கல்வித்துறை பற்றி…
அன்புள்ள ஜெயமோகன்,
நம் கல்வித்துறை பற்றிய விவாதங்களை கவனித்தேன். இன்று நம் உயர்கல்வித்துறை கிட்டத்தட்ட செயலற்றிருக்கிறது. நம்பமுடியாத அளவுக்குத் தரவீழ்ச்சி நிலவுகிறது. அதற்குக் காரணம் முழுக்க முழுக்க ஊழல் வழியாகவே அரசுக்கல்லூரி ஆசிரியர்களின் நியமனங்கள் நடைபெறத்தொடங்கி முப்பதாண்டுகள் ஆகின்றன என்பதுதான். தனியார்க்கல்லூரிகளில் தொடங்கிய அந்த நடைமுறை அரசுக்கல்லூரிகளின் வழக்கமாகவே ஆகிவிட்டது. எவருக்கு எத்தனை சதவீதம், எப்படி கொடுப்பது என்பதெல்லாம் கிட்டத்தட்ட புரோட்டோகால் போலவே ஆகிவிட்டன. தரவீழ்ச்சி மலைபோல கண்முன் நின்றிருக்கிறது. ஆனால் அதை மறைத்து அரசியல்வாதிகள் ‘ரோஜாவண்ண’ சித்திரத்தை உருவாக்க முயல்கிறார்கள். அது அவர்களின் அரசியல்.
நம் கல்வித்துறையின் வீழ்ச்சி பற்றி எதைச் சொன்னாலும் உடனே அது அரசியல் நிலைபாடாகச் சுருக்கப்படுகிறது. (அதில் அரசியல் உண்டு என்பதும் உண்மைதான். உயர்கல்வித்துறையின் தரவீழ்ச்சி பற்றி தமிழகத்தில் கருத்து சொல்லும் மறுதரப்புக்கு இந்தியாவின் பிற பகுதிகளின் கல்வித்துறையில் இதைவிட மோசமான வீழ்ச்சி உண்டு என்பது பற்றி ஒன்றும் சொல்வதற்கில்லை.அந்த ஊழலுக்கு எதிராக அவரகள் ஒரு வார்த்தைகூட பேசுவதில்லை). ஆனால் இந்த பிரச்சினைகளை பொதுவெளியில் பேசவேண்டிய தேவை உள்ளது. இன்றைய கல்வித்துறையை முன்வைத்து நிகழும் அரசியல் விவாதங்களில் இரு பக்கமும் சாராமல் நின்று இவற்றைச் சொல்லவேண்டியிருக்கிறது.
பி.ஏ.கிருஷ்ணன் எழுதிய இந்தக் குறிப்பை உங்கள் கவனத்திற்கு கொண்டுவருகிறேன். ‘எல்லாம் சிறப்பாக இருக்கிறது’ ‘தமிழகத்தை மற்ற மாநிலங்களுடன் ஒப்பிடுக’ போன்ற அரசியல் கூச்சல்களைக் கடந்து நாம் யோசிக்கவேண்டிய சில கேள்விகள் இதில் உள்ளன.
என்.ஆர். ராமச்சந்திரன்.
நமது பல்கலைகளின் பங்களிப்பு
சில நாட்களுக்கு முன்னால் சன் தொலைக்காட்சியில் நடந்த விவாதம் ஒன்றில் நான் எளிய கேள்வி ஒன்றைக் கேட்டேன். தமிழ் மாணவர்களுக்கு பயன்படும் வகையாக தமிழ் நாட்டின் எந்த அரசுப் பல்கலைக் கழகம் ஒரு சாதாரண அகராதியோ அல்லது கலைச்சொல் அகராதியோ கொண்டு வந்திருக்கிறதா?
எப்போதும் போல மனுஷ்யபுத்திரன் எந்த ஆதாரமும் இல்லாமல் திராவிட அரசு விண்ணை வளைத்தது என்ற பாணியில் பேசினார். எனக்குப் பதில் சொல்ல நேரம் கிடைக்கவில்லை.
தமிழ் நாட்டில் த தஞ்சாவூர் பல்கலைக் கழகமோ அல்லது மெட்ராஸ் பல்கலைக் கழகமோ தமிழுக்காக என்ன செய்திருக்கிறது?
மாணவர்களுக்காக ஒரு அருஞ்சொல் அகராதி வந்திருக்கிறதா?
தஞ்சாவூர் பல்கலைக் கழகம் அருங்கலைச் சொல் அகரமுதலி ஒன்றை 2002 ல் வெளியிட்டது. அதற்குப் பிறகு வேறு ஏதும் வந்ததாகத் தெரியவில்லை. அகராதி பகுதியில் காணப்படும் புத்தகங்கள் இவை:
அருங்கலைச்சொல் அகரமுதலி (ஆங்கிலம் – தமிழ்)ஆங்கிலம் – தமிழ் வழிகாட்டி அகராதிகல்வியியல் கலைச்சொல் விளக்க அகராதிசங்க இலக்கியச் சொல்லடைவுசித்த மருத்துவத் தொகை அகராதிதமிழ் அகராதியியல் ஆய்வடங்கல் (1992 வரை)தமிழ் நிகண்டுகள் உள்ளடக்கமும் வரலாறும்தமிழ் பாரம்பரியமிக்க வெளிநாட்டு அறிவிப்புகள்தமிழ் மின்சொற்களஞ்சியம்நாமதீப நிகண்டுபெருஞ்சொல்லகராதி தொகுதி – 2பெருஞ்சொல்லகராதி தொகுதி – 1பெருஞ்சொல்லகராதி தொகுதி – 3பெருஞ்சொல்லகராதி தொகுதி – 4பெருஞ்சொல்லகராதி தொகுதி – 5பெருஞ்சொல்லகராதி தொகுதி – 6மர இனப்பெயர்த் தொகுதி – 2மர இனப்பெயர்த் தொகுதி – 1வயது வந்தோர் கல்வியியல் கலைச்சொல் விளக்க அகராதிஇவற்றில் பெரும்பாலான புத்தகங்கள் சென்ற நூற்றாண்டில் வெளிவந்தவை. பெரும்சொல் அகராதியின் ஆறாம் தொகுதி 2010ல் வந்தது. அது ‘கூ‘ வரையில்தான் வந்திருக்கிறது. அறிவியலைப் பொருத்த வரை நிலைமை இன்னும் மோசம். இது அறிவியல் புத்தகங்களின் அட்டவணை:
அறிவியல் தமிழ் வெளியீடுகள் (நூலடைவு)
உயிர் வேதியியல்கடல்வாழ் ஆமைகளின் வியத்தகு வாழ்க்கைசங்க இலக்கியத் தாவரங்கள்தமிழக அறிவியல் வரலாறுதமிழ்நாட்டு மூலிகைகள் அறிவியல் ஆய்வுகள் தொகுதி – 1தொடக்கப்பள்ளி அறிவியல் தமிழ்ப்பாட நூல்களின் கருத்துப் புலப்பாட்டுத் திறன்பயிரிடாத் தாவரங்களின் பயன்பாடுபழந்தமிழகத்தில் இரும்புத்தொழில்பழந்தமிழ் நூல்களில் நீர்வாழ் உயிரினங்கள்பாரம்பரிய ஊடுருவல் வரலாறுபார்புகழும் பால்சங்குபாலூட்டிகள்புதையல் தேடிக் கடலில் மூழ்குதல்மனிதனும் மரபியலும்மீன்கள் அன்றும் இன்றும்முத்தும் பவளமும்மூலிகை வளர்ப்பு முறைமை பயிற்சிக் கையேடுஇது கணினி அறிவியல் அட்டவணை:அறிவியலும் தமிழும்.இதுவும் 2009ம் ஆண்டு வெளிவந்தது. இப்போது புத்தகங்கள் பதிப்பிக்கிறார்களா என்பதே தெரியவில்லை.
3. இனி மெட்ராஸ் பல்கலைக் கழகத்தைப் பார்ப்போம். இணையத்தில் கிடைப்பது 2017ம் ஆண்டின் விலைப்பட்டியல். அதில் கிடைப்பது ஏ. சி. சிதம்பரநாதன் செட்டியாரின் ஆங்கில தமிழ் அகராதி. செட்டியார் சிவலோக பதவி அடைந்து 58 ஆண்டுகள் ஆகி விட்டன. இப்போது கிடைப்பது 2010 பதிப்பு. இயற்பியல் சொல்லகராதி ஒன்று இருக்கிறது. 2016 பதிப்பு. இந்த வருடத்திற்குப் பிறகு பல்கலைக் கழகம் ஏதும் பதிப்பித்திருக்கிறதா என்பதே தெரியவில்லை. அறிவியல் தொடர்பாக தமிழில் குறிப்பிடத்தக்க எந்த புத்தகமும் இப்பல்கலைக் கழகத்தில் இருந்து வந்ததாகத் தெரியவில்லை. தமிழில்/ஆங்கிலத்தில் பதிப்பிக்கப்பட்ட புத்தகங்களில் க்ளாசிக்ஸ் என்று கருதப்படும் சில புத்தகங்கள் இருக்கின்றன. இவை அனைத்தும் முதலில் வெளிவந்த காலம் அறுபது ஆண்டுகளுக்கும் முன்னால்.
இதுதான் திராவிடம் தமிழ் வளர்ப்பதின் லட்சணம்.
இவர்கள் முதலில் தமிழில் கலைச்சொற்களையும் மற்றையச் சொற்களையும் வகைப்படுத்தி தமிழில் படிக்கும் மாணவன் எளிதாக புரிந்து கொள்ள அகரமுதலிகளை உருவாக்கட்டும். பின் சமஸ்கிருதத்தைப் பற்றிப் பேசலாம்.
இதைப் பரவலாகப் பகிர்ந்து கொள்ளுங்கள். மாணவர்களை நாம் எத்தனை ஆண்டுகள் ஏமாற்றிக் கொண்டிருப்போம்?
அனந்தகிருஷ்ணன் பக்ஷிராஜன்
அன்புள்ள ராமச்சந்திரன் அவர்களுக்கு,
Technology the way forward for Indian education – இந்த கட்டுரையை உங்கள் கவனத்திற்குக் கொண்டுவர விரும்புகிறேன். இதைப்போன்ற நூற்றுக்கணக்கான கட்டுரைகள் இங்கே நாளிதழ்களில் கல்வியாளர்களால் எழுதப்பட்டு நமக்குக் கிடைக்கின்றன.
அண்மைக்காலமாக கேரளப் பல்கலைக்கழகங்கள் பற்றி இதேபோன்ற கடுமையான விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றன. அண்மையில் கேரளத்தில் காலடி பல்கலைக்கழகம் ஆய்வுமாணவர் ஒருவருக்கு மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக உதவித்தொகையை கொடுக்கவில்லை. அவர் நீதிமன்றம் சென்றார். நிதிநெருக்கடி என அங்கே பல்கலை சார்பில் சொல்லப்பட்டது. அப்படியென்றால் துணைவேந்தர், பதிவாளர் இருவருக்கும் ஊதியம் கொடுக்கப்படுகிறதா என நீதிமன்றம் கேட்டது. அந்த உதவித்தொகை கொடுக்கப்படும் வரை அவர்களுக்கு ஊதியம் அளிக்கப்படவேண்டியதில்லை என ஆணையிட்டது.
நானறிந்து கேரளப்பல்கலையில் இருந்து மதிக்கத்தக்க ஒரு நூல் வெளிவந்து முப்பதாண்டுகள் ஆகின்றன. இதுவே இந்தியா முழுக்கவும் உள்ள நிலைமை. கல்வி என்பது தொழிலுக்கான பயிற்சி என ஆக்கப்பட்டுவிட்டது. பிற கல்வி எதற்கும் நிதி இல்லை. பிற கல்விக்கு வருபவர்கள் எந்த அடிப்படை தகுதியும் அற்ற கீழ்நிலை மாணவர்கள். உண்மையான அக்கறையுடன் கற்பிக்க நினைக்கும் ஆசிரியர்கள்கூட மாணவர்களின் முழுமையான உதாசீனத்தால் ஆர்வமிழந்து விடுவதையே நான் காண்கிறேன். கல்வித்துறையில் ஆசிரியர் நியமனங்களிலுள்ள ஊழல் தகுதியற்றவர்களை ஆசிரியர்களாக கொண்டுவந்து நிறுத்துகிறது. ஆகவே ஒட்டுமொத்தமான ஒரு தேக்கநிலை இன்று உள்ளது.
அதைப்பற்றிய அக்கறை இன்று சிந்திப்பவர்கள் நடுவே உருவாகவேண்டும். ஆனால் அந்த விவாதத்தை அரசியல்வாதிகளுடன் நடத்த முடியாது என நாம் உணரவேண்டும். விவாதம் அக்கறை கொண்ட அறிஞர்கள் நடுவே நிகழவேண்டும்.
ஜெ
Jeyamohan's Blog
- Jeyamohan's profile
- 834 followers
