வியாசபூர்ணிமை நாளை
நாளை (10 ஜூலை 2025) வெண்முரசு நாள். வியாசபூர்ணிமையை வெண்முரசு நாளாகக் கொண்டாடுவதாக அந்நாவல் நிரையை நான் எழுதி முடித்தபோது முடிவுசெய்தோம். ஒரு சிறு வாசகர்குழுவுக்குள் இதைச் செய்கிறோம். குருபூர்ணிமா பொதுவாக தமிழகத்திற்கு முற்றிலும் அன்னியமான ஒரு விழாதான். அதை இவ்வாறாக ஒரு பொதுவிழாவாக ஆக்குகிறோம்.
குருபூர்ணிமா அன்று செய்யத்தக்கவை என்ன? தத்தம் ஆசிரியர்களை வணங்குதல். வியாச மகாகாவியத்தையும், அதன் வழிநூல்களையும், அதையொட்டிய கலைநிகழ்வுகளையும் ரசித்தல். அதுவே மரபு. ஆகவே அதை வெண்முரசு நாளாகக் கொண்டாடுவது வியாசனுக்கு வணக்கத்தையும், அவனில் தொடங்கும் காவியங்களை உள்வாங்குதலையும் ஒருங்கே செய்வதுதான்.
நான் கதகளி நடனசபைகளில் இந்நிகழ்வு இப்படித்தான் கொண்டாடப்படுவதைக் கண்டிருக்கிறேன், அங்கே பாடப்படும் அல்லது நடிக்கப்படும் கதகளிக் கதைகள் வியாசனில் இருந்து மேலே வளர்ந்துசென்று கொட்டாரக்கரை தம்புரான் போன்றவர்களால் உருவாக்கப்பட்டவை. வியாசகாவியம் எப்படியெல்லாம் பாரதமாக வளர்ந்தது என அறிந்தவர்களுக்கு அது இயல்பானதாகவே இருக்கும்.
ஒரு நூலை ஏன் அப்படி ஆண்டு தோறும் ஒரு விழாவாகக் கொண்டாடவேண்டும்? ஏனென்றால் அது முடிவில்லாத நூல். வழிநூல்களின் வழியாகவும் வளர்ந்துகொண்டே இருப்பது. வெண்முரசும் அப்படித்தான். அதற்கும் வழிநூல்கள் உருவாகலாம். எந்த ஒரு நல்ல வாசகரும் அதை போதுமான அளவு வாசித்துவிட்டதாகச் சொல்லிக்கொள்ள முடியாது என்றே நான் நினைக்கிறேன். மொத்த இந்தியப்பண்பாட்டின் சித்திரமும், இந்திய தத்துவசிந்தனையின் அழகியல் ரீதியான சுருக்கமும் அதில் உள்ளன. வாசகர் வளருந்தோறும் உடன் வளரும் படைப்பு அது.
Jeyamohan's Blog
- Jeyamohan's profile
- 834 followers
