கஞ்சன்ஜங்காவின் காலடியில்…

காவியம் எழுதி முடித்ததுமே உருவான ஆழ்ந்த விடுதலை தொடர்ச்சியான தூக்கத்தை உருவாக்கியது. தொடர்ந்து பயணங்களை முன்னரே திட்டமிட்டிருந்தமையால் அதைத்தொடர்ந்து பலநாட்கள் நீடிக்கும் ஆழ்ந்த செயலின்மையில் இருந்து தப்பித்துக்கொண்டேன். சென்ற ஜூன் 7 முதல் தொடர்ச்சியாக பயணங்களிலேயே இருக்கிறேன். எங்கெங்கே இருந்தேன் என டைரியில் பார்க்கையில் எனக்கிணையான பயணங்களை விற்பனைப் பிரதிநிதிகள்தான் செய்கிறார்கள் என்று தோன்றியது.

முன்பு விஷ்ணுபுரம் , பின் தொடரும் நிழலின் குரல், கொற்றவை எழுதிமுடித்தபின் அந்த செயலின்மையை அடைந்து, அதன் இனிய இருட்டில் அழுந்தி பல நாட்களை செலவிட்டிருக்கிறேன். உண்மையில் அது ஒரு நாண் தளர்ந்த நிலை. அதில் ஒரு சுயவதை உண்டு, அது இன்பமானதும்கூட, ஆனால் அழுத்தி அழித்துவிடக்கூடியது. நிறைய படைப்பாளிகள் ‘எழுத்தாளர் அகத்தேக்கம்’ நிலைக்குச் செல்ல ஒரு படைப்புக்குப் பின் உருவாகும் தளர்வு முக்கியமான காரணமாக இருந்துள்ளது.

ஏனென்றால் பொதுவாக ஒரு படைப்பு முடியும்போது ‘வென்றோம்’ என்னும் பெருமிதம் உருவாகும். சில நாட்களிலேயே ‘இன்னும் இல்லை’ என்று தோன்ற ஆரம்பிக்கும்.அதன் பின் அப்படைப்பில் இருந்து வெளியேற ஆரம்பிப்போம். அதன் குறைகள் மட்டுமே கண்ணுக்குப் படும். அது உளச்சோர்வை அளிக்கும். அவ்வுளச்சோர்வே அடுத்த படைப்பை நோக்கிச் செல்வதற்கான வழி. அனேகமாக எல்லா இலக்கியவாதிகளும் இதை அடைவதை கண்டிருக்கிறேன். ஆனால் பாலகுமாரன், சுஜாதா உட்பட எந்த வணிக எழுத்தாளரும் இதை அடைந்ததில்லை என்பதையும் சொல்லியிருக்கிறார்கள்.  

வெண்முரசு முடியும்போது கோவிட் காலகட்டம். ஆகவே மொத்தமாக இருள் வந்து மூடிவிடும் என்னும் எண்ணமிருந்தமையால் அப்போதே அடுத்த புனைவுலகுக்குள் நுழைந்து சிறுகதைகளை எழுதத் தொடங்கிவிட்டிருந்தேன். இன்று பார்க்கையில் கோவிட் காலகட்டத்தில் எழுதப்பட்ட அந்த கதைகளே அண்மைக்காலத்தில் மிக அதிகமாக வாசிக்கப்பட்ட படைப்புகள், மிக அதிகமாக மொழியாக்கம் செய்யப்பட்ட படைப்புகள் என தெரிகிறது. அவை இந்தியாவெங்கும், உலகமெங்கும் சென்றுகொண்டிருக்கின்றன.

கிருஷ்ணன் ஒரு சிக்கிம் பயணத்தை இரண்டு மாதம் முன்னரே திட்டமிட்டிருந்தார். ஆனால் செல்ல உத்தேசித்திருந்த இரண்டு பனிமலைச் சமவெளிகளுக்குச் செல்ல முடியவில்லை.தொடர்மழையும் நிலச்சரிவும் பாதைகளை மூடிவிட்டன. ஆகவே மாற்றுத்திட்டத்தை வகுத்து டார்ஜிலிங் சென்று அங்கிருந்து நேபாளத்தைக் கடந்து ஒருநாள் தங்கிவிட்டு சிக்கிம் செல்ல கிருஷ்ணன் முடிவெடுத்தார். நான் இணைந்துகொண்டேன். தொழிலதிபர் அரங்கசாமி, கல்வித்தந்தை சக்தி கிருஷ்ணன், தாளலயசிம்மம் ஓசூர் பாலாஜி மற்றும் எங்கள் குழுவின் உயிருள்ள செயற்கைநுண்ணறிவான திருப்பூர் ஆனந்தகிருஷ்ணன் ஆகியோர் இணைந்துகொண்டனர்.

நான் சென்னையில் மூன்றுநாட்கள் இருந்தேன். அங்கிருந்து ஒருநாள் முன்னரே, ஜூன் 25 புதன் மாலையிலேயே, பாக்டோக்ரா சென்று அங்கே அஞ்சலி என்னும் தங்கும்வீட்டில் இரவு தங்கியிருந்தேன். பாக்டோத்ரா ஒரு விமானநிலையத்தை ஒட்டி வளர்ந்து வரும் நகரம். முன்பு வடகிழக்குக்கான முதன்மை விமானநிலையம் கல்கத்தாதான். இப்போது பாக்டோத்ரா. இந்த விமானநிலையத்தை இன்றைய மைய அரசின் ஒரு கொடை என ஐயமின்றிச் சொல்லலாம். வடகிழக்கின் மொத்தப் பொருளியலையும் பலமடங்கு மேம்படுத்தியிருக்கிறது இது.

பாக்டோக்ரா ஒரு விமானப்படை விமானநிலையமாக இருந்தது. 2010 அதை சிவில் பயணங்களுக்கும் பயன்படுத்தலாயினர். 2017 முதல் பொதுப்பயணத்திற்குரிய வணிக விமானநிலையமாகியது. 2022ல் அதை விரிவாக்கி இந்தியாவின் முக்கியமான விமானநிலையமாக ஆக்கினர். இன்று தொடர்ச்சியாக விமானங்கள் வந்திறங்குகின்றன. இந்தியாவின் எல்லா நகர்களிலிருந்தும் அங்கே விமான இணைப்பு உள்ளது.இப்படி ஒரு விமானநிலையத்தை உருவாக்கும் எண்ணம் ஏன் முன்னர் தோன்றவில்லை என்பதே ஆச்சரியம்தான்.

பாக்டோத்ரா இன்னும் ஓராண்டில் முற்றாக மாறியிருக்கும். மிகப்பெரிய ஆறுபட்டைச் சாலை வடகிழக்கை இணைக்கும்படி போடப்படுகிறது. அதன் பணிகள் நிகழ்வதனால் ஊரே அகழ்விடம் போல் உள்ளது. அத்துடன் மேற்குவங்கத்திற்கே உரிய வறுமை, அதன் விளைவான தூய்மையின்மை. தலைக்குமேல் கட்டப்பட்டுக்கொண்டிருக்கும் சாலைக்கு அடியில் புழுதியும் குப்பையும் குவிந்திருக்க அங்கே ஏராளமான டீக்கடைகள். அவற்றை நடத்துபவர்கள் அங்கேயே கயிற்றுக்கட்டில், துணிமூட்டைகள் ஆகியவற்றுடன் குடியிருக்கிறார்கள். 

மேற்குவங்கத்தவர் போர்நிகழும் நாட்டின் மக்கள்போல இந்தியாவெங்கும் அகதிகளாகச் சென்றுகொண்டிருக்கின்றனர். கன்யாகுமரி செங்கற்சூளைகள் முழுக்க அவர்கள்தான் கடும் பணிகளைச் செய்கிறார்கள். முன்பு ஒரு ஆட்சியர் அவர்களின் குழந்தைகள் படிப்பதற்காக இங்கே ஆரம்பப்பள்ளியில் வங்கமொழியை அறிமுகம் செய்ததுண்டு. கேரளத்தில் அரைக்கோடி மேற்குவங்க மக்கள் வேலைக்காரர்களாக இருக்கிறார்கள் என ஒரு கணக்கு. பாக்டோத்ராவிலும் மேலே டார்ஜிலிங்கிலும் அவ்வாறு குடியேறி தெருக்களில் குப்பையோடு குப்பையாக வாழும் மக்கள் பல ஆயிரம்பேர்.

இன்று பயணிகள் எவருமே இந்தியாவிலேயே மிகமிகமிக மோசமாக நிர்வாகம் செய்யப்படும் மாநிலம் மேற்குவங்கம் என ஐயமின்றிச் சொல்லிவிடமுடியும். முன்பு, ஜோதிபாஸு ஆட்சியில் அது மிகமிக மோசமான மாநிலமாக இருந்தது. மேற்குவங்கத்தவருக்கு ஒரு மனநிலை உண்டு. கல்கத்தாவை ஒட்டி உயர்குடியினர் (பெரும்பாலும் பிராமணர்கள்) உருவாக்கிய ஐரோப்பியக் கலப்புகொண்ட ஒரு பண்பாடு உண்டு. அதைத்தான் நாம் வங்கப்பண்பாடு என அறிந்திருக்கிறோம். பங்கிம் சந்திரர் முதல் இன்று அமிதவ் கோஷ் வரை அந்த பண்பாட்டின் உருவாக்கங்கள். எஞ்சிய வங்கம் அன்றுமின்றும் வறுமையும் அறியாமையும் அழுக்கும் நிறைந்த நரகம். அதைப்பற்றி மார்க்ஸியர்களும் கவலைப்படவில்லை. இன்றைய எதிர்மார்க்ஸியர்களும் பொருட்படுத்தவில்லை.

மம்தா பானர்ஜிக்கும் படித்த வங்காளிகளுக்கு இருப்பதுபோல அந்த பத்ரலோக்பண்பாடு பற்றிய பெருமிதம் உண்டு. எஞ்சிய வங்கம் அவர்களுக்குப் பொருட்டே அல்ல. வங்கத்தில் எங்கும் அரசு என ஒன்று உள்ளது, நிர்வாகம் என ஒன்று நடைபெறுகிறது என்பதற்கான தடையத்தையே காணமுடியாது. நகரங்களில் பற்பல ஆண்டுகளாக அள்ளப்படாத குப்பைகள், உடைந்து சிதிலமான சாலைகள். பொதுப்போக்குவரத்து என்பது நம்பவே முடியாத அளவு சீரழிந்துள்ளது. தென்மாநிலங்களில் இருந்து வருபவர்களுக்கு ஒவ்வொரு கணமும் ஒவ்வாமையை அளிக்கும் மாநிலம் இது. உண்மையில் இன்றைய தமிழகத்தில் கிராமப்புற வறுமைகூட மறைந்துவிட்டிருக்கிறது.

ஜூன் 26 வியாழக்கிழமை பின்காலையில் நண்பர்கள் பெங்களூரில் இருந்து கிளம்பி வந்து சேர்ந்தார்கள். டார்ஜிலிங்குக்கு டாக்ஸியில் கிளம்பினோம். நான் டார்ஜிலிங் நகருக்கு பலமுறை வந்திருக்கிறேன், சென்ற ஆண்டுகூட வந்தேன். இம்முறை வந்ததும் அதே இடங்களுக்குத்தான். ஆனால் இப்போது மழைக்காலம். மலைச்சரிவுகள் முழுக்க பசுமை செறிந்திருந்தன. மழை சன்னமாகப் பெய்துகொண்டே இருந்தது. செல்லும் வழியில் ஒரு விடுதியில் ‘ஆலுபராத்தா’ சாப்பிட்டோம்.

செல்லும் வழியில் சித்ரே என்னும் பௌத்த மடாலயத்திற்குச் சென்று அங்கிருந்த மாபெரும் அமிதாபபுத்தரைப் பார்த்தோம். (சித்ரே மடாலயம்) கடல்மட்டத்தில் இருந்து 8340 அடி உயரத்திலுள்ளது இந்த இடம். பதினைந்து அடி உயரமான அமிதாப புத்தர் (புத்தமைத்ரேய) சிலை கையில் அமுதகலத்துடன் அமர்ந்திருந்தது. சுற்றிலும் மழைமுகில் மூடியிருந்த குளிர்ந்த மாலைநேரம். மலைக்குமேல் ஏறியதுமே வரும் ஒரு வகையான மண்டைக்கனம்- அல்லது எடையின்மை. வெள்யே மழையிருட்டால் இடைவிடாத சீவிடுகளின் ரீங்காரம். அந்த சுருதி மண்டைக்குள்ளும் ஒலித்துக்கொண்டிருந்தது.

நேபாள எல்லையில் இருந்த டும்லிங் என்னும் ஊருக்குச் சென்று அங்கே ஒரு விடுதியில் தங்கினோம். திபெத்திய வம்சாவளியினரான குருங் என்னும் மக்கள் இங்கே வாழ்கிறார்கள். மொத்தமே ஐம்பது வீடுகள் மட்டும் கொண்ட ஊர். இணையம் வந்தபின் பயணிகள் வரத்தொடங்கியிருப்பதனால் கொஞ்சம் விடுதிகள் உருவாகியுள்ளன. இங்கிருந்து கஞ்சன்ஜங்கா நன்றாகத் தெரியும். குளிர்காலத்தில் மிகச்சிறப்பான காட்சியாக இருக்கும். டார்ஜிலிங்கில் இருந்து மேக்மா என்ற ஊருக்குச் சென்று ராணுவ அனுமதி பெற்று நேபாளத்திற்குள் நுழைந்து அங்கே செல்லவேண்டும்.  

விடுதிகளிலேயே ஏழ்மை, வசதியின்மை எல்லாம் தெரிந்தது. நாங்கள் தங்கிய விடுதியை அப்போதுதான் கட்டிக்கொண்டிருந்தனர். இந்தப் பருவம் சுற்றுலாவுக்குரியது அல்ல. நாங்கள் தங்கிய விடுதி தவிர எங்குமே எவருமே இல்லை. ஒரே ஒருவர் இரண்டு பெரிய பசுக்களை மேய்த்துக்கொண்டு சென்றார். அந்த ஊரிலேயே ஒரே சுற்றுலாக்குழு நாங்கள்தான். நாங்கள் உணவு அருந்த ஒரே ஒரு சிறிய உணவகம். பல விடுதிகளை திறக்கவே இல்லை. ஆனால் உணவு நன்றாகவே இருந்தது.

இரவில்தான் அங்கே சென்று சேர்ந்தோம். இரவு ஏழரைக்கே இருட்டிவிட்டது. ஆனால் காலை ஐந்து மணிக்கே நல்ல வெளிச்சம் வந்துவிடும். காலையில் கஞ்சன்ஜங்கா ஒளியுடன் முகில்நிறைந்த வானில் எழுந்து தெரிந்தது. அதைப் பார்த்தபடி ஒரு நடை சென்றோம். எங்காவது டீ கிடைக்குமா என தேடி அலைந்தோம். ஒரு கடையில் டீ போட்டு தர ஒப்புக்கொண்டார்கள். இங்கே கறுப்பு டீ அருமையாக போடுகிறார்கள்.

இந்தவகையான பயணத்தில் காட்சியனுபவம் என ஒன்று உண்டு. குறுகிய நேரத்திலேயே நாம் அங்கே பலவற்றை உள்வாங்கிக் கொள்கிறோம். ஆனால் இந்தவகையான அரைநாள் ஒருநாள் பயணங்கள், இடங்களைப் பார்த்துக்கொண்டே செல்வது, மேல் நான் ஆர்வமிழந்துவிட்டேன். ஓர் ஊரில் சில நாட்கள் தங்கி அந்த வாழ்க்கையை அறிவதுதான் ஒரு படி மேல் என்று தோன்றுகிறது. முதல் விஷயம், அங்குள்ள ‘விசித்திரங்கள்’ நமக்குப் பழகி, கொஞ்சம் சலிப்பு தட்ட ஆரம்பிக்கவேண்டும். அப்போதுதான் நுணுக்கமான விஷயங்கள் உள்ளே நுழைகின்றன. இரண்டு, நம் ஊரும் நம் அடையாளங்களும் கரைந்து அழிந்து நாம் அங்கே ‘வாழ’ ஆரம்பிக்கவேண்டும்.

மதியம் டார்ஜிலிங் வந்தோம். அங்கே நீராவி இயந்திரம் பொருத்தப்பட்ட சிறிய ரயிலில் ஒரு பயணம் திட்டமிட்டிருந்தார் கிருஷ்ணன். எதையும் அனுபவித்துப் பார்ப்பது என்னும் எண்ணம் கொண்டவர் அவர். அது ஒரு வதை அனுபவம். பலமணிநேரம் அந்த குட்டி ரயில் நிலையத்தில் காத்திருந்தோம். தாமதமாகிக்கொண்டே இருந்தது. 

அப்போது பேசிக்கொண்டிருந்தபோது நான் சரத்சந்திர தாஸ் பற்றிச் சொன்னேன். அவர் ஒரு வங்காள அறிஞர். திபெத்திய பௌத்தம் பற்றிய தொடக்ககால ஆய்வுகளைச் செய்தவர், திபெத் மொழி–ஆங்கில அகராதியை வெளியிட்டவர். ஆனால் அவர் ஓர் உளவாளி. திபெத்துக்குச் செல்லவேண்டும் என்னும் அவருடைய ஆசையை ஆங்கிலேயர் பயன்படுத்திக் கொண்டனர். அவர் திபெத்துக்குச் செல்லவேண்டிய எல்லா ஏற்பாடுகளையும் செய்தனர். (ஓர் ஒற்றரின் கதை)

அன்றைய திபெத் வெளியுலகுக்கு முழுமையாக மூடப்பட்ட நாடு. நிலப்பரப்பை வைத்துப் பார்த்தால் அது இன்றைய இந்தியாவைவிட பெரியது – இன்று அதன் பெரும்பகுதி சீனாவில் இருக்கிறது. ஆனால் மிகக்குறைவான மக்கள்தொகை. மதமும் அரசும் ஒன்று. தலாய்லாமாதான் அரசர். வாழ்வும் வழிபாடும் ஒன்றுதான். ஆனால் திபெத் பழங்கால சீனாவுக்கும் இமையமலை நாடுகளுக்குமான வணிகப்பாதைகளை ஆட்சி செய்தது. ஆகவே நிறைய செல்வம் அங்கிருந்தது. அதைச் சூறையாட ஆங்கிலேயர் விரும்பினர்.

சரத்சந்திர தாஸ் ஒரு பௌத்த துறவியாக பயிற்சி எடுத்துக்கொண்டார். பிரிட்டிஷார் உதவியுடன் திபெத்துக்குள் ஊடுருவினார். அங்கே துறவியாக இருந்து திபெத்திய மொழி கற்றுக்கொண்டார். திபெத்திற்குச் செல்லும் வழிகளை அறிந்து வரைபடமாக தயாரித்துக்கொண்டார். அவற்றை பிரிட்டிஷாருக்குக் கைமாறினார். அவற்றைக் கொண்டு பிரிட்டிஷார் கர்னல் யங் ஹஸ்பெண்ட் தலைமையில் படைகொண்டு சென்று திபெத்தை அழித்தனர், ஏழு டன் தங்கம் கொள்ளையடிக்கப்பட்டது. ஆன்மிகமண்ணான திபெத் அதன்பின் மீளவே இல்லை.

ஐம்பதுகளில் சீனா திபெத்தை கைப்பற்றி முழுமையாக அழித்தது. இன்று அந்த திபெத்தியப் பண்பாடு இந்தியாவில் மட்டுமே நீடிக்கிறது. திபெத் எழுபத்தைந்தாண்டுகளாக சுதந்திரத்துக்காகப் போராடிக்கொண்டிருக்கிறது. பலநூறுபேர் உயிர்த்தியாகம் செய்துள்ளனர். முதல்சூறையாடலைச் செய்தது பிரிட்டிஷார் என்பதை இன்றைய ‘லிபரல் மேற்கு’ வசதியாக மறைக்கிறது. பிரிட்டிஷார் கைப்பற்றியிராவிட்டால் ரஷ்யா கைப்பற்றியிருக்கும், அவர்களுக்கு அந்த திட்டங்கள் இருந்தன என கதைகளைப் புனைகிறது .(ரஷ்யா அன்று எந்த நாட்டின்மேலும் படையெடுக்கும் நிலையிலேயே இல்லை. அவர்கள் சீன எல்லையையே கடக்கவில்லை) .

திபெத்திய ஆக்ரமிப்பை நடத்தியது சீனா என்பதனால் இங்குள்ள முற்போக்கினர் அந்த ஆக்ரமிப்பை முற்போக்கான செயல் என்று நியாயப்படுத்தி, திபெத்தியர்களின் விடுதலைப்போராட்டத்தை மதவாதமாக முத்திரையடிக்கின்றனர். ‘ஒரு தனித்துவம் கொண்ட பண்பாட்டுக்கு, தங்கள் நிலத்தில் தங்கள் மரபை தக்கவைத்துக்கொண்டு வாழ்வதற்கான உரிமை உண்டா?’ என்ற கேள்வியை அவர்கள் எதிர்கொள்வதில்லை. உலகம் திபெத்தை அழித்தது, தன் மாபெரும் பண்பாட்டுமரபு ஒன்றை உலகம் இழந்தது என்பதே உண்மை.

சரத் சந்திர தாஸ் உலகின் மிகச்சிறந்த ஆட்சியாளர்கள் பிரிட்டிஷார் என நம்பினார். திபெத் அங்குள்ள மக்களை கொடிய வறுமையில் அடிமைகளாக வைத்துள்ளது என்னும் பிரிட்டிஷ் பொய்ப்பிரச்சாரத்தை ஏற்றுக்கொண்டார். பிறகு உண்மை தெரிந்து திபெத் ஆதரவாளராக ஆனார். கர்னல் ஆல்காட் , ரோரிச் போன்ற திபெத்திய ஆய்வாளர்களுக்கு உதவினார். ஆனால் அவர் ஒரு துரோகி என்னும் சித்திரமே இன்றுள்ளது. அவர் அறியாமல் துரோகமிழைத்தார் என்பது உண்மை, ஆனால் துரோகம் துரோகம்தான், அவர் துரோகி என்பது மறுக்கமுடியாததுதான்.

நான் அவரை மையமாக்கி ஒரு நாவல் எழுதும் எண்ணம் கொண்டிருந்தேன். கடைசிக்காலத்தில் வங்கத்தில் அவர்மேல் கசப்பு உருவானதனால் சரத் சந்திர தாஸ்  அன்று வெள்ளையர் வாழ்ந்த இடமாகிய டார்ஜிலிங் வந்து அங்கே லாஸா வில்லா என்னும் வீட்டை கட்டி அங்கே குடியிருந்தார். அவருடைய வீட்டை தேடி 1985  வாக்கில் வந்தேன். அப்போது அவருடைய இல்லம் என இடிந்த ஒரு கட்டிடத்தை எவரோ காட்டினர். மீண்டும் இருமுறை தேடினாலும் அவருடைய வீட்டை கண்டுபிடிக்க முடியவில்லை.

இம்முறை ரயிலுக்காக காத்திருக்கும் பொழுதில் அந்த வீட்டை தேடிச்செல்லலாம் என்று தோன்றியது. ரயிலடியில் இருந்து இரண்டு கிமீ தொலைவில்தான். ஆனால் உள்ளூர் உதவியின்றி அதைக் கண்டுபிடிக்க முடியாது. ஒருவர் நாங்கள் சொன்னதை புரிந்துகொண்டு வீட்டைக் காட்டினார். அந்த இல்லம் பழுது பார்க்கப்பட்டு அதில் எவரோ குடியிருந்தனர். அதை வெளியே நின்று பார்த்துவிட்டு திரும்பி வந்தேன்.

 

நீராவி ரயில் ஒருவழியாகக் கிளம்பியபோது மிகப்பெரிய கரும்புகைக் குவியலை வானில் கக்கிக்கொண்டே பலத்த ஓசையுடன் சென்றது. இருபக்கமும் நெரிசலான, அழுக்கான, தெருக்களில் குப்பைமலைகளும் கடைகளும். இந்தியாவின் மலைத்தங்குமிடங்களில் டார்ஜிலிங் அளவுக்கு அசிங்கமான இன்னொரு நகர் இல்லை. குப்பைகள் மட்டும்தான் எங்கும். இடுங்கலான தெருக்களின் வழியாக ரயில் சென்றது. குமட்டல் மட்டுமே எஞ்சியது. பாதியில் இறங்கி காரில் ஏறி சிக்கிம் செல்லும் பயணத்தை தொடர்ந்தோம்.

சிக்கிம் வழியில், சிலிகுரிக்கு கொஞ்சம் அப்பால், மலையடிவாரத்தில் லாமட்டா (Lamahatta) ஊரில் அறைபோட்டிருந்தோம். லாமஹட்டா என்றால் லாமாவின் குடிசை. இங்குள்ள பழமையான புத்த மடாலயம் தொடக்ககாலத்தில் பயணிகளை கவர்ந்திருக்கிறது. இப்போது இங்கே இரும்புக் கம்பிகளில் மலைச்சரிவில் சரிந்திறங்குவது உள்ளிட்ட பல சுற்றுலா செயல்பாடுகள் உள்ளன.

இம்முறை நல்ல அறை. வசதியான தங்குமிடம். உணவும் நன்றாக இருந்தது. அந்த உணவகத்துக்கு ஒரு கதையை உருவாக்க முயன்றிருந்தனர். லால்மோகன் என்பவர் மலையின் அழகை ரசிக்க வங்கத்தில் இருந்து அங்கே வந்தாராம். அவர் அங்கே ஒரு உணவகத்தை தொடங்கினார். அவருடைய பேரர்கள் இப்போது அதை நடத்துகிறார்களாம். பனையோலைப்பொருட்களாலான முறம், விசிறி போன்றவற்றால் அலங்கரிக்கப்பட்ட அழகான உணவகம். அழகான பெண்களால் உணவு பரிமாறப்பட்டது.

அங்கே ஓர் உயிரியல் பூங்கா இருந்தது. வெள்ளையர் காலத்திலேயே உருவாக்கப்பட்டது.செங்குத்தாக வான் நோக்கி  எழுந்த மிகப்பெரிய பைன் மரங்கள் செறிந்த சோலை. அதன் மலைச்சரிவில் ஏறிச்சென்றால் ஒரு தடாகம். காலையில் ஒரு நடை சென்றோம். 

காலை உணவுக்குப் பின் சிக்கிம் நோக்கிச் செல்லத் தொடங்கினோம்.  டார்ஜிலிங் ஒவ்வாமையை உருவாக்கினாலும் பெய்துகொண்டே இருந்த மழை, குளிர், பசுமைபொலிந்த மலைச்சரிவுகளுக்கு அப்பால் வெள்ளிமலைமுடி ஆகியவற்றுடன் நண்பர்கள் ஒருவரை ஒருவர் கேலிசெய்து சிரித்துக்கொண்டும், கல்வி மற்றும் இலக்கியம் சார்ந்து இடைவிடாது விவாதித்துக்கொண்டும் சென்றது உளம்நிறையச் செய்யும் அனுபவமாக அமைந்தது.

(மேலும்)

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on July 01, 2025 11:35
No comments have been added yet.


Jeyamohan's Blog

Jeyamohan
Jeyamohan isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow Jeyamohan's blog with rss.