காவியம் – 71
”சிராவஸ்தியில் இந்தக் கதை நிகழ்ந்தது” என்று கானபூதி சொல்லத் தொடங்கியது. “அங்கே பகதி என்னும் சண்டாளசாதிப் பெண் இருந்தாள். அவளுடைய தாய் மித்திகை அவள் சாதியில் புகழ்பெற்ற மாயக்காரி. நோய்தீர்ப்பவளும் நோய் அளிப்பவளுமாகத் திகழ்ந்தாள். மண்ணில் ஒரு கைப்பிடி அள்ளி நீரில் கலக்கிக் கொடுத்து அவள் நோய்களை தீர்த்தாள், நஞ்சும் அளித்தாள். மண்ணில் எந்த கைப்பிடியை, எப்படி, எந்தச் சொல்லைச் சொன்னபடி அள்ளவேண்டும் என அவள் மட்டும்தான் அறிந்திருந்தாள். மித்திகையை அவள் சாதியினர் வணங்கினர், அஞ்சவும் வெறுக்கவும் செய்தனர்.”
மித்திகை இளமையில் ரப்தி ஆற்றில் இரவில் நீந்தி விளையாடிக் கொண்டிருக்கையில் வெள்ளப்பெருக்கில் காணாமலானாள். தீண்டப்படாதவர்களாகிய அவளுடைய சாதியினர் ஆற்றில் குளிப்பதற்குத் தடை இருந்தது. அவர்கள் ஊற்றுகளிலும் சிறிய ஓடைகளிலும் புதர்களுக்குள் மறைந்துகொண்டு குளிப்பதே வழக்கம். மித்திகை நீச்சல் பழக விரும்பினாள். அவளுடைய சாதியினர் எவருக்கும் நீச்சல் தெரிந்திருக்கவில்லை. நீச்சலை அவர்கள் கற்றுக்கொள்ளவும் முடியாது என அவர்கள் நம்பினார்கள். நீரில் கருங்கல்போல சண்டாளர்கள் மூழ்கி மறைவார்கள். ஏனென்றால் அவர்கள் மண்ணாலானவர்கள். அவர்கள் தங்களை மிருச்சர்கள் என்று சொல்லிக்கொண்டனர். பிறர் அவர்களை மிலேச்சர்கள் என்றனர்.
ஒவ்வொரு உயிரும் பஞ்சபூதங்களின் கலவை. மிருச்சர்கள் தூய மண்ணால் ஆனவர்கள். அந்தணர் தூய நெருப்பால் ஆனவர்கள். புழுக்கள் மண்ணாலும், மீன்கள் நீராலும், பறவைகள் காற்றாலும் பூச்சிகள் வானத்தாலும் ஆனவை. செம்பருந்து தீயாலானது. பிற மனிதர்களும் உயிர்களும் வெவ்வேறு பூதங்களின் வெவ்வேறுவகை கலவைகள் என அவர்கள் நம்பினர். ”வானம் சத்வகுணம் கொண்டது. நெருப்பு ரஜோகுணம் கொண்டது. மண் தமோகுணம் கொண்டது. நீர் சத்வகுணமும் தமோகுணமும் கலந்தது. காற்று ரஜோகுணமும் சத்வகுணமும் கலந்தது. ஒவ்வொன்றும் இங்கே வகுக்கப்பட்டுள்ளன” என்று மித்திகையின் தந்தையும், சண்டாளர்குடியின் பூசகருமான தூளிகர் சொன்னார்.
“மண்ணில் இருந்து உருவான நாம் தமோகுணம் கொண்டவர்கள். நம் நிறம் கருமை, அது வளமான மண்ணின் நிறம். நம் இயல்பு அமைதி. அதை பிறர் சோம்பல் என்பார்கள். நம் சுவை உப்பு. அதை பிறர் துவர்ப்பு என்பார்கள். நாம் நிலைபெற்றவர்கள், அனைத்தையும் தாங்கியிருப்பவர்கள், அனைத்தையும் முளைக்கவைப்பவர்கள், அனைத்தும் நம்மிடம் வந்துசேர்கின்றன, நாம் அனைத்தையும் தூய்மை செய்கிறோம்” என்று தூளிகர் சொன்னார். “நம் தெய்வமான தலாதேவி அழிவற்றவள், அனைத்தும் அழிந்தபின் அவள் மட்டும் எஞ்சியிருப்பாள். அனைத்தும் வேர்வடிவில் அவளுக்குள் இருக்கும். வானம், நீர், நெருப்பு, காற்று ஆகியவையும் அவளுக்குள் நுண்வடிவில் இருக்கும். அவளிடமிருந்து அனைத்தும் மீண்டும் உருவாகும்.”
இளமையில் மித்திகை எதற்கும் அடங்காதவளாக இருந்தாள். தூளிகர் சொல்லும் ஒவ்வொரு வார்த்தையையும் மறுத்துப் பேசுபவள் அவள் மட்டும்தான். “எளிய விலங்குகள்கூட நீந்துகின்றன. நம்மாலும் நீந்த முடியும்” என்று அவள் தன் தந்தையிடம் சொன்னாள். “என் கைகளும் கால்களும் பிறவிலங்குகள் போலவே உள்ளன. அவற்றிடமிருக்கும் மூச்சுக்காற்றும் என்னிடம் உள்ளது. நான் நீரில் குதித்தால் நீந்துவேன்.”
தூளிகன் “சண்டாளப்பெண் நீந்துவதை அவர்கள் அறிந்தால் நம் குடில்களையே கொளுத்தி அழிப்பார்கள்” என்றார். “அவ்வப்போது நகரைத் தூய்மை செய்வதற்காக அவர்கள் நம் குடில்களைக் கொளுத்திச் சாம்பலாக்குகிறார்கள். அவர்களுக்குக் காரணம் ஒன்று தேவை, அவ்வளவுதான்.”
“அப்படியென்றால் நீங்கள் அஞ்சுகிறீர்கள். அச்சத்திற்காக இந்த கொள்கைகளையெல்லாம் உருவாக்கிச் சொல்லிக்கொண்டிருக்கிறீர்கள்” என்றாள் மித்திகை.
“அஞ்சவேண்டும். ஏனென்றால் நம்மிடம் க்ஷத்ரியர்களுக்குரிய தோள்வீரம் இல்லை. பிராமணர்களுக்குரிய சொல்வல்லமை இல்லை. வைசியர்களுக்குரிய செல்வமும் சூத்திரர்களுக்குரிய கருவித்திறமையும் இல்லை” என்றார் தூளிகர்.
“நாம் அவற்றை கற்கவே இல்லை, கற்பதை நமக்குத் தடைசெய்திருக்கிறார்கள்” என்று மித்திகை சொன்னாள். “ஆனால் அந்த தடையை நாமே நம்பச் செய்திருக்கிறார்கள். நாமே நம்மை தடுத்துக்கொள்கிறோம்.”
அவள் எவருமறியாமல் இரவில் ரப்தியில் இறங்கினாள். ஓரிரு நாட்களிலேயே அவளே நீந்தக் கற்றுக்கொண்டாள். நீச்சல் தன் கைகளிலும் கால்களிலும் ஏற்கனவே இருந்துகொண்டிருப்பதை அவள் அறிந்தாள். இரவுகளில் ஆற்றில் நீந்தி நெடுந்தொலைவு செல்வாள். நகரத்தின் எல்லை வரைச் சென்று அங்கே எரியும் விளக்குகளைப் பார்த்தபின் திரும்பி வருவாள்.
ரப்தியில் வெள்ளம் வந்துகொண்டிருந்தபோது அவள் அதில் நீந்துவதற்காக இறங்கினாள். அவள் ஆற்றில் நீந்துவதை அவள் தோழிகள் அறிந்திருந்தனர். அன்று நான்குபேர் அவள் ஆற்றில் பாய்வதை கண்டனர். ஒருத்தி அவளைத் தடுத்தும் பார்த்தாள். அடிபட்டு சீற்றம்கொண்ட மலைப்பாம்பு போல ஓசையிட்டபடி புரண்டுகொண்டிருந்த ஆற்றுநீர் அவளை அடித்துக்கொண்டுசென்றது. அவள் மறைந்தாள்.
அவர்கள் அவள் தந்தை தூளிகரிடம் மூன்றுநாட்களுக்குப் பின்னர் நடந்ததைச் சொன்னார்கள். அவர் மேலும் இரண்டுநாட்கள் காத்திருந்தபின் அவள் இறந்துவிட்டதாக முடிவுசெய்து சாவுச்சடங்குகளைச் செய்தார். அவளைப்போன்ற உருவத்தை மண்ணில் செய்து, அதை மலர்களுடனும் சோற்றுப் பருக்கைகளுடனும் புதைத்து, அதன்மேல் ஒரு கல்லைவைத்து மேலும் மூன்றுநாட்கள் மலரும், அன்னமும், நீரும் அளித்து வழிபட்டார்.
அவளை அனைவரும் மறக்கத் தொடங்கியபோது, பன்னிரண்டு நாட்களுக்குப் பின்னர் அவள் அதே ரப்தி நதியில் நீந்தி திரும்பி வந்து நனைந்த ஆடையுடன் கரையேறினாள். சென்றபோதிருந்த அதே கோலம், ஆனால் அவள் மாறிவிட்டிருந்தாள். அவள் கண்கள் பாம்பின் நிலைகொண்ட பார்வையை அடைந்துவிட்டிருந்தன.
அவள் இறந்துவிட்டமையால் அவளை மீண்டும் குலத்தில் சேர்த்துக்கொள்ளக்கூடாது என்று தூளிகரே சொல்லிவிட்டார். அவள் வேர்களின் உலகத்திற்குச் சென்று திரும்பிவந்தவள். அவள் உடல் பாதிப் பங்கு பாம்புதான், அவள் கைநகங்கள் நச்சுப்பற்கள் என்றார். அவளும் பிறரிடம் பேச விரும்பவில்லை, பிறரை ஏறிட்டுப் பார்க்கவுமில்லை. ஆற்றங்கரையில் நாணல்குடில் ஒன்றை அமைத்து அங்கே தங்கினாள். அங்கேயே ஒரு பெண்குழந்தையைப் பெற்றெடுத்தாள். அவளுக்கு பிரகிருதி என அவள் பெயரிட்டாள். அவளுடைய சாதியினர் அக்குழந்தையை பகதி என்று அழைத்தனர்.
பகதி தன் தாயின் குடிலிலும், தன் பாட்டனாரின் குடிலிலுமாக மாறி மாறி வாழ்ந்தாள். அவளுக்கு அவள் சாதியில் இடமிருந்தது, எல்லா இல்லங்களிலும் அவளுக்கு வரவேற்பும் இருந்தது. ஆனால் அவள் இரவுகளில் தன் தாயுடன் தங்கினாள். தாய் அவளிடம் பெரும்பாலும் பேசுவதே இல்லை. அவள் நாகத்தின் கண்களுடன் ஆற்றங்கரை நாணல் சதுப்புக்குள் பதுங்கிச் சுருண்டு வானத்தைப் பார்த்தபடி அமர்ந்திருந்தாள். ஆனால் பகதி தன் தாயை விரும்பினாள். அவளுக்கான உணவைச் சமைத்துப் பரிமாறினாள். அவளை நீராட்டி ஆடைகள் அணிவித்தாள். அவள் கூந்தலை கழுவி, எண்ணைபூசி, பின்னி பராமரித்தாள்.
மித்திகை நோய் தருபவள் என்று அவள் சாதியினர் அஞ்சினார்கள். ஒரு முறை அவள் ஆற்றங்கரைச் சதுப்பில் அமர்ந்திருக்கையில் அங்கே தர்ப்பை அறுக்க வந்த ஒரு பிராமணர் அவளைக் கண்டு சீற்றம் அடைந்து கைதூக்கி சாபமிடப்போனபோது அவள் தரையில் இருந்து மண்ணை அள்ளி காற்றில் வீசி அறியாத மொழியில் ஏதோ சொன்னாள். அந்தப் பிராமணர் அங்கேயே மயங்கி விழுந்தார். இரண்டுநாட்கள் கடும் காய்ச்சலில் கிடந்தபின், புரியாத மொழியில் ஏதோ புலம்பியபடி வலிப்பு வந்து இறந்தார். சண்டாளர்களை பிறர் அஞ்சத்தொடங்கியது அதன்பிறகுதான்.
நோய் அளிப்பவளால் நோயை குணப்படுத்தவும் முடியும் என்று சண்டாளர்கள் கண்டுகொண்டார்கள். அவளிடம் நோயுற்ற குழந்தைகளை முதலில் கொண்டுவந்தனர். அவள் மண்ணை அள்ளி அவர்களின் முகத்தில் வீசினாள். வாய்க்குள் சிட்டிகை மண்ணைப் போட்டு அறியாத மொழியில் பேசினாள். அவர்கள் நலம்பெற்று எழுந்தார்கள். அதன்பின் சண்டாளர்களின் பல்வேறு குடிகளில் இருந்து அவளிடம் நோயாளிகளைக் கொண்டுவரத் தொடங்கினார்கள். அவள் அனைவரையும் குணப்படுத்தினாள். அவள் தன் சாதியில் எவருக்கும் நோய் அளிக்கவில்லை. ஆனால் அவளை அவர்கள் அஞ்சினார்கள், அஞ்சியமையால் ரகசியமாக வெறுத்தார்கள்.
பகதி அன்று காலை தன் பாட்டனாரின் குடிலுக்குச் சென்று அதை கூட்டிப் பெருக்கிவிட்டு நீர் அள்ளுவதற்காக மரத்தைக்குடைந்து செய்த குடத்துடன் கிணற்றுக்குச் சென்றாள். அவர்களின் சாதியினருக்காக அவர்களே தோண்டிக்கொண்ட அக்கிணற்றில் அந்த முதிர் கோடைகாலத்தில் நீர் மிக ஆழத்திற்குச் சென்றுவிட்டிருந்தது. கோரைநாரை முறுக்கிச் செய்த கயிற்றை மேலும் மேலும் இணைத்து நீட்டவேண்டியிருந்தது. சுரைக்காய் குடுவையை கட்டி இறக்கி, ஆழத்தில் இருந்த நீரை கலக்காமல் மெல்ல அள்ளிக் கொண்டுவர வேண்டும். ஊரில் ஒவ்வொருவரும் எவ்வளவு நீர் அள்ளவேண்டும், எத்தனை குடம் எடுக்கவேண்டும் என்று கணக்கு இருந்தது.
அந்த ஆண்டு ரப்தி ஆறு வற்றி ஆங்காங்கே சிறுசிறு குட்டைகளாகத் தேங்கிக்கிடந்தது. நூறுவயதான அவள் பாட்டனாரே அப்படி ரப்தி வற்றியதை கண்களால் பார்த்ததில்லை. ஆற்றை நம்பியே வாழ்ந்த சிராவஸ்தி நிலைகுலைந்துவிட்டிருந்தது. நகரில் இருந்து மக்கள் வரிசையாக குடங்களுடன் ஆற்றுக்கு வந்தனர். கரையோரச் சதுப்புக்காடு வறண்டதனால் அங்கிருந்த உயிர்கள் அந்த குட்டைகளில் குடியேறியிருந்தன. காட்டுக்குள் இருந்த விலங்குகள் அங்கே வந்து நீர் அருந்தின. ஆகவே குட்டைகள் கலங்கிச் சேற்றுக்குழிகளாக மாறியிருந்தன. ஒவ்வொரு நாளும் புதிய இடத்தில் மணலில் தோண்டிய ஊற்றுகளில் இருந்துதான் மக்கள் நீர் அள்ளிச் சென்றனர்.
ஆனால் தூளிகரால் இடம் பார்க்கப்பட்டு தோண்டப்பட்ட சண்டாளரின் கிணற்றில் தண்ணீர் முழுக்க வற்றவே இல்லை. நீரின் சுவை மாறுபடவுமில்லை. அவர்கள் அனைவருக்குமான நீர் அதில் இருந்தது. அந்த நீரை உயர்சாதியினர் குடிக்க முடியாது என்பதனால் எவரும் அதை கைப்பற்றவுமில்லை. “தலாதேவி தன்னுடைய ஒரு முலைக்காம்பை அவளுடைய குழந்தைகளுக்காக எப்போதும் விட்டுவைப்பாள். நம் சாதியினர் தண்ணீரில்லாமல் இறந்ததே இல்லை. இந்த சிராவஸ்தியில் இதேபோல ரப்தி வறண்டுபோய் மக்களெல்லாம் கிளம்பிச் சென்றதாக ஒரு கதை உண்டு. நம் மக்கள் இங்கேயே வாழ்ந்தனர். ரப்தி மீண்டும் பெருகி, மக்கள் திரும்பி வந்தபோது நாம் இங்கேயே இருப்பதைக் கண்டு ஆச்சரியப்பட்டார்களாம்” என்றார் தூளிகர்.
பகதி அன்றுகாலை அங்கே நீர் மொண்டுகொண்டிருந்தபோது தொலைவில் ஒருவன் தள்ளாடி நடந்து வருவதைக் கண்டான். அவன் நீண்டதூரப் பயணி என்பது அவன் நடையிலேயே தெரிந்தது. அவன் மண்நிறமான ஒற்றை ஆடையை இடையில் அணிந்திருந்தான். இன்னொரு மண்நிற ஆடையை தோளுக்குக் குறுக்காகப் போட்டிருந்தான். கையில் கரிய பளபளப்புடன் திருவோடு. இன்னொரு கையில் ஒரு கழி. வேறெந்த பொருளும் அவனிடம் இருக்கவில்லை, மாற்று ஆடைகள்கூட. அவன் தலை மழிக்கப்பட்டு மண்கலம்போல் இருந்தது.
அவன் அவளருகே வந்து தன் திருவோட்டை நீட்டி உதட்டசைவால் நீர் கொடுக்கும்படிக் கேட்டான். கடுமையான தாகத்தால் அவன் நடுங்கிக் கொண்டிருந்தான். நீண்டநாட்கள் வெயிலில் அலைந்து வெந்துபோன முகம். ஆனால் மிக அகன்ற, மிகத்தெளிவான கண்கள். புன்னகைக்காமல் இருக்கும்போது கூட கண்களில் அத்தனை மலர்ச்சி இருக்கமுடியும் என அவள் முதல்முறையாகக் கண்டாள். அவள் அந்தக் கண்களைப் பார்த்துக்கொண்டு சிந்தனையற்று நின்றாள். அவன் மீண்டும் உதடுகளை அசைத்து “ஃபவதி பிக்ஷாம் தேஹி” என்றான்.
அவள் திடுக்கிட்டு “இது சண்டாளர்களின் கிணறு” என்றாள்.
“அதில் குடிக்க நீர் உள்ளது அல்லவா?”
”ஆமாம், ஆனால் இங்கே உயர்சாதியினர் குடிப்பதில்லை.”
“நான் உயர்சாதியினன் அல்ல, துறவி, பிச்சைக்காரன்” என்று அவன் சொன்னான். “நானும் நான்கு சாதிகளுக்கு வெளியே வாழ்பவன். சுடுகாடுகளில் இரவு உறங்குபவன்.”
“நீங்கள் உண்மையாகவே இதைக் குடிக்கலாமா?” என்று பகதி மீண்டும் கேட்டாள். “உங்களுக்குத் தெரியாமலிருக்கலாம், உங்களை அவர்கள் பிறகு ஊருக்குள் விடமாட்டார்கள்.”
“நான் நீரில் பேதம் பார்ப்பதில்லை. மண்ணிலும் மனிதரிலும்கூட பேதம் பார்ப்பதில்லை” என்று அவன் சொன்னான். “புரிந்துகொள்ளமுடியாத ஒரு கருணை நம்மை இங்கே வாழச்செய்கிறது. உன்னையும் என்னையும், இந்த நகரின் அரசனையும், இந்த வெந்தமண்ணின் ஆழத்தில் வாழும் புழுவையும் எல்லாம் அதுவே பேணுகிறது. அனைவரும் அதன் முன் சமமானவர்களே. ஒருவன் இன்னொரு உயிரைவிட தன்னை எவ்வகையிலேனும் மேலானவன் என்று ஒரு கணம் எண்ணினால் அகங்காரம் என்னும் பெரும்பழியால் அவன் ஞானத்தில் இருந்தும் நிர்வாணத்தில் இருந்தும் நூறுகாதம் பின்னால் செல்கிறான். ஒருவன் இன்னொரு உயிரைவிட தன்னை தாழ்ந்தவன் என எண்ணினால் அழிவற்ற தர்மத்தை அவமதித்த பழியை அடைந்து ஞானத்தில் இருந்தும் நிர்வாணத்தில் இருந்தும் ஆயிரம் காதம் பின்னடைகிறான்.”
அவள் நெஞ்சில் கைவைத்து “தலாதேவியே!” என்றாள். “நீங்கள் பேசுவது புரியவில்லை. ஆனால் உங்கள் வார்த்தைகள் சங்கீதம் போலிருக்கின்றன… குயில்பாடுவதுபோல..” பரபரப்புடன் “தண்ணீர் இதோ” என்று அவனுடைய திருவோட்டில் நீரை ஊற்றினாள்.
அவன் “புத்தம் சரணம் கச்சாமி, சங்கம் சரணம் கச்சாமி, தர்மம் சரணம் கச்சாமி” என்று சொன்னபின் அதில் சிறிது நீரை அருகே இருந்த செடிக்கு ஊற்றியபின் குடித்தான்.
“நீ அளவிறந்த பெருங்கருணைகொண்ட தர்மத்தால் வாழ்த்தப்பட்டவளாவாய். இந்த எளியவனின் தாகத்தை இன்று நீ தீர்த்தாய்” என்று அவன் சொன்னான்.
“உங்கள் பெயர் என்ன? நீங்கள் யார்? நாடோடியா?”
“என் பெயர் ஆனந்தன். நான் இந்த உலகுக்குக் கருணையின் செய்தியுடன் வந்த ததாகதரான சித்தார்த்த கௌதமரின் மாணவன்” என்று அவன் சொன்னான்.
“நீங்கள் மாயம் அறிந்தவரா? மண்ணில் இருந்து பொன்னை வரவழைக்க உங்களால் முடியுமா? காற்றில் இருந்து மலரை மலரவைப்பீர்களா?”
அவன் சிரித்து “அதெல்லாம் மிகச்சிறிய வித்தைகள். என் ஆசிரியரிடமிருந்து நான் அதைவிட ஆற்றல்மிக்க வித்தைகளைக் கற்றிருக்கிறேன்” என்றான். சற்று கேலி கலந்த இனிய புன்னகையுடன் அவள் கண்களை நோக்கி “ததாகதரின் சொல்லைக் கொண்டு நான் கல்நெஞ்சக்காரர்களான அரசர்களை கருணையால் கண்கலங்கச் செய்திருக்கிறேன். பத்து தலைமுறையாகப் பதுக்கி வைத்திருந்த செல்வத்தை எடுத்து ஏழைகளுக்கு உணவிடும்படி வணிகர்களை மாற்றியமைத்திருக்கிறேன்.”
அவள் நெஞ்சில் கைவைத்து “தெய்வங்களே” என்று ஏங்கினாள்.
மீண்டும் அவளை வணங்கியபின் திரும்பிச் சென்றான். மெல்லிய கால்களாயினும் அவை உறுதியாக மண்ணில் பதிந்தன. அவன் நீர்மேல் தத்துப்பூச்சி போலச் செல்வதாக அவள் நினைத்தாள்.
அவள் குடுவையையும் கயிற்றையும் தரையில் போட்டுவிட்டு அவனுக்குப் பின்னால் ஓடினாள். “நீங்கள் என் குடிலுக்கு வரவேண்டும். என்னுடன் இருக்கவேண்டும்” என்றாள்.
“இல்லை, நான் இல்லறத்தார் வீட்டில் தங்குவதில்லை. அவர்களிடமிருந்து பிச்சை ஏற்பதுண்டு. ஆனால் நான் நேற்று மதியம் சாப்பிட்டுவிட்டேன். இனி இன்று மதியம்தான் சாப்பிடுவேன். அந்த உணவை எனக்காக எடுத்துக்கொண்டு எவரோ அந்நகரில் காத்திருக்கிறார்கள்” என்றபின் அவன் முன்னால் நடந்தான்.
அவள் மீண்டும் அவன் பின்னால் ஓடினாள். “ஆனால் உங்களை என்னால் பிரிய முடியாது. நான் உங்களுடன் இருக்கவேண்டும். உங்களை பார்க்காமல் என்னால் இனிமேல் இருக்கமுடியாது” என்றாள்.
“அது நான் அல்ல” என்று அவன் சொன்னான். ”வெளியே நாம் ஈர்க்கப்படும் அனைத்தும் நமக்குள் இருக்கும் சிலவற்றின் பிரதிபலிப்புகள்தான். இப்போது உனக்குப் புரியாது. நான் சொல்வதை மீண்டும் நினைத்துப்பார்” மீண்டும் கைகூப்பிவிட்டு அவன் நடந்து சென்றான்.
அவள் அவனுடன் செல்லமுடியவில்லை. சட்டென்று அவளுக்கு அவள் தாய் சொல்லிக்கொடுத்த மந்திரம் நினைவுக்கு வந்தது. அதைச் சொன்னபடி இடக்கையால் ஒரு பிடி மண்ணை அள்ளி அவன் காலடிசுவடுமேல் போட்டாள். அப்பால் நடந்துசென்ற அவன் தள்ளாடி மண்மேல் விழுந்தான்.
அவள் அவனருகே சென்று குனிந்து பார்த்தாள். அப்படியே அவனைத் தூக்கிக்கொண்டு நாணல்புதர்களின் வழியாக தன் தாயின் குடில்நோக்கிச் சென்றான். அவன் நீண்ட பயணங்களல் எடையற்றிருந்தான். அவள் உறுதியான கரிய உடலுடன் குதிரைபோலிருந்தாள். மிக எளிதாக அவனை அவள் கொண்டுசென்றாள், தன் தோளில் ஒரு மாலையை அணிந்திருப்பதாகவே அவளுக்குத் தோன்றியது.
அவள் குடிலை அடைந்தபோது அவள் அம்மா அங்கிருந்தாள். அவள் அவனைக் கண்டதும் திகைத்தாள். “இவனை எங்கே கண்டாய்? யார் இவன்?” என்று கேட்டபடி அருகே வந்தாள்.
“இவர் எனக்கு வேண்டும். இவரை என்னால் பிரியமுடியாது. ஆகவே நான் இவரைத் தூக்கி வந்தேன்…” என்று அவள் தன் தாயிடம் சொன்னாள். “எனக்கு இவர் மட்டும்தான் வேண்டும். இவர் இல்லாவிட்டால் நான் உயிர்வாழ மாட்டேன்…”
அவனை அவள் குடிலில் படுக்கச் செய்தாள். அவள் தாய் அருகே நின்றபடி “இவர்களை உனக்குத் தெரியாது. இவர்கள் பெண்களை வெறுப்பவர்கள். பெண்களை தொடுவதையோ, பெண்கள் தங்களைத் தொடுவதையோ விரும்புவதில்லை” என்றாள்.
“அப்படியென்றால் நான் ஆணாகிறேன்… இல்லையென்றால் ஆணும்பெண்ணும் இல்லாதவளாகிறேன். வேண்டுமென்றால் விலங்காக வேண்டும் என்றாலும் ஆகிறேன். இவர் எனக்கு வேண்டும். இவர் இல்லாமல் எனக்கு வாழ்க்கை இல்லை. இவர்தான்… வேறு எவருமே இல்லை, இவர்தான்” என்று பகதி சொன்னாள்.
மித்திகை தன் சடைமுடிக்கற்றைகளை அள்ளி பின்னால் போட்டுக்கொண்டு நாகப்பாம்பின் கண்களுடன் அருகே அமர்ந்தாள். வழக்கமாக முன்னும்பின்னும் அசைந்தபடி அறியாத மொழியில் முனகிக்கொள்வாள். அன்று அறிந்த மொழியில் “அறியாத கணக்குகள்… முடிவே இல்லாத பின்னல்” என்றாள்.
“இவர் விழித்துக்கொண்டால் என்னை விரும்பவேண்டும்… இங்கே என்னுடனேயே இருக்கவேண்டும்” என்று பகதி சொன்னாள். “அதற்கான மாயத்தைச் செய். இவர் பிரிந்துபோனால் இங்கேயே நான் செத்துவிழுவேன்… மண்மேல் ஆணையாக அதன்பின் ஒருநாளும் உயிருடன் இருக்க மாட்டேன்.”
“இரு… இரு, நான் முயல்கிறேன்” என்று மித்திகை சொன்னாள். “எந்த மனிதனையும் மயக்கும் மாரன் என்னும் தெய்வம் உள்ளது. நான் அழைத்தால் அது வருமென்று நினைக்கிறேன்… அழைக்கிறேன்.”
அவள் கைப்பிடி மண் எடுத்து வேண்டிக்கொண்டு வீசியபோது புதருக்குள் இருந்து ஒரு பொன்னிறமான நாகப்பாம்பு வந்து தூங்கிக்கொண்டிருந்த ஆனந்தனின் காலைச் சுற்றிக்கொண்டு மெல்ல கொத்தியது. அவன் உடல் ஒருமுறை உலுக்கிக் கொண்டது.
அவன் விழித்ததும் அவளைப் பார்த்து “ஆ!” என்று மூச்சொலி எழுப்பினான் “யார் நீ?” என்றான். உடனே நினைவுகூர்ந்து “நீ ஏன் இப்படி இருக்கிறாய்?” என்றான்.
“ஏன்?” என்று அவள் கேட்டாள். “நான் உங்களை இங்கே கொண்டுவந்தேன். என் தாயின் மாயத்தால் இங்கே இருக்கிறீர்கள். நீங்கள் என்றும் என்னுடந்தான் இருப்பீர்கள்.”
அவன் ”இல்லை” என்றபின் கண்களை மூடிக்கொண்டு பத்மாசனத்தில் அமர்ந்தான். அவன் உடல் வண்டின் சிறகுபோல அதிர்ந்துகொண்டே இருந்தது. சற்றுநேரத்தில் அந்த பொன்னிறப்பாம்பு மீண்டும் ஊர்ந்து வந்தது. அவனைக் கடித்த கடிவாயில் தன் வாயை வைத்து அந்த நஞ்சை திரும்ப எடுத்துக் கொண்டது. அது திரும்பிச் சென்றபின் அவன் எழுந்தான்.
“பெண்ணே, உன் தாய் மாரனை என் மேல் ஏவினாள். அந்த நஞ்சு என் உடலில் இருந்தமையால் நான் உன்னைப் பார்த்தபோது நீ வெற்றுடலுடன், பேரழகியாகத் திகழ்ந்தாய். காமரூபிணியாகிய உன்னிடமிருந்து வெல்லும் பொருட்டு நான் ததாகதரின் பத்மமந்திரத்தைச் சொன்னேன். என்னை விட்டு மாரன் அகன்றான். உன் மேல் எனக்கு கோபம் இல்லை. நீ கொண்ட விருப்பம் இயற்கையிலுள்ள ஒவ்வொரு உயிரிலும் உள்ளதுதான். நீ நல்லவள், பேரழகி. நான் என் துறவுநெறியை மேற்கொண்டிராவிட்டால் உனக்கு இனியவனாக உன் காலடியில் இருந்திருப்பேன். நீ அனைத்து மங்கலங்களுடனும் வாழவேண்டும் என வாழ்த்துகிறேன்” என்றபின் தன் கப்பரையுடன் நடந்தான்.
பகதி தன் தாயிடம் ஓடிச்சென்று கோரைப்புதருக்குள் இருந்த அவள் தோளைப்பிடித்து உலுக்கினாள். ”அவர் செல்கிறார். அவரை என்னிடம் கொண்டுவந்து சேர்…” என்று அழுதாள்.
“உலகியலுடன் நம்மை இணைப்பது முதலாவதாக காமம். அதை அவன் கடந்துவிட்டான். இரண்டாவதான குரோதம் இன்னும் ஆற்றல் மிக்கது. அதை ஏவுகிறேன். அவன் உன்மேல் தீராத வஞ்சம் கொண்டிருப்பான். ஒவ்வொரு கணமும் உன்னை வெறுப்பான். ஆனால் உன்னையே நினைத்துக்கொண்டு உன்னுடனேயே இருப்பான். உன்னைவிட்டு விலகவே அவனால் இயலாது” என்றாள் மித்திகை.
“ஆகட்டும்… அவர் என்னுடன் இருந்தாலே போதும்” என்று பகதி அழுதாள்.
ஒரு பிடி மண் எடுத்து மித்திகை மாயச்சொல்லை உச்சரித்தபோது ஒரு கரிய வௌவால் தோன்றியது. அது பறந்து அவன் சென்றவழியே தொடர்ந்தது. சற்றுநேரத்தில் அவன் கடும் சீற்றத்துடன் திரும்ப வந்தான்.
“பழிகாரி… என் தவத்தை குலைக்க அனுப்பப்பட்டவள் நீ… என்னை அழிக்கும் கொடிய நோய் நீ” என்று கூவியபடி கையை ஓங்கிக்கொண்டு அவளருகே வந்தான். ஆனால் அப்படியே நின்றான். “புத்தம் சரணம் கச்சாமி, சங்கம் சரணம் கச்சாமி, தர்மம் சரணம் கச்சாமி” என்று சொன்னபடி கண்மூடி நின்றான். கண்களை திறந்தபோது புன்னகை கொண்டிருந்தான். அவன் காலடியில் அந்த கரிய வௌவால் விழுந்து கிடந்தது.
“ஏனோ உன் மேல் கடும் வெறுப்பும் சினமும் கொண்டேன். அதுவும் உன் தாயின் மாயமாக இருக்கலாம்… நல்லது, அதை என் ஞானகுரு அளித்த வஜ்ரமந்திரத்தால் வென்றுவிட்டேன். நீ என்மேல் கொண்ட விருப்பத்தால்தான் இதையும் செய்கிறாய் என்று எனக்குத் தெரியும். நீ வாழ்க!” என்று அவன் திரும்பிச் சென்றான்.
அவள் கதறியபடி தன் தாயிடம் சென்று விழுந்தாள். ஒரு வார்த்தைகூட பேசாமல் அழுதாள்.
“காமத்தையும் குரோதத்தையும் வென்றவர்கள்கூட மோகத்தை வெல்லமுடியாது. மோகம் என்பது மாயையில் ஆழ்தல். மாயையை மாயை என்று அறிந்தே மானுடர் தழுவிக்கொள்கிறார்கள். காலப்பேருருவையும் அதன் முகமாகிய சாவையும் அஞ்சியே மாயையை அள்ளி எடுத்து அணிந்துகொள்கிறார்கள்” என்றாள் மித்திகை. “அவன் இப்போது காலனைப் பார்ப்பான்.” அப்போது தொலைவில் ஒரு புலியின் உறுமல் கேட்டது.
சற்றுநேரத்தில் ஆனந்தன் திரும்பி வந்தான். “நான் வழியில் ஒரு புலியைக் கண்டேன். பசித்திருந்த அந்தப் புலி என்னை கொன்று தின்பதற்கு ஒரு கணம்தான் இருந்தது. ஒரு மரக்கிளை காற்றில் அசைந்த ஒலியில் அது அஞ்சி ஓடிவிட்டது. சாவைக் கண்முன் கண்டேன். எல்லாம் எத்தனை பொருளற்றது என்று புரிந்துகொண்டேன். நான் அடைந்த ஞானம், தேடிக்கொண்டிருக்கும் நிர்வாணம் எதுவும் சாவுக்கு முன் அர்த்தமுள்ளவை அல்ல. நான் செத்தால் மறுகணமே இந்த உலகம் என்னை மறந்துவிடும்” என்றான்.
அவள் கைகளைப் பற்றிக்கொண்டு அவன் சொன்னான். “என்னை காலத்தில் நிலைநிறுத்த உன்னால் முடியும். என் குழந்தைகளை நீ பெறுவாய். என் ரத்தம் இங்கே என்றும் அழியாமல் தொடர்ந்து வாழும்” அவளை தழுவிக்கொண்டு அவன் உடைந்த குரலில் தொடர்ந்தான். ”நான் விறகுவெட்டுகிறேன். மண்சுமக்கிறேன். மண்ணை உழுது விளைவிக்கிறேன். உன்னையும் உன் குழந்தைகளையும் கண் போல காத்து வளர்க்கிறேன். நம் குழந்தைகளைத் தவிர வேறெந்த நினைப்பும் இனி எனக்கு இல்லை. ஞானம், தியானம், வீடுபேறு எல்லாமே அர்த்தமற்ற சொற்களாக விலகிச் செல்லட்டும். உழைப்பும் தியாகமும் மட்டும்தான் இனி என் வாழ்க்கை. நான் வாழ்வது என் ரத்தம் இங்கே நீடிக்கவேண்டும் என்பதற்காக மட்டுமே.”
சட்டென்று அவன் கைகளை எடுத்துக்கொண்டு “என்ன சொன்னேன்?” என்றான். “என்ன சொன்னேன் நான்? வேறு எவரோ சொன்னதுபோல இருக்கிறது… என்னென்னவோ சொன்னேன்” என்றான். கையை நெஞ்சில் வைத்து பிரார்த்தனை செய்தான். பின்னர் கண்களைத் திறந்து “அது மாயை. இங்கே அனைவரையும் கட்டிப்போட்டிருக்கும் மகாமாயை. என் ஆசிரியர் அருளிய மைத்ரேய மந்திரத்தால் அதை நான் மீண்டும் வென்றேன். இந்த வெற்றி இறுதியானதாக இருக்கட்டும்” என்றபின் அவளை கைதூக்கி வாழ்த்திவிட்டு திரும்பிச் சென்றான்.
(மேலும்)
Jeyamohan's Blog
- Jeyamohan's profile
- 834 followers
