காவியம் 73

விண்ணுலகில் புத்தர். சாதவாகனர் காலம். அமராவதி ஸ்தூபம். பொயு 2

கானபூதி என்னும் கதைசொல்லும் பிசாசு சொன்னது. ராம்சரண் நாயக் நிழல்களை உணரத் தொடங்கியது ஒரு விடியற்காலையில். அன்று அவனுக்கு ஐம்பது வயது நிறைவடைந்திருந்தது. அது அவன் பிறந்தநாள்.

இரண்டு ஆண்டுகளுக்கு முன்புதான் அவன் திருமணம் செய்துகொண்டான். அவன் திருமணம் செய்துகொள்ள எண்ணியதே இல்லை. அவனிடம் அதைப்பற்றி எவராவது பேசினால் வாய்விட்டுச் சிரித்தபடி “சகோதரா, என்னைப் போன்ற ஒருவன் திருமணம் செய்துகொள்வதென்றால் ஒரு அனாதைக் குடும்பத்தை உருவாக்குவதென்று அர்த்தம். எந்த நாளும், எந்தக் கணமும் என் தலை துண்டிக்கப்படலாம். தெருவில் நான் சடலமாகக் கிடக்கலாம். என் வாழ்க்கை என்னுடையதே அல்ல. அன்றன்று கிடைக்கும் அந்தந்தத் தருணங்களின் கொண்டாட்டம் மட்டும்தான் எனக்கு உள்ளது.”என்பான்.

“தெருவில் என் சடலம் கிடப்பதை நூறுமுறையாவது கனவில் பார்த்திருப்பேன். உண்மையில் அப்படித்தான் நிகழவேண்டும், அதுதான் நியாயம். நான் தெருவில் ரத்தச்சேற்றில் கிடக்கிறேன். என் ரத்தம் உறைந்து கருமையாகிவிட்டது. ஈக்கள் வரத்தொடங்கிவிட்டன. சுற்றிலும் நின்று வேடிக்கை பார்க்கிறார்கள். இறுதிமூச்சுக்கு முன் நான் தவித்துக்கொண்டு தண்ணீர் கேட்டபோது விலகி ஓடிய மக்கள் என் கண்கள் நிலைத்தபின் அருகே வந்து ஆர்வமாக வேடிக்கை பார்க்கிறார்கள்.

“போலீஸ் வருவதற்கு நீண்டநேரமாகிறது. அதுவரை மக்கள் என் உடலைச்சுற்றி நெருக்கியடிக்கிறார்கள். என்னைப் பற்றிப் பேசிக்கொண்டிருக்கிறார்கள். வியப்பும் கேலியும் ஆறுதலுமாக. என் சாவு அவர்களுக்கு ஓர் உறுதியை அளிக்கிறது, அவர்களின் நடுத்தரவர்க்கத்து வாழ்க்கை சிறந்தது என்று எண்ணச் செய்கிறது. குறைந்தது கழுத்தறுபட்டு சாலையில் கிடக்கவேண்டாமே. என்ன சொத்து இருந்தாலென்ன? எவ்வளவு தொடர்புகள் இருந்தால் என்ன? எத்தனைபேர் பயந்தால்தான் என்ன?”

“என்னை மார்ச்சுவரிக்குக் கொண்டுசெல்கிறார்கள். அங்கே போஸ்ட்மார்ட்டம் நடைபெற்றபின் என் உடல் காத்திருக்கிறது. பெற்றுக்கொள்ள எவருமே வரவில்லை. இரண்டுநாளுக்குப் பின் நகராட்சி மயானத்திற்கு கொண்டுசெல்லப்படுகிறேன். என் உடலை ஒரு பொட்டலமாகச் சுற்றி சணல்சாக்கில் வைத்திருக்கிறார்கள். அப்படியே தூக்கி சிதையில் வைக்கிறார்கள். அங்கே ஏற்கனவே ஒரு பிச்சைக்காரக் கிழவன் எரிந்துகொண்டிருக்கிறான். பாதி எரிந்த அவன்மேல் நான் வைக்கப்பட்டு எரியூட்டப்படுகிறேன். நான் எரிந்துகொண்டிருக்கும்போதே இன்னொரு கிழட்டு பிச்சைக்காரியின் உடல் என் மேல் வைக்கப்படுகிறது, அவ்வளவுதான்.”

ராம்சரண் குடித்துவிட்டால் விடிய விடிய பேசுவான் என்பது பாரில் அனைவருக்கும் தெரியும். அந்த சிதையின் கதையை அவன் ஒவ்வொருவரிடமும் பத்துப்பதினைந்து முறை சொன்னதுமுண்டு. அவர்கள் ஒருவரை ஒருவர் பார்த்து சிரிப்பார்கள். “கூட்டுச்சிதை!” என்று சொல்லி தலையை ஆட்டுவார்கள். ஆனால் சட்டென்று ராம்சரண் அழத்தொடங்கும்போது அவர்களின் சிரிப்பு நின்றுவிடும்.

ஆகவே ராம்சரண் சட்டென்று திருமணம் செய்துகொண்டபோது அவர்கள் அதிர்ச்சி அடையவில்லை. “அவன் உணர்ச்சிகரமான ஆள்… அவனை எந்தப்பெண்ணும் வீழ்த்தமுடியும்” என்று அவனுடைய நண்பன் ஆகாஷ் டாகூர் சொன்னான்.

ராம்சரண் திருமணம் செய்ய முடிவெடுத்தது திடீரென்றுதான். அவன் ஒரு சிறிய விடுதியில் தங்கியிருந்தான். அந்த ஊரில் இருந்து விடியற்காலையில் அவன் கிளம்பவேண்டியிருந்தது. முன்னிரவில் ஒருவனை அவனும் டாகூரும் சேர்ந்து வெட்டியிருந்தனர். டாகூர் பிடிபட்டான். ராம்சரண் தப்பிவிட்டான். நகரிலுள்ள எல்லா விடுதிகளிலும் அவனை போலீஸ் தேடிக்கொண்டிருந்தது. கையில் பெட்டிகூட இல்லாத அவனுக்கு அந்த சிறிய விடுதியில்தான் அறை கிடைத்தது.

அன்றிரவு அவன் அறைக்கதவு தட்டப்பட்டது. அவன் அது போலீஸ்தான் என்ற உறுதியுடன் கதவைத் திறந்தான். வெளியில் இருந்து சட்டென்று உள்ளே வந்த ஒரு பெண் கதவை மூடி, அதன்மேல் சாய்ந்து நின்று “என்னைக் காப்பாற்றுங்கள்…என்னை காப்பாற்றுங்கள்” என்றாள்.

“என்ன?” என்று அவன் கேட்டான்.

“என்னை பிடிக்க வருகிறார்கள்” என்றபின் அவள் தன் இடுப்பில் இருந்த பையில் இருந்து ஒரு கருகுமணி மாலையை எடுத்து கழுத்தில் வைத்து “இதை மாட்டிவிடுங்கள்” என்றாள்.

அவன் அதன் கொக்கியை மாட்டினான். கதவு மீண்டும் தட்டப்பட்டது. அவள் சென்று படுக்கையில் படுத்து பாதி போர்த்திக்கொண்டாள். அவன் கதவைத் திறந்தான். வெளியே நின்றிருந்த கும்பலில் வயதானவர் அவனிடம் “உள்ளூரில் உள்ள இளைஞர்கள் இங்கே ஒரு மோசமான பெண்ணை சிலர் அழைத்து வந்ததாகச் சொல்கிறார்கள் … அவள் இங்கே நுழைவதைப் பார்த்திருக்கிறார்கள்…” என்றார்.

“இங்கே நானும் என் மனைவியும்தான் இருக்கிறோம்” என்று அவன் சொன்னான். அவர்கள் உள்ளே எட்டிப்பார்த்தனர்.

அவள் “யாரது?” என்றாள்.

“ஒன்றுமில்லை” என்று ராம்சரண் சொன்னான்.

பெரியவர் “மன்னிக்கவேண்டும்…” என்றபின் மற்றவர்களிடம் போகலாம் என்று தலையசைத்தார்.

மீண்டும் கதவைமூடியபின் அவன் ஒரு சிகரெட் பற்றவைத்துக் கொண்டான். “நீ விபச்சாரியா?” என்றான்.

“ஆமாம், ஒருவன் என்னை அழைத்து வந்தான். இவர்கள் அவனுடைய பக்கத்துவீட்டுக்காரர்கள்”

“சரிதான்”

“நான் கொஞ்சநேரம் கழித்து கிளம்பிவிடுகிறேன்”

”வேண்டாம், என்னுடன் நீ பாட்னா வரை வா. எனக்கு அதுவரை மனைவி தேவைப்படுகிறது”

“எதற்கு?”

“போலீஸ் என்னை தேடுகிறது” என்றபின் சிகரெட்டை இழுத்து புகைவிட்டு “கொலைக்காக” என்றான்.

அவள் “ஓ” என்றாள். ஆனால் கண்கள் மாறிவிட்டன.

“நான் பணம் தருகிறேன்…நீ மகிழ்ச்சி அடையுமளவுக்குப் பணம்”

”நான் பாட்னாவிலேயே இதே தொழிலை செய்யமுடியுமா? யாரையாவது எனக்கு அடையாளம் காட்டிவிடுவீர்களா?”

“அதற்கென்ன? பார்ப்போம்”

அவள் உடைகளை தளர்த்தியபடி “உங்களுக்கு வேண்டுமா?” என்றாள்.

“வேண்டாம்” என்று அவன் சொன்னான். “நான் அந்த மனநிலையில் இல்லை”

“அப்படியென்றால் நான் தூங்கலாமா?”

“சரி, உனக்கு மது வேண்டுமென்றால் அதோ மேஜையில் இருக்கிறது”

”நான் குடிப்பதில்லை. ஆனால் பசிக்கிறது. இந்த நிலக்கடலையை எடுத்துக்கொள்கிறேன்”

அவள் அதைச் சாப்பிட்டுவிட்டு உடனே தூங்கிவிட்டாள். அவன் சிகரெட் புகைத்தபடி அமர்ந்திருந்தான். தூக்கம் வரவில்லை. சிகரெட் தீர்ந்துவிட்டது. ஆகவே கீழே வீசிய சிகரெட் மிச்சங்களை தேடி எடுத்து மீண்டும் புகைபிடித்தான்.

அவள் இரண்டு மணிநேரத்தில் விழித்துக்கொண்டாள்.”தூங்கவில்லையா?”

“இல்லை”

”கொல்லப்பட்டவன் நல்லவனா?”

“என்னைப்போலத்தான்” என்றபின் “எல்லாரும் நல்லவர்கள்தான்” என்றான்.

“அப்படியென்றால் என்ன வருத்தம்?”

“வருத்தமில்லை. நான் வேறொருவரை நினைத்துக்கொண்டிருந்தேன்”

அவன் சொல்லட்டும் என்று அவள் காத்திருந்தாள்.

அவன் ராதிகாவை பற்றிச் சொன்னான். “அஸ்வத் தேஷ்பாண்டே சென்றவாரம் செத்துப்போனார். மாரடைப்பு. கடுமையான குடிப்பழக்கம் இருந்தது. ஈரல் கெட்டுப்போயிருந்தது”

“அவருக்கு குற்றவுணர்ச்சி இருந்ததா?”

“இல்லை. சொல்லப்போனால் பெருமைதான். அதை பலரிடமும் பெருமிதமாகச் சொல்லிக்கொண்டிருந்தார்” என்றான். “ஓய்வுபெற்றபின் வெளிப்படையாகவே சொல்ல ஆரம்பித்துவிட்டார். அதைச் சொன்னால்தான் தன் புதிய மனைவி தன்னை மதிப்பாள் என்று என்னிடம் ஒருமுறை சொன்னார்”

“மதித்தாளா?”

“குடிகாரர்களுக்கு என்ன மதிப்பு? அவளுக்கு தன் குழந்தைகளை படிக்கவைப்பது தவிர வேறு நினைப்பே இல்லை” என்றேன். ”ஆனால் அவளுக்கும் குற்றவுணர்ச்சி ஏதும் இருந்ததாகத் தெரியவில்லை”

“அது எப்போதும் அப்படித்தான்” என்று அவள் சொன்னாள்.

“மேலும் இதெல்லாம் மிகப்பழைய கதைகள்… யாருக்கு நினைவிருக்கிறது?” என்றான் ராம்சரண். “அஸ்வத்தின் முதல் மனைவியின் மகன் உருப்படவில்லை. அவனும் முழுக்குடிகாரன். அவனை யாரோ கொன்று கங்கைப்படிக்கட்டில் போட்டிருந்தார்கள்”

“நாம் இதையெல்லாம் ஏன் பேசவேண்டும்? அதை விட்டுவிடுங்கள்” என்றாள்

“சும்மா நினைத்துக் கொண்டேன்.” என்றான் ராம்சரண். ”இன்று நான் கொன்றவனின் பெயர்கூட அஸ்வத்தான்”

“அவருக்கு குற்றவுணர்ச்சி இருந்ததனால்தான் குடித்தாரா?”

”இல்லை, அதற்கு முன்னரே குடிதான்… அவருடைய இன்பங்கள் எல்லாமே மூர்க்கமானவை. அதற்கு உடல் ஒத்துழைக்காமலானபோது குடிக்க ஆரம்பித்தார். குடித்தால் கொஞ்சம் வெறி ஏறி உடல் கூட வந்தது…பிறகு அதுவும் போய்விட்டது”

“எப்படி இருக்கிறார்கள் மனிதர்கள்! இதையெல்லாம் செய்துவிட்டு குற்றவுணர்ச்சியே இல்லாமல் இருக்கமுடியுமா என்ன?” என்றாள் அவள். “ஆனால் நான் அவர்களைத்தான் தினமும் பார்க்கிறேன்”

“குற்றவுணர்ச்சி அடைவதற்குக்கூட ஒரு ஒரு சுரணை தேவைப்படுகிறது. சிலருக்கு அதைக்கூட கடவுள் அளிப்பதில்லை. குப்பை போல கடவுள் சிலரை தூக்கி அப்பால் வீசிவிடுகிறார். பாவப்பட்ட ஜென்மங்கள்” என்று ராம்சரண் சொன்னான்.

“மிச்சம் ரம் இருக்கிறதே, குடிக்கலாமே”

“நான் விடியற்காலையில் கிளம்பவேண்டும்”

”குடியுங்கள், நான் எழுப்புகிறேன்”

அவன் எஞ்சிய மதுவை குடித்துவிட்டு மேஜையில் உருண்டு கிடந்த ஒரே ஒரு வேர்க்கடலையை எடுத்து வாயிலிட்டு மென்றான். பின்னர் படுக்கையில் அவளருகே படுத்தான்.

“போடா, நீயெல்லாம் ஒரு ஆள் என்று கடவுள் சிலரைப் பார்த்து சொல்கிறார், என்ன சொல்கிறாய்?” என்றான். அவன் குரல் கொஞ்சம் குழறத் தொடங்கியிருந்தது.

அவள் ஒன்றும் சொல்லவில்லை.

“ஒருவன் கடவுளே என்று கூப்பிட்டு அழும்போது கடவுள் மேலே இருந்து கேலியாகச் சிரித்தாரென்றால் அவனெல்லாம் எப்பேற்பட்ட துரதிருஷ்டம் பிடித்தவன் இல்லையா?”

அதன் பின்னரும் அவன் ஏதோ சொல்லிக்கொண்டிருந்தான். எப்போது தூங்கினான் என்று தெரியவில்லை. தூக்கத்தில் சிதிலமான கனவுகளில் அவன் ஒரு பழைமையான கல்தூண் அருகே கழுத்தறுபட்டு துடிப்பதுபோல ஒன்று முற்றிலும் புதியதாக இருந்தது. தரையெல்லாம் அவன் ரத்தம் சிதறிக்கிடந்தது.

காலையில் அவளுடன் ஒரு டாக்ஸியில் பாட்னாவுக்கு கிளம்பினான். டாக்ஸியின் பின் இருக்கையில் தலையில் ஒரு மப்ளரைச் சுற்றிக்கொண்டு படுத்துவிட்டான். இரண்டு இடங்களில் போலீஸிடம் அவள் தன் கணவனுக்கு காய்ச்சல் என்று சொன்னாள்.

பாட்னாவை அடைந்ததும் அவன் அவளிடம் “சரி, நீ கிளம்பலாம். நான் உனக்கு பணம் தருகிறேன்…” என்றபின் இருபத்தைந்தாயிரம் ரூபாயை கொடுத்தான்.

“யாரையாவது அறிமுகம் செய்வதாகச் சொன்னீர்களே?” என்று அவள் பணத்தை வாங்கிக்கொண்டு சொன்னாள்.

“நீ ஊருக்குப் போ. இங்கே நிலைமை மிக மோசம்…”

”நான் இனி புதியதாக என்ன பார்க்கப்போகிறேன்?”

“உன் வீட்டில் யார் இருக்கிறார்கள்?”

“மாமியார் இருக்கிறார். ஒரு மகன் இருக்கிறான். அவனால் எழுந்து நடக்கமுடியாது.” அவள் சொன்னாள். “அங்கே பெரும்பாலும் எனக்கு ஆளே கிடைப்பதில்லை”

”இங்கே ஏதாவது அமைந்தால் சொல்கிறேன்” என்று அவன் சொன்னான்.

“சரி, பரவாயில்லை” என்று அவள் அந்த கருகுமணிமாலையை கழற்றப்போனாள்.

அவன் “அதை கழற்றாதே” என்றான். ”இருக்கட்டும்”

அவள் கண்களைச் சுருக்கியபடிப் பார்த்தாள். அவளைப் போன்ற பெண்களின் கண்கள் எப்போதுமே புண்பட்டதன்மையை காட்டுபவை. தூக்கமின்மையால் கருமை படிந்தவை.

“நான் உன் ஊருக்கு வருகிறேன். உன் மாமியாரையும் மகனையும் கூட்டி வருவோம். நீ என்னுடன் இரு”

அவள் வாயை கையால் பொத்தியபடி ஓசையே இல்லாமல் அழுதாள். அப்படியே கால் தளர்ந்து தரையில் அமர்ந்துவிட்டாள். முந்தானையை முகத்தின்மேல் இழுத்துவிட்டபடி அழுதுகொண்டே இருந்தாள். அவன் ஒரு சிகரெட்டை பற்றவைத்தபடி மதியவெயிலில் வெறிச்சிட்டிருந்த சாலையை பார்த்துக்கொண்டு நின்றான்.

மிக விரைவாக அவன் வாழ்க்கை மாறியது. அவனுக்கு ஒரு வீடு உருவாகியது. அங்கே ஒவ்வொன்று ஒழுங்காக அமைந்தன. அவன் வாழ்க்கையிலும் அந்த ஒழுங்கு உருவானது. ஒவ்வொரு நாளும் அவன் வீடுதிரும்பத் தொடங்கினான்.

அவளை மணந்தபின் அடுத்த ஆண்டே அவன் குற்றச்செயல்களை படிப்படியாக நிறுத்திக் கொண்டான். ஒருநாள் கையிலிருந்த மொத்தப் பணத்துடன் பாட்னாவிலிருந்து மும்பைக்கு குடிபெயர்ந்தான். அங்கே விலாஸ் ஷிண்டே என்று பெயரை மாற்றிக்கொண்டு புறநகரில் ஒரு சிறு அடுக்குமாடி வீட்டில் வாழ்க்கையை தொடங்கினான்.

முதல் ஓர் ஆண்டு எவராவது அடையாளம் கண்டுகொள்வார்கள், யாராவது தேடிவந்து விடுவார்கள் என்ற பயம் இருந்தது. அதன்பின்னர் அந்த பயம் கொஞ்சம் கொஞ்சமாக மறைந்தது. தாடி வளர்த்து, வெண்ணிற துணித்தொப்பியும் வைத்துக்கொண்டான். தடித்த கண்ணாடியும் அணிந்தபோது அவன் தோற்றமே மாறியது. அவனே அவனைக் கண்ணாடியில் பார்த்தபோது முற்றிலும் வேறொருவன் தெரிந்தான். பின்னர் அந்தக் கண்ணாடிப்பிம்பமே அவனாக அவனுள் குடியேறியது. அவனே அவனை வேறொருவனாக உணரத் தொடங்கினான். பழைய காலங்கள் எங்கோ நெடுந்தொலைவில் இருந்தன. எப்போதாவது கனவில் ஒரு கீற்றாக தோன்றிச் செல்லும் சில காட்சிகள் மட்டுமே அங்கிருந்து அவனை வந்தடைந்தன.

ராம்சரண் நீர் இறைக்கும் மோட்டார்களை விற்கும் நிறுவனம் ஒன்றின் விற்பனைப் பிரதிநிதியாகச் சேர்ந்தான். மும்பையைச் சுற்றிய நகர்களிலும் சிறு ஊர்களிலும் கடைகள் தோறும் சென்று விற்பனை ஆணைகளை பெறவேண்டும். எஞ்சியிருக்கும் பணத்தை வசூல் செய்து வங்கியில் கட்டவேண்டும். வாரத்தில் இரண்டுநாட்கள் வீட்டில் மனைவியுடன் இருப்பான்.

அவன் மனைவி நீண்டநாட்களுக்குப் பின் கருவுற்றாள். அது ஒருவகையான பதற்றத்தையே அவனுக்கு அளித்தது. அவளுக்கும் ஏதோ ஒரு பதற்றம் இருந்துகொண்டிருந்தது. இருவரும் அதைப் பகிர்ந்துகொள்ளவில்லை. அவள் ஒரே ஒருமுறை மட்டும் அவனிடம் “வீட்டில் யாரோ இருப்பதைப் போல தோன்றுகிறது, தெரியாத யாரோ” என்று சொன்னாள்.

“கர்ப்பிணிகளுக்கு அப்படி பல பிரமைகள் உருவாகும் என்று சொன்னார்கள். பொருட்படுத்தாதே” என்று அவன் சொன்னான்.

ஆனால் மறுநாளே அவன் வீட்டில் நிழலைப் பார்த்துவிட்டான். யாரோ அறைக்குள் நடமாடும் உணர்வை அடைந்து அவன் தூக்கத்திலிருந்து விழித்துக்கொண்டபோது அறைக்குள் நிழல் நின்றிருந்தது. அவன் திடுக்கிட்டு எழுந்து அமர்ந்தபோது அது கொடித்துணியின் நிழலாக ஆகியது. தரையில் நான்குமாத கர்ப்பமான அவன் மனைவி படுத்திருந்தாள்.

தான் பார்த்தது என்ன என்று ராம்சரண் உள்ளூர உழற்றிக்கொண்டே இருந்தான். அது தன் பிரமை என்று சொல்லிச் சொல்லி அவன் நிலைநாட்டிக்கொள்ளும்போது சட்டென்று அது தன்னைக் காட்டியது. அவன் ஔரங்காபாதுக்கு கிளம்பிச் செல்லும்போது ரயிலில் அவனுடைய இருக்கைக்கு நேர் எதிர் இருக்கையில் அவன் நிழல்போல விழுந்து கிடந்தது. அவன் அசைந்தபோது அது அசையவில்லை. அவன் நெஞ்சு படபடக்க அதைப் பார்த்துக் கொண்டிருந்தபோது அவன் காதில் மெல்லிய குரல் “அது நான்தான்” என்றது.

“எங்கிருந்து வருகிறாய்? என்ன வேண்டும் உனக்கு?” என்று ராம்சரண் கேட்டான்.

“நெடுந்தொலைவில் இருந்து…அதாவது காலத்தின் தொலைவு” என்று அந்நிழல் சொன்னது. “நீ ஆனந்தனைக் கேள்விப்பட்டிருக்கிறாயா?”

“இல்லை”

“அவர் ரோகிணி ஆற்றில் பரிநிர்வாணம் அடைந்தார். அதை நான் பார்த்தேன்”

“அதை ஏன் என்னிடம் சொல்கிறாய்”

“நாங்கள் அப்படித்தான், சம்பந்தமில்லாமல் பேசுவோம். நீங்கள் வாழும் அந்த உலகின் காரணகாரிய உறவுக்கு நாங்கள் கட்டுப்பட்டவர்கள் அல்ல”

அவன் தனக்குத்தானே பேசுவதைக் கண்டு அங்கே அமரவந்தவர் திகைத்து விலகிச் சென்றார். அவன் தலையை உலுக்கி தன்னை விடுவித்துக்கொண்டான்.

அவன் அதிகாலையில் ஔரங்காபாதுக்கு சென்று, பகல் முழுக்க அலைந்துவிட்டு, தன் விடுதிக்குத் திரும்பி வந்து, இறங்கி ஆட்டோரிக்‌ஷாவுக்கு பணம் கொடுத்துவிட்டு, சாதாரணமாகத் திரும்பும்போது ஓரக்கண் எதையோ பார்த்துவிட்டது. எதை? அவன் பதைப்புடன் சுற்றுமுற்றும் பார்த்தான்.

கண்களை கண்கள் தவறவிடுவதில்லை. அருகே இருந்த பைக் பழுதுநீக்கும் கடையில் ஒருவன் சற்றே தூண்மறைவில் இருந்து அவனை ஒரு கணம் பார்த்துவிட்டு கண்களைத் திருப்பிக் கொண்டான். ராம்சரண் அதே ஆட்டோவில் ஏறிக்கொண்டு “கிளம்பு” என்றான்.

“என்ன சார்?”

“பஸ் ஸ்டாண்ட் போ… அங்கே பணப்பையை மறந்துவைத்துவிட்டேன்… கிளம்பு… கிளம்பு…”

ஆட்டோ செல்லும்போது அவன் பின்பக்கம் பார்த்துக்கொண்டே இருந்தான். அவர்கள் அதற்குள் எங்கெங்கோ செய்தி சொல்லியிருப்பார்கள். வலை பல இடங்களிலாக விரியத் தொடங்கியிருக்கும். ஆனால் எவரையும் பார்க்கமுடியவில்லை. அவ்வாறு ஆறுதல் அடையக்கூடாது என்று அவனுக்குத் தெரிந்திருந்தது.

மீண்டும் மும்பைக்கு திரும்பக்கூடாது. விடுதியில் வழக்கம்போல அவன் தவறான விலாசம்தான் கொடுத்திருந்தான். அங்கே இருக்கும் பொருட்கள் எதிலும் அவனுடைய வீட்டுவிலாசமோ, நிறுவனத்தின் விலாசமோ இல்லை. ஒவ்வொரு முறையும் புதிய விடுதியிலேயே அவன் தங்குவது வழக்கம்.

ஒரு பஸ் சாலையில் வளைந்து வருவதைக் கண்டான். ”நிறுத்து” என்று சொல்லி பணத்தை கொடுத்துவிட்டு பாய்ந்து சென்றான். ஓடிப்போய் அந்த பஸ்ஸில் ஏறிக்கொண்டான். டிக்கெட் எடுத்துவிட்டு வெளியே பார்த்தபடியே வந்தான். அடுத்த நிறுத்ததில் இறங்கி இன்னொன்றில் ஏறிக்கொண்டான். அது எந்த ஊர் என்று தெரியவில்லை. நடத்துநர் அவரே ஊர்ப்பெயரைச் சொல்லி கேட்டார். ஆமாம் என்று டிக்கெட் எடுத்துக்கொண்டான்.

அந்த ஊருக்குச் சென்று அவன் இறங்கியபோது இரவு ஆகியிருந்தது. பைதான் என்ற அந்த ஊரை எங்கோ கேள்விப்பட்டதுபோல் இருந்தது. அங்கே துகாராம் ஆலயம் இருந்தது, ஆனால் அது தீர்த்தாடனக் காலம் அல்ல. ஆகவே பஸ் ஸ்டாண்டில் அந்த வேளையில் கூட்டம் இல்லை. குளிர்காலம் ஆகையால் கடைகள் பெரும்பாலும் மூடியிருந்தன. அது முழுநிலவுநாள். சாலையிலுள்ள கூழாங்கற்கள் கூடத் தெரியும் அளவுக்கு வெளிச்சம். ஒவ்வொரு கூழாங்கல்லுடனும் ஒரு சிறிய நிழல்.

ஏதாவது ஒரு சிறிய விடுதியில் தங்கிவிட்டு காலையில் மும்பைக்குச் செல்லவேண்டும் என்று எண்ணினான். மும்பையில் இருந்து ஏதாவது தெற்கு நகரத்திற்கு இடம்பெயர்ந்துவிட வேண்டும். மும்பை திரும்பிய அன்றே அங்கே இருந்து கிளம்பிவிடவேண்டும்.

“அவர்கள் உன்னை பார்த்துவிட்டார்கள்” என்று செவியருகே நிழல் சொன்னது. அக்கணம் அவனும் பார்த்துவிட்டான். ஒரு காரின் முகப்பு வெளிச்சம் அவன் மேல் விழுந்தது. மழுங்கலான குரல்கள் கேட்டன.

அவன் திரும்பி ஓடத்தொடங்கினான். பக்கவாட்டுச் சந்துகளில் திரும்பி திரும்பி ஓடினான். தெருக்களில் நாய்கள் மட்டும்தான். எல்லா வீடுகளும் மூடியிருந்தன.சாலையில் தெருவிளக்குகளின் மங்கலான வெளிச்சம் சிந்தியிருக்க காகிதக்குப்பைகள் காற்றில் அலைபாய்ந்துகொண்டிருந்தன. நிலவின் வெளிச்சம் சரிவான ஓட்டுக் கூரைகளையும் கம்பிகளின் வளைவுகளையும் மின்னச் செய்தது.

தன்னை தொடர்ந்து வரும் காலடியோசைகளை கேட்டுக்கொண்டே இருந்தான். பலர் இருப்பது தெரிந்தது. நீண்டகாலப் பழக்கமின்மையால் ஓட முடியாமல், உடம்பு சூடாகி மூச்சி இறுகிக்கொண்டது. கால்களில் தசைகள் தெறிக்கத் தொடங்கின.

ஒரு கட்டத்தில் ஓடமுடியாமல் தள்ளாடியபடி ஒரு சுவரைப் பிடித்துக்கொண்டான். ஏதோ மசூதியின் சுவர் அது. அலையலையாக உருண்ட தூண். உள்ளே விளக்குகள் எரிந்தன. மிக அருகே பேச்சுக்குரல்கள் கேட்டன. முழுவிசையையும் செலுத்தி, தன் உடலை உந்தி முன்னால் செலுத்திக்கொண்டு மீண்டும் ஓடத்தொடங்கினான். தன் எடையும், அதன் விளைவான காலடியோசையும்தான் தன்னைக் காட்டிக்கொடுக்கிறது, ஆனால் ஒன்றும் செய்வதற்கில்லை. அவன் பதுங்கிக்கொள்ளும் அளவுக்கு எங்கும் இடமில்லை.

கோதாவரிக்கரையில் அமைந்த நகரம் அது. ஆற்றுக்குச் செல்லும் ஒதுக்குப்புறமான பாதை. அங்கே பெரிய வாசல்களுடன் கோட்டைகள் மூடிக்கிடந்தன. கோட்டைகள் அல்ல, வீடுகள். ஆனால் கூரையற்றவை. தொன்மையானவை, கைவிடப்பட்டவை. மேலும் ஓடமுடியாது என்று உணர்ந்தான். குரல்கள் இப்போது பல இடங்களிலாக கேட்டன. தாழ்ந்த ஒலியில் விடுக்கப்படும் ஆணைகள். டார்ச் விளக்கின் வட்டங்கள் சுழன்று சுழன்று முட்புதர்களிலும் மரங்களிலும் இடிந்த குட்டிச்சுவர்களிலும் விழுந்து தாவிச் சென்றன.

அவன் ஒரு மாளிகையின் வாசலை அடைந்ததும் நின்றுவிட்டான். இதயத்தை கிடுக்கியால் கவ்வி இறுக்கியது போலிருந்தது. மேலும் ஓர் அடி எடுத்துவைக்க உடலால் முடியாது என்று உணர்ந்தான். அந்த வாசலிலேயே இருட்டில் அமர்ந்தான். அப்போதுதான் அங்கே பழைய துணிக்குவியல்கள் கிடப்பதைக் கண்டான். ஒருவன் அங்கே ஏற்கனவே படுத்திருந்தான்.

அவன் தொழுநோயாளிபோலத் தோன்றினான். அவன் கூச்சலிட்டால் பிடிபட்டுவிடுவோம் என்று ராம்சரண் உணர்ந்தான். எப்படி அவனிடம் சொல்வது? அவன் கண்களில்லாதவன் என்று தெரிந்தது. தாடியும் மீசையும் தலைமுடியும் மண்டி புதர்போன்ற தலை. ஒன்றுக்குமேல் ஒன்றாகப் போடப்பட்ட அழுக்குச் சட்டைகள். அப்பகுதியிலேயே மட்கும் நாற்றம் நிறைந்திருந்தது.

ராம்சரண் அமர்ந்து அங்கே கிடந்த பழைய துணி ஒன்றை எடுத்து தன் உடல்மேல் சுற்றிப்போர்த்திக்கொண்டான். பின்னர் தலைவழியாகவும் போர்த்திக்கொண்டு உடலைச் சுருட்டி, சுவரின் மடிப்புடன் ஒட்டிக்கொண்டு படுத்தான். காலடியோசைகள் மிக நெருக்கமாக கேட்டன.

“இங்கேதான்…தேடு” என்று குரல் ஆணையிட்டது.

“இந்த வழியாகப்போனால் ஆறு…”

ராம்சரண் மேல் டார்ச் விளக்கின் ஒலி விழுந்து சென்றது. அவன் மூச்சை அடக்கிக்கொண்டு கிடந்தான். இதயம் அறைபடும் ஓசை காதில் கேட்டது. உடல்முழுக்க அனல்போல வெப்பம். மீண்டும் அவன்மேல் விளக்கொளி கடந்து சென்றது.

“டேய், இங்கே ஒருவன் ஓடிவந்தானா?”

இன்னொருவன் “அவன் ஊமை…கண்ணும்தெரியாது” என்றான்.

அந்தப் பிச்சைக்காரன் தூக்கத்திலேயே இருப்பதுபோலிருந்தது.

மீண்டும் ஒளி ராம்சரண் மேல் சுழன்று சென்றது. பிறகு குரல்கள் மங்கி மறைந்தன.

நெடுநேரம் குரல்களுக்காக செவிகூர்ந்தபின் அவன் துணியை விலக்கி எழுந்துகொண்டான். எத்தனை பழந்துணிக் குப்பைகள். பிச்சைக்காரன் பைத்தியம்போல குப்பையில் கிடக்கும் எல்லா துணிகளையும் எடுத்து அங்கே குவித்திருக்கிறான். பெரிய சேமிப்பு.

ராம்சரண் தன் சட்டையை இழுத்து விட்டுக்கொண்டு சுற்றுமுற்றும் பார்த்தான். தொலைவில்கூட குரல்கள் கேட்கவில்லை. செய்யக்கூடுவது வேறொன்றும் இல்லை, வந்தவர்களுக்கு நேர் எதிர் திசையில் முடிந்தவரை விலகிவிடுவதுதான் ஒரே வழி. அந்த ஊர் அவனுக்குத் தெரியாது. அங்கே எங்கு செல்வது என்று எந்த முடிவையும் எடுக்கமுடியாது.

அவன் அந்தப் பிச்சைக்காரனை திரும்பிப் பார்த்தான். அவன் முகம் வான் நோக்க, மல்லாந்து கிடந்தான். நிலவின் ஒளியில் அவன் தலைமுடிச்சுருள்களும் தாடியின் கம்பிபோன்ற மயிர்களும் ஒளிர்ந்தன. தாடியின் நிழல் வலைபோல மார்பில் விழுந்திருந்தது.

ராம்சரண் காலடியோசை எழுப்பாமல் ஆனால் விரைவாக நடந்தான். திரும்பும்போது அவன் வந்த வழி அத்தனை தெளிவாக, பலமுறை அங்கே வந்ததுபோல நினைவிருப்பதை உணர்ந்தான். அத்தனை பதற்றத்திலும் அவன் உள்ளம் வழியை துல்லியமாக கவனித்திருக்கும் விந்தையை எண்ணிக்கொண்டான்.

அவன் மீண்டும் பஸ் ஸ்டாண்டை அடைந்தான். அங்கே எந்த வண்டி கிடைத்தாலும் ஏறி அடுத்த ஊருக்குச் சென்றுவிடவேண்டும் என எண்ணினான். சாலையில் எவருமில்லை. ஒரே ஒரு ஜீப் மட்டும் நின்றுகொண்டிருந்தது. உட்புறக் கிராமங்களுக்கு ஆட்களை ஏற்றிச்செல்லும் ஜீப். அதன் டிரைவர் கால் வெளியே தொங்க தூங்கிக்கொண்டிருந்தான்.

ராம்சரண் அந்த ஜீப்பை அணுகியபோது உள்ளே இருந்து இரண்டு பேர் எழுந்து அவனை பிடித்துக்கொண்டனர். அவன் திமிறுவதற்குள் மறுபக்கமிருந்து மேலும் இரண்டுபேர் வந்துவிட்டனர். அவன் தளர்ந்து நின்றான்.

“ராம்சரண் நாயக், பேசாமல் எங்களுடன் வா. இங்கே வேண்டாம்” என்று ஒருவன் சொன்னான். அந்தக் குரலிலேயே அவன் தொழில்முறைக் கொலையாளி என்று தெரிந்தது.

அவர்கள் அவனை உந்தி ஜீப்பில் ஏற்றிக்கொண்டார்கள். ராம்சரண் இரண்டு பேருக்கு நடுவே தடித்த உடலை இறுக்கிக்கொண்டு அமர்ந்திருந்தான். நிலவின் ஒளியில் குறுகிய நிழல்கள் விழுந்துக் கிடந்த சாலைவழியாகச் சென்றபோது ராம் சரணின் நினைவில் அந்தப் பிச்சைக்காரனின் முகம் தன்னியல்பாக தெளிந்து வந்தது. அவன் யார் என்று புரிந்துவிட்டது.

“ஆ” என்று ராம்சரண் மூச்சொலி எழுப்பினான்.

“என்ன?”

“ஒன்றுமில்லை” என்றான் ராம்சரண். அந்த முகத்தை அப்போது கண்முன் பார்ப்பதுபோல உணர்ந்தான். அதில் புன்னகை இருந்தது. கருணை மிக்க புன்னகை.

அவன் காதருகே நிழல் சொன்னது. “அவனுக்கு உன்னை நன்றாகவே தெரிந்திருந்தது. அவன் அந்தக் கழியால் இரண்டுமுறை தரையைத் தட்டியிருந்தால் நீ அப்போதே பிடிபட்டிருப்பாய்”

ராம் சரண் தலையை அசைத்தான். தலைகுனிந்து பற்களை இறுகக் கடித்தான்.

“அத்தனை பெரிய தண்டனையா எனக்கு என்று அவன் என்னிடம் குமுறினான்” என்றது கானபூதி. “அவன் நிழல் இங்கே நெஞ்சிலும் தரையிலும் அறைந்துகொண்டு அழுதது. எனக்கு ஏன் இந்த கொடுந்தண்டனை என்று என்னிடம் கேட்டுக்கொண்டே இருந்தது. அதன் அழுகையை என்னால் ஒருபோதும் நிறுத்தமுடியாது என்று தெரிந்திருந்ததால் நான் இரக்கத்துடன் பார்த்துக்கொண்டிருந்தேன்”.

அவனை அவர்கள் பாட்னாவுக்கு கொண்டுசென்றனர். பலநாட்கள் வைத்து சித்திரவதை செய்தனர். அவன் கையெழுத்தையும் கைரேகைகளையும் கொண்டு பல வங்கிகளின் அறைகளில் இருந்து நகைகள், பணம், ஆவணங்கள் என எல்லாவற்றையும் எடுத்தபின்பு அவனைக் கொன்று ஒரு பெரிய இரும்பு உருளையுடன் சேர்த்துக் கட்டி கங்கையில் வீசினார்கள். அவன் நீரிலிருந்து வெளிவராமலேயே அழுகி, மட்கி எலும்புக்கூடாகி, கங்கையின் அடிச்சேற்றில் படிந்திருக்கும் பல்லாயிரம் எலும்புக்கூடுகளில் ஒன்றாக ஆனான்.

அவன் மனைவியை அவர்கள் தேடிப்பிடித்தனர். அவளையும் சித்திரவதை செய்தனர். ஆனால் அவளுக்கு ஒன்றும் தெரிந்திருக்கவில்லை. ஆகவே அவளைக் கொன்று அங்கே ஒரு சாக்கடையில் வீசிச்சென்றனர். அந்தக் கிழவியும் சிறுவனும் வீட்டில் இருந்து விரட்டப்பட்டனர். பசித்து குளிர்ந்து தெருவிலேயே இருவரும் இறந்தனர்.

”அந்த நிழல் இங்கே சிலகாலம் இருந்தது. பின்னர் அதைக் காணவில்லை” என்றது கானபூதி. ”என் முன் இரு கைகளையும் விரித்து அது கதறியது. சொல் நிழல்களின் தந்தையே, ஏன் அவன் அப்படிச் செய்தான் என்று கேட்டது. அவனிடம் நான் சொன்னேன், ’அவன் தன்னைத் தானே முடிவுசெய்துகொண்டவன்’ என்று.”

கானபூதி தொடர்ந்தது “கதைகளின் நிறைவில் தோன்றும் முழுநிலவு. அதை தூய உள்ளம் மட்டுமேயாக எஞ்சிய துக்காராம் பார்த்துவிட்டான். நான் அவனிடம் சொன்னேன், நீ குணாட்யன். மாபெரும் கவிஞனாக ஆகும் பொருட்டே பிறந்தவன் என்று உனக்கும் தெரியும். நீயும் அவரும் வெறும் வேர்களாக மட்டுமே உங்களை ஆக்கிக் கொண்டவர்கள். உயிர்கொண்டிருப்பது உங்களுக்கு மட்டுமே தெரியும் என்னும் நிலை. முளைத்தாலொழிய இருப்பு இல்லை என்னும் நிலை. தண்டும், கிளைகளும், இலைகளும் மலர்களும், கனிகளும் விதைகளுமாக ஆகி பொலிவதே வேர்களின் தர்மம்…”

நிலவைச் சுட்டிக்காட்டி நான் சொன்னேன். ”இது பரிநிர்வாணநாள் நிலவு. இவ்விரவு நித்யமானது, இந்த நிலா தேய்வற்றது. இந்நிலவை குணாட்யரும் பார்த்தார். அது பிருஹத்கதா என்னும் பெருங்காவியமாகியது. நீயும் ஒரு காவியத்தை எழுது. இதுதான் தருணம்”

துகாராம் என் முன் அமர்ந்திருந்தான். கைகளால் துழாவி ஓர் இலையை எடுத்தான். இன்னொரு கையால் துழாவி ஒரு முள்ளையும் எடுத்தான்.இலைமேல் அந்த முள்ளை வைத்துக்கொண்டு அப்படியே அமர்ந்திருந்தான். நான் காத்திருந்தேன்.

பின்னர் புன்னகையுடன் அவற்றை கீழே போட்டான்.

“என்ன செய்கிறாய்?” என்று நான் கேட்டேன்.

“நான் எழுதி முடித்துவிட்டேன்” என்றான் “என்னுடைய பிருஹத்கதையை” என்றபின் தவழ்ந்து அப்பால் சென்றான்.

நான் அவனுடன் சென்றபடி “என்ன செய்கிறாய்?” என்றேன்.

“அக்னிபுத்ர சதகர்ணி நிறுவிய முதல் பௌத்த சைத்யம் அமைந்த இடம் இது” என்று சொன்னபடியே துகாராம் தவழ்ந்தான். ஓர் இடத்தில் அமர்ந்து கைகளால் மண்ணை தோண்டத் தொடங்கினான்.

“அதை நீ எப்படி அறிந்தாய்?”

“நான் சொன்னேன்” என்று ஆபிசாரன் சொன்னது.

“நாங்களும் சொன்னோம்” என்றது சூக்ஷ்மதரு.

துகாராம் மண்ணை அள்ளி நீக்க நீக்க புத்தரின் சிலை ஒன்று தெளிந்து வந்தது. பழமையானது. விளிம்பு உடைந்தது. விண்ணுலகில் முகில்களில் அமர்ந்திருக்கும் புத்தரைச் சுற்றி தேவர்கள் மலர்மழை பொழிந்தனர். கந்தவர்களும் யட்சர்களும் இசைஎழுப்பினர். காலடியில் போதிசத்வர்கள் ஞானம் கோரும் கைகளுடன் அமர்ந்திருந்தனர். மாரனும் மரணமும் காலடியில் பணிந்திருந்தனர். புத்தர் ஞானப்புன்னகை விரிந்த முகத்துடன் ஒருகையை இடையில் வைத்து மறுகையால் அபிசம்போதனை முத்திரை காட்டி அமர்ந்திருந்தார்.

“நான் இந்தக் காலடியில் அமர்கிறேன்” என்று அவன் சொன்னான்.

“என் கதைகள்… இத்தனை கதைகளுடன் நான் என்ன செய்வது?” என்று நான் கேட்டேன்.

“கதைகள் அழிவதில்லை, நீயும் காலம் அற்றவன் “ என்று துகாராம் சொன்னான். என்னை நோக்கி புன்னகைத்து “உன் கண்களும் புன்னகையும்போல இந்த வாழ்க்கையில் நான் கண்ட அழகு வேறில்லை. என்னை விடுவித்த தெய்வம் நீ. உனக்கு வணக்கம்” என்று சொல்லி குனிந்து என் கால்களைத் தொட்டு வணங்கினான்.

நான் கண்ணீருடன் அவனைத் தழுவிக்கொண்டு “சென்று வா என் மகனே, மகாதர்மனின் காலடியில் உன் அழலெல்லாம் அமுதமாகட்டும்” என்றேன்.

நிழல்களான ஆபிசாரனும் சக்ரவாகியும் சூக்ஷ்மதருவும் அவனை முத்தமிட்டு முத்தமிட்டு வழியனுப்பினர். அவன் கைநீட்டி அந்த சிற்பத்தின் காலடியை தொட்டான். ஒளி குவிவதுபோல அவன் ஒரு புள்ளியாக மாறி அதில் சென்று மறைந்தான். அச்சிற்பத்தை நீ எப்போதாவது பார்க்கலாம், அதில் வலது எல்லையில் கீழிருந்

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on July 02, 2025 11:34
No comments have been added yet.


Jeyamohan's Blog

Jeyamohan
Jeyamohan isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow Jeyamohan's blog with rss.