கல்வி,கடிதம்
அன்பின் ஜெ…
தங்கள் தளத்தில் கல்வியின் எதிர்காலம் குறித்து வாசகர் கேள்வியும்,அதற்கு தாங்களளித்த பதிலையும் படித்தேன்.அது கல்வித்துறையின் போதமைகளைப் பற்றிப் பேசியிருந்தது. நன்று.
கல்வித்துறையில் இன்றைய நிலையில் அதிகம் விவாதிக்கப்பட வேண்டிய ஒருபக்கம் இருக்கிறது.அது கிராமப்புற மாணவர்களின் தொடக்கக் கல்வியைப் பற்றியது.
இன்று தமிழகம் முழுவதும் நகரம் துவங்கி கிராமப்புறங்கள் வரை எங்கு திரும்பினாலும் விதவிதமான பெயர்களில் தனியார் ப்ரைமரி பள்ளிகளே நிறைந்திருக்கின்றன. முன்பெல்லாம் பத்திருபது கிராமங்களுக்கு அருகிலிருக்கக்கூடிய சின்ன டவுனில் தான் இப்படிப்பட்ட பள்ளிகள் இருக்கும். இப்போது சிறு சிறு கிராமங்களில் கூட பார்க்க முடிகிறது.இது நல்லது தானே, கல்வி பரவலாக்கப்பட்டிருக்கிறதென்று நீங்கள் நினைக்கலாம். ஆனால் பெரும்பாலான இடங்களில் நிலைமை அப்படியில்லை.
இன்றைய பெற்றோர்களின் ஆங்கிலம் மீதான மோகம் புரிந்து கொள்ளக் கூடியதுதான்.ஆனால் கிராமப்புற பெற்றோர்களில் பெரும்பான்மையினருக்கு அவர்களறிந்த ஆங்கிலம் என்பது அவர்களின் பெயரை எழுதும் அளவிற்குத் தான் பரிட்சயம்.அவ்வகையினரின் குழந்தைகளே இப்பள்ளிகளில் அதிகம் சேர்கிறார்கள். பெரும்பாலான பெற்றோர்கள் அன்றாடக் கூலிகள். அரசுப் பள்ளியில் சேர்த்து படிக்க வைக்கும் அளவிற்கு தாங்கள் வறுமையிலில்லை என்று நம்புபவர்கள். தங்கள் பிள்ளைகளும் ஷூ அணிந்து (!?) வேனில் சென்று படிப்பதை முகம் மலரச் சொல்பவர்கள். ஆனால் தங்கள் பிள்ளைகள் எப்படிக் கற்கிறார்கள் என்பதை அறிந்து கொள்ளும் ஆற்றலோ, நேரமோ இல்லாதவர்கள்.
இப்படி அரும்பாடுபட்டு தங்கள் குழந்தைகளின் கல்விக்காக உழைக்கும் பெற்றோர்களின் மனம் கோணதிருக்கும்படி இப்பள்ளிகளும் அனைத்துக் குழந்தைகளும் ஏதாவது ஒரு ரேங்க் போட்டே ரேங்க் அட்டையை அளிக்கிறார்கள். அதற்கு காரணம் இவ்வளவு பணம் செலவு செய்தும் தன் மகனுக்கு படிப்பு வரவில்லை என்று டீசி வாங்கி கொண்டு போய் அரசுப் பள்ளியில் சேர்த்துவிடக்கூடாதென்ற பயம் தான். விளைவு பெரும்பாலான குழந்தைகளுக்கு தமிழும் தெரிவதில்லை, ஆங்கிலமும் தெரிவதில்லை. பெற்றோர்கள் இதையறிந்து கொள்வதற்குள் குழந்தைகள் நான்காவது ஐந்தாவது வகுப்பு வரை வந்துவிடுகிறார்கள்.கொஞ்சம் முன்னாடி கொண்டு வந்திருந்தா காப்பாத்தியிருக்கலாம் என்று டாக்டர் சொல்வது போல தான் அரசுப் பள்ளி ஆசிரியர்கள் சொல்ல வேண்டியிருக்கிறது.இப்படி சேர்க்கப்படும் குழந்தைகளில் ஒரு சிலரைத் தவிர அநேகர் காலம் முழுவதும் கல்வியில் பின்தங்கிவிடுகிறார்கள்.
சிறு நகரங்களிலுள்ள இவ்வகைப்பள்ளிகளில் ஆசிரியர்களுக்கு வழங்கப்படும் சம்பளம் ஆச்சர்யப்படத்தக்க வகையில் மிகவும் குறைவு. ஆனால் அவர்களுக்கு வழங்கப்படும் வேலை அதிகம். அதுபோக அவர்கள் மீது ஏவப்படும் உளவியல் தாக்குதல்கள் வேறு. எனவே தகுதியானவர்கள் வேலை செய்ய முன்வருவதில்லை.
மறுபுறம் இன்று அனைத்துக் கிராமங்களிலும் அரசுத் துவக்கப்பள்ளிகள் வெறிச்சோடிக் கிடக்கின்றன.
தமிழும் தெரியாமல், ஆங்கிலமும் தெரியாமல் ரெண்டும் கெட்டான் நிலையில் ஒரு பெரும் மாணவர் கூட்டம் உருவாகி வருகிறது. அரசு கவனத்தில் கொள்ள வேண்டும்.
அன்புடன்
மணிகண்ட ராஜா
Jeyamohan's Blog
- Jeyamohan's profile
- 834 followers
