குரலில் தொடர்ந்தான். ”நான் விறகுவெட்டுகிறேன். மண்சுமக்கிறேன். மண்ணை உழுது விளைவிக்கிறேன். உன்னையும் உன் குழந்தைகளையும் கண் போல காத்து வளர்க்கிறேன். நம் குழந்தைகளைத் தவிர வேறெந்த நினைப்பும் இனி எனக்கு இல்லை. ஞானம், தியானம், வீடுபேறு எல்லாமே அர்த்தமற்ற சொற்களாக விலகிச் செல்லட்டும். உழைப்பும் தியாகமும் மட்டும்தான் இனி என் வாழ்க்கை. நான் வாழ்வது என் ரத்தம் இங்கே நீடிக்கவேண்டும் என்பதற்காக மட்டுமே.”

சட்டென்று அவன் கைகளை எடுத்துக்கொண்டு “என்ன சொன்னேன்?” என்றான். “என்ன சொன்னேன் நான்? வேறு எவரோ சொன்னதுபோல இருக்கிறது… என்னென்னவோ சொன்னேன்” என்றான். கையை நெஞ்சில் வைத்து பிரார்த்தனை செய்தான். பின்னர் கண்களைத் திறந்து “அது மாயை. இங்கே அனைவரையும் கட்டிப்போட்டிருக்கும் மகாமாயை. என் ஆசிரியர் அருளிய மைத்ரேய மந்திரத்தால் அதை நான் மீண்டும் வென்றேன். இந்த வெற்றி இறுதியானதாக இருக்கட்டும்” என்றபின் அவளை கைதூக்கி வாழ்த்திவிட்டு திரும்பிச் சென்றான்.

(மேலும்)

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on June 30, 2025 11:32

நாவலை எழுதவைப்பது

இங்கே தமிழ், ஆங்கிலம் இரண்டு மொழிகளும் அரைகுறையாகவே தெரிந்திருக்கின்றன. நான் சொல்வது தொழில்நுட்பக்கல்வி பெறும் மாணவர்களைப் பற்றி அல்ல. ஆங்கில இலக்கியக் கல்வி பெறும் மாணவிகளே அந்த தரத்தில்தான் இருக்கிறார்கள்.

நாவலை எழுதவைப்பது… maansa publications Novel Competition

 

 

The speech about empiricism and falsification is profound. In these days of AI, we are going toward a period where data-based education becomes useless and original thought is a must for any education and further work.

At this age of AI…
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on June 30, 2025 11:30

June 29, 2025

அறிவும் பக்தியும் முரண்பட்டவையா?

ஆலயக்கலையும், மரபிலக்கியமும் அறிவதால் பக்தர்களுக்கு என்ன பயன்? அறிவை பக்திக்கு எதிரானதாகச் சொல்லும் ஒரு வழக்கம் நம்மிடையே உண்டு. கற்குந்தோறும் ஆணவம் பெருகி பக்தி அழியும் என்பார்கள். ‘கள்ளமில்லாத பக்தி’ என்னும் சொல் பிரபலமானது. உண்மையில் அப்படித்தானா?

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on June 29, 2025 11:36

இன்றைய கல்வியின் சிக்கல்கள்

அன்புள்ள ஜெயமோகன்,

அறம் இணைய இதழில் சாவித்ரி கண்ணன் எழுதிய மூன்று செய்திக்கட்டுரைகளை உங்கள் கவனத்துக்குக் கொண்டுவருகிறேன். கல்வியின் வருங்காலம் என்ற தலைப்பில் நீங்கள் எழுதிய கட்டுரையை கண்டபின் இதை உங்கள் கவனத்துக் கொண்டுவர தோன்றியது. பச்சையப்பன் அறக்கட்டளை எத்தனை தொன்மையானது என உங்களுக்குத் தெரியும். அதை கையில் வைத்திருந்தவர்கள் எவருமே பொதுவாழ்க்கையிலுள்ளவர்கள் அல்ல. அவர்கள் அரசியல்வாதிகளின் பினாமிகள். அவர்களை விலக்கி நீதிமன்றம் நியமித்த புதிய நிர்வாகிகள் அந்த அறக்கட்டளையில் ‘பணம்பெறாமல் தகுதிப்படி’ ஆசிரியர்களை நியமிக்க நடத்திய சட்டப்போராட்டம், அதன் வெற்றி ஆகியவற்றைப் பற்றியது இந்தக் கட்டுரை.

பாக்தாத் திருடர்களும், பச்சையப்பன் அறக்கட்டளையும்! உச்சகட்ட ஊழலில் தமிழக உயர் கல்வித் துறை! லஞ்சம் தராமல் போராடி வென்ற பச்சையப்பன் அறக்கட்டளை!

‘தகுதி அடிப்படையில் ஆசிரியர்களை நியமிப்பது என்பது ஒரு கல்வித்துறையின் முதல் விதிகளில் ஒன்று. தமிழகத்தில் அதுவே நிகழ்வதில்லை. கல்லூரி ஆசிரியர் பணிக்கு ஒரு கோடி ரூபாய் வரை கையூட்டு என்பது பரவலாக ஏற்றுக்கொள்ளப்பட்ட நிலையில் பயிற்றியலின் நுட்பங்களைப்பற்றியோ அதன் அடுத்த கட்ட வளர்ச்சியைப்பற்றியோ பேசுவதைப்போல பொருளற்ற ஏதுமில்லை’.

–என்று உங்கள் கட்டுரையில் நீங்கள் குறிப்பிட்டிருக்கிறீர்கள். அந்த அடிப்படையான ஒரு விஷயத்திற்கு இன்று நேர்மையானவர்களும் நாடறிந்தவர்களுமான நிர்வாகிகள் எத்தனைபெரிய போராட்டத்தை நடத்தவேண்டியிருக்கிறது என்று மட்டும் நீங்கள் கவனிக்கவேண்டும். எவருக்கு எதிராக? அதை அறிய கீழே காணும் நக்கீரன் செய்தியை மட்டும் பார்க்கலாம். இது அந்த நேர்மையான நிர்வாகிகளுக்கு எதிராக அரசியல்தரப்பு தொடுக்கும் அவதூறுப்போரின் பதிவு.

பச்சையப்பன் அறக்கட்டளை கல்லூரிகளில் விதிமீறல்; செயலர் மீது குவியும் குற்றச்சாட்டு?

இச்சூழலில் நம்மில் ஒரு சாரார் கல்விச்சீர்திருத்தங்களைப் பற்றிப் பேசிக்கொண்டிருப்பதனால் என்ன பயன் உருவாக முடியும்? இங்கே ஒவ்வொரு சிறிய விஷயமும் பெரிய செய்தியாக ஆகி பல நாட்கள் விவாதிக்கப்படுகிறது. தக் லைஃப் என்ற ஒரு சினிமா பற்றி ஆயிரக்கணக்கான விமர்சனங்கள் எழுதப்பட்டன. அறிவுஜீவிகள் எல்லாரும் ஆளுக்கொரு கட்டுரை எழுதினார்கள். (நீங்கள் உட்பட) ஆனால் இந்த அடிப்படையான செய்தியைப் பற்றி ஒரே ஒரு எழுத்தாளர்கூட ஒரே ஒரு வரிகூட எழுதவில்லை. எவருக்கும் எந்த அக்கறையும் இல்லை.

ஏன்? இன்றைய இணைய ஊடகம் அரசாலும் ஆதிக்கத்தாலும் கைப்பற்றப்பட்டுள்ளது. சில்லறை லாபங்களை அளித்து அத்தனைபேரையும் கையில் வைத்திருக்கிறார்கள். ஆதிக்கம் எதைப் பேசுகிறதோ அதைப்பேசவே இங்கே ஆளிருக்கிறது. எதிர்க்கட்சிகளும் ஆளும்கட்சியும் இதில் ஒரே தரப்புதான். இன்றைய சூழல் தமிழகத்தில் என்றைக்குமே வந்ததில்லை. அத்தனை எழுத்தாளர்களும், ஒருவர்கூட பாக்கியில்லாமல் ஆளும்கட்சியின் ஜால்ராக்களாக மாறியிருக்கிறார்கள். பயம், சபலம் எல்லாம்தான் காரணம். நீங்கள்கூட.

என்.விஜயராகவன்.

அன்புள்ள விஜயராகவன்,

நான் ஆளும்கட்சியின் ஆதரவாளன் அல்ல. எந்தக் கட்சியின் ஆதரவாளனும் அல்ல. ஆனால் அரசியல் விவாதங்களில் ஈடுபட இப்போது ஆர்வமில்லை. ஒரு காலத்தில் மெல்லிய ஆர்வமிருந்தது. இன்று அதனால் எந்தப் பயனும் இல்லை என்பதை உணர்ந்துவிட்டேன். ஏனென்றால் இன்று எல்லாமே விவாதங்கள்தான். விவாதம் என்பது தெளிவையும், தெளிவிலிருந்து செயலையும் உருவாக்கும் என்ற நிலை இன்று இல்லாமலாகிவிட்டிருக்கிறது. இன்று விவாதங்கள் செயலுக்கு மாற்றாக உள்ளன. விவாதங்களுக்காகவே விவாதங்கள் நிகழ்கின்றன. ஒருவகை கேளிக்கைகள் அவை. அந்தக் கேளிக்கைத்தொழிலை நடத்துபவை சமூக ஊடகங்களை உருவாக்கி நடத்தும் பன்னாட்டு நிறுவனங்கள். விவாதிப்பவர்கள் அந்த ஊடகங்களின் நுகர்வுப்பொருளான விவாதங்களின் நுகர்வோரும், உற்பத்தியாளர்களுமாக ஆக்கப்பட்டிருக்கிறார்கள். அவை  இன்றைய மனிதர்களை பிரம்மாண்டமான ஒரு மாய உலகுக்குள் கொண்டுசென்று வைத்திருக்கின்றன. மேட்ரிக்ஸ் திரைப்படம் போல .இன்றிருக்கும் ஆளும்தரப்பு, எதிர்த்தரப்பு என்னும் விவாதக்களத்தில் எந்தத் தரப்பை எடுத்து பேசிக்கொண்டிருப்பவர்கள்மீதும் எனக்கு ஈடுபாடில்லை. அது ஒருவகையான நேரவிரயம் மட்டுமே.ஆகவே இன்று எதையேனும் செய்பவர்கள் மீது மட்டுமே கவனம் கொள்ளவேண்டும், எதையாவது செய்யவேண்டும் என நினைக்கிறேன். சிறிய அளவிலானாலும் சரி.

நீங்கள் குறிப்பிட்ட செய்திகளை நான் பார்க்கிறேன். இந்தச் செய்திகளின் அடிப்படையை இங்கே அரசியல் களத்தில் விவாதிக்க ஏதுமில்லை. அத்தனைபேருக்கும் மிகவெளிப்படையாகவே தெரிவது இன்றைய கல்விச்சூழலில் பணியிடங்கள் நிரப்பப்படும் விதம். (ஆனால் அண்மையில் தமிழக அரசு கல்வியிடங்களை நிரப்பும் பணியில் தகுதி அடிப்படை மட்டுமே கருத்தில்கொள்ளப்பட்டது, அமைப்புசார்ந்த ஊழல் இல்லை என்று அணுக்கமான நண்பர்கள் சொன்னார்கள். அதைப் பதிவுசெய்தால் நான் ஆளும்கட்சி ஆதரவாளன் என்பீர்கள்). இந்த கல்வித்துறை ஊழல் நீண்டகாலமாக உருவாகி நிலைகொண்டுவிட்டது. இதில் பங்குபெறாத எந்த அரசியல்தரப்பும் இன்றில்லை. இதைப்பற்றிய விழிப்புணர்வை அறம் இதழ் போன்ற  ஊடகங்கள் உருவாக்குவதிலும், உங்களைப் போன்றவர்கள் அக்கறை காட்டுவதிலும் எனக்கு மகிழ்ச்சியே. மாற்றங்கள் உருவாகி வரட்டும். ஆகவே உங்கள் கடிதத்தை வெளியிடுகிறேன். ஆனால் இன்றைய என் மனநிலையில் அச்செய்திகளுக்குள் சென்று எது உண்மை எது பொய் என்றெல்லாம் விவாதிக்க முடியாது. நான் தொடர்ச்சியாக ஒரு ‘பின்வாங்கும் உளநிலை’யில்தான் இருக்கிறேன். என் செயல் சார்ந்த சிறிய வட்டத்துக்குள் நின்றுவிட விரும்புகிறேன்.

நான் பேசிக்கொண்டிருப்பது இன்னொருவகைக் கல்வி பற்றி. இன்றையக் கல்வியின் நோக்கமே மேலைநாடுகள் உருவாக்கி வைத்திருக்கும் மிகையுற்பத்தி- நுகர்வு என்னும் தொழில் – பொருளியல் சூழலுக்கு உகந்த ஊழியர்களை உருவாக்கி அளிப்பது மட்டுமே. வேலைவாய்ப்பு மட்டுமே இன்றைய கல்வியின் நோக்கம். அத்தனை கல்விநிலையங்களும் ‘பிளேஸ்மெண்ட்’ என்பதை மட்டுமே வாக்குறுதியாக அளிக்கின்றன. இச்சூழலில் அதை தவிர்க்கவும் முடியாது , நம் பொருளியலே அதை நம்பி உள்ளது. தொழில்சார்ந்த கல்வி வேண்டாம் என்று சொல்ல நடுத்தரவர்க்கத்தினரால் முடியுமா என்ன? அந்த பயிற்சியை எவ்வளவு குறைவான செலவில், எவ்வளவு மிகுதியாக நாம் அளிக்கிறோமோ அந்த அளவுக்குத்தான் நம்மால் இன்று பொருளியலில் தாக்குப்பிடிக்க முடியும். நம் வாழ்க்கையே நம்மிடமிருக்கும் மலிவான தொழிற்கல்வி சார்ந்து உள்ளது. நான் அதற்கு மேல் கூடுதலாக அளிக்கப்படவேண்டிய பண்பாட்டுக் கல்வி, கலைக்கல்வி பற்றி மட்டும் பேசுகிறேன். அத்தகைய கல்விக்கான ஆர்வம்கொண்டவர்களுக்கு அதற்கான இடம் இங்கே இருக்கவேண்டும் என்பதை மட்டுமே முன்வைக்கிறேன்.

ஜெ

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on June 29, 2025 11:35

அனுராதா ஆனந்த்

அனுராதா ஆனந்தின் முதல் சிறுகதை ‘மஞ்சள் குருவி’ 2017-ல் வெளிவந்தது. இவரின் மொழிபெயர்ப்புகள், கவிதைகள், சிறு கதைகள், கட்டுரைகள், விகடன், விகடன் தடம், உயிர்மை, கல்கி, குங்குமம், குமுதம், கல்குதிரை, ஓலைச்சுவடி, மங்கையர் மலர், புரவி, நம் நற்றிணை, நீலம் போன்ற பத்திரிகைகளிலும் வாசகசாலை, கனலி, வனம், நுட்பம் போன்ற இணைய இதழ்களிலும் வெளிவந்துள்ளன. சென்னை சங்கமம் நிகழ்ச்சியில் கவிதை வாசிப்பிற்கு தேர்ந்தெடுக்கப்பட்ட அறுபது கவிஞர்களுள் ஒருவர்.

அனுராதா ஆனந்த் அனுராதா ஆனந்த் அனுராதா ஆனந்த் – தமிழ் விக்கி
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on June 29, 2025 11:33

Jeyamohan's Blog

Jeyamohan
Jeyamohan isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow Jeyamohan's blog with rss.